11.6.09

துறவி நண்டு - எஸ்.தேன்மொழியின் கவிதைத்தொகுப்பு.

முப்பது வருடத்தாம்பத்தியத்துக்குப்பிறகு இறந்து போன கணவனின் முன்னத்திப்பல்லில் ஒரு சிங்கப்பல் இருப்பதைக்கண்டுதுணுக்குற்றாள். அழுகையூடாக " இத்தன வருசம் குப்ப கொட்டி, எங்கவீட்டுக்காரருக்கு இப்படி ஒரு பல்லிருப்பதைப்பார்க்க குடுத்துவக்காத பாவியாகிட்டேனே " என ஒப்பாரி வைத்தாளாம்.


இந்த விசயத்தைச் சொன்ன சொக்கலிங்கம் சார் கெக்கலிட்டு சிரித்தார். கணவனின் சாவு எவ்வளவு பெரிய இருட்டிலிருந்துஅவருக்கு விடுதலை கொடுத்திருக்க வேண்டும். பாலச்சந்தர் திரைப்படங்களில் அறினைகள் கூடப் பாத்திரங்களாகும். நிஜத்திலோ பெண் பூ, பொன், குத்துவிளக்கு, நிலம், கடல், ஆறு, பத்தினி, தெய்வம் என அறினைகளாகவே அறிமுகப்படுத்தப்படுகிறாள். புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே பல புத்திமதிகள் சொல்லுறங்கேளு முன்னே எனக் காலந்தோறும் பெண்ணுக்கு பத்துக கட்டளைகள் உருவாகிக்கொண்டிருக்கும் நமது படைப்பிலக்கியங்கள்.


எழுத்தாளர் சுஜாதாவும் நடிகர் கமலஹாசனும் இணைந்து விக்ரம் படத்தில் சட்டையைக்கழற்ற முடியுமா என்று பெண்மைக்கு எதிராக சவால் விடுவார்கள். நீள் நெடும் இலக்கியத்தில் பெண்ணைப்பேச பெண்ணே முன் வரவில்லை. வந்தவர்களும் கூட சுருதி சுத்தமாக ஆண் குரலிலேயே பேசினர்கள். முப்பத்துமூன்று என்ன, நூறு சதவீதம் கொடுத்தால் கூட அதை ஆண்களிடம் பறிகொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொள்கிற பெண்களாகவே பெரும்பாலான பஞ்சாயத்து தலைவர்கள் இருப்பதை பேராசியர். பழனித்துரை பஞ்சாயத்துராஜ் மீதான தனது ஆய்வு நூல்களில் குறிப்பிடுகிறார்.


நான் வேலை பார்த்த நென்மேனிக் கிளைக்கு அருகில் இருக்கிறது நாகலாபுரம் கிராமம். அங்கே பஞ்சாயத்து உதவித்தலைவர் அந்தக் கிராமத்தின் பண்ணையார். தலைவரோ ஒரு பெண். அதுவும் கூலிக்காரப் பெண். அதே பண்னையில் வேலை பாக்கிற கூலிப்பெண். காட்டில் களையெடுத்த கையோடு நடந்து வந்து காசோலையில் கையெழுத்துப் போட்டுவிட்டு மீண்டும் மூன்று கிலோ மீட்டர் வெயிலில் நடந்தே போய்விடுவார்கள். சாவகாசமாக இரு சக்கர வாகனத்தில் வந்து பணத்தை வாங்கிக்கொண்டு போகும் அந்த ஆணின் சாமார்த்தியம் பேசும் சமூகம், அவர் தொடுக்கும் இரண்டு வித ஒடுக்குமுறைகளுக்கு எதிராக சிந்திக்கவில்லை.


இவற்றையெல்லாம் உடைத்து எறிந்து விடுகிற எழுத்துக்கள் வெளிவருகிறது இப்போது. ஆயிரமாயிரம் ஆண்டு அடைத்துவைக்கப்பட்ட உணர்வுகள் வெளிக்கிளம்பும்போது ஒரு போதும் தென்றலாய் வராது. அதுதான் விஞ்ஞானம். அப்படிப்பட்ட மீறல் மொழியாக, அதிர வைக்கும் பெண்ணிய எழுத்துக்களாக.

என் அறைக்குள் வரவேண்டாம்,
புத்தகங்களை மூடவேண்டாம்,
என்னை எழுப்பவேண்டாம்.

...
உரசலில் குத்திட்டு எழும்பாதஎன்மயிர்க்கால்கள்அடங்கிக்கிடக்கின்றனஆண் சிங்கத்தைவிடவும் கம்பீரமாக

என அறிமுகமாகிறார். கவிஞர் எஸ். தேன்மொழி.

துறவி நண்டு என்கிற அவரது தொகுப்பில் 64 கவிதைகள் இடம்பெறுகிறது.அத்தனையும் பெண்ணுடல் குறித்து உரக்கச்சொல்லும் கவிதைகள். கடலடி மௌனத்தைக் கலைத்துப்போடுகிற ஆயிரமாயிரம் உயிரினங்களில் ஒன்றாம் துறவி நண்டு. தோற்றுத் தோற்று வெற்றியடைகிற கொடுத்தலின் கர்வம் நிறைந்த மொழிகளால்வெளிக்கிளம்புகிறது அவரது கவிதைகள்.


// ஏதேன் தோட்டம் தேவன்களுக்குப் பயப்படாத பூனைகளால் நிரம்பியுள்ளது //...என எச்சரிக்கிற அவரது சொற்கள் இறுகி // அடுத்த படைப்புலகில் ஏவாள் ஆடைகட்டிப் படைக்கப்படுவாள் // எனச் சவால்களில் முடிகிறது. எல்லாப்படைப்பளிகளும் தமது பால்யத்திலிருந்து எழுந்து வந்து எழுதத்தருகிறார். அது தேன்மொழிக்கும் வாய்க்கிறது // மழைக்கான அறிகுறியோடும் மழையோடும் அந்தச்சிறுமி என்னிலிருந்து பிரசவிக்கிறாள் //என்று பால்யகாலத்துக்கு மீளப்போகும் அவர் மழை முடிந்தவுடன் அவளைத்திருப்பி அனுப்புகிறார்.// அவளை நோக்கி எறியப்படாத கல்லிலிருந்து பிறக்கிறது அவனுடனான நட்பு // என்று ஆண்- பெண் நட்பின் தேடலாகவும், நெறிமுறையாகவும் முன் வைக்கிறார் தேன்மொழி.

மனித உடல் விசித்திரமானது, பெண்ணுடல் அதை விட மகோன்னதமானது. அவளிலிருந்து வெளியேறும் அலாதியான உதிரம் படைப்பு விஞ்ஞானம். அது இயற்கையின் அதிசய கொடையான மறுசுழற்சிமுறை. அதன்பொருட்டு அவளின் நாட்கள் இகழப்படுவதை சுத்தமெனச்சொல்லும் ஏற்பாட்டின் மீது கல்லெறிகிறது " சித்தளும் ஒட்டுத்துணியும் ".// வீதிகளின் சுத்தத்திற்கும், வீடுகளின் நாகரீகத்திற்கும், எதிர் திசையில் நின்று ... நீளும் பரந்தாமனின் கைகளில் இருந்து உருவுகிறாள் வரமறுக்கும் ஒட்டுத்துணியை // . தள்ளிவைக்கப்பட்ட வலிகளின் தடித்தவரியாக வந்து விழுகிறது பொதுச்சமூகத்தின் மேல்.


பெண்ணை வீட்டுக்குள் அடைத்துவிட்டு, பூட்டிய பூட்டை இழுத்து சரிபார்க்கும் வளமைகளைக் கலாச்சாரம் என்றும், கருப்புக் கட்டுப்பாடு என்றும் கூப்பாடு போடும் சமூகம் இந்த சமூகம். பூட்டுகின்ற கைகளுக்கும் கற்புவேண்டும் எனும் கோரிக்கை கூட மீண்டும் ஏதாவதொரு விதத்தில் பெண்ணை பூட்டிவைக்கத் துடிக்கிற திருகல் வேலையென்றே புரிந்துகொள்ளவேண்டும். போலிக்கற்பிதமும், அதைக்காக்கிற கட்டுப்பாடும், அதனால் செழித்து வளரும் சந்தேகமும் காப்பியங்களக்கப்பட்ட கொடுமைகளை மறு விசாரணைக்கு கொண்டுவருகிறது தேன் மொழியின் கவிதை. ஆங்காரமான மொழியில் ''அதே சமதக்னி''.


அதே சமதக்னி, அதே பரசுராமன்.
ஆனால் ரேணுகா இல்லை, தலை இல்லை, முண்டம் இல்லை சந்தேகப்பவைக்குள் யாரும் இல்லை.
இருக்கிறாள் கங்கம்மாகாத்திருக்கிறாள் மாரியம்மா
கருவறுக்கும் ஆயுதங்களோடு.
இப்போது கேள் மாரியம்மா .
இப்போது கேள் கங்கம்மாயார் தலை வேண்டும் உனக்கு.
அதே சமதக்னி
அதே பரசுராமன்.


நான் தெரிவு செய்த இந்தக்கவிதைகள் எல்லோருக்கும் பொதுவானதென ஆகாது. ஆனால் நிச்சயமெதிரும் புதிருமாக வினயாற்றும் வலிமை கொண்ட எழுத்துக்கள். சில நெருடல்களிருக்கிறது. அவை அப்படித்தான் இருக்க முடியும். மாற்றம் ஒருபோதும் காய்ச்சி வடிகட்டி ஆறவைத்த குடி நீராகாது. ஆண் மனதில் செரிக்க இயலாத சொல்லும் பொருளும் அடர்ந்துள்ளது தேன்மொழியின் பிரகடனத்தில். '' ஒரு மனிதனைத்தரிசிக்க நெருங்க அன்புவைக்க, ரசிக்க இதைவிட வேறு தருணமில்லை'' என்கிற இருபால் பொது ரசனையின் அபரிமிதமான கவிதைகளும் நிறைத்து வைக்கப்பட்டுள்ள தொகுப்பு இது.தனது முதல் தொகுதியிலே கவனம் பெறும் மொழியோடு தகுதி பெறுகிறார் எஸ்.தேன்மொழி. வாழ்த்துக்கள்.


" துறவி நண்டு "

கவிதைத்தொகுப்புஎஸ்.தேன்மொழிகாலச்சுவடு பதிப்பகம்விலை ரூ.60.

3 comments:

ஆ.ஞானசேகரன் said...

முற்றிலும் வித்தியாசமான அறிமுகம்

காமராஜ் said...

நன்றி ஞானசேகரன்

ச.முத்துவேல் said...

அறிமுகத்திற்கு நன்றி