17.4.11

எரி நட்சத்திரமும், பச்சை மரமும்.


நடைப் பயிற்சியை முடித்துக்கொண்டு திரும்புகையில் நெல்லை துரித வண்டி வந்து கொண்டிருந்தது. தண்டவாளத்தை ஒட்டிய வேலிச் செடிகளின் மறைவில் இருந்து சில பெண்கள் எழுந்து ரயிலுக்கு முதுகைக் காண்பித்துக் கொண்டு நின்றார்கள். இன்னும் கொஞ்சம் தள்ளி ஆண்கள் எழுந்து சலிப்புடன் ரயிலைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள்.மெல்லக்கடந்து போகிற முன்பதிவு செய்யாத பெட்டிகளின் வாசலில் இளைஞர்கள் நின்றுகொண்டு காலைக் காற்றை முகத்தில் ஏந்திக்கொண்டு சிலிர்ப்படைந்தார்கள்.பொதுப்பெட்டிகள் இறைச்சலுடனும்,முன்பதிவு செய்யப்பட்டவை மெலிதான ஓசையுடனும் குளிரூட்டப்பட்ட பெட்டிகள் கள்ள மௌனத்தோடும் கடந்து போயின.

 இனி வீடு,ஒரு குவளைத் தேநீர்,கொஞ்சம் தீக்கதிர்,இரண்டு மூன்று தொலைபேசி அழைப்புகள்,அடுப்படியில் இருந்து அன்றாட பற்றாக்குறை அலுப்புகள் என் இந்தக்காலை கடந்து போகும்.மணிஅடித்தது  அந்த கைப் பேசியில்  வைத்திருக்கிற மாலையில் யாரோ மனதோடு பேச பாடல் சில நேரம்  இனிமையாகவும் பல நேரம் எரிச்சலாகவும் கேட்கும்.மாலை ஏழுமணிக்கு வருகிற அழைப்பில் கடைசி மூன்று எண்கள் இரண்டாக இருந்தால் பயமாக இருக்கும்.ஆமாம் அவர் இரண்டாவது குவளையைக்காலி செய்து ஒரு சிகரெட்டை குடித்து முடித்தவுடன் எனக்கோ அல்லது மணி அண்ணனுக்கோ பேசுவார்.வார்த்தைகள் இடறி இடறி விழும். அதிலிருந்து மூன்று வருடம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது இன்க்ரீமெண்டை சரிசெய்ய வேண்டுமென்கிற செய்தியை தெரிந்து கொள்ளச்சிரமம் இருக்காது.என்ன சிரமம் என்றால் அதே செய்தியைக்கிட்டத்தட்ட நான்காவது முறை சொல்லும்ப்போதும் முதல் தரம் சொல்கிற ஆர்வத்தில்லேயே சொல்லுவார்.

ஆனால் அண்ணன் சோலைமாணிக்கம் அழைப்பர் ஒரு ஐந்து நிமிடம் பேசுகிற பொருளை ஆரம்பிப்பார்.சரி போனக்கட் பண்ணு அப்புறம் கூப்பிடுகிறேன் என்பார்.ராகவனும்,பத்மாவும் அப்படியில்லை பாடச்சொல்லுவார்கள், கிடைக்காமலவர்களே பாடுவார்கள் அல்லது நல்லபாட்டைப் பற்றிப் பேசுவார்கள்.சில நேரம் நடுராத்திரி அழைப்புவரும் நல்ல கனவோ கெட்ட கனவோ தடைப்பட்டுப் போகும். கண் எரிச்சலோடும் நிறைய்யத் திகிலோடும் எடுக்கிற தருணங்கள் கொடியது. வயதான அம்மா,அப்பா நோய்வாய்ப்பட்டிருக்கும் நெருங்கின சொந்தம், இப்படி பல முகங்கள் நிழலாட எடுத்தால் ‘ என்ன இன்னும் செங்கல் லோடு வர்ல’ என்று குரல் வரும். தவறான அழைப்பபின் மீது ஏற்படுகிற கோபத்தைக் காட்டிலும் துர்செய்திகள் வரவில்லை என்கிற சந்தோஷம் தான் அதிகமாகும். ’அண்ணாச்சி ராங் நம்பர் அண்ணாச்சி’ என்று சொல்லிவிட்டு வைக்கும்போது தூக்கம் போயிருக்கும். அந்த பயம் கவ்விய ராத்திரியைச் சரிசெய்ய எனக்கு தெரிந்த ரெண்டு உபாயங்களில் ஒன்று வடிவேலுவின் காமெடியைப் பார்ப்பது.

அப்புறம் வீட்டுத் தொலைபேசியில் அடிக்கடி வந்த அந்த தவறான அழைப்பைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்.இப்படித்தான் இரவு பதினோரு மணிக்குமேல் டெலிபோன் மணிபோல அலறும்.எடுத்தால் மறு முனையில் வெறகு லோடு அனுப்பச்சொல்லி ஆறு நாளாச்சு இன்னும் அனுப்பல என்று ஆறுநாளும் பேசினான்.முதல் நாள் இது நீங்க கேட்கிற நம்பர் 8இல்லை என்றும் மறுநாள் ஏரியா கோடை சரியாக அடிக்கச்சொல்லியும்,பேசாமல் திருப்பிவைத்தும் பார்த்தாகிவிட்டடது. கடைசியில் ஒருநாள் கோபப்பட்டு ”என்னய்யா தெனம் ராத்திரி பனிரெண்டு மணிக்குமேல ரொம்பாச்சரியா ராங் நம்பருக்கு அடிக்கியே நல்லாவா இருக்கு ”
என்று கேட்டேன். ஏ எடுத்தா ஒழுங்கா ராங் நம்பர்னு சொல்லு நாங்க சொரைக்காப்பட்டி தெரியும்ல என்றான். மறுநாள் அழைப்பு வரும் போது அவனைப்பேசவிட்டு பின்னர் குரலை இறுக்கி

யார்ல அது டி எஸ்பி ஆபீசுக்கு போன் பண்ணி வெறகு கேக்குறது நம்பர ட்ரேஸ் பண்ணுய்யா சொரைக்காப்பட்டியா எடு ஜீப்ப

என்று சொல்லி முடித்ததும்.

அய்யா அய்யா அய்யா

என்று குழைந்தான்,

தெரியாம சாமி இனிமே தெசக்கடப்பக்கமே திரும்பமாட்டன் ஏதோ மப்புல

மப்படிச்சிட்டு ஓட்ற ரெயிலப்போயி முட்டுவியா இரு ஒண்ணிய பதினஞ்சு நாள் ஒலமூடியில ஒண்ணுக்கிருக்க விட்டாத்தான் சரிப்படுவ என்றதும்.

சாமி பிள்ளகுட்டிக்காரஞ்சாமி என்று கெஞ்சினான். சிரிப்பை அடக்க முடியவில்லை முடித்துக்கொண்டேன்.

தோழர் எம்பிஎஸ் அழைத்தார் அம்மையப்பனோட அப்பா இறந்து போனதாகச்சொன்னார். அம்மையப்பன் என்கிற பேரைக்கேட்டதும் துக்கத்தை விடக்கோபம் தான் அதிகம் வந்தது.ஒரு தர்ணாவுக்கும் வந்ததில்லை.ஒரு வேலைநிறுத்தத்திலும் பங்கு பெறவில்லை. அவனுக்காகவும் அவனோடு சேர்ந்து அறுபது பேருக்காகவும் ஒரு வருஷம் நிர்வாகத்தோடு மல்லுக்கட்டி. அப்புறம் வழக்குப்போட்டு அலைந்து தீர்ப்பானது. அறுபது பேரும் நிரந்தரமாக் கப்பட்டார்கள். அடுத்த மாதமே எதிர்ச்சங்கத்தில் சேர்ந்து விட்டான். பார்க்கிற நேரமெல்லாம் தலையைக்குனிந்து கொண்டு கடந்து போவான். கேட்டால் அனுகுமுறை சரியில்லை என்று சொல்லுவான் வகுறா எரியும்.

வீட்டை விசாரித்து அடைந்த போது ஏற்கனவே ஏழெட்டுத்தோழர்கள் அங்கே நின்று கொண்டிருந்தார்கள்.ஓடி வந்து கையைப்பிடித்தான். எங்கே வராமல் போய்விடுவீர்களோ என்று நினைத்தேன். சந்தோஷம் வந்துட்டீங்க,காபி சாப்பிடுங்க என்றான். வேண்டாம் காபி பிடிக்காது என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்.நூறு ப்ளாஸ்டிக் நாற்காலிகள் வந்திறங்கியிருந்தது.பந்தல் போட்டு மாத்துக்கட்டிக் கொண்டிருந்தார்கள். வெங்கடாசலபுரத்திலிருந்து கொட்டு மேளம் வந்திருந்தது.ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்சிலிருந்து ஆயிரம் வாலா வெடிச்சரம் ரெண்டு பெட்டி வாங்கி வரச்சொன்னான்.பூத்தேர் கட்டுவதற்கும் ஏற்பாடாகி இருந்தது. மனைவி அவனை அழைத்து இன்னொரு நூறு ரூபாய்க்கட்டை எடுத்துக்கொடுத்தாள்.மனைவி ஏவாமக்கள் மூவா மருந்து எனப் பாடம் சொல்லும் இடைநிலை ஆசிரியை. ரெண்டு சம்பளம் கோவில்பட்டியில் 1200 சதுர அடியில் வீடு. சுற்றிலும் கொடவாங்கல் மூனுவட்டி.

சுற்றிலும் பார்த்தேன் எல்லாம் நகரத்து மனிதர்களாகவே தெரிந்தார்கள். அம்மையப்பன் சொந்த ஊர் எட்டக்கா பட்டி என்று தெரியும்.அங்கிருந்து யாரும் வந்திருந்ததாகத் தெரியவில்லை.ராமர் சார் பக்கத்தில் போய் உட்கார்ந்தேன். சிரிக்காமல் குசலம் விசாரித்தார்.அவர்தான் அவனுக்கு மேனேஜர். ஆபீசுக் கெப்போ என்று கேட்டேன்.கிளம்பியாச்சு ஒங்களப்பாத்துட்டுத்தான் உட்கார்ந்திருக்கேன் என்றார். என்ன சார் கிராமத்துக்காரங்க யாரையும் காணோம் என்றேன். அவங்களா ?, அவங்க வந்தா இவனப் பாடையில வச்சிருவாங்க என்றார். பதறிப்போய் என்னவென்று கேட்டேன். கடைசிக் காலத்தில் அந்த மனுஷன் ஊர்ல வாங்கிக் குடிச்சிக்கிட்டு இருந்தார். இவன் ஊர்ப்பப் பக்கமே தல காட்டல. போய்க்கேட்கப் போன ஊர்க்காரங்களையும் கேட்லயே திருப்பி அனுப்பிட்டான். சாகப்போறார்னு தெரிஞ்சதும் தூக்கிட்டு வந்து ஆஸ்பத்திரியில போட்டுட்டு செத்ததும் தூக்கிட்டு வந்துட்டான். எழுந்து கிளம்பி வந்துவிட்டேன்.

வண்டியில் வரும்போது எல் ஐ சி அலுவலகத்திற்கு முன்னாடி அந்தக் கண் தெரியாத ஜோடி படுத்துக்கிடந்தது.ஒரு தூக்கு வாளியில் டீயும் பன்னும் வாங்கிக்கொண்டு வந்து டம்ளரில் ஊற்றிக்கொடுத்துக் கொண்டிருந்தான். அவர்களின் பையன். அவனுக்கு ஆறு வயதுதான் இருக்கும். .எட்டத்தில் வண்டியை நிறுத்தி அவர்களை நீண்டநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். எரிநட்சத்திரம் விழுவதைப்பார்த்தால் உடனடியாக பச்சை மரத்தைப் பார்க்க வேண்டும் என்று சொன்ன அம்மாவின் வார்த்தை மங்களாக ஒலித்துக் கொண்டிருந்தது.

13 comments:

Ramani said...

மனம் தொட்ட பதிவு
எரி நட்சத்திரம் பார்த்தால்
பச்சையை பார்க்கவேண்டும்
என அம்மா சொன்னதாகச்
சொன்ன வரிகள்
நிறைய சொல்லிப்போனது
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

சுந்தர்ஜி said...

ஆஹா!அருமையான பதிவு தோழர்.

கலவையான உணர்வுகளில் மிதக்கவிட்டு பின் மூழ்கவைத்த அற்புதம் இது.

ரயிலுக்கு வழிவிட்டுத் தன் காலைக்கடனைக் கழிக்கும் பெண்கள் என்னைப் பொறுத்தவரை துயரம் மிக்கவர்கள் காமராஜ்.

என் கவிதையில் அதை இப்படிச் சொன்னேன்.

அதிகால ரயில்
நின்ற நடுவழியில்
கண்ணீர் மறைத்தது
மலம் கழிக்கும்
பெண்களின் துயரை.

இதுபோல நிறைய எழுதுங்கள் தோழர்.

வானம்பாடிகள் said...

அரக்கோணம் மார்க்கத்தில் வியாசர்பாடி ஜீவா இதே போன்றதொரு இடம். ஆனால் சபிக்கப்பட்டது. காலை வண்டிகள் தவறாமல் சிக்னலுக்காய் காத்திருக்கும். அதை சமாளிக்கும் விதம் கொடுமை. ம்ம்..மெதுவே கனக்க வைத்து, சிரிக்க வைத்து, திரும்பவும் சுமை:). நல்லா வந்திருக்கு.

காமராஜ் said...

நன்றி அருமைத் தோழர் ரமணி.

காமராஜ் said...

நன்றி சுந்தர்ஜி.

காமராஜ் said...

பாலாண்ணா...
வணக்கம்.

ஓலை said...

அருமையான பதிவு நண்பரே! யதார்த்த வாழ்வை அழகா சொல்றீங்க.


"அன்றாட பற்றாக்குறை அலுப்புகள்"
கையில எவ்வளவு துட்டு இருந்தாலும் இது மட்டும் நிப்பாட்ட முடியாதுங்க.

நிறைய பேர் அனுபவம், புனைவு என்று label கொடுக்கின்றனர். முரண்படுவதாக தோன்றுகிறது# டவுட்டு

ஈரோடு கதிர் said...

ரயிலடி அவலம்.... இன்னும் இந்த தேசத்தின் கொடிய அடையாளம் தான்!

அதென்ன குளிர்சாதனப்பெட்டிக்கு கள்ள மௌனப் பட்டம்! :)

அம்மையப்பன் :(

Rathnavel said...

நல்ல பதிவு.
நன்றி.

இரா.எட்வின் said...

அன்பின் காமராஜ்,
வணக்கம்.
மாதவராஜுக்குத்தான் நன்றி சொல்லனும்.சமீபத்தில் எழுதியவர்கள் என்று ஓடிக் கொண்டே இருந்ததில் என் ப்ர்யரை ரசித்துக் கொண்டே இருந்தவன் உங்களைப் பிடித்தேன்.பூங்காற்று தனசேகர் மலம் கழிக்கப் பெண்கள் படும் அவஸ்தை குறித்த தனது படைப்பை ஒரு முறை சொன்னபோது அது புத்தகக் கண்காட்சி என்பதையும் தாண்டி அழுதேன். நானும் ஒரு தொழிற்சங்கப் பொறுப்பாளன் என்கிற வகையில் உங்களது ஆதங்கமும் வலியும் என்னால் உணர முடிகிறது.

நாளை எனது வலையின் முகப்பில் உங்கள் வலை முகவரியை வைத்துவிட வேண்டும்.

ராகவன் said...

அன்பு காமராஜ்,

இப்படிப்பட்ட பதிவை படித்து எத்தனை நாளாச்சு காமராஜ்... இது தான்யா சொகம்... ரயில்வே தண்டவாளங்களை ஒட்டி மலங்கழிக்கும் ஊர்களை தாண்டியும்... இதில பேசியிருக்கிற விஷயங்கள்... கோபங்கள்... கடைசிப் பத்தியில வந்து உட்காரும் அந்த கண் தெரியாத பெற்றோர்களின் பையன் டீயும் பன்னும் கொடுக்கும் காட்சி...

ரசமாய் பாயும் அந்த நகைச்சுவை இதெல்லாம் தான் கலர்கலராய் படங்காட்டுது எனக்கு.

ஒரு சின்ன பாராவில் எத்தனை விஷயங்களை மடக்கி வைத்திருக்குது இந்த எழுத்தும், அதை எழுதுகிற மனசும்... காமராஜ்... வாழ்த்துக்கள்

அன்புடன்
ராகவன்

அன்புடன் அருணா said...

/எரிநட்சத்திரம் விழுவதைப்பார்த்தால் உடனடியாக பச்சை மரத்தைப் பார்க்க வேண்டும் என்று சொன்ன அம்மாவின் வார்த்தை/
இப்படி அம்மாவின் வார்த்தைகள் வாழ்வெங்கும் நிறைந்து மனதையும் நிறைத்துக் கொண்டேயிருக்கின்றன!!!!

பா.ராஜாராம் said...

சுளீர் சுளீரென சந்து பொந்தில் திரும்புகிற மருது வேளார், சாந்தமாகிற ஒரு 'லெக்கு' உண்டு காமு மக்கா. அது அவர் செய்கிற மண் குதிரைக்கு முன்பான லெக்கு. 'ந்தா இங்கனதான் அய்யனாரும் ஒக்காந்து பார்த்துக்கிட்டு இருக்கார் சீக்கிரம் கண்ணத் தெறந்து விடுலே பொறப்படனுமுன்னு சொல்லுது பெரிசு' எனப் பேசிக் கொண்டே வேலையாக இருப்பார்.

மருது வேளாரை மாமா என்போம் காமு (அல்லது) காமு மாமா. :-)