4.9.09

பிச்சைக்குரலின் பின்னாலிருக்கும் அரசியல்.
விடுமுறை நாட்களிலோ அல்லது வேலைக்குப் போவதற்கு முன்னரோ இந்தக் குரல்களைச் சந்தித்தே தீரவேண்டியிருக்கிறது.நோட்டு வைத்துக்கொண்டு, ரசீது புத்தகம் வைத்துக்கொண்டு, தட்டேந்தி, மஞ்சள் துணி சுற்றிய சொம்பைத் தாங்கிக்கொண்டு, சில வேலைகளில் ஒரு வாலிபப்பெண்ணை அழைத்துக்கொண்டு அவர்கள் சுற்றுச்சுவர் வாசலில் நின்று குரல் கொடுப்பார்கள். நின்று அவர்களிடம் எதாவது பேசுவதற்கு முன்னர் ஒரு ரூபாய் நாணயத்தைத்தேடி எடுத்துவந்து அனுப்பிவைத்துவிட்டு என்னிடம் சில புத்திமதிகள் கூறுவார்கள் இல்லத்தோழி.கடைவீதியில் எந்னைப்பார்த்ததும் நேரே வந்து அணிச்சையாக நாணயத்தை வாங்கிக்கொண்டு கிளம்புகிறவகள் நான்கைந்துபேர் உண்டு. அப்போதெல்லாம் நண்பர்கள் இப்படி ஆட்களுக்கு பிச்சையிட்டு ஊக்குவிக்காதே எனவும் அறிவுறுத்துவார்கள். அதோடு சேர்ந்து இந்த தேசம் வல்லரசாக இருந்ததை இவர்கள் கெடுத்துவிட்டது போலவும் தத்துவம் சொல்வார்கள்.இவள் அப்படியில்லை கையில் குழந்தை வைத்திருந்தாள். குழந்தை சுருண்டு தோழில் கிடந்தது. உச்சி முதல் பதம் வரை வறுமையின் விளம்பரம் ஸ்பான்சரில்லாமல் காட்சியாகியிருந்தது. முகத்தில் ரோமக்கற்றைகள் அணிச்சையாகவே புரண்டிருந்தது. அதற்காக அவள் எந்த அழகு நிலையத்தையும் நாடிப்போகவில்லை. புரண்டுகொடிருந்த முடிகளை அவ்வப்போத ஒதுக்கிவிடவேண்டிய ஏற்பாடும் அவளுக்குத் தேவையில்லாமலிருந்தது. எவளாவது ஸ்ரேயா, த்ரிஷா எனும் நடிகைகளின் ஞாபகம் உங்களுக்கு வந்தால் அது என் தவறல்ல. எல்லாம் தொலைக்காட்சிக்கே அர்ப்பணம்.எங்கோ தஞ்சாவூரிலிருந்து வேலைக்கு இங்கு வந்தார்களாம். வந்த இடத்தில் கொண்டு வந்த உடமைகள் களவு போனதால் ஊருக்குப்போக காசில்லை எனத் தன்வரலாறு கூறினாள். இது கிட்டத்தட்ட அறுபது சதமானமுள்ள இந்திய மக்களின் மொத்தமாகக் களவு போன வாழ்க்கை வரலாறு.இப்போதெல்லாம் இதே மாதிரிக் கதைகள் அதிகமாக வாசலுக்கு வருகிறது. இப்போதிருக்கும் உலகளாவிய பொருளாதார மந்தம், முன்னதாக வந்து ஆழவேரூன்றிப்போன LPG இவைகளைக்காரணம் சொன்னால். பிணக்கு வரலாம், வரும்.விவசாயம் பொய்த்துப்போன நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர்களின் ஜனத்தொகை காமராஜர் மாவட்டத்தில் அதிகம். காரணம் தீப்பெட்டி, பட்டாசு, பாலித்தின்,மற்றும் அச்சு சார்ந்த தொழில்.இங்கு கடந்த நான்கைந்து வருடங்களாக இயந்திரத்தினால் தீப்பெட்டி உற்பத்திசெய்யும் முறை புழக்கத்திற்கு வந்துவிட்டது. பதினைந்து நாட்களில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகள் பதினைந்து மணிநேரத்தில் தயாராகிவிடுகிறது. கணக்கில் வராதவேலை இழப்புகள் அதிகரித்து வருகிறது. அதன் பக்கவிளைவுகளாக வழிப்பறி, இரவுத்திருட்டு, ஏமற்றுவேலைகள் அதிகரித்துவருகிறது. அதுபோன்ற செயல்களுக்கு மனம் ஒவ்வாதவகளுக்கு மீதமிருக்கிற ஒரே வழி இதுதான்.கையேந்துவது.Monopoly Restriction Trade Practice Act ( MRTP ACT), அன்னிய முதலீடுகளுக்கான வரம்பு, தனியாருக்கு பொதுப்பங்குகளை விற்பது போன்றவற்றில் கடைப்பிடிக்கப்பட்ட பொதுநல நோக்கு சிதறடிக்கப்பட்டு பொருளாதார பாதுகாப்புச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டதால் இந்தியாவில் வேறுபல தடா பொடா வின் தம்பிகளாக புதிய சடங்கள் முளைக்கிறது. சொந்த மண்ணிலும் அயல்மண்ணிலும் கையேந்துகிறது.
அவள் கடந்துபோய் வெகு நேரமாகிவிட்டது. அவள் தோளில் முகம்திருப்பிக்கிடந்த அந்தக்குழந்தையின் எதிர்காலம் நினைத்து தூக்கம் கலைந்து போய்விட்டது.வறுமையும், பஞ்சமும், இன்னபிற அரசியல் கொடுமைகளும் அதிகரிக்க அதிகரிக்க நாம் நிம்மதியாகத் தூங்க முடியாது.

16 comments:

கதிர் - ஈரோடு said...

மிக நேர்த்தியான ஒரு இடுகை...

மனது அமைதி கொண்டிருக்கும் பொழுதுகளில் சட்டைப் பையில் தட்டுப்படும் நாணயங்களில் ஒன்றை தருவது எளிதாகத் தான் இருக்கிறது.

மனம் போராட்டத்தில் இருக்கும் நேரத்தில் என்ன கேடு உழைச்சு சம்பாதிக்க வேண்டியதுதானே என்ற ஒரு கேள்வியும் தோன்றாமல் இல்லை.


இயந்திரமயாமான தொழில் முறைகள்தான், இவர்களின் நிலமைக்கு காரணமா? அல்லது இதில் சிலர் இது மாதிரியான வாழ்க்கைக்கு எளிது என்று பழக்கப்படுத்திக் கொண்டார்களா?

அன்புடன் அருணா said...

/அவள் தோளில் முகம்திருப்பிக்கிடந்த அந்தக்குழந்தையின் எதிர்காலம் நினைத்து தூக்கம் கலைந்து போய்விட்டது./
மனம் முழுவதும் கனக்க வைத்துவிடுகிறது....இப்படியான கவலைகள்.

Karthikeyan G said...

ஏதும் செய்ய முடிவதில்லையே
என்ற இயலாமைதான் மேலிடுகிறது. :(

சந்தனமுல்லை said...

:( இளமையில் வறுமை கொடுமை!!

/வறுமையும், பஞ்சமும், இன்னபிற அரசியல் கொடுமைகளும் அதிகரிக்க அதிகரிக்க நாம் நிம்மதியாகத் தூங்க முடியாது./


ஹ்ம்ம்...ரொம்ப சரி!

காமராஜ் said...

நன்றி தோழர் கதிர்.
மனதின் இடவலத் தவிப்பை
அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
வேண்டுமென்றே செய்தாலும் கூட
என்ன இழந்து விடப்போகிறோம்.
சேமித்த பணத்தையெல்லாம் கல்வி நிலையங்களுக்கு
காவு கொடுப்பதைவிட, இது ஒன்றும் பெரிதில்லை.
கொடுமை கொடுமை நான் கல்லூரியில் சேரும்போது
வெறும் நூற்றி ஐம்பது ரூபாய் கட்டினேன்.
இதைச் சொன்னால்
எனது மகன் சிரிக்கிறான்.

காமராஜ் said...

நன்றி அருணா மேடம்.

காமராஜ் said...

நன்றி கார்த்திகேயன்

காமராஜ் said...

நன்றி சந்தனமுல்லை

பாரதி said...

//விவசாயம் பொய்த்துப்போன நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர்களின் ஜனத்தொகை காமராஜர் மாவட்டத்தில் அதிகம். காரணம் தீப்பெட்டி, பட்டாசு, பாலித்தின்,மற்றும் அச்சு சார்ந்த தொழில்//


நமது பகுதி சார்ந்த நல்ல பதிவு.

காமராஜர்ரை மறக்காத காமராஜ்.

மாதவராஜ் said...

தேவையான பதிவு தோழனே! முகத்தில் அறையும் இந்த உண்மைகளையும் காட்சிகளையும் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.....

காமராஜ் said...

வாருங்கள் வணக்கம் பாரதி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

காமராஜ் said...

தோழா நன்றி.

பிரியமுடன்...வசந்த் said...

//அதோடு சேர்ந்து இந்த தேசம் வல்லரசாக இருந்ததை இவர்கள் கெடுத்துவிட்டது போலவும் தத்துவம் சொல்வார்கள்.//

ஆம் நண்பா

இன்னும் கூற முடியாத வார்த்தைகளால் திட்டும் சில நாய் ஜென்மங்களும் இருக்கின்றன.

ஆனால் இவர்களின் இந்த நிலைக்கு காரணம் யார்?

அலசல் நன்று....

ஆ.ஞானசேகரன் said...

//வறுமையும், பஞ்சமும், இன்னபிற அரசியல் கொடுமைகளும் அதிகரிக்க அதிகரிக்க நாம் நிம்மதியாகத் தூங்க முடியாது.//

ம்ம்ம் உண்மைதான் நண்பா

ஆரூரன் விசுவநாதன் said...

முதலாளிதத்துவ பொருளாதாரத்தின் அடிப்படையான தடையற்ற சந்தை முறையும், இயந்திரமயமாக்கலும், நமக்களித்த பரிசுகள் தான் இவை.

இரந்துண்ணும் நிலையெய்திய விளிம்புநிலை மனிதர்களுக்காக வருந்துகிறோம். பல சூழ்நிலைகளில் நம் இயலாமை, நம்மை இன்னும் மோசமான நிலைக்கு தள்ளிச் செல்கிறது.


கஞ்சி குடிப்பதற்கிலார்-அதன்
காரணம் இவை என்னும் அறிவுமிலார் – பாரதி

இன்று நம்மில் பலகோடிபேர்களின் நிலையும் இதுதான். வளர்ந்த வல்லரசுகள் என பேசப்பட்டவையெல்லாம் இன்று கைகளில் காலி டப்பாக்களோடு……

உயர்நடுத்தர வர்க்கம், நடுத்தரவர்க்கமாக,
நடுத்தரவர்க்கம்
கீழ்த்தட்டாகவும்,
கீழ்த்தட்டு, விளிம்பு நிலைக்கும் தள்ளப்படுகின்ற சூல்நிலையில்....

ஆளும் தாடிக்கார மேதை தான் பதில் சொல்லவேண்டும்....

அமிர்தவர்ஷினி அம்மா said...

:(((((((

கடைசி வரிகளில் நெகிழ்ச்சியடைய செய்துவிட்டீர்கள்.

இல்லத்தோழி - அழகான வார்த்தை பிரயோகம் !