23.7.11

பராக்குப் பார்த்தல் - இன்றைய மணல்கயிறு, நாளைய வரலாறு.


அவர் அன்று வழக்கத்துக்கு மாறாகவே பணப் பரிவர்த்தனையை முடித்திருந்தார்.கிளையில் எல்லோருக்கும் ஆச்சர்யம். நான்கு மணிவரைதான் பணப் பரிவர்த்தனை என்றாலும் நாலரை மணிவரை வாடிக்கையாளர்களுக்காக சேவை செய்கிற அவர் அன்று சற்று முன்னதாகவே முடித்துவிட்டார்.காரணம் அவரது உறவுப்பெண் ஒருத்தி தற்கொலை செய்துகொண்டதால் துக்க வீட்டுக்குச் செல்லவேண்டும் என்று சொன்னார். கிளைமொத்தமும் அந்த மரணத்தை அறியவும் அதுகுறித்து விவாதிக்கவும் தொடங்கியது.கணவன் குடிகாரனாம். எவ்வளவோ சொல்லியும் அவன் தனது குடிப்பழக்கத்தை விடவில்லையாம். வெறுத்துப்போன மனைவி.தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீப்பற்றவைத்துக் கொண்டாளாம்.

அதைக்கேட்ட இளம் பெண் ஊழியர் ஒருவர் இப்படிச்சொன்னார்.ஓவராக்குடிச்சுட்டு வந்ததுக்கு அவம்மேல இல்ல மண்ணெண்னெய் ஊத்தி தீ வச்சிருக்கணும்.நான் சொல்லவந்தது அதுவல்ல. மறுநாள் காலை செய்தித்தாளில் ஒரு செய்தியைப்பார்த்தேன். சமைத்தபோது கவனக்குறைவாக இருந்ததால் தீப்பிடித்து இளம் பெண் சாவு என்றிருந்தது. என்னடா இது தொடர்ந்து பெண்களே தீயினால் இறந்து போகிறார்களே என்று வருத்தத்தோடு விளாவாரியாகப் படித்தேன். ஊர் பெயர் சம்பவம் தேதி எல்லாம் முதல்நாள் கேள்விப்பட்ட மரணச்செய்தி பற்றியதாக இருந்தது.காரணம் மட்டும் கயிறு திரிக்கப்பட்டு இருந்தது.அதற்குப் பெயர்தான் நடு நிலை நாளேடு.

இப்படித்தான் கடலில் மீன் பிடிக்கச்சென்ற மீனவர்கள் குறித்த செய்தியும். ஆளுங்கட்சி கரைவேட்டி கட்டியிருந்த அவரோடு பேச நேர்ந்தது.நகை அடகு வைக்க வந்த அவர்.அங்கிருந்து போவதற்குள் ஆறுமுறை தனது மகன் கடலியல் தொழில் நுட்பத்துக்கான பட்டப்படிப்பு படிப்பதாகச்சொன்னார்.சொல்லுகிற ஒவ்வொருமுறையும் அவரது கறுத்த முகம் பூரித்து பிரகாசிப்பதை பார்க்கமுடிந்தது. வெறும் பூரிப்பு மட்டுமல்ல பரம்பரை பரம்பரையாக கடல் தொழில்செய்கிற அவரது தொழிலின் மிக மேன்மையான இடத்துக்கு மகனை அனுப்பிவைக்கிற சந்தோஷம் அதில் பளிச்சிட்டது.

அடிக்கடி சிங்களக் கடற்படை நமது மீனவர்களைப் பிடித்துக்கொண்டு போய்விடுகிறதே.நிரந்தரமாக நாம் ஏதும் செய்ய்ய முடியாதா ?.நமக்கும் கடலோரக் காவல்படை இருக்கிறதல்லவா என்ன தான் செய்கிறார்கள் என்று கேட்டேன்.சுற்று முற்றும் பார்த்துவிட்டு. சார் அவுங்க கடல் எல்லைக்குள் பத்து பதினைந்து கிலோமீட்டர் போய் நாம மீன்பிடிச்சா சும்மாவா விடுவான்.அதுவும் ஒரு நாடுதானே என்று சொன்னார்.அப்போ செய்தித்தாளில் வருகிறதெல்லாம். சார் பச்சையாய்ச்சொல்லப்போனால் அவுங்க வீடு புகுந்து நாம களாவாங்குறோம்.இதையெப்படி பேப்பர்ல போடுவான். இல்லீங்க கடல்ல எப்படி எல்லையைக் கணக்குப் பார்க்கமுடியும் அங்கென்ன சுவரா கட்டமுடியும் கொஞ்சம் முன்னப் பின்ன இருக்கத்தானே செய்யும் என்றேன். .கடகடவெனச் சிரித்துக் கொண்டு  ஆயிரமாயிரம் வருஷமா கடலுக்குள்ள அலையிறோம் கடலப்பத்தி இஞ்ச் இஞ்சா எங்களுக்குத்தெரியும் சார் என்று சொன்னார்.

இப்படித்தான் ரஜினிகாந்தின் மருத்துவமும், சமச்சீர் கல்வி குறித்த செய்திக் குப்பைகளையும் நாம் வாங்கி அட்சர சுத்தமாகப் படிக்கிறோம். இன்றைய செய்தி நாளைய வரலாறாம்.

14.7.11

பராக்குப்பார்த்தல் - ராமநாதபுரத்து நாட்கள்

கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஓடிவிட்டது. சாத்தூரிலிருந்து பெயர்த்தெடுத்துக் கொண்டுபோய் ராமநாதபுரத்தில் ஒரு விடுதி அறையில் என்னை நட்டுவைத்து. சுற்றிச்சுற்றி வந்து பார்க்கிறேன். வாழ்க்கை புது நாத்துப்போல துவண்டு நிற்கிறது. அதைத்தூக்கி நிறுத்த புத்தகங்களையே கதியெனத் தேடி ஓடவேண்டியதிருக்கிறது. வாங்கிவைத்து படிக்கமுடியாமல் போன புத்தகங்கள் தனிமைக்கான  அருமருந்தாய்  வந்துசேர்கிறது. படிக்கப் படிக்க வியப்பை அதிகரிக்கிறது ஒருபொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம். அந்த எழுத்துக்கள் நாம் பார்க்கும் மேலோட்டமான உலகத்தையும் செய்திகளையும் அரசியலையும் அப்படியே குப்புறக்கவுத்தி தெருவில் வீசுகிறது.அணைகள், மேம்பாலங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் பளபளப்புக்குப் பின்னாடி அமெரிக்க கழுகின் எச்சில்வடியும் நாக்குகள் தொங்கிக் கொண்டிருப்பதைச் சொல்லுகிற புத்தகம் தான் பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம். எதையெதையோ தோண்டித் துருவிக்கண்டுபிடிக்கிற இந்திய உளவுத்துறை இதுபோன்ற உலகளாவிய சதிவலைப் பின்னல்களின் பக்கம் திரும்பிப் பார்க்கவே பயப்படுகிறது. அது பயமா மரியாதையா இல்லை ஊரில் வட்டிக்கு கொடுத்து வாங்குகிறவர்களைப்பார்த்து ஓடி ஒளிந்துகொள்கிற உதறளா என்று தெரியவில்லை.

சகோதரர் கோணங்கியின் கல்குதிரை கிடைத்தது. அவரது எழுத்துக்கள் குறித்து இருபதுவருடங்களுக்கு மேலான பயம் இன்னும் தெளிந்த பாடில்லை. ஆனாலும் அவரது கல்குதிரை இதழ்களில் வரும் சில எழுத்துக்கள் பிரம்மிப்பாக இருக்கும். அப்படித்தான் பிரம்மிக்க வைத்தவர் தோழர் மு.சுயம்புலிங்கம்.அதே போல இந்த வேனிற்கால இதழில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு கதை ச.விஜயலட்சுமியின் பாராசூட் மனிதர்கள் சிறுகதை. சென்னை நமக்கு கடற்கரையையும்,நெரிசலையும் ஆட்டோக்களையும்,சுடசுட சினிமா  போஸ்டர்களையும், ரெங்கநாதன் தெருவையும்,பண்டிபஜாரையும் இன்னும் பல ஈர்ப்புகளை செய்துவைத்திருந்தாலும் அந்த எழும்பூர் ரயில்  நிலையத்துக் கருகில் வசிக்கும் கூவம் நதிக்கரை மனிதர்கள் கட்டாயம் மனிதாபிமானமுள்ள யாரையும் ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு விடுவார்கள். அவர்கள் குறித்தான நமது மௌனக் கேள்விகளுக்கு ஒரு பகுதி விடை சொல்லுகிறது பாராசூட் மனிதர்கள்.

புத்தகங்கள் பற்றியென்பதனால் ராமநாதபுரம் புத்தகக்கடையில் நடந்த ஒரு உரையாடலைச்சொல்லாமல் இருக்கமுடியாது. அது ஒரு விரிவடைந்த பாடப்புத்தகங்கள் விற்கிற கடை. இது பள்ளிகள் ஆரம்பிக்கும் காலமாதலால் அங்கே ஒரு மாணவன் அவனின் பெற்றோர்கள் என்கிற கணக்குப்படி விலக இடமில்லாத கூட்டம். அங்குதான் கதைப்புத்தகங்களும் சிற்றிதழ்களும் கிடைக்கும் என்று நண்பர் சொன்னதை நம்பிக்கொண்டு போயிருந்தேன்.அவர் சொன்னதில் ஏதும் தவறும் இல்லை. பத்தடி அலமாரியில் எல்லாம் ரமணிச்சந்திரன் நாவல்கள், கண்ணதாசன் கட்டுரைப்புத்தகங்கள்,ராஜேஷ்குமார் போன்றவர்களின் படைப்புகள் அம்பாரமாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தது. நெடுநேரம் புத்தகங்களுக்கிடையில் ஊற்றுப்பர்த்துக்கொண்டிருந்த என்னிடம் சிப்பந்தி என்னவேண்டுமெனக்கேட்டார்.

சாண்டில்யன்,லேனா தமிழ்வாணன்,கண்ணதாசன் என சில புத்தகங்கள் பற்றி சின்னதாக அறிமுகமும் செய்துவைத்தார். அவை வேண்டாமென்று சொல்லிவிட்டு ஒரு சில புத்தகங்களைச் சொன்னேன் என்னை அவர் பார்த்த பார்வையை எப்படி விவரிப்பதென்று தெரியவில்லை. அங்கிருந்து வெளியேறி வர நகர்ந்த போது அப்பாவின் விரல்பற்றியிருந்த சிறுவன் ஜெயாமோகன் அப்படின்னா யாருப்பா  என்று கேட்டான்.அவனைப்பார்த்தால் ஒரு சிபிஎஸ்இ பள்ளியின் மாணவனாக அல்லது குறைந்த பட்சம் அதிகபட்சம் பணம் கட்டிப்படிக்கும் ஆங்கிலப் பள்ளி மாணவனாகவாவது இருக்கவேண்டும்.  அவனது பொறுப்புள்ள அப்பா இப்படிச்சொன்னார் ''ஷி இஸ் எ ஸ்டோரி ரைட்டர்'' என்று. என்னை முறைத்துப் பார்த்த அந்தச் சிப்பந்தியே பரவாயில்லை எனத் திரும்பிப் பெருமிதத்தோடு பார்த்துவிட்டுவந்தேன்.

3.7.11

மிஷினாஸ்பத்திரியும் துட்டுவாங்கும் மிஷினும்.வெள்ளந்திக்கதைகள்



விடிந்தும் விடியாத கருக்கலில் அடுப்புச்சட்டிகள் உருள்வதும் தண்ணீர் சிதறுவதுமான ஓசைகள்,ஊதுவத்தி,பச்சை விறகுப்புகை மணப்பதுமான வாசனைகள் .அந்த கிராமத்து தேநீர்க்கடை ஊருக்கு சுறுசுறுப்புடன் கூடிய இதமான இனிப்பு வழங்கத் தயாராகிக்கொண்டிருப்பதை அறிவிக்கும்.காப்பிப்பொடிய எங்க வச்ச ஒழுங்கா ஒரு எடத்துல வய்க்கத் தெரியுதா பொம்பளக்கி நல்லா வாயில வருது இந்தா ஓம்பீச்சாங்கயிப்பக்கத்துல கெடக்குற பாக்கெட் என்னது,ஆட்டுக் குட்டியெக் கழுத்துல போட்டுக்கிட்டு ரோட்டுல தேட்ற கதகெனட்டா.ம்க்கும் இந்த குண்டுபல்பு வெளிச்சத்துல என்ன தெரியிது.பேதியில போற பெயக நம்மூருக்கு மட்டும் இத்தினிக்கூண்டு கரண்ட அனுப்புறான்.சொல்லச் சொல்லக் கேக்காம கண்ண மூடிக்கிட்டு போயி ஓட்டக்குத்துனா இப்பிடித்தான்.

சொந்தச் சண்டையில்  ஆரம்பித்து அரசியலில் நிலைக்கொள்ளும் பேச்சு. இப்படி ஆரம்பிக்கிற பேச்சு ராத்திரிப் படுக்கிற வரை கூட வரும்.அதுவும் மெத்தப்படிச்ச சித்திரவேலு வந்தாப்போதும் கடையில் கூடப்பத்து டீக்கணக்கு சிட்டையில் ஏறும். ஊர்முச்சூடும் கைநாட்டுப்போட வண்டிமைதேடிக்கிட்டு அலஞ்சப்போ சாத்தூர் ஜப்பான் பள்ளிக்கூடத்தில் ஆறு வரைக்கும் படிச்ச மேதாவி சித்திரவேலு.அவன் வீட்டு ரெங்குப்பெட்டியில் ஒரு மைப்பேனா கெடக்கும்.அதை பெத்த பிள்ளைகளக் கூடத்தொடவிடமாட்டான். பிறந்தபிள்ளைகளுக்கு சேனை ஊத்த பேனாக்கேட்பார்கள் அப்போது பெரிய்ய அழிச்சாட்டியம் பண்ணுவான். என்னமோ ஊருக்குள்ள தங்கத்தேரை ஓசிக்கு ஓடவிட்ட ரஜபரம்பரை மாதிரி பேனாவைக் கொடுத்துவிட்டு அதை திருப்பி வாங்க வாசப்படியில உட்கார்ந்துவிடுவான். அது மட்டுமா ஊருக்கு வரும் தினத்தந்திப் பேப்பரையும்தான்.

எலே சம்மட்டியும்,மம்பட்டியும் தூக்குற ஒங்களுக்கு பேப்பரப்பத்தி என்னடா தெரியும் ஒருபானக்கஞ்சிய ஒரே தடவையில குடிச்சதத்தவர என்ன சாதிச்சிட்டீங்க என்று சொல்லுவான். அவனிடம் வாக்குவாதம் செய்ய யாரும் வரமாட்டார்கள்.அப்படி வாக்குவாதம் பண்ணி சண்டையாகிப்போனா நாளப்பின்ன ஒரு தபாலுகிபாலுவந்தா வாசிக்க சித்திரவேலுதான் கதி. ஒரே ஒராளுக்கிட்ட மட்டும் அவன் பருப்பு வேகாது அந்த சரோஜாச்சித்தி வந்துவிட்டாப்போதும் கம்முனு கெடப்பான்.அவள் பத்துப்படித்த விவரகாரி.அதுக்கு ஒரு காரணம் இருக்கு.ஊர் மடத்தில் அன்னைக்கு ஒரே கசமுசா சீட்டாட்டம் கூட நின்னு போச்சு.வேறு ஒன்றும் இல்லை மகாத்மாக் காந்தியின் பேத்தியா தான் இந்திராக்காந்தி என்று நட்டுக்க நிக்கிறான்.மடம் ரெண்டாகப்பிளந்து அங்கிட்டு பத்து இங்கிட்டு பத்துபேரா கோஷ்டியானது. ஊர்த் தலைவரிடம் போய் பிராது சொல்லலாம் என்றால். கீரமுண்டைகா வீட்டுக்கு போங்கடா போக்கத்த பெயகளா என்று விரட்டி விடுவார். களவு, சுவரேறிக்குதிச்சது, கையப்பிடிச்சு இழுத்தது, கடவுக்குள் பேண்டு வச்சது,புருசம்பொண்டாட்டி சண்டை,பொழித்தகராறு தீத்துவுட்றதில தான் ஊர்த்தலைவர் கில்லாடி.ஆனால் முனியாண்டி என்று எழுதிமுடிக்க மூன்றுநாள் ஆகும்.

அந்தப்பக்கமா வந்த சரோஜச்சித்தியிடம் பிராதைக் கொண்டுபோனார்கள்.அவள் அங்குவந்தவுடனே அவர் பாதிபேதி போய்விட்டது. கிட்டத்தட்ட தோத்துப்போனார்.அவளை ஆறாம் வகுப்புக்கு ஹாஸ்டலில் சேர்க்க மெத்தப்படிச்ச சித்திரவேலுதான் கூட்டிக்கொண்டு போனார்.மதுரை போகவேண்டிய அவர்கள் ரயிலேறிக்கொவில்பட்டிபோய் இறங்கியகதை ஊருக்குள் பிரபலம்.திருநெல்வேலி மதுரை என்று போர்டு போட்டு இரண்டு அம்புக்குறி எதிரும் புதிருமாக இருக்குமல்லவா? அவர் மதுரை அம்புக்குறி காட்டிய பக்கத்துப்பெட்டியில் ஏறி அமர்ந்து கொண்டு சவடால் பேசினார். கோயில்பட்டியில் இறங்கிப்பின்னர் அங்கிருந்து மதுரைக்கு பஸ்பிடித்துப்போய்ச்சேர இருட்டிவிட்டது.மறுநாள் ஊரே கெக்கெக்கேனு சிரிச்சுக்கிடந்தது.  அதிலிருந்து சரோஜாச்சித்தி அந்தப்பக்கம் வந்தாப்போதும் சவுண்டைக்குறைத்துக்கொள்வார்.

இப்போது வராலாற்றுப்பாடத்தில் படித்ததைச் சொன்னதும். ஊர்மடத்து விவகாரம் சப்பென்று போனது.அன்னைக்கு அப்படித்தான் கோயிலானுக்கு வயித்துவலியென்று வந்து கடையில் ஜிஞ்சர் பீர் வாங்கிக்குடித்துக்கொண்டிருந்தான்.யாரோ வெத்திலையும் மிளகும் வைத்து மென்னுதின்னு என்று சொன்னார்கள்.காலங்காத்தால ஒரு செம்பு புளிச்சதண்ணி குடி என்று மாடத்தி சின்னம்மை சொன்னாள். அங்கு வந்த சித்திரவேலு ஞானதுரை ஆஸ்பத்திரிக்குப்போ ஒரே ஒரு ஊசியில சொன்னங்கமாக்கேக்கும் என்று சொன்னார். கடிச்சிக்கிடக்கு கருவாடு வாங்கத்துட்டில்லன்னு வீட்டுல சண்ட போட்டுட்டு வந்துருக்கேன் துட்டாஸ்பத்திரிக்கு போகச்சொல்றயே சின்னையா என்று கடுப்பாகினான் கோயிலான்.

அப்புறம் கதை வேலுஅண்ணனுக்கு வகுத்தாப்பரேசன் செஞ்சது,திருமேனிச்சித்திக்கு காட்டாஸ்பத்திரியில கொழந்த பெறந்தது இப்படி ஒன்றிலிருந்து ஒன்றுக்குத்தாவிக்கொண்டே போனது.அப்போது தான் அங்கு வந்த பேச்சி முத்து கேட்டான் ”ஏ மாமா இந்த மிஷின் ஆஸ்பத்திரி மிஷின் ஆஸ்பத்திரின்னு சொல்றாய்ங்களே அப்படின்னா என்னா மாமா” என்று கேட்டான். இந்தச்சவால்கேள்விக்கு பதில் சொல்ல தனது கேள்விஞானத்தையெல்லாம் ஒன்று திரட்டி ஆரம்பித்தான்.மாப்பிள அங்க பூராம் மிஷினுதான்,நாடிபாக்க, ஊசிபோட, ஆப்பரேசன் பண்ண, மருந்துகட்ட இப்பிடி எல்லாவேலைக்கும் மிஷினுதே வச்சிருப்பாய்ங்க அது வெளிநாட்டுல சர்வச்சாதாரணம் பூராம் வெள்ளக்காரங்கண்டுபிடிச்சது என்று அளந்து விட்டுக்கொண்டிருந்தான்.அப்ப துட்டுவாங்குறது ஆளா இல்ல மிஷினா மாமா என்றான். எலே ஒங்க வலசல சும்மாவால சொன்னாய்ங்க சூத்துக்கொழுப்பு பிடிச்ச சுருளியன் வலசல் அப்படீன்னு என்று சொல்லிவிட்டுதுண்டை உதறித்தோளில் போட்டுக்கொண்டு கிளம்பிப்போனார் மெத்தப்படிச்ச சித்திர வேலு.