24.12.08

சம்சாரிக்குக் கிடைத்த சாகித்திய அகாடமி


அவர்..

எழுத்தை உடைத்து அணுவாக்கி அதிலிருந்து தத்துவத்தைத்தேடும்
இலக்கணத்துக்காரரல்ல. வார்த்தைகளில் வெள்ளந்திச் சிந்தனைகளையும், மானாவாரி மனிதர்களை நடுநாயகர்களாகவும் வாசக உலகிற்கு அறிமுகப்படுத்திய கிராமத்துக்காரர். சமூகத்தின் மேலுள்ள பிடிமானத்தில் பொதுவுடமைக்கட்சியில் சேர்ந்து அதன் மூலம் எழுத்து பரிச்சயமாகி, கதைகள் வாசிக்க ஆரம்பித்த ஒரு கடைக்கோடி இளைஞன், கதைகள் படைக்க ஆரம்பித்தார். கரிசல் காட்டிலுள்ள விருவுகளையும், வேலிக்கரடுகளையும் வாசக உலகத்துக்கு ஓவியமாய்த் தீட்டித்தந்தார். அங்கே உழுதுகொண்டிருக்கிறவர்கள், ஊர்த்திண்ணையில் வெட்டிக்கதைபேசுகிறவர்கள், கிராமத்துக்குச்செல்லும் நகரப்பேருந்தில் பயணிக்கிறவர்கள், தீப்பெட்டி உற்பத்தியாலையில் வேலைபார்க்கிறவர்கள், நகரத்துக்கு மாட்டு வண்டியோட்டிச்செல்கிறவர்கள், இப்படியான அழுக்கு மனிதர்களைத் தன் கதைகள் நெடுகக் கடைவிரித்தவர்.எளிய உழைக்கும் மக்களின் கோபம், நெகிழ்ச்சி, நிராசை என எல்லாவற்றையும் எளிய வார்த்தைகளிலேயே பதிவு செய்தவர். சாலையில் எதிர்ப்படுகிற ஒரு கிராமத்து சம்சாரி இன்று சாகித்திய அகாடமியின் உயரிய கௌரவத்துக்கு ஆளாகி இருக்கிறார்.

தோழர் மேலாண்மைப்பொன்னுச்சாமி.

'அப்ப நம்ம கூட எழுதலாம் போல இருக்கே'

என்கின்ற உந்து சக்தியை பெருவாரியான எழுத்தாளர்களுக்குள் விதைத்த விவசாயி. தயக்கம் சூழ்கொண்டிருக்கும் உழைக்கும் மக்களின்,விளிம்பு நிலை எழுத்துக்களின் மானசீக முன்னத்தி ஏர். இப்படியே நீண்டுகொண்டு போகிற அசாத்தியங்களைச் சாத்தியமாக்கிய எழுத்துப் போராளி எங்கள் தோழர் மேலாண்மைப் பொன்னுச்சாமிக்குக் கிடைத்த இந்த சாகித்திய அகாடமி விருதை சாதாரண மனிதர்களுக்கு, உண்மையான உழைப்பாளிகளுக்கு கிடைத்த கௌரவமாக உணர எல்லா அருகதையும் இருக்கிறது.

பின்குறிப்பு...

கல்விப்பின்புலம் இல்லாத முதல் தலைமுறை எழுத்தாளர்.உயர் நிலைக்கல்வியைக்கூட நெருங்கமுடியாமல் போனவர்.ஒரு சாதரண பலசரக்குக்கடைக்கு சொந்தக்காரர்.பேர் சொல்லும்படியன ஆங்கில எழுத்துக்களின் வாசனை கூடத் தெரியாதவர்.எழுத்துக்குறித்து உரையாடக் குறைந்தது முப்பது நாற்பது கிலோமீட்டர்கள் சைக்கிளில் செல்ல நேர்கிற கிராமத்துக்காரர்.

இப்படியொரு பொது வரலாற்றை, எண்பது கோடிக்குமேல் சீரழிந்துகிடக்கிற கிராமத்து இலக்கணத்தைத் தனதாக்கியவர்.

அவை அணைத்தையும் கொடியாக்கி உயர்த்தியவர்.

17.12.08

மத்தியதரக் குரங்குகளும், சுக்ரீவ அடயாளங்களும்




அவர்தான் முதலில் எனக்கு அதைச் சொன்னார். தொலைக்காட்சியில் பார்த்தபோது கொஞ்சம் பதற்றமாக இருந்தது. அந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட மறுநாள் நான் அவரோடு பேசினேன். ரொம்பவும் வேதனையோடு பேசினார். ரோட்டில் நடந்துபோகிற, புகைவண்டிக்காகக் காத்திருக்கிற, ஜனங்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உயிர்வாழ்தல் நமது கையில் இல்லை. உடற்பயிற்சி யோகாசனம், டாக்டர், ஆரோக்கியம் எல்லாமே ஒரு இடைக்கால ஏற்பாடு போல இருக்கிறது என்று விசனப்பட்டார். அப்போதுதான் நடைப்பயிற்சிக்கு போய்வந்தாக சொன்னார். இருந்தும் வார்த்தைகளில் சோர்விருந்தது. அப்புறம் தான் தமிழ் தொலைக்காட்சிகளில் அதன் சிறப்பு பார்வையெல்லாம் காண்பிக்கப்பட்டது, சேலத்தில் ஒரு தாஜ் விடுதிச்சிப்பந்தி கூட அதில் இறந்துபோனார்.


இரண்டு நாட்களுக்கு முன்னாள் அவர்கள் ஊரில் பாரதி விழாக் கொண்டடியது சம்பந்தமாகப் பேசினார். தான் பணிபுரிகிற இடத்தில் நான்கு வருடங்களாகக்கூட பணிபுரிகிற ஒரு படித்த மனிதர்.'ஏ மாமா இப்பிடிச் செய்றீங்க' என்று கேட்டிருக்கிறார். இவரோ ஒன்றும் விளங்காமல் 'என்ன செய்தோம்',என்று கேட்டிருக்கிறார். 'நூத்துக்கணக்கான பேர கொன்றது ஞாயமா'என்று கேட்ட பிறகுதான் அதன் அர்த்தம் புரிந்திருக்கிறது.
இரண்டு பேரும் மிக நெருங்கிய நண்பர்கள். சினிமா அரசியல், உடை, உணவு போன்றவற்றில் ஒரே கருத்தும் ரசனையும் அவர்களுக்குள் இருந்ததாகப் பலமுறை என்னிடம் சொன்னதுண்டு. அப்படியிருந்தும் அந்தக் கேள்வி மிகவும் உலுக்கியிருக்கிறது. நெடுநேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு ரொம்ப புலம்பினார். நான் இந்த தேசத்துக்காரன், இந்த மாநிலம் தான் எனது சொந்த மாநிலம்,உனது ஊர்க்காரன், சக ஊழியன், ஒரே சங்கத்து உறுப்பிணன், நண்பன், இதையெல்லாம் ஒரே ஒரு கணத்தில் அழித்து விட்டு, என்னை இன்னொரு தேசத்துக்காரனோடு தள்ளி விடுவது எப்படி அறிவார்ந்தவன், படித்தவன் வார்த்தையாகும். என்று ஆயிரம் கேள்விகளை கேட்டார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தென்காசிக்கிளை செயலாளர் தோழர் நாசர்.


படித்தவன் எல்லாமே அறிவாளி, நல்லவன் என்று நம்புவது மூடத்தனம்.



அநதக் காலத்தில் தோல் பாவைக்கூத்து ஊர் ஊருக்கு நடக்கும். அதில் ராமாயணத்தில் வாலிவதம் என்று ஞாபகம். வாலிக்கும் சுக்ரீவனுக்கும் சண்டை வரும். போர் அறிவிப்பார்கள். போரில் ஈடுபடுகிற இரண்டு தரப்பும் குரங்குகள், அதுவும் தென்னாட்டுக் குரங்குகள். கூட்டம் கூட்டமாகச் சண்டை நடக்கும் இதில் எது வாலி குரங்கு எது சுக்ரீவன் குரங்கு என்று வித்தியாசம் தெரிய வேண்டுமே என்னும் சர்ச்சை வரும். அப்போது சுக்ரீவனின் படைக்கு நாமம் போடுவார்கள். வாலியின் படை கை ஓங்கி விடும். சுக்ரீவன் பகுதியில் நிறையச் சேதமாகும். அன்று இரவு நடக்கிற ஆலோசனையில் சுக்ரீவன் படையில் உள்ளவர்களுக்கு நாமம் போட்டு விட்டால் அவர்கள் தங்களுக்குள்ளே அடித்து மாய்ந்து போவார்கள் என்று முடிவாகி, அந்த முடிவை அமல்படுத்துகிற பொறுப்பு பபூனுக்கு வரும். அப்புறம் சண்டை சிரிப்பாக மாறும். சேதம் நாமம் போடாத குரங்குகள் பகுதியில் அதிகமாகி சுக்ரீவன் ஜெயிப்பார்.



இது சின்ன வயதில் பார்த்த பாவைக்கூத்து கதை.
கதை நடந்ததாகச் சொல்லப்படுவது எதோ ஒரு யுகத்தில். கதை பார்த்தது அறுபது,எழுபதுகளில். ஆனாலும் இன்னும் தொடர்கிறது சூழ்ச்சியின் கண்ணிகள் அறுபடாமல்.

15.12.08

மணலுக்கடியில் இன்னமும் காயாத ஈரம்


எட்டாவது வயதில் நடந்து கடந்தபோது
இவ்வளவு பெரிய ஓடையா
வியந்து கிடந்தேன்.
ஊர் திரும்புகையில் சுமக்கமுடியாத
சிப்பிகள் கிலுகிலுத்தது
கால்சட்டைப் பையில் .

குண்டி கிழிந்த காக்கிச் சீருடைடையை
ஓசிச் சலவைச் சோப்பில்
துவைக்க நடந்த மாணவர் விடுதி நாட்களும்,
அண்ணாமலை வாத்தியாரின்
'ஓசிச்சோத்துப் பன்னி' எனும் வசவும்
ஒரு ஓரத்தில் சாக்கடையோடு கிடந்தாலும்
தோண்டத் தோண்டத் தாகமெடுக்கும்
ஊற்றோடு நடந்தது எங்கள் வைப்பாறு.


ஆயிரம் முறை விழுந்தாலும்
சிராய்க்காத அந்த மணற்பஞ்சு மேல்.
எங்கள் தடங்களை உள்வாங்கிக் கொண்டு
புதைந்து கிடக்கிறது
எத்தனையோ விளையாட்டுக்கள்.


மணற்கூட்டத்தை மறைத்த
மனிதக்கூட்டத்தில் அவளைத்தேடி
எடுத்து வைத்த பிராயத்து காலடிகள்
இன்னமும் பாதத்தில் குறுகுறுக்கிறது
தைப்பொங்கல் கருநாள் நினைவுகளாய்.

ஒற்றை மாட்டுத் தண்ணி வண்டிகள்
சாரைசரையாக அலைந்த காலமும்,
சருகக்குடங்கள் மினுமினுக்க
மொத்தமொத்தமாய் இடுப்புக் குளிர்ந்து
தாவணிப் பெண்கள் நடந்த காலமும்
கடந்த காலமாகிப் போனது.


எப்போதாவது கரை நிறைந்து
கடத்தி விடும் வெள்ளத்தை
எல்லாக் காலமும் மணலுக்கடியில்
எங்களுக்கான தாகத்தை அடைகாத்தபடி.


முதல் காதல், முதல் கவிதை,
என அறிமுகமான படிப்பிடம்
கனத்துக் கிடக்கிறவற்றை
முழுசாய்த் திறந்து கொட்டிய கழிப்பிடம்.
சந்தோசத்தையும் கண்ணீரையும் பதுக்கிக்கொண்ட
ரகசிய உணர்வுகளின் காப்பகம்.

கூழாங்கல்லைப் பொறுக்கிக்கொண்டே
கார்த்தி சொன்ன இறந்து போன காதலின் கதை
மணலுக்குள் விரல் படும்போதெல்லாம் நெருடும்.
நிலவொளியில் மதுக்குடித்தது,
மாதுவும், தனுஷ்கோடி சாரும்
நானும் இணைந்துகொண்டு
கோணங்கியோடு இலக்கிய மல்லுக்கு
நின்றதெல்லாமே
குத்தகைக்கு விடப்பட்ட
மணலின் நினைவுகளோடு
கொள்ளைபோகிறது அயலூர் லாரிகளில்.


ஆனாலும்
இன்னும் மிச்சமிருக்கிறது
கண்ணீரும் சந்தோசமும்
ஈரமாக.

11.12.08

மேலிருந்து கீழ்நோக்கி வளரும் விஷச்செடி

வழக்கத்துக்கு முன்னாலேயே முழித்துக்கொண்டு ஊர் பஞ்சாயத்துப்பள்ளிகளை நோக்கி பயணப்படும். நடக்கமுடியாதவர்கள், வயோதிககர்கள், பிள்ளைத்தாச்சிப் பெண்கள் எல்லாம் மாட்டுவண்டிகளில் கொண்டுவந்து இறக்கிவிடப்படுவார்கள். நீண்டவரிசையில் பாட்டும் கூத்துமாக நகர்ந்துபோய் ஆட்காட்டி விரலில் மை தடவிக்கொண்டு திரும்ப வருவார்கள். ஏதாவது வேப்ப மர நிழலில் மொய் எழுதுகிற தங்கிலியான் உட்கார்ந்து ரெண்டு கருத்த வெத்திலையும் ஒரு கொட்டப்பாக்கும் கொடுத்துக்கொண்டிருப்பார். 'கூட ரெண்டு குடுத்தா ஙொப்பன் வீட்டுச்சொத்தா போயிரும்' என்று கேட்கிற மதனிமார்களுக்குச் சொல்ல, ''வீட்டுக்கு வா கூட ரெண்டு போனி கூலு கரைச்சித் தாரன், அதுவுமில்லைன்னா குருன வாங்கிப் பொங்கி கருவாட்டுத்தண்ணி வச்சித்தாரன்,
இது ஊர்த்துட்டுல வாங்குன வெத்தில, பங்காளத்தபடிதான்'' யோக்கியமான பதிலும் அவரிடம் இருக்கும். ஓட்டுப்போடுவதைப் பார்க்கவென்றே சின்னப்பிள்ளைகள் கூட்டம் கூட்டமாய் வந்துபோகும். ஜனநாயகத்தின் பெரும் திருவிழாவாக கள்ளங்கபடமற்ற தேர்தல் கடந்துபோன காலங்கள் அது.


முடியாட்சியும் ஆங்கில ஆட்சியும் தாண்டியொரு மக்களாட்சியை ருசிக்கத் தொடங்கிய காலம் அது. கிட்டத்தட்ட எண்பதுகள் வரை இதுதான் நிலைமை. ஆனால் இருபது வருசத்தில் எல்லாம் வேகமாய் மாறிக்கொண்டு வருகிறது. இப்போது எல்லாக் கிராமங்களிலுமே காலைப் பேருந்துக்கு ஒரு கூட்டம் கிளம்புகிறது. தாலுகா ஆபீஸ், கோட்டாட்சியர் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், காவல் நிலையம் இப்படி மக்கள் வந்து போகும் இடங்களுக்கு அவர்கள் பிரிந்து போய் காத்திருப்பார்கள். பிரச்சினைகளை உண்டாக்க, பெரியதாக்க, கடைசியாய் ராசி பண்ணி முடித்து மதியம் சீமைச்சாராயமும், பிரியாணியும் இரவு கடைசி வண்டிக்கு வீடு திரும்பும் போது ஒரு நூறு ரூபாயும் பையில் இருக்கும்.


பருத்தியும் மிளகாயும் விளைந்த நிலங்களில் வேலிக்கருவேல மரங்கள் மண்டிக்கிடக்க, எங்கள் உழைப்பாளர்கள் கிராமங்களிலிருந்து கிளம்பி வந்து கௌரவப் பிச்சைக்காரர்களாக நகரத்து வீதிகளில் பிரியாணி வாடை மணக்கிற முகங்கள் தேடி அலைகிறார்கள். ஏற்கனவே நாறிக்கிடக்கிற பல அலுவலகங்கள் சுத்தம் செய்ய முடியாதபடி இன்னும் அதிகமாக நாறடிக்கப்படுகிறது.


1975 ஆம் ஆண்டு சாத்தூரில் அழகுத்தேவர் என்கிற எம்.எல்.ஏ ஒருவர் இருந்தார். அவரிடம் கையெழுத்து வாங்கி மாணவர் விடுதியில் சேர எனக்கு எட்டு கிலோ மீட்டர் நடக்கிற நேரம் மட்டுமே செலவானது. 'தம்பி எந்த ஊரு, என்ன படிக்கிறெ, நல்லாப்படிக்கனும்' என அறிவுரை சொல்லிக்கொண்டே அமுக்குத்தேவர் என்று கையெழுத்துப்போட்டு விட்டு கீழே வைத்த வேப்பங்குச்சியை எடுத்து திரும்பவும் பல்விலக்க ஆரம்பித்தார். அந்தக் கிராமத்தானின் முகம் எதோ கனவில் வருகிற மாதிரி இன்னமும் நிழலாடுகிறது. அவர் தங்கியிருந்த அந்த வாடகை வீட்டில் இப்போது யாரோ தீப்பெட்டி ஆபீஸ் போர்மேன் வாடகைக்கு குடியிருக்கிறார்.


தன்னைத்தேடி வருகிறவர்களை காக்க வைப்பதுவும், அலைக்கழிப்பதுமே ராஜதந்திரமாகிப் போன காலமாகிவிட்டது இப்போது. லஞ்சப்பணத்தில் பங்களாக் கட்டியவன் பிழைக்கத் தெரிந்தவனாகிறான். நேர்மையான அரசு அதிகாரி முசுடு, மனிதரண்டாதவன் எனப் பட்டம் வாங்கி மதிப்பிழந்து போகிறான். அந்த கருத்துருவாக்கம் நகரம் தாண்டிப் பயணமாகி பான்பராக் பொட்டலம்போல், அழுகுனி சீரியல் போல் கடைகோடிக் கிராமத்துக்கும் விஸ்தரிக்கப்பட்டுவிட்டது. அதனால் தான் இப்போது ஒவ்வொரு கிராமத்திலும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமில்லாமல், கொள்ளை நடக்கிறது. ஐந்து வருசம் தங்களைச் சுரண்டித் திங்க தலைக்கு இருநூறு முன்னூறு என்று சுய அடமானம் அரங்கேறுகிறது.


ஒரு துக்க விட்டுக்குப் போவதற்கு இரவு பனிரெண்டு மணிக்கு இரு சக்கர வாகனத்தில் கிராமத்துக்குப் போக வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது. நான்கு கிராமங்கள் தாண்டிப்போகவேண்டும். ஒவ்வொரு ஊரிலும் பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் பத்துப்பேர் உட்கார்ந்துகொண்டு போகிற வருகிற வாகனங்களை மறித்துக் கொண்டிருந்தார்கள். சாதிக்கலவரம் ஏதும் நடந்துவிட்டதோ என்னும் பயத்தோடு கடந்துபோன என்னயும் வழிமறித்து எந்தக்கட்சி என்று விசாரித்தார்கள். ஒருவேளை கட்சிக்கலவரமாக இருக்குமோ என்னும் சந்தேகம் வந்தது. கிராமங்களில் கட்சி மற்றும் மதக்கலவரங்கள் வருவதற்கு சாத்தியமே இல்லை.


கிராமங்கள் அழிந்து வருவதற்கு சமச்சீரற்ற நடைமுறையும், அதன் ஆதிக்காரணியான சாதியும் தான் முக்கியகாரணம். அதை அழிக்க எந்த விஞ்ஞானியாலும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே அங்கு என்ன ஜீவாதாரப் பிரச்சினை குறித்து.முரண்பாடு வந்தாலும் அது சாதிக் கலவரமாகத்தான் மாறும். அது வேறு பிரச்சினை.

எனது ஊருக்கு முந்திய ஊரில் என்னை இடை மறித்தார்கள். பக்கத்து ஊர் என்பதால் தைரியமாக நின்றேன். என்னை அடையாளம் கண்டுகொண்ட சிலர் குசலம் விசாரித்து விட்டு போகச்சொன்னார்கள். என்ன என்று கேட்டேன் " தேர்தல் செலவுக்கு பணம் தர ஆள் வரும் அதான் நிக்கோம், பையப் பதனமா போங்க" என்று என்னை அனுப்புவதிலே குறியாக இருந்தார்கள். ஒவ்வொருவரின் கையிலும் வெவ்வேறு கட்சிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ஸ்லிப்புகள் இருந்தன.

யார் யாரை எமாற்றுகிறார்கள் என்று புரியவில்லை.

10.12.08

அத்துவான நினைவுகள்






முந்தைய நாளின் ஈரத்தோடு
ஒத்தையடிப்பாதையை மறித்துக்கொண்டு
படுத்திருக்கும் ஆழ்வார் நாயக்கர் பம்புசெட்டு வாய்க்கால்.


நசநசக்கும் வியர்வையோடு
நினைவுகளைப் பின்னிழுத்துக்கொண்டு
ஊர்தேடி முன்நகரும்
ஆளில்லா ஒத்தையடிப்பாதை.


ஒன்றையொன்று விரட்டிப் பிடிக்கும்
வால்விடைத்த அணில்களுக்கு
மதியமென்ன, மொட்டைக்கிணறும் என்ன?


அதட்ட ஆளில்லா எருமைகள்
கதிர் முற்றிய பிஞ்சை நுழைந்து
கம்மங்கருதை அவக்கு அவக்கென அத்துமீறும்போது
சாணிவாசம் மாறாத தாவணியில்
வெயிலில் நனைந்து
தகித்துக்கிடந்தது முதல் இறுக்கம்.


நாங்களிருவரும் நல்லமேய்ப்பார்கள்.
அத்துவான வெயிலின் காடெங்கும்
சிதறிக் கிடக்கிறது நினைவுகளின் வெக்கை..

9.12.08

ஊடகங்களை இடைமறித்து சில கேள்விகள்


சத்ரபதி புகை வண்டி நிலையத்திலும், தாஜ் உயர்தர உல்லாச விடுதியிலும் நடந்த துப்பாக்கிச்சூட்டுக்கு நூற்றி எண்பது உயிர்களுக்கு அதிகமாக மீண்டும் பலியானதன் அதிர்வோசை இன்னும் உலகமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. உயிர்கள் எங்கும் எப்போதும் விலைமதிப்பற்றது. உடனடி விளைவாக இதோ இந்தியா ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இருபதாவதாக இணைந்துவிட்டது. இஸேரேல், ஈரான், ஈராக், சோமாலியா, பெரு, ஆப்கான், பாகிஸ்தான், என்று நீள்கிற பட்டியலை உருவாக்கிய அமெரிக்கா இருபது நாடுகளிலும் முதலில் பற்பசை, குளியல் சோப், முகச்சவர களிம்பு என நுரை பொங்கும் பொருட்களோடு நுழையும். பிள்ளையைக் கிள்ளிவிட்டு பின்னர் தொட்டிலை ஆட்டுகிற அமெரிக்கா இறுதியில் அமைதிப்படையோடு வெளியேறும்.

வெறியேற்றப்பட்ட நாய்களின் கைகளில் உயர் தொழில்நுட்ப கொலைக் கருவிகளும் பணமும் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் எல்லா தேசத்திலும் இருக்கிறது. கொலைகாரன்பரட்டைத் தலையோடும், கருப்பான கோரமுகத்தோடும், முட்டிவரை ஏத்திக்கட்டிய லுங்கியோடும இருப்பான் என்பது கைக் குழந்தைகளுக்கு அம்மாக்களும், சாதாரண ஜனங்களுக்கு சினிமாவும்காண்பித்த மூட பிம்பம். முற்றும் துறந்த முனிவர்களும், மழுமழுவென முகம் மழித்த ஹைடெக் யுவன்களும் கொத்துக் கொத்தாக உயிர்குடிப்பார்கள் என்பதை நம்பமுடியாத அதிர்ச்சியோடு உலகம் உள் வாங்கிக் கொண்டிருக்கிறது.

எமது சகோதரர்கள் இமய மலை முகடுகளில் விறைக்கிற பனியில் நமக்காகக் காவல் காத்துக்கொண்டிருக்கிறார்கள எனும் நிம்மதியோடு நாம் இனி கடைத்தெருக்களில் நடக்க முடியாது. இரட்டைக்கோபுர சிதைவுநடந்த பின்னால் அமெரிக்காவுக்கு குண்டி தாங்கும் நமக்கு எதிரி இமய மலை வழியாகத்தான் இந்தியாவுக்குள்வருவான் என்று முப்படைத் தளபதிகள் நினைத்துக் கொண்டிருந்தது பத்தாம் அல்ல, பத்தாயிரம் பசலித்தனம்.


ஆயிரக்கணக்கான மைல்கள் கடல் எல்லையாக அமைந்திருக்கிற ஒரு நாடு இப்படி ஊடுருவல்களை அவதானிப்பது மிகச்சிரமமான காரியம் எனவே வந்துவிட்டார்கள். வந்தவர்களைச் சந்தேகிக்கிற காவலர்கள் இந்தியாவில் இல்லை. அவர்கள் சந்தேகக்கேசில் பிடித்துப்போகிறவர்கள் எல்லாம் இரவு கடைசிப் பேருந்தைதவற விட்டு பேருந்து நிலையத்தில் கொசுக்கடியில் படுத்துறங்கும் அழுக்கு மனிதர்களை மட்டும் தான்.

2003 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 17107 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டாகள். அதற்கு அமெரிக்க உரங்களும், விதைகளும், உரமானிய வெட்டும் காரணிகள். தேசிய மனித உரிமைகள் ஆணைய அறிக்கையின் படி ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்த வன்முறையில் 116 பேர்களும், கர்நாடகத்தில்87 பேர்களும் கொல்லப்பட்டது எல்லை கடந்த தீவிர வாதத்தால் அல்ல. விடிகிற ஒவ்வொரு நாளும் இந்தியக்கிராமங்களில் எங்காவது ஒருமூலையில் ஜாதிய மூர்க்கர்களால் ஒரு பூஞ்சைத் தலித் கொல்லப்படுவதாக உலகமனிதஉரிமைச் சங்கம் கணக்கிடுகிறது. இந்தச்செய்திகள் எந்த ஊடகத்தின் முதல் பக்கத்திலும் இடம்பெறவில்லை.

ஆனால் நேரடி ஒளிபரப்பில் இந்தியா கைபிசைந்து கொண்டிருந்ததை உலகம் பார்த்தது. காவலர்களும் அதிரடிப்படை,கவச வாகனங்கள், வஜ்ரா, எனும் எல்லாமே அப்பாவிகள் ஊர்வலம் வந்தால் விரட்டியடிப்பதற்கும், வாச்சாத்தி, கொடியங்குளம் மாதிரி ஊர்களில் தலித் குடியிருப்புக்குள் புகுந்து வெறியாட்டம் போடவும் மட்டுமே பயிற்சி எடுத்திருக்கிறார்கள். ராணுவக் கவச வாகனம் உள்ளே நுழைந்ததும் பிரதம அறிவிப்பாளரே எம்ஜிஆரைப் பார்த்த கிராமத்தான் மாதிரிதுள்ளிக்குதித்தார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. மக்களுக்கு பதுகாப்பு கொடுப்பதுதானே அவர்களின் வேலை.

ஒரு வீரேந்திர சேவாக்கோ, விஸ்வநாதன் ஆனந்தோ, இல்லை ஷாருக்கானோ துப்பாக்கி தூக்கிக்கொண்டு வந்திருந்தால் ஆச்சரியப்படலாம். தினம் தினம் பாதாளச் சாக்கடையில் அடைப்பெடுக்க உள்ளே இறங்கும் நகரசுத்தித் தொழிலாளரைஎன்றைக்காவது இவர்கள் காமிரா படம் பிடித்திருக்கிறதா அவரும் உயிரைப்பணயம் வைத்துத் தான் நாட்டுக்காக தியாகம்பண்ணுகிறார், ரொம்பக்குறைந்த கூலியில்.

சமீபத்தில் மாதவராஜ் பிளாக்கில் இது என்ன சினிமா என்று மகன் கேட்டதாக ஒரு கவிதையைப்பார்த்து முதலில்அது கொஞ்சம் அதிகமான விமர்சனம் என்று நினைத்தேன். ஆனால் மொத்த நேரடி ஒளிபரப்பையும் பார்த்த பின்னர் அதுகுறைவான விமர்சனம் என்றுணர்ந்தேன். நன்றாக அலங்காரம் செய்யப்பட்ட வர்ணனையாளர்கள், தேர்தல் நேரத்தைப் போல அரசியல் விமர்சகர்களின் பேட்டி, இவை யாவும் கைதேர்ந்த பின்னனி இசையோடு வழங்கப்பட்டது. இடையிடையே வியாபார இடைவேளையோடு. எழவு வீட்டில் ரிக்காடு டான்ஸ் போலிருந்தது.

தனது சரக்கை விற்றுத் தீர்க்கிற முயற்சியில் இங்கு ஒரு நிரந்தர வெறி உற்பத்தி செய்யப்படுகிறது.அதற்கு அனுதாபம் திரட்டுவது இறுதி இலக்காகிறது. சின்னச் சின்னக் கனவுகள், ஒரு பகாசுர அனுதாபத்தின் கால்களில் மிதிபட்டு நசுங்கிப்போகும்.

27.11.08

நெட்டை மரங்களும், பெட்டை வீரமும்


கதாநாயகன் பறந்து பறந்து எதிரிகளைப் பந்தாடிக்கொண்டிருந்தார். கூட்டம் அவரைச்சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. சினிமாவிலும் சரி நிஜத்திலும் சரி அது தான் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம். கால் வைக்கக்கூட இடமில்லாத அந்த தனியார் பேருந்தில் ஒருவரை ஒருவர் விலக்கிக்கொண்டு எதாவதொரு கோணத்திலிருந்து தொலைக்காட்சித் திரையில் பார்வையை பதிய வைத்திருந்தர்கள். காற்றை விடவும் கெட்டிக்காரத்தனமாக நடத்துனர் நெரிசலுக்கு இடையில் நகர்ந்து முதலாளிக்கு அடுத்த பஸ் வாங்கப் பணம் சேகரித்துக் கொண்டிருந்தார்.


அந்தப்பேருந்துக்குப் பின்னால் அரசுப்பேருந்து குறைந்த பயணிகளோடு திணறித்திணறித் தொடர்ந்து வந்தது. சர்வ வல்லமையும் படைத்த அரசு நடத்தும் போக்குவரத்து, லட்சக்கணக்கான பேருந்தும் ஊழியர்களும் கட்டமைப்பும் கொண்ட அது, பல நேரங்களில் தனியார் பேருந்துகளுடன் தோற்றுப்போவது இயற்கைக்குப்புறம்பான, விஞ்ஞானத்துக்கு விரோதமான வினோதம். சிவகாசியில் புறவழிச்சாலை நிறுத்தத்தில் ஒன்பது மணிப்பரபரப்பு உச்சத்தில் இருந்தது. பட்டாசுத்தொழிலளர்களை ஏற்றிக்கொண்டு போகிற பணியாளர் வாகனத்துக்கும், ஆங்கிலப்பள்ளிக்கும் ஒலிகள் மாணவர்களை அழைத்துக்கொண்டு போகிற பேருந்துக்கும் பெரிதாக வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது.


பட்டாசைக்கொலுத்தி ஓய்ந்தது போல நாள் முழுக்கப் புழுதி மண்டிக்கொண்டிருக்கும் சாலைகளில் இயல்பான வேகத்தடையாகப் பள்ளங்கள் இருக்கும். அச்சு வேலைக்கான ப்ளாக் மேக்கிங் தகரங்களை டீவிஎஸ் 50 யில் முன்பகுதியில் வைத்து அணைத்துக்கொண்டு போகிறவர்களைப் பார்த்தால், பறவைக்காவடியில் பறக்கிற பக்தனைப்போலத் தோன்றும். சடாரென்று சலையின் குறுக்கே பாய்ந்து திரும்புகிற அவர்களை கெட்ட வார்த்தையில் திட்டிக்கொண்டு ப்ரேக் போடுகிற பேருந்து ஓட்டிகள். சூட்காஸ், கைப்பையோடு நடக்கிற எவரையும் பின் தொடர்ந்து காவர்களிடம் பேச்சுக்கொடுக்கிற காலண்டர், பட்டாசுத் தரகர்கள், இரண்டு கட்டிடங்களுக்கு ஒன்றாக வியாபித்திருக்கும் டீக்கடைகள், எத்தனை பேர் வந்து குடித்தாலும் குறையாத பால் சட்டி, எண்ணெய் பிசுக்கும், தூசியும் கலந்த வடைகள். என்று வர்ணிக்க முடியாத விசயங்கள் நிறைந்த தமிழகத்தின் குட்டி ஜப்பான். கருப்பாக இருப்பவனுக்கு வெள்ளைச்சாமி எனப்பெயர் வைத்து சந்தோசப்பட்டுக் கொள்ளும் தமிழகம்.


அப்போது இரைச்சலைக்கடந்து பெரிதாக ஒரு சத்தம் வந்தது. ஒரு பெண்ணின் அழுகுரல். சாலையின் விளிம்பில் தரையில் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டியபடி திமிறிக்கொண்டு அலங்கோலமாகக் கிடந்தாள். ஒரு ஆண் அவள் தலை முடியைப்பிடித்து அடித்துக் கொண்டிருந்தான். அவன் அவளது கணவனாகத்தான் இருக்கவேண்டும். வெறியும் போதையும் கலந்த குரூரம் கண்களிலிருந்து பிதுங்கிக்கொண்டிருந்தது. ஒரு காலத்தில் காப்பிச்சட்டி சுட்டதற்காக மருத்துவமனைக்குக்கு அழைத்துப்போயிருக்கலாம். இரவில் நக்கக்கீரல் பட்டதற்காக பகலில் அவளுக்குப்பிடித்த சினிமாவுக்கு அழைத்துப் போயிருக்கலாம். அந்த அன்பும் அன்னியோன்னியமும் தெருப்புழுதியில் அடியும் வசவுமாக காட்சி மாற்றப்பட்டிருந்தது.
கூட்டம் கூடியது சுவாரஸ்ய மிகுதியில் வாகனங்களும் கூட நின்று வேடிக்கை பார்த்தது. திரைப்படங்களில் வருவது போலவே தாங்களாகவே ஒரு பாது காப்பு வளையம் அமைத்துக்கொண்டு வேடிக்கை பார்த்தார்கள். வேடிக்கை பார்த்தவர்கள் அனைவருமே வேஷ்டி கட்டியவர்கள், கால்சராய் அணிந்தவர்கள்.


அடிபட்டுக்கொண்டிருக்கிற பெண்ணின் அழுகுரல் எல்லா இரைச்சலையும் தாண்டி ஒலித்துக்கொண்டே இருந்தது. அழுகை நிராதரவின் வெளிப்பாடு. அதற்காக வருந்துவது மனிதாபிமானம். அதையும் தாண்டி ஆதரவுக்கரம் நீட்டுவதற்கு மனிதாபிமானம் குழைத்த துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சலோடு கூட்டத்துக்குள்ளிருந்து ஒருவர் வந்தார்.


அடித்துக்கொண்டிருந்தவனை இடது கையால் தலை முடி பிடித்து கீழே தள்ளி விட்டார். சுதாரித்து எழுந்த அவன் ஒரு அரிவாளை வெளியில் எடுத்து மிரட்டினான். சுற்றி நின்ற கூட்டம் இப்போது கிராபிக்ஸில் காண்பிக்கிற மாதிரி சடுதியில் காணாமல் போனது.


'' வெட்டுடா தேவிடியாப்பயலே எத்துன பேர வெட்டுவ ''.


லேசாகத்தயங்கியவனின் பிடரியில் இப்போது யாரோ அடித்தார்கள் அவன்கையிலிருந்த ஆயுதம் கீழே விழுந்தது.தயக்கம் கலைந்தது இன்னும் சிலர் செத்த பாம்பு அடிக்க வந்தார்கள். அவன் கீழே கிடந்தான். ஆட்டோ வந்தது. போலீஸ் வந்தபின்னால் தைரியமாக இன்னும் அதிகமான கூட்டம் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. காப்பாற்ற வந்த அந்த அம்மா தனது மார்ச்சேலையைச் சரிசெய்தபடி கூட்டத்ததைப் பார்த்தார்.


எல்லாருடைய மூக்குக்கும் உதட்டுக்கும் நடுவில் வித விதமான அளவுகளில் முடிகளிருந்தது. இலக்கணங்கள் எழுத்து வடிவில் இருக்கிறது, வாழ்க்கை இயல்பானதாகவே எப்போதும் இருக்கிறது.