6.3.11

எம்ஜிஆரும், எங்க ஊர் நாரணசாமியும்


அவன் நல்ல உழைப்பாளி.எப்படின்னா ஒரு வண்டி பாரத்தையும் ஒத்தாளா ஏத்தி,கொச்சக்கயிறு போட்டு இறுக்கி பத்திக்கொண்டுவந்து வீடு சேத்துரு வான்.மாடு ஒழவுக்கு போயிருச்சின்னா அசரமாட்டான். ரெண்டு ரெண்டு கெட்டா கெட்டி தலச்சுமையாகவே கொண்டுவந்து இறக்கிவிடும் ஒன்மேன் ஆர்மி.உழவடிக்க,பாத்திகட்ட,தண்ணீ பாய்ச்ச, களையெடுக்க, உரம்போட, மருந்தடிக்க கதிரறுக்க எல்லாவேலைகளையும்  செய்யக்கற்றுக் கொண்ட மாஸ்டர்ஆப் ஆல் சப்ஜெக்ட்ஸ்.

ஒண்ணரக்குறுக்கம் மொளகாச் செடியில் எந்தச்செடியில் எத்தனை காய் தொங்குகிறதென்பதை கேட்டால் துல்லியமாகச் சொல்லிவிடும் மனுசக் கம்ப்யூட்டர்.ஒரு கரட்டாண்டி பிஞ்சைக்குள்ள நுழஞ்சாலும் கண்டுபிடிக்கிற மொப்ப சக்திபடைத்தவன். ஒரு விவசாயி அப்படி இருந்தால் தான் வளத்து அறுத்து வீடுகொண்டுவந்து சேக்கமுடியும்.அப்படிப்பட்டவன் தான் நாரணசாமி. அவனுக்குத் தேவையெல்லாம் ஒருசட்டிக்கஞ்சி.ஒரு டவுசரும் தலத்துண்டும், ஒருகட்டுப்பீடி போதும்.

இப்படி இருவத்திநாலு மணிநேரமும் தோட்டமே கதியிண்ணு கெடக்குற கருக்கான பிள்ளைக்கு ஒரே ஒரு கிறுக்கு இருந்திச்சு.அது எம்ஜிஆரு.அவர் கதை கேட்பதும் அவர் பாட்டுப் பாடுவதும்,அவரோடு சேர்ந்து கனவு காண் பதுவும்  தான் அவனது பொழுது போக்கு.அப்படி இருந்துவிட்டால் கூட பரவாயில்லை.ஒரு நாள் நெற பிஞ்சையில  ஆளுயர சோளநாத்துகுள்ள புகுந்து மேட்டுப்பட்டிகாரன் களவாண்டுகொண்டிருந்தான்.அரவம் கேட்ட நாரணசமி ஓடிப்போய் மக்காடச் சேத்துப் பிடிச்சிக்கிட்டான்.ஒரு வப்பு வச்சி அவன முகத்த திருப்பி பாத்தான்.அப்படியே அடிக்கிற சோலிய விட்டுப்பிட்டு ’என்னண்ணே நீங்களே இப்படிச்செய்யலாமா’ என்று கேட்டான்.வந்தவனுக்கு பேயடிச்சமாதிரி ஆகிப்போச்சு.அடிச்சு காலக் கையக் கட்டி ஊர்க் கூட்டத்துல நிக்க வச்சுருவானேன்னு பயந்தா அண்ணம்மொற கொண்டாடுறானேன்னு தெகச்சுப்போயிட்டான். வேற ஒண்ணும் இல்ல களவாங்க வந்தவன் எம்ஜிஆரு படம்போட்ட பனியன் போட்டிருந்தான். எம்ஜிஆரும் எம்ஜியாரச்சேந்த எல்லாரும் நல்லவங்களாம்.அவருதானே திருடாதே பாப்பா திருடாதேன்னு பாட்டுப்படிச்சாரு.

ஊர்ல பொன்னுச்சாமி பொன்னுச்சமி ன்னு ஒருகதைசொல்லி இருந்தான். அவன் சொல்லுகிற சினிமா கதைகள்,கைதேர்ந்த டைரக்டரின் கதைகளை விடவும் அழகாக இருக்கும்.  இருக்காதா பின்ன.அவனே எம்ஜியார் டயாலாக், சரோஜாதேவி டயாலாக்,நம்பியார் டயாலாக் பேசனும். பாட்டுகளை படிக்கணும்.  பின்னணி  இசையில்லாமல் சோகத்தைக் கொண்டு வரணும்.கடலைமிட்டாய்,முறுக்கு, பட்டர் பன் இல்லாமல் இடைவேளை வேற உடணும்.அந்தப் பொன்னுச்சாமிக்கு துட்டுத் தட்டுப்பாடு வந்தாப்போதும் நேரே நாரணசாமி பிஞ்சைக்கு வந்துவிடுவான்.ஒரு எம்ஜியார் படத்தை விறு விறுண்ணு சொல்லிவிட்டு  கொஞ்சம் செலவுக்கு துட்டுவாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவான்.

அந்தக்காலத்தில் வருசத்துக்கு ஒரு எம்ஜியார் படம் வரும். அதுவும் மெட்ராஸ் மதுரையெனப் பெரு நகரங்களில் ஓடி நஞ்சி போய் சாத்தூர் வந்துசேர ஒண்ணரை வருசமாகும். போன்னுச்சாமிக்கு துட்டுத் தேவையாயிருக்கும் போதெல்லாம் கதை சொல்லனும்ணா புது புது கதை சொல்லணும். அதனாலே முத்துராமன்,ஜெய்சங்கர் படத்தையெல்லாம் எம்ஜியார் சரோஜாதேவி பேரப்போட்டு ஓட்டிவிடுவான். ஏண்ணா நாரண சாமி மொத்தத்துல ரெண்டு படம்தான் பாத்துருக்கான் பெரிய இடத்துப் பெண்ணும் நீதிக்குப்பின் பாசமும்.அதனாலேயே எம்ஜிஆரும் சரோஜாதேவியும் நெஜமாவே புருசம்பொண்டாட்டி  என்கிற எண்ணம் புளியமரத்து வேர்போல அவனுக்கு உள்ளே எறங்கிருச்சு.கிராமங்கள் அப்போது அப்படித்தான் இருந்தது.
எம்ஜியார் சாவித்திரி,சிவாஜி பத்மினி,ஜெய்சங்கர் ஜெய்சித்ரா,டிஎம்மெஸ் சுசீலா  எல்லாம் நிஜஜோடிகள் என்கிற கற்பிதம்.

இந்த பொன்னுச்சாமி வேற ஊர்ல இல்ல. வேலவெட்டியில்லாம கஷ்டப்பட்டு வயித்தக்கழுவ வெளியூர் வேலைக்குப்போய்விட்டான்.போனவன் எப்பவாச்சும் ரெண்டு மாசத்துக்கொருதரம் வருவதும்,அவன் குடும்பத்தோடு காலம்கழிப்பது திரும்பிப்போவதுவுமாக இருந்தான்.நார்ணசாமிக்கு சினிமா வெறி தலைக்கேறிப்போனது.எம்ஜிஆர் படம் வந்துருச்சா வந்துருச்சா எனக்கேட்டுக்கொண்டலைந்தான்.ஒரு நாள் தனலெச்சுமித்தேட்டரில் எம்ஜிஆர் படம் என்று சொன்னதும்.சண்டை பிடிச்சி பிஞ்சையப்பாக்க ஆள் மாத்தி வுட்டுட்டு பகலாட்டம் பாக்கப்போனான். போயிட்டுவந்து ரெண்டு நாளா ஒரே பொலம்பல்.

'அவரே இப்படிச்செஞ்சா எப்பிடி' என்றான்.
'எப்பிடி' என்றார்கள்
'ஊராம்பொண்டாட்டியக் கையப்பிடிச்சி இழுக்கலாமா ?'

கேட்டவனுக்கு தூக்கிவாரிப்போட்டுவிட்டது.

’இதென்ன கூத்து இந்த வாரம் ஊர்ப் பஞ்சாயத்து தானா, யாரப்பா அது’
’அந்தாளுதா எம்ஜியாரு’
‘என்னா செஞ்சாரு, அவரு யாருகையப்பிடிச்சி இழுத்தாரு’
‘ஜெமினிக்கணேசம்பொண்டாட்டிய’.

புரிந்து விட்டது ஊர்ச்சனக்களுக்கு.
’அப்ப சர்த்தான் கூப்பிடுங்க எம்ஜியார, இந்த சனிக்கெழம ராத்திரி ஊர்க்கூட்டம்தான்’ என்றார்கள்.

நாரணசாமி வேட்டைக்காரன் படம் பார்த்துவிட்டு பாதியில் எழுந்து வந்தகதை இதுதான்.அதுக்குப்பிறகு எம்ஜியார் படம்பார்ப்பதையே விட்டுவிட்டான்.

4.3.11

வெள்ளந்திக்கதைகள். கொடைக்கான் வண்டியை மறித்த குத்துக்கல்.


அப்போது  கொடைக்கானல் ரோடுவேய்ஸ்,ஜெயவிலாஸ்,லயன் ஆகிய மூன்று  பேருந்துகள் தான் ஓடிக்கொண்டிருக்கும்.எனக்குத்தெரிந்து சாத்தூருக்கும் ஒத்தையாலுக்கும் இடையிலான கட்டணம் வெறும் பதினைந்து காசுகள்தான்.பேருந்தில் போய் வர சில நியதிகளும்,சில வசதிகளும் தேவைப்பட்ட காலம் அது.அதுவும் கொடுக்கமுடியாமல் நடந்துவந்த ஜனங்கள் தான் ஏராளம்.சாத்தூரிலிருந்து எல்லா ஊர்களுக்கும் குறுக்குப்பாதைகள் இருந்தன. அவை பாதசாரிகளுக்கானது.போகிற வழிகளில் ஆலமரம்,ஊருணி அல்லது கமலைத்தோட்டம் கட்டாயம் எதிர்ப்படும்.அங்குபோய் கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு முகம் கழுவிக்கொண்டு செத்த ஆசுவாசப் படுத்திக் கொண்டு நடையைக்கட்டுவார்கள்.

நடந்து போகையில் அலுப்புத்தெரியாமல் இருக்க பழமை பேசப்படும்.அல்லது சேதிகள் சொல்லப்படும். பயண காலமானதால் பெரும்பாலும் பேருந்துப் பயணங்கள் பற்றியே கதைகள் இருக்கும்.ஜெயவிலாஸ் பேருந்தில் மதுரை போய் திரும்பி வந்தார் பால்ராஸ் சின்னையா. அந்த ஒருநாள் கதையை கிட்டத்தட்ட ஒரு மாசம் சொல்லுவார்.அதில் நடத்துநரும்,ஓட்டுநரும் தான் பிரதானப்பாத்திரங்கள்.

ஜெயவிலாஸ் பேருந்தின் நடத்துநர் வேல்ச்சாமியைப்  பற்றியும் கொடைக்கானல் பேருந்தின் ஓட்டுனர் பற்றியும் தெரியாத சனங்கள் இருக்கவே முடியாது. கடைசி டயத்துக்கு ஊருக்குள் வரும் ஒவ்வொரு நடையைப்பற்றியும் ஒரு கதை இருக்கும்.கொடைக்கானல் வண்டியின் டைவர்ருக்கு அப்போதே அறுபது வயதுக்கு மேலிருக்கும்.அப்படித்தான் ஒருநாள் மேட்டுப்பட்டி தாண்டி வந்துகொண்டிருந்தது வண்டி சீரெங்கா புரத்துக்கும் மேட்டுப்பட்டிக்கும் நடுவில் நிறுத்தி விட்டார்.

அப்போதெல்லாம் இரண்டு ஊர்களுக்கு நடுவில் நிறுத்தி டிக்கெட்போட்டு இன்வாய்ஸ் எழுதி முடித்துவிட்டுத்தான் வண்டியெடுப்பார்கள்.அதற்காகத் தான்  நின்றுபோனதென்று சனம் நினைத்துக்கொண்டது.நல்ல ஓடைக்காடு கிய்யிருட்டு ஒதுங்கி ஒண்ணுக்கிருக்க தோதான காடு.அப்படித்தான் என்று கண்டக்டர் நினத்துக்கொண்டார்.வண்டி ஒரு அரைமணிநேரமாக நகல வில்லை. பத்துமணியானதால் பாதிப்பேர் தூங்கிப் போனார்கள். கண்டக்டரும் கூட கண்ணசந்துபோனார்.முழிச்சுப்பாத்தா வண்டி ஆணியடிச்சா மாதிரி அதே எடத்துல நிக்குது.டைவர் வட்டப்பிடிச்சமானிக்கு ஒக்கந்துருக்கார்.

’ பாழாப்போனவனே நீயுந்தூங்கிட்டியா’

 கத்தினார் கண்டக்டர்.

’வெங்காயம்,  நடுரோட்டுல ஆள் நிக்கான், ஆர்ணு கண்டா, களவானியா சாக வந்தவனா தெரியல. கையும் ஓடல காலும் ஓடல நீயி பாட்டுக்கு மயிரு போச்சினு கொறட்டவிட்டுட்டுருக்கெயே’

கருப்பையாண்ணன்.(டைவர் தான்)  கத்தினார்.

அந்தக்காலத்தில் சிப்பிபாறை கந்தசாமி என்கிற வாரண்டுக்கு தப்பியவர் காடுகளில் அலைவதாக கதைகள் இருந்தது.( மலையூர் மம்பட்டியார் போல இவருக்கும் ஒரு நாடோடிக்கதை உண்டு).இப்போது கண்டக்டர் பச்சைக் கனியண்ணனுக்கும் உதறலெடுத்தது.படாரென்று யோசனை வந்தது.நல்ல கட்டுமஸ்தான பயணிகளில் நாலுபேரைக்கூப்பிட்டு காதுக்குள் விஷயத்தைச் சொன்னார்.இறங்கி மக்காடச்சேத்துப்பிடிச்சி கையைக் காலைக் கட்டிப் போட்டுவிடுவதெனத் தீர்மானமானது. பூனை போல இறங்கினார்கள்.ஆள் அசையவில்லை.

கொஞ்சம் எட்டத்துல போனப்பிறகு கெக்கெபிக்கெவெனச் சிரித்துக்கொண்டு திரும்பி வந்தார்கள். சிரிப்புச்சத்தம் கேட்டு தூங்கியவர்கள் எழுந்தார்கள். சேதி கேட்டு அவர்களும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.காலையில மொத வேலையா ஒரு கண்ணாடி வாங்கிப்போடணும் என்றபடியே வண்டியை ஸ்டார்ட் பண்ணினார் கருப்பையா அண்ணாச்சி.ஊர் போகந்தட்டியும் குலுங்கி குலுங்கி நகர்ந்தது கொடைக்கான் வண்டி.

வேறொன்றும் இல்லை ஒரு பழய்ய மைல்கல் ஆளுயரத்துக்கு உண்டு.நீண்ட காலத்துக்குப் பிறகு அதுக்கு வெள்ளையடிச்சிருந்தான் ஹைவேய்ஸ்காரன்.

3.3.11

கேள்விகளை விதைக்கும் காடைக் குருவிகளின் தேடல்.


அருப்புக்கோட்டை தாண்டி திருச்சுழி வழியே பயணம்போனால் எங்கு பார்த்தாலும் வேலிக்கருவேல மரங்கள் அடர்ந்திருக்கும். விறகு வெட்டிச் சுமந்த லாரிகளும்,கரிமூட்டப் புகை மூக்குக்குள் கமறலும் எதிர்ப்படுகிற கோடை காலப்பயணம் அது.

எங்காவது  திட்டுத்திட்டாய் குண்டு  மிளகாய் விவசாயம் நடக்கும்.ஆங்காங்கே தட்டுப்படும் ஊர்களின் ஓட்டுவீடும் கூரை வீடுகளும் கூட வேலிக் கருவேல மரங்களுக்கு நடுவில்தான் ஒளிந்து கிடக்கும்.ஆறு பரிசல்,வயல்வெளி பசுமை எல்லாம் இல்லாத கிராமங்கள் அவை.

நீக்கமற நிறைந்திருக்கும் வெயிலும் நசநசப்புமாக ஒரு அமானுஷ்ய மௌனம்  வழிநெடுக நம்மோடு கூடவரும். குண்டுங் குழியுமான தார்ச்சாலை நீண்டு கொண்டே போகும். ஏகாந்தமாக நீண்டுகிடக்கும் சாலைகளின் நடுவில் விதம் விதமான பறவைகள் நடந்து இறைதேடும்.

வாகனத்துக்கு வழிவிட்டுப் பறந்து போகும் காடைகளும் குருவிகளும் நடுரோட்டில் உட்கார்ந்து எதைத் தேடும் என்கிற கேள்விகள் குடைச்சலைக் கொடுக்கும்.

உள்ளுர்ப் பயணிகளிடமிருந்து சிந்திய தானியங்களையா?.
உழைப்பவர்களிடமிருந்து சிந்திய வியர்வையையா?
வெளியூர்ப்பயணிகள் விட்டெறியும் காலிப்போடலங்களையா?

 இல்லை கனவுகளையா ?