15.3.10

தண்டவாளம் விட்டு இறங்காத ரயிலும், செவத்திக் கிழவியின் கனவும்.

ரயிலைப்பற்றிய அறிமுகச் சித்திரம், அபாயச்சங்கிலியின் பயமுறுத் தலோடும்,எட்டாத உயரத்திலிருக்கும் அதன் படிகளைப் போல் ஏக்கம்  நிறைந்த   இன்னொரு உலகமாகவும் இருந்தது. ஒண்ணாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் முதல் முறையாகப்பார்த்தது. அதற்கு முன்னா செவி வழியேறிய சித்திரமாகத் தான் இருந்தது. சாத்தூருக்குப் போவதும் தனலட்சுமித் தியேட்டரில் சிவாஜி படம் பார்ப்பதுமே லட்சியக்கனவாக இருந்தகாலம்.

பகலில் ஒரு முறையும்  இரவில் ஒரு முறையும் வந்து போகும் கொடைக் கானல் பஸ்ஸில் நாங்கள் பயணம் செய்யலாம் என்பதே நம்ப முடியாத விசயமாக இருந்த காலம். நிறுத்தி வைத்திருக்கிற மாட்டு வண்டியின் மேக்காலில் எறிக்கொண்டு  கற்பனை ரயில் பஸ்ஸில் பறந்து போவதைத்தவிர, வாகனப் பிராயாணம் ஏக்கமாக மட்டுமே இருந்தது.

ஊருக்குள் குப்பையள்ள வருகிற கம்மாப்பட்டி நாயக்கமார் மாட்டு வண்டிகள் பளப் பளவென கண்ணைப்பறிக்கும், காளை மாடுகள் அவர்களைப் போலவே மினு மினுப்பாயிருக்கும். வண்டியோட்டிகள் மிகச் சிறந்த வித்தைக் காரர் களாகத் தெரிவார்கள். அவர்களைச் சினேகம் பிடித்துக்கொண்டு  திரும்ப வருகிற வெத்து வண்டியில் ஏறி ஊனு கம்பைப்பிடித்து நின்ற படி பயணம் செய்கிற அந்த தருணத்திற்காக ஏங்கிக்கிடந்ம். பார வண்டியின் பின்னால்  நீட்டிக் கொண்டிருக்கிற உத்திரத்தைப் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டே போவதும் வண்டிக்காரர் இறங்கி வந்து சாட்டைக்கம்போடு விரட்டும் போது தெறித்து ஓடுவதும் சாகசமாக இருந்தது. 

மதுரைப்பக்கம் கல்லுடைக்கப் போனவர்கள், சம்பளமில்லாமல் கஞ்சித் தண்ணியில்லாமல், ராவோடு ராவாகத்  தப்பித்து நடந்தே திருமங்கலம் வந்து அங்கிருந்து கள்ள ரயிலேறி வீடு வந்தார்கள். அவர்களை ஊர்ச்சனம் ஆம்ஸ்ற்றாங்கைப் போலப் பார்த்தார்கள். ஓய்வு நேரங்களில் அவர்களை உட்கார வைத்து ரயில் பயண சாகசங்களைப் பற்றிக் கேட்டார்கள். அவரவர் புரிதலில் ரயில் பிம்பங்கள் விவரிக்கப்பட்டது, ஆச்சரியம் மேலோங்கக் கேள்விகளில்லாமல் பிரமித்துப் போனார்கள்.

''ஏய்யா எங்கள மாதிரிக் குருட்டுக் கிழவியெல்லாம் ரயில்ல ஏறலாமா''
செவத்திப்பெரியம்மை அப்பாவியாக் கேட்பாள்,

''குறுக்க கூடிப்போயி கொல்லபட்டிக்கிட்ட தண்டவாளம் இருக்கு நடுவில நில்லு, துட்டு வாங்காம ரயிலு ஒன்னிய ஏத்திரும்''.

கதை கேட்கிற செல்லையாப் பெரியன் சொல்லவும், சனங்கள் சிரிக்கும் அதுக்கு பெறகும் அவளுக்குப்புரியாது. அவள் அப்படியொன்றும் குருடியில்லை, படிக்காதவள். விவரந்தெரிந்தவர்கள், படித்தவர்கள் எல்லோரிடத்திலும் தன்னை அப்படித்தான் அறிமுகப்படுத்திக் கொள்வாள். சாகுமாட்டும் அவளுக்கு ஐம்பது பைசா, எழுபத்தைந்து பைசா எனச்சொல்லத் தெரியாது. ரெண்டு கால் ரூவா, மூனு கால் ரூவா என்று தான் சொல்வாள். அவள் கடைக்கு வந்தாளென்றால் மாரியப்ப நாடார் கதிகலங்கிப்போவார்.

'' ஒரு பொடி மட்ட யாவரஞ்செய்ய ஒரு மணி நேரங்கணக்குச் சொல்லனும், ஏத்தா தாயி, மஹராசி ஆளில்லாத நேரமாப் பாத்து கடைக்கு வாயேன்''
பயந்து சொல்லுவார்,

 ''ஏம்புருசங்கிட்டச் சொல்லனுமா''

என்று வேறு மாதிரிப் பயமுறுத்துவாள். ஒரு நூறு ரூபாயை, சில்லறையாக மாற்றி எல்லாம் அஞ்சு ரூபாயாகக் கையில் கொடுத்தாள் போதும் அவளுக்கு ஒரு மாதப்பொழுது கழிந்து விடும்.

ரயில் கதையெல்லாம் கேட்டு முடித்து விட்டு

''அத்தாம்பெரிய ரயில் எத்தனை கூட  சாணி போடும்''

என்று கேட்டார்கள்.அதுக்குப்பின்னர் '' சாணிச்செவத்தி '' யாகிப்போனார்கள்.


ஊர் தாண்டிய எல்லை கடந்து சாத்தூர்கூட அறியாத அவர்கள் ரயிலை நேரில் பார்த்திருப்பார்களா ?

13 comments:

அன்புடன் அருணா said...

ஆஹா...அறியாமையும் அப்பாவித்தனமும் ..படிக்கப் படிக்கத் திகட்டவில்லை!

Mehar said...

Hello Friend,  Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

 
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
 
 
(Pls ignore if you get this mail already)

ராம்ஜி_யாஹூ said...

wonderful post. Though that old lady is not aware of Trains, I am sure she must be happier than us since her life is more attached with natural things.

க.பாலாசி said...

கிராமத்து தேவதைகளின் யதார்த்தமிகு வாழ்க்கைக்கு இந்த கிழவியும் ஒரு எடுத்துக்காட்டு....... போகிறப்போக்கில் நகையைத் தூவும் இயல்பான எழுத்துநடை...

நேசமித்ரன் said...

//''அவ்வளவு பெரிய ரயில் எவ்வளவு சாணி போடும்'' //

நானும் கேட்டிருக்கிறேன் யேரோபிளேன் எந்த மரத்தில கூடு கட்டும் என்று பால்ய நாட்களில்

அருமையான பதிவு நண்பா

Vijayan said...

ignorence is bliss

சந்தனமுல்லை said...

உங்கள் இனிமையான நடை இந்நிகழ்வை இன்னும் சுவாரசியமாக்குகிறது! என்ன செய்வது - ஒருசில செவத்திப்பெரியம்மைகளுக்கே ரயில் பிரயாணமும், எரோபிளேன் பயணமும் வாய்க்கிறது!

அம்பிகா said...

இதைப் போலவே எங்கள் ஊரில் ஒரு பாட்டியை ஜீப் க்கு வைக்கோல் போட்டதாக கேலி செய்வதை பார்த்திருக்கிறேன். வெகுளியான மனிதர்கள். நல்ல பதிவு

anto said...

இது தான் எங்க மாமா ’ஸ்பெஷல்’ பதிவு...சூப்பர்!மாமா

காமராஜ் said...

நன்றி

அருணா
மெஹர்,
ராம்ஜி,
பாலாஜி,
நேசமித்ரன்,
விஜயன்,
முல்லை,
அம்பிகா,
அண்டோ .

ராகவன் said...

அன்பு காமராஜ்,

எத்தனை நாட்களாகிவிட்டது... உங்கள் பதிவுக்கான பின்னூட்டம் எழுதி...

வாழ்த்துக்கள் காமராஜ்! மிகப்பிரமாதமான நடையும், நடை சார்ந்த எழுத்தும்...

காட்சிகள் அழகாய் கோர்த்த ரயில் பெட்டிகள் வளைவில் செல்வது போல அழகாய் இருக்கிறது...

உங்கள் பார்வையும் சம்பாஷனைகளும், சோழவந்தான் தாம்பூலமாய் மணக்கிறது காமராஜ்...

மூளைக்குள் ஒட்டிகிடக்கும் நாக்கு புரட்டி புரட்டி சுவைக்கிறது...

அன்புடன்
ராகவன்

பா.ராஜாராம் said...

"ஊர்க்கதை" பேசுறதுன்னா எங்க காமுக்கு ஒரு முகம்,ஒரு நாக்கு,ஒரு சப்புக் கொட்டல்,..

வாய் ஊருது காமு.. :-)

போட்டோவெல்லாம் புதுசா போட்டு,சும்மா மாப்ள மாதிரி இருக்கீங்க மக்கா. :-))

குலவுசனப்பிரியன் said...

இடுகைகள் எல்லாமே அழகு. வலைச்சரத்தில் அறிமுகம் செய்த க.பாலாசிக்கு நன்றிகள் பல.

அப்பாவின் பூர்வீகம் காடுபட்டி போனால் கடையில் நாலணா எட்டணாவுக்கு யாவாரம் செய்தது ஞாபகத்துக்கு வருகிறது.