26.4.09

குறிசொற்கள் கிராமத்திலும், வலைப்பக்கத்திலும்








அந்த வயதில் விளையாட ஆளில்லாத நேரத்தில் வீட்டுத்திண்ணையில் பெண்கள் அரட்டை அரங்கத்தில் ஆட்மென் ஔட்டாக உட்கார்ந்திருப்பேன். ஊரின் உள் விவகாரங்கள் எல்லாமே அன்றைய பேசுபொருளாக இருக்கும். சாரதா டீச்சர், அம்மினி அக்கா பெயர்களோடு சில ஆண்கள் பெயரும் உச்சரிக்கப்படும். அப்போது " அந்தக்காவுக்கு என்னம்மா " என்கேட்பேன். உடனே என்னைத் தவிர்ப்பதற்கான எல்லா உபாயங்களையும் மேற்கொள்வார்கள். " விளாடப்போவானா பொட்டச்சிக சேலய மோப்பம் பிடிச்சிக்கிட்டு, எக்கா ஒம்மகெ எளவட்டமான எட்டுப்பொண்டாட்டி கட்டுவான் ": இப்படிச்சொல்லும் குருவுத்தாய் குலுக்கைக்கு பக்கத்தில் ஒரு ஆடவனோடு இருந்ததை பார்த்த என்னை நெடுநாள் எதிரியாகப் பாவித்தார்கள். குருவுத்தாயின் குருக்கீடு இன்னும் கூடுதல்சுவாரஸ்யத்தை உண்டுபண்ணும். நகராமல் அங்கேயே நங்கூரம் போட்டுவிடுவேன். அதன் பிறகான சம்பாஷனைகள் எளிய வார்த்தைகள் தான் என்றாலும் கண்டுபிடிக்கமுடியாத புதிர்களை அந்த இளவயதில் விட்டுச்சென்றது.



மாரியம்மாளின் கம்மலை வல்லவன் கழத்திட்டான்.

-----------------------------------------------------------------



அந்த மாரியம்மாளுக்கு சின்னக்காதுகள். அந்த முரட்டுக் காதுகளில் ஏழுதரம் துவாரம் போட்டும் தூர்ந்து போனது. காதில் துவாரம் இல்லை அந்த மாரியம்மாளுக்கு. பிறந்ததிலிருந்து தங்கத்தை உபயோகப்படுத்தாத அந்த மாரியம்மாளை கம்மலோடு ஒருநாளும் நான் பார்த்ததில்லை. வல்லவன் களவானி தான். அவனது பட்டப்பெயர் பாவாடை களவானி வல்லவன். ஈயச்செம்புகள், தவளைப்பானைகள் அவன் கடந்து போகும்போதே காணாமல்போகும். அவனது தேவையெல்லாம் ஒரு தரம் சாத்தூர் களப்புக்கடைச்சாப்பாடு, ரெண்டு பொட்டணம் கஞ்சா, எம்ஜீஆர் படத்துக்கு ஒரு டிக்கட் மட்டும் தான். அதற்குள் அடங்குகிற பொருளைத்தான் திருடுவான். தங்கத்தைத் திருடுகிற அளவுக்கு அவன் கெட்டவன் இல்லை. இரண்டு விஷயங்கள் புரியாமல் நெடுநாள் உறுத்தியது. அவனுக்கு பாவாடை களவானி என்கிற பட்டப்பெயர் ஏன் வந்தது ரெண்டு கம்மலைகழட்டினான் என்று பொய்ப்புகார் ஏன் அவன் பெயரில் வந்தது. கல்யாணம் ஆகாத அவனுக்கு கண்ணுதெரியாத கிழவியும், ஒரு குடிசையும் சொந்தமாக வைத்திருக்கும் மாரியம்மா மேல் ஒரு கண்.



கருப்பசாமி கடவிலிருந்து அந்தோணியம்மா வீட்டுக்கு முனிப்பாய்சல்.

-----------------------------------------------------------------------------------------



கிராமத்துக் கடவுகள் பகலிலே இருட்டாக இருக்கும் அமானுஷ்ய இடங்கள். அந்த வயதில் கள்ளம் போலீஸ் விளையாடத் தோதான படப்பு, கோழிக்கூடு, குலுக்கை மறைசல், போன்ற இடங்களின் வரிசையில் அதுவும் ஒன்று.அந்த செய்தி கேட்ட பிறகு எனது வலிபக் காலம் வரை. இரவில் தெருவைக் கடக்கும்போது எந்தக்கடவையும் திரும்பிப் பார்ப்பதில்லை. முனி என்னைப் பிடித்துக் கொள்ளும் என்கிற பயத்தில். அந்த அந்தோணியம்மா கருப்பாசமி வீடுகளுக்கு இடையில் புயல் கடப்பதைப்போல முனி கடக்கிற செய்தியை எங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் ஒரு நாள் சொன்னேன்.பத்து நிமிசம் இடைவிடாமல் சிரித்த வள்ளிமுத்து அந்த புதிரை உடைத்தான். அந்தோணியம்மா கைம்பென், கருப்பசமி கோடி வாலிபன் அவர்கள் இருவருக்கு மிடையில் கடந்து போகும் சாமக்களவும், காமக்கடத்தலும் அதுவென்று. அறைகுறையாகப்புரிந்த அந்த புதிர் முழுவதுமாகப்புரிந்தது ஒரு வாலிபச் சாமத்தில்.



இவையெல்லாம் ஒரு பத்தாண்டுகளுக்குப்பின் புரிந்தது போல இந்த வலைப் பக்கங்களில் புழங்கும் குறிசொற்களும், தலைப்புகளும், பேசு பொருளும் புரிய இன்னும் வெகுகாலம் ஆகலாம் .

15 comments:

லோகு said...

வித்தியாசமான பதிவு..

Subankan said...

இந்தியக் கிராமங்களின் இந்த பேச்சுக்கள் இலங்கை நகரத்தில் இருக்கும் எனக்குப் புதிது. ஆனால் சிரம்ப몮ட்டாலும் புரிந்து ரசித்தேன்.

காமராஜ் said...

வணக்கம் லோகு,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி.

காமராஜ் said...

வணக்கம் சுபாங்கன்.
வட்டார வழக்குகளும், கலாச்சாரங்களும்
கிராமத்துப் புழுதியில் புதைந்து கிடக்கிறது.

Karthikeyan G said...

//பிறகான சம்பாஷனைகள் எளிய வார்த்தைகள் தான் என்றாலும் கண்டுபிடிக்கமுடியாத புதிர்களை அந்த இளவயதில் விட்டுச்சென்றது.//

அமாம், நல்ல சொன்னீங்க அய்யா.. :)

//வலைப் பக்கங்களில் புழங்கும் குறிசொற்களும், தலைப்புகளும், பேசு பொருளும் புரிய இன்னும் வெகுகாலம் ஆகலாம் //

ஹா ஹா ஹா..

எனக்கும் தான் சார்.. :-)

குப்பன்.யாஹூ said...

தமிழ்நாட்டின் சிறப்பே அது தானே, மாவட்டம் தோறும் வேறு வேறு வகையான குறிச்சொற்கள், மொழி பிரவாகம்.

காலத்திற்கு ஏற்பவும் இவை மாறுகின்றன. சமீபத்திய சொற்களான , ஆணி புடுங்குதல், தங்கமணி,

குப்பன்_யாஹூ

காமராஜ் said...

வாங்க கார்த்திகேயன் வணக்கம்
நீங்களும் என்னைப்போலத்தானா
குழு சேர் இடுகை, கும்மி, 200
பின்னூட்டம். இப்படி ரொம்பப்புரியாத
நடைமுறைகள் இருக்கிறது.

காமராஜ் said...

நன்றி குப்பன் யாஹூ சார்,
மொக்க, கலாய்ப்பு, இப்படியான
பதங்களும் எந்த அச்சு ஊடக,
மின்னனு ஊடக துணையில்லாமல்
மிகப் பிரபலமாகிவிடுகிறது.

Unknown said...

மாமா! உங்கள் எழுத்துக்களில் மண்மனக்கின்றது.இன்று நகரங்களில் உள்ள நமக்கு கிடைத்த தனிமையை பெறுவதற்கு நாம் என்னென்ன இழந்துள்ளோம் என்பதை மிக அழகாக உணர்த்துகிறது உங்கள் பதிவு.
(பின் குறிப்பு:இந்த உணர்வை பகிர்வதற்க்கு கூட கணினியும் தொந்திரவு செய்யாத தனிமையும் எனக்கு தேவைப்படுகிறது.)

☼ வெயிலான் said...

அங்கிருந்து வந்தாலும் அந்நியமாகி நிற்கின்றன சொற்கள்.

geevanathy said...

நன்றி
வித்தியாசமான ஒரு பகிர்வு

வட்டார வழக்குகளும், கலாச்சாரங்களும்
கிராமத்துப் புழுதியில் புதைந்து கிடக்கிறது.

முற்றிலும் உண்மை...

காமராஜ் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆண்டோ.

காமராஜ் said...

வாருங்கள் வெயிலான்.
கருத்துக்கு நன்றி.

காமராஜ் said...

ஜீவன் எப்படி இருக்கிறீர்கள்.
இங்கே மக்கள் எல்லோரும்
அனுதாபத்திலிருக்கிறார்கள்.
தேர்தல் வியாபாரத்தில் அனுதாபமும்
விலைபோகிறது.

geevanathy said...

ஜீவன் எப்படி இருக்கிறீர்கள்.
இதுவரை நலம்...

இங்கே மக்கள் எல்லோரும்
அனுதாபத்திலிருக்கிறார்கள்.
அறிகிறேன்.அவர்களது அன்புக்கு தலைவணங்குகின்றேன்.