26.9.09

சம்பாரி மேளத்தின் உச்சமும், சில இழப்புகளின் மிச்சமும்.


திடுக்கிட்டு முழித்துக்கொண்டபோது கண்ணெரிச்சல் அதிகமாக இருந்தது. அது இரவு பணிரெண்டு மணி. பேருந்து திருப்பத்தூருக்கும் காரைக்குடிக்கும் நடுவில் எஸெஸ் கோடையைத் தாண்டிப்போய்க் கொண்டிருக்கிறது. சுருண்டும் நிமிர்ந்தும் குரட்டை விட்டும் அவரவர் வசதிக்கு பயணிகள் எல்லோரும் தூங்கிக்கொண்டிருந்தனர். மூன்றாவது இருக்கையில் ஒரு பச்சைச்சட்டைக்காரர் பக்கத்துப்பயணிமேல் மொத்தமாக சரிந்து கிடந்தார். மதுரையில் ஏறும்போது எல்லோரது கவனத்தையும் தன்பக்கம் திருப்பிய கரைவேட்டிக்காரர், பேருந்தின் முகட்டைப்பார்த்து வாயைப்பிளந்து தூங்கிக்கொண்டிருந்தார். பகலின் ஒப்பனைகள் கலைந்துபோய் நிஜ முகங்களோடு பயணப்படுகிற இரவு.


அப்போது அடிக்கிணற்றில் பதுங்கிக்கிடக்கும் ஜீவராசிகளை மெல்ல மெல்ல மேல்தளத்திற்கு வந்து மிதக்கிற நேரம். அந்த மங்கியஒளியில், முகங்களின் மேல் திரையிடப்படும், மனஓட்டங்கள் துள்ளியமான ஊடகமாக இருந்தது.
தீராத வயிற்று வலிக்காரன் முகத்தில் தேங்கிப்போன இறுக்கம் தெரியும். அதிகாரிகள் எப்போதுமே அரிய வகை உயிரினத்து முக பாவங்களைப் பிரதிபலித்துக்கொண்டே தூங்குவார்கள். அந்த முகங்களின் உதவியோடு தான் பெரும்பாலும் டைனசர், எம் ஐ பி ,வேற்றுக்கிரகத்து ஜீவராசிகளின் முக அங்க சேஷ்டைகள் உருவாக்கப்படுகின்றன. குழந்தைகள் எப்போதும் மலர்களைக்குவித்து வைத்ததுபோல் தூங்குவார்கள். அவர்களுக்கு மட்டுமே நித்திரையின் போது சிரிக்கிற சிலாக்கியம் வாய்க்கும். அந்தக் குழந்தைகளோடு நிலவில் கடவுள் விளையாடுவதாய், கிராமத்து தாய்மார்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.


ஓவியர்களின் முகங்களில் பதினான்குக்கும் மேற்பட்ட வண்ணங்கள் தெரியும். சிலரது முகங்களில் கவிதை வரிகளை வாசிக்கலாம். மானுடசமுத்திரம் நானென்று கூவு, எனும் சேர்ந்திசைப்பாடல் கேட்கலாம். பெரும்பகுதி இரவுகளை பேருந்து இருக்கைகளில் கழித்து விட்ட சம்பத்தின், கனவு கலைந்து விட்டது, ஒரு நல்ல கனவு கலைத்துவிடப்பட்ட சோகத்திலிருந்து மீள சில கணங்கள் தாமதமானது.


சமீப நாட்களை அருளானந்தம் மட்டுமே ஆக்ரமித்திருந்தார். வாடிக்கையாளரினுடனான வார்த்தை மோதலைக் காரணம் காட்டி நிர்வாகம் அவரை தற்காலிக இடை நீக்கம் செய்திருந்தது. அவருக்காக பிராது கொடுத்த வாடிக்கையாளரைச் சமாதானப்படுத்தி, செயற்குழுக்கூட்டி அங்களாய்த்து, நிர்வாகத்துடன் சமரசம் பேசி, குடும்பத்தாருக்கு நம்பிக்கை சொல்லி, இடயிடையே பணிக்குப்போய் எப்பொழுதாவது சாப்பிட்டு, அரைத்தூக்கம் போட்டு, பத்துப்பதினைந்து பகலிரவுகள் கழிந்துபோனது.
இந்த இருபத்து ஐந்து வருசத்தில் அவருக்கென நாற்காலி ஏதுமில்லாத குமாஸ்தாவாக அவர் இருந்தார். அதில் உட்கார்ந்து ஒரு முழு வங்கிக் குமாஸ்தாவாக வேலை பார்த்தது குறைச்சல். சங்கச் சோலியாய் அலைந்ததுதான் அதிகம்.


இந்தியாவின் அணைத்து மாநிலப் பெரு நகரங்களுக்கும் செயற்குழுவுக்காகவோ, பொதுக்குழுவுக்காகவோ பஸ்ஸிலும், ரயிலிலும் பயணப்பட்டுக்கொண்டே பாதி இரவுகளைக் கழித்து விடுவார். மீதி இரவுகளுக்கென செயற் குழுக்கூட்டங்கள். சாயங்காலம் ஆறு மணிக்கு ஆரம்பிக்கவேண்டிய கூட்டம் ஒன்பது மணிவாக்கில் பாதிப்பேரோடு ஆரம்பித்து நீண்டுகொண்டே போகும். சாமத்துக்கும் பிந்தி வந்து படுப்பதுவும், சில இரவுகளில் வராமல் போவதும் அவரது ஆத்தாவுக்கு பெருத்த சந்தேகங்களை பண்ணியது. ''கிடக்காவல் இருக்கிறவங்கூட ராத்திரிச்சுருட்டி மடக்கித் தூங்கிர்ராங்க அப்படியென்ன அரம்மணச் சோலியோ '' அவரால் ஆத்தாவைச் சமாதானப்படுத்தத் தெரியவில்லை.


தர்ணா, பெண்டௌன் ஸ்ட்ரைக், செயற்குழுக்கூட்டம் போன்ற சொற்கள் புழங்குகிற தொழிற்சங்கத்தைப் பற்றி அந்தந்த ஊழியர்களே புரிந்துகொள்ள முடிவதில்லை. ஒவ்வொரு தர்ணாவிலும் சிக்காக்கோவில் தொடங்கி சிங்காரவேலர் வரை சொல்லவேண்டும். மக்குப்பிள்ளைக்கு கணக்குப்பாடம் மாதிரி இருக்கிற இதை வாழ்நாள் முழுக்க அடுப்பங்கறையிலும், வயக்காட்டிலும் தொலைத்துவிட்ட ஆத்தாவிடம் சொல்லிப்புரிய வைக்க இயலவில்லை. மருமகள் வந்து மகனைத்திருத்துவாள் என்ற நம்பிக்கையில் சம்பத்துக்கு கால் கட்டு போடப்பட்டது. எல்லாம் கொஞ்ச நாள் தான்,


பட்டுப்புடவையின் சரசரப்பும் ரோஜா மாலையின் வாசமும் தீர்ந்துபோவதற்குள் அவருக்கு செயற்குழுக் கூட்டத்துக்கான அழைப்புக் கடிதம் வந்தது.
புது மனைவியின் கண்களில் நீர்கோக்க மீண்டும் ஜோல்னாப்பை தூக்கி கிளம்பி விட்டார். போன இடத்தில் வேலை அவசரம் என்று வழக்கறிஞரைப்பார்க்க சென்னைக்கு அனுப்பியது சங்கம். அங்கிருந்து பக்கத்துவீட்டுக்கு தொலைபேசியில் தகவல் சொல்லிவிட்டு கிளம்பிப்போனார். வீடு திரும்ப நான்கு நாள் ஆனது. திரும்ப வீடு வந்தபோது புதிதாக வாங்கிக்கட்டிய ஆட்டுக்குட்டியைப்போல மருங்க மருங்க முழித்துக் கொண்டிருந்தாள். ஆத்தாவோடு சேர்ந்து எழுமிச்சை அறுத்துக் கொண்டிருந்தவளின் கண்கள் இவனைப் பார்த்ததும் கலங்க ஆரம்பித்தது.
''இங்க பாரு அறைக்க குடுத்த மசாலாப்பொடிய மறந்துட்டு வந்துட்டென், நா ஒரு துப்புக்கெட்டவ'' என்றுசொல்லிய படி ஆத்தா கூடையைத் தூக்கிக்கொண்டு கிளம்பிப் போய்விட்டாள்.


கொல்லையில் பல் விளக்கிக்கொண்டிருந்த சம்பத்தை ஓடி வந்து ஆவிப் பிடித்துக் கட்டிக்கொண்டு அழுத தருணம் விலை மதிப்பற்ற கூடலின் தருணம். அப்புறம் தலைப்பிரசவத்தின் போது எங்கோ கோழிக்கோட்டில் இருந்தேனென்று ஒரு வாரம் கழித்து திரும்பி வந்தார். இனி அவரை திருத்த முடியாதெனத் தீர்மாணமானது. இப்போது வீடு புத்தகங்களும் சுற்றரிக்கைகளும், தோழர்களும் புழங்கும் இடமாக மாறியது. மனைவி, சாமம் தாண்டி நாலு மணிக்கு வந்தாலும் கதவு திறந்து சாப்டீங்களா கேட்கும் பாங்குடைய தோழரின் துணையானார்கள். பெண்மக்கள்


'' அப்பா டெல்லிக்கு ஜென்ரல் கௌன்சில் மீட்டிங்குக்கு, அடுத்த பதினெட்டாம் தேதி தான் வருவாங்க '' என்று சொல்லும் சமத்துப்பிள்ளைகளாக மாறினார்கள். இரவுகள் தூங்குவதற்காக மட்டுமில்லை என்றாகிப்போனது. சாமம் கடந்தும் நீண்டுகொண்டே போகிற செயற்குழு கூட்டங்களில், கண் சொருகித் தலை ஆட்டினால் போதும் '' அந்தா பேய் பிடிச்சிரிச்சி, மூர்த்தி போய் மூஞ்சக்கழுவிட்டு வாப்பா,'' கடுகடுத்து விரட்டுவார். ''ஒரு நாள் தூக்கத்த தியாகம் பண்ணக்கூட முடியாம, பெருசா நாம என்ன சாதிக்க முடியும்'' என்று அங்களாய்த்துக்கொள்வார். நாம் ஒரு நிமிடம் தாமதித்தால் ஓராயிரம் அடிகள் பின்தங்கி விடுவோம் என்று எச்சரிப்பார். சாதாரண நாட்களில் கூட இரவு பணிரெண்டு மணிக்கு படுப்பதும், அதிகாலையில் எழுந்து விடுவதும், அடித்துப்போட்டமாதிரித் தூங்குகிறவர்களை தூங்கவிடாமல் எழுப்பி விடுவதும் இயல்பாகிப்போயிருந்தது. தங்கும் விடுதிகளில், அதிகாலையில் அடுத்த நாளுக்கான உடைகளைத் துவைத்துப் போடுவதில் குறியாய் இருப்பார்.விடுதியில்லாத ஊர்களில், விடுதிக்கு காசு இல்லாத நாட்களில் தோழர்களின் வீடுகளில் தங்கிவிடுவார். அங்கு கூட காலை வேளைகளில் சோப்பும் துணியுமாகத்தானிருப்பார். அவருக்கு வீடென்ற ஒன்று இருப்பதாக யாரும் எளிதில் நம்ப முடியாத ஊர்சுற்றி. ஆனாலும் எல்லா நடுத்தர மாந்தர்களைப்போலவே அவருக்கும் வீடு கட்டவேண்டிய கனவு வந்தது.
அந்த வீட்டின் ஒவ்வொரு செங்கலிலும் அவரது வீட்டாரின் கனவுகள் எழுதப்பட்டிருந்தது.


ஓவ்வொரு செங்கலிலும் தினம் தினம் நீர் சொரிந்து குளிரூட்டினார். பார்த்துப் பார்த்துக் கட்டி முடித்து திருவிழாக் கூட்டம்போல தோழர்கள் நண்பர்கள் கூட கிரஹப்பிரவேசம் நடந்தது. இரண்டு பிள்ளைகளுக்குத் தனித்தனியாக அறைகள் ஒதுக்கினார். லெனினும் பாரதியும் அலங்கரித்த ஒரு அறையை தனக்கென ஒதுக்கினார். அவர்களும் அந்த வீடும் பழகுவதற்கு முன்னால். ஒரு வருடம் கூட அங்கு ஓடியாட முடியாத அவரது குழந்தைகளின் சோகத்தோடு வீட்டை விற்றுக் கடனடைத்தார். மீண்டும் வாடகை வீட்டுக்கே குடிபோனார்கள். அதன் பிறகு அவரது மனைவியின் கண்ணை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தவித்தார்.


அப்போதெல்லாம் அவருக்கு அந்த கேலிப்பேச்சுதான் வடிகால். கிளைக்கு வருகிற வாடிக்கையாளரைக் கூப்பிட்டுத்
திடீரென
'' என்ன டை அடிச்சீங்க, முடியெல்லாம் செம்பட்டை படிஞ்சிருக்கு, ரொம்ப ஜாக்கிரதையா இருக்கோனு அண்ணாச்சி '' கேட்டுத் திக்கு முக்காடச்செய்வார். வந்தவர் சங்கோஜப்பட்டு, அசடு வழிந்து சுதாரிப்பதற்குள் சுதாரித்துக்கொண்டு. '' இப்டித்தான் ஏம்பிரண்டு சொன்னானிட்டு கெமிக்கல் பவுடர் அடிச்சி இங்க பாருங்க'', தனது தலையின் வழுக்கை விழுந்த பகுதி காட்டுவார். '' இன்னா சார் யூஸ் பண்ணீங்க'''' கோத்ரேஜ், பொல்லாத பயவுட்டு, கம்பெனிக்காரனெ நிக்க வச்சு சுடோனு ''கல்பனா மேடமும், ரெங்கனும் வாயில் கர்ச்சிப்பை அமுக்கிக்கொண்டு சிரிப்பை அடக்குவார்கள்.'' ஜாக்கிரதையா இருக்கனு அண்ணாச்சி, மருதாணி அரைச்சி கொஞ்சம் முயல் ரத்தம் சேத்து யூஸ் பண்ணுங்க, என்ன எந்த ஸ்கூல்ல சொல்லிக்குடுக்கிங்க '''' செந்திக்குமார்ல புரபசர் '''' ஆத்தாடி காலேஜா, எளவட்டப் பசங்க படிக்கிற எடமில்ல, சூதானமா இருங்க '' '' அட ஆ...மா சார், திரும்பவுடமாட்டேன்கிறாங்கெ, ஏதாச்சும் வெவகாரம் பண்ணிர்ராங்கெ '' அவரைச்சீக்கிரம் அனுப்பிவிட்டு எல்லாரும் சிரிப்பார்கள்.


அது மட்டுமில்லை பஸ்ஸில் பிரயாணம் பண்ணுகிற முகந்தெரியாதவர்களிடம், கண்டக்டரிடம் பத்து வருடச் சினேகிதனைப்போல் '' எப்ப வந்தீக, எவ்வளவு நாளாச்சு பாத்து '' என்று கேட்டு குழப்பி விடுவதும், எதிராளி மூளையைக் கசக்கி யாரிவர், எப்படி மறந்தோம், என்று திணறிக்கொண்டிருக்கும் போது காலியாய்க் கிடக்கிற இருக்கையில் இடம்பிடித்து, தூங்குவது போல் இல்லை இன்னொருவரிடம் அக்கறையாய்ப் பேசுவதைப்போலாகி நழுவி விடுவார். இறங்கும் போது மறக்காமல் சொல்லிக்கொண்டு இறங்குவதும், " கடுதாசி போடுங்க, வீட்ல எல்லாரையு விசாரிச்சேன்னு சொல்லுங்க '' கடைசிக் குண்டைப்போட்டு விட்டு விடு விடுவென மறைந்து போய் விடுவார். பிறகு அந்த ஆள் ஒரு வாரத்துக்கு நிம்மதியாக துங்கமுடியாது.


ஒரு முறை வட்டாரக்கூட்டத்துக்கு திருநெல்வேலி போயிருந்தார். கூடவே செயற்குழுத் தோழர்கள் வந்திருந்தனர். டவுன் பகுதியில் ஊள்ள ஆரெம்கேவி ஜவுளிக் கடையைப்பார்த்து ஒரு நிமிடம் மௌனமாக நின்றார் உடன் வந்தவர்கள் என்னமோ ஏதோ என்று பேச்சை நிறுத்திவிட்டார்கள். தலையை உலுக்கிவிட்டு சரி நடங்க என்று சொன்னார். எலோரும் என்ன ஏதுவென்று கேட்டார்கள். '' ஒரு வார்த்த, ஒரே ஒரு வார்த்தைக்காக இம்புட்டு எடத்தையும் விட்டுக் குடுத்துட்டு ஊரக்காலி பண்ணிட்டுப் போயாச்சி, '' '' சார் சார் என்ன சொல்றீக ஆரெம்கேவில ஒங்களுக்குப் பங்கிருக்கா", சொரிமுத்து சார் ரொம்பத்தான் உலுக்கப்பட்டார். "பின்ன பொய்யா சொல்றே அந்தா கல்லாவில ஒக்காந்திருக்கானே அவந்தா எம்பங்காளி பாத்தா உடமாட்டான் வெரசா நடங்க'' , சொல்லிவிட்டு அவர்பாட்டுக்கு போய்விட்டார். சொரிமுத்து சார் இரண்டு நாள் சிந்தனை வயப்பட்டவராகவே காணப்பட்டார். அந்தக் கற்பனையைப் போய்யென நம்புவதற்கு அவருக்கு வெகுகாலம் ஆனது.

சம்பத், தோழர்களோடு இருக்கிற சாவாகாசமான பொழுதுகள், ரொம்ப சந்தோசமானதாக இருக்கும், அதனாலே ஊழியர்களுக்கு அவரைப்பிடித்துப்போகும்.
ஓட்டுநருக்குப்பக்கத்து இருக்கையில் ஒருவர் செல்போனில் உரக்க " இன்னும் அரை மணி நேரத்தில் காரக்குடியில் இறங்கி விடுவேன் " ரன்னிங் கமெண்டரி சொல்லிக்கொண்டிருந்தார். மடியில் வைதிருந்த கைப்பை காலுக்கடியில் கிடந்தது. காலுக்கடியில் இருக்க வேண்டிய செருப்பு ஒன்று கணாமல் போயிருந்தது. காலை முன்சீட்டுக்கடியில் நீட்டி துழாவிப்பார்த்தார் செருப்பில்லாத ஒரு பெண்மனியின் கால்தட்டுப்பட்டது. முன்பொருதரம் இதே போல் செருப்பைத்தேடும்போது பெண்காலில் உரச அவளது கணவனிடம் ஏச்சு வாங்கியது நினைவுக்கு வந்தது. நத்தையைப்பொல காலை உள்ளிழுத்துக்கொண்டார். காரைக்குடியில் இறங்கும் போது தேடி எடுத்துக்கொள்ளலாம், ஒருவேலை அதற்கு அவகாசம் இல்லாமல் வண்டி புறப்பட்டு விட்டால் ஒரு செருப்பை வைத்துக்கொண்டு என்ன செய்வது, அப்படியே விட்டு விட்டு வெறுங்காலோடு போகவேண்டியதுதான்.


அடிக்கடி இப்படி நிகழ்ந்து விடுகிறது இந்த மாசத்தில் இது இரண்டாவது செருப்பு. அது மட்டுமா வருசத்துக்கு மூணு கண்ணாடிகள் தொலைந்துபோகிறது. டெல்லியிலிருந்து திரும்பி வரும்போது ஒரு முறை, கோப்புகளும், காகிதங்களும் அடங்கிய பையை மட்டும் பத்திரமாக எடுத்துக்கொண்டு இறங்கி விட்டார். குளித்துவிட்டு உடை மாற்றத் தேடிப் பார்த்தபோது தான் துணிமணிகளடங்கிய சூட்கேசை மறந்துவிட்டு வந்தது உறைத்தது. அதுபற்றி பெரிதாக விசனப்படுவதில்லை. அவர் விசனப்படுவதெற்கென்று சங்க ஊழியர்களின் கோரிக்கைகள் பிரதானமாக முன்னிற்கும். ஆனால் மகள் வெண்மனியின் கிண்டலை எதிர்கொள்வதுதான் மகா கவலையாகவும் மலைப்பாகவும் முன்னால் ஓடிக்கொண்டிருக்கும்.


தாயும் மகளும் இந்த விஷயத்தில் கூட்டணி அமைத்துக்கொள்வார்கள். அவர்கள் சொல்லிச் சொல்லிச் சிரிக்க ஒரு ஆனந்த விகடனைப்போல் நிற்பார். பிரியமானவர்களின் பரிகசிப்பும் கேலியும்கூட மனிதர்களின் சந்தோசங்களை ஆழ வேர்விடச் செய்கிறது. நான் ஒரு பெரும் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளன் எனும் கர்வத்தைக் கறைத்து நீர்த்துப் போகச்செய்கிறது. அவர்களைப் பிரிந்து விருதுநகரில் அந்த சங்கக்கட்டிடத்தில் படுத்துக்கொண்டு அசைபோடும்போது நெல்லிக்காயைத் தின்றதுபோல் நினைத்த நேரமெல்லாம் இனிக்கும்.


செல்போன்காரர் இன்னும் பத்துநிமிசத்தில் வந்துவிடுவதாகப் பேசிக்கொண்டிருந்தார். வீட்டில் ஒரு ஜீவன் அவருக்காகத் தூங்காமல் காத்திருக்கும் என்று நினைக்கிற போதே ஜன்னல் காற்று சிலு சிலுவென முகத்தைத் தழுவிக்கொண்ட்டோ டியது. எல்லாப் பிரபலங்களின் மனைவிமார்களைப் போலவே வாரத்தில் ஆறு நாட்கள் தூக்கம்வராத தனிமையிலும் சனிக்கிழமைகளில் எதிர்பார்ப்பிலுமாக ராத்திரிகள் யாவுமே சிவராத்திரிகளாகிப்போனது சம்பத்தின் மனைவிக்கு. போனதும் இரண்டு தோசையாவது சாப்பிட்டல்தான் சமாதானம் ஆகும். பிரியப்பிரிய முறுக்கேறும் கயிறு எனும் காதல் கவிதையின் வரிகள் நினைவுக்கு வந்துபோனது. பொதுச்செயளாலர் பொறுப்பை ஏற்றுக் கொண்டதிலிருந்து பிரிவு தவிர்க்கமுடியாததாகிப் போனது. பிரிவிலும் சுகமிருக்கிறது. நிழலின் நினைவுகள் தூக்கலாகத்தெரிவது வெயிலில் மட்டும்தானே.


காரைக்குடியில் இறங்கும் போது, நல்ல வேளையாக செருப்பு கண்டுபிடிக்கப்பட்டு கால் சேர்ந்தது. அங்கிருந்து வீடுபோய்ச்சேர இரவு ஒரு மணி ஆகியிருந்தது. வாசலில் முந்தின நாள் கோலம் மந்த வெளிச்சத்தில் கலைந்தும் கலையாமலும் அழகூட்டியிருந்தது. அது வெண்மணி வந்திருந்ததை ஊர்ஜிதப்படுத்தியது. முதல் நாளே வரச்சொல்லி போன் பண்ணியிருந்தாள், எதிர்பார்த்து ஏமாந்துபோயிருப்பாள். கொஞ்சம் நெருடலாயிருந்தது. சாப்பிட்டுவிட்டு அவளை எழுப்ப வேண்டாமென்று சொல்லிவிட்டு நிம்மதியாய் தூங்கினார். காளையில் எழுந்தபோது வெண்மணி இல்லாதது கவலையாய் இருந்தது. பள்ளித்தோழி வீட்டுக்கு போய்விட்டு நேரம் கழித்து வந்து முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு நின்றாள். அப்போது அருளானந்தத்தின் பணி நீக்க உத்தரவை நிர்வாகம் மீளப்பெற்றுக் கொண்டதை அதிகாரி சொல்லிக் கொண்டிருக்க சந்தோசத்தில் அந்த தெருவே திரும்பிப்பார்க்கிற மாதிரி சிரித்துக் கூச்சல் போட்டார். இனி அவர் தன்னைக் கவனிக்க மாட்டார் என ஊர்ஜிதம் பண்னிக் கொண்டு அவரைக்கடந்து நடந்து போனாள் வெண்மணி. சமாதானம் பண்ண ஒன்றும் பெரிதாக பிரயத்தனம் பண்ண வில்லை.

சைக்கிளிலோ ஸ்கூட்டரிலோ இடுப்பைச் சுற்றிப்பிடித்துக் கொண்டு கேள்விகளோடு ஒட்டிக்கொண்டு போகும் தந்தையும் மகளும். சினிமாத் தியேட்டரில் பாப்கார்ன் வாங்கிக் கொடுத்து ஐஸ்க்ரீம் கேட்டு அடம் பிடிக்கிற மகளும் தகப்பனும். தூங்குகிற நேரம் நெஞ்சில் படுத்து முகத்தை பிராண்டுகிற இன்ப தொந்தரவு தரும் மகளும் தகப்பனுமாக. இப்படிச்சின்ன சின்ன சந்தோசங்கள் எல்லாவற்றையும் இழந்திருந்தார்கள் சம்பத்தும் வெண்மணியும். ஆனால் ஒரே ஒரு பார்வையில், லேசாகத் தோளில் சாய்கையில், பதிலுக்கு தலை கோதுவதில் அந்த இழப்பையெல்லம் மீட்டெடுக்கிற வல்லமை அவர்களிடமிருந்தது. ஆம் சம்பத் இந்த உலகத்தில் இழந்ததாகக் கணக்கிடப்பட்ட பட்டியல் மிக மிக நீளமானது, அவரது வாலிபக்காதல். டிஎம்மெஸ்ஸைப் போலொரு பாடகனாகவேண்டு என்கிற கனவு. மனைவியின் அருகாமை. குழந்தைகளோடு சண்டையும் பிரியமும். அந்தக்கனவு இல்லம். அதில் காய்த்திருந்த நெய்மிளகாய்ச் செடி. நக்குவாரித் தென்னைமரம். இப்படியே நீண்டு கொண்டு போகும் அதெல்லாம் சின்னச் சின்னச் சோகங்கள். ஆனால் நடு இரவில், சொட்டரைத் தாண்டி இறங்குகிற குளிரில், சாலையோரம் அழுக்குவேட்டியை இழுத்துப் போர்த்தித் தூங்குகிற மனிதர்கள். ஐம்பது ரூபாய்க்கு வாங்கிய பிரியாணியில் வாசம் சரியில்லையென்று தூக்கிப்போடுகிற திமிரையும் சேமிக்கிற எச்சித் தொட்டிலுக்கருகில், பசியின் உக்கிரத்தோடு எச்சிலைகளை ஊடுறுவிப்பார்க்கும் மனிதர்கள்.


இந்தியாவெங்கும் ரயில் தண்டவாளங்களை ஒட்டி கொட்டி வைக்கப் பட்டிருக்கிற குடிசைகள். முதல் தலைமுறையாக அரசு வேலைக்கு அதுவும் கடைநிலை ஊழியராக வந்த ஒருவருக்கு 200 கிலோமீட்டருக்கு அப்பால் மாறுதலும், வங்கி வேலையை உபதொழிலாக மாற்றிவிட்டு வட்டிக்குக் கொடுத்து வாழ்கிற பரம்பரை அரசு ஊழியரான ஒரு மேலாளருக்கு வீட்டுக்கருகில் இடமாற்றமும் தருகிற நிர்வாக மேலாண்மை என, பிரத்தியாரின் சோகம் அவருக்குப் பெரிதாகத் தெரிந்தது. அதை சரிசெய்யத் துடிக்கிற பொதுமனிதானாக அவர் சம்பாதித்தது அதிகம். அதுதான் தீராத அவரது பயணத்தின் கொடை.

கடலலைகளை காணாத வரை கிணற்றுத் தண்ணீரின் அசைவுகள் கூடத்துயரமாகத் தோன்றும் தவளைகளூக்கு. முஷ்டி மடித்து, கையுயர்த்தி கழுத்து நரம்புகள் இரும்புக்கம்பிகளாக, பிரதேசமே திரும்புகிற ஒலியளவில் '' தோற்றதில்லை.. தோற்றதில்லை., தொழிற்சங்கம்.., தோற்றதில்லை. ''என்று அவரிடமிருந்து கிளம்புகிற கோஷம் கேட்கிற யாரையும் அதிரச்செய்யும், சம்பாரி மேளத்தின் அதிர்வுகளைப்போல் ஒரு கூட்டத்தையே முறுக்கேற்றும் ஓசை அதிலடங்கியிருக்கும். ஒரு பொன்னுலக கனவொன்று அந்தக்குரலின் வழியே எல்லோரையும் ஆட்கொள்ளும்.

22 comments:

கதிர் - ஈரோடு said...

ஒவ்வொரு வரியும், வார்த்தையையும் அனுபவித்துப் படித்தேன்

சகமனிதனுக்காக தொடர்ந்து போராடும் தோழர்களின் வாழ்க்கை கனமானது என்பதை மீண்டும் உணர்கிறேன்...

//பிரத்தியாரின் சோகம் அவருக்குப் பெரிதாகத் தெரிந்தது//

என்ன சொல்வது, இந்த தியாக மனத்திற்கு

க.பாலாஜி said...
This comment has been removed by the author.
க.பாலாஜி said...

கதையின் ஒவ்வொரு இடங்களையும் கண்முன் நிழலாட விடும் உங்களின் எழுத்துதிறமை மிக அருமை...ஒரு நடுத்தர மனிதனின் வலிகளையும், அவனின் கடமைகளையும், அவன் கொண்ட பொறுப்புகளினூடே சொல்லிய விதம் அருமை....

//பிரியப்பிரிய முறுக்கேறும் கயிறு எனும் காதல் கவிதையின் வரிகள் நினைவுக்கு வந்துபோனது.//

இந்த நினைவுகளில் சம்பத் என்கிற கதாபாத்திரம் மூழ்கும் போது ஏற்படுகின்ற அனுதாப உணர்ச்சி அளவிடமுடியாதது.

தன்னலம் கருதாது உழைக்கும் அன்பர்களின் வாழ்க்கையை செம்மையாய் செதுக்கிய விதம் ரசிக்க வைக்கிறது....

☼ வெயிலான் said...

கதையின் நாயகர்களும், மாந்தர்களும் என் கண்முன்னே, முன் பார்த்திருந்த பிரதிகளோடு ஒத்துப் போகும்படியான நல்ல அனுபவப் பதிவு.

காமராஜ் said...

நன்றி கதிர்.

காமராஜ் said...

//இந்த நினைவுகளில் சம்பத் என்கிற கதாபாத்திரம் மூழ்கும் போது ஏற்படுகின்ற அனுதாப உணர்ச்சி அளவிடமுடியாதது.//

நன்றி பாலாஜி

காமராஜ் said...

//கதையின் நாயகர்களும், மாந்தர்களும் என் கண்முன்னே, முன் பார்த்திருந்த பிரதிகளோடு ஒத்துப் போகும்படியான நல்ல அனுபவப் பதிவு.//

நன்றி வெயிலான்

velji said...

நம்மை கழிவிரக்கம் கொள்ளச் செய்து கூட்டுக்குள் அடையச் செய்கிறது சம்பத்தின் பெருவாழ்வு.மார்க்ஸ் உலகம் அறிந்தவரானார்.சம்பத் நீங்கள் அறிந்த ஒருவராயிருக்கிறார்.மற்றபடி.., தியாகத்திற்கென்ன அளவுகோல்? பொருளாதார தேக்கத்தின் போது மார்க்ஸின் டாஸ்கேபிடல் அதிகம் விற்பனையானது!உன்னதமான வாழ்க்கை வீன்போவதில்லை.

Pradeep said...

Good article.....Chanceless

Ragavan said...

அன்பு காமராஜ்,
நலமா, நீங்கள் தந்தித்தெரு ராகவனா என்ற உங்கள் கேள்விக்குப் பிறகு உங்களை காணோம், உங்களின் பதிவுகளிலும். மீண்டும் உங்களைப் பார்த்ததில் சந்தோஷம். மீண்டு வந்ததற்கு வந்தனங்கள் பல. உங்களின் இதற்கு முந்திய இரு பதிவுகளில் எனக்கு ஏனோ நீங்கள் இல்லாதது போல இருந்தது. சம்பாரி மேளத்தின் சத்தத்தை மீறி உங்கள் குரல் கேட்கிறது.
”பகலின் ஒப்பனைகள் கலைந்துபோய் நிஜ முகங்களோடு பயணப்படுகிற இரவு” ரொம்ப நிஜமான வார்த்தைகள்.

திருப்பத்தூரில் இருந்து காரைக்குடி வருவதற்குள் சில இடங்களில் கதை நொண்டி அடிப்பதாகத் தோன்றுகிறது.

”ஓவியர்களின் .... கேட்கலாம்” இந்த வரிகள் எனக்கு ஏதோ தொடர்பில்லாமல் ஒரு கன்னி (Link) தொலைந்தது போல் தோன்றுகிறது.

"பிரியமானவர்களின் பரிகசிப்பும் கேலியும்கூட மனிதர்களின் சந்தோசங்களை ஆழ வேர்விடச் செய்கிறது". நெகிழ்வான, செரிவான வார்த்தைகள், பிரியமுள்ளவர்கள் எது செய்தாலும் அழகாய் இருக்கிறது, வசைமொழிந்தாலும் வாழ்த்துகள் தான்.

உங்கள் எழுத்து நடை உங்களின் மிகப்பெரிய பலம் காமராஜ், அதுவும் அதன் ஒய்யாரம், அழகர் கோயில் மலைக்கோயிலில் இருந்து விறகு சுமந்து இறங்கும் பெண்ணின் ஒரே தாளகதி நடை.

வாழ்த்துக்கள்... நம்ம பக்கமும் வந்து ஏதாவது சொல்லிட்டு போறது!!

அன்புடன்
ராகவன்

anto said...

மாமா...உங்கள் அனுமதியோடு இந்தப் பதிவை படிக்கும் தோழர்களுக்கு நான் இந்தப் பதிவின் நாயகர் சம்பத் குறித்து பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்....

“சம்பத்” என்பது கற்பனை கதாபாத்திரமல்ல...
அவரது நிஜப் பெயர் “சோலைமாணிக்கம்”.

எங்களது தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர்.அவர் குறித்து நான் வேறு எதுவும் புதிதாய் சொல்லிவிட முடியாது இந்த அற்புதமான பதிவை தாண்டி.

மிகமிகமிக...சுவாரஸ்யமான மனிதர்.நம்மை கடந்து செல்லும் தென்றல் எப்படி நம்மை தீண்டாமல் செல்லாதோ அதேபோல் அவரை நீங்கள் கடந்து செல்ல நேர்ந்தால் அவர் உங்களை நோண்டாமல் இருக்க மாட்டார்.அதற்கு உங்களது அனுமதியும் அவருக்கு தேவையில்லை.அவர் கூட செல்லும் ஒவ்வொரு முறையும் நான் அடிவாங்காமல் தப்பி பிழைப்பதே பெரிய விஷயம்.அந்த அளவுக்கு லொள்ளுத்தனம் பண்ணுவார்.

அவர் கையில் பத்துரூபாய் கூட இருக்காது.அவர் குடும்பச் சூழல் அத்தனை பிரச்சனையில் இருக்கும் ஆனாலும் யாராவது ஏதாவது பிரச்சனை என அவரிடம் சொல்வாரேயானால் அந்தக் கணமே அவரது பிரச்சனைகளை மறந்து விட்டு உடனே சொன்னவரின் பிரச்சனையில் மூழ்கிடுவார்.இத்தகைய சம்பவங்கள் அவரை பொறுத்தவரை ஒரு தொடர்கதை போல்தான்....

சுருங்கச் சொல்லவேண்டுமாயின் அவர் ஒரு சமரசமற்ற போராளி...தன்னலமற்ற மனிதர்....

இந்தப் பதிவை படித்துவிட்டு உங்கள் எவருக்கேனும் அவரை தொடர்பு கொண்டு உங்கள் உணர்வுகளை அவரோடு பகிர்ந்து கொள்ள வேண்டுமாயின் 9443373135 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள். நிச்சயம் ஒரு புது அனுபவம் உங்களுக்கு கிடைக்கும்.

மாமா!...u have paid great tribute for a wonderful human....ANNAN SOLAIMANICKAM!!!!!!!!!!

காமராஜ் said...

அன்பு ஆண்டோ நான் தயங்கித் தயங்கி வெளியிட்ட பதிவு இது.
நாம் வாழ்கிற காலத்தில் இறுகிக் கொண்டிருக்கிற குழு அடையாளங்கள் நம்மை வெகுவாக அசுரூத்துகின்றன. அவைகளைத் தாண்டி,பொதுவெளியில் புழங்குகிற மனிதர்களின் தேவை அதிகரிக்கிறது. அப்படிப்பட்ட மனிதர்களாக பாண்டியன் கிராமவங்கி ஊழியர்கள் சங்கம் உருவாக்கி விட்ட தலைவர்கள் உறுப்பினர்கள் குறித்து வெளி உலகுக்குச் சொல்ல முயற்சி செய்தேன். உன் பதிவு தெம்பளிக்கிறது. இந்த சோலைமாணிக்கத்துக்குள் மாது, செல்வா, சங்கர்,சங்கரசீனி நீ நான், அருண் எல்லாமே ஒளிந்திருக்கிறோம்.

காமராஜ் said...

//மிகமிகமிக...சுவாரஸ்யமான மனிதர்.நம்மை கடந்து செல்லும் தென்றல் எப்படி நம்மை தீண்டாமல் செல்லாதோ அதேபோல் அவரை நீங்கள் கடந்து செல்ல நேர்ந்தால் அவர் உங்களை நோண்டாமல் இருக்க மாட்டார்.அதற்கு உங்களது அனுமதியும் அவருக்கு தேவையில்லை.//

அசத்துகிறாய் மாப்ளே. இன்னும் எழுது.

சந்தனமுல்லை said...

வெகுசுவாரசியமாகவும் அதே சமயம் ஒருவித சோகத்தையும் கொடுக்கிறது உங்கள் அனுபவப் பகிர்வு! மேலும் சம்பத் உண்மையான நபர் என்று அறிகையில் இன்னும் மதிப்பு மேலோங்குகிறது!! பேருந்து பயணம் அலாதியான விவரிப்பு!!

மாதவராஜ் said...

நல்ல பதிவு. அண்ணனைப் பற்றி நானும் சொல்வதர்கு நிறைய இருக்கின்றன. சொல்லணும்.

அண்டோ!
போன் ந்மபரைக் கொடுத்து விட்டாயா...! யாரெல்லாம் சிரமப்பட போகிறார்களோ....!
:-)))))

ஆரூரன் விசுவநாதன் said...

அற்புதமான பதிவு. அடக்குமுறையை, எதிர்த்து, உரிமையை நிலைநாட்ட இப்படிச் சில மனிதர்கள் இருப்பதால் தான் நம்மில் பலரும் பலவற்றை பெற முடிகிறது.

குடும்ப வாழ்க்கையில் பலவற்றை இழந்திருந்தாலும், பொதுவாழ்வில் அவர்களுக்கு மிகுந்ந்த ஆறுதல் கிடைத்திருக்கும். பலராலும் நினைவு கூற படுவதே வெற்றிதான்.

எத்தனை பேரை பார்க்கிறோம். எத்தனை பேரை தாண்டிச் செல்கிறோம். நம் வெற்றியே எத்தனை பேர் நம்மை தாங்கிச் செல்கின்றனர் என்பது தான்.

நண்பர் தனபாலன் சொல்லுவார்
"சுவடுகள் பதிப்போம்" நாம் சந்திக்கும் ஒவ்வொருவர் மனதிலும் என்று. அதைத்தான் செய்திருக்கிறார் தோழர். சோலை மாணிக்கம்.

அன்புடன் அருணா said...

நீண்ட பதிவாக இருந்தாலும் மனதில் பதிந்த பதிவு.....

காமராஜ் said...

நன்றி

சந்தனமுல்லை,
மாது,
தோழர் அரூர்,
அப்புறம் எங்க மேடம்

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த காமராஜ்,மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திய எழுத்து!வாசித்து நிறையும் போது சந்தோசமா,வேதனையா,என சொல்ல முடியாத சொல்லொண்ணா உணர்வு திரண்டு தொண்டையை அடைத்து கொண்டது.அடைப்பை நீக்க முக்கியதில்,கண்களில் நீர் பிரவாக பட்டது.ஆண்டோவின் பின்னூட்டத்தில்,கிடைத்த அலை எண் கொண்டு சோலை மாணிக்கம் அண்ணாச்சியின் குரல் தேடி அடைந்த பின்பு சற்று சமாதானம்.இந்த குரலை,ஆண்ட்டோ தளும்பி பதிந்த அலை எண்ணெய்,ஏன் உங்களின் இந்த பதிவை எல்லாம்,தலை துவட்டிய குற்றாலை துண்டை உதறுவது போல் உதறி,வளராத பப்பாளி கண்டில் காயப்போட்டு கிளம்பியிருப்பார் இன்னியாரதிர்க்கு இந்த சோலை மாணிக்கம் அண்ணாச்சி-தொழிற்சங்கம் நோக்கி!இல்லையா?..இந்த மனிதத்தை பதிய,அலை எண் தர,குரல் தேடி அடைய நமக்கு இயலும்.இது சில நேரம் போதுமானதாக கூட இருக்கும்.இருக்கிறது!ரொம்ப நாளைக்கு இருக்கும் காமராஜ் இந்த எழுத்தும்,இந்த சந்தோஷமும்.அன்பு நிறைய,மக்கா!

காமராஜ் said...

நன்றி ராஜாராம் சார்.

இன்று மதியம் நானும் மாதுவும் வலையுலகம் பற்றிப்
பேசுகையில் உங்கள் கவிதைகள் குறித்தும் சந்தனமுல்லை பதிவுகள் குறித்தும்
நீண்ட நேரம் பேசினோம். எனது பிரிய வலைநண்பர்கள் பட்டியலும்
உரையாடலும் உன்னதமானது எனவும் சொன்னான்.
சற்றேரக்குறைய ஒரே தளத்தில் சிந்திக்கிற அதை எழுதுகிற
மக்களை இனம் கண்டுகொள்ளல் தான்
இந்த வலையுலகின் சிகரம் என்பேன்.

அண்ணனிடம் பேசினீர்களா, இந்தப் புரிதல் என்னை இளக்குகிறது.
நன்றி ராஜாராம்.

பா.ராஜாராம் said...

இந்த சாரை தூக்கி போடுங்கள் காமராஜ்.நெருக்கம் வேண்டியே மாதவனை,உங்களை பெயர் சொல்லி அழைக்கிறேன்.தயவு செய்து தள்ளி நிறுத்தாதீர்கள்.என் வீடு மாதிரி என் மனிதர்களையும் புழங்க அனுமதியுங்களேன்.ஆம் காமராஜ்!அவரின் கூச்சம் கலந்த குரல் நடுக்கம் பத்திரமாக இருக்கும்,கொஞ்ச நாளுக்காவது.நிறைய அன்பு மக்கா!

பொ.வெண்மணிச் செல்வன் said...

வீட்டில் நடந்த நிறைய நிகழ்வுகளை நினைவுபடுத்திய பதிவு. நன்றாயிருந்தது!
\திரும்ப வீடு வந்தபோது புதிதாக வாங்கிக்கட்டிய ஆட்டுக்குட்டியைப்போல மருங்க மருங்க முழித்துக் கொண்டிருந்தாள்\ எளிய உவமையாக இருந்தாலும் வலி மிகுந்த வரிகள்.