23.1.10

பதிவர் சந்திப்பு அவர்களுக்கு இன்று இறுதி நிகழ்ச்சி!


சந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு அஞ்சலி செலுத்தி தோழர். எஸ்.வி.வேணுகோபாலன் அவர்கள் எழுதிய நினைவலைகள் அவரைப்பற்றி நம்மோடு பகிர்ந்துகொள்கிறது. நெஞ்சை உருக்குகிறது.

தோழர்.செல்வபெருமாள்

என்னவோ தெரியவில்லை, அண்மைக்காலமாக மிக நெருக்கமாக பாதிப்பு ஏற்படுத்திய நண்பர்கள், தோழர்களை மிகக் குறைந்த இடைவெளியில் இழக்க நேரிட்டிருக்கிறது.  இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் துணைப் பொதுச் செயலாளர் அசோகன் கடந்த செப்டம்பர் 2ம் தேதியன்று மாரடைப்பில் விடைபெற்றிருந்தார்.  அதற்கு இரண்டே தினங்களுக்குமுன் தான் அவரது திருமணம் நடந்திருந்தது. 47 வயது அவருக்கு என்பது நெருங்கிப் பழகிய பலருக்கு வியப்பளித்தது. அத்தனை இளமையும் துள்ளலுமாகச் செயலாற்றியவர்.  அடுத்தது, தூங்காமல் தூங்கி (சந்தியா பதிப்பகம்) என்ற அற்புதமான நூலை எழுதிய மயக்க இயல் மருத்துவர் மாணிக்கவாசகம்.  60 வயதுவரை அறுவை சிகிச்சை மேசைக்கருகில் நோயாளிகளின் புனர்வாழ்விற்கு வரமளிக்கத் தக்க ஆற்றலோடும், அது மறுக்கப்பட்ட வேளைகளில் உறவினர்களுக்கு ஆறுதல் மொழிகளோடும் வளையவந்த அவரே அறுவை சிகிச்சை மேசை மீது படுக்க நேர்ந்த கணத்தில் உரமழிந்து தவித்தவர்.  புற்றுநோய் அவரை அதிகம் தவிக்கவிடாது நான்கைந்து மாதங்களுக்குள் விடுதலை கொடுத்துவிட்ட நிகழ்வு சென்ற அக்டோபர் 23ல் நடந்தது.  இளம்வயதில் செயலூக்கப் போராளியாக தெருவீதியில் மட்டுமின்றி, இணையவீதிகளிலும் முழங்கிய வித்தியாசமான தோழன் செல்வபெருமாள் தான் நேற்று (22 01 2010) இரவு  நம்மைப் பிரிந்தது.  மனிதகுல நேயர் என்பதுதான் மேற்சொன்ன மூவருக்கும் பொதுவான முகவரி.  தொழிற்சங்க மேடையிலோ, மருத்துவர் உருவிலோ, களப் போராளியாகவோ வாழ்வின் சாரத்தை நேசித்தவர்கள், மற்றவர்களுக்காக வாழத் துடிப்பவர்கள் விரைந்து மரித்துவிடுவது கொடுமையிலும் கொடுமையானது.

செல்வபெருமாளின் எழுத்துக்களில் (http://santhipu.blogspot.com )ஒளிரும் நேர்மையும், துணிவும், அழுத்தமும் இயக்க இலட்சியத்தின்பால் அவர் கொண்டிருந்த விசுவாசத்தின் செம்மாந்த மேடையிலிருந்தே வெளிப்பட்டது.  இதன் சுவடுகள் எதுவும் தெரியாத எளிய மனிதராக அவர் சக தோழர்களிடம் பழக முடிந்தது ஒரு ஆகச் சிறந்த கம்யூனிச குணாம்சம் இன்றி வேறென்ன....

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகம் செல்ல வாய்த்த தருணங்கள் ஒவ்வொன்றின்போதும் கடந்த காலங்களில் அவரைப் பார்க்கும் நேரங்களின் தோழமை வினவல்கள் உணர்ச்சி பெருக்குபவை. முக்கிய தலைவர்கள், தொழிற்சங்க அமைப்புகளின் தொலைபேசி எண் தேவைப்படும் நேரங்களில் அந்த அலுவலகத்திற்கு அழைத்தால் எதிர்முனையில் அவர் கிடைக்கும்போது தேவையான விவரங்களோடு, அப்போதைய அரசியல், சமூக நடப்பு ஏதும் பற்றிய கருத்து பரிமாற்றங்கள் இல்லாது அந்த அழைப்பு நிறைவு பெற்றதில்லை.

இ-மெயில் நதியில் நான் தயங்கித் தயங்கிக் காலை நனைக்கத் துவங்கிய பொழுதுகளில் சடாரென்று, அவரது பெயரோடு வலப்பக்கத்தில் ஒரு செவ்வக உரையாடல் பெட்டி கண் திறந்தபோது நான் திடுக்கிட்டுப் போனேன்.  இதை வாசித்தீர்களா, அதைப் படித்தீர்களா, எதிர்வினை செய்யக் கூடாதா என்பதாக இருக்கும் அவரது கேள்விகள்.  எனது கட்டுரையை சிலாகித்தும், ஏன் Bank Workers Unity இதழ் கைக்கு வரவில்லை என்றும் இருக்கும் வேறு நேரத்து பிரஸ்தாபங்கள்.  அவருக்கென்று பிரத்தியேகமா இதழ் சேருவதை மாதாமாதம் உறுதிசெய்வதை எனது முக்கிய வேலைகளில் ஒன்றாகக் கொண்டிருந்தேன்.

ஒருமுறை அவரது மெயிலிலிருந்து வந்திருந்த உரையாடல் குறித்து அறிந்துகொள்ள அடுத்தநாள் அழைத்தபோது அவர் அலுவலகம் வந்திருக்கவில்லை. அலைபேசியில் அழைத்துக் கேட்டபோது, 'அது நானில்லை தோழா, உ.ரா. வரதராசன் தான் எனது மெயிலிலிருந்து உங்களை உரையாட அழைத்திருந்திருப்பார்' என்றார்.  அது மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை அகில இந்திய மாநாட்டு ஆவணம் ஒன்றை மொழிபெயர்க்கும் வேலை தொடர்பான உரையாடல். இப்படி முக்கியப் பணிகளுக்காகத் திறந்து வைத்த குடிலாக இருந்தது அவரது மின்னஞ்சல் உலகம்.

சந்திப்பு வலைப்பூவில், அவரது ஆவேசமான எழுத்துக்களைப் போலவே, அழகியல் பரிமளிக்கும் பதிவுகளும் மின்னும். சென்னை மத்திய சிறைச்சாலை புழலுக்குக் குடி பெயர்ந்துபோகவும், பழைய சிறைச்சாலையை இடிப்பதற்குமுன் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து கொடுத்தபோது, செல்வபெருமாள் சென்றுவந்த அனுபவத்தின் பதிவை நாட்டு மக்கள் அனைவரும் வாசிக்கவேண்டும் என்று தோன்றும். அதிகாரத்தின் பிரம்புகள் வரலாறு நெடுக செய்துவரும் தவறுகள், குற்றங்கள், அராஜகங்கள், அயோக்கியத்தனங்கள் எல்லாவற்றையும் விசாரிக்கும் இடமாகப் பழைய சிறைச்சாலைகளை மாற்றினால்தான் என்ன என்று தோன்றும்.

வலைப்பூவில் புதிய வரவுகளற்றுப் போன ஒரு சோதனையான காலத்தில் அவரது திடீர் உடல் நலிவு தெரியவந்தது.  அவரைப் பார்க்கும் துணிவற்றுப்போகச் செய்தன அவர் கடக்கத் துவங்கிய நோயின் கட்டங்கள்.  அவரது இருப்பின்போதே அவரது பிரிவின் விளைவுகள் பற்றிப் பேசவைக்கக் கூடிய கொடியவனாக வந்து தொலைந்திருந்தது புற்றுநோய்.

'சிங்காரவேலர் சிந்தனையாளர் மன்றம்' துவங்கி அரிய கூட்டங்கள் நடத்திக் கொண்டிருந்ததில் அவர் பங்களிப்பு அதிகம்.  சிவப்பின் உவப்பில், சிந்தை நிரம்ப சித்தாந்தங்களே பெருகியிருந்த இந்தச் சின்னச் சிங்காரவேலர் இன்னுமின்னும் கருத்தியல் தளத்தில், தத்துவார்த்த விவாதத்தில், பண்பாட்டின் செவ்விய மொழியில் என்னென்னவோ சாதிக்கும் ஆற்றலும், கனவுகளும் கொண்டிருந்தவர் என்பதே இந்த மரணத்தின் துயரத்தைக் கூட்டுகிறது.

இரந்துகோள் தக்கதுடைத்தான சாக்காட்டைத் தேர்ந்தெடுத்துச் சென்றவரே, செல்வப்பெருமாள் தோழா, செவ்வணக்கம் உனது வசீகரிக்கும் ஆவேச நினைவுகளுக்கு............



விலாசம்

2/3, ஐயாபிள்ளை கார்டன் தெரு
காலடிப்பேட்டை
திருவொற்றியூர்
சென்னை



இன்று (23.1.2010) மாலை 4 மணிக்கு திருவொற்றியூரில் அவரது இறுதி நிகழ்ச்சி நடைபெறும்.

12 comments:

சந்தனமுல்லை said...

மிகுந்த வருத்தமாக இருக்கிறது!

/மற்றவர்களுக்காக வாழத் துடிப்பவர்கள் விரைந்து மரித்துவிடுவது கொடுமையிலும் கொடுமையானது./

:-((

க.பாலாசி said...

இச்செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரது ஆத்மா சாத்தியடைய பிரார்த்திக்கிறேன்.

விடுதலை said...

வலைப்பதிவுலகத்தில் தனக்கு என்று ஒரு இடத்தை உருவாக்கி இடதுசாரி கருத்துகளை முதலில் பரப்பிய தோழர் செல்வபெருமாள் சந்திப்பு என்ற தனது வலைப்பூ மூலம் மட்டுமே எனக்கு அறிமுகம் ஆனதோழர் இறந்த சேதி என்ணை மிகவும் பாதித்துள்ளதோடு ஒரு அகச்சிறந்த தோழர் நம்மோடு இல்லை என்று நினைப்பதே வருத்தமளிக்கிறது. சமரசமற்ற போராளியின் குணத்தோடு தொடர்ந்து தனது கட்சி பணிகளுக்கு இடையில் தொடர்ந்து அவர் ஆற்றிவந்த பணி அவரின் உடல்நிலை காரணமாக கடந்த ஆண்டு மே மாதம் முதல் அவர் எழுதவில்லை என்றதும் சரியான இடதுசாரி சிந்தனையை தனது எழுத்துகளால் வலைப்பூவில் பரவசெய்த தோழரின் இழப்பு இட்டுநிரப்பமுடியாத வெற்றிடமாக தொடரும். சந்திப்புக்கு எனது வீரவணக்கம்

விடுதலை said...

வலைப்பதிவுலகத்தில் தனக்கு என்று ஒரு இடத்தை உருவாக்கி இடதுசாரி கருத்துகளை முதலில் பரப்பிய தோழர் செல்வபெருமாள் சந்திப்பு என்ற தனது வலைப்பூ மூலம் மட்டுமே எனக்கு அறிமுகம் ஆனதோழர் இறந்த சேதி என்ணை மிகவும் பாதித்துள்ளதோடு ஒரு அகச்சிறந்த தோழர் நம்மோடு இல்லை என்று நினைப்பதே வருத்தமளிக்கிறது. சமரசமற்ற போராளியின் குணத்தோடு தொடர்ந்து தனது கட்சி பணிகளுக்கு இடையில் தொடர்ந்து அவர் ஆற்றிவந்த பணி அவரின் உடல்நிலை காரணமாக கடந்த ஆண்டு மே மாதம் முதல் அவர் எழுதவில்லை என்றதும் சரியான இடதுசாரி சிந்தனையை தனது எழுத்துகளால் வலைப்பூவில் பரவசெய்த தோழரின் இழப்பு இட்டுநிரப்பமுடியாத வெற்றிடமாக தொடரும். சந்திப்புக்கு எனது வீரவணக்கம்

அன்புடன் அருணா said...

குடும்பத்திற்கு இழப்பைத் தாங்கும் ம்ன உறுதியைத் தர பிரார்த்திக்கிறேன்.

ஈரோடு கதிர் said...

அவர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்

யாநிலாவின் தந்தை said...

இடதுசாரி சிந்தனைகளை நேர்மையாக சொல்வதற்கும், அதிதீவிரவாதிகளின் தவறான பிரசாரத்திற்கு பதிலடி கொடுக்கவும் சரியான இணையதளமோ பதிவோ இல்லையே என நான் ஒரு நாள் ஒரு தோழரிடம் சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டிருந்தேன். அப்போது அவர், "தோழர் செல்வபெருமாள் சந்திப்பு என்கிற பெயரில் பதிவு எழுத துவங்கியிருக்கிறார்" என்றார். அன்று முதல் தினமும் அலுவலகம் வந்ததும், செல்வபெருமாள் ஏதேனும் புதிதாக இன்று எழுதி இருக்கிறாரா என பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தேன். அவருடன் நிறைய விவாதித்திருக்கிறேன் (வேறு வேறு பெயர்களில்). இரண்டு அல்லது மூன்று முறை அவரை நேரில் பார்த்திருக்கிறேன், ஆனால் பேசியதில்லை. நிச்சயமாக அவரது மறைவு ஒரு பேரிழப்புதான் என்னை போன்றோர்க்கு.

ஆ.ஞானசேகரன் said...

//இன்று (23.1.2010) மாலை 4 மணிக்கு திருவொற்றியூரில் அவரது இறுதி நிகழ்ச்சி நடைபெறும்.//

அவரின் குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த அஞ்சலி

பா.ராஜாராம் said...

ஆன்மா சாந்தியாக இருக்கட்டும் தோழர்,செல்வபெருமாள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

:(

எனது இரங்கல்.

vimalavidya said...

//அவரது திடீர் உடல் நலிவு தெரியவந்தது. அவரைப் பார்க்கும் துணிவற்றுப்போகச் செய்தன அவர் கடக்கத் துவங்கிய நோயின் கட்டங்கள். அவரது இருப்பின்போதே அவரது பிரிவின் விளைவுகள் பற்றிப் பேசவைக்கக் கூடிய கொடியவனாக வந்து தொலைந்திருந்தது புற்றுநோய்.//I have no words to share my sorrows.A great warrior..His chatting s in the Google talk "history" is a archeological relics.His all writeup should be brought into books.His 338 articles shall be useful for the political interest persons.we have to bring his articles in a book shape.It will be the right tribute to him---vimalavidya

சங்கமித்திரன் said...

என்ன எழவுக்கு இப்படி?
வேண்டா வெறுப்பா புள்ளைய பெத்து காண்டாமிருகம்னு பேர் வச்சானாம்.ஐயோ,ஐயோ