2.10.10

யாரும் கடந்துபோகும் பசிய கானகம்.

தேன்மொழி கடாப்பெட்டியை எடுத்துக்கக்கத்தில் வைத்த போது கண்ணீர் முட்டிகொண்டு வந்தது."என்ன இழியிற,ஒன்னியென்ன மொட்டக்கெனத்துலயா தள்ளிவிட்டாக இப்பிடி இழிய்யிற"ஞானம்மா சொன்னதும் அய்யாவைப்பார்த்தாள்.அவர் கவுட்டுக்குள் தலையை வைத்துக்கொண்டு மூலையில் உட்கார்ந்திருந்தார்.அங்கிருந்து தலையை வெளியில் எடுத்துவைத்து அவள் கண்ணைப்பார்த்தார்.மள மளவெனக் கண்ணீர் உடைந்தோடியது.
"ஏ இங்கெ பாருடி,நெறகம்மாய்லருந்து கசிஞ்சமாரியில்ல உருக்குறா, தகப்பனும் மகளும்  ஒப்பாரி வைக்க இங்கென்ன மயானகண்டமா நடக்கு" .

விடிஞ்சா அறிவியல் பரீட்சை ஒரு நாள் உட்கார்ந்து படித்தால் கூட நாற்பது மதிப்பெண்ணாவது தேறாது.இல்லையென்றால் உட்கார்ந்து அடிஸ்கேலிலும்,உள்ளங்கையிலும் நுனுக்கி நுனுக்கி எழுதி வைக்கவேண்டும். அதுக்கு கூட நேரமில்லாமல் காட்டுக்குப்போ காட்டுக்குப்போ என்று காலையிலிருந்து ஒரே சண்டை.கடலை எடுக்கிற வரைக்கும் சாயங்காலமும் காலையிலும் அந்த செவக்காட்டுக்குள்ளே தான் கிடந்தாள். உடுத்தியிருக்கும் பச்சைக்கலர் பாவடை தாவணி அல்லது சுடிதார் அவளை வெளியே தெரியாபடி செடி கொடிகளோடு அலையும் வெட்டுக்கிளிகள் போலாக்கியது.கடலையும் எடுத்தாகிவிட்டது அது  களத்தில் காய்கிறது. இப்போ அந்த தட்டாஞ்செடி வேற வந்து படிப்புக்கு குறுக்குச்சால் போடுது. நெத்தெடுக்கப்போகனுமாம்.அய்யாவை நம்பிப்பலனில்லை.அவருக்கு இந்த ஊரில் புடிச்சது தெரிஞ்சது ரெண்டே ரெண்டு இடம். ஒண்ணு டாஸ்மாக் கடை இன்னொண்ணு சீட்டாட்ட மடம்.அத விட்டால் அம்மாவிடம் வசவு வாங்கியபடி இப்படிக் கவுட்டுக்குள் தலையை விட்டுக்கொண்டுதான் உட்கார்ந்திருப்பார்.

சதாகாலமும் அம்மாவிடமும் வசவும் சமயத்தில் அடிகூட வாங்கிக்கொண்டு இந்த மனுஷன் எப்படிக்காலம் தள்ளுகிறார் எனும் யோசனை அவளுக்கு வரும்.அதைவிட இன்னொரு சந்தேகம் பார்க்கிற நேரமெலாம் எலியும் பூனையுமாய் காட்சி கொடுக்கிற இவர்களுக்கு எப்படி ஏழுபிள்ளைகள் பிறந்தது.ஊரைப்போலவே அவளும் அவ்வப்போது மண்டயைக் கசக்கிக்கொள்வாள்.ஒரு பம்பு செட் தோட்டம் பத்து ஏக்கர் செவக்காடு எல்லாம் கண்ணெதிரே கரைந்து போய்க்கொண்டிருந்தது. அதன்பிறகுதான் அம்மா சுதாரித்துக்கொண்டு விவசாயத்தை கையிலெடுத்தாள்.அவளது நேரம் முதல் மூன்றும் பொட்டப்பிளைகள். இல்லையானால் எவனாது ஒருத்தனை படிப்பை நிறுத்தச்சொல்லி விவசாயம் பார்த்திருப்பாள்.இல்லை ஊர் வழக்கப்படி எட்டாம் வகுப்போடு நிறுத்திவிட்டு சென்னையில் கடைப்பையன் வேலைக்கு அனுப்பியிருப்பாள்.

தேன்மொழியின் படிப்புக்கும் எட்டாம் வகுப்பில் ஒரு சின்ன நில நடுக்கம்  வந்தது.அழுது கூச்சல் போட்டு காரியத்தைச் சாதித்து விட்டாள்.இந்த நினைப்போடு ஸ்ரீரெங்கபுரம் தாண்டி வந்தாள்.இப்போது பார்க்கிற இடமெல்லாம் பசேலென்று காடு விரிந்துகிடந்தது.நடந்துபோனாக்க குறுக்கால ஓடை வரும். அதுக்குப்பேரு வகுத்தோடை. உள்ளே ஆள் நடந்துபோனால் யருக்கும் தெரியாது.கூட்டமாக வந்தால் அழகாகத்தெரியும் தனியே வந்தால் பயமுறுத்தும் ஓடை.ரெண்டு பக்கமும் மொச்சி செடியும்,காட்டாமணக்கு செடியும் அடர்ந்து கிடக்கும்.அதுதான் ஆண்களுக்கான பொதுக்கழிப்பறை. தாண்டி கொஞ்ச தூரம் நடந்தால் பெரியப்பாவுடைய பம்புசெட்.பேச்சு வார்த்தை கிடையாது.தேன்மொழியிடம் மட்டும் பெரியப்பா, அண்ணன்மாரெல்லம் பேசிக்கொள்வார்கள்.அங்கே குளிக்கப்போனால் தோட்டக்காரர் வள்ளிமுத்து மிளகாய்செடிக்கு தண்ணி பாய்ச்சி முடிந்த பின்னாலும் கூட பம்புசெட்டை ஓடவிடுவார்.திரும்பிப்பார்த்தாள் யாரும் இல்லை.

இதோவந்துவிட்டது,குச்சல். காஞ்ச கடலைச்செடிகளையும்,மூன்று வேலிக்கம்புகளையும் வைத்து உருவாக்கிய தற்காலிக வீடு.காட்டு வீடு.அங்கு உட்கார்ந்து தான் பாடப்புத்தகம் படிப்பாள். மாடுகள்வரும் எழுந்துபோய் 
'ஏய் யாரு மாடு' என்று சத்தம்போடுவாள்.திரும்பவந்து உட்கார்ந்து தட்டாங்கல் ஆடுவாள்.அப்புறம் கண்னை மூடிக்கொண்டு அந்த குச்சல் வீட்டை வசந்தமண்டபமாக்கி கனவுகாñபாள்.சினிமாப்பட்டை முனகிக்கொள்வாள் அப்போதெல்லாம் மங்களான முகம் ஒன்று வந்துபோகும்.கடக்கரைச்சாமியின் முகம். அவன் இவளை எறெடுத்துப் பார்க்கமாட்டான்.அவனெப்போதும் பெரிய தீப்பெட்டியாபிஸ் வீட்டு மல்லிகாவையே பார்த்துக் கொண்டிருப்பான்.தூத்துக்குடியிலிருக்கும் மாமன் மகன் வசந்தக்கனியின் முகம் கூட சிலநேரம் வந்துபோகும்.

குச்சல் பக்கத்தில் வந்து பொத்தென்று கடாப்பெட்டியைப் போட்டு விட்டு பிஞ்சை கோடியில் இருக்கும் வரப்புக்கு போனாள்.சாரப்பாம்பு ஒன்று பதறியடித்து ஓடியது.வெலவெலத்துப்போய் கத்தினாள் அவள் குரலே அவளுக்கு அன்னியமாகத்தெரிந்தது.கண் முழித்துப் பார்க்கும்போது குச்சலுக்குள் படுத்திருந்தாள்.பக்கத்து ஊர் சிங்கராயர் நின்று கொண்டிருந்தான்.அதிலிருந்து அந்தக்காடு,பயந்த வகுத்தோடை, அங்கு முளைத்துக் கிடக்கும்முள்செடிகூட அழகாய்த்தெரிந்தது.ஊரில் 'ஆம்பளகெனக்கா என்னமா பண்டுவம் பாக்கா' என்றுபேசிக்கொண்டார்கள். 
கட்டாந் தரிசானப்பிறகும் கூட அங்கேபோக எதாவதொரு காரணம் வைத்துக்கொண்டாள். 'என்னடி வீடு தங்க மாட்டேங்கிற,காலுத்தரையில பாவ மாட்டங்குது' என்று கண்களை இடுக்கிக்கொண்டு அம்மா அடிக்கடி கேட்கிறாள்.அவளும் கூட  ஆட்டுக்கு கொலை ஒடிக்கப்போறேன் என்று தோட்டத்துக்கு அடிக்கடி வந்தவள் தானே.இதுபோல எத்தனை பார்த்திருக்கிறது அந்தக்காடு ?.

16 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

கிராமத்து காதல் பூத்த விதத்தை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் ...

Sethu said...

ரொம்ப நல்லா இருக்குங்க கதை.

வானம்பாடிகள் said...

தேன் மொழி. பெயரைப் போலவே நடையும்.

/அவளும் கூட ஆட்டுக்கு கொலை ஒடிக்கப்போறேன் என்று தோட்டத்துக்கு அடிக்கடி வந்தவள் தானே./

இங்க எனக்கு ஒரு விடை கிடைச்சது. சரிதானே:))

velji said...

சம்பவத்தை சொல்லிவிட்டு மீதியை வாசகனுக்கு விட்டுவிட்டீர்கள்... காடு, சமுதாயத்திற்கு தெரிந்தவிசயத்தை ஒளித்து வைத்திருப்பதாய் நினைக்கிறது போல!

அருமை!

காமராஜ் said...

வாங்க செந்தில்
சேது சார் வணக்கம்
ப்ரிய பாலாண்ணா
அன்பின் வேல்ஜி

மாப்ள வீடு வந்தாச்சா பொண்னுவீடு
தா மாமென்,தலைவர் நாட்டாமெ

அப்பச் சரி ஆரம்பிக்கலாம் பருசத்த என்று சொல்லுகிற மாதிரி உருத்துக்காரர்களெல்லாம் வந்தாச்சு ஒன்னுரெண்டத்தவற, நெறஞ்சு போச்சு மனசு. அடுத்த பதிவுக்குப்போகலாம்.

ஈரோடு கதிர் said...

கதைக்கு தலைப்பு பெரும் பலம்

நன்றி

பத்மா said...

படிக்க வேண்டிய பொண்ணு ..
கொஞ்சம் கஷ்டமா இருக்கு..கிராமத்துல இதல்லாம் சகஜம் இல்ல?

ராகவன் said...

அன்பு காமராஜ்,

எப்போதும் சொல்வது போல கைய வீசி வீசி இடுப்பை வெட்டி நடக்கும் நடை... இந்த அவதானிப்பும், செவிப்புலனும் எங்கிருந்து பெறுவது காமராஜ்... பேச்சு வழக்கு, சொல் தெரிவும் எல்லா நாயக நாயகிகளையும் நம்ம ஊரு கவிச்சியுடன்... படிக்கும்போது அழ வருதே காமராஜ் ஏன் அப்படி?

பேச்சினூடே வந்து போகும் புராண மேற்கோள்கள்... நமது வாழ்க்கையில் கிராமமாய் இருந்தாலும், நகரமாய் இருந்தாலும் ஒன்றாகி விட்ட இதுபோன்ற இதிகாசத் தீற்றல் ஒரு மாயோவியமாய் நமக்குள்ளே படிந்து விட்டது காமராஜ்!

அன்புடன்
ராகவன்

காமராஜ் said...

கதிர்,
பத்மா,
ராகவன்

வாங்க வாங்க. எல்லாரும் பொட்டிக்குள்ளதான் இருக்கீங்களா ?
நல்லது. இருங்க இருந்து இதையும் படிச்சிருங்க.

விந்தைமனிதன் said...

//அவளும் கூட ஆட்டுக்கு கொலை ஒடிக்கப்போறேன் என்று தோட்டத்துக்கு அடிக்கடி வந்தவள் தானே.இதுபோல எத்தனை பார்த்திருக்கிறது அந்தக்காடு ?.//

பருவம் மடைமாற்றுகிற விதத்தைத் தெளிவாக, அழகாக சொல்லி இருக்கின்றீர்கள்

விந்தைமனிதன் said...

தமிழ்மணம் பட்டைய கொஞ்சம் கவனிக்கிறது??

நேசமித்ரன் said...

கிட்டிப்புள் செதுக்குற மாதிறி சீவிக்கிட்டே இருக்கீரே .

வேட்டிய தார்ப்பாய்ச்சலா கெட்டி செருவி எறங்கியாச்சு போல்ருக்கு

டப்பாக் கெட்டுதான்யா பவுசு ஒமக்கு

பேய்யுற மழ போல இழுத்தாப்ல இருக்கு நடை ..

நனைச்சு கரைஞ்சிறனும் .விடாதீக

denim said...

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/

Anonymous said...

தேன் மொழிகளை நாம் தின்ந்தோறும்
பார்த்துக் கொண்டும்,பார்த்து சகித்துக் கொண்டுமாய் ஒடிக் கொண்டேயிருப்பது நம் சமூகத்தின் மிகப் பெரிய சவாலாக.சவாலகள் விடுபடுமா?...,,,

Anonymous said...

ராணீ...க்கள் பெற்ற பிள்ளைகள்,,,
ஹீம்......

Anonymous said...

அரசு அலுவலகங்களில் பணிபுரியும்
இளகிய மனமுள்ள மத்தியமர்களுக்கு
இது மாதிரியான வடிவ தோற்றுதல்களை
தினந்தோறும் கானும் படியாக ஆகிப்போகிறதான்.
குழந்தையக்குபவள் பக்கம் நாமா?
அல்லது யார் பக்கம் என்பதே முக்கிய கேள்வியாக.....,,,,