26.5.11

தனக்கு தனக்கு என்றால்


நம்பமுடியாதவற்றைக் கனவுகளிலும்,அற்புதங்களைக் கதைகளின் மூலமாகவும்,நடக்கமுடியாதவற்றைக்கடவுளர்களின் மூலமாகவும் நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறது உலகம்.பைபிளில் அப்படித்தான் கடல் கொந்தளிக்கும் மோயிசன் என்கிற மோசஸ் தனது கூட்டத்தாரோடு முழ்கிப்போவோமோ என்று தத்தளிப்பான்.கடவுளை நோக்கிக்கூப்பிடுவான்.உடனே இயேசுகிறிஸ்து பிரசன்னமாகி கையை நீட்டுவார்.கடல் அமைதியாகிப்போகும்.அப்புறம் அவர் கடல் மேல் நடந்து வருவார். இப்படித்தான் பைபிள் கூறும்.

அது அப்படிக்கூறியதாலே உலகம் தட்டையாக இருக்கிறதென்று  உலகம் நம்பிக்கொடிருந்தது. அது நம்பிக்கை.அப்படியில்லை அது உருண்டை என்று சொன்ன கலிலியோ கடவுள் மறுப்பாளனாகவும்,தெய்வ நிந்தனை செய்தவனாகவும் குற்றம் சுமத்தப்பட்டான் அது விஞ்ஞான வரலாறு.கொந்தளிக்கிற கடலை நிறுத்தவும் முடியாது.கடல்மேல் ச்சும்மா நடடைபயணம் போகிறமாதிரி மனிதரால் நடக்கவும் முடியாது. அது நிஜம். ஏன் முடியாது என்கிற சிந்தனைகள் கண்டுபிடிப்புகளாக மாறும்.அப்படிக்கடல் மேலே நடக்கிற மிதப்பை உண்டுபண்ணுகிற கடல்பாலங்கள் எது எது என்று பட்டியலிட முடியவில்லை.

ஆனால் மன்னார் வளைகுடாவில் உள்ள பாம்பன் பாலம் நமக்குக் கைக்கெட்டுகிற தூரத்தில் இருக்கிறது. இரண்டுகிலோமீட்டர் தூரத்துக்கு ரயில் பாலம் பிரிட்டிஷ் அரசு கட்டியது.அதே இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு விடுதலை பெற்ற இந்திய அரசும் சிமெண்டுப்பாலம் கட்டிவைத்திருக்கிறது. அருகருகே இரண்டு அற்புதங்கள். மனிதன் செய்த இந்த அற்புதங்களின் உதவியோடுதான் அந்தக்கடவுளைத்தரிசிக்க சனம் கூட்டம் கூட்டமாக அலைமோதுகிறது. போகிற வழியில் வண்டியை நிறுத்தி அந்தப்பாலத்தில் கால்தடம் பதித்துவிட்டுத்தான் ராமர் பாதம் பார்க்கப்போகிறார்கள். மொதுமொதுவென முகம் வருடும் கடல் காற்றுக்குள் இயல்பைத் தொலைத்துவிட்டு சற்றுநேரம் கண்ணை மூடிச் சஞ்சாரம் செய்துவிட்டுப்போவது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பொதுவானது.

அங்கே மூன்று முறை காலையில் நடைபயணம் போகும் வாய்ப்புக்கிடைத்தது.இருபக்க நடை மேடைகளுக்கு  அடியிலேதான், மின்சாரம்,தொலைபேசி குடிநீர் எல்லாம் குழாய் வழிப்பயணமாகிறது.ஒரு விடிகாலையில் நட்ட நடு பாலத்திலிருந்து தண்ணீர் ஒரு பனை உயரத்துக்கு பீய்ச்சி அடித்துக்கொண்டிருந்தது.கடந்து போகிற வாகனங்கள் எல்லாம் நனைந்து நனைந்து கடந்துபோனது.நடைபயணம் போன நாங்கள் மூன்றுபேரும் வெளியூர்க்காரகள். எங்கு அலுவலகம் இருக்கிறது யாரிடம் சொல்லுவதெனத் தெரியவில்லை. உள்ளூர்க் காரர்களிடம் சொன்னோம்.பத்துமணிக்கு வருவார்கள் என்று சொல்லி விட்டுப்போனார்கள்.

இதுபோன்ற பொதுக்காரியங்களில் பதட்டப்படாமல் கடந்து போவதும் இல்லையேல் என்னைப்போல பதிவெழுதி புலம்புவதும் தான் தேசீய குணாம்சமாக நிலைத்துவிட்டது. இப்படி வேறு நாடுகளில் நடக்குமா என்பது தெரியவில்லை. தனது வீட்டு அடுப்படியில் எரிவாயு சிலிண்டரை மூடிவைத்தோமா என்கிற என்கிற சந்தேகம் வந்துவிட்டால் சிப்பந்திகளின் வேலையை இடைமறித்து வீட்டுக்கு அனுப்புகிற சிரத்தை இருக்கிற தேசத்தில் பொதுச்சொத்துக்கள் லீக்காகுவதை உடனடியாக கட்டுப்படுத்துகிற உந்துதல் இல்லாது போய்விடுகிறது. காரணம் அது குறித்த தொலைக்காட்சி விளம்பரங்கள் வருவதில்லை. அவனுகளெக்கென்ன கிறுக்கா பிடித்திருக்கிறது இப்படி வருமாணம் இல்லாத விளம்பரங்கள் செய்ய.

8 comments:

ஓலை said...

நல்ல விவரிப்பு. இங்கு உடன் நடவடிக்கை எடுத்து சில மணி நேரங்களில் சரி செய்து விடுவார்கள்.

ப.கந்தசாமி said...

//இதுபோன்ற பொதுக்காரியங்களில் பதட்டப்படாமல் கடந்து போவதும் இல்லையேல் என்னைப்போல பதிவெழுதி புலம்புவதும் தான் தேசீய குணாம்சமாக நிலைத்துவிட்டது.//

பரவாயில்லை. நீங்களாவது பதிவில் போட்டீர்கள்.

கூடல் பாலா said...

பொது சொத்துக்களை அலட்சியம் செய்வது கிட்டத்தட்ட நமது கலாச்சாரம் போலவே மாறிவிட்டது உண்மையிலேயே வருந்த தக்கதுதான் .....

ராகவன் said...

அன்பு காமராஜ்,

அருமையான, அக்கறையான பதிவு இது... வழக்கம் போல உங்கள் நடை அழகு.

மோசஸ் முன் தோன்றியது ஒரு ஒளி/கடவுள் என்ற குறிப்பு மாத்திரம் தான் இருக்கிறது... ஏசு கிறிஸ்துவா என்பது எனக்குத் தெரியவில்லை... ஏசு கிறிஸ்து மோசஸிற்கு பிறகு வந்தவர் என்று ஞாபகம். கடல் மேல் நடந்து வந்தாரா? கடலை பிளக்க வைத்தாரா?

அன்புடன்
ராகவன்

ஈரோடு கதிர் said...

தண்ணிதானேன்னு போற மாதிரிதான் எல்லாத்துலேயும் கடந்து போறோம்! :(

rajasundararajan said...

kramate na hi buddhasya jnaanam dharmeshu taayinaH
sarve dharmaastathaa jnaanam na etad buddhena bhaashitam
(Mandukya Karika IV:99)

The knowledge of the one, who is enlightened and all-pervasive, does not enter into objects. And so the souls also do not enter into objects. This fact was not mentioned by the Buddha.

கௌடபாதர் (அவரையொட்டி ஆதிசங்கரரும்) செய்த இந்த உரையில் வரும் புத்தர், கௌதம புத்தரா, அல்லது சக்கரம் பின்னும் ஒருமுறை சுழன்றபின் தோன்றிய, நாகார்ஜுன புத்தரா என்றொரு குழப்பம் உண்டு. காரணம், நம்மவர்களுக்குத் தாம் அறிந்தமேனிக்குச் சொல்வதே வழக்கம் அல்லாமல், மேற்கத்தியர்களைப் போல, மேற்கோள் காட்டுகிற வழக்கம் இல்லை.

காமராஜும் அதையே செய்கிறார்.

Google தேடலில், The sea dividing miracle for Moses என்றோ அல்லது இவ் வார்த்தைகளில் ஒன்றிரண்டையோ தட்டினால், Exodus 14:21 என்று தேடியது கிட்டிவிடும். இந்தக் காலத்தில் இவ்வளவு வசதி உண்டே, நாமும் ஏன் அந்தக் காலத்துச் சமய அரசியல்வாதிகள் போல் தனக்குப்பட்டதைப் பேச வேண்டும்?

விடுதலைப் பயணம் 14:21
மோசே தன் கையைக் கடல் மேல் நீட்டவே, ஆண்டவர் கீழைக் காற்றை இரவு முழுவதும் வன்மையாக வீசச் செய்து கடலைப் பின்வாங்க வைத்து உலர்ந்த தரையாக்கினார். நீர்த்திரள் பிரிக்கப்பட்டது.

காமராஜ் said...

அன்பு சுந்தரராஜண்ணா வணக்கம்.
நான் பைபிள் படித்தவனில்லை.இது என் பால்ய காலத்து ஜெபக்கூட்டங்களில் கேட்ட பிரசங்கங்களின் ஞாபகங்களில் இருந்து சொன்னது.இருப்பினும் தவறேதான் உலகறிந்த ஒரு விஷயத்தில் நான் தப்பாக எழுதிவிட்டேன்.வருந்துகிறேன்.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.