31.1.10

பெவிலியனுக்குத் திரும்பிய கனவுகள்.

இரு சக்கரவாகனத்தின் சைகை ஒலிப்பானை அலறவிட்டு தங்க நாற்கரசாலைக்குள் இணையும்போது ஒரு இளைஞன் நடந்துபோனான். நடப்பது மிக மிக விநோதமானதா ?. ஆம் மணிக்கு நூறு கிலோமீட்டர் வேகத்தில் பறக்கிற வாகனங்களுக்கு இடையில் ஏகாந்தமாய் ஒருவன் நடந்துபோவது வித்தியாசமான காட்சி. அவனை ஏறச் சொன்னபோது தயங்கித் தயங்கி ஏறினான். பிறகு நீண்ட இடைவெளி. நான்தான் பேச ஆரம்பித்தேன்.
தனியார் தொண்டு நிறுவணத்தில் வேலை பார்க்கும் அவனுக்கு திடீரென அழைப்பு வந்ததாம். பேருந்து  வர இன்னும் ஆறு மணிநேரம் காத்திருக்கனும் என்பதால் நாலு கிலோமீட்டர் நடந்தே வந்திருக்கிறான். கிடைக்கிற இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயைத் தக்கவைக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவனுக்கு.என்ன படிச்சிருக்கீங்க என்றுகேட்ட போது எம்மெஸ்ஸி, எம்பில் என்று சொன்னார். அதுவும் பிசிக்ஸ் மேஜர்.

எனது தெருவுக்கு அடுத்த தெருவில் இதே பிசிக்ஸ் மேஜர் படித்த ஒரு பட்டாதாரி ஆசிரியர் தனிப்பாடம் நடத்திக் கோடிசுவரராகிப்  போனார். அவருக்கு கிடைக்கிற அந்த தனிப்பாட வருமாணம், அரசு கொடுக்கும் கைநிறைந்த சம்பளத்தைக் கெக்கலிட்டுக் கேலி செய்யும் தொகை. இந்த வித்தியாசம் பிறகு எனக்கு வண்டி ஓட்டத் தெம்பில்லை. இறங்கி அவனோடு அறை மணி நேரம் பேசினேன்.

சின்ன வயசில் தாயும் தந்தையும் அகாலமரணம் அடைந்துவிட ஒரு ஓட்டு வீடும், ஒரு தம்பியும், மிகப்பெரிய வெட்ட வெளியும் அவனை எதிர்கொண்டது. குடித்தும் குடியாமலும் பாதியில் நின்று போன கல்லூரிப்படிப்பை முடித்தான்.தனி விளையாட்டுக்கான மாவட்ட, மாநில சான்றிதழ்களோடு எம்மெஸ்ஸி பட்டப்படிப்புச் சான்றிதழும் இருந்தது. மிகச்சிறந்த சுழல்பந்து வீச்சாளன்,வசமான பந்து வந்து விழுந்தால் அடிக்கிற அடியில் மூணு ஊர் தாண்டிவிழும் முரட்டு பேட்ஸ்மேன் என்ற அடையாளங்களின் மேல் கிறக்கம் கொண்ட மத்தியகலால் துறை அவனை ஒப்பந்த வீரனாக்கி சுவீகரித்துக் கொண்டது.தொலைக் காட்சியில் ஒருநாளாவது ஒளிர்ந்து விடுவேனென்னும் மிகப்பெரிய கனவோடு சென்னைக்கு போனான். செவக்காட்டுப் புழுதியும்,செருப்பில்லாத காலுமாக இருந்த அவனுக்கு வழுக்கும் விலையாட்டு மைதானமும்,காலுறைகள்,ஷூ எனும் பளபளக்கும் வாய்ப்பு விரிந்துகிடந்தது.

சேப்பாக்கம் மைத்தானத்துக்கு அருகிலே ஒரு விடுதியில் தங்கியிருந்து விளையாட்டு  இல்லாத காலங்களில் எம்பில்லும் முடித்தான். தொண்ணூறுகளின் துவக்கத்தில், தொலை காட்சியின் பரவலாலும், முகச்சவர, பற்பசை வியாபாரிகளின் ஆதரவாலும் கிரிக்கெட் பட்டி தொட்டிகளின் பிரதான விளையாட்டாக மாற்றமாகிக் கொண்டிருந்தது. அந்தக் காலத்தில் சென்னையைச் சேர்ந்த பல பிரபல வீரர்களின் அறிமுகத்துக்கும் கடைக்கண் பார்வைக்கும் தவம் கிடந்தான். கிடைத்த பின்னால் அவனுக்கு விளங்காத பல அரசியல் கண்ணா மூச்சியாடியது. எல்லா தகுதிகாண் தேர்விலும் ஜெயித்து வெளியேறும் அவனை அவனது சமூக அடையாளம் ஒவ்வொரு முறையும் பரமபத பாம்பாகி காலைப் பிடித்து கீழே இழுத்துப் போட்டது. இதையும் கூட அவன் அவனுக்கு கடவுளின் அருள் கிடைக்காததால் வந்தது எனத் தேற்றிக்கொண்டு தவம் தொடர்ந்தான். மணமிருந்தும் ஒரு தாழம்பூவைப்போல இடமிழந்து போனான்.

சான்றிதழ்களின் கடைசியில் இருந்த பள்ளியிறுதி மாறுதல் சான்றிதழைத் திருப்பிப் பார்க்காத தேர்வுக்குழுமம் குதிரைக் கொம்பாகவே இருந்தது.அப்போதைய கிரிக்கெட் கேப்டன் திரு அசாருதின் அவர்களைìܼப்
பலமுறை சென்னையில் சந்தித்திருக்கிறான்.பின்புலம் இல்லாமல் இங்கே நுழையச் சத்தியமாகச் சாத்தியம் இல்லை என்று சொல்லிவிட அவனுக்கிருந்த இறுதி இழையும் அறுந்துபோனது. அதன் பின்னால் வயிறும் மிச்சமிருக்கிற வாழ்வும் பயமுறுத்தியது இரண்டு முறை காவல்துறை ஆய்வாளர் தேர்விலும் உடல் தகுதித் தேர்விலும் வெற்றிபெற்று தோற்றுப்போனான்.தன்னந்தனியே திறமையை மட்டும் வைத்து ஜெயித்துவிடத் துணிந்த அவனது பயணம் நெடுகிலும் ஒரே ஒரு வெற்றி கிடைத்தது. ஆம் அவனது தம்பி ஒரு இடைநிலை ஆசிரியனாகினான் அவனால் மீண்டும் தரையிறங்கியது அவனது கனவு.

தம்பியின் கல்யாணம். அதனால் ஏற்பட்ட வெற்றிடம் . அதை நிறப்ப சொந்தக் கல்யாணம். அப்புறம் குடும்பம். அதை  நிர்வகிக்க  ஒரு வேலை.தொண்டு நிறுவண நிர்வாகியாகி வாழ்க்கை அவனை பெவிலியனுக்கு அனுப்பியது. ஆனாலும் உள்ளே உறைந்து கிடக்கிறது மட்டையும்,பந்தும் எல்லை தாண்டிக் குதிக்கும் சந்தோசமும். அதை லேசாக உசுப்பிவிட அவ்வப்போது கிராமத்து கிரிக்கெட் குழு அவனை நடுவராக்கும். இப்பொதெல்லாம்  விளையாட்டு நுணுக்கங்களை விட சமூக நுணுக்கங்கள் பற்றித்தான் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறான்.

அவனது பெயரைச் சொல்லவில்லையே.
தோற்றவர்களுக்கெல்லாம் என்ன பெயரோ அதுதான்.
அல்லது அவனுக்கு நீங்களே ஒரு பெயர் வைத்துக்கொள்ளுங்கள்.

29 comments:

செ.சரவணக்குமார் said...

படித்து கலங்கிப் போனேன் காமராஜ் அண்ணா. வெறும் திறமையை மட்டும் வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்ற கசப்பான உண்மை புரிகிறது. அவர் சாத்தூரில் வசிப்பவரா?

ஈரோடு கதிர் said...

மனதை கவ்விப்பிடிக்கிறது இடுகை...


இது போல் பெயரில்லாத மனிதர்களாக நாமும்கூட சில நேரங்களில் இருக்க வேண்டியிருக்கிறது...

அன்புடன் அருணா said...

இப்படிப் பெயரிலிகள் கோடிகள்.....மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.

கிச்சான் said...

மணமிருந்தும் ஒரு தாழம்பூவைப்போல இடமிழந்து போனான்.

உங்கள் பதிவை படித்தவுடன் மனம் கனத்துபோய் இருக்கிறது

கிச்சான் said...

"மணமிருந்தும் ஒரு தாழம்பூவைப்போல இடமிழந்து" போனான்.

அருமையான வார்த்தைகள்!


உங்கள் பதிவை படித்தவுடன் மனம் கனத்துபோய் இருக்கிறது

கிச்சான் said...

மணமிருந்தும் ஒரு தாழம்பூவைப்போல இடமிழந்து போனான்.

உங்கள் பதிவை படித்தவுடன் மனம் கனத்துபோய் இருக்கிறது

Deepa said...

வேதனையாக இருக்கிறது.
கடைசி வரிகள் கலங்க வைத்தன.
மிக நல்ல பகிர்வு அங்கிள்.
//எல்லா தகுதிகாண் தேர்விலும் ஜெயித்து வெளியேறும் அவனை அவனது சமூக அடையாளம் ஒவ்வொரு முறையும் பரமபத பாம்பாகி காலைப் பிடித்து கீழே இழுத்துப் போட்டது.//
:-(((

கும்க்கி said...

திறமைகளை நம்பி களம் இறங்கும் அணைவருக்கும் நமது அமைப்பில் இதுதான் கதி..

கிரிக்கெட்டை பொறுத்தவரை இட ஒதுக்கீடு முற்போக்கிற்க்கு சாதகமாகத்தான் எப்பொழுதும் வேலை செய்துகொண்டிருக்கிறது.
11/1 அல்லது11/2 ஆக யாரேனும் அரசியல்வாதிகளின் சொந்தங்கள் அவ்வப்போது காலடி வைக்கலாம்.

உடல் பளு அதிகமும் தேவைப்படாத மூளை பலு மட்டும் தேவைப்படுகிற, கோடிகளை எளிதாய் குவிக்க வாய்ப்பிருக்கும் எல்லா ஆட்டங்களும் ஒதுக்கப்பட்டவைதானே அவர்களுக்கு..

வலி மிகுந்த உண்மை..
சொல்லிய விதம் அருமை...

குப்பன்.யாஹூ said...

அருமையான பதிவு.

வெய்யில் படம் பசுபதி போலா இவர். ஒருவேளை இந்த கதை கேட்டு தான் வெய்யில் படம் கரு உருவானதோ

காமராஜ் said...

அன்புத்தம்பி சரவணன் வாருங்கள்.
கருத்துக்கு நன்றி.

காமராஜ் said...

நன்றி கதிர்.

நன்றி அருணா.

காமராஜ் said...

வாருங்கள் கிச்சான்
வலையில் முதல்வருகைக்கு நன்றி.

காமராஜ் said...

நன்றி தீபா.
0
வாங்க கும்கி.
தோழா நாளை திரும்பவும் பேசுவோம்.
0
வணக்கம் குப்பன் சார்.
வெயிலுக்கும் வெயில் பசுபதிக்கும்
இந்த நிகழ்வுக்கும் தொடர்பில்லை சார்.

பா.ராஜாராம் said...

என்ன காமு நீ..(விடு.இப்படித்தான் நான்.)

அப்படி ஒரு பதிவு இது.வெகு நாள் மனசை விட்டு நீங்காது.

பின்னூட்டம் ஒரு அடையாளம்.வந்துட்டு போனதுக்கு.

இந்த தாக்கத்தில் சும்மா இருக்கத்தான் தோணுது.

கிச்சான் நலமா?(முறி மருந்தாக இந்த கேள்வி.ஸ்மைலி போடுவது போல..)

உயிரோடை said...

சில‌ ச‌ம‌ய‌ம் நிஜ‌ம் என்ற‌ ஒன்று இல்லாம‌ல் போனால் நன்றாக‌ இருக்கும்.

மாயாவி said...

என்றைக்குமே இந்த உலகம் நியாயமாக நடந்ததில்லை.

சில வேளைகளில் நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டியதை தில்லுமுல்லு செய்துதான் அடைய வேண்டியிருக்கிறது. சிலருக்கு அதுவும் சாத்தியப்படுவதில்லை.

செல்வநாயகி said...

உங்களின் பல இடுகைகள் நெகிழ்வைத் தருபவை. தொடர்ந்து வாசித்தாலும் பின்னூட்டம் இட முடிந்ததில்லை அந்த நேரத்தில். இவ்விடுகையும் நெகிழ்வானதுதான். ஆனால் இதில் வெறும் நெகிழ்வு மட்டும் போதுமானதுதானா?

//////எல்லா தகுதிகாண் தேர்விலும் ஜெயித்து வெளியேறும் அவனை அவனது சமூக அடையாளம் ஒவ்வொரு முறையும் பரமபத பாம்பாகி காலைப் பிடித்து கீழே இழுத்துப் போட்டது.////

இதை இன்னும் விரித்தும் அப்பட்டமாகவும் எழுதியிருக்கலாம். இவையெல்லாம் எழுதப்படவும் வேண்டும். உங்களுக்கு எழுதத் தெரியாததல்ல, ஆனாலும் ஏனோ லேசாக மட்டும் சுட்டிக் கடந்து போய்விட்டீர்களே என்ற ஆதங்கம் எழுந்ததால் இப்பின்னூட்டம். என்றாலும் இடுகைக்கு நன்றி.

தாரணி பிரியா said...

யோசித்து கொண்டே இருக்கிறேன் என்ன பின்னூட்டமிடுவது எனத் தெரியாமல் . இந்த பதிவு மனதை விட்டு என்றும் அகலாது

சந்தனமுல்லை said...

கோபமும் கலக்கமும் ஒருசேர வருகிறது படிக்க படிக்க!

க.பாலாசி said...

கணமானதொரு இடுகை.. அன்றிலிருந்து இன்றுவரை திறமையுள்ளவர்களை நமது சமுதாயமும் அடையாளப்படுத்த தவறுகிறது. இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கான வாய்ப்பே வழங்கப்படுவதில்லை என்பதே உண்மை... தாங்கள் குறிப்பிட்ட நபர் போல்.

காமராஜ் said...

வாங்க பாரா.
எப்படிக் கடந்தது வார இறுதி.

காமராஜ் said...

வணக்கம் மாயாவி.
கருத்துக்கு நன்றி.

காமராஜ் said...

நன்றி லாவண்யா,
நன்றி முல்லை,
நன்றி தாரணி
நன்றி பிறப்புக்களே.

காமராஜ் said...

வாருங்கள் செல்வநாயகி.
உங்களின் விமர்சனம் உண்மை.
இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம்தான்.
கருத்துக்கு நன்றி.

காமராஜ் said...

வணக்கம் பாலாஜி.

ஆ.ஞானசேகரன் said...

//அவனது பெயரைச் சொல்லவில்லையே.
தோற்றவர்களுக்கெல்லாம் என்ன பெயரோ அதுதான்.//

மனதில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டீர்கள் நண்பா..

லெமூரியன்... said...

வணக்கம் காமராஜ் அண்ணா..!
மனதை மிகவும் கனக்கச் செய்த இடுகை இது...
புறக்கணிக்கப் பட்டவர்களின் கதைகள் வெளியே தெரிவதில்லை..
அப்படி வெளியில் தெரியும்போது அதன் வலி தாங்க இதயம் பயம் கொள்கிறது..

anto said...

மாமா...படித்து முடித்தவுடன் மனம் கனத்து போனது....

பாபு said...

நெகிழ்வான...ஆனால் முகத்தில் அறையும் உண்மை!

ஆர்ப்பாட்டமில்லாமல் ... அமைதியாய் ஓடும் நதியில் கால் நனைப்பது ஓர் அழகான தருணங்கள் - அனுபவம். அதுபோலவே உங்கள் பதிவும்!