30.9.10

சமச்சீர் பங்கீடு.

சாலமன், சாலமன் என்கிற மன்னன் ஒருவன் இருந்தானாம். பயங்கரமான நியாயக்காரன், நீதிதவறாதவன்.அவனது அரசவைக்கு ஒரு வழக்கு வந்ததாம். இரண்டு பெண்கள் ஒரு குழந்தைக்கு தாயுரிமைகேட்டு கொண்டு வந்த வழக்கு அது.நீதிமான்,பயங்கரமான நியாயக்காரன் குழந்தையை சமமாக பங்கிட்டு க்கொடுக்கச் சொன்னானாம். ஒருத்தி 'சரி அப்படியே ஆகட்டும் அரசே, இது நல்ல தீர்ப்பு' என்று அரசனைப் பாராட்டினாளாம்.

ஆப்பம்  பங்குவைக்கப்பட்டதும், யானைக்கும் பானைக்கும் சரி, நரி வடையை பறித்தகதை என பங்கீடு குறித்த நீதிக்கதைகள் நம்மிடம் ஏராளம் இருக்கிறது. அந்த வரிசையில் இன்னும் பல கதைகளை எதிர் சந்ததிகளுக்கு நாம் சொல்லிக் கொடுப்போம்

29.9.10

தீபாவளி,சிறார்கள்,எந்திரன் துப்பாக்கி.

ராமர் வில்லெடுப்பார் அம்பை நாணில் வைத்து இழுக்காமலே விடுவார் அது பறந்து போகும், பறந்து போகும் போய்க்கொண்டே இருக்கும்.நம்ம தமிழ்சினிமாவில் மாதிரி  தலைவாசலில் இருந்து கதாநாயகன் ஓடிவருவார்.அடுப்பங்களையிலிருந்து கதாநாயகி ஓடிவருவார். அது ஒரு அஞ்சு நிமிசம் ஓட்டம் இருக்கும்.அஞ்சஞ்சும் பத்து நிமிஷம் ஓடிக்கடக்கிற அளவில் வீடுகள் இந்தியாவில் எங்கிருக்கிறதென்று தெரியவில்லை. அதே போலத்தான் ராமரின் வில்லும் மதுரைக்கு ஜவுளி எடுக்க போகிற மாதிரி கிளம்பிப்போகும். அதுக்குள்ளாற அடுப்பில் உலை நத்த்து விட்டு கடைக்குப் போய் விட்டுவந்து விடலாம்.கிளம்பிப் போன அம்பு ஒன்று பத்தாகும். பத்து நூறாகும்.அது வேற கதை.அதோடு நில்லாமல் அம்பிலிருந்து தீ ஜுவாலைகள் கிளம்பும்.அந்தப் பக்கமிருந்து தண்ணீர் பீய்ச்சியடிக்கும்.சாத்தூரில் அப்போது தண்ணிப்பஞ்சம். ராமாயணம் பார்க்க வந்த ஒரு அம்மா 'இம்பூட்டு தண்ணியும் வீணாப்போகுதே'என்று ஆதங்கப்பட்டார்.'என்னதான் சண்டன்னாலும் இப்பிடிக் குடிக்கிற தண்னிய நாசமாக்குறது நல்லால்ல' என்றும் தீர்ப்புசொன்னார்.

ஆனால் குழந்தைகள் அப்படியில்லை.தொலைகாட்சிக்கு முன்னாடி கட்டிப்போட்ட மாதிரிக்கிடக்கும்.
ஒண்ணுக்குத் தண்ணிக்கு கூடப்போகாமல் வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருக்கும்.நம்ம குடும்பங்களுக்கு பிள்ளைகளை டியூஷனுக்கு அணுப்ப வேண்டும் அல்லது அவர்கள் சமத்தா இருக்கவேண்டும்.அப்படியில்லாமல் ஓயாம சண்டைபோட்டும்,எதாவது கேட்டு நச்சரிக்கும் குழந்தைகளைத் திசை திருப்ப ராமாயணம் போட மாட்டானா என்று ஏங்குவோம்.அந்த அளவுக்கு அது அவர்களை entertain பண்ணும்.அப்படியான காலச்சூழலில்தான் இந்த விளம்பரங்களும் சூடு பிடிக்க ஆரம்பித்தது.ராமாயணத்தில் இருக்கிற குழந்தைகளுக்கான ஈர்ப்பை சுவீகரித்துக்கொண்டு அப்படியே முன்னேறி விட்டன.அவ்வளவு fantacy நிறைத்து தருகிறார்கள்.

சோப்புக்கள் எல்லாம் பாதாம்,பிஸ்தா,ஏலக்காய்,முந்திரி எனப்பாயசம் தயாரிக்கிற பொருளில் தாயாராகிறதாம்.இன்னொரு சோப்பில் பப்பாளி,ஆரஞ்சு,ஆப்பிள் கலந்து பழரசத்துக்கான சேர்மானம் இருக்குமாம்.சாப்பிடுகிற பொருட்களெல்லாம் கேடு விளைவிக்கும் ரசாயணக் கலவைகளில் தயாரிக்கிற (ம_ராண்டிகள், மன்னிக்கவும்) பன்னாட்டுக் கம்பெனிகள் இப்படி நமது காதுகளில் டிஜிட்டல் பூச்சுற்று நடத்துவாகள்.அதை விட அதிசயம் என்னவென்றால்  வழுக்கைத் தலையில் முடி முளைக்குமாம். இப்படிச் சொல்லுகிற சொக்குப்பொடிகள்.இதை அங்கீகரிக்கிற மாதிரியும் ஆமோதிக்கிற மாதிரியும் விற்பனை அமோகமாக நடப்பதால் இன்னும் என்னென்ன சொல்லுவார்களோ என்று பயமாக இருக்கிறது.

அப்படியொரு அங்கீகாரம் தான் எந்திரன் படத்துக்கான ஒலிப்பேழை,முன்னோட்டக் காட்சிகள் வெளியீடும் அதற்கடுத்து தற்போது களேபரப்படுத்திக் கொண்டிருக்கும் முன்பதிவுத் திருவிழாவும்.கண்ணில் தட்டுப்படுகிற முன்னோட்டக்காட்சியில் ரஜினியின் இடுப்பைச்சுத்தி ஆயிரங்கண்ணுப்பானை போல கணக்கிலடங்காத ஏகே 47 துப்பாக்கிகள் துருத்துகிறது.எல்லாவற்றையும் இயக்கி குண்டு மழைபொழிவார் கணினியுக ராமர்.வில்லுக்கும் சரி துப்பாக்கிக்கும் சரி நியூட்டனின் விதி நிரூபணமாகவேண்டும்.பின்னோக்கி எவ்வளவு இழுக்கப்படுகிறதோ அவ்வளவு தூரம் முன்னேறிப்பயணிக்கும் விசை.ஒரு துப்பாக்கியை தமிழ்ச்சினிமாவில் காட்டுகிறதைப்போல சொகுசாய் கையாளமுடியுமா?. ராணுவ வீரர்கள் தான் சொல்லவேண்டும்.  தானியங்கித் துப்பாக்கிகளை இயக்க stand வேண்டும் அல்லது புஜங்களில் தாங்கிப்பிடிக்கவேண்டும்.அகஸ்துமகஸ்தாக இருந்தால் வெடிக்கிற போது கிளம்புகிற எதிர்விசை தோள் புஜத்தை கலக்கிவிடும் என்று ராணுவவீரர்கள் சொல்லக் கேட்கலாம்.

அதுவெல்லாம் கிடக்கட்டும் ஓரமாய்த்தூக்கி வைத்துவிடுவோம்.ஒரு கலிக்கிண்டுகிற துப்பாக்கி.அதாங்க குருவி சுடுகிற துப்பாக்கியைச் சொந்தமாக வைத்திருப்பதற்குக் கூட ஆறுமாசம்,ஒரு வருஷம் ஆர்டிஓ அலுவலகத்துக்கு நடையாய் நடக்க வேண்டும். ஆயிரம் காரணம் சொல்லி உரிமம் வாங்க வேண்டும்.வாங்குகிறவருக்கு சமூக அந்தஸ்து வேண்டும். பண்ணையார், பெருமுதலாளி,அமைச்சர் போன்ற அந்தஸ்து.அதையும் மீறி வைத்திருந்தால் அதைக்கள்ளப் பணத்தோடு பதுக்கித்தான் வைத்திருக்கமுடியும்.போலீஸ் கண்டு பிடித்துவிட்டால் கதி அதோகதிதான்.இதை எந்த சினிமாவாவது சொல்லியிருக்கா?.இங்கே தான் அப்படிக் கிடையவே கிடையாது.மக்களை சிந்திக்க வைக்கிற அறிவை உயர்த்துகிற எந்தக் காரியத்தையும் செய்யப் போவதில்லை என்று சத்தியம் பண்ணுகிற வைபவம்தான்,(பெரிய பதாகைத்) தமிழ்சினிமாக்களுக்குப் பூஜைபோடுகிற வைபவம்.

விளையாட்டுத் துப்பாக்கி வாங்குவதற்கும் அதைப் பயன்படுத்துவதற்கும் மட்டும்தான் இங்கு யாரிடமும் அனுமதி வாங்கத் தேவையில்லை.தீபாவளி வருகிறது கொஞ்சம் சகாயமாகவும் கிடைக்கும்.அப்படி துப்பாக்கிகள் வைத்திருக்கிற ரஜினியை சிறுவர்களுக்கு ரொம்பப்பிடிக்கும்.நிஜத்தில் மனிதர்களின் ஆழ்மனத்தில் அற்புதங்களுகான ஏக்கம் தூங்கிக்கொண்டே இருக்கும்.அதைக் காசாக்குகிற வித்தைதான் ஒரு அடியில் பத்து, இல்லை இல்லை நூறு பேரை அடித்துப்பறக்க விடும் டெக்னிகல் தரம் உயர்த்தப்பட்ட சினிமா.நிச்சயம் அவர்களுக்கான பொழுதுபோக்கு 200 சதவீதம் அடைத்து வைக்கப்பட்டிருக்கிற படச்சுருள்களின் வரிசையில் எந்திரனும் சேரலாம். சிறுவர்களுக்குத்தானென்றாலும் டாம் அண்ட் ஜெர்ரி,ஹாரிபாட்டர் போன்றவற்றை நாமும் பார்ப்பதில்லை ?.

28.9.10

ஆகாசத்துப் பறவைகளுக்கும் கூடுகளுண்டு.

மழைக்காலப் பேருந்துப் பயணத்தின்
மணித்துளிகளைப்போல கதகதப்பும் குளிரும்.
மேற்கூரையினின்றும் பிதுங்கி விழுந்த
மழைத்துளியின் ஒரு சொட்டுப்போல
சிலிர்ப்பும் அசூயையுமானது வாழ்வு.

பயந்தோடித்திரும்பிவரும்வேப்பமரக் கரிச்சானின்
கத்தலும் கூடலும் காணக்கேட்க இதமளிக்கும்
சட்டைமேல் விழுந்த எச்சத்தை புறந்தள்ளி.
பகல் முழுக்க இறைந்த வயிற்றின் முன்னிரவு
பருக்கைகள் போல நீள்கிறது வாஞ்சையின் கை.

தகர இரைச்சலிலும் வந்து விழுகிற இசைபோல
நகரப் புழுதிக்குள்ளிருந்தும் நாசி நுழைகிற பூவாசம்போல
அவரவர்க்கான ஆசுவசமும் அலாதி இடம் சேர்கிறது
வாழ்ந்துகெட்ட ஆல்பர்ட்டும் வளர்ப்புப் பிராணியும் போல.

26.9.10

சிறியதன் ஆவி சிறிது.

இப்படித்தான் இவனுகள்ளாம் நல்ல நேரம் பாத்துக் கழுத்தறுப்பானுக.
ஞாயிற்றுக் கிழமை காலையில் மாடன் வராத கோபத்தில் அலுத்துக்கொண்டார் எஞ்சினியரின் மனைவி.

இப்படித்தான் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடிகாலையிலேயே ஒட்டைச் சைக்கிளில் வந்துவிடுவார்.
காத்திருந்த நாட்டுக் கோழியை கழுத்துத் திருகுவார்,மயிர் பறிப்பார் பிரதேசம் முழுக்க ரெக்கை பறக்கும்.
சுள்ளிகள் எடுத்து சூட்டாம் போடுவார் மஞ்சள் தடவித் துண்டம் போடுவார்.செத்த நேரத்தில் பிரதேசம் முழுக்க கோழி மணக்கும்.

வாருகால் சுத்தப் படுத்த வாட்டர் டேங்கை கழுவிவிட,தேங்காய் பிடுங்க தென்னம்பாளை சீவி விட
சேர்த்து வைத்துக் காத்திருந்த வேலையெல்லாம்,வீட்டைச்சுற்றிச் சுற்றிச் சுத்தமாகும்.ஒரு சொம்புத்தண்ணியை
வாங்கி மடக்கு மடக்கென்று குடிப்பார்.சட்டையை உதறும்போது கோழிச் சிறகுகள் பறக்கும்.சைக்கிளைத்திருப்பி புறப்படுகையில் பிள்ளைகளின் கோரிக்கையும்,பெண்டாட்டியின் கோபமும் மிதக்கும்.

இப்படித்தான் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் வந்து போனார் கொஞ்ச வருஷத்துக்கு முன்னாள் வேலு.இப்போது மாடன்.

இன்னைக்கும் கூட எல்லாம் காத்துக்கிடந்தது.எரிச்சலோடு கேட்டாள் மாடன் வீடு எங்கேயென்று.அப்போதும்கூட தோணவில்லை எல்லோருக்கும் ஒரே ஞாயிறு என்றும்.அவருக்கும் கூட கறித்திங்க எச்சூருமென்றும்.

25.9.10

பிறழ் சமன்.

திடீரென்று எங்காவது எதிர்ப்படுவாள்.
கையில் வைத்திருக்கும் சாப்பட்டு இலை
ஒழுகும் வேளை ரெண்டு தரம் புழுங்கும் மனசு.

பூவிருக்கும்,பொட்டிருக்கும்,பவுடர் கூட
சில நேரம் சுடிதார், பல நேரம் சேலை
இருந்தும், அலங்கோலம் தரித்து நடப்பாள்.

விடியாத வேலையில், மூடிய கடைவாசலில்
துணி ஒதுங்க சுருண்டுகிடப்பாள், வாசத்தெளிக்கும்
முனியம்மா மூஞ்சில் தெளித்து எழுப்பி வைப்பாள்.

வெடிச்சிரிப்பும் வேடிக்கைப்பேச்சும்
நல்ல பாடல்களும் கெட்டவார்த்தைகளும்
சேர்த்துக்கட்டிய மூட்டை கையிலிருக்கும்.

எதிர்ப்படும் எல்லோரையும் ரகரகமாய் உறவாக்குவாள்
டிரைவர் மாமா,போலீஸ் அண்ணே,பூட்டுக்காரத் தாத்தா
எரிச்சல் படும் மக்களுக்கு ஒரே உறவு லூசுக்கழுத தான்.

பள்ளிக்கூடப் பொட்டலில் ஊர் கூடியிருந்தது கலை இரவு.
பாடினார்கள்,பேசினார்,விகடம்,நடனம் என ஊர் லயித்தது
இடைவேளைகளின் வெற்றிடத்தை வெடிச்சிரிப்பில் நிரப்பினாள்.

24.9.10

கனியிருப்பக் காய்கவரும் சாகசம்.

ஜன்னல் வழிப் பார்க்கும் போது மாதுளை மரத்திலிருந்த அணில்களும்,குருவிகளும் வெருண்டோடியது. இயல்பாக ஓடிவிளையாடு வதற்கும் பயந்து ஓடுவதற்குமுள்ள வித்தியாசம்.  அசாதாரணம்.

ஒரு கலவர நாளில். சாத்தூர் நகரின் கடைகள் அணைத்தும் பத்து நிமிட நேரத்துக்குள் மூடியதும்,மனிதர்கள் அங்கும் இங்குமாய் சிதறியதுமான காட்சியைப் பார்க்க நேர்ந்ததோடு ஒப்பிடலாம். ஏழை, ஜாதி,மத பேதமிலாது எல்லோர் கண்ணிலும் பயம் தெரிந்த நேரம் அது.எல்லோரும் வீடு நோக்கி ஓடிய கூட்டத்துக்குள் ஒன்றிரண்டு  காக்கிச்சட்டைகளும் இருந்தது.

இப்படி அணில்,குருவிகள் கலைந்தோடுவது பாம்புகளின் வருகையை முன்னறிவிக்கும்.இன்னும் கூர்மையாய் கவனித்தபோது அப்படியேதும் இல்லை.சுற்றுச்சுவருக்குப் பின்னாலிருந்து அஞ்சு விரல்கள் மெல்ல ஊர்ந்து வந்தது.

கலவரம் போய் சுவாரஸ்யம் தொற்றிக்கொண்டது.கைகள் ஊர்ந்த திசையில் இரண்டு மாதுளம் காய்கள் தொங்கிக்கொண்டிருந்தது.பின் வாசல்வழியே மாடிப்படிக்குப்போய் கவனிக்கக்கிடைத்த அனுபவம் அலாதியானது.
சுவரோடு ஒட்டியிருந்த இரண்டு உருவம் காய்களைப் பறித்துக்கொண்டு நழுவியது. ஏதும் நடக்காததுபோல முகத்தை வைத்துக் கொண்டதாய்  நினைத்துக் கொண்டு சில தப்படிகள் கடந்தது.தெருக்கோடி போனதும் ஒரே ஆரவாரம், கூச்சல் ரெண்டு சிறுவர்களும் நிலவுக்குபோய் வந்த சாகசக்காரர்களானார்கள்.

மறு நிமிசமே அணில்களும் குருவிகளும் திரும்பிவந்தன. மறுநாள் மரத்தைப் பார்த்த வீட்டுக்காரி வருந்தினாள். மரம் சிரித்தது.

23.9.10

சங்கிலித்தொடர் நினைவுகள்.

' ரெண்டுதரவெ போட்டேன் பிஸி பிஸின்னே வருது '
......

' என்ன பிள்ளைக ஒரு போன் பண்ணத் தேரமில்லாம என்னதான் படிப்போ'

வெங்காயம் உறிக்கும் போதும், வீடு கூட்டும் போதும் அங்களாய்த்தவாறே பொழுதுகடத்தும் தாய்க்காரி.இனிப்புக்கடையில், எதேச்சையாய்,மிக்சர் வாங்கப்போன போது கூட பால்கோவவைப் பார்த்ததும் நிழலடுகிறது பிள்ளை முகம்.விளம்பரத்தில் வரும் இளைஞனைப் பார்த்ததும் இதே கலரில் அவனுக்கொரு சட்டை எடுக்கவேணும் என்று குறிப்பெழுதிக்கொள்கிறாள்.

இதே தவிப்பு அங்கும் இருக்குமா ?.பெரு நகர வீதியில் எதிர்ப்படும் தாய்மார்களின் நடையில்,விடுதித்தேநீரில் இல்லாத சுவையில், அழுக்குத் துணியைத் துவைக்கிற பொழுதில் நிழலாடுமா தாயின் முகம்?.

இந்தக் கேள்விகளைத் தகப்பன் கேட்டான் தாயிடம்.

அவளும் ஒரு எதிர்க் கேள்வி வைத்திருந்தாள், பேருந்தில் பணியிடத்தில்  எதிர்ப்படும், மூதாட்டிகளை சேவிக்கிற கரிசனம் எதற்காகவென.

ஞாயிற்றுக் கிழமை காலையிலே கிளம்பிப் போனார்கள் ஊருக்கு.பேருந்துப் பயணத்தின் பாதியில் கனமழை கொட்டியது.ஓட்டுனர் அழைத்து எஞ்சினுக்கு அருகில் உட்காரச்சொன்னார்.குளிருக்கு இதமாக இருந்தது.ஓட்டுனரிடம் கொஞ்சம் அம்மாவின் சாயல் தெரிந்தது.அது கதகதப்பில உபசரிப்பிலா என்று பிரித்துப்பார்க்க முடியவில்லை அவனுக்கு. கைப்பையில் கனத்தது அம்மாவின் நினைவுகளும் அவள் பல்லுக்கு  இதமாக மெள்ள கொஞ்சம் இனிப்புகளும்.

இண்டு இடுக்கிலிருந்து கூடப் பூக்கும் உறவுகளின் நினைவுகள்.
எங்கு தோண்டினாலும் கூடத் தட்டுப்படும் ஈரம்.

21.9.10

காஷ்மீர். பனியில் எறியும் அணையாத தீ .

இந்தியாவின் நீளத்தைக் குறிக்கும், அளக்கும் வடக்கு முனை.அப்புறம் ஆப்பிள் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் மாநிலம்.பனிமலைகள், எம்ஜியார் இதயவீனையில் ஒண்டர்புல்,ப்யூட்டிபுல்  என்று குதித்து ஓடிக்காட்டிய பசேல் பிரதேசம் இப்படியான குளிச்சியான அல்லது இதமான நினைவுகளைத்தந்து கொண்டிருந்த மாநிலம். தீராத துப்பாக்கிச்சத்தங்களோடே செய்தியாக வந்து கொண்டிருக்கிறது.ஒரு நடுத்தரவயசுக்காரன் நினைக்கலாம் இது எண்பதுகளில் ஆரம்பித்த பிரச்சினை என்று.ஆனால்  இந்த தேசத்தின் விடுதலைக்கான தேதி குறிக்கப்பட்ட நாளில் இருந்து பிரச்சினையோடே தொடர்கிறதுதான் கஷ்மீரின் நிஜ வரலாறு.

இந்தியா சுதந்திரமடைந்த போது ஜம்முகாஷ்மீர் ஒரு மன்னராட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தது.மன்னன் ஹரிசிங் என்ன காரணத்தினால் ஆண்டு அனுபவிக்க அனுமதிக்கப்பட்டான் எனத்தெரியவில்லை.ஆமாம் ஜம்மு காஷ்மீர் பகுதி இந்தியாவோடு இணைக்கபடவில்லை.இங்கிருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தானும் பிரிவினையின் பேரில் பெருக்கெடுத்தோடிய ரத்தம்.ரெண்டு பக்கத்துப் பெண்டுகளுக்கும் நேர்ந்த சொல்லமுடியாத மானபங்கம். ஒரு பெரும் வரலாற்று சோகம்.பரஸ்பரம் இரண்டு பக்கத்திலும் நடந்த உயிர்ச்சேதம் ஒரு உலகப்போரை மிஞ்சும்.

பிரிந்துபோன கையோடு அங்கிருந்த சிறுபாண்மை மக்கள் விரட்டப்பட்டார்கள்.பின்னர் அது ஒரு முஸ்லீம் மத அடிப்படை நாடானது.கைக்கெட்டும் தூரத்தில் அனாமத்தாக விரிந்துகிடந்த இயற்கை வளமும், வற்றாத நதிகளும் தகதக்கும் ஏரிகளும் நிறைந்து கிடக்கும் ஒரு பிரதேசத்தை அபகரிக்க யாருக்குத்தான் ஆசை வராது.ஆசை வந்த சீனாவும்,பாகிஸ்தானும் 20 மற்றும் 37 விழுக்காடு காஷ்மீரை கையகப்படுத்திக் கொண்டன.மீதியிருந்த 43 சதமான காஷ்மீரை ஹரிசிங் அனுபவித்து வந்தான்.சுதந்திரத்துக்கு முன்னமும் கூட அது இந்துக்களால் ஆளப்பட்ட முஸ்லீம் பகுதியாகும்.அப்போதும் கூட நேரு தலைமையிலான அரசு அது பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால் பாகிஸ்தான் அதிபர் ஜின்னாவின் ஆசைப்படி அந்தப்பகுதியிலுள்ள மலைஜாதி மக்களும் பாகிஸ்தான் துருப்புக்ககளும் இணைந்து மிச்சக்காஷ்மீரை பிடிக்க நுழைந்தனர்.

தொடர்ந்து சண்டையால்  மன்னரிடமிருந்து காஷ்மீரை முழுவதும் பிடுங்க முயற்சி செய்தனர். நொந்துபோன ஹரிசிங் அப்போது நேருவிடம் ராணுவ உதவி கோரினார்.அப்போது இந்தியாவின் வியாபாரத்தை இழந்து பர்மாவில் முகாமிட்டிருந்த பிரிட்டிஷ் அரசின் பிரதிநிதி மவுண்ட் பேட்டன் ஆலோசனையின்பேரில்  காஷ்மீர் இந்தியாவோடு இணைய வலியுறுத்தப்பட்டது. மகாராசன் வேறுவழியில்லாமல் தான் ஆண்ட பகுதிகளை 26.10.1947 அன்று இந்தியாவுக்கு கைமாற்றினான். அப்போதும் கூட துள்ளியமான எல்லைகளை வறையறுக்காமல் விட்டு விட்டார் நவ இந்தியச் சிற்பி பண்டிட் ஜவஹர்லால் நேரு.

இணைக்கப்பட்ட காஷ்மீர் ஒரு secular அரசின் மாநிலமாக இருந்தது.காஷ்மீர் பகுதிகளுக்கென்று சிறப்புச்சட்டம் கொண்டு வரப்பட்டது.ஆனாலும் பாகிஸ்தான் ஆக்ரமித்த பகுதியும் இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியிலுள்ள முஸ்லீம் ஜனத்தொகையும் சேர்ந்து ஒரு மிகப்பெரிய முஸ்லீம் பிரதேசமாக மாறியது.1947 ல் இருந்தே அவர்களின் கனவெல்லாம் பகிஸ்தானோடு இணவதாகவே இருந்தது.எனவே மொழி,கலாச்சராம்,இனம் இவைகளின் அடிப்படையில் தாங்கள் பாகிஸ்தானுடனேயே இணைய விரும்புவதாக காஷ்மீர் மக்கள் தொடர்ந்து விண்ணப்பித்து வந்தார்கள். காஷ்மீர் முஸ்லீம்கள் எங்களோடு இருப்பதற்கே நாங்கள் ஆசைப்படுகிறோம் ஆனால் அவர்களின் விருப்பத்தை எதிர்க்கவும் மாட்டோ ம் என்னும் மழுப்பல் அறிக்கை விட்டார் நேரு.

பிரிட்டிஷ் காலத்திலிருந்தே உருவான இந்து முஸ்லீம் பிரிவினை.எண்பதுகளில் உருவான jklf இயக்கம்,ஆப்கன் தாலிபான்களின் ஆதிக்கம்,இந்தியவில் உருவான ராமஜன்ம பூமி விவகாரம் அதைத்தொடர்ந்து இடிக்கப்பட்ட
பபாபர் மசூதி என நிலைமை மேலும் மேலும் விரிசலடைந்து கொண்டே போனதேயொழிய ஒரு நிரந்தரத் தீர்வு
எட்டப்படவே இல்லை.காஷ்மிர் எல்லையில் 100000 ராணுவவீரர்களும்,100000 எல்லைக்காவல் படையினரும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு வருடத்திற்கு 300 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களைப் பலியிடுகிறது.பனிப்பிரதேசத்தில் எல்லைக்காவலில் நிற்கும் ராணவ வீரனின் சம்பளம், சமதளத்தில் இருக்கும் வீரனை விட இரண்டு மடங்கு அதிகம்.அவர்களுக்கென உருவாக்கப்படும் ஆடை,உணவு,போக்குவரத்து ஆகியவை அம்பானி,அமிதாப்,மல்லையா,smகிருஷ்ணா,லட்சுமி மிட்டல் போன்றவர்களின் தரத்துக்கு இணையானது.அதற்காக இதுவரை ஆன செலவு  100000 கோடி என்று புள்ளிவிபரம் சொல்லுகிறது.

அந்தப்பணத்தில் சீனப்பெருஞ்சுவர் போலொரு அதிசயத்தை நிர்மானித்திருக்க முடியும்.வடக்கிலிருந்து தெற்காக ஒரு செயற்கை ஆறு உருவாக்கியிருக்க முடியும்.பெருகிவரும் லஞ்சத்தை தடுக்க உருப்படியாய் எதாவது செய்திருக்க முடியும்.வேலையின்மை,பசிக்கொடுமை,பட்டினிச்சாவு இவற்றையெல்லாம் மட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனாலும் நமக்கு வீம்புதான் முக்கியம். அப்படி இருந்தும் கிட்டத்தட்ட 10,15 கிலோமீட்டர் பகுதிக்குள் ஊடுறுவிய
பாகிஸ்தான் துருப்புக்களை தடுக்க முடிந்ததா?. பெரும் எண்ணிக்கையில் வீரர்களை இழந்த கார்கில் யுத்தம் நடந்ததுதான் மிச்சம்.இவை எல்லாம் எதற்காக பொலித்தகராறுக்காக மட்டுமே.கூடப்பிறந்த கிச்சா நாயக்கரும்,
கிட்ண நாயக்கரும் பத்துவருடம் கோர்ட்டுக்கு அலைந்து, வீம்புக்காக வீடுவாசல் இழந்து,நிம்மதியிழந்த கதைபோலத்தான் இந்தப்பொலித்தகராறு கதை.ஆனால் இது கொஞ்சம் பெரிய பொலி.

சர்வதேச அரசியல் மற்றும் வரலாற்று நோக்கர்கள் இது எப்போதோ முடிந்திருக்கவேண்டிய பிரச்சினை என்பதில் திடமாக இருக்கிறார்கள்.இந்தப்பிரச்சினையில் இரண்டு யுத்தங்கள் நடைபெற்றிருக்கிறது.1989 க்குப்பிறகு நிரந்தரமான பதட்டம் அங்கே குடிகொண்டிருக்கிறது.கட்டப் பஞ்சாயத்து நாட்டாமை ஐக்கிய நாடுகள் சபையும் ஒரு தீர்க்கமான முடிவைச்சொல்லாமல் தீயை அணைக்காமல் குளிர் காய்கிறது.அமெரிக்காவின் கைப்பாவையாக இருக்கும் ஐநா சபை தலையிட்டு இதுவரை ஒரு குழாயடிச்சண்டை கூட தீர்த்துவைக்கபடவில்லை.அப்படிச் சண்டையில்லாத பகுதியில் அமெரிக்காவே குசும்பு இழுத்து சண்டைபோடும்.இது வரை 120 மேற்பட்ட படையெடுப்புகளை நிகழ்த்திய போர்வெறி அமெரிக்க அரசின் ரத்தில் ஓடுகிறது.அதை விரல் நீட்டி குற்றம் சொல்லமுடியாத முதுகெலும்பில்லாத அரசுகளில் ஒன்றாக நீடிக்கிறது இந்தியா.

நமக்கு எல்லாமே அமெரிக்காதானே?. அதே பாணி அனுகுமுறைதான்.ஒரு பகுதியில் பதட்டம் உருவாவதற்கான எல்லாச்சூழலையும் உருவாக்கி விட்டு,பதட்டம் வந்த பின் தீவிரவாதப் பகுதியாக அறிவிப்பது.அப்புறம் ராணுவத்தையும் சண்டையையும் கொண்டாடுகிற அமெரிக்க மனோபவம் சன்னஞ்சன்னமாய் ரத்ததில் ஊறிவிட்டது.கேள்விகளற்ற மூடப்பற்றும்,சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட திருவுருவாக்கலும் ராணுவத்தின் மீது செயற்கையாய் வரையப்படுகிற மாயை அவர்களைப்போலவே. ரெட்டைக் கோபுரத்தை தகர்த்த போது அமெரிக்காவை விட இந்தியா தான் பெரும் குலுங்கு குலுங்கியது.அமெரிக்காவின் சோகம் நமது சோகம்.அதன்பிறகு எடுக்கிற சினிமா,பேசுகிற சகஜ வார்த்தைகளில் ஓசாமாபின் லேடன் எதிரியாக்கப்பட்டுவிட்டான்.அமெரிக்காவுக்கு எதிரி நமக்கு எதிரி.

பனையிலிருந்து விழுந்த அப்பனுக்கு எலும்பு கூடிவர வீட்டில் ஆட்டுக்கால் சூப்பு செஞ்சாளாம் அம்மெக்காரி.
அதை எடுத்துட்டுவந்து சேக்காளிகிட்ட பெருமை பீத்தினானாம். சேக்காளி சொன்னானாம் 'எங்கப்பனுக்கும் ஒரு நா பனையிலிருந்து உழுந்து கால் ஒடிஞ்சு போகும், அப்போ நானும் குடிப்பெண்டா ஆட்டுக்கால் சூப்பு'
என்று .அதே தான் நமக்கும். அங்கே 9/11 இங்கே 26/11.தீவிரவாதத்துக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் இப்போது அமெரிக்காவின் பிரிக்கமுடியாத கூட்டாக இந்தியா.கடந்த பத்துவருடங்களாக வந்த தலைப்புச் செய்திகளை கவனித்தால் ஒன்று புரியும்.இந்த ஊடகங்கள் ஒரு திருவிழாவையும் நிம்மதியாகக் கொண்டாட விடவில்லை.
சுதந்திர தினம்,குடியரசு தினம்,தீபாவளி,விநாயகர் சதுர்த்தி,காமன்வெல்த் போட்டி எல்லாவற்றிற்கும் முன்னாடி
தீவிரவாதிகளின் ஊடுறுவல் என்கிற செய்தி வந்தே தீரும். ஒரு திட்டமிட்ட வெறுப்பை குடிமக்களின் ஆழ்மனதில்
கொண்டுபோய் வைத்துவிட்டு அதை அப்போதைக்கப்போது நினைவுபடுத்துகிற இழிவான தந்திரம் இது.

ஆதலால்தான் அந்தப்பகுதி மக்களின் உயிர்,உடமைகள்,மானம்,கற்பு,நிம்மதி எல்லாமே நமக்கு இழிவானதகத்தெரிகிறது.காஷ்மீர் தீவிரவாதப்பகுதியாக அறிவிக்கப்பட்டதிலிருந்து தினம் தினம் பிடித்துக்கொண்டு போகப்படு
அப்பாவி பொது ஆண்கள் திரும்புவதே இல்லை.காணாமல் போன ஜனத்தொகை லட்சத்தை நெருங்குகிறது.
அவர்கள் விட்டுச்சென்ற வீடு,மனைவி,மக்கள், கனவு எல்லாம் சின்னாபின்னமாகித் தெருவில் அலைகிறது.
அப்படி அலைகிற பெண்கள் தாங்கள் விதவையா சுமங்கலியா என்ற குழப்பத்திலேயே ஒவ்வொரு இரவையும்
கடத்துகிறார்கள்.திடீரென்று ராணுவ முகாமிலிருந்து ஒரு அழைப்பு வரும்.'இங்கே ஒருவவர் இருக்கிறார், உடனே வந்து அது உங்கள் கணவரா என்று பாருங்கள்' என்கிற தெய்வ வார்த்தையோடு. கட்டாயம் அது எல்லாமே இரவு நேரங்களாக அமைந்துவிடும்.சிங்கத்தின் குகைக்குள் நுழைந்து திரும்புமா மான்குட்டி.திரும்புகிற பெண்களிடம் என்ன கதை இருக்கும் ?.இப்படிச் சொல்லமுடியாத கதைகளோடு இரண்டு லட்சம் பெண்கள்  ஒரு அமைப்பாகிவிட்டார்கள்.( the waiting,afspa 1958 ஆவணப்படங்கள் )

அது தவிர்க்க முடியாத எதிர் விதியல்லவா ?.

குஞ்சுகளைக் களவாட வரும் பருந்தை
எதிர்த்து பிடறி சிலிர்க்கும் கோழிகள்.
தாக்குண்டால் புளுக்கள் கூடத்
தரைவிட்டுத் துள்ளி விழும்.

அப்படி நியூட்டனின் விதியையும், இந்தக் கவிதையும் புறந்தள்ளிவிட முடியாது.
எனக்கானலும், எனக்குப்பிடிக்காத ஒருவனுக்கானாலும் வலி வலிதான்.
அதைத் தீர்க்கிற மருந்து ,கட்டாயம் துப்பாக்கிகளில் இல்லை.


ஒரு இந்தியனிடம் கேட்டால்
காஷ்மீர் எனக்குசொந்தம் என்பான்
ஒரு பாகிஸ்தானியும் கூட அப்படியே சொல்வான்
ஒரு கஷ்மீரியிடம் கேட்டால் விடுதலை கேட்பான்
அந்தப் பனிப்பிரதேசத்திடம் கேளுங்கள்
அந்த மனிதாபிமனியிடம் கேளுங்கள். 

19.9.10

வலையுலகில் நுழையும் சிட்டுக்குருவி.

கரிசல்காட்டிலிருந்து  இன்னொரு வலைப்பதிவர்.
ஒரு இரண்டு ஆண்டுகள் வலைத்தளங்களைக்
கேலி செய்தபடி அதன் மீது ஒரு கண் வைத்திருந்த
தோழர் விமலன்

இன்றுமுதல் வலைத்தளத்திற்குள் காலடி
பதிக்கிறார். காக்காச்சோறு, தட்டாமாலை ஆகிய
தொகுப்புக்களின் ஆசிரியர்.தமுஎகச வின் விருதுநகர்
கிளைநிர்வாகி,தொழிற்சங்கவாதி இப்படி பன்முக
அடையாளம் கொண்ட தன்னை முன் நிறுத்த
ஆசைப்படாத குணாம்சம் கொண்ட தோழர்.
இதோ தனது கவிதையோடு வலையுலகில்
களம் இறங்குகிறார்.

வரவேற்போம்
சிட்டுக்குருவி தளத்தில்
தோழர் விமலனை.

18.9.10

தவறாகப் புரியப்படும் புரட்சியின் அர்த்தம்.

ஒரு காலத்தில் ஊட்டி,கொடைக்கானல் சென்னை என்று மினுக்கிக் கொண்டிருந்த இந்த ஆங்கிலப்பள்ளிகள் மளமளவென்று பட்டிதொட்டிகள் வரை விஸ்வ ரூபமெடுத்தது. அதற்குக் காரணம் போட்டி என்று சொல்லப் பட்டது. இருந்தாலும் தனது குழந்தை சீருடை அணிந்து , ஷூ மாட்டிக் கொண்டு , டைகட்டிக்கொண்டு போகிற அழகை கண்டு உள்ளூரப் பெருமிதம் கொள்ளும் பெற்றோரின் கனவும் சேர்ந்திருந்தது. பெருமுதலாளிகளின் குழந்தைகள், நடிகர்களின் குழந்தைகள்,மந்திரிகளின் குழந்தைகள் மட்டுமே அங்கு நுழையமுடியும் என்றிருந்த மேட்டிமை இருந்தது ஒருகாலத்தில்.அதை நீர்த்து போக வைத்து நடுச்சூரங்குடி கிராமத்து விவசாயியின் மகனும் நுழையலாம் என்று கதவும் திறந்துவிட்டது சந்தைப்படுத்தும் நடவடிக்கை.ஒருகாலத்தில் நடுத்தர வர்க்கத்தின் சொத்தாக இருந்த தொலைக்காட்சி இன்று இலவசமாக வீடுதோறும் வந்து உட்கார்ந்ததைப் போல, நினைத்துப் பார்க்கமுடியாத உயரத்தில் இருந்த தொலைபேசி இப்போது கடைகோடி கிராமத்து சித்தாளுக்கும்  செல்லப் பிள்ளையானது போல  இந்த  ஆங்கிலக் கல்வியும் வெகு லாவகமாக சந்தைப்படுத்தபட்டு விட்டது.


கொஞ்சம் நிலம், ஒருகட்டிடம், இரண்டு மூன்று பழைய்ய வேன்கள் இருந்தால் போதும் யாரும் ஆக்ஸ்போர்டு நிறுவனத்தின் ஸ்தாபகர் ஆகிவிடலாம் என்கிற நிலலைமையை ஏற்றுக் கொள்ளப்பழகிவிட்டோம். கடமை- உழைப்பு கருணை, அன்பு, அல்லது தொண்டு, உயர்வு இப்படியான வெற்று வார்த்தைகளை சுற்றிப்போட்டு அவர்களுக்கென தனி இலச்சினை கூட தயாரிக்க முடிந்தது. ஆனால் மாதம் துவங்கிவிட்டால் ஈட்டியைக்காட்டித் துட்டைப் பறித்துக்கொள்கிற நடைமுறையை கள்ளத்தனமாக நுழையவிட்டு கல்வியை தராசில் வைத்து விற்க அனுமதித்துவிட்டது அரசு. ஒரு மாணவனிடம் மாதம் நாலாயிரம் ஐயாயிரம் சாதாரணமாகப்பிடுங்கும் பிரபல ஆங்கிலப்பள்ளிகள் கூட அந்த மாணவர்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு ஆயிரம் ரெண்டாயிரம் கொடுத்தால் அந்தப்பள்ளி ரொம்ப ஸ்ட் ரிக்டான பள்ளி என்று ஊரெல்லாம் தம்பட்டம் அடிக்கப்படும்.


கட்டணம் வசூலிப்பதில்,சம்பளம் கொடுப்பதில் எந்தவிதக்கட்டுப்பாடும் இல்லாத தம்பட்டக் காளைகளானது ஆங்கிலப்பள்ளிகள்.சீருடைகள்,நோட்டு புத்தகம், கணினி, போக்குவரத்து, ஐ டி கார்டு, அப்புறம் ஆண்டு இறுதியில் சினிமாப் பாட்டுக்கு ரெக்கார்டு டான்ஸ் ஆட சிறப்பு அலங்காரம் என அவ்வப்போது கறக்கப்படுவதை கணக்கு வழக்கில்லாமல் ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொண்டோம். வெளியே எல்லாவற்றையும் இலவசமாக சொல்லிக்கொடுத்து,உதவித்தொகை கொடுத்து கல்வி கொடுக்க ஒரு ஏற்பாடு இருப்பதை மெல்ல மெல்ல மறந்து போக பழகிக்கொண்டோ ம்.ஆனால் இதே தாய்மார்கள் தான் அன்று வடபழனியில் ஓசியாக தொலைக்காட்சிப்பெட்டி வாங்குவதற்கு மூனு மணிநேரம் வெயிலில் காத்துக்கிடந்தார்கள் இந்த விநோதம் மட்டும் புரிந்துகொள்ளமுடியாத புதிராக இருக்கிறது.


அது ஒரு புறம் கிடக்கட்டும்.


இந்த மாணவர்கள் இருக்கிறார்களே அவர்கள் தொலைக்காட்சிப்பெட்டி வெளிச்சத்திலிருந்து எழுந்து  நேரடியாக இந்த கட்டண  இருட்டறைக்குள் தள்ளப்பட்டு விடுகிறார்கள். ஆதலாம் புற உலகம் பற்றிய அவதானிப்பு .0001 சதமானம் கூட இல்லாத பந்தயக் குதிரைகளாக சீருடை தறிக்கப்பட்ட ரோபோக்களாக மாற்றப்படுகிறார்கள்.இந்த வார்த்தை கொஞ்சம் எரிச்ச லூட்டும் . இருந்தாலும் உண்மை. அறுபதுகளின் இறுதியில் கிராமத்து பள்ளிக்கூடத்தில் சத்து உப்புமா போடுவதற்கு அந்த மஞ்சள் மாவையும் டால்டாவையும் எடுத்துக்கொண்டு போன தலைமை ஆசிரியர் அதை சொந்த உபயோகத்துக்கு வைத்துக்கொண்டு. அன்று மதியம் கம்மங்கஞ்சி ஊற்றினார். அந்த தவறை சுட்டிக் காட்டவும், எதிர்ப்பைத் தெரிவிக்கவும்  நான்காவது ஐந்தாவது படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் பத்துப்பேர் பள்ளியை கண்டித்து மதியம் மர நிழலில் நிற்க முடிவெடுத்தோம்.கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் கடந்து போயிருக்கிறது இந்த நாற்பாதாண்டுகளில் எவ்வளவோ மாற்றங்கள் வந்திருக்கிறது ஆனால் இப்போதிருக்கிற ஆங்கிலப்பள்ளி மாணவர்களுக்கு அப்படியொரு சிந்தனை இருக்கிறதா என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

கட்டபொம்மன், காந்தி, சுதந்திரம், சத்தியாக்கிரகம் என்கிற பாடங்கள் படித்துவிட்டு அதை ஒரு சிறிய அளவிலேனும் செய்முறைப்படுத்த இந்த ஆங்கிலப்பள்ளிகளில் அனுமதி இருக்கிறதா ? இருக்கவே முடியாது.காரணம்

போட்டி.அறையாண்டுக்குள்ளே முழு ஆண்டு பாடத் திட்டத்தை முடித்து விட்டு மாதிரித் தேர்வுக்கு தயார்படுத்துகிற போட்டி. அந்தக்குழந்தைகள் போராட அனுமதிக்க வேண்டாம் நண்பர்களே விளையாடக் கூட அனுமதிக்கப் படவில்லை என்பதை நீங்கள் கண்கூடாகப் பார்க்கலாம்.வெயில்,புழுதியோடு கிடைக்கிற சிநேகம்.வெளிக்காற்று,சேஷ்டை களோடுகிடைக்கிற புற உலகம் மறுக்கப்பட்ட குழந்தைகள் தார்மீக எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களாக மாறிப் போகிறார்கள்.

ஆனால் அரசுப்பள்ளிகளில்,தனியார் நிர்வாகம் நடத்தும் தமிழ்வழிப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இது ஓரளவு ருசிக்கக்கிடைக்கிறது.சின்னச்சின்ன தவறுகளுக்கெதிரான கேள்விகள் முளைக்கிறது.அதை கூர்தீட்ட உண்மை யான  ஜனநாயக அமைப்புகள் சமூக வரலாறுகள் சொல்லிக் கொடுக்கிறது. கட்டண உயர்வு, கழிப்பறை வசதி எனத்தொடங்கி, ராகிங்குக்கு எதிராக, பாலியல் கொடுமைகளுக்கு எதிராக, அணைவருக்கும் வேலை கேட்டு வீதியில் இறங்கும் உக்கிரமான போராட்டங்களையும் சேர்த்து ப்படிக்கிற இடமாக அரசு பள்ளிகள் திறந்து கிடக்கிறது. ஆனால் எனக்குத்தெரிந்து ஆங்கிலப்பள்ளி மாணவர்கள் தெருவில் இறங்கிப் போராடியது புகையிலைக்கு எதிராக கூடக்கிடையாது. அவர்கள் சமூகப்புரட்சியெல்லாம் ஆண்டு விழாக் களின் மேடைகளில் போடுகிற மாறுவேடப்போட்டியோடு முடிந்துபோகிறது.

சரி கிடக்கட்டும் படிக்கிற பிள்ளைகளுக்கு எதற்கு போராட்டமெல்லாம்.

17.9.2010 அன்று தனியார் பள்ளிகள் வேலை நிறுத்தம்.

இப்போ தமிழகத்தின் தலைபோகிற பிரச்சினை என்னவென்றால் தனியார் பள்ளி நிர்வாகங்கள் போராடுவதும் புரட்சி பண்னுவதும்தான். எல்லா நாட்டிலும் புரட்சிக்கு ஒரு அர்த்தம். இங்கே மட்டும் வேறு அர்த்தம்.புரட்சி நடிகர், புரட்சிக்கலைஞர், புரட்சித்தமிழன்,புரட்சித்தலைவி இப்படிப் பெயர் களிலேயே புரட்சி முற்றாக செலவழிந்து போய் விட்தால் நியாயமாக எதாவது முயற்சி செய்தால் " ஆமா வந்துட்டாய்ங்கப்ப்பா " என்று கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. பாரதி கேட்ட தமிழன் கிடைக்கவே இல்லையோ. கிக்கட்டும்.


இந்த தனியார் பள்ளி சேகுவாராக்கள் ஏன் போராடுகிறார்கள்.கட்டணம் வசூலிப்பதில் வரைமுறை வைத்ததற்கு எதிராக இல்லை. அதற்கு ஆவியைக்கொடுக்க அவர்களுக்கென்ன கிறுக்கா பிடித்திருக்கிறது.இருக்கிற கள்ளப்பணத்தில் இருந்து கொஞ்சம் எடுத்து புழக்கத்தில் விட்டால்போதும் வளையாத செங்கோல் களிமண்ணாகி விடும்.ஜனநாயகத் தூண்கள் ரெண்டும் தனக்குத்தானே முதுகெலும்பை உறுவிக்கொண்டு படுத்துவிடும். படுத்து விட்டது.

பின் எதற்காகப் போராடுகிறார்கள்.

இந்த தனியார் நிறுவணங்களுக்கென இஒதுக்கீடு.கட்டண வரைமுறை. ஒழுங்கு விதிகள் இருந்த போதும் அவை எதுவும் கடைப்பிடிக்கப்
படுவதில்லை. அதுபோதாதென்று உரிமம் வாங்கும்போது சில விழுக்காடுகள் ஏழைகளுக்கு இலவச உதவி செய்வதாக துணை விதிகளில் சொல்லப் பட்டிருக்கும். அப்படி தர்ம காரியங்களுக்காக ஒரு தொகை ஒதுக்கப்பட்டு அதுவும் சேர்த்து விற்கப்படுவது தான் தனியார் தர்மம்.அப்படியே ஏழைகளுக்கு உதவினால் கூட அது தன் சுய ஜாதி, சுய மத அடிமைகளுக்கு மட்டும் தான் என்பது இங்கு யாருக்கும் தெரியாத நடைமுறை.

ஒரு வாரத்துக்கு முன்னால். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில். கட்டணம் வாங்கிவரசொல்லி பள்ளிநேரத்தில் துரத்தப்பட்ட மாணவன் சுரேஷ் ( ஒரு தையல் தொழிலாளியின் மகன்). கவனம் சிதறி. வாகனத்தில் அடிபட்டு. பெற்றோரின் கனவுகளைச் சிதறடித்துச் செத்துப்போனான்.இறந்த மாணவனின் கிராமத்துக்காரர்கள் கொதித்து வந்து  அந்த ஆங்கிலப் பள்ளியை தீவைத்துக் கொளுத்திவிட்டார்கள்.சென்னையில் பல ஆங்கிலப்பள்ளிகளில் நடக்கும் கட்டணக்கொள்ளையை எதிர்த்து பெற்றோர்கள் மறியல் நடத்தினார்கள். இதையெல்லாம்  அவதானித்த தனியார் பள்ளி நிர்வாகாங்கள் போராடத் துவங்கி விட்டது. யாருக்கும் போராட்ட உணர்வு வந்து விடக்கூடடாது என்பதற்காகவும். பொது மக்கள் யாரும் தவறுகளைச் சுட்டிக்காட்டக்கூடாது என்பதற்காவும் தான்.


எருது எளச்சா, நரி  மாமன் மச்சான் உறவு கொண்டாடுமாம்

16.9.10

தோல்வி எனும் பாடம்.

ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள அந்த தெருவில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் எழுத்தறிவு தினக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.பேசப்போகிற மூன்று பேரில் நீங்களும் ஒருவர் கட்டாயம் வரவேண்டும் என்று நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் தோழர் மாடத்தி சொல்லியிருந்தார்கள்.தங்கை மாடத்தி ஒரு இருபதாண்டுகாலமாக எழுத்தறிவு இயக்கத்தில் தன்னைக் கறைத்துக் கொண்ட சமூக போராளி.எழுத்தறிவு இயக்கத்தோடு தொடர்புடைய எல்லா முற்போக்கு இயக்கங்களிலும் அவரது தலை தெரியும்.தமுஎகச வின் மாவட்டக் குழு உறுப்பினர்.மாதர் சங்க  உறுப்பினர் இப்படி பல பொறுப்புக்கள்.

எப்பொழுதாவது கிராமங்களில் நடக்கும் பட்டிமன்றங்களில் அணியின் மூன்றாவது பேச்சாளராக பேசுவார்.மூன்றாவது பேச்சாளர் என்பது ஒரு freelance ஏற்பாடு.தங்களின் குழுவில் உள்ள யாரும் வரவில்லை என்றால் அவருக்குப்பதிலாக இட்டு நிறப்ப அமர்த்திக்கொள்ளும் பேச்சாளர். ஒன்றிரண்டு முறை நானும் தோழர் மாடத்தியும் இப்படி மூன்றாவது பேச்சாளராக எதிரெதிர் அணியில் நின்று கண்ணீர்ப் புகைக்குண்டு வீசி கூட்டத்தைக் கலைத்திருக்கிறோம்.எழுத்தறிவு இயக்கத்தில் கிடைத்த குறைந்த பட்ச வாழ்வாதாரமும் அறுந்து போனதால் ஒரு புதிய தொண்டு நிறுவனத்தில் களப்பணியாளராக் இணைந்திருந்தார். அந்த நிறுவணம் ஏற்பாடு செய்திருந்த அந்த எழுத்தறிவு தின நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து பேச அழைத்திருந்தார்கள்.தேர்ந்த பேச்சாளர் இல்லை என்றாலும் அதை ஒப்புக்கொண்டதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று பெண்கள் குறித்து பேச வேண்டும் என்கிற ஆசை.ரெண்டு பெண்கள் பற்றிக் கொஞ்சம் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை.

அவர்கள் சொன்ன அமீர்பாளையம்  பகுதியில் எதிர்த்திசையில் போய் கல்யாண மண்டபத்தை தேடிப்பாத்துவிட்டு
தோற்றுப்போய் வீடு திரும்பிய பிறகு பத்து போன் வந்தது.வேண்டா வெறுப்பாகத்தான் அங்குபோக நேந்தது.

அந்த கல்யாண மண்டபம் சாத்தூர் சலவைத் தொழிலாளர் சங்கத்தின் கட்டிடம்.ஆகையால் ஒரு சின்ன வீடுபோல இருந்தது.இருபதுக்கு பத்து ஹாலில், தரையில் ஐம்பது அறுபது பெண்கள் உட்கார்ந்திருந்தாகள்.எல்லாமே அடித்தட்டுப்பெண்கள் என்பதை சாட்டிலைட் மூலமாகப் பார்த்தாலும் கண்டுபிடித்துவிடலாம்.அவர்களிடம் நான் தயாரித்து வைத்திருந்த பேசுபொருளை எப்படி கொண்டு செல்வது என்று குழப்பமாகிவிட்டது.அதில் பெரும்கஷ்டம் இருக்கிறது. தமிழகம் முழுக்க முழங்குகிற பேச்சாளர் ஒருவரோடு ஒரு கிராமத்துக்குப் போயிருந்தேன். அவர் வழக்கமாக வீசும் சரவெடி சிரிப்பலையாய் பொங்கும்,அவர் சொல்லுகிற கதை படித்தவர் மத்தியில் புருவங்களை உயர்த்தும். அதை நேரிடையாக உணர்ந்திருக்கிறேன்.ஆனால் அந்தக் கிராமத்தில் ஒரு மணிநேரம் பேசினார் தனக்கு தெரிந்து உலக மகா விகடங்களையெல்லாம் எடுத்து விட்டார். கூட்டத்தில் சலசலப்பே இல்லை.காரணம் கிட்டத்தட்ட  அது  அவரது சொந்த ஊர்மாதிரி. அதுபோன்ற ஊரிலிருந்து சேகரித்த கதைகளையெல்லாம் தான் அவர் தமிழ்நாடு முழுக்க விற்றுக்கொண்டிருந்தார்.எள்ளல், பாடு, பழமையெல்லாம் அவர்களுக்கு  அன்றாடம் சந்தித்த நிகழ்வுகள்.'selling a refrigirator to the eskimo'.

அப்படி நிகழக்கூடாது என்று உள்ளுக்குள் கங்கணம் கட்டிக்கொண்டேன்.அப்படியே பகீரதப் பிரயத்தனப்பட்டு பேச்சை ஆரம்பித்தேன்.இந்த உலகம் பெண்களால் ஆனது,இந்த உணவு,இந்த உடுக்கை,இந்த இருப்பிடம் எல்லாமே அவர்கள் கண்டு பிடித்து உலகுக்கு சொன்னது என்பதை எளிய வார்த்தைகளில் சொன்னேன்.  ஆனாலும்  அன்புக்குறிய எழுத்தாளர் பிரபஞ்சன்,எங்கள் ஆசான் எஸ் ஏ பி,இன்னும் பலபேர் பெரிய அரங்குகளில் சொல்லி ஆரவாரக் கைதட்டு வாங்கிய அந்தக் கதையைச் சொல்லியே தீரவேண்டும் என்று அவக்காச்சியெடுத்தது.'ஒரு பெண் நாயைக் கல்யாணம் பண்ணிக்கொண்ட' கதையைச் சொன்னேன்.எந்த சலசலப்பும் இல்லை. அதற்கு அந்த நேரம் கொடுத்த டீயும் பிஸ்கட்டும்,அதைத்தொடர்ந்து உள்ளே நுழைந்த அந்த ஊரின் பிரபல பெண்டாக்டர்  வருகையும்  காரணமாக இருந்தது என்று நானும் என்னைச் சேர்ந்தவர்களும் சமாதானம் செய்துகொண்டாலும் அதையும் தாண்டிய பெரும் பாடம் அதற்குள் இருப்பதாக உணரமுடிகிறது.

14.9.10

குரலின் சுரத்தில் சரம் கோர்க்கும் நினைவுகள்.

ஒரு முன்மதிய நேரத்து
குளிர் நினைவுகளை ஊடறுக்கும்
தூரத்து வேலிக்குயிலின் தேடலும்
கூட்டி விட்டுக்கூட வரும்
தனிமையின் ராகத்தோடு.

பின் தொடரும் வாகனச் சலனங்களில்
பிரிந்து போய் சக்கரம் முன்னும்
நினைவுகள் பின்னுமான பயணத்தில்
சுகந்தப் புல்லாங்குழல் ஊடிசையாய்
சுதி சேர்க்கும் கருவேலம் பூக்கள்.

ஈரம் கோர்த்த பகற்பொழுதின்
கடிகார நகர்வில் இனிப்புத்தடவி
இழுத்துச் செல்லும் அளவான ஆல்கஹாலும்
அன்புகோர்த்த நட்பின் வார்த்தைகளும்.

எல்லாவற்றையும்...
எங்கிருந்தோ கேட்கும் சுவர்ணலதாவின்
சினிமாத் தனிமைப் பாடல்களின் வழி
மீளக்கொண்டுவரலாம் வாழ்வின்
ரசம் மிகுந்த நேரங்களை.

13.9.10

பெரியார் பேரனுக்கு பிடித்த பேய்.

ஓடையைத்தாண்டி தனியாக கட்டப்பட்டிருந்த வீட்டில் கல்யாணம்.மணமகன் தூரத்து சொந்தம்,ஆனால் ஊரைவிட்டு தூரமாகி இருபது வருடங்கள் ஓடிப்போனதால்,ஊரின் ஒதுக்குப்புறத்தில் பயமுறுத்திக்கொண்டிருந்த பாழடைந்தமண்டபம் கூட மிக மிக நெருக்கமாகிப்போனது. சொன்னபடி தாலிகட்ட   இன்னும் ஒரு மணிநேரம் காத்திருக்கனும்.அதற்குள் காலாற வயக்காட்டுக்குள் நடந்து ஒதுங்கிவிட்டு வரலாம் என்று நடந்தான்.கல்மண்டபம் வந்தது. அங்குதான் செத்துப்போன பண்ணக்காரன் சன்னாசியும்,பண்ணையார் பொண்டாட்டி  சீதேவியம்மாவும் ஆவியாகச் சுத்துவதாக ஊர்பேசும்.

கொஞ்சம் கூட நடந்து வாங்க அந்த ஆவிகளைப் பார்த்த முனியராஜைப்பத்திச் சொல்றேன்.
கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தான்.பந்துவார்பட்டியில் இருக்கும் ஜெயம் மாமாவீட்டில் ஒரு குட்டிச்சாக்கு அடுப்புக்கரி வாங்கிவரச்சொல்லிய அம்மா சாயங்காலம் பத்தாவது தடவையாக திட்டினாள். சாயங்காலம் போய் தேடிப்பிடித்து வாங்கி வருவதற்குள் இருட்டியிருந்தது.ரோடு வழிபோனால் ஆள் நடமாட்டம் இருக்கும். குறுக்கால ஒத்தைப்பாத வழி வந்தால் ரெண்டுகிலோமீட்டர் சுத்து மிச்சம். ஆனால் அந்த வழியிலேதான் பேய் மண்டபம் இருக்கு.கண்ண மூடிக்கிட்டு அழுத்தினால் நொடியில் கடந்து ஆனால் அந்த வழியிலேதான் பேய் மண்டபம் இருக்கு. விடலாம். அப்புறம் தங்கக்குருநாடார் தோட்டம் அங்கே விடிய விடிய ஆள் நடமாட்டம் இருக்கும்.மண்டபத்துக்கருகே வருவதற்குள் சைக்கிள் பஞ்சராகிப் போனது. இறங்கி என்ன ஏதுவென்று பார்க்கிற அவகாசத்துக்குள்ளே சூரியன் பொசுக் கென்று மேற்குத்தொடர்ச்சி மலைக்குள் ஒளிந்துகொண்டது.ஒரு நாள் முழுக்க கொளுத்து கொளுத்தென்று கொளுத்திய பாழாப்போன சூரியன் ஒரு பத்து நிமிசம் மெதுவாப் போகக்கூடாதா என்று எரிச்சல் வந்தது.இறங்கி ஓட்டமும் நடையுமாக சைக்கிளை உருட்டிக்கொண்டு போனான்.எதோ பசக்கென்று பின்னலிருந்து இழுக்கிற மாதிரி இருந்தது.

சீதேவியம்மாதான் பிடிச்சி இழுக்கா என்று பயந்து போய் குபீரென்று உடம்பு வேர்த்தது.திரும்பிப்பார்த்தால் கட்டியிருந்த கயிறு அவிழ்ந்து குட்டிச்சாக்கு கீழே விழுந்து கிடந்தது.சரி இன்னைக்கு பேயோடு தான் ஊருக்குப்போகனும் என்கிற முடிவோடு ஸ்டாண்டைப்போட்டு,சாக்கை எடுத்து கேரியரில் வைத்துக் கட்டினான்.தெற்குப்பக்கம் இருக்கிற மண்டபத்தை பார்க்கக்கூடாது என்கிற நினைப்பு பிரசவ வைராக்கியமானது. விதி விடவில்லை. அந்த மண்டபத்திலிருந்து படபடத்துக்கொண்டு வெளியேறிய பறவைகளின் சத்தம் கொலைப்பதற வைத்தது. திரும்பிப்பார்த்தான். ரெண்டு உருவம் நிழலாடியது.வியர்வையோடு சேர்த்து ஒண்ணுக்கும் முட்டிக்கொண்டு வந்தது.

நிறைவேறாத ஆசையோடு செத்துப்போனால் பேயாய் அவர்கள் அலைவார்களாம்.பேய்க்கதைகள் சொல்லுகிற பாட்டிதாத்தாமார்கள் பேயை எப்படி எதிர்கொள்வதென்றும் சொல்லித் தந்திருந்தார்கள்.இரும்பைக்கையில் வைத்திருந்தால்,தீயைக்காட்டினால்,சூலாயுதமோ,சிலுவையையோ எடுத்து ஏந்திக்கொண்டால் எந்தப்பேயும் காத தூரம் ஓடுமென்கிற ஊர் நம்பிக்கை நினைவுக்கு வந்தது.சடசடவென்று கீழே கிடந்த பருத்தி மாரை சேர்த்துக் கட்டினான்,அதன் நுனியில் கீழே கிடந்த கந்தல் துணியை எடுத்துச்சுற்றினான். சிகரெட் குடிக்கவைத்திருந்த தீப்பெட்டியெடுத்து உரசினான். பற்றிக்கொண்டது தீ.வெளிச்சத்தில் நம்பிக்கை கூடியது. என்னதான் நடக்கிறதென்று பார்க்க குருட்டு தைரியம் வந்தது. மண்டபத்தை நெருங்கினான். ஆம்பிளையாள் மாதிரித் தெரிந்தது.இது எதோ களவு சோலியென்று ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு உள்ளே போனான்.

அந்தச்சாயங்கால குளுமையில் வேர்க்க விறுவிறுக்க ரெண்டு உருவம் தலை கவிழ்ந்த படி இருந்தது.அவர்கள் தான் பேயறைந்தத அதிர்ச்சியிலிருந்து  மீளமுடியாமல் இருந்தார்கள்.லஜ்ஜையாக இருந்தது.ஏதும் சொல்லாமல் மௌனத்தால் மன்னிப்புக்கேட்டு விட்டு வெளியேறினான்.பின்னாடி காலடிச் சத்தம் தொடர்ந்தது.'தம்பி' என்கிற தடுமாறுகிற குரல் கேட்டது. 'பயப்படாதீங்க, எங்கம்மா சத்தியமா நா இங்க எதையும் பாக்கல'. சொல்லிவிட்டு  திரும்பிப் பார்க்காமல் சாவகாசமாக நடந்தான்.ஊரை அடுத்து உள்ள பம்புசெட்டுக்கு வந்த போது நிலாத்தெரிந்தது.

சட்டைப்பையில் இருந்த கோல்டு ப்ளேக் சிகரெட்டை எடுத்து பற்றவைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். நண்பர்களிடம் சொல்லுவதா வேண்டாமா என்கிற கயிறு இழுப்பு நடந்தது. ஊர்மடத்திலும், களத்து மேட்டிலும் பொழுதுபோகப்புறணி பேசக்கூடிய விஷயமா இது. வேண்டம், அப்படியே மண்ணைப்போட்டு மூடுவதுதான் சரி என்கிற தீர்மானத்துக்கு வந்தான்.தேரம் போனது தெரிய வில்லை.டார்ச் லைட் வெளிச்சம் பதையில் நடந்து வந்தது. பழக்கமான பேச்சுச் சத்தமும் கேட்டது. வேலவர்,பவுல், தேடிவந்தார்கள்.இறங்கி அவர்களை நோக்கி நடந்து போனான். மீதி இருந்த இன்னொரு சிகரெட்டைக் கொடுத்தான் பத்தவைத்துப் பகிர்ந்து கொண்டார்கள். 'என்னப்பா மூஞ்சி ஒரு மாதிரியா இருக்கு ஒங்காளு நெனப்பு வந்துர்ச்சா' என்று கேட்டதற்கு ஆமாம் என்று பதில் சொன்னான்.

மறுநாள் அம்மாவிடம் சன்னாசியும் சீதேவியும் எப்படிச் செத்தார்கள் என்று கேட்டான்.'மாடு மேய்க்கிறவன்  சானிக் கூடைக்கு ஆசப்படலாம்,காராம்பசுவுக்கு ஆசப்படலாமா,அததுக்கு தராதரம் வேண்டாமாய்யா?.அடிச்சுக்கொன்னு போட்டுட்டு பேயடிச்சிருச்சுன்னு பொரளியக் கெளப்பிட்டாங்க. இதெதுக்கு கேக்க ? எய்யா இப்பிடி வெள்ளிக் கெழமயும் அதுவுமா பேயலையுற மண்டபத்த தாண்டி வராட்டி என்ன ரோட்டு வழிய வரக்கூடாதா. நானே கருகமணி  கெனக்க ஒத்தப்பிள்ள வச்சிருக்கேன்' அம்மா புலம்பிக்கொண்டிருந்தாள்.மறுநாள் கிழவங்கோயில் பூசாரிய வீட்டுக்குக் கூப்பிட்டு வந்து திண்நீறு போடச் சொன்னாள்.

அப்புறம் ஒரு வாரத்தில் அது மறந்து போயிருந்தது.அதற்குப்பிறகு எங்காவது பேயிருக்கா இல்லையா என்கிற வாதம் நடந்தால் ஆமாம் இருக்கிறதென்று சொல்லி ஜகா வாங்கிவிடுவான்.பெரியார் பேரங்கெனக்கா வாய்கிழியப் பேசுவான் இப்படி பல்டி அடிக்கானே என்று சேக்காளிகள் தடுமாறினார்கள். அதற்கப்புறம் அந்த ரெண்டு உருவத்தில்  இவனே தலையைக் கவிழ்த்திக் கொண்டு கடந்து போய்விடுவான்.

நிறைவேறாத ஆசையோடு மனிதர்களும் கூட அலையவேண்டாமே.

12.9.10

அச்சிலேறாத பாடங்கள்

பெருமாளு, நூத்தி ஏழுக்கு யூரின் கேன் வை,
பெருமாளு, சிசேரியன் பேசண்டுக்கு துணிமாத்து,
நூத்திப்பண்ணண்டுல, டயோரியா பேசண்டு ரூம்ல லட்ரின் க்ளீன் பண்ணு,
அறிவே கிடயாதா, இங்க பாரு ஆரஞ்சு தோலு கெடக்கு,......
என்னத்தா எனக்கு இன்னுமா டிபன் வாங்கிட்டு வரல......

அந்த தனியார் மருத்துவமனையெங்கும் இந்தப் பெயர் அங்கும் இங்கும் இழுபட்டுக் கொண்டே இருக்கும். கூப்பிடுகிற திசையெங்கும் முனுமுனுத்துக்கொண்டும், பதில் குரல் கொடுத்துக்கொண்டும் ஒரு சின்னப்பெண்போல அலைகிற அந்தம்மாவுக்கு வயது ஐம்பதைத் தாண்டியிருக்கும். வேலை ஓய்ந்த நேரங்களில் கார் ஷெட்டுக்குப்பக்கத்தில் வெத்திலை போட்டுக்கொண்டிருப்பார்கள். காய்ச்சல் தலை வலியென்றால் வரக்காப்பி வாங்கி அஞ்சால் அலுப்பு மருந்து கலந்துதான் குடிப்பார்கள்.  மாத்திரை, சிரிஞ்ச், ஊசி,  டானிக் பாட்டில், குளுக்கோஸ் பாட்டில் என்பதெல்லாம், அவர்களுக்கு குப்பையில் சேர்க்கிற பொருள் என்பதுதான் பொருள்.  

பேறுகாலத்துக்கு அனுமதிக்கப்பட்ட மனைவியோடு ஒருவார காலத்தில் தாதிப்பெண்களும், பெருமாளம்மாவும்  எங்களோடு ரொம்பவும் சிநேகமாகிப்போனார்கள். சீருடையோடு  சாயங்காலங்களில்  வரும் எல் கே ஜீ படிக்கிற முதல் பையனுக்கு பாடம் சொல்லித்தருமளவுக்கு தாதிப்பெண்கள் மிக அன்னியோன்னியமாயிருந்தார்கள். எடுபிடி வேலைகள் குறைந்திருக்கிற நேரங்களில் பெருமாளம்மா எங்கள் அறைக்கு வருவதும், துணைக்கிருக்கிற மாமியாரோடு வெத்திலையும் ஊர்க்கதைகளும் பகிர்ந்துகொள்வது வாடிக்கையானது. அப்போது பையனைச் ''சின்னவரே, சாமி..  ஒங்க குட்டித்தம்பிய நாந்தூக்கிட்டுப் போறேன் '' என்று கொஞ்சும். எல்லோரையும் போலவே அவனும் '' ஏ பெருமாளு '' என்று கூப்பிட்ட போது வலித்தது. ஆனாலும் பெருமாளம்மாவின் முகத்தில் ஏதும் சலனமில்லை. அதட்டி '' ஆண்டி '' என்று கூப்பிடச் சொன்ன போது 'ஆண்டி' என்பதுவும் பேர்தானே என்று சொன்னது. பிறகுதான் அத்தை என்று கூப்பிடச் சொன்னேன். அவனும் வாய்க்கு வாய் அத்தை என்று கொஞ்சினான். தாதிப்பெண்களையும் அப்படியே கூப்பிடச் சொன்னான். அப்போதெல்லாம் பெருமாளம்மா முகத்தில் மின்னல் வந்து குடிகொள்ளும்.

நாங்கள் ஆசைப்பட்ட அந்த நாள் வந்தது.டிஸ்சார்ஜ் ஆவதற்கு முன்னால் பெருமாளம்மாவுக்கு ஐம்பது ரூபாய் சன்மானமாகத் தந்தோம்.பிடிவாதமாக வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டு, பிறகு வாங்கிக்கொண்டு கானாமல் போய்விட்டார்கள். அது செய்த உதவிக்கும் அன்புக்கும் பதிலாகப் பணம் தந்து விட்ட திருப்தியிருந்தது. கணக்கு நேர் செய்யப்பட்டதாக எண்ணிக்கொண்டு வீடு வந்தோம்.

ஆரத்தி தீபத்தோடு புதுக்குழந்தையின் வருகை வீடெங்கும் சந்தோச ஒளி வீசிக்கொண்டிருக்க, மூத்தவன் மட்டும் இது எதிலும் ஒட்டாமல் ஒரு குட்டியூண்டு சைனாக்காரின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தான். அது அவனுக்கு எப்படி வந்தது என்று தெரியாமல் நண்பர்கள் சொந்தங்கள் என ஒவ்வொருவராக அந்தச்சைனாக்காரோடு பொருத்திப் பார்த்தோம். யாருமே பொருந்தவில்லை. ஒரு வேளை பக்கத்திலிருக்கும் கடையில் திருடியிருக்கலாமோ என்ற சந்தேகப்பல் கூட வளர ஆரம்பித்தது. ஆனால் அவனோ, '' இது அத்தை கார் ''  சாவகாசமாகச்சொல்லி விட்டு விர்ரென்று அறைமுழுக்க அலைகிற அந்தக்காரின் பின்னால் போனான். வீடு மொத்தமும் திரும்பிப்பார்த்தது. குழந்தைகளைத்தவிர  எல்லோரும் குற்றவாளிக் கூண்டிலிருந்தோம்.  பெருமாளம்மாளின் குள்ள உருவம் அன்னாந்து பார்க்க முடியாத உயரத்தில் இன்னும் இருக்கிறது.


பரனிலிருந்து     

9.9.10

பென்சன் வாங்காத விடுதலை வீரர் ( ஓசிச் சினிமா 2 )

பிச்சைமுத்து தாத்தா ரோட்டுக்குப்போய் ஒரு காப்பி வாங்கிக்கொண்டு தினத்தந்தி பேப்பரை வாங்கி உட்கார்ந்துகொள்வார்.நடப்புகளை படித்துவிட்டு ஒரு கட்டு சொக்கலால் பீடிவாங்கிக்கொண்டு அப்படியே கிளம்பிவிடுவார்.

தாத்தா நல்ல ஒசரம்.கருப்பும் வெளுப்பும் கலந்த நிறம்.இரண்டு முழங்கால் களுக்கும் நடுவில் ஒரு மாட்டுவண்டியை விட்டுத்திருப்புகிற மாதிரி கவட்டக்கால்.சவக்கு சவகுன்னு தான் நடப்பார்.வேலைக்குப்போகும் போது ஒரு காடாத்துணியில் தைத்த லங்கோடு,அல்லது டவுசர் போட்டுக்கொள்வார்.மத்த நேரங்களில் வெளேரென்று வீசியடிக்கிற வேஷ்டியும்.அதுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு காக்கிக்கலர் சட்டையும் போட்டிருப்பார்.ஊர் அதை யாரோ போலீஸ்காரரிடம் ஓசிகேட்டு வாங்கிப்போட்டுக் கொண்டதென நினைக்கும்.பாத்தி கட்டுவதற்குப்போனால்கூப்பிடு பிச்சைமுத்த என்று குரல் கேட்கும்.

குறுக்கும்ம் நெடுக்குமாக உழவடிச்ச பிஞ்சைக்குள் நடந்து மோவாய்க் கட்டையைச் சொறிவார்.தாத்தன் சொறிஞ்சு சொறிஞ்சே முகத்துல முடியில்லாம ஆக்கிட்டானய்யா என்று இளவட்டங்கள் சொல்ல மத்தியான வேர்வை குதுகலாமய் சிரிப்பாக மாறும். வாட்டம் பார்த்து நடுவாய்க்கால் போடுவார்.அவர் வாய்க்கால் போட்டால் தண்ணி கெதிபுடுங்கா ஓடும்.அதனாலேயே தோட்டக்காரர்கள் எய்யா அந்த மில்ட்ரிக்காரப் பிச்சமுத்தக் கூப்பிடுங்க என்று விருப்பப்பட்டுக் கேட்பார்கள்.அதிகம் பேசமாட்டார்,அதிர்ந்தும் பேசமாட்டார்.ஒரே ஒரு பல் தெத்திக்கொண்டிருக்கும்.அந்தப்பல்லும் புகைந்து கொண்டிருக்கிற பீடியை கவ்விக்கொள்கிற இடுக்கி மதிரித்தெரியும். அது மட்டும் தான் அவர் இந்த உலகத்துக்கு காண்பிக்கிற அவரது உள்விவகாரம்.குடிச்சிட்டுப் போய் ஐயன்னா சுந்தரப்பன் அவரை வம்புக்கிழுத்த போதும் கையை விலக்கிவிட்டு அங்கிருந்து கழண்டுகொள்வார்.யாருடனும் சண்டைக்குபோகாத அப்பிராணி என்று பேரெடுத்த அவரெப்படி பொண்டாட்டியைக் கை நீட்டி அடிப்பார்.'பொம்பளகள கை நீட்டி அடிக்கிறவன் மனுஷப்பெறப்பே இல்லெடா என்பார்.

ஆனால் கோபமே வராத இந்த மனுசனெப்படி மிலிட்டரில இர்ந்திருப்பான்,ஒரு வேளை கெழவன் ரொட்டி சுடப்போயிர்ப்பானோ,கருகிப்போச்சுன்னு அடிச்சு வெரட்டிர்ப்பாங்களோ.ஆளாளுக்கு வியாக்கியானம் சொல்லிக்கொள்வார்கள்.ஆனால் கருப்பாய்க்கெழவிக்கு அந்த பென்சன் வராமல் போன ஆத்திரம்.'உப்புக்கல்லுப்பெறாத மனுசன வச்சுக்கிட்டு என்னத்த எழவு கூட்ட' என்று விரக்தியாப்பேசுவாள்.அந்த நேரம் சுருக்கம் விழுந்த கன்னத்தில் ரெண்டு சொட்டு உருண்டோ டும்.

சாத்தூர் தாசில்தாராபீசுக்கு புருசனும் பொண்டாட்டியும் அலைந்த நாட்கள் நெறிஞ்சி நினைவுகளாய்க்குத்தும்.மேலப்புதூர் தாடிக்காரக்கணக்குப்பிள்ளைக்கு அஞ்சு ரூவா அழுது.அவரெழுதிக்கொடுத்த தாளெக்கொண்டுபோய் ஆர் ஐ யிடம் காட்டினால் ஊர்ப்பெரியவங்க ரெண்டு பேர் ஊர்ஜிதப்படுத்தி லட்டர் தரணும் என்று சொன்னார்.
தங்கிளியானிடமும்,ஊர்த்தலைவரிடமும்,ஹெட்மாஸ்டரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு போனால் அன்னைக்கு ஜமா பந்தியென்று ஸ்ரீவில்லிப்புத்தூர் போய்விட்டார்.ரெண்டு நாள் கூலிவேலைக்குப்போய் துட்டுத்தேத்திக்கொண்டு
அடுத்த செவ்வாய்க்கிழமை போய் சர்ட்டிபிகேட் வங்கிக்கொண்டு தாசில்தாருக்கு மனு எழுதிக்கொண்டுப்போய் சேர்த்தார்கள்.

எந்தூர்யா அந்தாளு

என்று செக்சன் க்ளார்க்கிடம் கூப்பிட்டு விசாரித்தார்.
' அது பூரா அவிய்ங்கள்ள இருக்காங்க அங்க எப்டிய்யா'
கூப்பிடு தலையாரியை என்று சொல்லி சக்கரையண்ணனை
' ஆமா எசமா ஊர்ல அப்டித்தா சொல்றாங்க'

ஒனக்குத்தெரியுமா

'இல்ல சார், ஆனா ஊர விட்டு ஓடிப்போய் பத்திருவது வருசம் இருக்கும் அதுக்குப்பெறகுதா வந்தான் அந்தாளு'

1947 க்குப்பெறகு 23 வருசம் போயிருச்சு இப்பத்தான்஡ திரும்பிவந்தானா

ஆமா சார் பர்மாவ்லருந்து நடந்தே வந்தானாம் ஊர்ல பேசிக்கிட்டாய்ங்க

நீயும் அந்தூர் தான

அவிய்ங்க வேற தெரு,நா வேற தெரு

போதிய எழுத்துபூர்வமான ஆதாரங்கள் கோரப்படுகிறது என்று பச்சை மையில் எழுதி சீல்போட்டு கட்டி மூலையில் போட்ட பிறகு நூலாம்படையும்,அந்துபூச்சிகளும் வசிக்கும் வீடானது அந்தக்கோப்பு. இது போதாதென்று மறுவாரம் வப்பாட்டி வீட்டுக்கு நடுராத்திரி சைக்கிளில் போன தாசில்தார் மாரடைப்பால் செத்துத் தொலைந்து விட்டார்.அந்த மரணத்துக்கும் இவருக்குத் தெரிந்த கொரில்லா சண்டை யுத்திக்கும் சம்பந்தம் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.அன்று ரெண்டுபாட்டில் சாராயத்தை பொத்தையக் குடும்பனிடம் வாங்கி அடித்துவிட்டு சாயங்காலம் வீட்டுக்கு வந்து ரெங்குப்பெட்டியைத் திறந்து  உடுப்புகளை மாட்டி நேதாஜி படத்தை எடுத்து வைத்து விறைப்பாய் ஒரு சல்யூட் அடித்துவிட்டு கீழக்கோயிலிலிருந்து மேலக்கோயில் வரை ஒரு நடை நடந்துவிட்டு படுத்தார். ரெண்டு நாள் கழித்து எழுந்து வழக்கம்போல மம்பட்டியைத் தூக்கிக்கொண்டு பாத்திகட்டப் போய்விட்டார். ஆனால் வருடா வருடம் ஊர்ப்பள்ளிக்கூடத்தில் நடக்கிற கொடியேத்தத்தன்று  ஒரு ஓரமாய் நின்று ஒரு பார்த்துவிட்டு பெருமூச்சோடு திரும்பிவிடுவார்.யாரவது கதர்ச்சட்டை போட்ட ஆட்கள் பேசுகிற பிதற்றல்களைக் கேட்க  அந்த இடத்தில் அவர் இருக்கமாட்டார்.

புகைப்படம்; நன்றி வெப் இமேஜ்
( தாத்தாக்கள் இருக்கும்அதில் பிச்சமுத்து தாத்தா இல்லை )

ஓசிச்சினிமா

அந்த மடத்து வாசலுக்கு கொஞ்சம் தள்ளி உட்கார்ந்துகொண்டோ  நின்று கொண்டோ தான் பீடிகுடித்துக் கொண்டிருப்பார் பிச்சைமுத்து தாத்தா. அவருக்குத்தேவை அப்போதைக்கு காப்பித்தண்ணி குடிக்க ஒரு ஒத்த ரூபா.அதுக்காக நடக்கிற  போராட்டம் அந்த காலை நேரத்து ஓசிச்சினிமாவாக மாறும்.

'நேத்து பாத்திகட்ட ஆளில்லன்னு  தேடிட்டு இருந்தாக ஏ சின்னையா நீ போகலையா'

இப்படிக் கேட்டு விட்டு பால்ராஸ் ஒரு பீடியைப்பத்த வைப்பான்.ஆனால் கருப்பாய்க் கிழவிக்கு கனகனன்னு கொளுந்துவிட்டு எறியும்.

''ஆமா அவுங்கப்பென் ஏலக்கா எஸ்டேட்டு வச்சிட்டு போனா அதச் சுத்திப்பாக்க போயிருப்பாரு.அந்தா அந்தா கட்டியிருக்கிற லங்கோட்டுத் துணிக்கு நா ஒரு வாரம் வேப்பமுத்து பெறக்கியிருக்கேன்''. இப்படி ஆரம்பிக்கிற கச்சேரிக்கு மளமளவென்று ஆள்கூடும்.கூட்டம் கூடக் கூட கருப்பாய்க் கெழவிக்கு சுதி எறும் கெட்டவார்த்த போட்டு பாட்டுப்படுவா.பொறுத்து பொறுத்து பாத்திருந்து விட்டு பிச்சைமுத்து தாத்தா பீடியத் தூக்கி வீசிவிட்டு விருட்டென்று கெளம்பிருவர்.

இது பெரும்பாலும் விடிகாலையில் அல்லது அந்தி சாயும் நேரங்களில் கீழத்தெருவில் ஏதவதொரு வீட்டுமுன்னால் தினம்  நடக்கும். கருப்பாய்க்கெழவி வீட்டுச்சண்டையில் கொஞ்சம் கூடுதலாக கூட்டம் கூடும். சண்டையை ஒரு நிகழ் கலையாக நிகழ்த்திக் காட்டுவாள். சொலவடைகளும், பாட்டும்,கலந்த கெட்டவார்த்தைகள் கேட்கப்பிடிக்காதது போல முகத்தை வைத்துக்கொண்டு கூட்டம் எக்குத்தப்பாகக் கூடும்.

'சரி சரி ஒரு ரெண்டு ரூவாக்கடங்குடு'  சாமிதாசு கேட்பான்

'கொடும கொடுமன்னு கோயிலுக்கு போனா அங்கெ ரெண்டு கொடுமெ ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம்',

சொல்லும்போது கெழவி சேலையைத் தூக்கி இடுப்பில் சொருகிக்கொண்டு ஆடிக் காட்டுவாள்.

'எலே எம்புருசனுக்கே ஒத்த ரூவா குடுக்க மாட்டனுட்டு ஊரக்கூட்டிருக்கேன் நீ வந்து நோட்டம் பாக்கயா ஓடிப்பிரு ஓடி'

சொல்லவும் சாமிதாசு பொய்யாய் பயந்து கினுக்கட்டி கினுக்கட்டின்னு ஓடுவான். பாட்டிசண்டைக்குக் காரணமான புருசனோ,இல்லை சம்பளம் குடுக்காத மேட்டுப்பட்டி கொண்டக்கார அழகர்சாமி நாயக்கரோ அந்த இடத்தைவிட்டுப்போனப் பிறகும் சண்டை தொடரும்.

போட்டுவச்ச காப்பி தண்ணியக்கூடக் குடிக்க விடாம பெரியன வெரட்டி விட்டுட்டய பெரிம்மே சொல்வதற்கு ஒரு ஆள்வேணும்.சொன்னதும் 

''வீஞ்சாங்க்குண்ண்டி வெறுங்குண்டி போனாப் போறான் பெரிய்ய பெரியன்,சுடவச்சு ரெண்டு தேரங்குடிக்க மாட்டன்,அதுக்காக ஒனக்குத் தந்துர மாட்டண்டி மாக்கரையான் சொத்தென்ன ஆளில்லாச்சொத்தா''

அப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே ஏ நாத்து நடத்தேரமாச்சு என்று யாரவது குரல்குடுக்கவும்  தடபுடவென்று ஓடிப்போய் தூக்குச்சட்டியில் கஞ்சியை ஊத்தி, அவிச்ச வத்தல வறுத்து ஒரு துணியில் முடிந்துகொண்டு வீட்டப்பூட்டி பொட்டிக்கடையில சாவியக்'குடுத்துட்டு

''ஏய்யா இந்தா நவராசு,எம்மகனே ஒரு ரூவா அந்தக்கெளவண்ட குடுத்துரு.வேலைக்கி போகாட்டாலு பராவால்ல வீட்டத்தொறந்து போட்றாமய்யா''.

ரெங்ப்பெட்டிக்கு மாட்டுகிற பூட்டுச் சாவியைக் கொடுத்துவிட்டு பரபரக்க ஓடுவாள்.

7.9.10

செப்டம்பர் 7 வேலை நிறுத்தம். ஊர்கூடி நடத்தும் பொதுக்காரியம்.

அந்த மீசைக்காரர் வந்ததும் 'சார் டீ சப்பிடாச்சா  வாங்கியாரவா' என்று கேட்டுவிட்டுத்தான்  பணம் கட்டுவார்.கூட்ட நெரிசலில் சளைக்காமல் காத்திருந்துவிட்டு கடைசியில் பணம்கட்டுவார்.அந்த நேரம் பார்த்து தேநீர் வரும். வாங்கி ஓரம் வைத்துவிட்டு அவரது சலான் வாங்கி பணம் எண்ணுவேன்.'ஆறமின்ன குடிங் சார் நா ரெண்டு நிமிஷம் லேட்டாப் போறேன்' என்பார்.தன் மனைவி கட்டவேண்டிய மகளிர் கடன் பணத்தைக்
கட்டவந்து மேனேஜரிடம் வசவு வாங்கி சோர்ந்திருந்த போது அவரைத் தேற்றி அவரிடம் பணம் வாங்கி அனுப்பிய நாளில் இருந்து என்னோடு ஒட்டிக்கொண்டார்.ரெண்டாவது முறை லோன் வாங்கியபோது வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் ஆளுக்கொரு கூல்றிங்ஸ் வாங்கி வைத்துவிட்டுப் போய்விட்டார்.பேருந்தில் பார்த்துவிட்டால் எழுந்து உட்கார இடம் தருவார்.தன் பெண்டு பிள்ளைகளிடம் நல்லவிதமாக அறிமுகம் செய்து வைப்பார்.

நேற்று அவர் ஒருவரை அழைத்துக் கொண்டு வந்த நேரம் மணி ஐந்துக்கு மேலாகிக் கொண்டிருந்தது.வங்கி கிளையை மூட இருந்தோம். 'அப்ப நாளை வரட்டா' என்று கேட்டார்.'இல்ல நாளைக்கு ஸ்ற்றைக் நாளாண்ணிக்கு வாங்க' என்றேன். 'என்ன சார் ஓயாம இப்டி ஸ்டைக் பண்றீங்க சம்பளம் இண்ணுமா பத்தல' என்றார்.சுரீர் என்றது.'இல்லங்கய்யா நாளைக்கு  பண்ணபோற வேலை நிறுத்தம் விலைவாசிக்கு எதிராக,நாளைக்கு பண்ணப்போறது ஆள் பற்றாக்குறைக்கு எதிராக,சம்பள உயர்வுக்காக அல்ல. இன்னொன்னு தெரியுமா நாளைக்கு பண்ணப்போற வேலை நிறுத்தத்துக்கு ஒரு நாள் சம்பளத்தை நாங்கள் கட்டாயம் இழந்து விடுவோம் என்று சொன்னப்பிறகு அவருக்கு பதிலேதும் சொல்லத் தோணவில்லை.ஏஞ்சார் இப்பிடி ஒங்களயே நட்டப்படுத்திக்கிட்டு நாட்டத்திருத்த முடியுமா? என்று கேட்டார்.

ஊர்ல ஒரு கெட்ட காரியம் நடந்தா எல்லோரும் அந்த நாள்ல வேலக்குப்போகாம, இருக்றத குடிச்சிக்கிட்டு இருப்போமில்ல என்று கேட்டேன். 'ஆமா சார் அன்னைக்கு மனுசன் வேலைக்கு போவானா' என்றார் வீராப்பாக.அதும்மாதிரித்தானய்யா இந்த ஸ்ட்ரைக்கும் என்று சொன்னதும் புரிந்துகொண்ட மாதிரி சிரித்துவிட்டு 'எலே வாடா புதங்கெளமெ வருவோ, ஒரு நா பிந்துனா என்ன உலகமே பிந்திரவா போகுது,ஒத்தாளாக்கெடந்து அங்கெயு இங்கெயு தவ்வித்தவ்வி வேல பாக்காங்க ஆள் போடவேண்டாமா கூறுகெட்ட பய கவுர்மெண்டு' என்று சொல்லிக்கொண்டே பக்கத்தூருக்கு நடந்துபோனார்.அந்த மக்களிடம் எடுத்துச்சொல்ல வழியில்லை.திசை திருப்ப ஊடகங்கள் இருக்கிறது.அய்யணார் அண்ணாச்சி புரிந்துகொண்ட மாதிரி அறுபதுகோடிச் சனங்களுக்கு புரிய வைக்க இங்கே என்ன ஏற்பாடு இருக்கிறது ? அது வரை வேலை நிறுத்தம் கூட மூட நம்பிக்கைதான் கிராமத்து மக்களுக்கு,ஏன் படித்தவர்களுக்கும் கூடத்தான்.     

6.9.10

தரையிறக்கும் இயல்புகள்.

எப்படியோ தப்பித்துவிட்டது
வழிதப்பிய வண்ணத்துப்பூச்சி.
சுழலும் மின்விசிறியைப்பார்த்து
பதைபதைத்துக்கொண்டிருந்த என்
இலக்கிய கொமட்டில் இடித்தபடி
விசைப் பொத்தானைஅணைத்தது விட்டு
அடுக்களைக்குப் போனாள் காரியக்காரி.

வீட்டைக் கடக்கிற போதெல்லாம்
படபடக்கிற படபடக்கவைக்கிற
பெயர் தெரியாத வண்ணத்துப்பூச்சி
டீச்சர் இல்லையாவென நடுக்கூடத்தில்
வந்து நின்றுகொண்டு கேட்டபோதும்
திகைத்திருந்தேன் செய்வதறியாது.

வெக்கையும் மௌனமுமாக
வியர்த்திருந்தது வீடு
காத்தாடி போடக்கூட முடியாம
அப்படியென்ன யோசனையென்று
இயல்பாக சுழலவிட்டாள் சூழ்நிலையை. 

5.9.10

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.


ஒரு ஆர்வத்தில் கூகுளில் தேடியபோது தென்பட்டது புதைந்து கிடக்கிற ஆச்சரியங்கள்.கதைகளால் மண்மூடிப்போன கனிம வளங்கள். அதுவும் எனது தேசத்தில்.தொழில் நுட்பம் விரல் நுனியில் உலகைக் கொண்டுவருகிற இந்தக் காலத்திலேயே இருட்டடிப்பு நடந்தால் மன்னராட்சிக் காலத்தில் என்னென்னவெல்லாம் புதைக்கப்பட்டிருக்கும்.இது அரசியலுக்கு அப்பாற்பட்ட என்தேசத்தின் இயற்கை பற்றிய செய்தி. அதை வலை மக்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.


92500 சதுர கிலோமீட்டர்கள் விரிந்துகிடக்கும் அந்த மலைப்பகுதிகளில்தான் லட்சக்கணக்கான மரம் செடிகொடிகள் வாழ்ந்து வருகிறது.இந்தியாவின் தட்ப வெப்ப சமன்பாட்டை பாதுகாக்கிற மிகப்பெரிய பசுமைப் பிரதேசம். அங்குதான் மஹாநதி மற்றும் கோதாவரி நதிகள் ஊற்றெடுத்து சமப்பரப்புக்கு ஓடிவருகிறது.அங்குதான் அள்ளஅள்ளக் குறையாத இந்த தேசத்தின் மாசுபடாக் கனிம வளங்கள் கிடக்கிறது.இரும்புத் தாதுக்களும்,பாக்சைட் நிலக்கரி வளமும் இன்னமும் சொல்லப்படாத கனிம வளங்களும் கிடைக்கிறது. மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் அந்த தண்டகாரண்யத்தில்  புதைந்து கிடக்கிற 1.1 பில்லியன் டன் இரும்புத்தாது தான் இந்தப் பூமிப்பந்தில் கிடைக்கிற ஆகப் பெரிய இரும்பு வளம்.அதுவும் நம்மிடம் மட்டுமே இருக்கிறது என்பதை சாமான்யன் அல்ல ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட அறிந்திருக்க வாய்ப்பில்லாத ஏற்பாடு இங்கிருக்கிறது.

இதை சாட்டிலைட் தொழில்நுட்பத்தின் மூலம் வெளிநாடுகள் கண்டுபிடித்துவிட்டன.இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் நமக்குத்தெரியாததை அவன் கண்டுபிடித்துவிட்டான்.வெள்ளக்காரன் வெள்ளக்காரந்தான்.அப்றம் அங்கிருக்கிற முதலீட்டாளர்களின் கண்களை அது உறுத்திவிட்டது. இத்தனை யுகங்கள் மனிதக்காலடி படாமல் கிடந்த அந்தப்பகுதியில் கிடைக்கிற  கனிம வளங்களை வெட்டி எடுத்து உலகத்துக்கு விநியோகிப்படுவதை அரசும் ஊடகங்களும் சொல்லவில்லை.சொல்லப்போவதும் இல்லை. சொல்லி என்ன ஆகப்போகிறது சொல்லுங்கள் எந்த ஒப்பந்தமாவது மக்களைக்கேட்டுப்போடப்படிருக்கிறதா என்ன ?.அதற்கு அவசியமுமில்லை.

முன்னதாக அந்த கனிம வளங்களை வெட்டி எடுக்கும் உரிமையை ஊளை மோர் விலைக்கு விற்றுவிட்டார்கள். அப்படி விற்றதொன்றும் தரிசு நிலமோ,இல்லை ஒரு தனிநபருக்குச் சொந்தமான விலை நிலமோ இல்லை.லட்சக்கணக்கான மலைமக்கள் வாழ்ந்து வருகிற வனப் பகுதி.எஸ்ஸார் என்கிற அந்நிய நிறுவனம் 2005 ஆம் ஆண்டே மத்திய இந்தியாவில் உள்ள அந்த பலைடல்டா மலைப்பகுதியில் ஒரு இரும்புத்தாது வெட்டியெடுக்கும் தொழிற்சாலையை நிறுவிவிட்டது.அங்கிருந்து மும்பைக்கு இரும்புக் கனிமத்தைக் கடத்திக்கொண்டுவர 267 (திருநெல்வேலியிலிருந்து திருச்சி வரையான தூரம்.பேருந்தில் போனால் ஐந்து மணிநேராப் பயணதூரம்)கிலோமீட்டர் நீளத்துக்கு  குழாய்கள் அமைத்துத் தரப்பட்டிருக்கிறது.




வெள்ளைக்காரன் ஆண்ட நாட்களில் வெட்டிக்கொண்டுபோன நமது விலையுயரப்பெற்ற மரங்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது.அதன் பிறகும் நமது கொள்ளைக்காரர்கள் வெட்டியெடுத்தவையும் அப்படியே.அதையெல்லாம் சரிசெய்ய அங்கே நூற்றுக் கணக்கான சிறு இயக்கங்கள் இருக்கின்றன. பசுமை இயக்கங்கள்.இதுவரை லட்சோப லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு வந்திருக்கின்றன.அவற்றைச் செய்பவர்கள் இயற்கை ஆர்வளர்கள்,காந்திய வாதிகள், விவசாயிகள், காட்டுப்பற்றாளர்கள், அறிவுஜீவிகள்,அறிவியல் வல்லுநர்கள்.அவர்களின் இந்த இயற்கைப் புணரமைப்பு வேலைகளை யெல்லாம் தூக்கிக்கடாச வருகிறது ஜப்பான்,சீனா ஆகிய நாடுகளின் பொக்லைன் எந்திரங்கள்.

ஒரு மரம் வெறும் இலையல்ல,
ஒருமரம் வெறும் கனியல்ல,
ஒருமரம் வெறும் பூவல்ல,
ஒருமரம் வெறும் கூடுகட்டும் இடமல்ல
கூடவே மனிதகுலத்துக்கான
ஆக்சிஜனை அள்ளிக்கொடுக்கும்
ஜீவ விருட்சம் அது.
மரம் செடி கொடிகள் இல்லாத மண்
தரிசெனச் சொல்லப்படும்.
மரம் செடிகொடிகள் இல்லாத மண்
உயிர்கள் வாழத் தகுதியற்றதாகப்படும்.
 மரம்இல்லாத மண்திங்கள் செவ்வாய்
புதனெனும் வெற்றுருண்டைகளாகும்.

ஒரே ஒரு மரத்தை வெட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆங்கிலேயர்களுக்கு எதிராகக்கலகம் செய்ததாக விடுதலை வரலாறுகள் இருக்கின்றன.ஆனால் ஆயிரக்கனக்கான மரங்களை வேரோடு பிடுங்கி எறிய கிளம்பிவருகிறது அந்நிய முதலீட்டாளர்களின் எந்திரக் கைகள்.அதற்கு ஒத்து ஊதுவது தான் இந்திய அரசின் அபிவிருத்தித் திட்டங்கள்.அவை வேரோடு பிடுங்கப்போவது மரங்களையும்,கனிம வளங்களை மட்டும் இல்லை இந்தியாவின் சீதோஷ்ணத்தயும் சேர்த்துத்தான்.

ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் படிக்க ஆரம்பித்ததும் அதில் வருகிற தகவல்களும்,தரவுகளும் இந்திய நிலப்பரப்புகளோடு நம்முன் காட்சியாகிறது.


நன்றி: விக்கிப்பீடியா,வெப் இமேஜ்,

4.9.10

ஆமணக்கு நிழலும் குளிரும்.

கம்மாயில் குளித்துவிட்டுக் கல்மண்டபத்தில் கதை பேசிக்கொண்டிருந்த போது எல்லோரும் அவரவர் தங்கைகளைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.கருப்பசாமி மட்டும் சுந்தரவள்ளியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான் 'ஏ ஊத்தாத அது ஒங்க சித்தி மக தான' என்று கூல்பானை சொன்னதும் பிடிகயிறு அறுந்து விழுந்ததுபோல மடேரென்று அந்தரத்திலிருந்து விழுந்தான் கருப்பசாமி.பள்ளிக்கூடம் போகிற போதெல்லாம் இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு போவதும்,வாங்குகிற சத்துமாவில் முக்கால் வாசியை அவளுக்கு ஊட்டிவிட்டு வீட்டுக்கு வந்து கூல் குடிப்பதும்.அம்மா குடுத்த ஐந்து காசில் அவளுக்குப்பிடித்த குருவி ரொட்டி வாங்கிக் கொடுத்ததெல்லாம் நினைவுக்கு வந்து போனது.

வெறி வந்தது 'எலே அவாளுக்கு ஆனந்தனவுட நாந்தான் பிடிக்கும் என்னத்தான அண்ணேன்னு கூப்டுவா,அவன மொட்டமூக்கான்னுதான் கூப்டுவா' என்றான்.கூல்பானை அப்படித்தானோ என்று தோற்றமாதிரி முகத்தை வைத்துக்கொண்டான்.அந்த கூட்டத்தின் லீடர் பாஸ்கரன் கெக்கெக்கே என்று சிரித்துவிட்டு.எலே கருப்பா நீயி நெனக்கிறது தப்பு பாசமிருந்தா மட்டுந்தா அப்பிடி பட்டப்பேர் வப்பாக, கூடப்பெறந்தவாட்ட வசவு வாங்கணும் அதெல்லாம் ஒரு சொகம்' என்று சொன்னார்.எல்லோரும் ஆமோதிக்க கருப்பனால் ஏத்துக்கொள்ள முடியவில்லை.

'போங்கடா ஒங்க கூட வந்தம்பாரு' என்று சொல்லிவிட்டு விடுவிடுவென வீட்டுக்கு வந்துவிட்டான்.
நேரே வந்து கம்மம்புல் இடித்துக்கொண்டிருந்த அம்மாவிடம் போனான்

'என்ன இன்னுமா கம்பு இடிக்கல' என்று கேட்டான்.
'எனக்கென்ன பொட்டப்பிள்ளயா இருக்கு ஏண்ட வேல எடுத்தவேல செய்ய '
'நா என்ன ஒனக்கு முள்ளுத்தறிக்கலயா,தண்ணி சொமக்கலயா,கடைக்கு போகலையா,'
'ஆமா பெரிய்ய கட்டகொம்பு மஞ்சளரைச்சயா,நாத்து நட்டயா,களையெடுத்தயான்னு கேக்கவந்துட்டான்.எலே ஒனக்கு ஒரு உப்புத்தண்ணி,காப்பித்தண்ணி வக்கத்தெரியுமா ?'

என்று கேட்டுவிட்டு நெஞ்சுக் குழியிலிருந்து உருமிக்கொண்டு உலக்கையை உரலுக்குள் மொந்து மொந்தென்று போட்டாள் தரை அதிர்ந்தது.

கொஞ்சநேரம் மௌனமாக இருந்து விட்டு 'அப்ப  நீ ஏ பொம்பளப்பிள்ள பெக்கல'
'அத ஙொப்பண்ட போய்க்கேளு அந்தா சீட்டு வெளாட்றார்' என்று காவேரிச் சித்தி சொல்லவும் சுத்தி நின்ற பொம்பளைகள் எல்லாம் ஓவெனச் சிரித்தார்கள்.
'பல்லப் போட்டு இளிக்காதிக எனக்கு ஏ அக்கா தங்கச்சி இல்ல'
' மயினி எதாச்சும்பண்ணு நாளைக்கே தங்கச்சி வேணுங்றான்'
'எம்மா நீ வீட்டுக்கு வா எனக்கு தங்கச்சி' வேணும் என்றான்.
'ஆமா றெங்குப்பெட்டிக்குள்ள தங்கச்சி வச்சிருக்கா போயி எடுத்துக்குடுத்தா'
மூக்காயி கெழவிசொன்னதும் வெடிச்சிரிப்புச்சத்தம் கேட்டது. 
'ஏ வெவஸ்த கெட்ட பெயலே இந்தா துட்டு, போ, ஏதாச்சிலும் வாங்கித்திண்ணு' என்று அம்மா விரட்டிவிடு஡ள்.

பிறகு விளையாட்டில் மறந்து போய் ராத்திரி சாப்பிட்டு தட்டுக் கழுவாமல் எந்திரிப்பான்,
'ஹும்ம் ஒரு போட்டப் பிள்ள இருந்தா எல்லாத்தயு கழுவி வைக்கும்' என்று அம்மா அலுத்துக்கொண்டவுடன்கருப்பசாமி  மீண்டும் முருங்கை மரம் ஏறுவான். அவனது கூட்டாளிகள்எல்லோருக்கும் அக்கா தங்கைகள் இருக்கிறதும்.அவர்கள் சண்டை போட்டுக்கொள்வதையும் அம்மாவிடம் சொன்னான்.நந்தவனத்தில் பூப்பறித்தால் கொடுப்பதற்கு ஆளில்லை. சாத்தூருக்குப் போனால் கேர்ப்பின்,வளையல் வாங்கிக் கொடுக்கத் தங்கையில்லை என்று சொல்லிக்கொண்டே அழுதுவிட்டான்.இனிமேலாவது தங்கச்சிப் பாப்பா பிறக்குமா என்று கேட்டதும்.


'ஏ கூறு கெட்ட செம்பட்ட நாயி சும்மா படுத்து தூங்கு'

என்று அவனைப் பிடித்துக் கட்டிக்கொண்டாள்.முனகிக்கொண்டே படுத்திருந்தவனுக்கு தூக்கமும்,கனவும் வந்தது.

அந்தக்கனவில் ஒரு பட்டுப் பாவாடை உடுத்திய தங்கையை கைப் பிடித்தபடி கூல்பானை,தங்கராசு,முனியப்பன்,கொட்டாம்பெட்டி,கந்தசாமி,பவுலு,மாசிலான் வீடுகளுக்கு போய்ப் பெருமையடித்துக்கொண்டான்.விடிந்து எழுந்து கோரப்பாயைத் தடவிப்பார்த்தான் தங்கையும் இல்லை அம்மாவும் இல்லை.இப்படியே காலங்கள் ஓடி நான்காம் வகுப்புக்கு போனபோது பொம்பளப் பிள்ளைகள் பக்கத்தில் ஒரு ஆள் அதிகாமாகத் தெரிந்தது.பிரேமா. கோவில்பட்டியிலிருந்து பள்ளிக்கூடம் மாறி இங்கே வந்திருந்தாள்.அரக்குக்கலர் பட்டுப்பாவாடை,மஞ்சள் சட்டை,சிகப்புக்கலர் ரிப்பன்,பவுடர் முகமாக சினிமாவில் வருகிறமாதிரி இருந்தாள். பயலுகளெல்லாம் பின்னாடி அலைந்தார்கள்.இவனும் அலைந்தான் அண்ணன் முறைக்கு அப்ளிகேசன் வைத்துக்கொண்டு. இவனுக்கு கையெழுத்து அழகாக இருக்கும்.ரேங்கும் முதல் ரேங் அதனால் பிரேமாவும் இவனும் சினேகிதமானார்கள்.அவள் விஷேச நாட்களில் அவள் வீட்டிலிருந்து   முறுக்கு சீடைப் பலகரங்கள் கொண்டுவந்து தருவாள்.இவன் கடலைப்பிஞ்சையில் செடி பிடுங்கி பம்புசெட்டில்  தூர் கழுவி செடியோடு கொண்டுபோய்க் கொடுப்பான்.

ஒரு பங்குனிப்பொங்கலன்று பிரேமா வீட்டுக்கு பொங்கச்சோறு, தேங்காய்ச் சில்லு,திணைமாவு,வாழைப்பழம் எடுத்துக்கொண்டு பிரேமா வீட்டுக்குப் போனான்.வாசலிலேயே நிற்கவைத்து அவளது பாட்டியும்,அம்மாவும் குறுக்குக் கேள்விகள் கேட்டார்கள்.தங்கச்சிக்கு குடுக்கவந்தேன் என்று நீட்டிய எல்லாவற்றையும் புறங்கையால் ஒதுக்கிவிட்டார்கள்.'கன்னியம்மா மகந்தானப்பா நீயி நாங்க குடுக்றத நீங்க திங்கலாம்,ஒங்கவீட்டு திம்பண்டத்த நாங்க தொடக்கூடாது,ஒங்க பிரண்டு பிடிக்றதெல்லாம் பள்ளிக்கொடத்தோட வச்சிக்கொங்க'என்று சொன்னார்கள்.அப்படியே வாய் வரைக்கும் வந்த ஏன் என்கிற கேள்வியைச் சுமந்து கொண்டு வந்து அம்மாவிடம் கேட்டான்.

ஆறாம் வகுப்புக்கு புதூருக்குப்போனபோது பனிரெண்டு பெண்கள் அவனது வகுப்பில்.அங்கேயும் இன்னொரு பிரேமா இருந்தாள் மைதிலி என்கிற பெயரில்.பிரேமா வீடாவது ஓட்டு வீடு மைதிலியின் வீடு அரண்மனை மாதிர்டி இருக்கும்.இரும்புக் கதவுப்பக்கம் கூடப்போக முடியாது. ஆனாலும் வாடகைத்தங்கையோடு முன்று வருடம் படித்தான்.சாத்தூருக்கு சுற்றுப் பயணம் கூட்டிக்கொண்டு போகும்போது அங்கே பாசிமாலை வாங்கி அவளுக்குக்கொடுத்தான்.ஊருக்கு தெற்கே இருக்கும் கம்மாக்கரையில் புளியம்பிஞ்சுகள் பறித்துக்கொண்டுவந்து கொடுத்தான்.மொட்டைப்பனையில் ஏறி கிளிக்குஞ்சு பிடித்துக்கொண்டுவந்து கொடுத்தான்.

கல்லூரிக்குப்போனதும் வல்லம்பட்டி பேருந்தில் வாடிக்கையாக வரும் லச்சுமியாபுரம் சின்னத்தாயை.முறைசாராக்கல்விக்கு ஆசிரியராகப் போனபோது சாத்தூர் அக்ரஹாரத்து கிருஷ்ணவேனியை,இப்படித் தற்காலிகத் தங்கைகளை த்தெரிவு செய்தபடியே பஞ்சாயத்து யூனியன் க்ளார்க்காக மாறினான். காலங்களும்,நடைமுறைகளும் மாறிக்கொண்டே போனது என்றாலும் கருப்பசாமிக்குள்ளிருக்கிற ஏக்கம் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டே  போனது.

இப்படித்தான் ஒருதரம் நடராஜாத்தியேட்டரில் பாசமலர் படம்  பார்க்கப்போனார்கள்.சிவாஜியும் சாவித்திரியும் வருகிற காட்சியெல்லாம் பக்கத்திலிருந்த கல்லூரிப்பையன்கள் கிண்டலடித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் கருப்பசாமியோ கண்ணைக்கசக்கிக் கொண்டிருந்தான்.அது நிழல்,அது ஒரு படைப்பு என்கிற அறிவார்ந்த எல்லை தாண்டி சில வசனங்கள் உலுக்கிவிடும்.எழுந்து பாதியிலேயே வீட்டுக்கு வந்துவிடுவான்.

தர்மபுரியிலிருந்து ஒரு பெண் புதிதாக அவனது அலுவலகத்துக்கு பணிக்குவந்தார்.கருப்பசாமி தான் அவளுக்கு வேலை பழகிக் கொடுத்தான். அந்தப்பெண் சரோஜா தனியாக வீடுபார்க்கிற வரை அவனதுவீட்டிலேயே தங்கவைத்தான் அவளும் குடும்பத்தோடு அண்ணி, மருமகப்பிள்ளை என்று ஒட்டிக்கொண்டாள்.ஆறுமாத அவகாசத்தில் தர்மபுரிப் பக்கமே மாறுதல் வாங்கிக்கொண்டு போய்விட்டாள். இரண்டு வருடம் கழித்து ஒரு திருமணப்பத்திரிகை வந்தது.சரோஜா தான் அனுப்பியிருந்தாள். சேலத்தில் முகூர்த்தம் அதுவும் புதன் கிழமை.ரெண்டுநாள் விடுப்பெடுத்துக்கொண்டு போனான். அலுவலகத்தில் அவனை அறக்கிறுக்கென்று பேசிக் கொண்டார்கள். வாழ்த்தி ஒருதந்தி அனுப்பலாம்,ஒரு நூறு ரூபாய் வரைவோலை எடுத்து அனுப்பலாம் என்னமோ கூடப்பிறந்த தங்கச்சி மாதிரி ரெண்டு நாள் லீவெடுத்து போகனுமா என்று கேட்டார்கள். அண்ணன் என்பது வெறும் எழுத்தோ அவார்த்தையோ இல்லை அது உறவு என்று சொல்லுவான்.முதுகுக்குப் பின்னாடி களுக்கென்று சிரிப்பார்கள். ரோஜாவே சிரித்தாலும்கூட எனக்குக் கவலை இல்லை என்று சொல்லுவான்

சுந்தரவள்ளி வீட்டுக்கு வந்திருந்தாள்.அவளது அண்ணனோடு இடப் பிரச்சினையில் சண்டையாகி பேச்சுவார்த்தை இல்லையாம்.மகளுக்கு தலைக்கு தண்ணீ ஊத்தவேண்டுமாம். தாய்மாமன் வீட்டிலிருந்து துணியும் சீரும் கொண்டு வரவேண்டுமாம். தலையைக்குனிந்தபடியே சொல்லிக்கொண்டிருந்து விட்டு. 'நீங்கதாம்னா தாய்மாமெ முற செய்யனும்' என்று சொன்னதும் கண்கள் பொங்கிக்கொண்டு வந்தது.சட்டையைப் போட்டுக்கொண்டு பால்பாக்கெட் வாங்கப்போவதாக வெளியேறிப்போனான். ஒரு சிகரெட் வாங்கி ப்புகைத்துவிட்டு ஆசுவாசப்படுத்திவிட்டு வீட்டுக்கு வந்தான்.

கருப்பசாமியின் அம்மா போன் பண்ணி 'பித்தள அண்டா வாங்கிருப்பா, பட்டுசேல நல்லதாப்பாத்து வாங்கிரு நீதான்னு வந்துட்டா, அவளும் நீ தூக்கி வளத்தவாதானெ என்று தினம் ஒருதரம் சொல்லிக்கொண்டே போனாள்'.
ஆட்டோ  பிடித்து ஊர் நெருங்கும்போது பரவசமாக இருந்தது.வீட்டில் கொண்டு போய் சாமன்களை இறக்கி வைத்ததும் கூட்டம் கூடியது.கருப்பசாமியும் அவன் மனைவியும் பெருமிதத்தோடு உட்கார்ந்திருக்க இரண்டு நாற்காலிகள் எங்கிருந்தோ கொண்டு வந்தார்கள்.சீரை எடுத்துக்கொண்டு ஊர்வலம் வர ஒத்தையால் கொட்டு வந்திருந்தது.தாம்பூலத்தட்டு எடுத்து கருப்பச்சாமியின் மனைவி மங்களச் சாமான்களை அடுக்கிவைத்தாள்.அப்போது ஒரு வாடகைக் கார் வந்து நின்றது.சுந்தரவள்ளியின் சொந்த அண்ணன் குடும்பத்தோடு வந்து இறங்கினான்.அதைப்பார்த்த சுந்தரவள்ளி குலுங்கிக்குலுங்கி அழுதாள். கருப்பசாமிக்குத் தெரியும் அந்த அழுகையில் பிரிந்தவர் கூடும் வெளிப்பாடு. எத்தனை முறை அழுதிருக்கிறான்.

ஈரத்தின் அர்த்தம்.

பேருந்துக்கு காத்திருந்த
பெரியவரை வலியக் கூப்பிட்டு
நகருக்குள் இறக்கிவிட்ட நேரம்.

பசி நிறைந்த கண்களுக்குள் பார்த்து
பத்துரூபாய் நோட்டை நீட்டிய நேரம்.

பின்னிருக்கை சில்மிஷக்காரன்
தூங்குகிற பாவனையில்
விரல்சுரண்டி விரகம் தீர்த்த போது
யோசிக்காமல் ருத்ரம் கொண்ட நேரம்.

சித்திரை மாத மொட்டை வெயிலில்
குருவிகளுக்குத் தெரியாமல்
குடிநீர் வைத்த நேரம்

கூர்க்கா கேட்ட பத்து ரூபாயோடு
ஒரு சொம்புத் தண்ணீரும் ஒரு குவளைத்
தேநீரும் கொடுத்த நேரம்

மங்கலாகத் தெரிந்த முகங்கள்
தெளிவாகத் திரும்பக் கிடைத்தது...
கவனப்பிசகில் இருசக்கர வாகனம் இடறி
கீழே கிடந்தபோது நீண்ட கைகளின் வழியும்
கண்ணிலிருந்து கிளம்பும் நீர்வழியும்.

3.9.10

வம்சம்,நான் மகான் அல்ல = வேறுவேறு அல்ல.

எப்படித் திருப்பிப்போட்டுப் பார்த்தாலும் ஒரேவகையான கதைகளிலேயே சிக்கிக்கொண்டு கிடக்கிறது தமிழ்சினிமா.முன்பாதி வாழ்வின் அன்னியோன்யங்களையும்,சின்னச்சின்ன மகிழ்ச்சியான தருணங்களையும் செதுக்கிக்கொடுக்கிற இயக்குனர்கள் பின்பாதியில் கொலைகொலையாக் குவிக்கிறார்கள்.கார்த்தி ஐசிஐசிஐ வங்கியின் கடன்தவணை வசூலிக்கப்போகும் காட்சியும் மனிதாபிமானத்தால் பறிபோகும் வேலையும் வேதனைகலந்த விகடம்.அதிலும் கிரிக்கெட் பார்க்கிற குடும்பத்துக்குள் புகுந்து ஒரு கிரிக்கெட் வெறியனாக மாறிப்போகிற போது இயக்குனரின் சமூக எள்ளல் அருமையாக வெளிப்படுகிறது.வம்சம் படத்தில் அம்மா,வீடு,கஞ்சாக்கருப்பு மற்றும் கிராமத்து குசும்புகள்.அதை அப்படியே நான்மகான் அல்லபடத்தில் அம்மா, அப்பா, தங்கை நண்பர்கள் நகரத்து கிறக்கும் தருணங்களாக்கியிருக்கிறார்கள்.

அங்கே எதேச்சையாய் ஒரு பெண் இங்கேயும் கல்யாணவீட்டில் ஒரு பெண்.காதலை முன்மொழிய அங்கு சங்கோஜம் இங்கே மணிரத்னம் ஸ்டைல்.எல்லாச் சினிமாக்களிலும் ஒரே ஒரு டூயட் பாடலில் காதலாகி பாடல் முடிவில் அப்பாக்களுக்கு தெரிவது தமிழ்சினிமாவின் மரபார்ந்த இலக்கணங்களில் ஒன்று. இப்படியே ஒவ்வொரு ப்ரேமாக இரண்டையும் ஒப்பிட்டுக்கொண்டே போகலாம்.இடைவேளையோடு ஒரு திருப்பம் அதிலிருந்து வெள்ளித்திரை முழுக்க ரத்தக்களரி.அந்த ரத்தத்திற்காக எடுத்துக்கொள்ளும் களம் ஒரே வகையான,ஒரே மாதிரியான,ஒரே பக்கமாக சாய்வது இங்கே தவிர்க்கமுடியாததாகிறது.அதுதான் ஏனென்றே விளங்கவில்லை.

எத்தனை கொலைகளைக் காண்பிப்பது, எவ்வளவு குரூரமாய் காண்பிப்பது என்பதில்தான் சமீபத்திய சினிமாக்களுக்குள் போட்டியே நடக்கிறது.ஒரு ஆட்டுக்குட்டியை அறுப்பதற்குக்கூட கரணங்கள் கற்பிக்கிற பரிகாரமும் செய்கிற மனித மான்பைக் கொச்சைப்படுத்துகிற காட்சிகள் அருவருப்பானவை.இன்னொன்று விகட வேடம் பூசிக்கொள்ள இங்கே காலங்காலமாய் கருப்பு மனிதர்கள் தான் தெரிவு செய்யப்படுகிறார்கள்.அந்தப்பீடையிலிருந்து பாலாஜி சக்திவேல்களும்,பாண்டிராஜுக்களும் மீண்டு வரமுடியவில்லை.ஆமாம் இது விஷயத்தில் தமிழ்திரையின் மரபு இன்னும் கற்காலத்திலேயே கிடப்பது வேதனைக்குரிய விடயம்.

இன்னொன்று தமிழ் பேசத்தெரியாதது மட்டுமே நடிகைகளுக்கான உயர்ந்த பட்சத் தகுதியாகிவிட்டது.கலைக்கு மொழியில்லை என்பதை அப்படியே ஏற்றுக்கொள்கிற விரிவு இருந்தாலும்.வடமாநிலப் பெண்களைத் தவிர யாரையும் நடிகையாக்கக் கூடாது என்கிற தமிழ்ச்சினிமாவின் சங்கல்பமும் அதன் சூட்சுமமும் தான் பிடிபடவில்லை.தமிழ்த்திரையின் பாரபட்சமற்ற ஆய்வாளர்கள் இது பற்றி ஏதும் சொல்லியிருக்கிறார்களா ?. அப்படியிருந்தால்  அறியத்தாருங்கள்.

காதல் படத்தில் ஊரைவிட்டு ஓடிப்போன ஜோடிகள் சுகுமாரனின் இருப்பிடத்துக்கு தஞ்சம் புகுவார்கள்.அறையில் தங்கியிருக்கும் சக தோழனின் நண்பனுக்காக தங்களின் குறைந்த பட்ச இருப்பிடத்தையும் விட்டுக்கொடுப்பார்கள்.அந்த கல்யாணத்தைக் கொண்டாடுவார்கள்.இவை எல்லாம் வாழ்க்கையில் எஞ்சியிருக்கிற நம்பிக்கையைத் தூக்கிப்பிடிக்கிற காட்சிகள். ஆனால் நா.ம.அல்ல படத்தில் நம்பி வந்த நண்பனைக் கொன்று விட்டு அவனோடு வந்த பெண்ணைப்பாலியல் பலாத்காரம் செய்கிற இளைஞர்களாக ஒரு குழுவைக் காண்பிப்பது அபத்தம். மிருகங்களில் கூட இப்படியொரு பழக்கம் இருக்கவே முடியாது.அவர்களில் ஒருவன் முஸ்லீமாகவும்,இன்னொருவன் கழுத்தில் சிலுவையைத் தொங்கவிடுவதும் விஷமத்தனமான காட்சிகள்.கல்லூரியில் முதலாண்டு படிக்கிற மாணவர்கள் நான்குபேர் சேர்ந்து ஒரு தொழில் முறை தாதாவை அதுவும் அவரது குப்பத்திலேயே வைத்து ஜஸ்ட் லைக்தட் போட்டுத்தள்ளுவது ரத்தத்தில் தோய்த்தபூவைக் காதில் சுற்றுவதாகும்.நா ம அல்ல படத்தில் கத்தியில் விஷம் தடவிக்கொள்ளுகிற உத்தி,வம்சத்தில் கத்தாழைக்குருத்தில் விஷம் தடவி.

நீங்கள் அப்படியே வம்சம் படத்துக்கு வந்தால் கொலைசெய்வதை ஒரு பாரம்பரியப் பெருமையாகவும்,திருவிழாக்கள் கொலைசெய்ய தேர்வு செய்யும் நேரமாகவும் அர்த்தப்படுத்துகிறார் அன்புத் தம்பி பாண்டியராஜன்.அவ்வளவு நடக்கிற இடத்தில் காவல் துறை கையலாகாததாக இருப்பதுபோலொரு தோற்றத்தைக் கொண்டுவருவது அனுபவ குறைச்சலைக் காட்டுகிறது.அதுவும் ஒரு காவலரே ஒரு ஜாதியின் பெருமையை ஒரு மணிநேரம் காலாட்சேபம் நடத்துகிற மாதிரியான காட்சிகள் பாண்டசி வகையைச் சேர்ந்தவை. லாக்கப் மரணங்களும், லத்திசார்ஜுகளும்,என்கவுண்டர்களும் மலிந்துகிடக்கிற காவல் துறைகுறித்து சின்ன ஞானம் கூட இல்லாததைத்தான் இது காட்டுகிறது.

இந்த தேசம் அதன் கல்விக்கொள்கை.அதன் அயல் கொள்கை.இங்கிருந்து சட்டபூர்வமாய் களவாடப்படும் கனிம வளங்கள்.வேலையில்லாத் திண்டாட்டம் என ஒரு கோடி பிரச்சினைகள் இங்கிருக்கிறது.எல்லாம் விடுபட்ட கேள்விகளாகி கிராமங்களில் அருவா பூத்துக்குலுங்குவதும் அதன் மஹிமை சொல்லுவதும்.நகரத்தில் பேட்டை மக்களை ஒடுக்குவதுமான முரண்பாட்டுடன் கூடிய ஒரே ஸ்டீரியோ டைப் கதைகள்தான் இன்றைய தமிழ்ச்சினிமாவின் விற்பனைப் பொருள்.இதை சிடியில் பார்த்தாலென்ன,பயாஸ்கோப்பு படச்சுருளில் பார்த்தாலென்ன,பென்  ட்ரைவரில் பார்த்தாலென்ன ?