19.5.11

அழகர்சாமியின் குதிரையும், திருப்பூர் பனியன் கம்பெனிப் பெண்களும்.


ஒரு நூறு வருடங்களுக்கு முன்னாடி இந்தியாவின் போக்குவரத்தில் பெரும் பங்கு வகித்த வாகனம்.இன்னும் அலெக்சாண்டர், நெப்போலியன், சத்ரபதி சிவாஜி,ராஜாதேசிங்கு,ஊமைத்துரை,மாவீரன் திப்புசுல்தான்,சேகுவேரா ஆகிய பெயர்களோடு கூட வருகிற அவர்களின் உயிர்த் தோழன், இழு விசையையும், வேகத்தையும் கணக்கிடக்கிடைத்த பிராணி,சக்தி என்கிற சொல்லுக்கு வரையப் படும் ஓவியம் என அந்தக் குதிரைக்குத்தான் எத்தனை ஈப்புகள். அப்படித்தான் இந்த அழகர்சாமியின் குதிரையும் ஈர்த்தது. பரட்டைத் தலையோடும் கருத்த குள்ள உருவத்தோடும் ஒரு நாயகன், பாஸ்கர்சக்தி, இளையராஜா என அதன் மேல் ஈர்ப்பு வந்ததற்கு நிறைய்ய காரணங்கள் இருந்தது.கிராமங்களில் புதையுண்டு கிடக்கும் சொல்லப்படாத ஒரு கோடிக்கதைகளில் ஒரு கதையாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பை இன்னும் கூடுதலாக்கியது படம்.

நடக்காமல் போன அழகரின் திருவிழாவோடு கதை தொடங்குகிறது. பாரதிராஜா தொடங்கி சுசீந்திரன் வரை இன்னும் நூறு தரம் காட்டினாலும் அலுக்காத காட்சிகள் அவை.சாமியாடி நாள்குறிப்பதில் தொடங்கி பந்தக்கால் நட்டு,வசூல் நடத்தி,வெள்ளையடித்து, மாவாட்டி,டெய்லரிடம் சட்டை அளவுகொடுத்து இப்படி ஒரு ஊர் திருவிழாவுக்குத்தயாராவது ரம்மியமான காட்சிகள்.அழகரின் வாகனமான மரக்குதிரை காணாமல் போகிற நேரத்தில் ஒரு நிஜக்குதிரை ஊருக்குள் வருவது வரை முதல் பாராவில் சொன்ன எதிர்பார்ப்பு அலுங்காமல் குலுங்காமல் இருக்கிறது.அதுவும் ஒரு லோடு லாரியில் வளர் இளம் பெண்களை அள்ளிப்போட்டுக்கொண்டு திருப்பூருக்கு கிளம்பும் காட்சி அப்படியே கலங்கடிக்கிறது. ஆஹா தமிழ்ச் சினிமாவுக்குள் ஒரு புதுரத்தம் புகுந்துவிட்டது என்று மனம் சந்தோஷப்படுகிறது.

அந்தச் சந்தோஷத்தை அப்படியே லாரியோடு ஏற்றிவிட்டு கதை குதிரை தெய்வகுத்தம்,மைச்சோஷியம் என்றும்,ஒரு கிராமத்துக்காதல் , குதிரைக்கு சொந்தக்காரன் வருகை,அவனால் ஏற்படும் குழப்பம்,அவனுக்கு ஒரு ப்ளாஷ் பேக் எனச்சிதறடிக்கப் படுகிறது. சொல்லப்பட்ட சம்பவங்கள் எல்லாமே தனித்தனியாய் பல சிறுகதைகளுக்கு  கருவாகும் காட்சிகள். இவற்றை யெல்லாம் இணைத்துக் கொண்டு அழுத்தமான கதை வரும் என்கிற எதிர்பார்ப்பு கடைசிவரை நமது கூடவே வருகிறது.இந்த தவிர்க்கமுடியாத எதிர்பார்ப்பு சுசீந்திரன் பாஸ்கர் சக்தி,மரணகானா ராமு,கந்தசாமி போன்ற தெரிந்த முகங்கள் இருப்பதானாலேதான். ஆனால்  எதையுமே முழுமையாகச் சொல்லி முடிக்காமல் விட்டுவிட்ட மாதிரி முடிந்து போகிறது.

கோடாங்கியின் மகளை ஊராட்சித்தலைவரின் மகன் காதலிப்பதும் அவர்கள் ஒளிந்து ஒளிந்து சினிமாவுக்குப்போவதும் அங்கே அலைகள் ஓய்வதில்லை படம் பார்ப்பதும் மிக மிக மேலோட்டமான காட்சிகள்.அதனால் தான் அவர்கள் இரண்டு பேரும் ஓடிப்போய் காவல் நிலையத்தில் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். அந்தசெய்தியை கேட்ட ஊராட்சித்தலைவர் “ ஒரு தாழ்த்தப்பட்டவனின் மகளை எப்படி நான் மருமகளா ஏத்துக்கொள்ள முடியும் என்று கட்டுரையைப் படிப்பது போல வசனம் பேசுகிறார். ஒரு பூவைப் பிடுங்குவதுபோல் இவ்வளவு எளிமையானதா சுசீந்திரன் மேல் கீழ் கலப்புமணம்?.

நட்ட நடு டெல்லியில் கணினி வளர்க்கும் மேட்டிமை காலத்தில் கதறக் கதற கீழ்சாதிக் கணவனை அவள் கண்முன்னே வெட்டிக் கொன்றதையும்.அதற்கு செத்துப்போன பையனினின் குடும்பம் பயந்துபோய் பதுங்கிக்கொள்ள அவள் நீதிமன்றத்துக்கு அலைந்ததையும், நீதிமன்றம் அதைக்கருணைக் கொலை என்று சொன்னது. சொல்லி இந்திய அரசியல் சட்டம்,மனிதாபிமானம்,இந்திய தண்டனைச்சட்டம், குற்றவியல் மற்றும் வன்கொடுமைச் சட்டங்களை கொலைசெய்தது எல்லாம் நடந்து ஆறுமாசம் கூட ஆகத நேரத்தில் இப்படிக் கதை சொல்வது மெகா சீரியல் முடிவுகள் மாதிரியே இருக்கிறது.

இப்படியே கதையை முடித்துவிடுகிறார்கள். உடனே அடடா அந்தக்குதிரை என்னாச்சு  என்று நமக்கு ஒரு கேள்வி எழுகிறது நமக்கு மட்டுமல்ல இயக்குநருக்கும் கூட.அதனால் தான் காவல் ஆய்வாளர் மூலம் கேள்வியை வைக்கிறார் அதற்கு ஊராட்சித் தலைவரின் மகன் அவன் இந்நேரம் சிட்டாய்ப் பறந்து ஊருக்குப் போயிருப்பான் என்று சொல்லி சந்தேகத்தை நிவர்த்தி செய்கிறார்.படம் முடிகிறது.

முடிந்த பிறகும் நம்மோடு கூடவரும் கேள்வி திருப்பூருக்கு பனியன் கம்பெனிக்கு வேலைக்குப்போன அந்தப்பெண்களைப் பற்றித்தான்.
அவர்கள் ஒவ்வொருவரிடத்திலும் ஒரு சொல்லப்படாத கதைகள் இருக்கிறது. அந்தக் கதைகளுக்குள்ளே சமகால அரசியல் இருக்கிறது.சமகால அரசியலை நடத்தும் தனியார்மயம்,தாராளமயம்,உலகமயம் பகிரங்க நிழலாய்: கருப்பு நிழலாய் கவிழ்ந்திருக்கிறது.

அந்த வளர் இளம் பெண்கள் உரத்துக்கேட்கிறார்கள்.
ஏன் சுசீந்திரன் சார் எங்களிடம் கதைகளைக்கேட்கவில்லையென்று.

11 comments:

மதுரை சரவணன் said...

ஆழமான விமர்சனம்... வாழ்த்துக்கள்

மதுரை சரவணன் said...

ஆழமான விமர்சனம்... வாழ்த்துக்கள்

காமராஜ் said...

நன்றி திரு மதுரை சரவணன்

காமராஜ் said...

நன்றி திரு ஷர்புதீன்

நிரூபன் said...

உங்களின் விமர்சனம், படத்தினைப் பார்க்க வேண்டும் எனும் உணர்வினை மனதினுள் ஏற்படுத்துகிறது சகோ.

ராகவன் said...

அன்பு காமராஜ்,

நல்ல எழுத்து இது... அழகர்சாமியின் குதிரை பற்றிய உங்கள் பார்வை அருமையாய் வந்திருக்கிறது...

இன்னும் கொஞ்சம் ஊன்றி பார்த்து... கொஞ்சம் தூக்கலான விமர்சனப்பார்வையுடன் இருந்திருந்தால் இன்னும் அழகாய் இருந்திருக்கும்...

ஒரு சிறுகதையின் நரேஷனை திரைக்கதைக்குள் புகுத்துவது... ரொம்பவும் கஷ்டமான விஷயம்...

பாஸ்கர் சக்தியும்... கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்... திரைக்கதை உழைப்பில் சுசீந்திரனுடன்... பாஸ்கர் சக்திக்கு எழுத்துத் திறமை தன் வசனத்தோடு முடிந்தவிடுவதாக நினைத்துவிட்டாரோ என்று தோன்றுகிறது என்கிறார்கள் என் நண்பர்கள்... நான் இன்னும் பார்க்கவில்லை...

தலைப்பில் இருந்த கவிதை படத்தில் இல்லை... நிறைய இடங்களில் கவிதையை இட்டு நிரப்ப இடமிருந்தும்.

நான் படமும் பார்க்கலை சிறுகதையும் படிக்கலை... படித்தபிறகு சொல்வது தான் சரியாய் இருக்கும்...

மற்றபடி உங்கள் எழுத்து... அழகு...

அன்புடன்
ராகவன்

Unknown said...

mama....do you still expect something revolutionary from this capitalistic owned film industry....?

ஈரோடு கதிர் said...

நிறைய அழுத்தமான விமர்சனம்!

N.H. Narasimma Prasad said...

உங்கள் எழுத்துக்களில் நல்ல ஆளுமை தெரிகிறது. வாழ்த்துக்கள்.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு - நல்ல எழுத்தாற்றல்.
வாழ்த்துக்கள்.

க.பாலாசி said...

இந்த படத்தைப்பற்றி அப்படி என்ன சொல்லமுடியும் என்ற எண்ணத்தில்தான் படித்தேன். படம் பார்க்கும்போது எனக்கு உண்டான சில எண்ணங்களை அப்படியே சொல்லியிருக்கிறீர்கள். இது முழுக்க ஒரு மேலோட்டமான நகைச்சுவை சிறுகதை என்று நினைக்கிறேன். எந்த இடத்திலும் நிஜ அழகர்சாமி, குதிரை இரண்டையும் தவிர வேறெங்கும் அழுத்தம் வந்துவிடக்கூடாது என்ற தோணியிலான கதை...முடித்த இடத்தில்கூட எந்த அழுத்தமும் பதிவிசெய்யப்படவில்லை. சிறுகதை எழுதும்போது சேர்க்கப்படும் மானே..தேனே..பொன்மானே போன்று அந்த சின்ன சின்ன சம்பவங்கள்... அவ்ளோத்தான்..

மிக நல்ல விமர்சனம்..