25.3.10

காடுமேடுகளில் வியர்வையோடு காய்ந்துகிடக்கும், கதைகளின் வற்றாத சுனை.

அன்புக்கினிய தீபாவுக்கு நன்றி.

கதை சொல்லியின் கதையை இன்னும் ஆயிரம் முறை சொன்னாலும் எழுதினாலும் ஒவ்வொரு முறையும் புதிது புதிதான நினைவுப் படிமங்கள் மேலெழுந்து வருகிறது.

மின்சாரமில்லாத காலத்துக்கிராமம்.மண்ணெண்ணெய் விளக்குகளை விட்டால் ஒரே கதி நிலவு தான்.விளக்குச் சிம்னிகளுக்கு பொலிவுகூட்ட சாம்பல் வைத்து துலக்குகிற எல்லோர்வீட்டுச் சாயங்கால முற்றங்களும் கதைகளால் குளிர்ந்து கிடக்கும்.அப்போதிலிருந்தே நாங்கள் தயாராகிவிடுவோம் கதைகேட்க.ஆமாம் எங்களுக்கான கதை
பொதுவானது. எங்கள் கதை சொல்லிகளும்   பொதுவானவர்கள்.வடிவம்மாள்,பக்கியக்கிழவி,மரியசெல்வம்,
வெள்ளச்சி,அய்யம்மாக் கிழவி,பாப்பாத்தி என்று ஒரு பட்டாளம் இருக்கும்.மடி நிறைய்யக் கதைகளை வைத்துக்   கொண்டு எல்லோருக்கும் பகிர்ந்து  கொடுப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு குரல்,ஒரு உத்தி இருக்கும்.அங்குவிலாஸ் போயிலை,கொட்டப்பாக்கு வெத்திலை,டீ ஏ எஸ் பட்டணம் பொடி என்று ஒவ்வொருவரிடமும் தனித்தனி வாசனை இருக்கும்.இருந்தாலும் வார்த்தைகளே சித்திரமாய்,காட்சியாய் விவரிக்கிற லாவகம் வழி வழியாய் ஒரே மாதிரி இருக்கும்.அதன்பிறகு இன்றுவரை சுண்டி இழுக்கும் கதை சொல்லிகள் எங்கும் தட்டுப்படவில்லை.

எதிரும் புதிருமான வாசல் படிகளில் தலைவைத்து தெருவில் கால் நீட்டிப் படுத்துறங்கும் அந்தக்கிராமத்து கோடை காலங்கள் இனித்திரும்பவே திரும்பாது.நடு இரவில் கயா நகரத்து புகை வண்டி நிலையத்தில் இறங்கும்போது படுத்துக்கிடந்த நெல்லறுக்கும் ஆயிரக்கணக்கான கூலிக்கார பீகாரிகளைப் பார்த்தோம். அந்தக்குளிரிரவை கண்ணீர் உஷ்ணமாக்கியதை என் தோழன் மாதுவிடம் கூட மறைத்து விட்டேன்.காட்சியாகப் பதிவு செய்யமுடியாத அந்த அமானுஷ்ய இரவுச் சித்திரம் நினைவுகளின் மூலைக்குள் கிடந்து பிராண்டிக்கொண்டே இருக்கிறது. நடு இரவு வரை நீளும் கதைகளுக்கு காதைக் கொடுத்தபடி எங்களோடு வானத்திலிருக்கும் நட்சத்திரங்களும் முழித்துக்கிடக்கும். ஊங்கொட்டுகிற கடைசி ஆளாய் பலசமயம் நானிருப்பேன்.அந்தக் கதைகளை எல்லாம்  எப்படியும் ஊருக்குச்
சொல்லாமல் போவதில்லை.அதற்கான முயற்சியோடு அவற்றை பாதாளக்கரண்டி போட்டுத் துழாவிக்கொண்டே இருக்கிறேன்.தட்டுப்படுகிறவை தேடுதல் வேட்டையில் குறிவைக்காத வேறு வேறு கதைகளாகி எனது எழுத்தாகிறது.இன்னும் முழுக்கதையும் கிடைக்கவில்லை செல்லரித்த பழய்ய கருப்புவெள்ளை நிழற்படம்போல திட்டுத் திட்டாய் மட்டுமே கைக்குக் கிடைக்கிறது.

அண்டரெண்டாப்பட்சி,மாயக்கம்பளம்,சுண்டெலியண்ணன்,ராஜகுமாரன்,அவனது காதலி விஜயா,மச்சக்கன்னி,நாகக்கன்னி,ஏழுமலை, ஏழுகடல்,உயிரைப்பதுக்கி வைத்திருக்கும் கிளியின் கால்கள்.அவற்றைப் பாதுகாக்கிற கருநாகங்கள் என்று தங்களை உடனுக்குடன் உருவம் மாற்றிக்கொள்ளும் கதைமாந்தர்களாய் பாட்டிமார்களின் வார்த்தையிலிருந்து கிளம்புவார்கள். நல்லதங்காள் கதை சொல்லும்போது எல்லாக் கதை சொல்லிகளும் நிச்சயமாய் அழுதுவிடுவார்கள். அதற்கான காரணம் கவசகுண்டலமாக அவர்களோடு ஒட்டிப்பிறந்த வறுமையும்,சகோதர பாசமும் என்பதை ஒரு கால் நூற்றாண்டு கழித்துத் தான் தெரிய நேர்ந்தது.கதை சொல்லிகள் அழுத பின்னாள் கதைகேட்பவர்கள் கதி என்னாகும். நல்ல தங்காளின் கடைசிப் பிள்ளையாக விட்டுவிடு நான் மட்டும் பிழைத்துக்கொள்கிறேன் அம்மா என்று மனசு கிடந்து கதறும்.

வறுமையையும்,பசியையும்,நீர்த்துப் போகச்செய்ய அவர்களுக்கு கிடைத்தவை உழைப்பும் அதோடு கூடப்பிறந்த கதையாடல்களும்தான்.பல ஞாயிற்றுக் கிழமைகளில் அருணாசலக்கிழவன் தடித்த புராணக்கதைப் புத்தகங்களைத்
திண்ணையில் வைத்து ராகம் போட்டுப்படிப்பார்."ஏ தாத்தா கதைய நிப்பாட்டு, ஒத்த வப்பாட்டிய வச்சிக்கிடே ஒரு நாளைக்கு ஏழுதரம் சண்ட போட்ற,எங்க வெள்ளச்சிக் கிழவிகிட்ட பய பரட்டன்னு நாற வசவு வாங்குற,அன்னக்கி கூட கலிமட்டயிட்டு அடிவாங்கி வலிதீர ஏண்ட சாராய்ங்கேட்ட,ஆனா அந்தத் தாயோளி தசரதன காலம்பூறா ராசா கடவுளுண்ணு எப்பிடிச் சொல்லலா " இப்படி ஐயண்ணா சுந்தரப்ப மாமா கேள்விகேட்டதும் புத்தகத்தை மடிச்சுவச்சுட்டு "போங்கடா குடிகாரப்பயலுகளா" என்று துண்டை உதறித்தோளில் போட்டபடிக்
பதிலற்றுக் கிளம்பிவிடுவார்.

காத்திருந்த ஊர்ச்சனம் 'கதையக்கெடுத்த குடிகாரப்பாவி' என்று திட்டவும் ரோசப்பட்டுப்போய் சம்மணம்போட்டு உட்கார்ந்து பாட்டுப்பாட ஆரம்பிப்பார். "அண்ணம் மாரே தம்பி மாரே அருமையுள்ள அக்கா மாரே மன்ன மணிக்குறவன் மாண்ட கதையச் சொல்லி  வாரன்  மக்களப்போல நினச்சு மண்ணிக்க வேணும் பிழ பொறுத்து" பத்துக்கட்டையில் பாடும் சுதிக்குத் துணையாக ராசாச்சித்தப்பா மாட்டுச்சவ்வு கட்டிய பானைத் தாளத்தைக்கொண்டு வந்துவிடுவார் அன்று உடனடி சிவராத்திரிதான்.விடிய விடிய நடக்கிற ஜுகல் பந்தியில் பார்வையாளரும் பாடகராவார்கள்.கடல் நீர் நடுவே பயணம் போனால் குடிநீர் தருவது யாரோ என்று பாடிக்கொண்டே கல்லுடைக்கும் பகாரி மாமன் அழுதுவிடுவார். இத்தனைக்கும் சாகுமட்டும் அவர் கடல் பார்த்ததில்லை.அந்த இறுக்கம் தீர பாம்பாட்டிக்காளியப்பன் 'காப்பித்தண்ணி இல்லாமலே சும்மா கலங்குறானே ஊமத்தொற' என்று பாடுவார்.ஏய் மணிக்குரவங் கதையில ஊமத்தொறைக்கு என்ன சோலி,குடிச்ச போதை கொறயலயா  என்று கஞ்சிரா அடிக்கும் மாடசாமிச்சித்தப்பா கேட்டதும். 'வாய்யா வாத்தியாரு', மூனு மணி நேரமா தொண்ட கிழியக்கத்துறனே வெல்லக்கட்டி,காபிந்தூளு இல்லாமலா போச்சி இந்த சூரங்குடியில" என்று கேட்கவும் ஆவிபறக்க சுக்குக்காப்பி கூட்டத்துக்குள் வரும்.

நடு இரவில் குடிக்கிற வரக்காப்பியின் ருசி,காட்டிலே களையெடுக்கும்போது குடித்த கம்மங்கூலின் ருசி,குளம்பு வேகுமுன் அடுப்பில் சுட்டுத்திண்ண சுவரொட்டியின் ருசி,மேமாதச் சுடுவெயிலை புளியம்பழப்பானக்ரகத்தோடு
கழித்த ருசி இன்னும் தொண்டைக்குள்ளே நிற்கிறது, இந்தக்கதைகளோடு. 

காப்பித்தண்ணி குடித்துவிட்டு பீடி பத்தவைத்து  "எலே சுந்தரப்பா கொனத்துலயு தங்கக்கொனம் அல்லிலே லேலோ ன்னு  படிக்கம்போது கூட்டத்தப் பாத்து பயந்து பயந்து படிக்கியே எதுக்கப்பா" இப்படிச் சொல்லவும் கூட்டம் கெக்கெக்கே என்று ஒரே சுதியில் சிரிக்கும்." ஏ மாமா ஓங்கதைய எங்காகிட்டக் கேக்கனும் நீ வந்து ஊர்க்கத பேசுறயா" என்று கூட்டத்துக் குள்ளிருந்து பதில் வரும்.இப்படிச் சாவகாசமாய் உட்கார்ந்து பேசிச் சிரித்து கதைகளுக்கு இடைவேளை விடுவார்கள்.

நானும் தான்.

17 comments:

நேசமித்ரன் said...

ஒரு கி ரா கதை வாசிப்பதற்கு நெருக்கமான உணர்வைத்தருகிறது பாத்திரப் படைப்பும் பின்புலமும்

க.பாலாசி said...

நான் பொறக்கும்போதே இந்த கிராமத்து கதைசொல்லிகளை முழுங்கிவிட்டுதான் பிறந்திருபேன்போல... எந்தெருவுல ரெண்டுபேரு இருந்தாங்க... எந்தகதையும் என் ஞாபகத்துல இல்ல...

இந்த எழுத்தின் வாசம் என் அலுவலகம்வரை சுண்டியிழுக்கிறது....

அன்புடன் அருணா said...

அப்படிக் கேட்ட நிறைய கதைகள் முடிவேயில்லாமல் இருந்திருக்கின்றன.இவ்வ்ளோ விஷயங்களா???இந்த ஒரு பத்தியில் என யோசிக்க வைக்கிறீர்கள்.

ராம்ஜி_யாஹூ said...

இன்று குழந்தைகளுக்கு போகோ சானல்களும் ஜிட்டெக்ஸ் சானல்களும் , பன்சி பட்டி இணைய தளங்களும் கதை சொல்லுகின்றன.

Deepa said...

//ஆமாம் எங்களுக்கான கதை
பொதுவானது. எங்கள் கதை சொல்லிகளும் பொதுவானவர்கள்.//

ஆஹா! இதில் தொடங்கி நீங்கள் இட்டுச் சென்ற உலகத்துக்குள் ஒரு டைம் மிஷின் வைத்துக் கொண்டு நுழைந்து விட வேண்டும் போலிருந்தது.

நன்றி அங்கிள்!

padma said...

இந்த கதை சொல்லிகளின் கதை விடிய விடிய கூட நடந்ததுண்டு .ஒரே ஒரு சமயம் என் அப்பா மண்ணை மேடாக்கி அதில் என்ன உட்காரவைத்து கதை கேட்டது ஞாபகம் உள்ளது.
மனதை வருடும் நடை .எதோ ஒன்றை இழந்த எண்ணம் ,ஒரு சொல்லதெரியாத இழப்பு வந்து உட்கார்ந்து கொள்கிறது இதையெல்லாம் படிக்கும் போது

seemangani said...

நான் இதையெல்லாம் அனுபவித்தது இல்ல ஆனால் இந்த பதிவு அதை பூர்த்தி பண்ணிடுச்சு...அருமையான பகிர்வு...வசீகரிக்கும் வார்த்தைகள்...வாழ்த்துகள்...

இராமசாமி கண்ணண் said...

நல்ல பகிர்வு சார். நன்றி.

பா.ராஜாராம் said...

உங்கள் தளம் வந்து,"அன்புக்கினிய தீபாவுக்கு நன்றி"பார்த்ததும்,இதை படிக்காமலேயே தீபா தளம் போய்,திருப்பி வந்து இதை வாசிக்கும் போது,இரண்டு வேறு வேறு வேறு காலங்களில் பயணித்த அனுபவம் காமு.


//மின்சாரமில்லாத காலத்துக்கிராமம்.மண்ணெண்ணெய் விளக்குகளை விட்டால் ஒரே கதி நிலவு தான்.விளக்குச் சிம்னிகளுக்கு பொலிவுகூட்ட சாம்பல் வைத்து துலக்குகிற எல்லோர்வீட்டுச் சாயங்கால முற்றங்களும் கதைகளால் குளிர்ந்து கிடக்கும்//

//எங்கள் கதை சொல்லிகளும் பொதுவானவர்கள்.வடிவம்மாள்,பக்கியக்கிழவி,மரியசெல்வம்,
வெள்ளச்சி,அய்யம்மாக் கிழவி,பாப்பாத்தி என்று ஒரு பட்டாளம் இருக்கும்.மடி நிறைய்யக் கதைகளை வைத்துக் கொண்டு எல்லோருக்கும் பகிர்ந்து கொடுப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு குரல்,ஒரு உத்தி இருக்கும்.அங்குவிலாஸ் போயிலை,கொட்டப்பாக்கு வெத்திலை,டீ ஏ எஸ் பட்டணம் பொடி என்று ஒவ்வொருவரிடமும் தனித்தனி வாசனை இருக்கும்//

//எதிரும் புதிருமான வாசல் படிகளில் தலைவைத்து தெருவில் கால் நீட்டிப் படுத்துறங்கும் அந்தக்கிராமத்து கோடை காலங்கள் இனித்திரும்பவே திரும்பாது//

//அண்டரெண்டாப்பட்சி,மாயக்கம்பளம்,சுண்டெலியண்ணன்,ராஜகுமாரன்,அவனது காதலி விஜயா,மச்சக்கன்னி,நாகக்கன்னி,ஏழுமலை, ஏழுகடல்,உயிரைப்பதுக்கி வைத்திருக்கும் கிளியின் கால்கள்.அவற்றைப் பாதுகாக்கிற கருநாகங்கள்//

// வறுமையையும்,பசியையும்,நீர்த்துப் போகச்செய்ய அவர்களுக்கு கிடைத்தவை உழைப்பும் அதோடு கூடப்பிறந்த கதையாடல்களும்தான்.பல ஞாயிற்றுக் கிழமைகளில் அருணாசலக்கிழவன் தடித்த புராணக்கதைப் புத்தகங்களைத்
திண்ணையில் வைத்து ராகம் போட்டுப்படிப்பார்."ஏ தாத்தா கதைய நிப்பாட்டு, ஒத்த வப்பாட்டிய வச்சிக்கிடே ஒரு நாளைக்கு ஏழுதரம் சண்ட போட்ற,எங்க வெள்ளச்சிக் கிழவிகிட்ட பய பரட்டன்னு நாற வசவு வாங்குற,அன்னக்கி கூட கலிமட்டயிட்டு அடிவாங்கி வலிதீர ஏண்ட சாராய்ங்கேட்ட,ஆனா அந்தத் தாயோளி தசரதன காலம்பூறா ராசா கடவுளுண்ணு எப்பிடிச் சொல்லலா " இப்படி ஐயண்ணா சுந்தரப்ப மாமா கேள்விகேட்டதும் புத்தகத்தை மடிச்சுவச்சுட்டு "போங்கடா குடிகாரப்பயலுகளா" என்று துண்டை உதறித்தோளில் போட்டபடிக்
பதிலற்றுக் கிளம்பிவிடுவார்//

//நடு இரவில் குடிக்கிற வரக்காப்பியின் ருசி,காட்டிலே களையெடுக்கும்போது குடித்த கம்மங்கூலின் ருசி,குளம்பு வேகுமுன் அடுப்பில் சுட்டுத்திண்ண சுவரொட்டியின் ருசி,மேமாதச் சுடுவெயிலை புளியம்பழப்பானக்ரகத்தோடு
கழித்த ருசி இன்னும் தொண்டைக்குள்ளே நிற்கிறது, இந்தக்கதைகளோடு.//

இனி,இப்படி சுண்ட வைத்த வெஞ்சனம் தொட்டுத்தான்,கால கஞ்சி குடிக்கணும் போல என்று நினைக்கையில் கண் நிறைந்துதான் வருகிறது.மீட்டு தந்ததுக்கு நன்றிடா பயலே. :-)

காமராஜ் said...

வாங்க நேசன். கி ரா வோடு ஒப்பிடுவது ரொம்பக்கூச்சமாக இருக்கு. அவர் மிகப்பெரும் ஜாம்பவான்.

காமராஜ் said...

பாலாஜி வாங்க.இழந்தவைகளை எழுத்துக்கள் மூலம் மீட்டெடுக்க
முயற்சி செய்வோம்.

காமராஜ் said...

//இவ்வ்ளோ விஷயங்களா???இந்த ஒரு பத்தியில் //

ரொம்ப ஓவராகிருச்சோ,பத்துமார்க் கேள்விக்கு இருபது மார்க் பதிலெழுதிட்டேனோ ?.

காமராஜ் said...

வாங்க ராம்ஜி. மாற்றம் நிலையானதுதானே.

காமராஜ் said...

ஒருவழியாய் நான் எழுத நினைத்த ஒரு நினைவுக் கட்டுரையை
தொடங்கி வைத்தது தீபா.கொஞ்சம் போரடித்தாலும் இன்னும் ரெண்டு பதிவாக எழுதியே தீர்ப்பேன்.

ரொம்ப நன்றி தீபா.

காமராஜ் said...

நன்றி பத்மா .

காமராஜ் said...

நன்றி சீமான்கனி,
நன்றி ராமசாமிக்கண்ணன்.

காமராஜ் said...

பாரா...
எப்டியிருக்கீங்கப்பா.