31.3.11

கொள்ளிகள் எரியும் கூட்டத்தில் நாடு தீபம் தேடிக்கொண்டிருக்கிறது


கட்சிகளுக்கான மாவட்டச்செயலாளர்கள் தேர்வாகட்டும்,அந்தக்கட்சிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வாகட்டும் அந்த மாவட்டத்தில் எந்த ஜாதியினர் கணிசமாக இருக்கிறார்கள், அங்கு எந்த ஜாதியின் ஆதிக்கமிருக்கிறது என்பதைப்பொறுத்தே தேர்வுகள் நடக்கிறது.உதாரணமாக வன்னியர் அதிகமாக வாழும்  ஏரியாவில் அந்த பகுதியில் அதிகம் இல்லாத இனத்தவரான நாயக்கரோ நாடாரோ போட்டியிடுவதில்லை, போட்டியிட்டதாக சரித்திரமும் இல்லை பூகோளமும் இல்லை.நாயக்கர் ஓட்டுக்கள் அதிகமாக இருக்கும் பகுதி என்பதற்காக ஒருகாணி நிலம் கூட இல்லாத நாயக்கருக்கு சீட் வழங்கப்படுவதில்லை. அதெல்லாம் வசதி படச்ச நாய்க்கமாருக்கு என்கிற ’தண்ணீர் தண்ணீர்’ வசனம் தான் நினைவுக்கு வருகிறது.எந்தக்கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் மாண்டேக் சிங்க் அலுவாலியா தான் திட்டக்கமிஷன் தலைவர்.அதேபோல பாகிஸ்தானில் குடியுரிமை பெற்றுக்கொண்டு அங்கு தங்கி இருந்தாலும் நம்ம பசி க்கு ஒரு காபினெட் போஸ்ட் உறுதி.

கடைந்தெடுத்த ஜாதி,பண்ணையார்த்தனம்,உலகமயம் மூன்றும் கூட்டுச்சேர்கிற ஜனநாயகம் இது. நாம் பெயர்களுக்கு முன்னால்  வேண்டுமானால் மானே தேனே போட்டுக்கோ என்று சொன்னமாதிரி புரட்சி,சமத்துவம் என்கிற வார்த்தைகளைப் போட்டுக் கொள்ளலாம்.ஆகவே புரட்சித்தமிழன், புரட்சிக்கலைஞர்,புரட்சித்தலைவி,சமத்துவமக்கள்கட்சி,புரட்சிபாரதம் என்கிற மாதிரியான பெயர்களை வைத்துக்கொண்டு இப்போதைக்கு ஆறுதலடைந்து கொள்ளலாம். அல்லது ஆஹா வந்துவிட்டது புரட்சி எனப் பீத்திக்கொள்ளலாம். கண்ணங்கரேர்னு இருக்கிற எங்க பெரியப்பனுக்கு வெள்ளைச்சாமின்னு பேர்வச்ச மாதிரித்தான் இங்கு கதைகள் நடக்கிறது. இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரையம். இங்கே கொமுட்டிக்காயே சக்கரை.

அன்று முன்பதிவுக்காக புகைவண்டி நிலையத்தில் காத்திருக்க நேர்ந்தது.அருகில் உட்கார்ந்திருந்த கரைவேட்டிக்காரர் எந்தக் கரையாயிருந்தாலென்ன அது கறைதான். காங்கிரசையும் சேர்த்து அவை ஒரே குட்டையில் ஊறிய மட்டையே. அவர்  வார்டு வார்டாக ஜாதியின் பெயரையும் அங்கு எத்தனை ஓட்டுக்கள்  என்பதையும் புட்டுப்புட்டு வைத்தார். அவர் ஒரு முழு நேர அரசியல்வாதி.போன தேர்தலில் ஒரு வாக்குக்கு என்ன விலை என்பதையும் இந்த தேர்தல் நேரத்தின் விலைவாசி ஆகியவற்றோடு கணக்குப்பார்த்து எவ்வளவு கொடுத்தால் ஜெயிக்கலாம் என்பதையும் துல்லியமாகச்சொன்னார். அத்தோடு மட்டுமில்லாது தேர்தல் கமிஷன் நெருக்கடி கொடுத்தால் அதைச்சமாளிக்க என்னென்ன தந்திரோபாயங்களை கையாள்வதென்றும் பட்டியலிட்டார். எங்கூர்ல ’கள்ளம்பெருசா காப்பாம் பெருசா’ அப்படீன்னு ஒரு பழமொழி உண்டும்.

22.3.11

" கருப்பு நிலாக்கதைகள் " - எழுத்தாளர் மேலாண்மைப் பொன்னுச்சாமியின் விமர்சனம்.


முதல் கதையான விடுதலையின் ஒத்திகையில் நடகவேஷத்தில் கூட எளியவன் வாயிலிருந்து வந்து விழுகிற நாயே என்ற சொல்லைத் தாங்கமுடியாத விபரீதம். ஏகாலித் தொழிலின் அடிமைத்தன வேலைகளைக் கூட விளையாட்டாகவும், வேலையாகவும் எடுத்துக்கொள்கிற சாலமுத்துவாலேயே தாங்க முடியாத அவமதிப்பு,ரயிலில் கிடைக்கிற சாதியற்ற வாஞ்சை.

மருளாடியின் மேல் இறங்கியவர்கள் ரொம்பவும் தனித்துவமான சிறந்த கதை.நுட்பமான சமூகப்பார்வையும் உளவியல் கூறும் உள்ள கதை.

நினைவில் சலசலக்கும் பனங்காடு ஆறுமுகச்சாமியின் உடல் சிலிர்ப்பில் துல்லியமாகிற ஆழ்மனக்காதல்.சம்பாரிமேளம் பற்றிய கதையில் பாண்டியன் கிராம வங்கித்தோழர்களும்,கிருஷ்ணக்குமாரும் மனசுக்குள் வந்து போகிறார்கள்.தொழிற்சங்கங்கள் மீது அசூயை ஏற்படுத்த முனைகிற தமிழ்சிறுகதை உலகின் ஒட்டு மொத்த எத்தனிப்புக்கும் எதிராக இருக்கிற கதை.மரியாதையை ஏற்படுத்துகிற சிறுகதை.

இந்தத்தொகுப்பிலுள்ள கதைகளில் ஆகச்சிறந்த சிறுகதை ’கருப்பு நிலாக்களின் கதை’.கண்ணகி மறக்கமுடியாத உயிர்ச்சித்திரம்.ஆண்களின் பலம் பலவீனங்களினால் அலைப்புறும் பெண்ணின் அவலமும் ஆவேசமும் தெரிக்கிற கதை.அரிவாள்மனைக்கு இப்படியொரு நற்குணமா ?.செவத்த மணியின் பலகீனம்,பால்ச்சமியின் மூர்க்கம் ரெண்டும் அவளை சிதைக்கிறது.அவைதான் அவளை உக்கிரப்படுத்தவும் செய்கிறது.

இன்னொரு ரயிலில் ஸ்டேசன் மாஸ்டர் உயர்ந்து நிற்கிறார்.ரயில் முகம் பார்த்தறியாத சிறுவனின் ஆவலும் அலைபாய்வும் கண்ணுக்குள் தெரிகிறது.பெரியார் பேரனுக்குப் பிடித்த பேய் நல்ல சித்தரிப்பு. பயந்த மனசுக்குள்ளொரு மனிதநேயம், உறவுச் சேர்க்கையைக் கலைத்துவிட்டோமே என்கிற குற்ற உணர்வு.ஆனியன் தோசையில் மனசு ஆடி ஆடிக் குலுங்கிச் சிரிக்கிறது.

எளிய மக்களின் வாழ்வியலையும், உளவியலையும் அவர்களது மொழியிலே மட்டுமில்லை.அவர்களது மனநோக்கிலிருந்தும் உணர்த்துவதும் விவரிப்பதுமித்தொகுப்பின் தனித்துவச்சிறப்பு.பொது மனிதனாகப்பாவனை பண்ணாத எழுத்தாளனின் நேர்மைதான் இந்தத் தனித்துவத்தைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது.

வாக்கிய அமைப்புகளிலும் சற்று வித்தியாசம் தென்படுகிறது. வாக்கிய அமைப்புக்களில் எழுத்தாளர் ஏற்படுத்துகிற லாவகம் அந்த மொழிக்குரிய வெள்ளந்திக் குணத்தைச் சற்றே மட்டுப்படுத்துகிறது. விளைவு ? உணர்ச்சி ரீதியான தாக்குதல் நிகழ்த்துவதான பலகதைகள், பலநிகழ்வுகள், உணர்ச்சி ரீதியான அலைக்கழிப்பை ஏற்படுத்தாமல் போய்விடுகின்றன. அறிவை மட்டுமே உரசி விட்டு நகர்கின்றன.

வாசித்து முடித்தவுடன் மனசுக்குள் வேரடிப்பது கதைகளின் யதார்த்தமும்,நம்பகத்தன்மையும்,உணர்ச்சி ரீதியான அலிக்கழிப்பும்தான்.
களச்சித்தரிப்பு இல்லை.நிகவுகளைச்சித்தரிக்கும் கதைகள் காலம் இடம் போன்றவற்றைத் தாண்டி ச்செல்வதால் கதைகள் மனசுக்குள் வேரடிக்க மறுப்பதற்குக் காரணம்.

சச்சி, கண்ணகி, சாலமுத்து, வெள்ளச்சிகள் மறக்கமுடியாத உயிர் சிற்பங்களாகி நிலைக்கின்றன.எழுத்தாளனின் தனித்துவம் இந்தக்கதைகளெங்கும் கிடக்கின்றன.சேரிக்குள் இருந்து குடியானவத் தெருவைப்பார்க்கிற கண்ணோக்கில் ஒட்டுமொத்த கதைகளின் தொனியும் பயணமும் நிகழ்கிறது.

வடிவமைப்பும்,அச்சும், அட்டையும் நேர்த்தியாகச் செய்துவிட்டு ஃபைனல் ப்ரூப் கோட்டை விட்டு விட்டீர்கள்.எழுத்துப்பிழைகள் வாசிப்பு ருசிக்குள் கூடுதல் உப்பைப்போடுகிறது.வட்டார மொழிச்சிறுகதைகளில் எழுத்துப்பிழை வருவது பெரும் ஆபத்து.அனர்த்தங்களைத் தந்துவிடும்.

பொதுமனிதனாகப்பாவனை பண்ணாத எழுத்தாளனின் நேர்மை மொழியாளுமையிலும் செயல்பட்டிருந்தால் ஆகச்சிறந்த தொகுப்பாகவும் காலத்தால் மறக்கமுடியாத கலைப் படைப்பாகவும் மாறியிருக்கும்.

விமர்சனங்கள் உங்களையறியாமல் உங்களிடம் ஒட்டியிருக்கும் குறைகளைச் சுட்டுதல்.குறை களைந்த காமராஜை கண்டறிதல் என்று கொள்க.இந்தச் சிறுகதைத்தொகுப்பு ஆகச்சிறந்த கதைகள் கொண்ட அணிவகுப்பு. கிராமத்தின் ஏழ்மை இல்லாமை உள்முகச்சிதைவுகள்,நிறைவேறாத ஆசைகள் ஆகியவற்றைநல்ல கரிசல்காட்டு மொழியில் படைப்பாகத்தந்திருக்கிறீர்கள்.

’கருப்புநிலாக்கதைகள்’, ’மருளாடியின்மேல் இறங்கியவர்கள்,’ ’வேரைவிரட்டியமண்’, ’சம்பாரிமேளம்’ போன்ற உன்னத கதைகளை- சாகாவரம்பெற்ற கதைகளைத்தந்திருக்கிறீர்கள்.
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

21.3.11

யார் யாரை ஏமாற்றுகிறார்கள்.


வழகத்துக்கு முன்னாலேயே முழித்துக்கொண்டு ஊர் ஒத்தையடிப்பாதைவழியே பஞ்சாயத்துப்பள்ளிகளை
நோக்கி பயணப்படும். நடக்கமுடியாதவர்கள், வயோதிககர்கள், பிள்ளைத்தாச்சிப் பெண்கள் எல்லாம்
மாட்டுவண்டிகளில் கொண்டுவந்து இறக்கிவிடப்படுவார்கள். நீண்டவரிசையில் பாட்டும் கூத்துமாக
நகர்ந்துபோய் ஆட்காட்டி விரலில் மை தடவிக்கொண்டு திரும்ப வருவார்கள்.  ஏதாவது வேப்ப மர
நிழலில் மொய் எழுதுகிற தங்கிலியான் உட்கார்ந்து ரெண்டு கருத்த வெத்திலையும் ஒரு கொட்டப்பாக்கும்
கொடுத்துக்கொண்டிருப்பார். கூட ரெண்டு குடுத்தா ஙொப்பன் வீட்டுச்சொத்தா போயிரும் என்று கேட்கிற
மதனிமார்களுக்குச் சொல்ல, ''வீட்டுக்கு வா கூட ரெண்டு போனி கூலு கரைச்சித்தாரன், அதுவுமில்லைன்னா
குருன வாங்கிப்பொங்கி கருவாட்டுத் தண்ணி வச்சித்தாரன், இது ஊர்த்துட்டுல வாங்குன வெத்தில,
பங்காளத்தபடிதான்''  யோக்கியமான பதிலும் அவரிடம் இருக்கும். ஓட்டுப்போடுவதைப் பார்க்கவென்றே
சின்னப்பிள்ளைகள் கூட்டம் கூட்டமாய் வந்துபோகும். ஜனநாயகத்தின் பெரும் திருவிழாவாக கள்ளங்கபடமற்ற
தேர்தல் கடந்துபோன காலங்கள் அது.


முடியாட்சியும் ஆங்கில ஆட்சியும் தாண்டியொரு மக்களாட்சியை ருசிக்கத்தொடங்கிய காலம் அது. கிட்டத்தட்ட
எண்பதுகள் வரை இதுதான் நிலைமை. ஆனால் இருபது வருசத்தில் எல்லாம் வேகமாய் மாரிக்கொண்டு
வருகிறது. இப்போது எல்லாக் கிராமங்களிலுமே காலைப் பேருந்துக்கு ஒரு கூட்டம் கிளம்புகிறது. தாலுகா
ஆபீஸ், கோட்டாட்சியர் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், காவல் நிலையம் இப்படி மக்கள் வந்து
போகும் இடங்களுக்கு  அவர்கள் பிரிந்து போய் காத்திருப்பார்கள். பிரச்சினைகளை உண்டாக்க, பெரியதாக்க,
பிரச்ச்சினைகளுக்கு பஞ்சாயத்துப் பண்ண, கடைசியாய் ராசி பண்ணிவிட்டு மதியம் சீமைச்சாராயமும்,
பிரியாணியும்  இரவு கடைசி வண்டிக்கு வீடு திரும்பும் போது ஒரு நூறு ரூபாயாவது பையில் இருக்கும்.


பருத்தியும் மிளகாயும் விளைந்த நிலங்களில் வேலிக்கருவேல மரங்கள் மண்டிக்கிடக்க, எங்கள்
உழைப்பாளர்கள் கிராமங்களிலிருந்து கிளம்பி வந்து கௌரவப் பிச்சைக்காரர்களாக உருமாறுகிறார்கள். நகரத்து வீதிகளில்
பிரியாணி வாடை மணக்கிற முகங்கள் தேடி அலைகிறார்கள். ஏற்கனவே நாறிக்கிடக்கிற பல அலுவலகங்கள்
இன்னும் அதிகாமாக சுத்தம் செய்ய முடியாத படி நாறடிக்கப்படுகிறது. ஒரு நாள் பொழுது கழிவதற்காக
விலை மதிக்க முடியாத நாணயமும் நேர்மையும்  விலைபோகிறது. கைநாட்டுக்காரர்களும், நகரம்
பரிச்சயமில்லாத அப்பாவிகளும் இவர்களை நம்பி குறுக்குப்பாதையில் பயணமாகிறார்கள்.

1975 ஆம் ஆண்டு சாத்தூரில் அழகுத்தேவர் என்கிற எம் எல் ஏ ஒருவர் இருந்தார், அவரிடம் கையெழுத்து
வாங்கி மாணவர் விடுதியில் சேர எனக்கு எட்டு கிலோ மீட்டர் நடக்கிற நேரம் மட்டுமே செலவானது.
தம்பி எந்த ஊரு, என்ன படிக்கிறெ, நல்லாப்படிக்கனும் என அறிவுரை சொல்லிக்கொண்டே
”அமுக்குத்தேவர்” என்று கையெழுத்துப்போட்டு விட்டு கீழே வைத்த வேப்பங்குச்சியை எடுத்து திரும்பவும்
பல்விலக்க ஆரம்பித்தார். அந்தக் கிராமத்தானின் முகம் எதோ கனவில் வருகிற மாதிரித்தான் நிழலாடுகிறது.
அவர் தங்கியிருந்த அந்த வாடகை வீட்டில் இப்போது யாரோ தீப்பெட்டி ஆபீஸ் போர் மேன் வாடகைக்கு
குடியிருக்கிறார்.

தன்னைத்தேடி வருகிறவர்களை காக்கவைப்பதுவும் அழைக்கழிப்பதுமே ராஜதந்திரமாகிப்
போன காலமாகிவிட்டது இப்போது. லஞ்சப்பணத்தில் பங்களாக் கட்டியவன் பிளைக்கத் தெரிந்தவனாகிறான்.
நேர்மையான அரசு அதிகாரி முசுடு, மனிதரண்டாதவன் எனப் பட்டம் வாங்கி மதிப்பிழந்துபோகிறான். அந்த
கருத்துருவாக்கம் நகரம் தாண்டிப் பயணமாகி பான்பராக் பொட்டலம்போல், அழுகுனி சீரியல் போல்
கடைகோடிக் கிராமத்துக்கும் விஸ்தரிக்கப்பட்டுவிட்டது. அதனால் தான் இப்போது ஒவ்வொரு கிராமத்திலும்
ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பேதமில்லாமல், கொள்ளை நடக்கிறது. ஐந்து வருசம் தங்களைச்சுரண்டித்திங்க
தலைக்கு இருநூறு முன்னூறு என்று சுய அடமானம் அரங்கேறுகிறது.

ஒரு துக்க விட்டுக்குப்போவதற்கு இரவு பணிரெண்டு மணிக்கு இரு சக்கர வாகனத்தில் கிராமத்துக்கு ப்போக வேண்டிய
நிர்ப்பந்தம் வந்தது நான்கு கிராமங்கள்  தாண்டிப்போகவேண்டும் ஒவ்வொரு ஊரிலும் பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் பத்துப்பேர்
உட்கார்ந்துகொண்டு போகிற வருகிற வாகனங்களை மறித்துக்கொண்டிருந்தார்கள். சாதிக்கலவரம் ஏதும் நடந்து
விட்டதோ என்னும் பயத்தோடு கடந்துபோன என்னயும் வழிமறித்து எந்தக்கட்சி என்று விசாரித்தார்கள் ஒரு
வேளை கட்சிக்கலவரமாக இருக்குமோ என்னும் சந்தேகம் வந்தது. கிராமங்களில் கட்சி மற்றும் மதக்கலவரங்கள்
வருவதற்கு சாத்தியமே இல்லை.

கிராமங்கள் அழிந்து வருவதற்கு சமச்சீரற்ற நடைமுறையும், அதன் ஆதிக்காரணியான சாதியும் தான் முக்கிய
காரணம். அதை அழிக்க எந்த விஞ்ஞானியாலும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே அங்கு
என்ன ஜீவாதாரப் பிரச்சினை குறித்துமுரண்பாடு வந்தாலும் அது சாதிக் கலவரமாகத்தான் மாறும், அது
வேறு பிரச்சினை. எனது ஊருக்கு முந்திய ஊரில் என்னை இடை மறித்தார்கள் பக்கத்து ஊர் என்பதால்
தைரியமாக நின்றேன் என்னை அடையாளம் கண்டுகொண்ட சிலர் குசலம் விசாரித்து  விட்டு போகச்
சொன்னார்கள். என்ன என்று கேட்டேன் "" தேர்தல் செலவுக்கு பணம் தர ஆள் வரும் அதான் நிக்கோம்,
பையப்பதனாமா போங்க"" என்று என்னை அனுப்புவதிலே குறியாக இருந்தார்கள். ஒவ்வொருவரின் கையிலும்
வெவ்வேறு கட்சிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ஸ்லிப்புகள் இருந்தன.

வீட்டுக்குப் போனதும் என எனது அம்மா முழித்துக்கொண்டு ’என்னய்யா துட்டிக்கு வாரவன் கண்ணு வெளிச்சத்திலே வரலாமில்ல இந்த ராவுல ஒத்தியில வண்டியில ஏ வரணும்’ என்று விசனப்பட்டார்கள். தந்தையாரைக் காணவில்லை
காரணம் கேட்டேன். ’கச்சிக்காரங்க வருவாங்கண்ணு ஊரே போய் ரோட்டுல நிக்கி ஙொய்யாவும் அங்கன போய் கெடக்காரு’
ஒன்று விளங்கவே இல்லை  எல்லா கட்சியில் அட்டைகளையும் வைத்திருப்பது ஏன் என்று கேட்டேன். வருகிற கட்சி எதுவாக இருந்தாலும் அவர்களுக்குத்தான் ஊரின் மொத்த ஓட்டும் என்று சொல்லி பணம் வாங்கத்தான் என்பது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.

யார் யாரை எமாற்றுகிறார்கள் என்று புரியவில்லை.

(மீள் பதிவு)

19.3.11

குலசாமியும் தீராத பூசுபொடியின் வாசமும்.



இத்தோடு மூன்றாவது இது அழைப்பு. பேரப்பிள்ளைகளை விசாரித்துவிட்டு,ஒரு கழிப்பறை வேண்டுமென்கிற கோரிக்கையையும் கோடிட்டுக்காட்டிவிட்டு கடைசியில் அம்மா சொன்னாள்.’எப்பிடியாச்சும் லீவு போட்டுட்டு வந்துருப்பா,பங்காளிகள்லாம் ஒன்னத்தான் கெட்டாக’. சொல்லும் போது அதே உரத்த குரல்கேட்டது. செல்போனில் மெல்லப் பேசினால் கூடப்போதுமென்கிற நுனுக்கம் அவளுக்கு இன்னும்  கைவரவில்லை.பேசி முடித்த கையோடு சுற்றியிருப்பவர்களைப் பெருமிதமாக ஒரு பார்வை பார்த்திருப்பாள். கனகமணிப்பெரியம்மையும் ,கூல்பானை பொண்டாட்டியும் எதாச்சும் கேலி பேசியிருப்பார்கள். கண்மலரும் பூசுபொடியும் மறக்காம வாங்கியாரச் சொல்லுக்கா என்று ஆரிட்டாச்சித்தி சொல்லியிருப்பாள்.அவள் தான் அந்த மத்தியான வெயிலில் தங்கு தங்குன்னு குதிப்பாள் நாக்கை த்துருத்திக்கொண்டு எனக்கு முட்டை வேணும்,சாராயம் வேணும்,ஒரு கைப்பிடி வச்ச அருவா வேணும் என்று அருவாக்குச்சொல்லச் சாமியாடுவாள்.

ஒரு பத்துப்பதினைந்து வருடங்கள் ஓடிப்போனது,ஊரோடு உட்கார்ந்து நரிக்கொறத்தி ஆட்டம் பார்த்தது.ரெட்டைஅர்த்த வசனங்களைக் கேட்டுக் கொண்டே முறைப்பெண்களைப்பார்க்கிற குறுகுறுப்பு.கிழவன் கோவிலில் சாமிகும்பிடும்போது யாருக்காவது அருள்வந்து உடலை உலுக்கி நாக்கைத் துருத்துவது. தெருச்சண்டையில் ஆம்பளையைப் பொம்பளை மல்லுக்கட்டி ஜெயிப்பது.ஊர்ப்பஞ்சாயத்தில் நல்ல நாயம் பேசுனீக நாயம் வேண்டான்னு சொன்னா தீத்து உட்ருங்க,மனசுக்கு பிடிச்சவனோட காலந்தள்ளட்டும் என்கிற குரல்கேட்டு பத்துப்பதினைந்து வருடங்கள் ஓடிப்போனது. எலே, செம்பட்டையா,  இப்படி பேர்களோடும் இன்னும் சில கெட்ட வார்த்தைகளோடும் அறியப்பட்ட காலங்கள் மாறி “தம்பி எப்ப வந்துச்சி,வாங்க வாத்தியாரய்யா என்கிற மரியாதைகளில் கொஞ்சம் தூரம் அதிகமானது.

முன்னமெல்லாம் மாசி மாதம் ஒண்ணாந்தேதி குலசாமி கும்பிட பங்காளிகள் கூப்பிடுவார்கள். அப்போது ‘ஆமா பெரிய்ய ராஜராஜ சோழன் பரம்பரை’ ஒங்க சல்வார்பட்டியான் வளசலில் பெரிய்ய பணக்காரன் வள்ளிமுத்து பெரியப்பன் மட்டுந்தான். அவனுக்குத்தான் ஓடு போட்ட வீடு இருக்கு. மத்தபடி எல்லாருக்கும் கூர வீடு. அதும் பிரிஞ்ச.கூரைய சரிசெய்ய வக்கில்லாதவங்க வளசல். இதுல என்ன என்ன கொளம் குத்துக்கல்லு சாமின்னு இப்படி எதாச்சும் சொல்லிவிட வந்தவர்கள் அதிகப் பிடிச்சவன் என்று  முனகிக்கொண்டே அங்கிருந்து வெறுப்போடு போய்விடுவார்கள்.ஆனால் ஒரு அரைமுடித் தேங்காயும்,நெய் ஊத்தாத சக்கரைப் பொங்கலும் கட்டாயம் தழுகையாக வீடு வந்துசேரும்.

பங்காளி முருகேசன் அந்தோணி கூட சண்டைபோட்டு மண்டைய ஒடச்சி போலீஸ் ஸ்டேசனுக்கு அலைந்தார்கள்.அந்தோணி உயிர்ச்சிநேகிதன், அந்தோணிக்கு சப்போட்டா அலைஞ்சதும் பங்காளிகளின் கோபம் கருப்பசாமி பக்கம் திரும்பியது.ஊனு கம்பைத்தூக்கிக்கொண்டு அடிக்கஓடி வந்தான் முருகேசன். அப்போது ஆரிட்டாச்சித்திதான் மக்காடச்சேந்து அவனப்பிடிச்சி கம்பைப்புடுங்கி விட்டு வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போனாள். ரோஷம் வந்து திருப்பி அடிக்க எத்தனித்த கருப்பாமியின் கண்ணுக்குள் பார்த்த ஆரிட்டாச்சித்தியின் பார்வை ஆத்திரத்தை தளரவைத்தது.

இருசக்கரவாகனத்தை நிறுத்தியவுடன் எல்லோரும் திரும்பிப்பார்த்தார்கள். நெடுநாள் பேசாமல் இருந்த நண்பனின் வீட்டுக்குள் போவதைப்போல கூச்சத்தோடு நடந்து போனான் கருப்பசாமி. காடுமுழுக்க விரவிக்கிடந்த வெயில் இனித்தது. குழந்தைகள் ஓடிப்போய் வண்டிமேல் ஏறி உட்கார்ந்து விளையாட ஆரம்பித்ததுகள்.அந்தக்கூட்டத்துக்குள்ளேதான் கருப்பசாமியின் பழய்ய நாட்கள் கிடந்தது. முருகேசச்சித்தப்பன் வந்து பையை வாங்கிக் கொண்டார்.பீடத்தைச்சுற்றி சாணி தெளிக்கப்பட்டிருந்தது.இலையில் தேங்காபழங்களை அடுக்கிவைத்துக் கொண்டிருந்த சாமிகொண்டாடி மோகன் ’பந்தல்ல ஒக்காருண்ணே, மயினி நீங்களும் போங்க’ என்றான். பொங்கல் சட்டியில் உலை கொதித்துக்கொண்டிருந்தது. ஆரிட்டாச்சித்திதான் பச்சரிசியை அரித்துக்கொண்டிருந்தாள். சட்டியை ஒருக்களித்து வைத்துக்கொண்டு அரைசி அரிப்பது அந்த லாவகத்தோடு பேசும் ஆரிட்டாச்சித்தி ஏ அரிசி வேணுமா என்று கேட்டாள்.நனைஞ்ச அரிசி திங்க எச்சிலூறியது.அரிசி,தேங்காச்சில்,வெல்லக்கட்டி சேத்து திங்கக்கொடுத்து வைக்கணும்.

பொங்கிய பொங்கலோடு குலவைச்சத்தம் காடெங்கும் ஒலித்தது.மோகன் தேங்காயை உடைத்தான்.சாம்பிராணி பத்தி சூடம்  கணத்தது. ஆளாளுக்கு அருள்வந்து சாமியாடினார்கள்.ஆரிட்டாச்சித்தி காடே அதிரும்படி கனைத்துக் கொண்டு திடீரெனக்கீழே விழுந்தாள்.எழுந்து சங்கு சங்கெனக்குதித்தாள். எல்லோருக்கும் திண்ணீறு போட்டாள். கூப்பிடு அவனை என்றாள்.கருப்பசாமி அருகே போனான் அவளுக்கு உடல் கூடுதலாய்க்குலுங்கியது.மார்புக்கு குறுக்கே இருந்த கருப்பாசாமியின் கையைப் பிடித்துக்கொண்டாள். நான் சொன்னதெல்லாம் செஞ்சயா எங்கடா பூசுபொடியென்றாள். கோதைநாச்சியார் புரத்தில் பாவாடை சட்டையோடு அலைந்த போதும் கருப்பசாமியிடம் பூசு பொடிதான் கேட்பாள். கருப்பசாமியின் கண்கள் திரண்டது. அவன் ஆத்திகனாகிக்கொண்டிருந்தான்.

17.3.11

1952 சுதந்திர இந்தியாவின் முதல் தமிழகத் தேர்தல். வரலாறு




சுதந்திர இந்தியாவின் முதல் ஜனநாயகத்தேர்தல் 1951 ஆம் ஆண்டு நடக்க இருந்தது. சில நடைமுறை அனுபவக்குறைச்சலால் அது 1952 ஆம் ஆண்டுக்குத்தள்ளிப்போனது. அப்போது  கேரளம் ஆந்திரா கர்நாடகா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாகானமாக இருந்தது தமிழகம்.மொத்தம் 375 தொகுதிகள்,காங்கிரஸ்,இந்தியக்கம்யூனிஸ்ட் என இரண்டே இரண்டு தேசியக்கட்சிகள்.பத்து பிரதேச மற்றும் சுயேச்சைகள் களத்தில் இருந்தன.இந்தப்பெட்டிக்குள்ளே இருக்கும் பட்டியலைப்பாருங்கள்.

அதற்குள் பாட்டாளி மக்கள் கட்சியாக பரிணமித்த வன்னியர் கட்சி. விவசாயிகள் சங்கமாக மாறிய கிசான் பார்ட்டி.அகில இந்திய பட்டியலின மக்கள் கட்சி என பன்முகத்தனமை கொண்ட கட்சிகள் அப்போதே முளைத்துவிட்டன. அதேகாலத்தில் திராவிடர் கட்சி சி.என்.அண்ணாத்துரை தலைமையில் இரண்டாகப்பிளந்து திக திமுக வாகியிருந்தது. எனினும் இரண்டும் தேர்தலில் போட்டி யிடவில்லை.ஆனால் தஞ்சை போன்ற பகுதிகளில் திக கம்யூனிஸ்ட் கட்சியையும்,கடலூர் வேலூர் பகுதிகளில் திமுக வன்னியர் கட்சியையும் ஆதரித்தது.இரண்டுமே தங்களுக்கு திராவிடப்பொன்னாடு வேண்டுமென்கிற கோரிக்கையில் வலுவாக இருந்த காலம் அது. 1957 ல் முதன் முறையாக தேர்தலில் போட்டியிட்டு இரண்டு ஒற்றை இலக்க தொகுதிகளை கைப்பற்றி.1962 ஆம் ஆண்டு அது 64 தொகுதிகளாகி 1967 ஆம் ஆண்டு ஆடியைப்பிடித்தது திமுக.

அதுகிடக்கட்டும் 1952 ஆம் ஆண்டு நடந்த முதல் தேர்தலுக்கு வருவோம்.கங்கிரஸ் கட்சி மவுண்ட் பேட்டனிடமிருந்து சுதந்திரத்தை தாங்கள் தான் வாங்கிக்கொடுத்தோம் என்கிற தேசீயப் பெருமிதத்தோடு களமிறங்கிய அந்த முதல் தேர்தலில் ஜெயிக்க முடிந்த முடிந்த தொகுதிகள் வெறும் 152 மட்டுமே. இரண்டாவது பெரிய கட்சியான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற தொகுதிகள் மொத்தம் 62 இதரக்கட்சிகள் சுயேச்சைகள் சேர்ந்து மொத்தம் 161.ஆகவே யார் ஆட்சி அமைப்பது என்பதில் குழப்பம் ஆரம்பித்து. அந்த முதல் தேர்தலிலேயே குதிரை பேரம் துவங்கி விட்டது. தேர்தலில் போட்டியிடாத சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியை அரசு அமைக்க அழைத்தார் கவர்னர் பிரகாசம்..அதை எதிர்த்து தோழர் ராமமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்தார். வழக்கு தள்ளுபடியானது.


INCSEATSCPISEATSOTHERSSEATS
Indian National Congress (INC)152Communist Party of India (CPI)62Kisan Mazdoor Praja Party (KMPP)35
Tamil Nadu Toilers Party (TTP)19
Socialist Party (SP)13
Krishikar Lok Party (KLP)15
Commonweal Party (CWP)6
Madras State Muslim League (MSML)5
Forward Bloc (Marxist Group) (FBL (MG)3
All India Scheduled Caste Federation (SCF)2
Justice Party (JUSP)1
Independent (IND)62
TOTAL (1952)152TOTAL (1952)62TOTAL (1952)161
( நன்றி: விக்கிப்பீடியா)

கம்யூனிட்களோடு கூட்டணி வைத்துக்கொள்ளவும்,கவர்னராட்சியையும் விரும்பாத ராஜாஜியும் ராம்நாத் கொயங்காவும் சுயேச்சைகளைக் கறைத்தனர்.அதில் கறைந்த வன்னியர் கட்சி,முஸ்லீம் லீக் இன்னும் சில சுயேச்சைகள் ( காங்கிரசாக மாறிய) ஆதரவோடு காங்கிரஸ் பெரும் பாண்மையை நிரூபித்தது.பிரிட்டிஷாரின்,உள்ளூர் பெருந்தனங்களின் ஆசியோடும் ஜாதிக்கட்சிகளின் ஆதரவோடும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்.

தீப்பறக்கும் கேள்விகளோடும் தீராத கோரிக்கைகளோடும் தோழர் கல்யாணசுந்தரம் தலைமையில் எதிர்க்கட்சியாக அமர்ந்தது கம்யூனிஸ்ட்
கட்சி.

மிகப்பெரும் நம்பிக்கையோடும் மக்களின் ஆதரவோடும் பட்டொளி வீசிப்பறந்தது செங்கொடி

16.3.11

போடுங்கம்மா ஓட்டு ஏழைகளின் அடிவைத்தப்பாத்து.


அவராண்டார் இவராண்டார் எனினும் மக்களே மாண்டார்.இது மன்னராட்சி பற்றிய புதிய புரிதல்.எண்ணிக்கையில் எந்தக்கட்சி ஜெயித்தாலும் தோற்கப்போவது ஜனங்கள் என்பது மக்களாட்சியின் மீதும் நிகழ் அரசியலின் மீது கிடக்கும் கனத்த விமரிசனம். நடுவே கோடிருப்பது போன்ற மாய எல்லைக்கு இருபுறமும் போட்டியாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். சிறு பிள்ளைகள் விளையாட்டில் கடைப்பிடிக்கப்படும் குறைந்தபட்ச நியதிகள் கூட இல்லாமல் குளம்பிக்கிடக்கிறது ஆதரவும் எதிரும்.

விஷமருந்திச்சாவது,தூக்குக்கயிற்றில் தொங்குவது என இரண்டே இரண்டு நிர்ப்பந்தங்கள் மட்டும் சந்தையில் தேரக் கிடைக்கும். எதைத் தேர்ந்தாலும் இருட்டு. அந்தரத்தில் ஆள்  தொங்கினாலும் நிழல் எதாவது ஒரு பக்கத்தில் விழுந்து தொலைக்கிறது. ஜெயித்து உட்காருகிற வரை அவர் நல்லவர். தோற்றுத் திரும்பும் வரை இவர் கெட்டவர் இதுதான் அரசியல்.
புரட்டிப்போடும் நெம்புகோல்களை கண்டுபிடிக்கவேண்டும். எச்சரிக்கை. அது லத்திக்கம்புகளாக மாறிவிடும் அபாயத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

7.3.11

சே’ யின் புகழ்மிக்க பயணத்தில் உடன் சென்றவர் மறைந்தார்


முதலாளித்துவம்,அதன் கொடுக்கான ஜனநாயகம் ஆகியவை மூடிமறைக்கிற ஒரு பெயர் உண்டு. அதுஒரு பொட்டலம் கட்டப்பட்ட நெருப்பு.அது ஒரு நீருக்குள் அமிழ்த்தி வைக்கப்பட்ட காற்று.அதுதான், அந்தப் பெயர்தான் உலகநாயகன் சேகுவாரா. 


எங்கோ பிறந்து மருத்துவம் படித்து பின் துப்பாக்கி தூக்கிய அரசியல்வாதி. துப்பாகியைக்கீழே வைத்துவிட்டு கியூப மக்கள் கொடுத்த அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டவன்.அண்டை அயல் நாடுகளில் தொடரும் அடிமைத்தனத்தை எதிர்க்க தன் அமைச்சர் பதவியைத்தூக்கி எறிந்துவிட்டு காடுகளுக்குள் சென்றவன். என் கால்களே என் வீடு என்று சொன்ன நடோடி புரட்சிக்காரன் சே 

அவனோடு பிராயத்தில் காடுமேடு சுற்றி அலைந்த அவனது தோழன்  அல்பெர்டோ பற்றிய செய்தி தீக்கதிர் ( 07.3.2011) நாளிதழில்.

1952ம் ஆண்டில் லத்தீன்- அமெரிக்காவில் குறுக்கும் நெடுக்குமாகச் சென்ற சே குவேராவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தில் கூட்டாளியாகச் சென்ற ஆல்பர்ட்டோ கிரா னாடோ சனிக்கிழமை யன்று ஹவானாவில் மர ணம் அடைந்தார். அவ ருக்கு வயது 88.

1961 ம் ஆண்டு முதல் கியூபாவின் தலைநகர் ஹவா னாவில் வாழ்ந்த அவர் இயற்கை மரணமடைந்தார். இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் புரட்சியாளராக சே குவேரா உருவாவதற்கு கிரானாடோவும் சேயும் மேற்கொண்ட பயணம் மிகப் பெரும் காரணமாக அமைந்தது. அருதப் பழ சான மோட்டார் சைக்கி ளுக்கு, வலுவான என்ற அர்த்தம் கொண்ட லா போடரோசா என்ற ஸ்பா னிஷ் பெயர் சூட்டி, அதில் இருவரும் பயணித்தனர்.

1952 ம் ஆண்டில் மேற் கொள்ளப்பட்ட இப்பய ணத்தின் பதிவுகளை இரு வரும் குறித்து வைத்திருந் தனர். இவற்றைப் பயன் படுத்தி ‘தி மோட்டார் சைக்கிள் டயரீஸ்’ என்ற பெயரில் 2004ம் ஆண்டில் வெளியான திரைப்படம் சர்வதேசப் புகழ்பெற்றது.

அர்ஜென்டினாவின் கார்டோபா நகரில் 8.8. 1922ல் கிரானாடோ பிறந் தார். சே குவேராவும் கிரா னாடோவும் சிறுபிராயத் தோழர்களாகவும். மருத் துவக் கல்லூரி மாணவர் களாகவும் இருந்தனர். 1952ம் ஆண்டில் தென் அமெரிக்காவில் பயணம் செய்தனர். சிலி, கொலம் பியா, பெரு, வெனிசுலா உள்ளிட்ட நாடுகளில் வறுமை கோரத் தாண்ட வத்தை இருவரும் கண்ட னர். பெரு நாட்டில் தொழு நோயாளிகள் குடியிருப்பில் இருவரும் தங்கினர்.

வெனிசுலாவில் இரு வரும் பிரிந்தனர். தொழு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை யில் கிரானாடோ பணியில் அமர்ந்தார். பயணம் முடிந்த பின் சே மருத்துவப் படிப்பை முடித்தார். பிடல், ரால் காஸ்ட்ரோக்களுடன் இணைந்த சே குவேரா கியூபா புரட்சியில் பெரும் பங்கு வகித்தார்.

சே அழைப்பின் பேரில் 1960ல் கியூபாவைச் சுற்றிப் பார்த்த கிரானாடோ 1961ல் ஹவானா பல்கலைக்கழகத் தில் பயோ கெமிஸ்ட்ரி கற்பிக்கும் பணியில் ஈடுபட் டார். பெருமைமிகு தலைவ னோடு தனக்கிருந்த நட்பை பெரிதும் மதித்த அவர், அதனைப் பெரிதுப்படுத் திக் கொள்ளவில்லை.

தன்னுடைய உடல் எரிக்கப்பட்டு சாம்பலை கியூபா, அர்ஜென்டினா மற் றும் வெனிசுலா மீது தூவப் பட வேண்டுமென்று கிரா னாடோ தெரிவித்துள்ளார். அவர் எழுதிய ‘சேகுவேரா வுடன் ஒரு பயணம் - ஒரு புரட்சிக்காரனின் உருவாக் கம்’ என்ற நூல் உலகப் புகழ் பெற்ற வரலாற்று ஆவணங் களில் ஒன்றாகும்.

விறு விறுப்பான காட்சிகள் அரங்கேறும் கட்சிக் கூட்டணி.


நிஜமான சூதாட்டம் ஆரம்பமாகிறது. கடந்த பத்தாண்டுகளாக திரும்பமுடியாத சேற்றுக்குள் சிக்கிக்கொண்ட ஜனநாயகம் கைதேர்ந்த சூதாடிகளின் பிடியில் சிக்கிக்கொண்டது.ஜாதிக்கட்சிகளின் கொட்டம் அடங்கிப்போனது பாமக போன்றகட்சிகள்  தங்களின் சொந்த மண்ணிலே மண்ணைக்கவ்வியது என்கிற நோக்கர்களின் வாதமெல்லாம் தவிடுபொடியாக அடுத்த தலைமுறை ஜாதிக்கட்சிக்காரர் களம் இறங்குகிறார்.அவரைத்தொடர்ந்து எல்லா ஜாதிக்கட்சிகளும் அதே ஜாதியைச்சேர்ந்த அந்தக்கட்சியின் எதிரிகளும் களம் இறங்குகிறார்கள்.எல்லா ஊர்களிலும் ஜாதிகள் புது வடிவம் எடுக்கின்றன. ஆள்திரட்டுகின்றன, போஸ்டர் அடிக்கின்றன வாகனங்கள் அமர்த்தி எதாவதொரு காட்டுக்குள் கூட்டம் கூட்டி அவரவர்களுக்கு தனித்தனியே அரசியல் மாநாடுகள் நடத்துகின்றன. ஒரு சட்டமன்றத் தொகுதி கிடைத்தால் கூடப்போதும் அதை வைத்தும்,  அந்த மக்களை வைத்தும் பிழைப்பு நடத்திக்கொள்ளலாம் என்கிற சுத்தம் செய்யமுடியாத சந்தர்ப்பவாத சாக்கடைக்குள் அமிழ்ந்துவிட்டது அரசியல் தமிழகம்.

சட்டிசுடுகிறதே என்று சொல்லி, தப்பிக்க எவ்விக்குதித்து, எரிகிற அடுப்பில் விழுந்துகிடக்கிறது காங்கிரஸ்.இன்று இமயம் தொலைக்காட்சியில் இனமான காங்கிரஸ் தமிழர் உயர்திரு ஈவிகேஎஸ் பேட்டி நடந்தது. கடந்த காலத்தை ஒரே ஒரு வைரஸ் ஊடுருவச்செய்து கரப்ட் ஆக்கி தேடமுடியாதபடி ஆக்கி விட்டால்.அப்புறம் கேட்டால். அத்தணையும் புரட்சிக்கருத்துக்கள்.அவர் உலக அரசியல் பேசுகிறார். பொருளாதார மந்தம் குறித்தும் அது எந்தெந்த நாடுகளை சூறையாடியது என்றும் பட்டியல் தருகிறார்.கண்ணைமூடிக்கொண்டே கேட்டால் காரல் மார்க்சின் பேரன் பேசுவதுபோலத் தொணியிருக்கும். ஆளும் திமுக ஊழலின் உச்சத்தில் இருக்கிறதென்கிற  வாசகம் இந்த ஆண்டின் மிகச்சிறந்த நையாண்டி. இந்த நையாண்டியும் எவ்வளவு நாள், எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பதில் எந்த உறுதியும் கிடையாது.

ஏனெனில் அரசியலில் நிரந்த எதிரியும் கிடையாது. நிரந்தர நண்பனும் கிடையாது. இது  கலப்பு அரசியல்,கலப்பு பொருளாதாரம், மசாலாச் சினிமா போல இந்தியாவில் தயாரான தத்துவம். ஒழப்படித் தத்துவம். இங்கே அந்த மாதிரி ரொம்பக்கிடைக்கும். எம்ஜியார் அண்ணாயிசம் என்கிற ஒன்றைக் கண்டுபிடிக்கவில்லை ? அதே மாதிரித்தான். 1917 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குப் பின்னர் உலகமெல்லாம் புரட்சி நடந்துகொண்டிருந்தது. வறட்சி இருந்தால் புரட்சி வரும்,அடிமைத்தனம் இருந்தால் புரட்சி வரும், கொடும்கோலாட்சி இருந்தால் புரட்சி வரும். இவையெல்லாம் மாற்றத்திற்கான தட்பவெப்பநிலை. இந்த மூன்றும் அந்த 1920 களில் இல்லாமலா தேனும் பாலும் ஓடிக் கொண்டிருந்தது ?.

எத்தனை லட்சம் உயிர்கள் பறிபோனது.எத்தனை தலைவர்கள் நாடுகடத்தப்பட்டார்கள் எத்தனை தலைவர்கள் தூக்கிலிடப்பட்டார்கள், தண்ணீர் விட்டா வளர்த்தோம் கண்ணீரால் காத்தோம்.நடந்தது என்ன அதிகாரத்தை வெள்ளையனிடமிருந்து பிடுங்கி உள்ளூர் ஆதிக்க ஜாதிகளிடமும், பண்ணையார்களிடமும் ஒப்படைக்கத்தான் ஜனநாயகம் என்கிற அமைப்பு உருவானது. ஒரே வீட்டில் நாலு அண்ணன் தம்பிகள் இருந்தாம் நாலு பேருக்கும் ஆளுக்கு ஒரு சொத்து,ஆளுக்கு ஒரு வியாபாரம் ஆளுக்கு ஒரு கட்சி என்று ஜனநாயகத்தைப் பிரித்துக்கொண்டார்கள். நான் தலைவர் உயர்திரு ஈவிகேஎஸ்ஸைச் சொல்லவில்லை. இப்படி விநோதம் இங்கே தான் நடக்கும். நடக்கட்டும். வெள்ளையனை 300 ஆண்டுகள் பொறுத்துக்கொள்ளவில்லை ? அதுபோல கொள்ளையர்களை 64 ஆண்டுகாலம் பொறுத்துக்கொள்ளவில்லை. இன்னும் நாட்கள் இருக்கிறது.அதுவரை ஆட்காட்டி விரலைக் கழுவி வைத்துக்கொள்வோம்.

6.3.11

எம்ஜிஆரும், எங்க ஊர் நாரணசாமியும்


அவன் நல்ல உழைப்பாளி.எப்படின்னா ஒரு வண்டி பாரத்தையும் ஒத்தாளா ஏத்தி,கொச்சக்கயிறு போட்டு இறுக்கி பத்திக்கொண்டுவந்து வீடு சேத்துரு வான்.மாடு ஒழவுக்கு போயிருச்சின்னா அசரமாட்டான். ரெண்டு ரெண்டு கெட்டா கெட்டி தலச்சுமையாகவே கொண்டுவந்து இறக்கிவிடும் ஒன்மேன் ஆர்மி.உழவடிக்க,பாத்திகட்ட,தண்ணீ பாய்ச்ச, களையெடுக்க, உரம்போட, மருந்தடிக்க கதிரறுக்க எல்லாவேலைகளையும்  செய்யக்கற்றுக் கொண்ட மாஸ்டர்ஆப் ஆல் சப்ஜெக்ட்ஸ்.

ஒண்ணரக்குறுக்கம் மொளகாச் செடியில் எந்தச்செடியில் எத்தனை காய் தொங்குகிறதென்பதை கேட்டால் துல்லியமாகச் சொல்லிவிடும் மனுசக் கம்ப்யூட்டர்.ஒரு கரட்டாண்டி பிஞ்சைக்குள்ள நுழஞ்சாலும் கண்டுபிடிக்கிற மொப்ப சக்திபடைத்தவன். ஒரு விவசாயி அப்படி இருந்தால் தான் வளத்து அறுத்து வீடுகொண்டுவந்து சேக்கமுடியும்.அப்படிப்பட்டவன் தான் நாரணசாமி. அவனுக்குத் தேவையெல்லாம் ஒருசட்டிக்கஞ்சி.ஒரு டவுசரும் தலத்துண்டும், ஒருகட்டுப்பீடி போதும்.

இப்படி இருவத்திநாலு மணிநேரமும் தோட்டமே கதியிண்ணு கெடக்குற கருக்கான பிள்ளைக்கு ஒரே ஒரு கிறுக்கு இருந்திச்சு.அது எம்ஜிஆரு.அவர் கதை கேட்பதும் அவர் பாட்டுப் பாடுவதும்,அவரோடு சேர்ந்து கனவு காண் பதுவும்  தான் அவனது பொழுது போக்கு.அப்படி இருந்துவிட்டால் கூட பரவாயில்லை.ஒரு நாள் நெற பிஞ்சையில  ஆளுயர சோளநாத்துகுள்ள புகுந்து மேட்டுப்பட்டிகாரன் களவாண்டுகொண்டிருந்தான்.அரவம் கேட்ட நாரணசமி ஓடிப்போய் மக்காடச் சேத்துப் பிடிச்சிக்கிட்டான்.ஒரு வப்பு வச்சி அவன முகத்த திருப்பி பாத்தான்.அப்படியே அடிக்கிற சோலிய விட்டுப்பிட்டு ’என்னண்ணே நீங்களே இப்படிச்செய்யலாமா’ என்று கேட்டான்.வந்தவனுக்கு பேயடிச்சமாதிரி ஆகிப்போச்சு.அடிச்சு காலக் கையக் கட்டி ஊர்க் கூட்டத்துல நிக்க வச்சுருவானேன்னு பயந்தா அண்ணம்மொற கொண்டாடுறானேன்னு தெகச்சுப்போயிட்டான். வேற ஒண்ணும் இல்ல களவாங்க வந்தவன் எம்ஜிஆரு படம்போட்ட பனியன் போட்டிருந்தான். எம்ஜிஆரும் எம்ஜியாரச்சேந்த எல்லாரும் நல்லவங்களாம்.அவருதானே திருடாதே பாப்பா திருடாதேன்னு பாட்டுப்படிச்சாரு.

ஊர்ல பொன்னுச்சாமி பொன்னுச்சமி ன்னு ஒருகதைசொல்லி இருந்தான். அவன் சொல்லுகிற சினிமா கதைகள்,கைதேர்ந்த டைரக்டரின் கதைகளை விடவும் அழகாக இருக்கும்.  இருக்காதா பின்ன.அவனே எம்ஜியார் டயாலாக், சரோஜாதேவி டயாலாக்,நம்பியார் டயாலாக் பேசனும். பாட்டுகளை படிக்கணும்.  பின்னணி  இசையில்லாமல் சோகத்தைக் கொண்டு வரணும்.கடலைமிட்டாய்,முறுக்கு, பட்டர் பன் இல்லாமல் இடைவேளை வேற உடணும்.அந்தப் பொன்னுச்சாமிக்கு துட்டுத் தட்டுப்பாடு வந்தாப்போதும் நேரே நாரணசாமி பிஞ்சைக்கு வந்துவிடுவான்.ஒரு எம்ஜியார் படத்தை விறு விறுண்ணு சொல்லிவிட்டு  கொஞ்சம் செலவுக்கு துட்டுவாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவான்.

அந்தக்காலத்தில் வருசத்துக்கு ஒரு எம்ஜியார் படம் வரும். அதுவும் மெட்ராஸ் மதுரையெனப் பெரு நகரங்களில் ஓடி நஞ்சி போய் சாத்தூர் வந்துசேர ஒண்ணரை வருசமாகும். போன்னுச்சாமிக்கு துட்டுத் தேவையாயிருக்கும் போதெல்லாம் கதை சொல்லனும்ணா புது புது கதை சொல்லணும். அதனாலே முத்துராமன்,ஜெய்சங்கர் படத்தையெல்லாம் எம்ஜியார் சரோஜாதேவி பேரப்போட்டு ஓட்டிவிடுவான். ஏண்ணா நாரண சாமி மொத்தத்துல ரெண்டு படம்தான் பாத்துருக்கான் பெரிய இடத்துப் பெண்ணும் நீதிக்குப்பின் பாசமும்.அதனாலேயே எம்ஜிஆரும் சரோஜாதேவியும் நெஜமாவே புருசம்பொண்டாட்டி  என்கிற எண்ணம் புளியமரத்து வேர்போல அவனுக்கு உள்ளே எறங்கிருச்சு.கிராமங்கள் அப்போது அப்படித்தான் இருந்தது.
எம்ஜியார் சாவித்திரி,சிவாஜி பத்மினி,ஜெய்சங்கர் ஜெய்சித்ரா,டிஎம்மெஸ் சுசீலா  எல்லாம் நிஜஜோடிகள் என்கிற கற்பிதம்.

இந்த பொன்னுச்சாமி வேற ஊர்ல இல்ல. வேலவெட்டியில்லாம கஷ்டப்பட்டு வயித்தக்கழுவ வெளியூர் வேலைக்குப்போய்விட்டான்.போனவன் எப்பவாச்சும் ரெண்டு மாசத்துக்கொருதரம் வருவதும்,அவன் குடும்பத்தோடு காலம்கழிப்பது திரும்பிப்போவதுவுமாக இருந்தான்.நார்ணசாமிக்கு சினிமா வெறி தலைக்கேறிப்போனது.எம்ஜிஆர் படம் வந்துருச்சா வந்துருச்சா எனக்கேட்டுக்கொண்டலைந்தான்.ஒரு நாள் தனலெச்சுமித்தேட்டரில் எம்ஜிஆர் படம் என்று சொன்னதும்.சண்டை பிடிச்சி பிஞ்சையப்பாக்க ஆள் மாத்தி வுட்டுட்டு பகலாட்டம் பாக்கப்போனான். போயிட்டுவந்து ரெண்டு நாளா ஒரே பொலம்பல்.

'அவரே இப்படிச்செஞ்சா எப்பிடி' என்றான்.
'எப்பிடி' என்றார்கள்
'ஊராம்பொண்டாட்டியக் கையப்பிடிச்சி இழுக்கலாமா ?'

கேட்டவனுக்கு தூக்கிவாரிப்போட்டுவிட்டது.

’இதென்ன கூத்து இந்த வாரம் ஊர்ப் பஞ்சாயத்து தானா, யாரப்பா அது’
’அந்தாளுதா எம்ஜியாரு’
‘என்னா செஞ்சாரு, அவரு யாருகையப்பிடிச்சி இழுத்தாரு’
‘ஜெமினிக்கணேசம்பொண்டாட்டிய’.

புரிந்து விட்டது ஊர்ச்சனக்களுக்கு.
’அப்ப சர்த்தான் கூப்பிடுங்க எம்ஜியார, இந்த சனிக்கெழம ராத்திரி ஊர்க்கூட்டம்தான்’ என்றார்கள்.

நாரணசாமி வேட்டைக்காரன் படம் பார்த்துவிட்டு பாதியில் எழுந்து வந்தகதை இதுதான்.அதுக்குப்பிறகு எம்ஜியார் படம்பார்ப்பதையே விட்டுவிட்டான்.

4.3.11

வெள்ளந்திக்கதைகள். கொடைக்கான் வண்டியை மறித்த குத்துக்கல்.


அப்போது  கொடைக்கானல் ரோடுவேய்ஸ்,ஜெயவிலாஸ்,லயன் ஆகிய மூன்று  பேருந்துகள் தான் ஓடிக்கொண்டிருக்கும்.எனக்குத்தெரிந்து சாத்தூருக்கும் ஒத்தையாலுக்கும் இடையிலான கட்டணம் வெறும் பதினைந்து காசுகள்தான்.பேருந்தில் போய் வர சில நியதிகளும்,சில வசதிகளும் தேவைப்பட்ட காலம் அது.அதுவும் கொடுக்கமுடியாமல் நடந்துவந்த ஜனங்கள் தான் ஏராளம்.சாத்தூரிலிருந்து எல்லா ஊர்களுக்கும் குறுக்குப்பாதைகள் இருந்தன. அவை பாதசாரிகளுக்கானது.போகிற வழிகளில் ஆலமரம்,ஊருணி அல்லது கமலைத்தோட்டம் கட்டாயம் எதிர்ப்படும்.அங்குபோய் கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு முகம் கழுவிக்கொண்டு செத்த ஆசுவாசப் படுத்திக் கொண்டு நடையைக்கட்டுவார்கள்.

நடந்து போகையில் அலுப்புத்தெரியாமல் இருக்க பழமை பேசப்படும்.அல்லது சேதிகள் சொல்லப்படும். பயண காலமானதால் பெரும்பாலும் பேருந்துப் பயணங்கள் பற்றியே கதைகள் இருக்கும்.ஜெயவிலாஸ் பேருந்தில் மதுரை போய் திரும்பி வந்தார் பால்ராஸ் சின்னையா. அந்த ஒருநாள் கதையை கிட்டத்தட்ட ஒரு மாசம் சொல்லுவார்.அதில் நடத்துநரும்,ஓட்டுநரும் தான் பிரதானப்பாத்திரங்கள்.

ஜெயவிலாஸ் பேருந்தின் நடத்துநர் வேல்ச்சாமியைப்  பற்றியும் கொடைக்கானல் பேருந்தின் ஓட்டுனர் பற்றியும் தெரியாத சனங்கள் இருக்கவே முடியாது. கடைசி டயத்துக்கு ஊருக்குள் வரும் ஒவ்வொரு நடையைப்பற்றியும் ஒரு கதை இருக்கும்.கொடைக்கானல் வண்டியின் டைவர்ருக்கு அப்போதே அறுபது வயதுக்கு மேலிருக்கும்.அப்படித்தான் ஒருநாள் மேட்டுப்பட்டி தாண்டி வந்துகொண்டிருந்தது வண்டி சீரெங்கா புரத்துக்கும் மேட்டுப்பட்டிக்கும் நடுவில் நிறுத்தி விட்டார்.

அப்போதெல்லாம் இரண்டு ஊர்களுக்கு நடுவில் நிறுத்தி டிக்கெட்போட்டு இன்வாய்ஸ் எழுதி முடித்துவிட்டுத்தான் வண்டியெடுப்பார்கள்.அதற்காகத் தான்  நின்றுபோனதென்று சனம் நினைத்துக்கொண்டது.நல்ல ஓடைக்காடு கிய்யிருட்டு ஒதுங்கி ஒண்ணுக்கிருக்க தோதான காடு.அப்படித்தான் என்று கண்டக்டர் நினத்துக்கொண்டார்.வண்டி ஒரு அரைமணிநேரமாக நகல வில்லை. பத்துமணியானதால் பாதிப்பேர் தூங்கிப் போனார்கள். கண்டக்டரும் கூட கண்ணசந்துபோனார்.முழிச்சுப்பாத்தா வண்டி ஆணியடிச்சா மாதிரி அதே எடத்துல நிக்குது.டைவர் வட்டப்பிடிச்சமானிக்கு ஒக்கந்துருக்கார்.

’ பாழாப்போனவனே நீயுந்தூங்கிட்டியா’

 கத்தினார் கண்டக்டர்.

’வெங்காயம்,  நடுரோட்டுல ஆள் நிக்கான், ஆர்ணு கண்டா, களவானியா சாக வந்தவனா தெரியல. கையும் ஓடல காலும் ஓடல நீயி பாட்டுக்கு மயிரு போச்சினு கொறட்டவிட்டுட்டுருக்கெயே’

கருப்பையாண்ணன்.(டைவர் தான்)  கத்தினார்.

அந்தக்காலத்தில் சிப்பிபாறை கந்தசாமி என்கிற வாரண்டுக்கு தப்பியவர் காடுகளில் அலைவதாக கதைகள் இருந்தது.( மலையூர் மம்பட்டியார் போல இவருக்கும் ஒரு நாடோடிக்கதை உண்டு).இப்போது கண்டக்டர் பச்சைக் கனியண்ணனுக்கும் உதறலெடுத்தது.படாரென்று யோசனை வந்தது.நல்ல கட்டுமஸ்தான பயணிகளில் நாலுபேரைக்கூப்பிட்டு காதுக்குள் விஷயத்தைச் சொன்னார்.இறங்கி மக்காடச்சேத்துப்பிடிச்சி கையைக் காலைக் கட்டிப் போட்டுவிடுவதெனத் தீர்மானமானது. பூனை போல இறங்கினார்கள்.ஆள் அசையவில்லை.

கொஞ்சம் எட்டத்துல போனப்பிறகு கெக்கெபிக்கெவெனச் சிரித்துக்கொண்டு திரும்பி வந்தார்கள். சிரிப்புச்சத்தம் கேட்டு தூங்கியவர்கள் எழுந்தார்கள். சேதி கேட்டு அவர்களும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.காலையில மொத வேலையா ஒரு கண்ணாடி வாங்கிப்போடணும் என்றபடியே வண்டியை ஸ்டார்ட் பண்ணினார் கருப்பையா அண்ணாச்சி.ஊர் போகந்தட்டியும் குலுங்கி குலுங்கி நகர்ந்தது கொடைக்கான் வண்டி.

வேறொன்றும் இல்லை ஒரு பழய்ய மைல்கல் ஆளுயரத்துக்கு உண்டு.நீண்ட காலத்துக்குப் பிறகு அதுக்கு வெள்ளையடிச்சிருந்தான் ஹைவேய்ஸ்காரன்.

3.3.11

கேள்விகளை விதைக்கும் காடைக் குருவிகளின் தேடல்.


அருப்புக்கோட்டை தாண்டி திருச்சுழி வழியே பயணம்போனால் எங்கு பார்த்தாலும் வேலிக்கருவேல மரங்கள் அடர்ந்திருக்கும். விறகு வெட்டிச் சுமந்த லாரிகளும்,கரிமூட்டப் புகை மூக்குக்குள் கமறலும் எதிர்ப்படுகிற கோடை காலப்பயணம் அது.

எங்காவது  திட்டுத்திட்டாய் குண்டு  மிளகாய் விவசாயம் நடக்கும்.ஆங்காங்கே தட்டுப்படும் ஊர்களின் ஓட்டுவீடும் கூரை வீடுகளும் கூட வேலிக் கருவேல மரங்களுக்கு நடுவில்தான் ஒளிந்து கிடக்கும்.ஆறு பரிசல்,வயல்வெளி பசுமை எல்லாம் இல்லாத கிராமங்கள் அவை.

நீக்கமற நிறைந்திருக்கும் வெயிலும் நசநசப்புமாக ஒரு அமானுஷ்ய மௌனம்  வழிநெடுக நம்மோடு கூடவரும். குண்டுங் குழியுமான தார்ச்சாலை நீண்டு கொண்டே போகும். ஏகாந்தமாக நீண்டுகிடக்கும் சாலைகளின் நடுவில் விதம் விதமான பறவைகள் நடந்து இறைதேடும்.

வாகனத்துக்கு வழிவிட்டுப் பறந்து போகும் காடைகளும் குருவிகளும் நடுரோட்டில் உட்கார்ந்து எதைத் தேடும் என்கிற கேள்விகள் குடைச்சலைக் கொடுக்கும்.

உள்ளுர்ப் பயணிகளிடமிருந்து சிந்திய தானியங்களையா?.
உழைப்பவர்களிடமிருந்து சிந்திய வியர்வையையா?
வெளியூர்ப்பயணிகள் விட்டெறியும் காலிப்போடலங்களையா?

 இல்லை கனவுகளையா ?