4.9.09

கமலஹாசனும்- தீப்பெட்டிஆபீஸ் பெண்ணும் - கற்பிதங்களை கடந்து நிற்கும் இயல்புகள்.
அவள் வங்கிக்கு வரும்போது சிலநேரம் நேராக நானிருக்கும் செக்சனுக்கு வருவாள். சில நேரம் திட்டமிட்டு என்பக்கம் வருவதைத்தவிர்த்து விடுவாள். பணம் எடுக்கும் படிவத்தை என்னையே பூர்த்திசெய்து தரச்சொல்லி வற்புறுத்துவாள். அப்படியொன்றும் அவள் படிக்காதவளும் இல்லை பனிரெண்டு வரை படித்திருக்கிறாள். நாங்கள் சேவை செய்யும் பகுதிகளில் விதிகளை மீறி இப்படியான அதிகப்படியான வேலை செய்தாக வேண்டும். காரணம் எல்லாமே கிராமத்து வாடிக்கையாளர்கள். இந்தா போடு ஐநூறு என்று சொல்லி புத்தகத்தை நீட்டும்போது நாம் மறுத்தால் மல்லுக்கு நிற்பார்கள். " எங்களுக்குத்தான் படிக்கத்தெரியதுல்லா" என்று தெனாவட்டாகச் சொல்லுவார்கள். கொஞ்சம் பழகிய பின்னால் அப்படியே அன்பாகிப் போவார்கள்.பூர்த்திசெய்து கையெழுத்துப் போடவேண்டிய இடத்தை x குறியிட்டு படிவத்தை திருப்பிக்கொடுத்தாள் கையெழுத்துக்கு முன்னால் + குறியிட்டு திருப்பித்தருவாள். முதலில் எனக்குப்புரியவில்லை. உங்களுக்கும் புரிந்திருக்காது. உங்களின் முதல் பெயரை அதாவது இனிஷியலை முன்னாள் போடுங்கள் என்று சொன்னால் இடக்காக அதுதான் இனிஷியல் என்று சொல்லுவாள். கணவரின் அல்லது தந்தையாரின் இனிஷியலைப் போடுங்கள் என்று சொன்னால் பிடிவாதமாக ரெண்டுமே அதுதான் என்று சொன்னாள்.சந்தேகம் வந்து கையெழுத்து சரிபார்க்க வைத்திருக்கும் படிவத்தை எடுத்துப்பார்த்தேன் உண்மையில் அங்கேயும் + குறிதான் இருந்தது. என்னம்மா வீட்டுக்காரர சிலுவையில அடிச்சிட்டீங்கன்னு கேட்டேன் அதற்கு '' சார் கேலி பண்ணாதீங்க அது சிலுவைக்குறி '' என்று சொன்னாள் ஏஞ்சல் எனும் அந்தப்பெண். கொஞ்சம் ஆர்வம் வந்து கதை கேட்டேன்.அவள் பனிரெண்டு வரை படித்து ஒருவனுக்கு மணமுடித்து வைக்கப்பட்டாள். அப்போது அவளுக்கு விஜயலட்சுமி என்கிற பெயர். அவள் என்னிடம் சொல்லமறுத்த எதோ ஒரு காரணத்துக்காக மணமுறிவு ஏற்பட்டிருக்கிறது. பெண்ணடிமைத்தனம் புரையோடிக்கிடக்கும் இந்தச் சமூகத்தில் வேறு என்ன காரணம் இருந்துவிடப் போகிறது. புகுந்த வீடும், பொறந்த வீடும் தடுக்க தடுக்க மீறிவந்து தீவிர கிறிஸ்தவ பக்தையாகி விட்டாளாம்.அது சரி அப்பா பேரையாவது இனிஷியலாகப் போடலாமே என்றேன்." எந்தப் பெய பேரும் வேண்டாம், எனக்கு ஜீவன் ஏசு அவர் போதும் " என்று சொன்னார். ஒட்டு மொத்த ஆண் வர்க்கம் மீதே ஒரு வெறுப்பு மண்டிக்கிடப்பதை அறியவைக்கிற பதில் அது. எனக்கு இப்போது கமலஹாசன் ஞாபகம் வந்தது. வாணியின் குரலை, சரிகாவின் குரலை, நீர்த்துப்போகச் செய்துவிட்டு அல்லது இருட்டடித்துவிட்டு கமலஹாசனின் குரலே எங்கும் ஒலிக்கிறது. ரொம்பப் புதுமையாக இருப்பது போல மாய்மாலம் காட்டும் ஆணாதிக்க சிந்தனை ஒளிந்து கிடக்கிறது அந்தக்குரலில். கமலின் எல்லாப் படங்களிலும் மனைவியரே ஆடை வடிவமைப் பாளராக வருவது வேறு கதை. அவர்களிருவரும் மணந்திறந்து பேசினால் என்ன பேசக்கூடும், ?.சேரனின் ஆட்டோகிராப் ஒரு பார்போற்றும் சினிமாவாகி பொருளும் புகழும் அள்ளியது. அதை அப்படியே மாற்றி ஒரு பெண்ணின் ஆட்டோகிராப் ஆக்கும் துணிச்சல் இங்கில்லை. அப்படியான கதைகளுக்குப் பஞ்சமாகிப்போனது தமிழ் சினிமாவும் கலாச்சாரமும். இப்படியொரு படம் வந்தது தமிழில், ருத்ரையாவின் அவள் அப்படித்தான். சுத்தமாகப் புறந்தள்ளி தூக்கியெறிந்தது தமிழ்ச்சமூகம். படத்துக்கும் கூட அப்போது A சான்றிதழ் வழங்கியிருந்தது சென்சார் போர்டு . உடுத்தியிருக்கும் ஆடையில் ஒரு சிறு இஞ்ச் கூட விலகாத விரசமில்லாத படம் அது. காட்சிகளை விட தர்க்கம் தூக்கலாக இருந்த படம்.ரெண்டு கதாநாயகி இருந்தால் மனைவி தவிர்த்த ஒருத்தியைக் கொன்று குவிக்கும் குரூரச் சிந்தனை மிக்கது தமிழ்ச் சினிமாக்கதை. மீறி உயிரோடு இருக்க நேர்ந்தால் அவர்களைக் கடவுள், இசை, சமூக சேவையென ஒதுக்குத் தள்ளிவிடும் மனுதர்மச் சிந்தனை மிகுந்தது நமது சினிமா. பாலச்சந்தர் இதில் கில்லாடி. ரொம்ப பெண் கதாபாத்திரங்களை உருவாக்கி கடைசியில் சிதைத்தவர். இது பெரிய வாதங்களை உருவாக்கும் பகுதி. சாஞ்சா சாயிர பக்கம் சாயும் எழுபத்தைந்தாண்டு கால சினிமாவை வெறும் மூன்று மூலக்கூறுகளில் அடக்கிவிடலாம். கோடம்பாக்கம் பக்கத்தில் நின்று கொண்டு " மதுரக் கத வச்சிருக்கேன்" என்று எவனாவது சொன்னால் அவனை அருவாளோடு வந்து கடத்திக்கொண்டு போய்விடுவார்கள். இந்த நிமிடத்தில் கொள்ளை விலைக்கு விற்பனயாவது அருவாளும் மதுரையும் தான். அதிலிருந்து மீறி வந்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.இந்தக் கற்பிதங்களை உடைத்தெறிகிற இயல்பான வாழ்க்கையை ஊடகங்களுக்குள் கொண்டு வரும் நாட்கள் தொலைவில்இல்லை. இந்த நம்பிக்கையோடு முடிக்கலாம், அதற்கு முன்னாள்.முந்தா நாள் பேருந்து நிலையத்தில், பேன்சிஸ்டோர் மறைவில் ஒரு ஆடவனோடு பேசிக்கொண்டிருந்த பெண் ஏஞ்சலேதான். அவள் கண்ணில் ஒளிர்ந்துகொண்டிருந்த காதலையும், முகத்தில் குடிகொண்டிருந்த பரவசத்தையும் எவ்வளவு தூரத்தில் இருந்தும் கண்டுகொள்ளலாம். நேற்றுவங்கிக்கு வந்து பணம் எடுத்தாள் M.ஏஞ்சல் என்று கையெழுத்திட்டு. கர்த்தரும் கற்பிதங்களும் ஒதுங்கிப் போனது இயல்புகளின் வெக்கையில்.

35 comments:

karthick said...

participate in kandasamy contest and win free tickets to paris www.safarikanthaswamy.com

ராம்ஜி.யாஹூ said...

இந்த பொழுதில் கூட நாம் (நான் உட்பட) ஆண் ஆதிக்க மனப்பான்மையில் இருக்கிறோம் என்பதே உண்மை.

ஆனால் கமல் ஹாசன் பேட்டியில் கூறியது, திருமணம் தனக்கு சரி வர வில்லை என்றுதான் சொன்னார். வாணி அல்லது சரிகா மீது மட்டும் தான் தப்பு தான் சரி என்று அவர் சொல்ல வில்லை

மாதவராஜ் said...

//சேரனின் ஆட்டோகிராப் ஒரு பார்போற்றும் சினிமாவாகி பொருளும் புகழும் அள்ளியது. அதை அப்படியே மாற்றி ஒரு பெண்ணின் ஆட்டோகிராப் ஆக்கும் துணிச்சல் இங்கில்லை.//

துணிச்சல் வந்தது தோழனே!ஆட்டோகிராபுக்கு முன்னரே அவள் அப்படித்தான் என்றொரு படம் வந்திருக்கிறது.

காமராஜ் said...

கந்தசமி போன்ற படங்களைப்பார்ப்பது இந்த தமிழ்ச்சினிமாவுக்கும் நல்ல சினிமாக்களுக்கும் செய்யும் துரோகம். அதில் சூதாட்டம் வேறா ? ஜெயித்து பாரீஸ் போய் பாவமூட்டையைக் கொண்டுவரவா ?

காமராஜ் said...

நன்றி ராம்ஜி யாஹூ. நானும் கமலஹாசனைக்குறை சொல்லவில்லை. பெண்களின் குரல், எதிர்க்குரல் ஒலிக்க இடம் தரவில்லை, இந்த ஊடகமும் சமூகமும் என்பது தான் என் கருத்தும் வருத்தமும். அதில் நான் உட்பட குற்றவாளிதான்.

காமராஜ் said...

நன்றி மாது, பின்னால் சொல்லியிருக்கிறேன்.

மாதவராஜ் said...

சாரி... அந்த இடம் வந்ததும், சட்டென்று பின்னூட்டம் போட்டு விட்டேன். பிறகு பார்த்து விட்டேன். அப்புறம் ’பூ’வும் அப்படியொரு ஆட்டோகிராப்தானே!

காமராஜ் said...

எனது வலைப்பக்கத்தில் இணைந்திருக்கும் தயாளன், நிலாமதி, பாலாஜி, தியாவின் பேனா,பிரியமுடன்வசந்த் ஆகிய பதிவர்களுக்கு நன்றி

மாதவராஜ் said...

நீ சொல்லியிருக்கிற அதே பாலச்சந்தர் எடுத்த ‘அவள் ஒரு தொடர்கதை’யும் ஒரு பெண்ணின் ஆட்டோகிராப்தான்!

காமராஜ் said...

ஆமாம், மாது இப்படியான படங்கள் இந்தக்கருத்தோடு இயைந்து போகும் படங்கள் இருக்கலாம். ரொம்ப யோசித்து, யோசித்து சொல்லணும். ஆனால் கிருஷ்ணர், அர்ச்சுணன், தசரதன் அவதாரர்களில் தொடங்கி ஆயிர்க்கனக்கான கதைகளை வழிநெடுகச் சொல்லிக்கொண்டு போகலாம். அந்த கும்மரிச்சத்தில் சிக்கி நசுங்கிப்போன கதைகளில் நாம் சொல்லுகிறவை தேடிக் கண்டுபிடிக்கலாம்.

சந்தனமுல்லை said...

மிக நல்ல இடுகை!! நியதிகள் ஆணுக்கும் பெண்ணுக்குமாக வேறுவேறாகத்தானே இருக்கிறது - சினிமாவில் மட்டுமல்ல- சீரியலிலும்கூட!!

//ரெண்டு கதாநாயகி இருந்தால் மனைவி தவிர்த்த ஒருத்தியைக் கொன்று குவிக்கும் குரூரச் சிந்தனை மிக்கது தமிழ்ச் சினிமாக்கதை. //

:-)

//அப்பா பேரையாவது இனிஷியலாகப் போடலாமே என்றேன்." எந்தப் பெய பேரும் வேண்டாம், எனக்கு ஜீவன் ஏசு அவர் போதும் "//

புரிந்துக்கொள்ள முடிகிறது!!

காமராஜ் said...

பாலச்சந்தர் ஆரம்பிக்கும் போது அப்டியே மத்திய சீனாவில் இருப்பது போல அல்லது ஹவானாவில் வாழ்வது போலத்தெரியும். கடைசியில் பத்திரங்களை கலாச்சாரத்துக்கு பலிகொடுத்து விட்டு வணக்கம் போட்டுவிடுவார். அதில் துணிச்சலாக சேர்த்துவைத்தது நிழல் நிஜமாகிறது படத்தில் தான்.

காமராஜ் said...

நன்றி சந்தன முல்லை.

அவள் கோபத்தை நான் சரியாகப் புரிந்துகொண்டேனா
என்பது இன்னும் தெளிவற்றே இருக்கிறது.
இன்னும் நிறைய்யக்கடக்கவேண்டும்

மாதவராஜ் said...

பாலச்சந்தர் படங்கள் குறித்து உனது பார்வை தவறான மதிப்பீடாகவே உணர்கிறேன்.
தமிழ்ச்சினிமாவில் பெண்களை முக்கிய கதாபாத்திரங்களாகியதில் பாலச்சந்தருக்கு ஒரு இடம் உண்டு. அரங்கேற்றம், அவர்கள், அவள் ஒரு தொடர்கதை, நிழல் நிஜமாகிறது என பல படங்களைச் சொல்லலாம். சிந்துபைரவி போன்ற கடைசிச் சில படங்களை வைத்து ஒட்டு மொத்தமான கருத்துக்கு வந்துவிடக்கூடாது. அடுத்ததாக, சவால்களை எதிர்த்து நிற்கும் உறுதியும், மனோபாவமும் கொண்ட பெண் பாத்திரங்களையும் அவர் படைத்திருக்கிறார். இவையெல்லாம், வங்காளப் படங்களின் பாதிப்பில் அனந்து செய்த காரியங்களாய் இருப்பினும், அவை பாலச்சந்தர் படங்கள் தானே!

ராம்ஜி.யாஹூ said...

மாதவராஜ் சொல்வது போல பாலச்ச்சண்டர், பாரதிராஜா, கமல் ராஜேந்தர் போன்றோருக்கு பெண்களை உயர்வாக காட்டும் (திரைபடத்தில் ஆவது) மனப் பாங்கு உண்டு.

எனக்கு எம் ஜி யாரிடம் பிடிக்காத ஒரு பழ்க்கம் இது. பெண்களை மதிக்காத ஒரு பழ்க்கம் (திரைப்படத்திலும் சரி,) உண்மை வாழ்விலும் சரி.

ஆ.ஞானசேகரன் said...

//சேரனின் ஆட்டோகிராப் ஒரு பார்போற்றும் சினிமாவாகி பொருளும் புகழும் அள்ளியது. அதை அப்படியே மாற்றி ஒரு பெண்ணின் ஆட்டோகிராப் ஆக்கும் துணிச்சல் இங்கில்லை. //

உண்மை..

பிரியமுடன்...வசந்த் said...

33 சதவீதம் 50 ஆகும்போதுதான் இப்பிரச்சினைகள் முடிவுக்கு வரும்

காமராஜ் said...

பாலச்சந்தர் தமிழ்ச்சினிமாவின் எதிரி என்றோ, பாலச்சந்தர் மோசமான கலைஞன் என்றோ நான் வாதிடவில்லை மாது. உன்னைப்போல நானும் கிறுக்குப்பிடித்துப் பார்த்த படங்கள் பாலச்சந்தருடையது. அந்தக்காலத்தில் வெறும் பத்து பார்வையாளர்களில் நானும் ஒருவனாக இருந்து சாத்தூர் தியேட்டர்களில் படம் பார்த்திருக்கிறேன். அதற்காக நான் பெரிய்ய சினிமா விமர்சகன் என்றென்னை நிலை நிறுத்தவில்லை. ஆனால் என்னை உறுத்துகிற பெண்கள் குறித்த அவரது நிலைபாடு அல்லது முடிவு தட்டையானது. இருகோடுகள் சௌகார் ஜானகி , அரங்கேற்றம் பிரமிளா ( அதற்குப்பிறகான அவரது பாத்திரங்கள் தமிழ்ச்சினிமாவின் ஒதுக்குதலை பட்டவர்த்தனம் ஆக்கியது, பிம்பத்துக்கே இப்படியென்றால் நிஜத்தை ? ) நூல்வேலி சரிதா, தப்புத்தாளங்கள் சரிதா, சிந்து பைரவி சுகாசினி, மனதில் உறுதிவேண்டும் சுகாசினி, அழகன், அபூர்வ ராகங்களில் ஸ்ரீவித்யா, ஜெயசுதா. இப்படி செட்டில் ஆகாத கதாபாத்திரங்கள் எத்தனை, அவை என்னதான் சொல்ல வருகின்றன. அவர் சார்ந்த மனிதர்கள் பற்றிய விமர்சனமும், சுட்டுதலும் ஆகப்பெரும் மீறல் என்றே ஏற்கலாம். ஆனல் அவர் அந்தரத்தில் விட்டுச்சென்ற பெண்களின் ஆவிகள் இன்னும் என்னைத் துன்புருத்துகின்றன. அந்த முடிவுகள் இயற்கைக்கும் அறிவியலுக்கும் எதிரானவை.

காமராஜ் said...

நன்றி நண்பா ஞானசேகரா உனது பக்கத்துக்கு வரத்தேரம் இல்லை. புரிந்துகொள்ளவும்.

காமராஜ் said...

நன்றி ராம்ஜி.

காமராஜ் said...

நன்றி vasanth

மாதவராஜ் said...

பாலச்சந்தர் மட்டுமா பெண்களை அந்தரத்தில் விட்டு இருக்கிறார்.இல்லை யார் இங்கு பெண்கலை அப்படியே தூக்கி நிலை நிறுத்திவிட்டார்கள். இன்னொன்று அவரை எல்லாவற்றுக்கும் தீர்வு சொல்கிறவராக ஏன் பார்க்க வேண்டும். உன்னைத் துன்புறுத்த வைத்ததே அவரது வெற்றிதான். மற்ற இயக்குனர்களோடு ஒப்பீடுகையில், பெண்கள் விஷயத்தில் அவர் பங்கு தமிழ்ச்சினிமாவில் முக்கியமானது தோழனே!

மாதவராஜ் said...

எப்போது வேண்டுமானாலும் பேசிக்கொள்ள முடிந்த அண்டை வீட்டுக்காரர்கள் இப்படி பேசிக்கொள்வதும் சுவராசியம்தான் தோழா!!!! உன்னைக் கொஞ்சம் உசுப்பேத்தத்தான்.....!!!

கதிர் - ஈரோடு said...

இப்போதைக்கு...
+ஏஞ்சல் M.ஏஞ்சல் ஆக மாறியதில் ஒரு சிறு சந்தோஷம்..

ஆழமான இடுகை

ஆரூரன் விசுவநாதன் said...

வெறிபிடித்த சாதீய அமைப்புகளும், அவை உருவாக்கிய சமூக கட்டுபாடுகளும்,தான் இங்கே பெண்ணை அடிமைப்படுத்துகின்றன.

ஒரு பெண்ணை ஐவர் மணந்ததும்,

திருமணத்திற்கு முன் பெண் பிள்ளை பெற்று, அவனை ஆற்றிலிட்டு, பின் வேறு மணம் புரிந்ததும்

மாதவியெனும் கோதையையும் அவள் மகள் மணிமேகலையையும் போற்றியதும்


வர்ணகலப்பை ஏற்படுத்த மதுரை வீரன், அரச மகளை கடத்தியதும் இங்கே

இங்கே இயல்பாகத்தான் இருந்தது. இடையில் தான் குழப்பங்கள்.

பெண்களின் பொருளாதார சுதந்திரம், அவளின் சுயம் சார்ந்த விருப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க காரணமாகின்றது. இங்கே பெண் விடுதலை என்பது அவள் பொருளாதார சுதந்திரம் மட்டும் தான். அது கிடைக்கட்டும், பின் பாருங்கள், ஆணாதிக்கமெல்லாம் சுட்டெறிக்கப் படும். அந்த நாள் தொலைவில் இல்லை.

அருமையான பதிவு
வாழ்த்துக்கள்

Joe said...

அருமையான இடுகை.

பெண்களின் குரல் இன்றைய கால கட்டத்தில் சற்றே ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது உண்மை.

//
இப்படியொரு படம் வந்தது தமிழில், ருத்ரையாவின் அவள் அப்படித்தான்
//
ஒரு வேளை அந்த படம் சில ஆண்டுகள் கழித்து வந்திருந்தால் வெற்றி பெற்றிருக்குமோ?

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

Pradeep said...

/**
சேரனின் ஆட்டோகிராப் ஒரு பார்போற்றும் சினிமாவாகி பொருளும் புகழும் அள்ளியது. அதை அப்படியே மாற்றி ஒரு பெண்ணின் ஆட்டோகிராப் ஆக்கும் துணிச்சல் இங்கில்லை.
**//

நல்ல ஒரு சிந்தனை. அப்படி படம் வந்தால் அது செக்ஸ் படமாகத்தான் இருக்கும். அதை மக்கள் பார்த்து நூறு நாள் ஓட்டுவார்கள்.
முற்றிலும் ஆணாதிக்கம் நிறைந்த நாடு இது.
நீங்க கூறியது முற்றிலும் சரியே.

காமராஜ் said...

வாருங்கள் ஆரூரான் சார் இந்தப்பின்னூட்டம் எனது பதிவை இன்னும் செழுமையாக்குகிறது.
நன்றி.

காமராஜ் said...

வணக்கம் உலவு.காம்

காமராஜ் said...

ஆமாம் ஜோ அப்படியும் சிந்திக்க வைக்கிறது.

காமராஜ் said...

ப்ரதீப் நல்ல எள்ளல். உண்மையும் அப்படித்தான் இருக்கிறது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

//அப்பா பேரையாவது இனிஷியலாகப் போடலாமே என்றேன்." எந்தப் பெய பேரும் வேண்டாம், எனக்கு ஜீவன் ஏசு அவர் போதும் "//

நேற்றுவங்கிக்கு வந்து பணம் எடுத்தாள் M.ஏஞ்சல் என்று கையெழுத்திட்டு

இடையில் இருக்கும் பலவீனத்தால் தான் பெண்களை இன்னமும் சகதியாக்கிக்கொண்டிருக்கிறது சினிமாவும், இன்ன பிற ஊடகங்களும்
:(

advocate said...

your views are good.

Thekkikattan|தெகா said...

காமராஜ்,

தங்களின் பாலசந்தர் படங்கள் சார்ந்த அவதானிப்புடன் முழுமையாக என்னால் உடன்பட முடிகிறது. அரங்கேற்ற வேளையிலும் கூட, கதாநாயகி முடிவில் "பைத்தியமாகிறாளா அல்லது ... " சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை, பல பேர் அப்படியும், சில பேர் இப்படியுமாக அனுமானித்து எடுத்துக் கொள்ளும் படியே அந்தக் காட்சி அமைக்கப் பட்டிருந்ததாக ஞாபகம்.

ம்ம்ம் நானும் திருமணம் சார்ந்த கமலின் பார்வை பொருட்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன், ஆனால், உங்களின் பார்வையிலிருந்து முற்றிலுமாக வேறு பட்டது... ஆனால், நீங்கள் கூறுவதில் உண்மையில்லாமல் இல்லை என்றே நினைக்கச் செய்கிறேன் :-)