19.3.10

வலிகள் மட்டும் தனித்தனி

பசிக்கிறதென்பதை
பள்ளத்துக்குள் கிடக்கும்
கண்கள் சொல்லும்.
தூரிகையைப்பிடித்த
கைகள் நடுங்கும்.
பெருங்குடலைச்
சிறுகுடல் உரசும்
இடியோசை கேட்கும்
வாய் மட்டும் மூடிக்கிடக்கும்.

அவனிடமிருந்து பறித்தெடுத்த
வார்த்தைகளைச் சேர்த்து வைத்து
வண்ணங்கள் பேசும்
அவன் வரைந்த ஓவியங்கள்
கூப்பாடு போட்டு ஊரைக் கூட்டும்.
கூடி நின்று பார்ப்போரிடமிருந்து
அங்கீகாரத்தை இயக்கமே
எடுத்துக்கொள்ளும்

வண்ணங்கள் ஒட்டிய ஓவியக்கை
மனைவியின் சொல்லும் உதவாக்கறை
மண்ணெண்ணை மணக்கும்
தூரிகை போலச்.
சொல்லத் தெரியாமல்
மூலையில் கிடந்து ஏங்கும்.

இருந்தும்..
யாராவது ஒருவர் வந்து
ஓவியம் அழகென்று
உச்சிமுகரும் போது.
எல்லாவலிகளும் தீர்ந்து போகும்.
என் பெயர் ஓவியத்தோழன்

26 comments:

ராகவன் said...

அன்பு காமராஜ்,

ஓவிய தோழா! அழகான இயல்பான கவிதை இது. வார்த்தைகள் வண்ணங்கள் ஆகிறது இங்கே. வார்த்தைகளின் உருமாற்றம் அலாதியானது, தொடர்புபடுத்த ஏற்படும் எந்த குறிகளும் வார்த்தைகளாய் மாறி விடுகிறது.

அன்புடன்
ராகவன்

க.பாலாசி said...

//ஓவியம் அழகென்று
உச்சிமுகரும் போது.
எல்லாவலிகளும் தீர்ந்து போகும்.//

காய்ந்த வயிறும் நிரம்பிக்கொள்ளும்... சிறுபுகழ்ச்சியில் கூட துளிர்க்கும் மானிடம்.....

நேசமித்ரன் said...

தன்னிலையில் இல்லாமல் சொல்லிப் பார்த்துக் கொண்டேன் “ர்” விகுதி வைத்து அழைத்துகொண்டேன் “ன்” ஐ

தாரணி பிரியா said...

நல்லா இருக்குங்கண்ணா

எங்க பழைய ஆபிஸ்கிட்ட ஒருவர் ரோட்டுல சாமி படம் வரைஞ்சுக்கிட்டே இருப்பார். அவர் ஞாபகம் வந்து போச்சு

சுந்தரா said...

மனதைத்தொடும் அழகான கவிதை அண்ணா.

//அவனிடமிருந்து பறித்தெடுத்த
வார்த்தைகளைச் சேர்த்து வைத்து
வண்ணங்கள் பேசும்
அவன் வரைந்த ஓவியங்கள்
கூப்பாடு போட்டு ஊரைக் கூட்டும்.
கூடி நின்று பார்ப்போரிடமிருந்து
அங்கீகாரத்தை இயக்கமே
எடுத்துக்கொள்ளும்//

திரைமறைவிலிருக்கும் படைப்பாளிகள் பலரின் திறமை இப்படித்தான் வெளிச்சப்படுத்தப்படாமலேயே போய்விடுகிறது.

காமராஜ் said...

நன்றி
ராகவன்.

காமராஜ் said...

நன்றி
பாலகுமார்.

காமராஜ் said...

அன்புத் தோழா
நேசமித்ரன்,
நானும் எல்லோரும்.
உண்மையிலே 'அழகு'ன்னு
ஒரு ஓவியர் எங்களோடு இருந்தார்.
சுகவீனமாகி தானுண்டு என்று இருக்கிறார்.
அவரின் நினைவாக.

காமராஜ் said...

ஹை.. தாரணி
எவ்வளவு நாளாச்சு,
அது கிடக்கட்டும் கவிதை.
நலமா தாரணி.

காமராஜ் said...

சுந்தரா
வேறொன்றும்
சொல்ல.. இல்லை.

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு காமு!

seemangani said...

புகழுக்கு அடங்கி போன புதுக்கவிதை அருமை...

padma said...

சரிதான் கலைஞனுக்கு பசி ஏது ருசி ஏது? பாராட்டு தான் அவன் உயிர்வளர்த்தி

காமராஜ் said...

வாங்க பாரா
நலமா ?

காமராஜ் said...

சீமான் சீமான்கனி நன்றி.
புகழும் அங்கீகாரமும் வேறு.
குழந்தைகளிடம் நாமோ நம்மிடம் குழந்தைகளோ
ஊங்கொட்டாமல் இருந்தால் அடுத்த முறை கதையே இருக்காது.
காசில்லாமல் கூட நடிப்பார்கள் கைதட்டல் இல்லாவிட்டால் என்னாகும். நீங்கள் கூட என்னைப் புகழவில்லை அங்கீகரிக்கிறீர்கள்.

காமராஜ் said...

நல்லாச்சொன்னீங்க பத்மா நன்றி.

காமராஜ் said...

நன்றி பாலஜி.

காமராஜ் said...

நன்றி பாலஜி.

அன்புடன் அருணா said...

கலைகளும் வறுமையும் பிரிக்கமுடியாதவையோ எனத் தோன்றும் அடிக்கடி!கலைஞனுக்கு உணவே பாராட்டுதானே!

அம்பிகா said...

//ஓவியம் அழகென்று
உச்சிமுகரும் போது.
எல்லாவலிகளும் தீர்ந்து போகும்.//
கலைஞனுக்கு வேறென்ன வேண்டும்.
ரொம்ப நல்லாயிருக்கு அண்ணா.

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு அண்ணா, பதிவுக்கும் கூட பொருந்தி வருமோ?! :-)

காமராஜ் said...

ஆமாம் அருணா மேடம்.

காமராஜ் said...

நன்றி அம்பிகா.

காமராஜ் said...

சந்தன முல்லை.
எல்லாத்துக்கும் பொருந்தும் போது.
வலயை அது விட்டு வைக்குமா ?

உயிரோடை said...

எல்லா ப‌டைப்பாளிக‌ளுமே ப‌டைப்பின் பாராட்டுக்கு த‌ன் வ‌லியை ம‌ற‌ப்ப‌வ‌ர் தாமே. ந‌ல்ல‌ க‌விதை அண்ணா. அதென்ன‌ க‌விதை போலும்.... அது ந‌ம்ம‌ காப்பி ரைட் ஆச்சே. ப‌டைப்பாளிக‌ளுக்கு ப‌டைப்பின் பேரில் ச‌ந்தேக‌ம் இருக்க‌ கூடாதாம். க‌வ‌னிங்க‌.

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

பாண்டிசேரியில் ஒரு முறை நானும் என் தோழியும் ஒரு தெருவில் படம் வரையும் நண்பரை சந்தித்தோம். வெகுநாட்கள் அவர் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் மனதில் வலித்து கொண்டே இருந்தது. இந்த கவிதை அவரை வலியுடன் நினைவுருத்துகிறது. //வார்த்தைகளைச் சேர்த்து வைத்து
வண்ணங்கள் பேசும்// என்ற வரிகள் நிஜம். //மனைவியின் சொல்லும் உதவாக்கறை// - இது அந்த நண்பர் சொன்ன வாசகம்தான். //யாராவது ஒருவர் வந்து
ஓவியம் அழகென்று// - எங்களுடன் பேசுகையில் அவருக்கு சொல்லவொன்னா சந்தோஷம் இருந்தது..