31.8.11

பெரும் விவாதத்தை கிளப்பிவிட்டிருக்கும் பெரியவர் ஹசாரே இயக்கம்.


லஞ்சத்துக்கும் முன்னாடிப்பிறந்த மூத்த வியாதிகள் அப்படியே தொடர.ஊடகங்களின் ஊதிப்பெருக்கலில்  உச்சானிக்கொம்புக்கே ஏறி விட்டது லஞ்சத்துக்கு எதிரான புரட்சி.எல்லோரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது மட்டுமே பொது செய்தியாக பெரியவர் ஹசாரே உடனடித் தேசிய நாயகனாகி விட்டார்.லஞ்சம் கொடுத்தவரும் லஞ்சம் வாங்குவபருமாகக் கலந்து கிடக்கிறது தேசம்.ஆமாம்.சாதிச்சான்றிதழ் வாங்குவதற்கு நான் தாசில்தார் அலுவலகத்துக்கு கொடுத்தேன்.தாசில்தார் அலுவலக சிப்பந்தி இருசக்கர வாகனம் வாங்கிப்பதிவு செய்ய வட்டாரப் போக்குவரத்துக்குப் போனார். வட்டாரப்போக்குவரத்து அதிகாரி தனது அந்தச் சம்பாத்யத்தில் சொத்துவாங்கி அதைப்பதிய பத்திரப் பதிவு அலுவலகம் போனார்.பத்திரப்பதிவு அலுவலக ஊழியர் தன்மகனை தொழில் நுட்பக்கலூரியில் சேர்க்க  மூட்டை கட்டிக் கொண்டு போனார்.தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆண்டை சூட்கேசுகளோடு ஆட்சியாளர்களிடம் போனார்.ஆட்சியாளர்கள் தங்களின் நாற்காலி நாட்களை நீட்டிக்க என்னிடம் என் குடும்பத்தாரிடமும் கொடுத்தார்கள்.

சங்கிலித் தொடர்போல நீண்டு பிணைந்திருக்கிற இந்த கண்ணிக்குள் ராம்லீலா மைதானத்து மேடைகளில் அமர்ந்திருப்போர் தொடங்கி தேநீர்க் கடையில் நாளைக் காலையில் லஞ்சம் நாட்டைவிட்டு ஓடிவிடும் என்று கூவுகிற தினத்தந்தியால் உணர்ச்சிவசப்பட்ட போராட்டக் காரன் வரை இணைக்கப் பட்டிருக்கிறான். தாங்கள் கொடுப்பதை கண்ணக்கில் எடுத்துக்கொண்டு வாங்கியதை வருமாண வரிக்காரர்களிடம் மறைப்பது போல மனசாட்சியிடம் மறைத்துவிட்டு சனம் கும்பல்கும்பலாக கூவுகிறது லஞ்சம் ஒழிக என்று. அந்த குரலின் சத்தத்தில் பெரியவர் ஹசாரே உடனடிக் கதாநாயகனாகிவிட்டார். எனில் வில்லன் யார்.

வணிகவியலின் விதிப்படியும் வாழ்வியலின் விதிப்படியும் கொடுப்பவர் இருந்தால் பெறுபவர் இருந்தே ஆகவேண்டும். அதாவது வாங்குகிற வில்லன் யார்.காங்கிரசா ? பாஜகாவா ? திமுகவா ? அதிமுக வா தேதிமுகவா ?. யார் அந்த தேசீய எதிரி. இந்த அமைப்பு. நூறு ரூபாய் லஞ்சம் வாங்கிய கடைநிலை ஊழியன் சாம்பிளுக்காகப் பிடிபட்டு வேலையிழந்து தெருவில் திரிய லட்சக்கணக்கில் கல்லாக்கட்டுகிற கோமான்களுக்கு முதல் மரியாதை கொடுத்து ஒதுங்கிக்கொள்கிற இந்த அமைப்பு. தனது சாதிக்காரன், தனது மதத்துக்காரன், தனது கட்சிக்காரன் லஞ்சம் வாங்கும்போது கள்ளமௌனம் காத்துவிட்டு எதிர்ச் சாரியில் இருப்பவனை மாட்டிவிடத் துடிக்கும் இந்த அமைப்பு தான் அதன் எதிரி.  ஆதலால் தான் ஜனநாயக அமைப்பின் அடிநாதமான பஞ்சாயத்து முறையில் தனக்கு வேண்டாத சாதி  போட்டி போடக்கூட சகிக்காத மனோபாவமும். சொந்தச் சாதிக்குள்ளே ஜனநாயகத்தை, தேர்தல் முறையை ஏலத்துக்கு விடுகிற திமிரும் வந்து சேர்கிறது.

அதனலேதான் ஒரு மூன்று பேரின் உயிருக்காக தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கையில் ஊடகங்கள் ஹ்சரேவின் புகழ்பாடிக் கொண்டிருந்தன. பெரியவர் ஹசாரே பதிரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு பெருந்தீனியாகிப்போனார். செய்தியோ சாப்பாடோ அரசியலோ கொள்கையோ இந்தியர்களுக்கு வீட்டுக்குள்ளே கொண்டுவந்து தரவேண்டும். முதல் நாள் எதிர் வீட்டில் நடந்த திருட்டை  மறுநாள்  செய்திபடித்து தெரிந்துகொள்கிற மனோபாவம் பெருகிக்கொண்டுவரும் இந்த தேசத்தில் புரட்சியைக்கூட தொலைக்காட்சி வழியே நடத்த துடிக்கிற உத்வேகம் பெருகிக் கிடக்கிறது.அதனாலேதானோ என்னவோ முன்னாள் புரட்சியாளர் ரஜினிகாந்தும் இந்நாள் புரட்சியாளர் விஜய்யும் ராம்லீலா மைதானத்துக்குப் போய் மொய்யெழுதிவிட்டு வந்திருக்கிறார்கள். இந்தப் படிதாண்டாப் புரட்சிக்கு அன்புத் தோழர் சொர்ணமால்யா தலைமைதாங்கி நடத்தி வந்தகாட்சி அழகானது. அதைப் பார்க்கையில் முன்னக்கூட்டியே நடக்கிற விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் மாதிரியும், முன்னாடி பெரும்பரபரப்பாக பிள்ளையார் பால்குடித்தாரே அதற்கு எழுந்த மக்கள் அலையைப்போலவும் தெரிந்தது.

அடுத்தவீட்டுக்காரி ஆம்பிளப்பிள்ளை பெத்தாலென்று எகிப்து மற்றும் துனீசியாவைப்போல எதாவது செய்யாவிட்டாலும்  அம்மிக் குழவியைப்போல பெரியவர் அன்னா ஹசாரேவைத் தூக்கிவைத்துக் கொண்டது தேசம். அப்பப்பா இந்த பத்திரிகைகள் தங்கள் பெயரையே ஹசாரே மலர்,ஹசாரே மணி, ஹசாரே தந்தி, ஹசாரே எக்ஸ்பிரஸ் என்று போடாததுதான் குறை.   இதை யெல்லாம் படித்த ஒரு கடை கோடி முகம்மதியத்தோழன் விசனப்பட்டார் இப்படியொரு மகான் குஜராத்தில் பிறந்திருக்கக்கூடாதா அப்படிப் பிறந் திருந்தால்  அநியாயமாக பலியிடப்பட்ட அப்பாவி உயிர்கள் பிழைத்துக் கிடந்திருக்குமே என்று. அதே போல விசனப்பட கோடிக்கணக்கானவை பட்டியலில் இருக்கிறது.

ஒரு பதின்மூன்றுநாட்கள் நடக்கும் உண்ணாவிரதம் தேசிய வியாதியைப் போக்கும் அருமருந்தாகுமானால். இந்த தேசம் முழுவதும் பீடித்துக்கிடக்கிற இன்னபிற நோய்களுக்காக வாழ்நாள் முழுக்க உண்ணாநோன்பிருக்க ஆட்கள் வரிசையிலிருக்கிறார்கள். ஆனால் நிலைமை பாரபட்சமானது என்பதை நாம் மகாத்மா காந்தி தொடங்கி நிறைய்ய வராலாற்று உதாரணங்களைப் பார்த்திருக்கிறோம்.  அதோ பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வெறும் மூச்சை மட்டுமே சுவாசித்து வாழ்ந்துகொண்டிருக்கிற இந்த சமகாலப்போராளி இரும்புப்பெண் பற்றி ஒரு வரிச்செய்தி கூடப்போடிருக்குமா இந்த ஊடகங்கள். மணிப்பூர் மலைகளில் இருந்து இறங்கிவந்து அந்த மக்களுக்கு ராணூவச்சட்டம் AFSPA 1958 யிலிருந்து விடுதலைவேண்டுமென சன்னம் சன்னமாய் செத்துக்கொண்டிருக்கிற ஐரோம் சர்மிளாவைப்பற்றி எத்தனை தினத்தந்தி வாசகர்களுக்குதெரியும். குறைந்த பட்சம் மணிப்பூர் இந்த தேசத்தில் இருக்கிற இன்னொரு மாநிலம் என்பது கூடத்தெரியுமா ?

அப்துல்கலாமை வரிக்குவரி எழுதுகிற சினிமா வசனகர்த்தாக்கள் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தாய்மார்கள் ராணுவம் பிடித்துக்கொண்டுப்போன தங்கள் வீட்டு ஆண்களின் வருகைக்காக ஏங்கிக்கொண்டிருக்கிற வலிபற்றி  எழுதி யிருக்கிறார்களா. மாட்டை கறிக்காக அடிப்பது உயிர்வதை என்பதை வலியுறுத்தக்காட்சிகள் அமைக்கிற படைப்பாளிகள் கயர்லாஞ்சியில் நடந்த கொடுமைகள் பற்றி சினிமாவில் பேசாவிட்டாலும் சரி குறைந்த பட்சம் தங்களுக்குள்ளாவது பேசிக்கொள்வார்களா ?.

இது எடுபடாத கேள்விகள்.

ஆனால் எடுபடுகிற கேள்வி ஒன்றிருக்கிறது. ஹசாரேவின் இந்த இயக்கத்தினால் லஞ்சம் ஒழியப்போகிறதோ இல்லையோ கட்டாயம் ஒரு ஆளும் அரசு ஒழிந்து விட வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது. சரி அது ஒழிந்த பின்பு எது ? அதற்காகத்தான் இந்த ஊடகங்கள் ஓடி ஓடி பரபரப்பாக்குகின்றன. உண்மையான விடுதலைப் போராட்டததை மறைத்துவிட்டு மகாத்மாவை முன்னிறுத்திக் காங்கிரசுக்கு ஜெண்டாத் தூக்கிய அதே ஊடகங்கள் தங்களின் ஜெண்டாவுக்குப் பின்னாடி ஒரு அஜண்டா ஒளித்து வைத்திருப்பதை உற்று அவதானித்தால் புலப்படும்.
ஆவணப்படம் afspa 1958
ஆவணப்படம் afspa 1958
http://skaamaraj.blogspot.com/2009/04/blog-post_21.htmlhttp://skaamaraj.blogspot.com/2009/04/blog-post_21.html

http://timesofindia.indiatimes.com/india/Iron-lady-of-Manipur-calls-Anna-Hazare-campaign-somewhat-artificial/articleshow/9825079.cms

எழுத முடியாமல் கழிந்துபோன நாட்களுக்கான சரிக்கட்டல்.


சாத்தூரிலிருந்து வேலிப் புதர்களைத் தாண்டி நான்கு மணிநேரம் பயணம் செய்து ராமநாதபுரம்.அங்கே ஐந்து இரவுகள் புத்தகங்கள் கொசு கொசுவர்த்தியோடு கழியும்.பகல்களை எல்லாம் வாடிக்கையாளர்கள் எடுத்துக்கொள்வார்கள்.அல்லது மனமுவந்து நானே கொடுத்து விடுவதுண்டு. சண்டையும், கோபங்களும், பேசாவிரதமும் நினைக்க நினைக்க இனிக்கிற தனிமை. அதுமட்டுமா இனிக்கிறது வெறும் வெங்காயம் கிள்ளிப்போட்டு மணக்க மணக்க இறக்கி வைக்கும் மொட்டைச்சாம்பார் இனிக்கிறது.அதன் ருசிதேடி நாக்கு நூற்றித் தொண்ணூற்றி எட்டு கிலோ மீட்டர்கள் நீளுகிறது.திங்கட்கிழமைக்காலை பேருந்து சத்தமும் பயண நினைவுகளும் எரிச்சலூட்ட சனிக்கிழமை அதே பேருந்தும் பயணமும் குதூகலம்தரும் இது ஒரு தவணை முறையிலான புலம் பெயர்தல். என் வாழ்நாளில் அதிகம் சண்டையிட்டுக்கொண்டது பேருந்து அரசுப்பேருந்து நடத்துநர்களிடம் தான்.இப்போதெல்லாம் அவர்களிடத்தில் கொஞ்சம் பரிவும் ஸ்நேகமும் வருகிறது.

சென்ற வாரம் 20, 21, 22 தேதிகளில் சென்னையில் இருந்தேன்.சென்னையில் இருந்தது ஒன்றும் பெரிய தகவல் இல்லை.ஆனால் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பதிவர்கள் ஐந்துபேர் சந்தித்துக் கொண்டதுதான் மகிழ்சித்தகவல்.ஐந்து பேரை ஒன்று சேரவைத்தார் தோழர் பத்மஜா.சென்னை டிஸ்கவரி புக்பேலஸில் வலசை இதழ் வெளியீடு நடந்து முடித்திருந்தார் கார்த்திகைப்பாண்டியன்.அங்கே ராஜ சுந்தரராஜண்ணா வையும் தோழர் விதூஷையும் மேவியையும் சந்தித்தோம். வலசை இதழ்களோடு கீரனூர் ஜாகீர் ராஜாவின் மூன்று நாவல்களும் வாங்கிக்கொண்டோம் சென்னை செல்லும்போதெலாம் சந்திக்க எண்ணித்திரும்பியது வானம்பாடிகள் பாலாண்ணா வைத்தான்.அவரால் டிஸ்கவரி புக்பேலஸ் அமைந்திருக்கும் கேகே நகருக்கு அலையமுடியாததாகையால் சென்னையின் குவிமையமான தி நகருக்குச் சென்றோம்.

ஒவ்வொரு எழுத்தும் அதன் வரி வழியே முகங்களைக் கற்பனையில் வரைந்து வைத்திருக்கும்.அந்த கற்பனை ஓவியத்தோடு நிஜ ஓவியத்தை ஒப்பிட்டுப் பார்க்கிற ஒரு போட்டி முடிவும் குறுகுறுப்பும் முன்னோடிச் செல்லும். பின் தங்கிப்போய்  முகங்கள் பார்க்கும் சந்தோஷம் தான் இந்த வலைப்பதிவர் சந்திப்பு. இன்னொரு வகையில் அந்த சந்திப்புகளும் பகிர்தலும் எழுதுவதற்கு உந்துதலாகவும் மாறும். சில நேரம் படித்ததும் எழுத்தத்தூண்டும் சில புத்தகங்களும் நல்ல எழுத்தும் கூட. அப்படி எழுதத்தூண்டிய புத்தகங்கள் வரிசையில்ஜாகீர் ராஜவின் மீன்காரத்தெரு. பிறகு விரிவாக எழுதலாம். ஆனால் உடனடியாகச்சொல்லவேண்டியது வலசையில் வந்திருக்கும் தோழர் பத்மஜாவின் நீச்சல்காரன்.

ஜான் சீவரின் மூலக்கதை எப்படியிருக்குமோ தெரியவில்லை ஆனால் அதை அப்படியே பிசிறில்லா தமிழ்ச்சிறுகதையாக்க முடிந்திருக்கிறது தோழர் பத்மாவால். ஒரு கனமான முடிவும் விறு விறுப்புக்கு பஞ்சம் வைக்காத சம்பவங்களும் மட்டுமே மொழிபெயர்ப்போடு பயணப்படவைக்கும். அதுதான் இதுவரையில் எனக்கிருந்த அனுபவம்.ஆனால் ஒரு சன்னமான படிமக்கதைபோல தோற்றமளிக்கும் நீச்சல்காரனை நீரோட்டம்போன்ற எழுத்தின் மூலம் படிக்க வைத்திருக்கிறார்.அதுவே அந்த இதழிலுள்ள ஏனைய மொழி பெயர்ப்புகளையும் வாசிக்க தூண்டுகிறது.

7.8.11

களவு போகுதடா.


அந்த சம்பவம் நடந்து ஒரு மூன்று நாட்கள் ஓடி விட்டது. அந்த குடியிருப்பில் இருக்கிற எல்லோருக்கும் அது பேசு பொருளாகவும்  மாறிப்போனது. சம்பவம் நடந்தபோது வயதான மூதாட்டி மட்டும் இருந்தார் என்று குடும்பத்தின் ஒருதரப்பும்.இல்லை மகனும் மருமகளும் கூடவே இருந்ததார்கள் ஆனால் அதை போலிசார் மறைத்துவிட்டார்கள் என மறுதரப்பும் பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு அது பிரதான பேசுபொருளாக இருந்தது.களவு போன நகைகளின் எடைகுறித்து மேலும் கீழுமான தகவல்கள் வந்துகொண்டே இருந்தது.இன்னொரு வீட்டில் திருடர்கள் எப்படி வந்து பேசினார்கள் எப்படி கவனத்தை திசை திருப்பி பட்டப்பகலில் வீட்டுக்குள் நுழைந்தார்கள் என்று நடித்துக் காண்பித் தார்கள். வந்தவர்களில் ஒருத்தர் கூட நடுவயதுக்காரன் கூட இல்லை எனவும் பார்த்தால் களவாணிகள் போலவே இல்லை எனவும் திருடர்களைப் பற்றி புகழ்ந்து பேசினார்கள். போலீசார் மறுநாள் வந்து கூடுதல் காவலர்களோடு ரோந்து சுற்றினார்களாம் தெருத்தெருவாக நின்று ஒலிபெருக்கி மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரஸ்தாபித்தார்களாம். இவ்வளவும் பேச்சும், தகவல்களும் பரிவர்த்தனைகளும் அவரவர் வீட்டுக்குள்ளே தொலைபேசியை கவனித்தபடியே பரிமாறிக்கொள்ள பழகிவிட்டிருந்தது அந்த மத்திய தர குடியிருப்பு.

காய்கறி வாங்க கடைக்கு வரும் நேரங்களில்.தெருக்குழாய்களில் தண்ணீர் பிடிக்கும் அவதானிப்பில் கசிந்த இந்த தகவல்கள் ஒரு முழுநேர பொழுதுபோக்கின் இடையில் கொடுக்கும் விளம்பரம் போலவோ இல்லை இடையில் கொறிக்கும் தின்பண்டம் போலவோ கறைந்து போனது.இன்னும் ஒருவாரத்துக்கு, கொஞ்சம் கூடப்போனால் அடுத்த பரபரப்பு வரும் வரை பேசப்படலாம். இல்லை மகனின் மகளின் படிப்பு செலவுக்கு பணம் தயார் செய்து அனுப்புகிற கவலையில் மறந்து போகலாம். வாழ்வை இழந்து ஒரு ஆயுட்கால விபரீதத்திற்கு தங்களை தயார்ர் செய்துகொண்ட அந்த இளைஞர்கள் பக்கமோ,தங்கள் ஆயுட்கால சேமிப்பை இழந்து வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கும்
அந்த மத்திய தரக் குடும்பத்துப் பக்கமோ நின்று பேசாமல் இங்கு கருகிப்போன சமூக விலங்கின் அணிதிரட்டலை நினைத்து வேதனை மட்டுமே மேலோங்குகிறது.

மிக அருகருகே இருக்கும் வீடுகளில் தனது சமயோசிதத்தை மட்டுமே மூலதனமாக்கித் திருடிச்சென்ற அந்த இளைஞர்கள் அவதானிப்பின் மிக முக்ய புள்ளி ஒருவனுக்கொருவன் கைகொடுக்கமுடியாத தூரத்தில் இந்த மதியதரவர்க்கம் இருக்கிறது என்பதே. எவ்வளவு பெரிய சத்தம், அவலச்சத்தம் வந்தாலும் சன்னலை மட்டும் திறந்து பார்க்கும் சிங்கங்களும் புலிகளும் நிறைந்த குடியிருப்பு என்று மிகத் துள்ளி யமாகக் கணக்கெடுத்திருக்கும் அந்த இளைஞர்களை ஏமாற்ற விரும்பாத எனது மக்கள். அவர்கள் தொலைக்காட்சி பார்த்து லயித்துக் கொண்டிருந்த தருணத்தில் ஒரு டெம்போ வேனைக் கொண்டுவந்து நிறுத்தி எல்லா தட்டு முட்டு சாமான்களையும்  அள்ளிப் போட்டுக் கொண்டு போன நிகழ்வுகள் மிக இயல்பாக நடந்திருக்கிறது. இப்படித்தான் தெருத்தொடங்கி,ஊர் தாலுக்கா,மாவட்டம்,மாநிலம் என விஸ்தரித்துக்கொண்டு போகிறது இந்த வேற்றுமையின் ஒற்றுமை. ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்து ரொம்பச் சுளுவாகக் களவாண்டு போவதற்கு ஏதுவாக இருந்தது பிரிட்டிஷ் இந்தியா. இப்போது இருந்த இடத்தில் இருந்து கொண்டே களவாட விடும் அளவுக்கு தங்களைத் தகவமைத்துக் கொண்டிருக்கிறது கணினி இந்தியா.வீரத்தை மொத்தமாய் குத்தகை எடுத்த இந்தியர்கள் அன்றும் இன்றும் உயிரோடுதான் இருந்தார்கள்,இருக்கிறார்கள் என்பதை இறுதியாகச்சொல்லி முடிக்கிறேன்.