11.1.10

வெயில் மனிதர்களும் வெள்ளரியின் ஈரமும்.


நானும் அவரும் பனிமுடிந்து உப்பத்தூர் கிளையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் காட்டுவழியே வந்தோம்.அந்த அந்தி மஞ்சள் வெயிலில் கரிசக்காடெங்கும், கம்புசோளம்,சூரியகாந்தி,கொண்டக் கடலை,மல்லி,உளுந்துப் பயிர்கள் மினுங்கிக் கொண்டிருந்தன.கருத்த மண்ணில் தூவிவிட்ட பச்சை வண்ணம் அழகை கூட்டியது. அவருக்கு
சாத்தூர் தானென்றாலும் அரிசி முளைக்கிற மரம் எது எனக்கேட்கும் சுகவாசி ரகம்.ஓவ்வொரு செடியாக அவருக்கு அறிமுகப்படுத்திக்கொண்டே வந்தேன்.ஒருசில காடுகளில் படர்ந்துகிடந்த அந்தக் கொடியைப்பார்த்து சுரைக்கொடியா என்றுகேட்டார்.இல்லை வெள்ளரிக் கொடியென்று சொன்னதும் ஆர்வம் அடங்காமல் வண்டியை நிறுத்தசொன்னார். நிறுத்தினேன். வெள்ளரிக்காய் பிடுங்கலாமா என்றுகேட்டார் .தோட்டக்காரர்களைப் பற்றிய பயம் நெருடியது,வந்தாலும் சொல்லிக்கொள்ளலாம் எனும் தைரியத்தில் நிறுத்தினேன்.

வெள்ளரி ஏழைகளின் திண்பண்டம்.ஏழைகள் விளைவிக்கும் பண்டம்.நுங்கு போலவே வெயில்காலத்து ஆசுவாசம். கரிசல்காடுகளில் அதுபாட்டுக்கு முளைத்துவரும். பிஞ்சு காய் பழம் எல்லாமே திண்ணத் தகுந்தது.பாட்டி கதைகளில் அண்ணன் வீட்டுக்குப்போய் ஒரு வெள்ளரிவிதையை நக இடுக்குக்குள் மறைத்துக்கொண்டு வருவாள்.அதுவே பின்னாளில் மிகப்பெரிய தொப்பாகுமாம். வாலுபொயி கத்தி வந்தது டுண்டூங் டூங் டூக்கு என்கிற நரிக்கதையும், ஊரான் ஊரன் தோட்டத்துல ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா காசுக்கு ரெண்டு விக்கசொல்லி காகிதம் போட்டான் வெள்ளக்காரன் என்று ஏகாதிபாத்தியத்தைக் கேலி செய்யும் நாட்டுப்புறப் பாடலும்.இன்னும் சினிமாப்படல்களிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது வெள்ளரி. பாதிகடித்து தூக்கி எறிந்த வெள்ளரிக்காயைப் பார்க்கும் போதெல்லாம் என்னை அய்யா கு.அழகிரிசாமியின் 'திரிபுரம்' சிறுகதை வந்து அழுத்தும்.

சாத்தூரின் பெருமைகளில் ஒன்றான வெள்ளரிக்காய் பெரும்பாலும் பேருந்து நிலையத்தில்,புகைவண்டியில் மட்டுமே விற்பனை செய்யப்படும். வன்னிமடை,போத்திரெட்டிபட்டி,கொல்லபட்டி,இருக்கங்குடி போன்ற பகுதிக்காடுகளில் விளைந்து சாத்தூர் வரும். பேருந்து நிலைய மர நிழலில் கூடையில் அடுக்கி வைத்துக் குத்தவச்சு
விப்பாங்க.தொலைதூரப் பேருந்து வந்ததும் ஓடிப்போய் சின்னப் பிரம்புக் கூடையில் வைத்து ஜன்னல் வழியே
யாவரஞ்செய்வார்கள். அவர்களே அதை விளைவித்தவராகவும் இருப்பார்கள்.

அவர்களைப் பார்க்கிற போதெல்லாம் மாதவராஜின் சொற்சித்திரம் ஒன்று நினைவுக்கு வந்துபோகும். தனக்குத்தெரியாமல் கூடையில் இருந்து எடுத்தது யாரென்று கோபத்தோடு திரும்பி அது குழந்தையெனத் தெரிந்ததும் இன்னொரு வெள்ளரிப்பிஞ்சை அந்தப்பிஞ்சுக்கு கொடுத்து குளிரவைக்கும் சம்பவம்.அதன்கூடவே அந்த பாழாய்போன சாத்தூர் ஜாதிக் கலவரமும் அதன் உக்கிரமும் நினைவுக்கு வந்து பாடாய்ப்படுத்தும்.

போவோர் வருவோரையெல்லாம் அண்ணாச்சி வெள்ளரிக்கா வேணுமா வேணுமா என்று கூவிக்கூவி விற்றபோது. மனிதர்களையும் அவர்களின் கண்ணில் மிணுங்கும் ஆசையையும் மட்டுமே கண்டுபிடிக்கத் தெரிந்தது அவருக்கு.அவர்களது ஜாதி கண்டுபிடிக்கத் தெரியாமல் போனது விசித்திரமில்லை.அன்று மாலையில் ஒரு வெள்ளரிக் கூடையும் சிதறிக்கிடந்த வெள்ளரிப் பிஞ்சுகளும் அதில் படிந்திருந்த ரத்தக்கறையையும்  கலவரத்தின் சுவடுகளாக்கி விட்டு விட்டுப்போனார் அந்த மானாவாரி மனிதர்.

நெடுநேரம் தேடிப்பார்த்துக் கடைசியில் ஒரு காயைக்கண்டு பிடித்தோம். அதே நேரம் தோட்டக்காரரும் ஓடிவந்தார்.
'அட பேங்கு சார் நீங்களா,வேனுமின்னா சொல்லப்பிடாது, கொண்டாந்து தந்திருப்பேன்ல.காலைல தான் பிஞ்சு பரிச்சு சாத்தூருக்கு ஏத்துனோ' என்று சொல்லியபடியே அடுத்த பிஞ்சையில் போய் கை நிறைய்ய வெள்ளரிப் பிஞ்சுகளோடு வந்தார். இந்த மண்ணை மாதிரியே அதன் மனிதர்களிடமும் வற்றாத ஈரம் பேதமில்லாமல் அடிக் கோர்த்துக் கிடக்கிறது. பிறகு எங்கிருந்து வந்தது, எப்படிப் பிரித்தது ?

6 comments:

குப்பன்.யாஹூ said...

கோயில்பட்டி கடலை மிட்டாய், காராச்சேவு,

சாத்தூர் வெள்ளரிபிஞ்சு, (உப்பு ஒறப்பு போடி கலந்து) ஈடு இணையில்லா சுவை மிகுந்தது.

பதிவில் சொல்வது போல எப்படி வெள்ளரிபிஞ்சு கலப்படம் இல்லாத உணவோ அதே போல, சாத்தூர் மக்களும் கலப்படம் இல்லாதா தூய்மையான மனது காரர்கள்.

அன்புடன் அருணா said...

இப்படி அடிக்கடி ஊரை நினைவு படுத்தி கண்ணில் நீரை வரவழைக்கிறீர்கள்.

ஈரோடு கதிர் said...

//இந்த மண்ணை மாதிரியே அதன் மனிதர்களிடமும் வற்றாத ஈரம் பேதமில்லாமல் அடிக் கோர்த்துக் கிடக்கிறது.//

தித்திபாய்... மனதெங்கும்

ஆனால்.. உங்கள் எழுத்தை வாசிக்க இப்படி எத்தனை நாட்கள்தான் காத்திருப்பது

ராகவன் said...

அன்பு காமராஜ்,

பெயருக்கு ஏத்தமாதிரி நல்ல ஆஜானுபாகுவாய் வளர்ந்து நிற்கிறது உங்கள் எழுத்து. வீசி வீசி நடக்கும் போது கைகளின் வீச்சில் வெட்டுப் பட்டு பெருகும் காற்று ஒரே லயத்துடன், தாளம் தப்பாமல் செல்வது போல நடை. சம்பாரி மேளமும், சாமக்கோடாங்கியும் திரும்ப வந்து திங்கு திங்குன்னு ஆடுவது போன்ற பிரமை. என்ன சொல்றது காமராஜ், வசீகரமான எழுத்து.

வாழ்க்கையை ஒரு மழலையின் அங்க சேஷ்டைகளை முன்னிறுத்தி ரசிப்பது போல ரசித்து பகிர்வது உங்களுக்கு மட்டுமே சாத்தியம் காமராஜ்! இத்தனை நாட்களுக்கு பிறகு, கடும் வறட்சியில் உழலும் நாக்கில், பற்களுக்கிடையே சிக்கிய வெள்ளரி இதமாய், குளிர்வாய் படர்வது போல படர்கிறது உங்களின் இந்த பதிவு.

ஏற்கனவே நிறைய பேசியிருக்கோம்...
ஒவ்வொரு ஊரின் சந்தையும் விரித்து வைத்துக் காத்திருக்கும் இது போன்ற சுவாரசியங்களை, வெள்ளரியாய், மலைக்கொய்யா, வெத்திலவல்லி கிழங்கு, பனங்கிழங்கு என்று அகழ்ந்து, பறித்து படைக்கும் விருந்தோம்பல் எல்லோரிடமும் இன்னும் ஈரமாய், இனிப்பாய் விரவி இருக்கிறது.

அருமையான எழுத்துப் பதிவு.

அன்புடன்
ராகவன்

சந்தனமுல்லை said...

நாங்களும் உங்ககூடவே வெள்ளரிக்காய் பறிக்க வந்த மாதிரி இருக்கு அண்ணா! வசீகரமான எழுத்து நடை. ஊருக்குச் செல்லும் வழியில் ரோட்டோரம் நிறுத்தி அங்கிருந்த மாமரத்தை பார்த்துக்கொண்டு நின்ற போது ஒருவர் வந்து பறித்துக்கொடுத்தது நினைவுக்கு வருகிறது, அவரது முகமும்!

ராகவனின் பின்னூட்டமும் மிக அழகானது, தங்களது பதிவு போல!

பா.ராஜாராம் said...

எவ்வளவோ பேச வேண்டி இருக்கு காமராஜ்.ஆனால் இந்த ராகவனின் இசைக்கு முன்பாக எதை பேசி தொலைப்பது?நல்லா பேர் வச்சாரு எங்க அப்பாரு!