29.4.09

இரு சக்கர வாகனத்தோடு இரண்டு சாகசப்படங்கள்








ஒரு திரைப்படம் உருவாக எத்தனை மனிதகள் காரணமாக இருக்கிறார்கள். கதை, திரைக்கதை, கதைவசனம், இப்படி நீண்டுகொண்டு போகிற உட்பிரிவுகள். இதை உருவாக்க அல்லது திரைப்படத்துக்கு ஏற்ப வடிவமைக்க கதைக் கலந்தாய்வு.தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர்,கலை, சண்டை, நடனம், யப்பா இளைப்பு வருகிறது. இன்னும் நூற்றுக்கணக்கான தலைப்புகள் இருக்கிறது. அப்புறம் நடிகர், நடிகை இவற்றோடு உடல் உழைப்பாளர்களான உதவியாளர்கள். இப்படி ஆயிரக்கணக்கான மனிதர்களின் கூட்டு உழைப்பில் உருவாகிறது. ஆனால் அந்தப் படம் யாராவது ஒரு நடிகரின் கணக்கில் காசாகவும், கணக்கில் வராத கள்ளப் பணமாகவும் மாறிப்போவது மட்டுமல்லாமல், அதையே சாக்காக வைத்து அரசியலில் குதித்து நாறிப்போகவும் காரணமாகிறது. ஒரு வருடத்திற்கு நூறுபடங்கள் வந்து மனதிலும் திரை அரங்குகளிலும் நில்லாமல் ஓடிவிடுகிறது. தப்பித்தவறி ஒன்றிரண்டு நல்ல படங்கள் வந்து விட்டாலும் ஆடலும் பாடலும் இல்லாத இந்தியச்சினிமா பாவம் பண்னிய சினிமாவாகிவிடும்.
இந்த வியக்கியானங்களை எல்லாம் ஒரு வரியில் தூக்கி எறியும் வல்லமை கொண்ட காட்சி ஊடகமாக சில படங்கள் இருக்கின்றன. அவற்றில் இருசக்கர வாகனத்தை பின்புலமாகக் கொண்ட இரண்டு படங்கள்.



ஒன்று ' ரைடிங் சோலோ டு தெ டாப் ஆப் தெ வேர்ல்ட்' ஆவணப்படம்.


இரண்டு ' மோட்டர் சைக்கிள் டைரீஸ் ' எனும் ஸ்பானியத் திரைப்படம்.



மும்பையைச் சேர்ந்த முப்பத்திரண்டு வயதுக்கார கவுரவ் ஜெனி. தனது ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிளில் மினிடோர் வண்டியில் ஏற்றக்கூடிய அளவுக்கான பொருட்களோடு ( உணவு, உடை, கொட்டகை, பெட்ரோல், மற்றும்,வாகனப்பராமரிப்பு உபகரனங்களோடு, மருந்துகளும்) இமயமலையின் உச்சிக்கு தன்னந் தனியாகப் பயணமாகிறார். இது தான் ஆவணப்படத்தின் ஒரு வரிக்கதை. சுவாரஸ்யமில்லாமல் முன் நகரும் தார்ச் சாலையையும், நாற்கர சாலைத்திட்டத்தால் விறகாகிப்போன பழைய மரங்களையும் காட்சிப் படுத்திக்கொண்டு துவங்குகிறது பயணம். கொஞ்சம் கொஞ்சமாக உயரம் அதிகரிக்கும்போது சுவாரஸ்யமும் அதிகரிக்கிறது. நமக்கு இதுவரை காட்டப்படாத இமயமலையின் பகுதிகளை ஊடுறுவிக் கொண்டு காமிரா தொடர்கிறது. மனிதர் புழங்காத - கடவுளும் புழங்காத, சாதாரணப் பகுதிகள் வழியே வாகனம் முன்னேறுகிறது.


வழிநெடுகரோமங்களடர்ந்த ஆடுகள், வரிகளடர்ந்த முகங்களோடு அவற்றின் மேய்ப்பர்கள். பனிமலை, புல்வெளி, அரிய தாவரங்கள், அக்வாகார்ட் இல்லாமலே சுத்தப் படுத்தப்பட்ட தெளிந்த நீர். மலை மனிதர்கள் அவர்களின் ஊரும் வீடும், மலைக்கடவுள்கள் அவர்களுக்கு மனிதர்கள் கட்டித்தந்த வீடுகளும். இப்படி உல்லாசமாக நீடிக்கிற பயணம் ஆயிரம் அடி உயரத்துக்கு மேலே போகும்போது பதைபதைப்பை உண்டாக்கும் சாகசமாக மாறுகிறது. கையிருப்பு பெட்ரோல் குறைவாக இருக்கும் போது, அடுத்த பெட்ரோல் பங்க் 350 கிலோ மீட்டர் எனும் தகவல் பலகை நமக்குள் நடுக்கத்தை உண்டு பண்ணுகிறது. பனிப்புயல், வரும்போது ஒரு கிராமத்து வீட்டில் தஞ்சம் புகுந்து. ஆம் ஒரு பெரிய பொந்து போலிருக்கும் வீட்டில் அவர்களோடு ரொட்டி சுட்டுத்தின்பது, அவர்களோடு திருவிழாக் கொண்டாடுவது என இன்னொரு கலாச்சாரமும் மக்களும் நம்முன்னால் வியப்பாக வந்து போகிறார்கள். 16000 அடியில் 80 சதவீத பிராண வாய்வு குறைவான பிரதேசத்தில், பூஜ்ஜியத்தை நெருங்க்குகிற வெப்பநிலையில் மூச்சு விடுவது சிரமமான கணங்களோடு பெட்ரோல் பற்றி எரியும் ஆற்றல் இழக்கிறது. முகமும் உடலும் கருத்துப்போக மௌண்டன் சிக் எனப்படுகிற நோய்க்கு ஆளகிறார் கௌரவ். அதோடு 305 கிலோ எடையுள்ள வாகனத்தைத் தள்ளிக்கொண்டு போகிற காட்சிகளுமாக தொடர்கிறது ஆவணப்படம்.சித்தரிக்கப்பட்ட மயிர்க்கூச்செரியும் திரைப்படங்களை தனது நிஜப்பதிவுகளால் புறங்கால் கொண்டு தள்ளிவிடுகிறது இந்தப்படம். மனித வாழ்வின் இயல்புகளான வீடு மனைவிமக்கள் அலுவலகம் கடிகாரம் நாட்காட்டி உயரதிகாரி அல்லது முதலாளி இப்படியான வளமைகளை உதறித்தள்ளிய சிட்டுக்குருவி நாட்களை இழந்து மீண்டும் மும்பைக்குப் போகிறேன். இனி வார நாட்கள், சனி ஞாயிறு எனும் சிறைக்குத்,திரும்புகிறேன் என்று சொல்லி முடிப்பார் கௌரவ் ஜெனி.



இதில் சொல்ல மறந்த ஒரு தகவல். தன்னந்தனியே பயணம் மட்டுமில்லை அந்தப்பயணத்தைத் தானே காட்சிப்படுத்திக் கொண்டதுதான் மிகப்பெரிய சாகசம். எதாவது ஒரு உயரமான திருப்பத்தில் அந்தத்,தானியங்கி காமிராவை இயக்கிவைத்து விட்டு அதன் பார்வை படுகிறவரை பயணமாகி நின்று மறுபடியும் அதே தொலைவு திரும்பவந்து காமிராவை எடுத்துப் போகவேண்டும். அதனால் அவரது பயண தூரம் இரண்டு மடங்காகிறது. ஒரு இடத்தில் குரங்கு காமிராவை கையிலலெடுத்து விடும் அந்தப்பதிவு காணாமல்போகும் இப்படி பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கிய தனிமனித சாகசம் ரைடிங் சோலோ டு தெ டாப் ஆப் தெ வெர்ல்ட். இயக்கம், பின்னனிக்குரல், எடிட்டிங் என எல்லாவற்றையும் தன் தலையில் போட்டுக்கொண்ட அவருக்கு இதுவரை ஒரு தேசிய விருது உட்பட 11 விருதுகள் மகுடமாகியிருக்கிறது.

26.4.09

குறிசொற்கள் கிராமத்திலும், வலைப்பக்கத்திலும்








அந்த வயதில் விளையாட ஆளில்லாத நேரத்தில் வீட்டுத்திண்ணையில் பெண்கள் அரட்டை அரங்கத்தில் ஆட்மென் ஔட்டாக உட்கார்ந்திருப்பேன். ஊரின் உள் விவகாரங்கள் எல்லாமே அன்றைய பேசுபொருளாக இருக்கும். சாரதா டீச்சர், அம்மினி அக்கா பெயர்களோடு சில ஆண்கள் பெயரும் உச்சரிக்கப்படும். அப்போது " அந்தக்காவுக்கு என்னம்மா " என்கேட்பேன். உடனே என்னைத் தவிர்ப்பதற்கான எல்லா உபாயங்களையும் மேற்கொள்வார்கள். " விளாடப்போவானா பொட்டச்சிக சேலய மோப்பம் பிடிச்சிக்கிட்டு, எக்கா ஒம்மகெ எளவட்டமான எட்டுப்பொண்டாட்டி கட்டுவான் ": இப்படிச்சொல்லும் குருவுத்தாய் குலுக்கைக்கு பக்கத்தில் ஒரு ஆடவனோடு இருந்ததை பார்த்த என்னை நெடுநாள் எதிரியாகப் பாவித்தார்கள். குருவுத்தாயின் குருக்கீடு இன்னும் கூடுதல்சுவாரஸ்யத்தை உண்டுபண்ணும். நகராமல் அங்கேயே நங்கூரம் போட்டுவிடுவேன். அதன் பிறகான சம்பாஷனைகள் எளிய வார்த்தைகள் தான் என்றாலும் கண்டுபிடிக்கமுடியாத புதிர்களை அந்த இளவயதில் விட்டுச்சென்றது.



மாரியம்மாளின் கம்மலை வல்லவன் கழத்திட்டான்.

-----------------------------------------------------------------



அந்த மாரியம்மாளுக்கு சின்னக்காதுகள். அந்த முரட்டுக் காதுகளில் ஏழுதரம் துவாரம் போட்டும் தூர்ந்து போனது. காதில் துவாரம் இல்லை அந்த மாரியம்மாளுக்கு. பிறந்ததிலிருந்து தங்கத்தை உபயோகப்படுத்தாத அந்த மாரியம்மாளை கம்மலோடு ஒருநாளும் நான் பார்த்ததில்லை. வல்லவன் களவானி தான். அவனது பட்டப்பெயர் பாவாடை களவானி வல்லவன். ஈயச்செம்புகள், தவளைப்பானைகள் அவன் கடந்து போகும்போதே காணாமல்போகும். அவனது தேவையெல்லாம் ஒரு தரம் சாத்தூர் களப்புக்கடைச்சாப்பாடு, ரெண்டு பொட்டணம் கஞ்சா, எம்ஜீஆர் படத்துக்கு ஒரு டிக்கட் மட்டும் தான். அதற்குள் அடங்குகிற பொருளைத்தான் திருடுவான். தங்கத்தைத் திருடுகிற அளவுக்கு அவன் கெட்டவன் இல்லை. இரண்டு விஷயங்கள் புரியாமல் நெடுநாள் உறுத்தியது. அவனுக்கு பாவாடை களவானி என்கிற பட்டப்பெயர் ஏன் வந்தது ரெண்டு கம்மலைகழட்டினான் என்று பொய்ப்புகார் ஏன் அவன் பெயரில் வந்தது. கல்யாணம் ஆகாத அவனுக்கு கண்ணுதெரியாத கிழவியும், ஒரு குடிசையும் சொந்தமாக வைத்திருக்கும் மாரியம்மா மேல் ஒரு கண்.



கருப்பசாமி கடவிலிருந்து அந்தோணியம்மா வீட்டுக்கு முனிப்பாய்சல்.

-----------------------------------------------------------------------------------------



கிராமத்துக் கடவுகள் பகலிலே இருட்டாக இருக்கும் அமானுஷ்ய இடங்கள். அந்த வயதில் கள்ளம் போலீஸ் விளையாடத் தோதான படப்பு, கோழிக்கூடு, குலுக்கை மறைசல், போன்ற இடங்களின் வரிசையில் அதுவும் ஒன்று.அந்த செய்தி கேட்ட பிறகு எனது வலிபக் காலம் வரை. இரவில் தெருவைக் கடக்கும்போது எந்தக்கடவையும் திரும்பிப் பார்ப்பதில்லை. முனி என்னைப் பிடித்துக் கொள்ளும் என்கிற பயத்தில். அந்த அந்தோணியம்மா கருப்பாசமி வீடுகளுக்கு இடையில் புயல் கடப்பதைப்போல முனி கடக்கிற செய்தியை எங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் ஒரு நாள் சொன்னேன்.பத்து நிமிசம் இடைவிடாமல் சிரித்த வள்ளிமுத்து அந்த புதிரை உடைத்தான். அந்தோணியம்மா கைம்பென், கருப்பசமி கோடி வாலிபன் அவர்கள் இருவருக்கு மிடையில் கடந்து போகும் சாமக்களவும், காமக்கடத்தலும் அதுவென்று. அறைகுறையாகப்புரிந்த அந்த புதிர் முழுவதுமாகப்புரிந்தது ஒரு வாலிபச் சாமத்தில்.



இவையெல்லாம் ஒரு பத்தாண்டுகளுக்குப்பின் புரிந்தது போல இந்த வலைப் பக்கங்களில் புழங்கும் குறிசொற்களும், தலைப்புகளும், பேசு பொருளும் புரிய இன்னும் வெகுகாலம் ஆகலாம் .

25.4.09

திரும்பவும் தோற்கப்போவது உறுதி








நாழிதழ்கள் முழுக்க தொகுதி, வேட்பாளர்கள், ஆருடம்.

கூகுள் செய்திகள் யாவும் தேசிய சின்னங்கள்.

கிராமச்சுவர்களுக்கு இடைக்காலப் பொங்கல், வெள்ளையடிக்கப்படுகிறது.

பேருந்து வராத ஊர்களுக்குக்கூட கார்கள் வரும் அதிசயம்.

தேர்தல் வாக்குறுதிகளை உட்கார்ந்து கேட்க தலைக்கு நூறு ரூபாய் ஸ்டைபண்ட்.

இந்த தேர்தலில் ஒரு வாக்கின் விலை நிலவரம் அறிய வாக்காளர்கள் ஆர்வம்.

மதுரையில் பிறக்கவில்லையே என்று அடுத்ததொகுதி மக்கள் ஆதங்கம்.

இந்தியாவில் இருக்கும் பன்னாட்டுக் கம்பெனிகள் கணக்கில் கோடிக்கணக்கில் தர்மச் செலவு.

வருமான வரிக்குப் பக்கத்தில் படுத்துக்கிடந்த பணங்கள் எழுந்து நடமாட்டம்.

ஓட்டை ஒடைசல் நடிகர்கள் பழைய அரிதாரம் பூசிக்கொண்டு

புதிய அவதாரம்.

நடக்கப் போவது உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் ரெனீவல்.

ஜெயிக்கப்போவது அவரா இவரா அல்லது பணமா தெரியாது.

தோற்கப்போவது யார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

24.4.09

மௌனத்தின் பின்னணியில் ஒரு பாடல்








ஆளரவமற்ற
சதுப்புவெளியில்
தொடர்கிறதென் பயணம்.

புல்லாங்குழலிசையை
மறைத்திருக்கும் சட்டைப்பைகளில்
பணமிருந்ததற்கான தடயமில்லை.


குமுகுமுக்கும்

இசையோடுமருண்டோடும்

ஊதாப்பறவையின்சிறகடிக்கிற

தாளம்எனது தனிமையின்

பாடலுக்கும் இசைகிறது.


ஆளரவமற்ற சதுப்புவெளியில்

காற்றோடும், கனவோடும்,

பறவைகளோடும்தொடர்கிறதென் பயணம்.


23.4.09

செரிக்காத நினைவுகள்








அய்யக்காளின் கண்கள் வெகுவாக மங்கிப்போனது. அவள் கண்ணை இடுக்கிக்கொண்டு புருவங்களின் மேல் கைவைத்து சாடைகாட்டுவதெல்லாம் சும்மா ஒரு போக்குக் காட்டத்தான். முழுசாகப் பார்வை மங்கிபோய்கிட்டத்தட்ட ஒரு வருசமிருக்கும். மாசிப் பொங்கலுக்கு மறுநாள் எல்லோரும் நரிக்குறத்தியாட்டம் பார்த்துக்கொண்டிருக்க மொதலாளி வாங்கிக்கொடுத்த சீமைச் சாராயம் குடித்துவிட்டு ராவெல்லாம் கதைபேசிக் கிடந்தாள். மொதலாளியின் சவரம் பண்ணிய முகமும், அவர் சிரிக்கும் போது தெரியும் முன்னத்திப் பல்லிலொரு பல் கொருவாப் பல்லும்தான் கடைசியாகப் பார்த்த காட்சிகள்.



இப்போதெல்லாம் அவள் ஒலியைக் கோண்டுதான் எல்லாவற்றையும் பார்க்கிறாள். ஒருகாலடி ஓசைக்கும் இன்னொரு காலடி ஓசைக்கும் அதிக இடைவெளி இருந்தால் அது மாரப்பன் தான். அவனுக்கு ஒரு கால் ஒச்சம் அதனால் நொண்டி நொண்டித்தான் நடப்பான். அவன் வரும்போதே சாராய வாடை வரும் எனவே அவள் அவனை சுளுவாகக் கண்டுபிடித்துவிடுவாள். காலைத்தரையை விட்டு மேலெடுக்காமல் சரக் சரக்கென்று உரசிக்கொண்டு வருவது வீமன் தான். அவனிடம்மிருந்து அந்த அங்குவிலாஸ் போயிலை வாசம் வரும். போயிலை தீர்ந்து போனால் அவனுக்கு ஒரே புகழிடம் அய்யக்காள் தான். லங்கோட்டுப் பையில் கிடக்கும் சில்லறைகளை ஒரு போதும் அவன் தொடுவதில்லை. அதெல்லாம் விறகு விற்ற காசில் கிடைத்து துட்டு. இது போக மாசமாசம் கறிப் போடும் போது எப்படியும் அம்பது நூறு மிச்சமாகும் அந்தக் காசையெல்லாம் என்ன செய்கிறான் என்பது யாருக்கும் தெரியாது. அப்புறம் கம்பைத்தரையில் தட்டிக்கொண்டு வெத்திலை வாங்க வரும் நல்லம்மை, தெருவுக்குள் நுழையும் போதே பப்பாய்ங் அமுக்கிக்கொண்டு வரும் ஐஸ்க்கார கனிராசா, இட்லிக்காரப் பொன்னம்மாள் எல்லோரும் அய்யக்காளின் ஒரு நாளின் வாடிக்கைக்கரார்கள்.



ஆனால் சீதைக்குட்டி வருவதைமட்டும் அவளால் கண்டுபிடிக்கவே முடியாது. அவதானிக்கும் முன்னரே பசக்கென்று மடியில் உட்கார்ந்து விடுகிற பூங்கொத்து அவள். ஒரு போதும் அவள் நடந்து வருவதில்லை. தேவதை வந்ததுபோல நினைக்காத நேரத்தில் எதிர் பாராத திசையிலிருந்து வருவாள். அய்யக்காள் காதைத் தீட்டும் முன்னதாக ஓடிவந்து விடுவாள். அவளிடம் இருந்து மணக்கிற அந்த பாண்ட்ஸ் பவுடர் வாசம் அந்தத்தெரு முழுக்க சுகந்தத்தை உண்டு பண்ணும். அவள் வந்தவுடன் அய்யக்காளின் மடியில் உட்கார்ந்து கொண்டு இடுப்பில் இருக்கும் சுருக்குப்பையைத் தடவுவாள். அப்போது அவளை இழுத்து கண்ணத்தில் ஒரு முத்துக்கொடுக்கும் அய்யக்காளுக்கு பத்துப்பைசா மட்டும் தான் செலவாகும்.

22.4.09

நெடுநாள் நீங்காத அதிர்வை விட்டுச்சென்ற ஆவணப்படம்








இந்தியாவின் கோடை வாசஸ்தலங்களில் எல்லம் கூட்டம் கூட்டமாக ஸ்வெட்டர் விற்கிறவர்களை நீங்கள் பார்த்திருக்கலாம் அவர்களுக்குள் அடர்த்தியான ஒரு சோகம் கவிழ்ந்திருக்கிறது. 1958 ஆம் வருடம் இந்திய அரசு armed force special power act என்கிற சிறப்பு சட்டத்தைக்கொண்டு வந்தது. அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் செல்லுபடியாகிற இந்தச் சட்டம் கிட்டத் தட்ட பொடா, தடா சட்டங்களை விட இறுக்கமானது. ஒரு முக்கால் ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கிற இந்தச்சட்டம் தேசப் பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதன் அதிகார எல்லை கேள்விகளற்றது. சந்தேகத்தின் பேரில் பிடித்துக்கொண்டு போகிறவர்கள் ஒருபோதும் உருப்படியாக வீடு திரும்புவதில்லை. அதன் கோரப்பல்லில் சிக்கிய மணிப்பூர் அப்பாவி மக்கள் குறிப்பாகப்பெண்கள், அதுவும் இளம்பெண்கள் சந்தித்த இழிவுகளும் சொல்லமுடியதவை. அதை எதிர்த்த ஜனநாயக இயக்கங்கள் நசுக்கப்பட்டன. துடிப்பான இளைஞர்கள் வழக்கம் போல நக்சலைட் முத்திரை குத்தப்பட்டு வதைக்கப்பட்டார்கள். இதற்கெதிரான போராட்டங்கள் சங்கிலித்தொடராக ஒரு பத்தாண்டுகளுக்கு மேல் நடந்து வந்த போதிலும். ஒரே ஒரு பாரளுமன்றத்தொகுதியைக்கொண்ட அந்த மக்களின் கோரிக்கை சிறப்புக்கவனம் பெறத் தகுதியற்றதாகிவிட்டது. தர்ணாக்கள், ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள் என சூடு பிடிக்க ஆரம்பித்தது சமூக ஆர்வலரும் மணிப்பூர் போராட்டக் குழுவின் தலைவர்களில் ஒருவருமான மனோரமா தேவி கற்பழித்துக் கொல்லப்பட்ட பின்னர்தான். சட்டைப் பட்டனைத்த் திறந்து கொண்டு எந்திரத்துப்பாகிக்கு நெஞ்சைக்கட்டுகிற இளைஞர்கள், சாலை மறியல் நடக்கும்போது படுத்துக்கிடக்கிற இளைஞனின் தலைக்குப்பக்கத்தில் பாய்கிற துப்பாக்கி ரவைகள் என போராட்டத்தின் துணிச்சலைச் சொல்லுகிற ஆவணப்படம் afspa 1958.



பல விருதுகளைவாங்கிய இந்தப்படத்தில் போராட்டம் ஆரம்பித்ததிலிருந்து 2004 ஜுலை 14 வரை தேதி வாரியாகத் தொக்குக்கப் பட்டிருக்கிறது அதிர வைக்கும் ஆவணம். ஒரு நூறு மாணவர்கள் தங்கள் காலகளில் தீவைத்துக்கொண்டுதெருக்களில் ஓடுகிற தீக்குளிப்பு நெடுங்காலம் திகிலைத்தக்கவைக்கிற நிஜம். பிடிவதமாக இறந்து போகும் மாற்ற் தலைவனின் மரணவாக்கு மூலம் காணச்சகிக்கமுடியாத இறுதிச்சோகம். இன்றுவரை தனது பட்டினிப்போராட்டத்தைத் தொடரும் மாணவி சர்மிளாதேவி உலக இரும்புப் பெண்களின் முன்னணியில் நிற்கிறார். படத்தின் இறுதிப்பதிவு 2004 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 14 ஆம் தேதி உலகை உலுக்கிய ஒரு சம்பவத்தோடு உறையும்.



காங்லா மணிப்பூரின் புனிதத்தலங்களில் மிக முக்கியமானது. அஸ்ஸாம் ரைபிலின் 17 வது படையின் தலைமையிடம் அங்குதான் அமைந்திருக்கிறது. அந்த தலைமயகத்தின் மிக நெடிய இருப்புக்கதவுக்கு முன்னாள் இருபது தாய்மர்கள் நடத்தியபோராட்டம் இந்திய வரலாறு சந்திக்காத ஒன்று.
தங்களை நிர்வாணப் படுத்திக்கொண்டு " எங்களை வாழவிடு அல்லது எங்களையும் கற்பழித்துக்கொன்று போடு " என்று கீச்சுக்குரலில் ஒலிக்கிறது தாய்மர்களின் குரல். மணிப்பூரி பாஷை புரியாவிட்டாலும் அதன் கோபம் எல்லோரிலும் அதிர்வை உண்டாக்கும். ' எனது நிறமே எனது கொடியாகும் ' என்கிறது ஒரு கறுப்புக்கவிதை. ' எனது இழிவே எனது ஆயுதமகும் ' என்கிறது இன்னொரு கவிதை. ஓரக்கண்ணால் பார்க்கிற, காலம் காலமாக போகப்பொருளாக கற்பிதப்படுத்தப்பட்ட நிர்வாணத்கைக் கூட ஒரு ஆயுதமாக்குகிற வல்லமை பெண்களால் மட்டுமே சாத்தியாமானது.



அரங்கில் இருந்த ஐநூறு பேர்களில் சலனத்தை தடுத்து நிறுத்திய அதிர்வு ஒரு நீண்ட மௌனத்தை மட்டும் விட்டுச்சென்றது. afspa 1958 ஆவணப்படம். அதன் இயக்குனரும் தயாரிப்பாளருமான ஹவோம் பபன்குமார் இன்னும் நிலைமை அப்படியே தான் தொடருகிறது எனச்சொன்னார்.

21.4.09

ஒழுங்குபடுத்தப்படாத சென்னைப் பதிவு








ஒவ்வொரு முறை சென்னை செல்லும் போதும் முதல் முதலாய் நுழைகிற சங்கோஜத்தோடே சென்னை எனக்கு அறிமுகம் ஆகும். கண்ணை மிரட்டுகிற அளவில் பிரதான சாலைகளெங்கும் உயர்ந்து நிற்கிற விளம்பரப்படுதாக்கள். அப்புறம் நியான் விளக்குகளில் விளம்பரம், இப்போது டிஜிட்டல் பேனர்கள். முதன் முதலாய் சென்னை போகும்போது கத்திப்பாராவில் இருந்து சென்னை ஆரம்பித்தது, பிறகு மீனம்பாக்கம், அப்புறம், பல்லாவரம், தாம்பரம், கூடுவஞ்ச்சேரி, ... இப்போது செங்கல்பட்டிலிருந்தே சென்னை ஆரம்பமாகிவிடுகிறது. இந்த முறை சென்னை செல்லும் போது பார்க்கிற இளைஞர்கள் எல்லோருக்கும் மீசையில்லாமல் இருந்தது.மீசை வீரத்தின் அடையாளம் என்றும் அது ஒரு கலாச்சார அடையாளம் என்றும் வாதிடுகிற மூட நம்பிக்கை எனக்கில்லை. விதம் விதமா மீச வச்சோம் வீரத்தை எங்கோ தொலைத்துவிட்டோம் என்கிற கந்தர்வனோடு கைகோர்க்கிற ஆள். ஐந்து நாள் தாடி மொட்டை போட்டதா, முடிவெட்டியதா என்று தெரியாத தலைமுடி. இறுக்கமான மேல்சட்டை, கலர் கண்டுபிடிக்கமுடியாத கால்சராய். இப்படித்தான் பார்க்கிற ஒவ்வொரு இளைய இந்தியாவும் இருந்தது. ஆடை அலங்காரங்கள் மேலோட்ட்மாக காலத்தை உணர்த்துகிற குறியீடுகள். அது இப்போது திரைப்படங்கள் மூலமாகவே கண்டுபிடிக்கப்படுகிறது விஸ்தரிக்கப்படுகிறது.
மாம்பழம் ரயில் நிலையத்திலிருந்து நுங்கம்பாக்கம் செல்லுகிற மின்சார வண்டியில் பயணம் செய்தோம். அதுவரை வடிவேல் மாதிரி அவ்வ்வ்வ்வ்வ் என்கிற குரலெடுத்து கத்திக்கொண்டும், மதுரை வட்டார மொழியால் உரையாடிக்கொண்டும் வந்தாகள். எனது கையில் வைத்திருந்த சே குவாரா புத்தகத்தின் அட்டையப் பார்த்துவிட்டு சில இளைஞர்கள் மூளை கசக்கினார்கள், சில இளைஞர்கள், நமக்கெதுக்கு வம்பென்று முகம் திருப்பினார்கள். சிலர் தலைவர் சிகரெட் குடிக்கிற ஸ்டைலே தனியென்று கிண்டலடித்தார்கள். ஒரு பத்து இளைஞர்களிடம் இவர் யார் என்று கேட்டேன். பெரும்பாலான பேருக்குத் தெரியவில்லை. தெரியாதது ஒன்றும் தேசத்துரோகக் குற்றம் இல்லை.
இந்தியாவின் மொத்த தொழில் நுட்பக்கல்லூரிகளில் கிட்டத்தட்ட எழுபது சதவீதம் தமிழகத்தில் இருப்பது ஏன். கல்வி கற்க ஐந்து லட்சம் பத்து லட்சம் தெண்டம் கட்ட வேண்டிய அவசியம் என்ன. என்கிற கேள்விகள் இல்லை. இந்த தேசதத்தில் கல்வியறிவு இல்லாதவர்கள் எத்தனை கோடி, வேலையில்லாத இளைஞர்கள் எத்தனை கோடி. இந்திய இளைஞர்களின் ஐகான் லட்சுமி மிட்டலின் தனிநபர் வருமானம் எவ்வளவு. ஒவ்வொரு இந்தியனின் சராசரி வருமானம் எவ்வளவு என்கிற புள்ளி விபரம் தெரிய வேண்டாம். இவற்றின் சூட்சுமக்கயிறு என்னவெனத் தெரியவேண்டாமா ?.
ஆனால் வரலாறு, அரசியல், நாட்டு நடப்பு எதுவும் தெரிந்துகொள்ள அணுமதிக்கப்படாத அந்தச்சமூகத்துக்கு அமெரிக்க சுதந்திரதேவி சிலைக்கு அருகில் அமர்ந்து பியர் குடிக்கிற கனவு சர்வநிச்சயமாக குடியிருக்கிறது. கோடம்பாக்கம் நிறுத்தம் வந்தது. 75 ஆண்டுகளூக்கு மேலாக தமிழகத்து இளைஞர்ளைக் காயடிக்கிற தொழிற்சாலை இங்குதான் இருக்கிறது. யாரோ பின்னாலிருந்து கத்தினார்கள்.

20.4.09

ஊர் கடத்தல், அல்லது உள்நாட்டில் புலம் பெயர்தல்








மூன்று முறை அந்தக் கிராமத்துக்குப் போயிருக்கிறோம். மூன்றுமாத இடைவெளியில் வெவ்வேறு நேரத்தில் போயிருக்கிறோம். போன காரியம் பேட்டி எடுக்க என்பதால் அந்த ஊரின் மூலை முடுக்கெல்லாம் அலைந்திருக்கிறோம். இந்தியா முழுவதும் மொழி இன மதம் கலாச்சாரம் தாண்டி ஏழைகளின் வசிப்பிடம் ஒரே மாதிரியே இருக்கிறது.


இதை ஸ்டாலின் கே.விஜயன் இயக்கிய INDIA UNTOUCHED என்கிற ஆவணப்படமும், அகில உலக பத்திரிகையாளர் மகசசே விருதுபெற்ற சாய்நாத் தின் இழந்த ஜனநாயகம் என்கிற பிரசுரமும் அழுத்தமாகச் சொல்லுகிறது. சாய்நாத்தின் ஆய்விலும், விஜயனின் ஆவணப்படத்திலும் மதுரை மாவட்ட தீண்டாமையும் வறுமையும் இரண்டறக் கலக்கிறது.
பலதரப்பட்ட மக்களைச் சந்தித்தோம். ஆச்சரியமான ஒரு விஷயம் கண்ணில் பட்டது. எங்களின் ஆவணப்படத்தின் கரு பத்தாண்டுகளாக நடத்தமுடியாமல் போன பாப்பாப்பட்டி-கீரிப்பட்டி உள்ளாட்சித் தேர்தல் குறித்து மட்டும். ஆகவே எங்கள் பயணத்தில் கிடைத்த அதிர்ச்சியான பல விஷயங்கள், பதிவு செய்யப்பட்ட அதிர்வுகள் கூட நேரம் கருதி கத்தரிக்கப்பட்டு விட்டது. ஆவணப்படம் வெளியான பின்னால் நான் மாது, கார்த்தி, மூன்று பேரும் இது குறித்துப் பேசினோம்.



அந்தத் தெருவில் இருக்கும் அணைத்து வீடுகளிலும் அடுப்பு வாசலுக்கு வெளியேதான் இருக்கிறது. வீடென்று எதைச்சொல்ல,பத்துக்குப் பத்து சதுர அடிக்குள்ளே தான் வாழ்வின் எல்லாத் தருணங்களும் நடந்து கழிகிறது. தலைமுறை தலைமுறையாக அவர்களுக்குக் காணிநிலக் கனவுக்கூட வந்துபோனதில்லை. அரிசிச்சோறும் தொட்டுக்கக் கொஞ்சம் வெஞ்சனமும் தான். எல்லா வீடுகளிலும் மிகச்சரியாக மாலை மூன்று முதல் நான்கு மணிக்குள் சமையலை முடித்துவிடுகிறார்கள். அங்கிருக்கிற யாருக்கும் மருந்துக்குக் கூட சொந்த விளைநிலம் கிடையாது. அடுத்த தெருக்காரர்களின் நிலங்களில் பண்ணை ஆளாகவோ ( கொத்தடிமைகளுக்கு மறுபெயர் ) இல்லை, கூலிக் காரர் களாகவோ இருப்பதால் அன்றைக்கான கூலியை வாங்கித்தான் அடுப்பில் உலை எற்றுகிறார்கள்.



இரண்டு அங்கே பதிமூன்று வயதுக்கு மேற்பட்ட முப்பது வயதுக்கு உட்பட்ட ஒரு இளைஞனையும் பார்க்க முடியவில்லை உள்ளூரில் இருக்கிற நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த முடித்த கையோடு திருப்பூருக்கு அனுப்பப்படுகிறார்கள். அதாவது உள்நாட்டுக்குள் நாடு கடத்தப்படுகிறார்கள். ஓடுகிற பாம்பை மிதிக்கிற, இளங்கன்று பயமறியாத, பதின் வயதின் கணவுகள், கொந்தளிப்பு, எல்லாவற்றையும் திருப்பூர் பின்னலாடை பஞ்சுத்தூசிக்குள் தொலைக்கக் கொடுத்துவிடுகிறார்கள்.மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பக்கத்து ஊரில் உயர்நிலைப் பள்ளி இருக்கிறது பத்துகிலோ மீட்டர் தொலைவிலேயே ஒரு கல்லூரி இருக்கிறது. இலவச பஸ் பாஸ், கல்வி ஊக்கத்தொகை, விடுதிக்கட்டணம் எல்லாம் தரத் தயாராக இருக்கிறது அரசு. ஆனாலும் பள்ளிக்கூடம் அனுப்புவதில்லை. ஒரே காரணம் பயமறியாத அந்த இளம்வயதில் துளிர்விடுகிற காதல், கொப்பளிக்கிற கோபம், விளையாட்டு இவற்றோடு உயர்ஜாதிக்காரகளோடு உரசிக்கொள்ளும் சந்தர்ப்பம் நிகழ்ந்துவிடும். அதானால் ஏற்படும் இழப்புகளில் இருந்து தப்பித்துக்கொள்ள அவர்கள் சொந்தக் குடும்பத் தாலேயே வெளியேற்றப் படுகிறார்கள். அவர்கள ஊர் திரும்பும் போது '' வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே '' என்று பாட்டுப்பாட அங்கே எந்த நினைவுகளும் இல்லை.



// என்னைக் கருவுற்றிருக்கும் போதுஎன்தாய் தெள்ளித்தின்ற மண்ணைத்தவிரஇந்தப் பரந்த தேசத்தில் எனது மண் எது //


என்று கேட்கும் ஆதவன் தீட்சண்யாவின் சனாதனத்திற்கு எதிரான

கேள்வியும்


" வெடித்துப்பிளந்த நிலத்தின் அடியில்வெறும்

எண்ணிக்கையாக வாழ்கிறார்கள்

அவர்களிடமிருந்த உணர்ச்சியும் கூட

அடித்துப்பிடுங்கப்பட்டுவிட்டது

இங்கு செலவதிற்கு துவக்கமில்லை

வறுமைக்கோமுடிவே இல்லை "



பொருளாதாரப் புறந்தள்ளலுக்கு எதிரான மக்லீன் பிரபுவின் ' வீடில்லாத சகோதரன் ' பாடலும் சரிசெய்யப்படாத நிறைய்யக் கேள்விகளை இந்தச் சமூகத்தின் முன்னால் ஆக்ரோசமாக துக்கி எறிகிறது.


18.4.09

தலைகீழாகச் சொல்லப்பட்ட வெள்ளந்தி மனிதனின் கதை








நாம் நடந்துபோகிற தெருக்கள், நமது கண்ணில் படுகிற அதே மனிதர்கள், நாம் பார்த்துக் கடந்துபோகிற சம்பவங்களெல்லாமே ஒரு சிறுகதையைச் சுமந்தபடியே கிடக்கிறது. அது எழுத்தளர்களிடமிருந்து பிறந்து அலாதியாகநம்முன்னே வந்து நிற்கிறது. ஒரு சாதாரண மண்குடம் என்ன பேசும் தனது குளிர் நிநைவுகளை, அந்த இடுப்பின் உராய்வுகளை, அந்த வீட்டிலுள்ள அதன் இருப்பிடத்தைச் சொல்லிக்கொண்டே சத்தூரின் தண்ணீர்பஞ்சத்தைச் சொல்லும் மாதவராஜின் " மண்குடம் ". தனது தகப்பனை விட்டுப் பிரிந்துபோய் இன்னொரு மனைதனிடம் வாழ்கின்ற தனது தாய், அவளை பார்க்கப்போகிற மகனுக்கும் தாய்க்குமான அந்தத் தருணம் எந்தக்கொம்பனின் கண்ணிலும் நீர் இறைக்கும் வல்லமை கொண்ட ஷாஜஹானின் " ஈன்றபொழுது ". கோணங்கியின் மதனிமார்களின்கதை, தமிழ்ச்செலவனின் பாவனைகள், உத்யசங்கரின் யாபேர் வீட்டிலும், பவாவின் பாப்பம் பட்டி ஜமா, ஆதவன் தீட்சண்யாவின் கக்காநாடு என்று நீள்கிறது தமிழ்ச் சிறுகதைப் பரப்பு.



தமிழுக்கு இறக்குமதி செய்யப்பட்ட கதைகளின் பட்டியல் ஏராளமாக இருக்கிறது. ஆனாலும் ஒரிய மொழியிலிருந்து பகவதிசரண் பாணிக்ரெகி எழுதி தேவகி குருநாத் மொழி பெயர்த்த ' வெகுமதி ' கதை மிக எளிய கதை. அதன் பிரதான மனிதன் கினுவா வைப்போலவே.



ஒரு வேட்டைக்காரர் துப்பாக்கி எப்படிச்சுடுவது என்று தெரியாத, வெறும் வில்லாலும், கணக்கிலடங்கா கொடிய மிருகங்களைக் கொன்று டெபுடி கமிசனரிடம் பரிசு வாங்குவார். இப்படிச் சிறு அறிமுகம் முடிந்த உடனேயே கதை ஆரம்பிக்கிறது அவர் அன்று கொண்டுவந்த தலையிலிருந்து. அது பண்ணையார் சர்தாரின் தலை.ஊரின் மிகப்பெரும் கொடுமைக்காரன், தெண்ட வட்டி வாங்குபவன், பல ஏழைப்பெண்களின் பெண்மையைச் சிதைத்தவன்,அப்படி ஒரு கொடிய மனைதனின் தலைக்கு டெபுடி கமிஷனர் நிறைய்ய வெகுமதி தருவார் என்று கொண்டுவருகிறார். ஒரு சில மதங்களுக்கு முன் ஒரு நல்லவர், புரட்சிக்காரர் ஜபத்சிங்கைக் கொன்றதற்காக, தோராவுக்கு ஐநூறு ரூபாய் பரிசு கிடைத்திருக்கிறது. இவ்வளவு கொடியவனைக் கொன்ற நமக்கு ஆயிரத்துக்கு குறைவாகக் கொடுக்க மாட்டார்கள் கொடுத்தாலும் வாங்கக்கூடாது என்கிற எண்ணம் எள்ளளவும் குறையாமல் சிறைப்பிடிக்கப் படுகிறார். விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, இறுதியில் தூக்குத்தண்டனை நிறைவேற்ற கறுப்புத்துணி தலயை மூடும் போது கூட தனது கண்ணைப் பொத்திக் கொண்டு அதிக வெகுமதி தரப்போகிறார்கள் அது கொண்டு வீடு கட்டி, காதல் மனைவிக்கு நகைகள் செய்து மிராசு இல்லாத ஊரில் ஆனந்தமாய் வாழப்போகிறோம் என்று நினைக்கிறார். அந்த நேரம் அவனது கழுத்தை ஏதோ தாக்குகிறது. இப்படித்தான் அந்தக்கதையும் நம்மைத் தாக்குகிறது.



இந்தத் துணைக் கண்டத்தில் மனிதப் பரிணாமத்தின் எல்லாக் கூறுகளும் இருக்கிறது. ஆதித் தொல்குடி முதல் கணினி மாந்தர்கள் வரை. அதில் ஒரு வெள்ளந்தி மனிதனின் கதை தலைகீழாக சொல்லப் பட்டிருக்கிறது. பதினோரு பிராந்தியமொழிச்சிறுகதைகள் அடங்கிய ' பாறைகள் ' தொகுப்பு. வெளியீடு சந்தியா பதிப்பகம்.

அடைக்கும் தாழற்ற, மறிக்கும் எல்லைகளற்ற பெருவெளி








ஜன்னலோர இருக்கையில் படுத்துக்கொண்டு ஓயாமல் கிரிக்கெட் வர்ணனைகேட்டுக்கொண்டும், தெலுங்கு, ஹிந்திப்பாடல்கள்கேட்டுக்கொண்டும் படுத்திருந்த அந்த வாலிபன் ஒரு ராணுவவீரன் என்பதை பார்க்கிற யருமே சுளுவில் கண்டுபிடிக்கலாம்.ஆனால் அவன் எந்த மாநிலத்துக்காரன் என்பதை என்னால் கணிக்க இயலவில்லை. தவிரவும் காலை எறி, இரவு வரைஒரே பேச்சும் கூத்துமாக இருந்த எங்களோடு எந்தவிதமான தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. நான் தேரே மேரே பீஜ்மே பாடியதும் கை வானோலியை நிறுத்திவிட்டு எழுந்து உட்கார்ந்து கவனித்தான். எனது அரைகுறை ஹிந்தியில் அவனுக்கு எந்த ஊர் எனக்கேட்டேன். ஒசூருக்குப் பக்கத்தில் உள்ள கன்னடக் கிராமம் என்பதைத் தமிழில் சொன்னான். அவன் பிறப்பால் கன்னடமாக இருந்தாலும், தமிழும் கன்னடமும் தாய்மொழியாகக் கிடைக்கப்பெற்ற பாக்கியவான். அவனது சிற்றூர் ஒரு எல்லையோர கிராமம். நீண்ட நேரம் அவனோடு உரையாடக் கிடைத்ததெனது பாக்கியம்.



சியாச்சனில் ஒரு வருடம் இருந்துவிட்டு லே பகுதிக்கு வந்திருப்பதாகச் சொன்னான். முப்பதிணாயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான கதகதப்பு உறைகள், காலணிகள், என எல்லா சவரட்ணைகள் செய்தாலும் வாரம் ஒரு முறை ஹெலிகாப்டர் மூலமாக வரும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள்களுக்காக வயிறு காத்திருக்கவேண்டும். மண்ணென்னெய் இல்லாமல் ஒரு நிமிடம் கூட நகராது. சாப்பாட்டுக்கும், சாயாவுக்கும், இயற்கை உபாதைகளுக்கும் கூட. குளிரெப்படி என்று கேட்டதற்கு தனது கைகால்களைக் காண்பித்தான். இயல்பான தோலின் பகுதிகளெங்கும் கருப்புப் புள்ளிகள் நிறைந்திருந்தது. உடம்பு முழுக்க மச்சம். குளிரில் நரம்புகள் சுருங்கி, ரத்த ஓட்டம் சிறுத்து, சலிப்பிடித்து மொத்த வாழ்வில் ஐந்து அல்லது பத்து வருடத்தை நாங்களே குறைத்துக் கொள்கிறோம். இதற்குப் பிரதியாக இரண்டு மடங்கு சம்பளமும் சீக்கிரம் பதவி உயர்வும் கிடைக்குமாம். என்றாலும் வாழக்கையை வாழ்ந்துதானே தீரவெண்டுமென்று கூறினான்.



எல்லைப்பகுதியில் எப்போழுதும் பதட்டமாகவே இருக்குமா என்று கேட்டதற்கு. ரொம்ப இயல்பாக உதட்டைப்பிதுக்கினான்.எல்லை என்பது உங்க வீட்டுச் சுற்றுச்சுவர் போலக்கிடையாது சார் என்று சொன்னான். கார்கில் சண்டை வருகிற வரை( கார்கில் என்கிற பெயரில் பான் பராக் விற்பனைக்கு வந்து, பக்தியும் போதையுமாக நல்ல வியாபாரம் ) இங்கிருந்துஆடு மேய்க்க அங்கு செல்வதும், சைனா தைவான் பொருட்களை எடுத்துக்கொண்டு அவர்கள் இங்கே விற்க வருவதும்ரொம்ப சாதாரணம் சார் என்று சொன்னான். இவ்வளவு ஏன் ஹெலிகாப்டர் வரத் தாமதமான நாட்களில் உணவுப்பொருள் எரிபொருள்கள் பரிமாறிக் கொள்வதும் இரண்டு பகுதி வீரர்களுக்குள்ளும் பூக்கிற மனிதாபிமானம். மூத்த அதிகாரிகளுக்குத் தெரியாத மனிதாபிமானம்.



இரண்டு தேச எல்லைகளுக்கு அருகில் குடியிருக்கும் சிறுவர்கள் ஒரு கால்பந்தால் பந்தமாகித் தோள் மீது கைபோட்டுக்கொண்டு முடிகிற அந்த ஏர்டெல் விளம்பரம். இரண்டு ராணுவ அதிகாரிகள் யாருக்கும் தெரியாமல் கம்பிவேலிகளுக்கு ஊடாக கள்ளத்தனமாகப் மதுவையும் மனிதாபிமனத்தையும் பரிமாரிக்கொள்கிறதான விளம்பரம். சில வருடங்களுக்கு முன்னாள் வந்தது. இந்த இரண்டு கவிதைக்காட்சிகளும், மதில் சுவர் தாண்டி நீள்கிற கிளையை வெட்டும் தோட்டக்காரனே கண்ணுக்குத் தெரியமல் மண்ணுக்குள் நழுவும் வேர்களை என்ன செய்ய முடியும் ? என்கிற கவிதைக் கேள்வியும் நினைவுக்கு வந்துபோகிறது.


அரூப எல்லைகளைக் கடந்து விரியும் அன்பும் மனிதாபிமானமும்.

எளிமை, எதிர்கொள்ள முடியாத ஆயுதம்








தூரத்திலிருந்து பார்க்கும்போது மதுரை சுரேஷ் மாதிரித் தெரிந்தது. சுரேஷுக்குப்பக்கத்தில் இன்னொரு தெரிந்த முகம். அவர் பசியடங்காமல் இன்னொரு பண் வாங்கிக்கொண்டிருந்தார். கசங்கிய வெள்ளை வேட்டி சட்டை. பசி தெரிக்கிற கருப்பு முகம். இந்த உலகம் மொத்தத்தையும் பார்த்துச் சிரிக்கிற ஜாடையில் ஒரு சாதாரண மனிதர். வேஷ்டி சட்டை உடுத்திய கருப்பு மனிதர் டீயும் பண்ணும் சாப்பிடுவது ஒரு செய்தியல்ல. அவர் ஒரு எம் எல் ஏ. என்பது தான் செய்தி. ஒருவேளை இது காமராஜர், கக்கன், ஜீவா காலமாக இருந்திருந்தால் ஆச்சரியப்படவோ, ஆதங்கப்படவோ அவசியமில்லை.



இப்போது நடப்பு என்ன. ஒரு நகர் மன்ற உறுப்பினர்கள் கழிப்பறைக்கு போனல் கூட ஏசி காரில் போகிறார். அவர் வீட்டைவிட்டு வெளியில் போகிற போதெல்லாம் போஸ்டர் அடிக்கிறார்கள். வாரத்தில் ரெண்டு நாள் ஐம்பது கிலோ மீட்டர் தள்ளியிருக்கிற தளவாய்புரம் போய் கண்ணாடிக்கடையில் காடைக்கறி சாப்பிடுகிறார். நிகழ் அரசியலில் எல்லோருமே அப்படித்தான். கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை எந்த எந்த ஹோட்டலில் என்ன சாப்பாடு பிரசித்தம் என்று பட்டியலிட பக்கத்தில் பி ஏ க்கள் வேண்டும். ஒரு தரம் பாட்டிலின் மூடியைத் திறக்க ஐயாயிரம் செலவாகிறது. பஞ்சாயத்து கவுன்சிலர்கள் கூட டாடா சுமோ இல்லாமல் பயணப்படுவதில்லை என்றாகிப்போன காலமிது. இவ்வளவு ஏன் சமத்துவத்தைப் பால பாடமாகக் கொண்டிருக்கும் தொழிற்சங்க அரங்கில்கூட ஆளுயர சுவரொட்டி ஒட்டுகிறார்கள். ஒரு எம் எல் ஏ வுக்கு அரசு அளித்திருக்கிற சலுகையைக்கூட தூக்கி எறிந்துவிட்டு மக்களோடு பயணிக்கிற தோழர் நன்மாறன். இந்த விளம்பரச் சூறாவளியின் நடுவிலும் ஒப்பனை கலையாத நிஜமாக.



அவரைப் பார்த்துக் கொண்டிருந்த மாதுவின் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது. ஒரு கணத்த மௌனத்தோடு நேரம் நகன்றது. நாங்கள் திரும்பவும் அவரைப் பார்க்கும்போது பாதிப் பீடியைத் தூக்கி எறிய மனசில்லாமல் தூக்கி எறிந்துவிட்டு, புறப்பட இருந்த பேருந்தில் ஓடி வந்து ஏறுகிறார். அந்தக்கடைசி இருக்கையில் ஆறாவது ஆளாக உட்கார்ந்து சிரித்தபடியே கொஞ்சம் நகர்ந்து உட்காரச்சொல்லுகிறார்.மீதமுள்ள நான்கு பேரும் சலனமில்லாமல் உட்கார்ந்திருக்கிறார்கள்.



இப்பொழுதும் கூட மதுரை, மதுரையச்சுற்றியுள்ள ஏதாவது ஊர்களில் உண்ணாவிரதம், தர்ணா, மாநாடுகளில் சிரிக்கச் சிரிக்கப் பேசிவிட்டு பேருந்துகளிலே பயணம் செய்து கொண்டிருக்கிற அவரை நீங்கள் பார்க்கலாம். அவர்தான் இந்த 2006 ஆம் ஆண்டின் விநோத சட்டப்பேரவை உறுப்பினர் எளிமைப்போராளி...... தோழர் நன்மாறன். ஆம், உப்பு விற்க ஒரு கோடி செலவழிக்கிற இந்த டிஜிட்டல், விளம்பர யுகத்தில் தனித்து நிற்கிற அவரது எளிமைகூடப் போராட்டம் தான்.



கோபத்தின் உச்சியில் இருக்கும்போது கூட " நா அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன் " என்று பேசும் மேடை ஒழுக்கம் தெரிந்தவர். மூப்பின் விளிம்பில் இருக்கிற அவருக்கு பூஞ்சை உடம்பு. அவரை அரிவாள் கொண்டு தாக்கி மதுரை தனது வீரத்தை மீண்டும் ஒரு முறை நிலை நாட்டியிருக்கிறது. கண், காது, வாய் இவற்றோடு இதயமும் மூளையும் பொருத்தப்பட்ட குண்டர்களும் அவர்கள் கையிலிருக்கும் அரிவாள்களும் அறியாத அன்பும் சிரிப்பும் தோழர் நன்மாறனின் அழியாத சொத்து.


சன் தொலைக்காட்சியில் ஒரு சில வருடங்களுக்கு முன்னாள் திரும்பத்திரும்ப ஒளிபரப்பப்பட்டது ஒரு காட்சி. மூத்த தலைவர், நாங்கள் மதிக்கும் பராசக்திக் கலைஞர், இலக்கிய உலகின் பழுத்த பழம் கலைஞர் கருணாநிதி அவர்கள் கத்திய நெஞ்சைக் கவ்வும், அந்த கதறல் சத்தம் மீண்டும் கேட்கிறது.

17.4.09

தனிமை கவ்வும் நினைவுகள்








மீளத்திரும்பாத

நம் அன்பைஎந்தக்கொடுவால்

இறையெனக்கொண்டது.


நினைந்துருக

ஓராயிரம்நல்லவை இருந்தபோதும்

ஒருவார்த்தையிலேயே தொங்குகிறது

வேதாள நினைவுகள்.


அரவமற்ற தொடுதல்களும்

அருகிருந்த மௌனங்களும்

தொலைவிருந்த உரையாடல்களும்

வெடித்துச்சிதறுகிறதென்

தனிமை நிமிடங்களில்.

14.4.09

மாற்றுக் கலாச்சாரத்தைக் கொண்டு வரும் மாற்று ஊடகம்








வீடியோ திரைப்படத் திருவிழா சைன்ஸ் 2006-திருவனந்தபுரம்



இரவு முழுக்க மழை, பகலில் மிதக்குளிர், மழையின் தடமான சகதி இல்லாத சாலைகள். சாலைகளில் கழிவுகளைக் கொட்டாத தனி மனித ஒழுக்கம் நிறைந்த மக்கள். வெறும் பதினைந்து ரூபாய் வாங்கிக்கொண்டு சந்தோசமாகக் கடந்து போகும் ஆட்டோ க்காரர்கள். சாதாரண உணவு விடுதிகளில் கூட நம்பிக்கை ஒளிரும் கண்களோடு பணியாளர்கள். அங்கே வீட்டைவிட்டு ஓடிவந்த சிறுவர்கள் இல்லாதது சாப்பாட்டு நேரங்களை நெருடல் இல்லாத நேரங்களாக்கும் திருவனந்தபுரம்.



நிழல் உருவங்களில் எதார்த்த கலைகளைப் பதிவு செய்கிற உணர்ச்சிக் குவியல்களின் களமாக திருவனந்தபுரத்தின்கலாபவன் திரையரங்கு. அது கேரள மாநில சினிமா அபிவிருத்திக் கழகத்திற்குப் ( ksfdc ) பாத்தியப்பட்டது. ஜான் ஆபிரகாம் தேசிய விருதுக்காக நாடெங்கிலும் இருந்து ஆவணங்கள், குறும்படம், அனிமேசன், இசை ஆல்பங்கள் என அறுபது படைப்புகள் போட்டிக்குத்தெரிவு செய்யப்பட்டிருந்தது. ஆண்கள் பெண்கள் வித்தியாசமில்லாமல் விசுவல் கம்யூனிகேசன், மாஸ் மீடியா கம்யுனிகேசன், இன்பர்மேசன் டெக்னாலஜி மாணவர்கள் பெருவாரிப்பேர் அடங்கிய சுமார் ஐநூறு பார்வையாளர்கள். சினிமாத்தனங்களின் ஆராவாரம் ஏதுமில்லாத ஆறு நாட்கள்.



சட்டமடிக்கப்பட்ட மிகை உருவங்கள், எதார்த்தத்தை மீறிய சாகசங்கள், தயாரிப்பாளர்களின் பணப்பெட்டிகளின் அகன்ற வாயோடு சதைத் தொழிற்சாலையாகிப்போன சினிமா உலகம். அங்கே முடை நாறும் அருதப்பழசான கதைகளோடு பார்வையாளர்களை ஆட்டிப்படைக்கிற மசாலாச்சினிமா. அவற்றிற்கு எதிரான கலகக்குரலாக ஜான் ஆபிரகாமின் படைப்புகள் ' அம்ம அறியான் ', 'அக்ராகாரத்தில் கழுதை' ஆகியவை . தனது படைப்புகள் மக்களால் மக்களுக்காக நடத்தப்படவேண்டும் என்பதற்காக ஒன்னும் ரெண்டுமாக உண்டியலடித்து சினிமா தயாரித்தவர் அவர். அப்படிப்பட்ட ஒரு சினிமாக்கலைஞனுக்கான பெரும் கௌரவமாக இந்த விழா ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 10 முதல் 15 வரை நடந்த இந்த விழாவுக்கு கன்னடம் ஒரியா போன்ற பிரதேச மொழிகளிலும் உ.பி, ராஜஸ்தான், ம.பி, குஜராத், போன்ற ஆதிக்க மாநிலங்களிலிருந்தும் போட்டிக்கான படங்களும் ஆர்வலர்களும் கலந்துகொள்ளவில்லை.


வடகிழக்கு மாநிலங்களிலிருந்தும் கேரளத்திலிருந்தும் அதிக எண்ணிக்கையில் போட்டிக்கான படங்கள் வந்திருந்தன. சிறப்புக்காட்சியாக பல பாகங்களிலிருந்தும் படங்கள் வந்திருந்தன. ஒரே குத்தில் பத்துப்பேரைச் சாய்க்கிற போதும், பனிமலை புல்வெளியென அலைந்து டூயட் பாடுகிறபோதும் பார்வையாளனுக்கு கிலேசத்தை உண்டுபண்ணுவதைத் தவிர்த்து மசாலாப் படங்கள் என்ன செய்யும். வேண்டுமானால் முதலமைச்சர்களைச் செய்து தரும். யதார்த்தப் படங்கள் தருகிற அனுபவம் மிக மிக அலாதியானது. வெறும் இரண்டே நிமிடத்தில் ஒரு ஹைக்கூ கவிதை போல், மின்னலைப்போல் கதைசொல்ல முடிகிற சாலையின் பாடல் என்கிற தமிழ் குறும்படமும், ஒண்ணரை மணி நேரம் எவரெஸ்ட் சிகரங்களில் பதற்றத்தோடு நம்மைப்பிந்தொடர வைக்கின்ற ' ரைடிங் சோலோ டு தெ டாப் ஆப் தெ வேர்ல்ட் ' எனும் ஆவணப்படமுமாக சுமார் எண்பது படங்கள்.



இந்த விழாவில் குறிப்பிட்டுசொல்ல வேண்டிய இன்னொன்றும் இருக்கிறது. வரலாற்றின் பரபரப்பான பக்கங்களில் இடம் தேர்வு செய்தவர்கள், இந்தியப் பரப்பைக்க் குலுங்க வைத்த சம்பவங்கள், மகத்தான கலைஞர்கள் எல்லாம் இரண்டு மூன்று தரம் வேறு வேறு இயக்குனர்களால் பதிவு செய்யப்பட்டிருந்தது. மேதா பட்கர், அருந்ததி ராய்,சி.கே.ஜாணு, சுனாமி, அடூர் கோபலகிருஷ்ணன், சத்யஜிரே, அப்புறம் மணிப்பூர் பிரச்சினை. அதனால்தான்தொழில் நுட்பம், செய்நேர்த்தி எல்லாவற்றையும் தாண்டி நின்று, பரிசுகளைத் தங்கள் பக்கம் திருப்பிக்கொண்டன. ஆவணப்படங்களில் மாதவராஜின் இரவுகள் உடையும், ரஜூலா ஷாவின் ' பியாண்ட் தெ வீல் ' ( மணிப்பூரிலும், மத்திய பிரதேசத்திலும் சக்கரமில்லாமல் பானை செய்யும் இரண்டு பெண் கலைஞர்கள் பற்றியது ) இரண்டும் பரிசுக்கான தகுதிக்கு எதிர் எதிர் நின்றது அந்த AFSPA 1958 திரையிடப்படும் வரை.

மனமிருந்தும் ஒரு தாழம்பூவைப்போல








இருபத்தாறு பதவிகள்,இருபத்திநான்கு மணி நேர அர்ப்பணிப்புஎக்கச்சக்கமான பட்டங்கள்எட்டுமொழியில் பாண்டித்தியம்,எல்லாவற்றையும் தாழ்த்தப்பட்டவர்களுக்கேஅர்ப்பணித்தவர் அண்ணல் அம்பேத்கர்.
தேசந்தோறும்.அடிமைகளின் விடுதலைக்காகப் போராடியதலைவர்கள் புரட்சிக்காரர்களானார்கள்.மனமிருந்தும் ஒரு தாழம்பூவைப்போல,வரலாறுகளில் இருந்து ஒதுக்கப்பட்டவர்.

13.4.09

மானாவாரிச் சிந்தனைகள்









அவர் கவிதையில் இயற்கை விவசாயம் சொன்னவர். இவர் இயற்கை விவசாயத்தைக் கவிதையாய்ச் சொன்னவர். முன்னவர் மு.சுயம்புலிங்கம், பின்னவர் விஞ்ஞானி நம்மாழ்வார். இந்த ரெண்டுபேரும் பசப்பில்லாத மனிதர்கள்.இப்போது சுயம்புலிங்கம் 1990 களில் ஊர்க்கூட்டம் என்கிற ஒரு திரட்டு வெளியிட்டார். எளிய வார்த்தைகளில் கிராமத்து நிஜத்தை சொன்னவர்ஏர்க்காலில் சிக்கி மேலெழும்பி மண் சிரிக்கிற ஒலி தரும் அவர் கவிதைகள். பீ நாறும் வர வேற்ப்போடுதான் கிராமங்கள் விரியும். மனிதர்களின் வறுமையும் ஆட்டுக்கிடையின் வாசத்தையும் சொல்லும் ஏராளமான கவிதைகளில் இரண்டு.




அழிவின் தத்துவம்.

-----------------------


ஆட்டுக் கிடை

வீட்டுக்குப்பை

கொளூஞ்சி ஆவரை

நாட்டு உரங்களில் வேர்விட்டு விளைந்த

நெல்லுக்குருசி இருந்தது

ஆரோக்கியம் இருந்தது

இயந்திர உரம்ருசியைக் கெடுத்தது

ஆரோக்கியத்தைக் கெடுத்தது

பூமியை தன்னீரைகெடுத்தே விட்டதுரசாயணம்.




என்னைப் பாதித்தவர்கள்

--------------------------------



பங்களா வாசலில்தூக்கம் மெனக்கெட்டுநினைவுகள்
சவைத்துக்கொண்டிருக்கும்கொர்க்காக்கள்.



பிதுங்கிக்கொப்பளிக்கும் ஜலதாரைக்குள்தன்

தன் முழு உடம்பைத் தள்ள

இரும்புபிளேட்டைத்தூக்கும்


தோட்டிகள்.


12.4.09

கொஞ்சம் பக்தி , நிறய்ய சமயோசிதம்








அவர் குறி சொல்லும் போது ரொம்பப் பயமாக இருக்கும். பற்களை நற நற வெனக்கடித்துக் கொண்டு கூரை முகட்டைப்பார்த்து தலையை ஒரு உலுக்கு உலுக்கி

" தாயே சக்கம்மா என் கொட்டாரடி காத்த புண்ணியவதி தலமேல வந்திறங்கு அடங்காத கருப்பன், கம்பெடுத்தால் அரக்கன் அருவாள கீழபோட்டு கிட்டவாடா
வெள்ளக்குதிர ஏறி வீச்சருவா கையிலேந்தி விளையாட ஓடிவாட சுடலமாடா
அள்ளி முடிச்சு, ஆங்காரம் எறக்கி வச்சி ஈஸ்வரியே எந்தாயீ ஈசானமூலயில வந்து நில்லு
தொட்டது தொலங்கும், தோட்டம் வச்சாக்காய்க்கும் எனப்பெத்த மகராசி முத்தரசி முன்னவாம்மா
மார்மேலும் தோல்மேலும் தூக்கிவளத்து குருவுங்கொலையும் குடுத்த எங்கய்யா எல்லாத்தையு அடக்கி வையி "

இரவு பத்து மணிக்கு சரணமுழக்கம் ஆரம்பிக்கும். எட்டு மணிக்கே ஊரடங்கிப்போகும் கிராமத்தில் குறிசொல்லும் ராசாச்சின்னயாவின் உடுக்கையடி கொலைப்பதற வைக்கும். இருந்தாலும் பூஜை முடிந்து திங்கப்போகும் தேங்காச்சில்லும் வாழைப்பழமும் பயத்தை ஓரங்கட்டும்.
குறிபார்க்க வருபவர் முதல்நாளே சொல்லிவிடவேண்டும். அன்றைக்கு காலையில் இருந்து பச்சைத்தண்ணி பல்லில் படாது விரதமிருப்பார். சாணிமெழுகி சாம்பிராணி புகையவிட்டு வீடு சுத்தப்படுத்த வேண்டும். அணைக்கரைப்பட்டி பொத்தையக்குடும்பனிடம் ரெண்டு பாட்டில் சாராயம் வாங்கிவைக்கச் சொல்லிவிடுவார். பூஜைசாமன்கள் எடுத்து அடுக்கிவைக்க, அருள்வந்து தடுமாறுவார் அப்போது தாங்கிப்பிடிக்க நான்கு எளவட்டங்கள் வேண்டும். பூஜை முடிந்துகொடுக்கும் கூவாத சேவலும் காசும் மறுநாளைக்கு அரிசிச்சோறும் கறிக்குழம்புமாகும்.

தாட்டிக்கமான சாதிக்காரர் வீடுகளுக்கு கடவுள்கள் கூட டோர்டெலிவரிதான். ராசாச்சின்னையா கீழ்ச்சாதி வேறு. சிலநேரம் வெளியூர் போய் குறிசொல்லுவார் லீவு நாட்களில் நானும் போவேன். பெத்துரெட்டிபட்டி ராமசாமி நாயக்கரின் வண்டிச்சக்கரம் காணாமல்போனது. அவர்கள் அதைச் சொல்லமல் விடுகதையை போல ஒரு பொருள் களவு போய்விட்டது குறி பார்க்கவேணுமென்று சொல்லி மூணு நாளாச்சு. அத்தனை சாமிகளுக்கும் சேர்ந்து முக்கி முக்கி உடுக்கடிச்சாலும் களவுபோன பொருள் என்னவெனக் கண்டுபிடிக்கமுடியாமல் திணறலெடுத்துவிட்டது ராசாச் சித்தப்பாவுக்கு. பெத்து ரெட்டிபட்டி, ஓடைப்பட்டி, கம்மாப்பட்டி, கரிசல்பட்டி, செவல்பட்டி, மேட்டுப்பட்டி, ஒத்தையால் போன்ற ஊர்கள் கரிசல் விவசாயம் பெருத்த நாயக்கமார்களின் ஊர்கள். இங்கு குறி தோத்துப் போனால் பிறகு வருசம் முழுக்க குண்டிவழியா வேர்வை வடிய கல்லுடைக்க, கருதறுக்க லோல் படவேண்டும். மூன்று தலை முறையாய் பார்த்த சோசியத் தொழில் கெட்டுப் போகும். இது அவருக்கு வாழ்வா சாவா பிரச்சினை.
மூன்றாம் நாள் ஒரு பீடியைப்பத்த வைத்துக்கொண்டு காலாற நடந்து போய் படப்படியில் ஒண்ணுக்கிருந்தார். திரும்ப விறு விறுவென வந்தார். தீர்மானமாக உட்கார்ந்தார். ஒரு பத்துநிமிடம் காட்டப்பத்தி கரையப்பத்தி பாட்டுப் பாடினார், பிறகு '' யாரப்பாத்து சோதன பண்றீங்க இந்தச் சொடல மாடங்கிட்டயா வெளாட்டுக் காற்றீங்க ன்னு " ஒரு அதட்டுபோட்டார். " காணாமல் போனது வலது பக்க வண்டிச்சக்கரம், எடுத்துட்டுப் போன கொம்பனுக்கு மேல்திசையில ஊரு, மேலே ஏதுங் கேள்வி இருந்தாக் கேளு " சொல்லி முடித்ததும் ஆடிப்போனார் ராமாசாமி நாயக்கர். கூடப்போன நாங்களூம் ஆடிப்போனோம்.
ஊரு வந்து ஒரு வாரம் சாராயம்தான், வெடக்கோழி தான். ஆவல் அடங்காமல் ஒருநாள் கேட்டபோது,தொழில் ரகசியம் வெளியே சொல்லாதே என்ற பீடிகையோடு சொன்னார். வைக்கோல் படப்புக்கு மறுபக்கம் பேன் பார்த்துக் கொண்டிருந்த உள்ளூர்ப் பெண்களிருவர் பேசிக்கொண்டது அவரது காதில் விழுந்ததாம். " சாமி சுத்து சுத்து ண்ணுதா, செப்பும் வண்டிச்சக்கர ண்ட்டா செப்பும் "
காலச்சக்கரத்தின் அடியில் சிக்கிக்கொண்டு நசிந்துபோனது விவசாயத்தொழில் மட்டுமல்ல, பண்ணையடிமை முறையும். தீப்பெட்டி ஆலையின் காவலராகிக்காலம் தள்ளும் ராசாசித்தப்பாவின் முகதைச்சுற்றி வட்டமிடும் பீடிப்புகையில் என்னநினைவுகள் மிதக்கும். இந்த வாரம் பங்குனிப் பொங்கலுக்கு ஊருக்குப் போகையில் ராசாச் சித்தப்பாவைப் பார்க்க வேண்டும்.

11.4.09

கங்கை பார்க்கப்போனேன்.








டெல்லியிலிருந்து ரிஷிகேசுக்கு பேருந்து கிளம்பிய ஒரு மணி நேரத்துக்குள் அவர் எங்களோடு நெருக்கமானார். ஒருவருக்கொருவர் திண்பண்டங்கள் பரிமாறும் சினேகிதர்களானோம். ஓங்கு தாங்கான உருவமும் முதிர்ச்சியுமான அவருக்கு முப்பத்தைந்து வயதிருக்கும் என நினைத்தோம். ஆனால் வயது இருபத்து நான்கு எனச் சொன்னதும் வியப்பு அடங்கவில்லை. இரவு முழுவதும் பஞ்சாப், உத்திரப்பிரதேச, உத்ரகாண்ட் பிரதேசங்களில் பயணம். நைனிடால், பனாரஸ், டேராடூன் போன்ற பிரபல ஊர்கள் உறக்கத்திலே கடந்து போனது. விலை உயர்ந்த புகைப்படக் கருவியும், வீடியோகருவியும் வைத்திருந்த அவர், இமயமலையின் புல், பூண்டுகளைக்கூட விடாமல் பதிவுசெய்துகொண்டு வந்தார். ரிஷிகேசில் பல வண்ணங்களில் கிடந்த கூழாங்கற்களை சின்னப்பையனைப்போல அள்ளிப் பைக்குள் போட்டுக்கொண்டார். அரசுடைமை வங்கியின் அலுவலரும் பணியாளர்களுமான நாங்கள் நால்வரும் அவரை வேடிக்கை பார்க்க மட்டும்தான் முடிந்தது. இத்தாலியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அவருக்கு தூரக்கிழக்கு நாடுகளில் சுற்றுப்யணம் செய்ய விடுமுறையும் செலவுக்கு பணமும் அந்த நிறுவணமே கொடுத்திருக்கிறது. இதைக் கேள்விப்பட்டதும் வியப்பின் விளிம்புக்குத் தள்ளப்பட்டோம்.



இங்கே, ஒரு மாணவனிடம் மாதத்திற்கு ஐயாயிரம் பத்தாயிரம் கல்விக்கட்டணமாக வாங்கும்தனியார் நிறுவணங்களில் அசிரியர்களுக்கு ரெண்டாயிரம் ரூபாய் சம்பளமாய்த் தரும் கல்வித் தந்தைகள் ஏராளம். எங்கள் பகுதியில் மாதம் ஐநூறு கொடுக்கிற கல்விக் கொடை வள்ளல்களுக்கு மருத்துவர்( டாக்டர்) பட்டமெல்லாம் கூடக்கிடைக்கிறது. சாதனைத்தமிழனாக மூன்று வருடம் தேர்வானவரின் இன்போசிஸ் நிறுவணமும் விருதுநகர் எண்ணெய் உற்பத்தி நிலையங்களும் ஒரே மாதிரிக் கூலியும் தொழிலாளர் கொள்கையும் கடைப்பிடிக்கிறது. தொழில்நுட்பம் படித்து கௌன்சிலிங்கில் தேர்வாகாத கணினி மாணவர்களுக்கு குறைந்த பட்சம் ரெண்டாயிரம் தருகிற உலக மகா தொழிலதிபர்கள் இங்கே ஏராளம். அவுட்சோர்சிங் என்கிற புதிய ரகத்தொழிலாளர்களைக் கண்டு பிடித்திருக்கிறது நமது தனியார் மற்றும் அரசு நிறுவணங்கள். தமிழகத்தின் எல்லா ஆலைகளிலும் முப்பதினாயிரம் மொத்தமாகக் கொடுத்துவிட்டு ஐந்து வருடம் கொத்தடிமைகளாகிப்போகிற கிராமத்து விடலைப்பெண்கள். அதற்குப் பெயர் சுமங்கலித் திட்டம். பெருகிக் கிடக்கும் ஜனத்தொகையால் மலிந்துகிடக்கிறது மனித உழைப்பு. பத்துசதவீதம் இந்தியர்களுக்கு இரண்டு வேளை உணவு மட்டும் கிடைக்கிறது. இதுதான் உலக முதலளிகளின் மூலதனம். இந்தச் சுரண்டல்களை புரிந்துகொள்வதுதான் உழைப்பவர்களின் மூலதனம்.

10.4.09

சாக்கடை விளம்பரங்கள் வழியே பாதுகாக்கப்படும் சனாதன வியாதிகள்








அடிமேல் அடி வைக்க அம்மியும் கூட நகர்ந்து வழிவிடும். மிக்ஸி, கிரைண்டர் எல்லாம் அடுப்படி ஏறி உட்கார்ந்துகொள்ளும். ஆனால் அந்தக்கருத்த மனுசன் ஒரு அகலக்கேரியர் சைக்கிளை ஆவிபோக மிதித்து, தொண்டை கிழியக் கத்ததி வியர்க்க வியர்க்க வீட்டுக்கு முன்னாள் வந்து ஒரு படி உப்பு விற்க படுகிற பாடு சொல்லி மாளாது. நல்லா அளந்து போடுப்பா என்று சொல்லுகிற அதே உப்பை அயோடின் உப்பென்று சொல்லி டாடா நிறுவனம் சுளுவாக போடு போடு என்று விற்றுத் தீர்த்து விடுகிறது. மறுபேச்சில்ல்லாமல் வாங்கிக்கொண்டு வந்து அடுப்படியில் வைத்துவிடுகிறார்கள். அங்கே பேரம் பேசுவது நாகரீகமற்ற செயலாகிவிடுகிறது. காரணம் கோதுமை நிறத்தில் ஒரு பெண் நாங்க வாங்கிட்டோம் நீங்க வாங்கலையா என்றோ அல்லது உப்புக்கு நான் கியாரண்டி என்று அடித்துச்சத்தியம் செய்கிறது. பெண்ணெப்போதும் நுகர் பொருளாக்கப்படுவது கொடுமை. அதைப்பெண்ணே விற்கிற பிரதிநிதியாவது இன்னும் கொடுமை." யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே, ரமந்தே தத்ர தேவதா ". எங்கே பெண்கள் பூஜிக்கப்படுகிறார்களோ அங்கே தேவததைகள் வாசம் செய்வார்களாம்.


இதை எதிர்ப்பவர்கள் பத்தாம் பசலியாக்கப்படுவதும் வரட்டுத் தத்துவ வாதிகளாக்கப்படுவதும் நுண் அரசியல். பெண்ணடிமை, கொத்தடிமை, வர்ணாசிரம அடிமை என எல்லாவற்றையும் ஊட்டிவளர்க்க விளம்பரங்கள் கூச்சப்படுவதில்லை.


ஒரு விளம்பரம் வந்தது. அதில் ஒரு பளபளக்கும் பங்களா. அந்தவீட்டில் ஒரு நாலு வயதுச்சிறுவன். அவனது அம்மா அப்புறம் ஒரு சமையல்காரர். அந்த சமையல்காரரை, தன்னைவிட அரை நூற்றாண்டு வயது அதிகமான பெரியவரை " ஏ முருகா " என்று ஒருமையில் கூப்பிடுவான். நிச்சயம், அதைக்கேட்கும் சிறுவர்களூக்கு காதுகளின் வழியே சாக்கடை பாய்ந்து மூளைக்குள் குடிகொள்ளும். அந்தச்சிறுவன் மூலம் எதை விற்க முயற்சிக்கிறார்கள் என்பது தெரிகிறதா ?.



இதைத் தயாரித்த தொழில் நுட்பம் தெரிந்த இயக்குனர்கள் என்ன படித்தார்கள், அவர்கள் உலகம் குறித்து என்ன புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆபாசங்களை மட்டுமல்ல, தரங்கெட்ட கலாச்சாரத்தையும் சொல்லுகிற யாரும் படைப்பாளி என்று அறியப்பட வாய்ப்பில்லை. அவர்களுக்கு வேறு வேறு பெயர்கள் இருக்கின்றன.

என்ன நடந்திருக்கும்









இரண்டு நாள் புகை வண்டிப்பயணத்தில் எல்லோரும் நண்பர்களாகிவிட்டார்கள். எதிர் இருக்கைப்பெண் எனது மனைவியைஅண்ணியென கொண்டாடி அன்னியோன்யமாகினார். சிறுவர்கள் அந்த ரயிபெட்டியை உள்அரங்கம் ஆக்கிக்கொண்டு விளையாடினார்கள். தின்பண்டம் விற்கிறவர் வருகிறவரை பெரியவர்களைத் தொந்தரவு செய்வதில்லை. புனேக்கு முன்னாள் ஏழெட்டுக் குகைப்பாதையில் சந்தோசமான திகிலோடு கடந்துபோனோம் ரயிலிலிருந்து கீழே பார்த்தால் பள்ளத்தாக்கில் உழுது கொண்டிருக்கிற எருமை மாடுகள் எறும்புகள் போலத்தெரிந்தன. சில வயல்களில் மாடுகளுக்குப்பதில் பெண்கள் நுகத்தடி இழுத்துப்போனார்கள்.
புனே ரயில் நிலையம் தாண்டியதும் அவர்கள் ஒவ்வொரு பெட்டியாய் வந்தார்கள். கைதட்டும் ஓசையோடு கைநீட்டிக் கொண்டே கடந்து வந்தார்கள் எங்கள் பக்கம் வரும்போது நான் பணம் எடுக்கத் தாமதமாகியது அதுவரை எனது அருகில் அமர்ந்து தோளில் கைபோட்டாள் ஒருத்தி. கழிப்பறை சென்று திரும்பிய எனது மனைவிக்கு அதிர்ச்சி அடங்க வெகுநேரம் ஆனது. எதிர் இருக்கைப் பெண் ஐந்து நிமிடம் கழித்து அவர்கள் யார் என்பதைச் சொன்னார்கள்.
எங்களுக்கு அந்தப்பெட்டியில் கிடா மீசையோடு ஆறு ஏழு பேர் இருந்தார்கள். அவர்களோடு இரண்டு பென்களும் இருந்தார்கள். சென்னையிலிருந்து குடியும் கூத்தும் வம்புச்சண்டையுமாக களேபரப் படுத்திக்கொண்டு வந்த அவர்களை காவலர்கள் கூட ஒன்றும் செய்யவில்லை. அது ரயிலில் மது புகை உபயோகிப்பதைக் கண்டுகொள்ளாத காலம். அப்போது அவர்களுக்கு திருநங்கையர்கள் என்ற பெயரும் இல்லை. அவர்கள், அடுத்த பெட்டிக்குப் போனார்கள். எங்களுக்கு நடக்கப்போகிற சண்டை குறித்த ஆர்வம் அதிகமாகியது. நினைத்தது போலவே அடுத்த பெட்டியிலிருந்து கூச்சலும் கெட்ட வார்த்தைகளுமாக இருந்தது.
சுற்றுப்புற சத்தங்களை விழுங்கும் கூச்சலால் அடுத்தடுத்த பெட்டியிலிருந்தும் வேடிக்கை பார்க்க வந்தார்கள். யாரும் எதிர்பாராதவிதமாக அந்த கூச்சல் நின்று அமைதியானது. தாதர்ல எறங்கு அப்றம் தெரியும் என்று சொல்லியபடி அவர்கள் அங்கிருந்து கடந்து போனார்கள். ஆவல் அடங்காமல் நான் அந்தப்பெட்டிப்பக்கம் போனேன்.அந்த பெட்டிய்லிருந்த மொத்தப் பயணிகளும் பேயறைந்ததுபோல உட்கார்ந்திருந்தார்கள்.

8.4.09

தீரத வன்கொடுமை- தீண்டப்படாத புள்ளிவிபரம்








ஒரு மணி நேரத்திற்கு ஒரு தலித் பெண் மனபங்கப்படுத்தப் படுகிறாள். ஒரு நாளைக்கு ஒரு தலித் கொல்லப்படுகிறார்ஒரு ஆண்டில் 22000 க்கும் மேற்பட்ட அருந்ததியர் சாக்கடை சுத்தப்படுத்தப் போகையில் விஷவாயு தாக்கி இறப்பதாகவும்,அந்த எண்ணிக்கை சராசரியாகப் போரில் இறக்கும் உயிர்களைவிட அதிகம் எனவும் புள்ளிவிபரம் சொல்லுகிறது.
கொடியன்குளத்தில் உப்புச்சப்பில்லாத காரணங்களூக்காக ஊரைச்சூரையாடியதும், வீரப்பனைத் தேடிப்போனவர்கள் வாச்சாத்தியில் மலைவாழ் மக்களை சூரையாடியதும் பழைய காவல்துறையின் பழம் பெருமை.

மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக ஊர்வலம் போனபோது பெண் காவலர் ஒருவர் மீது கைபட்டதாகக் குற்றம் சொல்லி கர்ப்பினிப் பெண், கைக்குழந்தை உட்பட பதினான்கு பேருக்குமேல் அடித்துக் கொன்று தாமிரபரணி ஆற்றில் வீசியது காவல்துறை.

2001 ஆம் ஆண்டு பாப்பாப்பட்டி கீரிப்பட்டியில் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஊருக்குள் சென்ற மதுரை மாவட்ட துணைக் கண்கானிப்பாளர் மீது செருப்பு வீசிய ஊர்மக்களிடம் சமரசம் பேசிவிட்டுத் திரும்பியது காவல் துறை.

7.4.09

ரோசமற்ற தேசத்தில் செருப்புகளின் கிளர்ச்சி








தாராள மயச் சந்தைக்கு கிடைத்த

மூன்றாவது பரிசு.


செருப்புகளின் பட்டியலில்செர்னைலுக்கு

இரண்டாவது இடம்.


உலகவங்கியின் ஊழியருக்கு இந்தியப் பிரதிநிதி வழங்கிய

முதல் சம்பளம்.


காலணி விரும்பிகளைத்

தேடிவந்தவேகமான பாதனி.


வாக்களர்களைப் பார்த்துபணத்தை வீசுகிற நேரம் இது.


கவனம்


ரோசக்காரச் செருப்புகளும் இருக்கிறது.

பான் பராக் எச்சில்








விருதுநகர் சலையும் சாத்தூர் சாலையும் சந்திக்கும் சிவகாசி குறத்தி முடுக்கு. எதிரேதான் நகரின் பெரிய மயானம்.உடல் உழைப்பை வெறுத்து, உடல் மட்டும் விற்றுப் பிழைக்கும் அவளின் இரவும் பகலும். அவளைப்போலவே நிரந்தர வீடும், மனைவியும் இல்லாத வாடிக்கையாளர்களில் ஒருவன் கூலி கொடுக்காமல் தப்பித்தான். ஆடை சரிசெய்கிற நேரத்தில்மயானச்சுவர் ஏறிக்குதித்தான். இது ஒரு அப்பட்டமான ஒப்பந்த மீறல். திட்டமிட்ட ஏமாற்றல் குற்றம். சாப்பாட்டுக்கே வழியில்லா தோருக்கு நீதிபரிபாலனம் செய்ய இன்று வரை எந்த ஏற்பாடும் இல்லை. பசியும் ஏமாற்றமும் விரட்ட பின்னாலே ஓடிவந்து பிடித்துக்கொண்டாள். கொளுத்தவன் தரமாட்டான் பசித்தவன் விடமாட்டான். மோதல் உண்டானது. வீரத்துக்கு இலக்கணம் என்ன? . அது என்னவாகவும் இருந்து விட்டுப் போகட்டும். எதிர்கொள்ள முடியாமல் தப்பித்து ஓடினான்ஒரு ஆண். போகும்போது சாதிசொல்லிக் கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டுப் போனான். அவள் பதிலுக்கு '' சண்ட போடும்போது .....ச்சி, படுக்கம்போது மட்டும் ஒசத்தியோ த்தூ " என்று பான்பராக் எச்சிலோடு துப்பினாள்.
அடச்சண்டாளா,
நீசப்பயலே,

என்பன போன்ற பதங்கள் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றித் தொடர்கிறது. இந்தியாவில் உள்ள 1456 க்கும் மேற்பட்ட சாதிப் பிரிவுகளில் இரண்டு இவை. அதன் அர்த்தம் புரியாமல் கையாளுகிற வசன உற்பத்தியாளர்கள், மீதும் இந்த பான்பராக் எச்சில் விழுகிறது என்பதைப் புரிந்து கொள்வார்களாக.

6.4.09

அறிந்ததிலிருந்து விடுதலை

















கால்களிலும் வாய்களிலும்

கவசம் அணிவிக்காத வெற்றி மட்டுமே

அடிமைக் கொடையற்றதும்,

ஆதிக்கப் பிச்சையற்றதுமாகும்.


மலைமுகடோ சமவெளியோ

இணைந்து நடக்கும் தடம் எப்போதும்

ஆதிப்பொதுவை நிலைநிறுத்தும்..