17.1.10

படைப்பிலக்கியத்துக்குள் நுழையமுடியாத வாரிசுச் சாக்கடை.

இந்த மூன்று நாள் விடுமுறை எக்கச்சக்கமான குளிரையும், சோம்பலையும்,நண்பர்களோடு அரட்டையையும் கொஞ்சம், தொலைக்காட்சியையும்,கொடுத்தது.சாத்தூர் மண்ணிலிருந்து கிளம்பிய ஒரு கிராமத்து மனிதன் லட்சுமணப்பெருமாள் நையாண்டிப் பேச்சாளரானார் அவரோடு கூட எங்கள் அன்புத்தம்பி பூபாளம் பிரகதீஸ்வரன்,கவிஞர் தனிக்கொடி ஆகியோரும் பங்கேற்ற பட்டிமன்றம் மெகா தொலைக்காட்சியில் காணநேர்ந்தது.அதுதவிர எல்லாம் சினிமா மயம் தான் திருப்புகிற அலைவரிசையெல்லாம் புதிய படங்களின் நாயகர்கள்.கூடவே தமிழ்த்தெரியாத குல்பி நடிகைகள் உட்கார்ந்து கொண்டு கும்மரிச்சம் போட்டார்கள்.

அமேசிங்,சூப்பர்ப்,ஆக்சுவலி,ஹாரிபிள்,டெரிபிள் என்னும் வர்த்தைகள் அடைத்துவைக்கப்பட்ட பேட்டிகளில் அவர்களின் அறிவு நான்குக்குமேல் ஒருபோதும் வெளிப்பட்டதில்லை. ஒரு கலைஞனுக்குரிய அரிச்சுவடி ஞானம் கூட இல்லாத அவர்கள். மெனக்கெட்டு முடியை முகத்தில் படரவிட்டு பின்னர் அதை ஒதுக்கிவிடும் தொழில்நுட்பம் தவிர ஒரு விரக்கடை கூட எதையும் தேடக் கதியற்றவர்கள். மித மிஞ்சிய ஆணவத்தோடு இந்த பார்வை யாளர்களை வக்கணம் காட்டுவதாகவே நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

கலைக்கு மொழி குறுக்கே நிற்கக் கூடாது.சரி, உச்சரிப்புக்குமா இருக்கக்கூடாது.கண்ணதாசன் எழுதி இளையராஜாவின் இசையில் 'பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே,கிளியே' எனும் பாடலை kj.ஏசுதாஸ் பாடினார்.அவர் ஒரு மலையாளி என்பது உலகம் அறிந்தது ஆனாலும் உதித் நாராயணன் கொலை செய்த அளவு அவர் தமிழைக் கொலை செய்யவில்லை என்றே படுகிறது.ஆனாலும் கூட கவிஞர் கண்ணதாசன், 'நான் கிளியே கிளியே என்று எழுதிருக்கேன் ஒருத்தன் கிழியக்கிழியன்னு பாட்றான்' என்று நக்கலாக விமர்சனம் செய்தார். சன் குழுமம் தயாரித்து,சன் குழுமத்தின் கோலங்கள் மெகாத்தொடர் நாயகி தேவயானியின் தம்பி நகுல் நடித்து வெளிவந்த படம் மாசிலாமணி. அதில் சூப்பரு சூப்பரு என்றொரு பாடல் வரும் அதில் 'ஏனோ நீ தள்ளுரியே' எனும் வார்த்தையை மிகத்தெளிவான ஒரு கெட்ட வார்த்தையாக மாற்றி ஒலிக்க விடுகிறார்கள்.

கிட்டத்தட்ட எல்லாப் பாடல்களும் வார்த்தைகள் புரியாத கண்கட்டி வித்தையாகிப் போனதால் இதை யாரும் அவதானிப்பதில்லை. அப்படியே அவதானித்தாலும்  என்ன செய்துவிட முடியும். நடிகர்களின் வாரிசுகள் மட்டுமே நடிகராகமுடியும், இசையமைப்பாளர்களின் வாரிசுகளே இசையமைப்பாளர்களாக மாறமுடியும்,பாடகர்களின் வாரிசுகள் எல்லோரும் பாடகர்களாகலாம், என்கிற பலமான சுவர்கள் சினிமாவைச் சுற்றி எழும்பி நிற்கிறது. இதை நீங்கள் விழாக்காலச் சிறப்புப் பேட்டிகளில் பட்டவர்த்தனமாக உணரலாம்.அங்கு சாமானியர்கள் நுழைவது சுலபமல்ல. பார்வையாளர் அட்டை மட்டுமே வழங்கப்பட்ட நமக்கு விமர்சனம் பண்ணுவதற்குக் கூடச் சரியான ஊடகங்கள் இல்லை அதுவும் கூட மொனோபலியில் சிக்கிப் பலிகிடா ஆகிப்போனது.

எள்முனையளவுகூட பொதுத்தன்மையை அனுமதிக்காத தனியார் தொலைக்காட்சிகள்.தத்தமது கட்சிகளின் பிரச்சார ஊதுகுழலாக தொடர்வது,அது இல்லாத நேரங்களை சினிமாவோடும் விளம்பரத்தோடும் கழிப்பதென்னும் தீவிர ஊடக சித்தாந்தம் நிலைப்படுத்தப் பட்டு விட்டது.அறிவிக்கப்படாத தடா, பொடா, போன்ற நெருக்கடிகளுக்குள் இருப்பதுபோல நாம் தனித்தனியே அங்கலாய்ப்பதை கொஞ்சம் உயர்த்தி இப்போது  வலையெழுத்து உருவாகியிருக்கிறது. ஒரு வாசல் அடைக்கப்பட்டால்  இன்னொரு  வாசல் திறக்கும்.

திறந்திருக்கும் வாசல் வழியே ஒரு கருத்தை நம்பிக்கையோடு முன்வைக்கலாம்.ஒரு நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்தச் சினிமாவில் வாரிசுகள் வந்தது குறைந்த உழைப்புக்கு கோடானகோடி லாபம் கிடைக்கும் நடிப்பு,இசை,பாடகர் போன்ற துறைகளுக்கு மட்டும் தான்.கவிஞர், கதாசிரியர், ஒளிப்பதிவாளர், இயக்குனர் போன்றவற்றிற்குள் இந்த வாரிசுச் சாக்கடை இந்த நிமிடம் வரை நுழையமுடியவில்லை என்பது கவனம் பெறக்கூடிய செய்தி.அதற்குக் காரணம் ஒன்றே ஒன்றாக மட்டும் இருக்கமுடியும். பின்னால் சொன்னவையாவும் படைப்பிலக்கியங்கள். கட்டாடம் சரக்கு இருக்கணும். அது இல்லாமல் ஒப்பேத்த முடியாது.

தக்கது நிற்கும் தகாதது அழியும்.

12 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

பகிர்ந்தமைக்கு நன்றி தோழர்

pavithrabalu said...

மிகவும் வேதனையாகத் தான் இருக்கிறது..வெற்றுக் கூச்சல்களையும், புனைவுகளையும் நாம் புறந்தள்ளி விடலாம்... ஆனால், இளைய தலைமுறையினர் மனதில் அது ஆழமாகப் பதிந்து விடுகிறதே..

சபை நாகரிகம் கருதி உச்சபட்ச கோபத்திலும் கூட பெரியவர்கள் முன்பு நாம் சாதாரண வசைச் சொற்களைக் கூட உதிர்க்க மாட்டோம்,, ஆனால் இன்று வடிவேலுவை நாட்டுப்புறவியலின் மொத்த குறியீடாக சித்தரிப்பதோடு நில்லாமல், மோசமான வசைச் சொற்களையும் யதார்த்தம் என்ற பெயரில் சென்சாரிலும் தப்பித்து, நம் குழந்தைகளின் மனதில் விதைக்கிறார்கள்,, குழந்தைகள் அவர்களுக்குள் வீசியெறியும் வசைச்சொற்கள் நம் மனதில் வலியை ஏற்படுத்துகிறது,,

Siva said...

எனக்கென்னவோ படைப்பாக்கத்தில் [படைப்பிலக்கியம்]இசையும் சேருமென தோன்றுகிறது.

காமராஜ் said...

நன்றி தோழர் arur, வருகைக்கும் கருத்துக்கும்.

காமராஜ் said...

//சபை நாகரிகம் கருதி உச்சபட்ச கோபத்திலும் கூட பெரியவர்கள் முன்பு நாம் சாதாரண வசைச் சொற்களைக் கூட உதிர்க்க மாட்டோம்,,//

இப்படியெல்லாம் யோசிக்கமுடியாத மஹான்கள் மட்டுமே உச்சிக்கு வருகிறார்கள்

காமராஜ் said...

Siva said...

// எனக்கென்னவோ படைப்பாக்கத்தில் [படைப்பிலக்கியம்]இசையும் சேருமென தோன்றுகிறது.//

ஆமாம். ஒத்துக்கொள்கிறேன்.அது உங்கள் பெருந்தன்மையைக்காட்டுகிறது சிவா. கருத்துக்கு நன்றி.

அன்புடன் அருணா said...

பளீர் உண்மை!

காமராஜ் said...

வாருங்கள் அன்புத்தங்கையே வணக்கம்.
நலமா?.

குப்பன்.யாஹூ said...

nice post,

even in direction it came but failed, example; Manoj barathiraja's son

ஈரோடு கதிர் said...

மெகா தொலைக்காட்சி பட்டி மன்றம் பார்த்தேன்

சந்தனமுல்லை said...

கருத்துகளை சொனன விதம் அருமை.
சொன்ன கருத்துகளும் அருமை!

/தக்கது நிற்கும் தகாதது அழியும்./

:-)

anto said...

மாமா! சூப்பரான சாட்டையடி.வெளுத்து கட்டுங்க!!!