31.3.10

ஆண்கள் போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள்..'அனோனிமா' - புத்தகவிமர்சனம்.

மழையும் வெயிலும் ஒரு சேர வந்ததைப்போல ஒரே நேரத்தில் இரண்டு பார்சல்கள் வந்தது.

ஒன்றில் தோழர் கே.வி.ஷைலஜாவின் மொழிபெயர்ப்பில் வந்த 'சூர்ப்பனகை',தோழர்.கேவி.ஜெயஸ்ரீ மொழிபெயர்த்த 'ஒற்றைக்கதவு'இந்த இரண்டு புத்தகங்களும் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த மலைக்க வைக்கும் மிக அரிய கதைகள் அடங்கியவை.அதை அடுத்த பதிவில் பேசலாம்.

இன்னொன்றில் இந்தக் காலாண்டுக்கான புதுவிசை.

'அனோனிமா'  மொழிபெயர்ப்பு பற்றி தோழர் ஆதவன் தீட்சண்யா எழுதிய புத்தக அறிமுகம் ஆண்கள் போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.ஒரு போர் தூரத்துப்பார்வைக்கு விருந்தாகிற சுவாரஸ்யமாக மட்டும் தெரிகிறது. போரோடு  சம்பந்தப்பட்டவர்களுக்கு சொல்லமுடியாத ரணங்களை நிறப்பி வைத்திருக்கிறது. அதுவும் குறிப்பாகப் பெண்களின் ரணம்.அவர்கள் பேச ஆரம்பித்துவிட்டால் வாயடைத்துப்போகும் செய்திகள் கோடிக்கணக்கில் புதைந்து கிடக்கலாம். அந்தப்புத்தக அறிமுகத்திலிருந்து சில பகுதிகள். 


//இரண்டாம் உலகப்போரில் கொல்லப்பட்ட சோவியத் மக்கள் மற்றும் படையினர் ஒவ்வொருவருக்கும் ஒருநிமிடம் அஞ்சலி செலுத்த விரும்புகிற ஒருவருக்கு தொடர்ந்து 38 ஆண்டுகள் தேவைப்படுமாம். போரின் மொத்த உயிரிழப்பு சுமார் ஐந்து கோடிப்பேர். அவர்களில் 3 கோடிப்பேர் சோவியத் யூனி யனைச் சேர்ந்தவர்கள். இது வெறும் உயிரிழப்பு பற்றிய தோராயமான கணக்குதான். பொருளிழப்பு, உளவியல் பாதிப்பு, அங்கவீனம் குறித்து யாதொரு கணக்கீடும் இதுகாறும் இறுதிப்படுத்தப்படவில்லை.

3.
அனோனிமா இந்த போர்ச்சூழலுக்கிடையே வாழ்ந்த ஒரு ஜெர்மானியள். 12 ஐரோப்பிய நாடுகளில் சுற்றித் திரிந்திருந்தா லும் பெர்லின் நகரத்தில் வாழ்வதே அவளுக்கு உவப்பானதாய் இருக்கிறது. அனாதைச்சிறுமி தெருவிலே அலைவதுதான் நியதி என்பதை தன்னளவில் மறுத்து சுயமரியாதையோடு வாழ்ந்து கொண்டிருந்தவள். ஹிட்லரின் படைகளை விரட்டி வந்த ரஷ்யப் படைகள் ஜெர்மனிக்குள்ளேயே நுழைந்துவிட்ட தையடுத்து நடந்த குண்டுவெடிப்பில் அவளது மூச்சுக்காற்றா லும் புத்தகங்கள் ஓவியங்களாலும் நிரம்பியிருந்த அவளது வீடு சிதறிப்போனது. அவளுக்கு சொந்தமென்று இருந்த எல்லா வற்றையுமே இழந்துவிட்டதால் கண்ணுக்குத் தெரிந்த எல்லா வற்றையுமே தனக்கு சொந்தமானவையென்று வரித்துக் கொண்டு ஒரு அன்னிய வீட்டின் நிலவறையில் பதுங்கி வாழும் சாமானியர்களில் ஒருத்தியாக அனோனிமா அறிமுகமாகிறாள் நமக்கு. இடையறாத குண்டுமழைக்கூடாக போர்ச்சூழலின் பதற்றங்களை, கவலைப்படுவதால் ஆகக்கூடியது எதுவு மில்லை என்பதால் ஒரு வேடிக்கை மனோபாவத்துடன் குறிப் பெழுதத் தொடங்குகிறாள். அவளது குறிப்புகள் யார் மீதுமான புகார்ப்பட்டியலாகவுமின்றி அன்றையச் சூழலை அதன் முழுப் பரிமாணத்தோடு ஒவ்வொரு தனிமனிதரும் எவ்வாறு எதிர் கொண்டனர் என்பதன் மனவோட்டமாக உருப்பெற்றுள்ளன.

யாருடைய அனுதாபத்தையும் கோரி நிற்காமல் மனதிற்குப்பட்டதை எழுதிச் செல்கிறாள். பின்னாளில் இக்குறிப்புகள் புத்தக மாக வெளியானபோது அது அவளது வாழ்க்கை மட்டுமல்ல, போர்ச்சூழலுக்குள் வாழநேரும் எவரொருவருக்குமானதுதான் என்கிற எளிய உண்மை அதில் பொதிந்திருப்பதைக் கண்டது உலகம். எனவே அவள் தனது தனித்தப் பெயரையும் அடையா ளத்தையும் துறந்து அனோனிமா ( முகம் மறைத்தவள்) என்று புத்தகத்துக்குத் தலைப்பிட்டது கவித்துவ உணர்விலல்ல.//

//குழந்தைப்போராளி சைனா கெய்ட்ரஸியும் அனோனிமாவும் இருவேறு பெண்களல்ல. ஒரேவகையான கொடுமைகளை வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு முகாம்களிலிருந்து பெற்றுக்கொள்ள நேரிட்டப் பெண்களின் மாதிரிப் படிமங்கள். 4.
ஸீக்ரிப்ட் லென்ஸ் எழுதிய நிரபராதிகளின் காலம் நாடகத்தின் கதாபாத்திரங்கள், ஒரு குற்றம் நிகழ்கிறபோது அதில் தனக்கு உடன்பாடில்லை என்று மறுப்புரைக்கவோ எதிர்க்கவோ முன் வராதவர்கள் அந்தக குற்றத்தின் இயல்பான பங்குதாரிகளா இல்லையா என்று ஓயாது வாதிட்டுக்கொள்வதைப் போலத்தான் அனோனிமாவும் அவளுடன் தங்கியிருப்பவர்களும் தர்க் கித்துக் கிடக்கிறார்கள். ஹிட்லர் என்ற போர்வெறியன் கையில் அதிகாரத்தைக் கொண்டு சேர்த்ததன் மூலம் அவனது எல்லா பழிபாவங்களிலும் தமக்கும் பங்கிருக்கிறது என்று உறுத்துகிற குற்றவுணர்ச்சியிலிருந்து விடுபடும் முயற்சியாகத்தான் ஹிட்லரின் சுயசரிதையான எனது போராட்டம் நூலை எரித்து வென்னீர் காய்ச்சுவதையும், ஹிட்லர் மீது நன்மதிப்பு கொண்டி ருக்கிற சீகிஸ்முண்ட் என்பவரை பைத்தியக்காரன் என விளிப்ப தையும் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஹிட்லரும் கோய பல்சும் வெற்றி அல்லது வீரமரணம் என்று ராணுவத்தை உசுப் பேற்றிக்கொண்டிருக்கும்போது எங்களுக்கு இறந்த வீரர்கள் தேவையில்லை உயிரோடிருக்கும் ஆண்களைத்தான் தேடுகி றோம்... என்று அனோனிமா எதிர்நிலை எடுப்பதற்கும் இந்த மனநிலையே காரணமாய் இருக்கும்.

வீரம், தியாகம் என்று தூண்டிவிடப்படும் உணர்ச்சிகளுக்கு பொருளேதுமிருக்கிறதா? எல்லோரையும் சாகக்கொடுத்து தியாகிகளாக்கிவிட்டு யாருக்கு எதை பெற்றுத்தரப் போகிறாய் என்று அவள் உள்ளுறையாய் வைக்கும் கேள்வி எல்லை கடந்து எங்கெங்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டியதாயிருக்கிறது. போர்முனைகளில் பின்வாங்கி தளர்நடையில் முகாம் திரும்பு கிற ஜவான்கள் மீது அவளுக்கு பரிதாபமே மிஞ்சுகிறது. யாரோ ஒருவனது விருப்பம்/ கனவுக்காக போரிட்டு மாள்வதற்கென்று தயாரிக்கப்பட்ட பொம்மைகள்/ இயந்திரங்கள் என்று தம்மையு ணராத ஜெர்மனி ராணுவத்தினரைப் பார்த்து ஆட்டம் முடிந்து விட்டது, இப்போது நீங்களும் தெருநாய்கள்தான் என்று பரிக சித்து ஒரு பெண் கூச்சலிடுவதை அனோனிமா தன் குறிப்பில் இடம்பெறச் செய்திருக்கிறாள். இந்தப் போரின் முடிவில் பல தோல்விகளோடு ஆண் என்ற பாலினத்தின் தோல்வியும் சேர்ந்தே இருக்கும் என்ற அனோனிமாவின் தீர்க்கவசனம் காலத்தை மீறி இன்றும் நிற்கிறது மடங்காமல். மற்றவர்களுக்காவது தமது பாரத்தை இறக்கிவைக்க கடவுள் என்ற கற்பிதம் இருந்தது. அதுவுற்றவள் அனோனிமா.

அவள் ஒருபோதும் ஜெபித்தவள் இல்லை. மகிழ்ச்சியான தருணங்க ளில் ஜெபிக்காமல் இருந்துவிட்டு துன்பவேளையில் ஜெபிப்பது பிச்சைக் கேட்பது போலாகும் என்ற சுயமரியாதையின் உந்துத லில் அவள் இனியும்கூட கடவுளிடம் மன்றாடுவதில்லை என்ற தெளிவுடன் இருந்தாள். அன்னிய ராணுவத்திடம் அகப்பட்டுக் கொண்டோமே என்று அழுதுபுரண்டு ஆகப்போவது எதுவு மில்லை என்பதையும் அவளுக்கு சூழல் விளக்கி விட்டிருந் தது. இடையறாத குண்டுமழைக்கிடையில் வாழும் ஒவ்வொரு நாளும் மரணத்தை வெற்றி கொண்ட நாள் என்றே கருதுகி றாள். அடுத்தநாள் என்பது நிச்சயமற்றிருந்த நிலையில் நாளை நடக்கப்போவது பற்றி கவலைப்படுவதைவிட இன்று முடிந்த மட்டிலும் வாழ்ந்து பார்த்துவிடவேண்டும் என்ற முடிவுக்கு வந்தவிட்டிருந்ததால், வருவது எதுவோ அதற்கு காத்திருப் பதே உசிதம் என்ற எளிய எல்லையை தனக்கானதாய் வரித்துக் கொண்டிருந்தாள். அதற்காக அவள் தன் முன்னே நிகழ்ந்த வற்றை எல்லாம் உணர்வுத் துடிப்பற்ற கண்ணாடி போல் பளபளக்கும் கண்களால் வெறுமனே வேடிக்கை பார்த்துவிட்டு நகர்ந்தாள் என்று குறுக்கிப் புரிந்துகொள்ள வேண்டியதில்லை.

எதுவும் செய்யவியலாத கையறு நிலையிலுள்ள மக்கள் சூழ லையும் அதற்கு காரணமானவர்களையும் பகடி செய்து கடக்க முயற்சிப்பது உலகளாவிய நியதிபோலும். அனோனிமா அதைத்தான் செய்கிறாள். தங்களில் இன்னும் (ரஷ்ய ராணுவத்தினரால்) கன்னி கழிக்கப்படாதவளாய் இருப்பது யார் என்று பெண்களுக்குள் நடக்கும் விவாதங்கள் அவளுக்கு சிரிப் பையே வரவழைக்கிறது. கத்தோலிக்க கன்னியாஸ்திரி ஒருத்தி 24முறை வல்லுறவுக்காளானாள் என்ற பத்திரிகைச் செய்தியைக் கேள்விப்பட்டதும், இதையெல்லாம் அருகிலிருந்து யார்தான் கிரமமாக எண்ணுகின்றார்களோ என்று கேலி செய்கிறாள்.

பேரக்குழந்தைகளைக் கொண்ட மூதாட்டியைக்கூட வேட்டை யாடும் வக்கிரம் தலைவிரித்தாடிய நிலையில் மாதவிலக்கடைந் தவள் போல பஞ்சுத்தக்கையை எப்போதும் பிறப்புறுப்பில் அடைத்துக்கொண்டு திரிவது, சமையலறையின் மேற்கூரைக் கும் சீலிங்குக்கும் இடைப்பட்ட பொந்தில் இரவும் பகலும் ஒளிந்து கிடந்து கன்னியாகவே நீடிக்க முயற்சிப்பது போன்ற தற்காப்பு முயற்சிகளால் பயனேதும் கிட்டப்போவதில்லை என்பதே அனோனிமாவின் கணிப்பு. உண்மையும்கூட அது தான். இரண்டு பெண்கள் சந்தித்துக்கொண்டால் நீ எத்தனை முறை (வல்லுறவுக்காளானாய்)... என்று பரஸ்பரம் விசாரித்து ஆறுதல்படுத்திக் கொள்ளுமளவுக்கு நிலை மட்டுமீறி போய்க் கொண்டிருந்தது. அனோனிமாவும் தப்பவில்லை.

பெர்லினுக்குள் நிலைகொள்ளும் ரஷ்யப்படைகள் மக்களின் வீடுகளை ராணுவக் குடியிருப்புகளாக ஆக்கிரமித்ததிலிருந்தே எல்லாப் பிரச்னைகளும் தொடங்கியதாக அனோனிமா பழி போட வரவில்லை. அல்லது, பாசிசத்தை வீழ்த்தி மனித குலத்தை காப்பாற்றிய செஞ்சேனையின் வரலாற்றுப் பாத்தி ரத்தை அவதூறுகளால் நிரப்பி சிறுமைப்படுத்தவும் அவள் முயற்சிக்கவில்லை.தொடக்கத்தில் கேள்விப்பட்டிருந்ததைவிட வும் நற்தன்மை கொண்டவர்களாக, சினேகப்பூர்வமாக உரை யாடக் கூடியவர்களாகவே ரஷ்யப்படையினரைக் காண்கிறாள். அத்துமீறி நடக்கத் துணிகிறவர்களை எச்சரித்தும் மிரட்டியும் பெர்லின் பெண்களைப் பாதுகாத்து அனுப்பியவர்களும் ரஷ்ய ராணுவத்தில் இருப்பதை அவள் கவனமாக பதிவு செய்திருக்கி றாள். பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளக்கூடாது என்பதற் காக ஸ்டாலின் விதித்திருந்த ஆணை திரும்பத்திரும்ப நினை வூட்டப்படுகிறது. ஆனால் தம் வீட்டுப்பெண்களுக்கு ஜெர்மனி ராணுவம் இழைத்தக் கொடுமைகளுக்கு பழிதீர்த்தேயாக வேண்டும் என்ற வன்மத்தில் அந்த ஆணை தொடர்ந்து மீறப் பட்டுக் கொண்டேயிருந்தது. அனோனிமாவை மூவர் சூறை யாடிக் கொண்டிருக்கும்போது அங்குவந்த ரஷ்ய ராணுவப் பெண்ணொருத்தி ஒரு கேளிக்கையை கண்டு களிப்பது போல் ரசித்துப்போகுமளவுக்கு பழியுணர்ச்சி தளும்பிக் கொண்டிருந் தது அவர்களிடம்.

ஒவ்வொரு வீட்டின் பின்புறக்கதவையும் இரவுபகல் பாராமல் இடித்துத் திறந்து உள்ளே நுழையும் முயற்சிகள் தொடர்கதை யாகிப் போனது. அவமானம், வெட்கம், பாலியல் பலாத்காரம், அருவருப்பு என்பவையெல்லாம் பொருளற்ற வெறுஞ்சொற் களாக இழிந்துகிடந்தன. அவள் விரைத்துக் கிடந்தாள். மனரீதி யான இறுக்கம் உடல் இறுக்கத்தையும் கொண்டு வந்து சேர்த்த தாக ஓரிடத்தில் குமுறுகிறாள்.

திரும்பத்திரும்ப தன்மீது கூட்டங்கூட்டமாக வந்து மொய்க்கி றவர்களைப் பார்த்து பதறிப்போன அனோனிமா எல்லோரும் வேண்டாம், ஒரு ஆள் - நீ மட்டும் என்று இரந்து நிற்கும் நிலைக்குத் தாழ வேண்டியிருக்கிறது. அவளது வேண்டுதலுக்கு இரங்குவார் யாருமில்லை அங்கு. அடுத்தடுத்த நாட்களும் இதேநிலைதான். ராணுவ பூட்சின் அடியில் ஒட்டியிருக்கும் அழுக்கு போலாகிவிட்ட அவளிடம் கர்ப்பந்தரித்து விடு வாயோ என்று ஒருத்தி கேட்ட போது பலர் நடமாடும் பாதை யில் புல் முளைக்காது... என்று பதிலிறுத்து தன்னைத்தானே தேற்றிக் கொள்கிறாள். ஆனாலும் ராணுவத்தினரின் வல்லுற வால் தங்கிய கர்ப்பத்தை கலைப்பதற்கும் பால்வினை நோய் களுக்கு சிகிச்சையளிக்கும் தனியாக வைத்தியசாலைகளை நிறுவத்தான் வேண்டியிருந்தது அங்கு. இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது வன்புணர்வுக்கு ஆளாகி கர்ப்பந்தரித்த வர்கள் எல்லைப்புறங்களிலும் இருநாட்டின் தலைநகரங்களி லும் மனநிலை சிதைந்து அனாதைகளாக உழன்று திரிந்ததை நினைவூட்டும் கொடூரங்கள் அனோனிமாவிலும் துருத்திக் கொண்டு பதற்றமடையவைக்கின்றன.

பாதுகாப்பற்ற இரையாக இனி நீடிக்கமுடியாது எனப் புரிந்து கொண்ட அனோனிமா பலம் பொருந்திய ஓநாயை அடக்கிப் பழக்கப்படுத்தி மற்றைய ஓநாய்களை விரட்டியடிக்கும் தற் காப்பு உத்தியைக் கையாள்கிறாள். இதற்காக தன்னிடம் வரும் ரஷ்ய ராணுவத்தினரில் உயர் அதிகாரத்தில் இருக்கும் லெப்டி னன்ட், மேஜர் போன்றவர்களுக்கு மட்டுமே உரிமையுள்ளவ ளாக அவள் தன்னை மாற்றிக் கொள்கிறாள். அதிகாரமிக்கவர் களுக்கு அணுக்கமானவள் என்பதால் நிலவும் உணவுத் தட்டுப் பாட்டிலிருந்து அவளால் தப்பித்துக் கொள்ள முடிகிறது. ஒரு அதிகாரி வேறிடத்திற்கு பெயர்ந்து சென்று விடுகிறபோது வேறொரு புதிய மேஜரை தன் பாதுகாப்புக்காகவும் உணவுத் தேவைக்காகவும் எதிர்பார்க்க வேண்டியவளாகிறாள்.

அனோனிமாவைப்போலவே ஒவ்வொரு பெண்ணும் சூழ லுக்குப் பணிந்து பிழைத்திருக்க விதிக்கப்பட்டவர்களாயிருந் தனர். அமைதிக்காலத்தில் யாரோ ஒரு பொறுக்கி ஒரு பெண்ணை வன்புணர்வு செய்திருந்தால் ஆர்ப்பாட்டம்- காவல் நிலையத்தில் புகார்- கைது- விசாரணை- தண்டனை என்று என்னென்னவோ நடந்திருக்கும். ஆனால் போர்க்காலம் என்ற ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு.... ம்... எல்லா அத்துமீறல் களும் அட்டூழியங்களும் போரின் ஒருபகுதியென கணக்குத் தீர்ப்பதைத்தான் உலகம் கண்டது. சண்டைக்கு சிங்காரமில்லை என்று நம்மூரில் சொல்வதைப்போல எல்லா கொலைகளும் வன் புணர்வுகளும் கருச்சிதைப்புகளும் பாலியல் வக்கிரங்களும் கொள்ளையடிப்புகளும் யுத்தமென்றால் இதெல்லாம் நடக்கும் தானே என்று உதட்டைப் பிதுக்கி கடந்துபோக உலகம் பழக்கி யிருக்கிறது. ஆனால் அனோனிமா இந்த பொதுப்புத்திக்கு எதிர்த்திசையில் மறித்து நிற்கிறாள். ஏனெனில் அவள் யுத்தத் தின் பார்வையாளராகவோ பங்கெடுப்பாளராகவோ இருந்தி ருக்கவில்லை. யுத்தம் அவள்மீதேதான் நடந்து முடிந்திருக்கி றது. கைப்பற்றப்படும் நாடுகளின் பெண்களது யோனிக்குள் நுழைந்த வெளியேறும் ஆணுறுப்புகளின் எண்ணிக்கையினால் அளவிடப்படுகிற யுத்தங்களின் வெற்றியை பரிகாசம் செய்த படி மருகிக்கிடக்கும் கோடானகோடி பெண்களின் ஒற்றைப் படிமமாக அவள் வரலாற்றின் நெடுகிலும் காட்சியளிக்கிறாள்.

தூயஇனம், கலப்பில்லாத ரத்தம், இனமானம், ஆளப்பிறந்தவர் கள் என்று முன்பு அலட்டிக் கொண்டிருந்த ஜெர்மானிய ஆண் களுக்கு தம்வீட்டுப் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகளை யாருக்கோ நடப்பதுபோல அமைதியுடன் பார்த்துக் கொண்டி ருப்பதன்றி வேறொரு வாய்ப்பும் அங்கு இருந்திருக்கவில்லை. பெண்கள் குழந்தை பெற்றுத்தள்ளும் வேலையை மட்டுமே செய்துகொண்டிருந்தால் போதும், தேவைப்பட்டால் அதற்காக தமது படையினரில் வலுவாக உள்ளவர்களை பொலிகாளை யாக அனுப்பிவைக்கத் தயார் என்ற ஹிட்லரின் தளபதிகளது ஆணவத்தை எதிர்த்து ஒரு வார்த்தையும் பேசாதிருந்த அவர் கள் அப்போதே தம்வீட்டுப் பெண்களை ஏறிட்டுப் பார்ப்பதற் கான யோக்யதாம்சத்தை இழந்துவிட்டிருந்தார்கள்.

ஆனாலும் இவ்வளவுக்குப் பிறகும் தம்வீட்டுப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளானதை, தற்காத்துக் கொள்ளத் தெரியாததால் பெண்கள் தமக்குத்தாமே வருவித்துக்கொண்ட கேடாகத்தான் அவர்களால் பார்க்க முடிந்ததேயன்றி யுத்தத் தின் தண்டனையாக பார்க்க முடியவில்லை. அந்த தண்ட னையை வலிந்து ரஷ்யாவுக்குப் போய் இழுத்துவந்த ஹிட்ல ரின் குற்றமாகப் பார்க்க முடியாதளவுக்கு ஜெர்மானிய ஆண் கள் அவரவர் பங்கிற்கு கொஞ்சங்கொஞ்சம் ஹிட்லராக இருந் தனர். அனோனிமாவின் காதலன் கெயர்ட்டும் இதற்கு விதி விலக்கானவல்ல. எப்பேர்ப்பட்ட நிலையிலும் தற்காத்து - புனிதம்(?) கெடாமல் தனக்காக காத்திருக்க வேண்டிய அனோ னிமா இப்படி ரஷ்ய ராணுவத்தினரிடம் சிக்கி சீரழிந்திருப்பதை அறிந்து அவளைவிட்டு வெளியேறிப் போகிறான் அந்த மூடன். மானஸ்தி என்று அவன் வைத்திருக்கும் எல்லா மதிப் பீடுகளையும் புறந்தள்ளி அடுத்த நொடியின் வாழ்க்கையை எதிர்கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறாள் அனோனிமா. அனோனிமா இப்படி தன்பாடுகளை மட்டுமே புலம்பியவிக்கி றவளாக இல்லை என்பதுதான் அவளை ஒரு முன்மாதிரிப் பெண்ணாக நம்மை உணரவைக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக் கும் எதுவும் பொதுவிலில்லை என்பதே அவள் பார்வையாய் இருக்கிறது. எதிரிப்படையினர் வந்தால் குடித்து மயங்கி பல வீனமாகிச் சாகட்டும் என்பதற்காக மதுவடிச்சாலைகளை அழிக்காமல் விட்டுச் செல்கிறது ஜெர்மனி ராணுவம். இது ஆண்களைப் பற்றிய ஆண்களின் பார்வை என்கிறாள் அனோ னிமா.உண்மையில் அவ்வாறு விட்டுச் செல்லப்படும் மதுவைக் குடித்து மூர்க்கமேறி வன்முறை இயந்திரமாக பெண்களின் மீது பாய்வதற்கே வழிவகுக்கிறது என்பது இந்த ஆண்களுக்குப் புரிவதேயில்லை என்று குற்றம்சாட்டுகிறாள். பிரிதொரு இடத் தில் உணவுத் தட்டுப்பாடு பற்றி பேசுகிறாள்.

கணவன் சாப்பிட்ட பிறகு எஞ்சியதை சாப்பிடுகிற நம்மூர் பதி விரதாத்தனம் அங்கும் வேறு வடிவிலிருக்கிறதோ என்னவோ அனோனிமா எரிச்சலடைந்து இப்படிச் சொல்கிறாள்- கர்ப்பத்திலிருக்கும் குழந்தை தமக்கான போஷாக்கை தாயிடமிருந்தே பெறுகிறது... தந்தையைப் பற்றி அது அறிந்திருப்பதில்லை. ஆனாலும் பாருங்கள் அந்த நாடு தந்தையர் நாடு என்றே ஆரவாரத்தோடு சொல்லப்பட்டு வந்தது. எஸ்டேட் தொழிலாளர்களை இழிவாக விளித்து கட்டளை பிறப்பிக்கவும், அவர்கள் எதைக் கேட்டாலும் முரட்டடியாக மறுப்பதற்கும் தேவையான சொற்களைக் கொண்ட கூலித் தமிழ் கையேடு ஒன்றை வெள்ளைக்கார துரைமார்களுக்கு புலவர் பெருமக்கள் தொகுத்தளித்தனர். தோற்கடிக்கப்பட்ட வர்களை கட்டளைகள் வழியாகவே கையாளும் இந்த மனப் பாங்கு நுட்பமானது. ரஷ்ய ராணுவத்தினருக்கும் வழங்கப்படும் டொச்மொழிக் கையேட்டில் உள்ள பதங்கள் அவ்வளவும் மக்களை நோக்கி பிறப்பிப்பதற்குரிய ராணுவக்கட்டளைகள். மக்களின் இரைஞ்சுதல்களையும் தேவைகளையும் விளங்க வைப்பதற்கான ஒரு சொல்லும் அதிலில்லை. ஆயுதத்தின் ஒருபகுதியாக அங்கு மொழியும் செயல்படுவதை மிகுந்த எள்ளலுடன் அம்பலப்படுத்துகிறாள் அனோனிமா.//

11 comments:

padma said...

நல்ல வாசிப்பனுபவம் . the diary of anne frank கூட இப்படி சில அனுபவங்களைத்தரும் .பெண்கள் போகத்திற்கு, காமத்திற்கு, களிப்பிற்கு, ஆளுமைக்கு, அதிகாரத்துக்கு, அடக்குமுறைக்கு ...அன்பிற்கு எப்போது?

Madurai Saravanan said...

அனோனிமா நல்லப் பகிர்வு. வாசிப்பு நேசிப்பு என்பது உங்கள் பகிர்வுக்கு பின் புத்தகத்தை தேடுகிறது. வாழ்த்துக்கள்

காமராஜ் said...

நன்றி பத்மா,

காமராஜ் said...

நன்றி சரவணன்

மாதவராஜ் said...

அவசியமான பதிவு தோழனே.

//ராணுவ பூட்சின் அடியில் ஒட்டியிருக்கும் அழுக்கு போலாகிவிட்ட அவளிடம் கர்ப்பந்தரித்து விடு வாயோ என்று ஒருத்தி கேட்ட போது பலர் நடமாடும் பாதை யில் புல் முளைக்காது... என்று பதிலிறுத்து தன்னைத்தானே தேற்றிக் கொள்கிறாள்.//

என்ன வரிகள் இவை. தாங்க முடியாத வலியையும் வரலாற்ரையும் சொல்கின்றன...

Vidhoosh(விதூஷ்) said...

மிகுந்த வேதனையும் வலியும் :(
புத்தகத்தின் தலைப்பு !!!!!!!!!!

அன்புடன் அருணா said...

இவ்வ்ளோ ரணமிக்க புத்தகங்களையெல்லாம் படித்ததில்லை காமராஜ்.

அம்பிகா said...

மனதை கனத்துப் போக செய்யும் பதிவு.

காமராஜ் said...

நன்றி தோழனே..

காமராஜ் said...

வணக்கம் வித்யா.
கருத்துக்கு நன்றி

காமராஜ் said...

நன்றி அருணா

நன்றி அம்பிகா