31.10.09

வலை மீது அலை பாயும் மனசு

வழிதவறிப்போன பசிநாட்களில்கிடைத்த கனிமராமாய்வலைத்தளம் ஏறினேன்.

எழுத்திலைகளுக்குள் மறைந்துகிடக்கும் சிநேகக்கனிகளில் கைபடாது

சுவைக்கநேர்ந்ததென் பசியாற.

பார்த்தமாத்திரத்தில் கிடைக்குமா பாத்திர விரிப்பில் மனசின் செழுமை

எழுத்தில் தெரியுமா கரங்களின் மென்மை.

ஒருவேளை தெரியாமல் போனாலும்.
இடைவெளியில், நிறுத்தக்குறிகளில், இழுத்துச்செல்லும் தொடர்கமாக்களில்தெரிந்துவிடும் அன்பும் சிநேகமும்.

அரண்மனை,அலுவலகம்,ஓலைக்குடிசை,தூக்கணாங்கூடு என்று நிறுவிக்கொள்ள இடம் கிடைத்தாலும் காற்றின் அசைவுகளை எதிர்மடக்கிச் சிறகடிக்கும் பறவையின் நிஜமே அதன் இருப்பிடம்.

தேர்த் திருவிழாவின் சமுத்திர அலைவில் ஒரு துளியாவதும். எண்ணவியலாப் பக்கங்களில் விரியும் ஓரெழுத்தாகவும் இருப்பதென்ன இழுக்கு.

எழுதுகோலின் அசைவில் எந்ததேரையும் திசை திருப்பும் வல்லமை ஒளிந்திருக்கிறதெனும்நெம்புகோல் மனதோடு எழுந்து வரவேண்டுகிறேன்.

9 comments:

ராகவன் said...

அன்பு காமராஜ்,

உங்கள் பதில் கடிதம்/பின்னூட்டத்தை எதிர்பார்த்து ஏமாந்தேன். என்னாயிற்று? வலை மீது அலை பாயும் மனசு, நல்லாயிருக்கிறது பதிவு. எழுத்திலைகளுக்குள் மறைந்து கிடக்கும் சிநேகக்கனிகளில், கைபடாது சுவைக்க நேர்ந்ததென் பசியாற எனக்கு வாய்க்கவே இல்லை. எனக்கு கண்ணில் தெரியும் கனியை பறித்து, விரல் ஒழுக, புறங்கை ஒழுக சாற்றை உறிஞ்சிக் குடிக்கத்தான் முடிகிறது ஒரு வன்புணர்வாய். காற்புள்ளியிலும், அரைப்புள்ளியிலும் அன்பும், சிநேகமும் தெரிந்துவிடுகிறது உங்களுக்கு. சொல்லாமல் விட்ட விஷயங்களிலும், இடைவெளியிலும் பெருகும் அன்பை கிடைக்கப்பெற்றவர்கள் பாக்கியவான்கள் உங்களைப் போல. தேர்த் திருவிழாவின் சமுத்திர அலைவில் ஒரு துளியாவதும். எண்ணவியலாப் பக்கங்களில் விரியும் ஓரெழுத்தாகவும் இருப்பதென்ன இழுக்கு. எனக்குப் புரியவில்லை.

அன்புடன்
ராகவன்

குப்பன்.யாஹூ said...

அருமையான பதிவு.

எனக்கு சில நேரங்களில் வலை மீது மனசு பாய்வதால் , நிஜ வாழ்வில் சில பல வேலைகள் தடை படுவது உண்மைதான்.

க.பாலாசி said...

//வழிதவறிப்போன பசிநாட்களில்கிடைத்த கனிமராமாய்வலைத்தளம் ஏறினேன்.//

அப்படித்தான் எனக்கும் இத்தளம் அமைந்தது, ஆனால் இதுவரை பசியாற பயன்படுத்தவில்லையே என்றே ஆதங்கத்துடன் அதற்காக முயன்றுகொண்டிருக்கிறேன்.

//தேர்த் திருவிழாவின் சமுத்திர அலைவில் ஒரு துளியாவதும். எண்ணவியலாப் பக்கங்களில் விரியும் ஓரெழுத்தாகவும் இருப்பதென்ன இழுக்கு.//

இழுக்கேதும் இல்லையென்றே இதுவரை எண்ணுகிறேன்.

நல்ல இடுகை....

தியாவின் பேனா said...

நல்ல பதிவு நண்பா

பா.ராஜாராம் said...

//அரண்மனை,அலுவலகம்,ஓலைக்குடிசை,தூக்கணாங்கூடு என்று நிறுவிக்கொள்ள இடம் கிடைத்தாலும் காற்றின் அசைவுகளை எதிர்மடக்கிச் சிறகடிக்கும் பறவையின் நிஜமே அதன் இருப்பிடம்.//

உங்கள் குரலில் கேட்க்க நல்லா இருக்கு காமராஜ்!மொத்தமும் அருமையே...இந்த இடத்தில் கைமணம்!

ஆ.ஞானசேகரன் said...

அருமை நண்பா

உயிரோடை said...

//காற்றின் அசைவுகளை எதிர்மடக்கிச் சிறகடிக்கும் பறவையின் நிஜமே அதன் இருப்பிடம்//

சோக‌மாக‌ ஒலிக்கிற‌து

லெமூரியன் said...

நல்ல இருக்கு தோழர் காமராஜ் ..!

பா.ராஜாராம் said...

மக்கா,ஒரு தொடருக்கு அழைப்பு இருக்கு,உங்கள் கருவேலநிழலில்.வந்து கை நனைங்க.