31.1.11

நல்லதோர் வீணை செய்தே


வடபழனி முருகன் கோவிலுக்குப்போகும் தெரு நெடுக பக்தி,பக்தி சார்ந்த கடைகள். மெலிதான குரலில் பக்தர்களை அழைக்கும் கடைக்காரர்கள்.கார்களில் வந்திறங்கும் மேட்டுப்பக்தர்களுக்கென அழகுற நிர்மானிக்கப்பட்ட பக்தி ஸ்தாபனம்.பளிங்குத்தரை துருப்பிடிக்காத உலோகங்களிலான கிராதிகள் கொண்ட தடுப்புச்சுவர்கள்.அழுக்கு தூசி அதுசார்ந்த எதுவும் கண்ணில் படாத முருகனின் ஆலயம்.
அடித்தட்டு மக்கள் புழக்கமில்லாததால் முருகனுக்கு பெரிதாக வேண்டுதல்கள் ஏதுமற்ற பொழுதுபோக்கு தரிசனம் தருவது மட்டும் தான் பிரதான காரியம்.உருமிமேளம்,குலவைச்சத்தம்,அன்பென்றால் கூட ஆங்காரத்தோடு கூடிய அன்பு,சின்னச்சின்னச்சண்டைகள்,சிதறுகிற தேங்காய்,பூ பத்தி சந்தணமணத்தோடு பொங்குகிற சக்கரைப்பொங்கல் வாழ்நாள் முழுக்க இவைகள் தான் வழிபாட்டுத்தலமாகி இருந்ததால்.
வடபழனி கோவில் எதோ அறியாத பணக்காரப்பங்களாவுக்குள் நுழையும் உணர்வைக்கொடுத்தது.

அங்கே முழுக்கால்சராய் அணிந்த சேவைக்காரர்கள் இரண்டு மூன்று பேர் இருந்தார்கள்.கால் சரிவர இயங்காத,பேசவராத பார்வைப்புலன் இல்லாத அந்த மாற்றுத்திறனாளிகள் குங்குமம்,விபூதியை கீழே போடாமல் எடுத்துச்செல்ல காகிதங்கள் கொடுத்தும்,அவர்கள் தரும் சில்லறைகளை வாங்கிக்கொண்டும் கோவில் பிரகாரம் முழுக்க வியாபித்திருந்தார்கள்.அத்தோடு கூட சீர்காழியின் உயிர் உருக்கும் குரலும் அந்த கோவில் முழுக்க வியாபித்திருந்தது.தங்கச்சி சின்னப்பொன்னு தலை என்ன சாயுது,வஞ்சகன் கண்ணனடா கர்ர்ர்ர்ணா,சின்னஞ்சிறு பென்போலே சிற்றாடை இடையுடுத்தி இப்படிக்காலத்தோடு இனிப்புத்தடவிய கீதங்களை கேட்டுக்கொண்டே கிடக்கலாமெதுவும் ஒட்டாத போது அந்தக்குரல் மொத்தமாக வந்து ஒட்டிக் கொள்ளாதா.

வெளி வந்து டெரக்கோட்டாவில் வடிவமைக்கப்பட்ட இரண்டு குட்டிப் பாண்டங்கள் வாங்கினோம்.பளீரென்ற செம்மண்ணில் செய்த அந்த சாம்பிராணி குடுவையைக்கையில் வாங்கியதும் பேராசிரியர் ரவிச்சந்திரனின் சூரியச்சக்கரம் என்கிற கவிதையும்,எங்க ஊர் முத்துவேல் செட்டியாரும் நினைவுக்கு வந்தார்கள்.வண்டி நிறைய்ய மண்பானைகள் கவிழ்ந்திருக்கும்.மேக்காலின் நுனியில் செட்டியாரின் மனைவி செட்டியாரம்மா உட்கார்ந்திருப்பார்.செட்டியார் மாடுகளோடு கூட நடந்து ஊருக்குள் வருவது கண்கொள்ளாக் காட்சியாயிருக்கும். பானைகளின் மகத்துவம் சொல்லி அதைக்கவிழ்த்தி அட்காட்டி விரலை மடக்கி தட்டுகிற ஓசை கணீர் கணீரென்று கேட்கும். ’இந்தா தாயி
படக்குனு உருவாத கேட்டா எடுத்துத்தருவேனெ’ன்று புகை மணக்கும் மண்சட்டிகளை பிள்ளைகளிப் போல கவனித்துக்கொள்வார்.

கடையை விட்டு வெளிவந்த போது ஒரு பிச்சைக்காரக்கிழவியை ஒரு வேஷ்டி உடுத்திய ஆள் உருட்டுக்கட்டையால் அடித்து விரட்டிக்கொண்டிருந்தார்.அவள் சென்னைத்தமிழில் அர்ச்சனை பண்ணிக்கொண்டே அந்த இடத்தை விட்டு ஓடினாள்.வற போற சேவார்த்திககட்ட பைய இயுக்கா,துட்டுக்குடுக்கலேண்ணா பேஜார் பண்றா என்று சொல்லியபடி இன்னும் கெட்டவார்த்தைகள் சொன்னார்.
அவர் அங்கிருந்து போனதும் இவன நேத்து கடக்காரங்க அடியான அடி அடிச்சாங்க இன்னிக்கி பாருங்க இது பேஜார் பண்ணுது என்று கடைக்காரர் சொன்னார். கோவிலுக்கு வந்த பக்கத்து தெரு பெண்பக்தர் ஒருவர். இவுரு யார் தெர்தா நம்ப பாரதியாருக்கு பேரப்புள்ள,
பாவம் இப்படி ரோட்டுல அலையுது என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்து கடந்து போனார்.கையில் வைத்திருந்த நினைவுகள் நொறுங்கிப்போக அங்கிருந்து உடனே காலிபண்ணிக்கொண்டு வீடு வரவேண்டியதாயிற்று.  

25.1.11

கீழே கிடந்த உளியின் சிற்பி.


ஷாஜஹான் மாமாவின் ’கருவேல மரங்கள்’ சிறுகதையை நினைவுபடுத்தியபடி அவர் வந்தார்.வசல் வரை வந்து கொஞ்சம் தயங்கி நின்றார் யாரோ ஊர்லருந்து வந்துருருக்காங்க சொல்லி எழுப்பிவிட்டாள். அவர்தான் பாக்கியத்தாத்தா.முப்பதுவருடமாகப்பார்த்த அதே தலைப்பாகை.குளிக்கும்போது கூட கழற்றமாட்டார்.சாப்பிடும்போது தலைத்துண்டை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு சாப்பாட்டுக்கு மரியாதை செய்வது பொதுவாக கிராமத்து வழக்கம். ஆனால் பாக்கியத்தாத்தா அப்போதும் கழற்ற மாட்டார்.
கவசகுண்டலம் போல கூடவே இருக்கும் ஒரு மஞ்சப்பை.இரண்டு உளி.
ஒரு சுத்தியல்.சாப்டுறீகளா என்றதும் தலைகவிழ்த்து மௌனம் காத்தார்.சாப்பாட்டு மேஜையில் வைத்த பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அந்த இடத்தில் மஞ்சப்பையை வைத்துவிட்டு கீழே உட்கார்ந்தார்.மிச்சமிருந்த மூன்று ஆப்பமும் கொஞ்சம் தேங்கய்ப்பாலும் வைத்தாள் கூட்டிப்பிடித்தால் ஒரு கவளத்துக்கு வராது.ஆனாலும் அவருக்கு பதவிசாய் நுனிக்குச்சாப்பிட வராது.மதியத்துக்கு ஆக்கி இறக்கிய சுடுச்சோத்தில் கொஞ்சம் வைத்தாள். பின்னும் வைத்தாள்.அவருக்கு வயிறு நிறைந்திருக்காது.ஆனாலும் மனசு நிறைந்திருந்தது.

விடு விடுவென்று க்ரைண்டரில் இருக்கிற கல்லை எடுத்துக்கொண்டு வாசலுக்குப்போய் வேப்பமரத்தடியில் உட்கார்ந்துகொண்டார். உளிச்சத்ததுக்கு பயந்து காகங்கள் மிரண்டு பறந்து ஓடியது.தெருவில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த குழந்தைகள் ஓடிவந்து அருகிருந்து வேடிக்கை பார்த்தார்கள்.தாத்தா அவர்களோடு பழக்கம் பேசினார்.ஒரே சிரிப்புச் சத்தமாகக்கேட்டது. ’தாத்தா அது எள்ளுக்ஞ்சியில்ல எல் கே ஜீ.’ தென்னம்பட்டையில் நாலு இதழ் உருவி ஆளுக்கொரு பீப்பியும் பொம்மையும்
செய்துகொடுத்தார்.கடைக்கு வந்த எஞ்சீனியரின் மனைவி

’இந்தாப்பா க்ரைண்டர் கொத்த எவ்வளவு’

என்று கேட்டார். தாத்தா அவர் முகத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் குழந்தைகளோடு பழமை பேச ஆரம்பித்தார்.

‘இந்தாப்பா ஒன்னியத்தான காதுல விழல கூலி எவ்வளவு’
’இல்ல தாயி கூலிக்கு கொத்துறதில்ல’
’பின்ன’
அதற்குள் வீட்டுக்குள்ளிருந்து பிரேமாவதி ஓடிவந்து
’ரமேஷம்மா அது எங்க வீட்டுக்காரரோட தாத்தா’
என்று சொன்னதும்
‘சாரி பெரியவரே’

என்று சொல்லிவிட்டு அவளை ஒரு முறை உற்றுப்பார்த்துவிட்டு நகர்ந்தார்.குழந்தைகளுக்கு இந்த சம்பாஷனையில் எந்த நாட்டமுமில்லை. அவர் கையில் படிந்திருந்த கருங்கல் தூசியைப் பார்த்தார்கள். குழவிக்கல்லில் மீது உதடு குவித்து தாத்தா ஊதியதும்  ஒரு பெரிய்ய பெருமூச்சின் சத்தம் கேட்டது. அதிலிருந்து கிளம்பிப் பறந்த துகள்களோடு சிறுவர்கள் காற்றில் பயணமானார்கள். தாத்தா எழுந்து கொல்லைப்பக்கம் போய் ஒரு பீடி பற்றவைத்துக் கொண்டு நின்றார். ரமேசு அந்த நேரம் கீழே கிடந்த உளியெடுத்து குழவிக்கல்லில் வைத்து அடித்துக்கொண்டிருந்தான். ’தம்பி சின்னவரே கீழ போடுங்க கையிலபட்டுச்சி ரத்த வந்துரும்’ கூட இருந்த குழந்தைகள் நான் நீயெனப்போட்டி போட்டுக்கொண்டு சுத்தியல் கேட்டன.இன்னொருவன் வெறும் உளியெடுத்து குழவிக்கல்லில் அடித்துக்கொண்டிருந்தான். பாதிப்பீடியை கீழே போட மனசில்லாமல் தூக்கியெறிந்துவிட்டு ஓடிவந்து குடுங்க சின்னவரே குடுங்க என்று கேட்டுக்கொண்டிருந்தார் பாக்கியத்தாத்தா.

திரும்பவந்த ரமேசம்மா  ’டாய் ரமேஷ்  இண்ட்டிசண்ட் ராஸ்கல் கிவ் த ஹாம்மர்’ என்று அரட்டிக்கொண்டே வந்தாள். கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு போனாள். கையிலிருந்த பொம்மையும் பீப்பியும் கீழே விழுந்தது குனிந்து எடுக்கப்போனான். குனிய விடாத படிக்கு லாவகமாக கூட்டிக்கொண்டு போனாள். ரமேசு திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டே போனான். பொம்மை பீப்பியும் அழுதுகொண்டே கீழேகிடந்தது.தாத்தா இன்னொரு பீடி பற்றவைத்து ஆழமாகப்புகை விட்டார்.

திங்கள் கிழமை காலையில் பள்ளி வாகனங்களும் ரிக்‌ஷாக்களும் ஆட்டோக்களுமாக குதூகலத்தை அடைத்துக்கொண்டு அந்த வீதி பரபரப்பாகிக் கொண்டிருந்தது.அந்த மஞ்சள் நிற பள்ளிவாகனம் நின்றது ரமேசு கீழே இறங்கினான்.கீழேகிடந்த பொம்மையையும் பீப்பியையும் எடுத்துக்கொண்டு அங்கிள் போகலாமென்றான். ப்பீப்பி சிரித்தது பொமை குதித்துக் குதித்து ஆடியது.

24.1.11

வடிவில் சிறிது எப்போதும் அழகு


சின்னச்சின்ன செப்புக்குடம்
சீசா மூடிகள் தான் சாப்பட்டுத்தட்டு
சீனிக்கற்கள் சேர்த்து வைத்த அடுப்பு
விலையில்லாமல் விளைந்தமணல் அரிசி
வேலி இலையில் நீரூற்றி வெஞ்சணம்.

வேப்பமரத்து நிழலில் வீடுகட்டி
என் மகள், எதிர்வீட்டுப்பிள்ளைகள்
சுவர்களை இடித்து உறவாகிக்கொண்டன
சுடுவதாகப் பாவணை காட்டி சோறு வடித்தாள்
அத்தானைச் சாப்பிட அழைத்தாள், சுடவே இல்லை

 பசிக்கிறதென்று பாவணை காட்டி சிறுவனானேன்
விலகிப்போங்கள் வீடிடிந்து விடும் என்றாள்.

23.1.11

நேர் செய்யப்படாத கணக்குகளை காலம் சீர் செய்யும்


நாற்பத்து நான்குநாட்கள் உக்கிரமாக நடந்தது போராட்டம். இந்திய வங்கி ஊழியர் வரலாற்றில் அதிக நாடகள் நடந்த வேலை நிறுத்தம் அது.மன்னாரங்கம்பெனி மாதிரி சாப்பாட்டைக்கட்டிக்கொண்டு வந்து சங்க அலுவலகத்தில் பகிர்ந்துகொடுத்துவிட்டு சீட்டு விளையாண்ட நாட்கள் அந்த வேலை நிறுத்த நாட்கள். மாதாமாதம் கையில் கிடைத்த கௌரவச்சம்பளத்தை உரிமைக்காக இழக்கத்துணிந்த மாதம் அது.அதைச் சரிக்கட்ட சிக்கண நாணயச்சங்கத்தில் உடனடிக்கடன் ஏற்பாடு செய்தது எங்கள் சங்கம். தளராத போர்க்குணத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் நிர்வாகம் இறங்க எத்தனித்தது. ஆனால் வெற்றி நெருங்கிக்கொண்டிருக்கும் போது பிரித்தாளும் விதிப்படி ஒரு சாரார் ஊடுசெங்கல் உறுவக் கிளம்பினார்கள். த்ரோக ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்தக் கையெழுத்துக்களின் மூலம் நீங்காத கறையை ஏந்திக்கொண்டனர் ஒரு பகுதி தலைவர்கள்.

நம்பி வந்ததற்கு இதுதான் கதியா என்று ஒரு கூட்டமும் துரோகத்தை தோலுரிப்போம் என்று இன்னொரு கூட்டமுமாக ஒரு மாபெரும் ஒற்றுமை ரெண்டாகப் பிளந்தது.கொலையை விடக் கொடூரமானது நம்பிக்கைத் துரோகம்.ஏக்கர் கணக்கில் நெல்விவசாயம் வட்டித்தொழில் இவைகளோடு பரம்பரைச் சொத்திருந்து பெருமைக்கு வங்கிவேலைக்கு வந்தவர்கள்  செய்த நாச வேலையை முதல் தலைமுயாய் அரசுப்பணிக்கு வந்த தோழர்கள் முதல் முதலாய்ச்சந்தித்தார்கள். அவர்களின் ஒரே கையிருப்பான ரோசத்தோடு தாக்கத்துணிந்தார்கள். தப்பித்து ஓடிய தலைவனை ஏந்திக்கொள்ள நிர்வாகம் தயாராக இருந்தது. அடுத்தடுத்து பதவி உயர்வு. அடுப்படிக்குப் பக்கத்தில் மாறுதல்.என்ன செய்தாலும் ஏற்றுக்கொண்டு தட்டிக்கொடுக்கிற விசுவாசமுமாக ரத்தினக்கம்பளம் விரித்தது. நிர்வாகமும் துரோகமும்  நெருங்கிய நட்பானார்கள். நீதி நெடுநாள் நோஞ்சான் பிள்ளையாய்க்கிடந்தது.

ஆதிக்க வெறியோடு உலகை ஆட்டுவித்த ஹிட்லர் எப்படிச்செத்தான் என்பதை இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லை. எர்ஷாத்தின் பல்லைக்கொண்டு தான் அவனது காலத்தை இறுதிசெய்தது மரணம்.அதே போல  காட்டிக் கொடுத்தற்கான கூலியைக் கையில் வாங்கியவர்களுக்கு துரோரோகத்துக்கான சம்பளம் தரப்படாமல் இருந்தது. நேர்செய்யப்படாத கணக்கை காலம் சீர்செய்கிறது.

இதே போல இன்னொரு செய்தி அமெரிக்க ராணுவத்தினரின் தற்கொலைகள். (தீக்கதிர் 23.1.2011)

அமெரிக்க ராணுவத்தினரின் தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் அவர்கள் பணியாற்றச் செல்வதுதான் முக்கியமான காரணம் என்று அந்நாட்டு ராணுவத்துறையே கூறியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க ராணுவமே அறிக்கை யொன்றைத் தயாரித்துள்ளது. 2009 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2010 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. 2010ல் பணியில் இருக்கும் 156 ராணுவத்தினர் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டனர் என்கிறார் அமெரிக்க தரைப்படைத் துணைத் தளபதி பீட்டர் சியாரெல்லி.

ராணுவத்தினர் மட்டுமல்லாமல் அமெரிக்க ராணுவத்தோடு இணைந்து பணியாற்றும் சிவிலியன்கள் ராணுவத்தினரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் போர்ப்பணியில் இல்லாத ராணுவத்தினர் ஆகியோரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இவர்களையும் சேர்த்து 2010 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 343 ஆகும். 2009 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 69 பேர் அதிகமாகத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அமெரிக்க ராணுவம் மேற்கொண்ட ஆக்கிரமிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது ஒரு காரணமாகச் சுட்
டிக்காட்டப்பட்டாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் வேலையிழப்பு ஆகியவையும் இத்தகைய தற்கொலை
களுக்குக் காரணமாக இருக்கின்றன என்றும் சில வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.மத்திய கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

22.1.11

இன்னும் நம்பிக்கை மிச்சமிருக்கிறது.


ஒரு பின்மதிய நேரத்தில் சாத்தூர் பெருந்து நிலையத்துக்கு முன்னாடி வாகன நெரிசலில் காத்திருந்தேன் அப்போது ஒரு காவலர் ஓடிவந்து முகமன் சொல்லினார்.வங்கி வாடிக்கையாளரா தமுஎச ஆர்வலரா என்று நிதானிக்குமுன் அந்தச்சிரிப்பு அவனைக்காட்டிக் கொடுத்தது.எங்கள் கிராமத்தைச்சேர்ந்த தம்பி.அங்கிருந்து என்னைப்புடுங்கி நட்டி 25 வருடங்கள் ஓடிப்போனபின் நகரத்தில் விழுகிற ஒவ்வொரு அடியின் வலிக்கும் நான் மருந்து தடவ அங்கேதான் போவேன்.அப்படியொரு தரம் போயிருந்தபோது பொங்கல் நடந்துகொண்டிருந்தது. பொங்கல் விழாவை முன்னிறுத்தி நடக்கும் வேடிக்கை மற்றும் விளையாட்டுக்களுக்கு அன்பளிப்பு கேட்டுவருவார்கள். ஆனால் ஒரு இளைஞர் கூட்டம்  கிரிக்கெட் போட்டிக்கு  என்னை தலைமை தாங்க அழைத்தது. அன்பினால் இழுக்கப்பட்டுப் போனேன். அங்கு போய் கிரிக்கெட்டுக்கு எதிரான கருத்துக்களைச் சொல்லி அவர்களைத் தர்ம சங்கடத்தில் நெளியவிட்டு வந்தேன்.

அந்த விளையாட்டுப் போட்டிகளின் பிரதான இடத்தில் இருந்தவன்தான் அந்தக் காவலர் என்று தெரிந்ததும் நெகிழ்ந்துபோனேன். அவன் எனக்கு தம்பி முறை. கிராமங்களுக்கு வெளியிலும் சரி ஊருக்குள்ளும் சரி ஒரு ஆயிரம் பாதைகள் இருக்கும். கடவு கொட்டாரம் களம் கண்மாய் ஓடை மடம் கடை உரல் கிழவங்கோவில் நஞ்சை புஞ்சை காடு மயானம் என பரந்துகிடக்கும் பொது இடங்கள்.இவைகளை மனிதர்களோடு இணைக்கும் பாதைகள் ஆயிரம் இருக்கும். கிராமத்து மனிதக் கூட்டத்துக்கு இருக்கிற விசால மனசு போலவே எந்த வீட்டுக்கும் சுற்றுச்சுவர் இருக்காது.இருக்கிற மானாவாரிச் செவக்காட்டு வரப்புத் தகறாருக்காக இதுவரை ஒரு சுடுகஞ்சி கூட கச்சேரிக்குப் போனதில்லை என்பதை என்னால் திடமாகச் சொல்லமுடியும்.

சுமார் முக்கால் நூற்றாண்டுக்கு முன்னாடி நடந்த ஒரு கொலைச் சம்பவத்துக்குப் பிறகு அந்த ஊரில் சொல்லிக்கொள்கிற மாதிரி எந்தப்பெரிய குற்றமும் பதிவாகாத கிராமம். இழந்த எட்டு உயிர்களுக்கு பலிகேட்டு முன்விரோதக் கொலைகள் நடந்திருந்தால் இந்நேரம் அந்தக்கிராமத்தின் மக்கட்தொகை ஐயாயிரத்திலிருந்து ஐம்பதுதாக பொசுங்கி இருக்கும். இவை ஏதும் இல்லாத ஒரு கிராமத்திலிருந்து ஒருவன் காவலானாக வந்தால் எப்படியிருப்பான். வசிக்க ஒரு இடம் தேடிக்கொள்ளக்கூட நினைவில்லாமல் வரும் வருமாணத்தில் மட்டும் வாழ்ந்துகொண்டிருக்கிற ஒரு அதிகாரியாக இருக்க முடியும்.

சென்னையின் பிராதான காவல் நிலையங்கள் பலவற்றில் உதவி ஆய்வாளாராகவும் தற்போது ஆய்வாளராகவும் பணிபுரிகிற ஒரு காவல் அதிகாரிக்கு ஊரில் இருந்த ஒரே ஒரு பழைய்ய மண் வீடும் இடிந்து விழுந்துவிட்டது. வந்து போனால் உட்கார ஒரு இடம் வேண்டும் அதை எடுத்துக்கட்டு என்று சொல்லியும் கட்ட சுனங்குவதற்கு பொருளாதாரம் தவிர வேறு எந்தக்காரணமும் இருக்க முடியாது.அப்படிப்பட்டவர்களும் இந்த தேசத்தில் இருக்கிறார்கள் என்பது தெம்பான செய்தி. எனது கதைகளில் எனது பத்தி எழுத்துக்களில் வேறு வேறு பெயர்களில் இடம் பெற்றிருக்கும் அவன் கிட்டத்தட்ட ஒரு 25 ஆண்டுகாலம் என்னோடு காடுமேடுகளில் சுற்றித்திரிந்தவன்.அதுபோல ஆறு ஏழுபேர் அலைந்தோம். சிலர் அரசுப்பதவிகளுக்கு வந்த போதும் யாரும் சொல்லிக்கொள்கிற மாதிரி இடத்தில் இல்;லை. ஆனால் எதற்காகவும் அலுவலக கட்டிடத்துக்கு வெளியே கைநீட்டாத பெருமை வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது இன்னமும் உரக்கத் தம்பட்டம் அடித்துக்கொள்ளமுடிகிற சேதி.

சுற்றிலும் சூழ்ந்திருக்கிற நாற்றமெடுத்த சமுதாய அமைப்புக்குள் இருந்து கொண்டு தூய்மையாய் வாழமுடிகிற அணைவருக்கும் ஒரு சல்யூட்.

21.1.11

ஒரு குடியிருப்பின் இருப்பு நிலைக்குறிப்பு


அந்த அழகிய கிராமத்தில் அவை எல்லாம் இருக்கிறது

நீர்ததும்பிக் கசியும் பெரியகண்மாய்
கரைநெடுக நீட்டிப் படர்ந்திருக்கும் புளியமரம்
நெல்முற்றிக் காத்து சலசலக்கும் மணிச்சத்தம்
கரும்பும் வாழையும் கூட நிமிர்ந்து நிற்கும்

பறந்தடைந்து புறாக்கள் புளங்கும் பெருமாள் மாடம்
பளிங்குத் தரை மெழுகிய ஊர்மடம்
பாஞ்சாம்புலி ஆடும் பெரிசுக் கூட்டம்
விரிந்துகுடைபிடிக்கும் ஆலமரம்

பால்சுமைதாங்காது பசுக்கள் திரும்பும் சாயங்காலம்
பாட்டால் தூங்கவிடாத இளங்காலை சுப்ரபாதம்
அலங்காரம் தாங்காது அசைந்துவரும் பெரியதேர்

இவை எல்லாம் எங்கள் ஊரில் இருக்கிறது
எனினும்
இதில் ஏதும் எங்களுக்கில்லை

15.1.11

தைப்பொங்கல் கொண்டுவரும் நினைவுகள்

அந்த ரெண்டு தருணங்கள் சாத்தூரோடு நினைவுகளில் மேலெழும்பி வரக்கூடியவை. தைப்பொங்கலுக்கு முந்தியநாளின் கடைவீதியும் ஊரே ஆற்றுக்குள் இறங்கும் கரிநாளும்.அது ரெண்டும் சாத்தூரை தூக்கி மேலே சம்மணமிட்டு உட்காரவைக்கக்கூடிய பண்டிகைகள். எல்லோருக்கும் தனது மண்ணோடு இப்படி தருணங்கள் புதைந்துகிடக்கும். எனக்கு அது இரண்டும் வாலிபப் பருவத்தோடு அறிமுகமாகியதனால் இன்னும் கூடுதல் இனிப்பாக நெஞ்சுக்குள் கிடக்கிறது.மனிதனுக்கென்றும் பலநிலை வளர்சிதை மாற்றமிருந்தாலும் பருவங்களை விழுங்கிக்கொண்டு அதன் நிஜத்திலும் நினைவிலும் தொடர்வது காதற்காலம். பழைய்ய பாலத்திலிருந்து பார்த்தால் வைப்பாறு முழுக்க  திமுதிமுவென்று எங்குபார்த்தாலும் மனிதர்கள் நகர்வார்கள்.புதுப்பாலத்துக்கு மேற்குப்பக்கம் விரிந்துகிடக்கும் மணற்பரப்பு.திண்ண கறிசோறு செரிக்கவும் காத்தாட வரும் கூட்டம்.அப்படியே அன்பும் பிரியமும் வழியும் முகத்தோடு மனிதக்கூட்டம். கூட்டத்துக்குள் தொலைந்துபோன ஒளிர்விடும் அந்தக்கண்களைக் கண்டுபிடிப்பது. நொடிக்கொருதரம் கிரகணம் தீண்டாதா ? என்கிற விட்டிலாக  பார்வை படும் தூரத்தில் பின்தொடர்வது போன்ற மயக்கங்கள் எழுதி எழுதித் தீராதவை.

பத்துப் பதினைந்து லாரிகளில் வந்திறங்கிய கரும்புகள் எச்சிலை ஊறவைத்தபடி பிரதானச் சாலையெங்கும் தோகையோடு குவிந்துகிடக்கும். இவ்வளவையும் மனிதர்களே விளைவித்தார்கள் அதை அவர்களே சுவைக்கிறார்கள் என்கிற சிந்தனை மலைப்பாக இருக்கும்.கட்டுக்கட்டாக மட்டுமே தருவோம் என்று அடம் பிடிக்கிற விற்பனையாளர்கள் நடுத்தர மற்றும் ஏழைகளின் வயிற்றெரிச்சலை கூட்டுவார்கள். சின்னவயசில் தீப்பெட்டி ஆபீசில் பொங்கல் இனாமாக  வாங்கி வரும் ரெண்டுகரும்பில் எனக்கான ஒன்று கட்டாயம் இருக்கும். அதை ஏந்தியபடி வரும் திருமேனிச் சித்தியிக்காக ஏங்கிக்கிடந்த நாட்கள் நினைவில் வந்துபோகும். அவளுக்கு திருமணமான பிறகும் பிள்ளைகள் பிறந்த பின்னும் எனக்கென ஒதுக்கி வைத்திருக்கும் அவளின் அன்பு பொங்கல் கரும்பு எல்லாவற்றையும் விடத் தித்திப்பானது. அழுக்கேறிப்போன அவள் மூக்குத்தியும் சிரிக்கும்போதெல்லாம் தெரியும் கொருவாப்பல்லும் நான் பிறந்ததிலிருந்தே கூடவருகிறது. மஞ்சள் கிழங்குகள் செடியோடு கொத்துக் கொத்தாய் வந்துகிடக்கும். கல்யாணத்துக்கு முந்தி அதைப் பார்ப்பதற்காகவே காசுகொடுத்து வாங்கிக்கொண்டுபோய் என் சித்திக்கு கொடுத்த நாட்கள் நினைவில் வந்தோடுகிறது.

நடைப் பயிற்சிக்கு போகும்போது காடெங்கும் பொதுவில் சிரித்துக்கிடக்கும் கண்ணிப்பிள்ளைச் செடியும் வேப்பங்குழையும் விலைக்கு வந்துகிடக்கும். இந்தப் பொங்கலின் பொருட்களும்  களியாட்டமும் தீபாவளியின் கரும்புகைபோல தீங்கு விளைவிக்காதவை.காட்டில் கேட்பாரற்றுக்கிடக்கும் அந்த க்கண்ணிப் பிள்ளைச் செடியை சேகரித்துக் கொண்டுவந்து கடைவிரிப்பவர்கள் அதை வைத்து பங்களா கட்டுவதில்லை. மிஞ்சி மிஞ்சிப்போனால் ரெண்டு நாள் வகுத்துப்பாடு கழியும் அல்லது ஒருநாள் டாஸ்மாக்கில் கொடுத்து பாடும் வலிகளும் கறையும். எவ்வளவு விமர்சனங்கள் இருந்தாலும் என்ன அரசியல் பேசினாலும் அடுத்தவேளைச் சோற்றுக்கு நாதியத்த வீடுகளுக்கு வரும் அரசின் அரிசியும் வெல்லமும் விலைமதிப்பில்லாதவை.இங்கிருக்கிற மேடுபள்ளங்கள் சமன்செய்யப்படுமா எனத்தெரியவில்லை.ஆனால் இந்த அரை நூற்றாண்டுகளில் ஏழ்மையும் கண்களில் பொதிந்து கிடக்கும் ஏக்கமும்
கோடிகோடியாய்ப் பெருகிக்கொண்டே போகிறது.

இந்த பொங்கலுக்கு திருப்பிய சானலில் எல்லாம் தெரிந்த தலைகள். பிரியமான நெருக்கமான தலைகள். அன்புத்தம்பி ’ஞானக்கிறுக்கன்’ ’புதுகை பூபாளம்’ பிரகதீஸ்வரன்.தனது காத்திரமான கவிதைகளை வெளியிடமுடியாமல் ஒத்திப்போட்டுக்கொண்டு வரும் உணர்ச்சிக்கவிஞன் இரா தனிக்கொடி எல்லாம் மெகா தொலைக்காட்சியில் கலக்கிக்கொண்டிருந்தார்கள்.ராஜ் தொலைக்காட்சியில் தோழர் பீகே கலந்துகொண்ட பட்டிமன்றம் தாமதமாகப் பார்க்க நேர்ந்தது.தமிழ்நாட்டிலே மரியாதையான மாவட்டம் கொங்கு மாவட்டம். ஏனுங்க வாங்க போங்க என்று பேசும் கொங்கு மக்கள் அங்கிருக்கும் தலித்துகளையும் அப்படியேதான் அழைகிறார்களா என்கிற புதுக்கேள்வியை வைத்தார்.அதுதான் கிருஷ்ணகுகுமார் பாணி. குழந்தைகள் இழந்த விளையாட்டையும் கனவுகளையும் சிரிக்கச் சிரிக்கப்பட்டியலிட்டுக் கொண்டிருந்தார் ராஜா.

காலை நாலரை மணியிலிருந்து இரவு வரை சிலுசிலுவென அடிக்கும் ஊதக்காத்து. இன்னைக்கு முழுக்க வெளிவரவே வராத சூரியன். அலைபேசிவழியே வாழ்த்துச்சொன்ன தோழர்களும் கணினி வழியே அன்புசெய்த வலைச்சொந்தங்கள். செல்லமகள் நிவேதிதா பாரதி. ஊரிலிருந்து வந்த அம்மா. பசியோடு பொங்கிய பானை அது வேகுமுன்னாள் கடித்துத் தின்ற பச்சரிசியும் தேங்காச்சில்லுமாக இந்த பொங்கல். எல்லோருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

14.1.11

செடிக்குள் கிடக்கும் பனம்பழம்.

விதை நேர்த்திசெய்யவில்லை
தானே விழுந்து முளைத்தபின்னால்
வேலியிட்டு காக்கவில்லை.

களையெடுக்கவில்லை
பார்த்துப் பார்த்து நீர் பாய்ச்சவில்லை
காசுகொடுத்து உரம் போடவில்லை.

கண்ணைப் பறிக்கிற மலர்களில்லை
அசைந்தாடிக் காற்றுத்தரும் கிளைகளில்லை அதனால்
கனவுகளிலும் கவிதைகளிலும் அதற்கிடமில்லை.

ஆளில்லாக் காட்டுக்குள் தானேவளர்ந்து
அரவணைப்பில்லாமல் தானே காய்த்து தானே பழுத்து
மணக்கிறது விளம்பரமில்லா ஒற்றைப் பனையும் பழமும்.

13.1.11

டப்பாவில் மிஞ்சியிருக்கும் பெருங்காய நினைவுகள்.

மந்தப்பிஞ்சை பெரியசுப்பையத் தாத்தனின்
தொளுவத்தில் கழுத்துமணிச்சத்தம் அறுந்து போனது.
சாணமும் கோமியமும் குழுதாடியும் இருந்த இடத்தில்
ரெண்டு டீவிஎஸ் பிப்டி நிற்கின்றன.

மாட்டுத்திமிழும் வண்டிமசகும்
தலைத்துண்டை கையில்போட்டு பேரம் பேசும்
தரகு தொழிலும் வழக்கொழிந்துபோனது.

வாக்கூடு கட்டிக்கொண்டு வளைய வரும்
களத்துமேடுகளில் காரவீடுகள் முளைத்துவிட்டன.

காங்கேயத்தில் வாங்கிய காளைகளைக்
கம்மாயில் குளுப்பாட்டியதும்
அடைப்புக்குறி போன்ற கொம்புகளுக்கு
சிகப்புச்சாயம் வாங்க வண்டிகட்டிப் பயணமானதும்
தோண்டியெடுக்கும் கற்காலமாகிப்போனது.

இருந்தாலும் என்ன இரும்புக்கதவில் தொங்குகிற
கண்ணிப்பிள்ளைச் செடியிலும்
கரும்பு சாத்திவைத்த கதவுகளிலும் சிரிக்கிறது
பழய்ய பொங்கலின் நினைவுகளும் நிறங்களும்.

தோல்வியின் நாயகிகள்

நீண்டநாள்கழித்து அதிகாலையில் அவர்களை அலைபேசியில் அழைத்தபோது  மறுமுனையில் தோ..ழ...ர் என்று கலப்படமில்லாத அன்போடு குரல்வந்தது. ஒரு பார்வையில் ஒரு சிரிப்பில் ஒரு மௌனத்தில் கலப்படமில்லாத அன்பைகுழைத்து தர மனசு வேண்டும்.அது வெள்ளந்திக் குணம் மிகுந்த எல்லோரிடமும் இருக்கிறது. அப்படி ஒரு பெண் அவர். சாத்தூர் தமுஎகச வின் முன்னாள் செயலாளர். பூ படத்தில் மாரியின் அம்மாவாக நடித்த முன்னாள் குணச்சித்திர நடிகை. எங்களுக்குச் சமதையாய் அலைந்து ஒவ்வொரு தமுஎகசவின் நிகழ்வுகளுக்கும் தனது எதிர்பார்ப்பில்லாத பங்களிப்பைச் செய்த உழைப்பாளி.

அவரோடு பேசிக்கொண்டிருந்த போது .

ஒரு மாதர்சங்க நிகழ்ச்சிக்காக நோட்டீசு கொடுக்க போயிருந்த எட்டுநாயக்கன் பட்டி பேருந்து நிறுத்தத்தில் அந்தப்பெரியவரைப் பார்த்தேன்.
நீண்ட நேரம் என்னை உற்றுப்பார்த்திருந்துவிட்டு நீ ரொம்ப புஸ்தகம் படிப்பியா தாயி என்று கேட்டார்.நா என்ன சொல்லிர்ப்பேன்னு நினக்கிறீங்க.
இல்ல நான் அவ்வளவா புக் படிச்சதில்ல என்று சொன்னப்பிறகும் இல்லதாயி ஒன்னப்பாத்தா புத்தக்ககளை முகத்தில் தெரியுது என்று சொன்னார்.
சொன்னதோடு நிக்காம அவர் இருந்த பம்புசெட்டுக்குள்ளாற போயி ஒரு சாக்குமூட்டையைக்கொண்டுவந்தார்.எதோகருணைக்கிழங்கோ,நிலக்கடலையோ கொண்டுவருகிறார் என்று பார்த்தேன். அடிப்பாகத்தை பிடித்துக்கொண்டு மூட்டையைக்கொட்டினார்.அத்தனையும் புத்தகங்கள்.அன்னை வயல் அன்னாகரீனா பரீசுக்குப்போ அழகிரிசாமி வேட்டி மார்க்சீயமெஞ்ஞானம் இப்படி நான் எதிர்பாரத புத்தகங்கள்.ஒரு மேல்சட்டைபோடாத சம்சாரியிடம் இத்தனை புதையலா என்இப்படித்தகவலைச்சொன்னார் அவர்று வியந்து போய் அப்போதிருந்து வெறிகொண்டு புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தேன்'.என்று சொன்னார்.


நீ பாடமல் விடியாது பெண்ணே. பூபாளராகம் பாடு; என்கிற அறிவொளிப் பாடலைப்பாடியபடி தமுஎசவில் அறிமுகமானார்.அப்புறமான ஒவ்வொரு நிகழ்சியிலும் மயில்போல பொண்ணு ஒண்னு என்கிற பாரதி படப்பாடலை அதீத கீச்சுக்குரலில் பாடுவார்கள்.சன்னஞ்சன்னமாய் தன்னை தமுஎகசவின்
உறுப்பினராக்கிக்கொண்டு பின்னர் செயற்குழு உறுப்பினாராகவும் ஆனார்.

மிகப்பெரிய கனவுகளோடு அவர்களை செயலாளர் பதவிக்கு முன்மொழிந்த போது கடும் எதிர்ப்புக்கிளம்பியது.அதை தனது தோளில் தாங்கிக்கொண்டு ஒரு பெண் தலைமைப் பொறுப்பேற்கவேண்டும் என்கிற வெறியோடு கலகம் செய்து உட்கார வைத்தார் தோழர் ப்ரியா கார்த்தி.நடு இரவு வரை நீள்கிற செயற்குழுக்கூட்டங்கள். தெருத் தெருவாய் அலைந்து நிகழ்சிக்கு பணம் சேகரிக்கிற வசூல். இப்படியான வேலைகளுக்கு ஒரு பெண் ஈடு கொடுக்க முடியுமா என்கிற சந்தேகத்தை உடைத்தெறிந்து எங்களோடு பல நிகழ்ச்சிகளை நடத்தினார் தோழர் ஜானகி. இரவு பதினோரு மணிக்கு மேலே அவரை நானோ இல்லை கார்த்தியோ சாத்தூரிலிருந்து மூன்று கிலோமீட்டர் ஒதுங்கி இருக்கும் படந்தாலில் கொண்டுபோய் இறக்கி விடுவோம்.அதற்குப் பிறகு அவர் என்ன சமைப்பார் எப்படிச்சாப்பிடுவார் என்கிற கேள்வி யற்றுத் திரும்பி வந்திருக்கிறோம்.

ரொம்பத்தோத்துப் போயிருக்கேன் தோத்த கதையப் பூரா தோண்டித் தோண்டிப் பொதச்சிர்க்கேன்’ என்று சொன்னார். இது சொல்லமுடிந்த சொல்ல வாய்ப்பிருக்கிற ஒரு பெண் குரல். ஆனால் வெளிவராத குரல்கள் இந்த தேசமெங்கும் அடுப்படிகளில் புதைந்துகிடக்கிறது. அவர்கள் இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை. அவ்வளவு புதையலையும் உரமாக்கி ’அவமானம் படுதொல்வி யெல்லாம் உரமாகும்’ னு ஒரு சினிமாப்பாட்டு வரி இருக்கில்ல என்று சொன்னபோது அந்த வளமையான இனிமையான அவரது கீச்சுக் குரல் கானாமல் வெகுதூரம் போயிருந்தது.

12.1.11

தழலைப் புகையாக்கும் கரிமூட்ட அரசியல்.

இந்த அரசியலைப் பேசியே தீரவேண்டியிருக்கிறது.கூகுள் செய்தி தொடங்கி தினத்தந்தி வரையிலும் ஒரு பக்கமாக இழுத்துக்கொண்டே போகிற சிந்தனையாக இருக்கிறது.முன்னெப்போதையும் விட ஊழலைப்பேசுகிற அறச்சீற்றம் அதிகரித்திருக்கிறது.உண்மையில் இது சந்தோஷமான கோபம். ஆனால் இந்தக் கோபமெல்லாம் இன்னொரு ஊழல்வந்து உட்காரத்தான் என்று நினைக்கும்போது .இது விழலுக்கில்லை, சாக்கடைக்கு இறைத்த சந்தன கரைசலாகிறது.அப்படியிருக்காது என்பதற்கு இங்கே எந்த உத்திரவாதமும் இல்லை.குறுக்கும் நெடுக்குமாக ஆக்ரமித்துக்கொண்ட இந்த முட்புதரை எங்கிருந்து சரிசெய்ய?.சரி செய்யப் புறப்படுகிற கைகளில் புதிய கறை படியாமலிருக்குமா?. இதைப் பற்றிப் பேசுகிற யாரும் லஞ்சம் வாங்கியிருக்க மாட்டார்கள் என்பது சத்தியம்.கொடுத்திருக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்ரவாதம்.அதே போல தவறுகளுக்கான தண்டனை இங்கே ஆள் பார்த்து பின்புலம் பார்த்துத்தான் முடிவாகிறது.

மாளிகை வாசலில் ஆடிக்காத்தும் கூட வாலைச்சுருட்டுதடா
நம்ம ஏழைக்குடிசயக்கண்டுபுட்டா மட்டும் மல்லாக்கத் தள்ளுதடா

என்கிற பாடல்வரிகள் இன்னும் ஆயிரம் வருஷம் ஆனாலும் அர்த்தமுள்ளதாகவே தொடரும். காசுவாங்காமல் கையெழுத்துப்போடுகிற கிராம நிர்வாக அலுவலர்கள் ஏதாவது நிர்வாக ரீதியான சிக்கலில் மாட்டிக்கொண்டு இடைநீக்கம் செய்யப்படுவதெல்லாம் நேர்மைக்கு வரும் சோதனையாம்.ஒரு முறை தினத்தந்தியில் ரூபாய் 200 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரைக் கைதுசெய்த செய்தி வந்திருந்தது.தேடிப்போய் விசாரித்துப்பாருங்கள் பாவம் எந்தப்பின்புலமும் இல்லாத அம்மாஞ்சியாயிருப்பார் அவர்.அதற்காக அவரை விட்டுவிடச் சொல்லவில்லை. சட்டத்திற்குமுன் எல்லோரும் சமம் என்கிற சொல் பான்பராக் பொட்டலத்தில் மதுப்புட்டியில் எழுதும் எச்சரிக்கை வாசகம் போல கேலிக்குறியாதாகக்கூடாது. தவறு செய்வதற்குக் கூட தகுதியும் திறமையும் கோருகிற அமைப்பாகிப்போனது நமது அமைப்பு.

கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எட்டுநாளில் அல்ல எத்தனை யுகமானாலும் புதுக்கருக்கு மாறாமல் நிலைத்து நிற்கிற ஏற்பாடு இங்கே இருக்கிறது. நேர்மையாய் வாழ்ந்த கக்கனும் ஜீவாவும் கஞ்சிக்கில்லாமல் கிடந்தார்கள்.முதல்வர் பதவியை விட்டு வெளியேறும்போது நாலு வேட்டிசட்டையோடு கட்சி அலுவலகத்தை விட்டு வெளியேறிய நிரூபன் சக்ரவர்த்தியை யார் கொண்டாடுகிறார்கள். ஊழலை தேசியமயமாக்கிய எந்த ஆளுங்கட்சிக் குடும்பம்  சோத்துக்கு லாட்டரியடித்தது சொல்லுங்கள்?. எதிரும் புதிருமாக போஸ் கொடுக்கிற கட் அவுட் வால்போஸ்டர்களில் மார்க்ஸ் லெனின் சேகுவாராக்களா இருக்கிறார்கள். ஒன்று பழய்ய கொள்ளைக்காரர்கள் இல்லை புதிய கொள்ளைக்காரர்களும் தானே முன்நிறுத்தப்படுகிறார்கள் .விடிந்து எழுந்தால் புறநானூற்றுத் தமிழர்கள் அதன் மூஞ்சியில் தான் முழிக்கிறார்கள்.

அடிக்கிற கொள்ளையில் எதிர்க்கட்சிக்கும் கொஞ்சம் ஒதுக்கிவிடுகிற கூட்டுக்களவானிகளை புரட்சியாளராக்கியவர்கள் நாம். அப்படி லஞ்சப் புரட்சியை அமலுக்கு கொண்டுவந்தவரைக் கோவில் கட்டிக்கும்பிடுகிற தேசம் இது.கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றப்பட்ட இந்த விஷம் மொத்த இந்தியர்களின் ரத்தநிறத்தை மாற்றிவிட்டது. சந்தேகக் கொலை ஜாதிக்கொலை இந்துக்கொலை முஸ்லீம்கொலை முன்விரோதக்கொலை கருணைக்கொலை கற்பழிப்புக்கொலை அரசியல்கொலை இப்படி ரக ரகமான கொலைச்சம்பவங்கள் இந்தியாவில் நடந்துகொண்டே இருக்கிறது.
அது நிமிடத்துக்கு நிமிடம் எங்காவது பதிவாகிக்கொண்டிருக்கிறது.ஆனால் எங்காவது லஞ்சம் வாங்கியவரை கொலை செய்த சேதி படித்திருக்கிறீர்களா நண்பர்களே. கிடைக்கவே கிடைக்காது. இயக்குநர் சங்கர் மட்டும் தான் அப்படிச்செய்வார். 162 கோடி செலவு செய்து அதைக் கல்லாக்கட்டுவார்.  அதுவும் கூட பத்துப்பைசா இருபது பைசா மற்றும் ஏழை எளியவர்களின் குற்றங்களுக்குத்தான் அவர் தீர்ப்புச்சொல்லுவார்.அம்பானிகளின் குற்றங்களை ஜாய்சில் விட்டுவிடுவார். நிஜத்தில் லஞ்சத்துக்கு எதிராகப்போராடியவர்கள் புழுப்பூச்சிகளைப்போல நசுக்கப்பட்டிருக்கிறார்கள். அதைச்சொல்லுமா இந்த இந்து சந்து பொந்து நாளேடுகளும் ஸ்டார் சன்குழும மின்னனு ஊடகங்களும் ?

இந்த உண்மை உச்சியில் இருக்கும் உயர்திருமன்மோகனுக்கும் கீழேகிடக்கும் பஞ்சமக் கூலித் தொழிலாளிக்கும் நன்றாகவே தெரியும்.

தேசம் முழுக்க புதர்மண்டிக்கிடக்கிறது
தீக்குச்சிகள் நமுத்துப்போய்கிடக்கின்றன.
எரிநட்சத்திரத்தில் கங்கெடுத்துப்பற்றவைக்கிற
கைகள் இங்கே இல்லை.
எங்காவது பற்றுகிற தீயைக்கூட
தண்ணீர் ஊற்றி அணைக்கிற
காரியங்கள் வெற்றியாகிறது.
கொழுந்து விட்டு எரியவேண்டிய தழலை
மூட்டம் போட்டு புகைய விடுகிற
ஏற்பாடு கச்சிதமாக நடக்கிறது.
கரும்புகை வெண்புகை என சந்தையில்
இரண்டே வகை புகை மட்டுமே கிடைக்கிறது
அந்தப்புகை நடுவே பயணம் செய்யவே
இந்தியர்களுக்கு விதித்திருக்கிறது.

11.1.11

அன்புக்குப் பாத்திரமாவது

காணாமல்போன இரண்டாவதுகாலை
பிரிவின் இழப்பை உணரச்செய்தது
அது உலோகத்தால் செய்யப்பட்ட வஸ்துதான்
அது உருளை வடிவமான சில்வர் குவளைதான்

அதை அவள் டம்ளர் என்று சொல்வாள்
அம்மாவோ போனி என்று சொல்லும்
அது மதுவோடிருக்கையி க்ளாஸ் ஆகும்
கண்ணதாசன்கவிதையில் கிண்ணமாகும்

என்ன வேண்டுமானாலும் ஆகட்டும்
அது  எட்டுவருடம் என்னோடே இருக்கிறது.
எல்லாக்காலை நேரத்திலும்  ஆவிபறக்க
அது என்னோடே இனிப்பாய் இருக்கிறது.

அளவும் சுவையும் மாறினாலும்
சரிக்கட்டும் ப்ரியமும் பந்தமும் மாறாது.
பாத்திரக்கடையில் குட்டச்சியின் பெயர்
எண்களிலும் நாணயத்திலுமிருந்தது.

அரிசிப் பைக்குபின்னாடி ஒளிந்து கிடந்த
இரண்டு நாட்கள் என் தவிப்பை எடைபோட்டது.
திரும்பக்கிடைத்த மார்கழிக்காலையில்
என்கையில் குளிர் அந்தக்குட்டச்சியுடம்பில் அனல்.

என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன்
399 முறை வலைமக்களின் அன்பிற்குப் பாத்திரமாகி
கிடந்திருக்கிறேன்.கடந்த ரெண்டு வருடங்கள் எனை அன்பால்
சூழ்ந்துகொண்ட வலைச்சொந்தங்களுக்கு என்னால்
பிரதி செய்ய அன்பே கையிருப்பாக இருக்கிறது.

நன்றி.

8.1.11

சென்னை புத்தகச்சந்தையில் ‘கருப்புநிலாக்கதைகள்’ சிறுகதைத்தொகுப்பு

நேற்றே தோழர் பவா அலைபேசியில் கூப்பிட்டுச்சொன்னார்.அந்தக்குரல்வழியே வரும் வழக்கமான உற்சாகம் இன்னும் பத்து மடங்கு கூடுதலாய் கேட்டது.அப்போதிலிருந்து ஒவ்வொரு நொடியும் அதை நோக்கியே நகர்கிறது. உடனே சென்னையில் இருக்கும் மகன் அஷோக்கை  அழைத்து கேட்டு வாங்கி குரியரில் அனுப்பச்சொன்னதும், அப்படியே செய்தான்.

வாங்கிய புத்துச்சட்டை ரெங்குப்பெட்டிக்குள் மடிந்து கிடக்க மனசெல்லாம்  ரெங்குப் பெட்டியைச் சுற்றிக்கொண்டிருக்குமே அந்தப் பிள்ளை நாட்கள் இன்னும் கூடவே வருகிறது. இந்நேரம் குரியர் வேன் மதுரையை நெருங்கிக் கொண்டிருக்குமா என்கிற கணிப்பு வாலிபநாட்களின் நினைவுகள் போலப் புதுக்கருக்கு மாறாமல் இருக்கிறது.

முதல் பிரதியை தொடுகிற தருணத்திற்காக காத்திருக்கிற படபடப்பு அதிகரிக்கிறது.சாத்தூர் வந்து எமெம்எஸ் ஸ்டோரில் பாடப்புத்தகங்களும் நோட்டுகளும் கூடவே ஒரு நேவி பேனாவும் பென்சில் அழிரப்பர் வாங்கி வீட்டுக்குக் கொண்டு போன நாட்களாய் அலைக்கழிக்கிறது.

கருப்பு நிலாக்கதைகள்.(சிறுகதைகள்)

ரெண்டாவது தொகுப்பு.

சென்னை புத்தகச்சந்தையில்
வம்சி புக்ஸ் வெளியீட்டகத்தின்
157 மற்றும் 158 வது கடைகளில்
இன்று முதல் கிடைக்கும்.



7.1.11

இடைவெளியை, புத்தாண்டை சரிக்கட்டும் பதிவு.

கிட்டத்தட்ட பத்து நாட்கள் வலைப்பக்கம் வராமல் வனவாசம் போமாதிரி இருந்தது.நெட் துண்டிக்கப்பட்டு அதை மீளப்பெறுவதற்குள் வருடடத்தின் இறுதிநாளும் அடுத்த ஆண்டின் துவக்க நாளும் கடந்து போய்விட்டது.வலை நண்பர்கள் யாபேர்க்கும் முகமன் சொல்ல
இந்த நாளே கிடைத்திருக்கிறது.தாமதமானாலும் எல்லோர்க்கும் 2011க்கான  என்  வந்தனம்.

ஒவ்வொரு ஆண்டும் நான் என் தோழனோடே இருந்தது தவிர வேறெதுவும் நினைவில் வரவில்லை கடந்த இரண்டு ஆண்டுகள் அது தூரமாகிக்கொண்டு போகிறது.எனக்கு கல்யாணமான முதலாண்டு நான் அவள் வீட்டில் இருந்தேன். அந்த அடர்ந்த பனியில் புதுக் கனவு களோடு தூங்கிப்போயிருந்த்தேன்.அப்போது மணி பனிரெண்டைத் தாண்டி விட்டது. தேவாலயம் போய்விட்டு வந்த எனது மாமியார் வீடு தூங்க ஆயத்தமாகிக்கொண்டிருந்தபோது அந்தக் குறுகிய தெருவில் சலசலப்புக் கேட்டது.அந்தத் தெருவுக்கு சம்பந்தமில்லாத மூன்று பேர் நெடு நெடுவென உள்ளே வந்தார்கள். தெரு அவர்களை ஊகிக்க முடியாமல் திணறியது.எங்கள் வீட்டுக்கதவைத்தட்டி எனை விசாரித்து எழுப்பச் சொல்லி வாந்ததும் ஆரத்தழுவிக்கொண்டு புத்தாண்டு வாழ்த்துச் சொன்னார்கள் பீகேயும்,மாதுவும்,பெருமாள்சாமியும்.
அப்படித்தான் அந்த1987 விடிந்தது.அந்தக்கதகப்பான புத்தாண்டு காலங்கடந்தும் நினைவில் நிலைக்கும். அந்தப்புத்தாண்டுப் பரிசை பொக்கிஷமாக்கி வைத்திருக்கிறேன்.

நினையாத நாளிலே தேவதூதனைப்போல வந்த அந்த மூன்றுபேரின் கைகளிலும் தங்கமும் வெள்ளைப்போழமும்,வாசனைத் திரவியமு
மாய் நட்பு இருந்தது. எல்லா புத்தாண்டும் மாதுவோடே பிறந்ததும்,அவனருகில் இல்லாத தருணங்களில் முதல் வாழ்த்தை அவனுக்கென அடைகாத்து வைத்திருந்ததும் சொல்லித் தீராத கணங்கள்.

தென்மேற்குப்பருவக்காற்று பார்க்க நேர்ந்தது.களவின் பெருமை சொல்லும் இன்னொரு படம் இது.வெகு நீளமாக சொல்லவேண்டிய ஒரு கதையை சிகப்புத்துண்டு போட்ட ஒரு பெரியவர் ரெண்டுவரியில் சொல்லிவிட்டுப்போகிறார்.கதைக்கென தனித்து நாயகனும் நாயகியும் இருந்தால்கூட அந்த இரண்டு பாத்திரங்களைச்சேர்த்து விழுங்கிக்கொண்டது சகோதரி சரண்யாதான்.அநியாயத்துக்கு அவரைக்கொன்று போடுவதை ஏற்கமுடியவில்லை. கதைகளிலும்சரி,நிஜத்திலும் சரி அவள் வாழவேண்டும்.

அதீத பிம்பங்களில் இருந்து விலகி இப்படி நிஜத்துக்கு அருகில் வரும் படங்கள் கலைப்படங்களாயிருந்தாலும் ரொம்ப ஸ்லோவாக ஓடினாலும் சரி அது ஒரு படைப்பாகும்.அல்லாதவை சரக்குகளே நல்லா மாசாலா ஏத்திப் போட்ட  சரக்குகள்.இதற்குவக்காளத்து வாங்கிய
இயக்குநர்களை நீயா நானாவில் பார்க்க நேரிட்டது.ஆனால் அதற்கு இணையான கூட்டம் எதிரில் உட்கார்ந்திருந்ததும் காரமான நிஜத்தை
எடுத்து வழக்குறைத்ததும் நம்பிக்கையை கொடுக்கிறது.தோழர்கள் ராம்,வசந்த்,மிஸ்கின் ஆகியோரின் குரல்கள் முக்கியமானவை.