31.3.10

ஆண்கள் போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள்..'அனோனிமா' - புத்தகவிமர்சனம்.

மழையும் வெயிலும் ஒரு சேர வந்ததைப்போல ஒரே நேரத்தில் இரண்டு பார்சல்கள் வந்தது.

ஒன்றில் தோழர் கே.வி.ஷைலஜாவின் மொழிபெயர்ப்பில் வந்த 'சூர்ப்பனகை',தோழர்.கேவி.ஜெயஸ்ரீ மொழிபெயர்த்த 'ஒற்றைக்கதவு'இந்த இரண்டு புத்தகங்களும் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த மலைக்க வைக்கும் மிக அரிய கதைகள் அடங்கியவை.அதை அடுத்த பதிவில் பேசலாம்.

இன்னொன்றில் இந்தக் காலாண்டுக்கான புதுவிசை.

'அனோனிமா'  மொழிபெயர்ப்பு பற்றி தோழர் ஆதவன் தீட்சண்யா எழுதிய புத்தக அறிமுகம் ஆண்கள் போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.ஒரு போர் தூரத்துப்பார்வைக்கு விருந்தாகிற சுவாரஸ்யமாக மட்டும் தெரிகிறது. போரோடு  சம்பந்தப்பட்டவர்களுக்கு சொல்லமுடியாத ரணங்களை நிறப்பி வைத்திருக்கிறது. அதுவும் குறிப்பாகப் பெண்களின் ரணம்.அவர்கள் பேச ஆரம்பித்துவிட்டால் வாயடைத்துப்போகும் செய்திகள் கோடிக்கணக்கில் புதைந்து கிடக்கலாம். அந்தப்புத்தக அறிமுகத்திலிருந்து சில பகுதிகள். 


//இரண்டாம் உலகப்போரில் கொல்லப்பட்ட சோவியத் மக்கள் மற்றும் படையினர் ஒவ்வொருவருக்கும் ஒருநிமிடம் அஞ்சலி செலுத்த விரும்புகிற ஒருவருக்கு தொடர்ந்து 38 ஆண்டுகள் தேவைப்படுமாம். போரின் மொத்த உயிரிழப்பு சுமார் ஐந்து கோடிப்பேர். அவர்களில் 3 கோடிப்பேர் சோவியத் யூனி யனைச் சேர்ந்தவர்கள். இது வெறும் உயிரிழப்பு பற்றிய தோராயமான கணக்குதான். பொருளிழப்பு, உளவியல் பாதிப்பு, அங்கவீனம் குறித்து யாதொரு கணக்கீடும் இதுகாறும் இறுதிப்படுத்தப்படவில்லை.

3.
அனோனிமா இந்த போர்ச்சூழலுக்கிடையே வாழ்ந்த ஒரு ஜெர்மானியள். 12 ஐரோப்பிய நாடுகளில் சுற்றித் திரிந்திருந்தா லும் பெர்லின் நகரத்தில் வாழ்வதே அவளுக்கு உவப்பானதாய் இருக்கிறது. அனாதைச்சிறுமி தெருவிலே அலைவதுதான் நியதி என்பதை தன்னளவில் மறுத்து சுயமரியாதையோடு வாழ்ந்து கொண்டிருந்தவள். ஹிட்லரின் படைகளை விரட்டி வந்த ரஷ்யப் படைகள் ஜெர்மனிக்குள்ளேயே நுழைந்துவிட்ட தையடுத்து நடந்த குண்டுவெடிப்பில் அவளது மூச்சுக்காற்றா லும் புத்தகங்கள் ஓவியங்களாலும் நிரம்பியிருந்த அவளது வீடு சிதறிப்போனது. அவளுக்கு சொந்தமென்று இருந்த எல்லா வற்றையுமே இழந்துவிட்டதால் கண்ணுக்குத் தெரிந்த எல்லா வற்றையுமே தனக்கு சொந்தமானவையென்று வரித்துக் கொண்டு ஒரு அன்னிய வீட்டின் நிலவறையில் பதுங்கி வாழும் சாமானியர்களில் ஒருத்தியாக அனோனிமா அறிமுகமாகிறாள் நமக்கு. இடையறாத குண்டுமழைக்கூடாக போர்ச்சூழலின் பதற்றங்களை, கவலைப்படுவதால் ஆகக்கூடியது எதுவு மில்லை என்பதால் ஒரு வேடிக்கை மனோபாவத்துடன் குறிப் பெழுதத் தொடங்குகிறாள். அவளது குறிப்புகள் யார் மீதுமான புகார்ப்பட்டியலாகவுமின்றி அன்றையச் சூழலை அதன் முழுப் பரிமாணத்தோடு ஒவ்வொரு தனிமனிதரும் எவ்வாறு எதிர் கொண்டனர் என்பதன் மனவோட்டமாக உருப்பெற்றுள்ளன.

யாருடைய அனுதாபத்தையும் கோரி நிற்காமல் மனதிற்குப்பட்டதை எழுதிச் செல்கிறாள். பின்னாளில் இக்குறிப்புகள் புத்தக மாக வெளியானபோது அது அவளது வாழ்க்கை மட்டுமல்ல, போர்ச்சூழலுக்குள் வாழநேரும் எவரொருவருக்குமானதுதான் என்கிற எளிய உண்மை அதில் பொதிந்திருப்பதைக் கண்டது உலகம். எனவே அவள் தனது தனித்தப் பெயரையும் அடையா ளத்தையும் துறந்து அனோனிமா ( முகம் மறைத்தவள்) என்று புத்தகத்துக்குத் தலைப்பிட்டது கவித்துவ உணர்விலல்ல.//

//குழந்தைப்போராளி சைனா கெய்ட்ரஸியும் அனோனிமாவும் இருவேறு பெண்களல்ல. ஒரேவகையான கொடுமைகளை வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு முகாம்களிலிருந்து பெற்றுக்கொள்ள நேரிட்டப் பெண்களின் மாதிரிப் படிமங்கள். 4.
ஸீக்ரிப்ட் லென்ஸ் எழுதிய நிரபராதிகளின் காலம் நாடகத்தின் கதாபாத்திரங்கள், ஒரு குற்றம் நிகழ்கிறபோது அதில் தனக்கு உடன்பாடில்லை என்று மறுப்புரைக்கவோ எதிர்க்கவோ முன் வராதவர்கள் அந்தக குற்றத்தின் இயல்பான பங்குதாரிகளா இல்லையா என்று ஓயாது வாதிட்டுக்கொள்வதைப் போலத்தான் அனோனிமாவும் அவளுடன் தங்கியிருப்பவர்களும் தர்க் கித்துக் கிடக்கிறார்கள். ஹிட்லர் என்ற போர்வெறியன் கையில் அதிகாரத்தைக் கொண்டு சேர்த்ததன் மூலம் அவனது எல்லா பழிபாவங்களிலும் தமக்கும் பங்கிருக்கிறது என்று உறுத்துகிற குற்றவுணர்ச்சியிலிருந்து விடுபடும் முயற்சியாகத்தான் ஹிட்லரின் சுயசரிதையான எனது போராட்டம் நூலை எரித்து வென்னீர் காய்ச்சுவதையும், ஹிட்லர் மீது நன்மதிப்பு கொண்டி ருக்கிற சீகிஸ்முண்ட் என்பவரை பைத்தியக்காரன் என விளிப்ப தையும் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஹிட்லரும் கோய பல்சும் வெற்றி அல்லது வீரமரணம் என்று ராணுவத்தை உசுப் பேற்றிக்கொண்டிருக்கும்போது எங்களுக்கு இறந்த வீரர்கள் தேவையில்லை உயிரோடிருக்கும் ஆண்களைத்தான் தேடுகி றோம்... என்று அனோனிமா எதிர்நிலை எடுப்பதற்கும் இந்த மனநிலையே காரணமாய் இருக்கும்.

வீரம், தியாகம் என்று தூண்டிவிடப்படும் உணர்ச்சிகளுக்கு பொருளேதுமிருக்கிறதா? எல்லோரையும் சாகக்கொடுத்து தியாகிகளாக்கிவிட்டு யாருக்கு எதை பெற்றுத்தரப் போகிறாய் என்று அவள் உள்ளுறையாய் வைக்கும் கேள்வி எல்லை கடந்து எங்கெங்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டியதாயிருக்கிறது. போர்முனைகளில் பின்வாங்கி தளர்நடையில் முகாம் திரும்பு கிற ஜவான்கள் மீது அவளுக்கு பரிதாபமே மிஞ்சுகிறது. யாரோ ஒருவனது விருப்பம்/ கனவுக்காக போரிட்டு மாள்வதற்கென்று தயாரிக்கப்பட்ட பொம்மைகள்/ இயந்திரங்கள் என்று தம்மையு ணராத ஜெர்மனி ராணுவத்தினரைப் பார்த்து ஆட்டம் முடிந்து விட்டது, இப்போது நீங்களும் தெருநாய்கள்தான் என்று பரிக சித்து ஒரு பெண் கூச்சலிடுவதை அனோனிமா தன் குறிப்பில் இடம்பெறச் செய்திருக்கிறாள். இந்தப் போரின் முடிவில் பல தோல்விகளோடு ஆண் என்ற பாலினத்தின் தோல்வியும் சேர்ந்தே இருக்கும் என்ற அனோனிமாவின் தீர்க்கவசனம் காலத்தை மீறி இன்றும் நிற்கிறது மடங்காமல். மற்றவர்களுக்காவது தமது பாரத்தை இறக்கிவைக்க கடவுள் என்ற கற்பிதம் இருந்தது. அதுவுற்றவள் அனோனிமா.

அவள் ஒருபோதும் ஜெபித்தவள் இல்லை. மகிழ்ச்சியான தருணங்க ளில் ஜெபிக்காமல் இருந்துவிட்டு துன்பவேளையில் ஜெபிப்பது பிச்சைக் கேட்பது போலாகும் என்ற சுயமரியாதையின் உந்துத லில் அவள் இனியும்கூட கடவுளிடம் மன்றாடுவதில்லை என்ற தெளிவுடன் இருந்தாள். அன்னிய ராணுவத்திடம் அகப்பட்டுக் கொண்டோமே என்று அழுதுபுரண்டு ஆகப்போவது எதுவு மில்லை என்பதையும் அவளுக்கு சூழல் விளக்கி விட்டிருந் தது. இடையறாத குண்டுமழைக்கிடையில் வாழும் ஒவ்வொரு நாளும் மரணத்தை வெற்றி கொண்ட நாள் என்றே கருதுகி றாள். அடுத்தநாள் என்பது நிச்சயமற்றிருந்த நிலையில் நாளை நடக்கப்போவது பற்றி கவலைப்படுவதைவிட இன்று முடிந்த மட்டிலும் வாழ்ந்து பார்த்துவிடவேண்டும் என்ற முடிவுக்கு வந்தவிட்டிருந்ததால், வருவது எதுவோ அதற்கு காத்திருப் பதே உசிதம் என்ற எளிய எல்லையை தனக்கானதாய் வரித்துக் கொண்டிருந்தாள். அதற்காக அவள் தன் முன்னே நிகழ்ந்த வற்றை எல்லாம் உணர்வுத் துடிப்பற்ற கண்ணாடி போல் பளபளக்கும் கண்களால் வெறுமனே வேடிக்கை பார்த்துவிட்டு நகர்ந்தாள் என்று குறுக்கிப் புரிந்துகொள்ள வேண்டியதில்லை.

எதுவும் செய்யவியலாத கையறு நிலையிலுள்ள மக்கள் சூழ லையும் அதற்கு காரணமானவர்களையும் பகடி செய்து கடக்க முயற்சிப்பது உலகளாவிய நியதிபோலும். அனோனிமா அதைத்தான் செய்கிறாள். தங்களில் இன்னும் (ரஷ்ய ராணுவத்தினரால்) கன்னி கழிக்கப்படாதவளாய் இருப்பது யார் என்று பெண்களுக்குள் நடக்கும் விவாதங்கள் அவளுக்கு சிரிப் பையே வரவழைக்கிறது. கத்தோலிக்க கன்னியாஸ்திரி ஒருத்தி 24முறை வல்லுறவுக்காளானாள் என்ற பத்திரிகைச் செய்தியைக் கேள்விப்பட்டதும், இதையெல்லாம் அருகிலிருந்து யார்தான் கிரமமாக எண்ணுகின்றார்களோ என்று கேலி செய்கிறாள்.

பேரக்குழந்தைகளைக் கொண்ட மூதாட்டியைக்கூட வேட்டை யாடும் வக்கிரம் தலைவிரித்தாடிய நிலையில் மாதவிலக்கடைந் தவள் போல பஞ்சுத்தக்கையை எப்போதும் பிறப்புறுப்பில் அடைத்துக்கொண்டு திரிவது, சமையலறையின் மேற்கூரைக் கும் சீலிங்குக்கும் இடைப்பட்ட பொந்தில் இரவும் பகலும் ஒளிந்து கிடந்து கன்னியாகவே நீடிக்க முயற்சிப்பது போன்ற தற்காப்பு முயற்சிகளால் பயனேதும் கிட்டப்போவதில்லை என்பதே அனோனிமாவின் கணிப்பு. உண்மையும்கூட அது தான். இரண்டு பெண்கள் சந்தித்துக்கொண்டால் நீ எத்தனை முறை (வல்லுறவுக்காளானாய்)... என்று பரஸ்பரம் விசாரித்து ஆறுதல்படுத்திக் கொள்ளுமளவுக்கு நிலை மட்டுமீறி போய்க் கொண்டிருந்தது. அனோனிமாவும் தப்பவில்லை.

பெர்லினுக்குள் நிலைகொள்ளும் ரஷ்யப்படைகள் மக்களின் வீடுகளை ராணுவக் குடியிருப்புகளாக ஆக்கிரமித்ததிலிருந்தே எல்லாப் பிரச்னைகளும் தொடங்கியதாக அனோனிமா பழி போட வரவில்லை. அல்லது, பாசிசத்தை வீழ்த்தி மனித குலத்தை காப்பாற்றிய செஞ்சேனையின் வரலாற்றுப் பாத்தி ரத்தை அவதூறுகளால் நிரப்பி சிறுமைப்படுத்தவும் அவள் முயற்சிக்கவில்லை.தொடக்கத்தில் கேள்விப்பட்டிருந்ததைவிட வும் நற்தன்மை கொண்டவர்களாக, சினேகப்பூர்வமாக உரை யாடக் கூடியவர்களாகவே ரஷ்யப்படையினரைக் காண்கிறாள். அத்துமீறி நடக்கத் துணிகிறவர்களை எச்சரித்தும் மிரட்டியும் பெர்லின் பெண்களைப் பாதுகாத்து அனுப்பியவர்களும் ரஷ்ய ராணுவத்தில் இருப்பதை அவள் கவனமாக பதிவு செய்திருக்கி றாள். பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளக்கூடாது என்பதற் காக ஸ்டாலின் விதித்திருந்த ஆணை திரும்பத்திரும்ப நினை வூட்டப்படுகிறது. ஆனால் தம் வீட்டுப்பெண்களுக்கு ஜெர்மனி ராணுவம் இழைத்தக் கொடுமைகளுக்கு பழிதீர்த்தேயாக வேண்டும் என்ற வன்மத்தில் அந்த ஆணை தொடர்ந்து மீறப் பட்டுக் கொண்டேயிருந்தது. அனோனிமாவை மூவர் சூறை யாடிக் கொண்டிருக்கும்போது அங்குவந்த ரஷ்ய ராணுவப் பெண்ணொருத்தி ஒரு கேளிக்கையை கண்டு களிப்பது போல் ரசித்துப்போகுமளவுக்கு பழியுணர்ச்சி தளும்பிக் கொண்டிருந் தது அவர்களிடம்.

ஒவ்வொரு வீட்டின் பின்புறக்கதவையும் இரவுபகல் பாராமல் இடித்துத் திறந்து உள்ளே நுழையும் முயற்சிகள் தொடர்கதை யாகிப் போனது. அவமானம், வெட்கம், பாலியல் பலாத்காரம், அருவருப்பு என்பவையெல்லாம் பொருளற்ற வெறுஞ்சொற் களாக இழிந்துகிடந்தன. அவள் விரைத்துக் கிடந்தாள். மனரீதி யான இறுக்கம் உடல் இறுக்கத்தையும் கொண்டு வந்து சேர்த்த தாக ஓரிடத்தில் குமுறுகிறாள்.

திரும்பத்திரும்ப தன்மீது கூட்டங்கூட்டமாக வந்து மொய்க்கி றவர்களைப் பார்த்து பதறிப்போன அனோனிமா எல்லோரும் வேண்டாம், ஒரு ஆள் - நீ மட்டும் என்று இரந்து நிற்கும் நிலைக்குத் தாழ வேண்டியிருக்கிறது. அவளது வேண்டுதலுக்கு இரங்குவார் யாருமில்லை அங்கு. அடுத்தடுத்த நாட்களும் இதேநிலைதான். ராணுவ பூட்சின் அடியில் ஒட்டியிருக்கும் அழுக்கு போலாகிவிட்ட அவளிடம் கர்ப்பந்தரித்து விடு வாயோ என்று ஒருத்தி கேட்ட போது பலர் நடமாடும் பாதை யில் புல் முளைக்காது... என்று பதிலிறுத்து தன்னைத்தானே தேற்றிக் கொள்கிறாள். ஆனாலும் ராணுவத்தினரின் வல்லுற வால் தங்கிய கர்ப்பத்தை கலைப்பதற்கும் பால்வினை நோய் களுக்கு சிகிச்சையளிக்கும் தனியாக வைத்தியசாலைகளை நிறுவத்தான் வேண்டியிருந்தது அங்கு. இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது வன்புணர்வுக்கு ஆளாகி கர்ப்பந்தரித்த வர்கள் எல்லைப்புறங்களிலும் இருநாட்டின் தலைநகரங்களி லும் மனநிலை சிதைந்து அனாதைகளாக உழன்று திரிந்ததை நினைவூட்டும் கொடூரங்கள் அனோனிமாவிலும் துருத்திக் கொண்டு பதற்றமடையவைக்கின்றன.

பாதுகாப்பற்ற இரையாக இனி நீடிக்கமுடியாது எனப் புரிந்து கொண்ட அனோனிமா பலம் பொருந்திய ஓநாயை அடக்கிப் பழக்கப்படுத்தி மற்றைய ஓநாய்களை விரட்டியடிக்கும் தற் காப்பு உத்தியைக் கையாள்கிறாள். இதற்காக தன்னிடம் வரும் ரஷ்ய ராணுவத்தினரில் உயர் அதிகாரத்தில் இருக்கும் லெப்டி னன்ட், மேஜர் போன்றவர்களுக்கு மட்டுமே உரிமையுள்ளவ ளாக அவள் தன்னை மாற்றிக் கொள்கிறாள். அதிகாரமிக்கவர் களுக்கு அணுக்கமானவள் என்பதால் நிலவும் உணவுத் தட்டுப் பாட்டிலிருந்து அவளால் தப்பித்துக் கொள்ள முடிகிறது. ஒரு அதிகாரி வேறிடத்திற்கு பெயர்ந்து சென்று விடுகிறபோது வேறொரு புதிய மேஜரை தன் பாதுகாப்புக்காகவும் உணவுத் தேவைக்காகவும் எதிர்பார்க்க வேண்டியவளாகிறாள்.

அனோனிமாவைப்போலவே ஒவ்வொரு பெண்ணும் சூழ லுக்குப் பணிந்து பிழைத்திருக்க விதிக்கப்பட்டவர்களாயிருந் தனர். அமைதிக்காலத்தில் யாரோ ஒரு பொறுக்கி ஒரு பெண்ணை வன்புணர்வு செய்திருந்தால் ஆர்ப்பாட்டம்- காவல் நிலையத்தில் புகார்- கைது- விசாரணை- தண்டனை என்று என்னென்னவோ நடந்திருக்கும். ஆனால் போர்க்காலம் என்ற ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு.... ம்... எல்லா அத்துமீறல் களும் அட்டூழியங்களும் போரின் ஒருபகுதியென கணக்குத் தீர்ப்பதைத்தான் உலகம் கண்டது. சண்டைக்கு சிங்காரமில்லை என்று நம்மூரில் சொல்வதைப்போல எல்லா கொலைகளும் வன் புணர்வுகளும் கருச்சிதைப்புகளும் பாலியல் வக்கிரங்களும் கொள்ளையடிப்புகளும் யுத்தமென்றால் இதெல்லாம் நடக்கும் தானே என்று உதட்டைப் பிதுக்கி கடந்துபோக உலகம் பழக்கி யிருக்கிறது. ஆனால் அனோனிமா இந்த பொதுப்புத்திக்கு எதிர்த்திசையில் மறித்து நிற்கிறாள். ஏனெனில் அவள் யுத்தத் தின் பார்வையாளராகவோ பங்கெடுப்பாளராகவோ இருந்தி ருக்கவில்லை. யுத்தம் அவள்மீதேதான் நடந்து முடிந்திருக்கி றது. கைப்பற்றப்படும் நாடுகளின் பெண்களது யோனிக்குள் நுழைந்த வெளியேறும் ஆணுறுப்புகளின் எண்ணிக்கையினால் அளவிடப்படுகிற யுத்தங்களின் வெற்றியை பரிகாசம் செய்த படி மருகிக்கிடக்கும் கோடானகோடி பெண்களின் ஒற்றைப் படிமமாக அவள் வரலாற்றின் நெடுகிலும் காட்சியளிக்கிறாள்.

தூயஇனம், கலப்பில்லாத ரத்தம், இனமானம், ஆளப்பிறந்தவர் கள் என்று முன்பு அலட்டிக் கொண்டிருந்த ஜெர்மானிய ஆண் களுக்கு தம்வீட்டுப் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகளை யாருக்கோ நடப்பதுபோல அமைதியுடன் பார்த்துக் கொண்டி ருப்பதன்றி வேறொரு வாய்ப்பும் அங்கு இருந்திருக்கவில்லை. பெண்கள் குழந்தை பெற்றுத்தள்ளும் வேலையை மட்டுமே செய்துகொண்டிருந்தால் போதும், தேவைப்பட்டால் அதற்காக தமது படையினரில் வலுவாக உள்ளவர்களை பொலிகாளை யாக அனுப்பிவைக்கத் தயார் என்ற ஹிட்லரின் தளபதிகளது ஆணவத்தை எதிர்த்து ஒரு வார்த்தையும் பேசாதிருந்த அவர் கள் அப்போதே தம்வீட்டுப் பெண்களை ஏறிட்டுப் பார்ப்பதற் கான யோக்யதாம்சத்தை இழந்துவிட்டிருந்தார்கள்.

ஆனாலும் இவ்வளவுக்குப் பிறகும் தம்வீட்டுப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளானதை, தற்காத்துக் கொள்ளத் தெரியாததால் பெண்கள் தமக்குத்தாமே வருவித்துக்கொண்ட கேடாகத்தான் அவர்களால் பார்க்க முடிந்ததேயன்றி யுத்தத் தின் தண்டனையாக பார்க்க முடியவில்லை. அந்த தண்ட னையை வலிந்து ரஷ்யாவுக்குப் போய் இழுத்துவந்த ஹிட்ல ரின் குற்றமாகப் பார்க்க முடியாதளவுக்கு ஜெர்மானிய ஆண் கள் அவரவர் பங்கிற்கு கொஞ்சங்கொஞ்சம் ஹிட்லராக இருந் தனர். அனோனிமாவின் காதலன் கெயர்ட்டும் இதற்கு விதி விலக்கானவல்ல. எப்பேர்ப்பட்ட நிலையிலும் தற்காத்து - புனிதம்(?) கெடாமல் தனக்காக காத்திருக்க வேண்டிய அனோ னிமா இப்படி ரஷ்ய ராணுவத்தினரிடம் சிக்கி சீரழிந்திருப்பதை அறிந்து அவளைவிட்டு வெளியேறிப் போகிறான் அந்த மூடன். மானஸ்தி என்று அவன் வைத்திருக்கும் எல்லா மதிப் பீடுகளையும் புறந்தள்ளி அடுத்த நொடியின் வாழ்க்கையை எதிர்கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறாள் அனோனிமா. அனோனிமா இப்படி தன்பாடுகளை மட்டுமே புலம்பியவிக்கி றவளாக இல்லை என்பதுதான் அவளை ஒரு முன்மாதிரிப் பெண்ணாக நம்மை உணரவைக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக் கும் எதுவும் பொதுவிலில்லை என்பதே அவள் பார்வையாய் இருக்கிறது. எதிரிப்படையினர் வந்தால் குடித்து மயங்கி பல வீனமாகிச் சாகட்டும் என்பதற்காக மதுவடிச்சாலைகளை அழிக்காமல் விட்டுச் செல்கிறது ஜெர்மனி ராணுவம். இது ஆண்களைப் பற்றிய ஆண்களின் பார்வை என்கிறாள் அனோ னிமா.உண்மையில் அவ்வாறு விட்டுச் செல்லப்படும் மதுவைக் குடித்து மூர்க்கமேறி வன்முறை இயந்திரமாக பெண்களின் மீது பாய்வதற்கே வழிவகுக்கிறது என்பது இந்த ஆண்களுக்குப் புரிவதேயில்லை என்று குற்றம்சாட்டுகிறாள். பிரிதொரு இடத் தில் உணவுத் தட்டுப்பாடு பற்றி பேசுகிறாள்.

கணவன் சாப்பிட்ட பிறகு எஞ்சியதை சாப்பிடுகிற நம்மூர் பதி விரதாத்தனம் அங்கும் வேறு வடிவிலிருக்கிறதோ என்னவோ அனோனிமா எரிச்சலடைந்து இப்படிச் சொல்கிறாள்- கர்ப்பத்திலிருக்கும் குழந்தை தமக்கான போஷாக்கை தாயிடமிருந்தே பெறுகிறது... தந்தையைப் பற்றி அது அறிந்திருப்பதில்லை. ஆனாலும் பாருங்கள் அந்த நாடு தந்தையர் நாடு என்றே ஆரவாரத்தோடு சொல்லப்பட்டு வந்தது. எஸ்டேட் தொழிலாளர்களை இழிவாக விளித்து கட்டளை பிறப்பிக்கவும், அவர்கள் எதைக் கேட்டாலும் முரட்டடியாக மறுப்பதற்கும் தேவையான சொற்களைக் கொண்ட கூலித் தமிழ் கையேடு ஒன்றை வெள்ளைக்கார துரைமார்களுக்கு புலவர் பெருமக்கள் தொகுத்தளித்தனர். தோற்கடிக்கப்பட்ட வர்களை கட்டளைகள் வழியாகவே கையாளும் இந்த மனப் பாங்கு நுட்பமானது. ரஷ்ய ராணுவத்தினருக்கும் வழங்கப்படும் டொச்மொழிக் கையேட்டில் உள்ள பதங்கள் அவ்வளவும் மக்களை நோக்கி பிறப்பிப்பதற்குரிய ராணுவக்கட்டளைகள். மக்களின் இரைஞ்சுதல்களையும் தேவைகளையும் விளங்க வைப்பதற்கான ஒரு சொல்லும் அதிலில்லை. ஆயுதத்தின் ஒருபகுதியாக அங்கு மொழியும் செயல்படுவதை மிகுந்த எள்ளலுடன் அம்பலப்படுத்துகிறாள் அனோனிமா.//

30.3.10

மௌனத்துச் சலனங்கள்.

வேஷ்டி சட்டையுடன் கிளம்பும்போது இருப்பா என்றென் அம்மா திருஷ்டி இட்டாள்.புடவைக்கு நிகரான லவிக்கை இல்லாத பொருந்தாமை இடற வந்து வண்டியேறினாள். பீடத்தின் முன்பு ரெண்டு பத்திக் குச்சியைப்
பொருத்தி வைத்து விட்டு விழுந்து  நமஸ்கரித்தாள். பக்கத்து சாமிக்கும் பொருத்தி வைத்தாள்.அவள் என்னைக் கும்பிடச் சொல்லவில்லை. நானும் கேலியெதும் சொல்லவில்லை. சுமூகமான கல்யாண நாள்.

அவள் பணப் பையிலிருந்து பத்து ரூபாய் எடுத்து உண்டியலிட்டாள். என்னிடமும் கொடுத்து போடச்சொன்னாள்.உண்டியல் துவாரத்திற்குள் ரூபாய் நோட்டைத் திணிக்கும் போது அந்தப் பார்வை என்னை அறுத்தது.
அழுக்கும்,பசியும் அப்பிய முகம். வார்த்தைகளற்ற வாய்,கூப்பாடு போடுகிற வயிறு. நுழைத்த தாளை மீள உறுவினேன்.'இந்த,.. என்ன இன்னைக்கூ கிறுக்குப் பிடிச்சிருச்சா?' நான் அவனைக் காட்டினேன்.

வண்டியில் போய் ஆறு இட்லி ஒரு ஆம்லெட் பொட்டலம் வாங்கிக் கொண்டுவந்து அவன் முகத்துக்கு நேரே நீட்டினேன்.சலனமற்று வாங்கிக் கொண்டான் நான் எதிர்பார்த்த முகமலர்ச்சி தென்படவில்லை. ஒதுங்கிப் போய் நாலு இட்லி சாப்பிட்டான். பின் தயங்கி அப்படியே வைத்து விட்டான், அழுதிருக்க வேண்டும். நகர்ந்து போனான். ஒரு நாய் வந்தது. பிறகான நாட்களில் நாய் இருந்தது. அவனில்லை.

நாம் என்னசெய்யப் போகிறோம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் கடும் குடிநீர்ப் பற்றாக்குறையால் அவதிப்படும் பொதுமக்கள் காலிக்  குடங்களுடன்  முற்றுகை.  இப்படியொரு செய்தி தீக்கதிர் நாளிதழில் வெளியானது. ஆனால் அது கட்டாயம் இருட்டடிக் கப்பட்டு விடும். பிரதான பத்திரிகைகள்,பிரதான காட்சி ஊடகங்கள் தங்களுக்கான செய்திகளின் தேடலை நித்யானந்தாக்களிடமும் நடிகைகளிடமும் மையப்படுத்தியிருக்கும்.

அதே வாடிப்பட்டியில் உள்ள சிறியதும் பெரியதுமான பெட்டிக்கடைதொடங்கி உணவு விடுதிவரையில் பெப்சி.கொக்கக்கோலா நிறுவணங்களின் பாட்டில்கள் லாரி லாரியாய் வந்திங்குகிறது.வீட்டு வாசலில் ஒரு கேன் முப்பது ரூபாய்க்கு சுத்திகரிக்கப்பட்ட நீர் கிடைக்கிறது.உள்நாட்டுத் தனியார்களுக்கும்,வெளிநாட்டுத் தனியார்களுக்கும், கிடைக்கும் இந்த தண்ணீர் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் அரசாங்கத்துக்குக் கிடைக்காமல் போவது தான் சூட்சுமம்.

பெப்சி நிறுவணத்தின் வியாபார மேலாளர் தங்கள் நிறுவணத்துக்கு போட்டியாக இந்திய நாட்டின் நீர்நிலைகளைத்தான் சுட்டிக்காட்டுகிறார்.அந்த இறுமாப்புப் பேட்டியை நமது வீரஞ்செறிந்த மக்கள் கண்டு கொள்ளாமல் கடந்து போகிறார்கள் என்பது வேதனைக்குரியதாகிறது. காற்றும்,வானும், கடலும்,நீரும் பொதுவிலில்லை என்பதை மெல்ல மெல்ல சமூகம் ஏற்றுக் கொள்ளத் தயாரகிவிட்டது.வல்லான் பொருள் குவிக்கும் சூத்திரங்கள் விளம்பர வெளிச்சத்தில் களைகட்டுகிறது.நீருக்காகப் போர்மூளுமாம்.அப்போது கூட நமக்கு தொலைக்காட்சிகள் வழியே மானாடும் மயிலாடும்.

27.3.10

காடுமேடுகளில் வியர்வையோடு காய்ந்துகிடக்கும், கதைகளின் வற்றாத சுனை. ( தொடர் பதிவு 3 )

கிருஷ்ணகுமார் ஒரு ஆபத்தான கதை சொல்லி.சிகரெட் குடிப்பதற்கான கதைகள் சொல்லும்போது எவ்வளவு திடமான மனிதரையும் புகையின் நெடி இழுத்துக் கொண்டு போய்விடும்.சிவாஜி கணேசனுக்குப் பிறகு சிகரெட்டை ஒரு ஜிலேபியைச் சாப்பிடுவது போல ருசித்துச் சாப்பிடுகிறவர் கிருஷ்ணகுமார். அதே ஆசாமி சலிப்பிடித்து, தொண்டை கெட்டுபோய், மருத்துவர் ஆலோசனைப்படி சிகெரெட்டை நிறுத்தியதும் அப்படியே ப்ளேட்டை மாத்திப்போட்டு கதை சொல்லுவார்.'முதல் முதலாய் என் மனைவியின் தோசை ருசியை இந்த பாழாய்ப்போன சிகரெட்டை விட்டபின்னர் தான் உணர்ந்தேன்' என்று சொல்லும்போது எல்லோரும் சிகரெட்டை நிறுத்தத் தீர்மாணமாகிவிடுவோம்.எனக்குத் தெரிந்து மேடைப் பேச்சை ஒரு நிகழ் கலைபோல நடத்துகிற மனிதர் கிருஷ்ணகுமார் தான்.அந்தக் காலத்தில் அவரோடு ஊர் ஊராய் பயணம் போய் முன்வரிசையில் உட்கார்ந்து அவரது பேச்சைக் கேட்டோ ம் நானும் மாதுவும்.கேட்கிற போதெல்லாம் அழ வைக்கும் சமூக கதைகள் அவரிடம் ஏராளம் இருக்கும்.

அதே போல அவர் திரும்பி வரும்போது  ஜோல்னாப் பையில் ஏராளமான புத்தகங்கள் புதையலாய் கிடக்கும். அவரது மகுடி வார்த்தைகள் எழுத்துக்களின் மகத்துவங்களைச் சொல்லி ஈர்க்கும். 42 பி எல் எஃப்  தெருவின் பல இரவுகள் விளக்கு அணையாமல் எரியும், எழுத்துக்களுக்கு உயிர்கொடுத்தபடி. நானும் மாதுவும் மாற்றி மாற்றிப் படித்துவிட்டு அவரிடம் அனுபவங்களாகத் திருப்பித் தருவோம்.அவர் படிப்பதற்கு முன்னாலே நாங்கள் படித்துவிடுதாகப் பொய்க் கோபம் கொள்வார்.இருந்தும் எங்களுக்கே முதல் படையலாய் புத்தகங்களை திரும்பத் திரும்பத் படைப்பார். அங்குதான்,தாய், அன்னாகரீனா, அன்னைவயல், அம்மாவந்தாள், மோகமுள், நினைவுகள் அழிவதில்லை, கோபல்லகிராமம், கதவு,வேட்டி,ஏழுதலைமுறைகள், புளியமரத்தின் கதை, ஜேஜே சிலகுறிப்புகள், சூரியதீபன், தனிகைச்செல்வன், எஸ்ஏபி, கந்தர்வன்,  கோணங்கி, தமிழ்செல்வன், சுந்தரராமசாமி,பழய்ய முற்போக்கு எழுத்தாளன் ஜெயமோகன், பூமணி, மேலாண்மை பொன்னுச்சாமி,
மாதவராஜ், வண்ணநிலவனின் கடபுறத்தில் வரும் பிலோமிக்குட்டி, சாமிதாஸ்,ரஞ்சி,பவுலுப்பாட்டா,மணப்பாடு,கருவாடு,கடலிறைச்சல்.  எல்லாம் எழுத்தாகவும் நிஜமாகவும் குவிந்து கிடந்தார்கள். இப்போது நினைத்தாலும் மலைப்பாய் இருக்கிற புத்தகக் குவியல்களை நான் ஓசியிலே படித்தேன் என்பதைப் பெருமையோடு சொல்லவைத்த பெருங்கதையாளன் கிருஷ்ணகுமார்.

தோழர் எஸ். ஏ. பி  அப்போது விருதுநகர் மாவட்ட சிபிஎம் கட்சிச்  செயலாளராக இருந்தார்.ஆனால் நூற்றுக் கணக்கான இரவுநேரங்களில் எங்களுக்கு கதை சொல்லுகிற வாலிபத் தாத்தாவாக இருந்தார். ஆறடிக்கும் மேலான அவரது ஆஜானுபாகம் சிரிப்புக் கதைகள் சொல்லும்போது  சுருங்கிப் போகும். மாப்பஸானையும், ராகுல்ஜியையையும், பிரேம்சந்தையும், கிருஷ்ணன் நம்பியையும் எங்களுக்கு அறிமுகப்படுத்திய மொழிபெயர்ப்பாளர் தோழர்
எஸ் ஏ பி. எனது முதல் கதையான 'பூச்சிக்கிழவியை' பிரசுரித்து உச்சி முகர்ந்த பெரியதகப்பன்  தோழர் எஸ்.ஏ.பி.
  
அங்குதான் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி  கண்களை உருட்டி,கைகளை ஆட்டி,குரலை மாற்றிப் பேசிக் கொண்டே கதைகளோடு வருவார். நாரணம்மாவை  விடவும்  உலுக்குகிற வறுமைக் கதைகள், மிகத்தரமான வெள்ளந்திச்சிரிப்புகளைச் சொல்லும் செந்தட்டிக்காளை கதைகள் எல்லாமே எங்களுக்கு வாய் மொழியாகச் சொன்ன பிறகே அச்சுக்கு வரும். சொல்லுகிற விஷயங்கள்,எப்போதும் சமூகம் சார்ந்ததாகவே இருக்கும்.சமூக அநீதிகளை அப்படியே ஏற்றுக்கொள்கிற விதி வயப்பட்டவர்களாக இல்லாமல் அதன்மேல் கேள்விகளை வைக்கிற இருவராக எங்களை மாற்றியது அந்த கதைப் பட்டறை 42 பி.எல் எஃப் தெரு.

அதிலிருந்து முதல் மண்குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு அதன் குளிர்சியோடு  தனது கதைகளுக்குள் கூட்டிப்போன என் தோழன் மாது,ஒரு போராட்டத்தை மெல்லிய உணர்வுகளைச் சொல்லுவதன் மூலம் அனு குண்டைவிட அதிக உக்கிரத்தைக் கொண்டு வரலாம் என்று தமிழ் கதைப் பரப்புக்குச் சொன்னவன். நான்முதல் கல்லை எறிந்து விட்டேன் இதோ உனக்கானது, எடுத்து வீசு என்று பாதை செய்து கொடுத்தமாது. பெற்ற தாயோடும்,கட்டிய மனைவியோடும் மல்லுக்கட்டி தோளில் கைபோடுகிற நண்பன் இருந்தால்எதையும் வெற்றிகொள்ளலாம் என்று உலகுக்கு சொல்லிக் கொண்டிருக்கிற கதைகள் அவனுடையது.மிகுந்த கூச்ச சுபாவத்தோடு இருந்த அவனே மிகச்சிறந்த கதை சொல்லியாக மாறினான்.மாது ஒரு சாதாரண விஷயத்தைக் கூட நீங்க சொல்லிக் கேக்கனும் என்று எங்கள் தோழர் தனுஷ்கோடி ராமசாமி புளகாங்கிதப்படும் மாதுவின் தோளில் கைபோட்டபடி இன்னும் சின்னப் பிள்ளைகள் போல அலைகிறோம்.நான் ஒரு எழுத்தாளன் ஆனதும், ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டதும் எனக்கே இன்னும் ஆச்சரியமாக இருக்கிறதுஅவனது அருகாமை போல.அதே போலவே இதோ இந்த வலை.கம்ப்யூட்டர் என்றால் என்னவெனத்தெரியாத என்னை ஒரு வலைப்பதிவராக மாற்றியதும். இங்கிருக்கிற உலகளாவிய கதை சொல்லிகளோடு  இணப்புக் கொடுத்ததுவும் அவனாலே ஆனது.

தங்களது பேச்சில் அநியாயத்துக்குச் சிரிப்புக்காட்டுகிறவர்கள் தமிழ்செல்வனும்,ஷாஜஹானும்.அதே போல உலுக்கி அழவைக்கிற கதைப்பாங்கும் நிறைந்த கதைசொல்லிகள். இன்னொருவர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா. தாட்சண்யமில்லாது இந்த ஜாதியக் கட்டுமானங்களின் மேல் குற்றம் சுமத்தும் அவரது எழுத்தை எல்லோரும் பிரமிப்பது போல நானும் பிரமித்தேன்.எள்ளல் வழி கதை சொல்லும் மொழி அவருடையது.கதைகளிலே தீராக் கோபத்தை,கட்டுரையை சேர்த்துக்கொடுக்கும் வல்லமை எழுத்து.எனக்கு எழுதவேண்டிய பல கருக்களை உருவாக்கித் தந்தது.

கதைகளை,எழுத்துக்களை,கலைகளை ஒருபோதும் சரஸ்வதி சொல்லிக்கொடுப்பதில்லை.ஒருவேளை சமூகத்திலிருந்து கிளம்பி வந்த சரஸ்வதி என்கிற  டீச்சரோ பாட்டியோ  சொல்லிக்  கொடுத் திருக்கலாம். அதுபோலவே  பிறவிக்கலைஞன் எவனும் இல்லை.கலைஞனை உருவாக் குகிற தட்ப வெப்பம் மக்களிடமிருந்தே கிடைக்கிறது. மக்களுக்கான நிறமாக்கும் பெரும்பதாகை எங்கள் தமுஎச. அங்கே என்னையும் மாதுவையும் வளர்த்தெடுத்த பல ஆயிரம் தோழர்கள் இருக்கிறார்கள்.புதிதாய் முளைக்கும் எழுத்துக்களைச்.சீராட்டுகிற தாயுள்ளம் கொண்ட தமுஎச எனக்கு அழியா நிறம்கொண்ட பல கதைகளைச் சொல்லிக் கொடுத்திருக்கிறது.இருபது வயதில் கம்யூனிஸ்டாக இல்லாதவன் முட்டாள்,நாற்பது வயதில் கம்யூனிஸ்டாக இருப்பவன் முட்டாள் என்கிற சந்தர்ப்பவாத பழமொழி ஒன்றுண்டு.

 இளமையோ முதுமையோ பொதுவைப்பேசாத கதைகள் உண்டா?

வெயிலானை,  கதிரை,ராகவனை, பாராவை,ஆடுமாடை, அருணாவை, அமித் தம்மாவை, என்னுடன் பிறப்பு  முல்லையை, லாவண்யாவை, தீபாவை, பத்மாவை,வித்யாவை.....இன்னும் சொல்லவேண்டிய மிகச்சிறந்த கதைசொல்லிகளின் வழியே என் தீராத கதைத் தேடல் தொடர்கிறது.

இந்தா பாருங்க இடையில் வந்து பிழைப்பு அழைக்கிறது.

நன்றி தீபா.

26.3.10

காடுமேடுகளில் வியர்வையோடு காய்ந்துகிடக்கும், கதைகளின் வற்றாத சுனை. ( தொடர் பதிவு 2 )

ஒரு எட்டுகிலோமீட்டர் தூரத்தை பேருந்தில் போனால் அரைமணி நேரத்தில் கடந்துவிடலாம்.ஆனால் அந்தக்கதையை இரண்டு மணிநேரம் சுவாரஸ்யப்படுத்திச் சொல்லுகிற பலபேர் இருந்தார்கள்.அண்டரெண்டாப் பட்சிகளின் இறக்கைகளை பேருந்துகளின் சக்கரங்கள் பிடுங்கிக்கொள்ளும். ஸ்கைலாப் ராக்கெட் இந்தியாவில் விழப்போகிறது என்ற களேபரம் நடந்துகொண்டிருந்த போது. பம்பு செட்டை வித்து ஒருவாரம் சோறு,கறி பொங்கித் தின்ன குடும்பங்களும், ஆசை ஆசையாய் வளர்த்த ஆடு ,கோழிகளை அடித்துத் தின்ன  கதைகளும் நிறைந்தது  கிராம வாழ்க்கை.

மேல்நிலைப் பள்ளியில் நுழைந்ததும் என்னை தன் கதைகளால் இழுத்துக்கொண்டு போன வசியக்காரன் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி. அவர்தான் என் தமிழாசிரியர். அச்சடிக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்து மாணவர்களை வெளியே இழுத்துக் கொண்டுபோய் சுதந்திரம்,பொதுச்சிந்தனை,சமத்துவம்,காதல் என்கிற பெருவெளிக்குள் அலையவிட்டவர் அவர்.அப்போது தான் புத்தகங்களின் வாசம் உக்கிரமாக அடித்தது. லீவுநாட்களில் 'ஆடுமேய்க்கிற மாதிரி அண்ணனுக்கு பொண்ணுப்பார்க்கிற மாதிரி' என்கிற சொலவடையை உண்மையாக்க. அந்தக் கலைச் செல்வியை பார்க்கப் போகிற சாக்கில் நூல்நிலையம் நுழைந்தோம்.அம்புலிமாமா,துப்பறியும் ரிப்கர்பி களைத் தள்ளிவிட்டு சாண்டில்யன் வந்து உட்கார்ந்து கொண்டார்.அதில் வருகிற காதலுக்காக வீரம் வேல் கம்புகளையெல்லாம் படித்துக் கழித்தோம்.

எனது அண்ணன் அந்தோணியும்,எங்கள் ஊரின் முதல் கல்லூரிப்பெண் அன்னபூரணமும் புதிய புதிய புத்தகங்களை அறிமுகப்படுத்தினார்கள்.திரிவேணி சங்கமம் கதையில் வரும் ஜேனட்டை நான் பூஜிக்க ஆரம்பித்தேன்.அதற்கு காரணம் சுஜாதாவின் எழுத்தா ஓவியர் ஜெயராஜின் ஓவியமா என்று பட்டிமன்றம் வைக்க வேண்டியதில்லை ரெண்டு கலைஞர்களின் சின்க்ரனைஸ் மட்டுமே காரணம்.ஜேனட்டின் சாயலில் பின்னால் வந்த அவள் அப்படித்தான் ஸ்ரீ்பிரியாவையும் பூஜிக்கத் துவங்கினேன். நூறு பக்கங்களுக்கு மேலிருக்கும் நாவல் படிக்க வேண்டி சாண் டில்யனுக்காக அலைந்த காலத்தில் அவர் கிடைக்காமல் 'போரே நீபோ' என்கிற ரஷ்ய நாவல் படிக்க நேர்ந்தது, அதைச் சொன்னபோது அப்படியா நீ ஜெயகாந்தனைப் படி என்று சொன்னார்கள்.சிலநேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நடகம் பாக்கிறாள் இரண்டையும் அடியும் துடியுமாகப் படித்தேன்.

பாண்டுகுடியில் வேலைக்குப் போனதும் என்னைச் சுற்றியிருந்த ஊரும் நண்பர்களும் தூரமானார்கள். அவர்கள் இல்லாத வெற்றிடத்தை கனவுகளாலும் புத்தகங்களாலும் கழித்தேன்.ஜெயகாந்தனின் தொடர்கதைகள் கிடைக்கிற வாரப்புத்தகங்கள்,பாலகுமாரன் சுஜாதாவின் வாரப்புத்தகங்கள் தராசின் ரெண்டு பக்கமாக மேலும் கீழும் ஆடிக்கொண்டிருந்தது.
ஆத்மாநாம் ஜெயித்து விட்டான்.ஆத்மாநாமைப்போல பல தீவிரக் கதைகளோடு என்னை நெருங்கி  வந்த 'மகஇக' தோழர்கள்  கொடுத்த புத்தகங்கள்,பாலச்சந்தரின் கமலஹாசன்,கண்சிவந்தால் மண்சிவக்கும் சினிமா,இலங்கைத்தமிழ் பிரச்சினை என என்னையறியாமலே இடதுபக்கம் திருப்பியது.

அப்போது பீகே என்கிற கிருஷ்ணகுமார் பாண்டுகுடியில் நான் தங்கியிருந்த அறைக்கு வந்தார்.பாண்டியன் கிராமவங்கி ஊழியர் சங்கத்தில் உறுப்பினராக்க வந்த அவர் நான் படித்த புத்தகங்களை பட்டியலிடச் சொன்னார்.சில முன்னெச்சரிக்கை காரணங்களுக்காக தீவிர புத்தகங்களின் பெயரை ஒழித்து வைத்துக்கொண்டு பாலகுமரனையும் சுஜாதாவையும் சொன்னேன்.வாசிக்கும் பழக்கம் குறித்த ஒரு சீனப் பழமொழியைச் சொன்னார்,அவர் சில புத்தகங்களைத் தெரியுமா எனக்கேட்டார் தெரியாதெனச்சொன்னேன். சங்க வேலைக்கு ஆவான் என்று என்னைச் சாத்தூருக்கு மாற்றலாக்கி அழைத்து வந்தார். என்னைச் சாத்தூருக்கு அழைத்து வந்ததில் அவருக்கு உள்நோக்கம் இருந்ததா.இருந்தது. சாத்தூர் எனக்கு  ¨வைப்பாறு, வெயில், சங்கம்,தோழர்கள், எல்லாவற்றையும் விட அரிதான புத்தகங்கள் புத்தகங்களையும் விட உன்னதமான நட்பை எனக்கு அறிமுகப்படுத்தியது.

25.3.10

காடுமேடுகளில் வியர்வையோடு காய்ந்துகிடக்கும், கதைகளின் வற்றாத சுனை.

அன்புக்கினிய தீபாவுக்கு நன்றி.

கதை சொல்லியின் கதையை இன்னும் ஆயிரம் முறை சொன்னாலும் எழுதினாலும் ஒவ்வொரு முறையும் புதிது புதிதான நினைவுப் படிமங்கள் மேலெழுந்து வருகிறது.

மின்சாரமில்லாத காலத்துக்கிராமம்.மண்ணெண்ணெய் விளக்குகளை விட்டால் ஒரே கதி நிலவு தான்.விளக்குச் சிம்னிகளுக்கு பொலிவுகூட்ட சாம்பல் வைத்து துலக்குகிற எல்லோர்வீட்டுச் சாயங்கால முற்றங்களும் கதைகளால் குளிர்ந்து கிடக்கும்.அப்போதிலிருந்தே நாங்கள் தயாராகிவிடுவோம் கதைகேட்க.ஆமாம் எங்களுக்கான கதை
பொதுவானது. எங்கள் கதை சொல்லிகளும்   பொதுவானவர்கள்.வடிவம்மாள்,பக்கியக்கிழவி,மரியசெல்வம்,
வெள்ளச்சி,அய்யம்மாக் கிழவி,பாப்பாத்தி என்று ஒரு பட்டாளம் இருக்கும்.மடி நிறைய்யக் கதைகளை வைத்துக்   கொண்டு எல்லோருக்கும் பகிர்ந்து  கொடுப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு குரல்,ஒரு உத்தி இருக்கும்.அங்குவிலாஸ் போயிலை,கொட்டப்பாக்கு வெத்திலை,டீ ஏ எஸ் பட்டணம் பொடி என்று ஒவ்வொருவரிடமும் தனித்தனி வாசனை இருக்கும்.இருந்தாலும் வார்த்தைகளே சித்திரமாய்,காட்சியாய் விவரிக்கிற லாவகம் வழி வழியாய் ஒரே மாதிரி இருக்கும்.அதன்பிறகு இன்றுவரை சுண்டி இழுக்கும் கதை சொல்லிகள் எங்கும் தட்டுப்படவில்லை.

எதிரும் புதிருமான வாசல் படிகளில் தலைவைத்து தெருவில் கால் நீட்டிப் படுத்துறங்கும் அந்தக்கிராமத்து கோடை காலங்கள் இனித்திரும்பவே திரும்பாது.நடு இரவில் கயா நகரத்து புகை வண்டி நிலையத்தில் இறங்கும்போது படுத்துக்கிடந்த நெல்லறுக்கும் ஆயிரக்கணக்கான கூலிக்கார பீகாரிகளைப் பார்த்தோம். அந்தக்குளிரிரவை கண்ணீர் உஷ்ணமாக்கியதை என் தோழன் மாதுவிடம் கூட மறைத்து விட்டேன்.காட்சியாகப் பதிவு செய்யமுடியாத அந்த அமானுஷ்ய இரவுச் சித்திரம் நினைவுகளின் மூலைக்குள் கிடந்து பிராண்டிக்கொண்டே இருக்கிறது. நடு இரவு வரை நீளும் கதைகளுக்கு காதைக் கொடுத்தபடி எங்களோடு வானத்திலிருக்கும் நட்சத்திரங்களும் முழித்துக்கிடக்கும். ஊங்கொட்டுகிற கடைசி ஆளாய் பலசமயம் நானிருப்பேன்.அந்தக் கதைகளை எல்லாம்  எப்படியும் ஊருக்குச்
சொல்லாமல் போவதில்லை.அதற்கான முயற்சியோடு அவற்றை பாதாளக்கரண்டி போட்டுத் துழாவிக்கொண்டே இருக்கிறேன்.தட்டுப்படுகிறவை தேடுதல் வேட்டையில் குறிவைக்காத வேறு வேறு கதைகளாகி எனது எழுத்தாகிறது.இன்னும் முழுக்கதையும் கிடைக்கவில்லை செல்லரித்த பழய்ய கருப்புவெள்ளை நிழற்படம்போல திட்டுத் திட்டாய் மட்டுமே கைக்குக் கிடைக்கிறது.

அண்டரெண்டாப்பட்சி,மாயக்கம்பளம்,சுண்டெலியண்ணன்,ராஜகுமாரன்,அவனது காதலி விஜயா,மச்சக்கன்னி,நாகக்கன்னி,ஏழுமலை, ஏழுகடல்,உயிரைப்பதுக்கி வைத்திருக்கும் கிளியின் கால்கள்.அவற்றைப் பாதுகாக்கிற கருநாகங்கள் என்று தங்களை உடனுக்குடன் உருவம் மாற்றிக்கொள்ளும் கதைமாந்தர்களாய் பாட்டிமார்களின் வார்த்தையிலிருந்து கிளம்புவார்கள். நல்லதங்காள் கதை சொல்லும்போது எல்லாக் கதை சொல்லிகளும் நிச்சயமாய் அழுதுவிடுவார்கள். அதற்கான காரணம் கவசகுண்டலமாக அவர்களோடு ஒட்டிப்பிறந்த வறுமையும்,சகோதர பாசமும் என்பதை ஒரு கால் நூற்றாண்டு கழித்துத் தான் தெரிய நேர்ந்தது.கதை சொல்லிகள் அழுத பின்னாள் கதைகேட்பவர்கள் கதி என்னாகும். நல்ல தங்காளின் கடைசிப் பிள்ளையாக விட்டுவிடு நான் மட்டும் பிழைத்துக்கொள்கிறேன் அம்மா என்று மனசு கிடந்து கதறும்.

வறுமையையும்,பசியையும்,நீர்த்துப் போகச்செய்ய அவர்களுக்கு கிடைத்தவை உழைப்பும் அதோடு கூடப்பிறந்த கதையாடல்களும்தான்.பல ஞாயிற்றுக் கிழமைகளில் அருணாசலக்கிழவன் தடித்த புராணக்கதைப் புத்தகங்களைத்
திண்ணையில் வைத்து ராகம் போட்டுப்படிப்பார்."ஏ தாத்தா கதைய நிப்பாட்டு, ஒத்த வப்பாட்டிய வச்சிக்கிடே ஒரு நாளைக்கு ஏழுதரம் சண்ட போட்ற,எங்க வெள்ளச்சிக் கிழவிகிட்ட பய பரட்டன்னு நாற வசவு வாங்குற,அன்னக்கி கூட கலிமட்டயிட்டு அடிவாங்கி வலிதீர ஏண்ட சாராய்ங்கேட்ட,ஆனா அந்தத் தாயோளி தசரதன காலம்பூறா ராசா கடவுளுண்ணு எப்பிடிச் சொல்லலா " இப்படி ஐயண்ணா சுந்தரப்ப மாமா கேள்விகேட்டதும் புத்தகத்தை மடிச்சுவச்சுட்டு "போங்கடா குடிகாரப்பயலுகளா" என்று துண்டை உதறித்தோளில் போட்டபடிக்
பதிலற்றுக் கிளம்பிவிடுவார்.

காத்திருந்த ஊர்ச்சனம் 'கதையக்கெடுத்த குடிகாரப்பாவி' என்று திட்டவும் ரோசப்பட்டுப்போய் சம்மணம்போட்டு உட்கார்ந்து பாட்டுப்பாட ஆரம்பிப்பார். "அண்ணம் மாரே தம்பி மாரே அருமையுள்ள அக்கா மாரே மன்ன மணிக்குறவன் மாண்ட கதையச் சொல்லி  வாரன்  மக்களப்போல நினச்சு மண்ணிக்க வேணும் பிழ பொறுத்து" பத்துக்கட்டையில் பாடும் சுதிக்குத் துணையாக ராசாச்சித்தப்பா மாட்டுச்சவ்வு கட்டிய பானைத் தாளத்தைக்கொண்டு வந்துவிடுவார் அன்று உடனடி சிவராத்திரிதான்.விடிய விடிய நடக்கிற ஜுகல் பந்தியில் பார்வையாளரும் பாடகராவார்கள்.கடல் நீர் நடுவே பயணம் போனால் குடிநீர் தருவது யாரோ என்று பாடிக்கொண்டே கல்லுடைக்கும் பகாரி மாமன் அழுதுவிடுவார். இத்தனைக்கும் சாகுமட்டும் அவர் கடல் பார்த்ததில்லை.அந்த இறுக்கம் தீர பாம்பாட்டிக்காளியப்பன் 'காப்பித்தண்ணி இல்லாமலே சும்மா கலங்குறானே ஊமத்தொற' என்று பாடுவார்.ஏய் மணிக்குரவங் கதையில ஊமத்தொறைக்கு என்ன சோலி,குடிச்ச போதை கொறயலயா  என்று கஞ்சிரா அடிக்கும் மாடசாமிச்சித்தப்பா கேட்டதும். 'வாய்யா வாத்தியாரு', மூனு மணி நேரமா தொண்ட கிழியக்கத்துறனே வெல்லக்கட்டி,காபிந்தூளு இல்லாமலா போச்சி இந்த சூரங்குடியில" என்று கேட்கவும் ஆவிபறக்க சுக்குக்காப்பி கூட்டத்துக்குள் வரும்.

நடு இரவில் குடிக்கிற வரக்காப்பியின் ருசி,காட்டிலே களையெடுக்கும்போது குடித்த கம்மங்கூலின் ருசி,குளம்பு வேகுமுன் அடுப்பில் சுட்டுத்திண்ண சுவரொட்டியின் ருசி,மேமாதச் சுடுவெயிலை புளியம்பழப்பானக்ரகத்தோடு
கழித்த ருசி இன்னும் தொண்டைக்குள்ளே நிற்கிறது, இந்தக்கதைகளோடு. 

காப்பித்தண்ணி குடித்துவிட்டு பீடி பத்தவைத்து  "எலே சுந்தரப்பா கொனத்துலயு தங்கக்கொனம் அல்லிலே லேலோ ன்னு  படிக்கம்போது கூட்டத்தப் பாத்து பயந்து பயந்து படிக்கியே எதுக்கப்பா" இப்படிச் சொல்லவும் கூட்டம் கெக்கெக்கே என்று ஒரே சுதியில் சிரிக்கும்." ஏ மாமா ஓங்கதைய எங்காகிட்டக் கேக்கனும் நீ வந்து ஊர்க்கத பேசுறயா" என்று கூட்டத்துக் குள்ளிருந்து பதில் வரும்.இப்படிச் சாவகாசமாய் உட்கார்ந்து பேசிச் சிரித்து கதைகளுக்கு இடைவேளை விடுவார்கள்.

நானும் தான்.

23.3.10

மொட்டைவெயிலைச் சற்று கடத்திவிடும் காற்றைப் போல

உள்ளே இருப்பவர் அநியாயத்துக்கு தாமதப்படுத்துகிறதாகக் கோபம்  வரும்.
காய்ச்சல்காரர் மூடிய போர்வையைத் தாண்டி மாத்திரை வாசமடிக்கும். ரத்தப் பரிசோதனை அறிக்கையை வைத்திருப்பவரின் இதயம் கூடுதலாக துடிக்கும்.தொலைக்காட்சியில் அழுகிற நடிகை  காத்திருக்கிற எல்லோரது சோகத்தையும் சற்று கூட்டி வைப்பாள்.

உள்ளே வருகிற எல்லோரையும் நோயாளியெனச் சந்தேகித்து வெப்பமாணியெடுப்பாள் புதிதாய் வேலைக்கு வந்த தாதிப் பெண். பிரசவ வார்டில்  அழுகிற குழந்தையின் சத்தத்தை ரசிக்கிற தருணம் மறந்து போயிருக்கும்.இங்கேயும் காய்ச்சல்,வெட்டுக்காயம்,ரத்த அழுத்தம்,பிரசவம் என்கிற வேற்றுமையில் நோய்களெல்லாம் ஒற்றுமையாகும்.

சாக்லெட் காட்டி, முத்தம் வாங்கி,காய்ச்சல்காரரின் வாயிலிருக்கும் வெப்பமானியைப் பிடுங்க கைநீட்டி. தண்ணீர் குடுவையை கீழேபோட்டு, பாட்டுப்பாடி,அடம்பிடித்து ஓரிடத்தில் நில்லாமல் அம்மாவின் அதட்டல் பின்தொடர எல்லோர் இருக்கைக்கும் கொண்டு செல்வான் இளைப்பாறுதலை. மொட்டை வெயிலைச் சற்று கடத்திவிடும்   காற்றைப் போல அங்கே இருப்போரின் நோவையெல்லாம்  இலவசமாய்  கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைத்துக்  கொண்டிருப்பான் சலிக்கு ஊசிபோட வந்த சுட்டிப் பயல்.

தனது முறை வரும் போது திமிறி, வெளியிலோடி,   களேபரப்படுத்துவான். அவனது அழுகையும், கண்ணீரையும் கூட அந்த நேரத்து இறுக்கத்தை குறைக்கச் செலவிடுவான், சின்னக் கலைவாணன்.குழல் இனிது, யாழ் இனிது மழலைச் சொல் செய்யும், குழந்தையின் சுட்டித்தனம் வலிநிவாரண மருந்தும் செய்யும்.

22.3.10

விலங்குகள் கூடப் புனிதமானது, இங்கே மனிதன் மட்டும் தீட்டாக்கப்பட்டவன்

"உருவங்களை வரைவது தமது மார்க்கத்திற்கு எதிரானது என இஸ்லாமிய அடிப்படை வாதிகளும்,அவரது ஓவியங்கள் தமது மதத்தை இழிவு படுத்துகின்றன என்று இந்து அடிப்படைவாதிகளும் ஒரு சேர விரட்டிவிட்ட ஒரு மகாக்கலைஞனை மீளக் குடியமர்த்த வேண்டி ஜனநாயக அமைப்புகள் நெருக்கடி கொடுக்கிறது.95 வயதாகிவிட்ட அவர் இனி நாடு  திரும்புவதா யிருந்தால் கூட இங்கு வந்து சாவதற்காகத்தான் இருக்க முடியும் என்று அவரது நண்பர் ஒருவர் மனம் வெதும்பிச் சொல்லியிருக்கிறார்.பிறந்த பூமியில் தான் உயிர்விடுவேன் என்று அடம்பிடித்து திரும்புமளவுக்கு இந்த நாடு எப்போதாவது அவரை கௌரவமாக நடத்தியிருக்கிறதா ?வேண்டாம் ஹுஸைன் நீங்கள் நிம்மதியாகக் கத்தாரிலேயே இருந்து விடுங்கள்."

'புதுவிசை' ( ஜன-மார்ச் 2010 ) தலையங்கம்.இப்படி அங்கலாய்க்கிறது.

அப்படித்தான் மறத்திக்கிழவியின் கோபமும் ஒருநாள் வீட்டுக்கு வந்த மூத்த மருமகளை அத்துக்கிட்டுப் போயிரு என்று அனுப்பிவைத்தது " வாழ்நாப்பூரா இவண்ட அடிபட்டு சாகிறதப்பாக்க என்னாலயே முடியல" என்ற போது ஊரே சேர்ந்து ஆமோதித்தது.

 0

இறைச்சிக்காக மாடு, கன்று, எருமை இனங்களைக் கொன்றால் ஒரு வருடம் முதல் ஏழுவருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்னும் சட்ட மசோதா கர்நாடக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. உலக புலால் உன்கிற  மக்கட் தொகையில் 90 சதவீத மக்கள் உண்பது மாட்டிறைச்சி என்பதைப் புள்ளி விபரம் சொல்லுகிறது.

கடலோரம் வாழ்பவர்கள் மீன் தின்பதும்,மலையில் வசிப்பவர்கள் கிழங்கு தின்று தேநீர் குடிப்பதுவும்,பாலைவனங்களில் வாழ்பவர்கள் ஒட்டகப்பால் குடிப்பதுவும்,வட மாநிலத்தவர்கள் சப்பாத்தியை உருட்டுவதுமானது அவரவர் உணவுமுறை. அப்படிப்பட்ட பூகோள ரீதியான வேற்றுமைகளை பெருமையாகக் கொண்டதிந்த இந்தியா.'நண்டு திங்கிற ஊருக்கு போனால் நடுத்துண்டு நமக்குன்னு பங்குவாங்கித் திங்கணும்' என்பது உழைக்கிற ஜனங்களின் பழமொழி.பெரும் காடுகளும்,மலைகளும் நிறைந்த இந்த பூமியின் விலங்கு மாமிசங்கள் அவரவர் தேவை, வசதி, அடிப்படையில் புழக்கத்திலிருக்கிறது.

நூத்திப் பத்துக் கோடிப்பேருக்கும் பச்சரிசியும் பருப்பும் நெய்யும் விநியோகிக்க ஆட்சியாளர்களால் மட்டுமல்ல கடவுளாலும் முடியாது என்பதை இந்த வெறியர்கள் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் வெகு மக்கள் புரிந்து கொள்வார்கள்.இந்த உலகத்தை சைவ பூமியாக அறிவித்து விட்டால் என்ன நடக்கும் என்கிற கேள்விக்கு மனிதர்கள் நிற்க இடமில்லாமல் விலங்குகள் பெருகிப்போகும் என்று மதன் கேள்வி பதிலில் சொல்லியிருப்பது வெறும் விகடமில்லை.ஆடுமாடு கோழிகளை கோவிலில் பலி கொடுக்கக் கூடாதென்கிற சட்டம் தமிழகத்தில் வந்தது. பின்னர் ஒரு ஒட்டுமொத்த எதிர்ப்பையும் சந்தித்து பின்வாங்கப்பட்டது .கர்நாடகத்தில் இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தை ஒப்பிடும் போது அது கூடப் பரவாயில்லை என்றாகிவிடும் போலிருக்கிறது.

தனக்கு, தன் மக்களுக்கு ,உணவாகிற அத்துனையும் கொடுக்கிற பூமியை வணங்குகிற  நடைமுறை உலகமெங்கும் வியாபித்திருக்கிறது.விளைந்த காடுகளில் செருப்புப் போட்டு நடக்கக் கூடாதென்று அதற்கு மரியாதை செலுத்துகிற  கட்டுப்பாடும் கூட இன்னும் புழக்கத்திலிருக்கிறது.அதைப்புரிந்து கொண்டு உலக சமூகம் உற்சாகமாகக் கொண்டாடுகிறது. அதற்காக அந்த மண்ணில் விளைந்த எதையும் தின்னக் கூடாதென்கிற முட்டாள் ஐதீகத்தை
எந்த தேசத்திலும்  கேட்டதில்லை.பக்தியோடு தனக்கு முன்னால் படைக் கப்படுபவை நெய்ப் பொங்கலாக இருந்தால் மட்டும் சாப்பிடுவேன், அது கிடாக்கறியாக இருந்தால் ஒதுக்கிவிடுவேன் எனக் கடவுள் ஒருபோதும் பாரபட்சம் பார்ப்பதில்லை.அவர் சாப்பிடுவார் என்று தெரிந்தால் படையல் வைக்கிற சாங்கியம் எப்போதோ இல்லாமல் போயிருக்கும்.

தனக்குப் பிடிக்காதவற்றை இருக்கவிடக் கூடாது என்கிற பாசிசத்தை மதமென்று சொன்னால் அதை சமூகம் பெருக்குமாத்தை வைத்து ஒதுக்கிப் போட்டுவிடும்.அதே விதிதான் சட்டம், ஆட்சி, அரசியலுக்கும், பொருந்தும்.
ஆனால் இப்போது மக்களால் மக்களுக்காக என்கிற கோஷம் மழுங்கிபோய் கடவுளின் பெயரால் வழிபாட்டுரிமை,காதலிக்கும் உரிமை,பண்பாட்டு உரிமை,கலை இலக்கிய வெளிப்பட்டு உரிமைகள் மீது கைவைத்துக் கடைசியில் அப்பாவிச் சனங்களின் சோத்துச்சட்டியில் கை வைத்திருக்கிறது.

ஆந்திர பெண் எழுத்தாளர்  தோழர் சஜுலா கௌரியின் 'மண்ணுபூவா' என்கிற நாவலுக்கு அந்த அரசு பல விருதுகள் கொடுத்திருக்கிறது.அந்த நாவல் ஆந்திராவின் கடைக்கோடி மக்களின் வறுமையைச் சொல்லுகிற நாவல்.தன் இளம் வயதில் பலநாள் பட்டினியை குளத்துக்கறையில் கிடக்கும் களி மண்ணைக் கொண்டு சரிக்கட்டிய அவலம் தான் "மண்ணுபூவா".கல்தரையில் சாதமிட்டு மண்சோறு சப்பிடுகிற வழிபாட்டுமுறை இருக்கிற இந்த தேசத்தில் அவள் மண்ணையே சோறாகச் சாப்பிட்ட கதை. வடிகட்டி கல் நீக்கிச் சாப்பிட்டது இந்த தேசத்து மண் என்பதால்  ஒருவேளை அதையும் அரசியலாக்கலாம். கொஞ்ச நாட்களுக்கு முன் தஞ்சையில் புஞ்சைகள் வரண்டு போனதும்.வறட்சியை, வறட்சியால் வந்த பசியைப், போக்க அங்கிருக்கிற ஜனங்கள் எலிக்கறி தின்றதையும் உலகம் அறியும்.எலியும் கூட சாதாரணமானதல்ல அதற்கு பிள்ளையாரின் வாகனம் என்கிற பெருமை இருக்கிறது.ஆனால் இந்த தேசத்து கடைக்கோடி மக்களுக்கு என்ன இருக்கிறது. பாம்பைத் தெய்வமாக வழிபடுகிற இதே தேசத்தில், அஸ்ஸாமில் போகிற வழியில் மலைப் பாம்பைக் கண்டால் பிடித்துச் சமைத்துச் சாப்பிட்டு விட்டுத்தான் பயணத்தைத் தொடருவார்களாம்.

இதே ரீதியில் போனால் சக்கரைச்சத்து உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அறு திப் பெரும்பான்மையாக இருந்தால் சீனியையும்,அரிசியையும் சாப்பிடக் கூடாதென்று சட்டம் கொண்டுவரலாம்.இதே ரீதியில் போனால் சந்நியாசிகள் அதிகாமாக இருக்கும் சட்டமன்றத்தில் கல்யாணம் பண்ணுகிறவர்களுக்கு சிரச்சேதமும்,நித்யானந்தாவுக்கு தங்கப்பதக்கமும் வழங்குகிற சட்டம் இயற்றலாம். இதே ரீதியில் போனால் சிகப்புச்சட்டை அணிந்தவர்களை ரயிலேறக்கூடாதென்று மம்தாவும்,பூக்களால் மாலை தொடுக்கக்கூடாதென்று மாயாவதியும்,சட்டம் கொண்டுவரலாம்.

இந்தக் களேபரங்களின் கூச்சலில் சத்தமில்லாமல்  அந்நிய முதலீடுகள், அணு ஆயுதப் பரவல், ஆட்குறைப்பு, கோக் பெப்சி  குர்குரே,தொடங்கி  கூடங்குளம்  அணு மின்  நிலையம் வரை நடுக்கூடத்தில் வந்து உட்கார்ந்து கொள்ளும் உலக மயமாக.அதை எதிர்க்கிற சக்தியை மட்டும் ஆண்டவன் ஒருபோதும் கொடுக்கப் போவதில்லை.

19.3.10

வலிகள் மட்டும் தனித்தனி

பசிக்கிறதென்பதை
பள்ளத்துக்குள் கிடக்கும்
கண்கள் சொல்லும்.
தூரிகையைப்பிடித்த
கைகள் நடுங்கும்.
பெருங்குடலைச்
சிறுகுடல் உரசும்
இடியோசை கேட்கும்
வாய் மட்டும் மூடிக்கிடக்கும்.

அவனிடமிருந்து பறித்தெடுத்த
வார்த்தைகளைச் சேர்த்து வைத்து
வண்ணங்கள் பேசும்
அவன் வரைந்த ஓவியங்கள்
கூப்பாடு போட்டு ஊரைக் கூட்டும்.
கூடி நின்று பார்ப்போரிடமிருந்து
அங்கீகாரத்தை இயக்கமே
எடுத்துக்கொள்ளும்

வண்ணங்கள் ஒட்டிய ஓவியக்கை
மனைவியின் சொல்லும் உதவாக்கறை
மண்ணெண்ணை மணக்கும்
தூரிகை போலச்.
சொல்லத் தெரியாமல்
மூலையில் கிடந்து ஏங்கும்.

இருந்தும்..
யாராவது ஒருவர் வந்து
ஓவியம் அழகென்று
உச்சிமுகரும் போது.
எல்லாவலிகளும் தீர்ந்து போகும்.
என் பெயர் ஓவியத்தோழன்

18.3.10

உலகச் சிறுகதைகள் SENORS PAYROLL = வில்லியம்.இ.பார்ரட்

உலகச்சிறுகதைகள் பட்டியலில் இருக்கும் ஒரு குறுஞ் சிறுகதை.பார்ரட் (1900-1986)  ஒரு அமெரிக்க எழுத்தாளர் நூற்றுக் கணக்கான படைப்புகளை கொடுத்த அவரது பல கதைகள் ஹாலிவுட்டுக்கு சினிமாவைத் தந்திருக்கிறது. 'கடவுளின் இடது கை' அவரது பிரபலமான கதையும்,திரைப்படமுமாகும்.வாசிக்க எளிதானதும் பதிவிட வசதியானதுமான இதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்

0

லாரியும் நானும் அந்த எரிவாயு நிறுவணத்தின் இளம் பொரியாளார்கள்.அப்படியென்றால் நாங்கள் இருவரும் எழுத்தர்கள் என்று அர்த்தம்.எழுத்து வடிவத்திலான எல்லா தலைமையக ஆணைகளும் எதிரெதிரே உட்கார்ந்திருக்கும் எங்கள் இருவரின் மேஜைக்குத்தான் வரும்.கத்தை கத்தையாக வரும் அலுவலக உத்தரவுகளைச் செயல்படுத்துவதுதான் எங்கள் வேலை.

இளம் பொறியாளர்களை மெக்சிகன் தொழிலாளிகளைத் தவிர எல்லோருக்கும் தெரியும்.அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் பெரிய இடைவெளி இருந்தது. நாங்கள் அவர்களுக்கு மட்டும் சம்பளம் தரும் முதலாளிகளாகத் தெரிந்தோம். அவர்கள் கடும் உழைப்பாளிகள், அவர்களில் கைதேர்ந்தவர்கள் கொதிக்கிற சுரங்கத்தில் எட்டுமணி நேரம் ஓய்வில்லாமல் ஓடுகிற எந்திரமாக மாரிப் போவார்கள்.நான்குபேர் துக்குகின்ற பழுவை ஒரே ஆள் தூக்குகிற கையும் புஜமும் கொண்டவர்கள். நிலக்கரியை பெரிய கூடைகளில் அள்ளி வெளியே தட்டுகிற வேலை அவர்களுக்கு.குறுகிய சுரங்கங்களின் வெப்பத்துக்குள்ளிருந்து அவர்கள் தட்டுகிற நிலக்கரி தரைக்குள்ளிருந்து கருப்புத்தண்ணீர் பீறிட்டுக் கிளம்புவது போல வந்து விழும்.

ஒவ்வொரு ஐந்தாம் தேதியும் இருபதாம் தேதியுமாக இரண்டு முறை அவர்களுக்கு சம்பளம் வழங்கியது நிறுவணம்.ஆனால் அவர்கள் மூன்று நாளில் தீர்த்துவிட்டுத் திண்டாடுவர்கள்.மீதிப் பதினைந்து நாளை பணமில்லாமல் சந்திக்க முடியாதாகையால்.மூன்று நாட்களுக்கொரு முறை சம்பளம் வழங்கினோம்.அதை முன்தொகையாகக் கணக்கிட்டு அதற்கான காசோலை மாற்றுவது எங்கள் வேலை.ஒரு நாள் மேலிடம் இனிமேல் எந்த ஊழியருக்கும் முனபணம் வழங்கக்கூடாது,சில அத்தியாவசிய அல்லது மருத்துவச்செலவுகளுக்காக மட்டும் வழங்கலாம்மென்று உத்தரவிட்டது.

மறுநாள் வந்த ஜுவான் கார்சியாவிடம் சொன்னபோது  அவர் அத்தியாவசியம் என்றால் என்ன என்று கேட்டார் நான் விளக்கினேன்.அப்போ இன்னைக்கு பணம் கிடையாதா என்று கேட்டார் அடுத்த இருபதுதான் என்றேன். அடுத்த இரண்டு மணிநேரத்தில் இதேபோல பலர் வந்து திரும்பிப் போனார்கள்.மறுநாள் ஜுவான் கார்சியாவின் மனைவி சாகக்கிடந்தாள்,மெந்தான்சாவின் அம்மாவுக்கு இறுதிநாள்,பல குழந்தைகளுக்கு வயிற்றுபோக்கு இப்படியான மருத்துவச்செய்திகளாக எங்கள் மேஜைக்கு வந்தது. அவற்றை எல்லாம் அத்தியாவசிய முத்திரை இட்டு  பணம் வழங்கினோம்.

அடுத்த சில நாட்களில் இனிமேல் 5,20 தேதிகளைத்தவிர பணம் வழங்கப்படமாட்டாது.வேலையிலிருந்து வெளியேறுபவர்களுக்கு கணக்குப்பார்த்து பணம் வழங்கப்படும் என்று உத்தரவு வந்தது.வழக்கம் போல வந்த ஜுவான் கார்சியாவுக்குச் சொன்னோம்.சோர்வோடு திரும்பிப் பின் மறுநாள் வந்து சரி நான் வேலையை விட்டுவிடுகிறேன் என்று சொன்னான். நாங்கள் நிறுவணத்தின் மகிமைகளை எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் காதில் வாங்காமல் பணத்தை எண்ணிக்கையில் வாங்கினான்.ஜுவான்,அயல்யா,மெந்தான்சா,கொன்சாலா,மற்றும் ஓர்ட்டெஸ் டென்னும் ஈடுகட்ட முடியாத உழைப்பாளிகள் நிறுவணத்தைவிட்டு ஒரேயடியாக வெளியேறினார்கள்.

அடுத்த நாள் புதிய ஒப்பந்த தொழிலாளிகளை தேர்வுசெய்யக் காத்திருந்தோம். யாரும் வரவில்லை இருதியில் ஜுவான்,அயல்யா...எல்லோரும் வரிசையில் இருந்தார்கள் வேறு வழியில்லை எடுத்துக்கொண்டோ ம்.
ஒவ்வொரு நாளும் வேலையில் சேர்வது அன்று வேலையை விட்டு விலகுவதுமாக ஒரு பெரும் சுமையான வேலைசெய்தோம்.ஒரு நாள் மேலிடம் " வேலியிலிருந்து வெளியேறுகிற யாரும் முப்பது நாட்கள் வரை மீண்டும் சேர இயலாது என்கிற உத்தரவு வந்தது.லாரி சீட்டியடித்துக்கொண்டு சொன்னான்."இந்த முறை அவர்கள் தொலைந்தார்கள் ஒன்னுமே செய்யமுடியது" அன்று மாலை வந்து ஓய்வுக்கடிதம் கொடுக்க வந்த ஜுவான் குழுவினரிடம் இந்த உத்தரவைச்சொன்னோம்.சற்றும் யோசிக்காமல் இருக்கட்டும் என்று பிடிவாதமாகச் சொன்னார். எங்கள் கல்வியின் அறிவையெல்லாம் செலவழித்து அவர்களிடம் தோற்றுப்போனோம். இனி என்ன செய்வதென அறியாமல் அந்த இரவை ஆழ்ந்த சிந்தனையோடு கழித்தோம்.

மறுநாள் காலையில் அவகள் வந்தார்கள் "மன்னிச்சிருங்க ஜுவான் ஒன்னுமே செய்ய முடியாது ரூல்ஸ் கடுமையாக இருக்கு என்றோம்." மன்னிக்கனும் திருத்திக்கொள்ளுங்கள் அதிகாரிஅவர்களே என் பெயர் ஜுவான் அல்ல மனுவேல் ஹர்னாண்டஸ் என்று சொன்னான்.அதைத்தொடர்ந்து அவர்களது குழுவுக்கும் நிறைய்ய வேறு பெயர்கள் இருந்தது.ஒன்றும் செய்ய இயலாமல் சேர்த்துக்கொண்டோ ம்.

அன்றே நேரில்போய்  எங்கள் முதன்மை அதிகாரிக்கு நடந்த எல்லாவற்றையும் சொன்னோம். நல்ல நல்ல கெட்ட வார்த்தைகளை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அங்கிருந்து ஒரு உத்தரவோடு வந்தோம்.எங்கள் மதிப்பிற்குரிய உழைப்பாளர்களை அழைத்தோம். இனிமேல் எந்த விதியும் இல்லை நாம் பழைய படியே பழைய பெயரிலே தொடரலாம் என்று சொன்னேன்.

இப்போது தான் முதல் முறையாக உத்தரவை எழுத்துக் கூட்டிப் படித்தார்கள்.

15.3.10

தண்டவாளம் விட்டு இறங்காத ரயிலும், செவத்திக் கிழவியின் கனவும்.

ரயிலைப்பற்றிய அறிமுகச் சித்திரம், அபாயச்சங்கிலியின் பயமுறுத் தலோடும்,எட்டாத உயரத்திலிருக்கும் அதன் படிகளைப் போல் ஏக்கம்  நிறைந்த   இன்னொரு உலகமாகவும் இருந்தது. ஒண்ணாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் முதல் முறையாகப்பார்த்தது. அதற்கு முன்னா செவி வழியேறிய சித்திரமாகத் தான் இருந்தது. சாத்தூருக்குப் போவதும் தனலட்சுமித் தியேட்டரில் சிவாஜி படம் பார்ப்பதுமே லட்சியக்கனவாக இருந்தகாலம்.

பகலில் ஒரு முறையும்  இரவில் ஒரு முறையும் வந்து போகும் கொடைக் கானல் பஸ்ஸில் நாங்கள் பயணம் செய்யலாம் என்பதே நம்ப முடியாத விசயமாக இருந்த காலம். நிறுத்தி வைத்திருக்கிற மாட்டு வண்டியின் மேக்காலில் எறிக்கொண்டு  கற்பனை ரயில் பஸ்ஸில் பறந்து போவதைத்தவிர, வாகனப் பிராயாணம் ஏக்கமாக மட்டுமே இருந்தது.

ஊருக்குள் குப்பையள்ள வருகிற கம்மாப்பட்டி நாயக்கமார் மாட்டு வண்டிகள் பளப் பளவென கண்ணைப்பறிக்கும், காளை மாடுகள் அவர்களைப் போலவே மினு மினுப்பாயிருக்கும். வண்டியோட்டிகள் மிகச் சிறந்த வித்தைக் காரர் களாகத் தெரிவார்கள். அவர்களைச் சினேகம் பிடித்துக்கொண்டு  திரும்ப வருகிற வெத்து வண்டியில் ஏறி ஊனு கம்பைப்பிடித்து நின்ற படி பயணம் செய்கிற அந்த தருணத்திற்காக ஏங்கிக்கிடந்ம். பார வண்டியின் பின்னால்  நீட்டிக் கொண்டிருக்கிற உத்திரத்தைப் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டே போவதும் வண்டிக்காரர் இறங்கி வந்து சாட்டைக்கம்போடு விரட்டும் போது தெறித்து ஓடுவதும் சாகசமாக இருந்தது. 

மதுரைப்பக்கம் கல்லுடைக்கப் போனவர்கள், சம்பளமில்லாமல் கஞ்சித் தண்ணியில்லாமல், ராவோடு ராவாகத்  தப்பித்து நடந்தே திருமங்கலம் வந்து அங்கிருந்து கள்ள ரயிலேறி வீடு வந்தார்கள். அவர்களை ஊர்ச்சனம் ஆம்ஸ்ற்றாங்கைப் போலப் பார்த்தார்கள். ஓய்வு நேரங்களில் அவர்களை உட்கார வைத்து ரயில் பயண சாகசங்களைப் பற்றிக் கேட்டார்கள். அவரவர் புரிதலில் ரயில் பிம்பங்கள் விவரிக்கப்பட்டது, ஆச்சரியம் மேலோங்கக் கேள்விகளில்லாமல் பிரமித்துப் போனார்கள்.

''ஏய்யா எங்கள மாதிரிக் குருட்டுக் கிழவியெல்லாம் ரயில்ல ஏறலாமா''
செவத்திப்பெரியம்மை அப்பாவியாக் கேட்பாள்,

''குறுக்க கூடிப்போயி கொல்லபட்டிக்கிட்ட தண்டவாளம் இருக்கு நடுவில நில்லு, துட்டு வாங்காம ரயிலு ஒன்னிய ஏத்திரும்''.

கதை கேட்கிற செல்லையாப் பெரியன் சொல்லவும், சனங்கள் சிரிக்கும் அதுக்கு பெறகும் அவளுக்குப்புரியாது. அவள் அப்படியொன்றும் குருடியில்லை, படிக்காதவள். விவரந்தெரிந்தவர்கள், படித்தவர்கள் எல்லோரிடத்திலும் தன்னை அப்படித்தான் அறிமுகப்படுத்திக் கொள்வாள். சாகுமாட்டும் அவளுக்கு ஐம்பது பைசா, எழுபத்தைந்து பைசா எனச்சொல்லத் தெரியாது. ரெண்டு கால் ரூவா, மூனு கால் ரூவா என்று தான் சொல்வாள். அவள் கடைக்கு வந்தாளென்றால் மாரியப்ப நாடார் கதிகலங்கிப்போவார்.

'' ஒரு பொடி மட்ட யாவரஞ்செய்ய ஒரு மணி நேரங்கணக்குச் சொல்லனும், ஏத்தா தாயி, மஹராசி ஆளில்லாத நேரமாப் பாத்து கடைக்கு வாயேன்''
பயந்து சொல்லுவார்,

 ''ஏம்புருசங்கிட்டச் சொல்லனுமா''

என்று வேறு மாதிரிப் பயமுறுத்துவாள். ஒரு நூறு ரூபாயை, சில்லறையாக மாற்றி எல்லாம் அஞ்சு ரூபாயாகக் கையில் கொடுத்தாள் போதும் அவளுக்கு ஒரு மாதப்பொழுது கழிந்து விடும்.

ரயில் கதையெல்லாம் கேட்டு முடித்து விட்டு

''அத்தாம்பெரிய ரயில் எத்தனை கூட  சாணி போடும்''

என்று கேட்டார்கள்.அதுக்குப்பின்னர் '' சாணிச்செவத்தி '' யாகிப்போனார்கள்.


ஊர் தாண்டிய எல்லை கடந்து சாத்தூர்கூட அறியாத அவர்கள் ரயிலை நேரில் பார்த்திருப்பார்களா ?

14.3.10

படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோன்னு போவான்

அவன் பெயர் கோள்மூட்டிக் குமரேசன் அவன் ஒரு அரசு நிறுவணத்தின் உயர் அதிகாரி. அதற்குத்தகுதி திறமை இருக்கிறதா என்கிற கேள்விக்கு அவனது சமூக அடையாளம் மட்டும் ஆம் என்று பதில் சொல்லும்.அவன் பணிக்கு சேர்ந்த நாளில் இருந்து ஆள்காட்டி வேலைகளில் மிகக் கைதேர்ந்தவன். அதுவும் தொழிற்சங்கங்கள் போராடுகிற போது,இன்னும் அதிக சுறு சுறுப் பாகிவிடுவான்.போராடுகிற சங்கத்தின் உறுப்பினர்கள்,அல்லது பொறுப் பாளர்களை பொய்க் காரணம் காட்டி மாட்டி விடவேண்டுமென்று நினைத்தால் 'கூப்பிடு குமரேசனை' என்று ஒருகுரல் கேட்கும்.குளிச்சு முழுகி கோயிலுக்கு போயிட்டு வந்து திருநீற்று நெத்திய்யோடு  சூகேட்ஸும் கையுமாக புறப்பட்டுவிடுவான் அந்த சிஐடி 0009. இல்லாத காரணத்துக்காக ஒரு அப்பாவிக்கு இடைக்கால பணிநீக்க உத்தரவு கொடுக்க வைத்துவிடுவான்  ஜம்பவான் குமரேசன்.

அந்த ஜாம்பவானுக்கு பதவி உயர்வுமேல் பதவி உயர்வு கிடைத்துக் கொண்டிருந்தது.கேட்ட இடத்துக்கு மாறுதலும் கிடைத்தது. இப்போது அவன் ஒரு உயர் அதிகாரி. அவனுக்கு கீழே ஊழியர்கள் இருக்கனுமில்லையா. இருக்கிறவர்களில் பெரும்பாலும் பெண்கள்.அதில் ஒருவர் தாழ்த்தப்பட்ட பெண்.வந்த நாளில் இருந்து அவரை சீண்டுவது மட்டுமே தன் குலத்தொழில் என்பதை கறாறாகக் கடைப்பிடித்து வருகிறான்.சீண்டலின் அளவு நாளாக நாளாகக் கூடிக்கொண்டே வருகிறது.அதையெல்லாம் பட்டியலிட மனசு கூசுகிறது.இயல்பான மத்திய தர நடைமுறை அவரை கூடுதல் பொறுமைசாலி யாக்குகிறது.'பொறுமையென்னும் நகையணிந்து பெண்கள் பெருமை கொள்ளவேண்டும்'.பொறுமையிலே பூமகளாம்,அரசன் வீட்டுப் பொண்ணாக இருந்தாலும் அம்மா அகந்தை கொள்ளக்கூடாது எந்நாளும்'.இப்படியே சொல்லிசொல்லி சோத்திலிருக்கிற உப்பை மட்டுமல்ல பெண்களின் ரத்தத்திலிருக்கும் உப்புசத்தையும் உறிஞ்சி எடுத்து விட்டது சமூகம்.

அவன், அந்த ஜாம்பவான்  தனக்கு மனப்பிறழ்வு ஏற்படுகிற நேரமெல்லாம் ஏதாவது சொல்லித் திட்டுகிறான். இறுதியாக  ஒருநாள் புதிதாக வந்த ஒரு பெண் அலுவலரிடம்,பேசிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணை தாறுமாறாகத் திட்டுகிறான்.காரணம் அந்தப்புதிய பெண்ணுக்கு எழுந்து நின்று மரியாதை தரவில்லையாம்.புதியவரின் தாயார் வயதிருக்கும் இவருக்கு. ரெண்டுபேரும் அடுத்தடுத்த இருக்கையில் இருந்து வேலைபார்க்கும் அமைப்பு வேறு. அப்படியே மரியாதை கொடுக்க வேண்டுமென்றால் இவர் நாள் முழுக்க இருக்கையில் உட்காரவே முடியாது.இதையெல்லாம் சொல்லி ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்டபொழுது "கோபம் வந்தால் நான் பிறகு யாரைத்தான் திட்டுவதாம் ?"  என்று தனது அடாவடிக்கும் ஆதிக்கத்திமிருக்கும் நியாயம் கற்பிக்கிறான்.

நமக்கு நடப்பது சமூகப்பேரவலம் என்பது தெரியாதவரை அதை ஏற்றுக்கொள்கிறது அடிமைத்தனம். அந்த தளையிலிருந்து கல்வியும்,பொது அறிவும் கொஞ்சம் கட்டைத் தளர்த்திவிடுகிறது.தனக்குக் கொடுக்கவேண்டிய குறைந்த பட்ச அங்கீகாரத்தைக் கூட ஈவிறக்கமில்லாமல் சிதைக்கிறது இந்தச்சமூகம் என்பதைத் தெரிந்துகொண்டபின் ஏற்படுகிற வலி மிகக்கொடியது.அவர் இரண்டு இரவுகள் தூக்கமில்லாமல் கழித்திருக்கிறார். எதிலிருந்து  விடுபடப் படித்தாரோ, எதிலிருந்து  பாதுகாத்துக்கொள்ள வேலைக்கு வந்தாரோ அதுவே மீண்டும் கோட்டு சூட்டு மாட்டிக்கொண்டு கூடவே அலைகிறது. அவன் என்ன படித்தானென்று தெரியவில்லை.

"படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோன்னு போவான்"

என்று பாரதி பாடினான்.அது நடக்குமா என்பது தெரியவில்லை.ஆமா அவன அந்தச் சொறிநாய என்ன செய்யலாம் ?

0
---------------------------------------------------------------------------------------------------------------
 இந்தச் செய்தியைப் பதிவிட்ட பின்னாடி படிக்க நேர்ந்த மூன்று
பதிவுகள் சுஷ்மா திவாரியின் வழக்கு குறித்தது.

ஒரு வேற்று சாதி ஆடவனை காதலித்து மணந்ததால் வெறியேறிய  உயர் மிராண்டிச்   சகோதரன்  காதலனோடு  மூன்று பேரைக் கொன்று போட்டிருக்கிறான். 2004 ல்  நடந்த  இந்த குற்றத்துக்கு கிடைத்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பாகியிருக்கிறது.
அது குறித்து விமர்சனம் இல்லை. ஆனால் அதற்குக் கூறப்பட்ட விளக்கம் மிக மிக கொடூரமானது. கொலையை ஆதிக்க மனோபாவத்தோடு நியாயப் படுத்துகிறது. ஆழ்ந்த விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படவேண்டியஇதை அன்புத் தோழர்கள்

முகிலன்

http://pithatralkal.blogspot.com/2010/03/blog-post_13.html

ச.தமிழ்ச்செல்வன் 

மகளிர் தினமும் இரண்டு கதைகளும்

வெண்ணிற இரவுகள் கார்த்திக்




நீதிக்கு தண்டனை

 தங்கள்  பதிவுகள் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
அதை நண்பர்கள் அன்பு கூர்ந்து வாசிக்க வேண்டுகிறேன்.

----------------------------------------------------------------------------------------------------------------

13.3.10

புரிதல்

இரு சக்கர வாகனத்தில் இருந்து இடறி விழுந்துவிட்டார்.காலில் பலத்த காயம். கூட்டம் கூடிவிட்டது. காயத்திலிருந்து குருதி வழிந்து கொண்டிருந்தது.நடக்க இயலாமல் இருந்தார்.

அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான யோசனைகள் நடந்தது. மருத்துவமனைப் பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டது. அந்த மருத்துவமனைதான் பக்கத்தில் இருக்கிறது போகலாம் என்று முடிவானதும். காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டபடி மயங்கிப்போனார்.

கண்விழித்தவுடன் 'என்ன இங்க கொண்டுவந்தது யாருன்னு' கேட்டார்.கொண்டுவந்தவர் சங்கோஜத்தோடு அவர் வாழ்த்து மாலையை ஏற்கவந்தார். 'இன்னு ஒரு நிமிசம் எம்முன்ன நின்ன ஒன்ன கொன்னுருவன் ஓடிப்போ' என்று விரட்டினார்.ஆளாளுக்கு என்னவென்று கேட்டார்கள்.

 ''......''.மருத்துவமனைக்கு கொண்டுபோகாமல் காப்பாற்றுங்கள் என்று சொன்னதையும் மீறி அதே மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்ததை அந்த மருத்துவர் முன்னிலையிலே எப்படிச்சொல்லுவார்.

9.3.10

நான் ஆண் மதவிஷம் பாரிக்கப்பட்ட ஆண்.



அவர் வாரத்தில் ஒரு முறை வங்கிக்கு வருவார்.வருகிற நேரம் கிட்டத்தட்ட காஷ்  கவுண்டர் மூடுகிற நேரமாக  இருக்கும். வந்து ஒரு ஓரமாகக் காத்திருப்பார்.என்ன என்று கேட்டால் மொதலாளி வரணும் என்ரு சொல்வார்.
நாங்கள் எதோ முதல்லாளியிடம் இனாம் வாங்க காத்திருக்கிறார் என்று எங்கள் பேரேடுகளுக்குள்ளே கிடந்து  தப்பாய் கணக்குப் போடுவோம்.அவர் அதான் மொதலாளி வருவார்.நேராகப்போய் மேலாளர் இருக்கைக்கு எதிரே உட்கார்ந்து காசோலையைக் கொடுத்து.காத்துக் கொண்டிருக்கிற அந்த அம்மாவிடம் கையெழுத்து வாங்கிவிட்டு "நீ போத்தா" என்று அனுப்பி விடுவார். இப்படியே ஒரு இரண்டு வருட காலம் நடந்தது ஒரு நாள் அவசர அவசரமாக வந்த முதலாளி காசோலையைக் கொடுத்துப் பணம் கேட்டார். மேலாளர் மறுத்தார்.நயந்து கேட்டார்.மீண்டும் மேலாளர் மறுத்தார். வார்த்தை வலுத்து இருவருக்கும் சண்டையானது. காசோலையைக் கொடுத்தால் பணம் கொடுக்கவேண்டியது தானே இந்த டேமேஜர் தொல்லை தாங்கவில்லையே, என்று எழுந்து மத்யஸ்தம் பண்ணப்போனோம்.

"செக்குல கையெழுத்தில்லாமப் பணங்கொடுத்துட்டு நா வீட்டுக்குப்போகவா " மேலாளரின் கேள்வி ஞாயமானது. அதன் பிறகு விசரித்ததில்.வந்த முதலாளி பஞ்சாயத்து  எழுத்தர் (க்ளார்க்).தினம் காத்துக்கொண்டு நிற்கிற அந்தபெண்மனி தான் பஞ்சாயத்துத் தலைவர் என்கிற விபரம் தெரிந்தது.கொஞ்சம் கொஞ்சமாக லவட்டிக் கொண்டிருந்த முதலாளி மொத்தமாக லவட்ட, தணிக்கையில் பிடிபட்டு, பஞ்சாயத்துத் தலைவரை எச்சரித்து விட்டார்கள். ஆனால் பஞ்சாயத்து தலைவரோ க்ளார்க் முதலாளி பிஞ்சையில் வேலை செய்யும் கூலித் தொழிலாளி. அவரிடம் கணக்குச்சொல்லி கையெழுத்து வாங்க அல்லது அவர் வீட்டுக்கோ பஞ்சாயத்து ஆபிச்சுக்கோ போய் கையெழுத்து வாங்க வழிவழியாய் வந்த தர்மம் இடம் கொடுக்கவில்லை.சதுரங்க ஆட்டத்தில் ஒரே ஆளாய் தனக்காகவும் எதிரிக்காகவும் காய் நகர்த்துகிறதோடல்லாமல் அதைப் பார்வையாளனாகவும் மாறிச்சிலாகிக்கிற மனோபாவம் மலிந்து கிடக்கிறது.

இந்த உண்மைச் சம்பவம் எதோ துரோத காலத்தில் நடந்ததல்ல. கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி நடந்தது.இன்னும் கிராமங்களில் மிக இயல்பாக நடந்து கொண்டிருப்பது. பெண்,ஒதுக்கப்பட்டபெண் என்கிற இரண்டு ஒடுக்கு முறை  இங்கே ஒருசேர அரங்கேறுகிறது.பஞ்சாயத்துராஜ் சட்டம் கொண்டுவரும் போது பல பகடிகள் நடந்தது.ஜனகராஜ் கூட ஒரு தமிழ்ச் சினிமாவில் ஆனந்தராஜ்,சத்தியராஜ் போலில்லை இது பஞ்சாயத்துராஜ் என்று நம்ம விவேக் மாதிரி  கேலிசெய்து சம்பாதித்து விட்டுப்போனார்.உண்மையில் அந்தச் சட்டத்தின் நீள அகலம்,அதன்மூலம் விடுபட்ட ஜனங்களுக்கு கிடைக்கிற அதிகாரப்பகிர்வு, எல்லாம் அளப்பறியது. இந்த சனாதன கெடுபிடி
களுக்கு உள்ளிருந்து கூட பலப்பல முன்னேற்றங்கள் நடந்தவண்ணம் இருக்கிறது.

ஆடுமடுகளோடு கண்மாய்த் தண்ணீர் குடித்த ஜனங்களுக்கு குடிநீர்க்குழாய்.காலைக்கடனுக்கு இரவு வரை காத்திருந்து அவஸ்தைப்படும் பெண்களுக்கு பொதுக் கழிப்பறை.சிமெண்ட் சாலை.இரவில் திருமணம் தெருவில் பந்திவைத்த ஜனங்களுக்கு கல்யாண மண்டபம். இப்படியாக கிராம சமூகத்தை  சகதியிலிருந்து  தூக்கிவிடும் சின்னச் சின்ன முயற்சி நடந்துகொண்டே இருக்கிறது.பெப்சி கோக் நிறுவணங்களுக்கு அணுமதி மறுக்க இப்போதைய சூழலில் ஒரு இந்திய பிரசிடெண்டுக்கு அதிகாரம் இல்லாமல் போகலாம். ஒரு பஞ்சாயத்துப்பிரசிடெண்ட் நினைத்தால் அணுமதி மறுக்கலாம் என்பது அந்த பதவியின் மாண்பைச்சொல்லும் மிக வீர்யமான விஷயம். சமீப  காலங்களில் முன் மாதிரிப் பஞ்சாயத்தாகத் தேர்ந் தெடுக் கப்பட்ட மூன்றில் இரண்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.அந்த மற்றொன்று தலித்துக்கு ஒதுக்கப்பட்டது. என்பது இங்கே ஆழமாகப்பதிவு செய்யப்பட வேண்டியது. மதியூக மந்திரிகள் தெனாலிக்கும்,பீர்பலுக்கும் பின்னாலிருந்து பாட்டெழுதித் தந்தவர்கள் அவர்களின் துணைவியார். இந்தியா முழுவதுக்கும் இருந்த அரசர்கள் ஆள் அம்பு படை சேனைப் பரிவாரம் வைத்து வசூல் பண்ணி பரங்கியனுக்கு கப்பம் கட்டிக்கொண்டிருந்த போது கைப் பிள்ளையோடு வாளைச் சுழற்றியவள் ராணி லட்சுமிபாய்.

அவர்கள் தங்களுக்கும் ஆடவர்போல அணைத்து உரிமைகளும் வேண்டு மென்கிற கோஷம் உன்னதமானது. அது  இன்னொரு சுதந்திரப்போர்.என்ன கேவலம் என்றால் கேட்பது என்தாய்,என் சகோதரி, என்மனைவி.மறுக்கிற நான் மட்டும் எதையும் விட்டுக்கொடுக்காத ஆண், மத விஷம் பாரிக்கப்பட்ட ஆண்.

தோழர்களே நேற்று  நமது  மதிப்பு மிக்க மக்கள் சபை 33 சதவீதம் கொடுக்கலாமா வேண்டாமா என்கிற பிரச்சினையில் மீண்டும் வேஷ்டியை கிழித்துக் கொண்டிருக்கிறது. அன்னிய முதலீட்டுக்கு கேள்வியில்லாமல் ரேகை பிறட்டியவர்கள், அனு ஆயுதப் பரவல் சட்டத்துக்கு எதிராக மூச்சுவிடாதவர்கள். மைக்கைப் பிடுங்கிக்கொண்டு ஆண்மையைக்காட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

மெலிஞ்ச மாட்டுல தா ஈ ஒட்டும்,
நலிந்த கூரையைத்தான் காற்று கிழிக்கும்,
ஒத்த வீட்டுக்காரனத் தான் சண்டியர் அடிப்பான்.
இதெல்லாம் ஈனர்களின் கதை.

எதிர்காற்றில் சிறகடிக்கும்,
ஆற்றின் ஓட்டத்தை எதிர்நீந்திக் கடக்கும்,
பெரும் கூட்டத்திலும் அதிரும்
நேர்மையின் ஒற்றைக்குரல்.
இது போராளிகளின் வரலாறு.



8.3.10

நெட்டை மரங்களும், பெட்டை வீரமும்

கதாநாயகன் பறந்து பறந்து எதிரிகளைப் பந்தாடிக் கொண்டிருந்தார். கூட்டம் அவரைச்சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. சினிமாவிலும் சரி நிஜத்திலும் சரி அது தான் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம். கால் வைக்கக்கூட இடமில்லாத அந்த தனியார் பேருந்தில் ஒருவரை ஒருவர் விலக்கிக்கொண்டு எதாவதொரு கோணத்திலிருந்து  தொலைக் காட்சித் திரையில் பார்வையை பதிய வைத்திருந்தர்கள். காற்றை விடவும் கெட்டிக்காரத்தனமாக நடத்துனர் நெரிசலுக்கு இடையில் நகர்ந்து முதலாளிக்கு அடுத்த பஸ் வாங்கப் பணம் சேகரித்துக் கொண்டிருந்தார். அந்தப் பேருந்துக்குப் பின்னால் அரசுப்பேருந்து குறைந்த பயணிகளோடு திணறித்திணறித் தொடர்ந்து வந்தது. சர்வ வல்லமையும் படைத்த அரசு நடத்தும் போக்குவரத்து, லட்சக்கணக்கான பேருந்தும் ஊழியர்களும் கட்டமைப்பும் கொண்ட அது, பல நேரங்களில் தனியார் பேருந்துகளுடன் தோற்றுப் போவது இயற்கைக்குப் புறம்பான, விஞ்ஞானத்துக்கு விரோதமான வினோதம்.
 
சிவகாசியில் புறவழிச்சாலை நிறுத்தத்தில் ஒன்பது மணிப் பரபரப்பு உச்சத்தில் இருந்தது.பட்டாசுத் தொழிலளர்களை ஏற்றிக்கொண்டு போகிற பணியாளர் வாகனத்துக்கும், ஆங்கிலப்பள்ளிக்கும் தொழில் நுட்பக் கல்லூரிகளுக்கும் மாணவர்களை அழைத்துக்கொண்டு போகிற பேருந்துக்கும் பெரிதாக வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது. பட்டாசைக் கொளுத்தி ஓய்ந்தது போல நாள் முழுக்கப் புழுதி மண்டிக்கொண்டிருக்கும் சாலைகளில் இயல்பான வேகத்தடையாகப் பள்ள ங்கள் இருக்கும்.  அச்சு வேலைக்கான ப்ளாக் மேக்கிங் தகரங்களை  டீவிஎஸ் 50 யில் முன் பகுதியில் வைத்து அணைத்துக் கொண்டு போகிறவர்கலைப் பார்த்தால், பறவைக் காவடியில் பறக்கிற பக்தனைப் போலத் தோன்றும். சடாரென்று சலையின் குறுக்கே பாய்ந்து திரும்புகிற அவர்களை கெட்ட வார்த்தையில் திட்டிக்கொண்டு ப்ரேக் போடுகிற பேருந்து ஓட்டிகள்.


சூட்கேஸ், கைப்பையோடு நடக்கிற எவரையும் பின் தொடர்ந்து அவர்களிடம் பேச்சுக் கொடுக்கிற காலண்டர், பட்டாசு தரகர்கள், இரண்டு கட்டிடங்களுக்கு ஒன்றாக வியாபித்திருக்கும் டீக்கடைகள், எத்தனை பேர் வந்து குடித்தாலும் குறையாத பால் சட்டி, எண்ணெய் பிசுக்கும்,  தூசியும் கலந்த வடைகள். என்று வர்ணிக்க முடியாத விசயங்கள் நிறைந்த தமிழகத்தின் குட்டி ஜப்பான். கருப்பாக இருப்பவனுக்கு வெள்ளைச்சாமி எனப்பெயர் வைத்து சந்தோசப்பட்டுக் கொள்ளும் தமிழகம்.
 
அப்போது  இரைச்சலைக் கடந்து  பெரிதாக ஒரு சத்தம் வந்தது. ஒரு பெண்ணின் அழுகுரல்.  சாலையின் விளிம்பில்  தரையில் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டியபடி திமிறிக்கொண்டு  அலங்கோலமாகக் கிடந்தாள். ஒரு ஆண் அவள் தலை முடியைப்பிடித்து அடித்துகொண்டிருந்தான். அவன் அவளது கணவனாகத்தான் இருக்கவேண்டும். வெறியும் போதையும் கலந்த குரூரம் கண்களிலிருந்து பிதுங்கிக்கொண்டிருந்தது. ஒரு காலத்தில் காப்பிச்சட்டி சுட்டதற்காக மருத்துவமனைக்கு அழைத்துப் போயிருக்கலாம். இரவில் நக்கக் கீரல் பட்டதற்காக பகலில் அவளுக்குப் பிடித்த சினிமாவுக்கு அழைத்துப் போயிருக்கலாம். அந்த அன்பும் அன்னியோன்னியமும் தெருப்புழுதியில் அடியும் வசவுமாக காட்சி மாற்றப்பட்டிருந்தது.  கூட்டம் கூடியது சுவாரஸ்ய மிகுதியில் வாகனங்களும் கூட நின்று வேடிக்கை பார்த்தது. திரைப்படங்களில் வருவது போலவே தாங்களாகவே ஒரு பாது காப்பு வளையம் அமைத்துக் கொண்டு வேடிக்கை பார்த்தார்கள். வேடிக்கை பார்த்தவர்கள் அனைவருமே வேஷ்டி கட்டியவர்கள், கால்சராய் அணிந்தவர்கள்.

அடிபட்டுக்கொண்டிருக்கிற பெண்ணின் அழுகுரல் எல்லா இரைச்சலையும் தாண்டி ஒலித்துக்கொண்டே இருந்தது. அழுகை நிராதரவின் வெளிப்பாடு.  அதற்காக வருந்துவது மனிதாபிமானம். அதையும்தாண்டி ஆதரவுக்கரம்
நீட்டுவதற்கு மனிதாபிமானம் குழைத்த துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சலோடு கூட்டத்துக்குள்ளிருந்து ஒருவர் வந்தார். அடித்துக்கொண்டிருந்தவனை இடது கையால் தலை முடி பிடித்து கீழே தள்ளி விட்டார்.  சுதாரித்து எழுந்த அவன் ஒரு அரிவாளை வெளியில் எடுத்து மிரட்டினான். சுற்றி நின்ற கூட்டம் இப்போது கிராபிக்ஸில் காண்பிக்கிற மாதிரி சடுதியில் காணாமல் போனது.

''' வெட்டுடா தேவிடியாப் பயலே எத்துன பேர வெட்டுவ ''
.
லேசாகத் தயங்கியவனின் பிடதியில் இப்போது  அடிவிழுந்தது. அவன்கையிலிருந்த ஆயுதம் கீழே விழுந்தது.
தயக்கம் கலைந்தது இன்னும் சிலர் செத்த பாம்பு அடிக்கவந்தார்கள். அவன் கீழே கிடந்தான். ஆட்டோ  வந்தது. போலீஸ் வந்த பின்னால் தைரியமாக இன்னும் அதிகமான கூட்டம் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. காப்பாற்ற வந்த அந்த அம்மா தனது மார்ச் சேலையைச் சரிசெய்தபடி கூட்டத்ததைப் பார்த்தார்.

எல்லாருடைய மூக்குக்கும் உதட்டுக்கும் நடுவில் வித விதமான அளவுகளில் முடிகளிருந்தது. இலக்கணங்கள் எழுத்து வடிவில் இருக்கிறது, வாழ்க்கை இயல்பானதாகவே எப்போதும் இருக்கிறது.



(  இது ஒரு மீள்பதிவு. இதுதான் என்னுடைய முதல் பதிவும். )



7.3.10

சிறுகதை வாங்கப்போய் சிநேகம் வாங்கி வந்தேன். எழுத்தாளர் பா.ராமச்சந்திரன் நினைவுக்கு.


தேனருவி, மனித சஞ்சாரமும் வாகனப் புகையும் நீக்கப்பட்ட சாலை வழியே சருகுகளை மிதித்துக்கொண்டு மேலேறும்.வானுயர்ந்து அடர்ந்த மரங்களில் இருந்து பறவைகள் புதுவரவை உற்றுக் கவனிக்கும் பயணம். அரசுக்குச் சொந்தமான அந்த விருந்தினர் மாளிகையில் சிறுகதைப் பட்டறை.வாத்தியார்களாக  எங்கள் எஸ்.ஏ.பி,மேலாண்மை பொன்னுசமி,காஸ்யபன்,கந்தர்வன்,தமிழ்ச்செல்வன்,முத்துநிலவன். மாணவர்களாக ஒரு பெரும் பட்டாளம். எனக்கு அப்போது எதுவும் எழுதுவதில் நாட்டமில்லாமல் இருந்தது.மேடைப்பேச்சு,கவிதை,வையத் தலைமை ஏதும் எனக்குச் சுட்டுப் போட்டாலும் வராது எனத் தெரிந்த சாத்தூர் தமுஎச எப்படியாது பொளைச்சுப்போ என்று என்னை குற்றாலம் சிறுகதைப் பட்டறைக்கு அனுப்பியிருக்க வேண்டும்.அல்லது யாரவது கடைசி நேரத்தில் வரமுடியாமல் போனதால் என்னை பதிலியாகக்கூட அனுப்பியிருக்கலாம்.காற்று வாங்கப்போய் கவிதை வாங்கி வருவதில்லையா.அது போல நான் சிறுகதை வாங்கப்போய் சிநேகம் வாங்கி வந்தேன்.

தலைவர்களோடு சிலர் உரசிக்கொண்டு போனார்கள். எங்களுக்கு தெரியாத புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் சொல்லிச் சிலாகிக்க அதில் ஒட்டாமல் தனிமைப்பட்டுப் போய் நின்றேன். எல்லா இடத்திலும் எனக்காக கடைசிப் பெஞ்சு காத்திருக்கும். அங்குபோய் தயங்கித் தயங்கி உட்கார்ந்தேன். அங்குதான் இப்போதைய தமுஎச தென் சென்னைச் செயலாளர் தோழர் சைதை ஜெ,கவிஞன் நாவே அருள்,மீனா,மு.முருகேஷ்,மூர்த்தி ஆகியோரோடு அவனைப் பார்த்தேன்.நாலறை அடி இருப்பான்.கொழு கொழுவென்று,நல்ல சிகப்பு நிறம். சென்னைத் துறை முகத்தில் கண்டெடுத்து தமுஎச குற்றாலத்துக்கு அனுப்பியிருந்தது. புகையைவிட்டு நெரிசலை விட்டு குற்றாலத்தில் மூன்று நாள்தங்க வந்திருந்த அவன் அங்கு கிடக்கிற புல்பூண்டு எல்லாவற்றையும் அதிசயமாகப் பார்த்தான். எங்களோடு சேர்ந்து புகைப்பிடித்து ஒத்துவராமல் இருமினான்.அருவிக் கரையின் ஓரத்தில் உட்கார்ந்து அள்ளிக் குளித்தான் நானும் ஜேவும் அருளும் கை கொட்டிச் சிரித்தோம்.ஒதுங்கி அவரவர் படித்த புத்தகங்களைப் பட்டியலிட்டோ ம். யாரும் குமுதம் ஆனந்த விகடனைத் தாண்டி வரவில்லை.

ஒன்றாய் எழுந்து,ஒன்றாய் நடந்து,காத்திருந்து சாப்பிட்டு வாலிபக் காலத்தில் எங்கள் பள்ளிக்கூட நினைவுகளை மீட்டெடுத்தோம் புரிதலோடு.ஒரு காலை நேரம் தோழர் எஸ் ஏபி யோசனையில் எழுமிச்சை டீ தயாரானது.அவன் குடிக்கவே இல்லை.தோழர் காஸ்யபன் வகுப்பெடுத்தால் ஒரே கும்மாளமாகி விடும்.உடனடி சிறுகதை,அதற்குப்பரீட்சை,மார்க் இப்படி.நாங்கள் நால்வரும் பெயிலாகி இருந்தோம்.நாங்கள் சாராக அறிமுகமாகி,தோழராகத் தொடர்ந்து டே காமு என்று கூப்பிடும் நெருக்கமானோம். செல்போன் இல்லாத அந்த காலத்தில் சென்னையில் இருந்து ஒரு முறை ட்ரங் கால் போட்டுக் கூப்பிட்டான்.பின்னர் நடந்த தமுஎச மாநாடுகளில் அவன் என்னைத் தேடியதும்,சென்னை போனால் நான் அவனைத் தேடுவதுமாக காலம் கடந்தது. இரண்டாயிரத்துக்குப் பிறகு, ஒரு பணிரெண்டாண்டு தாமதத்தில் அவனும் ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டிருந்தான்.

'அப்பாவின் பெருவிரல் ரேகை' ஒரு சென்னை மாநகராட்சிப் பள்ளியின் பள்ளிக்கூட நினைவுகளும், ஒரு சென்னை நகரக் கடைக்கோடி நடுத்தரக் குடும்பத்து புழக்கங்களும் நிறைந்த கதையாடல்கள் அப்பாவின் பெருவிரல் ரேகை.அகால மரணமடைந்த தந்தையின் வேலைக்கு வாரிசாகி துறைமுகப்பணிக்குப் போனவன். அலுவலக நெடிக்குள் அடங்கிப்போகாத அவனுக்கு தொழிற்சங்கம்,எழுத்து மிகப்பெரும் விடுதலை தேடித்தந்தது.சென்னை குறும்பட முகாமில் பார்த்து கையைப்பற்றிக்கொண்டான்.தோளில் கைபோட்டான்.குடும்பம் பற்றிக்கேட்டான்.அன்றே வீட்டுக்குப் போய் தனது சிறுகதைப் புத்தகத்தை கொண்டுவந்து சீர் கொடுப்பது போல எனக்குக் கொடுத்தான்.பக்கத்திலிருந்த அவனுக்கு நெருக்கமான தோழர் கேட்டதற்கு மறுத்து 'இது காமுவுக்கு,வேனுமின்னா நீ காசு கொடுத்து வாங்கிக்க' என்று சொன்னான்.

ராஜஸ்தான் போகும்போது நாக்பூர் ரயில் நிலையத்தில் தோழர் காஸ்யபனைப்பார்த்தேன்.அப்போது அவரிடம் நான் இப்படித்தான் அறிமுகமானேன் தோழர் என்னைத் தெரிகிறதா குற்றாலம் சிறுகதை முகாமில் சைதை ஜே நாவே அருள்,பா.ராமாச்சந்திரன் ஆகியோரோடு வந்திருந்தேன் நீங்கள் எனக்கு வாத்தியார் உறவு என்று சொன்னேன்.அவர் பா.ராமச்சந்திரனையும் அவனது எழுத்து பற்றியும் சிலாகித்தார்.அந்த ஐந்து நிமிட சந்திப்பில் நாக்பூர் ஆரஞ்சும்,வாழைப்பழமும் தோழமையுமாக நிரப்பிக் கொடுத்த பை கணத்துக் கிடந்தது. அந்த நேரம் முதல் இன்று வரை மூன்றுநாளுக்கொருதரம் அலைபேசியில் அழைத்துப் பேசும் அவரின் தழுதழுத்த குரலில் கூடுதல் ஈர்ப்பிருந்தது. வளர்த்தால்தான் தந்தையா?.

ராஜஸ்தானிலிருந்து வரும்போது இரண்டு துக்க செய்தியைச் சொன்னார்.ஒன்று தோழர் உரா.வரதராசனின் மரணம்.சடசடவென ஒரு ஆலமரம் ஒடிந்து விறகானதுபோல நொந்து போகும்போதே,தோழன் எழுத்தாளர்.ராமச்சந்திரன் மரணம்..சென்னை வரும்வரையில் நினைக்கிற நேரமெல்லாம் கண்ணீர் பிதுங்கியது.இறந்தது யார் ஒங்க ஒறவா என்று கேட்டுவிட்டு தம்பி அருண் சிரித்தான்.நட்பென்பது அதுக்கும் மேலில்லையா ?

சென்னை வந்து சைதை,ஜே அருள் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை.வீடு வந்த மறுநாள்.புத்தக அலமாரியை நோண்டும்போது 'என்னடா காமு'. உள்ளிருந்து குரல் கேட்டது.அப்பாவின் பெருவிரல் ரேகை புத்தகத்தை எடுத்தேன்.எனது தோளில் கைவிழுந்தது போலிருந்தது.என் கண்ணீரைப் பார்த்து பயந்து போன அவளுக்கு அவனைச் சொன்னேன்.ரொம்பப் பழக்கமா என்று கேட்டாள்.தழல் வீரத்தில் குஞ்சென்றும்  மூப்பென்றும்  உண்டோ  ?

தலைமுறைகளைத் தவற விட்டவர்கள்.

தகுதிகான் தேர்வில்
தோற்றுப்போன
கலைச்செல்வியும்

தொண்ணூறு சதவீத
மதிப்பெண்ணிருந்தும்
தகப்பனின் காசநோயால்
வீடு திரும்பிய
மாரீஸ்வரியும்

தீப்பெட்டித்
தொழிற்சாலையில்
படிக்கிறார்கள்
வாழ்க்கையை.

அங்கே
கைப் பிள்ளையைப்
பார்க்கச் சொல்லிவிட்டு
கழிப்பறை செல்லும்
முன்னோடி
காளீஸ்வரியிடம்
படிக்கிறார்கள்
வறுமையை.

அடுத்த
தலைமுறையிலாவது
அவர்களுக்குப் புரியும்
பெண்ணியமும்
திண்ணியமும்


23.11.2008

6.3.10

வெள்ளைப்புலிகள் - ( Aravinth adika's - White Tigers ) - புக்கர் பரிசு பெற்ற நாவலின் நுழைவாயில்.

வொயிட் டைகர்ஸ் புக்கெர் பரிசு வென்ற இரண்டாவது இந்தியர்  அரவிந்த் அடிகாவின் புதினம்.இந்தியாவும் சீனாவும் தங்களைப்பொருளாதார வல்லரசுகளாக நிலை நிறுத்திக் கொள்ள நடக்கிற போட்டியின் பின்னணியில்,உலகமயத்தின் விஷ வேர்கள் அமெரிக்காவிலிருந்து படர்ந்து வந்து இந்தியக்கிராமங்களிலும் ஊடுறுவும் இந்தக்காலத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைப்படம் பிடிக்கிறது அந்தப்புதினம். இந்தியாவின் துயரார்ந்த பெரும்பிணிகள் பற்றிப்பேசுகிறது.

நூற்றாண்டுகளாக சொஸ்தப் படுத்தமுடியாத ஜாதியக்கொடூரம் அதைத் தக்கவைக்கிற மத ஏற்பாடுகள் அதனால் ஏற்படுகிற சரி செய்யப்பட முடியாத பொருளாதார ஏற்ற இறக்கங்கள் குறித்து பேசுகிறது. ஒரு கிராமத்துப் பள்ளியில் படிக்கிற மாணவனுக்கு ஒட்டுமொத்த பள்ளியும் அதன் ஆசிரியர்களும் உயர்ஜாதித் திமிர்கொண்ட வக்கிர மிருகங்களாக வாய்க்கப்படுகிறது.படித்து வெளியேறுகிற அவன் பின்னர் தன்னை ஒரு முஸ்லீமாக மாற்றிக்கொள்கிறான்.தனக்கு நேர்ந்த ரணமும் அவமானமும் வெறியாக மறிப்போக அவன் இந்த சமூகத்துக்கு தீவிரவாதத்தைத் திருப்பித்தருகிறான்.

இந்தியாவுக்கு வந்துவிட்டுத் திரும்பிப் போன சீனப் பிரதிநிதி வென் ஜியாபா வுக்கு பல்ராம் ஹால்வாய் என்கிற தொழிலதிபர் எழுதுகிற கடிதங்களின் தொகுப்பாக நீள்கிறது வொயிட் டைகர்ஸ்.பீகாரிலுள்ள லக்ஸ்மன்கார் எனும் கிராமத்தின் இருட்டு வாழ்க்கையின் ஒரு பிரதிநிதியாக இருக்கும் ஒரு சைக்கிள் ரிக்ஷாக்காரனின் குடும்பத்தில் பிறக்கிற பல்ராம்.படிப்பை விடவும் தேநீர்க்குவளை கழுவ,மேஜைதுடைக்க,அடுப்பெறிக்கத்தேர்ந்து கொள்கிறான். அந்த தேநீர்க் கடையிலிருந்து தெருக்களை, நகரத்தை,உலகத்தைப் படிக்கிறான்.தனது தகப்பனின் ரிக்ஷா தனக்குக் கிடைத்தவுடன்,அதிலிருந்து இந்த தேசத்தின் கரடு முரடான நீள அகலங்களைப் படிக்கிறான். தனது கிராமத்துப் பெரும்பணக்கரக் குடும்பத்துக்கு ரிக்சா ஓட்டியாக தன்னை அடிமைப்படுத்துவதன் மூலம்  அங்கிருந்து டெல்லிக்கு இடம் பெயர்கிறான். ஒளிர் நகரமான டெல்லியின் கால்செண்டர்கள்,வியாபாரா வளாகங்கள்,போன்ற பளபளப்பான பகுதிகளுக்கு தனது எஜமானர்களை அழைத்துச் செல்லும் போது அவற்றின் பெருமைகளை அறிகிறான்.

தன்னை அந்த இடங்களின் வைத்துப் பொருத்திக்கூடப் பார்க்கமுடியாது என்பதை உணர்கிறான்.ஆனாலும் பணம் பகட்டு போதை யின் ருசியறிய ஆசைகொள்கிறான்.அதை அடைகிற வழி எல்லாமே அவனுக்கு அடைபட்டுக்கிடக்க தனது எஜமானானின் மகன் அசோக்கைக் கொலைசெய்வது ஒன்றே வழியெனத்  தீர்மானிக்கிறான். அமெரிக்காவி லிருந்து  திரும்புகிற அசோக்கிற்கு இந்திய லஞ்சமும், நெருக்கடியும் ஒத்துப் போகவில்லை.அதுவே அவன் கொலை செய்யப்படுவதற்கும் காரணமாகி பல்ராமே தொழிலதிபராகிறான்.

கிட்டத்தட்ட ஒரு பாண்டசிக் கதை போலத்தோன்றும் இந்தக் கரு.இந்திய பொருளாதாரம்,தனியார் நிறுவன வளர்ச்சி புரண்டோ டும் சாக்கடை,ஆரவாரத்தோடு முன்னேறும் மக்கட் பெருவெள்ளம் எல்லாவற்றையும் எதிர்த் திசையிலிருந்து அனுகுகிறது.பெருந்தொழில் நிறுவணங்களின் இலச்சினைகளில் சுற்றிவரும் உண்மை உழைப்பு நேர்மை என்கிற கோஷங்களை அதன் போக்கிலே போய் ஒத்திசைக்காமல் பிடுங்கித்தரையில் போட்டுத் தோலுரிக்கிற எதிர்ப்பாட்டும் எள்ளலும் நிறைந்த புதினம்.

5.3.10

தலையணையை மாற்றுவதால் தலைவலி தீராது

இந்தியன்,வெஸ்டர்ன்,அட்டாச்டு என்று ரகரகமாய் வடிவமைத்துக் கொள்ளவும்,அதை அப்போதைய புதுமாதிரிகளாய் அலங்கரித்துக் கொள்ளமுடிகிறது, வாசனை திரவியம் ஊற்றி மணக்க வைக்கமுடிகிற மக்களுக்கு.சேரிகளையும் கிராமங்களையும் ஒட்டியிருக்கும்  நடை பாதைகளைக் கடப்பது முகஞ்சுழிக்க வைக்கிறது. ரயிலடிக்குப் பக்கத்தில் அட்டாச்டு பாத்ரூம் அளவுக்கு இருக்கும், தகரம் வைத்து வேய்ந்த குடிசைக்குள் கால் நீட்டிப்படுக்கவே முடியாத ஜனங்களிடம் சானிடரி வேர் விற்கிற பிரதிநிதிகளுக்கு வேலையில்லை.ஆனாலும் ரெண்டு வகையான மக்களுக்கும் புலன்கள் ஐந்துதான். கூடக்குறைய இருக்க வாய்ப்பில்லை. அது தெய்வப் பிறவிகளுக்கும் சேர்த்துத்தான்.

மூடிய வெள்ளையங்கியானாலும்,போர்த்திய காவியானாலும் உள்ளே இருப்பது மனித உறுப்புக்கள். பசிக்கும், வியர்க்கும், இளைக்கும், விடிகாலையில்  கழிப்பறை தேடும். கடவுளும்  இதில் விதி விலக்கல்ல.

போப்பாண்டவர் கூட மனித மந்தையிலிருந்து  தான் தேர்ந்தெடுக்கப் படுகிறார். அதை அப்போதே தெரிந்துகொண்ட மேற்குலகம் இதிலிருந்து விடுபட்டு புரோட்டஸ்டண்டுகளாக மாறி குடும்பங்களுக்குள் குடி பெயர்ந்தார்கள். தேங்காயுடைத்த நெய்வேத்திய தண்ணிரை கருவறையிலிருந்து  வெளியேற்ற செலதரைக்குழிகள் செய்தது கடவுளால் ஆகாத காரியத்துக்கு மனிதன் செய்த கைங்கர்யம். ஒரு சாதாரண ஆட்டக்காரி மேனகையிடம் மயங்கிப்போனது முக்காலமும் உணர்ந்த முனிவனில்லை ஐம்புலன்கள் குடியிருக்கும் மனிதன்.அல்லது ஒரு பெண் பெற்றெடுத்த சமூக விலங்கு.விஸ்வாமித்ரனும் வித்யானந்தனும் மனிதர்கள் என்பதை மறைக்கிற மாயை தான் மதம்.

அந்த வங்கிக்கு ஒரு பெரிய அறிவாளி தொண்ணுறுகளில் சேர்மனாக வந்தார்.அப்போது தான் நாற்பது சதவீத வட்டியும் ஒரு தங்கக் காசும் தருகிறேனென்று மோசடி நிதி நிறுவணங்கள் பனை மர உயர பேனர்கள் வைத்து மயக்கிக்  கொண்டிருந்தார்கள்.ஒரு வங்கியையே நிர்வகிக்கிற அவருக்கு இது எப்படி சாத்தியமாகும் என்று சிந்திக்க முடியவில்லை. பகுத்தறிவு என்பது ஏட்டுப் படிப்பிலும்,கோட்டு சூட்டுகளிலும் இல்லை. ரமேஷ் காரில் கொண்டுபோய் கொட்டினார்  லட்ச லட்சமாய்.போட்டபணத்தை கேட்கப் போனவர் திரும்பவந்து காய்ச்சலோடு படுத்தார். வீட்டில் மந்திரித்து திரு நீறு போட்டார்கள். பணம் சம்பாதிக்கிற குறுக்கு வழிகளில் இதுபோலவே தான் கார்ப்பரேட் சாமியார்கள் வந்து சம்பாதித்துவிட்டு  ஓடிப்போக  ஓடிப்போக பிரிதொருவர் முளைக்கிறார். எல்லாமே மூட நம்பிக்கைதானே.

ஓபென் சர்ஜரி,ஆஞ்சியோ ப்ளாஸ்ட்,பேஸ்மேக்கர்,செயற்கை உறுப்புக்கள் என்று  விஞ்ஞானம்  உயர்ந்து கொண்டிருக்கும் போது ஹார்ட் அட்டாக் வந்தவரை பீடத்தின் முன்னால் போட்டு ப்ரேயர் பண்ணுவது எவ்வளவு முட்டாள் தனமோ. அது போலவே எங்கேயும் இல்லாத ஆன்மாவை உடலெங்கும் தேடுவது. நேற்று நடுத்தர குடியிருப்புப் பகுதி ஒன்றில் போஹிப் பண்டிகை நடந்தது. சாமிப்போலி நித்யானந்தனின் படங்கள் கொழுத்தப்பட்டது, தொடர்பான பொருட்கள் குப்பைகளில் வீசி எறியப்பட்டது.பின்னர் அந்த இடத்தில் வேறு,வேறு குப்பைகள் வந்து உட்கார்ந்து கொண்டன. தலையணைகளை மாற்றுவதால் பீடித்திருக்கும் தலைவலி தீர்ந்து போகாது.

கிராமத்திலிருந்து ஒருவர் வீட்டுக்கு வந்தார் சன் செய்திகளைப் பார்த்தார்.' கருமம்  இதெல்லாமா செய்தியாப் போடுவான்' என்று சொல்லிவிட்டு வெளியே போய் பீடி பற்றவைத்துக் கொண்டார்.

4.3.10

யாரிடமிருந்தும் கற்றுக்கொள்ளலாம் வாழ்வியல் பாடத்தை

அவன் முகத்தை மைகொண்டு வரைந்த மீசை மறைத்திருந்தது. நெற்றியில் ஒரு பொட்டும் கூட வைத்திருந்தான்.கையில் ஒரு சின்ன டோ லக் வாத்தியம்.தோளில் ஒரு தொங்குபை. அவனுக்கு வயது பத்துக்கூட இருக்காது.
ஜெய்ப்பூர்- கோவை துரித ரயிலின் எட்டாவது பெட்டியின் கழிப்பறைப் பக்கத்தில் உட்கார்ந்தான்.காலைக் கையை நீட்டி சோம்பல் முறித்துக் கொண்டான்.தோளில் கிடந்த பையைத் திறந்து ரூபாய்த் தாள்களை அடுக்கினான்,சில்லரைகளை எண்ணினான்.

ரயில்வே காண்டீனில் டீ விற்கிறவர் வந்தார்.டீ பாத்திரத்தை அவனருகில் வைத்துவிட்டு கூடவே உட்காந்தார்.இருவரும் பரஸ்பரம் பேசிக் கொண்டார்கள் ஒரு டீக்கான காசை எடுத்துக் கொடுத்துவிட்டு டீயை வாங்கி நிதானமாக மிக நிதானமாக குடித்தான்.டீயைப் பக்கத்தில் வைத்துவிட்டு ரூபாய் நோட்டுகளை ஒரு சுருக்குப்பையில் திணித்து அதை  இடுப்பில், அரைஞான் கயிற்றோடு சேர்த்து இறுகக் கட்டிவைத்தான். பயணச்சீட்டு பரிசோதகரும் வந்து அவனிடம் எதோ பேசிவிட்டுப்போனார்.

அவனை விட வயது குறைந்த பெண்குழந்தை ஒன்று ஏழாவது பெட்டியிலிருந்து அவனை நெருங்கி வந்தாள்.அவனது தங்கையே தான்.அவள் கையில் ஒரு எவர்சில்வர் தட்டு இருக்கிறது அதில் சில ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் நாணயங்கள் கிடந்தது. அவனது முகத்து நேரே அவள் நீட்டினாள். அவன் அதில் கிடந்த காசுகளை அளந்தான். அவள் அருகே வைக்கப்பட்டிருந்த தேநீர்க் குவளையை அளந்தாள்.இன்னும் அதிகம் வேண்டும் என்பது போல முகபாவனை மாற்றி அவளை எட்டவது பெட்டிக்குள் அனுப்பிவைத்தான். அப்போது பயணிகள் பகுதியிலிருந்து ஒரு குழந்தை ஓடி வந்தது. பின்னாலேயே அதன் தாயும் வந்தாள். குழந்தையை கை நீட்டி மறித்து,அதன் தாய்க்கு ஒரு  அறிவுறை  சொன்னான்.

காய்கறி சாலட் விற்கிற இன்னொரு பதினான்கு வயதுக்காரன் வந்தான். அப்போது மதியம் மணி ஒண்ணேகால் இருக்கும்.தேநீர் அவனது பசியை அடக்கவில்லை போலும்.அதையும் வாங்கினான்.சம்மணமிட்டு உட்கார்ந்து உணவுக்கு கொடுக்கிற மரியாதையோடு அதை ஒவ்வொரு துணுக்காக எடுத்து தின்றான்.மறுபடியும் அவன் தங்கை வந்தாள். இப்போதும் கூட சில்லறைத் தட்டை அவன் முன் நீட்டி விட்டு,வெள்ளரி துணுக்குகளால் எச்சில் ஊறினாள். விரட்டி விட்டு நிதானமாக சாப்பிட்டான்.அவள் தட்டை முன்னாள் நீட்டிக்கொண்டு தலையைப்பின்னால் திருப்பிக்கொண்டே நடந்தாள்.

அவன் முன்னாலிருந்த பாத்திரத்தில் கிடந்த பதார்த்தம் காலியாக,காலியாக விரட்டப்பட்ட பெண்குழந்தையின்
பசி ஏக்கம் நம்மைத் தொற்றிக்கொள்ள, நமக்கு அவன் மேல் வெறியேறியது.உலகம் இவ்வளவு கொடூரமானதாக இருக்கக்கூடாது.ரயிலின் ஓசை அபசுரமாக ஒலித்துக் கொண்டே நிமிட நிமிடமாக நகர்ந்தது.எனக்கு முள்ளும் மலரும் ஷோபாவும்,ரஜினியும் நினைவுக்கு வந்தார்கள்.அப்படியில்லையே இந்தச்சிறுவன் இதென்ன கொடுமை
என்று நெஞ்சு பதறியது. நான் சாதாரண மனிதனல்ல எனக்கு எல்லோரையும் விடக்கூடுதலாக மனிதாபிமானமிருக்கிறது என்னும் கர்வம் வேலையைக்காட்ட ஆரம்பித்தது. தட்டு பதிக்குமேல் காலியாகிவிட்டிருந்தது.நான் எழுந்தேன், அவனும் எழுந்தான் ஒவ்வொன்றாக எடுத்து தோளில் போட்டுக்கொண்டான் மீதியிருந்த பேப்பர் தட்டோ டு பதார்த்தத்தைச் சுருட்டிக்கொண்டான்.அங்கிருந்து மறைந்தான்.

சற்று தாமதத்தில் எட்டாவது பெட்டிக்கும் ஒண்பதாவது பெட்டிக்கும் நடுவில் அந்தப் பெண் குழந்தை அதே
போலச் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தது.அவன் ஒண்பதாவது பெட்டியில் தட்டேந்திக் கொண்டிருந்தான்.

ஏ...ஞ்  செல்லம்,
ஏ...ந் தங்கம்    என்றும்
அடச்சீக்..கழுத  என்றும்
அவரவர்க்கான
மொழியிருக்கிறது
அன்பு காட்ட.

ஒன்று போலல்ல இன்னொன்று. வாழ்க்கை அதனதன் இயல்பிலே போய்க்கொண்டிருக்கும்.

3.3.10

கம்பிவேலிகளைத் தாண்டும் அன்புச்செடிகள்

போபால் தாண்டியதுமே குளிர் எல்லாவற்றையும் ஊடுறுவி சில்லிட்டது. அந்த இரவை பயணிகள் வெகு சீக்கிரம் எதிர் கொண்டார்கள். ஒன்பது  மணிக்குள்ளாகவே  ஸ்வெட்டர்,போர்வை சகிதமாக சுருண்டது ரயிலின் பெட்டிகள். பிரதேசங்களை மட்டுமல்ல சீதோஷ்ணங்களையும் ஊடறுத்து ரயில் ஓடிக்கொண்டிருந்தது.அதன் பிறகான நிறுத்தங்களில் வழக்கமான 'கரம்சாய்' சத்தம் கேட்கவில்லை.கையில் இருந்த இரண்டாம் ஜாமங்களின் கதை மிக மெதுவாக புரண்டு கொண்டிருந்தது.காலையில் ஜெய்ப்பூர் இறங்கிவிடுவோம் என்கிற குதூகலம்.எல்லா சிறுபிராயத்து பயணங்களையும் அவ்வப்போது மேலே கொண்டுவந்தது.

எதிரே இருந்த மேல் பெர்த்தில் தன் தாயின் கதகதப்பில் உறங்கிய குழந்தையின் கழுத்து பெர்த்தைவிட்டு தொங்கியது. அந்த மங்கலான ஒளியில் ஒரு சின்ன பயம்  தொற்றிக்கொண்டது. அந்தக்குடும்பம் மொத்தமும் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தது. அவர்களை எழுப்புவதா,தலையை தூக்கி சரிசெய்வதா இல்லை இழுத்துப் போர்த்தி படுத்துவிடுவதா என்கிற பட்டிமன்றம் கம்பிவேலிகளுக்குப் பின்னாலே நடந்தது. அதில் இருந்து சடாரென வெளியேறிச்  அந்தத் தாயின் காலைத்தட்டி ' மேடம் உங்கள் குழந்தையின் தலை தொங்குகிறதென்று' என்று ஆங்கிலம் தமிழ் ஹிந்தி மும்மொழியும் கலந்து சொல்லத் துணிவு வந்தது.கொஞ்சம் கலவரமும் நிறைய்ய கனிவுடனும்  பாத்துவிட்டு குழந்தையை மறுபக்கம் தூக்கி படுக்கவைத்துக் கொண்டாள்.மனதில் சிக்கல் உருவாக்கியிருந்த சந்தேகங்கள் இடமிழந்து தெளிவாக இருந்தது.புத்தகத்தை மூடி வைத்து விட்டுப் படுக்கவும் தூக்கம் முந்திக்கொண்டது.

யாரோ எழுப்ப கண்விழித்தபோது  இந்தியில் எதோ சொல்லிக் கொண்டிருந்தாள் அந்தக் கைப்பிள்ளைக்காரி.அந்த பெட்டி முழுக்க இறங்கத் தயாராகிக் கொண்டிருந்தது. 'ஜெய்ப்பூர் வரப்போகுது எந்திரி' என்று சொல்லி எழுப்பியிருக்கவேண்டும்.சென்னையில் ஏறிய மிகப்பெரிய பட்டாளத்தில் இருந்த அவள்தான் நாங்கள் இருந்த பகுதிவேண்டாம் வேறு இடம் போகலாம் என்று கணவனிடம் சொன்னவள்.நாங்கள் இருந்த பக்கம் அவள் திரும்பவே திரும்பவில்லை. ஆனால் குழந்தை அவளிடம் இருந்து தப்பிக்க ஒரு அரை மணி நேரம் மட்டுமே எடுத்துக்கொண்டது அங்கிருந்த கண்ணுக்குத் தெரியத வேலியையும் குழந்தையே துக்கி எறிந்தது. எல்லோரிடமும் கம்பிவேலியும் அன்பு முளைக்கும் செடியும் இருக்கிறது. இப்போது ஜெய்ப்பூரில் இறங்கும்போது இலக்கண சுத்தமாக சகோதரா என்று சொன்னாள். சொன்னது என்ன மொழியாக இருந்தாலென்ன?.

வெப்பமான மனிதர்கள் இறங்கியதும் திறந்துகிடந்த ஒவ்வொரு பெட்டியும் ஏக்கத்துடன் பிளாட்பாரத்தை   எட்டிப் பார்த்தபடி  இருந்தது. காலிப்  பெட்டிகளுக்குள்  தற்காலிகப்  பூக்கள் முளைத்துக் கிடந்தன.வெளியே சிலர் கைகுலுக்கிக் கொண்டார்கள்.சிலர் வார்த்தைகளால், சிலர் ஆரத் தழுவிக் கொண்டார்கள்,சிலர் திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு இப்படி, ரகரகமாய் விடை பெற்றுக் கொண்டார்கள்.வெறும் பெட்டிகள் மௌனமாய் பெருமூச்சு விட்டது.உள்ளே சிதறிக்கிடப்பது குப்பைகள் அல்ல நினைவுகள்.