2.8.09

தடைகளையும் சுவர்களையும் தாண்டி இறுக்கமாகும் நிகரில்லா உறவு - நட்பு








விருதுநகர் மாவட்டத்து கிராமத்துப் புழுதியில் பிறந்து, அந்தப் புழுதியோடு வறுமையும் கலந்து வளர்ந்த எனது உலகம் நண்பர்களால் மட்டும் ஆனது. அங்கிருந்து தப்பித்தவறி நகரம் வந்து ஒரு நடுத்தர வர்க்கத்துக்குள் என்னை அடைத்துக் கொள்ளத்திணறிய போதும் எனது விரல்கள் பற்றி நடத்திக் கூட்டிக்கொண்டு போய் சில இசங்களையும் இயக்கங்களையும்இனம் காட்டியது. நீச்சல் பார்க்க காத்திருந்தவனைத் தள்ளி விட்டு, நீந்த கற்றுக்கொடுத்த நிர்ப்பந்தமும் அவர்களால் ஆனது. அப்புறம் இந்த எழுத்துக்குள்ளும் அதே விதிப்படியே நடந்து கொண்டிருக்கிறது. 1987 ல் எனது முதல் சிறுகதை வெளியன போது மிகத் தொலைவிலிருந்தும் கூட விழி உயர்த்திய எழுத்துலகத்தைப் பற்றியும் எனது, எழுத்தைப்பற்றியும் அறியாது இன்னும் வறுமையோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது எனது கிராமம்.



பால்யம் பற்றி யோசிக்கக் கிடைக்கிற எல்லாத் தருணங்களிலும் அவர்கள் வருவார்கள். ஒரு அகாலவேளையில் மறைந்துபோன பவுல்சுந்தராஜ். புத்தகப்பைகளோடும் கனவுகளோடும் அலைந்துவிட்டு இப்போது மணல் லாரிகளில் லோடுமேனாக வானத்தை வெறித்து பார்த்தபடி காலம் கடத்தும் எம்ஜியார். என்னோடு கோழி திருடி, தேங்காய் திருடி, இப்போது சென்னைப் பெருநகர வீதிகளில் அதிகார மிடுக்கோடு காவலர் வாகனத்தில் வலம் வரும் உயரதிகாரி வேலவர். எனது எல்லாக்கனவுக் காலத்திலும் எதாவதொரு பெண்ணுருவில் கூடவரும் குணசேகரன்.



புலம் பெயர்ந்தது போல ஒரு கடலோரக் கிராமத்துக்குப் போனபோது எனது பேச்சலர் அறையைப் பங்கு போட்டுக் கொண்ட நடராஜன். தொழிசங்கத்து உறுப்பினராக்குவதுபோல பாவனை காட்டி தான் சார்ந்த எல்லாவற்றிலும் எனக்கு உறுப்பினரட்டை வாங்க்கிக் கொடுத்து இப்போது உயரத்துக்குப்போய் என்னை மறந்துபோன கிருஷ்ணகுமார். இன்னும் என்னோடு நடந்துவரும் சோலைமாணிக்கம். மிகச்சரியாக 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலொருநாள் அறிமுகமாகமாகி இதோ இந்த நிமிடம் வரை என்னோடு அருகிருக்கும் என்னுயிர்த்தோழன் மாதவராஜ்.



ஒரு தனிநபர் செஞ்சிலுவைச் சங்கமாக இருந்து நட்புக்காக தனது வாழ்நாள் செலவு செய்யும் எங்கள் முதலாளி செல்வகுமார் திலகராஜ். பை நிறய்ய வெற்றிலைக் கொடவுன் வைத்துக்கொண்டு வருகிற போவோர்க்கெல்லாம் சில்லறையாக அன்பை பரிமாறும் விஸ்வநாதன். இந்த எல்லா அடைமொழிகளையும் ஒன்றுகூட்டி வைத்திருக்கும் ஒளி ஓவியன் அன்புத்தம்பி ப்ரியாகார்த்தி. நானும் மாதுவும் என்கிருந்தோ வந்து சாத்தூரில் 42 b LF தெருவில் கைகோர்த்துக்கொண்டதுபோல இதோ இரண்டு இளைஞர்கள் எங்களின் நகல்களாக ஆண்டோவும், அருணும்.



எழுத்து மறந்து கிடந்த காலத்தில் bank workers unity புத்தகத்தில் எனக்கு கடைசிப்பக்கம் ஒதுக்கித்தந்த svv. விசையின் எல்லா இதழ்களிலும் எனக்கான பக்கம் ஒதுக்கி எனது சோம்பேறித்தனத்தால் சோர்ந்து போகது காத்திருக்கும் அருமைத்தோழர் ஆதவன் தீட்சண்யா.சிரிப்பும் நக்கலுமாக இருந்தாலும் ஒரு சீரியஸ் நண்பனாக தொலைவிருக்கும் ஷாஜஹன்.



இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பக்கமாக்கினாலும் எனது வாழ்க்கைப் புத்தகம் ஒரு தீராத கனத்த காவியமாகும் சாத்தியமிருக்கிறது. இந்த பட்டியலிலிருந்து ஒவ்வொன்றாக பதிந்து வைக்கமுடியாமல் போனாலும் ஒன்றிரண்டைச் சொல்லாமல் போனால் என் எழுத்துக்கு அர்த்தமில்லாமல் போகும்.



இந்த நட்பு நாளில் அவர்களெல்லோரையும் சேர்த்துப்பார்க்க முடியாது. இந்த வலைஎழுத்துக்கள் மூலம் அவர்களை மொத்தமாக நினக்கிற சிலாக்கியம் கிடைத்திருக்கிறது.

4 comments:

ஆ.ஞானசேகரன் said...

நண்பர்கள் தின வாழ்த்துகள் தோழா

மாதவராஜ் said...

நினைவுகளைக் கிளறிவிடும் பதிவு என் தோழனே! வாழ்க்கை எவ்வளவு அற்புதமானது, அழகானது!

அன்புடன் அருணா said...

அழகிய மலரும் நினைவுகள்...வாழ்வின் தடங்களெங்கும் இப்படி நட்பின் விதைகள் தூவப் பட்டுக் கொண்டேதான் இருக்கும்!

☼ வெயிலான் said...

இறுக்கம்+நெருக்கம்+உறவு = நட்பு

அருமை!