29.1.10

பணம், பெண், பாசம்.

பணம் எண்ணி வாங்கும்போதே வாடிக்கையாளர் முகம் பாராமல் அவர்களைக் கண்டு பிடித்துவிட முடியும்.ஆயிரம் ஆயிரமாகச் சுருட்டித் தனித் தனியாக கொடுத்தால், எதோ அகாலச் செலவுக்காக இருந்த ஒரே ஒரு நகையை அடகு வைத்து பின் சிறுகச் சிறுகச் சேமித்து நகை மீட்டும் கிராமத்துக்காரர்  எனத் தெரிந்து கொள்ளலாம். அதே நேரம் இங்கே ஏடிஎம் இல்லையா,என்ன இவ்வளவு லேட்டாகுது என்று நூறு ரூபாய் பணம் கட்டிவிட்டு ஆயிரம் கேள்வி கேட்பவர் கட்டாயம் ஒரு படித்தவராகத்தான் இருப்பார்.

நூறு வாடிக்கையாளர்கள் வந்தால் எழுபது பேருக்குமேல் படிக்காத கிராமத்து மனிதர்கள் வரும்வங்கி எங்கள் வங்கி. அவர்களோடு சதாகலமும் சண்டை போட்டுக்கொண்டும் ஏச்சு வாங்கிக்கொண்டும் பார்க்கிற நாட்கள் ஒவ்வொன்றும் ஒரு ஏக்கர் நிலத்தை உழுதுபோட்ட கலைப்பும் திருப்தியும் ஒருசேரக்கிடைக்கும்.எல்லோரிடமும் மறக்காமல் ஒன்றைச்சொல்லுவது வழக்கம் உங்க பிள்ளைகளையாவது படிக்கவையுங்கள்.அவர்கள் பல வருடங்கள் கழித்து எங்காவது பர்த்தால் எழுந்து இடம் கொடுப்பாதும் பையன் எஞ்சினீரிங் காலேஜ் படிக்கான் என்று சொல்லுவதும் சங்கோஜமும் சந்தோசமும் கொடுக்கிற நிமிஷங்கள்.சாத்தூர் கேஷியர் வல்லையா என்று நான் இல்லாத நேரங்களில் கேட்கும் கிராமத்து வாடிக்கையாளர்கள்தான் இந்த வங்கியில் இதுவரை சேர்த்து வைத்த சேமிப்புக்கணக்கு.

பெரும்பாலும் நகைகள் அடகு வைப்பதுவும்,அதை மீட்பதுவுமே பிரதானத் தொழிலாகவும்,மகளிர் சுய உதவிக்குழுக்கள் இரண்டாமிடத்திலும் இருக்கிறதால் அன்புக்கும் அந்நியோன்யத்துக்கும் குறையிருக்காது. பிடிக்காதவர்களை மூஞ்சுக்கு நேரே பார்த்து சண்டை போடுவதும் பிடித்தவர்கள்மேல் திகட்டத்திகட்ட வாஞ்சை கொள்வதுமான மானாவரி மனிதர்கள்.

தகப்பானார் படிப்புக்கு நகையை அடகு வைத்துவிட்டு இறந்துபோக அதை மீட்க ஒரு தாயும் மூன்று பெண்மக்களும் தாலுகா ஆபீஸ்,வக்கீல்,வங்கி என அலையாய் அலைந்தார்கள். இப்படியான தருணங்கள் இந்த ஏற்பாடுகள் மேலே அநியாயக் கோபம் வரவைக்கும்.ஆனால் ஆறுதல் சொல்லுவதைத் தவிர வேறு ஏதும் செய்ய முடியாது.ஆறுமாதம் அலைந்த பிறகு ஒருநாள். அந்த நகை முறைப்படி தாயாருக்கு கொடுக்கப்பட்டது. அதற்கு  ஏனைய வாரிசுகள் ஒப்புதல் கையெழுத்துப் போடவேண்டும். மூன்று மகள்களும் வந்திருந்தார்கள். யாருக்கும் மணமாகவில்லை போலத்தெரிந்தது.அவர்கள் வந்துபோகிற ஒவ்வொரு தருணமும் அந்தக் கிளையில் ஒரு அசாதாரண இருள் கவ்விக்கொள்ளும்.

ஒவ்வொருவருத்தராகக் கையெழுத்துப் போடும்போது குமுறிகுமுறி அழுதார்கள்.கடைசிப்பெண் 'எம்மா எதுக்கும்மா இது பாக்கும்போதெல்லாம் அப்பா நெனப்பு வருமே வேண்டாம்மா வித்துரு' என்று சொன்ன போது வங்கி ஸ்தம்பித்து விட்டது.ஆனால் அந்தத்தாய் இன்னும், இன்னும் அடர்த்தியான இறுக்கத்தை  உள் வாங்கிக் கொண்டு,அந்த நகைகளை வாங்கிக்கொண்டு உறுதியாக மூன்று பேரோடு வெளியேறினார்கள்.

ஒரு வருடம் கழித்து இதே போல இன்னொரு தந்தை. இரண்டு மகன்களையும், மூன்று மகள்களையும் நிறையச் சொத்துக்களையும் சேமிப்புக் கணக்கையும் விட்டுச்சென்றிருந்தார். அவர்களுக்கான சேமிப்புத்தொகையும் பணமும் ஒரு வாரத்துக்கு முன்னாள் பட்டுவாடா ஆகியது.அவர்கள் வந்து போன எல்லா நாளும் ஒரே சிரிப்பு,ஸ்நாக்ஸ்.

இது எனக்கு, அது உனக்கு, என்னும் பங்கு பாவனையில் தான் குறியாய் இருந்தார்கள். ஒருவருக் கொருவர்  மிகச் சிநேகமாக பேசிக் கொண்டார்கள். ஒருவரில்லாத போது மற்றொருவர் வந்து விபரம் கேட்டு விட்டு சொல்ல வேண்டாம் எனச் சொல்லிவிட்டுப் போனார்கள். வாங்கிய பணம் நகை எல்லாம் வங்கி வாசலிலேயே பகிர்ந்தளிக்கப்பட்டது. ஒவ்வொருத்தராய் காரிலும்,இருசக்கர வாகனத்திலும் பறந்தார்கள்.கடைசியில் அந்தத் தாய் மலங்க மலங்க முழித்துக்கொண்டு புளியமர நிழலில் நின்றார்கள். அடுத்த பஸ் எப்பவரும் என்று கேட்டபடி.   

35 comments:

குப்பன்.யாஹூ said...

அருமை,

ஒவ்வொரு வார்த்தையிலும் உணர்ச்சியும் அன்பும் தெறிக்கிறது காமராஜ்.

ஒரு வங்கி மேலாளரின் மகன் என்பதால் என்னால் முழுதும் உணர முடிகிறது உள் வாங்கி கொள்ள முடிகிறது உங்களின் வரிகளை.
பணப் பரிமாற்றம் மட்டும் அல்லாது மனப் பரிமாற்றமும் நடை பெறும் இடம் கிராமத்து வங்கி கிளைகள்

.

ஒருவேளை கிராம மக்களின் அன்பும் அரவணைப்பும் இருப்பதால் தானோ இந்திய வங்கிகள் பொருளாதார மந்தம், சப் மரைன் அலைகளில் இருந்து தப்பித்து வாழ முடிகிறது போல.


இன்று ஹெசெச்பீசி , அபீன் ஆம்ரோ வங்கிகளை நினைத்து பார்க்கிறேன்.
அங்கே மனப் பரிமாற்றம் இல்லாததால் பொருளாதார மண்டத்தில் உடனே படுத்து விட்டன போல

Anonymous said...

இந்த மாதிரியான மண்ணோடோ இணைந்த கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள் பற்றி நிறைய எழுதுங்கள் சார் , எனக்கு ஏதோ எனது கிராமத்து அனுபவங்கள் அப்படியே மீண்டும் வருகிறது இதை படித்தவுடன் . நானும் இந்த மாதிரியான் கிராமத்து மகன்தான் இந்த மாதிரியான நினைவுகள் என்னை ஏதோ ஏன் தாய்நிலத்தில் இருக்கிற மாதிரியே மனது இலகுவாகுகிறது.

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

எதிர்படும் மனிதர்களின் முகத்தைக்கூட பார்க்க நேரமில்லாமல் ஓடும் நகரத்து வாழ்க்கை போல் இல்லாமல். நிதானமாய் மனிதர்களை எதிர்கொள்ளவும். அவர்களை புரிந்துக்கொள்ளவும் அந்த அனுபவத்திலிருந்து ஆழமான வாழ்வியல் பார்வையையும் உருவாக்கிக்கொள்ள உங்களுக்கு வாய்த்திருக்கிறது. மிக அருமையான வாழ்க்கை சித்திரம், உங்கள் இந்த பதிவு.

ஏன் நீங்கள் இதை ஒரு சிறுகதையாக எழுதக்கூடாது?

malarvizhi said...

nanraaga ullathu.

மதார் said...

manmanathodu ungal eluthu , super sir.

சந்தனமுல்லை said...

வாடிக்கையாளரின் வாழ்க்கை பற்றி சிந்திக்கும் வங்கி மனிதர்களை அறிந்துக்கொள்கையில் ஆசையாக இருக்கிறது. நல்ல வாசிப்பனுபவம்!

உயிரோடை said...

ந‌ல்ல‌ ப‌திவு

க.பாலாசி said...

//ஒவ்வொன்றும் ஒரு ஏக்கர் நிலத்தை உழுதுபோட்ட கலைப்பும் திருப்தியும் ஒருசேரக்கிடைக்கும்//

ஆனாலும் இந்த இனிமையான தருணங்கள் எல்லாருக்கும் வாய்ப்பதில்லையே...

//'எம்மா எதுக்கும்மா இது பாக்கும்போதெல்லாம் அப்பா நெனப்பு வருமே வேண்டாம்மா வித்துரு' என்று சொன்ன போது வங்கி ஸ்தம்பித்து விட்டது//

கலங்க வைக்கும் நிகழ்வு...

//கடைசியில் அந்தத் தாய் மலங்க மலங்க முழித்துக்கொண்டு புளியமர நிழலில் நின்றார்கள். அடுத்த பஸ் எப்பவரும் என்று கேட்டபடி.///

இதுவே இன்றைய நிஜம்...

நல்ல இடுகை...

ஆரூரன் விசுவநாதன் said...

கடைசி வரிகள்.......ம்ம்ம்ம்....

சிங்கக்குட்டி said...

உணர்ச்சிகரமான ஒரு இடுகை :-)

முழுதும் உணர நேரம் எடுக்கும் என்று நினைக்கிறேன்.

ராகவன் said...

அன்பு காமராஜ்,

இந்த முறை மதுரை வந்தபோது, என் நண்பன் ஒருவன் டிடி ஒன்று மாற்ற வேண்டும், எம்.டி.சி.சி. பேங்க் வரைக்கும் போகலாம் வரயா? என்று கேட்க, எனக்கு பழைய கூட்டுறவு வங்கிக்கிளையை பார்க்க வேண்டும் என்று தோன்றியதாலும், அவனுடன் சிறிது நேரம் செலவழிக்கவேண்டும் என்று தோன்றியதாலும் சென்றேன். மொத்தமே ஆறு பணியாளர்கள் தான் இருந்தார்கள் அந்த வங்கிக் கிளையில். ஒரு பியூன், ஒரு டீவாங்கும் பையன், தவிர பேரேடுகளில் மூழ்கியிருந்தவர்கள் மூன்று பேர், காசாளர் கவுண்டரில் ஒருவர். இதில் மேனேஜர் தவிர அகழ்ந்து எடுத்த அலுவலர்கள் மூன்று பேரும் பெண்கள், காசாளர் உட்பட.

அது ஒரு பழைய வீடு, எஸ்.எஸ். காலனியின் ஒரு புராதனம் அப்பிய தெருவில் எல்லாவீடுகளுமே நரை வழிந்து கிடந்தது. நான் வங்கிக்கு போன நேரம், மின்சாரம் இல்லை, மாற்று ஏற்பாடு என்று எதுவும் இல்லை போல. மேனேஜர் ஜன்னலை ஒட்டி அமர்ந்திருந்ததால் கொஞ்சம் வெளிச்சத்தில் பனி படர்ந்த கண்ணாடி வழியே தெரிவது மாதிரி புகைப்பிம்பமாய் சிரித்தார்.

என்ன சார், செய்யனும், டிடி மாத்தனும் என்றவுடன், உட்காருங்க சார், பண்ணிடலாம், காலையில் இருந்து அவருக்கு கிடைத்த முதல் வேலையாய் இருக்க வாய்ப்புகள் அதிகம். ரொம்பவும் கரிசனமாய் இருந்தார், பேப்பர் குடுத்து ஒரு லெட்டர் எழுதிக் குடுங்க தம்பி மாத்திடலாம் என்று அவரே, டிக்டேட்டும் செய்தார்.

நான் அவர்களை விட்டு விட்டு அங்கே கிடந்த பெஞ்சில் உட்கார்ந்து கொண்டேன், பேரேடுகளின் அகழ்வில் இருந்து வெளி வந்த பெண்ணுக்கு முப்பதைந்து வயது இருக்கலாம், பக்கத்தில் இருந்த அக்காவிடம் கருப்பையாவின் செக் பவுண்ட்ஸ் ஆனதை சொல்லிவிட்டு, அவர் வீட்டுக்கு தகவல் தந்திருப்பதாகவும் சொல்லிக்கொண்டே என்னை பார்த்து, சார் என்ன சார் வேனும், ஒன்றுமில்லை என்று சொன்னவுடன் வினோதமாய் பார்த்தாள். திரும்பவும் அந்த உயரமான கவுண்டரின் கீழ் அமர்ந்து என் பார்வையில் இருந்து மறைந்து விட்டாள்.

முக்கா காலுக்கு வேஷ்டி கட்டிய ஒருவர், கருப்பையாவாக இருக்க வேண்டும், கொஞ்ச நாட்கள் தாடியில், முழுக்க நரைத்து முன் பக்க வழுக்கையுமாக வந்தார். வந்தவர் ஒரு பக்க வேஷ்டியை இடது கையால் தூக்கிக் கொண்டு, என்ன வனிதா என்ன ஆச்சு, சொல்லி அனுப்பிச்சயா, என்று உறவுக்காரர் வீட்டில் நுழைந்து படு எதார்த்தமாக பேசினார். அண்ணே! டீ சாப்பிடுறீங்களா, என்று டீ கொடுக்கும் பையன் கேட்க, வேண்டாம்லே! என்று வனிதாவிடம் திரும்பினார்.

வனிதாவும் செக் பவுண்ட்ஸ் ஆனத சொன்னதும், அப்படியா சந்தோஷம், கொண்டா, கொஞ்ச நாளு போவட்டும் அப்புறம் பார்த்துக்கலாம். என்று செக்கை வாங்கிக் கொண்டார். முத மருமகன் கடை போட காசு கேட்டான், இது நாலாவது தடவ வியாபாரம் பண்ண காசு கேட்குறது, அதனால் தான் செக்க கிழிச்சு குடுத்துட்டேன், இங்க தான வரும், தகவல் சொல்லிடுவீங்க, ஒரு நாலஞ்சு நாளாவது ஆகும், அதுக்குள்ள புரட்டிடலாம்னு, ஆனா பாரு முடியாமப்போச்சு, என்ன ஞாயித்துக்கிழம வந்துடுவா பையன தூக்கிகிட்டு, ஒரு வாரம் வீட்ல இருந்துட்டு போகட்டும், எப்ப போனாலும், காசோட போனா மகாலச்சுமி தான்.

உன் பாடு தேவல தான் வனிதா, அது எவ்வளவோ பரவாயில்ல! என்று சொல்ல வனிதா கொஞ்சம் கோனலாய் சிரித்தாள். வனிதாவுக்கு என்னவோ எனக்குத் தெரியாது, ஆனால் இவர்களிடம் ரகசியம் என்பதே இல்லை என்று பட்டது, ஒன்று அவர்களாய் சொல்வதுண்டு, அல்லது இவர்களாக அக்கறையாய் விசாரித்து தெரிந்து கொள்வது உண்டு என்று நினைக்கிறேன். இது போல கூட்டுறவு வங்கிக்கிளையில் வேலையே குறைவாக இருக்கும்போது இவர்களுக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிற ஒரு விதமான மனச்சோர்வு, அழுத்தம் அல்லது அலுப்பு வராமல் இருக்க இது போன்ற கதைகளும், மனிதர்களும் தான் காரணங்களாய் இருக்க வேண்டும்.

அன்பும் பிரியமும் தளும்பும் தெப்பத்தில், ஆடி ஆடி அசைகிறது சுடருடன் தீபமும்.

அன்புடன்
ராகவன்

வெ.இராதாகிருஷ்ணன் said...

மனம் நெகிழ வைத்தது, கடைசி வரிகள் மனம் வலிக்க வைத்தது.

ராகவனின் பின்னூட்டமும் பல அர்த்தம் கொண்டது.

மனிதர்களைத் தொலைத்துவிட்டேன் என நினைக்கும்போதெல்லாம் உங்களுடன் பேசுவது போலவே இருப்பது கண்களை கலங்கத்தான் செய்கிறது.

காமராஜ் said...

வாங்க குப்பன் சார்.
நாங்களும் ஏடிஎம் வச்சுக்கலாமானு யோசிக்கிறோம்.
நகர்க்கிளைகள் சில இப்போ குளிரூட்டப்பட்டுவிட்டது.
க்ளோபல் வார்மிங் மாதிரியே க்ளோபல் பேங்கிங்கும் மாறுமோன்னு பயமா இருக்கு. ஆனாலும் 'என்ன கேசியரே உடம்புக்கு முடியலயா'ன்னு கேட்கிற வாடிக்கையாளர்கள் மட்டுமே எங்கள் சொத்து.

காமராஜ் said...

Delete
OpenID nandaandalmagan said...

//நானும் இந்த மாதிரியான் கிராமத்து மகன்தான் இந்த மாதிரியான நினைவுகள் என்னை ஏதோ ஏன் தாய்நிலத்தில் இருக்கிற மாதிரியே மனது இலகுவாகுகிறது.//

வணக்கம் நண்பரே.
வருகைக்கும் அன்புக்கும் நன்றி.

காமராஜ் said...

Blogger ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

// எதிர்படும் மனிதர்களின் முகத்தைக்கூட பார்க்க நேரமில்லாமல் ஓடும் நகரத்து வாழ்க்கை//

இன்னும்,எல்லா பிற்போக்கும் ஒட்டிக்கொண்டிருந்தாலும்.அதன் அடியில் ஓடிக்கொண்டிருக்கும் ஈரத்தில் அது காணாமல் போகிறது. வாஞ்சைதானே அதன் பொக்கிஷம்.

காமராஜ் said...

வாங்க மலர்விழி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

காமராஜ் said...

நல்லது மதார்.
அடிக்கடி வாருங்கள்.
நிறைய்ய எழுதுங்கள்.

காமராஜ் said...

நன்றி முல்லை,
நன்றி லாவண்யா.

காமராஜ் said...

வாங்க பாலஜி,
வாங்க அரூர்.

காமராஜ் said...

இல்லை ராகவன்.
ஒரு காலத்தில் சக்கைபோடு போட்டவர்கள் கூட்டுறவு வங்கிகள்.
வங்கித்துறை மாநில அரசு இரண்டுக்கும் செல்லப்பிள்ளை அவர்கள். வியாபாரத்தில் எங்களுக்கு சிறந்த போட்டியாளர்கள்.
ஒருகாலத்தில் பார்த்துப் நாங்கள் பொறாமைப்படுவோம். அதுதான்
அவர்களுக்கு வினையும் ஆனது. அரசியல் தலையீட்டில்,வர்த்தகம்,ஆளெடுப்பு,பதவி,தொழிற்சங்கம் என எல்லாமட்டத்திலும் மாநில அரசியல் ஊடுருவியது. எவ்வளவு மகோன்னதமானது ஒரு வங்கி எல்லோருக்கும் சொந்தமெனும் கூட்டுறவுத் தத்துவம். நாம் தொலைத்துவிட்டோம்.

காமராஜ் said...

ஆமாம் ராதாகிருஷ்ணன்.

எனது அவசர எழுத்துக்களுக்கு
கூடுதல் தகவல்களோடு
வலுச்சேர்ப்பார் ராகவன்.
அதை இன்னொரு தளத்துக்கும் எடுத்துக்கொண்டு போவார்.

கண்ணகி said...

நாணயத்தின் இரு பக்கங்கள்...

அன்புடன் அருணா said...

கடைசி வரிகள் சொன்ன கண்ணீர்க்கதை "சே என்னடா வாழ்க்கை" என்றிருக்கிறது.

காமராஜ் said...

வாங்க கண்ணகி கருத்துக்கு நன்றி.
இந்தச் சின்ன பின்னூட்டம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
இந்த இடுகை குறித்து நானும் தோழன் பதிவர் மாதவராஜும் பேசினோம்,
அது, கடைசி பத்தி ஒப்பனையாக இருக்கு எனச் சொன்னார். இல்லை நிஜம் நடந்தது என்றும்,
ஒரே ஒரு புள்ளிவிபரம் தான் நான் மாற்றி எழுதியது என்று சொன்னபிறகு.
அந்த உணமையைக் கூட என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை அல்லது சகிக்கவில்லை
என்று சொன்னார். எனக்கும் அதுதான் சரியெனப்படுகிறது.உண்மையேயெனினும் அது எழுதப்
பட்டிருக்கக்கூடாது. உறவுகள் மிக மிக உன்னதமானது.

காமராஜ் said...

வாருங்கள் அருணா,

பா.ராஜாராம் said...

//நூறு வாடிக்கையாளர்கள் வந்தால் எழுபது பேருக்குமேல் படிக்காத கிராமத்து மனிதர்கள் வரும்வங்கி எங்கள் வங்கி. அவர்களோடு சதாகலமும் சண்டை போட்டுக்கொண்டும் ஏச்சு வாங்கிக்கொண்டும் பார்க்கிற நாட்கள் ஒவ்வொன்றும் ஒரு ஏக்கர் நிலத்தை உழுதுபோட்ட கலைப்பும் திருப்தியும் ஒருசேரக்கிடைக்கும்.எல்லோரிடமும் மறக்காமல் ஒன்றைச்சொல்லுவது வழக்கம் உங்க பிள்ளைகளையாவது படிக்கவையுங்கள்.அவர்கள் பல வருடங்கள் கழித்து எங்காவது பர்த்தால் எழுந்து இடம் கொடுப்பாதும் பையன் எஞ்சினீரிங் காலேஜ் படிக்கான் என்று சொல்லுவதும் சங்கோஜமும் சந்தோசமும் கொடுக்கிற நிமிஷங்கள்.சாத்தூர் கேஷியர் வல்லையா என்று நான் இல்லாத நேரங்களில் கேட்கும் கிராமத்து வாடிக்கையாளர்கள்தான் இந்த வங்கியில் இதுவரை சேர்த்து வைத்த சேமிப்புக்கணக்கு.//

பேசுவது போலவே எழுத்தும் வருவது ஒரு கொடுப்பினை காமு.

//அவர்கள் வந்துபோகிற ஒவ்வொரு தருணமும் அந்தக் கிளையில் ஒரு அசாதாரண இருள் கவ்விக்கொள்ளும்.//

உள்வாங்கி துடித்தது..

//ஒவ்வொருவருத்தராகக் கையெழுத்துப் போடும்போது குமுறிகுமுறி அழுதார்கள்.கடைசிப்பெண் 'எம்மா எதுக்கும்மா இது பாக்கும்போதெல்லாம் அப்பா நெனப்பு வருமே வேண்டாம்மா வித்துரு' என்று சொன்ன போது வங்கி ஸ்தம்பித்து விட்டது.//

இங்கு இந்த வங்கி என்பது ஒரு மனிதமாகவே உருவாகிறது காமு.மனிதர்கள் நிறைந்திருந்தால்,வீடு வங்கி எல்லாம் மனிதர்களாகத்தானே மாறும்!

நிறைய பேசுங்க மக்கா,இப்படி.

ராகவன் எங்கிருந்தாலும் மண் மணக்கிறார்.fantastic observation raagavan!

காமராஜ் said...

பாரா...
எட்டுமணி வரை ராகவனிடம் அலையில் பேசினேன்.
கொஞ்ச நேரம் வீடு.
அப்புறம் மாதுவோடு
பதினோரு மனிவரை.
இப்போ நீங்க.
எல்லாமே அன்பால் நகர்ந்த மணித்துளிகள்.
இது போதும் makkaa.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் துயரத்தையே கொண்டுவருகிறது.. வேறு வேறு வகையில்..

kailash,hyderabad said...

//ஒவ்வொருத்தராய் காரிலும்,இருசக்கர வாகனத்திலும் பறந்தார்கள்.கடைசியில் அந்தத் தாய் மலங்க மலங்க முழித்துக்கொண்டு புளியமர நிழலில் நின்றார்கள். அடுத்த பஸ் எப்பவரும் என்று கேட்டபடி. //
படித்தவுடன் மனதிற்கு மிகவும் பாரமாக இருந்தது.பணமும் பாசமும் எதிர் விகிதம் போல.

காமராஜ் said...

நன்றி சிங்கக்குட்டி
நன்றி முதுலட்சுமிஅம்மா,
நன்றி கைலாஷ்

அம்பிகா said...

இருவேறு நிகழ்வுகள். இரண்டுமே கண்கலங்கவைக்கிறது.
கிராமத்து மக்களின் அன்பு நெகிழ வைக்கிறது.
பதிவும், பின்னூட்டங்களும் மனதை தொடுகின்றன.

சுந்தரா said...

வேறுவேறு நிகழ்வுகள், வேறுமாதிரியான மனிதர்கள்...

இந்தப் பணமும் பொருளும்தான் மனிதர்களை எப்படியெல்லாம் ஆட்டிவைக்கிறது?!

இறுதியில்,ஒற்றையாய் நின்ற அந்தத்தாய் கலங்கடித்துவிட்டார்.

ஆ.ஞானசேகரன் said...

அருமையான பகிர்வு

அமிர்தவர்ஷினி அம்மா said...

சுந்தரா said...
வேறுவேறு நிகழ்வுகள், வேறுமாதிரியான மனிதர்கள்...

இந்தப் பணமும் பொருளும்தான் மனிதர்களை எப்படியெல்லாம் ஆட்டிவைக்கிறது?!

இறுதியில்,ஒற்றையாய் நின்ற அந்தத்தாய் கலங்கடித்துவிட்டார்.

வழிமொழிகிறேன்

anto said...

மாமா..சூப்பர்!!!இது போன்ற சம்பவங்கள் நம் கிளைகளில் அடிக்கடி நடப்பது தான் என்றாலும் நீங்கள் சொல்லிய விதம் அழகு!!!!

அதுமட்டுமல்ல இது ஒரு அவசியமான பதிவும் கூட...