15.1.10

உழைப்பை,வறுமையைத் தோளில் சுமக்கும் குழந்தை அட்லஸ்.

அவன் மூன்றடி உயரம்தான் இருப்பான்.வயது மிஞ்சி,மிஞ்சிப்போனால் பத்து முதல் பனிரண்டுக்குள் இருக்கலாம். அவனது வயதுக்கும் உயரத்துக்கும் நிகரான காளங்கன்று. அவர்கள் இருவரும் சேர்ந்து இழுத்துப்போவதற்கு ஒரு கையடக்க மாட்டுவண்டி. அதில் கொஞ்சமாகத்தான் ஆற்று மணல். அதைப்பாக்கிற எனக்கு உலக கணம் கனத்தது. அந்த பரபரப்பான காலை எட்டரை  மணிக்கு எதிரே  வருகிற  இருசக்கர  வகனங்களில், சைக்கிளில், பேருந்துப்படிகளில் சீருடை கோர்க்கப்பட்ட ஸ்டாண்டுகளாக அவனையொத்த குழந்தைகள் கடந்துபோவதை சட்டைசெய்யாமல் கடந்து போகிறான்.வண்ண வண்ண நான்கு சக்கர வாகனக்கள், சினிமா ப்ளக்ஸ் பேனர்கள் எதுவுமே அவனைச் சலனப்படுத்த முடியாமல் தோற்றுப்போகிறது. கையிலிருக்கு சாட்டைக் கம்பை சுழற்ற மறந்து எதிரே நீண்டு கிடக்கும் கருப்பான சாலையை வெறித்தபடி பயணிக்கிறான்.

கருப்பசாமி. ஒரு குழந்தைச் சித்தன்.உழைப்பை அதன் வியர்வையை, வறுமையை அதன் கோரவலியை, ஏழைக்  குடும்பத்தை  அது  அழுத்தும்  பாரத்தை  விரும்பி  முதுகில் ஏற்றிக்கொண்ட கோடன கோடி வறிய பிஞ்சுக் கரிகாலர்களின் பிரதிநிதி. தம்பி ப்ரியா கார்த்தி இரண்டு முறை அவனைப் பற்றிச் சொன்னபோது உள் வாங்கிக்கொண்ட அதிர்வு மிகக் கொடூரமான நிஜமாகி என் கண்முன்னே கடந்துபோகிறது. சிந்துபாத்தின் லைலா, சுண்டெலியண்ணன்,கதைகளில் வந்த குள்ள உருவங்கள் கொண்டுவந்து தந்த சிரிப்பை துடைத்து எரிந்து கண்ணீரைக் கொட்டி விட்டுப் போகிற குழந்தைத் தொழிலாளி அவன். நிகழ் தொலைக்காட்சி பாடல்போட்டிகளில் புருவத்தை உயரவைத்த சிறுவர்கள் குளீரூட்டப்பட்ட ஹைகிளாஸ் குழந்தைத் தொழிலாளிகள் என்றால் இவன் அடித்தட்டுக்குப் பிரதிநிதி.

அப்பா ஒரு மண்பானை செய்யும் தொழிலாளியாக இருந்திருக்கலாம்.அது அழிந்து போனபிறகு அவர் தன்னை புரோட்டாக் கடைகளுக்கு அடுப்பு வடிவமைத்து செய்துதரும் மலிவு விலை எஞ்சீனியர் ஆக தகவமைத்துக் கொண்டார்.அந்த வேலை தவிர வேறு ஏதும் தெரியாத அவருக்கு அப்படியே ஏதும் கிடைத்தாலும் அந்தக் குடும்பத்தின் வயிறு நிறைக்கப் போதாது. வயிறு அவர்களுக்கு கடலை விட ஆழமானது, அகலமானது, நீளமானது. விளையாட்டு வண்டி மாடுகள் வைத்துக் கொண்டு தன் சகாக்களோடு அற்புத உலகத்தில் பயணிக்க வேண்டிய கருப்பசாமி அதைப் பறிகொடுத்துவிட்டு நிஜ மாட்டுவண்டியோடும் வெறித்த பார்வையோடும் பயணிக்கும் குட்டி உழைப்பாளி ஆனான். ஒரு அக்கா ரெண்டு தம்பிகளுக்கு இடையில் பிறந்த கருப்பசாமி வண்டிமாடு பத்துகிற நுட்பக்காரனாக மாறி மூன்று வருடமாகிறதாம். கொடிது கொடிது இளமையில் வறுமை.

வைப்பாற்றுக் கரையில் முளைத்துக் கிடக்கும் பல உழைப்பாளிகளின் ஒருபத்திக் குடிசைகளின் வரிசையில் கருப்பசாமிக்கும் ஒரு கூடு இருக்கிறது. அதுவும் கூடச் சின்ன சைசில் இருந்தது இன்னும் கூடுதல் விசாரத்தை உண்டாக்கியது. அந்த வீட்டினுள்ளே கூட இப்போது ஒரு வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டி இருக்கிறது. அதன் எதிரே உட்கார்ந்து கொண்டு நடிகர் விஜய் தன் மகனோடு சேர்ந்து நடனமாடுகிற நா அடிச்சா தாங்க மாட்டே என்னும் சினிமாப்பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள் அவனது மூத்த சகோதரி.மூன்றாவது தலைமுறை தயாரான நிம்மதியில் தமிழ்ச்சினிமாவும் சந்திரசேகரன் குடும்பமும் நிம்மதியாக இருக்கிறது. கருப்பசாமியின் குடும்பம் தலைமுறை தலைமுறைக்கும் மீளமுடியாத படுகுழிக்குள் இருந்து அதைப்பார்த்து ஆராவாரிக்கிறது. இந்த அரசும் அதன் கடந்த கால மற்றும் எதிர்காலத் தலைவர்களை உற்பத்தி செய்யும் சினிமாவும் சேர்ந்து வலிதெரியாமல்  சமூகத்தின் மேல் அடித்த ஊமை அடி இது.

அவளிடம் கருப்பசாமி இருக்கும் இடம் கேட்டுத் தேடி வெங்கடாசலபுரத்துக்குப் போனோம். நேற்று தமிழர் திருநாளில்லையா அதனால் அந்த ஊரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் விளையாட்டுப் போட்டிகள் நடத்திக் கொண்டிருந்தது.  இந்த சமூகம் தொலைத்த விலையாட்டுக்களை மீட்டெடுக்கப் புறப்பட்டு அந்த அமைப்பும் கூட இசை நாற்காலி,கரண்டி எலுமிச்சை,நூல் கோர்த்தல் போன்ற ஏமாற்று வேலைகளை கொண்டாடிக் கொண்டிருந்தது.என்ன செய்ய இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரையாம்.ஊரின் ஓரத்தில் ஒரு புரோட்டாக்கடை அதன் உரிமையாளர் ஒரு முன்னாள் விவசாயி.அவரது வாரிசும் சிப்பந்தியுமான ஒரே மகன். ஒட்டுமொத்த குடும்ப உழைப்பாலே. டீக்கடையாக இருந்ததை புரோட்டாக்கடையாக உயர்த்துகிறார்கள்.

நான் தம்பி கார்த்தி தம்பி பாலு மூவரும் போனோதை அங்கிருந்த சூழல் கவனிக்கிறது அந்தக்கருப்பசாமி மண்ணை தண்ணீர் ஊற்றிக்குழைத்துக் கொண்டிருக்கிறான்.எதிரே அந்தச் சின்ன மாட்டுவண்டி. அதனருகே அந்தப் பிஞ்சு மாடு.ஒரு டீ சொல்லிவிட்டுக்காத்திருந்த அரை மனிநேரமும் அவனது முதுகில் வேர்வை  வடிய  வடிய ஈடுபாட்டோடு  மண்வெட்டியச்  சுழற்றுகிறான். வியர்வையை மறைக்கிறது கண்ணில் கோர்த்த நீர். அது அவனுக்கு எந்த உதவியும் செய்யப்போவதில்லை, அதனால் அது இயலாமையின் வெளிப்பாடாகிறது. டீக்கடைப்பெஞ்சில் ஆளும் கட்சிக்கரை வேட்டி உடுத்திய ரெண்டுபேர் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள அவனை அதட்டுகிறார்கள். 'டே அந்த கண்ணுக்குட்டி வெயில்ல எளைக்கில்ல பத்திக் கொண்டு போயி எனல்ல கட்றா'.மூன்று முறை திருப்பி,திருப்பிச் சொன்ன பின்னும் அவன் சட்டை செய்யவில்லை. பதினெட்டுப் பட்டிக்கும் நாட்டாமை வகிக்கும் தோரணையை அவன்மேல் வடியும் வேர்வையை சுண்டுவிரலால் உதறும் பாவனையில் புறந்தள்ளுகிறான். அவன் எதற்குப் பயப்படவேண்டும். மடியில் கணமில்லாதவன் வழியெங்கும் பயமில்லை. அவன் யாராய் மாறுவான்.

நண்பர்களே.குழந்தைகள் இந்த உலகத்தின் இளைய குறுத்து.அவர்களின் மனதும் உடலும் வெளிக்காற்றில் அலைய விடவேண்டும்.கல்லெத்தி முள்குத்தி நண்பனின் தோளில் கைபோட்டபடி உலகை தரிசிக்க அனுமதி வழங்கவேண்டும். அப்படி அணுமதி மறுக்கப்படுகிற குழந்தைகள் ஒருதலைப் பட்சமானவர்களாக மாற அநேக சாத்தியம் இருக்கிறது. பெரும்பணம் செலவழித்து தொலைக்காட்சிகளில் ஏற்றுவதன் மூலமும்,கஞ்சிக்கில்லாமல் தெருவில் அலையவிட்டு கொடுமைப்படுத்துவதின் மூலமும் சமூகம் இரண்டு வகையான சந்ததிகளை எதிரெதிர் நிறுத்துகிறது.நண்பர்களை,விளையாட்டை இழந்தவர்கள் என்னவாக மாறுவார்கள்.

இன்று மாட்டுப்பொங்கல்.
 
மனிதர்கள்,உழைப்பாளிகள்,விவசாயக்கூலிகள்,உதாசினப்படுத்தப்பட்ட

இந்தச்சூழலில்

அந்தச் சின்ன மாட்டையும்,அந்தச்சின்ன வாமனனையும் பார்க்க போகிறோம்.கரிசல் ஆவணப் படக்குழுமத்தோடு.

4 comments:

ஈரோடு கதிர் said...

என்னனு சொல்லட்டும் இந்த வலியான பதிவுக்கு...

ஒரு நாளில் எழுதித் தீராத சோகம் இது... அதே சமயம் நான் என்ன செய்து கிழிக்கப்போகிறேன் இதற்கு என்பதும் புலப்படவில்லை...

இருக்கும் சுகானுபவ உலகை விட்டு வெளியே வந்திட என்று துணிவு வருமோ

அன்புடன் அருணா said...

/அதைப்பாக்கிற எனக்கு உலக கணம் கனத்தது/
எனது மனமும்.

அம்பிகா said...

வலியை மட்டும் தரவில்லை; சிந்திக்கவும் வைக்கிற பதிவு.
அடுத்த தலைமுறையிலாவது இது மாறுமா, தெரியவில்லை.

498ஏ அப்பாவி said...

படிக்கும் ​​பொழு​தெ மனது வலிக்கின்றது... ​ஒரு பக்கம் ​செல்லம் என்ற ​பெயரில் அதிக பணம் ​கொடுத்து குழந்​தைக​ளை தறுத​லைகளாக்கின்றது ஒரு பணக்கார சமுகம் அ​தெசமயம் அடுத்த ​வே​லை கஞ்சிக்கில்லாமல் ​பள்ளி ​செல்ல​வேண்டிய பிஞ்சுகள் இது​போல் ​வே​லை​செய்கின்றது... என்று மாறும் என் சமுகம், என்று திருந்தும் ஒட்டுப்​பொறுக்கும் கள்ளநரி கூட்டம்...