31.10.09

வலை மீது அலை பாயும் மனசு

வழிதவறிப்போன பசிநாட்களில்கிடைத்த கனிமராமாய்வலைத்தளம் ஏறினேன்.

எழுத்திலைகளுக்குள் மறைந்துகிடக்கும் சிநேகக்கனிகளில் கைபடாது

சுவைக்கநேர்ந்ததென் பசியாற.

பார்த்தமாத்திரத்தில் கிடைக்குமா பாத்திர விரிப்பில் மனசின் செழுமை

எழுத்தில் தெரியுமா கரங்களின் மென்மை.

ஒருவேளை தெரியாமல் போனாலும்.
இடைவெளியில், நிறுத்தக்குறிகளில், இழுத்துச்செல்லும் தொடர்கமாக்களில்தெரிந்துவிடும் அன்பும் சிநேகமும்.

அரண்மனை,அலுவலகம்,ஓலைக்குடிசை,தூக்கணாங்கூடு என்று நிறுவிக்கொள்ள இடம் கிடைத்தாலும் காற்றின் அசைவுகளை எதிர்மடக்கிச் சிறகடிக்கும் பறவையின் நிஜமே அதன் இருப்பிடம்.

தேர்த் திருவிழாவின் சமுத்திர அலைவில் ஒரு துளியாவதும். எண்ணவியலாப் பக்கங்களில் விரியும் ஓரெழுத்தாகவும் இருப்பதென்ன இழுக்கு.

எழுதுகோலின் அசைவில் எந்ததேரையும் திசை திருப்பும் வல்லமை ஒளிந்திருக்கிறதெனும்நெம்புகோல் மனதோடு எழுந்து வரவேண்டுகிறேன்.

30.10.09

எளிய மக்களின் கையிருப்பான நம்பிக்கையில் ஒன்று குறைகிறது.








நேர்மை,எளிமை, அர்ப்பணிப்பென்னும் ஆடம்பர அரசியலில் காணக்கிடைக்காத அரிய குணங்களோடு இரண்டு முறை மதுரை தொகுதியின் பாரளுமன்ற உறுப்பினராயிருந்த தோழர் பொ.மோகன் அவர்கள் இன்று சென்னை மருத்துவமனையில் காலமானார்.



கடந்த இருபது வருடங்களில் பலமுறை தொழிற்சங்க நிகழ்வுகளில் சந்திக்க நேர்ந்த தலைவர். பாராளுமன்ற உறுப்பினராவதற்குமுன்னாள் அவரிடம் இருந்த எளிமையில் ஒரு சிறு துரும்பளவுகூட மாற்றம் இல்லாமல் காணக்கிடைப்பது இன்றைய இந்திய அரசியலில் அரிதானது.



உழைக்கிற மக்களுக்காக, அடித்தட்டுமக்களுக்காக, போராடும் தொழிற்சங்கங்களுக்காக பேசுவதற்கும், செயல்படுவதற்கும் இருக்கும் குறைவான நம்பிக்கைகளில் ஒன்று மறைந்து போயிருக்கிறது. தோழர் மோகன் அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி.

வினோத ஒலிகளின் வரைபடம்


தொலைக்காட்சியும்,அலைபேசியும்,

கணினிப் பெட்டியும் கைவராத காலத்து

மொட்டை மாடிகளின்

மின்காந்த அலைகளிடறா நாட்கள்.


எட்டாவது வீட்டின் மொட்டைமாடியிலும்

காக்கைகுருவிகள் விரட்டவந்தாள்

கண்காந்த அலைகள் ஊடறுத்தபோதுகாய்ந்திருந்த

தானியங்களில் மீளப் பாவிக்கொண்டிருந்தது.ஈரம்


தனை நோக்கி அழைக்க மொட்டை மாடியில்அநேக

காரணங்கள் காய்ந்து கொண்டிருந்தது

ஜெயகாந்தனின்ஆத்மாநாமும், திஜாவின் பாபுவும்

எலிப்புளுக்கையாய் கிடந்தார்கள்


இருப்பை அறுத்துப் புலம் பெயர்ந்த நாளின்

அங்கேதான் கண்ணீரையும் காயவிட்டாள்

பெயரறியாப் பறவையின் மொழியெல்லாம்

மொட்டை மாடிவரைபடமாகும் விநோத நினவாக.

29.10.09

மறந்துபோன வரலாற்றிலிருந்து - தியாகி விஸ்வநாததாஸ்

இந்த அதிகாலைக் கனவை தனது அலைபேசி அழைப்பால் கலைத்துப் போட்டவர் தோழர் பாலச்சந்திரன். ஒரு முன்னாள் தொழற்சங்கத் தலைவர். விருதுநகர் மாவட்ட சுதந்திர வரலாற்றிலும் கம்யூனிஸ்ட் இயக்க வளர்ச்சியிலும் பெரும்பங்கு வகித்ததோழர் ஆலமரத்துப்பட்டி தியாகி ராமச்சந்திரன் அவர்களின் குமாரர். நான் திருத்தங்கல் கிளையில் பனிபுரியும் போது தற்செயலாக சந்தித்த ஒரு மகா மனிதன். தனது வீட்டில் புத்தகங்களுக்கென ஒரு அறையும் ஷெல்பும் ஒதுக்கிப்பாதுகாத்து வருபவர். தோழர் சீனிவசராவுடன் அவரது தந்தையாரின் தலைமறைவு வாழ்க்கையையும் அவர் நினைவுக் குறிப்பின் கையெழுத்துப் பிரதியையும் போற்றுதலுக்குரிய பொக்கிஷமாகப் பாதுகாத்து வருபவர்.


தொலைபேசியை எடுத்தவுடனேயே நாம் அந்தக்கலைஞனை மறக்கலாமா என்று முன்னுரை ஏதுமின்றி ஆரம்பித்தார்.அந்த அவசரத்தில் இருக்கிற ஆதங்கம் மிக வலிமையானது. சிவுகாசியில் பிறந்து தொந்தியப்ப நாடார் எனும் நாடகக்கலைஞனின்வளர்ப்பில் நடிப்பின் ருசியை உள்வாங்கி நாடகக் கலைஞனாகி, அந்த நேரம் சூடு பிடித்து எறிந்து கொண்டிருந்த சுதந்திரப் போராட்ட பொதுக் கூட்டத்தில் மகாத்மா காந்தியின் முன்னிலையில் தேசபக்திப் பாடல் பாடி மக்களையும் தலைவர்களையும் ஒருசேர ஈர்த்தவர். நாடகங்கள் மூலம் அடிமை எதிர்ப்பின் கங்கை ஊதிப் பெரிதாக்கிய பாஸ்கரதாஸ் அவர்களின் அடியொற்றி பெரும் பரபரப்பை உண்டாக்கியவர் தியாகி விஸ்வநாததாஸ்.


இன்றைய திரைக் கலைஞர்களுக்கு இணையான பிரபலமும், பணவரவும் கிடைத்த அந்தகால நாடக வரலாற்றில் அவருக்கு எல்லாம் கிடைத்தது. தனது பாடல்களாலும் பயமறியா நடிப்பினாலும் பெரும் மக்கள் திரளை ஈர்க்கமுடிந்த அவர் ஆங்கில அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்தார். பல முறை பிரிட்டிஷாரால் சிறைப்பிடிக்கப்பட்டார். இரவில் நாடகங்கள் போடுவதுபகலில் தலைமறைவாக அலைவது என ஒரு பரபரப்பு வாழ்க்கைக்கு தான்னை ஒப்புக்கொடுத்துக் கொண்டவர். அந்தக்கால நாடக மேடைகளில் முருகன் வேஷத்தில் வந்து மயிமேல் அமர்ந்தபடி கொக்குப்பறக்குதடி என்னும் தியாகி பாஸ்கரதாஸ் அவர்களின் பாடல் விலைமதிப்பற்றதும், புகழ்பெற்றதுமாகும். அதை எல்லாமேடைகளிலும் பாடுகிற வசீகரக்குரலிருந்தது தியாகி விஸ்வநாத தாஸிடம்.


காலம் எல்லாரையும் ஒரு நேரம் தூக்கிவைத்து பின்னர் இறக்கிவைக்கும். அப்படியொரு இறங்கு முகத்தில் இருந்த கப்பலோட்டிய தமிழன் வ உ சி யைத்தான் தனக்காக வாதாட அழைத்திருக்கிறார் விஸ்வநாத தாஸ். வழக்கை நடத்திவிட்டு அவரைத்தனியே அழைத்து ' உன் குடும்பத்தையும் கொஞ்சம் பார்த்துக்கொள்" என்று அறிவுறை சொல்லி விட்டுப் போனாராம் வஉசி. அதன் பிறகு நாடகங்கள் குறைந்து நலிந்து கொண்டிருக்கையில் வீட்டை விற்று ஜீவனம் நடத்திக்கொண்டிருந்த விஸ்வநாததாஸிடம் ஜஸ்டிஸ் கட்சியின் சார்பில் நாடகம் போட அழைத்திருக்கிறார்கள், சென்னை மாகான கவர்னரின்பிரதிநிதி வந்து பிரிட்டிஷாரின் சார்பில் போரை ஆதரித்து நாடகம் போட அழைத்திருக்கிறார்கள். அப்போது அவரிடம் எதிர்க்க முடியாத வறுமையும், அடைக்கமுடியாத கடனும் இருந்திருக்கிறது. இரண்டையுமே சரிசெய்து மாதம் ஆயிரம் ரூபாய்கொடுப்பதாக கவர்னரின் பிரதிநிதி உறுதியளித்தாராம்.


ஒரு நிஜக்கலைஞனின் வீராப்போடும், உறுதியோடும் அதைத் தன் கால்பெருவிரலால் தள்ளிவிடுவது போல நிராகரித்தாராம். சென்னை ராயல் தியேட்டர் மூலம் இரண்டாவது சுற்றாகக் கிடைத்த வய்ப்பை பயன்படுத்தி மேடையேறிய விஸ்வநாததாஸ் பாடியபடியே தனது 54 ஆம் வயதில் மறைந்துபோனார். அவர்விட்டுச் சென்ற சுதந்திரக் கங்குகள் தேவையற்றுப்போனதால் சுதந்திர இந்தியாவில் கேட்பரற்றுக்கிடக்கிறது.


அவரது ஐந்து குழந்தைகளும் அதே போல மீண்டும் குலத்தொழிலுக்கே போய்விட்டது. குடும்பத்துக்கென அரசு கொடுத்த நிலம் தாயில்பட்டிக்கு காட்டுக்குள் தரிசாய்க்கிடக்கிறதாம்.விழாமேடையில்அமைச்சர்களுக்கருகில் உட்கார்ந்திருந்த பெருமை தவிர இப்போது ஏதும் இல்லையென்று வரட்டுக்குரலில் பேசுகிறது அவரது வாரிசுகள். இது வாரிசுகளின் காலம்.


மண்மூடிப்போன வரலாறுகளில் இருந்து எதையாவது உலகத்துக்குச் சொல்லவேண்டு மென்கிற தவிப்போடு பேசிய தோழர் பாலச்சந்திரன் வருகிற டிசம்பர் 31 அவரது நினைவு நாள் ஏதாவது செய்வோம் காமராஜ் அன்று அழைப்புவிடுத்திருக்கிறார். காய்ந்து போனப்பிறகும் எங்கிருந்தாவது ஊற்றெடுக்கும் நிலத்தின் தாய்ப் பரிவோடு.

28.10.09

காடுகளும், காட்டு மனிதர்களின் உணர்வுகளும் தமிழ்சினிமாவுக்குப் புதுசு - பேராண்மை

முப்பது ரூபாய்க்கு குறைந்து டிக்கெட் இல்லை என்பதை கறாராகச் சொல்லுகிற எழுத்துக்களைக் கடந்து தியேட்டருக்குள் நுழைந்தால் எல்லா வகுப்புக்களிலும் முக்கால்வசி இருக்கைகள் மூளியாய்க் கிடக்கிறது. சின்னவயசில் வெறும் ஐம்பது பைசாவுக்கு சினிமாக் காண்பித்த போது வெகுஜனங்கள் அடித்துக் கரையேறிச் சினிமாப்பார்த்த காலங்கள் மலரும் நினைவுகளாக மட்டும் வந்து போகிறது.


கோவணம் கட்டிக்கொண்டு மாட்டுக்கு பிரசவம் பார்க்கும் மலைப்புறத்து இளைஞானாக அறிமுகமாகிற ஜெயம் ரவியே பயிற்சி அதிகாரியாக மாறுகிறபோது அதைத் தாங்கிக்கொள்ள முடியாத பெண்களாக ஐந்துபேர் சித்தரிக்கப்படுகிறார்கள். அவர்கள் தொடர்ந்து துருவன் என்கிற மலைப்புறத்து இளைஞனை அவமானப் படுத்துவகிற காட்சிகள் இந்த முறை ஜாதியின் பேரால் சொல்லப்படுகிறது. இதே போல காட்சியமைப்புகள் கொண்ட மசாலாக்களை எம்ஜியார்,ரஜினி,கமல் இன்னும் எல்லோரும் கடந்து வந்தாலும் ஜாதியாலான இழிவை முதன் முதலாகக் கையிலெடுத்த சினிமா இது. அதனால் கூட எதிரும் புதிருமானவிமர்சனங்கள் வராமல் போயிருக்கலாம். துருவன் செய்யாத தவறுக்காக கழிப்பறையைச்சுத்தம் செய்யச்சொல்லுவது. india untouched என்கிற லெனின் k விஜயனின் ஆவணப்படத்திலும், தீண்டாமை ஒழிப்பு முன்னனியின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளிலும் பேசப்பட்ட உலகறியா உண்மைகள்.


வீரப்பன் தேடுதல் வேட்டையில் வாச்சாத்தி மலைமக்கள் அனுபவித்த கொடூரங்கள் மனித இனம் முழுவதும், குறிப்பாகத் தமிழ்ச்சமூகம் அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கவில்லை. அதனாலே தான் துருவனைத் தேடிப்போகிற உயர் அதிகாரி கணபதிராமன்மலைமக்களின் வாழிடங்களைத் துவம்சம் செய்யும் காட்சிகள் வெறும் சித்தரிப்புகளாகக் கடந்து போகிறது. எரிக்கப்படும் குடிசைகளோடு ருஸ்ஸிய இலக்கியங்களும், சமகால தமிழ் புத்தகங்களும் சேர்த்து எரிக்கப்படுகிறதான காட்சிகளும் கூட அதிக அதிர்வை உண்டாக்க முடியவில்லை. காண்டா விளக்கொளியில் படித்துக்கொண்டிருக்கும் மலைச்சிறுவர்களின் முதுகில் விழுகிற அடி ஜாதிகள் குடியேறிக்கிடக்கும் அரசுப் பயங்கரவாதத்தின் அசல் குறியீடான காட்சி.


''அரசுப்பணத்தில் படித்துவிட்டு அரசாங்கத்தையே எதுத்துப் பேசுறீங்களடா, இவனுகளுக்கு கழிப்பறை சுத்தம்செய்வதெல்லாம் புதுசில்ல, துருவனோட சொந்தக்கரங்க அப்பப்ப காட்டுல வெளையிறத தந்துட்டுப் போவானுக'' என்று சொல்லும் கணபதி ராமனின் உரையாடல்கள் வாழ்விலிருந்து தெரித்து விழும் எச்சங்கள். ஒரு சமூகத்து இழிவையே உரமாக வைத்து வளரும் துருவனின் கல்வியும், அரசுவேலையும் அவனை கூனிக்குறுகச்செய்யும் பொதுச்சமூகத்து ரியாக்சனாக மலிந்து கிடக்கிறது. அதை உள்வாங்குகிற பதில்தான்'' நான் இங்க்லீஸ் பேசுனா எம்மக்களுக்குப் புரியாது, ஒங்களுக்குப் பிடிக்காது'' எனும் உரையாடலாக வருகிறது.


படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை பல உரையாடல்களின் குரல்வளை நெறிக்கப்பட்டு வெறும் உதட்டசைவுகளை மட்டும் அனுமதித்திருக்கிறது சென்சார் போர்டு. ஆனாலும் கூட மட்டறுத்தலை மீறிச் சில வசனங்கள் உயிர்பிழைத்து வந்து திரையில் விழுகிறது. ஊமைகளின் பாஷையை ஊமைகள் எளிதில் உணரமுடியும். முகபாவங்களின் செய்திகளை எல்லோரும் உணரமுடியும். அதனலே தான் இறுதிக்காட்சியில் அடர்த்தியான மௌனம் தொக்கி நிற்கிறது.


அடர்ந்த வனமும் அங்கு பயிற்சிக்குப்போகிற என்சிசி குழுவும், அவர்கள் கண்ணில் படுகிற வெளிநாட்டு ஊடுறுவலும், அதை முறியடிக்கிற ஆறு பேர் என்பதே மூலக்கதை. ஒளிப்பதிவு சதீஷ்குமாராம் மனுசன் பார்வையாளர்களின் கையைப் பிடித்துக்கொண்டு அடர்ந்தவனத்தின் பிரமிப்பையும், வனப்பையும், ரகசியக் குறியீடுகளையும் விளக்குகிறார். காடுகளைகாட்சிப் படுத்துவதும், அதன் பகுதிகளை விவரிப்பதுவதும், மலைமக்களின் ஆயிரமாயிரம் ஆண்டுகால அனுபவத்தைச் சொல்லிக்கொண்டே அதைக் கடப்பதும் தமிழ்ச் சினிமாவுக்குப் புதிது. சண்டையும் கதையும் ரொம்ப ரொம்ப்பப் பழசு.


வித்தியாசாகர் பின்னனி இசை சேர்க்க முயற்சித்திருக்கிறார். அழகிய பசிய புல்வெளி, சிலிர்ப்பை உருவாக்கும் நீர்வீழ்ச்சி, அடர்ந்து கிடக்கும் தனிமையில் கட்டு உயிரினங்கள் எழுப்பும் கிளேசப் பாடல்களென எல்லா வசதி வாய்ப்புகளும் இருந்தும் டூயட் அனுமதிக்காத முரட்டுத்தாடிக்கார ஜனநாதனின் இந்தப் பேராண்மை. இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கவேண்டும். வாழ்த்துக்கள் ஜனநாதன்.

27.10.09

இடிபாடுகளில் தொலைந்த இந்திய ஞானம்

( ஒரு பழைய்ய கதை )

பீகார் மாநிலம் புத்தகயாவில் நடந்த மாநாட்டுக்கு மாதவராஜ், மாப்பிள்ளை ஆண்டோ, பாலுசார், மணியண்ணன் ஆகியோரோடு ஒரு இருபது பேர் போனோம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல்வெளிகள். நீரோடிப் பயமுறுத்தும் அகலமும் ஆழமுமான பெயர் தெரியாத ஆறுகள். புகை வண்டிப் பயணமெங்கும் கிடைத்த காட்சிகள் இது. இரவு இரண்டரை மணிக்கு காலகண்டி ரயில் நிலையத்தில் இறங்கும் போது கடும் குளிர். பாதுகாப்புக் கருதி விடியும் வரை அங்கிருந்து யாரையும் கிளம்ப வேண்டாமென்று காவல் துறை தடுத்துவிட்டது. நாங்கள் ரயில்வே ஊழியர் சங்கத்தின் அலுவலகத்தில் தங்கவைக்கப்பட்டோம்.


அலுவலகத்துக்கு நடந்து போகையில் தரையெங்கும் பயணிகள் சுருண்டு படுத்துக்கிடந்தனர். காலையில் ஐந்தரை மணிக்கு கிளம்பிய போதுதான் தெரிந்தது சுமார் மூவாயிரம் பேர் வெட்டவெளியில் மொட்டைக் குளிரில் படுத்துக் கிடந்தார்கள். அவர்கள் கூட்டம் கூட்டமாய் கூலி வேலைக்கு இடம் பெயர்ந்து செல்பவர்கள் என்று சொன்னார்கள். மண் செழித்து மக்கள் வறுமையில் வாடுகிற முரணும் விநோதமும் கொண்ட தேசம் எனது இந்தியா. தனித் திறனாளர்களாக கிரிக்கெட் வீரர்கள் முதலிடத்தில் இருக்கும்போது இந்திய அணி அதள பாதாளத்தில் கிடக்குமே அது போல.


நகரங்கள் எல்லாம் குண்டு பல்பில் மங்கிக் கொண்டிருக்க கிராமங்கள் இருளில் கிடக்கிற பிகார். இன்னும் முறுக்கிய மீசையோடு நிலச்சுவாந்தார்கள் குதிரையில் வலம் வரும் மாநிலம். பகலிலே ஓடும் வாகனங்கள் எல்லாம் தனியாருக்குச் சொந்தமான ட்ரக்குகள். நினைத்தால் போகும் இல்லையென்றால் வேறு ஏற்பாடுகள் தான். ஐந்து மணிக்குமேல் அதுவும் இல்லை. சாலையில் வாகனங்கள் பார்க்க முடியாது. எல்லாவற்றையும் தனியாருக்குக் கொடுத்தால் சௌஜன்யமாக இருக்கலாம் என்று சோதிடம் சொல்லும் நண்பர்கள் ஒரு மாதம் பீகரைச்சுற்றிப் பார்க்கலாம்.


அங்குதான் உலகின் அதிக மக்கள் தொகை வழிபடும் புத்தர் கோவிலும் போதிமரமும் இருக்கிறது. நம்ம ஊர் தொழில் நுட்பக் கல்லூரிகளை நினைவுபடுத்தும் பெரிய பெரிய தர்மசாலாக்கள் இருக்கிறது. அங்கிருந்து அறுபது கிலோ மீட்டரில் வாரணாசி இருக்கிறது. எண்பத்தி ஏழு கிலோ மீட்டரில் நாலந்தா இருக்கிறது.


ஒரு கிலோ மீட்டர் பரப்பளவு. முப்பது மீட்டர் அகலமுள்ள நடைபாதை. சுமார் இரண்டாயிரம் ஆசிரியர்களோடு பத்தாயிரம் பௌத்த மாணவர்கள் தூரக்கிழக்கு நாடுகளில் இருந்து வந்து தங்கிப்படித்த உலகின் முதல் பல்கலைக்கழகம் நாலந்தா. ஐந்தாம் நுற்றாண்டுக்கும் பனிரெண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் என்று கணிக்கப்படுகிறது. அந்தக்காலத்திலேயே அங்கே இறையியல், இலக்கணம், தர்க்கசாஸ்திரம், வானவியல், இயல்பியல், மருத்துவம், மனோதத்துவம் ஆகியவை கற்றுத் தரப்பட்டிருக்கிறது. உலகப்புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரும் சீன யாத்திரிகருமான யுவான் சுவாங் நலாந்தாவின் பழைய மாணவர். சீக்கிய மதகுரு குரு நானக், ஜனநாயக விதை போட்ட நல்லரசன் அசோகன், மஹாத்மா காந்தி, இஸ்லாத்தின் சூவ்பி தத்துவம், இவற்றுக்கு ஊற்றுக்கண் நாலந்தா. இன்றைக்கும் உலகமெங்கும் பரவிக்கிடக்கின்ற பௌத்த விகாரைகளுக்கு இங்கிருந்து தான் பிடி மண்ணெடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.


இரண்டடுக்கு தங்கும் அறைகள், ஏழு அடுக்கு தியான மண்டபம், கல்வி சாலை, கோவில்கள் யாவும் தனித்தனியே அமைந்திருக்கிறது. ஒருகிலோமீட்டர் பரப்பளவில் எங்கு தண்ணீர் விழுந்தாலும் மைய மண்டபத்துக்கு அருகிலுள்ள தெப்பத்துக்கு வந்துசேரும் ஏற்பாடு. இடிபாடுகளில் தப்பித்து இன்னும் உருக்குழையாத கட்டைச்சுவர்கள் கட்டிடக்கலையைப் பெருமைப் படுத்துகிறது.
பதிவுலகினருக்கு கொட்டாவி வரும் இந்த ஒட்டை ரிக்காட்டுத் தகவல்கள் அவசியமாவெனத் தெரியவில்லை. ஆனால் ஒரு கேள்வி மட்டும் அத்தியாவசியமாகிறது.இவ்வளவு சிறப்புமிக்க ஒரு கல்வி சாலை ஏன் பாதுகாக்கப்படவில்லை ?.உலகத்துக்கு ஆனா ஆவன்னா சொல்லிக்கொடுத்த இந்தியா இன்று ஒரு கலர் பிக்சர் டியுப்புக்கும், மைக்ரோ சாப்டுக்கும்கையேந்துவதன் காரணமென்ன ?.இன்னய தேதி வரை நம்மால் ஒரு சிறு குண்டூசியைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லையே ஏன் ?.


அடுத்தடுத்து நடந்த படையெடுப்பில் தரைமட்டமாக்கப்பட்டது நாலந்தா. அங்கிருந்து கிளம்பிய சமண பௌத்த துறவிகள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டார்கள். போதி மரம் வளர, வளர வெட்டப்பட்டது. வெட்டப்பட்ட உடல்களிலிருந்து பீறிட்ட குருதியோடு தர்க்க ஞானமும், பரிணாமத்தேடலும் உறைந்து போனது. உலகின் மிகப்பழம் பெரும் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு மூன்று மாதங்கள் தழல் விட்டு எறிந்திருக்கிறது. பற்றி எறிந்த தீயில் இந்திய மெய்ஞானமும்,அறிவியலும்சமூகக் கேள்விகளும் சாம்பலாகிப்போனது.


அந்த இடத்தில் இப்போது ஒரு உயர்நிலைப் பள்ளிகூட இல்லை. இந்தியாவின் மொத்தக் கல்விமுறையே அதன் பழைய மாணவர்களாக மாறியிருக்க வேண்டிய ஒரு மாபெரும் வாய்ப்பு இனப் படுகொலையோடு மறுக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் வந்த குருகுலக்கல்வி முறைதான் உலகமறிந்ததே. ராஜாக்களுக்கும், பண்ணையார்களுக்கும் முதுகு சொரிந்து கொடுத்த கல்வித்திட்டம். அந்தக்கல்வி முறையைக் காப்பியடிக்கக்கூட சாமன்யர்களுக்கு உரிமையில்லை என்று சம்பூகனையும், ஏகலைவனையும் தண்டித்தது. அப்புறம் நம்ம மெக்காலேயின் அடிமைக் கல்வித்திட்டம் இதோ இந்த நிமிடம் வரை நீடிக்கிறது. மெக்காலேவைப் படித்த யுவன்களும், யுவதிகளும் கூட்டம் கூட்டமாய் நாலந்தாவுக்கு வந்து போகிறார்கள்.
வரலாற்றுப்பாடத்தில் ஒரு மதிப்பெண் கேள்வியாகக் கடந்து போகிற அந்த நாலந்தா மீது கடலைத் தோல்களையும் அது மடித்த காகிதத்தையும் வீசிவிட்டுப் போகின்றனர்.


பிரமிப்போடு அந்த இடிபாடுகளிலிருந்து ஒரு துகள் செங்கல்லையாவது எடுத்துக்கொண்டுவர ஆசையிருந்தது. ஆனால்நம் பேரப்பிள்ளைகளும் வந்து கால் வைத்துவிட்டுப் போகும் போது கருப்பும் சிகப்பும் கலந்த அந்த செங்கற்கள் மிஞ்சிநிற்கட்டும் என்று மனம் மாறித்திரும்பி வந்தோம்.

26.10.09

மிக இளமையான பள்ளி முதல்வர் - வறுமை சூழ்ந்த குழந்தைகளின் இலவச மேய்ப்பன்








பாபர் அலிக்கு வெறும் பதினாறே வயதுதான் ஆகிறது. கிட்டத்தட்ட 900 மாணவர்களையும் பத்து ஆசிரியர்களையும் வைத்துபள்ளிக்கூடம் நடத்துகிற தலைமை ஆசிரியர் ஆகிவிட்டான். மேற்குவங்க மாநிலத்தின் முர்சிதாபூர் மவட்டத்தின் ஒரு குக்கிராமமான கங்காப்பூரில் தான் அந்தப்பள்ளிக்கூடம் இருக்கிறது.

அன்பளிப்பில்லை, மாதச்சம்பளத்தில் பாதியைப் பிடுங்கும் மாத்தாந்திரக் கட்டணம் இல்லை, சீருடை இல்லை, ஷூ இல்லை, அழைத்துப்போக என்று சொல்லி இருந்ததையும் சேர்த்துப் பிடுங்கும் வாகன ஏற்பாடு இல்லாத ஒரு பள்ளி அது. பாபர் அலியின் வீட்டுக் கொல்லைப்புறத்தில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டு அங்குதான் தொளாயிரம் பிள்ளைகளும் வாத்தியாரும்.

2002 ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டுவரும் இந்தப் பள்ளியின் பிரின்ஸ்பால் தனது ஐந்தாம் வகுப்பிலிருந்தே ஆசிரியத் தொழிலுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து விட்டார். ஆனந்த் சிக்க்ஷா நிகேதன் என்கிற அந்தப்பள்ளிக்கு வருபவர்கள் யார் யார் என்பதும் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்பதும் தான் இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

அன்றாடங் காய்ச்சிகளான ஏழைக் குடும்பத்துப் பிள்ளைகள், மத்தியானம் வரை குடும்ப பாரம் இழுக்க வேலைக்குப் போகும்வீட்டு வேலைக்காரர்கள், சுத்தப்படுத்தும் தொழிலில் ஈடுபடுத்தப்படும் எல்லோரும் மத்தியானத்துக்கு பிறகு வந்து ஏட்டுப்பாடம்படிக்கிறார்கள். சொல்லிக் கொடுக்கும் வாத்தியார்களும், சொல்லிக் கொடுக்கப்படும் மாணவர்களுக்கும் பறிமாறிக்கொள்ள அன்பும், கண்ணிலும் மேலான கல்விச்செல்வமும் தான் அங்கே கிடக்கிறது.

அரசு தனது பங்கிற்கு மதிய உணவும், நான்காம் வகுப்பு வரை புத்தகமும் மட்டும் தான் கொடுக்கிறதாம். ஆனால் நெளிந்து, நலிந்துபோன கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குறைந்த பட்சம் ஐநூறு கோடி கொடுக்க முடிகிற இதே இந்தியாவில் தான் இந்த பாரபட்சமும் தொடர்கிறது. முறைசாராக் கல்வி, அணைவருக்கும் கல்வி, சிறப்புப் பள்ளிகள் என்னும் பிரிவின் கீழ் ஏகப்பட்ட கோடி ரூபாய்கள் ' ஒதுக்கப்பட்டு ' தொண்டு போடும் நிறுவணங்களுக்கு வழங்கப்படுகிறது. அவர்களும் கூட ஒன்றிரண்டு பிள்ளைகளை ஐடிஐ ( ஐஐடி அல்ல), அல்லது பாலிடெக்னிக் பள்ளிகளில் சேர்த்துவிட்டு அதைப்பெருமிதமாக தங்களின் ஆண்டறிக்கையில் சேர்த்துக்கொள்கிறார்கள்.

மீதிப் பிள்ளைகள் இன்னும் சைக்கிள் கடைகளில், உணவு விடுதிகளில், டீக்கடைகளில், பாத்திரம் கழுவி வயிற்றைக் கழுவு கிறார்கள். சென்ற இரண்டு ஆண்டுகளில் சாத்தூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஒன்பதாம் வகுப்புக்கு சேர்க்கைக்கு வந்த 160 பெண்குழந்தைகளுக்கு தகுதிகாண் தேர்வு வைக்கப்பட்டது. வெறும் பத்துப்பிள்ளைகள் மட்டும் தேர்ச்சியானவர்கள் என்று முத்திரை குத்தி மீதம் நூற்றைம்பது பெண்பிள்ளைகள் - எதிர்கால கிரண்பேடி,எதிர்கால ஷைனிவில்சன்,எதிர்கால வசந்திதேவி, எல்லோரையும் மீண்டும் தீப்பெட்டி ஆபீசுக்கு அனுப்பிவிட்டார்கள்.




தேடு கல்வியிலாத ஊரைத்

தீயினுக் கிரையாக்குவோம்

என்று படித்த பிள்ளைகள்

தீப்பெட்டி உற்பத்தி செய்து


கொண்டிருக்கிறார்கள்.



25.10.09

டக்ளஸ் ஹச். மார்க்வெசும், மூலைவீட்டு முருகேசனும்.

ஊர் ஒதுக்கத்தில் திருட்டுத் தம்மடித்துக் கொண்டிருந்த எங்களை நோக்கி ஒரு பொடியன் வந்தான். ''ஊர் மடத்தில் கூட்டம் கூடிருக்கு ஒன்ய ஊர்த்தலைவர் வரச்சொன்னார்'' சொல்லிவிட்டு வந்த வேகத்தில் திரும்பி ஓடிவிட்டான். வீட்டுக்குத்தெரியாமல் செய்த தவறுகளின் பட்டியல் ஒன்றன் பின் ஒன்றாய் வந்து அலைக்கழிக்க. எதுவும் டாலியாகவில்லை. போனவாரம் எதோ குருட்டுத் தைரியத்தில் அவள் கன்னத்தில் உரசியதை முத்தம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். உதறிவிட்டுக் கெட்டவார்த்தையில் திட்டிக்கொண்டு ஓடிய அவள் ஊரைக் கூட்டியிருப்பாளோ எனும் சந்தேகம் வேகமெடுத்தது. போகிற வழியில் அவளது சித்தியும் கூட முகத்தைத்திருப்பிய காட்சி இன்னும் கூடுதல் உதறலைக்கொடுத்தது.


சனம் திரண்டு நிற்க நடுவில் இரண்டு பேண்ட் போட்ட படித்தவர்கள் இச்சிப்பட்டை,ராப்பட்டை போல நின்றிருந்தார்கள் அவர்களில் ஒருவர் கார்த்தி அண்ணன். அங்கே எப்போதும் இப்படித்தான். குரங்கு,கரடி,கிளிஜோசியம்,ஊர்தவறிய பிச்சைக்காரர்கள், போலிஸ்ஜீப்,கார்,கலைக்கூத்தாடி எல்லோருக்கும் ஒரே மாதிரியான கூட்டம் கூடும். ஓசிப்பொழுது போகஎப்போதும் நடக்கிற தெருச்சண்டையை விட்டால் இப்படி ஏதாவது எப்போதாவது விசேஷமாகக் கிடைக்கும்.


கார்த்தி அண்ணன் சாத்தூரில் இருந்து வந்து எங்கள் ஊரில் தீப்பெட்டி ஆபீஸ் நடத்தும் பட்டாதாரி. அவர் ஒரு பிரபல நடிகரின் கூடப் பிறந்தவர். அந்த நடிகரும் நானும் ஏவீஸ்கூலில் ஒன்றாகப் படித்ததால் என்மேல் கூடுதல் பிரியமாக இருப்பார். மற்றபடி ஊர்க் குமரிப்பிள்ளைகள் கிண்டலடிக்க நிறைய்ய சுவாரஸ்யங்கள் அவரிடம் உண்டு. போனிஎம், அப்பா இசை கேட்பார். ஆங்கிலப் படங்களை, நடிகர்களை சுட்டிக்காட்டித் தெரியுமா எனக்கேட்பார். சொக்கலால் பீடிக்கம்பெனி விளம்பரத்துக்கு ஓசியாய்க் காட்டப் படும் வீரத்திருமகள்,நல்லதங்காள்,படங்களை பார்க்கிற ஊர்ச்சனங்களுக்கு அவர் பேசுகிற எல்லாமே சிரிப்பாணிதான். அவரைப்போல கறுப்பான கலரில் பனியனும் அரைகால் டவுசரும் போட்டுக் கொண்டு அலைவார்.நாய்களுக்கு அப்போதெல்லாம் ஒரே குதியாட்டம் தான்.


அவரோடு வந்திருந்த பொழுதுபோக்கு ஒரு வெள்ளைக்காரன். ஊர்க்காரர்களுக்கு அன்று அவர்தான் குரங்கு. அவருக்கு ஊர்க்காரர்கள் குரங்கு. ஒரு வெள்ளைக்காரன், ஒரு பட்டணத்துக்காரன், ஒரு கடைக்கோடிக்கிராமம். இவர்களுக்கு நடுவில் உரையாடல்களை மொழிபெயர்க்கிற வேலை எனக்கு. நான் பேசிய ஓட்டை இங்லீசை ஊரே கொண்டாடியது. கார்த்தி அண்ணன் என்ன சொல்லி அவனைக் கூட்டிக் கொண்டு வந்தாரோ தெரியவில்லை. உலக அலட்சியம் அவனது ஒவ்வொரு வார்த்தையிலும் செயலிலும் இருந்தது. தனக்கு எல்லாம் தெரியும் உங்களுக்கு என்ன தெரியும் என்று சொன்னான். இமயமலைப் பக்கத்தில் இருசக்கர வாகனத்தில் வரும்போது இடைமறித்த ஆறு திருடர்களை தனக்குத்தெரிந்த தற்காப்புக் கலைகளால் விரட்டியடித்ததாகச் சொன்னான். யாராவது தைரியசாலி இருந்தால் என்னோடு சண்டைக்கு வாருங்கள் என்று சவால் விட்டான். பெண்கள் பக்கம் சலசலப்பு அதிகமானது.


அந்தப்பக்கமாய் தண்ணிபாச்சிவிட்டு வந்த முருகேசனைக் கூப்பிட்டு நான் செய்வதெல்லாம் உன்னால் செய்ய முடியுமா என்று சீண்டினான். சங்கோஜப்பட்ட அவர் சுதாரித்துக்கொண்டு களத்தில் இறங்கினார். முதலில் அவன் நின்ற இடத்திருந்து எவ்விக்குதித்து மார்க் பண்ணிவிட்டு முருகேசனைக் கூப்பிட்டார். முருகேசன் சாவகாசமாக அவனை விட இரண்டு மடங்கு தாண்டி விட்டு மம்பட்டியைத் தூக்கிக்கொண்டு போய்விட்டார். தான் ஜீன்ஸ் கால்சராய் அணிந்திருப்பதால் அப்படியனது எனச்சாக்குச்சொல்லிக்கொண்டிருந்த போது எட்டு வயசே இருக்கிற கருப்பசாமி தடாலென்று அவனெதிரே வந்து நின்று கம்புக் கூட்டுக்குள் கைவைத்து டர் டர்ரென்று ஓசை வரச்செய்தான் கூட்டம் கிடந்து சிரித்தது.

24.10.09

சேவுக்கடையின் எண்ணெய்க் கொப்பறையிலிருந்து வெளிக் கிளம்பும் தனல் கவிதைகள்.

சாத்தூர் பலப்பல நண்பர்களையும், கதைகளையும், கதை மாந்தர்களையும், கதை சொல்லிகளையும், விசித்திரங்களையும் வடுக்களையும் எனக்கு அறியத் தந்திருக்கிறது. அப்படியொரு நண்பர் ஆதிசேஷன். காடெல்லாம் கவிமனசைத்தேடி அலைந்து திரிந்து கலைத்து அமர்கையில் வீட்டுக் கொல்லையில் கிடைத்ததுபோல நாங்கள் அன்றாடம் சந்திக்கும் ஒரு சேவுக்கடைத் தொழிலாளியாக அந்தக் கவிஞனை அறிமுகப்படுத்தியது சாத்தூர்.


சாத்தூர் சேவின் கரம் குறையாத எழுத்து அவருடையது. தீக்கதிர், செம்மலர் இதழ்களில் அவ்வப்போது எழுதும் அவரின் கவிதை ஒரு இரவு என்னைத்தூங்க விடவில்லை. காலை எட்டு மணிக்கு ஒரு விமர்சனக் கடிதத்தோடு அவர் வேலை பார்க்கும் கடைக்குப் போனேன். சேவுகள் அடுக்கப் பட்டிருக்கும் கடையின் பின்பகுதியில் அடுப்புக்கு முன்னால் அமர்ந்து சீனிமுட்டாய் பிழிந்துகொண்டிருந்தார். கால்சராய் போட்ட இவன் ஏன் இங்கு வந்தான் என்னும் தொனியில் என்னைப் பார்த்தார். அழைத்துப் போனவருக்கு தர்ம சங்கடமானது புரிதலில் இருக்கிற சின்ன இடைவெளி அது. ஓரிரு வார்த்தைகள் சொல்லிவிட்டு காதலிக்குக் கொடுக்கிற கடிதத்தைப் போல கொடுத்து விட்டுக் தவிப்பில் கிளம்பினேன்.


கவிதை என்னைத் துரத்தியது போலவே கடிதம் அவரை என்னிடம் கூட்டி வந்தது. இடைவெளிகுறைந்து பேசிக்கொண்டிருந்த போது இதுவரை பிரசுரமாகாத கவிதை சொன்னார்.


0


ஞாயிற்றுக்கிழமைகளில் கறி அறுத்துக்கொடுக்கிறேன்,
காய்ச்சலாயிருக்கும் போது காபிபோட்டுக்கொடுக்கிறேன்,
அவள் கைவேலையாய் இருக்கும்போது குழந்தைகூட சுமக்கிறேன்இருந்தும் ஒரு நாளும் முளைத்ததில்லை அவளுக்கு மீசை.


0


வலது மூளையை ஜாதி தின்றுவிட்டது, இடது மூளையை மதம் தின்றுவிட்டது, தவற்றை நீட்டிக்க விரும்பாத தண்டுவடத்தைநொறுக்க ஆயுதம் பயின்று கொண்டிருந்தார்கள்.நாடாளுமன்றத்தைவிட பெரிய வெற்றிடத்தை நிரப்ப வநதவர்கள்

0


இப்படிச்சவுக்கால் அடிக்கிற அவரிடம் ஒரு தொகுப்புக்கான அசல் கவிதைகள் தேங்கிக் கிடக்கிறது. நேற்றும் அவர்தான் குறுந்தகவல் அனுப்பி இந்த வார ஆனந்தவிகடனில் ஒரு கவிதை வந்திருக்கிறது பாருங்கள் என்று சொன்னார். ஓடிப்போய்புத்தகம் வாங்கி தேடித்தேடிப் பார்த்தேன்.தொடைகளும், தனங்களும்தான் திருப்பிய பக்கங்களிலெல்லாம் இருந்து வெளிக்கிளம்பியது. அமிதாப்,கமல்,சூர்யா,மணிரத்னம் என பெரிய பெரிய இடிபாடுகளுக்கிடையில் ஒரு ஒற்றைப் பூப்போலஇந்தக் கவிதை நசுங்கிக்கிடந்தது.


நிலவில்

வடை சுட்ட பாட்டி

தண்ணீர் இல்லாமலாமாவாட்டியிருப்பாள். ?

22.10.09

அன்றாடங்களின் அலட்சியத்தை கவனப்படுத்தும் பேரா.தொப வின் - '' தெய்வம் என்பதோர் ''

சிந்துபாத் கதைகள் படிக்கத் தொடங்கிய போது, செய்திகளும் சினிமாவும் கூட அந்நியமாக இருந்தது. படக்கதைகள் படிக்கிற காலத்தில் சிறுகதைகளில் நாட்டமில்லை. சினிமாவின் கதாநாயகிகள் கனவுகளை ஆக்ரமித்தபோது எல்லாமே அயற்சியளிக்கிற விடயங்காளாக இருந்தது. சிறுகதைகளும் சாண்டில்யனும் படிக்கத்துவங்கிய காலத்தில் கட்டுரைகளின் ஒரு வரியைக்கூடக் கடக்க முடியாமல் போனது, அது சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதுவேறு இதிகாசம் ஆவணப் படத்துக்காக சென்னை, திண்டுக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி, பத்தமடை, பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, மேலவளவு, மதுரை என அலைந்த காலத்தில் ஒரு நான்கு பேருடைய பேட்டி பல அடர்த்தியான அதிர்வுகளை உண்டாக்கியது. பஞ்சாயத்துராஜ் மற்றும் ஜனநாயகத்தேர்தல்கள் குறித்த ஆய்வாளர் பேரா.க.பழனித்துரை. வரலாற்று ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன். நாட்டார் தெய்வங்கள்குறித்த ஆய்வாளர் தொ.பரமசிவன். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன்.


ஆவணப்படத்தில் ஐந்து நிமிடம் பத்து நிமிடம் மட்டுமே வெளியான இவர்களின் மூலப் பேட்டிகள் ஒவ்வொன்றும் குறைந்தது இரண்டு மணிநேர நீளமனவை. தனித்தனியே ஒரு புத்தகமாக விரியும் தன்மை கொண்ட ஒலிவடிவக் கட்டுரைகள் அவை.நமது அன்றாடங்களில் எதிர்ப்படும், கேள்வியற்றுக் கடந்துபோகும் பல சின்னச் சின்ன நடைமுறைகள் மீது கவனத்தைத் திருப்பும் வல்லமை கொண்ட பேச்சுக்கள்.


பாளயங்கோட்டையிலுள்ள பேராசிரியர்.தொபரமசிவன் வீட்டுக்கு தோழர் தமிழ்ச்செல்வன் அவர்களோடு படப்பிடிப்புக்குழுவினர் போனோம். படப்பிடிப்புக் குழு என்பது வெறும் மூன்று அல்லது நான்கு பேர்தான். நான், மாது, தம்பி ப்ரியாகார்த்தி எப்போதாவது ஒரு துணை ஒளிப்பதிவாளர் வருவார். பேரா.தொப வின் வீட்டுக் கொல்லையில் அந்த அரை நெல்லிக்காய் மரத்தடியில் விழுந்துகிடந்த நெல்லிக்கனிகளை எடுத்துச்சுவைத்த படி பேட்டி துவங்கியது. ஒரு திண்ணைப் பேச்சுப்போல, ஒரு நண்பர் சந்திப்புப் போல துவங்கிய பேச்சுதான், எங்களது பேட்டி. ஸ்டார்ட் காமிரா, ஆக்சன், கட் என்னும் வார்த்தைகள் முற்றிலும் நிராகரிக்கப்பட்டதாகவே எங்களின் நான்கு ஆவணப்படமும் தயாரிக்கப்பட்டது என்பது சற்று வியப்பான விஷயம்.


பேராசிரியரின் பேட்டியை உடனிருந்து கேட்ட எனக்கு அவரது புத்த்கங்கள் வாங்கிப்படிக்க வேண்டுமென்கிற ஆவலைத் தூண்டியது. பேராசிரியர் தொப. அவர்களின் பண்பாட்டு அசைவுகள், மற்றும் தெய்வம் என்பதோர் எனும் இரண்டு புத்தகங்கள் ஆய்வுலகில் அலாதியானவை. படிக்கிற போது வாசகனை மிரட்டுகிற வார்த்தைகளோ மேற்கோள்களோ இல்லாமல் நமது அன்றாடப் புழக்கங்களில் இருந்தே எல்லாவற்றையும் ஆராயத் தந்துள்ளார். தோழர் தமிழ்ச்செல்வன் சொல்வது போல ஆற்றங்கறையில்,கிணற்றடியில்,சாவு வீட்டு முற்றத்தில் என தமிழ் மண்ணின் புழுதிபடிந்த வார்த்தைகளில் இருக்கிறது அவரதுதெய்வம் என்பதோர் புத்தகம். ஒரு பேராசிரியர் பாடப்புத்தகத்தின் தூக்கம் வரவைக்கும் சொற்களற்ற மொழியில்,வழியில் புத்தகம் தருவது இன்னும் சிலாக்கியமானது.


இருக்கங்குடி மாரி, நெல்லைப்பகுதி பேச்சி, சுடலைமாடன், செல்லியம்மன், துரௌபதியம்மன் என்கிற கிராமக் கோடியில் வருசம் முழுக்க கேட்பாரற்றுக் கிடக்கிற நாட்டார் தெய்வங்கள் உருவான கதைகள் தொடங்கி, அவற்றிற்கிருக்கும் ஒரு நாள் மரியாதை குறித்தும் பேசுகிறார். அப்போது நமது வீட்டுப் பெரியவர் ஒருவர் நமது கையைப்பிடித்து கூட்டிக் கொண்டுபோய் ஒவ்வொரு நாட்டார் கோவிலாக அர்த்தத்தோடு சுற்றிக்காண்பிக்கிற உணர்வு ஏற்படுகிறது. பெருந் தெய்வங்கள் குறித்த ஒப்பீடுகள் வாசக மனதில் கேள்விகளை விவாதங்களைத் துவக்கி வைக்கிறது. வெறுமனே நீலிக்கண்ணீர் என்னும் ஒரு சொல் நமது புழக்கத்தில்கடந்து போகக் காண்கிறோம். அதற்குப் பின்னாள் இருக்கும் ஒரு கதையைச் சொல்லி வியக்கவைக்கிறார். பொங்கல் முடிந்த மறுநாள் வெகுமக்களோடு கறைந்து சித்தப்பா, மாமா அண்ணனாகி கூலிக்குப் போகும் நாட்டார் தெய்வப் பூசாரிகளையும், பெருந்தெய்வக் கோவில்களில் இருப்பவர்கள் அதை ஒரு அதிகாரமாக்கிக் கொள்வதையும் ஒப்பிடுகிறார். வள்ளலாரும் பங்காரு அடிகளாரும் பேசப்படுகிறார்கள். நாகூர், நாகப்பட்டினம், சமயபுரம் மூன்று கோவில்களுக்கும் ஒரே நபர் பயபக்தியோடு நுழைய முடிகிற மனநிலை எப்படி உருவானது என விவரிக்கிறார். தந்தை பெரியாரின் முரட்டு நாத்திகமும், ஆலய நுழைவுப் போராட்டமும் உண்டாக்கும் முரண்பாட்டையும் அதிலிருந்து எழும் கேள்விகளுக்கும் விளக்கம் தருகிறார் பேராசிரியர். தொ.ப.


நம்மைச் சுற்றிக் கிடக்கும் இந்த வாழ்கையின் மேலிருக்கிற அலட்சியத்தை இடை நிறுத்தி கவனப்படுத்தும் இந்த நூல். எல்லாவற்றையும் சம மரியாதையோடு பார்க்கக் கற்றுக் கொடுக்கும் அது தெய்வங்களுக்குக் கூட மனிதன் கொடுக்கிற கொடையாக மாறும் .


" தெய்வம் என்பதோர் "

யாதுமாகி பதிப்பகம்,
பாளையங்கோட்டை,
நெல்லை. 2

21.10.09

முறைசாராக் கல்வி.






மடிக்கணினி, வலையுலகம்.
சாட்டிலைட், வானூர்தி.
ஊர்கள்,சாலைகள்.
மனிதர்கள்,தெருக்கள்.
பணியிடங்கள்,கலாசாலைகள்.
நாகரீகம்,விஞ்ஞானம்.

எல்லாம் பின்னோக்கிச் சுருட்டப்பட்டு

முகாம்களில் அடடைக்கப்பட்டிருக்கிறது.
விகாரமாகச்சிரித்த முகம் வெளியலைகிறது.


அங்கு


பசியை விரட்ட விளையாடும்

குழந்தைககள்கையில் கிடக்கிறது

சிதறிய கனவுகள்.

பாடத்திட்டம், பரீட்சை, வீட்டுப்பாடம்

எல்லாமேவலியும் ரணமுமாக

வரிசைப்படுத்தப் படுகிறது.

குழந்தைக் கேள்விகளுக்கு பதிலாகத்தாயின்

வறட்டுக் கன்னத்தில் வழியும் ரத்தம்.



இனி

எழுதப்படாத பாடத்திட்டம்

படியேறிக் குடியேறும்.



16.10.09

புனிதவதிகள் மேல் சுமத்தும் அறியாதோர் பழி.

விளையாண்டு களைத்து தண்ணீர் குடிக்க வீடு நுழையும்பும்போது அவள் அதை மறைத்தாள்."எனக்குத்தெரியாம என்னத்த ஒளிச்சுவச்சு திங்கெ" என்று அவளிடம் கோபித்துக்கொண்டபோது. "ஆமா ஒன்யக்காட்லயும் எனக்கு தீமண்டமா பெருசுன்னு" சொன்னாள். பதில் போதவில்லை சந்தேகப்பொறி பற்ற ஆரம்பித்தது.


பிறிதொரு வேளையில் அம்சத்தையோடு ஒளித்து வைத்த பொருளை எடுத்துக்கொண்டு ஓடக் காட்டுக்குப்போனாள்.''பொட்டச்சிக சேந்து கூத்தடிக்கீகளா இரு அய்யாட்டச்சொல்றே'' என்று சொன்ன போது ரெண்டுபேருமே சிரித்தார்கள்.பயப்படாமல், கோபப்படாமல் சிரித்த போது மர்மம் அடங்கா தேடல் முளைத்தது.


முகத்துக்கு நேரே நீ என்னத்தயோ ஏண்ட மறைக்க என்று கோபப்பட்டபோது சிரித்துக்கொண்டே போடிச்செல்லம் இது பொம்பளக சமாச்சாரம் என்று சொன்னாள். தாய்க்கும் மகனுக்கும் இடையில் கூட மறைபொருள் வைத்த இயற்கையின் வஞ்சகம் புரியாமல் காலம் கழிந்தது.


தூரம் என்றும் தீட்டு என்றும் வேலிச்செடிகளிக்குள் சுருண்டுகிடக்கும் அவைகளெல்லாம் எதோ அந்தரத்து, அல்லது மேலுலகத்து, அல்லது மேக்குடி சமாச்சாரங்களெனக் கழிந்தது காலம்.


சுறு சுறுப்பை மொழி பெயர்த்தால் சுகாசினி மேடம் தான் கண்ணுக்கு தெரிவார்கள். அவர்கள் கூடச் சுருண்டு படுக்கும் அநேக நேரங்களில் எனது நலம் விசாரிக்கும் அன்பை '' வயித்து வலி தம்பி '' என்று மழுப்புவார்கள். மாத்திரை வாங்கித் தரவா எனும் பரிவை மீண்டும் எனது அம்மாவின் சிரிப்பாலே நிராகரித்து விடுவார்.

முதல் பையனுக்கு முதல் மொட்டை. வீடும் உறவும் பரபரக்கிற சந்தோசத்தில் அவள் பங்கில்லை. கூட வரவில்லை. போ பின்னால வாரேன் சொன்னதை நம்பிக்கொண்டேன். வீடு திரும்பும் வரை வரவில்லை அப்போதுகூட எனக்கு அம்மா மேல்தான் கோபம், ஆண்டவன் மேலில்லை. சுத்தம் என்று பின்காரணங்கள் கொண்டு வரலாம். சுத்தம் ஒரு நாளும் சோறு போடாது. அது மனிதர்களைக் கூறு போடும்.

உலகவிருத்தியின் ஊற்றுகண்ணைத் தீட்டெனச்சமூகம் பழித்ததனால் வந்ததிந்தக்கேடு என்பதை முழுசாய்ப் புரிந்துகொள்ள ஒரு ஆணுக்கு கால்நூற்றாண்டு காலம் தேவையாக இருக்கிறது. சக மனுஷியை, சரிபாதியைப் புரிந்து கொள்ள மறுக்கிற தடுப்புச் சுவர்கள் தான் இங்கே அடுக்கடுகாக உயர்ந்து நிற்கிறது வர்ணங்களாலும் பேதமையாலும். புரியாத அறிவியல் மீது கோபுரங்கள் முளைத்த தேசமிது.


நாப்கின் விளம்பரத்தை கேள்விகேட்கிற சிறார்களுக்கு அல்ல சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் நாற்பது வயதைத் தாண்டிய மேலதிகாரிகள் வேலை சுனங்குகிறதென்று பெண் பணியாளர்களைத் திட்டுகிற போது அவர்களின் உடல் முளை மனவெளியெங்கும் திட்டுத் திட்டாய் படிந்து கிடக்கிறது தீட்டு.



திட்ட இயக்குனர்கள், மந்திரிகள், தலைமை ஆசிரியர்கள், மேலாளர்கள், இப்படிப்பட்ட காகிதசமூகத்திற்கு நேர மேலாண்மை,கவனகம்,மனநெறி,நெறியாள்கை என என்னென்னவோ சொல்லிக்கொடுக்கிறது அரசு. கொஞ்சம் மனிதாபிமானத்தை, புரிதலைச் சொல்லிக் கொடுக்கத் தவறிபடியே.




15.10.09

அரசு மருத்துவரும், ஆத்தா மாரியும்.

சாமத்தில் மிளக்காய்ச் செடிக்கு தண்ணி பாச்சப்போன சின்னையனை மணல்லாரி தட்டிவிட்டுப் போய்விட்டது. அறுபது ரூபாய் கிடைக்கிற அவனது சம்பாத்தியத்தோடு தீப்பெட்டியாபிஸ் போகிற மனைவியின் பொருளாதாரமும் சேர்ந்து தான் பொழப்பை நகர்த்துகிறது. வாழ்நாள் சேமிப்பு கடுகு டப்பாவுக்குள் கிடக்கிற நாப்பது ரூபா. தலைமுறைச் சொத்து ஒத்தப்பத்தி ஓட்டுவீடு.இதைவைத்துக்கொண்டு அப்பல்லோ, விஜயா, அய்யா மீனாட்சிகளை நினைத்துப் பார்க்ககூட முடியாது. அம்பது பைசா அனாசின் மத்திரையில் சொஸ்த்தமாக்குக்கிற காய்ச்சலுக்கு, அத்தனை சோதனையும் செய்து, பதினெட்டாயிரத்தைப் பறித்துக்கொண்டு ஒரு சிடியும், கொஞ்சம் ரிப்போட் பேப்பரும், கொடுத்தனுப்பிய கார்ப்பரேட் மருத்துவமனைகளை வேடிக்கை பார்க்கக்கூட முடியாது சின்னையன் வகையறாக்களுக்கு.


அங்கு பூக்களின் வாசம் இல்லை. மூத்திரக் கவிச்சையும் மாத்திரைக் கவிச்சையும் கலந்த பினாயில் நெடியிருக்கும். இதமான சினிமாப்பாடல் கேட்காது. இருமலும் அனத்தலும்தான். ஆறுதல் வார்த்தையில்லை. பேசுபொருளெல்லாம் வலியும் ரணமும் தான். தாளிப்பு வாசம் மூக்கிலேயே பசியக் கூட்டுகிற ஆவிபறக்கும் வீட்டுச்சோறு இல்லை. ஈக்கள் மொய்க்கிற, ஆறி அலமர்ந்துபோன அச்சடிச்ச சோறுதான். கனிவில்லை, அலட்சியமும் அதட்டலும் தான். ஒரு சிறைச்சாலைக்குண்டான அத்தனை அம்சங்களிருந்தாலும், தர்மாஸ்பத்திரிகள் தான் அறுபது சதமான இந்தியர்களின் கதிமோட்சம்.


இருபது நாள் ஓடிப்போனது இப்போது சுவத்தைப் பிடித்து நடக்கிறான். வாசலுக்கு வந்து இடை தரிசில்லாமல் ஓடும் வாகனங்களைப் பார்க்கிறான். மரண இருள் விலகி வாழ்வின் நம்பிக்கை ஒளி வந்துவிட்டது. கண்டம் கழிந்தது. ஆத்தா மாரியம்மாளுக்கு ஆடோ, கோழியோ வெட்ட நேமுக்கம் போடுகிறான். அதுவரைக்கும் காத்திருக்க முடியாதல்லவா? அரசுமருத்துவர் தான் ஆத்தாரூபமாகத் தெரிகிறார். காலில் விழுகிறான்.

அங்குபூக்களின் வாசத்தை உண்டாக்கும்
செயற்கை மணம் இல்லை.
வரவேற்பறையில் சாயிபாபா படமும்
அதற்குக்கீழே
தண்ணீரில் மிதக்கிற பூக்களும் இல்லை.
நுனிநாக்கு ஆங்கிலம் இல்லை.


இருந்தாலும் சானிமணக்கும் மாட்டுக்கொட்டடி போல. ஆமணக்கு சுமந்த ஆறுமுகத்தாயின் மேல் மணக்கிற வேர்வை வாசம் போல. நடுச்சாம முழிப்பில் ஆசுவாசமாக ஊதும் சொக்கலால் பீடிப்புகை போல. ஊரைக் கூட்டுகிற கறிக்குழம்பு வாசம் போல. பனையும், சகதியும்,சண்டையும் நெரிசலும் இருந்தாலும் அருள்மணக்கிற மாரியாத்தா போல அவனுக்கு அந்த தர்மாஸ்பத்திரி.

13.10.09

நியான் விளக்குகள் ஒளிரும் பகல்.

நாளையோடு காயலான் கடைக்கு போறேன்
ஆளைவிட்டால் போதும் என நொண்டி நொண்டிப்
பனிமனை அடையும் நகரப்பேருந்துகள்.


உருட்டிவைத்த புரோட்டா மாவு
கனத்துக்கிடக்க பசித்த முகம் தேடிக் காத்திருக்கும்
அந்திக்கடை தொழிலாளியான முதலாளி.


முழுக்க இரவே நீடிக்காதா ஏக்கம்நிறை
பசிக்கிறக்கத்தில் பூட்டியகடையின்
படியில் உறங்கும் பிச்சைக்காரன்.


தொலைதூரப் பேருந்திலிருந்து இறங்கி
மலங்க மலங்க விழிக்கும்
அலுவலர் குடியிருப்பு பெண்.


சிகரெட் பற்றவைக்கமுடியாத போதையில்
பெட்டி கடைப் பெண்ணைப்
பற்றவைக்க துடிக்கும் குடிமகன்.


இரவு, பகல், குடிமகன் குடியாமகன் பேதமின்றிப்
பத்துவருடப்பொட்டிக்கடை பொழப்பில்
தூரப்போனது நானமும் பயமும் இரவும்.

வருகிறது இருட்டு வெளிச்சம்

கடைவீதிகளில்
.தோரணவிளக்குகள் தொங்க ஆரம்பித்துவிட்டது.
விட்டில்களை விழுங்குவதற்கான பகட்டு வெளிச்சம்
தேசமெங்கும் பரவிக்கொண்டிருக்கிறது.
கருமருந்துகள் அடைக்கப்பட்ட வெடிச்சத்தம்
பொட்டலம் பொட்டலமாக பயணமாகிறது.
வெடிக்கம்பெணி உரிமையாளர்கள்தலைமறைவாய் வாழ்கிறார்கள் இணாமுக்குப்பயந்து.
வாங்கிவைத்த லஞ்சப்பொட்டம் இனிக்கிறது
கசப்பு அலுவலர்களின் வீடுமுழுக்க.


ஒருவருடம் கருமருந்தோடு மல்லுக்கட்டிய
சின்னப்பொன்னுவின் கனவுகளெல்லாம்.
போனஸ் கிடைத்துவிடும் நம்பிக்கையில்
காத்துக்கிடக்கிறதுஅவளோடு
அந்தக் கம்புக்கூடு கிழிந்த லவிக்கைகயும்.

11.10.09

மறுதோன்றி நினைவுகள் - சிறுகதை



கனியண்ணன் வாசலில் உட்கார்ந்து கொண்டு தெருவை வெறித்துக்கொண்டிருந்தார். அவரது தாடியைச்சுற்றி சிகரெட் புகை படர்ந்து கொண்டிருந்தது. அதென்னமோ தாடி வைத்திருக்கிறவர்களைப்பார்த்தவுடன் ஒரு மரியாதை வந்து ஒட்டிக்கொள்கிறது. அதனுள்ளே ஒளித்து வைக்கப்பட்டிருப்பது சோகமா, அடர்த்தியான கதைகளா, அல்லது காலத்தைப்பதுக்கி வைத்த அனுபவங்களா என்று இனங்கண்டுகொள்ள முடியாது. சிவந்த மேனி, முன் வழுக்கை, கரு கரு தாடியோடு நிறைய்ய கேரளத்து முகங்கள் தாடிக்கு ஒரு அழகையும் மரியாதையையும் கொடுக்கும். சீர் செய்யப்படாத அடர்த்தியான முடிகளின் ஊடாகச் சில வெள்ளை முடிகள் தூவப்பட்டிருக்கிற தாடிகளுக்கு அறிவுக்களை ஏறிக்கிடக்கும். நாடிப்பகுதிக்குள் விரல் நுழைத்து சொரிந்து கொள்ளும் வேளையிலும், தாடிக்குள்ளிருந்து மீசையைத்தனியே எடுத்து முறுக்கிவிட்டுக் கொள்ளும்போதும் தீவிர சிந்தனைக்கான தடயம் தெரியும். ஆனால் அந்த சர்தார்ஜிகளைக்குறி வைத்து கேலிக்கதைகள், தயாரிக்கிற தொழிற்சாலையை நிர்மானித்தவர்கள் யாரென்பதும், ஏன் என்பதும் சவாலான கேள்விகள்.


கனியண்ணனுக்கு முகத்தில் தாடியிருப்பதை அதிலிருக்கும் சில வெள்ளை முடிகளால் மட்டுமே அறியமுடியும். அவர் நிறம் அப்படி. அந்த நிறத்தை அலாதியாக்குகிற மாதிரியான திருப்பூர் பனியன்கள் அணிந்திருப்பார். அரக்குக் கலரிலும், அடர் மஞ்சள் கலரிலும் தவிர வேறு எந்தக் கலரும் அணியாதவர். தலைமுடியில் சீப்புப்பட்டிருக்குமா என்கிற சந்தேகம், கலைந்துகிடக்கிற அதைப்பார்க்கிற ஒவ்வொரு கணமும் வந்து போகும். ஒரு கல்யாணவீட்டில் வெகு நேரம் தனியே நின்று விட்டு கிளம்பியவரை எதிரே வந்த கணபதி பார்த்து உள்ளே அழைத்துவந்தார். அதற்குப்பிறகுதான் அவரின் வருகை எல்லோருக்கும் உறைத்தது. அப்போது அவர் முகச்சவரம் செய்து, வெள்ளை வேட்டி வெள்ளைச்சட்டையில் வந்திருந்ததால், சட்டென்று கண்டுபிடிக்க முடியாமல் போனது.


அவரோடு எழுத்துவேலை பார்த்த மனோகரனுக்கு அவர் தான் எல்லாம். மூன்று வேளை வயிறாரச் சாப்பிட முடியுமா என்கிற கேள்விக் குறியோடு, வெட்ட வெளியாக அவனது முன்னால் கிடந்தது காலம். ஒன்பதாம் வகுப்பிற்கு புத்தகம் வாங்க முடியாமல் படிப்பும் நின்றுபோக ஓவியக் கூடத்துக்கு ஒன்றுவிட்ட சித்தப்பா பின்னால் வந்தான். அங்கு தான் அவனுக்கு மீசை முளைத்தது. மொத்தமாக ஆயிரம் ரூபாயை அங்குதான் பார்த்தான். அவனுக்கும் ஒருகல்யாணம் நடந்தது. அந்தக் கல்யாணத்தில் முதலில் காலில் விழுந்து கும்பிடத்தேடி தேடி அழுத்துப் போனார்கள் கணியண்ணன் இல்லாதது தெரிந்து அவன் அழுதேவிட்டான். அவரோ தனது இருப்பை உணர்த்தும் எந்தக் காரியத்தையும் வலிந்து செய்யத் துணியாதவர். அவர் எழுதும் விளம்பரப் பலகையின் மூலையில் ஓரத்தில் ஒளிந்திருக்கும் ஓவியக்கூடத்தின் பெயரைப் போலவே பொது இடங்களில் அவரைத் தேடிக்கண்டு பிடிக்கவேண்டும். எப்போதுமே ஒரு பார்வையாளனின் கடைசிப்பெஞ்சில் உட்கார்ந்துகொண்டு உலகத்தை உன்னிப்பாகக் கவனிப்பவர். அவரது கல்யாணத்தன்று மணவரையில் வெகு நேரம் எல்லோர் கண்களும் படும் இடத்தில் உட்கார்ந்திருந்ததே அவர் மட்டுக்கும் மிகப்பெரும் அதிசயம். ஆனால் அவரது கைபட்ட வண்ணங்களைப் பார்க்காமல் எந்தக்கண்களும் கடந்துபோகாதபடிக்கு அவரது வேலைப்பாடு அந்த நகரம் முழுக்க பரவிக்கிடந்தது. பெட்டிக்கடை தொடங்கி பெரிய கோடிஸ்வர நல்லெண்ணெய் நிறுவணம் வரை அவரது விளம்பரப் பலகை இல்லாத இடங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.


காரிலும் இருசக்கர வாகணத்திலும் வருகிற வாடிக்கையாளர்கள் பிரதானச்சாலையில் வண்டிகளை நிறுத்திவிட்டு சகதிக்குள் நடக்கிற பாவத்தோடு தயங்கித் தயங்கி காலடி எடுத்து வருவார்கள். முகஞ்சுழித்து மூக்கைப் பொத்திக்கொண்டால் வேலை நடக்காது எனப்பயந்து முகத்தை இயல்புக்கும் சுழிப்புக்கும் நடுவில் வைத்துக்கொண்டு வருவார்கள். மர அறுவைத் தொழிற் சாலையையும் அதன் தூசி நெடியும் அந்தப் பிரதேசமெங்கும் வியாபித்திருக்கும். அதைக் கடந்து வந்தாலும், மூத்திர மல நெடியை எளிதில் கடக்க முடியாது. அவரது ஓவியக் கூடத்துக்குப் பக்கத்தில் ஒரு தூர்ந்து போன தெப்பக்குளம் இருக்கும். ராஜாக்கள் தூர்ந்து போனதும் அது அடித்தட்டு மக்களின் கழிப்பறையானது. இந்த இரண்டையும் தாண்டி ஒரு சிவன் கோவில். அங்கே படர்ந்து விரிந்திருக்கும், வில்வமரத்து வாசனை வந்துகொண்டிருக்கும். மரங்கள் எப்போதும் காற்றோடும் வாசத்தோடும் தீராச்சொந்தம் கொண்டது. வில்வ மரத்துக் காற்றுப்பட்டால் தீராத நோயும் தீருமென்கிறது சித்த அறிவியல். இந்த கெட்ட காற்றையும் நல்ல காற்றையும் விழுங்கும் தைல வண்ணங்களின் வாசனை அவரது கூடத்துக்குள்ளிருந்து முப்பது வருசமாக வெளிவந்துகொண்டிருக்கிறது.


வாசலில் உட்கார்ந்து சாலையை வெறித்துக்கொண்டிருக்கிற போது, அவரைக் கடந்துபோகிற கைவண்டிக்காரர்களும் ரிக்சாக்காரர்களும் சலசலப் பேச்சை இடை நிறுத்திக் கடந்து போவார்கள். சிலர் வணக்கம் தோழரே சொல்லிக்கொண்டும் போவார்கள். ஒரு சிலர் மிகுந்த மரியாதையோடு வாங்கி உரசிவிட்டு ஒருகையில் பீடியை மறைத்து மறுகையில் தீப்பெட்டி தந்து விட்டுப்போவார்கள். அங்கு வருகிற எல்லோருக்கும் ஒரே அளவு மரியாதைதான். அந்த ஒடிசலான தேகத்துக்குள் கம்பீரம் குறையாத குரலும், நெளிவு சுளிவு இல்லாத, வியாபார நுனுக்கம் துளியுமில்லாத வார்த்தைகளும் தேங்கிகிடக்கிறமாதிரியே யார்கண்ணையும் சுண்டியிழுக்கிற வித்தையும் குடிகொண்டிருக்கும். அவர் கை பட்டு ஜனிக்கிற வெங்கடாஜலபதியின் உருவம் மட்டும் கடைமுகப்பில் இருந்தால் போதும் விருதுநகரையே விலைக்கு வாங்குவேன் என்கிற நம்பிக்கையில் பிரமுகர்களும், கருமலைகாத்த கருப்பசாமி, கூடமுடையார், அருஞ்சுனைகாத்த அய்யனார் எல்லோரும் கனியண்ணனின் தூரிகையில் முளைத்து, வியாபரிகளுக்குத் துணையிருப்பார்கள்.


தெப்பம் பஜாரில் பலசரக்கு கடையில் சரக்கு மடிக்க ஆரம்பித்த கணத்திலிருந்தே தங்கப்பழத்துக்கு கல்லாவில் உட்காருகிற கனவு முளைக்க ஆரம்பித்திருந்தது. அப்படி முளைவிடும் போதே கனியண்ணன் கையால் போர்டு எழுத வேண்டும் அந்தப் போர்டிலும் தாய், சேர்மத்தாய் துணை போடவேண்டுமென்கிற திட்டமிடுதலும் பூத்திருந்தது. அவனும் ஒரு துருப்பிடித்த அகலக்கேரியர் சைக்கிளில் தினம் இரண்டுதரம் ஓவியக்கூடத்தைக் கடந்து போவான். போகிற போதெல்லாம் ஒரு நிமிசம் நின்று அறைக்குள் விரவிக்கிடக்கிற எல்லா ஓவியங்களையும் கண்ணுக்குள் இழுத்துக்கொண்டு போவான். அதில் ஒவ்வொன்றாக விட்டு தனக்கு வரப்போகிற போர்டை தெரிவு செய்து கொள்வான்.


ஆனால், முன்னால் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்துவின் ஆதங்கம் வேறுமாதிரியானது. அவர் சின்னவயசாயிருக்கும்போதே காலமாகிப்போன தன் தாயின் காதுவளத்த உருவம் எதிலும் பதிவு ஆகாமல் போனது வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விசேசத்துக்கும், அந்த வெறுமை விசுவரூபமெடுக்கும். அவ்வளவு பெரிய பங்களாவில் படுத்து தூங்கவும், செருக்கொடு நடந்து திரியவும் தன் தாயில்லாமல் போன குறை அவ்வப்போது அரிக்கும். அவரொரு நாள் தனது படகுக் காரை ஓரம் நிறுத்திவிட்டு வந்து குழுப் புகைப்படத்திலிருக்கும் அம்மாவை சாமியாக்க வேடுமென்று கேட்டார். குழந்தைகளைப் போலவே தாயும் பொதுவானவள். அவளது லவுக்கையில்லாத உருவத்தில் கனியண்ணனின் அம்மா சாயலிருந்தது. எனவே தனிமை கிடைக்கிற நேரம்பூராவும் அந்தப்படத்தோடே காலம் கழித்தார். வண்ணங்களை மாற்றவும், சின்னச் சின்ன திருத்தங்கள் செய்யவுமாக இரண்டுமாதம் ஓடிப்போனது. இரண்டுமாதம் கழித்து தயராயிருந்த படத்தை ஆள் மேல் ஆள் அனுப்பி வாங்கி வரச்சொன்னார். கொடுக்க வரும்போது குறைந்திருந்த கௌரவம் வாங்க வருவதற்குள் வளர்ந்ததை செரிக்க முடியவில்லை. அந்த ஓவியத்தைப் பிரத்தியார் கையில் கொடுத்தனுப்ப பிடிவாதமாக மறுத்து விட்டார். மணம் ஒவ்வாத எந்த ஒரு வேளைக்கும் இந்த உலகத்தையே விலையாய்த் தந்தாலும் புறங்காலால் எத்தித்தள்ளி விடுகிற நெருப்பிருந்தது அவரிடம். அந்தச் செருக்குக் குறையாமல் நாற்பது வருடம் நிலைத்திருந்தார். காளிமுத்துவுக்குப் பின்னாலுள்ள அரசியல் மற்றும் ஜாதிபலம் தெரியாமால் வீம்பு பண்ணுவதாக கடைப் பையன்களே கோளாறு சொல்லுமளவுக்கு பிடிவாதமாயிருந்தார்.


'' படத்துல கண்ணு பெருசாருக்கு,... செர்ரிக்குப் பதிலா மெர்ரூன் வய்க்கனுன்னு சொல்லு, நீ சின்னவனாயிருந்தாலும் சலாம் போட்டு ஏத்துக்கிறேன், துட்டுக்காக பீ திங்கிறதுதா அனுசரிச்சுப் போறதுன்னா அதுக்குப்பேரு வேற ''. கண்கள் தெறிக்க, தாடி முடிகள் குத்திட்டு நிற்க வானத்துக்கும் பூமிக்குமாக நின்றார். பிறகு யாரும் சொல்லத் துணியவில்லை. அதுபோலவே ஆர்டர் வாங்கும்போதே மிகச்சரியாகக் கொடுக்கமுடிகிற நாளைச்சொல்லி விடுவார். சொன்ன தேதியில் வேலை முடிக்க சாப்பாடு தூக்கம் ஓய்வு எல்லாவற்றையும் தூக்கி எறிவார். அப்போது பாக்கெட் நிறைய்ய சிகரெட்டும், அவ்வப்போது பிலால் கடை டீயும், ஜேசுதாஸ் அரிகரன் பாடல்களும் மட்டும் இருந்தால் போதும். ஒவியத்தைப் பற்றி அது நொள்ளை இது நோள்ளை என்று சொன்னாலோ, பிரிதொரு ஓவியர் பேர் சொல்லி அது மாதிரி வேண்டும் என்று சொன்னாலோ சொன்ன மறுகணமே கைத்துட்டுப் ட்டு எழுதிய ஓவியத்தின் மேல் மட்டியடித்து போர்டையும் முன்பணத்தையும் திருப்பி அனுப்பிவிடுவார். அதற்காக அதிகம் பேசமாட்டார். உறைந்துவிட்ட அடர் சிகப்பு வண்ணம் மாதிரியான அந்த மௌனம் நிறைய்ய பயத்தை உண்டாக்கும்.


எல்லோரும் பயந்தது போலவே காளிமுத்து அன்று கடுங்கோபத்தில் வந்தார். நடையின் தீவிரத்தில் விபரீதம் வருமென்கிற அபாயச்சங்கு ஒலித்தது. தறுமாறாகத் திட்டிவிடும் வார்த்தைகளைச் சுமந்துகொண்டு, மிதமிஞ்சிய போதையோடு வந்தார். கனியண்ணன் எப்போதும்போல ஒரு ஓவியத்திற்குள் மூழ்கிக்கிடந்தார். அது தகப்பனின் தோளில் கிடக்கிற குழந்தையின் படம். காளிமுத்துவுக்கு பாராமுகமாக இருக்கும் கனியண்ணனின் அலட்சியம் வெறியூட்டியது. எதோ ரசாபாசம் நடக்கப்போகிற அவதானிப்பில் சுவர்க்கடிகாரத்தின் நொடிமுள் சரக் சரக்கென்று நகர்ந்தது. நிழலாய் வந்த எடுபிடிகளில் ஒருவன் ''அண்ணே படம் அந்தாருக்கு'' சொன்னதும் திரும்பினார். ராஜா நாற்காலியில் உட்கார்ந்திருந்த தாயின் ஆளுயரப்படம் வடக்குச் சுவரோரம் பிரம்மாண்டமாக நின்றிருந்தது. விறகு சுமந்தே திரிந்த உருவம், சம்மணம் போட்டுக்கூட உட்காரத்தெரிரியாத அவள் ஒரு பட்டமஹிசி போலக் காட்சிதந்தாள். அந்த பிம்பம், அவர் குடித்திருந்த ஓல்டு காஸ்க் ரம்மிலிருந்த ரசனைக் கதவைத்திறந்தது. '' ச்ச்..சய் '' என்றுசொல்லி தலையை உலுக்கினார்.
கரை வேட்டியை மடித்துக் கட்டிகொண்டு தரையில் உட்கார்ந்தார். அவருக்கு ஏதும் பேசத் தோன்றவில்லை. கொண்டுவந்திருந்த கோபம் முழுக்க கரைந்து கண்களில் நீர்கோர்த்தது. படத்தையும் கனியண்ணனையும் திரும்பத் திரும்பப் பார்த்தார். தூரிகை விரல்களைப் பிடித்துக்கொண்டு தழுதழுத்தார். '' எனக்கு எங்கையெழுத்தக் கூட ஒழுங்காப்போடத் தெரியாது..., நீ வித்தக்காரனய்யா, ஒன்னயப்போயி '' அதற்கப்புறம் அவர் வந்தவேகமும், உளரள்களும் மாதக்கணக்கில் திரும்பத்திரும்ப சொல்லிப்பொழுதுகள் கழிந்தது.


அப்போதெல்லாம் ஓவியக்கூடம் கூடம் நிறைய்ய ஆட்கள் எந்தநேரமும் வருவதும் போவாதுமாயிருப்பார்கள். வேலை முடிந்த போர்டுகளும், ஸ்கெட்ச் போட்டதும், பாதி முடிந்தும் முடியாததுமாக வண்ணங்களின் வளர் சிதை மாற்றம் அந்த ஓவியக்கூடம் முழுக்க நிறைந்திருக்கும். சுவரிலும் தரையிலும் வண்ணங்கள் சிதறிய இடங்களில் சொல்லப்படாத ஆயிரம் கனவு பிம்பங்கள் ஒளிந்திருக்கும். அவற்றைப் பார்க்கிற ஒவ்வொரு கண்ணுக்கும் ஒரு உருவம் தெரியும். சாயங்கால மேகங்கள் நகருகிற போது தெரிகிற மாய பிம்பங்கள் போலவே அந்தச் சுவரும் மிச்ச வண்னத்தில் மிளிரும். சுவரோரத்தில் ஒரு மேஜையிருக்கும் அதன் சதுர வடிவமும், மரக்கால்களும் தான் அது மேஜையென்பதை ஊர்ஜிதப்படுத்தும். அதில் ஒரு ட்ராயர் இருக்கும். அதற்குள்ளிருக்கும் தகர டப்பாதான் கல்லாப்பெட்டி. எவ்வளவு பிதுங்கினாலும் கர்வமில்லாத பெட்டியிலிருந்து, யாரும் பணம் எடுக்கலாம். உடன் வேலை பார்ப்பவர்கள் அவர்களுக்கான ஊதியத்தை எடுத்துவிட்டுக் கணக்கெழுதி வைக்கிற மாதிரியான ஏற்பாடும் இருந்தது. அங்கு வருகிற நெருங்கிய நண்பர்கள் அது குறித்து துணுக்குற்றுப் போவார்கள்.


அது மட்டுமா ஒரு கையகலப் பெட்டிக்கடையில் கூட இஷ்ட தெய்வங்கள் பாதி இடத்தை அடைத்துக்கொள்ளும். தலையே போனாலும் கடைதிறந்தவுடன் பத்திக்குச்சிப் புகையைக் கல்லாவிலும், சாமி படத்திலும் காட்டாமல், யாரும் அந்த நாளைத் தொடங்குவதில்லை. கனியண்ணன் ஓவியக்கூடத்தில் பத்திக்குச்சி வாசனை படாத மூன்று படங்கள் இருக்கும். குத்திட்டு நிற்கிற வெள்ளை முடி. அதிலிருந்து இறங்குகிற ஏறு நெற்றியில் சிவப்பு ஆச்சரியக்குறியாய் கோப்பாளம். அந்த முகத்தில் உலகை விழுங்குகிற கண்களோடு ஓவியத்தந்தை கொண்டைய ராஜுவின் படம். இன்னொன்று தாடிகளுக்குள் மறைந்திருக்கும் தீயெறியும் கண்கள். அதற்குமேலே பருந்து விரித்த சிறகாகப் புருவமும் கொண்ட மார்க்ஸின் படம். கடைசியாக நீளவாக்கிலுள்ள ஓவியம். குனிந்து நடந்த குரங்கு ஒன்று மெல்ல மெல்ல நிமிர்ந்து, ஆதிமனிதனாகிற பிரபஞ்சக் குறிப்பு அது. ஒரு பத்து உருவங்களில் கேள்வியையும் பதிலையும் பார்வைபயாளர்களுக்கு விநியோகிக்கிற வண்ணப் பிரமாண்டம். படத்தில் பதிகிற பார்வையானது, உருவங்களின் வழியே பயணமாகி வனாந்திரத்துக்குள் கானாமல்போகிற புள்ளியாகிவிடும்.
இந்த விநோத உலகில் மௌனப்பயணம் போகவும், பேசவும், பாட்டுக்கேட்கவும், மூலையில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிற டோலக்கை எடுத்து லயமில்லாத ஒலி எழுப்பவும் நண்பர்கள் குவிகிற இடமாக இருந்தது அந்த ஓவியக்கூடம். கிட்டத்தட்ட எல்லா ஓவியர்களின் அறையிலும் ஒரு டேப் ரிக்காடும், எதாவது ஒரு வாத்தியக் கருவியும், தொண்ணூறு சதவீத இடங்களில் சிகரெட் புகையும் தென்படுவது ஒரு இலக்கணம் போலவே இருக்கிறது. அந்த ஒற்றுமைக்கு தர்க்க ரீதியான காரணங்கள் என்னவெனத் தெரியாது. அவர்கள் வண்ணங்களைப் போலவே இந்த உலகையும் காதலிப்பவர்கள் என்பதுதான் தூக்கலான நிஜம். அங்கு வருகிறவர்களும் வண்ணங்களைப் போல பலதரப்பட்டவர்கள். நிஜ நாடகப்பிரியர் மருதுபாண்டி, தாலுகாச்செயலாளர் தோழர் முத்து, வாத்தியார் உசைன், டின் பாக்டரித் தொழிலாளி நேசமணி, எழுத்தாளராகத் துடிக்கிற கலியமூர்த்தி. எல்லோரும் தினம் ஒரு தரம் அங்கு வந்து சம்மணமிட்டு உட்கார்ந்து நாலு வார்த்தை பேசிவிட்டுத்தான் போவார்கள்.
வயது வித்தியாசமில்லாமல் எல்லோருக்கும் தோழரென்கிற மரியாதைதான்.

கனியண்ணன் கண் மண் தெரியாத பாசக்காரர் கல்லாவில் கிடக்கிற கடைசி இருபது ரூபாயையும் வருகிறவர்களுக்கு டீ சிகரெட் வாங்கித் தந்துவிட்டு, வீட்டு நினைவே இல்லாமல் இருப்பார். கடை பூட்டிகிளம்பும்போது தான் வீட்டில் அரிசியில்லாதது உறைக்கும். அதுபோலவே ரொம்பவும் முரண்டுக்காரர். ஓவியங்களில் நவீன உத்திகளை ஏற்றுக்கொள்வார். ஆனால் நவீனத்தொழில் நுட்பத்தை நிராகரிப்பார். எவ்வளவு சொன்னாலும் அவருக்கு இஷ்டமான, அந்தச்சிகப்பு வண்ணத்தின் அடர்த்தியைக் குறைக்கவே மாட்டார். அது வெறிக்கிறது, உறுத்துகிறது என்று சொன்னால் பிடிவாதமாக உறுத்தட்டும் என்று சொல்லிவிடுவார். உறுத்தல் இல்லாவிட்டால் எல்லாம் இயல்பாகிவிடும். ஓவியத்தில் எப்போதும் தூரிகை, எண்ணங்களுக்கு மட்டுமே இடம் உண்டு மெஷின்களுக்கு அங்கு துளியும் இடமில்லை என்கிற தீவிர முரண்டுக்காரர்.


ஸ்க்ரீன் ப்ரிண்டிங், ஸ்பிரே பெயிண்டிங், குழல் விளக்குகளில் பெயர்ப்பலகைகள் உருவான காலங்கள் வந்தது. லாப வெறியின் அதி நவீன வடிவமாக இயந்திரங்கள் கோரப்பற்களோடு வந்திரங்கியது. அந்தக் கோரப்பற்கள் பதியாத இடத்தில் பத்திரமாயிருந்த ஓவியக் கைகளின் மீதும் அதன் ரத்தம் தோய்ந்த பற்கள் பதிந்தது. பின்னார் எழுத்துக்கள் ஸ்டிக்கரில் உருவானது. எல்லாம் இரண்டு வருடம் தான் அவையாவும் அற்பாயுசில் வழக்கொழிந்து போனது. தான் பெற்ற குழந்தைகளைத்தானே விழுங்குகிற விலங்குபோல் நவீனம் தடம் அழித்துக்கொண்டே முன் சென்றது. இப்போது பாலித்தின் துணிகளில் தயாரிக்கப்படுகிற சிரிய பெரிய பெயர்ப்பலகைகள் சிவகாசியிலிருந்து வந்து, கடைகளெங்கும் தொங்குகிறது. ஒரு இரண்டு வாரகாலத்தில் உருவாகிற பெயர்ப்பலகைகளை அரை மணி நேரத்தில் வெளித்தள்ளிவிட்டு வாய்பிளந்து காத்திருக்கிறதுகம்ப்யூட்டரில் வடிவமைக்கப்பட்ட அச்சு எந்திரங்கள். உபயாகித்துவிட்டுத்தூக்கி எறிகிற குப்பைப் பழக்கம் ஒரு கலாச்சாரமாக உரு மாறிக்கொண்டிருக்கிற காலமிது. எவ்வளவு சடுதியில் தூக்கி எறிகிறார்களோ அவ்வளவு வேகத்தில் அவர்களுக்கு செல்வம் பாலிக்கிறது. குப்பையின் அளவைப்பொறுத்தே வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படுகிறது. அந்தக்குப்பை மேட்டில் உபயோகமில்லாத பழம் பொருள்களை விட ரத்தமும் சதையுமான நினைவுகள் மட்டும் மக்கிப் போகாமல் கிடக்கிறது.


கண்ணன், மனோகரன், செந்தீ, கருப்பசாமி, பம்பரக்கண்ணாலே பாட்டுப்பாடுகிற சந்தனம் என உட்கார இடங்கிடைக்காமல் ஒரு திருவிழாக் கூட்டமிருந்த அந்த ஓவியக்கூடம், இப்போது வெறிச்சோடிக் கிடக்கிறது. மனைவியின் ஊருக்கு குடிபெயர்கிறேன் என்று மனோகரன் சொல்லிப் போனதைப் போலவே, எல்லோருக்கும் ஒரு தனித்தனிக் காரணமிருந்தது. அந்த நினைவுகளோடு கனியண்ணனின் சிகரெட்டுப்புகை மட்டும் அந்த அறைமுழுக்க அங்கும் இங்கும் அலைகிறது. அவர் வாசலில் உட்கார்ந்தபடி தெருவை இன்னும் அதிகமாக வெறித்துக் கொண்டிருக்கிறார். அதோ துறு துறுக்கும் கண்களோடு துள்ளி வருவது யார்.


மினு மினுப்பான, ஒரு போதும் தொடமுடியாத மெல்லுடலோடு அவள் வருகிறாள். ஆளில்லா நேரங்களில் மட்டுமே வருகிற அந்தக் கள்ளிக்கு, கொடுக்க என்ன இருக்கிறது. மண்ணென்னை கலந்த வண்ணங்களின் வாசனை அவளுக்கும் பிடித்துப்போய் விட்டது போல. வெறுமையின் வெளியெங்கும் ஆயிரம் வண்ணங்களை அள்ளித்தெளிக்கிற சாகசக்காரியாகத் தினம் தினம் வருகிறாள். யாருமற்ற நேரத்தில் நினைவுகள் போல், தென்றல் மாதிரி, இசையின் சாயலில் அவள் வருகிறாள். ஒரு நிமிடமும் நிற்காத தூரிகை வாளை ஆட்டிக்கொண்டு வருகிற அவளுக்கும் இவருக்கும் ஆறு மாதத்தொடுப்பிருக்கிறது. பிலால் கடையில் அவளுக்கென வாங்கிய பன் ரொட்டியை எடுத்து பிய்த்துப்போடுகிறார். வேகமக நகர்ந்து, வேகமாக நின்று, வேகமாகத்தயங்கி, மீண்டு வந்து ரொட்டித்துகளை எடுத்துக் குத்துக்காலிட்டு உட்கார்ந்து சாப்பிடுகிறாள். அது, எல்லோருக்கும் அணில், கணியண்ணனுக்கு மட்டும், அவள் பீனிக்ஸ். அப்படியொரு நாமகரணம் சூட்டப்பட்டது அந்த அணிலுக்குத் தெரியாது.
ஆனால் அவரது ஆழ்ந்த மௌனத்தோடு, துடி துடிப்பான அதன் அங்க சேஷ்டைகள் எப்போதும் கலந்துறையாடும். மாதவனிடம் மட்டுமே பகிர்ந்துகொண்ட அநேக ரகசியங்களை அவளோடு பகிர்ந்துகொள்கிறார். இசைக்குறிப்பு போலிருக்கும் அதன் வேகச் சத்தத்தோடு ஒரு நேர்காணல் நடக்கும். அவரின் பதில்களில் சேதிகள் மறைந்திருக்கும். அந்த நேர்காணல், மூன்றாவது மனிதர் இடைமறிக்கிற வரை தொடரும். அதோ, ஒரு மாதத்துக்குப்பிறகு நடக்க இருக்கிற ''கோக்'' எதிப்பு ஆர்ப்பாட்டத்திற்கு போர்டு எழுதவும், சுவர் விளம்பரம் எழுதவும் வாசகங்கள் ஏந்திக்கொண்டு, தோழர் எம்ஜியார் வந்துகொண்டிருக்கிறார். ரொட்டித்துகளைப் போட்டு விட்டு சடுதியில் ஓடி மறைந்து விடுகிறது பீனிக்ஸ்.


0


( '' ஒரு வனதேவதையும் ரெண்டு பொன்வண்டுகளும் '' எனது தொகுப்பிலுள்ள சிறுகதை - அல்லது ஓவியக்குறிப்பு.வாழ்வின் துயர அனுபவங்களைத் தேர்ந்து மிளிர்ந்த ஓவியக்கலைஞன், ஓரடி முன்னால் எனும் தமுஎச பரிசுபெற்ற புதினத்தின் ஆசிரியன், நொடித்துப் போன விருத்நகர் ' சூப்பர் ஆர்ட்ஸ் ' ஓவியக் குழுமத்தின் ஆணிவேர், பாசமும் வாஞ்சையும் தீராத வண்ணமாய்த் தேங்கிக் கிடக்கும் என் மூத்த சகோதரன், தோழர் மணிவண்ணன் அவர்களுக்கு )

6.10.09

ரசனை வித்தியாசமானது, அறிவு விசாலமானது .

புகழ்பெற்ற முல்க்ராஜ் ஆனந்தின் சிறுகதை ஒன்றுண்டு. மக்கள் திரள் மேவுகிற வாரச் சந்தையில் ஒரு குழந்தை தனதுதாய் தந்தையோடு செல்லும். அப்போது அந்தச்சந்தையில் தான் பார்த்த அத்தனை பொருளையும் கேட்கும். தாயைத்தவற விட்டு விட்டு அழுது கொண்டிருக்கும். காவலர்கள் அவனை பாதுகாத்து அவனுக்கு விளையட்டுப் பொருள்களும் இனிப்பும் வாங்கித்தருவார்கள். எதுவும் வேண்டாம் எனக்கு அம்மா வேண்டும் எனச்சொல்லி அவன் அழுகையை நிறுத்தமாட்டான். விளையாட்டுக் காட்டுவார்கள் மீண்டும் மீண்டும் அழுகை பெரிதாகும். உன் ஊரெங்கிருக்கிறது, அதன் பெயரென்ன, அடையாளமென்ன எதுவும் அவனுக்குச் சொல்லத் தெரியாது. அம்மா அப்பா பெயர் எதுவும் தெரியாது. ஆனால் அவன் அம்மா மிக அழகாக இருப்பாள் என்கிற சின்ன க்ளூ மட்டும் தருவான். அந்த சந்தையில் இருக்கிற அத்துணை அழகிய பெண்களிடமும் அழைத்துப் போவார்கள். இல்லையென்று சொல்லிவிடுவான் இந்த தேடுதலில் பொழுது சாய்ந்து விடும்.அப்போது அவனை அழைத்துக்கொண்டு அலுவலகத்துக்கு திரும்புவார்கள். எதிரே ஒரு பெண் வருவாள் அவளைப் பார்த்ததும் குழந்தை காவலர் கையை உதறிவிட்டு அவளைப்போய் அணைத்துக்கொள்ளும். அவள் அவலட்சணமாக இருப்பதாக காவலர்கள் நினைத்துக் கொள்வார்கள்.


ஈடுபாடுதான் அழகு. அதற்கு அளவை கிடையாது. அது நிறம், வடிவம் சார்ந்ததக ஒப்புக் கொள்வதற்கில்லை. மங்கோலியர்களின் சராசரி உயரம் நான்கு அடி. ஆப்பிரிக்கர்களின் நிறம் ஆதிக்கருப்பு. அலெக்ஸ்ஹேலி சொல்லுவதைப் போல முடைநாற்றம் அடிக்கும் உரித்த கோழி மதிரி உலக வெள்ளையாய் இருக்கும், மேலைத் தேசத்தவரிடம் மருந்துக்கும் கருப்பில்லை தலைமுடி உட்படட. நீங்கள் கேலி செய்யும் கருப்பு என் கண்ணுக்குள் இருக்கிறது, நீங்கள் போற்றும் வெளுப்பு என் பாதத்தில் இருக்கிறதென்று எனது அண்ணன் மகள் சொல்லுவாள். இதுதான் அழகென்று நிர்ணயித்தால் அந்தந்த நிலப்பகுதியில் அழகிகள் இல்லையென்பதாக மாறக்கூடும். இந்தியாவில் இதம் என்பதைக் குளிரும் மேலை நாட்டில் இதம் என்பதை வெப்பமுமாக அவரவர் புரிந்து கொள்கிறார். இப்போது கூட சரக்கடிக்கிறபோது கடைப்பிடிக்கிற தினுசுகள் குறித்த வலைக் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.


எனது சிறுவயதில், அல்லது கிராமக் காலத்தில் இவள் அழகில்லை, இவன் அவலட்சணம் என்று தீர்மாணித்த இரண்டு பேரது சாயல் கொண்டவர்களை நான் சற்றேரக்குறைய பதினைந்தாண்டுகள் கழித்துப்பார்த்தேன். ரொம்ப வியப்பானது ஒருத்தி ஜெனிபர் லோபஸ், இன்னொருவன் பர்ஸ்ட் ப்ளாட் ராம்போ. அந்த இருவரின் சாயலிலும் எனக்கு நெருக்கமான இரண்டு பேர் இன்னும் இருக்கிறார்கள். இள்ளிக் கண்களும், பெரிய உதடும், சீரற்ற பற்களும், எடுப்பற்ற தனமும் ஆண் நடையுமாக இருந்த அவளை எங்கள் குழுவில் உள்ள ஒருவன் காதலித்த போது அழுகிற அளவிற்கு அவனைகேலி செய்திருக்கிறோம். ஆளாளுக்கு காதல் தோற்றுப்பின் வெவ்வேறு திசைகளில் பயணமானோம். அனால் அவன் அவளைக் காதலித்து மணமுடித்து இன்னும் சந்தோசம் மாறாத வாழ்க்கை வாழ்கிறான். டொக்குவிழுந்த கன்னம், நியான் விளக்கு கம்பத்தைப்போல மேல்கூன் விழுந்த உயரம், பேசுகிற போது பல வார்த்தைகள் கட்டுப்பாடில்லாமல் கீழே விழும். கோக்காலி யெனும் பட்டப்பெயர் கொண்ட காந்தன் மாதிரியே சில்வஸ்டர் ஸ்டெலன் இருப்பான். நிறைய்ய வருடம் கழித்து ஆங்கிலப்படங்கள் பார்க்க ஆரம்பித்து ஜெனிபரின் இரண்டு மூன்று படங்கள் தான் பார்த்திருப்பேன். அவளைப்பார்க்கிற போதெல்லாம் எங்களூர் சின்னத்தாயைப் பார்க்கிற நினைவுகள் தடைபடுவதில்லை.


ஒரு நாள் எனது கிராமத்துக்குப் போனேன். காலாற நடப்பதாகச் சொல்லிக்கொண்டு அவள் வீட்டுப்பக்கம் போனேன் " வாங்கண்ணா எப்ப வந்தெக, மயினி பிள்ளகள்ளா வல்லயா "என்பதான கேள்விகள் என்னை இளக்கியது. வார்த்தைகளற்ற மன்னிப்புக்கடிதம் ஒன்று அவளுக்கு முன்னாள் கிடந்ததை அவள் அறிய இயலாது. ரசனைகள் மாறும், கற்பிதங்கள் மாறும், எல்லாம் மாறும்.

5.10.09

பொதுக்கல்விக் காலத்தின் சரித்திரம் திருப்பி எழுதப்படுகிறது.

( 2006 ஆம் ஆண்டு வெளியான கல்வி கடைச்சரக்கல்ல எனும் எனது தமிழாக்க நூலின் ஒருபகுதி - கல்வியாளர் வீரேந்திர சர்மாவின் ஆய்வறிக்கையை தழுவி எழுதப்பட்டது )


உயர்கல்வியை சேவை வர்த்தகமாக மாற்றுகிற பொது ஒப்பந்தங்களின் கீழ் கொண்டுவர ( WTO ) இப்போது மத்திய அரசு உத்தேசித்து வருகிறது. கல்விச்சேவைக்கான கொள்கை மற்றும் விவகாரங்களில் தலையிடும் உரிமையை காட் ஒப்பந்தம் மூலம் நாம் ஏற்கனவே பறிகொடுத்திருக்கிறோம். கல்வியைச் சந்தைக்குள் தள்ளிவிட்டு வெகு நாளாகிறது. உலகம் முழுவதிலுமுள்ள ஆசிரியர்களும் மாணவர்களும் கல்வியை காட் ஒப்பந்தத்துக்கு விற்கிற நடவடிக்கைகளுக்கு எதிராகக் கிளர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். உயர்கல்வி விற்பனைக்கு வந்தால் இந்தியாவிலுள்ள கல்விக் கட்டமைப்பு சீரழிவதோடு கட்டுக் கட்டாகப் பணம் வைத்திருக்கிறவர்கள் மட்டுமே கல்லூரிகளுக்குள் நுழயமுடியும் எனும் நிலைமை உருவாகும். கல்வி மானியத்தைப் பாதியாகச் சுருக்குவதற்கும், உயர்கல்வியிலுள்ள அரசின் பொறுப்பைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்துவதற்கும் ஆதரவாக அரசு அறிக்கைகளையும், கட்டுக்கதைகளையும் இட்டுக்கட்டிக் கொண்டிருக்கிறது.


உயர் கல்விக்கான மொத்தச்செலவில் 25 முதல் 30 சதவீதத்தை மாணவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்கிற திட்டமும் அரசின் கைவசம் இருக்கிறது. புதிய பாடத்திட்டங்களுக்கு ஒப்புதல் கேட்கிற நிறுவனங்களுக்கு சுயநிதிப்பிரிவில் மட்டுமே ஒப்புதல் வழங்கவேண்டும் என்கிற உற்திப்பாடும் அரசு மற்றும் பகமாகு வின் கொள்கைமுடிவுகளில் ஒன்றாகும். இப்படியாக அரசு உயர்கல்விமீதான தனது தார்மீகங்களை உதறிவிட்டு, தனியார் துறைக்குத் தீனிபோடுகிறது. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில், சந்தைக்கனுப்புகிற வேலை ஆரம்பமாகவில்லை என்கிற பலரின் வாதம் ஏற்றுக்கொள்ள முடியாத அறியாமையின் வெளிப்பாடாகும். ஏனெனில் புதிய ஆசிரியர் நியமனங்களை நிறுத்தி, ஒப்பந்த முறை நியமனத்தை ஊக்குவிப்பதன் மூலம் கல்வியை விற்பதற்கான காபந்து கொள்கைக்கு அப்போதே அடிப்படை அமைத்தாகிவிட்டது.
தேசிய அறிவை மேம்படுத்தவும், அதற்கான அறிவியல் ஞானிகளின் சர்வதேசத் தொடர்புகளை, உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளவும், மேலதிக தேசிய வளர்ச்சிக்கான திறமைகளை மேம்படுத்துவதற்கும் நமக்கு இப்போதிருக்கும் பொதுக்கல்வி முறையைத்தவிர வேறு கதியே இல்லை. கல்வி வியாபாராமாகும்போது, நிறுவணம், ஆசிரியர், பாடத்திட்டம் எல்லாமே தனிநபர் சார்ந்த வியாபாரமாக மட்டுமே மாறும். அங்கே லாபம் மட்டுமே லட்சியப்படுத்தப்பட்டு தேசியம் அலட்சியப்படுத்தப்படும். எனவே தேசத்தின் வளத்திற்கான ஆதாரம் கல்வி, அதை தனியாருக்கு அடகுவைக்க அனுமதிக்க முடியாது.


தேசநலனில் அக்கறையுள்ள ஒரு உண்மையான குடிமகன், இந்த தேசத்தின் கல்வி மற்றும் சுகாதரச் சேவையை பொதுப் பட்டியலிலிருந்து அகற்றத்துடிக்கிற அரசின் முயற்சியையும், எல்லா பிரச்சினைகளுக்கும் தனியார் துறைதான் தீர்வு என்கிற மூடக் கொள்கைக்கும் எதிராகச் சிந்திக்கவும், பயணப்படவுமான ஒரு அவசியம் இருக்கிறது. தவறுகிற பட்சத்தில் எல்லாவற்றுக்கும் வளர்ந்த நாடுகளிடம் கையேந்துகிற அவல நிலை உருவாகும். நமது அத்தியாவசியத் தேவைக்கும், தரமான மனித வளத்திற்கும் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பங்கம் வந்துசேரும். எதிர்காலம் எத்தியோப்பிய வடிவில் நமக்கு சூனியப்பட்டுப் போகும். எனவே நமது சந்ததிகளின் கல்வியைச் சந்தைக்குள் தேடுகிற அவலத்துக்கு எதிராகக் குரலெழுப்புகிற சமூகக் கடமை நமக்கு முன்னே காத்துக்கிடக்கிறது.


வெள்ளத்தால் அழியாது, வெந்தனழால் வேகாது,கள்வர்களால் கொள்ளை போகாது.கடைத் தெருவில் விற்காது.என்று எழுதிவைத்த ஓலைச்சுவடி மக்கிப்போனாலும், அந்தக் கிழவியின் பேராசை மட்டும் நூற்றாண்டுகள் கடந்தும் காற்றில் கலந்து அலைந்து கொண்டேயிருக்கிறது.உலகமயம் என்ற ஒற்றைச்சொல், விலைமதிப்பற்ற சமூக ஞாயங்களைச் சந்தைக்கனுப்பி விலைபேசுகிறது. வழிபாட்டுக்குரியவர் வரிசையில் இருந்த ஆசிரியன் இன்று படிக்கல்லும் தராசுமாக பசையுள்ள பைதேடி அலைகிறான். அன்னசத்திரம் ஆயிரம் நாட்டுவதும் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிப்பதுமான அரசின் கடமை காட்டால் பறிபோகிறது. இந்தியாவில் அந்தணர்களுக்கும், அரசர்களுக்கும், மதியூக மந்திரிகளுக்கு மட்டும் என்று அடைத்து வைக்கப்பட்டிருந்த குருகுலக் கல்வியை மீட்டெடுத்த பொதுக்கல்விக் காலத்தின் சரித்திரம் திருப்பி எழுதப்படுகிறது.


நாம்வராது வந்த அந்த மாமணியைத்தோற்போமோ ?

4.10.09

மண்மாதிரிகள்.

மண்பாண்டங்கள் மண்ணிலிருந்து செய்ததுதான் என்பதைக் கண்டுபிடிக்க எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனைகால் எனத்தெரியும் ஞானம் போதும். பீங்கானும், கண்ணடிப்பொருள்களும் களி மண்ணிலிருந்து தான் உருவனதென்பதை அறியும்போது ஆச்சரியப்பட்டேன். கிமு 3000 ல் மண்பாண்டங்களில் எழுதப்பட்ட மெசபடோமிய ( ஜார்ஜ் புஷ்ஷின் ரணுவபூட்சு பட்டு அழைக்கழிகப்பட்ட இப்போதைய ஈராக் ) எழுத்துக்கள் தான் உலகின் முதல் வரிவடிவ எழுத்துக்களாம்.


ரொம்ப மக்கா இருக்கிற பையனைப் பார்த்து ' மண்ணு மாதிரி நிக்கெயெடா ' என்று ஆசிரியர்கள் சொல்லுவார்கள்.கொஞ்சம் சுட்டியா இருக்கிறவனைச் சுட்டிச் சொல்லும் போது ' அவம் பெறந்த மண்ணு அப்டி' என்றும் சொல்லுவதுண்டு.செழிச்சிருச்சி எனவும் தரிசாப் போயிருச்சி என்றும் எதிரும் புதிருமாக மனித வாழ்க்கையை தானே ஏற்கிறது. மண்ணை நம்பி மரமும், மரத்தை நம்பி உயிர்களும் வாழ்ந்திருக்க, குரோதம் செய்தவர் மீது புழுதிவாரி இறைப்பதுவும், மனிதாபிமானம் ஈரம் கசியும் மண்ணென்றும் தானே உயிர்களைத் தாங்கிக் கொள்ளும்.


பூமாதேவியப்போல பொறுமை சாலி என்கிற பாமரச்சொல்லை அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல என்று இகத்தின் சுக துக்கங்களின் ஏற்கும் பழிநிலமாகுகிறார் வள்லுவனாரும். மன்னாதி மன்னனும் மண்ணைக் கவ்வினான் வீழ்ந்தோரைக்குறிப்பதும், குப்புற விழுந்தாலும் மீசையில மண்ணொட்டாமப் பேசுவதும், என்ன தான் சேர்த்துவச்சாலும் ஒட்டுற மண்ணுதா ஒட்டும் ஈர்ப்பையும் பிடிப்பயுமாக இந்த மண்ணே எல்லாவற்றையும் எடுத்துகொள்கிறது. சொன்னாலும் தெரியாது மண்ணாளும் வித்தை என்று மேலிருந்து சொலவடை சொல்லுவார். ' மண்ணாரு ஆண்டா மனையாரு கண்டா ' என்று கீழிருந்தும் உழைக்கும் மக்ககள் பழமொழி சொல்லுவார்.


அதுபோலவே என்னைக் கருவுற்றிருக்கும் போது என் தாய் தெள்ளித்தின்ற மண்ணைத்தவிர பரந்த இப்பூவுலகில் எனதுமண் எது எனும் கவிதைச் கேள்விகள் வெறியோடு வெளியேறுகிறது புதைக்கவிடாமல் தடுக்கப்படும் ஒவ்வொரு அருந்ததிய சடலத்திடமிருந்தும். இருநூறு ஆண்டுகள் பறிகொடுத்த மண்ணை யார் யரோ கூறு போட்டுக் கொண்டார்கள்.யூதர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், போர்த்துக்கீசியர்கள் இன்னும் எத்தனையோ. என் பெரியப்பா நினைவாக மும்பையில் உள்ள கல்லறைத் தோட்டத்துக்குப் போனபோது இவர்கள் எல்லோருக்கும் அழியாத அழகுவேலைப் பாடுகளோடு கூடிய கல்லறைகள் இருப்பதை பார்த்துவந்தேன். அங்கே 600 ஆண்டுகாலப் பழமைவய்ந்த கல்லறைகளும் இருக்கிறது.


போர்த்துக்கீசியரைப் பார்த்து பொறாமைப்பட்டு, அவர்களைப் பின் தொடர்ந்து கள்ளிக்கோட்டை வந்த யூதர்கள் தான் முதன் முதலில் பீரங்கிகலையும் துப்பாக்கிகளையும் வைத்து கள்ளிக்கோட்டையைப் பிடித்தார்கள். அவர்களுக்கும் அப்போதைய திருவிதாங்கூர் மன்னனுக்குமிடையில் ஒரு ஒப்பந்தம் இருந்ததாம். தெருவில் வரும்போது பராக் சொல்லுவது முதல் அந்தப்புறம் வைத்துக்கொள்வது வரை,பதினான்கு விதமான அரச மரியாதையை யூதர்களுக்கும் வழங்கவேண்டும் என்று தாமிரப்பட்டயம் எழுதிக்கொடுத்தானாம். அவர்கள் தான் அங்கிருக்கிற நாடார் மற்றும் தலித்துப் பெண்களை மார்ச்சேலை அணியவிடாமல் ஆதிக்கக் கொடூரம் நிலை நாட்டினர்கள்.


தொண்ணூறுகளில் முதன்முதலாய் மேடையேறிய அன்புத்தம்பி புதுகை பூபாளம் பிரகதீஸ்வரன், தனது நவீன ஜீன்ஸ் கால்சராயிலிருந்து மாறி பிச்சைக் கோலத்தில் மேடையேறுவார். அவர்தான் பிரகதீஸ்வரன் என்று கண்டுபிடிக்க சில நிமிடம் சிரமமாகும். அவரது பூஞ்சை உடலும் இப்போதைய ஃபாசனாக இருக்கும் அவரது ஐந்து நால் சவரம் செய்யாத தாடியும் பொருந்திப் போகிற ஞானக்கிறுக்கன் அரிதாரம். தன்னிடம் இருக்கும் ஒவ்வொரு பொருளாய் காண்பித்து பார்வையாளரிடம் இது என்ன என்று கேட்பார். முதலில் ஒரு ஒடிஞ்ச கம்பு கூட்டம் அதை அப்படித்தான் சொல்லும் அவரோ இந்த தேசத்தில் அஹிம்சையை விதைத்த காந்தியடிகளின் கைத்தடி என்று சொல்லுவார். இதுபோலவே பகத்சிங்கின் தூக்கு கயிறு, பாரதியின் பேனா இப்படியே.. வரும். இறுதியில் தனது தோலில் தொங்கும் மூட்டையிலிருந்து கொஞ்சம் காய்ந்த மணலை அள்ளி இது என்ன என்று கேட்பார், மணல் என்று பதில் வந்ததும் வெடித்துக் கத்துவான் அடப்பாவிகளா இது மண்ணில்லை எனது தேசம். என்று அழுகுரலில் எல்லோரையும் உறைய வைப்பான்.


ஆம் திருச்செந்தூர் தொடங்கி கன்னியாகுமரிவரையிலுள்ள கடல்புரத்தில் இருந்து யுரேனியத் தாதுக்கள் கப்பல் கப்பலாய்உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாகிற சங்கதி நூற்றுப் பத்துக்கோடிப் பேருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அந்தப் பகுதியில் குத்தகை எடுத்தவரைப் பற்றி ' மனுசன் கெட்டிக்காரன் எத்தன லாரி, எத்தன காரு, எவ்வளவு சொத்து இருக்குன்னு கணக்கு இல்ல நல்ல சம்பாத்தியகாரர் ' இப்படிச்சொல்லிக்கொண்டு போகிறார் ஒரு ரயில் பயணி.


அரசாங்கம் இலவசமாகக் கொடுத்த அரைசெண்ட் நிலத்திலிருந்து செம்மண் கேட்டபோது ' அதை வித்த காசில் சோறு திண்ணா பீ வாசம் அடிக்கும் ' என்று என் தாய் சொன்னபோது நாங்கள் இரண்டுவேளை சாப்பிடவில்லை. என் தாயின் ரோசம் தோற்றுப்போய் மூன்றாவது வேளை பசியாறிக்கொண்டிருந்த போது, பழய்ய பானையிலிருந்து புளிச்சாணித் தண்ணிகுடித்துக் கொண்டிருந்தாள் எந்தாய்.

2.10.09

காந்தி புன்னகைக்கிறார்








இந்திய சமூகத்தில் காந்தி என்கிற பெயர் கடவுளர்களின் பெயருக்குச் சற்றும் சளைக்காத எண்ணிக்கையில் மனிதர்கள்மீது எழுதப்பட்டிருக்கிறது. அவர் மதுரையில் தூக்கி எரிந்த நாகரீக ஆடை இன்னும் யாரும் எடுத்து உடுத்த லாயக்கற்றுக் கிடக்கிறது. அமைதியும் சமாதானமும் தேடியலைந்த அந்த மனிதனைப்பற்றி பதிவர் தோழன் மாதவராஜ் எழுதிய 'காந்தி புன்னகைக்கிறார்' எனும் 32 பக்க கையடக்க நூலிலிருந்து கவிதையாய் ஒரு துளி.



இந்தப்பெயர் இந்திய வாழ்க்கையின் ஒரு சாத்வீகம் நிறைந்திருக்கிற உணர்வாகவே இருக்கிறது. படபடக்காமல் நின்றிருக்கும் அகல்விளக்கின் சுடர் அமைதியை ஏற்படுத்துகிறது. ஒரு எளிய மனிதன் எல்லா வீடுகளுக்குள்ளும் இயல்பாகப் பிரவேசித்து விடுவது போல அவரது பயணம் இருந்தது.



தென்னாப்பிரிக்கப்பயணம் முடிந்து இந்திய அரசியலுக்குள் அவரது பிரவேசம் அப்படித்தான் நிகழ்ந்தது. அப்போது திலகர் தலைமையில் ஹோம் ரூல் இயக்கம் நடந்து கொண்டிருந்தது. மகாத்மா இந்தியா முழுவதும் தேடி இந்தியான் ஆன்மாவைத் தேடிக்கொண்டிருந்தார். நீன்ண்ட நெடிய வரலாறு இந்திய மனித சமூகத்தின் துயரங்கள் புகைவண்டியின் ஓசையோடுஅவருள் ஓடிக்கொண்டிருந்தது. மலைகளும், ஆறுகளும் பசும்புல்வெளிகளும்,வயல்வெளிகளும்,காடுகளும், வறண்டநிலங்களும்அங்கு வசித்த மக்களும் அவரது உள்மனத்தோடு பேசிக் கொண்டிருந்தார்கள்.
தோழர்களே மன்னிக்கனும். காந்தியைப்பற்றி முழுசாப்படித்தது மாதவராஜின் காந்தி புன்னகைக்கிறார் புத்தகம் மட்டும் தான்.காந்தியின் (பென்கிங்ஸ்லி) ஆங்கிலப்படம் கூடப் பார்க்கவில்லை. அதனால் தான் இப்படி அந்தரத்தில் நிற்கிறது பதிவு. ஆனாலும் ரெண்டு நாள் இடைவெளியைக் குறைக்க இப்படிப் பதிவிட நேர்ந்தது. பரவாயில்லை நாலு ஓட்டுக்குமேல் வாங்காத எனக்கு பத்து ஓட்டுப்போட்ட தோழர்களின் பாசம் அறிவேன். எங்கள் ஊரில் இருபது பேருக்குமேல் காந்தி பெயர் உண்டு.என் பெயர் காமராஜ் என்பதையும் கருப்புக்காந்தி எனக்கணக்கிட்டால் 21.

அஹிம்சையை ஆயுதமாக்கியது குறித்து நிறய்ய யோசிக்கலாம் எழுதலாம். புரட்சிகரக் கட்சியென்று சொல்லிக் கொண்டிருக்கிற கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் மட்டுமே காந்தி வாழ்கிறார். தர்ணா, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், கோரிக்கை அட்டை அணிதல். வேறு எந்த ஜனநாயகக் கட்சியும் இதை ஏற்றுக் கொள்ளவும் இல்லை, கடைப் பிடிக்கவும் இல்லை. சட்டசபையில் வேட்டி உறுவுவதைச் சொல்லவில்லை.