31.3.11

கொள்ளிகள் எரியும் கூட்டத்தில் நாடு தீபம் தேடிக்கொண்டிருக்கிறது


கட்சிகளுக்கான மாவட்டச்செயலாளர்கள் தேர்வாகட்டும்,அந்தக்கட்சிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வாகட்டும் அந்த மாவட்டத்தில் எந்த ஜாதியினர் கணிசமாக இருக்கிறார்கள், அங்கு எந்த ஜாதியின் ஆதிக்கமிருக்கிறது என்பதைப்பொறுத்தே தேர்வுகள் நடக்கிறது.உதாரணமாக வன்னியர் அதிகமாக வாழும்  ஏரியாவில் அந்த பகுதியில் அதிகம் இல்லாத இனத்தவரான நாயக்கரோ நாடாரோ போட்டியிடுவதில்லை, போட்டியிட்டதாக சரித்திரமும் இல்லை பூகோளமும் இல்லை.நாயக்கர் ஓட்டுக்கள் அதிகமாக இருக்கும் பகுதி என்பதற்காக ஒருகாணி நிலம் கூட இல்லாத நாயக்கருக்கு சீட் வழங்கப்படுவதில்லை. அதெல்லாம் வசதி படச்ச நாய்க்கமாருக்கு என்கிற ’தண்ணீர் தண்ணீர்’ வசனம் தான் நினைவுக்கு வருகிறது.எந்தக்கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் மாண்டேக் சிங்க் அலுவாலியா தான் திட்டக்கமிஷன் தலைவர்.அதேபோல பாகிஸ்தானில் குடியுரிமை பெற்றுக்கொண்டு அங்கு தங்கி இருந்தாலும் நம்ம பசி க்கு ஒரு காபினெட் போஸ்ட் உறுதி.

கடைந்தெடுத்த ஜாதி,பண்ணையார்த்தனம்,உலகமயம் மூன்றும் கூட்டுச்சேர்கிற ஜனநாயகம் இது. நாம் பெயர்களுக்கு முன்னால்  வேண்டுமானால் மானே தேனே போட்டுக்கோ என்று சொன்னமாதிரி புரட்சி,சமத்துவம் என்கிற வார்த்தைகளைப் போட்டுக் கொள்ளலாம்.ஆகவே புரட்சித்தமிழன், புரட்சிக்கலைஞர்,புரட்சித்தலைவி,சமத்துவமக்கள்கட்சி,புரட்சிபாரதம் என்கிற மாதிரியான பெயர்களை வைத்துக்கொண்டு இப்போதைக்கு ஆறுதலடைந்து கொள்ளலாம். அல்லது ஆஹா வந்துவிட்டது புரட்சி எனப் பீத்திக்கொள்ளலாம். கண்ணங்கரேர்னு இருக்கிற எங்க பெரியப்பனுக்கு வெள்ளைச்சாமின்னு பேர்வச்ச மாதிரித்தான் இங்கு கதைகள் நடக்கிறது. இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரையம். இங்கே கொமுட்டிக்காயே சக்கரை.

அன்று முன்பதிவுக்காக புகைவண்டி நிலையத்தில் காத்திருக்க நேர்ந்தது.அருகில் உட்கார்ந்திருந்த கரைவேட்டிக்காரர் எந்தக் கரையாயிருந்தாலென்ன அது கறைதான். காங்கிரசையும் சேர்த்து அவை ஒரே குட்டையில் ஊறிய மட்டையே. அவர்  வார்டு வார்டாக ஜாதியின் பெயரையும் அங்கு எத்தனை ஓட்டுக்கள்  என்பதையும் புட்டுப்புட்டு வைத்தார். அவர் ஒரு முழு நேர அரசியல்வாதி.போன தேர்தலில் ஒரு வாக்குக்கு என்ன விலை என்பதையும் இந்த தேர்தல் நேரத்தின் விலைவாசி ஆகியவற்றோடு கணக்குப்பார்த்து எவ்வளவு கொடுத்தால் ஜெயிக்கலாம் என்பதையும் துல்லியமாகச்சொன்னார். அத்தோடு மட்டுமில்லாது தேர்தல் கமிஷன் நெருக்கடி கொடுத்தால் அதைச்சமாளிக்க என்னென்ன தந்திரோபாயங்களை கையாள்வதென்றும் பட்டியலிட்டார். எங்கூர்ல ’கள்ளம்பெருசா காப்பாம் பெருசா’ அப்படீன்னு ஒரு பழமொழி உண்டும்.

22.3.11

" கருப்பு நிலாக்கதைகள் " - எழுத்தாளர் மேலாண்மைப் பொன்னுச்சாமியின் விமர்சனம்.


முதல் கதையான விடுதலையின் ஒத்திகையில் நடகவேஷத்தில் கூட எளியவன் வாயிலிருந்து வந்து விழுகிற நாயே என்ற சொல்லைத் தாங்கமுடியாத விபரீதம். ஏகாலித் தொழிலின் அடிமைத்தன வேலைகளைக் கூட விளையாட்டாகவும், வேலையாகவும் எடுத்துக்கொள்கிற சாலமுத்துவாலேயே தாங்க முடியாத அவமதிப்பு,ரயிலில் கிடைக்கிற சாதியற்ற வாஞ்சை.

மருளாடியின் மேல் இறங்கியவர்கள் ரொம்பவும் தனித்துவமான சிறந்த கதை.நுட்பமான சமூகப்பார்வையும் உளவியல் கூறும் உள்ள கதை.

நினைவில் சலசலக்கும் பனங்காடு ஆறுமுகச்சாமியின் உடல் சிலிர்ப்பில் துல்லியமாகிற ஆழ்மனக்காதல்.சம்பாரிமேளம் பற்றிய கதையில் பாண்டியன் கிராம வங்கித்தோழர்களும்,கிருஷ்ணக்குமாரும் மனசுக்குள் வந்து போகிறார்கள்.தொழிற்சங்கங்கள் மீது அசூயை ஏற்படுத்த முனைகிற தமிழ்சிறுகதை உலகின் ஒட்டு மொத்த எத்தனிப்புக்கும் எதிராக இருக்கிற கதை.மரியாதையை ஏற்படுத்துகிற சிறுகதை.

இந்தத்தொகுப்பிலுள்ள கதைகளில் ஆகச்சிறந்த சிறுகதை ’கருப்பு நிலாக்களின் கதை’.கண்ணகி மறக்கமுடியாத உயிர்ச்சித்திரம்.ஆண்களின் பலம் பலவீனங்களினால் அலைப்புறும் பெண்ணின் அவலமும் ஆவேசமும் தெரிக்கிற கதை.அரிவாள்மனைக்கு இப்படியொரு நற்குணமா ?.செவத்த மணியின் பலகீனம்,பால்ச்சமியின் மூர்க்கம் ரெண்டும் அவளை சிதைக்கிறது.அவைதான் அவளை உக்கிரப்படுத்தவும் செய்கிறது.

இன்னொரு ரயிலில் ஸ்டேசன் மாஸ்டர் உயர்ந்து நிற்கிறார்.ரயில் முகம் பார்த்தறியாத சிறுவனின் ஆவலும் அலைபாய்வும் கண்ணுக்குள் தெரிகிறது.பெரியார் பேரனுக்குப் பிடித்த பேய் நல்ல சித்தரிப்பு. பயந்த மனசுக்குள்ளொரு மனிதநேயம், உறவுச் சேர்க்கையைக் கலைத்துவிட்டோமே என்கிற குற்ற உணர்வு.ஆனியன் தோசையில் மனசு ஆடி ஆடிக் குலுங்கிச் சிரிக்கிறது.

எளிய மக்களின் வாழ்வியலையும், உளவியலையும் அவர்களது மொழியிலே மட்டுமில்லை.அவர்களது மனநோக்கிலிருந்தும் உணர்த்துவதும் விவரிப்பதுமித்தொகுப்பின் தனித்துவச்சிறப்பு.பொது மனிதனாகப்பாவனை பண்ணாத எழுத்தாளனின் நேர்மைதான் இந்தத் தனித்துவத்தைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது.

வாக்கிய அமைப்புகளிலும் சற்று வித்தியாசம் தென்படுகிறது. வாக்கிய அமைப்புக்களில் எழுத்தாளர் ஏற்படுத்துகிற லாவகம் அந்த மொழிக்குரிய வெள்ளந்திக் குணத்தைச் சற்றே மட்டுப்படுத்துகிறது. விளைவு ? உணர்ச்சி ரீதியான தாக்குதல் நிகழ்த்துவதான பலகதைகள், பலநிகழ்வுகள், உணர்ச்சி ரீதியான அலைக்கழிப்பை ஏற்படுத்தாமல் போய்விடுகின்றன. அறிவை மட்டுமே உரசி விட்டு நகர்கின்றன.

வாசித்து முடித்தவுடன் மனசுக்குள் வேரடிப்பது கதைகளின் யதார்த்தமும்,நம்பகத்தன்மையும்,உணர்ச்சி ரீதியான அலிக்கழிப்பும்தான்.
களச்சித்தரிப்பு இல்லை.நிகவுகளைச்சித்தரிக்கும் கதைகள் காலம் இடம் போன்றவற்றைத் தாண்டி ச்செல்வதால் கதைகள் மனசுக்குள் வேரடிக்க மறுப்பதற்குக் காரணம்.

சச்சி, கண்ணகி, சாலமுத்து, வெள்ளச்சிகள் மறக்கமுடியாத உயிர் சிற்பங்களாகி நிலைக்கின்றன.எழுத்தாளனின் தனித்துவம் இந்தக்கதைகளெங்கும் கிடக்கின்றன.சேரிக்குள் இருந்து குடியானவத் தெருவைப்பார்க்கிற கண்ணோக்கில் ஒட்டுமொத்த கதைகளின் தொனியும் பயணமும் நிகழ்கிறது.

வடிவமைப்பும்,அச்சும், அட்டையும் நேர்த்தியாகச் செய்துவிட்டு ஃபைனல் ப்ரூப் கோட்டை விட்டு விட்டீர்கள்.எழுத்துப்பிழைகள் வாசிப்பு ருசிக்குள் கூடுதல் உப்பைப்போடுகிறது.வட்டார மொழிச்சிறுகதைகளில் எழுத்துப்பிழை வருவது பெரும் ஆபத்து.அனர்த்தங்களைத் தந்துவிடும்.

பொதுமனிதனாகப்பாவனை பண்ணாத எழுத்தாளனின் நேர்மை மொழியாளுமையிலும் செயல்பட்டிருந்தால் ஆகச்சிறந்த தொகுப்பாகவும் காலத்தால் மறக்கமுடியாத கலைப் படைப்பாகவும் மாறியிருக்கும்.

விமர்சனங்கள் உங்களையறியாமல் உங்களிடம் ஒட்டியிருக்கும் குறைகளைச் சுட்டுதல்.குறை களைந்த காமராஜை கண்டறிதல் என்று கொள்க.இந்தச் சிறுகதைத்தொகுப்பு ஆகச்சிறந்த கதைகள் கொண்ட அணிவகுப்பு. கிராமத்தின் ஏழ்மை இல்லாமை உள்முகச்சிதைவுகள்,நிறைவேறாத ஆசைகள் ஆகியவற்றைநல்ல கரிசல்காட்டு மொழியில் படைப்பாகத்தந்திருக்கிறீர்கள்.

’கருப்புநிலாக்கதைகள்’, ’மருளாடியின்மேல் இறங்கியவர்கள்,’ ’வேரைவிரட்டியமண்’, ’சம்பாரிமேளம்’ போன்ற உன்னத கதைகளை- சாகாவரம்பெற்ற கதைகளைத்தந்திருக்கிறீர்கள்.
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

21.3.11

யார் யாரை ஏமாற்றுகிறார்கள்.


வழகத்துக்கு முன்னாலேயே முழித்துக்கொண்டு ஊர் ஒத்தையடிப்பாதைவழியே பஞ்சாயத்துப்பள்ளிகளை
நோக்கி பயணப்படும். நடக்கமுடியாதவர்கள், வயோதிககர்கள், பிள்ளைத்தாச்சிப் பெண்கள் எல்லாம்
மாட்டுவண்டிகளில் கொண்டுவந்து இறக்கிவிடப்படுவார்கள். நீண்டவரிசையில் பாட்டும் கூத்துமாக
நகர்ந்துபோய் ஆட்காட்டி விரலில் மை தடவிக்கொண்டு திரும்ப வருவார்கள்.  ஏதாவது வேப்ப மர
நிழலில் மொய் எழுதுகிற தங்கிலியான் உட்கார்ந்து ரெண்டு கருத்த வெத்திலையும் ஒரு கொட்டப்பாக்கும்
கொடுத்துக்கொண்டிருப்பார். கூட ரெண்டு குடுத்தா ஙொப்பன் வீட்டுச்சொத்தா போயிரும் என்று கேட்கிற
மதனிமார்களுக்குச் சொல்ல, ''வீட்டுக்கு வா கூட ரெண்டு போனி கூலு கரைச்சித்தாரன், அதுவுமில்லைன்னா
குருன வாங்கிப்பொங்கி கருவாட்டுத் தண்ணி வச்சித்தாரன், இது ஊர்த்துட்டுல வாங்குன வெத்தில,
பங்காளத்தபடிதான்''  யோக்கியமான பதிலும் அவரிடம் இருக்கும். ஓட்டுப்போடுவதைப் பார்க்கவென்றே
சின்னப்பிள்ளைகள் கூட்டம் கூட்டமாய் வந்துபோகும். ஜனநாயகத்தின் பெரும் திருவிழாவாக கள்ளங்கபடமற்ற
தேர்தல் கடந்துபோன காலங்கள் அது.


முடியாட்சியும் ஆங்கில ஆட்சியும் தாண்டியொரு மக்களாட்சியை ருசிக்கத்தொடங்கிய காலம் அது. கிட்டத்தட்ட
எண்பதுகள் வரை இதுதான் நிலைமை. ஆனால் இருபது வருசத்தில் எல்லாம் வேகமாய் மாரிக்கொண்டு
வருகிறது. இப்போது எல்லாக் கிராமங்களிலுமே காலைப் பேருந்துக்கு ஒரு கூட்டம் கிளம்புகிறது. தாலுகா
ஆபீஸ், கோட்டாட்சியர் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், காவல் நிலையம் இப்படி மக்கள் வந்து
போகும் இடங்களுக்கு  அவர்கள் பிரிந்து போய் காத்திருப்பார்கள். பிரச்சினைகளை உண்டாக்க, பெரியதாக்க,
பிரச்ச்சினைகளுக்கு பஞ்சாயத்துப் பண்ண, கடைசியாய் ராசி பண்ணிவிட்டு மதியம் சீமைச்சாராயமும்,
பிரியாணியும்  இரவு கடைசி வண்டிக்கு வீடு திரும்பும் போது ஒரு நூறு ரூபாயாவது பையில் இருக்கும்.


பருத்தியும் மிளகாயும் விளைந்த நிலங்களில் வேலிக்கருவேல மரங்கள் மண்டிக்கிடக்க, எங்கள்
உழைப்பாளர்கள் கிராமங்களிலிருந்து கிளம்பி வந்து கௌரவப் பிச்சைக்காரர்களாக உருமாறுகிறார்கள். நகரத்து வீதிகளில்
பிரியாணி வாடை மணக்கிற முகங்கள் தேடி அலைகிறார்கள். ஏற்கனவே நாறிக்கிடக்கிற பல அலுவலகங்கள்
இன்னும் அதிகாமாக சுத்தம் செய்ய முடியாத படி நாறடிக்கப்படுகிறது. ஒரு நாள் பொழுது கழிவதற்காக
விலை மதிக்க முடியாத நாணயமும் நேர்மையும்  விலைபோகிறது. கைநாட்டுக்காரர்களும், நகரம்
பரிச்சயமில்லாத அப்பாவிகளும் இவர்களை நம்பி குறுக்குப்பாதையில் பயணமாகிறார்கள்.

1975 ஆம் ஆண்டு சாத்தூரில் அழகுத்தேவர் என்கிற எம் எல் ஏ ஒருவர் இருந்தார், அவரிடம் கையெழுத்து
வாங்கி மாணவர் விடுதியில் சேர எனக்கு எட்டு கிலோ மீட்டர் நடக்கிற நேரம் மட்டுமே செலவானது.
தம்பி எந்த ஊரு, என்ன படிக்கிறெ, நல்லாப்படிக்கனும் என அறிவுரை சொல்லிக்கொண்டே
”அமுக்குத்தேவர்” என்று கையெழுத்துப்போட்டு விட்டு கீழே வைத்த வேப்பங்குச்சியை எடுத்து திரும்பவும்
பல்விலக்க ஆரம்பித்தார். அந்தக் கிராமத்தானின் முகம் எதோ கனவில் வருகிற மாதிரித்தான் நிழலாடுகிறது.
அவர் தங்கியிருந்த அந்த வாடகை வீட்டில் இப்போது யாரோ தீப்பெட்டி ஆபீஸ் போர் மேன் வாடகைக்கு
குடியிருக்கிறார்.

தன்னைத்தேடி வருகிறவர்களை காக்கவைப்பதுவும் அழைக்கழிப்பதுமே ராஜதந்திரமாகிப்
போன காலமாகிவிட்டது இப்போது. லஞ்சப்பணத்தில் பங்களாக் கட்டியவன் பிளைக்கத் தெரிந்தவனாகிறான்.
நேர்மையான அரசு அதிகாரி முசுடு, மனிதரண்டாதவன் எனப் பட்டம் வாங்கி மதிப்பிழந்துபோகிறான். அந்த
கருத்துருவாக்கம் நகரம் தாண்டிப் பயணமாகி பான்பராக் பொட்டலம்போல், அழுகுனி சீரியல் போல்
கடைகோடிக் கிராமத்துக்கும் விஸ்தரிக்கப்பட்டுவிட்டது. அதனால் தான் இப்போது ஒவ்வொரு கிராமத்திலும்
ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பேதமில்லாமல், கொள்ளை நடக்கிறது. ஐந்து வருசம் தங்களைச்சுரண்டித்திங்க
தலைக்கு இருநூறு முன்னூறு என்று சுய அடமானம் அரங்கேறுகிறது.

ஒரு துக்க விட்டுக்குப்போவதற்கு இரவு பணிரெண்டு மணிக்கு இரு சக்கர வாகனத்தில் கிராமத்துக்கு ப்போக வேண்டிய
நிர்ப்பந்தம் வந்தது நான்கு கிராமங்கள்  தாண்டிப்போகவேண்டும் ஒவ்வொரு ஊரிலும் பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் பத்துப்பேர்
உட்கார்ந்துகொண்டு போகிற வருகிற வாகனங்களை மறித்துக்கொண்டிருந்தார்கள். சாதிக்கலவரம் ஏதும் நடந்து
விட்டதோ என்னும் பயத்தோடு கடந்துபோன என்னயும் வழிமறித்து எந்தக்கட்சி என்று விசாரித்தார்கள் ஒரு
வேளை கட்சிக்கலவரமாக இருக்குமோ என்னும் சந்தேகம் வந்தது. கிராமங்களில் கட்சி மற்றும் மதக்கலவரங்கள்
வருவதற்கு சாத்தியமே இல்லை.

கிராமங்கள் அழிந்து வருவதற்கு சமச்சீரற்ற நடைமுறையும், அதன் ஆதிக்காரணியான சாதியும் தான் முக்கிய
காரணம். அதை அழிக்க எந்த விஞ்ஞானியாலும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே அங்கு
என்ன ஜீவாதாரப் பிரச்சினை குறித்துமுரண்பாடு வந்தாலும் அது சாதிக் கலவரமாகத்தான் மாறும், அது
வேறு பிரச்சினை. எனது ஊருக்கு முந்திய ஊரில் என்னை இடை மறித்தார்கள் பக்கத்து ஊர் என்பதால்
தைரியமாக நின்றேன் என்னை அடையாளம் கண்டுகொண்ட சிலர் குசலம் விசாரித்து  விட்டு போகச்
சொன்னார்கள். என்ன என்று கேட்டேன் "" தேர்தல் செலவுக்கு பணம் தர ஆள் வரும் அதான் நிக்கோம்,
பையப்பதனாமா போங்க"" என்று என்னை அனுப்புவதிலே குறியாக இருந்தார்கள். ஒவ்வொருவரின் கையிலும்
வெவ்வேறு கட்சிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ஸ்லிப்புகள் இருந்தன.

வீட்டுக்குப் போனதும் என எனது அம்மா முழித்துக்கொண்டு ’என்னய்யா துட்டிக்கு வாரவன் கண்ணு வெளிச்சத்திலே வரலாமில்ல இந்த ராவுல ஒத்தியில வண்டியில ஏ வரணும்’ என்று விசனப்பட்டார்கள். தந்தையாரைக் காணவில்லை
காரணம் கேட்டேன். ’கச்சிக்காரங்க வருவாங்கண்ணு ஊரே போய் ரோட்டுல நிக்கி ஙொய்யாவும் அங்கன போய் கெடக்காரு’
ஒன்று விளங்கவே இல்லை  எல்லா கட்சியில் அட்டைகளையும் வைத்திருப்பது ஏன் என்று கேட்டேன். வருகிற கட்சி எதுவாக இருந்தாலும் அவர்களுக்குத்தான் ஊரின் மொத்த ஓட்டும் என்று சொல்லி பணம் வாங்கத்தான் என்பது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.

யார் யாரை எமாற்றுகிறார்கள் என்று புரியவில்லை.

(மீள் பதிவு)