30.9.09

இன்றய புரட்டுச் செய்திகள், நாளைய போலி வரலாறு

இளம் புரட்சியாளர் ராகுல் காந்தி உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் சாப்பிட்டார் என்பதை தினமலர் நாளேடு புகைப்படத்துடன் செய்தியாக வெளியிட்டிருந்தது. இதைப்படித்த பக்கத்து வீட்டுப்பாட்டி " ஒருத்தர் வீட்ல இன்னொருத்தர் சாப்டறதெல்லாமா போடுவாங்க, என்னடா இது எழவாப்போச்சு" என்று நாளேடை மடித்து வைத்து விட்டுக் கிளம்பிவிட்டார். அம்பானிகளின் வீட்டிலும், ஐ எம் எஃப் போடுகிற எச்சிலிலும் கைநனைக்கிறவர்களுக்கு உழைக்கும் மக்களின் வீட்டில் சாப்பிடுவது கட்டாயம் புரட்சிதான் என்று நாம் புரிந்து கொள்ளவேண்டும். அல்லது உழைக்கும் மக்கள் உழுது பயிரிட்டு வேர்வை கலந்து கொடுக்கிற தாணியங்கள்தான் ஆள்பவகளுக்கும் உணவாகுது, ஆண்டவனுக்குக் கூட நெய்வேத்தியம் ஆகுது என்பதையும் சேர்த்து சொல்ல வேண்டியதிருக்கிறது. அவரது தந்தை ஓய்வெடுக்க அந்தமான் தீவுகளுக்குப் போனபோது திருவணந்தபுரத்திலிருந்து பாயாசமும், தஞ்சாவூரிலிருந்து நெய்யும் விமானம் மூலம் தருவிக்கப்பட்டது என்பதை தினமலர் அப்போது வெளியிடவில்லை. அல்லது ராகுல் காந்தியின் ஒரு நாள் செலவு என்ன, ஒரு நேரச் சாப்பாட்டின் விலையென்ன என்பதையும் சேர்த்து புள்ளிவிபரத்தோடு எழுதியிருந்தால் கூட தினமலர் போன்ற நாளேடுகளுக்கு ஓரளவு ஒட்டியிருக்கிறது என்று நம்பலாம். ஆனால் இவர்கள் எல்லாவற்றையும் உதுத்தவர்கள். உதுத்தது ஊருக்கெல்லாம் பெருசு.


இன்றைய செய்தி நாளைய வரலாறு. இன்றைய செய்திகளில் வராத எத்தனையோ நல்ல செய்திகள் நாளைய வரலாற்றில் இடம்பெறாமல் போகும். அப்படிப்போன ஒருவர்தான் தோழர் சீனிவசராவ். சுதந்திரப் போராட்டத்தோடும், உழைக்கும் மக்கள் எழுச்சியோடும், விவசாயிகளின் ஒற்றுமையோடும் அவரது வாழ்வு பிணைக்கப்பட்டிருந்தது. வெண்மணிப் படுகொலைகளில் தாழ்த்தப்பட்ட விவசாயிகளின் ஆதர்சமாகவும், அரணாகவும் இருந்தவர். ஆந்திரத்திலிருந்துவந்து பொதுவுடைமையை விதைக்க வந்த அவர், அதை விவசாயிகளின் மனதிலும், விவசாயக்கூலிகள் மனதிலும் ஆழமாக ஊன்றிவைத்தார்.தனது தலைமறைவுக் காலம் முழுக்க ராமநாதபுரம் மாவட்ட உழைக்கும் மக்களின், தலித்துகுகளின்குடிசைகளில் மட்டும் தங்கியிருந்தார் என்பது இந்த நேரத்தில் அவரது நினைவுநாளில் நினவு கூறவேண்டியது.


அதுபோலவே 1946 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் வத்திராயிருப்பில் விவசாயிகள், விவசாயக்கூலிகள் இணைந்துஒரு போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள் என்பது படிக்கிற போது ஆச்சரியமும் வியப்பும் கூடவே பெருமிதமும் அளிக்கிறசெய்தி. வத்திராயிருப்பு காவல் நிலையத்தை முற்றுகை செய்து மாநிலத்தை உலுக்கியது அந்த எழுச்சி.அதற்குப்பெயர் ''சுத்தவாரப்போராட்டம்'' என்பதும், ஜாதிகடந்து பல்லாயிரம் தோழர்களை ஒருங்கினத்த அந்தப் போராட்டத்தில் சங்குப்பிள்ளை சோனைத்தேவர் ஆகிய இருவரும் களப்பலியானார்கள் என்பதும் புல்லரிக்கச் செய்யும் பக்கத்து வீட்டுக்கதை. வீரபாண்டியக் கட்டபொம்மன், வாஞ்சிநாதன், வ உசி , திருப்பூர் குமரன், என்கிற பட்டியலோடு முடிந்து போனதாக நினைத்துக் கொண்டிருக்கும் தமிழக சுதந்திர வரலாற்றில் கம்யூனிஸ்டுகள் பங்கு வெகுவாக மூடி மறைக்கப்பட்டிருக்கிறது. சிவகாசிக்குப் பக்கத்திலிருக்கும் ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த தியாகி பி.ராமச்சந்திரன் என்பவர் சுத்தவாரப் போராட்டதில் தலைமை தாங்கியர்களில் ஒருவர் என்பதையும், அவர் தோழர் சீனிவாசராவோடு பெரும்பகுதி தலைமறைவாய் அலைந்தவர் என்பதும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிஜ வரலாறு.

29.9.09

புதுவிசை வாசகர் சந்திப்பும் பதிவுகளும்.

புதுவிசை 25 வது இதழ் வெளியானதின் பொருட்டு 9.9.2009 அன்று மாலை சென்னை தேவநேயப்பாவாணர் நூலக அரங்கில் ஒரு வாசகர் சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. தமுஎச பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன், எழுத்தாளர் பிரபஞ்சன், பெண்ணிய ஆர்வலர் முனைவர்- ஆய்வாளர் வ.கீதா, கவிஞர் குட்டிரேவதி, இதழியலாளர்- உயிர் எழுத்து ஆசிரியர் சுதிர் செந்தில், முனைவர் ரவீந்திரன், இந்தியமாணவர் சங்க செயலாளர் செல்வா, நாடக ஆசிரியர் பிரளயன், பன்முகக் கலைஞன் புதுகை பூபாளம் பிரகதீஸ்வரன், ஆசிரியர் குழுவிலிருந்து பெரியசமி, ஆதவன்தீட்சண்யா பங்கேற்பு செய்தார்கள்.


முதலில் பேசிய தோழர் ச.தமிழ்ச்செல்வன் விசை ஆரம்பிக்கப்பட்டதையும் அது தொடர்ந்து வெளிவர நேர்ந்த சிக்கல்களையும்விவரித்தார். கூடவே புதுவிசை பேசுகின்ற விஷயங்கள் தமிழ் எழுத்துலகில் அடர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனவும். தாங்கள் ஆசைப்பட்ட அளவு இலக்கிய முகம் இல்லை எனவும் சுருக்கமாகத் தனது கருத்துக்களை முன்வைத்தார். புதுவிசையை திருமங்கலத்தில் ஆரம்பித்தோம் எனும் தகவலைச் . 25 இதழ்கள் கடந்துவந்த புதுவிசை பல சிறுகதை எழுத்தாளர்களை, கவிஞர்களை உருவாக்கியிருக்கிறது. எழுத்தாளர் லட்சுமணப்பெருமாள் நான், புதுகை சஞ்சீவி, அருள் எழிலன், ஸ்ரீவில்லிப்புத்தூர் சிவகுமார், தஞ்சை சாம்பான் இப்படி பல அறிமுக எழுத்தாளர்களை ஊக்குவித்த வரலாறு ஜஸ்ட் லைக்தட் நிராகரிக்கப்பட்டதை என்னால் ஜீரணிக்கமுடியவில்லை.


இதை எங்கள் அன்புச்சகோதரி கவிஞர் குட்டி ரேவதியும் கூட கடந்து போனதுதான் மனதுக்கு நெருடலான சங்கதி. அங்கிருந்தே எனக்கு அந்த விழா மீதான நெருடல்கள் ஆரம்பித்திருந்தது. நான் மேடைப்பேச்சின் மீது மிக மிக எதிர்க் கருத்து வைப்பதற்கு ஏதுவான கருத்துக்கள் துவங்கியிருந்தது. ஆம் மேடையில்பேசிய முனைவர் வ.கீதா, குட்டி ரேவதி, முனைவர் ரவீந்திரன் ஆகியோர் புது விசை குறித்துப்பேச எடுத்துக்கொண்டது மிகக்குறைவு. அவர்கள் முழுக்க முழுக்க ஈழப்பிரச்சினை குறித்த விவாதங்களையே வெகுவாக முன்வைத்தார்கள். எழுத்தாளர் பிரபஞ்சன் தமுஎகச மாநில மாநாட்டில் சொன்ன கதைகளையே மூன்றாம் முறையாக மீண்டும் சொன்னார்.


முனைவர் வ.கீதா 24 மற்றும் 25 வது இதழ்களில் வந்த கட்டுரைகளில் இரண்டு அல்லது மூன்றை அடிக்கோடிட்டு விட்டு விசைசார்ந்த உரையாடல்களைச் சுருக்கிக் கொண்டார். எனவே மேடைப்பேச்சு என்பது நபர் சார்ந்த இசம் சார்ந்த மயக்கங்களின் வெளிப்பாடாகவே பெரும்பாலும் சுருங்கிப்போவதை தவிர்க்க இயலவில்லை. ஆம் இவ்வளவு மகாமித்யங்கள் பொருந்திய மாடு இந்த கொம்பிலே தான் கட்டப்பட்டிருந்தது என்று முடிப்பதுதான் மேடைப்பேச்சின் சாமர்த்தியமாகிறது. உலகின் மனிதாபிமானமுள்ள யாரும் நிராகரிக்க முடியாத ஜெனோசைட் ஈழப்பிரசினை. யாரும் காதுகொடுத்துக் கேட்க இயலாத அவலம் மூன்று லட்சம் தமிழகதிகளின் வாழ்நிலை. இதற்கெதிராக பேசும் யாரும் மனிதாபிமான விரோதிகள் என்பதில் இரண்டு கருத்தில்லை. ஆனால் ஒரு சிற்றிதழின் வாசகர் சந்திப்பில் உரையாடல்களே இல்லாமல் பேச்சாளர்கள் கருத்தாக்ரமிப்பு மட்டுமே மிஞ்சிப்போனது தான் கஷ்டமாக இருக்கிறது. தூரத்துப்பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி.


ஆதவன் தன் ஆசிரியர் உரையில் பேசிய விஷயங்களில் வெகுவாக ஈர்த்தது, தமிழ்நதி - ஆதவன் விவாதத்தில் பெண்ணியம் சார்ந்த சில சில சொல்லாடல்கள் குறித்து அவர் பகிரங்க மன்னிப்புக் கோரியவாத்தை. அவரது தர்க்க ஞாயத்தையும், ஒடுக்கப்பட்டவர்களின் குமுறலையும், ரசிக்கத்தக்க நையாண்டியையும் தாண்டி அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுதான். தலைவிரி கோலமாய், மூக்கைச் சிந்திக்கொண்டு போன்ற சொல்லாடல்கள் ஆதவன் எழுத்தில் ஊடுபயிராவதைச் சொன்னார்வ.கீதா. அந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு ஆதவன் மண்ணிப்புக் கோரியது தான் நான் சொல்ல வந்தது. பெரும் சர்ச்சைக்குள்ளான ஒரு கருத்தில், தனது எழுத்துக்களில் வந்த பிறழ்வு குறித்து மறுபரிசீலனை செய்வது அலாதியான விஷயம்.அவர் பகிரங்க மன்னிப்புக் கோரியது இலக்கிய உலகில் கவனம் பெறத்தக்கது. ஒரு முழு இரவு நானும் தோழன் மாதுவும் இந்தப் பிரச்சினை குறித்து தொலை பேசியில் ஆதவனிடமும், தமிழ்நதியிடமும் பேசியதையும் நேர்மையாக நினைவு கூர்ந்தார். கீழ்நிலை மக்களுக்காக எழுதுபவன் பெண்கள் குறித்த ஆணாதிக்க அடிப்படை வாதச் சொல்லாடல்களை எழுதக்கூடாது என்று சொன்ன எங்கள் இருவரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதள்குள் அது தேசம் நெட்டில் பிரசுரமாகிவிட்டது. அந்த வெப்பத்தில் கண்டு கொள்ளப்படாதது என்னுடைய மற்றும் தோழன் மாதவராஜின் குறுக்கீடு. அந்த விவாதம் வேறு திசை நோக்கிப் பயணமான போது நான் வெளியிட்ட பதிவு மிகத் துச்சமாக ஒதுக்கப்பட்டது. காரணம் இங்கே எல்லாம் பிரபலத்தின் மூலமே கணக்கிடப்படுகிறது.


ஆம் தோழர் தமிழ்நதி எனக்கெழுதிய பதில் பதிவில் ஒரு காமராஜ் சொல்லுவதற்கும், ஒரு ரஜினி சொல்லுவதற்கும் அளவுகோல் மாறுபடும் என்கிற கருத்தில் தனது தர்க்கத்தை வைத்தார். தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் இல்லை. இருக்கிறது என்று எவரேனும் வாதிட வந்தால் எழுதுவதை நிறுத்திவிட்டு வாருங்கள் . அது தான் உங்கள் வாதத்துக்கு நீங்களாவது உண்மயாய் இருப்பதாகும். இன்னொன்று சாகும் வரை இது போன்ற விவாதத்துக்கு ரஜினி ( ரஜினி இமேஜ் உள்ள எழுத்தாளர்களும்) வரமாட்டார் என்பது தான் கசக்கும் நிஜம். அதுதான் க்ராப்ட்மென்ஷிப், அல்லது தக்கவைத்தல். தேசம் நெட்டிலும், கீற்றுவிலும் இந்த இரண்டு கட்டுரைகளுக்கும் இடையில் வந்த எனது கட்டுரை ஜாய்சில் ஒதுக்கப்பட்டு விட்டது. காரணம் சண்டையைத் தூண்டிவிடும் எந்த வார்த்தையும் அதில் இல்லை என்பதுதான். அது தான் இன்றைய பெரிய்ய பிரச்சினை. எழுத்து என்பது வெறும் WWF மட்டுமல்ல என்கிற எனது வெள்ளந்திக் கருத்து போய்யாகிப் போகலாம். எழுத்து பொய்யாகிப் போவதில்லை.


அரங்கத்தின் குளிரும் அமைப்பும் மேடைப் பேச்சாளர்களின் பேச்சைப் போலவே ஒட்டாமல் இருந்தது. உயிர் எழுத்து ஆசிரிய சுதிர் செந்தில் சொன்னது போலவே பார்வையாளர் பகுதி இறுக்கமாகவே இருந்தது. பார்வையாளர் பகுதியிலிருந்து அதாவது வாசகர் பகுதியிலிருந்து கேள்விகள் விவாதங்கள் வருமென எதிர்பார்த்த எனது ஆவல் திடுமெனக்கழிந்தது. இதுகாறும் வெளியில், புதுவிசைகுறித்த பல ஹேஸ்யங்கள், கேள்விகள், நெருடல்கள் போன்றவற்றை முன்வைத்த பெரும்பாலான வாசகர்கள் வந்திருந்த போதும் கூட அரங்கில் கேள்விகள் வரவில்லை. மேடைப்பேச்சின் கூறுகள் அறியாத நானும், பெரியசாமியும் மைக்கைத் தொட்டுவிட்டு திரும்பி ஓடிவந்து விட்டோம். எதிர்பார்த்த அளவு தனது பங்களிப்பைச் செலுத்தமுடியாமல் தோழர் பிரளயனும் பார்வையாளர்களும் திரும்பிப்போக நேர்ந்தது, நிகழ்வின் முடிவில்

28.9.09

கமல் ஒரு காமன் மேன் இல்லை.

கோவில்பட்டி தியேட்டருக்கு போகும்போது ஒரு பரபரப்பு இருந்தது. நுழைவுச்சீட்டு கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பரபரப்பு. வரிசையில் கடைசி ஆளாய் நின்ற போதும் அந்தப்படபடப்பு குறையவில்லை. இந்த முப்பது வருடங்களில் எத்தனை முறை ஹவுஸ்புல் பலகை தொங்கியதைப் பார்த்துவிட்டு, நுழைவுச்சீட்டு கொடுப்பவரிடத்தில், காவலாளியிடம், சைக்கிள் ஸ்டாண்ட் காப்பாளரிடம் தொங்கோ தொங்கென்று தொங்கியிருக்கிறோம். அதன் நீட்சியாகப் பரபரப்பு இருந்ததில்ஆச்சரியம் இல்லை. நுழைவுச்சீட்டுக் கிழிக்குமிடத்தில் அரசியல் கலப்படமில்லாத தொழிற்சங்கச் செயலாளர் ஒருவர் கௌரவ மேலாளராகி கிழித்துக்கொண்டிருந்தார். பெண்களுக்கு ரூ 10ம் ஆண்களுக்கு ரூ40ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இது ஒன்றும் மானியமோ, ஒதுக்கீடோ இல்லை. இப்போதெல்லாம் பெண்கள் தியேட்டர் பக்கமே வருவதில்லையாம். அதுதான் இந்தச்சலுகை. ஆனாலும் கூட பின்னிருக்கைகள் மட்டும் நிறம்பியிருக்க சினிமாக்களில் வரும் பாழடைந்த பங்களா மாதிரித் தியேட்டர் தெரிவதைத்தடுக்க முடியவில்லை. மாற்றம்.


ஆனால் உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தில் எதிர்பார்த்ததை விட அதிகப்பரபரப்பு. ஒரு டூயட் இல்லை. இரும்புக் கம்பியைக்கட்டித் தொங்கவிட்டு அந்தரத்தில் குட்டிக்கரணம் போட்டு சண்டையிடுகிற காட்சிகள் இல்லை. கதாநாயகி இல்லை. கடைசி வரையில் கதாநாயகனுக்குப் பேரில்லை. படம் சுவாரஸ்யக் கண்ணிகளைத் தொடுத்துக்கொண்டே வேகமெடுக்கிறது. இதுவும் தமிழ்திரையுலகம் சந்தித்திருக்கிற மாற்றம். மூன்று தீவிரவாதிகள் வெடிகுண்டு வெடித்துச் சாகிறவரையில் கமலஹாசனை கண்டுபிடிக்க போலீஸ் அவிழ்க்கிற முடிச்சுகள் அவரை ஒரு முஸ்லீம் என கருதவைக்கிறது.தான் ஒரு முஸ்லீம் இல்லை என்பதை ஆணித்தரமாக நிரூபிக்கிறார்.


தீவிரவாதி ஒருவன், ஆரிப் என்னும் காவல் அதிகாரியிடம் சொல்லும் கதையை மீறி அவர் கடமை மிக்கவராக மட்டும் முன்னிறுத்துவதும், கமல் சொல்லும் கதைகேட்கிற ஆய்வாளர் முதல் முதன்மைச் செயலாளர் வரை ஏன் கமிசனர் மோகன்லால் கூட மனம் மாறுவதான சித்தரிப்பு திரைக்கதையில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம். இது நாயகன், இந்தியன், ரமனா, மலையூர் மம்பட்டியான் போன்ற நெகடிவ் ஹீரோக்களை வெகுமக்கள் கப்பாற்றுவதான இமேஜ் பில்டிங் சித்தரிப்பு.ஆக இந்தப்படத்தில் கமல் ஒரு காமன் மேன் இல்லை. ஒரு கைதியின் டைரி போன்ற படங்களோடு கூடிய நாயகன் தான்.


அப்புறம் அண்ணா நகர் காவல் நிலையத்தில் பொறுப்பிலிருக்கிற இன்ஸ்பெக்டர் கேனையாக சித்தரிக்கப்படுவதும் முதல் முறையல்ல. அபூர்வ சகோதரர்கள் போன்ற படங்கள் தொடங்கி பல படங்களில் இவருக்கு இதுதான் வேலை. இதில் பெண்களைக் கிண்டலடிக்கும் தத்துவ காமெடி கூடுதலாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட கேனை இன்ஸ்பெக்டர் இறுதிக் காட்சியில் தான் உருவமைத்த கணினி ஓவியத்தைத் தானே மறுதலிக்கிறார். தமிழ்ச் சினிமா உலகத் தரத்துக்குப் போனாலும் புளிமூட்டை ராமசாமி, போன்ற ஐம்பது வருட தமிழ்சினிமா கதை சொல்லலிருந்து தடம் மாறவில்லை என்பது நிரூபணமாகிறது. நிருபராக வரும் நாதசா புகை பிடிப்பவராகக் காட்டவேண்டிய அவசியம் என்ன என்பதும் துருத்திக் கொண்டிருக்கும் கேள்வி.


படம் முடிந்து திரும்பி வரும்போது மோகன்லால் மாதிரியே ஐம்பது பர்வையாளர்களும் தியேட்டரைக் காலி பண்ணிக் கொண்டு திரும்ப வேண்டியதிருக்கிறது. அதற்குப்பிறகு வெற்றுத் தியேட்டரில் மோகன்லாலின் வாய்ஸ் ஓவர் அசரீரி போல் கேட்டுக் கொண்டிருக்கிறது. ரீல் ஓடி முடிந்த பின்னர் தானே, ஆபரேட்டர் படத்தை நிறுத்த முடியும். துடைத்துச் சுத்தப்படுத்திசாமி கும்பிட்டுவிட்டு பொங்கல் ,பொறி, தேங்காய், சுண்டல் வீட்டுக்கு எடுதுக்கொண்டு போகமுடியும். அவர் முஸ்லீமாக இருந்தால் கூட.

26.9.09

சம்பாரி மேளத்தின் உச்சமும், சில இழப்புகளின் மிச்சமும்.


திடுக்கிட்டு முழித்துக்கொண்டபோது கண்ணெரிச்சல் அதிகமாக இருந்தது. அது இரவு பணிரெண்டு மணி. பேருந்து திருப்பத்தூருக்கும் காரைக்குடிக்கும் நடுவில் எஸெஸ் கோடையைத் தாண்டிப்போய்க் கொண்டிருக்கிறது. சுருண்டும் நிமிர்ந்தும் குரட்டை விட்டும் அவரவர் வசதிக்கு பயணிகள் எல்லோரும் தூங்கிக்கொண்டிருந்தனர். மூன்றாவது இருக்கையில் ஒரு பச்சைச்சட்டைக்காரர் பக்கத்துப்பயணிமேல் மொத்தமாக சரிந்து கிடந்தார். மதுரையில் ஏறும்போது எல்லோரது கவனத்தையும் தன்பக்கம் திருப்பிய கரைவேட்டிக்காரர், பேருந்தின் முகட்டைப்பார்த்து வாயைப்பிளந்து தூங்கிக்கொண்டிருந்தார். பகலின் ஒப்பனைகள் கலைந்துபோய் நிஜ முகங்களோடு பயணப்படுகிற இரவு.


அப்போது அடிக்கிணற்றில் பதுங்கிக்கிடக்கும் ஜீவராசிகளை மெல்ல மெல்ல மேல்தளத்திற்கு வந்து மிதக்கிற நேரம். அந்த மங்கியஒளியில், முகங்களின் மேல் திரையிடப்படும், மனஓட்டங்கள் துள்ளியமான ஊடகமாக இருந்தது.
தீராத வயிற்று வலிக்காரன் முகத்தில் தேங்கிப்போன இறுக்கம் தெரியும். அதிகாரிகள் எப்போதுமே அரிய வகை உயிரினத்து முக பாவங்களைப் பிரதிபலித்துக்கொண்டே தூங்குவார்கள். அந்த முகங்களின் உதவியோடு தான் பெரும்பாலும் டைனசர், எம் ஐ பி ,வேற்றுக்கிரகத்து ஜீவராசிகளின் முக அங்க சேஷ்டைகள் உருவாக்கப்படுகின்றன. குழந்தைகள் எப்போதும் மலர்களைக்குவித்து வைத்ததுபோல் தூங்குவார்கள். அவர்களுக்கு மட்டுமே நித்திரையின் போது சிரிக்கிற சிலாக்கியம் வாய்க்கும். அந்தக் குழந்தைகளோடு நிலவில் கடவுள் விளையாடுவதாய், கிராமத்து தாய்மார்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.


ஓவியர்களின் முகங்களில் பதினான்குக்கும் மேற்பட்ட வண்ணங்கள் தெரியும். சிலரது முகங்களில் கவிதை வரிகளை வாசிக்கலாம். மானுடசமுத்திரம் நானென்று கூவு, எனும் சேர்ந்திசைப்பாடல் கேட்கலாம். பெரும்பகுதி இரவுகளை பேருந்து இருக்கைகளில் கழித்து விட்ட சம்பத்தின், கனவு கலைந்து விட்டது, ஒரு நல்ல கனவு கலைத்துவிடப்பட்ட சோகத்திலிருந்து மீள சில கணங்கள் தாமதமானது.


சமீப நாட்களை அருளானந்தம் மட்டுமே ஆக்ரமித்திருந்தார். வாடிக்கையாளரினுடனான வார்த்தை மோதலைக் காரணம் காட்டி நிர்வாகம் அவரை தற்காலிக இடை நீக்கம் செய்திருந்தது. அவருக்காக பிராது கொடுத்த வாடிக்கையாளரைச் சமாதானப்படுத்தி, செயற்குழுக்கூட்டி அங்களாய்த்து, நிர்வாகத்துடன் சமரசம் பேசி, குடும்பத்தாருக்கு நம்பிக்கை சொல்லி, இடயிடையே பணிக்குப்போய் எப்பொழுதாவது சாப்பிட்டு, அரைத்தூக்கம் போட்டு, பத்துப்பதினைந்து பகலிரவுகள் கழிந்துபோனது.
இந்த இருபத்து ஐந்து வருசத்தில் அவருக்கென நாற்காலி ஏதுமில்லாத குமாஸ்தாவாக அவர் இருந்தார். அதில் உட்கார்ந்து ஒரு முழு வங்கிக் குமாஸ்தாவாக வேலை பார்த்தது குறைச்சல். சங்கச் சோலியாய் அலைந்ததுதான் அதிகம்.


இந்தியாவின் அணைத்து மாநிலப் பெரு நகரங்களுக்கும் செயற்குழுவுக்காகவோ, பொதுக்குழுவுக்காகவோ பஸ்ஸிலும், ரயிலிலும் பயணப்பட்டுக்கொண்டே பாதி இரவுகளைக் கழித்து விடுவார். மீதி இரவுகளுக்கென செயற் குழுக்கூட்டங்கள். சாயங்காலம் ஆறு மணிக்கு ஆரம்பிக்கவேண்டிய கூட்டம் ஒன்பது மணிவாக்கில் பாதிப்பேரோடு ஆரம்பித்து நீண்டுகொண்டே போகும். சாமத்துக்கும் பிந்தி வந்து படுப்பதுவும், சில இரவுகளில் வராமல் போவதும் அவரது ஆத்தாவுக்கு பெருத்த சந்தேகங்களை பண்ணியது. ''கிடக்காவல் இருக்கிறவங்கூட ராத்திரிச்சுருட்டி மடக்கித் தூங்கிர்ராங்க அப்படியென்ன அரம்மணச் சோலியோ '' அவரால் ஆத்தாவைச் சமாதானப்படுத்தத் தெரியவில்லை.


தர்ணா, பெண்டௌன் ஸ்ட்ரைக், செயற்குழுக்கூட்டம் போன்ற சொற்கள் புழங்குகிற தொழிற்சங்கத்தைப் பற்றி அந்தந்த ஊழியர்களே புரிந்துகொள்ள முடிவதில்லை. ஒவ்வொரு தர்ணாவிலும் சிக்காக்கோவில் தொடங்கி சிங்காரவேலர் வரை சொல்லவேண்டும். மக்குப்பிள்ளைக்கு கணக்குப்பாடம் மாதிரி இருக்கிற இதை வாழ்நாள் முழுக்க அடுப்பங்கறையிலும், வயக்காட்டிலும் தொலைத்துவிட்ட ஆத்தாவிடம் சொல்லிப்புரிய வைக்க இயலவில்லை. மருமகள் வந்து மகனைத்திருத்துவாள் என்ற நம்பிக்கையில் சம்பத்துக்கு கால் கட்டு போடப்பட்டது. எல்லாம் கொஞ்ச நாள் தான்,


பட்டுப்புடவையின் சரசரப்பும் ரோஜா மாலையின் வாசமும் தீர்ந்துபோவதற்குள் அவருக்கு செயற்குழுக் கூட்டத்துக்கான அழைப்புக் கடிதம் வந்தது.
புது மனைவியின் கண்களில் நீர்கோக்க மீண்டும் ஜோல்னாப்பை தூக்கி கிளம்பி விட்டார். போன இடத்தில் வேலை அவசரம் என்று வழக்கறிஞரைப்பார்க்க சென்னைக்கு அனுப்பியது சங்கம். அங்கிருந்து பக்கத்துவீட்டுக்கு தொலைபேசியில் தகவல் சொல்லிவிட்டு கிளம்பிப்போனார். வீடு திரும்ப நான்கு நாள் ஆனது. திரும்ப வீடு வந்தபோது புதிதாக வாங்கிக்கட்டிய ஆட்டுக்குட்டியைப்போல மருங்க மருங்க முழித்துக் கொண்டிருந்தாள். ஆத்தாவோடு சேர்ந்து எழுமிச்சை அறுத்துக் கொண்டிருந்தவளின் கண்கள் இவனைப் பார்த்ததும் கலங்க ஆரம்பித்தது.
''இங்க பாரு அறைக்க குடுத்த மசாலாப்பொடிய மறந்துட்டு வந்துட்டென், நா ஒரு துப்புக்கெட்டவ'' என்றுசொல்லிய படி ஆத்தா கூடையைத் தூக்கிக்கொண்டு கிளம்பிப் போய்விட்டாள்.


கொல்லையில் பல் விளக்கிக்கொண்டிருந்த சம்பத்தை ஓடி வந்து ஆவிப் பிடித்துக் கட்டிக்கொண்டு அழுத தருணம் விலை மதிப்பற்ற கூடலின் தருணம். அப்புறம் தலைப்பிரசவத்தின் போது எங்கோ கோழிக்கோட்டில் இருந்தேனென்று ஒரு வாரம் கழித்து திரும்பி வந்தார். இனி அவரை திருத்த முடியாதெனத் தீர்மாணமானது. இப்போது வீடு புத்தகங்களும் சுற்றரிக்கைகளும், தோழர்களும் புழங்கும் இடமாக மாறியது. மனைவி, சாமம் தாண்டி நாலு மணிக்கு வந்தாலும் கதவு திறந்து சாப்டீங்களா கேட்கும் பாங்குடைய தோழரின் துணையானார்கள். பெண்மக்கள்


'' அப்பா டெல்லிக்கு ஜென்ரல் கௌன்சில் மீட்டிங்குக்கு, அடுத்த பதினெட்டாம் தேதி தான் வருவாங்க '' என்று சொல்லும் சமத்துப்பிள்ளைகளாக மாறினார்கள். இரவுகள் தூங்குவதற்காக மட்டுமில்லை என்றாகிப்போனது. சாமம் கடந்தும் நீண்டுகொண்டே போகிற செயற்குழு கூட்டங்களில், கண் சொருகித் தலை ஆட்டினால் போதும் '' அந்தா பேய் பிடிச்சிரிச்சி, மூர்த்தி போய் மூஞ்சக்கழுவிட்டு வாப்பா,'' கடுகடுத்து விரட்டுவார். ''ஒரு நாள் தூக்கத்த தியாகம் பண்ணக்கூட முடியாம, பெருசா நாம என்ன சாதிக்க முடியும்'' என்று அங்களாய்த்துக்கொள்வார். நாம் ஒரு நிமிடம் தாமதித்தால் ஓராயிரம் அடிகள் பின்தங்கி விடுவோம் என்று எச்சரிப்பார். சாதாரண நாட்களில் கூட இரவு பணிரெண்டு மணிக்கு படுப்பதும், அதிகாலையில் எழுந்து விடுவதும், அடித்துப்போட்டமாதிரித் தூங்குகிறவர்களை தூங்கவிடாமல் எழுப்பி விடுவதும் இயல்பாகிப்போயிருந்தது. தங்கும் விடுதிகளில், அதிகாலையில் அடுத்த நாளுக்கான உடைகளைத் துவைத்துப் போடுவதில் குறியாய் இருப்பார்.



விடுதியில்லாத ஊர்களில், விடுதிக்கு காசு இல்லாத நாட்களில் தோழர்களின் வீடுகளில் தங்கிவிடுவார். அங்கு கூட காலை வேளைகளில் சோப்பும் துணியுமாகத்தானிருப்பார். அவருக்கு வீடென்ற ஒன்று இருப்பதாக யாரும் எளிதில் நம்ப முடியாத ஊர்சுற்றி. ஆனாலும் எல்லா நடுத்தர மாந்தர்களைப்போலவே அவருக்கும் வீடு கட்டவேண்டிய கனவு வந்தது.
அந்த வீட்டின் ஒவ்வொரு செங்கலிலும் அவரது வீட்டாரின் கனவுகள் எழுதப்பட்டிருந்தது.


ஓவ்வொரு செங்கலிலும் தினம் தினம் நீர் சொரிந்து குளிரூட்டினார். பார்த்துப் பார்த்துக் கட்டி முடித்து திருவிழாக் கூட்டம்போல தோழர்கள் நண்பர்கள் கூட கிரஹப்பிரவேசம் நடந்தது. இரண்டு பிள்ளைகளுக்குத் தனித்தனியாக அறைகள் ஒதுக்கினார். லெனினும் பாரதியும் அலங்கரித்த ஒரு அறையை தனக்கென ஒதுக்கினார். அவர்களும் அந்த வீடும் பழகுவதற்கு முன்னால். ஒரு வருடம் கூட அங்கு ஓடியாட முடியாத அவரது குழந்தைகளின் சோகத்தோடு வீட்டை விற்றுக் கடனடைத்தார். மீண்டும் வாடகை வீட்டுக்கே குடிபோனார்கள். அதன் பிறகு அவரது மனைவியின் கண்ணை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தவித்தார்.


அப்போதெல்லாம் அவருக்கு அந்த கேலிப்பேச்சுதான் வடிகால். கிளைக்கு வருகிற வாடிக்கையாளரைக் கூப்பிட்டுத்
திடீரென
'' என்ன டை அடிச்சீங்க, முடியெல்லாம் செம்பட்டை படிஞ்சிருக்கு, ரொம்ப ஜாக்கிரதையா இருக்கோனு அண்ணாச்சி '' கேட்டுத் திக்கு முக்காடச்செய்வார். வந்தவர் சங்கோஜப்பட்டு, அசடு வழிந்து சுதாரிப்பதற்குள் சுதாரித்துக்கொண்டு. '' இப்டித்தான் ஏம்பிரண்டு சொன்னானிட்டு கெமிக்கல் பவுடர் அடிச்சி இங்க பாருங்க'', தனது தலையின் வழுக்கை விழுந்த பகுதி காட்டுவார். '' இன்னா சார் யூஸ் பண்ணீங்க'''' கோத்ரேஜ், பொல்லாத பயவுட்டு, கம்பெனிக்காரனெ நிக்க வச்சு சுடோனு ''கல்பனா மேடமும், ரெங்கனும் வாயில் கர்ச்சிப்பை அமுக்கிக்கொண்டு சிரிப்பை அடக்குவார்கள்.'' ஜாக்கிரதையா இருக்கனு அண்ணாச்சி, மருதாணி அரைச்சி கொஞ்சம் முயல் ரத்தம் சேத்து யூஸ் பண்ணுங்க, என்ன எந்த ஸ்கூல்ல சொல்லிக்குடுக்கிங்க '''' செந்திக்குமார்ல புரபசர் '''' ஆத்தாடி காலேஜா, எளவட்டப் பசங்க படிக்கிற எடமில்ல, சூதானமா இருங்க '' '' அட ஆ...மா சார், திரும்பவுடமாட்டேன்கிறாங்கெ, ஏதாச்சும் வெவகாரம் பண்ணிர்ராங்கெ '' அவரைச்சீக்கிரம் அனுப்பிவிட்டு எல்லாரும் சிரிப்பார்கள்.


அது மட்டுமில்லை பஸ்ஸில் பிரயாணம் பண்ணுகிற முகந்தெரியாதவர்களிடம், கண்டக்டரிடம் பத்து வருடச் சினேகிதனைப்போல் '' எப்ப வந்தீக, எவ்வளவு நாளாச்சு பாத்து '' என்று கேட்டு குழப்பி விடுவதும், எதிராளி மூளையைக் கசக்கி யாரிவர், எப்படி மறந்தோம், என்று திணறிக்கொண்டிருக்கும் போது காலியாய்க் கிடக்கிற இருக்கையில் இடம்பிடித்து, தூங்குவது போல் இல்லை இன்னொருவரிடம் அக்கறையாய்ப் பேசுவதைப்போலாகி நழுவி விடுவார். இறங்கும் போது மறக்காமல் சொல்லிக்கொண்டு இறங்குவதும், " கடுதாசி போடுங்க, வீட்ல எல்லாரையு விசாரிச்சேன்னு சொல்லுங்க '' கடைசிக் குண்டைப்போட்டு விட்டு விடு விடுவென மறைந்து போய் விடுவார். பிறகு அந்த ஆள் ஒரு வாரத்துக்கு நிம்மதியாக துங்கமுடியாது.


ஒரு முறை வட்டாரக்கூட்டத்துக்கு திருநெல்வேலி போயிருந்தார். கூடவே செயற்குழுத் தோழர்கள் வந்திருந்தனர். டவுன் பகுதியில் ஊள்ள ஆரெம்கேவி ஜவுளிக் கடையைப்பார்த்து ஒரு நிமிடம் மௌனமாக நின்றார் உடன் வந்தவர்கள் என்னமோ ஏதோ என்று பேச்சை நிறுத்திவிட்டார்கள். தலையை உலுக்கிவிட்டு சரி நடங்க என்று சொன்னார். எலோரும் என்ன ஏதுவென்று கேட்டார்கள். '' ஒரு வார்த்த, ஒரே ஒரு வார்த்தைக்காக இம்புட்டு எடத்தையும் விட்டுக் குடுத்துட்டு ஊரக்காலி பண்ணிட்டுப் போயாச்சி, '' '' சார் சார் என்ன சொல்றீக ஆரெம்கேவில ஒங்களுக்குப் பங்கிருக்கா", சொரிமுத்து சார் ரொம்பத்தான் உலுக்கப்பட்டார். "பின்ன பொய்யா சொல்றே அந்தா கல்லாவில ஒக்காந்திருக்கானே அவந்தா எம்பங்காளி பாத்தா உடமாட்டான் வெரசா நடங்க'' , சொல்லிவிட்டு அவர்பாட்டுக்கு போய்விட்டார். சொரிமுத்து சார் இரண்டு நாள் சிந்தனை வயப்பட்டவராகவே காணப்பட்டார். அந்தக் கற்பனையைப் போய்யென நம்புவதற்கு அவருக்கு வெகுகாலம் ஆனது.

சம்பத், தோழர்களோடு இருக்கிற சாவாகாசமான பொழுதுகள், ரொம்ப சந்தோசமானதாக இருக்கும், அதனாலே ஊழியர்களுக்கு அவரைப்பிடித்துப்போகும்.
ஓட்டுநருக்குப்பக்கத்து இருக்கையில் ஒருவர் செல்போனில் உரக்க " இன்னும் அரை மணி நேரத்தில் காரக்குடியில் இறங்கி விடுவேன் " ரன்னிங் கமெண்டரி சொல்லிக்கொண்டிருந்தார். மடியில் வைதிருந்த கைப்பை காலுக்கடியில் கிடந்தது. காலுக்கடியில் இருக்க வேண்டிய செருப்பு ஒன்று கணாமல் போயிருந்தது. காலை முன்சீட்டுக்கடியில் நீட்டி துழாவிப்பார்த்தார் செருப்பில்லாத ஒரு பெண்மனியின் கால்தட்டுப்பட்டது. முன்பொருதரம் இதே போல் செருப்பைத்தேடும்போது பெண்காலில் உரச அவளது கணவனிடம் ஏச்சு வாங்கியது நினைவுக்கு வந்தது. நத்தையைப்பொல காலை உள்ளிழுத்துக்கொண்டார். காரைக்குடியில் இறங்கும் போது தேடி எடுத்துக்கொள்ளலாம், ஒருவேலை அதற்கு அவகாசம் இல்லாமல் வண்டி புறப்பட்டு விட்டால் ஒரு செருப்பை வைத்துக்கொண்டு என்ன செய்வது, அப்படியே விட்டு விட்டு வெறுங்காலோடு போகவேண்டியதுதான்.


அடிக்கடி இப்படி நிகழ்ந்து விடுகிறது இந்த மாசத்தில் இது இரண்டாவது செருப்பு. அது மட்டுமா வருசத்துக்கு மூணு கண்ணாடிகள் தொலைந்துபோகிறது. டெல்லியிலிருந்து திரும்பி வரும்போது ஒரு முறை, கோப்புகளும், காகிதங்களும் அடங்கிய பையை மட்டும் பத்திரமாக எடுத்துக்கொண்டு இறங்கி விட்டார். குளித்துவிட்டு உடை மாற்றத் தேடிப் பார்த்தபோது தான் துணிமணிகளடங்கிய சூட்கேசை மறந்துவிட்டு வந்தது உறைத்தது. அதுபற்றி பெரிதாக விசனப்படுவதில்லை. அவர் விசனப்படுவதெற்கென்று சங்க ஊழியர்களின் கோரிக்கைகள் பிரதானமாக முன்னிற்கும். ஆனால் மகள் வெண்மனியின் கிண்டலை எதிர்கொள்வதுதான் மகா கவலையாகவும் மலைப்பாகவும் முன்னால் ஓடிக்கொண்டிருக்கும்.


தாயும் மகளும் இந்த விஷயத்தில் கூட்டணி அமைத்துக்கொள்வார்கள். அவர்கள் சொல்லிச் சொல்லிச் சிரிக்க ஒரு ஆனந்த விகடனைப்போல் நிற்பார். பிரியமானவர்களின் பரிகசிப்பும் கேலியும்கூட மனிதர்களின் சந்தோசங்களை ஆழ வேர்விடச் செய்கிறது. நான் ஒரு பெரும் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளன் எனும் கர்வத்தைக் கறைத்து நீர்த்துப் போகச்செய்கிறது. அவர்களைப் பிரிந்து விருதுநகரில் அந்த சங்கக்கட்டிடத்தில் படுத்துக்கொண்டு அசைபோடும்போது நெல்லிக்காயைத் தின்றதுபோல் நினைத்த நேரமெல்லாம் இனிக்கும்.


செல்போன்காரர் இன்னும் பத்துநிமிசத்தில் வந்துவிடுவதாகப் பேசிக்கொண்டிருந்தார். வீட்டில் ஒரு ஜீவன் அவருக்காகத் தூங்காமல் காத்திருக்கும் என்று நினைக்கிற போதே ஜன்னல் காற்று சிலு சிலுவென முகத்தைத் தழுவிக்கொண்ட்டோ டியது. எல்லாப் பிரபலங்களின் மனைவிமார்களைப் போலவே வாரத்தில் ஆறு நாட்கள் தூக்கம்வராத தனிமையிலும் சனிக்கிழமைகளில் எதிர்பார்ப்பிலுமாக ராத்திரிகள் யாவுமே சிவராத்திரிகளாகிப்போனது சம்பத்தின் மனைவிக்கு. போனதும் இரண்டு தோசையாவது சாப்பிட்டல்தான் சமாதானம் ஆகும். பிரியப்பிரிய முறுக்கேறும் கயிறு எனும் காதல் கவிதையின் வரிகள் நினைவுக்கு வந்துபோனது. பொதுச்செயளாலர் பொறுப்பை ஏற்றுக் கொண்டதிலிருந்து பிரிவு தவிர்க்கமுடியாததாகிப் போனது. பிரிவிலும் சுகமிருக்கிறது. நிழலின் நினைவுகள் தூக்கலாகத்தெரிவது வெயிலில் மட்டும்தானே.


காரைக்குடியில் இறங்கும் போது, நல்ல வேளையாக செருப்பு கண்டுபிடிக்கப்பட்டு கால் சேர்ந்தது. அங்கிருந்து வீடுபோய்ச்சேர இரவு ஒரு மணி ஆகியிருந்தது. வாசலில் முந்தின நாள் கோலம் மந்த வெளிச்சத்தில் கலைந்தும் கலையாமலும் அழகூட்டியிருந்தது. அது வெண்மணி வந்திருந்ததை ஊர்ஜிதப்படுத்தியது. முதல் நாளே வரச்சொல்லி போன் பண்ணியிருந்தாள், எதிர்பார்த்து ஏமாந்துபோயிருப்பாள். கொஞ்சம் நெருடலாயிருந்தது. சாப்பிட்டுவிட்டு அவளை எழுப்ப வேண்டாமென்று சொல்லிவிட்டு நிம்மதியாய் தூங்கினார். காளையில் எழுந்தபோது வெண்மணி இல்லாதது கவலையாய் இருந்தது. பள்ளித்தோழி வீட்டுக்கு போய்விட்டு நேரம் கழித்து வந்து முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு நின்றாள். அப்போது அருளானந்தத்தின் பணி நீக்க உத்தரவை நிர்வாகம் மீளப்பெற்றுக் கொண்டதை அதிகாரி சொல்லிக் கொண்டிருக்க சந்தோசத்தில் அந்த தெருவே திரும்பிப்பார்க்கிற மாதிரி சிரித்துக் கூச்சல் போட்டார். இனி அவர் தன்னைக் கவனிக்க மாட்டார் என ஊர்ஜிதம் பண்னிக் கொண்டு அவரைக்கடந்து நடந்து போனாள் வெண்மணி. சமாதானம் பண்ண ஒன்றும் பெரிதாக பிரயத்தனம் பண்ண வில்லை.

சைக்கிளிலோ ஸ்கூட்டரிலோ இடுப்பைச் சுற்றிப்பிடித்துக் கொண்டு கேள்விகளோடு ஒட்டிக்கொண்டு போகும் தந்தையும் மகளும். சினிமாத் தியேட்டரில் பாப்கார்ன் வாங்கிக் கொடுத்து ஐஸ்க்ரீம் கேட்டு அடம் பிடிக்கிற மகளும் தகப்பனும். தூங்குகிற நேரம் நெஞ்சில் படுத்து முகத்தை பிராண்டுகிற இன்ப தொந்தரவு தரும் மகளும் தகப்பனுமாக. இப்படிச்சின்ன சின்ன சந்தோசங்கள் எல்லாவற்றையும் இழந்திருந்தார்கள் சம்பத்தும் வெண்மணியும். ஆனால் ஒரே ஒரு பார்வையில், லேசாகத் தோளில் சாய்கையில், பதிலுக்கு தலை கோதுவதில் அந்த இழப்பையெல்லம் மீட்டெடுக்கிற வல்லமை அவர்களிடமிருந்தது. ஆம் சம்பத் இந்த உலகத்தில் இழந்ததாகக் கணக்கிடப்பட்ட பட்டியல் மிக மிக நீளமானது, அவரது வாலிபக்காதல். டிஎம்மெஸ்ஸைப் போலொரு பாடகனாகவேண்டு என்கிற கனவு. மனைவியின் அருகாமை. குழந்தைகளோடு சண்டையும் பிரியமும். அந்தக்கனவு இல்லம். அதில் காய்த்திருந்த நெய்மிளகாய்ச் செடி. நக்குவாரித் தென்னைமரம். இப்படியே நீண்டு கொண்டு போகும் அதெல்லாம் சின்னச் சின்னச் சோகங்கள். ஆனால் நடு இரவில், சொட்டரைத் தாண்டி இறங்குகிற குளிரில், சாலையோரம் அழுக்குவேட்டியை இழுத்துப் போர்த்தித் தூங்குகிற மனிதர்கள். ஐம்பது ரூபாய்க்கு வாங்கிய பிரியாணியில் வாசம் சரியில்லையென்று தூக்கிப்போடுகிற திமிரையும் சேமிக்கிற எச்சித் தொட்டிலுக்கருகில், பசியின் உக்கிரத்தோடு எச்சிலைகளை ஊடுறுவிப்பார்க்கும் மனிதர்கள்.


இந்தியாவெங்கும் ரயில் தண்டவாளங்களை ஒட்டி கொட்டி வைக்கப் பட்டிருக்கிற குடிசைகள். முதல் தலைமுறையாக அரசு வேலைக்கு அதுவும் கடைநிலை ஊழியராக வந்த ஒருவருக்கு 200 கிலோமீட்டருக்கு அப்பால் மாறுதலும், வங்கி வேலையை உபதொழிலாக மாற்றிவிட்டு வட்டிக்குக் கொடுத்து வாழ்கிற பரம்பரை அரசு ஊழியரான ஒரு மேலாளருக்கு வீட்டுக்கருகில் இடமாற்றமும் தருகிற நிர்வாக மேலாண்மை என, பிரத்தியாரின் சோகம் அவருக்குப் பெரிதாகத் தெரிந்தது. அதை சரிசெய்யத் துடிக்கிற பொதுமனிதானாக அவர் சம்பாதித்தது அதிகம். அதுதான் தீராத அவரது பயணத்தின் கொடை.

கடலலைகளை காணாத வரை கிணற்றுத் தண்ணீரின் அசைவுகள் கூடத்துயரமாகத் தோன்றும் தவளைகளூக்கு. முஷ்டி மடித்து, கையுயர்த்தி கழுத்து நரம்புகள் இரும்புக்கம்பிகளாக, பிரதேசமே திரும்புகிற ஒலியளவில் '' தோற்றதில்லை.. தோற்றதில்லை., தொழிற்சங்கம்.., தோற்றதில்லை. ''என்று அவரிடமிருந்து கிளம்புகிற கோஷம் கேட்கிற யாரையும் அதிரச்செய்யும், சம்பாரி மேளத்தின் அதிர்வுகளைப்போல் ஒரு கூட்டத்தையே முறுக்கேற்றும் ஓசை அதிலடங்கியிருக்கும். ஒரு பொன்னுலக கனவொன்று அந்தக்குரலின் வழியே எல்லோரையும் ஆட்கொள்ளும்.

24.9.09

ரஜினிகாந்தும் ஒரு குவளைத் தேனீரும்

உலர்ந்த செடிகளில் கால்பதிப்பது தெரியாமல் பூனைபோல நடந்து, பின் சீறிப்பாய்ந்து, விரட்டி, சிதறியோடும் மான் கன்றுகளைத் தனிமைப்படுத்தி இறையாக்கும், நாட் ஜியோ. பட்டாம் பூச்சி பிடிப்பதுபோல விஷப் பாம்புகளை, மலைப் பாம்புகளைப் பிடிக்கும் வைல்டு அனிமல்ஸ் காட்சிகள் பார்க்க பிடிக்கும். அதுபோலவே விஜய் தொலைக் காட்சியில் குற்றம் நடந்தது என்ன பகுதியில் நேற்று காண்பித்த ரஜினி, இமயமலை, பாபாஜி - தொடர் பார்த்தோம்.


இமயமலையிலிருந்து கீழிறங்கும் கங்கை ஆவிபறக்கப் பொங்கிப் பிராவகமெடுக்கும் ஹரித்துவார். மனிதக் கைகள் தடம் போட்ட சாலைகள் தவிர்த்து ஒரு சிறு குண்டுமணி அளவுகூட இடைவிடாத பசுமை. நமது வாயிலிருந்து வெளியேறும் காற்றின் வெப்பம் கூடக் கண்ணுக்குத் தெரிகிற குளிர் சீதோஷ்ணம். அடைமழை பெய்தால் மட்டுமே ஓடையிலும், வைப்பாற்றிலும் தண்ணீர் வரும் கருசக்காட்டு மனிதர்களுக்கு இமயமலை, வியப்பும், வினோதமும் கலந்து நினைவூட்டுகிற இந்தியாவின் இயற்கைவளம். எட்டு நாளைக்கொரு தரம் கூட குழாயில் தண்ணீர் வருமா வராதா என்று காத்திருக்கிற எங்களுக்கு அந்த ஹரித்துவாரும் இந்தியா தானா என ஏங்கவைக்கும் நீர்வளம்.


அந்த இடம் நடிகர் ரஜினிகாந்தை கவர்ந்ததில் எந்த வியப்புமில்லை. பரபரப்பில்லாத, மாசுபடியாத இதுபோன்ற ரம்யமான சூழல் கிடைக்கிற யாரும் பரவசமாவார்கள். ஏகாந்தம் தொற்றிக்கொள்ள தங்களின் அன்றாடமெனும் மன அழுத்தம் குறைத்துக் கொள்ளும் வாய்ப்புதான் சுற்றுலா. இது மேலை நாடுகளில் கட்டாயமான ஒன்று. சாமான்யர்களை விடப் பிரபலங்களுக்கு அதிகப்படியான தேவை இந்த ஏகாந்தம். அதை அப்படியே நூறு சதவீதம் அனுபவிக்கிறவர் நடிகர் ரஜினிகாந்த் அவ்வளவுதான்.


" ரஜினிகாந்த் இந்த இடங்களில்தான் மக்களோடு மக்களாக உட்கார்ந்து தேனீர் அருந்தினார் " என்று பரவசமாகி, அருள் வந்து, உடல் குலுக்கிச் சொல்வது போலச் சொல்லுகிறார்கள். தேனீர்க் கடையில் மக்களோடு மக்களாகத் தேனீர் குடிப்பதென்ன அவ்வளவு பெரிய சாகசச்செயலா ?. இப்படித்தான் பிரபலங்களின் காலைத் தரையில் பாவ விடாமல் தொடர்ந்து இந்த ஊடகங்கள் தங்கள் கைகளில் தாங்கி அவர்களை தனிமைப்படுத்தி விடுகிறார்கள். அதோடு நில்லாமல் கிடைக்கிற வர்ணத்தை வைத்து அவர்களின் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் போட்டு விடுகிறார்கள். நடிகர் ரஜினிகாந்த் இந்த திரையுலகில் நுழைந்த போது அவர் பட்ட அவமானங்களையும் ஒதுக்குதலையும் ஒரு பத்திரிகையும் எழுதவில்லை.


சின்னச் சின்ன பாத்திரங்களில் நடித்து தனைத்தானே மெருகேற்றிக்கொண்ட போது எத்தனை நடிகைகள் ஜோடியாக நடிக்க மறுத்தார்கள். இதே ஊடகங்கள் என்னவெல்லாம் எழுதின. பிரபலமான பின்னர் அவர் எங்கோ போய்விட்டார், அவருக்கு பிறழ்வு ஏற்பட்டுவிட்டதென குசுகுசு எழுதவில்லையா?. இவ்வளவு ஏன் சமீபத்தில் கூட மேலை நாட்டில் கையில் சரக்கோடு ஓய்வெடுத்தாரே அதைச் சர்ச்சையாக்கியதும் இந்த ஊடகங்கள் தானே. இதையெல்லாம் இந்த உலகம் மறந்துவிட்டதென நினைத்துச் சரடு திரிக்க ஆரம்பிக்கிறார்கள். செய்திகளை விற்றுத் தீர்க்க பரபரப்புக்களை வைத்துப் பக்கம் நிறப்புவது மட்டும் தான் ஊடக தர்மம் என்று மாறிவிட்டது.


எனக்கு ஆரம்ப கால ரஜினியை ரொம்ப ரொம்ப பிடிக்கும். கதாநாயக பிம்பங்களை உடைத்தெறிந்து விட்டு ஒரு புது அத்தியாயம் எழுதியவர். கதாநாயகன் அப்பழுக்கற்றவனாகக் கட்டமைக்கப்படும் தூதன் இல்லை. எல்லா நன்மை தீமைகளும் நிறைந்த சாமான்யன் என்று நிலை நிறுத்தியவர். அவள் அப்படித்தான் படத்தில் ஸ்ரீபிரியாவிடம் அடிவாங்குவார். தப்புத்தாளங்களில் விபச்சாரியை மணந்துகொள்வார். மதுக்குடிப்பார், பீடா போடுவார், மூக்குப்பொடிகூட, கோபம் வந்தால் அடிப்பார். வேலைபறி போய்க் கையும் பறிபோய், கட்டியமனைவியும், சொந்தங்களும் சொல்கேளாமல் தன்னை விட்டுப்போக அநாதராவாக நிற்பார். அந்த ரஜினி எனக்கு மட்டுமல்ல அப்போது இந்த சினிமா கொஞ்சமாவது உருப்படுமா என்று ஏங்கிக் கிடந்த எல்லோருக்கும் பிடிக்கும்.


நானும் எனது சின்னவயதிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் " ஏசு வருகிறார், ஏசு வருகிறார்" என்று எழுதிப்போட்டுஏமற்றியது போலவே இந்த ரஜினிகாந்தையும் " இதோ அரசியலுக்கு வருகிறார், வருகிறார் " என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள். வந்தால் இப்போதிருக்கும் ரசிகர்மன்றச் செயலாளர்கள் தலைவர்களுக்கு சட்டமன்றத்திற்குள் செல்லும் வாய்ப்புக்கிடைக்கும். அப்புறம் அயல்நாட்டுக்கார், அயல்நாட்டு மது, அயல்நாட்டு வங்கிக்கணக்கு எல்லாம் அவர்களுக்குக் கிடைக்கும், இதுதானே நடக்கும்.


எதையோ தேடிப்போனார் எதையோ தேடிப்போனார் என்று பல்பொடிபோட ஆரம்பிக்கிறார். அடர்ந்த மலையில் தேடிப்போனால் மூலிகைகள் கிடைக்கும், அதையும் தாண்டிப்போனால் ஆதிவாசிகள் கிடைப்பார்கள், அதையும் தாண்டிப்போனால் மிருகங்கள் கிடைக்கும். இதைத்தான், டிஸ்கவெரி, நாட் ஜியோ, வைல்ட் அனிமல் சானல்கள் இதுவரை கண்டுபிடித்திருக்கின்றன. மிருகங்களோடு மிருகங்களாக வாழ்வுகடத்தும் மலை மனிதர்கள் காலமெல்லாம் அதே குகைக்காட்டுக்குள் தான் குடியிருக்கிறார்கள் அவர்களையெல்லாம் விட்டு விட்டு ரஜினிக்கும் மட்டும் தான் தெரிவேன் என்று சொன்னால் அந்த மஹா அவதாருக்கும் ஓரவஞ்சனை வண்டி வண்டியாய் இருப்பதுப்போல தெரிகிறது.

23.9.09

தொலை நோக்குக் கருவியில்கூட பிடிபடாத சிதறல்

2006 ஆம் ஆண்டு bwu இதழில் வெளியான சொற்சித்திரம்


கண்விழிக்கிற போது சுப்ரபாதம், குளித்து தலைதுவட்டுமுன்னால் ஆவி பறக்கிற இட்லி, நெரிசல் இல்லாத பேருந்தின் நடுவில் ஜன்னலோர இருக்கை, பார்வை படுகிற வெளியெங்கும் பசுமை சந்தோசம். கடன் தட்டாத கதவினைப்பூட்டிக்கொண்டு சிரிப்புத் துணுக்குகளை தொலைக்காட்சியில் பார்க்கிற கனவுப் பட்டியலின் அட்டவனை எல்லோருக்கும் தேவையாயிருக்கிறது. இந்த மொன்னை ஆண்டினைத்தான் வேறு வேறு பெயரிட்டு காலண்டரும் பஞ்சாங்கமும் தயாரிக்கிறார்கள். ஆனால் காலம் யாரையும் எதையும் லேசில் தூங்கவிடாது.


அதோ வாகன நெரிசலின் மத்தியில் கையையும் காலையும் அதீதமாக வீசி ஒரு கராத்தே வீரனின் கலை நயத்தோடு காற்றைத்துவம்சம் செய்கிறவனைப்பற்றி நமக்கு கவலை இல்லை. அவன் ஒரு எம் எஸ் சி பிசிக்ஸ் படித்தவனாக இருக்கலாம். இந்தியாவுக்கு ஏவுகலன்களை உற்பத்தி செய்து அதன் மூலம் விவசாயமும் தொழிலும் செழிக்கச்செய்ய வேண்டுமென்கிற கனவை வெறியாக்கியவனாக இருக்கலாம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வேலி மண்டிக்கிடக்கிற எதார்த்தத்தின் மூஞ்சில், அவனது ஒவ்வொரு குத்தும் விழுகிறது. பேருந்து நிலைய வாசலின் எதிரே அந்தச் சிலை நிழலில் நின்று கொண்டு பிடதியில் மடேர் மடேரென்று சாத்துகிற கைகளும், அடிபடுகிற தலையும் அவனுக்கே சொந்தம். அடிபடுகிற இடத்தில் அதிர்ந்தபடியே இருக்கிற சிறு மூளைக்குள் என்ன என்ன புதைந்து கிடக்கிறது என்று யாருக்குத்தெரியும். துருவித் துருவித்தோண்டியதில் கிடைத்தது


அவன் ஒரு முசல்மான் என்கிற அனுவிலும் குரைச்சலான தகவல்மட்டுமே. ஊரின் வடகோடியில் உள்ள காளி கோயிலையும், தென்கோடியில் உள்ள மசூதிக்கோபுரத்தையும் பார்த்த மாத்திரத்தில் நிமிடத்திற்கு நூற்றி இருபது முறை தனது பிடதியிலே அடித்து முடிவில் சோர்ந்து சுருங்கித் தூங்கிப்போவான். அவனுக்குப்பினால் ஒரு காண்டிக்ட் காமிராவை நகர விட்டாலும் அதன் புள்ளியிலிருந்து மறைந்து போகிற அவனது தலை மறைவை. நாம் இயற்கை என ஒதுக்கிவிடுவோம். அனுமார் கோவில் விளக்கு மாடத்தைப்போல எண்ணெய்ப் பிசுக்கு ஏறிய கால் சராயும், சட்டையும் இனி எந்தத் தீயிலும் பற்றாத கெட்டியாயிருந்தது. அவன் கண்கள் எது குறித்தும் சுருங்குவதுமில்லை, விரிவதுமில்லை. யாழினும் இனிய குழந்தையும், ஐஸ்வரியா ராயினும் குளுமையான குமரியும் கூட அதன் குவி வடிவில் அடங்கவில்லை. ஏனெனில் அது கண்ணின் தகவமைப்பைத் தாண்டிய வல்லமை பெற்றிருந்தது. அவனது பற்களில் இந்தியக் கடவுள்களின் தத்துவங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.


அவனை உலக மகா ரவுடியும், போலீசும் கூட நெருங்க முடியாது. தூக்கித் தூக்கிப்போட்டு அடித்தாலும் சாம்பல் கூட பெயராது. கண் தெரியாதவர்களின் இசைக்குழுப் பாடல்கள், பீரங்கிச் சத்ததை தோற்கச்செய்யும் ஆளும் கட்சி மேடைப்பேச்சு, பேனா விற்கிற நூற்பாலைத் தொழிலாளி எல்லோரையும் கடந்து போகிற அவன், ஒரு கோர விபத்தைக்கூட இது ரொம்பச் சாதாரணம் ஏன்று ஒதுக்கித் தள்ளிப் போய்க்கொண்டிருந்தான். அழகு - கோரம், சந்தோசம் - வேதனை, இப்படி எந்த அதிர்வும் தாக்காத மன வலிமை குறித்து துணுக்குற வேண்டிய நேரம் இது.


காலம் காலமாக சினிமா நமக்குப் போதித்தது அதிர்ச்சியை அதிர்ச்சியால் மீட்டு வரலாம் எனும் மூட அறிவியல் அவனிடம் செல்லாது. எதனால் என்கிற சிறிய உறுத்தல் தேங்கி நின்று நெடுங்காலமாகி விட்டது. அவனுக்கு மொழியிருக்கிறதா எனும் சந்தேகம் உறுதியானது. அவன் பிரயோகித்த ஒரு வார்த்தையைக் கூட இன்றைய இந்தியாவும், ஏனைய உலகமும் கேட்கவில்லை. ஒரு வேளை குஜராத் மாநிலத்து நகரத்தில் அவனது சிதிலமடைந்த கனவு இல்லத்துப் பக்கத்தில் தேடினால் ஏதாவது தென்படும். அவன் தொலைத்த வாழ்க்கையும் - நம்பிக்கையும்.

அவனைப்போல் யாரும் இருக்கக் கூடாது

21.9.09

விளையாட்டுக்காக மட்டும் அல்ல ( சமரசம் உலாவாத இன்னொரு இடம் )








அமைதியாக அலைதாலாட்டும் கடல் சிலநேரம் எழுந்து வந்து நிலம் அழிக்கிற காட்சிபோல இரண்டு விளையாட்டு வீரர்கள்உலகத்தின் அமைதியைக் குலைத்தனர். 1968 ஆம் ஆண்டு மெக்சிகோ வில் நடந்த கோடைகால ஒலிம்பிக்கில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. வழக்கமாக ஓட்டப்பந்தய வீரர்கள் ஓடுகளத்தில் சூறாவளியைக்கிளப்பி வெற்றி மேடையில் பூங்கொத்துகளையும், தங்கப்பதக்கங்களையும் குவிப்பார்கள். மாறாக டாமி ஸ்மித்தும் கார்லோசும் ஓடுகளத்தில் மட்டுமல்ல விழமேடையிலும், சூறாவளியை உண்டாக்கினார்கள்.



19.83 நிமிடத்தில் இலக்கை எட்டி உலக சாதனை படைத்த ஸ்மித், 20.07 நிமிடத்தில் இரண்டாவதாக வந்த ஆஸ்திரேலியாவின் பீட்டர் நார்மன். 20.10 நிமிடத்தில் இலக்கை அடைந்த ஜான் கார்லோஸ் மூவரும் மேடையில் ஏறும்போது பார்வையாளர்கள் அதிர்ச்சியானார்கள். அமெரிக்க வீரர்கள் இருவரும் தங்கள் பாதனிகளைக் கழற்றிவிட்டு வெறுங்காளோடு போடியத்தில் எறினார்கள். கருப்புத்துணியை கழுத்துப்பட்டையாகச் சுற்றிக்கொண்டார்கள். தலை தாழ்த்தி வீரவணக்கம் ( power salute ) செய்த பின்னர் விருதுகளைப் பெற்றுக்கொண்டார்கள்.



முன்னது கருப்பின மக்களின் வருமையைக் குறிப்பதாகவும், பின்னது கருப்பின மக்களின் பெருமையைக் குறிப்பதாகவும் பின்னர் இருவரும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள். எங்கெல்லாம் கருப்பின மக்கள் சிறுமைப்படுத்தப் படுகிறார்களோ, எங்கெல்லாம் கொலை செய்யப்படுகிறார்களோ, எங்கெல்லாம் தூக்கிலிடப்பட்டு பிரார்த்தனையில்லாமல் புதைக்கப்படுகிறார்களோ அவர்களுக்காக இந்த விருதை சமர்ப்பிக்கிறோம் என்று பேட்டியளித்தனர்.



1968 அக்டோபர் 17 ஆம் தேதி உலகம் முழுவதும் இந்தச் செய்தி படிக்கப்பட்டது. ஒலிம்பிக் விளையாட்டின் ஆரவாரங்களின் மேல் கல்லெறிந்த இந்த நிகழ்வு 113 ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் ஒரு பேரதிர்வை ஏர்படுத்தியது மட்டுமல்லாமல் கருப்பின இழிவுகளின் பால் உலகைத் திருப்பியது. நான் ஜெயித்தால் கருப்பு அமெரிக்கனல்ல, நான் வெறும் அமெரிக்கனாவேன். தோற்றுப்போகிற பட்சத்தில் நான் ஒரு நீக்ரோவாக மட்டுமே அடையாளப்படுத்தப்படுவேன். நாங்கள் கருப்பர்கள் எங்கள் நிறமே எமது பெருமை என பிரகடனப்படுத்தினார்கள்.



அகில உலக ஒலிம்பிக் குழுவின் தலைவர் அவெரி ப்ருண்டேஜ் அந்த இருவரையும் அமெரிக்க அத்லெடிக் குழுவிலிருந்துநீக்கப்பரிந்துறைத்தார். அமெரிக்கா மறுத்தது. மொத்த அமெரிக்க ஓட்டப்பந்தய நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிடுவேன் என மிரட்டல் விடுத்தார். அந்த மிரட்டலுக்கு அடிபணிந்த அமெரிக்கா இரண்டு கருப்பின வீரர்களையும் அந்த நிமிடத்திலிருந்து ஒலிம்பிக் கூடாரத்தை விட்டு வெளியேற்றியது. இதே போல 1936 ஆம் ஆண்டு நடந்த பெர்லின் ஒலிம்பிக்கில் நாஜி வணக்கம் செலுத்தப்பட்டபோது வாயை மூடிக்கொண்டிருந்த ஆவெரி ப்ருண்ட்டேஜை மனிதாபிமனமுள்ள பத்திரைகையாளர்கள் எலோரும் விமர்சனம் செய்தார்கள்.



அவர்கள் குவித்த எண்ணிக்கையில் அடங்காத பதக்கங்களின் பெருமை, அவர்களை இன வெறி எதிர்ப்பாளர்களாக அடையாளப்படுத்த உதவியது என 2008 ஆம் ஆண்டு சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தனது வலைப்பக்கத்தில் பதிவு செய்துள்ளது. உலகம் முழுவதும் பெரும் எதிர்ப்பை உண்டாக்கிய இந்த சம்பவத்தை டைம் பத்திரிகை ஒலிம்பிக் இலச்சினையின் துரிதம், உயரம், வலிமை எனும் மூன்று வட்டங்களுக்கான அர்த்தத்தை கோபம், அசுத்தம், அருவருப்பு என்று கருத்துப்படம் வெளியிட்டுத் தீர்த்துக்கொண்டது.



ஓபெர்லின் கல்லூரியில் விரிவுறையாளராகவும், பின்னர் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்ட டாமி ஸ்மித் 1999 ஆண்டு நூற்றாண்டின் விலையாட்டு வீரர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இப்போது ஒரு மேடைப்பேச்சாளாராக மாறி விளையாட்டு அரசியலையும், அரசியல் விளையாட்டையும் விளாசுகிறார். அதே போல கார்லோசும் ஒரு உயர்கலாசாலையில்ஆசிரியராக பணியாற்றுகிறார். சான்ஜோஸ் பல்கலைக்கழகம் தங்கள் பழைய்ய மாணவர்களான அவர்களிருவருக்கும்20 அடி சிலை நிறுவிக் கௌரவித்திருக்கிறது.



இந்தியத்துணைக் கண்டத்தில் விளையாட்டுத்துறையில் ஒதுக்கப்பட்டவர்களின் பங்கு என்ன ?



1958 ஆம் ஆண்டு கமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற மில்கா சிங், சொல்லுவது போல அதுவரை ஓட்டப்பந்தயங்களுக்கான பாதணிகள் இந்தியாவில் தயார்செய்யப்படவில்லை, ட்ராக் சூட் என்பது இந்தியர்களுக்கு என்னவென்றே தெரியாது. 1960 ஆண்டு ரோம் ஒலிம்பிக்கில் மயிரிலை வித்தியாசத்தில் தங்கம் இழந்த மில்கா சிங்.பின்னாட்களில் சோத்துக்கு லாட்டரியடித்ததாக தகவல்கள் சொல்லுகின்றன.




1990 களில் ரஞ்சிக்கோப்பை போட்டிகளில் அபார ஆட்டம் ஆடி நானூறு ஓட்டங்கள் குவித்த ஜோடி சச்சினும் வினோத்காம்ளியும். சச்சினுக்குப்பின் ஒரு வருட இடைவெளியில் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார் காம்ப்ளி. அதுவும் சச்சினின் உயர் அழுத்த சிபாரிசின் பேரில்தான் என்று வய்வழிச்செய்திகள் புழங்குகிறது. ஆனாலும் அவர் தாக்குப்பிடிக்க முடிந்தது வெறும் ஒன்பது வருடங்கள் தான். தனது 24 வது வயதில் 2000 ல் பத்திரிகையாளர்களை அழைத்து போகிறேன் என்று கிளம்பிவிட்டார்.



சமீபத்தில் புதுக்கோட்டை சாந்தியைப் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல, அதை விவரிக்க இயலாது.



கல்வியில் வேலை வாய்ப்பில் தகுதி, திறமை நிர்ணயிக்கப்படுகிறது அதற்கான நுட்பமான தர்க்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவை எதுவும் உண்மையில்லை என்பதை உலகம் சிறிது சிறிதாக உணர்கிறது. அதே தகுதி திறமை விளையாட்டுத்துறையில் தேவையற்றதாக கருதப்படுகிறது. இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் பற்றி சிறப்புக்கட்டுரை வெளியிட்ட இந்தியா டுடே. பாகிஸ்தான் வீரகள் தடித்தடியாய் இருப்பதாகவும் நமது வீரர்கள் பக்கத்து வீட்டுக்காரரைப்போல, ஒரு குமாஸ்தாவைப்போல, வங்கி ஊழியரைப்போல ஸ்மார்ட்டாக இருப்பதாகப் பெருமைப்பட்டுக்கொண்டது.விளையாட்டுகளில் உழைக்கிற ஜனங்கள், விவசாயிகள், மலைமக்கள் போன்றவர்களுக்கு பயிற்சி அளித்தால் இந்தியா அந்தத்துறையில் அபரிமிதமாக வளரும் என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் சொன்னது வெறும் வார்த்தையில்லை.



இந்த நூற்றுப்பத்துக்கோடி இந்தியர்களில் உடல்வலிமையும், ஓட்டத்திறனும், நுணுக்கமும் அமையப்பெற்ற பதினோரு பேர் இல்லாமலா போய்விட்டார்கள். கிரிக்கெட் போர்டை சரிக்கட்டுகிற வித்தை தெரிந்தவர்கள் அல்லது அதை நெருங்கமுடிந்தவர்களின் கூடரமாக மாறிவிட்டது கோடிஸ்வரவிளையாட்டு. சச்சின் அவுட்டானவுடன் ஒட்டுமொத்த இந்தியாவே சோர்ந்து போவதை உலகம் நமுட்டுச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஐம்பது ரன் அடித்த இந்திய வீரர்கள் கேசுகேசுன்னு இளைக்கிற சத்தம் அண்டமெல்லாம் கேட்கிறது. தப்பித்தவறி நூறு ஓட்டம் எடுக்கிறவர்களை வளைத்துப்போட பல்பொடி, பவுடர், பிளேட்டுக்கம்பெனிகள் தயாராக இருக்கிறது. இப்போது சச்சின் உல்கக் கோடிஸ்வரர்களின் பட்டியலில் ஒருவர். இந்தியபெரும் பணக்காரர் இருபதுபேரில் ஒருவர்.



சுற்றிச்சாக்கடை கிடந்தால் நடுவில் கிடக்கிற பொருள்மீது சந்தனமா மணக்கும். ?




20.9.09

இடமாற்றம் - வாதம் செய்யுமிடத்திலிருந்து குற்றவாளிக் கூண்டுக்கு

இரண்டு நாள் விடுப்பு. எதாவதொரு கோவிலுக்குப் போகவேண்டுமென்ற சந்தோசக் கோரிக்கையோடுதான் எங்கள் குளிர் இரவு விடிந்தது. அந்த தேநீர்க் குவளையின் ஆவிப்போல மிதந்து மிதந்து உரையாடல் ஒரு பயணத்திற்கான திட்டமிடுதலாக அமைந்தது. சுற்றுச்சுவருக்குள் இருந்த மரங்களில் அமர்ந்தபடி பறவைகளும் அணில்களும் எங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க வெயில் கொஞ்சம் கொஞ்சமாக ஏறியது. காலை உணவுக்கான தயாரிப்பில் ஒரு சின்ன அபிப்ராய பேதம் உருவாகிச் சரியானது. முழு இரவிலும், இளம் காலையிலும் எட்டிப் பார்க்காத அந்தசனியன் அப்போதுதெல்லாம் எங்கோ கிடந்தது. உன்னிடம் எவ்வளவு மிச்சமிருக்கிறது எனக்கேட்ட போது அது தலை நீட்டியிருக்கணும்.


மாதச்சம்பளர் வாழ்விலிருந்து பிரிக்கமுடியாத அந்தச்சனியன் எழுந்து ஆடத் துவங்கும்போது தொலைகாட்சியில் லலிதாவின் பாட்டுக்குப்பாட்டு நடந்து கொண்டிருந்தது. ஞாயிற்றுக் கிழமை கவிச்ச வாடையில்லாமல் கழிந்து போனால் அண்டை வீடுகளுக்குக் காரணம் சொல்ல முடியாது. மீன் வாங்க காசு யார் கொடுப்பதென்பதில் தகறாறு முற்றிக்கொண்டது. சனியனுக்கிப்போது ஏகக்கொண்டாட்டம். இந்தத் தாவாவில் நடுவர் தீர்ப்பு ஒரு போதும் எடுபடாது.எல்லா நடுவரும் எங்காவதொரு பக்கம் சாய்ந்திருப்பது தெரியாத அரசுச் சட்டம் அவர்களுக்கு நடுவர் என்கிற பொய்ப்பட்டம் கொடுத்துக் கெடுத்திருக்கிறது.


சண்டையின் துவக்கம் சிறு சினுங்களாக இருந்தபோது இருந்த குதூகலத்திற்கு அது பெருங்கலவரமாக மாறுமெனத் தெரியாது. பெருங்கலவரமான பிறகு சமாதானத்துக்கான தடைகளை வார்த்தைகளே பிரமீடுகளாக்கியிருந்தது. அந்தச்சனியன்வந்து எங்கள் நடுவில் கணவன் - மனைவி, சம்பாதிப்பவன் - சமைப்பவள், ஆணாதிக்கம்- அடிமைஎதிர்ப்பு எனும் பேதங்களைஉருவாக்கிவிட்டுச் சிரித்துக்கொண்டிருந்தது. சிந்திவிட்ட ஒரு கண்ணீரில் சிதிலமான கோபங்கள். திரும்பிப் பார்க்கையில் எனது பழய்ய வார்த்தைகளில் அருவருப்பு ஒட்டிக் கொண்டிருந்தது. கழுவி கலைய முடியாத அழுக்கு. ஒரு தலை கோதலில்ஒரு கோணங்கிச் சிரிப்பில், இப்படியான சந்தோசத்தில் மறைந்து உயிர் வாழும் அவ்வார்த்தைகள். எழுந்து வாழவிடாமல் தடுப்பது இன்னொரு சண்டை வராமல் காப்பதே.


வாசலில் வந்து பார்த்தேன் வெயில் உக்கிரமாக இருந்தது. மரங்களில் பறவைகளைக் கானோம். காலையில் உட்கார்ந்து கதை பேசிய வாசற்படியில் குடித்தபோது சிதறிய தேநீரின் ஒரு சொட்டு படிந்திருந்தது. கீழே கிடந்த தூசிகளோடுகோவிலுக்குப் போகத் திட்டமிட்ட பயண வாத்தைகள் சிதறிக்கிடந்தது. அவள் மீளச்சிரிக்கும் வரை என் மீது பெரிய்ய கைவிலங்கு கவிந்திருக்கும். செல்லமகள் சிந்துபாரதி வந்து நமுட்டுச் சிரிப்புச் சிரித்தாள். அது சண்டைக்காக அல்லஎன் எழுத்துக்களுக்காக.

18.9.09

சரித்திர சாட்சிகளை இழந்து.....








வாணலிச்சட்டியில் வழுக்கிய வெண்ணெய் போல, காற்றைவிடக் கடுகி, ஆடாமல் அசையாமல் ஓடுகிறது வாகனங்கள்.எழுபது கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வாகனம் கூட கட்டை வண்டியாகப் பார்க்கப் படுகிறது. சாத்தூரிலிருந்து சென்னை செல்லவேண்டுமானால் மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம்,திண்டிவனம்,செங்கல்பட்டு,தாம்பரம் இப்படித்தானே வழி. அது பழைய்ய காலம் சாத்தூரிலிருந்து நேரே கோயம்பேடு தான். அது எப்படி மார்க்கம் இல்லாத பயணம். அது அப்படித்தான் ஒரே வழி. தங்க நாற்கர வழி . நீங்கள் திருச்சிக்கு போகவேண்டுமானாலும் எதோ கிராமத்துக்குப் போவது போல பிரதானச் சாலையிலிருந்து விலகித்தான் போகவேண்டும்.



கடந்து போகும் ஒவ்வொரு ஊரும் அதன் பிரபல கட்டிடங்களாலும் மரங்களாலும் ஆறுகளாலும் அடையாளப் படுத்திக்கொண்டு பயணமானதெல்லாம் பழய்ய காலம். இனி ஒவ்வொரு ஊரும் ஒரு மேம்பாலத்துக்கு அடியில் கடந்து போகும்.
சாப்பிடவேண்டுமானால் விக்கிரவாண்டி மோத்திரக் கவிச்சை மோட்டேலில் போய் என்னைக்கு சுட்டதென்று கண்டுபிடிக்க முடியாத தோசையை நாப்பது ரூபாய் தெண்டங்கட்டி வாங்கிவிட்டு. திண்ணவும் முடியாமல், எடுத்துக்கீழே போடவும் முடியாமல் ஊசலாடுகிற மனதோடு உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். இவ்வளவு வேகமாய்ப் போனாலும் ஒரு மணி நேரம் மிச்சமாவது சிரமம். அந்த ஒரு மணி நேரத்தில் இந்த உலகத்தைப் புரட்டும் திட்டங்களை வேண்டுமானால் நேர மேலாண்மை குறித்துப் பேசுபவர்கள் பேசட்டும். ஆனால் அந்த ஒரு மணிநேரத்தைக் கட்டாயம் சென்னை சிக்னல்களில் தொலைத்தே தீரவேண்டும்.



முன்பெல்லாம் சாத்தூரிலிருந்து ஊருக்கு எட்டுக்கிலோமீட்டர் நடந்தே கடந்திருக்கிறோம். அப்போது பேருந்து கட்டணம் வெறும் 25 காசுதான் ரெண்டு மணிநேரத்துக்கு ஒரு பேருந்து இருக்கும் அதற்குக் காத்துக்கிடக்கிற நேரத்தில் பாவநாசநாடார் சேவுக்கடையில் சேவுப்பொட்டலம் வாங்கிக் கொறித்துகொண்டு காலார நடந்தே போகலாம். வழிநெடுக மரங்களும், பழங்களும், பறவைகளும், மனிதர்களும் கதைகளும் விரிந்து கிடக்கும். பாட்டிகதைகளில் வரும் ஆலாவிருட்ச மரம், அண்டரெண்டாப் பட்சி, ராஜகுமாரன்,அவனது வெள்ளைக் குதிரை எல்லாவற்றையும் அப்போது பொருத்திப் பார்க்கிற இடங்கள் நிறைய்ய இருந்தன.



ஒருதேசத்திற்கும் இன்னொரு தேசத்திற்கும் அதாவது மதுரைக்கும், சாத்தூருக்கும் இடையில் பயணமாகிற இளங்குமாரனைவிஷம் கொடுத்துக் கொல்வதற்கான சதி ஓலையில் சேதியாக இருக்கும். அதை அவனே எடுத்துக்கொண்டு செல்லுவான் என்கிறபோது ஆர்வமும் பரபரப்பும் தொற்றிக்கொள்ளும். இடையில் களைப்புத்தீர ஒருசுனையில் நீரருந்திவிட்டு, படுத்துறங்குவான். அவன் அசந்து தூங்குகிற போது ஆலவிருட்ச மரத்திலிருக்கும் பேசும் கிளிகளான அண்டலும் பேடையும் நடக்கப் போவதைச் சொல்லும். பாண்டசியும், மெட்டாபரும், இயல்பும் கலந்து கிடக்கிற கதைகளின் சாட்சியாக நின்று கொண்டிருந்த சாலையோர மரங்கள். அசோகரையும், ராணி மங்கம்மாவையும் நினைவுபடுத்துகிற மரங்கள் ஒன்றுகூட தேசிய நெடுஞ்சாலையில் இல்லை.



விருதுநகரைத்தாண்டி, சிவரக்கோட்டை பழைய்ய பாலத்துக்கருகில் நெடுநெடுவென வளர்ந்து கிடந்த வன்னிவேல மரங்களும் ஆலமரங்களும் மிகத்தடித்த தூரால் ஆனவை. ஒரு பத்தாள் சேர்ந்து கட்டிப்பிடிக்கும் சுற்றளவு கொண்டவை. எப்போதாவது சூறைக்காற்றில் அதன் கிளைகள் ஒடிந்து சாலை மறிக்கும். அப்போது மீதமிருக்கும் நிலைகுலையாத அதன் பருமன் பற்றி நிறய்ய யோசித்திருக்கிறேன். ஒருபோதும் யாராலும் அசைக்க முடியாததாகத் தோன்றும் அதன் ரூபம். ஒருநாள் அந்த எண்ணங்களை வேரோடு பிடுங்கிப்போட்டு விட்டது இந்த தங்க நாற்கர சாலைத்திட்டம். சரிந்து கிடந்த கலிவர் அண்ட் லிலிபட்டைப் போன்ற அதன் உருவம் என்னை வெகுவாகப் பாதித்துவிட்டது. அது வெறும் மரமா ?.



லட்சக்கணக்கான எறும்புகளின் வாழிடம். ஆயிரக்கணக்கான பூச்சிகளின் வசிப்பிடம். நூற்றுக்கணக்கான பறவைகளின் சரணாலயம். அது மட்டுமா பலநூறு வருடங்களின் நீட்சியல்லவா அது. ஒன்றையிழந்து பிரிதொன்றைப் பெறும் இந்த வாழ்கையில் நாம் இந்த சாலைக்காக இழந்தது சரித்திர சாட்சிகள்.



மரங்களோடு மனிதர்க்கு இருக்கும் பந்தம் தொப்புள்கொடிக்கு இணையானது. இயற்கை அறிவியலைத்தாண்டி அவை உணர்வுப்பூர்வமான பல கோடி பதிவுகளை விட்டுச்சென்றிருக்கிறது. ஒவ்வொரு கடவுளும் ஒரு மரத்தால் அறியப்படுவதும். இரு சகோதரர்கள் வெட்டப்படவிருந்த மருதமரத்தை கட்டியணைத்துக் காத்ததும், ஒரு புளியமரம் சுந்தர ராமசாமிக்கு ஒரு நாவலைத் தந்ததுமாக சொல்லிக்கொண்டே போகலாம். தென் இந்தியர்களின் வாழ்வில் பிரிக்கமுடியாத வெயில் மரமாய் நிற்கும் வேம்பு வெறும் மரமல்ல. அது ஒரு சர்வரோக நிவாரணி. மிகச்சிறந்த கிருமி நாசினி. அவற்றின் அருமை தெரியாமல் நாடு முழுக்க வாரிக்கொடுத்த எண்ணிக்கை லட்சக் கணக்கில் இருக்கும்.



ஒருநாள் விடிந்தால் குறைந்தது ஒருகோடி ரூபாய் கமிஷனாக மந்திரிக்கு தானாக வந்து விழும் ஏற்பாடு இங்கே இருக்கிறது. இந்தியன் படம் வந்த பிறகுதான் இலாக்காவுக்கு வந்துசேரும் குறைந்த பட்சக்கமிஷன் மூன்று சதவீதம் ஆனது. ஒரு பேச்சாளர் கூறினார் இது பொது மக்களுக்காகப் போடப்பட்டதல்ல மிகப்பெரிய கண்டைனர் வாகனங்கள் கடந்து செல்வதற்காகப் போடப் பட்டவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்று. இது தொடங்கும் போது அமைச்சர் தங்க நாற்கர சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் என்று சொல்வது சுத்த ஹம்பக். பன்னாட்டு நிறுவணங்களுக்கு அர்ப்பணித்தது தான் உண்மை. பம்பாய் முதல் தானா வரை போடப்பட்ட இந்தியாவின் முதல் இருப்புப்பாதை இந்தியர்களுக்காகப் போடப்பட்டது என்று சொல்வதும் இப்படிச் சொல்வதுவும் சமமே.






நாட்டுப் பொங்கலும், மாரியம்மன் தூதுவனும்.








மாசி மாசத்திலொருநாள் பொங்கல்சாட்டு நடக்கும் அஞ்சக்கிழவன், செவனிப்பெரியம்மை, பூமணிப்பாட்டியும் இன்னும் சில சாமியடிகளும் பிராதானமானவர்களாக இருப்பார்கள். அஞ்சக்கிழவன் தான் பெரிய சாமி அதாவது மாரியம்மா. அவன் ஆறடி பீரோவை நகர்த்தியது போல கணத்த சரீரத்தோடு சட்டையில்லாமல் தான் நடந்து வருவான். செவனிமேலே பேச்சியும், பூமணிப்பாட்டி மேல் வடக்கத்தியம்மனும் இறங்குவார்கள். பூமணிக்கிழவி நோஞ்சான், காலும் அவள் நினைவின் வேகத்துக்கு ஈடு கொடுக்காத சவட்டைக்கால். அதனால் அருள் வருகிற நேரம் மட்டும் கொஞ்சம் உடம்பை முறுக்கி, சத்தம் கொடுத்து, உஸ்ஸெனச் சொல்லுவாள். அப்புறம் சும்மா வளப்பாடுமாதிரி ஒரு கையில் வேப்பங்கொலை வைத்துக்கொண்டபடி நடந்து வருவாள்.

செவனிக்கு மெயின் டூட்டி பேச்சியம்மாதான் என்றாலும் பொங்கச் சாட்டுகிற அன்று மட்டும் சுடலை மாடனையும் சேர்த்து அடிசனல் டூட்டி பார்க்கவேண்டும். சில நேரம் அனுமஞ்சாமியும் வரும். ரெண்டு கழுதையுந் துடியானதுக. வந்து இறங்கினால் தங்கு தங்குன்னு குதிப்பான் சாட்டை எடுத்து மடேர் மடேரென்று அடிப்பான், பொத்தென்று கீழே விழுவான், ஈசானா மூலையைப் பார்த்து வெடியோசையில் சிரிப்பான். இந்த நடைமுறைகளை அஞ்சக்கிழவனும், பூமணிப்பாட்டியும் செய்ய முடியதாகையால் செவனிக்கிழவி தான் அதற்குப் பொருத்தமானவள். களத்தை அதகளப்படுதுவாள் ஆடும்போது தூசி பறக்கும். பெரிய அருவாளைப் பிடிக்கச்சொல்லி கூர் முனையில் ஏறி நிற்பாள். நாக்குத்துருத்தியபடி கிளம்பும் அவளது ரௌத்ரம் பார்க்கும் போது சுற்றி நிற்பவர்கள் யாருக்கும் கிலிபிடிக்கும். மூச்சுவிடக்கூடாது, விடமாட்டார்கள். பயம். அவள்தான் அந்த வருசத்தில் நடந்த ஊருக்கு ஒவ்வாத, கெட்ட காரியங்களைப் பட்டியலிடுவாள். அதில் ஊர்நாட்டாமை செய்த தவறுகள் சொல்லமாட்டாள்.

ஊர்த்தங்கிலியான் ஒட்டுமொத்த பட்டியலுக்கும் தானே பிரதிநிதியாக வந்து மன்னிப்புகோருவார். மனிப்புகிடைத்த பின்னே நாள் குறிக்கப்படும். பங்குனி மாச முழுநிலவு நாளன்று திருநாள். அதுவரை ஊர்மடத்தில் சீட்டாடிக்கிடந்த ஆண்கள் விரட்டப்பட்டு வேலைகளுக்கு போவார்கள். வேலி விறகுவெட்டி காயப்போடுவர்கள். சேர்த்துவைத்த நெல்லை அவித்து காயப்போடுவார்கள். தினையெடுத்து உமிக்குத்தி வைப்பார்கள். மாவிடிக்க கருப்பட்டி வாங்கக்காசு சேரும் வரை தினையரிசி பானையில் காத்துக்கிடக்கும். சொந்தஞ் சுறுத்துகளுக்குச் சொல்லியனுப்புவார்கள். இந்த தடவையாவது எனக்கு நைலக்ஸ் சேலை எடுக்கனும் என்று வீட்டுக்குள்ளும், பாளையங்கோட்டை கரகாட்டம்தா இந்த தரவ என்று ஊர்மடத்திலும் கோரிக்கைகள் வைக்கப்படும். எளவட்டங்களுக்குள் இன்னொரு வகையான பொங்கலும் நடக்கும்.

ஒரு முறை சொக்கலால் பீடியால் ஒரு பொங்கலே நின்று போக இருந்தது. அஞ்சக்கிழவனுக்கு அத்தனை லாகிரியும் உண்டு.வெத்திலை போடுவான். ஞாயித்துக்கிழமையானல் கறிஎடுத்து தானே வதக்கி சாராயம்குடிப்பான். சில நாள் இட்லிக்கடை பொன்னம்மாவீட்டில் இட்லி திங்கிற சாக்கில் காலநேரம் போவது தெரியாமல் பேசிக்கிடப்பான். அவர்களிருவரும் பேச்சில்நிகழையும், மௌனத்தில் கடந்தவற்றையுமாக காலங்களை அசைபோட்டபடி பொழுது கடத்துவார்கள்.
இப்படிப்பட்ட மனுசனுக்கு ஒரு மாசம் எல்லாவற்றையும் ஒத்திவைப்பது சிரமமானது. இருந்தும் எல்லாவற்றையும் எடுத்துப்பரணில் பதுக்கி வைத்துவிட்டு. மாரியைத்தலையில் வைத்துக்கொள்வான். ஒரு நான்கு நாள் ஊர்சுற்ற வேண்டும்.ராத்திரியில் பக்கத்து ஊர்களுக்கு போய் தானியம் தவசங்களைக் காணிக்கை பெற்றுக்கொண்டுவந்து சேர்க்கவேண்டும். நடு இரவுகளில் தூக்கம் கலைக்க அங்காங்கே கொடுக்கும் வரக்கப்பி போதாது சொக்கலால் பீடியும் வேனும்.

இது பின்னாட்களில் வைதீகப் பிரச்சினையாகி, மூத்த சாமி சுத்தக்கொறச்சலா இருக்கப்படாது என்று விழாக் குழுவின் தீர்ப்பானது. மகனா கடமையா என்று எஸ்பி சௌத்ரிக்கு வந்தது போல " பீடியா சாமியா" அஞ்சக் கிழவனுக்கும் ஒரு பிரச்சினை வந்தது. ரொம்பச் சுளுவாக பீடிப்பக்கம் சாய்ந்துகொண்டான் எங்க தாத்தன் அஞ்சன். அப்போது கூட செவனிக்கிழவிக்கு அருள் வந்து குடுகுடுன்னு கொடமானம் கொடுத்தாள். " ஒரு வருச லொம்பலத்த மறக்க இந்தச் சனங்களுக்கு பொங்கல் தானப்பா லவிச்சிருக்கு, இதையு ஒங்க நொரநாட்டியத்துக்காக கலைச்சு உட்டுட்டாசனம் கிறுக்குப்பிடிச்சி அலயப்போது, பெரிய்ய கட்டுசெட்டு நொட்டுன கட்டு செட்டு " என்று சொடலையாகிச் சொன்னது ரொம்பச்சரி யெனப்பட்டது. மாரியம்மா இப்போல்லாம் பீடியை ஒளிவு மறைவில்லாமல் சாமிகுடிக்கும்.

மூன்று சாமியாடிகளும் ஒரு மாதத்துக்கு பயபக்தியோடு திரிவார்கள். மாசி மாசக்கடைசியில் மூனுநாள் காணாமல் போகும் அஞ்சத்தாத்தன் பங்குனி முழுக்க தாஞ்சோடி பாக்கியப்பாட்டி வீட்டு முத்தத்திலே நின்னு பேசிட்டுத் திரும்ப வந்திரும். நித்தக்குளியல், சுத்தபத்தம், தனிக்கும்பா கருவாடு, கறிச்சேக்க மாட்டார்கள். ஊருக்குள்ளும் யாரும் கறித்திங்க மாட்டார்கள். பன்னிக் குடிசைமாதிரி இருக்கும் அந்த மாரியம்மன் கோவிலுக்கு வெள்ளையடிக்க மூனு வாளிச் சுண்ணாம்பு போதும். ஆனால் அதற்காக நடக்கும் அலும்பலிருக்கிறதே அதுதான் கூத்து. என்னமோ அரம்மனைக்குப் பெயிண்டடிக்கப் போவது போல பாவனைகாட்டுவார் அஞ்சத் தாத்தா.
பொங்கல் முடிந்து வரவு செலவு காட்டும்போது " சாத்தூரூக்குப் பேய்" வந்த செலவு என்று கணக்கெழுதித் தருவார். ' சாத்தூருக்குப் பேய் வந்தா ' அத விரட்டுற செலவு சாத்தூர் நாட்டாமைக்குத் தானே ? என்று பெரியசாமிக் கிழவன் கேட்டதும் சனம் கொல்லெனச் சிரிக்கும். 'கணக்கச் சரியானு பாரு மூதி, பெரிய்ய நக்கீரப் பூலழு, குத்தங் கண்டுபிடிக்க வந்துட்டான்' அவருஞ் சிரித்துக்கொள்வார்.

17.9.09

இரண்டு நடைமுறைகளால் ஆன தீபகற்பம்.








அன்று சனிக்கிழமையாக இல்லாதிருந்தால் அவள் பள்ளிக்கூடம் போயிருந்திருப்பாள். இப்போது அவளும் கூட ஒரு பட்டாதாரி ஆகியிருக்கலாம். வாச்சாத்தி மலை மக்களை காவல் துறையும் வனத்துறையும் சேர்ந்து துவம்சப் படுத்தியபோதுஎட்டாம் வகுப்பு படித்த பரந்தாயி வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு உங்கள் முன்நிற்கிறாள்.1992 ஆம் வருடம் ஜூன் மாதம் 20 ஆம் தேதி நடந்த கொடூரத்தின் வாழும் சாட்சியாக கிடக்கும் 2500 க்கும் மேற்பட்டமக்களில் ஒருத்தி சகோதரி பரந்தாயி. பரந்து கிடக்கும் கண்ணீர்க் கடலின் ஒரு துளி இந்த பரந்தாயி.( தீக்கதிர் 15.9.09)



அந்த சோகக்கடலின் ஒவ்வொரு அங்குளத்தையும் எழுத்து துடுப்பால் கடத்துகிறது சோளகர்தொட்டி எனும் ச.பாலமூகனின்நாவல். நாளேடுகளின் மூலையில் கவனிப்பாராற்ற செய்தியாக வந்துபோகும் இதுபோன்ற வன்கொடுமைகளைப் பட்டி யலிடுகிறது ஒரு வலைப்பக்கம். அது ஒரு தனி என்சைக்ளோபீடியாவாக விரிந்து கிடக்கிறது. அங்கு போய்விட்டுத் திரும்பினால் இந்த தேசம் முழுக்க சூன்யத்தால் மட்டுமே நிறம்பிக்கிடக்கிற மனோநிலை மேலிடுகிறது. ஆயிரமாயிரம்செய்திகள் ஒடுக்கப்பட்ட ஜனங்களின் மேல் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளாக மிரட்டுகிறது. பெரும்பாலானவை காவல்துறையாலே நிகழ்த்தப் பட்டிருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை. அவற்றில் முக்கால்வாசிக்குமேல் வஞ்சிக்கப் பட்டவர்கள் பெண்களே.



godown country என்றும், கல்வியறிவு அதிகமுள்ள மாநிலம் என்றும் வர்ணிக்கப்படும் கேரளத்தில் உள்ளது அட்டப்பாடி.சுமார் 2500 மலைவாழ் மக்களின் ஜனத்தொகை கொண்ட இந்தப்பகுதியில் சுமார் 345 முதல் 400 வரை கல்யாணமாகாததாய்மார்கள் ( unwed mothers - கன்னித்தாய்மார் ) இருப்பதாக கணக்கெடுப்பு சொல்கிறது. காரணம் அங்குள்ள அகாலி மாணவியர் விடுதியில் தங்கிப்பயிலும் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் விடுதிக் காப்பாளர்களின் வற்புறுத்தலின் பேரில் விபச்சாரத்திற்கு ஈடுபடுத்தப்படுவது. இதனால் கற்பமடைபவர்கள் அதிலிருந்து மீள முடியாமல் போதைக்கும், விபச்சாரத்துக்கும் மீண்டும் மீண்டும் அடிமையாவதாக உண்மை கண்டறியும் குழு தெரிவிக்கிறது. இதே போல கன்னித்தாய்மார்கள் ஆப்பிரிக்க அமெரிக்க கறுப்பினத்தில் அதிகம் இருந்ததாக பல கருப்பினப் புதினங்கள், புனைவுகளும் முன்வைக்கின்றன. அதிலிருந்து அவர்கள் மீண்டுவந்து வெகுகாலமாகிறது.



இந்த உலக உருண்டைக்குள் ஜீவிக்கிற மனித இனத்தில் யாருக்கும் ஒரு விபத்துப்போல நேரலாம். விசை 25 வது இதழில் வந்திருக்கிற த.அரவிந்தனின் " புனித மனங்களில் புரளும் புளுக்களின் குறியீடு " எனும் நிகழ்புனைவு, தொடர்ந்து பலாத்கரத்திற்கு ஆட்படுத்தப்படும் பெண்கள் அதை ஆதரிக்கிறார்களா இல்லை ஏற்கிறார்களா? ஏன் ஒரு முறைகூட அவள் எதிர்வினை ஆற்றாமல் விடுகிறாள்? என்னும் கேள்வியை, அதாவது அறிவுப்பூர்வமான கேள்வியை முன்வைக்கிறது. "உனது பற்களும் நகங்களும் எங்கே போயின" என்று ஒரு வரலாற்றுக் கேள்வியைக் கூட நாம் கடந்து வந்திருக்கிறோம். இவை யாவும் வெகு மக்களின் மனோநிலையில் இருந்து கிளம்பும் அறிவார்ந்த கேள்விகள்.



ஒரு ஐந்து வருடத்திற்கு முன்னர் சாத்தூர் காவல் நிலையத்துக்கு ஒரு புகார் வந்தது. ஆலை முதலாளியின் பையன் அங்கு கூலிவேலை பார்த்த பெண்ணொருத்தியோடு உறவு வைத்திருந்து அது பௌதிக மாற்றமாகி அவள் கருவுற்றாள். அதுவரை உலகறியா மறைபொருளாக இருந்த ஒன்று பொதுப் பிரச்சினையாக உருமாற்றமானது, கற்பத்தினாலே. வழக்கம் போல காவல் நிலையம் இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் செய்துவைத்தது. எப்படி ? பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டாருக்கு நஷ்ட ஈடு கொடுத்து சமரசம் செய்துவைத்தது. ( அனுலோமா)



இதே உறவு ஒரு கூலிக்கார ஆணுக்கும் ஆலை முதலாளியின் மகளுக்குமாக இருக்கும் போது கிட்நாப்பிங், மொலாஸ்டேசன், திட்டமிட்ட சதி, நிர்ணயிக்கப்பட்ட வயதுக்கு முன்னாள் கட்டயத்திருமணம், எனும் வழக்குகள் பதிவாகியிருக்கும். அல்லது கூலிக் கொலைகாரர்களால் அவன் உயிரோடு எறிக்கப்பட்டிருப்பான், அல்லது மொட்டையடித்துக் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதையிலேற்றி ஊர்வலமாக வந்திருப்பான். ( பிரதிலோமா)




இப்படி இரண்டு நடைமுறைகள் இந்த தீபகற்பத்தில் மிக இயல்பாக நடக்கிறது. அதனால் தான் "கழுதைக்குப் பின்னாலே போகாதே கச்சேரிக்கு முன்னாலே போகதே" என்று ஒதுக்கப்பட்ட ஜனங்கள் காவல்துறையை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். கஞ்சி குடிப்பதற்கிலாத, அதன் காரணங்கள் இதுவென்றறிந்திராத இந்த ஊமை ஜனங்களுக்கான சரியான, முழுமையான குரல் எங்கிருக்கிறது ?




16.9.09

எண்ணாப்புச் சடங்கு.

ஒலிபெருக்கியின் அலறல் ஓய்ந்திருக்கும்.
பந்தக்காலில் தொங்கிய வாழைக் காய்களை
சிறுவர்களும், பெரியவர்களும்கூடகண்ணசந்த
நேரம் பார்த்து திருகிப்போயிருப்பர்.
கொட்டாரத்தில் மேய்ந்து கொண்டிருந்த
கோழியில் ஒன்றிரண்டு
அதி காலையிலேயேஅடுப்பங்கறைக்கு வந்திருக்கும்.
வீட்டுக் கொல்லையில்சின்ன
அண்டாவில் சோறு கொதிக்கும்.
என்ன மய்னி அசந்து தூங்கியாச்சா
என்று சாடையாகக் கேட்கிறவர்களுக்கு
பதிலிருக்கும் ஆனால் தெம்பிருக்காது.
பூ, பழம், சந்தனத்தின் வாசம்
அப்பிக்கிடக்கிறவீட்டுக்கும் தெருவுக்குமாக
நிலைகொள்ளாமல் மனது அலையும்.
இப்போதுதான்
திட்டித்தீர்த்ததாயின்முகம் தேடுகிறது.
சாக்கடையும் புழுதியும்
மண்டிக்கிடந்த சொந்த ஊர் மணக்கிறது.
அவனைத் தெரிந்திராத அவளைச்சுற்றி
பெருந்தீ எரிந்து கொண்டே இருக்கும்.
இன்னைக்கு எண்ணாப்புச் சடங்கு.

14.9.09

அழகிய காதலும், அதுவும் அவரும்.



முன்னதாக என் அன்பு நண்பன் ஞானசேகரன் அழைத்திருந்தார்.

அப்புறம் அருணா மேடமும் அழைத்தார்கள்.

பின் வரும் நான்கு பதம்பற்றி எழுதச்சொன்ன வீட்டுப்பாடம் இது.

சரிபார்த்து மதிப்பெண் தரலாம்.



காதல்

காதலெனும் ஆப்பிளைக்கடித்த பிறகுதான்,

ஆதாமும் ஏவாளும் மனிதர்களானார்கள்.

காதலில்லா தேசத்தில் பூக்களுக்கு இடமில்லை.

காதலற்ற பாலையில் கலைகள் முளைக்காது.

காதலில்லா பாடலுக்கு ஓசையில்லை, இசையுமில்லை.

தன்னைத்தானே அழகாக்கிக்கொண்டு,

இந்த உலகத்தையும் அழகாக்கும்,

அற்புதக் கிரகம் காதல்.


அழகு

தேவை தான் கண்டுபிடிப்புகளின் தாய்.

அழகு கண்டுபிடிப்புகளைத் தேவதையாக்கும்.

வாழ்க்கையின் தேவைகள்

உணவும், உடையும், கட்டிடமுமான

கச்சாப் பொருள்களைத் தருகிறது.

அழகுணர்ச்சி அதை

ருசியாக்கி, வண்ணங்களாக்கி, வீடாக்குக்கிறது.


அது

தேவைகளுக்கும் சந்தைக்கும்

இடையில்பயணமாகும் இடைத்தரகர்.

பணம்


அவர்

சாத்தான்களை ஒழிக்க வந்தவர்

சாத்தான்களிடம் சிக்கிக்கொண்டவர்.

கோயில்களுக்குள் இல்லாதவர்.





13.9.09

மத்திய அமைச்சர்களின் ஒரு நாள் விடுதி வாடகை ஒரு லட்சம்.

நூறு நாட்கள் தாண்டி விட்ட UPA அரசின் சாதனைகள் சொல்ல, வேறு வேறு ஊடகங்கள் உண்டு. இந்த நூறு நாட்களாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள் கைக்கு வராமல் காத்திருக்கும் அமைச்சர்கள் 39 பேர். இன்னும் வீடுகளைக் காலி செய்யாமல் டபாய்க்கிற முன்னாள் மந்திரிகள் 11 பேர். இந்த செய்திகளால், நமக்கொன்றும் பாதகமில்லை. ஏனெனில் காத்திருக்கிற எந்த மந்திரியும் சாலையோரத்திலோ, இல்லை சுற்றுலாத்தளங்களின் படிகளிலோ தங்கப் போவதில்லை. அவர்களுக்கு இருக்கவே இருக்கிறது ஐந்து நட்சத்திர விடுதிகள். அப்படிப்பட்ட விடுதிகளில் தங்கிய இரண்டு பேர் SM.கிருஷ்ணா, மற்றும் சசிதரூர்.


அவர்கள் தங்கியிருந்த விடுதியின் அறைக்கான ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா வெறும் ஒரு லட்சம் தான். நூறு நாள் கழித்து கணக்கைப் பார்த்த பிராணாப் முகர்ஜி ஆடிப்போனார். இரண்டு பேருக்கும் வாடகை மட்டும் தலா ஒருகோடி. ஆடாமல் என்ன செய்ய முடியும். வாடகையை அவர்கள் சொந்தப் பொறுப்பிலே கட்டவேண்டும் என்று முடிவானது. இவ்வளவு பெரும் தொகையை வாடகையாக செலவழிப்பதற்கும் ரயில்வே டிக்கெட் விற்பனையைத் தனியாருக்கு தாரைவார்க்க எடுக்கும் முடிவுக்கும் எதுவும் சம்பந்தம் இருக்கிறதா என நாம் கவலைப்பட வேண்டியதில்லை.


அந்த ஆறு அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் பாராளுமன்றக் கட்டிடத்தில் காபி, டீ போன்ற பாணங்களும், சாப்பாடும் வெறும் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்கு கிடைக்கிறது. இது டெல்லியில் ஒரு தோசைக்கு ஐம்பது ரூபாய், ஒரு கப் காபிக்கு பதினேழு ரூபாய் கொடுக்கும் சாதாரண ஜனங்களுக்கு ஒரு போதும் தெரியப் போவதில்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பல நிறுவணங்களின் சம்பளப் பேச்சுவார்த்தைகள் வருடக்கணக்கில் இழுத்தடிக்கிறபோது தங்களின் சன்மானத்தை குறிப்பிட்ட இடைவேலையில் தானாக உயர்த்திக்கொள்வதும் வெளியில் செய்தியாவதில்லை.


கோவை நகரத்தில் மட்டும் மொத்தம் 23 குடிசைப்பகுதிகள் இருக்கிறது. நகரை அழகுபடுத்துவதற்காக எல்லாம் காலி செய்யப்பட்டு விட்டன. நகருக்கு வெளியே அவர்களுக்கு 272 சதுர அடியில் இடம் ஒதுக்கித் தருவதாக ஒப்புதல் மட்டும் அளித்திருக்கிறது அரசு. அதே கோவையில், மாநகராட்சி மிருகக்காட்சி சாலையில், திரேசியஸ் எனும் சிங்கவால் குரங்குகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தின் பரப்பளவு 500 சதுர அடி. இதுதான் இந்த அரசுகள் காலங்காலமாக ஒதுக்கப்பட்ட மக்களின் மேலும் குரங்குகள் மேலும் வைத்திருக்கும் அபிமானத்தின் அளவைக்காட்டுகிறது.


மன்னாதி மன்னன் படத்தில் " அப்புறம் அந்தக் குடிசைகளை என்ன செய்வது" என்கிற கேள்வி வரும், " தேவையில்லாத காரணத்தால் அவையெல்லாம் தீயிலிட்டுக் கொளுத்தப்படும் " என்று மறைந்த நடிகர் எம்ஜிஆருக்கு அப்படி ஒரு வசனம் எழுதிக் கொடுக்கப்பட்டது. மிகுந்த ஆரவாரத்தையும் ஒரு பெரும் எதிர்பார்ப்பையும் சாதாரண ஜனங்களுக்குள் விதைத்து விட்டது அந்தக்கால சினிமா இலக்கியம். நிஜத்தில் அரசியல் இலட்சனம் வேறு வேறு மாதிரி இருக்கிறது. அதை சுட்டிக்காட்டவும் மறதியெனும் புதை சேற்றுக்குள்ளிருந்து மனிதர்களை வெளியில் எடுப்பதுவும் மட்டுமே இலக்கியத்தின் வேலையாக இருக்கிறது.

12.9.09

வலையும் நானும் - ஒரு தொடர் பதிவு




அந்தப்பக்கம் போகாதே, போனாலும் உடனே திரும்பிவிடு, தாமதமானாலும் யாரோடும் சேராதே, உனக்கு கோஷ்டிவேண்டாம் இப்படியான வேப்ப மர உச்சிக் கதைகள் கேட்ட பின்னரும் நான் வந்துவிட்டேன். எனக்கு முன் யானை பார்த்தவர்கள் குருடர்கள் அல்லர். தன்னைப்போல் பிறரை நேசி, எதிராளியின் இடத்திலிருந்தும் யோசி. எனும் பதங்கள் கூட வர, இதோ ஒரு வருடம் ஓடிவிட்டது. திசைதெரியா தூரத்திலிருந்து அன்பெனும் அலை பொங்கிப் பெருகி இக வாழ்வின் கஷ்டங்களையெலாம் துடைத்தெறிகிறது எனது பக்கம்.


நான் இந்த வலைக்குள் நுழைந்த வரலாறு சொல்லவேண்டுமானால் உடனடியாக ஆத்திகனாய் மாறுவேன். ஆம், அன்பையும் நட்பையும், தோழமையையும் துதிக்கும் ஆத்திகனாக மாறுவேன். அவன் என் கடைவிரல் பற்றி நாங்கள் இணைந்து நடக்கத்துவங்கி இதோ இருபத்தைந்தாண்டுகள் பூர்த்தியாகிறது. என்னிடம் அரசியல், இலக்கியம், இசங்கள், பணச் சிலாக்கியம் இன்ன பிறவும் முன்வைத்து இறுதியில் நட்பையும் சேர்த்து வைத்து எதவதொன்றைத்தேர் என்றால் எல்லாவற்றையும் புறந்தள்ளி நான் நட்பை மட்டும் தேர்ந்துகொள்வேன். அது எனக்கு எல்லாம் தரும்.. ஜீபூம்பா. சென்ற வருடம் துண்டிக்கப் பட்டிருந்த இணைய இழையை கோர்த்துவிட்டு வலையை எனக்கு அறிமுகம் செய்துவைத்தான் தோழன் மாதவராஜ்.


சிறுகச் சிறுக 72 பேர் எனது பக்கத்தில் இணைந்திருக்க எண்ணவியலா அன்பும் நட்பும் குவிந்துகிடக்கிறது. வெளிப்பயணம் இல்லா போதுகளில் வலைப்பயணம் கொண்டு வந்து குவிக்கிறது செலவழிக்க இயலா பெரும்அறிவுத் திரவியத்தை. ஒரு பக்கம் சண்டை, வெறுப்பு, ஒதுக்குதல், கோஷ்டி என எல்லாம் இருப்பினும் வலைக்குள்ளும் மனிதர் இருக்கிறார். குறைந்தபட்ச இடைவெளியில் ரசனைகள் ஒத்துப்போகிற கூட்டம் சேர்கிறது. படிக்கப்படிக்க திருத்திக்கொண்டு பெரும் இடைவெளிகூட குறுகலாம். பிறந்ததிலிருந்தே கூடவந்த வெற்றுப் பிடிவாதங்கள் கூட மாறலாம். எல்லாம் கற்றலில் சாத்தியம். கற்றலிற் கேட்டல் நன்று, இங்கு அந்த இரண்டுமே உண்டு.


திக்கெட்டும் இருந்து இலவச நேரடித் தகவல் தரும் வலை மாந்தர் யாரும் புறந்தள்ள முடியாத தன்னூடகம்.(self media ). இதை புரிந்து கொள்ள வெளியார்க்கு காலமாகும். ஆகாமாலும் போகும் அதனாலென்ன ஆயிரம் பூக்கள் மலரும், மலர்ந்தே தீரும். அதுதான் பிரபல எழுத்தூடகங்கள் கூட வலைக்கெனப்பக்கம் ஒதுக்க நேர்கிறது. இந்த கைப்பேசி அல்லது அலைபேசியைக் கேளுங்கள் அது கண்டுபிடிக்கப்பட்ட போது அதற்கே தெரிந்திருக்காது இவ்வளவு வாடிக்கையாளர்களின் சட்டைப்பைக்குள் கிடப்போம் என்று. கலிலியோவுக்கு நேர்ந்த கதி தெரியுமா உலகம் உருண்டை எனச்சொல்லிவிட்டு சனாதன கிறிஸ்தவ மடத்தில் சாஸ்டங்கமாய்க் காலில் விழுந்த கலிலியோ.


எல்லாவற்றிலும் நன்மை தீமை, கூட்டல் கழித்தல், இரவு பகல், உண்டு. சதவிகிதம் தான் அதன் தன்மையை நிர்ணயிக்கிறது வாழ்க்கை போல. அது வலைக்கும் பொருந்தும் தக்கது நிற்கும் தகாதது வீழும்.


11.9.09

மீறல்களையும் பொதுவில் வைப்போம்.- மகாகவியின் நினைவுக்கு

பயணங்களால் நெய்யப்பட்ட இந்த வாழ்கையில் உலக சுவாரஸ்யங்களில் ஏதேனும் ஒரு பகுதியை நேரடியாகக்காணும் நெடும்பயணம் அலாதியானது. இந்த முறை பண்டிச்சேரி. அங்கிருந்து சென்னை. புதுவை பாரதியார் கிராமவங்கியில் புதிதாக ஒரு ஊழியர் சங்க அமைப்பை உருவாக்க முயற்சி நடந்தது. எங்கள் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் சோலைமாணிக்கம் மூன்று முறை அலைந்து ஒரு சங்கம் உருவாக்கி ஒருங்கிணைத்திருந்தார். செப்டம்பர் 8 ஆம் தேதி நடந்த துவக்க விழாவுக்கு நானும் ஆண்டோ கால்பட்டும் கிளம்பிப் போனோம். இறுதி நேரத்தடங்களால் தோழன் மாது வர இயலவில்லை.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் இரவு பணிரெண்டு மணியிலும் பகல் போல்,சுறு சுறுப்பாயிருந்தது. தன்னந் தனியாக அந்த நள்ளிரவில் பேருந்துக்காக காத்திருக்கும் இளம் யுவதிகளைப் பார்க்கையில் சற்று தெம்பு வருகிறது. இது பன்னாட்டு நிறுவணங்களின் வருகையால் ஏற்பட்ட பல கெட்டதிலும் ஒரு நல்லது. வேளாங்கண்ணி விழாவினால் சென்னை செல்லும் பேருந்துகள் முற்றிலும் அங்கே திருப்பிவிடப்பட்டதால், ஒரே ஒரு லொடலொடா பேருந்துக்கு நூறு பேருக்குமேல் போட்டிபோட்டு ஏறவேண்டிய சூழல் உருவானது, சென்னை வரை நின்றுகொண்டே பயணம் செய்ய பயனிகள் முண்டியடித்துக்கொண்டு ஏறினார்கள். விழுப்புரம் போகவேண்டிய நாங்கள் தஞ்சை சென்று அங்கிருந்து புதுவை செல்ல முடிவெடுத்து ஆறு பேரோடு கிளம்பிய வேளாங்கண்ணி சொகுசுபேருந்தில் பயணமானோம்.

தஞ்சை, மயிலாடுதுறை, கும்பகோணம், சீர்காழி, சிதம்பரம், கொள்ளிடம் என தமிழகத்தின் நெற்களஞ்சியங்களும், திருத்தலங்களும் நிறைந்த பகுதிகளெங்கும் பயணம். கூடவே எண்பதுகளின் திரைப்படப் பாடல்கள். இரவு ஏழு மணிக்கு சால்ட் அண்ட் பெப்பர் விடுதியில் துவக்க விழா அங்கும் கூட சரிபாதி பெண் தோழர்கள் வந்திருந்தபோது விடிவுகாலம் தொலைவில் இல்லை எனும் நம்பிக்கையின் வேர்கள் ஆழ ஆழமாக பயணித்தது. விழாவில் இந்தியன் வங்கி ஊழியர்சங்க பொதுசெயலாளர் தோழர் க.கிருட்டிணன் துவக்கப் பேருரையாற்றினார். அங்கிருக்கிற தனியாருக்கு சொந்தமான விடுதிகள் ஆலைகள், கட்டிடங்களில் சரிபாதி அரவிந்தர் பெயர் தாங்கி நிற்பதுவும், அரசுக்குச் சொந்தமான பல நிறுவணங்கள் பாரதியின் பெயர் தாங்கி நிற்பதுவும் கவனம் பெறக் கூடியவை.

இரவு தனலட்சுமி விடுதியில் நானும் ஆண்டோவும் பின்னிரவுவரை விழித்திருந்தோம். இரவு நேர மதுவிடுதிச் சலசலப்பில் ஒரு ஓரத்தில் ஒரு ஆஸ்திரேலிய இளைஞனும் யுவதியும் அமர்ந்திருந்தனர். எந்தப் பார்வையாளரையும் சலனப்படுத்தாமல் இரண்டு பியர் பாட்டிலோடு வெகு இயல்பாய் சாவகாசமாய் பொழுது கழித்தனர். காலை பத்துமணிக்கு மதுக்கடையில் ஒரு ஏழைப்பெண் வங்கியக் கொள்ளையடித்து திரும்புதல்போல் ஒரு கால்புட்டி வாங்கி மறைத்துக்கொண்டு திரும்பியதை சிலர் பார்த்து எள்ளினர்.
இந்த காலத்தின் இளைஞர் உலகத்தின் பேசு பொருளாய் விளங்கும் புதுவை சென்னை கடற்கரைச் சாலையில் ஒரு முறை பயணம் செய்யவேண்டும் என்கிற எனதாசை நிறைவேற அங்கிருந்து சென்னை பயணமானேன்.
பேருந்து கிளம்புகையில் முன்னிருக்கையில் இருந்த பெண்மனி தனது இணை வராததால் அடைந்த கலக்கமும், பரபரப்பும் எனக்குள்ளும் தொற்றிக்கொண்டது. பரபரப்பின் உச்சக்கட்டமாக அவர் உடைமைகளை எடுத்துக்கொண்டு கீழிறங்க எத்தனித்தார். சிலநொடி அவகாசத்தில் அவரது இணை வந்து சுபமாக்கினார். அவரது கையில் திண்பண்டங்களும், பாணங்களும், மலையேறிக் குறிஞ்சி கொண்டுவந்தது போன்ற களிப்பும் அன்பும் தொங்கிக் கொண்டிருந்தது. அவர் கொண்டு வந்த பாணக்குவளை, பெப்சி வண்ணத்தில் இருந்தது. அது பெப்சியல்ல என்பதை உணந்துகொள்ள எனக்கு ஒரு மணிநேர அவகாசமானது. அவர்கள் பரிமாறிக் கொண்டதில் கலப்படமற்ற அன்பும் முன்னதாகவே கலப்படமாகிய மதுவும் இருந்தது.

விடுதலைக்கு மகளிரெல்லாரும்
வேட்கை கொண்டனம்; வெல்லுவம் என்றே
திடமனத்தின் மதுக்கிண்ணமீது
சேர்ந்து நாம் பிரதிக்கிணை செய்வோம்.
உடையவள் சக்தி ஆண்பெண்ணிரண்டும்
ஒருநிகர் செய்துரிமை சமைத்தாள்.

6.9.09

பகிரப்படாத பேட்டி








முப்பது வருடமாக
எதிர்காற்றில் நீச்சலடித்து
குச்சி ஐஸ் விற்கும்
ஒத்தையால் கருப்பசாமி அண்ணன்.


அப்படியே, அகலக்கேரியர் சைக்கிளோடு
ஒரு உதிரிப் பாகமாய்
மாறிப்போன
மண்ணெண்ணை விற்கும்
ராமர் அண்ணாச்சி.


உழவு மாடுகளை மாற்றி மாற்றி
பிராணிகளின் பாஷை பழகிப்போன வண்டிக்கார
கோபால்நாயக்கர்.


மூன்று தலைமுறையாய்
பாபுபேக்கரி  டீப்பட்டறையில்
நடுராத்திரிகள் நின்று
சுரம் விழுந்த காலோடு
ஒரு தூணாய் மாறிபோன மாரிக்கோணார்.


விளக்குக் கம்பத்தடி
கிழிந்த குடைக்கு
கீழே உட்கார்ந்தபடி
பரபரக்கும் ஜனசந்தடி
அதன்கால்களைக் கவனித்தபடி
வாழ்க்கயின்விளிம்பில் காத்திருக்கும்
வெங்கடாசலபுரத்துத் தாத்தா.


இவர்களிடம்
உழைத்தால் உயரலாமா என்று கேட்டு,
வாங்கி, கட்டிக் கொண்டு வந்திருக்கிறேன்
மூட்டை நிறைய்ய பெருமூச்சையும்,
அதை விடஅதிக
கெட்டவார்த்தைகளயும்.

மென்மையைத் திரட்டி முட்களாக்கும் சாதுர்யம் - நாகதாளி - ( எஸ்.தேன்மொழியின் சிறுகதை )








படிக்கிற போது ஒரு அறுபது எழுபது பக்கங்களில் எதாவது ஒரு சொல் நம்மை நிறுத்தி விடுகிறது. வெண் பொங்கலுக்குள் தட்டுப்படும் மிளகு போலவும், பாயசத்தில் தட்டுப்படும் முந்திரி போலவும் அவை ஆர்வம் கூட்டும். அந்தப் புள்ளியிலிருந்து அந்த வார்த்தை குறித்து தேடக் கட்டளையிடுகிறது மனசு. இப்படித்தான் விவேகானந்தரைப் படிக்கும் போது "ரத்தபீஜன்கள்'' என்னும் சொல் என்னை அலைக்கழித்தது. வெட்டுப் பட்டுத் தெறிக்கும் ஒவ்வொரு துளி ரத்தத்திலிருந்தும் லட்சக்கணக்கான பீஜன்கள் தோன்றுவார்களாம். அது என்னை "பீனிக்ஸ்" பறவையின் சாம்பலோடு எடைபோடக் கூட்டிசென்றது. சென்ற தமுஎச விருதுநகர் மாவட்ட மாநாட்டில் எழுத்தாளர் கோணங்கி "தாதர இலைகள்" பற்றிச் சொன்னார். கடுமையான பஞ்ச காலங்களில் அந்த இலையைக் காய்ச்சி வடிகட்டிய தண்ணீர் பலநாள் பசிதாங்குமெனச் சொன்னார் அதுவே வந்தனா சிவாவின் " உயிரோடு உலாவ" எனும் நூலில் ஒரு வரிச்செய்தியாய் வந்துபோனது. "காலகந்தி" என்ற பதிவில் மாதவராஜும் கூட இலைகளற்ற மரங்கள் கால்நடைகளோடு மனிதப்பசியும் தீர்த்த கவிதை காட்டினான்.



இப்படி ஒரு தேடலை உருவாக்கியது எஸ்.தேன்மொழியின் சிறுகதை நாகதாளி. செப்டம்பர் 09 தீராநதியில் வெளிவந்துள்ள இக்கதை. யுகாந்திரமாக அடக்கி வைக்கப்பட்டிருந்த பெண்களின் சொல்லை எடுத்து வெளியில் கொட்டுகிறது. கதை ஆரம்பிக்கிற போது இரவு குறித்த விகசிப்பு " // இரவுகள் என்பது பொழுதுகள்கூடடையும் அடர்ந்த காடு, இரவுக்குப்பகை நிலவு, தயக்கம் குடித்துவெட்கம் தொலைத்த உயிர்களின் சுதந்திர உலாக்காலம், தன்னை ஊற்றி நிரப்பி உயிரை உறங்க வைக்கும் உலகின் தாலாட்டு. சப்தங்களாலும் சலனங்களாலும் கற்பழிக்கப்பட முடியாதது இரவு //



இப்படியே ஒரு நீள் கவிதையாய் விரிகிறது. இவ்வளவு பீடிகை எதற்கு என மனது கேட்கிற கேள்விக்கு ஒரு அடத்தியான பதிலாக அவள் மண வாழ்வு விவரிக்கப்படுகிறது. அந்த விவரணைக்கு இடையில் ஒரு சொல்லாய் வந்துபோகும் " ராட்சஷி சுரஸா " யார் எனத்தேடச் சொல்லுகிறது சிறுகதை. மஹாபாரதக்கதையை வழிமறிக்கும் அவளுக்கு வெட்ட வெட்ட துளிர்க்கிற வாழ்வு வரம் இருந்ததாம்.



அதே போல நாதியற்றுக் கொட்டாரத்தில் நீண்டு கிடக்கும் கற்றாழை பற்றிய தெளிவும் கிடைக்கிறது. நீரற்ற பாலைவாழ்வின் துணிச்சலுடன் முளைக்கும், இலையின் மென்மையைத் திரட்டி முட்களாக்கும் சாதுர்யம் அதற்கு வசப்பட்டிருந்தது. என்பதான அறிமுகம் இயற்கையின் மீதும் பெண்மையின் மீதும் கர்வமேற்றி வைக்கிற வரிகள். நாட்பட்ட கற்குவியலின் அடியில் இருந்து வரும் விநோதங்களாய் வந்து ஆண் மீது சுமத்துகிற குற்றச்சாட்டு. தர்க்கங்களை செட்டையுடைத்து செயலிழக்க வைத்து ஒப்புக் கொள்ளச் செய்யும் குற்றப்பத்திரிகை. ஏற்றுக்கொள்வதே சிலாக்கியமும் இலக்கியமும் ஆகும்.



பாண்டஸிகளுக்குள்ளும், புராணங்களுக்குள்ளும், சாகசங்களுக்குள்ளும் புதைத்து வைக்கப்பட்டிருப்பது எது. அசாத்தியங்களைச் சாத்தியமாகும் துணிச்சல் தீ. அதை அணைத்துவிட்டு இல்லாதவற்றைத்தேடும் திசை திருப்புதலுக்கு எதிர் நிற்கவேண்டும் இலக்கிய விசை.

5.9.09

தடயமில்லாத முத்தம்.








காய்ச்சலின் உக்கிரம் கூடியபோது வாசலுக்கு வருவதே பெரும் தூரமானதாக இருந்தது. பழய்ய போர்வை முழுக்க விக்ஸ் தைலத்தின் வாசனையும் மாத்திரையின் நெடியும் தங்கிவிட்டது. கோரப்பாயில் எடுத்து வைத்த வாந்தியின் நாற்றத்தை அம்மாவின் அன்பு விரட்டிவிட்டிருந்தது. தூக்கத்தில் யார் யாரோ நெற்றியில் கைவைத்துப் பார்த்துவிட்டுப் போனார்கள். அவர்கள் பேசுகிற விடயங்கள் அவன் கனவினுள் இணைந்துகொண்டது.



ஞாயிற்றுக்கிழமை எதிர்வீட்டில் கொதித்த கறிக்குழம்பின் வாசம் கொமட்டிக்கொண்டு வந்தது. சுடுகஞ்சியும் மல்லித்துவையலும் தான் அப்போதைய விருப்ப ஆகாரம். "இந்நேரம் நல்லாருந்தான்னா வெந்தும் வேகாம சுடுசட்டிக்குள்ள கையோட்டிக் கறித்திங்கும் எம்பிள்ள" இப்படித் தளுதளுக்கும் வார்த்தைகளோடும் அம்மாவின் நாலு நாள் கழிந்தது. " எய்யா எந்திரி இந்தக் காப்பித் தண்ணியவாவது குடிச்சிட்டுப்படு, எறங்கவே மாட்டுக்கே, எதாச்சும் காத்துக்கருப்பாயிருக்குமோ '' அங்களாய்ப்பின் தொடர்ச்சியாக பூச்சச் சின்னைய்யா வந்து கிழவன் கோவில் திண்ணீரு போட்டுவிட்டுப் போனார்.



வேலவரும், எம்ஜியும் வந்திருந்தபோது நல்லவேலை அம்மையில்லை காய்ச்ச மாத்திரை வாங்கப் போயிருந்தாள்." ஒன்னுந்தெரியலடா அவிங்க வீடு ஆளரவமில்லாமக் கெடக்கு, தைரியமா இரு என்ன நடந்தாலு சந்திப்பம் " " மாப்ள நாங்கூட அவ என்னத்த ஒன்ய ஏர்ட்டுப்பாக்க போறான்னு நெனச்சே, உசுராக் கெடக்காடா "வள்ளிமுத்துவின் கண்ணில் நீர் கோத்திருந்தது. அம்மை வருகிற சத்தங்கேட்டு பேச்சை மாத்தினார்கள். பேருக்கு ரெண்டு வார்த்தை பேசிவிட்டு கிளம்பிப் போனார்கள். மூஞ்சை உற்றுப் பார்த்து விட்டு அம்மையும் வெளியே போனாள்.
இத்தோடு ஆறுநாள் ஓடிப்போனது எதோ குருட்டுத் தைரியத்தில் நடுராத்திரியில் காம்பவுண்டு சுவர் ஏறிக்குதித்து அவளது வீட்டுக்குள் போய் நெடு நேரம் பேச்சில்லாமல் கிடந்து இறுக்கி அணைத்துக் கொண்ட நினவுகள் வந்துபோனது. ஆளரவம் கேட்டு அவளது அம்மா கதவு திறந்ததும், தப்பித்து மழையோடு ஓடிவந்ததும் காய்ச்சலுக்கு காரணமானது.



எதேதோ பயமும் சந்தோசமுமான நினைவுகளோடு நல்ல தூக்கம். யாரோ மீண்டும் இறுக்கிப் பிடித்ததுபோல் இருந்தது. எழுந்தபோது கண்களுக்குள் மத்தாப்பு பொறிகள் பறந்தது. ஆசுவாசப் படுத்திக்கொண்டு தெருவுக்கு வந்தான். செவலை நாய் மட்டும் மாரி வீட்டு கூழைக் குடித்துவிட்டு தப்பியோடிக் கொண்டிருந்தது. கிறுகிறுப்போடு மீண்டும் பாயில் உட்கார்ந்தான் கன்னத்தில் ஈரம் மிசமிருந்தது.

4.9.09

கமலஹாசனும்- தீப்பெட்டிஆபீஸ் பெண்ணும் - கற்பிதங்களை கடந்து நிற்கும் இயல்புகள்.








அவள் வங்கிக்கு வரும்போது சிலநேரம் நேராக நானிருக்கும் செக்சனுக்கு வருவாள். சில நேரம் திட்டமிட்டு என்பக்கம் வருவதைத்தவிர்த்து விடுவாள். பணம் எடுக்கும் படிவத்தை என்னையே பூர்த்திசெய்து தரச்சொல்லி வற்புறுத்துவாள். அப்படியொன்றும் அவள் படிக்காதவளும் இல்லை பனிரெண்டு வரை படித்திருக்கிறாள். நாங்கள் சேவை செய்யும் பகுதிகளில் விதிகளை மீறி இப்படியான அதிகப்படியான வேலை செய்தாக வேண்டும். காரணம் எல்லாமே கிராமத்து வாடிக்கையாளர்கள். இந்தா போடு ஐநூறு என்று சொல்லி புத்தகத்தை நீட்டும்போது நாம் மறுத்தால் மல்லுக்கு நிற்பார்கள். " எங்களுக்குத்தான் படிக்கத்தெரியதுல்லா" என்று தெனாவட்டாகச் சொல்லுவார்கள். கொஞ்சம் பழகிய பின்னால் அப்படியே அன்பாகிப் போவார்கள்.



பூர்த்திசெய்து கையெழுத்துப் போடவேண்டிய இடத்தை x குறியிட்டு படிவத்தை திருப்பிக்கொடுத்தாள் கையெழுத்துக்கு முன்னால் + குறியிட்டு திருப்பித்தருவாள். முதலில் எனக்குப்புரியவில்லை. உங்களுக்கும் புரிந்திருக்காது. உங்களின் முதல் பெயரை அதாவது இனிஷியலை முன்னாள் போடுங்கள் என்று சொன்னால் இடக்காக அதுதான் இனிஷியல் என்று சொல்லுவாள். கணவரின் அல்லது தந்தையாரின் இனிஷியலைப் போடுங்கள் என்று சொன்னால் பிடிவாதமாக ரெண்டுமே அதுதான் என்று சொன்னாள்.



சந்தேகம் வந்து கையெழுத்து சரிபார்க்க வைத்திருக்கும் படிவத்தை எடுத்துப்பார்த்தேன் உண்மையில் அங்கேயும் + குறிதான் இருந்தது. என்னம்மா வீட்டுக்காரர சிலுவையில அடிச்சிட்டீங்கன்னு கேட்டேன் அதற்கு '' சார் கேலி பண்ணாதீங்க அது சிலுவைக்குறி '' என்று சொன்னாள் ஏஞ்சல் எனும் அந்தப்பெண். கொஞ்சம் ஆர்வம் வந்து கதை கேட்டேன்.



அவள் பனிரெண்டு வரை படித்து ஒருவனுக்கு மணமுடித்து வைக்கப்பட்டாள். அப்போது அவளுக்கு விஜயலட்சுமி என்கிற பெயர். அவள் என்னிடம் சொல்லமறுத்த எதோ ஒரு காரணத்துக்காக மணமுறிவு ஏற்பட்டிருக்கிறது. பெண்ணடிமைத்தனம் புரையோடிக்கிடக்கும் இந்தச் சமூகத்தில் வேறு என்ன காரணம் இருந்துவிடப் போகிறது. புகுந்த வீடும், பொறந்த வீடும் தடுக்க தடுக்க மீறிவந்து தீவிர கிறிஸ்தவ பக்தையாகி விட்டாளாம்.



அது சரி அப்பா பேரையாவது இனிஷியலாகப் போடலாமே என்றேன்." எந்தப் பெய பேரும் வேண்டாம், எனக்கு ஜீவன் ஏசு அவர் போதும் " என்று சொன்னார். ஒட்டு மொத்த ஆண் வர்க்கம் மீதே ஒரு வெறுப்பு மண்டிக்கிடப்பதை அறியவைக்கிற பதில் அது. எனக்கு இப்போது கமலஹாசன் ஞாபகம் வந்தது. வாணியின் குரலை, சரிகாவின் குரலை, நீர்த்துப்போகச் செய்துவிட்டு அல்லது இருட்டடித்துவிட்டு கமலஹாசனின் குரலே எங்கும் ஒலிக்கிறது. ரொம்பப் புதுமையாக இருப்பது போல மாய்மாலம் காட்டும் ஆணாதிக்க சிந்தனை ஒளிந்து கிடக்கிறது அந்தக்குரலில். கமலின் எல்லாப் படங்களிலும் மனைவியரே ஆடை வடிவமைப் பாளராக வருவது வேறு கதை. அவர்களிருவரும் மணந்திறந்து பேசினால் என்ன பேசக்கூடும், ?.



சேரனின் ஆட்டோகிராப் ஒரு பார்போற்றும் சினிமாவாகி பொருளும் புகழும் அள்ளியது. அதை அப்படியே மாற்றி ஒரு பெண்ணின் ஆட்டோகிராப் ஆக்கும் துணிச்சல் இங்கில்லை. அப்படியான கதைகளுக்குப் பஞ்சமாகிப்போனது தமிழ் சினிமாவும் கலாச்சாரமும். இப்படியொரு படம் வந்தது தமிழில், ருத்ரையாவின் அவள் அப்படித்தான். சுத்தமாகப் புறந்தள்ளி தூக்கியெறிந்தது தமிழ்ச்சமூகம். படத்துக்கும் கூட அப்போது A சான்றிதழ் வழங்கியிருந்தது சென்சார் போர்டு . உடுத்தியிருக்கும் ஆடையில் ஒரு சிறு இஞ்ச் கூட விலகாத விரசமில்லாத படம் அது. காட்சிகளை விட தர்க்கம் தூக்கலாக இருந்த படம்.



ரெண்டு கதாநாயகி இருந்தால் மனைவி தவிர்த்த ஒருத்தியைக் கொன்று குவிக்கும் குரூரச் சிந்தனை மிக்கது தமிழ்ச் சினிமாக்கதை. மீறி உயிரோடு இருக்க நேர்ந்தால் அவர்களைக் கடவுள், இசை, சமூக சேவையென ஒதுக்குத் தள்ளிவிடும் மனுதர்மச் சிந்தனை மிகுந்தது நமது சினிமா. பாலச்சந்தர் இதில் கில்லாடி. ரொம்ப பெண் கதாபாத்திரங்களை உருவாக்கி கடைசியில் சிதைத்தவர். இது பெரிய வாதங்களை உருவாக்கும் பகுதி. சாஞ்சா சாயிர பக்கம் சாயும் எழுபத்தைந்தாண்டு கால சினிமாவை வெறும் மூன்று மூலக்கூறுகளில் அடக்கிவிடலாம். கோடம்பாக்கம் பக்கத்தில் நின்று கொண்டு " மதுரக் கத வச்சிருக்கேன்" என்று எவனாவது சொன்னால் அவனை அருவாளோடு வந்து கடத்திக்கொண்டு போய்விடுவார்கள். இந்த நிமிடத்தில் கொள்ளை விலைக்கு விற்பனயாவது அருவாளும் மதுரையும் தான். அதிலிருந்து மீறி வந்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.



இந்தக் கற்பிதங்களை உடைத்தெறிகிற இயல்பான வாழ்க்கையை ஊடகங்களுக்குள் கொண்டு வரும் நாட்கள் தொலைவில்இல்லை. இந்த நம்பிக்கையோடு முடிக்கலாம், அதற்கு முன்னாள்.



முந்தா நாள் பேருந்து நிலையத்தில், பேன்சிஸ்டோர் மறைவில் ஒரு ஆடவனோடு பேசிக்கொண்டிருந்த பெண் ஏஞ்சலேதான். அவள் கண்ணில் ஒளிர்ந்துகொண்டிருந்த காதலையும், முகத்தில் குடிகொண்டிருந்த பரவசத்தையும் எவ்வளவு தூரத்தில் இருந்தும் கண்டுகொள்ளலாம். நேற்றுவங்கிக்கு வந்து பணம் எடுத்தாள் M.ஏஞ்சல் என்று கையெழுத்திட்டு. கர்த்தரும் கற்பிதங்களும் ஒதுங்கிப் போனது இயல்புகளின் வெக்கையில்.

பிச்சைக்குரலின் பின்னாலிருக்கும் அரசியல்.








விடுமுறை நாட்களிலோ அல்லது வேலைக்குப் போவதற்கு முன்னரோ இந்தக் குரல்களைச் சந்தித்தே தீரவேண்டியிருக்கிறது.நோட்டு வைத்துக்கொண்டு, ரசீது புத்தகம் வைத்துக்கொண்டு, தட்டேந்தி, மஞ்சள் துணி சுற்றிய சொம்பைத் தாங்கிக்கொண்டு, சில வேலைகளில் ஒரு வாலிபப்பெண்ணை அழைத்துக்கொண்டு அவர்கள் சுற்றுச்சுவர் வாசலில் நின்று குரல் கொடுப்பார்கள். நின்று அவர்களிடம் எதாவது பேசுவதற்கு முன்னர் ஒரு ரூபாய் நாணயத்தைத்தேடி எடுத்துவந்து அனுப்பிவைத்துவிட்டு என்னிடம் சில புத்திமதிகள் கூறுவார்கள் இல்லத்தோழி.



கடைவீதியில் எந்னைப்பார்த்ததும் நேரே வந்து அணிச்சையாக நாணயத்தை வாங்கிக்கொண்டு கிளம்புகிறவகள் நான்கைந்துபேர் உண்டு. அப்போதெல்லாம் நண்பர்கள் இப்படி ஆட்களுக்கு பிச்சையிட்டு ஊக்குவிக்காதே எனவும் அறிவுறுத்துவார்கள். அதோடு சேர்ந்து இந்த தேசம் வல்லரசாக இருந்ததை இவர்கள் கெடுத்துவிட்டது போலவும் தத்துவம் சொல்வார்கள்.



இவள் அப்படியில்லை கையில் குழந்தை வைத்திருந்தாள். குழந்தை சுருண்டு தோழில் கிடந்தது. உச்சி முதல் பதம் வரை வறுமையின் விளம்பரம் ஸ்பான்சரில்லாமல் காட்சியாகியிருந்தது. முகத்தில் ரோமக்கற்றைகள் அணிச்சையாகவே புரண்டிருந்தது. அதற்காக அவள் எந்த அழகு நிலையத்தையும் நாடிப்போகவில்லை. புரண்டுகொடிருந்த முடிகளை அவ்வப்போத ஒதுக்கிவிடவேண்டிய ஏற்பாடும் அவளுக்குத் தேவையில்லாமலிருந்தது. எவளாவது ஸ்ரேயா, த்ரிஷா எனும் நடிகைகளின் ஞாபகம் உங்களுக்கு வந்தால் அது என் தவறல்ல. எல்லாம் தொலைக்காட்சிக்கே அர்ப்பணம்.



எங்கோ தஞ்சாவூரிலிருந்து வேலைக்கு இங்கு வந்தார்களாம். வந்த இடத்தில் கொண்டு வந்த உடமைகள் களவு போனதால் ஊருக்குப்போக காசில்லை எனத் தன்வரலாறு கூறினாள். இது கிட்டத்தட்ட அறுபது சதமானமுள்ள இந்திய மக்களின் மொத்தமாகக் களவு போன வாழ்க்கை வரலாறு.



இப்போதெல்லாம் இதே மாதிரிக் கதைகள் அதிகமாக வாசலுக்கு வருகிறது. இப்போதிருக்கும் உலகளாவிய பொருளாதார மந்தம், முன்னதாக வந்து ஆழவேரூன்றிப்போன LPG இவைகளைக்காரணம் சொன்னால். பிணக்கு வரலாம், வரும்.விவசாயம் பொய்த்துப்போன நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர்களின் ஜனத்தொகை காமராஜர் மாவட்டத்தில் அதிகம். காரணம் தீப்பெட்டி, பட்டாசு, பாலித்தின்,மற்றும் அச்சு சார்ந்த தொழில்.



இங்கு கடந்த நான்கைந்து வருடங்களாக இயந்திரத்தினால் தீப்பெட்டி உற்பத்திசெய்யும் முறை புழக்கத்திற்கு வந்துவிட்டது. பதினைந்து நாட்களில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகள் பதினைந்து மணிநேரத்தில் தயாராகிவிடுகிறது. கணக்கில் வராதவேலை இழப்புகள் அதிகரித்து வருகிறது. அதன் பக்கவிளைவுகளாக வழிப்பறி, இரவுத்திருட்டு, ஏமற்றுவேலைகள் அதிகரித்துவருகிறது. அதுபோன்ற செயல்களுக்கு மனம் ஒவ்வாதவகளுக்கு மீதமிருக்கிற ஒரே வழி இதுதான்.கையேந்துவது.



Monopoly Restriction Trade Practice Act ( MRTP ACT), அன்னிய முதலீடுகளுக்கான வரம்பு, தனியாருக்கு பொதுப்பங்குகளை விற்பது போன்றவற்றில் கடைப்பிடிக்கப்பட்ட பொதுநல நோக்கு சிதறடிக்கப்பட்டு பொருளாதார பாதுகாப்புச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டதால் இந்தியாவில் வேறுபல தடா பொடா வின் தம்பிகளாக புதிய சடங்கள் முளைக்கிறது. சொந்த மண்ணிலும் அயல்மண்ணிலும் கையேந்துகிறது.




அவள் கடந்துபோய் வெகு நேரமாகிவிட்டது. அவள் தோளில் முகம்திருப்பிக்கிடந்த அந்தக்குழந்தையின் எதிர்காலம் நினைத்து தூக்கம் கலைந்து போய்விட்டது.



வறுமையும், பஞ்சமும், இன்னபிற அரசியல் கொடுமைகளும் அதிகரிக்க அதிகரிக்க நாம் நிம்மதியாகத் தூங்க முடியாது.

3.9.09

ஆந்திர முதல்வர் YS.ராஜசேகரரெட்டி பயணம் செய்த விமானம் காணவில்லை.








ஆந்திர முதல்வர் YS.ராஜசேகரரெட்டி பயணம் செய்த விமானம் காணவில்லை.-------------------------------------------------------------------------------------------------------
இந்திய வரலாறு இது வரை சந்தித்திராத தேடுதல் வேட்டையோடு ஆந்திர முதல்வர் ys.ராஜசேகரரெட்டி காணாமல் போயிருக்கிறார். சித்தூரிலிருந்து அரசுக்கு சொந்தமான bhell ஹெலிகாப்டரில் பயணமானபோது இடையில் திடீரென விமானக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல்கள் துண்டிக்கப்பட்டிருக்கிறது.
மிக மோசமான சீதோஷ்ணநிலையும், அதிக மழைப்பொழிவும் தேடுதல் வேட்டைக்குல் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. ராணுவம், துணை ராணுவம், காவல்துறை என மத்திய மற்றும் மாநில படைகள் சுமார் 5000 பேருக்குமேல் நேரடியாகத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போதும் இந்த நிமிடம் வரை எந்த நல்ல சேதியும் கிடைக்கவில்லை. இது போக சாட்டிலைட், வயர்லெஸ், ஆகிய விஞ்ஞான உபகரணங்களாலும் கூட இன்னும் தடயங்களை காண முடியவில்லை.
இந்தியாவின் அடர்ந்த காட்டுப்பகுதியான நல்லமலா பிரதேசத்தை மையங்கொண்டு தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் இதற்கு முன்னதாக இதே போல நடந்த இரண்டு விமானத்தேடுதலில் அரசின் எந்த முயற்சியும் பலனளிக்காமல் கடைசியில் மலைவாசிகளால் மட்டுமே கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது என்பது, வளர்ந்து வரும் விஞ்ஞானத்துக்கு சவாலாக உள்ளது. மாநிலம் முழுக்க சிறப்பு ஆராதனைகளும் பூஜைகளும் ஒரு பக்கம் அணுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
சந்தேகங்கள், ஊகங்கள், பீதியனைத்தையும் பொய்யாக்கிவிட்டு அவர் நலமுடன் திரும்பவேண்டுமென இந்திய சமூகம் விரும்புகிறது.