2.10.10

குழந்தையாக்குபவள்.

பதினைந்தாம் தேதி மின்சாரக் கட்டணம் செலுத்துகிற கூட்டம் போல எந்த நாளும் அமலி துமளிப்படும் வங்கிக்கிளை. சமாளிக்க ஒரே ஒரு பெண் ஊழியர் மட்டும் அல்லாடுகிற இடம். வருகிற ஐம்பது பேரும் ஒரே நேரத்தில் பணம் செலுத்தி அல்லது வாங்கி வெளியேறுகிற அவசரம் இருக்கும்.அதன் பொருட்டு பல வாய்த்தகராறு வரும்.சிப்பந்திகளோடு யாரும் சண்டையிட்டால் மேலாளராகப்பட்டவர் ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்.அதே நேரம் மேலாளரை யாரும் குத்தம் சொன்னால் 'நீங்கள்ளாம் இருந்து என்ன பிரயோசனம்' என்று செய்த வேலையைப் பாராட்டாமல் செய்யாத சின்ன சின்ன விடுதல்களுக்காக குய்யோமுறைய்யோ என்று கத்துவார். அதுக்குத்தான் சம்பளம் அளப்பதாக அசையாத நம்பிக்கை அவருக்குண்டு.

வேலை நெருக்கடி.வாடிக்கையாளர் நச்சரிப்பு எல்லாவற்றையும் இலகுவாக்கிக்கொள்ள முடியும்.அதற்கு பல உபாயங்கள் உண்டு. கோபப்படாத பதில்.சின்ன சின்ன விசாரிப்புகள்.நாங்களும் உங்க வீட்டு ஆட்கள் தான் என்கிற உரிமையை நீட்டுவது பல நேரம் பலனளிக்கும்.அல்லது தேவதை சூரியா வந்ததுபோல யாரவது பிரசன்னமானால் இறுக்கம் தளர்ந்து சிரிப்பு மேளமடிக்கும்.ஆனால் உடனிருந்து கொள்ளும் டேமேஜர்களைத்தான் சமாளிப்பது கஷ்டம்.

சூரியா. முதலில் வரும்போது எனக்கு விசித்திரமாக இருந்தது.குற்றாலத்திலிருந்து பூச்செடிகள் கொண்டுவருவார்கள்அதில் ஒரு சாண் உயரமுள்ள ரோஜாச்செடியில் அழகான பட்டுரோஜாப்பூ பூத்திருக்கும் இல்லையா.? அதைப்பார்த்த உணர்விருந்தது சூரியாவைப்பார்க்க. மூன்றரை அடியிலிருந்து நாலடிக்குள் தான் உயரம் இருப்பாள்.ஐந்து படிக்கிற சிறுமியின் உயரம்.ஆனால் ஒரு இருபது வயது குமரியின் அடையாளங்கள்.ஒரு அரை மினியேச்சர் மாதிரி.சேமிப்புக் கணக்கு ஒன்று ஆரம்பிக்கவேண்டு மென்றாள். வயதென்ன வெனக்கேட்டேன்.

'ஆ...ங் எனக்கு இருபது வயசு.சின்னபிள்ளண்னு நெனச்சீங்களா?'

ரைம் சொல்லுகிற மாதிரியே இருந்தது.
'கணக்கு எதுக்கு'


'செக்கு வரும் அத மாத்தனுமில்ல,நா கோயம்முத்தூர் பக்கம் மில்லுல வேல பாத்தேன். சுமங்கலித்திட்டத்துல.
எல்லாம் பிடிச்சது போக 27 ஆயிரம் ரூபா வரும்'.
'27 ஆயிராமா அத வச்சு என்னசெய்வே'
'ஒங்களுக்கு சுமங்கலித்திட்டமுன்னா என்னான்னே தெரியாதா,அந்த பணத்த வச்சி நகை எடுக்கணும்,அவெ வந்து பத்துப் போடு இருபது போடுன்னு கேப்பாண்ல'
'யாரு ஒங்க தம்பியா'
'சார் கேலி பண்ணாதிக. புருஷங்காரன்'
இப்படி அவள் சொன்னதும் கிளை முழுக்க சிரித்தது. சிடுசிடு சிங்காரம் மேனேஜரும் அவரோடு மல்லுக்கட்டிய கடா மீசைப்பார்ட்டியும் கூட.
யாரும் நகரவில்லை யாரும் அவசரப்படுத்தவும் இல்லை.ரேசன் கார்டு,அடையாள அட்டைகளின் நகலெடுக்கப்போன அவளது சித்தி ஓடிவந்தார்.

'என்ன....இங்கெயும் வந்து வில்லடி வச்சுட்டயா'.

சித்தியும் கூட அதே மாதிரி,தில்லானா மோகனாம்பாள் மனோரமா மாதிரி இழுத்து இழுத்து பேசினார்.

'சும்மா கெட நா பேசுனா மில்லில மேனேஜரு,சூப்பர்வைசர் எல்லாரும் கூட்டமாவந்து கேட்டு ரசிப்பாங்க தெரியுமா'

என்று சொன்னாள்.தொடர்ந்து

'சார் இது எங்கம்மா இல்ல சித்தி,அம்ம கூடப்பொறந்தது,சத்துணவுல ஆயா வேல பாக்காங்க'
'சாப்பாடு போட்ற ஆயா இப்படி வந்துட்டா பிள்ளைக பசியல துடிக்காதா,
'சா...ர் பண்ணெண்டு மணிக்கே போட்டாச்சு தெரியும்..மா'
'ஆமா என்ன கொழம்பு'
'சாம்பாரு'
'கூட்டு'
'முட்டை'
'கலைஞர் முட்டயா  செரி ஒரு நாளைக்கு பத்து முட்ட கெடைக்குமா ஒங்களுக்கு'
'சத்துணவு டீச்சர்,எட்மாஸ்டர் எடுத்துக்கிட்டு மிச்சந்தா தருவாக,எங்களுக்கு அஞ்சி'
அதுக்குள்ள அவளது சித்தி இடைமறித்து
' லூசு லூசு இதெல்லாம் யாருசொல்லச்சொன்னா' 
 அதட்டினாள்

'ஒங்களுக்கு வேணுமா '
'அஞ்சு முட்ட ஒங்களுக்கே காணாதே'
'ஐயய்யோ ஒங்களுக்கு தெரியாதா நாங்க சைவப்பிள்ள சாப்பிட மாட்டோ ம்,ஆனா நாஞ்சாப்பிடுவே'
'இவ்ளோ வெவரமான பொண்ணு படிச்சிருக்கலாமில்ல தாயி'
 என்றேன்.

'சார் நா ப்ளஸ்டூ படிச்சே,
'அப்றம்'
'ஸ்கூல் ஆரம்பிச்சதுமே நிப்பாட்டிட்டு கோயமுத்தூர் போயிட்டேன்'
'எதுக்கு'
'அப்பா செத்துப் போச்சில்ல ஒங்களுக்குத்தெரியாதா'

என்று அதே தொணியில் சிரிப்புமாறாமல் சொன்னாள்.
கிளை மொத்தமும் உறைந்து போனது.அதற்குப்பிறகு அவள் ஏதேதொ சொல்லிக்கொண்டே இருந்தாள். யாரும் சிரிக்கவில்லை.அடுத்த முறை வரும்போது நேராக கேஷ் கவுண்டருக்கு போய் எட்டிப்பார்த்து விட்டு சோர்ந்து போய் வந்தாள்.என்னைத் தேடியிருக்க வெண்டும். அப்புறம் வெளியே இருந்ததைக்கண்டு பிடித்து


'இந்தார்க்காருல்ல'

என்றாள்.சம்பள நாளை விடச்சந்தோஷமாக இருந்தது.

36 comments:

விந்தைமனிதன் said...

கடேசி வரில கதைய ஒளிச்சி வெக்கிற வித்தையா! நடக்கட்டும்...நடக்கட்டும். இன்னிக்கி கூட இதே மாதிரி கடேசி வரில கத இருக்குற ஒண்ணு படிச்சேன். "அப்பாவின் வேட்டி"ன்னு...

விந்தைமனிதன் said...

சொல்ல மறந்துட்டேன். "அப்பாவின் வேட்டி" கத பிரபஞ்சன் எழுதுனது. இன்னிக்கி அழியாச் சுடர்கள்ல போட்ருக்காங்க

Sethu said...

வேலை செய்யற இடத்திலேயே நயமா கேள்வி கேட்டு எல்லோரையும் இலகுவாக்குவது வெள்ளந்தி மனது. நண்பனையும் எதிரியையும் நாம் தான் உருவாக்கிறோம் இல்லையா. உங்களைப் போல் நல்ல மனது வேண்டும் எல்லோருக்கும்.

உங்க எழுத்து நடையே கதையின் சுவராசியத்தை கொண்டு வருது. மிக்க நன்றி.

வானம்பாடிகள் said...

இப்படித்தானே இருந்திருப்போம் எல்லாரும் ஒரு காலத்தில. பூச்சு இல்லாம, வெள்ளந்தியா. எல்லாருமே இப்படி இருந்துட்டா லூசுன்னே இருக்காதில்லையா? வெவரமா இருக்கென்னு போயிதான் எல்லா பாவமும் வந்து சேருது. லூசானா என்ன? அத்தன பேருல ‘இந்தாருக்காருல்ல’ன்னு அது லூசாவே இருக்கட்டுமே, அந்த வெள்ளந்தி மனசுக்கு நேசமான போலியில்லாத மனசுக்காரா. இத விட பெரிய சர்டிஃபிகேட் உண்டுமா.

நேசமித்ரன் said...

தட்டுன வறட்டியில இருக்குற வெரலொட்டின தடம் பாத்து ஏனாத்தா இம்மாம் பெரிய காலா கூரைலுக்காந்திருக்குற கோழிக்குன்னு கேட்ட பயதேன் நானும்

நெனப்ப சிலுப்ப தெரியுது காமூ உங்க எழுத்துக்கு..

kashyapan said...

காமு!சூரியா மாதிரி மனசுள்ள மகள்.,மறுமகள், பேத்தி, இருந்த்தால்........வாழ்க்கை எவ்வளவு ரம்மியமாக இருக்கும்.....அந்த நினைவே ஒரு சுகமான அனுபவம்தான்.இல்லையா தோழா!....காஸ்யபன்

கமலேஷ் said...

திரும்ப திரும்ப படிக்க சொல்ற கதை..

மிக குறைந்த சொற்களில் மிகை நிலத்தை கொல்லையடிக்கிரீர்கள்

velji said...

சம்பளத்திற்கு பிழைப்பு நடத்தும் போதும் சூரியாக்களை கண்டுகொள்ள தகப்பன் மனசு வேண்டும். சம்பளம் தாண்டிய சந்தோசங்கள் பெருகட்டும் உங்கள் வாழ்வில்!எங்களுக்கும் அருமையான பகிர்வுகள் கிடைக்கும்!

காமராஜ் said...

அன்பின் விந்தை மனிதன்.
வணக்கம்.ஒளிச்செல்லாம் வய்க்கலங்க.அதுக்குப்பிறகும் அந்தப்பொன்னு ரெம்ப பேசியது ஒரே கதியில் ஒரே சுதியில்,ரைம் சொன்ன மாதிரி.கேட்கிற நமக்கு விம்முகிறது.அதனால அதோட நிப்பாட்டியாச்சு.

காமராஜ் said...

வாங்க சேது சார்.
வார்த்தைகளின் மேல் வார்த்தைகளை வீசிக்காயப்படுத்தி என்னாகப்போகுது.ஏறிக்கிட்டு போகிற விலைவாசியில் ரெண்டு பைசாக்கூட குறைக்கமுடியாது.ஒரு இடை வெளி அல்லது நிதானிச்சு பேசும்போது பரஸ்பரம் யோசிக்க டைம் கிடைக்குது.அப்படியான ஆட்கள் நெடுநாள் ஸ்நேகமாகக்கூட மாறிப்போவார்கள்.

காமராஜ் said...

Blogger வானம்பாடிகள் said.

//எல்லாருமே இப்படி இருந்துட்டா லூசுன்னே இருக்காதில்லையா? வெவரமா இருக்கென்னு போயிதான் எல்லா பாவமும் வந்து சேருது.//

ஆமாங்கண்ணா.அது எப்படியிருக்கும்.தெளிந்த நீரோடை மாதிரி உல்லும் புறமும்.கண்ணாடி மனசு.

காமராஜ் said...

நேசமித்ரன் said...

//தட்டுன வறட்டியில இருக்குற வெரலொட்டின தடம் பாத்து ஏனாத்தா இம்மாம் பெரிய காலா கூரைலுக்காந்திருக்குற கோழிக்குன்னு கேட்ட பயதேன் நானும்//

அடி சக்கெ ரெண்டு வரியில கொண்டாந்து கொட்டிடீங்களே நேசன்.அழகு.

காமராஜ் said...

kashyapan said...

// காமு!சூரியா மாதிரி மனசுள்ள மகள்.,மறுமகள், பேத்தி, இருந்த்தால்........வாழ்க்கை எவ்வளவு ரம்மியமாக இருக்கும்.....அந்த நினைவே ஒரு சுகமான அனுபவம்தான்.இல்லையா தோழா!//

வாங்க அன்புத்தோழர்.
உங்களின் அனுபவம் எங்களின் பாடம்.

காமராஜ் said...

நன்றி அன்புத்தோழர் கமலேஷ்.

காமராஜ் said...

நன்றி அன்புத்தோழர் வேல்ஜி.

Mahi_Granny said...

கானகத்தை கடந்து மகிழ்ச்சியுடன் வந்தால் உங்கள் வங்கிக் கிளையிலும் கொட்டிக் கிடக்கிறதே. உங்கள் இடுகைஎன்றால் கவிஞர்கள் கூட பேச்சுத் தமிழுக்கு வருகிறார்கள் . மகிழ்ச்சியாய் இருக்கு.

பத்மா said...

இப்படி பட்ட வாடிக்கையாளர்களை சம்பாதிப்பது தான் நம் வெற்றி ,இல்லையா காமராஜ் சார் ? hats off

ஹேமா said...

சிரித்தபடியே சோகம் சொல்லும் விதம் பிடிச்சிருக்கு !

காமராஜ் said...

Mahi_Granny said...

கானகத்தை கடந்து மகிழ்ச்சியுடன் வந்தால் உங்கள் வங்கிக் கிளையிலும் கொட்டிக் கிடக்கிறதே. உங்கள் இடுகைஎன்றால் கவிஞர்கள் கூட பேச்சுத் தமிழுக்கு வருகிறார்கள் . மகிழ்ச்சியாய் இருக்கு.//

ரொம்ப நன்றிங்க.

காமராஜ் said...

வணக்கம் வாங்க பத்மா மேடம்.

காமராஜ் said...

நன்றி ஹேமா.

கே.ஆர்.பி.செந்தில் said...

அண்ணே மனசை கொள்ளை கொள்கிறது...

ராகவன் said...

அன்பு காமராஜ்,

இதை படிக்கும்போது இரண்டு விஷயங்கள் எனக்கு பேசத் தோன்றியது. ஒன்று சுமங்கலி திட்டம் பற்றி இன்னொன்று கடைசி வரியில் களுக்கென்று சிரிக்கும் ஒரு க(வி)தை
நேரடி அனுபவங்களில் உள்ள சுவாரசியங்கள், வளைத்து நெளித்து எழுதும் மேதமை விஷயங்களில் இல்லை.

இதை படிக்கும்போது, எண்ணெய் தேய்த்துக் குளித்த சனிக்கிழமை, மேலும் குளிர்விக்க ஓலக்கொட்டானில் பொதித்து வைத்த நொங்கு மாதிரி வெந்தயக்கலியும் கருப்பட்டியும் நல்லெண்ணெய் விட்டு விழுங்குவது போல ஒரு மூளை வரை ஏறும் ஒரு சிலிர்ப்பு காமராஜ்.

சுமங்கலி, பொன்மகள், திருமகள் திருமணத்திட்டம் என்று பரவலாக அறியப்படும் இந்த பெண் தொழிலாளர்கள் எக்ஸ்பிளாய்டேஷன் திருப்பூர், கரூர், கோவை மற்றும் இதர கொங்கு நாட்டின் பகுதிகளில் இன்னும் இருக்கிறது. இது பற்றி நிறைய எழுத முடியும். எழுதுகிறேன்.

தெரியாத இடங்களில் ஒரு சினேகமான ஒரு மனிதனை உறவாக்கிக் கொள்ளும் ஒற்றை வார்த்தை... இந்தார்க்காருல்ல...

அன்புடன்
ராகவன்

Sethu said...

"தெரியாத இடங்களில் ஒரு சினேகமான ஒரு மனிதனை உறவாக்கிக் கொள்ளும் ஒற்றை வார்த்தை... இந்தார்க்காருல்ல..."

அன்புள்ள ராகவன்,

பல சமயம் உங்களுடைய மற்றும் நேசமித்திரன் பின்னூட்டங்களைப் பார்க்கும் போது, எங்கள் பின்னூட்டம் ரொம்ப சிரிசாப் போயிடுது.
காமராஜின் எழுத்தை ஒரு குறைவான அளவுக்கே நாங்கள் ஆராதிக்கிறோம் என்கிற குற்ற உணவு. ஆனா உங்க 2 பேர் பின்னூட்டம் பார்த்தபின் தான் இவரது பதிவு எப்போதும் ஒரு முழுமை அடைகிறது.

உண்மையில் சாத்தூர் மக்கள் அவர்களிடமும் மாணிக்கங்கள் மறைந்து வாழ்கிறார்கள் என்கிறது அறியாமல் இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. நாம தான் கொடுத்து வைச்சிருக்கிறோம். எப்பிடி இவ்வளவு சாத்தூர் மக்கள் திறமையாக எழுதுகிறார்கள். மண்ணின் வாசனையோ! வியக்க வைக்கிறது.

நன்றி.

காமராஜ் said...

வாங்க செந்தில் அன்புக்கு ரொம்ப நன்றி.

காமராஜ் said...

அன்பு ராகவன்.
மிகச்சரியான அவதானிப்பு.தினம்,தினம் பின்னிரவு நேரங்களில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து பதினைந்து வயதுக்கு மேலுள்ள adolsent பெண்குழந்தைகள் கொங்குப்பகுதிக்கு புலம் பெயர்வதாக படித்தேன்.எங்கள் ஊரிலும் கூட எனக்கு மிக நெருக்கமான உறவுப்பெண் ஒருத்தி போய்வந்தாள்.பொதுவாக போய்வந்த அவர்களிடம் விளையாட்டும்,ஆர்வமும் மின்னும் கண்ணொளி காணாமல் போய்விடுவதை உற்றுக்கவனித்தால் தெரியும்.

இது ஆலையின் மீது சொல்லும் குற்றமல்ல. சமூகத்தின் மேல் அரசின் மேல் வருகிற ஆத்திரம்.கல்விக்கடன் கொடுக்காவிட்டால் ோராடும்,தீக்குளிக்கும் ஒரு தரப்பு.கல்வி,வாழ்க்கை மறுக்கப்பட்ட இன்னொரு தரப்பு இப்படி எல்லா srecimen களும் கொட்டிக்கிடக்கும் தேசம் இது.

காமராஜ் said...

சேது சார் என்ன இவ்வளவு பெரியவார்த்தையெல்லாம் சொல்றீங்க.
அன்பின் அளவில் சிறிது பெரிது ஏதும் இல்லை.உங்கள் எல்லோரின் அன்புக்குத்தான் ஈடு சொல்ல ஏதுமில்லை.

denim said...

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/

சே.குமார் said...

உங்க எழுத்து நடையே கதையின் சுவராசியத்தை கொண்டு வருது. மிக்க நன்றி.

காமராஜ் said...

வாருங்கள்
அன்புத்தம்பி டெனிம்.
உங்களைப்போன்ற
கணினி ஓவிய வல்லுநர்கள்
வலைக்குள் வருவது அதன் பரிமாணத்திக்கூட்டும்.
வாழ்த்துக்கள்.

காமராஜ் said...

நன்றி தோழர் குமார்.

க.பாலாசி said...

சார் படிக்கிற எங்களுக்குள்ளும் 1ந்தேதி சம்பளம் வாங்குகிற சந்தோஷ உணர்வை கொடுக்கிறார் அந்த பெண். எவ்வளவு எளிமையா அழகா அப்படியே கோர்த்திருக்கீங்க... நன்றிங்க...

(ஆனா இத உங்களிடம் முன்னமே படித்ததுபோல இருக்கு)

Anonymous said...

கருத்துரையிடுவதே பெரிய போரட்டமாக இருக்கிறதே.எங்கும்தான்

Anonymous said...

யாரோ கண்னு வச்சிட்டாங்க காம்ஸ்.
ப்ளாக்ல ஒரே தகராறு.
அதிகார வர்க்கங்களுக்கு குழந்தையாக்குபவர்களைப் பற்றி தெரிவதில்லை.தெரிந்தாலும் அவர்களைப் பார்க்க மறுக்கிறார்கள்.
அலுவலகத்தில் பணிபுரியும் மத்தியமர்கள் எந்தப் பக்கம் நிலை கொள்வது என்பதே எந்த நேரத்து கேள்வியாக உள்ளது.

அன்புடன் அருணா said...

/சம்பள நாளை விடச்சந்தோஷமாக இருந்தது./
இருக்கும் !இருக்கவேண்டும்!இப்படி எல்லோருக்கும் அமைந்து விடாது!

V.Radhakrishnan said...

'அப்பா செத்துப் போச்சில்ல ஒங்களுக்குத்தெரியாதா'

ஒரு வினாடி உறைந்து போனேன்.

நன்றி காமராஜ்.