10.4.09

சாக்கடை விளம்பரங்கள் வழியே பாதுகாக்கப்படும் சனாதன வியாதிகள்








அடிமேல் அடி வைக்க அம்மியும் கூட நகர்ந்து வழிவிடும். மிக்ஸி, கிரைண்டர் எல்லாம் அடுப்படி ஏறி உட்கார்ந்துகொள்ளும். ஆனால் அந்தக்கருத்த மனுசன் ஒரு அகலக்கேரியர் சைக்கிளை ஆவிபோக மிதித்து, தொண்டை கிழியக் கத்ததி வியர்க்க வியர்க்க வீட்டுக்கு முன்னாள் வந்து ஒரு படி உப்பு விற்க படுகிற பாடு சொல்லி மாளாது. நல்லா அளந்து போடுப்பா என்று சொல்லுகிற அதே உப்பை அயோடின் உப்பென்று சொல்லி டாடா நிறுவனம் சுளுவாக போடு போடு என்று விற்றுத் தீர்த்து விடுகிறது. மறுபேச்சில்ல்லாமல் வாங்கிக்கொண்டு வந்து அடுப்படியில் வைத்துவிடுகிறார்கள். அங்கே பேரம் பேசுவது நாகரீகமற்ற செயலாகிவிடுகிறது. காரணம் கோதுமை நிறத்தில் ஒரு பெண் நாங்க வாங்கிட்டோம் நீங்க வாங்கலையா என்றோ அல்லது உப்புக்கு நான் கியாரண்டி என்று அடித்துச்சத்தியம் செய்கிறது. பெண்ணெப்போதும் நுகர் பொருளாக்கப்படுவது கொடுமை. அதைப்பெண்ணே விற்கிற பிரதிநிதியாவது இன்னும் கொடுமை." யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே, ரமந்தே தத்ர தேவதா ". எங்கே பெண்கள் பூஜிக்கப்படுகிறார்களோ அங்கே தேவததைகள் வாசம் செய்வார்களாம்.


இதை எதிர்ப்பவர்கள் பத்தாம் பசலியாக்கப்படுவதும் வரட்டுத் தத்துவ வாதிகளாக்கப்படுவதும் நுண் அரசியல். பெண்ணடிமை, கொத்தடிமை, வர்ணாசிரம அடிமை என எல்லாவற்றையும் ஊட்டிவளர்க்க விளம்பரங்கள் கூச்சப்படுவதில்லை.


ஒரு விளம்பரம் வந்தது. அதில் ஒரு பளபளக்கும் பங்களா. அந்தவீட்டில் ஒரு நாலு வயதுச்சிறுவன். அவனது அம்மா அப்புறம் ஒரு சமையல்காரர். அந்த சமையல்காரரை, தன்னைவிட அரை நூற்றாண்டு வயது அதிகமான பெரியவரை " ஏ முருகா " என்று ஒருமையில் கூப்பிடுவான். நிச்சயம், அதைக்கேட்கும் சிறுவர்களூக்கு காதுகளின் வழியே சாக்கடை பாய்ந்து மூளைக்குள் குடிகொள்ளும். அந்தச்சிறுவன் மூலம் எதை விற்க முயற்சிக்கிறார்கள் என்பது தெரிகிறதா ?.



இதைத் தயாரித்த தொழில் நுட்பம் தெரிந்த இயக்குனர்கள் என்ன படித்தார்கள், அவர்கள் உலகம் குறித்து என்ன புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆபாசங்களை மட்டுமல்ல, தரங்கெட்ட கலாச்சாரத்தையும் சொல்லுகிற யாரும் படைப்பாளி என்று அறியப்பட வாய்ப்பில்லை. அவர்களுக்கு வேறு வேறு பெயர்கள் இருக்கின்றன.

9 comments:

கல்வெட்டு said...
This comment has been removed by the author.
கல்வெட்டு said...

//தன்னைவிட அரை நூற்றாண்டு வயது அதிகமான பெரியவரை " ஏ முருகா " என்று ஒருமையில் கூப்பிடுவான். நிச்சயம், அதைக்கேட்கும் சிறுவர்களூக்கு காதுகளின் வழியே சாக்கடை பாய்ந்து மூளைக்குள் குடிகொள்ளும்.//

விளம்பரங்கள் செய்யும் கொடுமை சகிக்கமுடியாதது. ஒத்துக் கொள்கிறேன்.

//தரங்கெட்ட கலாச்சாரத்தையும் சொல்லுகிற யாரும் படைப்பாளி என்று அறியப்பட வாய்ப்பில்லை. அவர்களுக்கு வேறு வேறு பெயர்கள் இருக்கின்றன.//

ஆனால், கதை எழுதி இலக்கியவியாதியாக அறியப்படும் படைப்பாளி அறிவுசீவிகளும் அப்படித்தானே இருக்கிறார்கள்?

http://www.sramakrishnan.com/view.asp?id=169&PS=1

//அதனால் எங்கள் வீட்டிற்கு தினமும் தபால்காரன் வருவான். //

//தபால்காரனுக்கு எல்லா குடும்பங்களின் கதையும் தெரியும். பெரும்பான்மை போஸ்ட்கார்டுகளை தபால்காரன் படித்திருப்பான். ஆகவே அவனால் அதைப்பற்றி சொல்வதும் உண்டு.//

****
இலக்கியவியாதி செய்வதால் டிவி விளம்பரம் செய்வதும் ஞாயம் என்று சொல்லவில்லை. எந்த சமுதாய ஒழுங்களும் இல்லாத காலத்தில் இருக்கிறோம் , சாக்கடையை மூளைக்குள் எல்லாத் தரப்பினரும் பாய்ச்சுகிறார்கள். இது எல்லாம் இவர்களின் தொழில் what they do for living அதைத்தாண்டி ஒன்றும் இல்லை. கடந்து போகவேண்டிய விசயங்கள்.

இன்னொரு உதாரணம்....
http://rprajanayahem.blogspot.com/2008/09/blog-post_13.html?showComment=1221506280000#c7041447434473137092

Karthikeyan G said...

//ஒரு விளம்பரம் வந்தது. அதில் ஒரு பளபளக்கும் பங்களா. அந்தவீட்டில் ஒரு நாலு வயதுச்சிறுவன். அவனது அம்மா அப்புறம் ஒரு சமையல்காரர். அந்த சமையல்காரரை, தன்னைவிட அரை நூற்றாண்டு வயது அதிகமான பெரியவரை " ஏ முருகா " என்று ஒருமையில் கூப்பிடுவான். நிச்சயம், அதைக்கேட்கும் சிறுவர்களூக்கு காதுகளின் வழியே சாக்கடை பாய்ந்து மூளைக்குள் குடிகொள்ளும். அந்தச்சிறுவன் மூலம் எதை விற்க முயற்சிக்கிறார்கள் என்பது தெரிகிறதா ?.//

இவர்களை என்ன சார் செய்ய? :(

காமராஜ் said...

வணக்கம் தோழர் ( கல்வெட்டு )
சாமான்யர்களுக்கும் படைப்பாளிகளுக்கும்
வித்தியாசம் இருக்கிறது என்பதே.
இதில் இலக்கிய வியாதி,
மின்னணு ஊடக வியாதி
எனத்தனித்தனி ஏதும் இல்லை.
யாருக்கும் விதிவிலக்கும் இல்லை.
அருமை,
எனது கோபத்திற்கு
இன்னும் அடர்த்தி சேர்க்கிறது
உங்கள்பின்னூட்டம். நன்றி.

காமராஜ் said...

வாருங்கள் கார்த்திகேயன் வணக்கம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

காமராஜ் said...

திரு.வண்ணத்துப்பூச்சியார்,
மாப்பிள்ளை ஆண்டோ,
திரு.வைத்தி
திரு.கார்த்திகேயன்

நான்கு சுற்றத்தாருக்கும்
சச்கபயணியனதற்கு நன்றி

hariharan said...

எழுத்தாளர் பிரபஞ்சன் “ தமிழ்மொழிக்கு பூனூல் மாட்டப்பட்டுள்ளது எப்படியென்றால் 60வயது தோட்டக்காரரை வந்தான் என்றும் 45 பிரதமரை வந்தார் என்றும் எழுதுகிறது”.

சமூகம் அப்படித்தான் இருக்கிறது, பெண்கள் வீதியில் விற்கிற தள்ளுவண்டிகாய்கறி கடையில் பேரம் பேசுவார்கள், ஆனால் பளபளா சூப்பர் மார்கெட்டில் போர்டை பார்த்து போட்ட காசை கொடுத்துவிட்டு வருவார்கள். ஏனென்றால் தள்ளுவண்டிக்காரரிடம் “இருப்பிடம்” இல்லையே?

hariharan said...

இவ்வளவு காலம் இந்த மீடியாவை நம்பி மோசம் போய்விட்டோம், பாரபட்சமாக இருக்கிறது என்று இப்போது தான் உறைக்கிறது. எப்படி? நாம் எந்த சேனல்களை வேண்டுமானால் பார்க்கலாம், ஆனால் அவர்கள் நம்மை நம்பி இல்லை ஏனென்றால் அவர்களின் வருவாய் விளம்பரங்கள் அதைத்தருவது பெருமுதலாளிகள் பிறகு எப்படி மக்களுக்கான செய்தியை தரமுடியும். மீடியாவிற்கும் பெருமுதலாளிகளுக்கும் ஒரு உறவு இருக்கிறது, ஒன்று மீடியா அவர்களாலேயே நடத்தப்படுகிறது மற்றொன்று விளமபர “விசுவாசம்”.

கல்வெட்டு said...

ஹரிகரன்,
அதே, நான் கொடுத்துள்ள சுட்டிகளில் ஒருவர் கதை எழுதுபவர். இன்னொருவர் தனது சினிமா ஞாபகங்களை எழுதுபவர்.

முதலாமவர், தன்னைவிட வயதில் அதிகமுள்ள தபால்காரரை வந்தான் என்றே எழுதுகிறார். அது கதை அல்ல. தனது சிறுவயது ஞாபகங்களைச் சொல்கிறாராம்.

இன்னொருவர் ஆபிஸில் வேஅலி பார்ப்பவரை "ர்" போட்டும் மற்றவரை "ன்" போட்டும் எழுதுகிறார். என்ன செய்வது? பூனைகளின் உலகம்.