18.9.09

நாட்டுப் பொங்கலும், மாரியம்மன் தூதுவனும்.
மாசி மாசத்திலொருநாள் பொங்கல்சாட்டு நடக்கும் அஞ்சக்கிழவன், செவனிப்பெரியம்மை, பூமணிப்பாட்டியும் இன்னும் சில சாமியடிகளும் பிராதானமானவர்களாக இருப்பார்கள். அஞ்சக்கிழவன் தான் பெரிய சாமி அதாவது மாரியம்மா. அவன் ஆறடி பீரோவை நகர்த்தியது போல கணத்த சரீரத்தோடு சட்டையில்லாமல் தான் நடந்து வருவான். செவனிமேலே பேச்சியும், பூமணிப்பாட்டி மேல் வடக்கத்தியம்மனும் இறங்குவார்கள். பூமணிக்கிழவி நோஞ்சான், காலும் அவள் நினைவின் வேகத்துக்கு ஈடு கொடுக்காத சவட்டைக்கால். அதனால் அருள் வருகிற நேரம் மட்டும் கொஞ்சம் உடம்பை முறுக்கி, சத்தம் கொடுத்து, உஸ்ஸெனச் சொல்லுவாள். அப்புறம் சும்மா வளப்பாடுமாதிரி ஒரு கையில் வேப்பங்கொலை வைத்துக்கொண்டபடி நடந்து வருவாள்.

செவனிக்கு மெயின் டூட்டி பேச்சியம்மாதான் என்றாலும் பொங்கச் சாட்டுகிற அன்று மட்டும் சுடலை மாடனையும் சேர்த்து அடிசனல் டூட்டி பார்க்கவேண்டும். சில நேரம் அனுமஞ்சாமியும் வரும். ரெண்டு கழுதையுந் துடியானதுக. வந்து இறங்கினால் தங்கு தங்குன்னு குதிப்பான் சாட்டை எடுத்து மடேர் மடேரென்று அடிப்பான், பொத்தென்று கீழே விழுவான், ஈசானா மூலையைப் பார்த்து வெடியோசையில் சிரிப்பான். இந்த நடைமுறைகளை அஞ்சக்கிழவனும், பூமணிப்பாட்டியும் செய்ய முடியதாகையால் செவனிக்கிழவி தான் அதற்குப் பொருத்தமானவள். களத்தை அதகளப்படுதுவாள் ஆடும்போது தூசி பறக்கும். பெரிய அருவாளைப் பிடிக்கச்சொல்லி கூர் முனையில் ஏறி நிற்பாள். நாக்குத்துருத்தியபடி கிளம்பும் அவளது ரௌத்ரம் பார்க்கும் போது சுற்றி நிற்பவர்கள் யாருக்கும் கிலிபிடிக்கும். மூச்சுவிடக்கூடாது, விடமாட்டார்கள். பயம். அவள்தான் அந்த வருசத்தில் நடந்த ஊருக்கு ஒவ்வாத, கெட்ட காரியங்களைப் பட்டியலிடுவாள். அதில் ஊர்நாட்டாமை செய்த தவறுகள் சொல்லமாட்டாள்.

ஊர்த்தங்கிலியான் ஒட்டுமொத்த பட்டியலுக்கும் தானே பிரதிநிதியாக வந்து மன்னிப்புகோருவார். மனிப்புகிடைத்த பின்னே நாள் குறிக்கப்படும். பங்குனி மாச முழுநிலவு நாளன்று திருநாள். அதுவரை ஊர்மடத்தில் சீட்டாடிக்கிடந்த ஆண்கள் விரட்டப்பட்டு வேலைகளுக்கு போவார்கள். வேலி விறகுவெட்டி காயப்போடுவர்கள். சேர்த்துவைத்த நெல்லை அவித்து காயப்போடுவார்கள். தினையெடுத்து உமிக்குத்தி வைப்பார்கள். மாவிடிக்க கருப்பட்டி வாங்கக்காசு சேரும் வரை தினையரிசி பானையில் காத்துக்கிடக்கும். சொந்தஞ் சுறுத்துகளுக்குச் சொல்லியனுப்புவார்கள். இந்த தடவையாவது எனக்கு நைலக்ஸ் சேலை எடுக்கனும் என்று வீட்டுக்குள்ளும், பாளையங்கோட்டை கரகாட்டம்தா இந்த தரவ என்று ஊர்மடத்திலும் கோரிக்கைகள் வைக்கப்படும். எளவட்டங்களுக்குள் இன்னொரு வகையான பொங்கலும் நடக்கும்.

ஒரு முறை சொக்கலால் பீடியால் ஒரு பொங்கலே நின்று போக இருந்தது. அஞ்சக்கிழவனுக்கு அத்தனை லாகிரியும் உண்டு.வெத்திலை போடுவான். ஞாயித்துக்கிழமையானல் கறிஎடுத்து தானே வதக்கி சாராயம்குடிப்பான். சில நாள் இட்லிக்கடை பொன்னம்மாவீட்டில் இட்லி திங்கிற சாக்கில் காலநேரம் போவது தெரியாமல் பேசிக்கிடப்பான். அவர்களிருவரும் பேச்சில்நிகழையும், மௌனத்தில் கடந்தவற்றையுமாக காலங்களை அசைபோட்டபடி பொழுது கடத்துவார்கள்.
இப்படிப்பட்ட மனுசனுக்கு ஒரு மாசம் எல்லாவற்றையும் ஒத்திவைப்பது சிரமமானது. இருந்தும் எல்லாவற்றையும் எடுத்துப்பரணில் பதுக்கி வைத்துவிட்டு. மாரியைத்தலையில் வைத்துக்கொள்வான். ஒரு நான்கு நாள் ஊர்சுற்ற வேண்டும்.ராத்திரியில் பக்கத்து ஊர்களுக்கு போய் தானியம் தவசங்களைக் காணிக்கை பெற்றுக்கொண்டுவந்து சேர்க்கவேண்டும். நடு இரவுகளில் தூக்கம் கலைக்க அங்காங்கே கொடுக்கும் வரக்கப்பி போதாது சொக்கலால் பீடியும் வேனும்.

இது பின்னாட்களில் வைதீகப் பிரச்சினையாகி, மூத்த சாமி சுத்தக்கொறச்சலா இருக்கப்படாது என்று விழாக் குழுவின் தீர்ப்பானது. மகனா கடமையா என்று எஸ்பி சௌத்ரிக்கு வந்தது போல " பீடியா சாமியா" அஞ்சக் கிழவனுக்கும் ஒரு பிரச்சினை வந்தது. ரொம்பச் சுளுவாக பீடிப்பக்கம் சாய்ந்துகொண்டான் எங்க தாத்தன் அஞ்சன். அப்போது கூட செவனிக்கிழவிக்கு அருள் வந்து குடுகுடுன்னு கொடமானம் கொடுத்தாள். " ஒரு வருச லொம்பலத்த மறக்க இந்தச் சனங்களுக்கு பொங்கல் தானப்பா லவிச்சிருக்கு, இதையு ஒங்க நொரநாட்டியத்துக்காக கலைச்சு உட்டுட்டாசனம் கிறுக்குப்பிடிச்சி அலயப்போது, பெரிய்ய கட்டுசெட்டு நொட்டுன கட்டு செட்டு " என்று சொடலையாகிச் சொன்னது ரொம்பச்சரி யெனப்பட்டது. மாரியம்மா இப்போல்லாம் பீடியை ஒளிவு மறைவில்லாமல் சாமிகுடிக்கும்.

மூன்று சாமியாடிகளும் ஒரு மாதத்துக்கு பயபக்தியோடு திரிவார்கள். மாசி மாசக்கடைசியில் மூனுநாள் காணாமல் போகும் அஞ்சத்தாத்தன் பங்குனி முழுக்க தாஞ்சோடி பாக்கியப்பாட்டி வீட்டு முத்தத்திலே நின்னு பேசிட்டுத் திரும்ப வந்திரும். நித்தக்குளியல், சுத்தபத்தம், தனிக்கும்பா கருவாடு, கறிச்சேக்க மாட்டார்கள். ஊருக்குள்ளும் யாரும் கறித்திங்க மாட்டார்கள். பன்னிக் குடிசைமாதிரி இருக்கும் அந்த மாரியம்மன் கோவிலுக்கு வெள்ளையடிக்க மூனு வாளிச் சுண்ணாம்பு போதும். ஆனால் அதற்காக நடக்கும் அலும்பலிருக்கிறதே அதுதான் கூத்து. என்னமோ அரம்மனைக்குப் பெயிண்டடிக்கப் போவது போல பாவனைகாட்டுவார் அஞ்சத் தாத்தா.
பொங்கல் முடிந்து வரவு செலவு காட்டும்போது " சாத்தூரூக்குப் பேய்" வந்த செலவு என்று கணக்கெழுதித் தருவார். ' சாத்தூருக்குப் பேய் வந்தா ' அத விரட்டுற செலவு சாத்தூர் நாட்டாமைக்குத் தானே ? என்று பெரியசாமிக் கிழவன் கேட்டதும் சனம் கொல்லெனச் சிரிக்கும். 'கணக்கச் சரியானு பாரு மூதி, பெரிய்ய நக்கீரப் பூலழு, குத்தங் கண்டுபிடிக்க வந்துட்டான்' அவருஞ் சிரித்துக்கொள்வார்.

9 comments:

Ragavan said...

அன்பு காமராஜ் அவர்களுக்கு,

புறங்கையில் நெய் வழிய பொங்கலை நக்கியது போல இருந்தது, தங்களின் இந்த நாட்டு பொங்கலும், மாரியம்மன் தூதுவனும், படித்த போது. நம்ம ஊர்காரய்ங்களுக்கு தான் இது மாதிரி அனுபவம் கிடைக்கும்னு நினைக்கிறேன். எந்த கோயில் பொங்கலா இருந்தாலும், பொங்கல ஒட்டி நடக்கிற அதன் இனைகாரியங்கள் தான் சுவாரசியமானவை. ஏறக்குறைய எங்க ஊரிலும் இது போல காமாச்சி அம்மன் கோயில் பொங்கல் நடக்கும்,அது ஒரு சமூகக் கோயிலா இருந்தாலும், எல்லா சமூகத்தில் இருந்து வந்து பொங்கல் வைப்பார்கள், இதன் போது நம்ம ஊர் இளந்தாரிகள், குமரிகளின் வாளிப்பு தான் பெரிசா திரைகட்டி படம் காமிக்கும்...தொடர்பு படுத்திக்கொள்ளவும், திரும்ப வாழவும் வகை செய்ததற்கு நன்றி!

அன்புடன்,

ராகவன்

தியாவின் பேனா said...

நல்ல போங்கள் சாப்பிடவேணும் போல் இருக்கு

ஆரூரன் விசுவநாதன் said...

கிராமிய மணம் கமழும் பொங்கல் உங்கள் ரசனையான நடையில்..
அத்தோடு....மூட நம்பிக்கைக்கெதிரான நையாண்டியும், அருமை.


வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்

காமராஜ் said...

வாருங்கள் ராகவன். வருகைக்கும் எனது வலையில் இனைந்தமைக்கும் நன்றி.
பொங்கல் வாலிபப்பருவத்தில் சம்பாரி மேள அதிர்வுகளோடு இன்னும் கனகனவென்றிருக்கும்.

காமராஜ் said...

வணக்கம் ஆரூரான் நன்றி .
மழை, வலை இணைப்பு கிடைக்கவில்லை.
வலை எப்போதும் இருக்கும், மழை அப்படியா வாராதுவந்த மாமணி.

காமராஜ் said...

வாருங்கள் தியாகு, அன்புக்கு நன்றி

anto said...

//பொங்கல் முடிந்து வரவு செலவு காட்டும்போது " சாத்தூரூக்குப் பேய்" வந்த செலவு என்று கணக்கெழுதித் தருவார். ' சாத்தூருக்குப் பேய் வந்தா ' அத விரட்டுற செலவு சாத்தூர் நாட்டாமைக்குத் தானே ? என்று பெரியசாமிக் கிழவன் கேட்டதும் சனம் கொல்லெனச் சிரிக்கும். 'கணக்கச் சரியானு பாரு மூதி, பெரிய்ய நக்கீரப் பூலழு, குத்தங் கண்டுபிடிக்க வந்துட்டான்' அவருஞ் சிரித்துக்கொள்வார்.//

மாமா!பிரிச்சி மேய்சுட்டீங்க போங்க...
சிரிச்சு..சிரிச்சு...வயிறு வலிக்குது மாமா....சூப்பர்

காமராஜ் said...

அப்டியா மாப்ளே.. தாங்ஸ்
வேற யாருமே
அதக் கண்டுக்கல இது நான் கல்லூரி படிக்கும் காலத்து மறக்கமுடியாத விகடம், நாடோடிக்கதை.

க ரா said...

இந்த எழுத்து இப்பல்லாம் எங்க போச்சு அண்ணாச்சி.. எனக்கு தெரிஞ்சு கருப்புநிலா கதைகள் தொகுப்பு வந்ததுக்கு அப்புறமே எழுத்து நின்னு போச்சி. திரும்பி எழுத ஆரம்பிங்க. அடுத்த தொகுப்ப கொண்டு வர வேணாமா.