அண்மையில் எழுதிய பக்கங்கள்

20.11.09

மனசுக்குள் சலசலக்கும் பனங்காடு - ( நெடுங்கதையிலிருந்து ஒரு பகுதி )







ஆறுகச்சாமி நாடாருக்கு வெத்திலைதான் உயிர். அந்த அழுக்கேறிப்போன கைவச்ச பனியனும், வெத்திலை வாயும் தான் அவரது அடயாளம். வெத்திலைக்காக அவர் வெள்ளியிலான டப்பாவோ, காடாத்துணியில் அடுக்கு வைத்துத்தைத்த சுருக்குப்பையோ, வைத்திருக்க வில்லை. அதுக்கான தேவையும் இல்லாமலே அவருக்கும் வெத்திலைக்குமான தொடுப்பிருந்தது. அவருக்கு முன்னாலுள்ள மண் கொப்பறையில் ததும்பத் ததும்ப கருத்த வெத்திலை நிறைந்திருக்கும். கொஞ்சம் தள்ளி அஞ்சரைப்பெட்டியில் கொட்டப்பாக்கு கிடக்கும். சுண்ணாம்பிருக்கிற தகர டப்பாவும், அங்குவிலாஸ் போயிலையும் கைக்கெட்டுகிற தூரத்திலேயே இருக்கும். மேல்பரப்புக்கு வந்து மீன்கள் வாய் பிளக்கிற மாதிரி வாயைத்திறந்து கொர் கொர் என தொண்டையிலிருந்து சத்தம் எழுப்பி வெத்திலைச் சாறை வாய்க்குள் தக்கவைத்துக் கொள்வார்.


தூங்குகிற நேரம் போக எந்நேரமும், கன்னத்தின் இடது பக்கம் சிலந்தி மாதிரி பொடப்பா இருக்கும். சாப்பிட, வரக்காப்பி குடிக்க மட்டும் வெளியே வந்து வாய் கொப்பளிப்பார். அது தவிர நாள் முழுக்க சரப்பலகையிலே உட்கார்ந்திருப்பார். குத்துக்காலிட்டு, சம்மணம் கூட்டி, ஒருக்களிச்சு மாறி மாறி உட்கார்ந்து கொண்டு குண்டி காந்தலை தள்ளிப்போடுவார். கருங்காலி மரத்தாலான அந்தக் கல்லாப்பெட்டியில் அய்யாணார் கோயில் எண்ணச்சட்டி மாதிரி அழுக்கேறியிருக்கும். அதற்கு மேலே நீளவாக்கிலுள்ள கணக்கு நோட்டு இருக்கும்.


சாமுவேல் வாத்தியார், காலேஜ் மாடசாமி, பைபிளம்மா, பிரசண்டுசுந்தராசு, பேர்களில் தலைப்புபோட்டு அவருக்கான தமிழில் ஊச்சி ஊச்சியாய் கணக்கெழுதியிருப்பார். காலேஜ் மாடசாமி பொண்டாட்டி வந்து புஸ்த்தகத்தை தூக்கி 'இதென்ன மொலாளி கக்கூசுல எழுதுற கெட்ட கெட்ட வார்த்தையெல்லாம் கணக்கு நோட்டுல எழுதிவச்சிருக்கீரு எங்க மாமா பேரு அஞ்சந்தான'. என்று சொல்லுவது குறித்தெல்லாம் அவருக்கு கவலை கிடையாது. அதற்கவர் மீண்டும் மீன் வாயைப்பிளக்கிற மாதிரி சிரிப்பார். எதிரே நிற்கிரவர்கள் மீது செகப்பா தூறல் விழும். அவர் எழுதுகிற அ வுக்கு கு வுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது.


'எனக்கென்ன தாயி ஓங்க வீட்டுக்காரு மாறி காலேஜிப்படிப்பா கெட்டுப்போச்சு அந்தக்காலத்துல எங்கைய்யா பனைக்கி போயிட்டு வந்து பள்ளிக்கூடத்துக்கு கூட்டிப்போவாரு பிள்ளமாரு வீட்டுப்பிள்ளைகளெல்லாம் பெஞ்சில ஒக்காரும் நாங்க பின்னாடி தரையில அதுக்கும் ப்஢ன்னாடி ஒங்க தெருக்காரப்பிள்ளைக ஒக்காரனும், அதெல்லாம் படிப்பாம்மா' வெத்திலைச்சாறை கொர் கொர் என்று காறி வெளியில் வந்து செகப்பு உருண்டையாய் வெத்திலையைத் துப்பி விட்டு திரும்பவும் ஆரம்பிப்பார். அது இரண்டு தலைமுறைச் சரித்திரம்.


அந்தக் காலத்தில் ஆறுமுகச்சமியின் அய்யா இசக்கிமுத்து நாடார் பனையேறுவதில் நாடறிந்த கெட்டிக்காரர். சுத்துப் பட்டியிலெல்லாம் "பனைக்கி இசக்கி" என்று சொலவடை சொல்லுகிற அளவுக்கு பெரிய வித்தைக்காரர். காலாக்கை இல்லாமல் நிமிசத்தில் பனையுச்சிக்குப் போவதும். கண்மூடி முழிக்குமுன்னே பதினிக்கலயத்தோடு கீழே நடப்பதுவும் பார்ப்பதற்கு கண்கட்டி வித்தை மாதிரி இருக்குமாம். சில நேரங்களில் அருகருகே இருக்கும் பனைகளில் ஒன்றிலிருந்து இறங்காமலே இன்னொரு மரத்துக்குத்தாவி விடுவதால் அவருக்கு ''மாயாவி'' ங்கிற பாட்டப்பெயரும் உண்டாம். அந்தக்காலத்தில் பனை ஏறத் துவங்குகிற எல்லாரும் அவருடைய காலைத் தொட்டுக்கும்பிட்டு விட்டுத்தான் பனையேறுவார்களாம்.


அதுமட்டுமில்லெ தெக்கத்தி கம்புக்கு அவராலாலேயே பேர் வருமளவுக்கு கம்பு விளையாட்டில் அவரே பல புதிய அடிகளையும் அடவுகளையும் உருவாக்கினார். அவர் கம்பு சுத்துவதைப்பார்க்க கொடுத்துவைக்கணும். கம்பைக்கையில் வாங்கி குருவணக்கம் சொல்லி தரைதொட்டுக் கும்பிடுகிற வரைதான் கம்பும் கையும் கண்ணுக்குத்தெரியும். சுத்த ஆரம்பித்ததும் காத்தைக்கிழிக்கிற சத்தம் மட்டுமே உய்ங் உய்ங் என்று கேட்டுக்கொண்டே இருக்குமாம். சில நேரங்களில் சுத்தியும் பத்து எளவட்டங்களை நிற்கச்சொல்லி அவர்களிடம் கல்குமியைக் கொடுத்து எரியச்சொல்வாராம். எல்லாக் கல்லும் கம்பில் பட்டு சிதறுமாம். அவரிடம் வெங்கலப் பூன்போட்ட பிரம்பு போக, சுருள் வாளும், மான் கொம்பும் கூட பள பளப்பாக இருக்குமாம். அந்தக் கதைகள் சொல்லிக் கொண்டிருக்கையில் அவர் கண்களுக்குள் ஒரு பனைக்கூட்டம் கிடந்து சலசலக்கும்.


சின்னப்பிராயத்தில் கஞ்சி கொண்டு போகும்போது ஒவ்வொரு பனைமரத்தையும் எண்ணிக்கொண்டே போவதும் கூட ஆறுமுகச்சாமியின் விளையாட்டுகளில் ஒன்று. முதல் முதலாக அய்யாவோடு பனைக்கூட்டத்துக்குள் நடக்கும்போது காத்தும் பனையோலைச் சலசலப்பும் எங்காவது ஒரு பனை மரத்திலிருந்து இன்னொரு பனையிலிருக்கிற ஆட்களோடு பேசுவது எல்லாமே அமானுஷ்யமாகத்தெரியும். ஒரு பயம் உண்டாகும். ஆனால் அய்யா பக்கத்திலிருப்பதால் அந்தப்பயம் தெரியாது. பழகிப்போன பிறகு பனைகளெல்லாம் சேக்காளி ஆகிப்போனது. அந்தச்சலசலப்பு அவனைக் குசலம் விசாரிக்கிற மாதிரியே இருக்கும். அது அப்பாவின் சேக்காளிகள். அவருக்குப்பிடித்த அந்த மரத்துக்குப் பக்கத்தில் வந்ததும் கஞ்சிச் சட்டியை இறக்கி வைத்து விட்டு அன்னாந்து பாளைகளையும், நுங்குகளையும் பார்த்து பார்த்து தனக்குள்ளே பேசிக்கொள்வது.


திரும்பி வரும் போது எக்குப்போடு ஆறடி ஏழடி ஏறி, பிறகு சறுக்கிக் கீழே விழுந்தது எல்லாம் ஆறுமுகச்சாமிக்கு நினைவுக்கு வந்து போகும். பனையோலைக் குச்சல் தான் வீடு. பனங்காய் வண்டியும், பனமட்டைச் செருப்பும் அய்யா செய்து கொடுப்பார். அந்த வீட்டில் எப்போதும் பதினி வாடையும் கருப்பட்டி வாசமும் அவர்களோடே குடியிருக்கும். பதினிக்காலம் போனபின்னால், பனம்பழம். ஒரே ஒரு பழம் கிடந்தாலும்கூட கனவிலும் கூட இனிக்கிற வாசம் அந்தப் பிரதேசம் முழுக்க பரவியிருக்கும். அப்புறம் அவிச்ச பனங்கிழங்கு. இப்படி திங்கவும், விளாத்திகுளம் சந்தையில் கொண்டுபோய் விற்கவுமாக வருசம் பூராவும் அந்தப் பனைக் கூட்டம் அவர்களுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. அய்யாவும் வீடு திரும்புகிற போது பதினிக் கலயத்துக்குள்ளோ, கையிலோ பண்டமில்லாமல் வரமாட்டார். காலையில் பனங்காட்டுக்குப் போகிற அய்யாவோடு இனிப்பு வடைகள் எப்படி வந்தது என்கிற சந்தேகம் தனக்குப் பிள்ளைகள் பிறக்கிற வரை தீராமலே இருந்தது.

Read more »

18.11.09

கலவரத்தில் நசுங்கிய இயல்பான மனிதாபிமனம்.

மதுரையில் துணிக்கடையில் ஒரு சாத்தூர்க்காரரைப் பார்த்துவிட்டால் உடனே எதோ பொக்கிஷம் கிடைத்தது போல அவர்களைப் பற்றிக் கொள்ளச் சொல்லுகிறது. நீங்க பைபாஸ் ரோட்ல அந்திக்கட வச்சிருக்கீங்கள்ள என்று முகமன் சொல்லிக்கொண்டு சிநேகம் தொடரச் சொல்லுகிறது. சென்னையில் யாரையாவது விருதுநகர் மாவட்டத்து மனிதரைச் சந்திக்க நேர்ந்தால் எதோ உறவுகளைச் சந்திக்க நேர்ந்தது போல ஆகிவிடுகிறது. குண்டூர் தாண்டிவிட்டாலோ ஒட்டு மொத்த தமிழகமும் ஓரினம் ஆகிவிடுகிறது.


இப்படித்தான் கட்டாக் ( ஒரிஸ்ஸா) அகில இந்திய மாநாட்டுக்குப் போகும்போது நாங்கள் 48 பேர் ஒரு முன்பதிவு செய்யப்படாத பெட்டியை ஆக்ரமித்துக் கொண்டோம். கூத்தும் கும்மாளமுமாக கழிந்த ரெண்டு நாள் ரயில் பயணம். யாராவது ப்ரெட் ஆம்லெட் வாங்கினால் அது பல பங்குகளாகப் பிரிக்கப்படும். சிகரெட் குடிக்கிறவர்கள் ஆரம்பத்தில் கர்ணர்களாகவும் நாள் ஆக ஆக 'மாந்தோப்புக்குயிலே சுருளிராஜனாகவும்' எதிர்ப் பரிமாணம் எடுக்கிற விந்தைகள் நடந்தது.மிக நீண்ட கிருஷ்ணா ஆற்றுப் பாலத்தைக் கடந்து ரயில்போகையில் அப்படியே அந்தரத்தில் மிதக்கிற ஆர்ப்பரிப்பு தொற்றிக்கொண்டது. விசாகப்பட்டிணம் நிலையத்தில் சுடச்சுட அவிச்ச முட்டைவாங்கி மிளகாய்ப் பொடி சேர்த்து தின்ற போது பலபேருக்கு பல்விளக்கினோமா எனும் சிந்தனையில்லாமல் போனது.


தேநீர் குடிப்பதுகூட லாகிரி எனக் கருதும் தோழர்கள் கூட கொஞ்சம் சரக்கடித்துவிட்டு மேல்சட்டையை ஏற்றிக்கட்டி நடனம் ஆடியதும். ரெண்டு ரூபாய் சைக்கிள் வாடகையில் நான்குபேர் ஏறிக்கொண்டு கட்டாக் வீதியில் ஒரு ஆளும் கட்சி மந்திரிபோல எழுந்து நின்று வாக்குகேட்டதும். " பேரன்பு கொண்ட கட்டாக நகர வாக்காளப்பெருமக்களே, கெட்டவார்த்தைச் சின்னத்தில் போட்டியிடும் அன்புச் சகோதரர் கணேசன் அவர்களுக்கு வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்யக் கேட்டுக் கொள்கிறேன்" என்று மணியண்ணன் செய்த அட்டகாசம் அந்த நடு ராத்திரி ரெண்டு மணி கட்டாக் வீதியில் இன்னும் உறைந்து கிடக்கிறது.


சுப்புராஜ் அண்ணன் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு, கரம் சாயா, போண்டா வடை, மணிப்பாறைப்பட்டீ, மணிப்பாறைப்பட்டீ.. எனக்கத்திக் கொண்டு ஒரு ரயில் நிலையத்தில் கோணங்கிச் சேட்டை பண்ணிக் கொண்டிருந்தார். அதே ரயிலில் பிரயாணம் செய்த மணிப்பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராணுவவீரர் ஓடி வந்து அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பேர் தூரப்பிரதேசத்தில் கைபற்றிக்கொண்டு பேசிய நெகிழ்வின் தருணங்களை துல்லியப்படுத்துவது எனக்கு கடினம்.


டெல்லி கரோல்பாக் வீதியில் போய்க்கொண்டிருக்கும் போது 'எலே ஞொக்காலி' எனும் வார்த்தையக் கேட்டுப்பாருங்கள் விகல்பமில்லாத தமிழ்ப்பாலருந்திய சந்தோசம் வந்து சேரும். அங்கிருந்து எஸ்ற்றிடி போட்டு வீட்டுக்காரியுடன் பேசும்போதுபெருகும் கண்ணீரும் கதகதப்பும் "எப்ப வருவீக" என்று கேட்கும் போது சுருங்கிப்போகும் உலகத்தூரம். தூரக்கிழக்கு நாடுகளில் எப்படியெனத் தெரியவில்லை இன்னும் அடர்த்தியாக இருக்கலாம்.


ஒரு நாள் சென்னை ஜெமினி பாலத்துக்கிழே இருக்கும் எமரால்டு தியேட்டரில் மமூட்டியின் 1932 படம் பார்க்கப்போனோம்.மாப்ளாக் கலவரத்தின் தியாகத்தோடு ரத்தம் தோய்ந்த வரலாறு அது. நான், மாது, பீகே,சோலைமாணிக்க அண்ணன் எல்லோரும் நுழைவுச்சீட்டுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தோம். அந்த வரிசையில் வேஷ்டி கட்டிய நபர் ஒருவரைப் பார்த்தேன். தெரிந்த முகமாக இருந்தது. மூளையைக் கசக்கிக் கொண்டு இருந்த போது மம்மூட்டியின் ' தின ராத்திரங்கள் ' பற்றி மாது சொல்லிக் கொண்டிருந்தான். அவன் சில நிகழ்வுகளைச் செறிவூட்டிச் சொல்லுவதைக் கேட்கவேண்டும், கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஒரு படைப்பாளி.


சற்று திரும்பிப் பார்த்தபோது அந்த வேஷ்டிக்காரர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். ஒருவர் நம்மை வச்சகண் வாங்காமப் பார்த்தா அது நம்ம முதுகில் குறுகுறுக்குமாம் கிராமத்தில் யாரொ சொல்லக் கேட்டது. அந்த வரிசையில் ஒரு அழகான மண்ணிக்கணும், ஒரு நேர்த்தியாக உடை உடுத்திய வாலிபனும் இன்னொரு விபச்சாரப்பெண்ணும் நொடியில் கண்டதும் காதல் கொண்டார்கள். பிறகு இடைவேளைக்கு முன் அவள் அவனது கைக்கடிகாரம்,மணிப்பர்சுடன் எஸ்கேப்பினாள் அது கிடக்கட்டும் . அந்த வேஷ்டிக்காரர் இப்போதும் கூட குறுகுறு வெனப்பார்த்துக் கொண்டிருந்தார். நான் தனியே போய் யோசித்தேன். ஆமாம் சாத்தூர் முக்குலாந்தக் கல்லில் ஒரு ஆயத்த டெலிபோன் பூத் வைத்திருந்தவர் அவர், எனது நண்பனின் நண்பன் அவரது உடன் பிறந்தவன்.


விடைகிடைத்த சந்தோசத்தில் நேரே போய் ' நீங்க சாத்தூர் தானே ' என்று கேட்டேன். மருண்டு போய் இல்லை என்றார் நீ யாரு என்று கேட்டார் சொன்னேன் நான் சாத்தூரே இல்லை என்று சொல்லிவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டார். நுழைவுச்சீட்டு எடுத்துக்கொண்டு உள்ளே போனோம். நான் மாதுவிடமும் பீகேவிடமும் இதைச்சொன்னேன். அப்போதும் கூட மறைந்திருந்து எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். படம் ஆரம்பிக்குமுன்னாலேயே தியேட்டரைக் காலி செய்துவிட்டுப் போய்விட்டார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. எனது கண்டுபிடிப்பும், விடையும் சிதைந்து போய் நான் மீண்டும் மூளையைக் கசக்கினேன்.


இரண்டு தரப்பிலும் சேர்ந்து மொத்தம் பதினைந்து பேர்களைப்பலி கொண்ட ஒரு கலவரம் நடந்தது சாத்தூரில்.சகஜ வாழ்வு பாதிக்கப்பட்டு ஒரே ஊரில் இருந்த தெருக்கள் வேறு வேறு நாடுகள் போலானது ஓவ்வொரு தெரு முனையிலும் காவலர்கள் உட்கார்ந்து பாண்டியாடிக் கொண்டிருந்தார்கள். சாத்தூரின் தண்ணீர்ப் பஞ்சம் மறந்துபோனது. இரவில் குடங்களோடு தண்ணீருக்கு அலைய பயம் தடுத்தது. நாய்களும் காற்றும் மட்டுமே பயமில்லாமல் அங்குமிங்கும் அலைந்தது. அப்படி ஒரு கலவரம் சாத்தூரில் முன்னதாக நடந்திருந்தது.


நெடுநாள் கழித்து சாத்தூரில் நடந்த ஜாதிக் கலவரத்தில் தொடர்புடையவர் பட்டியலில் அவரும் ஒருவர் எனத்தெரிந்து கொண்டபோது இன்னும் பல விடை கிடைக்காத மனிதாபிமானக் கேள்விகள் என்னைச் சூழ்ந்துகொண்டது.
Read more »

17.11.09

சச்சின் - தாக்கரே அவியல், பாப்லோ நெருடா - பால்பாயாசம்

''மும்பை இந்தியர்கள் எல்லோருக்கும் சொந்தமானது"இப்படிச் சொன்னதன் மூலம் நட்சத்திர மட்டை ஆட்டக்காரர் தெண்டுல்கர் பிரிந்துகிடக்கும் சிவசேனை மற்றும் மஹராஸ்ட்ர நவநிர்மான் கட்சிகளின் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார்.


'' இது சச்சினுக்கு நல்லதல்ல, இது போன்ற கருத்துக்களைக் கூறி அவர் தனிமைப்பட வேண்டியதில்லை, ஆட்ட மைதானத்தின் எல்லைக் கோட்டிலிருந்து வெளியேறி அரசியல் எல்லைக் கோட்டிற்குள் அநாவசியமாக நுழைகிறார் " என்று கூறி பகிரங்க மிரட்டலை தனது சாம்னா இதழின் வழியே பிரகடனப்படுத்துகிறார் பால்தாக்கரே.


மராட்டியம் மராட்டியர்களுக்கு, மும்பை சிவசேனைக்கு, மராட்டியத்தில் இருக்கும் அரசு காலியிடங்கள் மராட்டியர்களுக்கு,இப்படியே நீண்டுகொண்டு போய் இப்போது அரசியல் ரவுடிகளுக்கு மட்டும் தான் என்பதை சட்டபூர்வமாக்கவேண்டும் என்பதுபோல அறிக்கை விட்டிருக்கிறார். சச்சின் தனது விளையாட்டில் சேகரித்த ஓட்ட எண்ணிக்கையின் மூலம் இந்திய ரூபாயின் மேல் கணிசமான தொகைக்கு கருப்பு மை பூசியிருக்கிறார். அது எந்தக் காலத்திலும் விவாதப் பொருளாகாது. நீ அங்கே இருந்து சம்பாதித்துக்கொள் எனது ஏரியாவுக்குள் வராதே என்பதைப் போல மிரட்டல் வந்திருக்கிறது.


எல்லைகள் தாண்டக்கூடது எனும் பழைய law of retaining discremination விதியின் நடைமுறையை அர்த்தத்தை பால்தாக்கரே குண்டாந்தடியின் குரலில் கூறுகிறார். பிரிவினை வாதத்தின் உடனடி உதாராணம் பங்காளிச்சண்டை.


0


அது கிடக்கட்டும் .....


எல்லைகளுக்குள் அடங்காதவர்கள் கவிஞர்கள். அப்படி ஒருவன் புத்தகம் பற்றிச் சொன்னதைப் பாருங்கள். சிலிக்குயில் எனப் போற்றப்படும் பாப்லோ நெருதா. விருதுகளும், வெகுமதிகளும் ஆசையோடு 'என் தோழனே' என நீளும் சுரங்கத் தொழிலாளியின் கையில் ஒட்டியிருக்கும் அலுமினியத் துகள் என் கைக்கு வருவதையே விருதாகக் கருதுவேன் என்று சொன்னவன் பாப்லோ நெரூதா.


புத்தகமே,

என் கவிதைகள்

கவிதைகளைத் தின்பதில்லை.

புத்தகமே,

காலணியில் புழுதி படிய

சாலைகளில் நான் நடப்பேன்

நீ உன் நூலகத்துக்கு

திரும்பிப் போ.

வாழ்க்கையை நான்

வாழ்க்கையிலிருந்து

கற்றுக்கொண்டேன்.

காதலை

ஒரு முத்தத்திலிருந்து

கற்றுக்கொண்டேன்.


Read more »

16.11.09

அறியாமையின் மூலதனத்தில் கட்டிய கோட்டைகள்


இந்திய விடுதலைக்குப் பின் பிராந்திய வாரி மாநிலங்கள் எனும் கொள்கை மாற்றப்பட்டு மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. மஹாராஷ்ட்ரா ப்ரசிடென்சி மாநிலத்தில் இருந்த குஜராத்தும், மஹாரஷ்ற்றாவும் 1960 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. இந்தியாவின் பொருளாதாரத் தலைநகராக விளங்கிய அந்நாளைய பம்பாய் நகரின் பெருமுதலாளிகள்குஜராத்திகளாகவும், மார்வாரிகளாகவும் மட்டுமே இருந்தார்கள். தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்கள் தங்களை மூளை உழைப்புக்கு உட்படுத்திக்கொண்டு அதன் மூலம் தங்கள் இருப்பை நிலை நாட்டிக்கொண்டார்கள். அரசாங்க,தொழில் நிறுவண, அதிகாரத்தில் தென்னிந்தியர்களே பெருவாரியாக இருந்தார்கள். இதுவே அவர்களின் சொந்தங்களை வரவழைத்து அலுவலக பதவிகளில் இருத்திக்கொள்ள ஏதுவானதாக இருந்தது.


மும்பைவாசியான பாலசாஹேப் தாக்கரே எனும் கருத்துப்பட ஓவியர் குடியேற்ற வாசிகளை நையாண்டி செய்து மர்மிக் வார இதழில் படங்கள் வெளியிட்டதன் மூலம் பிரபலமனார். அந்த பிரபலத்தின் மூலதனத்தில் 1966 ஜூன் மாதம் 16 ஆம் தேதி சிவசேனைக் கட்சியை ஆரம்பித்தார். மண்ணின் மைந்தர்கள் கோஷத்தோடு துவக்கப்பட்ட இந்த இயக்கம் ஒரு கட்சியாகப் பரிணமிக்குமுன் கணக்கிலடங்கா வன்முறைகளை தென்னிந்தியர்கள் மீது பிரயோகித்தது. தென்னிந்தியர்களின்உணவுவிடுதிகளை கட்டாயமாக மராத்தியர்களுக்கு கைமாற்றியது.


அறுபதுகளில் பம்பாய் தொழில் நகரத்தின் தொழிலாளர்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த கம்யூனிஸ்டுகளை சீர்குழைக்க தொழிலதிபர்களும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் சிவசேனாவுடன் கூட்டு சேர்ந்தது. அடிப்படையில் இந்துத்துவ கொள்கைகளோடு கிளம்பிய சிவசேனாவுக்கு கம்யூனிஸ்டுகளை அழிப்பது லட்டு சாப்பிடுகிற மாதிரியான ஒப்பந்தமானது. 1970 ஆம் ஆண்டு தாதர் பகுதி சட்டமன்ற உறுப்பினர் கிஷன்தேசயைப் படுகொலை செய்யப்பட்டார். உலகமெங்கும் வலதுசாரிகளின்வளர்ச்சி பொதுவுடமை வாதிகளின் உயிர்ப்பலியினாலேயே நிர்மாணிக்கப்படுகிறது.


1995 தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்து வெற்றிபெற்றது. இந்த இடைப்பட்ட காலத்தில் சிவசேனைக் கட்சியில் சந்தோசங்களும், வெறுப்புகளும் மும்பை நகரத்தின் இயலபை மோசமாக உலுக்கியது. பால்தாக்கரேயின் மனைவி மீனாத்தாய் கேவலமாக சித்தரிக்கப்பட்டதாக புரளி கிளப்பி இரண்டு வாரங்கள் மராட்டியம் சிதைக்கப்பட்டது. 2005 ல் நாராயண் ரானே கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதைக் கண்டித்து பால்தாக்கரேயின் மருமகன் ராஜ் தாக்கரே '' மஹராஸ்ட்ர நவ நிர்மான் சேனா'' என்கிற புதுக்கட்சியை ஆரம்பித்தார். இரு பிரிவுகளும் பலமாக மோதிக்கொண்டன. இருப்பினும் தனியே வந்த ராஜ்தக்கரே அவர்களின் பிரதான விதை முதலான தமிழர், கம்யூனிஸ்ட், எதிர்ப்பை விட்டுக் கொடுக்கவில்லை.

2008 அக்டோபர் 19 ஆம் தேதி நடைபெற்ற ரயில்வே சர்வீஸ் கமிசன் தேர்வெழுத வந்த பீகாரிகளையும், குஜராத்திகளையும் தேர்வு அரைக்கு வெளியே இழுத்துப் போட்டு அடித்தது எம் என் எஸ் கட்சி. சமீபத்திய தேர்தலில் வெற்றிபெற்ற சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினர் திரு ஆஸ்மி இந்தியில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட போது அவரை சட்டமன்றத்துக்கு உள்ளேயே தாக்கியது. எம் என் எஸ் கட்சி இப்போது பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகத்துக்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதி புது பூதத்தைக் கிளப்பியிருக்கிறது. நடைபெறவிருக்கும் 1100 எழுத்தர் பதவிக்கான தேர்வில் மராட்டியகர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என மிரட்டல் விடப்பட்டிருக்கிறது.


ஒரே நாடு ஒரே மதம் எனும் சொல்லும் கூட ஒரு தேர்தல் கால காரட் என்பதை அவர்கள் திட்டவட்டமாக நிரூபிக்கிறார்கள். அஸ்ஸாமில்,கர்நாடகாவில்,மும்பையில்,காவிரி,முல்லைப்பெரியாறு என தேசமெங்கும் தங்கள் மண்ணின் மைந்தர் கோஷங்களோடு கிளம்பியிருக்கிறது பிரதேச வெறிக்கூச்சல் பரிவாரங்கள்.


யாதும் ஊரே யவரும் கேளிர், திரைகடலோடியும் திரவியம் தேடு, கங்கை நதிப்புரத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்வோம், சரே ஜகாசே அச்சா,இந்தூஸுத்தான் ஹமாரா, ஜனகனமங்கள தாயக ஜயகே, எனும் பாடல்களில் பொதிந்து கிடக்கும் உணர்வுகளைப் பிரித்தெரியும் இந்த வெறியின் பின்னால் அப்பட்டமான சுயலாபம் மட்டுமே பொதிந்து கிடக்கிறது. அதைச்சரி செய்யவோ தடுக்கவோ எந்த திட்டமும் இல்லாது வெற்றுடம்பாய் கிடக்கிறது சமகால அரசியல் . எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்க லாயக்கற்றுக் கைபிசைகிறது மத்திய அரசு. இது ஒரு புறம்.


ஆயிரமாயிரமாண்டு காலம் வஞ்சிக்கப்பட்ட உழைக்கும், பிற்படுத்தப்பட்ட, மலைவாழ், தாழ்த்தப்பட்ட ஜனங்களின் உயிர் வாழ்வாதாரமான கோரிக்கைகளை ஒட்டுமொத்த பலத்தைப் பிரயோகித்து அடக்குகிற சூது இன்னொரு புறமாக இருக்கிறது. இந்த இரட்டை அனுகுமுறைகளுக்குள் மறைந்திருக்கும் சூழ்ச்சியை அறியாத ஜனங்கள்தான் இன்னும் பாரதி சொன்னது போலகஞ்சி குடிப்பதற்கிலாமலும் அதன் காரணம் அறியாமலும் உழன்று கொண்டிருக்கிறார்கள். என்ன கொடுமை என்றால் அவர்கள்தான் என்பது சதம் இடம் அடைக்கிற இந்தியர்கள்.

நன்றி, விக்கிபீடியா,ஆனந்த் டெல்தும்டே( கயர்லாஞ்சி ),கூகுள் செய்தி

Read more »

14.11.09

பொதுவின் தூதர்கள்.







தரையை நோக்கி நீளும்
விழுதின் நுனியில் பூத்திருக்கும்
தளிர் மஞ்சள் நிறத்தில்
குழந்தைகளின் பிஞ்சு விரல்களையும்.

இதுவரை எழுதப்படாத
சொல்கொண்டு சிதறும்
வார்த்தைகளில் உலகமகா
இசை மீட்டலையும்

முகத்தில் ஒண்ணுக்கிருந்த
பொக்கிஷ நாட்களைச்
நாட்களைச்சேமிக்க பனித்த
உன்சிரிப்பாணியாய்கிடக்கிற
குழந்தைகள் உலகம்.

எந்த தேசத்துக்
குழந்தையின் புகைப்படமும்
எனது குழந்தையின் சாயலைப்
பிரதிபலிக்கிற பொதுவின் தூதர்களாகவும்


காக்கைக்கு தன்குஞ்செப்படியோ


உலகிற்கு எல்லாமே பொன்குஞ்சு.




Read more »

12.11.09

பனியில் விழித்திருக்கும் நரகச் சாமம்.

தேநீர்க் கொப்பறைகளின் வெப்பத்தில்
வாழ்வு துவக்கும் டீ மாஸ்டர்கள்.
கடந்துபோன பேருந்துக்கும்
வரப்போகும் பேருந்துக்குமான
நிச்சயமற்ற இடைவெளியில்
கண்ணசரும் ஆட்டோக்காரர்.


அணைத்த பீடியைமீளக் கொழுத்தி
இச்சைக் கதையும் ஹெர்பல்புகையும்
விட்டதிலிருந்து தொடரும் ரிக்சாக்காரர்.
மரவட்டப்பூச்சிகளை ஞாபகப்படுத்தியபடி
படுத்துறங்கும் இலக்கமில்லா தெருவாசி.
முதல் பேருந்துக்காக விநாடி விநாடியாய்
கழித்துக் காத்திருக்கும் கிராமவாசி.


ஒற்றை விசில் அலறலோடு
மிதிவண்டிகளைப் பின்னிழுக்கும்
கூர்க்காவின்மலைப் புலத்து ஏக்கங்கள்.
நேற்றைய சுவடுகளில் மஞ்சள்
கவியெழுதும் நியான் ஒளியும்

உறங்கக் காத்திருக்கும் விடியல்தேடி.


Read more »

11.11.09

கானாமல் போன சாமி - சிறுகதை

சின்னக்காள் வேகு வேகென்று நடந்து வந்தாள். அவளை விட வேகமாய் இருட்டு முந்திக்கொண்டு வந்தது. இன்னும் செத்த நேரத்தில் தெருலைட் போட்டு விடுவார்கள். சங்கனை நினைக்க நினைக்க உடல் நடுங்கியது இன்னைக்கு எதால் அடிப்பானோ. ஆப்பக்கனையோ, கலிமட்டையோ, விளக்கமாரோ. பிள்ளைமார் நல்லதண்னிக் கிணத்துப்பக்கத்தில் வந்து விட்டாள். அங்கே புளியமரங்கள் குவிந்திருந்தது. பனை மர உயரத்துக்கும் மேலிருக்கிற அதன் ஆஜானுபாகுத்தோற்றம் ஊர்தாண்டியவுடனே பசக்கென்று கண்ணிழுக்கும். மேலப்புதூரிலிருந்து வெயிலில் நடந்து வருபவர்கள், கம்மாப்பட்டிக்காட்டுக்கு களயெடுக்கப்போனவர்கள், வயக்காட்டுக்கு தொலி வெட்டப்போனவர்கள் எல்லோரும் அங்கே தான் அஞ்சு நிமிசம் நின்று, காலாத்திக்கொண்டு போவார்கள். சித்திரை மாதத்தில் புளி கொத்தாய் காய்த்துத் தொங்கும். ஆணும் பொன்னும் கல்லெடுத்து வீசி, பழம் எடுத்து எச்சில் ஊறத்தின்றுகொண்டு போவார்கள்.


அது குத்தகைக்கு விடுகிற வரைதான். அதற்குப்பிறகு சங்கரநத்தத்து கருப்பசாமித்தேவரின் மீசையும் குரலும் அவரில்லாத வேளைகூடப் பயமுறுத்தும். அதுக்குக் காக்காத்தோப்பு என்று ஏன் பெயர் வந்தது என்று தெரியவில்லை. ஒரு காலத்தில் அங்கே பூந்தோட்டம் இருந்ததற்கான அடையாளமாக ஒரு வெள்ளரளிச்செடி இருந்தது. பக்கத்தில் பிள்ளையார் கோவில் ஒன்று இருக்கிறது. அதற்குச் சவரட்ணைகள் செய்ய தோப்பும் பூங்காவும் இருந்திருக்க வேண்டும். பிள்ளையார் கோவில் உள்ளும் புறமும் கருங்கல்லால் கட்டப்பட்டிருக்கும். ஒவ்வொரு கல்லும் கண்ணங்கரேன்று நாலு முதல் ஆறடி வரைக்கும் இருக்கும். ஓட்டார் மாமனும், கருப்பசாமிச்சித்தப்பாவும் அதை எப்படி சைசாக்கியிருப்பார்கள் எத்தனை பேர் சேர்ந்து தூக்கிவைத்திருப்பார்கள் என்று பேசிக்கொண்டு அந்தக் கல்மண்டபத்தில் உட்கார்ந்துதான் சீட்டு விளையாடுவார்கள். பெரியவர்கள் பாஞ்சாம் புலி ஆடுவார்கள். தரத்துப் பையன்கள் தாயம் விளையாடுவார்கள்.


ரெண்டு பேர் கட்டிப்பிடிக்கமுடியாத பெரியதூண்களையெல்லாம் பூதங்கள் தான் தூக்கி வைத்திருக்க வேண்டும் என்று மூனுகாது மாரிமுத்து சோல்லுவதை நம்பித்தான் ஆக வேண்டும். தர்க்கம் பண்ணவும் ஆராய்ச்சி பண்ணவும் எசக்கில்லை. ஆனால் அதைவிட பெரிய தூண்களை சைஸ் போடச்சொன்னால் நா வாரேன் நீ வாரேன்னு போட்டிபோட்டு உடைத்துக்கொடுக்க ஊர் முழுக்க ஆளிருக்கிறது. வெட்டிப்பொழுதுகளில் அந்தக் கல்மண்டபத்தில் சீட்டாடவும், துண்டைவிரித்து புளிய மர நிழலில் வாயைப்பிளந்து தூங்கவும் வந்துவிடுவார்கள். ஊரைத்தாண்டி இருப்பதால் பொண்டாட்டிம்மார்களின் தொல்லையும், போலிஸ்காரங்க தொல்லையும் ஜாஸ்த்தி இருக்காது. குருவம்மாதான் அப்பப்போ வருவாள். வருப்போதெல்லாம் கையில் பனைமாரு இருக்கும்.


'' எலே ஒனக்கு அறிவில்ல, கலிக்கிண்ட வச்சிருந்த கேப்பமாவத் தூக்கி வித்துட்டு வந்து வட்டப்பாச்சால போற்றுக்கிய, ராத்திரிக்கி என்ன ஓடைக்கா போவெ '' காது கேட்காதது போல மும்முரமாக சீட்டைப் பிதுக்கிக்கொண்டிருக்கும் ஆசிர்வாதம் பதிமூனு சீட்டுக்குள் அனுக்கதிர்கள் இருப்பதுபோல ஆராய்ச்சி பண்ணிக்கொண்டிருப்பான்.


'' யப்பா ஓந்தாயார் வந்துட்டாங்க, போயிரு ''அவனைத்தவிர எல்லோரும் திரும்பிப் பார்ப்பார்கள். ''ஏ.. இன்னைக்கு புது வெளக்கமாரு வந்துருக்கு....... கலிக்கிண்ட கேப்பையில்லாட்டாக்கூட தெனம் தெனம் புதுசுதா''கூட்டத்துக்குள் யாராவது சொல்லுவார்கள். ''அடே சின்னப்பெயலே மரியாதையா எந்திரிச்சி வாரயா நா அங்க வரவா''குருவம்மா அடுத்த சுற்று ஆரம்பிப்பாள். '' நீ மூத்தவன் இல்லையா......? கடக்குட்டிதானா........? ''சில்லான் சொல்லவும் மற்றவர்கள், சிரிக்க ஆரம்பிப்பார்கள்.


'' இந்தா.....ஒங்க வீட்கள்ள ரொம்ப ஒழுங்கு தா, அன்னைக்கி கலிமட்டைய வச்சி ஓம்பொண்டாட்டி வெளுத்தத மறந்தாச்சோ'' ஆசிர்வாதன உட்டுட்டு அடுத்த தலைக்கு அம்பு பாயும். '' என்னருந்தாலு அது நாலு சொவத்துக்குள்ள,.. இது நரிக்கொறத்தி மாதிரில்ல இருக்கு..''சில்லான் சொல்லவும் குபீர்னு சிரிப்பு வரும். இப்படி குருவம்மா அங்கிருந்து பாட்டுப்பாட இங்கிருந்து எதிர்ப்பாட்டுப்பாட சிரிப்பும் வசவுமா தேரம் கழியும்.


'' எலே ஊரே சிரிக்கிது, எந்திரிச்சி ஒம்பொண்டாட்டிய என்னனு கேட்டுட்டு வாடா''கருப்பணப் பெருசு சொல்லவும். '' சீட்டுருக்கில்ல பெரியா '' '' ஆமா நொட்டுன கடசியில எப்டியும் புல்லு தாங் கொடுக்கப் போற, அதுக்கு இப்பக்கவுத்துனா... ஆப் தா வரும்,. இங்க பாரு ஜோக்கர கழட்டிப்பொடுறத ஏ....போடாக் கீர, கீர....முண்ட''சீட்டைச் சொத்தென்று எரிந்துவிட்டு ஆங்காரத்தோடு எழுந்து போவான். '' இன்னைக்கி ரணகளம்தான், ஏ சீட்ட நிப்பாட்டுங்கப்பா குருச்சேத்திரம் பாக்கலாம் '' '' ஆமா போனாலும் அந்தானக்கி.... போனதும் பொசுக்குனு படத்தப்போற்றுவாம்பாரு ''அவர்கள் சொன்னபடியே அவள் ரெண்டு வசவு வைவாள், அடிக்கப்போவது மாதிரி இவன் கைதூக்குவான், பிறகு கையிலிருக்கிற பத்து ரூபாயைக் கொடுக்கவும், சமாதானமாகிப் போய் விடுவாள்.


எலவந்தூர்க்காரியும் வந்த புதுசில், என்னங்க மாமா, போங்க மாமா என்றுதான் சொன்னாள். தெருச்சண்டையில் கெட்ட வசவுகள் கேட்டால் காது பொத்திக்கொள்ளும் நாகரீகக்காரியாகத்தானிருந்தாள். சனங்கள் சொல்வதுபோல ஊர்த்தண்ணியக்குடித்ததும் அவளுக்கும் வாயில் நாற வார்த்தைகள் தன்னாலே வந்தது. இல்லாவிட்டால் அந்த ஊருக்குள் காலந்தள்ள முடியாது. பைபிளம்மாப்பட்டிக்கு மட்டும் தான், ரெண்டு கொரிந்தியர், மத்தேயு எழுதின சுவிசேசம் பத்தாவது அதிகாரம், ஐந்தாவது வசனம் என்பதைத்தவிர வேறு வார்த்தைகள் வாய்க்குள் நுழையாது. ஏ சாத்தானே, கள்ளக்கழுத என்ற வார்தைகள் வந்தால் உச்சபட்சக்கொபத்தில் இருக்கிறதென்று அர்த்தம். மத்தபடி ஊரில் எல்லோருக்கும் கெட்ட வார்த்தைகள் இணைப்பு வார்த்தைகளாகி சந்தோசத்திலும், கோபத்திலும் கொப்பளிக்கும்.


ஆனால் அண்ணன் தம்பிகள், ஊர்ப்பெரியவர்கள், படிக்கிற பையன்களைப் பார்த்தால் பிரம்மாஸ்த்திர வசவுகளைப்பதுக்கிக்கொள்வது ஊர்ப்பெண்களின் இயல்பிலே குடியிருந்தது. கொட்டடடித்துக்கொண்டு தெருவழிப்போகும் எல்லா ஊர்வலங்களும், வேதக்கோயிலின் முன்னால் வந்தவுடன் சுத்தமாக நிறுத்தி நடந்து வாசல் தாண்டியவுடன் ரண்டனக்க, ரண்டனக்க எனும் உச்ச சுதிக்கு போவது போலொரு அணிச்சை மரியாதை இருக்கும். தெக்கு ஓடை பெண்களுக்கு அதனால், வடக்கு குளத்துப்பக்கம் பெண்கள் நடமாட்டம் அறவே இருக்காது. அது போலவே ஊரை ஒட்டி இருக்கிற கனி நாடார் பம்புசெட்டில் ஆம்பளைகள் குளித்தால் ஐ கோர்ட்டுக்கு வரை பெண்கள் போவார்கள். இவை யாவும் வேலிகளல்ல, மரியாதை வளையங்கள். இதைத்தாண்டிப்போகக்கூடாது எனும் கடுஞ்சட்டமும் கிடையாது, தாண்டியவர்களுக்கு தண்டனையும் கிடையாது.


'' ஏ.... ஒம்பூன வீடுமொழஞ்சி ஆனச்சட்டிய நக்குது '' என்று சொல்லுவதில் ஒரு செய்தியும், எச்சரிக்கையும் இருப்பது போல, '' ஓங் கோழிய ஒழுங்கா பஞ்சாரக்கூடைக்குள்ள பொத்திப்போடு '' என்பதிலும் எதிர் சமிக்கை மறைந்திருக்கும். அதே மாதிரி அந்த ஊர் முளைத்த நாளிலிருந்து வெள்ளைச்சேலையே யாரும் உடுத்தவில்லை. வருசம் திரும்பக்காத்திருந்து மறுதாலி வாங்கிக்கொள்ளும் தமிழ்பெண்கள் நிறைந்திருந்தார்கள்.ஒரு குச்சியை முறித்துப்போட்டு பருசப்பணத்தை திருப்பி வாங்கி பெண் வீட்டாருக்கு கொடுத்து விட்டு, ஊர்க்காரர்களுக்கு வெத்திலை பாக்கு வைத்து பிரிந்து போகும் கல்யாணங்கள். அது போலவே பிடிபட்டால் அண்ணாக்கயிறை அறுத்து தாலியாக்கிச் சேர்த்து வைக்கிற கட்டாயக்கல்யாணங்களும் சாதாரணம்.


ஆனாலும் கூட ரெண்டு வருசமாகத் தீராமலிருந்தது சின்னக்காளின் வழக்குத்தான். இதுவரைக்கும் ஆறு முறை பஞ்சாயத்துக்கூடியிருக்கிறது. ஒவ்வொரு தடவையும் சனிக்கிழமைதான் நடக்கும். ராத்திரி ஆரம்பிக்கிற கூட்டம் விடிய விடிய நடப்பதால் அப்படியே விடிகிற நேரம் கறிப்போட ஆள்கிளம்பும். கறியெடுத்து வதக்கி சாராயம் ஊத்திக்கிட்டு மறுநாள் தூங்கிப்போகலாம். ஒவ்வொரு தரமும் சங்கன் தான் பிராது கொடுப்பான் எனக்கு அவள் வேண்டாமே......வேண்டாமென்றும் தீர்த்து விட்டுவிடவேண்டுமென்றும், சாம்பான் வீட்டுக்கும், தங்கிளியான் வீட்டுக்கும் நடையாய் நடப்பான். வெதப்பு அறுப்பு காலங்களைத் தவிர்த்துவிட்டு சாவகாசமான நாள்குறித்து ஊர்சாட்டுவார்கள்.


''இன்னைக்கி ஒரு தேங்காயும் ஒரு கட்டு வெத்திலயும் மாரியப்ப நாடார் கடையில் வித்துப்போகும்டியோய்''சொல்லிக்கொண்டே ஊர்கூடும், ஊரென்றால் மொத்த ஊரல்ல பிராதுகுடுத்த சங்கன், சங்கனின் வலசல் பத்துப்பேர். எதிர்ப்பிராதுகுடுத்த சின்னக்காள், சின்னக்காளின் வலசல் அஞ்சு பேர். ஊர்த்தலைவர், சாம்பான், தங்கிளியான், அப்புறம் தெண்டப்பணத்தில் தண்ணியடிக்க ஆறுபேர் உட்கார்ந்திருப்பார்கள். சுவாரஸ்ய ஈர்ப்பில் எட்டத்தில் நிறைய்யப் பெண்கள் நின்றிருப்பார்கள்.


அச்சடிக்கப்பட்ட சட்டதிட்டங்கள் இல்லாதபோதும், ஆண்டை அடிமை இல்லாததாலும், அந்த துலாக்கோளுக்கென்றும் சேதம் வந்ததில்லை. கருப்பணப்பெருசின் வலசல்கள் பிராதுக்குள் வராதவரை நீதி ஒருபோதும் வழுவாது. ஆனாலும் சின்னக்காளின் வழக்குத்தானின்னும் தீர்ந்பாட்டில்லை. அது தொடங்கிய இடத்துக்கே வந்துவிடும் '' எங்கள வேல வெட்டியில்லாத சும்பப்பெயகன்னு நெனச்சியா, இன்னுமே ஊரக்கூட்டுன தாயோளி..ஊரவிட்டே வெரெட்டிப்பிடுவேன் கீர... கீரமுண்ட '' வேட்டிமண்ணைத் தட்டிக்கொண்டே இன்னும் கூடுதல் அடைமொழிகளோடு திட்டித்தீர்த்து விட்டு சீட்டு விளையாடப்போய்விடுவார் கருப்பணப்பெருசு.


தாழ்வாரத்தில் படுப்பதா, வீட்டுக்குள் படுப்பதா எனும் குழப்பத்திலேயே அவனது ராத்திரி கழிந்துவிடும். சின்னக்காள் கண்முழிக்கிற நேரமெல்லாம் குத்துக்காலிட்டு உட்கார்ந்துகொடு பீடியைக்குடித்துக்கொண்டிருப்பான். சாமத்திற்குப்பிறகு கண்ணயர்ந்து ஒரு கோழித்தூக்கம்போட்டு அவனுக்கு விடியும் போது ஊர் சுறு சுறுப்பாக வேலைக்குக் கிளம்பிக்கொண்டிருக்கும். பொண்டாட்டி காணாமல் போயிருக்க, ஊரிலுள்ள சோக்குப்பேர்வழிகள் எல்லோரும் வில்லனாகத்தெரியவார்கள். பருத்திக்காட்டுக்கு களை எடுக்கப்போய்த்திரும்பி வருகிற அவளை கண்ணால் சோதனை போடவும், கேள்விகளால் தீக்குளிக்க வைப்பதும் சகிக்காமல் பூட்டிவைத்த வயைதிறப்பாள். சாம தான பேதம் தீர்ந்து கடசியில் சண்டை வந்துசேரும். ஒண்ணுரெண்டாய் ஊர்த்தலைகள் கூடி கூத்துப்பார்க்கும்.


அடுத்த நாள் மூஞ்சி முகம் வீங்கிப்போக சங்கன் வேலைக்குப்போவான் சின்னக்காள் மட்டும் விடுப்பெடுக்க நேரும். வருசத்துக்கு மூனு தரம் கோபித்துக்கொண்டு மலைப்பட்டியிலிருக்கும் தாய் வீடு போவாள். ஒரு மாதம் கழித்து வந்து சங்கன் பாவம்போல நிற்கிறதைப்பார்த்து மனசிறங்கிப்போய் திரும்பிவருவாள். இப்படியே ஆறு வருசம் ஓடிப்போனது. இப்போது அங்கும் போவதற்கும் வழியில்லாமல் பெத்தவளும் போய்ச் சேர்ந்துவிட்டாள். இந்த ஆறு வருசம் சந்தோசச் சுவடுகள் ஏதுமற்ற வெட்டவெளியாக கடந்துபோனது. நாலு வார்த்தை சிரித்துப்பேசவும், தோளில் கிடந்து கண் மூடவுமான ஏக்கம் கெட்டிதட்டிப்போய்விட்டது. இந்த இண்டஞ்செடிப்புதருக்குள்ளிருந்து வெளிவர வழிதெரியாமல், சில நேரம் அரளி அரைத்து நல்லெண்ணெய் சேர்த்து இரவு வரக்காத்திருப்பாள். ஆனால் அன்று மட்டும் பாசக்காரனாகத் தெரிவான். மறு நாள் விடிகிற போது, சங்கனின் கண்களில் இன்னும் ஆயிரம் மடங்கு சந்தேகம் தேங்கியிருக்கும். அப்போதெல்லாம் அவளை உரசிப்போகிற சினையாடு தான் இண்டஞ் செடியைத் தாண்ட தடம் தரும். குனிந்து கழனித் ததண்ணீர் காட்டும்போது முகம் உரசும். காட்டுக்கு பிடித்துக்கொண்டுபோகும் போது துள்ளியோடி திரும்பி வந்து பிருஷ்டத்தில் பொய்முட்டு முட்டி விளையாடும். சேலைத் தலைப்பைக் கடித்து இழுக்கும். அந்த ஆட்டின் கையில் தான் இவளைக்கட்டியிழுக்கிற பாசக்கயிறு இருந்தது.


சின்னக்காள் வேகு வேகென நடந்து வந்தாள். அவள் கையில் ஒரு கட்டு ஆமணக்கு குலையிருந்தது. தலையில் சின்னப்புல்லுக்கட்டு இருந்தது. கை குரக்கவலித்து, தலை குன்னிப்போனது. மனசும் உடலும் சுமை இறக்க இடம் தேடி அலைந்தது. கீழ் திசை பார்த்திருந்த கல் மண்டபத்தில் உட்கார்ந்தாள். கட்டைப்பீடிகளும் வெற்றிலைக்காம்புகளுமாக் கிடந்த தூசியைத்தட்டினாள். பீடி நாத்தம் குறைந்து கல் மண்டபம் குளு குளு வென்றிருந்தது. அப்போது இருட்டைப்பற்றியதான பயம் குறைவாகவும், சங்கனைப்பற்றிய பயம் அதிகமாகவும் வந்து சேர்ந்தது. மெலிதான காற்று வீசவும் வியர்வையிருந்த இடங்கள் குளிர்ந்தது.


பக்கத்திலிருந்த அடி குழாயைப்பார்த்ததும் நாவறட்சி கூடுதலானது. எழுந்துப்போய் தண்ணீர் வரும் வரை கைபிடியை அடித்தாள் குழாய்ப்பக்கம் வந்து கையேந்திக்குடித்தாள் தாகமடங்கவில்லை திரும்பவும் வந்து தானே அடித்து தானே குடித்தாள். தனியே அமர்ந்து சதுரங்கம் ஆடுவதுபோலவும், சடங்கான சமயத்தில் ஆளில்லா வேளையில் இல்லாத போட்டியாளைக் கற்பனை செய்துகொண்டு பாண்டியாடியது போலவும் இருந்தது. கொஞ்சம் தண்ணியள்ளி முகத்திலடித்துக்கொண்டாள். கல்மண்டபத்தில் உட்கார்ந்து முந்தானையெடுத்து முகம் துடைத்த போது கிழக்கே மாடசாமி கோவிலைத்தாண்டி, கருத்தரசா நாடார் மொட்டைக் கிணற்று கமலைக்குத்திக்கு மேலே உருண்டையாகச் செந்துருக்கப்பொட்டு நிறத்தில் நிலாக்கிளம்பி நின்றது. கொக்கு ஒன்று வானப்பெரு வெளியில் தன்னந்தனியே காற்றைக்கடந்து போனது. எதிரே கதவில்லாப்பிரகாரத்தில் கேட்பாரற்ற பிள்ளையார் சிலையும் தனியே கொட்டக்கொட்ட முழித்துக்கொண்டிருந்தது.


குளிர்ந்த கல்மண்டபம், நிலா, மெலிய காற்று, எல்லாம் சேர்ந்து தனிமையின் மேல் தீயள்ளி வீசியது. சின்ன வயசில் கடலைச்செடிக்குமிக்குள் கட்டிப்பிடித்துக் கடித்துவைத்த காளியப்பனின் முகம் வந்து போனது. அவனிடமிருந்து கிளம்பும் பப்பர்மிட்டய் மணத்தில், அரோக்கியதாசின் இறுக்கம் அழுத்தியது. அவன் இருந்த இடம் இன்னமும் வெற்றிடமாகவே இருந்தது. எவ்வளவு நேரம் பின்னோக்கிச்சுற்றினாலும் சங்கனின் பீடிக்கங்கு எறிகிற முகம் தென்படவே இல்லை. காளியப்பனையும் ஆரோக்கியதாசையும் சேர்த்துப்பிசைந்த ஒரு உருவம் தேடித் தேடி அலைந்தது. பிள்ளையார் மண்டபத்தில் பட்டுத் தெறிக்கிற நிலா வெளிச்சத்தில் அவள் மட்டும் தனியே இருந்தாள். யாரோடும் பகிர்ந்துகொள்ளமுடியாத நினைவுகளைப் பிள்ளையாரிடம் சொல்லுவதாகப் பாவனை செய்து கொண்டு சொன்னாள்.


அடியில் தேங்கிக்கிடக்கிற நினைவுகளை வார்த்தைகளில் சொல்லமுடியாமல் திக்கினாள். சங்கன் நட்ட நடுக் கூட்டத்தில் பஞ்சாயத்தார் மத்தியில் சொன்ன வார்த்தைகள் அவளை உக்கிரமாகத்தாக்கின. '' ஊர் மேயிறவா, மலடி, ராங்கி பிடிச்சவா'' இந்த வார்த்தைகள் உலுக்கிப்போட்டது. '' பிள்ளையாரப்பா என்னியப்பாரு நானா மலடி '' என்று சாயம்போன கண்டாங்கிச் சேலையை உருவிப்போட்டு, பிறந்த கோலத்தில் நின்றாள். பேய் பிடித்து விட்டதாக ஊர் நம்பியது. சாமி இறங்கியதென்று சங்கனும் பயந்தான். அவள் ஒவ்வொரு நிலா நேரத்திலும் கானாமல் போனாள். பிறகு ஒரேயடியாகக் காணாமல் போனாள். அவனைத்தேடி வெளியூரிலிருந்து ஆட்கள் வரும் வரை ஆரோகியதாஸ் காணாமல் போன விசயம் யாருக்கும் தெரியாமலே இருந்தது.
Read more »