3.3.10

கம்பிவேலிகளைத் தாண்டும் அன்புச்செடிகள்

போபால் தாண்டியதுமே குளிர் எல்லாவற்றையும் ஊடுறுவி சில்லிட்டது. அந்த இரவை பயணிகள் வெகு சீக்கிரம் எதிர் கொண்டார்கள். ஒன்பது  மணிக்குள்ளாகவே  ஸ்வெட்டர்,போர்வை சகிதமாக சுருண்டது ரயிலின் பெட்டிகள். பிரதேசங்களை மட்டுமல்ல சீதோஷ்ணங்களையும் ஊடறுத்து ரயில் ஓடிக்கொண்டிருந்தது.அதன் பிறகான நிறுத்தங்களில் வழக்கமான 'கரம்சாய்' சத்தம் கேட்கவில்லை.கையில் இருந்த இரண்டாம் ஜாமங்களின் கதை மிக மெதுவாக புரண்டு கொண்டிருந்தது.காலையில் ஜெய்ப்பூர் இறங்கிவிடுவோம் என்கிற குதூகலம்.எல்லா சிறுபிராயத்து பயணங்களையும் அவ்வப்போது மேலே கொண்டுவந்தது.

எதிரே இருந்த மேல் பெர்த்தில் தன் தாயின் கதகதப்பில் உறங்கிய குழந்தையின் கழுத்து பெர்த்தைவிட்டு தொங்கியது. அந்த மங்கலான ஒளியில் ஒரு சின்ன பயம்  தொற்றிக்கொண்டது. அந்தக்குடும்பம் மொத்தமும் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தது. அவர்களை எழுப்புவதா,தலையை தூக்கி சரிசெய்வதா இல்லை இழுத்துப் போர்த்தி படுத்துவிடுவதா என்கிற பட்டிமன்றம் கம்பிவேலிகளுக்குப் பின்னாலே நடந்தது. அதில் இருந்து சடாரென வெளியேறிச்  அந்தத் தாயின் காலைத்தட்டி ' மேடம் உங்கள் குழந்தையின் தலை தொங்குகிறதென்று' என்று ஆங்கிலம் தமிழ் ஹிந்தி மும்மொழியும் கலந்து சொல்லத் துணிவு வந்தது.கொஞ்சம் கலவரமும் நிறைய்ய கனிவுடனும்  பாத்துவிட்டு குழந்தையை மறுபக்கம் தூக்கி படுக்கவைத்துக் கொண்டாள்.மனதில் சிக்கல் உருவாக்கியிருந்த சந்தேகங்கள் இடமிழந்து தெளிவாக இருந்தது.புத்தகத்தை மூடி வைத்து விட்டுப் படுக்கவும் தூக்கம் முந்திக்கொண்டது.

யாரோ எழுப்ப கண்விழித்தபோது  இந்தியில் எதோ சொல்லிக் கொண்டிருந்தாள் அந்தக் கைப்பிள்ளைக்காரி.அந்த பெட்டி முழுக்க இறங்கத் தயாராகிக் கொண்டிருந்தது. 'ஜெய்ப்பூர் வரப்போகுது எந்திரி' என்று சொல்லி எழுப்பியிருக்கவேண்டும்.சென்னையில் ஏறிய மிகப்பெரிய பட்டாளத்தில் இருந்த அவள்தான் நாங்கள் இருந்த பகுதிவேண்டாம் வேறு இடம் போகலாம் என்று கணவனிடம் சொன்னவள்.நாங்கள் இருந்த பக்கம் அவள் திரும்பவே திரும்பவில்லை. ஆனால் குழந்தை அவளிடம் இருந்து தப்பிக்க ஒரு அரை மணி நேரம் மட்டுமே எடுத்துக்கொண்டது அங்கிருந்த கண்ணுக்குத் தெரியத வேலியையும் குழந்தையே துக்கி எறிந்தது. எல்லோரிடமும் கம்பிவேலியும் அன்பு முளைக்கும் செடியும் இருக்கிறது. இப்போது ஜெய்ப்பூரில் இறங்கும்போது இலக்கண சுத்தமாக சகோதரா என்று சொன்னாள். சொன்னது என்ன மொழியாக இருந்தாலென்ன?.

வெப்பமான மனிதர்கள் இறங்கியதும் திறந்துகிடந்த ஒவ்வொரு பெட்டியும் ஏக்கத்துடன் பிளாட்பாரத்தை   எட்டிப் பார்த்தபடி  இருந்தது. காலிப்  பெட்டிகளுக்குள்  தற்காலிகப்  பூக்கள் முளைத்துக் கிடந்தன.வெளியே சிலர் கைகுலுக்கிக் கொண்டார்கள்.சிலர் வார்த்தைகளால், சிலர் ஆரத் தழுவிக் கொண்டார்கள்,சிலர் திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு இப்படி, ரகரகமாய் விடை பெற்றுக் கொண்டார்கள்.வெறும் பெட்டிகள் மௌனமாய் பெருமூச்சு விட்டது.உள்ளே சிதறிக்கிடப்பது குப்பைகள் அல்ல நினைவுகள்.

18 comments:

ராகவன் said...

அன்பு காமராஜ்,

எத்தனை நாட்காளாகி விட்டது இது போல வாழ்க்கையின் சுவாசத்தை உறிஞ்சி குடிக்க...

கடைசி பத்தியில் ஏக்கம் பெட்டிகளுக்கு மட்டுமா என்ன? உதிர்ந்து கிடந்தது குப்பைகள் அல்ல நினைவுகள்...

ரொம்ப அருமையான பதிவு...

அன்புடன்
ராகவன்

சுந்தரா said...

//எல்லோரிடமும் கம்பிவேலியும் அன்பு முளைக்கும் செடியும் இருக்கிறது.இப்போது ஜெய்ப்பூரில் இறங்கும்போது இலக்கண சுத்தமாக சகோதரா என்று சொன்னாள். சொன்னது என்ன மொழியாக இருந்தாலென்ன?.//

இடைவெளிகளை நிரப்புகிற எதிர்பார்ப்பில்லாத அன்பு... இப்படி,ரயில் பயணங்களில் அவ்வப்போது அனுபவிக்கக் கிடைக்கிறதுண்டு.

சிறிய இடைவெளிக்குப்பின் வந்திருக்கும் அருமையான பதிவு.

க.பாலாசி said...

கொஞ்சம் காலம் கடந்து இந்த அடர்த்தியான எழுத்துக்களை சந்திக்கிறேன்.

//இலக்கண சுத்தமாக சகோதரா என்று சொன்னாள். சொன்னது என்ன மொழியாக இருந்தாலென்ன?.//

உண்மைதான்...மனிதம் தழைத்தோங்க மொழியெதற்கு...

மாதவராஜ் said...

அருமையான பகிர்வு தோழனே..
இதுபோன்ற சம்பவங்கள் எவ்வளவு அழகானவை! சந்தோஷமானவை!

அன்புடன் அருணா said...

பூக்கள் இருந்தால் முள் இருப்பது போலவே கம்பிவேலிகளும் அன்புச் செடிகளும் இணைந்தே இருக்கும் போல...ரயில் பயணங்கள் இப்படித்தான் ஆயிரம் கதை சொல்லும்.!

அன்புடன் அருணா said...

பூக்கள் இருந்தால் முள் இருப்பது போலவே கம்பிவேலிகளும் அன்புச் செடிகளும் இணைந்தே இருக்கும் போல...ரயில் பயணங்கள் இப்படித்தான் ஆயிரம் கதை சொல்லும்.!

சி. கருணாகரசு said...

பதிவு மிக நெகிழ்வாய் இருக்குங்க.

யாஹூராம்ஜி said...

class post,

your post is a bit relief from the Nithyanadha wave

காமராஜ் said...

என்ன ராகவன்.
எப்படி இருக்கீங்க.
விடுபட்ட உங்கள் எல்லா பதிவும் படிக்கனும்.
பொறுத்துக்குங்க.

காமராஜ் said...

நன்றி சுந்தரா.

காமராஜ் said...

கொஞ்ச் காலம் கடந்தல்ல, ரொம்பவே.
நன்றி பாலாஜி.

காமராஜ் said...

வா என் அன்புத்தோழா.

காமராஜ் said...

அருணா மேடம்
வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி.

காமராஜ் said...

நன்றி கருணாகரசு.
0
குப்பன் சார் எப்டி இருக்கீங்க

அம்பிகா said...

இடைவெளிகளை இட்டு நிரப்பும் அருமையான பதிவு.
//எல்லோரிடமும் கம்பிவேலியும் அன்பு முளைக்கும் செடியும் இருக்கிறது.//
அருமை.

க.இராமசாமி said...

அருமையான பகிர்வு. ரொம்ப நன்றி.

பா.ராஜாராம் said...

காமு,

வந்தாச்ச?..

கொண்டோடி மாடு மாதிரி...

அங்க ஓடி,இங்க ஓடி இளைப்பாறும் மூச்சு குழுதாடி தொட்டிக்குள்ள என்பது போல்..

ஒரு பதிவு மக்கா.

காமராஜ் said...

நன்றி

அம்பிகா,
க.ராமசாமி,
பாரா....