28.9.09

கமல் ஒரு காமன் மேன் இல்லை.

கோவில்பட்டி தியேட்டருக்கு போகும்போது ஒரு பரபரப்பு இருந்தது. நுழைவுச்சீட்டு கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பரபரப்பு. வரிசையில் கடைசி ஆளாய் நின்ற போதும் அந்தப்படபடப்பு குறையவில்லை. இந்த முப்பது வருடங்களில் எத்தனை முறை ஹவுஸ்புல் பலகை தொங்கியதைப் பார்த்துவிட்டு, நுழைவுச்சீட்டு கொடுப்பவரிடத்தில், காவலாளியிடம், சைக்கிள் ஸ்டாண்ட் காப்பாளரிடம் தொங்கோ தொங்கென்று தொங்கியிருக்கிறோம். அதன் நீட்சியாகப் பரபரப்பு இருந்ததில்ஆச்சரியம் இல்லை. நுழைவுச்சீட்டுக் கிழிக்குமிடத்தில் அரசியல் கலப்படமில்லாத தொழிற்சங்கச் செயலாளர் ஒருவர் கௌரவ மேலாளராகி கிழித்துக்கொண்டிருந்தார். பெண்களுக்கு ரூ 10ம் ஆண்களுக்கு ரூ40ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இது ஒன்றும் மானியமோ, ஒதுக்கீடோ இல்லை. இப்போதெல்லாம் பெண்கள் தியேட்டர் பக்கமே வருவதில்லையாம். அதுதான் இந்தச்சலுகை. ஆனாலும் கூட பின்னிருக்கைகள் மட்டும் நிறம்பியிருக்க சினிமாக்களில் வரும் பாழடைந்த பங்களா மாதிரித் தியேட்டர் தெரிவதைத்தடுக்க முடியவில்லை. மாற்றம்.


ஆனால் உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தில் எதிர்பார்த்ததை விட அதிகப்பரபரப்பு. ஒரு டூயட் இல்லை. இரும்புக் கம்பியைக்கட்டித் தொங்கவிட்டு அந்தரத்தில் குட்டிக்கரணம் போட்டு சண்டையிடுகிற காட்சிகள் இல்லை. கதாநாயகி இல்லை. கடைசி வரையில் கதாநாயகனுக்குப் பேரில்லை. படம் சுவாரஸ்யக் கண்ணிகளைத் தொடுத்துக்கொண்டே வேகமெடுக்கிறது. இதுவும் தமிழ்திரையுலகம் சந்தித்திருக்கிற மாற்றம். மூன்று தீவிரவாதிகள் வெடிகுண்டு வெடித்துச் சாகிறவரையில் கமலஹாசனை கண்டுபிடிக்க போலீஸ் அவிழ்க்கிற முடிச்சுகள் அவரை ஒரு முஸ்லீம் என கருதவைக்கிறது.தான் ஒரு முஸ்லீம் இல்லை என்பதை ஆணித்தரமாக நிரூபிக்கிறார்.


தீவிரவாதி ஒருவன், ஆரிப் என்னும் காவல் அதிகாரியிடம் சொல்லும் கதையை மீறி அவர் கடமை மிக்கவராக மட்டும் முன்னிறுத்துவதும், கமல் சொல்லும் கதைகேட்கிற ஆய்வாளர் முதல் முதன்மைச் செயலாளர் வரை ஏன் கமிசனர் மோகன்லால் கூட மனம் மாறுவதான சித்தரிப்பு திரைக்கதையில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம். இது நாயகன், இந்தியன், ரமனா, மலையூர் மம்பட்டியான் போன்ற நெகடிவ் ஹீரோக்களை வெகுமக்கள் கப்பாற்றுவதான இமேஜ் பில்டிங் சித்தரிப்பு.ஆக இந்தப்படத்தில் கமல் ஒரு காமன் மேன் இல்லை. ஒரு கைதியின் டைரி போன்ற படங்களோடு கூடிய நாயகன் தான்.


அப்புறம் அண்ணா நகர் காவல் நிலையத்தில் பொறுப்பிலிருக்கிற இன்ஸ்பெக்டர் கேனையாக சித்தரிக்கப்படுவதும் முதல் முறையல்ல. அபூர்வ சகோதரர்கள் போன்ற படங்கள் தொடங்கி பல படங்களில் இவருக்கு இதுதான் வேலை. இதில் பெண்களைக் கிண்டலடிக்கும் தத்துவ காமெடி கூடுதலாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட கேனை இன்ஸ்பெக்டர் இறுதிக் காட்சியில் தான் உருவமைத்த கணினி ஓவியத்தைத் தானே மறுதலிக்கிறார். தமிழ்ச் சினிமா உலகத் தரத்துக்குப் போனாலும் புளிமூட்டை ராமசாமி, போன்ற ஐம்பது வருட தமிழ்சினிமா கதை சொல்லலிருந்து தடம் மாறவில்லை என்பது நிரூபணமாகிறது. நிருபராக வரும் நாதசா புகை பிடிப்பவராகக் காட்டவேண்டிய அவசியம் என்ன என்பதும் துருத்திக் கொண்டிருக்கும் கேள்வி.


படம் முடிந்து திரும்பி வரும்போது மோகன்லால் மாதிரியே ஐம்பது பர்வையாளர்களும் தியேட்டரைக் காலி பண்ணிக் கொண்டு திரும்ப வேண்டியதிருக்கிறது. அதற்குப்பிறகு வெற்றுத் தியேட்டரில் மோகன்லாலின் வாய்ஸ் ஓவர் அசரீரி போல் கேட்டுக் கொண்டிருக்கிறது. ரீல் ஓடி முடிந்த பின்னர் தானே, ஆபரேட்டர் படத்தை நிறுத்த முடியும். துடைத்துச் சுத்தப்படுத்திசாமி கும்பிட்டுவிட்டு பொங்கல் ,பொறி, தேங்காய், சுண்டல் வீட்டுக்கு எடுதுக்கொண்டு போகமுடியும். அவர் முஸ்லீமாக இருந்தால் கூட.

24 comments:

velji said...

//துடைத்துச் சுத்தப்படுத்திசாமி கும்பிட்டுவிட்டு பொங்கல் ,பொறி, தேங்காய், சுண்டல் வீட்டுக்கு எடுதுக்கொண்டு போகமுடியும். அவர் முஸ்லீமாக இருந்தால் கூட.//
-அருமை!
படத்தைப்பற்றி மட்டும் பதிவுலகில் வந்த முதல் விமர்சனம் என நினைக்கிறேன்.பாராட்டுக்கள்.
i changed my url. it is jeyaperikai.blogspot.com.please notify.

அன்புடன் அருணா said...

/ஆக இந்தப்படத்தில் கமல் ஒரு காமன் மேன் இல்லை//
இதை அடிக்கடி நிரூபிப்பவர் கமல்...

சென்ஷி said...

:-)

க.பாலாஜி said...

//நிருபராக வரும் நாதசா புகை பிடிப்பவராகக் காட்டவேண்டிய அவசியம் என்ன என்பதும் துருத்திக் கொண்டிருக்கும் கேள்வி.//

நானும் நேற்றுதான் படம் பார்த்தேன். இறுதிவரையில் அந்த பெண் சிகரெட் குடிப்பதற்கான காரணம் எனக்கும் தெரியவில்லை. ஒருவேளை இதுபோல் ஏதேனும் நிருபரை கமல் சந்திருந்திருக்கலாம். அதன் தாக்கத்தை படத்திலும் புகுத்தியிருக்கலாம். சென்னையில் பெண்கள் புகைப்பிடிப்பது என்பது புதிதல்ல. அதை தவறு என்று எதாவது ஓரிடத்திலாவது சுட்டியிருக்கலாம். அதைவிடுத்து மோகன்லாலே அந்த பெண்ணுக்கு சிகரெட் பத்த வைக்கும் காட்சி கொஞ்சம் உறுத்தல்தான்.

ஒரு சாமானியன் பார்வையில்...மற்ற எவர் படத்தைக் காட்டிலும் இதில் குறை ஒன்றும் இல்லை...மேலே சொன்னதை தவிர...

காமராஜ் said...

தொண்ணூறுகளில், சாத்தூரில், ஒரு ஜாதிக்கலவரம் நடந்தது. சகஜ நிலை பாதிக்கப்பட்டு பள்ளிக்கூடங்கள் விடுமுறை அறிவிக்க நேர்ந்தது இரண்டு தரப்பிலும் உள்ள அப்பாவிகள் உயிர்கள் மட்டும் பலியானது. அன்றாடம் காய்ச்சிகள் பட்டினியானார்கள். அப்போது தமுஎச ஒரு அமைதி ஊர்வலம் நடத்தியது. ரத்தம் சிந்திய வீதிகளில் குழந்தைகள் எப்படி விளையாடும் என்ற கோஷங்களோடும் முன்னணித் தோழர்களின் குழந்தைகளோடும் ஊர்வலம் நடந்தது. ஊர்வலப்பாதையில்
ஒரு பெண்மனி குறுக்கிட்டுக் கேட்டார் ஏன் அந்தச் சாதிக்கரர்கள் தெருவிலும் ஊர்வலம் போகவில்லையென்று. இது சாமான்யக் கேள்வி. எங்களிடம் பதிலில்லை.

காமராஜ் said...

நன்றி வேல்ஜி.

காமராஜ் said...

நன்றி அருணா மேடம்.

காமராஜ் said...

தீவிர வாதம் இருபுறம் கூர்மையான கத்தி.
அதை விமர்சனம் செய்வதற்கு
நேர்மையான சொற்கள் தேவை.

ஊரில் எங்க தாத்தாதான் நாட்டாமை.
சண்டை நடந்தால் விலக்கடி கொடுப்பார்
எப்படி?
சொந்தக்காரர்களைக் கை ஓங்கி அடிக்காமல் விட்டுவிடுவார்.
அல்லது பொத்திக்கொண்டு அடிப்பார். சொந்தமல்லாதோரை
அடிக்கிற போது வெறுப்பு ஓசையோடு கிளம்பும்.

இதை நெடுநாள் மறைக்க முடியாது.

காமராஜ் said...

நன்றி சென்ஷி சார்.

குறியீடுகள் என்னை உறக்கமிழக்கச்செய்கிறது.
அர்த்தம் புரியாததனால்.

காமராஜ் said...

நன்றி பாலாஜி..

கல்வெட்டு said...

//

க.பாலாஜி said...

சென்னையில் பெண்கள் புகைப்பிடிப்பது என்பது புதிதல்ல. அதை தவறு என்று எதாவது ஓரிடத்திலாவது சுட்டியிருக்கலாம். //

புகைபிடிப்பது தவறா?
அல்லது "பெண்கள்" புகை பிடிப்பது தவறா?

எத்தனையோ படங்களில் ஆண்கள் புகைபிடிப்பது காட்டப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் இப்படி கேள்விகள் வந்தது இல்லை.

ஆணோ பெண்ணோ நுரையீரல் செயல்படும்விதம் ஒன்றுதான். புகை ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி விளைவுகளை ஏற்படுத்துவது இல்லை.

சந்தனமுல்லை said...

அருமை!!

/தமிழ்ச் சினிமா உலகத் தரத்துக்குப் போனாலும் புளிமூட்டை ராமசாமி, போன்ற ஐம்பது வருட தமிழ்சினிமா கதை சொல்லலிருந்து தடம் மாறவில்லை என்பது நிரூபணமாகிறது./

:))

இடுகையும் பின்னூட்டத்தில் நீங்கள் எழுப்பியிருக்கும் கேள்விகளும் மிகவும் யோசிக்க வைக்கின்றன!!

SUREஷ் (பழனியிலிருந்து) said...

அவரை விட இவர்தான் காமன் மேன் என்று சொல்லலாமா தல

ராகவன் said...

அன்பு காமராஜ்,
உன்னைப் போல் ஒருவனை எல்லோரும் பேசுகிறார்கள் பதிவுலகில், அவரவர் வசதிக்கேற்ப தங்கள் மறுதலிப்புகளை, ஒவ்வாமையை தங்களால் இயன்றவரை பதிவிட நினைக்கிறார்கள். நீங்களும் உங்கள் பங்குக்கு, உங்கள் கருத்தை முன் வைக்கிறீர்கள். கமலின் தவிர்க்கமுடியாத ஒரு குணக்கேடுகளில் ஒன்று தன்னை முன்னிறுத்திக் கொள்ளமுயல்வது, என் அடையாளங்கள் தெரியாவிட்டால் என்னை படைப்பாளி என்று யார் சொல்வார்கள் என்கிற தன்முனைப்பு. ஒரு சிறந்த நடிகன், தன்னை பல்கலை வித்தகனாய், எல்லாவற்றிலும் தன் முத்திரைகளை இட்டு நிரப்பும் ஒரு இடைநிரவியாய் காண முற்படும்போது நிகழும் அவஸ்தைகளில் ஒன்று, ஒரு தேர்ந்த நடிகன் தொலந்து போவது. காமன் மேன் இல்லாமல் போனது கமலின் ஸ்டார் அந்தஸ்து காரணம் என்று நினைக்கிறேன், எந்த படத்தில் நீங்கள் கமலைப் பார்க்காமல், கதாபாத்திரத்தை பார்த்தீர்கள் சமீபமாய். நாம் கமலுக்கு கொடுத்திருக்கும் ஒரு தண்டனை இது, ஒரு நசுரூதின் ஷா, ஓம்புரி போல பொது ஜனமாய் வருவது கமலால் முடியாது, நாமும் ஏற்றுக்கொள்வோமா என்பது தெரியாது.

துரோக்கால், குருதிப்புனல் ஆனபோது ஒரிஜினல விட நல்லா இருந்தது என்று கோவிந்த் நிஹ்லானியே சொன்னார் என்று கமல் ஏதோ பேட்டியில் சொன்னார், ஆனால் துரோக்காலில் ஓம்புரியின் நடிப்பு ஒப்பிடமுடியாததாய் இருக்கும்.
தமிழில் உள்ள இரண்டு பெரிய ஸ்டார்களில் ஒருவர் இது போன்ற பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபடும்போது, கமலால் தன் கவசகுண்டலங்களை கழட்டி வைக்க முடியாமல் போய் விடுகிறது. கதை புதிது, களம் புதிது, இசை, தொழில் நுட்பம் எல்லாம் புதிது, மொந்தை பழைய கள்ளாய் கமல் என்ன செய்வது எல்லாக் கோனங்களிலும் கமல் தெரிகிறார்.
நதாசா புகைபிடிப்பது போல காட்டுவதால் என்ன கெட்டு விட்டது, நீங்கள் புகைபிடிக்கும் பெண்களைப் பார்த்தது இல்லையா, இது எனக்கு தெரிந்து ஒரு கலாச்சார அதிர்ச்சிக்காக சேர்த்த மாதிரி தெரியவில்லை, அது ஒரு கதாபாத்திரம் அது மாத்திரமே, எதையும் எதாவது என்று நினைத்து எப்போதும் ஏமாந்து கொண்டு இருக்கிறோம் எல்லோருமே.
காமராஜ் எனக்கு இந்த படத்தை நீங்கள் முழுமையாக அனுகவில்லை என்றே தோன்றுகிறது ஒரு அரைகுறையான முயற்சி என்று படுகிறது.
என் கருத்து என் கருத்து மாத்திரமே, நான் யாரையும் பிரதிநிதித்துவப்படுத்த இதை எழுதவில்லை.

அன்புடன்
ராகவன்

காமராஜ் said...

ஆமாம் கல்வெட்டு, எனக்கு அது அதிர்ச்சியான தகவல்தான்.
கதையின் விறுவிறுப்பை அந்தக்காட்சி திசை திருப்புகிறது.
கடலை தின்றுகொண்டே இன்ஸ்பெக்டர் மனைவி அடித்ததை பரிகசிக்கும்
அந்த காட்சியோடு இதை சேர்த்துக் கவனிக்கச் சொல்லுகிறது.
இது வெளிப்படையாக இல்லை, அந்தரங்கமாக எதிர்க்கருத்தை
விதைக்கும் செயல்.

காமராஜ் said...

நன்றி சந்தனமுல்லை. உங்கள் இடுகையைப் படித்தபின்
இன்னும் கேள்விகள் எனக்கு வலுவாக வருகிறது. குஜராத்
கலவரகாலத்தில் வெளியான அருந்ததிராய் கட்டுரை கொடூரமனது.
அது மாண்டோவின் புனைகதைகளைவிட அதிர்சியான நிஜம்.

காமராஜ் said...

கமல் எனும் ஆளுமை, அவருடைய மனிதாபிமான அறிக்கைகள்
எல்லாம் போதிய அளவுக்கு பேசப்பட்டு விட்டது. பஞ்ச தந்திரம், பம்மல்,
வசூல்ராஜா போன்ற படங்களை இப்படி யாரும் விவாதிக்க மாட்டார்கள்.
இந்தப்படத்தின் கரு விவாதமற்றுப் போகாது.

மாதவராஜ் said...

காமராஜ்!
//குஜராத்
கலவரகாலத்தில் வெளியான அருந்ததிராய் கட்டுரை கொடூரமனது.
அது மாண்டோவின் புனைகதைகளைவிட அதிர்சியான நிஜம்//

குஜராத் கலவரத்தின் கொடுமைகளைச் சொல்வதற்கு இச்சொற்றொடர் இங்கு பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். அதற்காக மாண்டோவின் புனைகதைகள் என்பது சரியல்ல எனத் தோன்றுகிறது. தேசம் இரண்டாய் பிரிக்கப்பட்ட போது, ரத்தம் தோய்ந்த நிலப்பரப்ப்பின் வலிகளை உணர்வுகளாலும், தாங்கமுடியாத துயரத்தாலும், மனித மனம் பைத்தியம் பிடித்துப் போகுமளவுக்கு பதிவு செய்தவன் அவன்.

நேசமித்ரன் said...

அருமை

நேர்மையான விமர்சனம்

காமராஜ் said...

நன்றி மாது, சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

காமராஜ் said...

வணக்கம் நேசமித்ரன். கருத்துக்கு நன்றி

காமராஜ் said...

வணக்கம் ராகவன்.
மிக நீண்ட பின்னூட்டம்.
திரைப்படங்கள் குறித்த ஆழமான புரிதல் இதில் தெரிகிறது.
பெண்கள் சிகரெட் குடிப்பது சரியா தவறா எனும் விவாதம் இங்கு எழவில்லை. அது தேவைதானா என்பதே விவாதம்.
27 ஆம் தேதி இரவு மேலும் சில இயக்குநகர்ளோடு உரையாடலின் நேரலையில் அந்தப்பெண் சிகரெட் குடிக்க என்ன
கஷ்டப்பட்டது என கமல் விவரித்தார். காட்சி ஊடகத்தில் ஒவ்வொரு ப்ரேமும், அதில் காட்டப்படுகிற ஆப்ஜெக்ட்களுக்கும்
அர்த்தம் இருக்கிறது. சிகரெட் குடிக்காத நிரூபரைக் காட்டினால் திரைப்படத்தின் முழு அர்த்தம் மாறிவிட வாய்ப்பிருக்கிறதா.
இது எனது கேள்வி.

இரண்டு நான் அந்தப்படத்தை முழுமையாக அனுகவில்லை. உண்மை. ஒரு B பிரிவு நகரத்தின் பார்வையாளனாக எனக்கிருக்கும் சில மேலோட்டமான கேல்விகளை மட்டுமே முன்வைத்திருக்கிறேன். இது கேள்விகள் மட்டுமே ?
பதிலைக் காலம் தீர்மானிக்கும், சொல்லும். நன்றி.

கதிர் - ஈரோடு said...

//நிருபராக வரும் நாதசா புகை பிடிப்பவராகக் காட்டவேண்டிய அவசியம் என்ன என்பதும் துருத்திக் கொண்டிருக்கும் கேள்வி.//

இதுதான் எனக்கும் இருக்கும் கேள்வி

Vadivelan said...

What is your problem ??? all seeing in most of the blog.. bloggers think that there are superior.........

they are just keeps on finding faults, mistake.... they wont see the good things...