1.9.09

கங்கை அமரனும்,கரிசல்குயில்களும்,தமுஎசவும்








மேடையும் ஒலிபெருக்கியும், குழல்விளக்கின் வெளிச்சமும், ஜனத்திரளும், பழைய விழாக்கால நாட்களை நினைவுபடுத்திக்கொண்டு அந்த நாள் வந்தது. குதூகலமாக மைதானமெங்கும் ஓடியாடி விளையாட, குச்சி ஐஸ் வாங்கித்தின்று பசியாற இளமைக்காலம் மட்டும் இப்போது இல்லை. மாறாக சிறப்பு அழைப்பாளர்கள் வரமாட்டார்களோ, இந்த முறை பயமுறுத்திக் கொண்டிருக்கும் மழை வந்துவிடுமோ என்கிற எதிர்மறைப்பயங்கள் அடியில் சுழன்றுகொண்டிருக்க அந்த இரவு வந்தது.
சுமார் ஏழேகால் மணிக்கு ஒரு கீபோர்டு மோர்சிங் உதவியோடு மேடையேறினார்கள் கரிசல் கருணாநிதியும்சங்கை திருவுடையானும்.


திருவுடயான் பாடல்களில் ஒரு சிறப்பு சொல்லியாக வேண்டும். அவர் தபேலா வாசித்துக்கொண்டே பாடுகிற கலைஞன். அதனால் அவர் பாடுகிற எந்தப்பாடலானாலும் அவரோடு தலையாட்டிக்கொண்டு கூடவேவரும். 'தமிழா நீ பேசுவது தமிழா' என்னும் காசி ஆனந்தன் பாடலை தமிழகம் எங்கும் பாடி தமிழர்களின் ஆங்கில மோகத்தின் மேல் கல்லெறிந்த பாடகன். அவரின் தேர்வுகளில் எம்மெஸ் அம்மாவின் காற்றினிலே வரும்கீதம், நாடோடி மன்னனில் வரும் லாவனிப்பாடல் ஆகியவை மனதை கிறக்கும். கருணாநிதி பாடும் பட்டுக் கோட்டையைப் பற்றிய பாடல் ராமநாதபுத்திலிருந்து வந்த செல்வி நான்சி சில்வியாவின் பரதி பாடலுமாக இரவு எட்டுமணி வரை இசையால் நகர்ந்தது. சற்று தாமதமாக வந்த கிருஷ்ணசாமி 'அந்திமலர் பூத்திருக்க' எனும் அவர் ப்ராண்ட் பாடலையும் ' குங்கிலிய மரத்துக்கொளுந்தே' என்கிற சுகந்தனின் பாடலையும் பாடிக் கிறக்கினார்.



அப்புறம் பேச்சு. தமுஎச பொதுச்செயலாளர் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன்,லட்சுமிகாந்தன்,என திட்டமிட்ட பேச்சாளர்களோடு சாத்தூர் காவல்துறை உதவிக்கண்கானிப்பாளர் நானும் பேசுவேன் என மேடையேறினார். பூ படக்கலைஞர்கலைப் பாராட்டிப்பேசிய கவிஞர் தனிக்கொடி பழய்ய படல்களிலிருந்து இன்றைய பாடல்கள் வரை, ஒரு ஆறு திரைப் பாடல்களை ஓங்காரமாகப் பாடினார். எழுத்தாளர் லட்சுமணப்பெருமாள் மெடையேறியதும் கூடியிருந்த இரண்டாயிரம்பேரும் குலுங்கிக்குலுங்கிச்சிரித்தார்கள். விஷயம் இதுதான் பூ திரைப்படத்தில் நடித்த அவருக்கும், எங்கள் கிளைச்செயலாளர் ஜானகிக்கும் பாராட்டுவிழாவும் அந்த மேடையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஏற்புறை சொல்லவந்த எழுத்தாளர் லட்சுமணப்பெருமாள் ஒரு உள்ளூர் கதையைச்சொன்னார்.



அந்தக்காலத்தில் கிராமத்திலிருந்து சாத்தூருக்கு வருபவர்கள் எண்ணெய்க்கடை ராமரை பார்க்காமல் போகமாட்டார்களாம் ஏன்னா, ஊருக்கு திரும்பிப் போனவர்கள் அவரைப் பார்க்கவில்லையென்று சொன்னால் நீ சாத்தூருக்கே போகவில்லை எனச் சொல்லுவார்களாம். அப்படி ஒரு லேண்ட் மார்க்காக விளங்கிய எண்ணெய்க்கடை ராமர் செய்த சாதனை. ஒரு சினிமாப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடித்ததுதானாம். அந்தப்படம் திரையிடும் போது சுவரொட்டிகளில் உங்கள் அபிமான நடிகர் சாத்தூர் எண்ணெய்க்கடை ராமர்,... மற்றும் சிவாஜி,சவித்திரி நடித்த புத்தம் புதிய திரைப்படம் என்று விளம்பரப் படுத்துவார்களாம். அதுபோல ரெண்டே ரெண்டு காட்சியில் வந்த எனக்கு எதுக்குய்யா பாராட்டு என்று தனது பாணிப்பேச்சால் அசத்தினார்.



சுமார் பத்துமணிக்கு மேடையேறிய திரு கங்கை அமரன். ஒலிப்பேழையை மிகுந்த கரகோஷத்துக்கிடையே வெளியிட்டார்.பின்னர் சிறிது நேரம் பேசினார். அவரது வாழ்வனுபவங்கள், இசை அனுபவங்கள், திரை அனுபவங்களின் பகிர்வாக இருந்தது.பின்னர் அந்த மேடை இசையால் நிரம்பியது. ஒவ்வொரு சினிமாப் பாடலையும் படித்து விட்டு, அது குறித்த தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். உற்சாக மிகுதியில் கீபோர்டுக்கும் தபெலாவுக்கும் இடையில் சம்மணமிட்டு உட்கார்ந்து ரசிகர்களின் விருப்பப்பாடல்களை யெல்லாம் கேட்டுக் கேட்டுப் படித்தார். அவர்படித்த 99 சதவீதப் பாடல்களின் வரிபிசகாமல் பாடியதும், சுருதி மாறாமல் சோர்வு நேராமல் பாடியதும் அவருக்கு கிடைத்த பயிற்சியை உறுதிப்படுத்தியது. சுமார் பதினொன்னேமுக்கால் மணிக்கு முடிவடைந்தும் ஜனத்திரள் கலைய மனதில்லாமல் மறுகிக்கிடந்தது.

11 comments:

ஈரோடு கதிர் said...

//உங்கள் அபிமான நடிகர் சாத்தூர் எண்ணெய்க்கடை ராமர்,... மற்றும் சிவாஜி,சவித்திரி நடித்த //

ஓ... ராமர் கூட நடிச்சவர்தான் சிவாஜியா....

பாருங்க என்னா!!! ஒரு வில்லத்தனம்
இஃகிஃகி

நண்பரே... அருமையான இடுகை
அந்த விழாவில் கலந்து கொண்ட ஒரு உணர்வு...

//ஜனத்திரள் கலைய மனதில்லாமல் மறுகிக்கிடந்தது.//
இதுதான் விழாவின் வெற்றியே

சந்தனமுல்லை said...

பகிர்ந்தமைக்கு நன்றி! சுவாரசியமாக, நாங்களும் உடனிருந்த உணர்வை தந்தது உங்கள் இடுகை!

//உங்கள் அபிமான நடிகர் சாத்தூர் எண்ணெய்க்கடை ராமர்//

:-)

யாத்ரா said...

இம்மாதிரி நிகழ்வுகளில் கிடைக்கிற சுகமே தனி தான். உங்கள் பகிர்வும் அருமை.

ஆ.ஞானசேகரன் said...

விழாவை பற்றிய பகிர்வு அருமை... மிக்க நன்றி...

காமராஜ் said...

நன்றி கதிர்.

காமராஜ் said...

நன்றி சந்தன முல்லை

காமராஜ் said...

நன்றி யாத்ரா

காமராஜ் said...

நன்றி ஞானசேகரன்

Deepa said...

விழா நிகழ்வுகளை மிக சுவாரசியமாகத் தொகுத்தளித்து விட்டீர்கள். பகிர்வுக்கு நன்றி ஸார்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

பகிர்வுக்கு நன்றி

எழுத்தாளர் லட்சுமணப்பெருமாள் // நகைச்சுவை அலையோடும் இவரின் எழுத்தினை படிக்க விழைகிறேன். புத்தகத்தின் பெயர்களை சொல்ல இயலுமா?

நன்றி.

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல பதிவு, பாடல்கள் கேட்கும் ஆவல்
இந்த குறுந்தகடு எங்கு கிடைக்கும் என்ற விவரம் தெரிவியுங்கள்.
அன்புடன்
ஆரூரன்