20.4.09

ஊர் கடத்தல், அல்லது உள்நாட்டில் புலம் பெயர்தல்
மூன்று முறை அந்தக் கிராமத்துக்குப் போயிருக்கிறோம். மூன்றுமாத இடைவெளியில் வெவ்வேறு நேரத்தில் போயிருக்கிறோம். போன காரியம் பேட்டி எடுக்க என்பதால் அந்த ஊரின் மூலை முடுக்கெல்லாம் அலைந்திருக்கிறோம். இந்தியா முழுவதும் மொழி இன மதம் கலாச்சாரம் தாண்டி ஏழைகளின் வசிப்பிடம் ஒரே மாதிரியே இருக்கிறது.


இதை ஸ்டாலின் கே.விஜயன் இயக்கிய INDIA UNTOUCHED என்கிற ஆவணப்படமும், அகில உலக பத்திரிகையாளர் மகசசே விருதுபெற்ற சாய்நாத் தின் இழந்த ஜனநாயகம் என்கிற பிரசுரமும் அழுத்தமாகச் சொல்லுகிறது. சாய்நாத்தின் ஆய்விலும், விஜயனின் ஆவணப்படத்திலும் மதுரை மாவட்ட தீண்டாமையும் வறுமையும் இரண்டறக் கலக்கிறது.
பலதரப்பட்ட மக்களைச் சந்தித்தோம். ஆச்சரியமான ஒரு விஷயம் கண்ணில் பட்டது. எங்களின் ஆவணப்படத்தின் கரு பத்தாண்டுகளாக நடத்தமுடியாமல் போன பாப்பாப்பட்டி-கீரிப்பட்டி உள்ளாட்சித் தேர்தல் குறித்து மட்டும். ஆகவே எங்கள் பயணத்தில் கிடைத்த அதிர்ச்சியான பல விஷயங்கள், பதிவு செய்யப்பட்ட அதிர்வுகள் கூட நேரம் கருதி கத்தரிக்கப்பட்டு விட்டது. ஆவணப்படம் வெளியான பின்னால் நான் மாது, கார்த்தி, மூன்று பேரும் இது குறித்துப் பேசினோம்.அந்தத் தெருவில் இருக்கும் அணைத்து வீடுகளிலும் அடுப்பு வாசலுக்கு வெளியேதான் இருக்கிறது. வீடென்று எதைச்சொல்ல,பத்துக்குப் பத்து சதுர அடிக்குள்ளே தான் வாழ்வின் எல்லாத் தருணங்களும் நடந்து கழிகிறது. தலைமுறை தலைமுறையாக அவர்களுக்குக் காணிநிலக் கனவுக்கூட வந்துபோனதில்லை. அரிசிச்சோறும் தொட்டுக்கக் கொஞ்சம் வெஞ்சனமும் தான். எல்லா வீடுகளிலும் மிகச்சரியாக மாலை மூன்று முதல் நான்கு மணிக்குள் சமையலை முடித்துவிடுகிறார்கள். அங்கிருக்கிற யாருக்கும் மருந்துக்குக் கூட சொந்த விளைநிலம் கிடையாது. அடுத்த தெருக்காரர்களின் நிலங்களில் பண்ணை ஆளாகவோ ( கொத்தடிமைகளுக்கு மறுபெயர் ) இல்லை, கூலிக் காரர் களாகவோ இருப்பதால் அன்றைக்கான கூலியை வாங்கித்தான் அடுப்பில் உலை எற்றுகிறார்கள்.இரண்டு அங்கே பதிமூன்று வயதுக்கு மேற்பட்ட முப்பது வயதுக்கு உட்பட்ட ஒரு இளைஞனையும் பார்க்க முடியவில்லை உள்ளூரில் இருக்கிற நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த முடித்த கையோடு திருப்பூருக்கு அனுப்பப்படுகிறார்கள். அதாவது உள்நாட்டுக்குள் நாடு கடத்தப்படுகிறார்கள். ஓடுகிற பாம்பை மிதிக்கிற, இளங்கன்று பயமறியாத, பதின் வயதின் கணவுகள், கொந்தளிப்பு, எல்லாவற்றையும் திருப்பூர் பின்னலாடை பஞ்சுத்தூசிக்குள் தொலைக்கக் கொடுத்துவிடுகிறார்கள்.மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பக்கத்து ஊரில் உயர்நிலைப் பள்ளி இருக்கிறது பத்துகிலோ மீட்டர் தொலைவிலேயே ஒரு கல்லூரி இருக்கிறது. இலவச பஸ் பாஸ், கல்வி ஊக்கத்தொகை, விடுதிக்கட்டணம் எல்லாம் தரத் தயாராக இருக்கிறது அரசு. ஆனாலும் பள்ளிக்கூடம் அனுப்புவதில்லை. ஒரே காரணம் பயமறியாத அந்த இளம்வயதில் துளிர்விடுகிற காதல், கொப்பளிக்கிற கோபம், விளையாட்டு இவற்றோடு உயர்ஜாதிக்காரகளோடு உரசிக்கொள்ளும் சந்தர்ப்பம் நிகழ்ந்துவிடும். அதானால் ஏற்படும் இழப்புகளில் இருந்து தப்பித்துக்கொள்ள அவர்கள் சொந்தக் குடும்பத் தாலேயே வெளியேற்றப் படுகிறார்கள். அவர்கள ஊர் திரும்பும் போது '' வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே '' என்று பாட்டுப்பாட அங்கே எந்த நினைவுகளும் இல்லை.// என்னைக் கருவுற்றிருக்கும் போதுஎன்தாய் தெள்ளித்தின்ற மண்ணைத்தவிரஇந்தப் பரந்த தேசத்தில் எனது மண் எது //


என்று கேட்கும் ஆதவன் தீட்சண்யாவின் சனாதனத்திற்கு எதிரான

கேள்வியும்


" வெடித்துப்பிளந்த நிலத்தின் அடியில்வெறும்

எண்ணிக்கையாக வாழ்கிறார்கள்

அவர்களிடமிருந்த உணர்ச்சியும் கூட

அடித்துப்பிடுங்கப்பட்டுவிட்டது

இங்கு செலவதிற்கு துவக்கமில்லை

வறுமைக்கோமுடிவே இல்லை "பொருளாதாரப் புறந்தள்ளலுக்கு எதிரான மக்லீன் பிரபுவின் ' வீடில்லாத சகோதரன் ' பாடலும் சரிசெய்யப்படாத நிறைய்யக் கேள்விகளை இந்தச் சமூகத்தின் முன்னால் ஆக்ரோசமாக துக்கி எறிகிறது.


3 comments:

வெயிலான் said...

// உள்ளூரில் இருக்கிற நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த முடித்த கையோடு திருப்பூருக்கு அனுப்பப்படுகிறார்கள். அதாவது உள்நாட்டுக்குள் நாடு கடத்தப்படுகிறார்கள். //

ஐயோ! திருப்பூரா?

வெயிலான் said...

// ஓடுகிற பாம்பை மிதிக்கிற, இளங்கன்று பயமறியாத, பதின் வயதின் கணவுகள், கொந்தளிப்பு, எல்லாவற்றையும் திருப்பூர் பின்னலாடை பஞ்சுத்தூசிக்குள் தொலைக்கக் கொடுத்துவிடுகிறார்கள். //

பஞ்சுத்தூசி மட்டுமா? அசுத்த நகரம், சாலைகள், தண்ணீர், உணவு, கெட்ட பழக்கங்கள் இன்னும் தொலைவதற்கு பலப்பல.

- புலம் பெயர் அகதி, திருப்பூர்.

காமராஜ் said...

வணக்கம் வாருங்கள் வெயிலான்,
எப்படி இருக்கீங்க ?
என்ன ரொம்ப நாளா பதிவே இல்லை.
ஊர்ப்பக்கம் வந்தீர்களா