17.9.09

இரண்டு நடைமுறைகளால் ஆன தீபகற்பம்.








அன்று சனிக்கிழமையாக இல்லாதிருந்தால் அவள் பள்ளிக்கூடம் போயிருந்திருப்பாள். இப்போது அவளும் கூட ஒரு பட்டாதாரி ஆகியிருக்கலாம். வாச்சாத்தி மலை மக்களை காவல் துறையும் வனத்துறையும் சேர்ந்து துவம்சப் படுத்தியபோதுஎட்டாம் வகுப்பு படித்த பரந்தாயி வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு உங்கள் முன்நிற்கிறாள்.1992 ஆம் வருடம் ஜூன் மாதம் 20 ஆம் தேதி நடந்த கொடூரத்தின் வாழும் சாட்சியாக கிடக்கும் 2500 க்கும் மேற்பட்டமக்களில் ஒருத்தி சகோதரி பரந்தாயி. பரந்து கிடக்கும் கண்ணீர்க் கடலின் ஒரு துளி இந்த பரந்தாயி.( தீக்கதிர் 15.9.09)



அந்த சோகக்கடலின் ஒவ்வொரு அங்குளத்தையும் எழுத்து துடுப்பால் கடத்துகிறது சோளகர்தொட்டி எனும் ச.பாலமூகனின்நாவல். நாளேடுகளின் மூலையில் கவனிப்பாராற்ற செய்தியாக வந்துபோகும் இதுபோன்ற வன்கொடுமைகளைப் பட்டி யலிடுகிறது ஒரு வலைப்பக்கம். அது ஒரு தனி என்சைக்ளோபீடியாவாக விரிந்து கிடக்கிறது. அங்கு போய்விட்டுத் திரும்பினால் இந்த தேசம் முழுக்க சூன்யத்தால் மட்டுமே நிறம்பிக்கிடக்கிற மனோநிலை மேலிடுகிறது. ஆயிரமாயிரம்செய்திகள் ஒடுக்கப்பட்ட ஜனங்களின் மேல் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளாக மிரட்டுகிறது. பெரும்பாலானவை காவல்துறையாலே நிகழ்த்தப் பட்டிருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை. அவற்றில் முக்கால்வாசிக்குமேல் வஞ்சிக்கப் பட்டவர்கள் பெண்களே.



godown country என்றும், கல்வியறிவு அதிகமுள்ள மாநிலம் என்றும் வர்ணிக்கப்படும் கேரளத்தில் உள்ளது அட்டப்பாடி.சுமார் 2500 மலைவாழ் மக்களின் ஜனத்தொகை கொண்ட இந்தப்பகுதியில் சுமார் 345 முதல் 400 வரை கல்யாணமாகாததாய்மார்கள் ( unwed mothers - கன்னித்தாய்மார் ) இருப்பதாக கணக்கெடுப்பு சொல்கிறது. காரணம் அங்குள்ள அகாலி மாணவியர் விடுதியில் தங்கிப்பயிலும் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் விடுதிக் காப்பாளர்களின் வற்புறுத்தலின் பேரில் விபச்சாரத்திற்கு ஈடுபடுத்தப்படுவது. இதனால் கற்பமடைபவர்கள் அதிலிருந்து மீள முடியாமல் போதைக்கும், விபச்சாரத்துக்கும் மீண்டும் மீண்டும் அடிமையாவதாக உண்மை கண்டறியும் குழு தெரிவிக்கிறது. இதே போல கன்னித்தாய்மார்கள் ஆப்பிரிக்க அமெரிக்க கறுப்பினத்தில் அதிகம் இருந்ததாக பல கருப்பினப் புதினங்கள், புனைவுகளும் முன்வைக்கின்றன. அதிலிருந்து அவர்கள் மீண்டுவந்து வெகுகாலமாகிறது.



இந்த உலக உருண்டைக்குள் ஜீவிக்கிற மனித இனத்தில் யாருக்கும் ஒரு விபத்துப்போல நேரலாம். விசை 25 வது இதழில் வந்திருக்கிற த.அரவிந்தனின் " புனித மனங்களில் புரளும் புளுக்களின் குறியீடு " எனும் நிகழ்புனைவு, தொடர்ந்து பலாத்கரத்திற்கு ஆட்படுத்தப்படும் பெண்கள் அதை ஆதரிக்கிறார்களா இல்லை ஏற்கிறார்களா? ஏன் ஒரு முறைகூட அவள் எதிர்வினை ஆற்றாமல் விடுகிறாள்? என்னும் கேள்வியை, அதாவது அறிவுப்பூர்வமான கேள்வியை முன்வைக்கிறது. "உனது பற்களும் நகங்களும் எங்கே போயின" என்று ஒரு வரலாற்றுக் கேள்வியைக் கூட நாம் கடந்து வந்திருக்கிறோம். இவை யாவும் வெகு மக்களின் மனோநிலையில் இருந்து கிளம்பும் அறிவார்ந்த கேள்விகள்.



ஒரு ஐந்து வருடத்திற்கு முன்னர் சாத்தூர் காவல் நிலையத்துக்கு ஒரு புகார் வந்தது. ஆலை முதலாளியின் பையன் அங்கு கூலிவேலை பார்த்த பெண்ணொருத்தியோடு உறவு வைத்திருந்து அது பௌதிக மாற்றமாகி அவள் கருவுற்றாள். அதுவரை உலகறியா மறைபொருளாக இருந்த ஒன்று பொதுப் பிரச்சினையாக உருமாற்றமானது, கற்பத்தினாலே. வழக்கம் போல காவல் நிலையம் இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் செய்துவைத்தது. எப்படி ? பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டாருக்கு நஷ்ட ஈடு கொடுத்து சமரசம் செய்துவைத்தது. ( அனுலோமா)



இதே உறவு ஒரு கூலிக்கார ஆணுக்கும் ஆலை முதலாளியின் மகளுக்குமாக இருக்கும் போது கிட்நாப்பிங், மொலாஸ்டேசன், திட்டமிட்ட சதி, நிர்ணயிக்கப்பட்ட வயதுக்கு முன்னாள் கட்டயத்திருமணம், எனும் வழக்குகள் பதிவாகியிருக்கும். அல்லது கூலிக் கொலைகாரர்களால் அவன் உயிரோடு எறிக்கப்பட்டிருப்பான், அல்லது மொட்டையடித்துக் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதையிலேற்றி ஊர்வலமாக வந்திருப்பான். ( பிரதிலோமா)




இப்படி இரண்டு நடைமுறைகள் இந்த தீபகற்பத்தில் மிக இயல்பாக நடக்கிறது. அதனால் தான் "கழுதைக்குப் பின்னாலே போகாதே கச்சேரிக்கு முன்னாலே போகதே" என்று ஒதுக்கப்பட்ட ஜனங்கள் காவல்துறையை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். கஞ்சி குடிப்பதற்கிலாத, அதன் காரணங்கள் இதுவென்றறிந்திராத இந்த ஊமை ஜனங்களுக்கான சரியான, முழுமையான குரல் எங்கிருக்கிறது ?




4 comments:

ஈரோடு கதிர் said...

அடையாளப்படுத்தப்படாத ஆயிரமாயிரம் பரந்தாயிகள், வலியவர்களால் ஒடுக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலும் ஒடுங்கிய கண்களோடு, சிக்குப்பிடித்த மயிரோடு, மனதில் வலியோடு நிரம்பியிருக்கிறார்கள்.

நமக்கு நடக்காதவரை அது ஒரு சம்பவமாகவேயிருக்கிறது, சுவாரஸ்யமாகவோ அல்லது சோகமாகவோ....

என்ன செய்ய

ஆரூரன் விசுவநாதன் said...

சரித்திரமாகட்டும், சம்பவங்களாகட்டும், கேட்பதை, படிப்பதை மட்டுமே நாம் உள்வாங்கி, அப்படியே ஏற்றுக்கொள்கிறோம். வலியோடும் வேதனைகளோடும் மனிதர்கள் நம்மோடு வாழ்ந்தாலும், அவர்களுக்காக சிறிது வருத்தப்படுவதைத் தவிர வேறு என்ன செய்யமுடிகிறது நம்மால்.

மனித நேயம் சட்டைப் பையின் கணத்தை பொருத்ததாகிவிட்டது.

அன்புடன்
ஆரூரன்

மண்குதிரை said...

balamurugan- solakar thottu nalla pathivu

patiththa iravu urakkamee illai

ithu mattuma kayarlaanjsila

காமராஜ் said...

வணக்கம்

கதிர்,
ஆரூரான்
மண்குதிரை.

அன்புக்கு நன்றி,