27.3.10

காடுமேடுகளில் வியர்வையோடு காய்ந்துகிடக்கும், கதைகளின் வற்றாத சுனை. ( தொடர் பதிவு 3 )

கிருஷ்ணகுமார் ஒரு ஆபத்தான கதை சொல்லி.சிகரெட் குடிப்பதற்கான கதைகள் சொல்லும்போது எவ்வளவு திடமான மனிதரையும் புகையின் நெடி இழுத்துக் கொண்டு போய்விடும்.சிவாஜி கணேசனுக்குப் பிறகு சிகரெட்டை ஒரு ஜிலேபியைச் சாப்பிடுவது போல ருசித்துச் சாப்பிடுகிறவர் கிருஷ்ணகுமார். அதே ஆசாமி சலிப்பிடித்து, தொண்டை கெட்டுபோய், மருத்துவர் ஆலோசனைப்படி சிகெரெட்டை நிறுத்தியதும் அப்படியே ப்ளேட்டை மாத்திப்போட்டு கதை சொல்லுவார்.'முதல் முதலாய் என் மனைவியின் தோசை ருசியை இந்த பாழாய்ப்போன சிகரெட்டை விட்டபின்னர் தான் உணர்ந்தேன்' என்று சொல்லும்போது எல்லோரும் சிகரெட்டை நிறுத்தத் தீர்மாணமாகிவிடுவோம்.எனக்குத் தெரிந்து மேடைப் பேச்சை ஒரு நிகழ் கலைபோல நடத்துகிற மனிதர் கிருஷ்ணகுமார் தான்.அந்தக் காலத்தில் அவரோடு ஊர் ஊராய் பயணம் போய் முன்வரிசையில் உட்கார்ந்து அவரது பேச்சைக் கேட்டோ ம் நானும் மாதுவும்.கேட்கிற போதெல்லாம் அழ வைக்கும் சமூக கதைகள் அவரிடம் ஏராளம் இருக்கும்.

அதே போல அவர் திரும்பி வரும்போது  ஜோல்னாப் பையில் ஏராளமான புத்தகங்கள் புதையலாய் கிடக்கும். அவரது மகுடி வார்த்தைகள் எழுத்துக்களின் மகத்துவங்களைச் சொல்லி ஈர்க்கும். 42 பி எல் எஃப்  தெருவின் பல இரவுகள் விளக்கு அணையாமல் எரியும், எழுத்துக்களுக்கு உயிர்கொடுத்தபடி. நானும் மாதுவும் மாற்றி மாற்றிப் படித்துவிட்டு அவரிடம் அனுபவங்களாகத் திருப்பித் தருவோம்.அவர் படிப்பதற்கு முன்னாலே நாங்கள் படித்துவிடுதாகப் பொய்க் கோபம் கொள்வார்.இருந்தும் எங்களுக்கே முதல் படையலாய் புத்தகங்களை திரும்பத் திரும்பத் படைப்பார். அங்குதான்,தாய், அன்னாகரீனா, அன்னைவயல், அம்மாவந்தாள், மோகமுள், நினைவுகள் அழிவதில்லை, கோபல்லகிராமம், கதவு,வேட்டி,ஏழுதலைமுறைகள், புளியமரத்தின் கதை, ஜேஜே சிலகுறிப்புகள், சூரியதீபன், தனிகைச்செல்வன், எஸ்ஏபி, கந்தர்வன்,  கோணங்கி, தமிழ்செல்வன், சுந்தரராமசாமி,பழய்ய முற்போக்கு எழுத்தாளன் ஜெயமோகன், பூமணி, மேலாண்மை பொன்னுச்சாமி,
மாதவராஜ், வண்ணநிலவனின் கடபுறத்தில் வரும் பிலோமிக்குட்டி, சாமிதாஸ்,ரஞ்சி,பவுலுப்பாட்டா,மணப்பாடு,கருவாடு,கடலிறைச்சல்.  எல்லாம் எழுத்தாகவும் நிஜமாகவும் குவிந்து கிடந்தார்கள். இப்போது நினைத்தாலும் மலைப்பாய் இருக்கிற புத்தகக் குவியல்களை நான் ஓசியிலே படித்தேன் என்பதைப் பெருமையோடு சொல்லவைத்த பெருங்கதையாளன் கிருஷ்ணகுமார்.

தோழர் எஸ். ஏ. பி  அப்போது விருதுநகர் மாவட்ட சிபிஎம் கட்சிச்  செயலாளராக இருந்தார்.ஆனால் நூற்றுக் கணக்கான இரவுநேரங்களில் எங்களுக்கு கதை சொல்லுகிற வாலிபத் தாத்தாவாக இருந்தார். ஆறடிக்கும் மேலான அவரது ஆஜானுபாகம் சிரிப்புக் கதைகள் சொல்லும்போது  சுருங்கிப் போகும். மாப்பஸானையும், ராகுல்ஜியையையும், பிரேம்சந்தையும், கிருஷ்ணன் நம்பியையும் எங்களுக்கு அறிமுகப்படுத்திய மொழிபெயர்ப்பாளர் தோழர்
எஸ் ஏ பி. எனது முதல் கதையான 'பூச்சிக்கிழவியை' பிரசுரித்து உச்சி முகர்ந்த பெரியதகப்பன்  தோழர் எஸ்.ஏ.பி.
  
அங்குதான் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி  கண்களை உருட்டி,கைகளை ஆட்டி,குரலை மாற்றிப் பேசிக் கொண்டே கதைகளோடு வருவார். நாரணம்மாவை  விடவும்  உலுக்குகிற வறுமைக் கதைகள், மிகத்தரமான வெள்ளந்திச்சிரிப்புகளைச் சொல்லும் செந்தட்டிக்காளை கதைகள் எல்லாமே எங்களுக்கு வாய் மொழியாகச் சொன்ன பிறகே அச்சுக்கு வரும். சொல்லுகிற விஷயங்கள்,எப்போதும் சமூகம் சார்ந்ததாகவே இருக்கும்.சமூக அநீதிகளை அப்படியே ஏற்றுக்கொள்கிற விதி வயப்பட்டவர்களாக இல்லாமல் அதன்மேல் கேள்விகளை வைக்கிற இருவராக எங்களை மாற்றியது அந்த கதைப் பட்டறை 42 பி.எல் எஃப் தெரு.

அதிலிருந்து முதல் மண்குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு அதன் குளிர்சியோடு  தனது கதைகளுக்குள் கூட்டிப்போன என் தோழன் மாது,ஒரு போராட்டத்தை மெல்லிய உணர்வுகளைச் சொல்லுவதன் மூலம் அனு குண்டைவிட அதிக உக்கிரத்தைக் கொண்டு வரலாம் என்று தமிழ் கதைப் பரப்புக்குச் சொன்னவன். நான்முதல் கல்லை எறிந்து விட்டேன் இதோ உனக்கானது, எடுத்து வீசு என்று பாதை செய்து கொடுத்தமாது. பெற்ற தாயோடும்,கட்டிய மனைவியோடும் மல்லுக்கட்டி தோளில் கைபோடுகிற நண்பன் இருந்தால்எதையும் வெற்றிகொள்ளலாம் என்று உலகுக்கு சொல்லிக் கொண்டிருக்கிற கதைகள் அவனுடையது.மிகுந்த கூச்ச சுபாவத்தோடு இருந்த அவனே மிகச்சிறந்த கதை சொல்லியாக மாறினான்.மாது ஒரு சாதாரண விஷயத்தைக் கூட நீங்க சொல்லிக் கேக்கனும் என்று எங்கள் தோழர் தனுஷ்கோடி ராமசாமி புளகாங்கிதப்படும் மாதுவின் தோளில் கைபோட்டபடி இன்னும் சின்னப் பிள்ளைகள் போல அலைகிறோம்.நான் ஒரு எழுத்தாளன் ஆனதும், ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டதும் எனக்கே இன்னும் ஆச்சரியமாக இருக்கிறதுஅவனது அருகாமை போல.அதே போலவே இதோ இந்த வலை.கம்ப்யூட்டர் என்றால் என்னவெனத்தெரியாத என்னை ஒரு வலைப்பதிவராக மாற்றியதும். இங்கிருக்கிற உலகளாவிய கதை சொல்லிகளோடு  இணப்புக் கொடுத்ததுவும் அவனாலே ஆனது.

தங்களது பேச்சில் அநியாயத்துக்குச் சிரிப்புக்காட்டுகிறவர்கள் தமிழ்செல்வனும்,ஷாஜஹானும்.அதே போல உலுக்கி அழவைக்கிற கதைப்பாங்கும் நிறைந்த கதைசொல்லிகள். இன்னொருவர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா. தாட்சண்யமில்லாது இந்த ஜாதியக் கட்டுமானங்களின் மேல் குற்றம் சுமத்தும் அவரது எழுத்தை எல்லோரும் பிரமிப்பது போல நானும் பிரமித்தேன்.எள்ளல் வழி கதை சொல்லும் மொழி அவருடையது.கதைகளிலே தீராக் கோபத்தை,கட்டுரையை சேர்த்துக்கொடுக்கும் வல்லமை எழுத்து.எனக்கு எழுதவேண்டிய பல கருக்களை உருவாக்கித் தந்தது.

கதைகளை,எழுத்துக்களை,கலைகளை ஒருபோதும் சரஸ்வதி சொல்லிக்கொடுப்பதில்லை.ஒருவேளை சமூகத்திலிருந்து கிளம்பி வந்த சரஸ்வதி என்கிற  டீச்சரோ பாட்டியோ  சொல்லிக்  கொடுத் திருக்கலாம். அதுபோலவே  பிறவிக்கலைஞன் எவனும் இல்லை.கலைஞனை உருவாக் குகிற தட்ப வெப்பம் மக்களிடமிருந்தே கிடைக்கிறது. மக்களுக்கான நிறமாக்கும் பெரும்பதாகை எங்கள் தமுஎச. அங்கே என்னையும் மாதுவையும் வளர்த்தெடுத்த பல ஆயிரம் தோழர்கள் இருக்கிறார்கள்.புதிதாய் முளைக்கும் எழுத்துக்களைச்.சீராட்டுகிற தாயுள்ளம் கொண்ட தமுஎச எனக்கு அழியா நிறம்கொண்ட பல கதைகளைச் சொல்லிக் கொடுத்திருக்கிறது.இருபது வயதில் கம்யூனிஸ்டாக இல்லாதவன் முட்டாள்,நாற்பது வயதில் கம்யூனிஸ்டாக இருப்பவன் முட்டாள் என்கிற சந்தர்ப்பவாத பழமொழி ஒன்றுண்டு.

 இளமையோ முதுமையோ பொதுவைப்பேசாத கதைகள் உண்டா?

வெயிலானை,  கதிரை,ராகவனை, பாராவை,ஆடுமாடை, அருணாவை, அமித் தம்மாவை, என்னுடன் பிறப்பு  முல்லையை, லாவண்யாவை, தீபாவை, பத்மாவை,வித்யாவை.....இன்னும் சொல்லவேண்டிய மிகச்சிறந்த கதைசொல்லிகளின் வழியே என் தீராத கதைத் தேடல் தொடர்கிறது.

இந்தா பாருங்க இடையில் வந்து பிழைப்பு அழைக்கிறது.

நன்றி தீபா.

21 comments:

ஆடுமாடு said...

நல்லா எழுதியிருக்கீங்க தோழர்.

//இருபது வயதில் கம்யூனிஸ்டாக இல்லாதவன் முட்டாள்,நாற்பது வயதில் கம்யூனிஸ்டாக இருப்பவன் முட்டாள் என்கிற சந்தர்ப்பவாத பழமொழி ஒன்றுண்டு//

என்னத்த சொல்ல?

Uma said...

இன்றுதான் மூன்று இடுகைகளும் படிக்க முடிந்தது. நன்றி.
//அதுபோலவே பிறவிக்கலைஞன் எவனும் இல்லை.கலைஞனை உருவாக்குகிற தட்ப வெப்பம் மக்களிடமிருந்தே கிடைக்கிறது//
யோசிக்க வைத்த வரிகள்.

அன்புடன் அருணா said...

/நான்முதல் கல்லை எறிந்து விட்டேன் இதோ உனக்கானது, எடுத்து வீசு என்று பாதை செய்து கொடுத்த
மாது.பெற்ற தாயோடும்,கட்டிய மனைவியோடும் மல்லுக்கட்டி தோளில் கைபோடுகிற நண்பன் இருந்தால்
எதையும் வெற்றிகொள்ளலாம் என்று உலகுக்கு சொல்லிக் கொண்டிருக்கிற கதைகள் அவனுடையது./
ரொம்ப இனிமையாயிருக்கிறது...இதை வாசிப்பதற்கு.இப்படிப் பட்ட நட்புகள் வாழ்வுக்குத் தூண்கள்!

/இந்தா பாருங்க இடையில் வந்து பிழைப்பு அழைக்கிறது./
இதென்ன இப்படி நேரம் காலம் பார்க்காமல் அழைக்கிறது...பிழைப்பு.!!!

க.பாலாசி said...

இந்த அனுபவம் கதைசொல்லிகளை மட்டுமல்ல.... உங்களையும் பார்த்து பிரமிப்படையச்செய்கிறது.

vasan said...

அன்பு நிறை காம‌ராஜ்,
எல்லோருக்கும் இது போன்ற‌ சூழ‌லும், ந‌ட்பும் கிட்டிவிடுகிற‌தா?
கிடைத்தும் அத‌ன் ம‌க‌த்துவ‌ம் அறியாம‌ல் நாங்க‌ள்/என்போன்றோர்
ப‌லிக்க‌ப்ட்டோமா? உங்க‌ளை போன்றோர் எழுத்துக்க‌ளை அனுப‌வித்து
ருசிக்க‌வாவ‌து முடிகிற‌தே, இதுவே ஒரு வ‌ர‌ம் தான்.
பிழைப்பு அழைத்தாலும், எங்க‌ளை ரெம்ப‌ அலைக்காம‌ல், தின‌மும்
ஒன்னு/ரெண்டு ப‌திவு போட்டுருங்க‌, ஏமாத்த‌ம‌!!!.

வெயிலான் said...

உங்களிடமிருந்தும் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். நன்றிண்ணே!

காமராஜ் said...

வாங்க தோழர்.
அன்புக்கு நன்றி.

பா.ராஜாராம் said...

"கதை சொல்லிகளின் கதை"

இப்படி ஒரு தலைப்பை கொடுத்து,"பேசுடா மகனே" என்று அழைத்த தீபாவிற்கு வந்தனம்!நன்றி!

"அருமைடா என்னை பெத்த மகனே" என் உச்சி முகர்கிறேன் காமு! :-)

காமராஜ் said...

நன்றி பாலாஜி

காமராஜ் said...

நன்றி அருணா,

காமராஜ் said...

நன்றி உமா,

வெயிலானுக்கு அன்பு.

காமராஜ் said...

நன்றி வாசன்

seemangani said...

நடைமுறையில் இல்லை என்றாலும் வசீகரிகிறது உங்கள் எழுத்து நடை...வாழ்த்துகள்...

ராகவன் said...

அன்பு காமராஜ்,

மறுபடியும் தட்டச்சு செய்யும் விரல்கள் தடுமாறி எங்கெங்கோ விழுகிறது. தடுக்கி விழுந்தாலும் விழுவது தங்க தாம்பாளத்தில். உருட்டி உருட்டி நிலாச்சோறில் பிசைந்து கொடுத்தது என்ன என்று கேட்டால் கதை மட்டும் மிஞ்சிப்போகும் அடிசில் ருசி, கவளம், கவளமாய் உண்ட ஞாபகம்.

அப்பா சிலிர்க்கிறது காமராஜ்... கதை கேட்கும் ஆர்வத்துடன் மோவாய் தாங்கி அண்ணாந்து பார்க்கிறேன், சிறுவயதில் என் பெத்த நைனாவை சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை தொந்தரவு செய்து பிற்பகலில் தாம்பூலம் மணக்க கேட்ட கதைகளில் வீரப்பிரதாபன்களாய் நானும் என் தம்பியும் மாறி மாறி பறக்கும் புரவியின் குளம்பொலிகள் கேட்கிறது உங்கள் பகிர்வுகளில். வியப்பு மேலிட வாய் பிளந்து கேட்கிறோம் என் அன்பு காமராஜ்...

அன்புடன்
ராகவன்

pavithrabalu said...

தோழரே

தொடர் பதிவுகளைப் படித்தேன்.. எல்லோருடைய இளமைப் பருவங்களும் கதைகளால் நிரப்பப்பட்டிருக்கிறது, இல்லையா?

உங்கள் ஊர்ப்பக்கம் உள்ள இருக்கன்குடி கோவிலைப் பற்றி ஏதேனும் வரலாறு உள்ளதா? இருந்தால் ஏதேனும் ஒரு பதிவில் தெரியப்படுத்துங்கள்..

padma said...

உங்களுடன் ஒரு விருதை பகிர்ந்து கொள்கிறேன் வந்து பெற்றுகொள்ளவும்

காமராஜ் said...

சீமான்கனி நன்றி.

ராகவன் வந்தாச்சா அப்பாட.

காமராஜ் said...

பாலுத்தோழா,
இருக்கன்குடி குறித்த கட்டுரை ஒன்று
பத்துப்பக்கம் எழுதி எழுத்துரு மாற்றத்தில் சிதைந்து போய்விட்டது.
அதிகம் செலவிட்டு முடித்தது. திரும்ப எழுதனும்.

காமராஜ் said...

வாங்க பத்மா.

அம்பிகா said...

மிக அருமையான பதிவு.

எத்தனை கதைசொல்லிகள், எத்தனை புத்தகங்கள்,
வற்றாத சுனையே தான்.

வெயிலான் said...

// பத்துப்பக்கம் எழுதி எழுத்துரு மாற்றத்தில் சிதைந்து போய்விட்டது //

அந்தக் கோப்பு இருந்தால் அனுப்புங்கள். மீட்டெடுக்க முயற்சிக்கலாண்ணே!