23.4.09

செரிக்காத நினைவுகள்
அய்யக்காளின் கண்கள் வெகுவாக மங்கிப்போனது. அவள் கண்ணை இடுக்கிக்கொண்டு புருவங்களின் மேல் கைவைத்து சாடைகாட்டுவதெல்லாம் சும்மா ஒரு போக்குக் காட்டத்தான். முழுசாகப் பார்வை மங்கிபோய்கிட்டத்தட்ட ஒரு வருசமிருக்கும். மாசிப் பொங்கலுக்கு மறுநாள் எல்லோரும் நரிக்குறத்தியாட்டம் பார்த்துக்கொண்டிருக்க மொதலாளி வாங்கிக்கொடுத்த சீமைச் சாராயம் குடித்துவிட்டு ராவெல்லாம் கதைபேசிக் கிடந்தாள். மொதலாளியின் சவரம் பண்ணிய முகமும், அவர் சிரிக்கும் போது தெரியும் முன்னத்திப் பல்லிலொரு பல் கொருவாப் பல்லும்தான் கடைசியாகப் பார்த்த காட்சிகள்.இப்போதெல்லாம் அவள் ஒலியைக் கோண்டுதான் எல்லாவற்றையும் பார்க்கிறாள். ஒருகாலடி ஓசைக்கும் இன்னொரு காலடி ஓசைக்கும் அதிக இடைவெளி இருந்தால் அது மாரப்பன் தான். அவனுக்கு ஒரு கால் ஒச்சம் அதனால் நொண்டி நொண்டித்தான் நடப்பான். அவன் வரும்போதே சாராய வாடை வரும் எனவே அவள் அவனை சுளுவாகக் கண்டுபிடித்துவிடுவாள். காலைத்தரையை விட்டு மேலெடுக்காமல் சரக் சரக்கென்று உரசிக்கொண்டு வருவது வீமன் தான். அவனிடம்மிருந்து அந்த அங்குவிலாஸ் போயிலை வாசம் வரும். போயிலை தீர்ந்து போனால் அவனுக்கு ஒரே புகழிடம் அய்யக்காள் தான். லங்கோட்டுப் பையில் கிடக்கும் சில்லறைகளை ஒரு போதும் அவன் தொடுவதில்லை. அதெல்லாம் விறகு விற்ற காசில் கிடைத்து துட்டு. இது போக மாசமாசம் கறிப் போடும் போது எப்படியும் அம்பது நூறு மிச்சமாகும் அந்தக் காசையெல்லாம் என்ன செய்கிறான் என்பது யாருக்கும் தெரியாது. அப்புறம் கம்பைத்தரையில் தட்டிக்கொண்டு வெத்திலை வாங்க வரும் நல்லம்மை, தெருவுக்குள் நுழையும் போதே பப்பாய்ங் அமுக்கிக்கொண்டு வரும் ஐஸ்க்கார கனிராசா, இட்லிக்காரப் பொன்னம்மாள் எல்லோரும் அய்யக்காளின் ஒரு நாளின் வாடிக்கைக்கரார்கள்.ஆனால் சீதைக்குட்டி வருவதைமட்டும் அவளால் கண்டுபிடிக்கவே முடியாது. அவதானிக்கும் முன்னரே பசக்கென்று மடியில் உட்கார்ந்து விடுகிற பூங்கொத்து அவள். ஒரு போதும் அவள் நடந்து வருவதில்லை. தேவதை வந்ததுபோல நினைக்காத நேரத்தில் எதிர் பாராத திசையிலிருந்து வருவாள். அய்யக்காள் காதைத் தீட்டும் முன்னதாக ஓடிவந்து விடுவாள். அவளிடம் இருந்து மணக்கிற அந்த பாண்ட்ஸ் பவுடர் வாசம் அந்தத்தெரு முழுக்க சுகந்தத்தை உண்டு பண்ணும். அவள் வந்தவுடன் அய்யக்காளின் மடியில் உட்கார்ந்து கொண்டு இடுப்பில் இருக்கும் சுருக்குப்பையைத் தடவுவாள். அப்போது அவளை இழுத்து கண்ணத்தில் ஒரு முத்துக்கொடுக்கும் அய்யக்காளுக்கு பத்துப்பைசா மட்டும் தான் செலவாகும்.

4 comments:

புன்னகை said...

நினைவுகளை கிளப்பிவிடுது
பால்யகாலத்தை
செரிக்காத / திகட்டாத நினைவுகள் உண்மை

காமராஜ் said...

வணக்கம் வாருங்கள் புன்னகை
தங்கள் கருத்துக்கு நன்றி

வனம் said...

வணக்கம் காமராஜ்

அட ரோம்ப அழகாக எழுதி இருக்கின்றீர்கள்,

லேசா பழைய நிணைவுகள் போல் இருந்தாலும், நிறைய அரசியலையும் கலந்து .....

\\மாசிப் பொங்கலுக்கு மறுநாள் எல்லோரும் நரிக்குறத்தியாட்டம் பார்த்துக்கொண்டிருக்க மொதலாளி வாங்கிக்கொடுத்த சீமைச் சாராயம் குடித்துவிட்டு ராவெல்லாம் கதைபேசிக் கிடந்தாள்.\\

தலித் அரசியல்

\\அவன் வரும்போதே சாராய வாடை வரும் எனவே \\
\\அந்தக் காசையெல்லாம் என்ன செய்கிறான் என்பது யாருக்கும் தெரியாது.\\

ஆணாதிக்க அடிமைத்தனம்

ம்ம்ம் நல்லாத்தாம்ல இருக்கு

நன்றி

காமராஜ் said...

வணக்கம் ராஜராஜன்.
ரொம்பவே சீரியஸ்ஸா இருக்கா ?
நல்ல பின்னூட்டம்.
தெம்பாக இருக்கிறது.