30.4.11

அந்த விருதுகள் மீறலுக்கும்,கலகத்துக்கும் கிடைத்த விருதுகள்-பாலச்சந்தர்


சுமித்ராவின் தலையணைக்குள் ஒளித்துவைத்திருக்கும் தனது சிகரெட் லைட்டரை எடுக்கவரும் கமலஹாசன்,காய்கறிக்காரம்மாவின் பழங்களைப் பொறுக்கச் சொல்லி நடத்துநரை அடிக்கும்போது நீ என்ன கம்யூனிஸ்டா அநியாயங்களைத் தட்டிக்கேட்கிறவன் கம்யுனிஸ்ட் என்றால் நான் கம்யூனிஸ்ட் தான் என்று கூறுகிற கமல்ஹாசன்.சரத்பாபுவிடம் ஷோபவைப் பற்றி பேசவந்தவன் வெஸ்ட்பெங்காலில் கம்யூனிஸ்ட் ஆட்சியைப் பிடித்து விட்டதே அதைப்பற்றி என்ன நினைக்கிறாய் என்கிற கமலஹாசன்.

மூக்குப் பொடிப் போட்டுக்கொண்டு மீசையை முறுக்கிக்கொண்டு விபச்சாரி சரிதாவைக் காதலிக்கும் ரஜினிகாந்த். ஒரு ஆச்சாரமான குடும்பத்திலிருந்து கிளம்பிப்போய் விபச்சாரம் செய்யும் பிரமிளா, ஜனகணமண பாடும்போது சுவிங்கம் மெல்லும் கல்லூரித்தோழனை அடித்து துவம்சம் செய்யும் நக்சலைட் என தமிழ்திரை யுலகத்துக்கு பல புதுப்புது கதாபாத்திரங்களையும். வாழ்வின் நிஜ சுக துக்கங்களில் இருந்து பிரச்சினைகளையும், உரையடல்களையும் அறிமுகப்படுத்தியவர் பாலச்சந்தர்.

எழுபதுகளிலும் எண்பதுகளிலும் கொஞ்சம் விவரந்தெரிஞ்சவர்களாகக் காட்டிக்கொள்ள பாலச்சந்தரின் பெயரையும் உபயோகப்படுத்தியே தீரவேண்டும். தமிழ்ச்சினிமாவில் கலைப் படங்களுக்கான விதையைத் தூவியவர்களுள் மிக முக்கியமானவர் பாலச்சந்தர். சாத்தூர் போன்ற நான்காம்  தர நகரங்களில் அவரது படம் வசூலுக்கு நொண்டியடிக்கும். ஆனாலும் சென்னை மதுரை கோவை போன்ற பெருநகரங்களில் கொண்டாடப் படும்.சிவாஜி படம் எம்ஜியார் படம் முத்துராமன் படம் என நடிகர்களை முன்னிறுத்திய காலத்தில்; அட அப்படியே நல்லாப்பூசிவிட்ட காங்க்ரீட் மாதிரி முகத்தை வைத்துக்கொள்ளும் ஜெய்சங்கருக்கு கூட திரைப்படத்தின் உழைப்பெல்லாம் போய்ச் சேர்ந்துவிடும் காலத்தில்; திரைப்படம் என்கிற ஒரு படைப்பை படைபாளியின் பெயரால் அறியச்செய்த புரட்சிக்காரன் பாலச்சந்தர்.

பத்துப்பேரை ஒரே குத்தில் சாய்க்கிற மாதிரி இல்லாமல் இயல்பில் கலகம் செய்யும் கதாபாத்திரங்களைக்கொண்டாதாலோ, இல்லை மரத்தைச்சு சுற்றி டூயட் பாடாமல் அந்தக் காலத்து இளைஞர்களின் காதலைக் கோடிட்டுக் காட்டியதாலோ என்னவோ அந்த நிழல் நிஜமாகிறது படத்தை பத்து தடவைக்கு மேலே பார்க்கவைத்தார் பலச்சந்தர்.அதற்குப்பிறகு அவரது எல்லாப் படங் களையும் பார்த்தே தீரவேண்டும் என்கிற வேட்கையை மூட்டியவர்.

அவர் அறிமுகப்படுத்திய ருசிதான்  பாரதிராஜாவை, மகேந்திரனை,  ஸ்ரீதர்ராஜனை, அவளப்படித்தான்ஸ்ரீப்ரியாவை நேசிக்க வைத்தது. தமிழகம் தாண்டி ஹிந்தி பெங்காலி ஒரியா மலையாளம், ஜப்பான், ஈரான்,சாப்ளின் படங்களைத் தேடித்தேடி பார்க்க- ரசிக்க தூண்டியது. இல்லையா ?.இது ரசிகர்களுக்கு மட்டுமல்ல இயக்குநர்களுக்கும் பொருந்தும்.

ஆனாலும் இந்த நூறுவருட சினிமாவில் கலைப்படைப்புகளுக்கான முயற்சிகள் எதாவதொரு காரணத்தால் வளரவிடாமல் வெட்டப்படுகிறது. பாலச்சந்தருக்குப் பிறகு மீறல் கதைகளை கொடுத்து நிலைத்து நிற்காமல் போகிற சூழல் தான் இன்னும் நீடிக்கிறது. எனவே சிகரம் என்கிற தனது பட்டப்பெயரைத் தக்கவைத்துக் கொண்டே தொடர்கிறார். அவருக்கு கிடைத்திருக்கும் விருதைக் கொண்டாடுவோம்,அவரை வாழ்த்துவோம்.

29.4.11

ரயில் கோபம் 2


முருகேசன் அப்படி ஒண்ணும் பிரம்மாதமாகப் படித்துவிடவில்லை. ப்ளஸ்ட்டூ படித்துக் கொண்டிருக்கும் போது ரெண்டு அக்காமார்களுக்கு கல்யாணம் நடத்த வேண்டி இருந்தது.அதற்கு வாங்கிய கடனை அடைக்க ஆந்திராவுக்கு டவர் வேலைக்குபோனான். ஒரு ஆளுக்கு பத்தாயிரம் முன்பணம் தருகிறார்கள் என்று கேள்விப்பட்டதும் இருமிக்கொண்டே அய்யா நான் போகிறேன் என்றார். ’இந்த வயசுல அதும் கொடல்வெளியே வாரா மதிரி இருமிக்கிட்டு அந்த மனுஷன் போகனுங்காரே’ என்று அம்மா கண்ணைக்க சக்கினாள். புத்தகப் பையைத் தூக்கி பரண் மேல்போட்டு விட்டு ரயிலேறினான். பத்தாயிரம் கடனடைக்க ரெண்டு வருஷமானது. மின்சார கோபுரத்தில் ஏறி கயிற்றைக் கட்டிக்கொண்டு நிற்கிற வேலை.கயிறுவழியே மேலே வருகிற இரும்புத் துண்டுகளை இணைத்து இணைத்து கோபுரமாக்கவேண்டும். காலையில் சாப்பிட்டுவிட்டு மேலேறினல் மதியச்சாப்பாட்டுக் குத்தான் இறங்கனும். சிலநேரம் சாப்பாடும் கூட கயிறு வழியே மேலே வந்துவிடும்.

காக்கை பருந்து குருவிகள் அருகே பறந்து பெரிதாய் தெரிந்தது. கீழிருக்கும் ஆடுமாடு  மனிதர்கள் குட்டியூண்டாய்த் தெரிந்தார்கள். அவனுக்கு வேலை சொல்லிக் கொடுத்த பரமன்தான் சிகரெட்டுக் குடிக்கச் சொல்லிக் கொடுத்தான். ஒவ்வொரு தரமும் ஒண்ணுக்கிருக்க கீழிறங்கும்  அவனைக் கிண்டல் பண்ணி மேலிருந்தே கழிக்கக் கற்றுத் தந்தான்.அந்த உயரத்தில் இருந்துகொண்டு பரமனின் காமக் கதைகளைக் கேட்பது நடுவானில் ஊஞ்சல் ஆடுகிற மாதிரி இருந்தது. கடிதம் கொடுப்பது,சைக்கிளை எடுத்துக்கொண்டு அவள் பார்க்க அலைவது, கனவு காண்பது என்கிற முருகேசன் உடலாலும் நினைவுகளாலும் வேறு மனிதனாக மாறிப்போனான். சாயங்காலம் ஆனதும் சரக்கு அடிக்கச் சொல்லிக் கொடுத்தான். முதல் தரம் குடித்த போது கொமட்டிக்கிட்டு வந்தது அப்படியே கக்கிவிட்டான். ஆனாலும் ஒரு மாதிரியாக ராட்டினத்தில் போகிற மாதிரி இருந்தது.ரெண்டாவது தரம் குடித்தபோது கீழ வீட்டுசெல்வியின் முகம் பாண்ட்ஸ் பவுடர் வாசனையோடு மிக அருகில் தெரிந்தது.பரமனிடம் செல்போன் வாங்கி செல்வியின்பக்கத்துவீட்டு சின்னமணியக்காவிடம் பேசி செல்வியைப்பேசச்சொல்லும் தைர்யம் வந்தது. இதற்கிடையில் நாலுதரம் ஊருக்கு வந்தான் கூடப்படிச்ச பயலுகள் காலேஜுக்கும்,பாலிடெக்னிக்குக்கும் போய்க்கொண்டிருப்பதைப் பார்த்து அழுகை அழுகையாய் வந்தது. அந்த நிராசையைச்சரிக்கட்ட அவனுக்கு செல்வியின் அருகாமை தேவையாய் இருந்தது.

அடிக்கடி செல்வியோடு பெசுவதைக்கேள்விப்பட்ட அவள் வீட்டார் முருகேசனின் வீட்டுக்குப்போனார்கள்.இரண்டு வீட்டுக்காரர்களும் சேர்ந்து ஜோசியக்காரரிடம் போனார்கள்.ஒரு நல்ல நாளில் ஊர்க்காரர்கள் எல்லோரும் முருகேசன் வீட்டுக்குவந்தார்கள்.எண்ணி ஒரு வருஷத்தில் செல்வியின் மடியில் ஒரு குழந்தைகிடந்தது.அந்த நேரத்தில் தான் சாத்தூர் மெரிட் மேச்கம்பெனிக்கு சீனாவில் இருந்து ஒரு தனியங்கி எந்திரம் வந்தது.அங்கு ஏஜெண்டாக குழந்தைகளை அனுப்பும் சாமியாடி பூச்சப்பெரியப்பாவிடம் பொறுப்பான ஹெல்பெர் வேண்டுமென்று கேட்க.பூச்சப்பெரியப்பா முருகேசனைக் கூட்டிக்கொண்டு போனார். குடியாத்தத்தில் இருந்து வந்திருந்த மூத்த மெக்கானிக்கிடம் உதவியாளராகச் சேர்ந்தான். மாசம் நாலாயிரம் ரூபாய் சம்பளமும் போக வர கட்டணச்செலவும் கொடுத்தார்கள்.

ரவ்வாப் பகலா மெஷினுக்கு அடியிலே கிடந்தான் முருகேசன்.சிவப்பு நிற முண்டா பனியனும் அரைக்கால் டவுசரும் கையில்  ரெண்டு ஸ்பானர்,ஒரு ஸ்க்ரூ ட்ரைவர் உடம்பு முழுக்க கிரீஸ் வாசனையோடு வலைய வலைய வந்தான்.ஒரு முனையில் பேப்பரும் மெழுகும் போட்டால் நடுவில் தீக்குச்சிகளாக வந்து விழும்.அங்கிருந்து கன்வேயர் வழியே கடந்துப்போய் தானே தன் தலையில் கருமருந்தை ஏந்திக்கொண்டு திரும்பிவரும். வரும்போதே காற்றாடியின் காற்றில் உலர்ந்து கீழே தீக்குச்சிகளாய் பொது பொதுவெனக் கீழே விழும். முருகேசனுக்கு ஒரே ஆசர்யமாக இருக்கும். இந்த வேலைகள் எல்லாம் நடக்க முன்னமெல்லாம் ஒரு வாரம் ஆகும். நூற்றுக் கணக்கான பெண்கள் தீக்குச்சிகளோடு கிடந்து மல்லுக் கட்டுவார்கள். தீப்பெட்டி யாபீசுக்குள் நுழைந்தால் சண்டைகள்,சிரிப்பு,பாட்டு இப்படிச் சலச் சலவென ஒரே மனித இரைச்சலாகாக் கேட்டுக் கொண்டே இருக்கும். அவற்றையெல்லாம் விழுங்கிச் செரித்தபடி அந்தச் சீனாவின் எந்திரம் பேரோசையோடு ஓடிக்கொண்டிருக்கிறது.

ஒருகாலத்தில் பிரதான தளவாடச் சாமான்களாக இருந்த பழய்ய கட்டைகள், ராக்குகள்,மெழுகு முக்கும் இரும்பு பிளேட்டுகள் எல்லாம் சுற்றுச்சுவரின் மூலையில் அம்பாரமாகக் குவிந்து கிடந்தது. தீப்பெட்டியாப்பிஸ் ராக் ரூமு களுக்கென்று தனிக்கதைகள் உண்டு.அவற்றோடு சேர்ந்து பழய்ய நினைவு களும் குவிந்து கிடந்தது.  

27.4.11

ரயில் கோபம்


இப்போதெல்லாம் சாத்தூர் ரயில்வே ஸ்டேசனில் தினம் தினம் சாயங்கால புகைவண்டிகளுக்கு கூட்டம் அலைமோதுகிறது.பயணம் செய்வோரும் வழியனுப்புவோருமாக தினம் தினம் திருவிழாக்கூட்டம்தான்.பிளாட்பாரத்தின் ஓரங்களுக்குப்போய் ரயில்வருகிறதா என்று எட்டிப்பார்க்கிற குழந்தைகளுக்குப் பின்னால் குதூகலம் துரத்துகிறது. அதட்டிக்கொண்டே ஓடிப்போய் கூட்டிவருகிற சாக்கில் தாய்தந்தையரும் குழந்தையாகின்றனர். ’ஐயெ பாத்துங்க,கையில சிந்திரப்போகுது வேண்டாண்ணு சொன்னாக்கேக்கீங்களா’ இந்தவார்த்தை இளம் மனைவிக்கும் சேர்த்து வாங்கிக்கொண்டுவருகிற தேநீர்க்குவளையின் சூட்டை இதமாக்குகிறது.

அப்பா அம்மாவுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டு செல்போனில் தோழியோடு பேசுவதாய்ப் பாவனை செய்கிற மகளின் கண்களில் தெறிக்கிறது காதல்.அதைக்கண்டும் காணாததுபோல் கோணங்கித்தனம் காட்டும் அப்பனின் நினைவுகள் பிந்தடமறியாததா. கொக்கோக் கோலாப் பாட்டிலுக்குள் கலந்து விட்ட  டாஸ்மாக் மதுவின் நிறம் கானாமல் போகலாம் மனம் சுழன்றடிக்கிறது அந்த கரைவேட்டிக் கூட்டத்தில்.சிலுசிலுவென முகத்திலடிக்கிற காற்றை ஏந்தியபடி கடைக்கோடி பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் நடைப் பயிற்சிக்கு வந்தவருக்கு இத்தனை காற்றும் இந்த ஊருக்குள்ளேதான் இருக்கிறதா என்கிற சந்தேகம் வருகிறது.

கொய்யாப் பழம் விற்கிற பாட்டியின் கண்களுக்கு பசியோடு பழவாசனையெடுத்துவரும் கண்கள் அரிதாகவே தென்படுகிறது. தேநீர்க் கேத்தலை ஓரங்கட்டி வைத்துவிட்டு பீடிகுடிக்கிற முத்துச்சாமியின் நினைவுகள் காலையில் வட்டித்துட்டு கேட்டுவரப்போகும்  மீசைக் காரனின் முகம் கலவரப்படுத்துகிறது. இல்லாத மார்புக்குமேல் மாரப்பை இழுத்துவிட்டு அழகு பார்த்துக் கொள்கிற திருநங்கையின் குரலில் அந்தபாடல் கொஞ்சம் இனிமையாகவும் இருக்கிறது.

”கெளம்பு போ ரயிலு வரத்தேரமாகும்,இப்ப போனாத்தான் கடைசி வண்டியப் பிடிக்கமுடியும், இந்தா இங்கரு, கண்ணக்கசக்காத எண்ணி ஆறுமாசம் கையில கொஞ்சம் துட்டோட வந்துரமாட்டேன்” முருகேசனின் வார்த்தைகளைக்காதில் வாங்காமல் இன்னும் நெருங்கி உட்கார்ந்தாள்.அதே வாசம் அதே கதகதப்பு.எழுந்து நடந்து கொண்டே திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு போகிற செல்வியை பார்க்கத் திராணியில்லாமல் கத்திரிச்சீரெட்டை எடுத்துப்பற்றவைத்தான் முருகேசன்.ரயில் வந்துவிடட்டும் இன்னும் தனியே உட்கார்ந்திருந்தால் மனசு மாறி பைத்தூக்கிக்கொண்டு போனவருசம் மாதிரி பின்னாலேயே கிளம்பினாலும் கிளம்பிவிடுவான்.

போனதரம் கிளம்பிப்போனவன் கொஞ்சநாள்  அமுக்கிக்கொண்டு மெட்ராசில் இருந்திருந்தால் இந்த மாதிரி ஆகியிருக்காது. அடிதடி ஆகி போலிஸ் ஸ்டேசன் வரை போகவேண்டியதிருந்திருக்காது. அந்த செவப்பு ஏட்டு கேட்ட கேள்வியை வேறெவனாவது கேட்டிருந்தாள் கொலப்பலி உளுந்திருக்கும்.

(மிச்சம் இன்னொரு நாளைக்கு)

26.4.11

எண்டோசல்பான்,மோடி,கல்மாடி, க்ளோபல் சல்பான் மற்றும் என் டி டிவி


எண்பத்தாறு நாடுகளில் தடைசெய்யப்பட்ட எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து கேரளாவிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது.இந்த எண்டோ
சல்பானைத்தான் எதோ புண்ணிய தீர்த்தம் மாதிரி இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவணம் இந்த நிமிடம் வரை விநியோகிக்கிறது சிபாரிசு செய்கிறது. ஆனால் அரசுக்குச் சொந்தமான காசர் கோட் முந்திரி வயல்களுக்கு வான்வழியே தூவப்
படும் முறை இன்னும் அமலில் இருக்கிறது.தெளிக்கப்படும் எண்டோ
சல்பானின் வீர்யநச்சுத்தன்மையால் காசர்கோட் தொடங்கி அதன் சுற்று வட்டாரம் முழுக்க குழந்தைகள் பாதிக்கப் படுகிறார்கள். அங்குள்ள மருத்துவ
மனைக்கு வரும் ஏழைகளில் பெரும்பாலானோர் எண்டோசல்பானால் பதிக்கப்
பட்டவர்களாக இருக்கிறார்கள்.

மன்மோகன் வகையறாக்கள் நமுட்டுச்சிரிப்பு சிரிக்கிறார்கள்.இதைவிடக்  கோடிமடங்கு நச்சுத்தன்மை வாய்ந்த உலகமயம்,தாரளமயம் ஆகியவற்றைச் சகித்துக்கொண்ட உங்களுக்கு இதைச் சகித்துக்கொள்ள முடியாதா என்று ஏளனக்கேள்வி கேட்கிறார்கள். ஆகையினாலே மத்திய அரசு சி எம் ஆர் ஐ க்கு பரிசோதனைக்கு அனுப்பி அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் நாடு முழுக்க தடைசெய்வது பற்றி யோசிக்கமுடியும் என்று இழுத்தடிக்கிறது. ஏற்கனவே கோக்கொகோலாவில் உள்ள நச்சுத்தண்மை கண்டறியும் விவகார த்தில் இந்திய அரசு நடந்து கொண்டதை நாடறியும். காரணம் அமெரிக் காவை எதிர்த்து ஒரு துரும்பைக்கூட கிள்ளிஎறியமுடியாத நிலைமையில் இருக்கிறது இந்திய வல்லரசு. இதை எதிர்த்தும் நாடு முழுவதும் எண்டோசல்பானை தடை செய்யக்கோரியும் மத்திய  அரசை வலியுறுத்தி கேரளம் போராட்டத்தில் இறங்கியிருக்கிறது.

குஜராத் முதலமைச்சர் மோடியின் மீது கவிழ்ந்திருக்கும் ரத்தவாடையை மீண்டும் உலகுக்குச்சொலியிருக்கிறார் சஞ்சய் பட் என்கிற போலீஸ் உயர் அதிகாரி. கோத்ரா சம்பவம் நடந்த பிறகு பெரும்பாண்மை மக்களின் கோபம் அதிகரித்திருந்ததாம்.அந்தக் கோபத்திற்கு வடிகாலாக முஸ்லீம் மக்கள் மீது வன்முறையை அனுமதிக்கலாம் என்று ஒரு அரசே முடிவெடுத் திருக்
கிறது. அதற்கான ஆதரங்களையும் தனது சாட்சியங்களையும்  வெளி உலகத்துக்குச் சொல்லியிருக்கிறார் சஞ்சய் பட். இந்தச் செய்தியை நீங்கள் பூதக்கண்ணாடி கொண்டு பார்த்தாலும் எந்த ஊடகத்திலும் கண்டு பிடிக்க முடியாது. மூன்று முறை குஜராத் மக்கள் அமோக ஆதரவு அளித்து பதவியில் உட்கார வைத்திருக்கிறார்கள். அவரெப்படி கெட்டவராக இருக்கமுடியும் என ஒரு கணினி மென்பொருள் நுட்பவல்லுநர் சந்தேகத்தைக் கிளப்புகிறார்.

சொந்தக்கட்சியிலும் கூட்டணிக்கட்சிகளிலும் ஒவ்வொரு மந்திரியாய் கைதாகி உள்ளேபோய்க்கொண்டிருக்க உள்துறை மந்திரி கொல்கத்தாவில் தெருகோணலாக இருக்கிறதென்று கூப்பாடு போடுகிறார்.ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிற மம்தாபானர்ஜியை சினிமாவில் வரும் ரஜினிகாந்தின் அறிமுகம் போல அப்படிப்பிரம்மாண்டமாக காட்சிப்படுத்துகிறது என் டி டிவி. அனில் பாசு மன்னிப்புகேட்டார் என்று ஊடகங்கள் உரக்கக் கூச்சலிடுகின்றன. ஒரு மேடையில் கனிமொழியின் பார்வை ராசாவின் பக்கம் திரும்புவதை,ஒரு தற்செயலான அந்த சிறு கணத்தை திரும்பத்திரும்ப காண்பிக்கிறார்கள். ”.......மணியை நீ வைத்துக்கொள்”  என்கிற ஆணாதிக்க வக்கிரம் நிறைந்த கேலிக் குறுஞ்செய்திகளை அனுப்பி சந்தோசப்பட்டுக்கொள்கிறது  டிஜிட்டல் இந்தியா.

எதைச்சொல்வது, எதை மட்டறுப்பது, யாரை முன்னிறுத்துவது என்பதில் நடக்கும் காய்நகர்த்தலில் காலந்தோறும் ஜெயிக்கிறது இந்த முதலாலித்துவ ஊடகங்கள்.

கேப்பையில் நெய் வடிக்கிற இந்த ஊடகங்கள்.

25.4.11

மாயாஜாலங்களை ஊதிப்பெருக்கும் ஊடகங்கள். சாய்பாபாமரணம்.


நேற்று பகுத்தறிவுப்பாசறையிலிருந்து கிளம்பும் கலைஞர் தொலைக்காட்சி நேரடி வர்ணனையில் நூறு தடவைக்குமேல் ராஜாங்கம்,தனி அரசாங்கம் என்று சொல்லிப்புழகாங்கிதம் அடைந்தார்.இந்தியா குடியரசாக அறிவிக்கப் பட்டு 53 ஆண்டுகள் கடந்த பின்னும் இப்படிப்பட்ட அரசாங்காங்கள் தொடர்வது தான் வேடிக்கை .ஆமாம் இந்தியாவில் பக்தி என்கிற படுதாவுக்குள் ஒழிந்து கொண்டு தொழில் செய்யும் இதே போன்ற அரசாங்கங்கள் கணக்கிலடங் காதவை  இருக்கின்றன.இவை தவிர்த்து நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு வக்கணம் காட்டும் அரசாங்கங்கள் ஐம்பத்தாறுக்கும் மேல் தேறும். அவை அம்பானிகுழுமம் முதல் அழகிரிகுழுமம் வரை நீண்டுகொண்டே போகிறது.

அவரின் மறைவு பக்தர்களின் உலகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று திரும்புகிற திசைகளெல்லாம் ஒலித்துக்கொண்டிருக்கிறது. 85 வயதில் இறப்பது ஈடு செய்யமுடியாத இழப்பென்பது கொஞ்சம் கூடுதலான மாயஜாலம் தான். ஐந்து முறை மரணத்தை வென்றவராம். அதுகூடப்பராவயில்லை.அவர் படுத்து தூங்கும் போது அவரோடு இருந்த ஆறுபேர் கத்தியால் தாக்க வந்தார்களாம்  கடவுள் கிருபையால் காவலாளி ஆறுபேரையும் கொன்று விட்டாராம்.இந்தச்செய்தி எதோ எம்ஜியார் ரஜினி சினிமா பார்த்தமாதிரி இருக்கிறதா.இருக்கத்தான் செய்யும். பிள்ளையார் பால்குடித்தார்,பசுமாடு பேசியது என்கின்ற கட்டுக்கதைகளை நம்புவது போல நம்பித்தான் ஆகவேண்டும்.

பிழிந்து பிழிந்து அழுகிற பக்தர் கூட்டத்தைப்பார்க்க பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. பெற்ற தாய்க்கு கஞ்சி ஊற்றாமல் காப்பகத்துக்கு அனுப்புகிறவர்கள்.வீட்டுவாசலில் பசியேந்தி நிற்கும் பிச்சைக்காரர்களுக்கு பொமரேனியனின் குறைப்புச்சத்ததை கொடுத்தவர்கள்,பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருக்கும் சகஊழியனுக்கு உதவாத பணத்தை உண்டியலில் கொட்டியவர்கள்,படுக்கைம் அறையிலும்,கழிப்பறையிலும் பதுக்கமுடியாத பணத்தை அவரின் காலடியில் கொட்டியவர்கள்,கடவுளே இறங்கி வந்து ஜாதி இல்லை என்று சொன்னாலும் மறுக்கிற கடவுள் மறுப்பாளர்கள், மேடு பள்ளங்கள் நீடிக்கவேண்டுமென்கிற நம்பிக்கை வாதிகளின்  கண்ணீர் உலகமெங்கும் சிந்திக்கொண்டிருக்கிறது.

இரண்டுவேளைச்சாப்பாடு சாப்பிட முடியாத ஜனங்கள் பாதிக்க்கு மேல் இருக் கிற இந்த தேசத்தில், உலகத்திலே அதிக ரத்தசோகை நிறைந்த கர்ப்பினிப் பெண்களை உருவாக்குகிற இந்த தேசத்தில் கல்வியறிவில்லாத வாக் காளர்கள்  பல்கிப்பெருகும் இந்த தேசத்தில் அடித்தட்டு மக்களின் கண்ணீர் கேட்பாரற்று ஓடுகிற இந்த தேசத்தில் இது போன்ற மாய்மால்ங்களும் மாயா ஜாலங்களும் செழித்து வளரச்செய்யும்.

ஊடகங்கள் வாழ்க.

24.4.11

அழியாத புத்தக நினைவுகள்


தினத்தந்தித் தொடர் சிந்துபாத்துக்குப் பிறகு புத்தகவடிவில் ஈர்த்தது படக்கதைகள் தான். இரும்புக்கை மாயாவியும் துப்பறியும் ரிப்கர்பியும் சீனர்களையும்,ரஷ்யர்களையும் நம்பியாராக்குவார்கள்.இந்த தலைமுறை ச் சிறார்களுக்கு அந்த புத்தகங்களும் அமெரிக்க காமிக்ஸ் நாயகர்களும் அறிமுகமாகிறார்களா என்பது தெரியவில்லை. அப்புறம் ராணிமுத்துவில் வந்த சின்ன சின்ன கதைகள்.அப்புறம் சினிமா சினிமாப்பாட்டுப் புத்தகம் அதில் வரும் கதைச்சுருக்கம். மிகுதியை வெள்ளித்திரையில் காண்க என்கிற சொல் தியேட்டர்களை நோக்கி கரகரவென்று இழுத்துக்கொண்டு போகும்.

அப்போதெல்லாம் தரை டிக்கெட் 25 பைசாதான்.அதை வாங்க தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், வேலை நிறுத்தம் என எல்லா போராட்ட யுக்திகளையும் பயன்படுத்திக் கடைசியில் தோற்றுப்போவோம். அதற்கு ரெண்டு காரணங்கள் ஒன்று சின்னவர்கள் சினிமா பார்ப்பதெல்லாம் அந்தக்காலத்தில் தீயபழக்கம். ஒண்பதாம் வகுப்பு படிக்கும்போது சாத்தூர் விடுதிவாசம் காலையிலும் சாயங்காலமும் பள்ளிக்கூடத்துக்கு போகிற போது முக்குலாந்தக்கல்லில் ஒட்டப்பட்டிருக்கும் வால்போஸ்டர்களை பத்து நிமிடம் நின்று பார்த்து விட்டுத்தான் கிளம்புவோம். அப்படிப்பார்த்துக் கொண்டிருப் பவர்களை வகுப்பு வாத்தியாரிடம் காட்டிக்கொடுக்க ஒற்றர்களெல்லாம் உண்டு.அப்படித்தான் ஒருநாள் வாணிஸ்ரீயின் வளைவு களைப் பார்த்து லயித்துப்போய் நின்றுகொண்டிருந்த என் முதுகில் மொத் தென்று விழுந்தது ஒரு அடி.பின்னாடித் திரும்பிப்பார்த்தால் மீசை யில்லாத கருப்பசாமி மாதிரி எங்க தாத்தா. "வாயக்கட்டி வயித்தக்கட்டி படிக்க அனுப்புனா......... டவுனுக்குள்ள  போஸ்டர மேய்ற கழுத மாதிரி...... வாயத் தொறந்துக்கிட்டு நிக்கே"  என்று விரட்டினார்.

மீசை அரும்பிய பிறகு விடுமுறை நாட்களைக் கடத்த நூல் நிலையத்துக்குப் போவோம். அங்கிருந்துதான் புத்தகங்கள் என்னை ஆக்ரமிக்கத் தொடங்கியது. சோமுவாத்தியார்,ஜவுளிக்கடை ஆறுமுகச்சாமி போஸ்ட்மேன் அண்ணா மலைச்சாமி,பல்ராஸ் எல்லோரும் பத்து ரூபாய் டிப்பாசிட் கட்டி சந்தாதாரர் ஆக்கக்கூடிய வசதிபடைத்தவர்கள். அவர்கள் படித்து முடித்த புத்தகங்கள் அண்ணன் அந்தோணிக்கு வரும் அவன் அசந்த நேரத்தில் நான் படிப்பேன். எங்கள் தமிழாசிரியரும் நாடறிந்த எழுத்தாளருமான தனுஷ்கோடிராமசாமி தனது பிரசுரமாகும் முன்னே கதைகளை எங்கள் வகுப்பில் கண்ணை உருட்டி உருட்டிச்சொல்லுவார்.

கல்லூரிக்குப்போனதும் கிடைக்கிற நேரமெல்லாம் நூல்நிலையத்தில் உட்காரும் பழக்கம் ஏற்பட்டது.அண்ணன் அந்தோணி தான் படித்த புத்தகங்களைப் பற்றிப்பேச ஆள் வேண்டி அதை என்னையும் படிக்கச் சொல்லுவான். அவன் படிக்காத புத்தகங்களாகப் படிக்கவேண்டும் என்கிற போட்டி மணப் பான்மையால் அப்போது கிடைத்த அயல் நாவல்களை எடுத்துப்படிக்க ஆரம்பித்தேன். நூலகர் பழனிச்சாமி ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்காரர் ஆகையால் ரஷ்ய நாவல்கள்,ஜெயகாந்தன்,யுனெஸ்கோ கூரியர் போன்றவற்றைக் கொடுத்துப் படிக்கச்சொல்லுவார். ஆனாலும்  ஜெயராஜின் ஓவியத்துக்கும் மணியம் செல்வன் ஓவியத்துக்கும் மனசுகிடந்து ஏங்கும். அந்த ஓவியங்களின் ஈர்ப்பு தான் சுஜாதா என்கிற கதைசொல்லிமேல் கிறுக்குப்பிடிக்க வைத்தது.

அதன் பிறகு வேலைகிடைத்து தொழிற்சங்கம் அறிமுகமாகி தோழர் பீகே பின்னால் ஆட்டுக்குட்டி போல அலைந்தோம். அவர்தான் எனக்கு மாதுவை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் கூடக்காடுமேடெல்லாம் அலைந்து இடது ருசியறிந்தோம்.நாங்கள் மூன்று பேரும் போட்டி போட்டு புத்தகங்கள் படித்தோம் அது பற்றிப்பேசினோம்.அந்தக்காலமும் அப்படி தோழமயும் நட்பும் கிடைத்தால் பொன்னுலகம் தனியே தேவையிருக்காது.1985 முதல் 1990 வரை கணக்கிலடங்கா புத்தகங்களைப்படித்தேன் அதில் நான்கு புத்தகங்களின் பெயரைச்சொல்லியே தீரவேண்டும். கடல்புறத்தில்,நினைவுகள் அழிவதில்லை,மோகமுள்,பன்கர்வாடி என நான்கும் முக்கியமானவை.

இதைவிட உன்னதமான ரஷ்ய நாவல்கள் இருந்தாலும் இந்த இந்திய நிலப்பரப்பை நான்கு கோணங்களில் அனுகிய புத்தகங்கள் அவை. அந்த அனுகுமுறை வாசகனை அலைக்கழித்து ஆட்டுவிக்கும். ஒரே காரணம். சமூகக்கட்டுமானம் பவித்திரம் போன்ற எழுத்து போன்ற இட்டுக்கட்டிய படிமங்களை உடைத்துக்கொண்டு நமது அன்றாடங்களில் இருந்து எழுந்து வரும் சாமன்ய மனிதர்களை நாயகர்களாக்கும் புதினங்கள் இவை.
பிலோமிக்குட்டி,சாமிதாஸ்,பவுலுப்பாட்டா,ரஞ்சி என்கிற மனிதர்களின் சம்பாஷனைகளும்,அவர்களின் மௌனங்களும் அதைப்பிரதிபலிக்கிற அலைச்சத்தமும் வாசகனின் அந்திமக்காலங்கள் வரை கேட்டுக்கொண்டே இருக்கும். வாசகனின் கையில் தூரிகையைக்கொடுத்து அவர்களுக்கெல்லாம் முகம் செய்யக்கொடுப்பார் வண்ணநிலவன். அவரது முகத்தை மட்டும் மொத்தமாக மறைத்துக்கொள்வார். 2009 ஆம் ஆண்டுதான் அவரது புகைப்படத்தை வலையில் தேடிப்பிடித்தேன்.


தஞ்சையை நெல் வயல்களை மர ஊஞ்சலை பட்டுப்பாவாடை உடுத்திய யுவதியை வெள்ளை வெத்திலையை,சீவலை கர்நாடக சங்கீதத்தை,காய்ச்சல் நேரத்தில் சூடகும் நினைவுகள் எல்லாம் உரசிச்செல்லும் அந்த மோகமுள்ளின் தடித்த பக்கங்களை.நிறைவேறாத ஆசையோடு தாமரைக்குளத்தில் மிதந்த பிம்பமும் காலங்கடந்தும் பாபுவோடு கூடிக்கிடக்கும் பிம்பமும் காலத்தால் அழியாத ஓவியங்கள். அவை இலக்கணக்கோடுகளை உருவி உதறி எதார்த்தம் எழுதிய தைல ஓவியங்கள். அந்த தி.ஜா எனும் செழித்த பூமியிலிருந்து விளைந்ததுதான் சுஜாதாவின்,பாலகுமாரனின் எழுத்துக்கள் என்பதை யாரும் சடுதியில் இனம் கண்டுகொள்ளலாம். உலகில் எதுவும் சுயம்பு இல்லை.எழுத்தில் எப்படி இருக்க முடியும்.

அப்படித்தான் ருஷ்ய இலக்கியங்களிலும்,எளிய மக்களின் எதார்த்தவாழ்வின் அழகில் வறுமையில் கோபங்களில் இருந்தும் கதைகள் எடுத்து எழுத வந்தது முற்போக்கு முகாம்.அதைப்பாரதியில் இருந்து ஆரம்பிப்பதா இல்லை கிராவில் இருந்து ஆரம்பிப்பதா என்கிற பட்டியல் நீளமாய்க் கிடக்கிறது.அதுகிடக்கட்டும்.  என் அருகில் இருந்து எழுதிய மேலாண்மைபொன்னுச்சாமி, ஷாஜஹான், தமிழ்ச் செல்வன், கோணங்கி, உதயஷங்கர், ஆதவன்தீட்சண்யா,மாதவராஜ் ஆகியோர் தோளில்கைபோட்டபடி இலக்கிய பரிச்சயமும் எழுத்தார்வமும் கொடுத்தவர்கள். ஒரு உண்ணாவிரதத்தில் பங்கேற்ற மாதுவை போலீஸ் பிடித்துக்கொண்டு போய் சாத்தூர் அரசு மருத்துமனையில் படுக்க வைத்தது. நீர்ச்சத்து குறைந்திருந்த அவனுக்கு குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தது.ஒரு இரவும் ஒரு பகலும் நான்தான் அருகில் உட்கார்ந்திருந்தேன்.

நோயாளிகளின் முனகலோடும்,மூத்திர நெடிகலந்த பினாயில் நெடியோடும் நான் விழித்திருந்தேன்.என்னோடு கூட நிரஞ்சனாவின் " நினைவுகள் அழிவதில்லை "புத்தகமும் விழித்திருந்தது. எல்லா நடு இரவுகளிலும்,எல்லா மருத்துவமனைக்காத்திருப்புகளிலும் மின்னலடித்துவிட்டுப்போகும் அந்த
அப்புவின் சிறுகண்டனின் நினைவுகள்.

23.4.11

அசைபோடக் கிடைத்த நாட்கள்.


நான்கு நாட்கள் கிராமத்தில் கிடந்தேன்.விளைந்து மூன்று வருடங்களான வயல்வெளிகளினூடே நடந்து கண்மாய்க்கரைக்கு போனோம்.
அங்கே குழுமிக்கிடக்கும் புளியமரத்தடியில் உட்கார்ந்து அசைபோட்டோம்.தழும்பிக்கிடக்கும் கிணற்று நீரில் குதித்தோம் நேரம் போவது தெரியாமல் தவளைகளோடு நீருக்குள் கிடந்தோம்.ஷாம்பு, சோப்பு வகையறாக்கள் இல்லாத சிரிப்பும் கும்மாளமும் நீச்சலும் பாட்டுமான ஒரு குளியல் கிடைத்தது.

கருப்புநிலாக்கதைகளில் வரும் ஆனியன் தோசையைச் சிலாகித்துவிட்டு எட்டாவது குழந்தை பிறந்தபோது தன் மனைவிக்கு கருத்தடை செய்துகொண்ட பிச்சைக்கனியின் கதையை ஊர் சொல்ல இடி இடி எனச்சிரித்துக்கிடந்தோம்.உலகப்புரட்சிக்காரன் சேகுவேராவைப்பற்றி சொல்லச்சொல்ல முதியவர்களோடு இளைஞர்களும் நெருங்கி வந்து கதை கேட்டார்கள்.

காலையில் கறிவதக்கி இறக்கியதும் மாதவராஜ் தம்பியும் போட்டோக்கட கார்த்தியும் வருவாங்களாய்யா என்று அம்மா கேட்டார்கள். உட்காரக்கூட இடமில்லாத அந்த ஓட்டுவீட்டில் நண்பர்களோடு உட்கார்ந்து சாப்பிட்ட சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.கூடவே தளுத்தளுக்கும் குரலில் அம்மாவும் அவளும் குட்டியின் நினைவுகளைச் சொன்னார்கள்.இரவு சந்தோஷம் பொங்கும் வார்த்தைகளோடும் சந்தோஷக்குப்பியோடும் அன்புத்தம்பி பாலு வந்தான்.ஊர்தாண்டி இருக்கும் பம்புசெட்டு வாய்காலைல் உட்கார்ந்து பேசினோம்.

சாப்பாடு செமிக்க வெத்திலை போட்டுக்கொண்டிருக்கும்போது சாமியாடிக் கருப்பசாமிச் சின்னையா வந்து எங்களோடு உட்கார்ந்து தமிழகத் தேர்தலையும் அரசியலையும் பேசினார்.கடவுளின் தூதுவரோடு கருத்து யுத்தம் நடத்தினோம்.அவரும் கூட அன்னா ஹசாரேயைப்பற்றி புகழ்ந்து பேசினார்.இது அவருக்கிருக்கிற இன்னொரு நம்பிக்கை.வெப்பங்குச்சிகள் எரியும் அக்கினிச்சட்டியோடும்,மேளக்காரர்களின் வியர்வையோடும் வெறியேற்றுகிற டண்டனக்கா உருமியோடும்  சாயங்காலம் நாக்கில் சூலாயுதம் குத்தி சாமியாடினர்.கழுத்து முங்கக்கிடக்கும் ஊர்மாலைகளோடு நாங்களும் மாலைபோட்டோம்.

பார்க்கிற இடமெல்லாம் பான் பராக் தாள்களும், உடைந்த டாஸ்மாக் குப்பிகளும் கிடந்தன.தினம் முன்று நான்கு சண்டைகள் கூட நடந்தது.நூறு ரூபாய்க்கு ரம்மிச்சீட்டு விளையாண்டார்கள். இவைகளுக்குள்ளேதான் அவர்களின் கொண்டாட்டமும், அன்பும், விருந் தோம்பலும் கிடந்தது.

பாளையங் கோட்டையிலிருந்து கரகாட்டக் கோஷ்டி வந்திருந்தது இரவு முழுக்க சினிமாப்பாட்டும் ரெட்டை அர்த்த வசனங்களுமாக கேட்டுக்கொண்டே இருந்தது.விடிந்த பிறகு முதல் பேருந்துக்காகக் காத்திருந்த கரகாட்டக் கோஷ்டியில் அந்த இரண்டு பெண்கள் இருந்தார்கள். கொண்டு வந்திருந்த சூட்கேஸ் மேல் சுருண்டு படுத்துக்கிடந்த அவர்கள் மேல் இரவு முழுக்க எரிந்த காமப்பார்வைகள் கூட சுருண்டு கிடந்தது.ரெண்டு மணிநேரம் மூன்று மணிநேரம் ஆடிவிட்டு முடித்துக்கொள்ளலாமே எதுக்கு விடியவிடிய ஒடம்ப வருத்தனும் என்று கேட்டேன்.விடிய விடிய ஆடுவது சம்பளத்துக்காக மட்டுமில்லை கூட்டிக்கொண்டு வந்த பொம்பளப்பிள்ளைகளின் பாதுகாப்புக் காகவும் தான் என்று சொன்னார். அப்போது குட்டைப்பாவாடைக்கும் ஜிகினா ரவிக்கைக்கும் இடையில் தெரியும் அவள் பசித்த வயிறு நினைவுக்கு வந்தது.

ஊரை விட்டுக்கிளம்பும்போது சித்திகள், சித்தி பிள்ளைகள், பங்காளிகள், பெருசுகள் என அன்பும் பாசமுமாக சூழ்ந்து கிடந்தேன்.எல்லோரும் கொடிஎறக்குனாப்பெறகு போகலாமுல்ல எனச்சொல்லிக்கொண்டே வழியனுப்பினார்கள்.ஊருக்கு மேற்கே மஞ்சநீராட்டுக்கு அடிக்கிற மேளம் மெல்ல மெல்ல குறைந்துகொண்டே இருக்க வாகன இறைச்சல் அதிகரிக்க ஆரம்பித்தது.

17.4.11

எரி நட்சத்திரமும், பச்சை மரமும்.


நடைப் பயிற்சியை முடித்துக்கொண்டு திரும்புகையில் நெல்லை துரித வண்டி வந்து கொண்டிருந்தது. தண்டவாளத்தை ஒட்டிய வேலிச் செடிகளின் மறைவில் இருந்து சில பெண்கள் எழுந்து ரயிலுக்கு முதுகைக் காண்பித்துக் கொண்டு நின்றார்கள். இன்னும் கொஞ்சம் தள்ளி ஆண்கள் எழுந்து சலிப்புடன் ரயிலைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள்.மெல்லக்கடந்து போகிற முன்பதிவு செய்யாத பெட்டிகளின் வாசலில் இளைஞர்கள் நின்றுகொண்டு காலைக் காற்றை முகத்தில் ஏந்திக்கொண்டு சிலிர்ப்படைந்தார்கள்.பொதுப்பெட்டிகள் இறைச்சலுடனும்,முன்பதிவு செய்யப்பட்டவை மெலிதான ஓசையுடனும் குளிரூட்டப்பட்ட பெட்டிகள் கள்ள மௌனத்தோடும் கடந்து போயின.

 இனி வீடு,ஒரு குவளைத் தேநீர்,கொஞ்சம் தீக்கதிர்,இரண்டு மூன்று தொலைபேசி அழைப்புகள்,அடுப்படியில் இருந்து அன்றாட பற்றாக்குறை அலுப்புகள் என் இந்தக்காலை கடந்து போகும்.மணிஅடித்தது  அந்த கைப் பேசியில்  வைத்திருக்கிற மாலையில் யாரோ மனதோடு பேச பாடல் சில நேரம்  இனிமையாகவும் பல நேரம் எரிச்சலாகவும் கேட்கும்.மாலை ஏழுமணிக்கு வருகிற அழைப்பில் கடைசி மூன்று எண்கள் இரண்டாக இருந்தால் பயமாக இருக்கும்.ஆமாம் அவர் இரண்டாவது குவளையைக்காலி செய்து ஒரு சிகரெட்டை குடித்து முடித்தவுடன் எனக்கோ அல்லது மணி அண்ணனுக்கோ பேசுவார்.வார்த்தைகள் இடறி இடறி விழும். அதிலிருந்து மூன்று வருடம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது இன்க்ரீமெண்டை சரிசெய்ய வேண்டுமென்கிற செய்தியை தெரிந்து கொள்ளச்சிரமம் இருக்காது.என்ன சிரமம் என்றால் அதே செய்தியைக்கிட்டத்தட்ட நான்காவது முறை சொல்லும்ப்போதும் முதல் தரம் சொல்கிற ஆர்வத்தில்லேயே சொல்லுவார்.

ஆனால் அண்ணன் சோலைமாணிக்கம் அழைப்பர் ஒரு ஐந்து நிமிடம் பேசுகிற பொருளை ஆரம்பிப்பார்.சரி போனக்கட் பண்ணு அப்புறம் கூப்பிடுகிறேன் என்பார்.ராகவனும்,பத்மாவும் அப்படியில்லை பாடச்சொல்லுவார்கள், கிடைக்காமலவர்களே பாடுவார்கள் அல்லது நல்லபாட்டைப் பற்றிப் பேசுவார்கள்.சில நேரம் நடுராத்திரி அழைப்புவரும் நல்ல கனவோ கெட்ட கனவோ தடைப்பட்டுப் போகும். கண் எரிச்சலோடும் நிறைய்யத் திகிலோடும் எடுக்கிற தருணங்கள் கொடியது. வயதான அம்மா,அப்பா நோய்வாய்ப்பட்டிருக்கும் நெருங்கின சொந்தம், இப்படி பல முகங்கள் நிழலாட எடுத்தால் ‘ என்ன இன்னும் செங்கல் லோடு வர்ல’ என்று குரல் வரும். தவறான அழைப்பபின் மீது ஏற்படுகிற கோபத்தைக் காட்டிலும் துர்செய்திகள் வரவில்லை என்கிற சந்தோஷம் தான் அதிகமாகும். ’அண்ணாச்சி ராங் நம்பர் அண்ணாச்சி’ என்று சொல்லிவிட்டு வைக்கும்போது தூக்கம் போயிருக்கும். அந்த பயம் கவ்விய ராத்திரியைச் சரிசெய்ய எனக்கு தெரிந்த ரெண்டு உபாயங்களில் ஒன்று வடிவேலுவின் காமெடியைப் பார்ப்பது.

அப்புறம் வீட்டுத் தொலைபேசியில் அடிக்கடி வந்த அந்த தவறான அழைப்பைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்.இப்படித்தான் இரவு பதினோரு மணிக்குமேல் டெலிபோன் மணிபோல அலறும்.எடுத்தால் மறு முனையில் வெறகு லோடு அனுப்பச்சொல்லி ஆறு நாளாச்சு இன்னும் அனுப்பல என்று ஆறுநாளும் பேசினான்.முதல் நாள் இது நீங்க கேட்கிற நம்பர் 8இல்லை என்றும் மறுநாள் ஏரியா கோடை சரியாக அடிக்கச்சொல்லியும்,பேசாமல் திருப்பிவைத்தும் பார்த்தாகிவிட்டடது. கடைசியில் ஒருநாள் கோபப்பட்டு ”என்னய்யா தெனம் ராத்திரி பனிரெண்டு மணிக்குமேல ரொம்பாச்சரியா ராங் நம்பருக்கு அடிக்கியே நல்லாவா இருக்கு ”

15.4.11

அக்கம் பக்கம் அரசியல் பராக்கு பார்த்தல் 5


வெகுதூரம் நிற்காமல் ஓடிய ஓட்டைப்பேருந்து போல. நிற்கப்போகும் போது நெடு நேரம் உருமி விட்டு ஓய்வெடுத்துக்கொண்டது தேர்தல்.திரும்ப  இயக்குவதற்கு  இன்னும் ஒரு மாதம் காத்திருக்கவேண்டும்.அதுவரை அது மலங்க மலங்க முழிச்சுக்கிட்டு இருக்கும்.அதுவரை திருவாளர் தேர்தல் ஆணையம்தான் ஒரு மாத முதல்வர்.அப்புறம் நம்ம அம்மா ஜெயித்து விட்டால் தமிழகத்தில் சமூக பொருளாதார அரசியல் மாற்றம் வந்தே தீரும். ஆதலால் ஜப்பான்,சீனா,மாதிரி இங்கு நில நடுக்கமும் சுனாமியும் ஒருக்காலும் வராது. மாறி மாறி இந்த அதிமுகவும் திமுகவும் வந்து போனாலே போதாதா?.நித்தம் நித்தம் பத்துச்செருப்படி வாங்கிக் கொண்டிருப்பவனுக்கு சவுக்கடி வலிக்காது. சரி இது எப்போ மாறும் என்று அப்பாவியாகக் கேட்கிற ஜனங்களுக்கு பதில் சொல்ல வரிசையாக விஜயகாந்த், ரஜினிகாந்த், விஜய், தனுஷ்காந்த் என்று ஒரு பெரும் பட்டாளம் வரிசையில் நிற்கிறது.( தகுதியு திறமையும் பொங்கி வழிகிற எதிர்கால முதல்வர்கள் எவெரேனும் விட்டுப்போயிருந்தால் தயை கூர்ந்து தழிச்சமூகம் என்னை மன்னிக்கட்டும்).

பிடிக்கும், பிடிக்காது கொள்கை அரசியல் கூட்டணி அரசியல் எல்லாவற்றையும் தள்ளிவைத்து விட்டு நான் வருந்துகிற ஒரே விஷயம் அய்யா வைகோ அவர்கள் புறக்கணிக்கப்பட்டது குறித்துத்தான்.திமுக வை விட்டு வெளியேறி தனியே ஒரு கட்சி ஆரம்பித்தவுடன் 2011 ஆம் ஆண்டு தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக வருவார் என்று என்னைப்போல நினைத்த எண்ணிக்கையிலடங்கா தமிழர்களின் கணிப்பை தவிடு பொடியாக்கி விட்டது சமகால அரசியல்.தான் பேசவேண்டியதை மண்டபத்தில் எழுதி வாங்கி வாசிக்காத பேச்சாளன். நிறைய்ய இலக்கியம் படிக்கிறவர்,நிறைய்ய உலக அரசியல் படிக்கிற வாசகர். பாவம் இந்தச்சதுரங்கக் காய்நகர்த்தலில் கட்டங்களுக்கு வெளியே நிற்கிறார்.அந்தப் பாவத்துக்கு பரிகாரம் இன்னும் எத்தனை வருடங்கள் இந்த தமிழகம் அனுபவிக்கப்போகிறதோ தெரியவில்லை.

அதுகிடக்கட்டும் அரசியல். எனக்கு ஜெயலலிதா அவர்களை நிறைய்யப் பிடிக்கும் நடிகர் திலகத்தோடு இணைந்து நடித்த அத்தணை படங்களையும் குறைந்த பட்சம் நாலு தரமாவது பார்த்திருப்பேன். குறிப்பாக தெய்வமகனும், கலாட்டாக்கல்யாணமும்,இன்ன பிறவும்.புற்கள் நிறைந்திருக்கும் அந்த மலை முகடுகளில் எஸ்பிபி குரலை தன்குரலாக்கிப் ’போட்டுவைத்த முகமோ’ என்று பாடும் போது எற்படுகிற பரவசம் சொல்லில் அடங்காது.

நடிகை என்று சொன்னவுடன் பழய்ய நடிகைகளில் ஒருவர் நடிப்பு அலாதியாக இருக்கும் அவர் பேர் சட்டென நினைவுக்கு வரவில்லை.அவரது தனிச்சிறப்பு வாய்ந்த நடிப்பும் அதைவிடப்பிடிக்கும்.தோசைக்கரண்டியை முகத்து நேரே நீட்டிக்கொண்டு பேசுகிற மாதிரி சோத்தாங்கையை வைத்துக்கொண்டு வசனம் பேசுவார்.கோபம் சந்தோசம்,பரிதாபம்,திகைப்பு என எல்லாவற்றிற்கும் தோசைக்கரண்டியையே நீட்டுவார்.

தோசை என்று சொன்னவுடன் இப்போது படாரென்று நினைவுக்கு வருவது மதுரை. மதுரைக்குள் சமீபமாக நுழைகிற எல்லோருக்கும் கொடுக்கப்படுவது கையில் ஒரு அருவாளும் வாயில் அண்ணன் அஞ்சா நெஞ்சன் என்கிற வார்த்தையும் தான்.தன்னை துதிபாடாத எதையும் மதுரைக்குள் நுழைய விடுவதில்லை என்பதில் வெற்றிபெற்ற அவர் ஆட்சியர் சகாயத்தின் வரவால் கதிகலங்கிப்போனார்.காலம் தோசையத் திருப்பிப் போட்ட மாதிரி போட்டுவிட்டது.

கடைசியாக ஒன்று கிட்டத்தட்ட சாத்தூர் முழுவதும் இருப்பவர்கள் 200ம் வரப்போகிறவர்கள் 50ம் விநியோகித்துவிட, விட்டுப்போனது எங்கள் ஏரியா தான்.என் ஜி ஓ காலனி, குயில்தோப்பு எல்லாம் நடுத்தரவர்க்கம் இருக்கிற கான்க்ரீட் வீடுகள்.எனவே இரண்டு பேரும் கொடுக்கவில்லையாம். ஆனால் ஆத்திரம் அடைந்த ஒரு அம்மா கொடுப்பதற்கு நியமிக்கப்பட்டவரை இப்பொழுதுவரை அவளே இவளே என திட்டித்தீர்த்துக் கொண்டிருக்கிறார்.

8.4.11

மே பதினான்காம் தேதிக்குப்பிறகு என்னென்ன நடக்கும்


எங்கு திரும்பினாலும் நம்ப முடியாத செய்திகளாகவே இருக்கின்றன.எதை நம்ப எதை நம்பாமல் இருக்க நீங்களே சொல்லுங்கள்.

ஜெயலலிதா நடத்திய கோவை பிரச்சாரக் கூட்டத்திற்கு திரண்டிருந்த மக்களைப் பார்த்தால் கலைஞரின் குடும்பத்தைத் தவிர ஒட்டுமொத்த தமிழகமே வந்திருந்தது போலத் தோன்றுகிறது.மதுரையில் நடந்த திமுக கூட்டணி பிரச்சாரத்திற்கு வந்திருந்தவர்கள் வரிசை நீண்டு கொண்டே போய் வாஹா எல்லையைத் தொட்டுவிடும் போலிருக்கிறது. சன்குழுமங்களும் ஜெயா பரிவாரங்களுமாக தொலைக்காட்சி சேனல்கள் எதிரெதிராகக் களமிறங்கி படம் காட்டுகிற தேர்தல் செய்திகளால் மக்களுக்கு கிறுக்குத்தான் பிடித்துப்போகும். இதுக்கு பேசாமால் அந்த சீரியல் நாடகங்களுக் குள்ளேயே புதைந்தும், விளம்பரங்களுக்குள் நனைந்து ஊறி முளைத்தும் போகலாம்.

அச்சு ஊடகங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். தன் ஆயுளில் பாதி நாளை உண்ணாவிரத்ததில் கழித்துக்கொண்டிருக்கும் மணிப்பூரின் இரும்புப்பெண் ஐரோம் ஷர்மிளாவைப்பற்றி செய்தி போடத்துணியாத பத்திரிககள். மத்தியில் விபி சிங் அரசு கவிழ்ந்ததும்.முதல் பக்கத்தில் முக்கால்வாசியை விபி சிங் அரசு கவிழ்ந்தது என்கிற தலைப்பைப்போட்டு சந்தோஷம் கொண்டாடிய பத்திரிகைகள்.கம்யூனிஸ்ட் கட்சிக்காரன் வயிற்று உபாதையால் குசுப்போட்டாலும் இந்தியாவை மாசு படுத்திவிட்டார்கள் என்று செய்தி போடுகிற ஊடகங்கள். இந்தியா மாற்றத்தை தேடுகிறது என்று பிதற்றுகிறார்கள். மாற்றம் என்கிற சொல்லைத் தவிர மற்றவையெல்லாம் மாறும் என்று சொன்ன அந்த தாடிக்கார மனுஷன் ஏளனச்சிரிப்புச் சிரிக்கிறார்.

எங்கள் தீக்கதிர் பத்திரிகையில் அம்மா சிரித்தபடி போஸ்கொடுக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒற்றையாய் உலக உருண்டையைத் தூக்கினாலும் ஒரு வரிச்செய்தி கூடப்போடாத தினமணியும் தினமலரும் தோழர் பிரகாஷ் காரத்,தோழர் என்.வரதராஜன் பேச்சுக்களை முதல்பக்கத்தில் போடுகிறார்கள். விலைவாசிக் கெதிராக டெல்லியில் நடைபெற்ற இடதுசாரிக்கட்சிகளின் கூட்டத்தையும் அந்த ஆர்ப்பரிப்பையும் இருட்டடிப்பு செய்த கொயங்கா குழுமங்கள் எப்போது சிவப்புக்கு மாறியது ? இயேசுவின் வருகை சமீபித்துவிட்டது என்கிற மாதிரி புரட்சி சமீபித்துவிட்டதா?  என்ன நடக்கிறதென்றே விளங்கவில்லை.

அங்கே அஞ்சு கோடியைப் பிடித்தார்கள் இங்கே பத்துக்கோடியைப் பிடித் தார்கள் என்கிற செய்திகள் ஒருபக்கம் கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் வரிசையில் நிற்கவைத்து டோக்கன் கொடுக்கிற பணத்திமிரையும், அதற்காக மக்கள் அடிச்சுப்பிடிச்சி வரிசையில் நிற்கிற அவலங்களை நேரில்பார்க்கும் போது மனம் பதறுகிறது. பக்கம் பக்கமாக ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றிப் பேசுகிற எழுதுகிற பத்திரிகைகள் அதில் பங்கெடுத்துள்ள பௌஅனடைந்துள்ள நிறுவணங்கள் பற்றிய செய்தியைக் கசியவிடாமல் பாதுக்காத்துக் கொள்வது ஏனென்றே விளங்கவில்லை.

இருப்பிடச் சான்றிதழுக்காக கையெழுத்துப் போட்டுவிட்டு இருநூறு ரூபாய் வாங்கிய அந்த கிராம நிர்வாக அலுவலர் சொன்னார் காலங்கெட்டுப்போச்சி சார் ஒரு லட்சத்தி எழுபத்தாறாயிரம் கோடி.அதுக்கு எத்தன சைபர் போடுவதென்றே விளங்கவில்லையென்று. கையெழுத்து வாங்க வந்தவர் அப்பாட தப்பித்தோம் இந்த இருநூறு ரூபாயோடு போச்சே என்று உள்ளுக்குள்  சந்தோசப் பட்டுக் கொண்டு வெளியில் சிவாஜி போலச் சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டார்.

ஊருக்குப்போயிருந்தேன் அந்த அதிமுக கட்சிக்காரர் எங்க சித்தப்பாதான் சில சந்தேகங்கள் கேட்டார். ஏம்பா கலைஞர் கட்சிக்காரங்க போடுற சினிமாப் பாட்டெல்லாம் எம்ஜியார் பாட்டா இருக்கே,திமுக கூட்டணிவேட்பாளர் வாறாராம் ஆனா திருமாவளவன் கொள்கை விளக்கப்பேச்சைப்போட்டு முழக்குறாங்க. ஊருக்குள்ள வர்ற எல்லா வேன்கள்ளயும் பதினாலு கலர்ல கொடிப்பறக்கே அவிங்க போஸ்டர்லேயும் பெரியார், அண்ணா, காமராசர், தேவர், அம்பேத்கர், ஒரு முஸ்லீம் தலைவர் இருக்காங்க இவிங்க அடிக்கிற போஸ்டர்லேயும் இதே தலைவர்கள் இருக்கங்களே என்று காம்ப்ளான் குடிக்காத குழந்தை மாதிரி கேள்விகள் கேட்கிறார்.

நான் என்ன சொல்லட்டும் ?.

மே பதினான்காம் தேதியும் இதே போலத்தான் மின்சாரவெட்டு நீடிக்கும். புரட்சித்தலைவி முதல்வரானாலும், தானைத்தலைவர் முதல்வரானாலும் ஒரு லிட்டர் அக்வா பீனாத் தண்ணீர் பணிரெண்டு ரூபாய்க்குத்தான் விற்கும். மே பதினான்காம் தேதிக்குப்பிறகு அவர் அங்கே தாவினார்,இவர் இங்கே குதித்தார் என்கிற விளையாட்டுச்செய்திகள் வரும். மே பதினான்காம் தேதிக்குப்பிறகு பெட்ரோல் விலை லிட்டருக்கு பணிரெண்டாகக் குறையப் போவதுமில்லை, அரிசி விலை அஞ்சு ரூபாய்க்கு இறங்கப் போவதுமில்லை. மே பதினான்காம் தேதிக்குப்பிறகும் தனியார் வெட்டிய வாய்க்கால் மூலமாகவோ அரசு பதித்த குழாய்கள் மூலமாகவோ சீமைச்சாராயம் கட்டாயம் ஆறாக ஓடத்தான் போகிறது.

அதன்பிறகு பாருங்கள் எல்லாக் கலர் கொடியும் இறங்கி இளைப்பாறப் போய்விடும்,ஒரே ஒரு கலர்க்கொடி மட்டும் பிரச்சினைகளைப் பேசியபடி இறங்காமல் பறந்துகொண்டிருக்கும் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

5.4.11

சமூகச் சீர்கேடுகளைக் கிண்டல் செய்யும் தேர்தல் பகடிகள்


ஈரானில் 2009 ஜூன் 12 ல் நடந்த தேர்தலில் அதிபரின் சார்பில் போடியிட்ட மஹ்மூத் அஹ்மதியினைக்கிண்டல் செய்த தேர்தல் பகடிகள் இவை.நமது
நாட்டில் நடக்கிற நடப்புகளோடு ஒப்பிட்டால். அவர்களின்  பிரச்சினை யெல்லாம்  ஜூஜுபி.

1) அம்மா வீட்டுக்குப்போயிருந்த மனைவி கணவனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்.

” அன்பே தக்காளி மட்டும் வாங்குங்கள் அவசரப்பட்டு உருளைக் கிழங்குகளை வாங்கிவிடவேண்டாம்,தேர்தல் நெருங்குகிறதல்லவா நமது வீட்டுக்கு அதிகப்படியான உருளைக்கிழங்குகள் வரும்”.

 =காதலோடு மனைவி.

தேர்தல் நேரத்தில் அகமதிநெஜானி இலவச உருளைக்கிழங்குகள் வழங்குவதாக  வந்த செய்தியை கிண்டல் பண்ணி வந்த பகடி.

0

2) ஏன் முசாவியைத்தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு அவரது ஆதரவாளர்கள் அடித்த பிட் நோட்டீஸ்.

  அவர் வயோதிகர்,அதனால் நீண்ட நாட்கள் அவரது கொடுங்கோலாட்சியைப்பொறுத்துக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தமில்லை

  அவரது மனைவி ஒரு படித்தவர்,அவர் ஒரு பேராசிரியை,ஆதலால் வேலை      நேரத்தில் அவரைத்தொந்தரவு செய்யமாட்டார்

  அவர் ஒரு போதும் அவரது உறவினர்களுக்கு அரசாங்க உத்தியோகத்துக்கு சிபாரிசு செய்யமாட்டார்

0

வலையில் சுட்ட அயல் தேர்தல் பகடிகள் மண்ணின் மணத்துக்கு மாற்றபொபட்டிருக்கிறது.

3) இரண்டு கட்சிகளின் தலைவர்கள் ஹெலிகாப்டரில் பறந்து கொண்டிருந் தார்கள். முதலாமவர் கீழே பார்த்துக்கொண்டே சொன்னார் " பாருங்க நான் ஆயிரம் ரூபாயைக் கீழே போட்டேனென்றால் பத்து வாக்காளர்கள் சந்தோஷப் படுவார்கள்"  என்றார்

இரண்டாமவர் சொன்னார்  ""நான் ஐயாயிரம் ரூபாயைக்கீழே போட்டேனென்றால் பத்துப்பேர் சந்தோஷப் படுவார்கள்" என்றான்.

இதைக்கேட்டுக்கொண்டிருந்த பைலட் பவ்யமாகக்கேட்டார்  " ஒட்டுமொத்த தமிழ்நாடே சந்தோசப்பட நான் ஒன்று சொல்லட்டுமா"

" சொல்லு சொல்லு"  என்றார்கள்

”ஒங்க ரெண்டுபேரையும் தூக்கிக்கீழே போட்டால் போதும் ” என்றார்.

0

4) தேர்தல் பிரச்சாரத்துக்கு போய்விட்டு நள்ளிரவில் திரும்பிக்கொண்டிருந்த வேட்பாளர் இருட்டில் ஒரே கூட்டமாக இருப்பதைப் பார்த்து வண்டியைத் திருப்பி அங்கே போகச் சொன்னாராம். போனப்பின்தான் தெரிந்தது அது பேய்களின்மாநாடு என்று. வந்தது வந்தாச்சு ஓட்டுக் கேட்டு விட்டுப் போவோம் என்று முடிவானது. லைட்டப்போட்டு மைக்கைப்பிடித்தார் வேட்பாளர்.

3.4.11

உலகக்கோப்பை வெற்றியையும் பூனம்பாண்டேயின் வாக்குறுதியையும் விற்றுக்கொண்டிருக்கிற ஊடகங்கள்.



நகைச்சுவை நடிகர் வடிவேலு சாத்தூருக்கு வந்தார்.


சுருளிராஜனுக்குப் பிறகு எல்லோர் மனதிலும் பசை போட்டு ஒட்டிக்கொண்ட நகைச்சுவைக் கலைஞன் வடிவேலு. தனது நகைச்சுவையில் சமூகத்தின் அடித்தள மக்களின் குமுறல்களை பகடியாக்கும் கருத்தை அடிநாதமாக வைத்துக்கொண்டவர்.அறிவார்ந்த நகைச்சுவையாக தெரிவு செய்து தன்னை ஒரு மேல் மட்டத்தவனாக காட்டிக்கொள்ளாத வெள்ளந்தி நடிகன் வடிவேலு. பாரவண்டியின் மேக்காலாக அழுத்துகிற புறச்சூழலைக் கடத்திவிட ஒரு பத்து நிமிடம் வடிவேலுவின் நகைச்சுவையைப் பார்த்தால் மனசு இதமாகும். சிலபொழுதுகளில் கண்ணில் நீர்கோர்க்கிற வரை சிரிக்கமுடிகிற அவரது நகைச்சுவையை ரசிக்காத மனிதர்களே இருக்க முடியாது.

அவர் நேற்று சாத்தூருக்கு வந்தார்.ஒரு கட்சியின் பிரச்சார பீரங்கியாக இல்லாமல் ஒரு சிரிப்பு பீரங்கியாக அவரைப்பார்க்க அலைபாய்ந்தது. மேலே ஒட்டிக்கொண்டிருந்த இலக்கியம்,அரசியல்,வங்கி ஊழியன் என்கிற பகட்டுக்களை உதறிவிட்டு எம் சகோதர சகொதரிகளோடு கூட்டத்துக்குள் கறைந்துபோக சித்தமாயிருந்தேன். ஆண்களை விடப் பெண்கள் கூட்டம் அதிகாமக இருந்தது. ஆறு மணிக்கு வருவார் என்ற வாக்குறுதி ஏழறை வரை நீட்டித்தது. சாத்தூர் எட்வர்டு மேநிலைப்பள்ளிக்கு எதிரில் உள்ள கைவண்டி தள்ளுவண்டி வியாபரிகள் அவர்கள் எந்தக்கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் பூரித்துப் போயிருப்பார்கள். ஒரு அறை மணிநேரத்தில் இருநூறு சம்சா வை விற்றுத்தீர்த்த தள்ளுவண்டிக்காரரின் அருகில்தான் நானும் நண்பர் கணேசனும் நின்றிருந்தோம்.

தேதிமுக பிரமுகர் ஒருவர் கூடுகிற கூட்டத்தைப் பார்த்துக் கடுப்பாகி ”எலெக்சன் கமிஷன் காரன் என்ன..........றானா ” என்று கெட்ட வார்த்தையில் வசைபாடிக் கொண்டிருந்து விட்டு எத்தல் ஹார்வி ரோட்டிலிருக்கும் டாஸ்மாக்குக்குள் நுழைந்துவிட்டார். அந்தக் கூட்டத்திலிருந்த  எளந்தாரிகள் பத்துப்பேர் கிரிக்கெட் ஸ்கோரையும் ஓடிப்போய் பார்த்துக்கொண்டு அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணுமாக இருந்தார்கள்.நேரம் நெருங்க நெருங்க தெற்கே இருந்து வருகிற ஓவ்வொரு வாகன வெளிச் சத்துக்கும் கூட்டம் ஆரவாரம் செய்தது. ஏழுமணிக்கெல்லாம் ஆண்கள் பகுதியில் கூட்டம் அதிகரித்தது. எல் ஐ சி மேலாளர்,சத்யா ஓட்டல் சிப்பந்தி, நாலைந்து பஞ்சாயத்து தலைவர்கள்,ஐஓபி சிப்பந்திகள் எனத் தெரிந்த முகங்களாக நெருங்கி வந்தார்கள். அவரவர்க்கு ஒரு கட்சி பிடிப்பு இருந்தாலும் அவரது நகைச்சுவைக்காக வந்தோம் என்றார்கள்.

சத்தூரையே தூக்குகிற ஆரவாரத்தோடு வடிவேலுவின் வாகனம் வந்தது. பாதுகாப்புக்காக பிடித்திருந்த கயிற்றை கீழே போடும்  படிக்கேட்டுக் கொண்டார் தாய்மார்களை எதிரே வர அழைத்தார். அவன் இவன் நாயே பேயே என்றெல்லாம் யாரையும் திட்டவில்லை அவரது வழக்கமான மொழியிலேயே ரெண்டு நிமிடம் பேசிவிட்டு அங்கிருந்து கடந்துபோனார். அதனாலேயே யாருக்கும் ஓட்டுப்போடப் போவதில்லை என்கிற தன் மன உறுதியை தளரவிட்டுவிடாமல்,” வாடி இன்னும் இருபது க்றோஸ் அடைச்சாத்தான் நாளைக்கு காக்கிலோ கோழி எடுக்க முடியும்” என்று சொல்லிவிட்டு தீப்பெட்டியாபீசுக்குள் போன  அம்மாவின்  கையைப் பிடித்துக்கொண்டு போன பத்துவயதுச் சிறுமியிடம் இருந்த சந்தோசம் போலக்கூட்டம் கறைந்து போனது.

அந்த ஆராவாரமும்,கைதட்டலும்,விசிலும் வெறும் உணர்ச்சிகள் மட்டு மில்லை ஒரு கட்சிக்கானதாகவும் தோணவில்லை. எல்லோருக்குள்ளும் யாரையோ ஒரு ஆளைத் தேடுகிற ஆர்வம் மறைந்து கிடக்கிறது. தங்களின் சோகங்களைக் கடத்திவிடுகிற ஒரு தோளைத்தேடியபடியே காத்திருக்கிறது பாமரக்கூட்டம். அவர்கள் தேடுகிற சாயலில் ஆள் கிடைக்கிற வரை கூடிக்கூடி கலைந்து போய்க்கொண்டே இருப்பார்கள். கிடைக்காமலா போகும் ?