30.12.09

தேடு கல்வியில்லாத ஊரை

அவள் பெயர் லட்சுமி,வயது பதினாறு இருக்கும். எழுபது சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றதற்கான சிறப்பு உதவித்தொகை கிடைத்திருந்தது அவளுக்கு. அந்த காசோலையை மாற்ற எங்கள் வங்கிக்கு வந்தாள்.கணிதத்திலும்
பௌதிகத்திலும் தொண்ணூறு சதவீத மதிப்பெண் வாங்கியிருந்தாள். மிகப்பெருமையாக இருந்தது. ஊக்கம் சொன்னேன். நல்ல கல்லூரியில் சேர் எதாவது ஆலோசனை சின்னச்சின்ன உதவிகேள் செய்யலாம் என்றேன் எல்லாவற்றுக்கும் மௌனத்தை அல்லது தலையாட்டுவதைப் பதிலாக்கி விட்டுப் போனாள். பணம் வந்ததும் எடுத்து அதை நிலையான வைப்புத்தொகையில் போடச்சொன்னாள் ஏன் என்று கேட்டதற்கு கண்ணில் ஒரு சொட்டு கண்ணீரை வைத்திருந்தாள்.

கூட வந்த ஒரு அம்மாவிடம் கேட்டதற்கு அப்பா படுத்த படுக்கை,அம்மா தீப்பெட்டி ஆபீசில் வேலை பார்க்கிறாள்,வீடு வாசல் இல்லாத கூலிச்சனங்கள் என்று சொல்லிவிட்டுப்போனது. மீண்டும் அந்தப் பெண்ணைக் கூப்பிட்டுப் பேசினேன். எங்கப்பாவ விட எனக்கு படிப்பு ஒண்ணும் பெரிசில்லை என்று சப்பென அறைந்து விட்டுப்போனாள்.அந்த அதிர்ர்சியிலிருந்து மீள்வதற்கு ஒரு ஆறு மத அவகாசம் கூடக்கொடுக்காமல் மீண்டும் ஒரு அதிர்ச்சியைகொண்டு வந்தாள். இப்போது அவளோடு ஒரு பதினெட்டு வயது வாலிபன்.அவளது கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறு. 

இது நமது கண்களுக்குத் தெரிந்தவை தெரியாத கதைகளோடு சாயங்காலம் பருத்தியை அடைந்த மாதிரி அடைத்துக் கொண்டு போகும் தீப்பெட்டி ஆபீஸ் வாகனத்துக்குள்ளிருந்து கழுத்தை நீட்டிக் கல்லூரிகளையும் அங்கு சுடிதாரோடு நிற்கும் பொறாமைகளையும் எறித்தபடிப் போகிறது நூற்றுக் கணக்கான அக்கினிக் குஞ்சுகளின் கண்கள்.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஜூன் மாதத்தில் இந்த பிரச்சினை அதிகரித்துகொண்டே இருக்கிறது. சாத்தூரில் ஆறு தமிழ் வழிப் பள்ளிகளும் ( அதில் இரண்டு பெண்களுக்கானது) இரண்டு ஆங்கில வழிப்பள்ளிகளும் இருக்கிறது. சுற்றியிருக்கிற கிரமத்துக் குழந்தைகள் குறிப்பாக வறிய குடும்பத்துப் பெண்குழந்தைகள் ஒன்பதாம் வகுப்பு சேர்வதென்பது குதிரைக் கொம்பாகவே ஆகிவிட்டது.ஆம்  சென்ற வருடம் மட்டும் தகுதிகாண் தேர்வில் தோற்று விட்டதாகக் கூறி  தேர்வெழுதிய நூற்றி எழுபது பிள்ளைகளில் நூற்றி ஐம்பது பிள்ளைகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.அவரவர் தங்கள் தகுதிக்கு ஏற்றபடி சிபாரிசுக்கு அலைந்து முட்டிமோதித் திகைத்து நிற்கிறார்கள்.

பள்ளிகளில் நல்ல ரிசல்ட் வேண்டும்,இதற்குமேல் இட வசதியில்லை,ஆசிரியர்கள் போதுமான அளவு இல்லை எனும் பதில் வருகிறது.இந்தத் தடை தாண்டிப் படிக்க நினைக்கும் பிள்ளைகள் கதி. தீப்பெட்டி,பட்டாசு ஆலைகளில் கிடைக்கிற குடும்ப வருமாணத்தில் படிக்க வைப்பது பெரும்பாடு. அதுவும் சாத்தூருக்கு பேருந்தில் அனுப்பிப்படிக்க வைப்பது அதைவிடப் பெரும்பாடு. இதில் இடறி விட்டால் மீண்டும் தீப்பெட்டி ஆபீஸ் எனும் அந்தப்பாழுங் கிணறு வாயைப்பிளந்து அவர்களை ஏந்திக் கொள்ளத் தயாராக இருக்கிறது. பத்தாயிரம் இருபதாயிரம் முன்பணத்தோடு.

9 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

கசப்பான உண்மைக்கள், எதிர்கால சந்ததி குறித்த கவலையும், பயமும் நம்மில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பது உண்மையே.

ஏதாவது செய்தாக வேண்டும்,
சகித்துக் கொண்டே வாழத் தெரியவில்லை....முடியவில்லை

என்னால் முடிந்த அனைத்து உதவிகளும் செய்ய காத்திருக்கின்றேன் தோழர்.

nerkuppai thumbi said...

மனதை நெகிழ வைத்த மற்றொரு உண்மை அனுபவம்.
கல்வியைப் பற்றி வாய் கிழிய பேசும் அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும் மறந்து விடுகின்றன. கல்வியறிவை வளர்க்க வேண்டும் என்றால் அதற்கு விடை தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அல்ல. அரசினர் பள்ளிகள் தான்.
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளை எவ்வளவு அரசு உயர்நிலைப்பள்ளிகள் திறக்கப் பட்டன என்று கேட்டால் அதிர்ச்சி அடைவோம்.
அடுத்தது, நன்றாக படித்து பள்ளிக் கல்வி முடிக்கும் ஆண்கள், பெண்கள் மேலே என்ன்ன செய்வது ? I T I மற்றும் பாலிடெக்னிக்குகள் திறப்பது போதாது. எல்லோரும் இஞ்சினீரிங் படிக்க முடியாது; தேவையும் இல்லை. தொழில் கல்வி படிக்க அரசு கல்வி நிலையங்கள் நிறைய திறக்க வேண்டும்.
இல்லை எனில், அவர்கள் தீப்பெட்டி யூனிட்டுகளில் வேலை பார்க்க தான் போக வேண்டியிருக்கும்.

nerkuppai thumbi said...

பொது மக்களில் படித்தோரும் தன்னால் இயன்ற அளவு அவர்களுக்கு TNPSC, (சமீபத்தில் ஆயக்குடி பற்றி படித்து இருப்பீர்கள் )போன்ற தேர்வுகளுக்கு தயார் செய்வது, சிறு தொழில் செய்ய ஆலோசனைகள் வழங்குவது முதலியன இலவசமாக செய்யலாம்
அரசு பக்கம் நோக்காமல், நாம் நம் சிறு பங்கை ஆற்ற வேண்டும்.

ஈரோடு கதிர் said...

//இந்தத் தடை தாண்டிப் படிக்க நினைக்கும் பிள்ளைகள் கதி.//

இதைப்பற்றி நிஜமான அக்கரை இல்லை என்பது கசப்பான உண்மை..

நானும் கூட இதை எழுதுகிறேனே தவிர.... இது வரை இதற்காக ஒன்றும் செய்யவில்லை..

நண்பர் ஆரூரன் இது போல் ஒரு பள்ளி நடத்திவருகிறார் என்பது கூடுதல் தகவல்

அமிர்தவர்ஷினி அம்மா said...

:(

Kumky said...

அங்கிருக்கும் அரசியல்வியாதிகளுக்கு கூடவா இது குறித்த அக்கரையில்லை...
மிக வருத்தமாகத்தானிருக்கிறது..

ராகவன் said...

அன்பு காமராஜ்,

நலமா? மிக அருமையான பதிவு! கல்வி இந்தியாவின் பொருளாதாரத்தின் இனையான ஒரு விஷயம். நிறைய விஷயங்கள் இங்கு பொருளாதாரம் போல தான் இருக்கிறது, சமச்சீராய் வளராமல் ஏதாவது ஒரு பக்கம் மட்டும் வீங்கி புடைத்து மறுபக்கம் சூம்பி தேய்ந்து. கல்வியின் தரம் உயர்வதற்கான வழிமுறைகளை அரசு ஆலோசித்துக் கொண்டே இருக்கிறது, சில இடங்களில் செயல்படுத்தவும் செய்கிறது. ஆனால் அது எல்லோருக்கும் சீராக போய்ச் சேர வேண்டும், கல்விக்கான வாய்ப்புகள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான நிலையில் இருக்க வேண்டும் என்ற பெரிதாக யாரும் யோசிப்பதில்லை.

equal distribution ங்கிறது அரசுக்கு அர்த்தம் தெரியாத ஒன்று. படிப்பதற்கு பணம் ஒரு காரணியாய் இருப்பது இல்லாமல் போனால், ஒரு வேளை இது போன்ற வாய்ப்புகள் கிடைக்கலாம். ஆனால் குடும்பத்தில் நிலவி வரும் வறுமை மற்றும் இதர காரணங்களினால் வேலைக்குப் போக வேண்டிய குழந்தைகளுக்கு கல்வி எப்படியாவது போய் சேர அரசு உறுதி எடுக்க வேண்டும். தீப்பெட்டி தொழிற்சாலையும் ஒரு தொழிற்சாலை என்ற நிலையில் வேலை வாய்ப்புக்கான ஆதாரமாக ஏன் பார்க்கக்கூடாது? ஒரு தொழிற்சாலையில் கடைபிடிக்க வேண்டிய எல்லா விதிமுறைகளையும் கடைபிடிக்கப்படும் பட்சத்தில், அதை கண்காணிக்க போதுமான அரசு இயந்திரச் சக்கரங்கள் இருக்குமானால் அதைப்பற்றிய கவலைகள் எதற்கு? தீப்பெட்டித் தொழிற்சாலையை நாம் நெருப்புடன் சம்பந்தப்படுத்திக் கொள்வதாலும், அதன் மூலமான சில கசப்பான, கொடுமையான அனுபவங்களாலும் தான் அது ஒரு கொடுமையான ஒரு தொழில் இடமாகத் தெரிகிறது.

இங்கு சில அடிப்படைகளில் மாறுதல் செய்தால் நிறைய விஷயங்களை செய்ய முடியும் என்றே தோன்றுகிறது. இப்போது புதிதாக ஏற்படுத்தப்பட்ட சட்டத்தின் படி எல்லா திருமணங்களும் பதிவு செய்யப்படவேண்டும். இந்த சதவிகிதம் குறைந்தாலே அது ஒரு பெரிய வெற்றிதானே!

ஏதாவது செய்யுங்கள் காமராஜ்!

அன்புடன்
ராகவன்

கிரகம் said...

நீங்கள் சொல்வது உண்மைதான் காமராஜ் எவ்வளவோ நன்கு படிக்கும் பிள்ளைகள் பொருளாதார வசதியில்லாதால், குடும்ப சூழ்நிலையால் படிப்பை பாதியில் கைவிடுகின்றன.

- கிரகம்