29.4.10

சின்னச்சின்ன ஜென் கதைகள்.

டாங்க் அரசின் பிரதமர் போரிலும்,நிர்வாகத்திலும் மகா புத்திசாலியாக இருந்த படியால் மிகச்சிறந்த ஆட்சியாளராகக் கருதப்பட்டார்.அவர் தனது வாழ்நாளின் எஞ்சிய பகுதியைப் பௌத்தராக கழிக்க ஆசைப்பட்டார்.தனது நண்பரான ஜென் துறவியிடம் மேலதிக பௌத்தக் காள்கைகளைக் கற்கப் போனார். துறவியிடம் அவருக்கான அணைத்து மரியாதையும் கிடைத்தது.பாடம் கற்றுக்கொள்ளும் போதுமட்டும் இருவருக்கும் மாணவன் ஆசிரியர் என்கிற அனுகுமுறை கறாராக இருந்தது.

பிரதமர் ஒருநாள் துறவியிடம் 'கர்வம் என்றால் என்ன' என்று கேட்டார்.துறவி முகம் சிவந்து கோபத்தோடு " இதென்ன சிறுபிள்ளைத்தனமான கேள்வி ?"என்று பதில்சொன்னார்.'துறவியே என்ன என்னையே அவமதிக்கிறீர்கள்' என்று பிரதமர் கோபப்பட்டாராம்.உடனே துறவி சாந்தமாக அன்பான அமைச்சரே இதுதான் கர்வம் என்று சொன்னாராம்.

27.4.10

கேதன் தேசாய் புறையோடிப்போன வியாதியின் இன்னொரு பெயர்.

லலித் மோடி,மருத்துவர் கேதன் தேசாய்,உலகத்தர கிரிக்கெட் வீரர்கள் எல்லாம் கனமான பெயர்களாக மாறிக்கொ ண்டு வருகிறது.படிக்கிற நமக்கு லேசான மயக்கமும் அயற்சியும் தொற்றிக்கொள்கிற அளவு தொகை லஞ்சமாகப்பரிமாறப்பட்டிருக்கிறது.ஒன்னரை டன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என்று படித்தால் நம்ப முடியவில்லை.ஒரே ஒரு கிராம் தங்கம் நேற்றைய நிலவரப்படி கிடத்தட்ட1600 ரூபாய் இருக்கலாம்.நகை மட்டும் அவ்வளவு.ரொக்கப்பணம்.திருப்பதி உண்டியலில் பணம் எண்ணுகிற மாதிரி வங்கி பிரதிநிதிகள்,மாவட்ட வருவாய்அலுவலர்கள்,நீதிபதிகள் முன்னிலையில் லஞ்சப்பணம் கணக்குப் பார்க்கப்பட்டிருக்கிறது.

இவர் ஏற்கனவே 1992 ஆம் ஆண்டு இதே குற்றச்சாட்டுக்காக கைது செய்யப் பட்டு பதவி இறக்கப்பட்டிருக்கிறார்.ஆனால் இந்தியாவின் துரதிஷ்டம் மீண்டும் அதே பதவிக்கு வந்து இந்த முறை சலிக்கச்சலிக்க லஞ்சம் வாங்கியிருக்கிறார்.

எவ்வெளவு புனிதனமான சட்டங்கள் கொண்டுவந்தாலும் அமல் படுத்துகிற அதிகார வர்க்கம் மொள்ளமாரியாக இருந்தால்  சட்டம் கேலிக் கூத்தான தாகிவிடும் என்று பாதுகாப்புத்துறை உயர்மட்ட ஆலோசகர் சொன்ன வார்த்தை மிகுந்த அர்த்தமுள்ளதாகிறது. இவ்வளவு தொகையும் எதற்காகப் பெறப்பட்டிருக்கிறது என்பதில்தான் மிகப்பெரும்சூட்சுமமே  இருக்கிறது. மருத்துவத்தை, அந்த உயிர்காக்கும் துறையை மெல்ல மெல்ல தனியாருக்கு சுருட்டிக்கொடுத்ததற்கு கிடைத்த சன்மானம் தான் கேதன் தேசாய் வீட்டில் சுருண்டுகிடக்கும் இந்தியக் கஜானா.

ஒரு மருத்துவக்கல்லூரி சீட்டுக்கு குறைந்த பட்சம் இருபதுலட்சம்  கட்ட ணமாக  வசூலிக்கிற நிர்வாகங்களைசிவப்புக் கம்பளத்தோடு அங்கீகரிக்க கிடைக்கும் கையூட்டுத்தான் இப்படி மலைபோலக் குவிந்துகிடக்கிறது.அங்கு படித்து வெளியேறுகிற மருத்துவர்களிடம்  இந்த தேசம் என்ன எதிர் பார்க்க முடியும் ?.கோடிக்கணக்கில் வங்கிக்கடன் வாங்கி அண்ணாந்து பார்க்கிற மருத்துவமனை கட்டி முடிக்கிற மருத்துவர்களிடம் எப்படி சேவையை எதி
ர்பார்க்கமுடியும் ?. தொலைத்த விலாசம் தேடி இரண்டு மூன்று முறை அந்தப்பக்கமாக பிராக்குப்பார்த்துக்கொண்டு நடந்து போனாலும்கூட இழுத்துப் பிடித்து எல்லாச் சோதனைகளையும் நடத்திவிடுகிற அளவுக்கு மருத்துவ மனைகள் தரமிழந்துபோய்விட்டது.இப்போது கேஏஎஸ் சேகர் லாட்டரி விற்பனை செய்கிறமாதிரி ''அண்ணே உள்ள வாங்கண்ணே நம்ம   ...ஆஸ்பத்திரி தாண்ணே'' என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாக விளம்பரங்கள் போட்டிபோடுகின்றன.

சமீபத்தில் ஒரு சுகாதார அமைச்சர் இலாகா மாற்றப்பட்டார்.¸ அங்கு விளையாடும் லஞ்சப்பணம்தான் என்பது செய்திகளில் வராத சேதி. அரசு மருத்துவமனைகளில் உபயோகப்படுத்தும் காலி குளுகோஸ் பாட்டில்கள் கைமாறுவதில் சதவீதம் வைத்தாலே போதும், தினம் கோடி கோடியாய் வருமாணம் கொழிக்குமாம்.காலி பாட்டில்களுக்கே இப்படியென்றால் இன்னும்,மருந்து,சாப்பாடு,கட்டிடம்,மருத்துவக்கல்லூரி,மருத்துவர் நியமணம்,மாறுதல்கள் என்று நீண்டுகொண்டு போகும் பட்டியல்களைக்
கணக்குப் போட்டால் கிறுகிறுத்துக் கீழே விழவேண்டியதுதான்.ஆனால் எந்த பொது மருத்துவமனைக்குப் போனாலும் மருந்தில்லை ,டாக்டரில்லை, நிதி யில்லை,என்கிற இல்லைகள் மட்டுமே பதிலாய் வரும்.    

பொது மருத்துவமனைகள் எல்லாம் சாக்கடை சூழ்ந்து நாறிக்கிடக்க அங்கு பணிபுரியும் மருத்துவர்களும்,உயர் அதிகாரிகளும் சுகாதாரமான பங்களாக் களுக்குள் ஓடோ னில் மணத்தில் மிதக்கிறார்கள். அந்த வீடுகளில் தோண்டத் தோண்ட நாறும் மலக்கிடங்கை ஒளித்து வைத்திருப்பதுதான் இந்த அமைப் பின்  மூலம் குற்றவாளிகளுக் கிடைக்கிற மிகப்பெரிய பலம், பொது மக்களுக்குக்  கிடைக்கிற ஆகப் பள்ளமான பலகீனம்.

நாள்முழுக்க கால்கடுக்க காத்திருந்து மருத்துவரைப் பார்த்து ஊசி போட்டு விட்டு  மத்திரைக்காக வெளியே கடைக்குப்போகும் ஏழை வியாதி யஸ்தர்களிடம் இது பற்றிப் பேச என்ன வாய்ப்பு இருக்கிறது.அவர்களுக்கு
புரிகிற மொழியில் சொல்ல கிடைத்திருக்கும் ஒரே வழி ஊடகங்கள் தான். அரசின் பொதுத் தொலைக்காட்சியிலும் சரி ஆட்சியாளர்களே நடத்தும் தனியார் தொலைக்காட்சியிலும் சரி இந்த சேதிகள் வெளிவர ஸ்பான்சர் கிடைக்காதுஎவனாது கொள்ளிக்கட்டையை எடுத்து தன் தலையிலே வைத்துக்கொள்வானா ?.

கிரெம்ளின் மாளிகை கதிகலங்கி நின்றபோது சோவியத் ருஸ்ஸியாவின் சிகப்பு வரைபடத்தையும்,அரிவாள் சுத்தியலையும் காண்பித்து அதை கிராபிக்ஸில் சுக்குநூறாக உடைத்து விட்டு பிராணாய் ராயின் தாடிக்குள்ளிருந்துஒரு குரூரச்சிரிப்பு வெளிவரும்.அதைத்தொடர்ந்து வரும் தகவல்களும் செய்திகளும்,அலசல்களும்,வல்லுநர் கருத்துக்களுமாக  அப்பப்பா எவ்வளவு கெந்தளிப்போடு கிடந்தது அப்போதைய ஊடகங்கள்.அந்த ஊடகங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றன.மீண்டும் விதர்பா மாவட்டத்து நிலங்கள் பிளந்து அதை நம்பிக்கிடந்த விவசாயிகளின் உயிரை உள்ளே இழுத்துக்கொண்டிருக்கிறது.தினம் இருபது ரூபாய் செலவு செய்து வயிறு நிÈப்பமுடியாத இந்தியர்கள் அறுபது கோடிக்குமேலாக உயர்ந்துகொண்டிருக்க சென்ற ஆண்டு 32 பேராக இருந்த இந்தியாவின் உலககோடீஸ்வரர்களின் எண்ணிக்கை  இந்த ஆண்டு 64 ஆக உயர்ந்திருக்கிறது. இரண்டு பேருக்கும் இந்தியர் என்கிற ஒரே பட்டமா?

26.4.10

எளவட்ட வெத்திலை ஒரு ஆதிப் பொதுச் சமூகத்தின் மிச்சச் சடங்கு

கல்யாணங்கட்டிக்கிட்டு மறுவீடு வரும் உள்ளூர் பெண்கள், ஊர்வாசலிலே மறிக்கப்படுவார்கள்.எளவட்டங்களெல்லாம் ஓட்டமும் நடையுமாக பெண்ணையும் மாப்பிளையையும் கிண்டலடிப்பார்கள்.' இவ்ளோ முடிவச்சிருக்காரு,எக்கா ஒனக்கு சடப்போடவே ரெண்டாளு வேணுமே மச்சானுக்கு யாரு போடுவா?'.அவள் தலை கவிழ்த்திக்கொள்வாள்.கூட வந்த பெண்ணின் தகப்பன் கெஞ்சுவார்

'எலே வுடுங்கடா வீட்டுக்குப்போயி வாங்கித்தந்திர்ரேன்'
'அந்தப் பேச்சே பேசாத கெழவா,இந்த நிமிஷமே வந்தாகனும் '
தயவுதாட்சண்யம் இல்லாமல் பயலுகள் சண்டைக்குப் போவார்கள்.

மாப்பிள்ளையும் இது ரொம்ப வில்லங்கமான ஊரோ என்று கொஞ்ச நேரம் ஆடிப்போவார்.

பரிசம் போட்டுக் கூப்பிட்டுக் கொண்டு போகும் போது பெரியவர்களுக்கு மரியதை செய்ய, வெத்திலை பாக்கு கொடுப்பது போல. கல்யாணமகி ஊர் திரும்பும் பெண்கள், உள்ளூர் எளந்தாரிகளைச் சரிக்கட்ட "எளவட்ட வெத்தலை"
தந்தே ஆக வேண்டும்.தராமல் வம்பு பண்ணிய கோசலையக்காவை ஊருக்குள் ஒரு மணிநேரம் விடவில்லை. அப்புறம் ஊர்ப் பொருசு வந்து ரெண்டு பக்கமும் சத்தம்போட்டு.

'எப்பா ஒரு கட்டு வெத்தலையும் நூறு கொட்டப்பாக்கும் என்ன லட்ச ரூவாயா,சரியான கிருசு கெட்ட பெயலா இருக்கியே'.
'கையில காசில்ல'
அதானா பாத்தன் இந்தா வாங்கிக்குடு, எப்பா பொண்ணுமாப்ளய ஊருக்குள்ள விடுங்க, அங்கரு மாப்ளக்காரங்,கண்ணுல தண்ணி வந்திரும் போல'.

அவர்பாட்டுக்குல சொல்லிட்டு வெடுக் வெடுக்கினு நடந்து போவார்.ஒரு கட்டு வெத்தலையும் மீனுக்குப் பொறி போட்டது போல கண்ணு மூடி முழிக்கறதுக்குள்ள அடிபட்டுப் போகும்.அந்த வெத்திலை பரிமாற்றத்தில் தொங்கலு தொடுக்கலு சரிபட்டுப் போகும்.வெத்திலை வாங்க வராத செல்லச்சாமிக்கு நெஞ்சுக்குழிக்குள் நினைப்புக்கிடந்து உருளும்.

அதே கோசலை தலப்பிரசவத்துக்கு ஊருக்கு வந்திருந்த போது நடு ராத்திரி இடுப்புவலி கண்டுக்கிடுச்சி,ஊர் மருத்துவச்சி மூக்கம்மாக்கெழவி மூணு மனிநேரம் மல்லுக் கட்டிப்பார்த்தாள். பிள்ள தல சுத்தலனுட்டு வெளியே வந்தாள்.கோசலையின் அப்பன் ரங்கசாமி தலையை கவுட்டுக்குள்ளே போட்டுக்கிட்டு மருகிப்போய்கிடந்தான்.

'என்ன செய்ய கெழவி,
ம்ம் டவுனாஸ்பத்திரிதான்,வெரசலா கொண்டுக்கிட்டு போப்பா'

சொல்லிவிட்டு நடையைக்கட்டினாள்.அந்த நடு இரவு ரங்கசாமிக்கு நடுக்கம் கொடுத்தது.

எளவட்டங்களெல்லாம் சேர்ந்து ஆளுக்கொரு வேலையாய் பகிர்ந்தார்கள். ரெண்டுபேர் சைக்கிளெடுத்துப் போய்பம்புசெட் குருசாமியை எழுப்பி  ட்ராக்ட்ரைக்கொண்டு வந்தார்கள்,ரங்கசாமியின் ஒண்ணுவிட்ட அண்ணனிடம் போய் கைச்செலவுக்கு காசு வாங்கிக்கொண்டார்கள்.நாலு பெண்களை அள்ளிப் போட்டுக்கொண்டு சாத்தூர் ரங்க நாயகி ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு காலை எட்டு மணிக்கு ட்ராக்டரோடும், பொண்ணு பொறந்திருக்கு என்கிற சேதியோடும் ஆரஞ்சுமிட்டாயோடும் திரும்பிவந்தார்கள்.

25.4.10

பங்குனிப்பொங்கலும் அக்கினி நட்சத்திரவெயிலும்

இரண்டு வாரமாகப் போகிறது இன்னும் மனசு அடங்கவில்லை. ஊர்போய் வந்த திருப்தியில்லாமால் பாதியில் கிளம்பி வந்ததுபோல இருக்கிறது.


வியாழக்கிழமையே பொங்கல் ஆரம்பித்துவிடும் ஊர் முழுக்க வேப்பங்குலைகள் தோரணமாகத் தொங்கும்.யாரும் செருப்புப் போட்டுத் தெருவில் நடக்கக் கூடாதென்பார்கள். அந்த வாரம் முழுக்க பொத்துக்கால் பொன்னுச்சாமி மாமா கடைக்குக்கூட போகாமாட்டார். அவருக்கு செருப்பில்லாமல் ஒரு அடி எடுத்து வைக்க மிடியாது,ஆத்தாளுக்கு செருப்புப்போட்டால் ஆகாது.

எய்யா மாப்ள  ஒரு கட்டு சொக்கலால் பீடி வாங்கிட்டு வாங்க

சரி கொண்டாங்க

யோவ் இந்தரும், யோவ் கிழிஞ்ச செருப்பு, போடாதிரும்

சொல்லச் சொல்லக் கேட்காமல் கருப்பாயம்மா கடைக்கு பொன்னுச்சாமி மாமா செருப்போடு போய் திரும்பிவந்தபோது வீட்டுக்கு பலபேர் பிராது சொல்லிவந்துவிட்டார்கள்.அம்மா உட்காரவைத்து ஆச்சாரத்தை மீறக்கூடதென்று சொன்னது அப்போதெல்லாம் உறைக்கவில்லை.ராத்திரி சீதை மதினி உருவில் வந்த கனவு மாரி என்னை மடியிலமர்த்திக் கொண்டு 'ஓங்கண்ணையெல்லாங்  குத்தமாட்டன்  நீ பயப்படாமத் தூங்கு'என்று சொல்லிவிட்டுப்போனது.இதுபோலொரு பொங்கல் நாளில் கவுறு குத்து நடக்கும்.நேத்திக்கடன் செலுத்துவதற்காக இடுப்பில் ஊசி வைத்து நூல் கோர்ப்பார்கள்,அன்றைக்கு இரவு ஏழு மணிவாக்கில் பெரிய சாமிக்கு நாக்கில் சூலாயுதம் குத்துவார்கள்.

அந்த நேரம்  பெரிய சாமியைச்சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருக்க வடக்குத்திசை நெடுக ஒரு பாதை அமைந்திருக்கும் அந்த ஆளில்லாப்பாதையின் குறுக்கே யாரும் போகக்கூடது.கொட்டுஅடிப்பது நின்று போய்  தீப்பந்தங்களின் ஒளியில்,அக்கினிச்சட்டியின் தீயில் எண்னெய் எரிகிற வாசமும் கடுகு வெடிக்கிற மாதிரி தீயெரியும் சத்தமும் மட்டும் வரும். கிழக்குப் பக்கம் நின்றுகொண்டிருந்த வேலவர் அருகில் நிற்பதகாக ஆளில்லா பாதையைக்கடந்த போது் கூட்டம் என் பேரைச்சொல்லிப் போகாதே போகாதே எனக்குரல் கொடுத்தது.அன்றும் கூட கறிக்குழம்பை ஊற்றிக்கொண்டே திட்டிய அம்மாவின் வாத்தைகள் சோத்தத் திங்க விடாமல் விரட்டியது. ஊர்மடத்தில் பசங்களோடு பேசிக் கொண்டிருந்தாலும் பசி கிளறிக் கிளறி வீட்டுப்பக்கமே பார்வையை கொண்டுபோனது. நினத்த படி அம்மா வந்தாள். 'என்ன சொன்னாகன்னு இப்டி நல்ல நளும் பொழுதுமா பட்னியாக்கெடக்க,ஏ வேலவரு ஓப்பிரண்ட சாப்பிடக் கூட்டியா' ன்னு சொல்லிவிட்டுப் போனாள்.

கல்லூரியில் கிடைத்த நட்பின் மூலமாக அறிமுகமான பெரியார் திராவிடக் கட்சி கருஞ்சட்டை தோழர்களும்,என் பால்ய நண்பன் முருகையாவின் மூலம் அறிமுகமான sfi யும் எனக்குள்ளே சில கேள்விகளை ஊன்றியிருந்தது.
அதையெலாம் அர்த்த பூர்வமாகச் சொல்லுகிற அறிவும் அப்போது எனக்கில்லை,அதை அப்படியே ஏற்றுக்கொள்கிற பக்குவமும் ஊருக்கில்லை. காலையில் வந்த 'பெரியசாமி 'அஞ்சத்தாத்தன்   'ஏவிள  ஏ  செம்பட்டச் சிறுக்கி( என்னை அப்படித்தான் கூப்பிடுவார்)  படிச்சா கிறுக்குப் பிடிக்குமா'  என்று கன்னத்தை இனுங்கிவிட்டுப் போனார்.

ஊரைவிட்டுப்போனதும் அந்த சடங்குகளின் மேல் ஒரு சிநேகம் வந்தது.ஒரு வருட உழைப்பை,வறுமையை  இயலாமையை விரட்டி விடுகிற திருவிழாவாக வந்து போகும் பொங்கலன்று, எங்கெங்கோ போய்  வயிறு நிறப்பும் மாணாவரி மனிதர்கள் வந்து வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து   பழயவற்றை அசைபோட்டபடி ஊர்ச்சண்டை பார்க்கிற தருணத்துக்காக நானும் வருஷா வருஷம் போவேன். தொண்ணுறுகளுக்குப்  பிறகு மாது,கார்த்தி,இன்னும் சில தோழர்கள்  ஊருக்கு வருவார்கள். உட்கார இடம் பற்றாத அந்த திண்ணையில் உட்கார்ந்து அந்தக்கிராமத்தோடு ஐக்கியமாவார்கள். பக்கத்து வீட்டுக் குழந்தைகள் வந்து நின்று வேடிக்கை பார்த்துவிட்டுப் போகும் தருணங்களில் எங்கம்மா பூரிப்போடு ' எய்யா வாங்க உள்ள சோறுபோட்டாச்சு'  என்று  கடைக்கும் வீட்டுக்குமாக அலைவாள்.

கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் கழிந்து போனது. போன திங்கள் கிழமை நண்பர்கள் இல்லாத, பையன்களில்லாத, பொங்கலாக வந்தது. சொல்லி முடியவில்லை பெரிய பேரன் வரலையா, ஒங்க அக்காதங்கச்சி வரலையா, என்னன்னே இந்த தடவ தோழர்கள் வல்லையா கேள்விகளுக்கு அவள் தான் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்.

சூடுபிடித்துக்கொண்டது,எழுமிச்சம்பழம் வாங்கிவர மேலக்கடைசியில் இருக்கும் கடைக்குப்போனேன். 'எப்பா அடிப் பொசுக்குது செருப்பு போட்டுட்டுப்போ',  அம்மா சொன்னாள். பாதிவழி போனபிறகு வெயிலின் உக்கிரம் பாதத்தை வெந்து போகவைத்தது  ' எய்யா பேங்காரரே காலு பொத்துப்போகும்யா, இந்தாங்க செருப்பு போட்டுக்குங்க ' என்று கொண்டுவந்து கொடுத்தார். பரவாயில்ல என்று சொல்லிவிட்டு செருப்பில்லாமல் கடைக்குப் போனேன் . மாரி என் சாமியில்லை கொஞ்சம் வயதான எங்கள் ஊர் மூதாட்டி.

22.4.10

கருப்பு வெள்ளையில் அபூர்வ நினைவுகள்.

காலமாற்றங்கள் பூமியின் முகத்தையே உருமாற்றிக் கொண்டிருக்கிறது.பிரபல நிலக்குறியீடுகள் எம்மாத்ரம்.இதோ தூங்கா நகரம் மதுரையின் பிரபல இடங்களில் ஒன்று  விளக்குத்தூண்.1940 ஆன்ண்டின் நிழற்படம் இது.
அன்புத் தம்பி ப்ரியா கார்த்தி அனுப்பியது.

21.4.10

கணக்கிலடங்கா மனித மாதிரிகளின் இருப்பிடம்.

நேற்றிரவு நகரின் மையப்பகுதியில் இருந்து கூடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தேன்.கணக்கிலடங்கா வாகனங்கள் கவனத்தின் மையப்பகுதியை அனுவளவும் பிசக விடாமல் பார்த்துக்கொண்டன.நேற்று புதிதாய் ஆரம்பமான இரு சக்கர வாகன விற்பனை நிலையத்தோடு  சேர்த்துபுறப்பகுதியில் இது நாலாவது கடை.தொண்ணூறுகளில் என் ஜி ஓ காலணிக்கு குடிவந்த போது. இந்த வாகன விற்பனைக்கடை இருக்கும் பகுதியெல்லாம் இருளடர்ந்து கழுதைகள் நின்றுகொண்டிருக்கும். அதிகாலையிலும் இருட்டு நேரங்களிலும் கழிப்பறையில்லா குடித்தனக்காரர்களுக்கு இது ஒரு  தோதுவான இடமாக இருந்தது. இப்போது அவர்கள் எங்கு போவார்கள்.

ஒரு ட்ரை சைக்கிளில் வைத்து 20 க்கு 12 ப்ளக்ஸ் பேனரை தள்ளிக்கொண்டு போனார்கள்.பின்னாளிருந்து தல்லிக்கொண்டு போனவர்  அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொறுப்பாளர்.நடக்க இருக்கும் மாநாட்டு
பேனர் என்பதை யூகிக்க முடிந்தது. கிட்டத்தட்ட 300 தொழிலாளிகள் வேலை பார்க்கும் அந்த பணிமனையில் அவர் மட்டும் தன்னந்தனியாக பேனரை இழுத்துக்கொண்டு போவது மனதைப்பிராண்டிக்கொண்டே இருக்கிறது.  சைக்கிளை ஓட்டுகிற வரும் பின்னாளிருந்து தள்ளிக்கொண்டு போன தோழரும் ஒரு இருட்டுப்பகுதியில் நின்று சிறுநீர்கழித்தார்கள்.

சென்னை மாநகரில் பிறந்து வளர்ந்து படித்து வேலைக்காக இந்தப்பக்கம் வந்த ஒரு நண்பர் 'இட்ஸ் ஹார்ரிப்ள், எப்ப்டீங்க ஜனங்க, ப்ளஷ் அவுட் இல்லாம,தண்ணி இல்லாம, இட்ஸ் ரியலி ஹார்ரிப்ள்' என்று சிலிர்த்துக்கொண்டு சொன்னார்.வாஸ்த்தவம் தூய்மை,சுகாதாரம்,நாகரீகம் என்பதெல்லாம் கிடைத்தும் அவர்கள் உதாசீனப்படுத்தியதல்ல.இந்த உலகம் தான் அவர்களை உதாசீனப்படுத்துகிறது.கிராமத்திலிருந்து வந்திருந்தார் எனது தூரத்து சித்தப்பா, இன்னும் விவசாயத்தோடு மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும் பத்தாம் பசலி அவர். ' வெளிய போனுமப்பா' என்றார், 'வெளிய ஏம்ப்போகனும் உள்ள  லட்ரின்  இருக்கு' என்று சொன்னேன். 'அடப்போப்பா நடு வீட்டுக்குள்ள போயி' என்று சொல்லிவிட்டு ரயில் தண்டவாளத்துப்பக்கம் நடையைக்கட்டி விட்டார்.

சென்னை வாசிக்கும், எனது கிராமத்துச் சித்தப்பாவுக்கும் ஒரே விஷயத்தில் இரண்டு எதிர் எதிர் முரண்பாடுகள் இருக்கிறது ஒன்றையொன்று உரசிக்கொள்ளாமல்.சித்தப்பா அவரது அந்திமக் காலங்கள் வரை தனது பிடிவாதத்திலிருந்து மாறாமல் செத்துப்போக அநேக சாத்தியமிருக்கிறது,வழியுமிருக்கிறது. சென்னை வாசி எங்காவது காட்டில் சிக்கிக்கொண்டு வயிற்றைக்கலக்கினால் அவரது சுத்தம் கேள்விக்குறியாகலாம்.இப்படி ஒன்றோடொன்று ஒத்துப்போகாத நூற்றுக்கணக்கான மாதிரிகள் இன்னும் அப்படியே தொடர்கிறது இந்தியாவில்.ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு கெட்டியான கலாச்சாரம்,அல்லது அரசியல் மறைந்திருக்கிறது.

இதை அப்படியே தொடர விடுவதில் நிகழ் அரசியலுக்கு பெரும் லாபம் இருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சுற்றி பாம்பு பிடிக்கிற இனக்குழு ஒன்று இருக்கிறது.அதை ஜாதியாக்கிவிட்டது இந்தியா.நேசனல் ஜியக்ரபி தொலைக் காட்சி அலைவரிசையில் பாம்பு பிடிக்கிற காட்சிகள் வந்துகொண்டிருக்கும்,சில நேரம் திடுக்கிட வைக்கும் காட்சிகள் எல்லாம் காண்பிப்பார்கள்.அவர்கள் கார்,காமிரா,முதலுதவிப்பேட்டி,போன்ற தொழில்நுட்ப உபகரணங்களோடு வந்து செய்கிற சாகசத்தை.இவர்கள் குடும்பத்தோடு ஒரு கோணிப்பையும் கையில் ஒரு இரும்புக்கம்பியும்,இன்னொரு கவட்டைக்கம்பும் வைத்துக்கொண்டு வயிற்றுப்பிழைப்பு நடத்துகிறார்கள்.அவர்கள் ஆராய்ச்சியாளர்கள்.இவர்கள் மூப்பர்கள். எப்படி விந்தையான உலகம் இது.

20.4.10

இரண்டு ஜென் கதையும் ஒரு நம் கதையும்

சித்திரமும் கைப்பழக்கம்.

கதைப்பாடல் கற்கும் மாணவன் ஒருவன் ஒரு கடுமையான கட்டுப்பாடான ஆசிரியரிடம் பயிற்சி எடுத்தான்.அந்த ஆசிரியர் அவனுக்கு பாடலின் முதல் சில வரிகளைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருந்தார்.நாட்கள் சென்றது,வாரங்கள் சென்றது,மாதங்கள் சென்றது.ஆனாலும் ஒரு பல்லவியைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருந்தார்.சலித்துப்போன மாணவன் சொல்லாமல் கொள்ளாமல் ஆசிரியரிடமிருந்து ஓடிப்போனான்.பிழைப்புக்கு வேறு தொழில் தேடிக்கொண்டான்.

ஒருநாள் ஒரு உணவு விடுதியில் நடந்த இசைப் போட்டியைக் காணச்சென்ற அவன் ஆர்வமிகுதியால் பாட நேர்ந்தது.அவனது கட்டுப்பாடான ஆசிரியர் சொல்லிக் கொடுத்த அந்த ஆரம்பவரிகளை மட்டும் பாடினான். பசிரிசும் கிடைத்தது.நிகழ்சி ஏற்பாட்டாளர் கூறிய புகழுறைகளுக்கு தான் ஏற்றவனில்லை என்கிற உறுத்தல் இருந்தது.நீ யரிடம் இந்த வித்தையைக் கற்றுக்கொண்டாய்,உனக்குச் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் மிகவும் திறமை வாய்ந்தவர் என்று சொன்னார்.அவன் அதன் பிறகே குருவின் பெருமை உணர்ந்தான் பின்னாட்களில் நாடறிந்த பிரபல பாடகன் ஆனான்.

கர்வம் என்றால் என்ன


டாங்க் அரசின் பிரதமர் போரிலும்,நிர்வாகத்திலும் மகா புத்திசாலியாக இருந்த படியால் மிகச்சிறந்த ஆட்சியாளராகக் கருதப்பட்டார்.அவர் தனது வாழ்நாளின் எஞ்சிய பகுதியைப் பௌத்தராக கழிக்க ஆசைப்பட்டார்.தனது நண்பரான ஜென் துறவியிடம் மேலதிக பௌத்தக் கொள்கைகளைக் கற்கப் போனார். துறவியிடம் அவருக்கான அணைத்து மரியாதையும் கிடைத்தது.பாடம் கற்றுக்கொள்ளும் போதுமட்டும் இருவருக்கும் மாணவன் ஆசிரியர் என்கிற அனுகுமுறை கறாராக இருந்தது.

பிரதமர் ஒருநாள் துறவியிடம் 'கர்வம் என்றால் என்ன' என்று கேட்டார்.துறவி முகம் சிவந்து கோபத்தோடு " அரசனே உனக்கு அறிவில்லையா இதென்ன சிறுபிள்ளைத்தனமான கேள்வி ?"என்று பதில் சொன்னார். 'துறவியே என்ன என்னையே அவமதிக்கிறீர்கள்,நான்யார் தெரியுமா ?' என்று பிரதமர் கோபப் பட்டாராம்.உடனே துறவி சாந்தமாக 'அன்பான அமைச்சரே இதுதான் கர்வம்' என்று சொன்னாராம்.



பரிசு அரசியல் ஜென் கதை.



சென்னை மெரினா கடற்கரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் 'கட்சிக்காக அரும்பாடு பட்ட அன்புத்தம்பிக்கு நன் இந்த மோதிரத்தை அல்லது கணையாழியைப் பரிசாக அளிக்கிறேன்' என்று அப்போதைய இளைஞர் கலைஞர் கருணாநிதிக்கு,அறிஞர் அண்ணாதுரை பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் போட்டுவிட்டாரம்.

கிட்டத்தட்ட கலைஞரும்,கவிஞர் கண்ணதாசனும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில்,ஒரே வயதில் கட்சிப்பணிக்கு வந்தவர்கள் அப்படியிருக்க ஒருவருக்கு மட்டும் பாராட்டும் பரிசும் கிடைக்கிறதே என்று மனம் நொந்த கண்ணதாசன் அதற்குப்பிறகு கட்சி அலுவலகத்துக்கு போகாமலும்,யாரையும் சந்திக்காமலும் இருந்திருக்கிறார். இதை அறிந்தஅண்ணாதுரை  கவிஞரை கூப்பிட்டு விசாரித்திருக்கிறார்.இவரும் தனது ஆதங்கத்தைச் சொல்லி யிருக்கிறார்.உடனே   இடி இடி என்று சிரித்துவிட்டு'இது ஒரு பெரிய விஷயமா நீயும் ஒரு மோதிரம் வாங்கிக்கொடு அடுத்த கூட்டத்தில் உனக்கும் அணிவிக்கலாம்' என்று சொன்னாராம்.

19.4.10

இயற்கையும்,இயல்பும் அழகு.

அந்த பௌத்த மடாலயத்தில் நிறய்ய மரங்களும்,பூச்செடிகளும் இருந்தன.அவற்றைப் பராமரிக்க ஒரு தோட்டக்காரரும் இருந்தார்.அந்த மடாலயத்துக்கு அடுத்ததாக ஒரு சின்னக் குடிலில் ஜென் துறவியும் இருந்தார்.
ஒரு நாள் மடாலயத்தின் பொறுப்பு புத்தபிக்கு தோட்டக்காரரை அழைத்து நாளை ஒரு பிரதம அதீதி நமது மடத்துக்கு வருகிறார் ஆதலால் இந்த தோட்டத்தை தூய்மையாகவும்,நேர்த்தியாகவும் மாற்றுவது உன்பொறுப்பு என்று கட்டளையிட்டார்.

தோட்டக்காரரும் அந்த நாள் முழுக்க ஓய்வொழிச்சல் இல்லாமல்,செடிகளை முடிவெட்டுவது போல வெட்டிவிட்டார். நீர்வரும் வாய்க்கால்களை ஒழுங்குபடுத்தினார்.மரங்களின் கீழே படிந்துகிடக்கும் இலைகளைப் பெருக்கிப் பெருக்கி  சுத்தப்படுத்தினார்.இலைகள் நிமிடத்துக்கு நிமிடம் விழுந்து கொண்டே இருந்தது.ஒருவழியாக மாலை நேரம் அந்த தோட்டம் மிகச் சுத்தமாக இருப்பதாக அபிப்ராயப்பட்டார் பொறுப்பு பிக்கு.சுற்றுச் சுவருக்கு அந்தப்பக்கம் இருந்து இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஜென் துறவியிடம் 'பாத்தீர்களா எவ்வளவு சுத்தமும் நேர்த்தியுமாக இருக்கிறது'' என்று கேட்டார்.பார்ப்பதற்கு ப்ளாஸ்டிக் சர்ஜெரி செய்த ஸ்ரீதேவி மூக்கு மாதிரி இருந்தது . ஆனாலும்'ஆம்,ஆனால் ஒரு சின்னக்குறை மட்டும் இருக்கிறது'என்று பதில் சொன்னார்.

மனம் நொந்துபோன பிக்குவிடம் 'எனக்கு இந்த மதிலைத் தாண்டி வருவதற்கு உதவிசெய்'என்று சொன்னதும் அப்படியே செய்தார்.உள்ளே வந்த ஜென் துறவி பெரிய பெரிய மரங்களின் அருகே போய் அதைப்பிடித்து பலமாக உலுக்கிவிட்டு வந்தார்.இப்போது உதிர்ந்த தரையில் இலைகள் படர்ந்து கிடந்தன.
மீண்டும் தனது குடிசைக்குப்போனதும்  'இப்போது பார் இன்னும் அழகாக இருக்கும்' என்று சொன்னார்.




சின்னச்சின்ன ஜென் கதைகள்.2

18.4.10

சின்னச்சின்ன ஜென் கதைகள்.

புனித மனிதன்.

அந்தப்பிரதேசம் முழுக்க அந்தபுனிதரின் பெயர் பரவிருந்தது.அவர் ஒரு மலையில் சிறு குடிசையில் வசிக்கிற சேதியும் கூடவே பிரபலமாக இருந்தது.தூரத்து கிராமத்து மனிதர் ஒருவர் அவரைச்'சந்தித்துவிடவேண்டுமென்கிற ஏக்கத்தில் நெடுநாள் பயணம் செய்து புனிதரின் இருப்பிடம் அடைந்தார்.

குடிசையின் வாசலில் அவரை ஒரு வயோதிக வேலைலைக்கரன் வரவேற்றான்.'நான் அந்த மகானைப்பார்க்கவேண்டு'மென்று வேலைக்காரனிடம் சொன்னார்.குடிசைக்குள் அவருக்கு உபசாரம் நடந்தது.அப்போதும் புனிதரைப் பார்க்கமுடியவில்லை.நேரம் ஆக ஆக பொறுமையிழந்து கிராம வாசி 'நான் எப்பொழுதுதான் புனிதரைப்பார்க்க முடியும்' என்று கேட்டார்.'நீங்கள் பார்க்க வந்தவரை ஏற்கனவே பார்த்துவிட்டீர்கள்' என்று சொன்னார்.

மேலும்'நீங்கள் வாழ்க்கையில் சந்திக்கிற ஒவ்வொரு சாதாரண,அடித்தட்டு மனிதரையும்  விவேகமுள்ள புனிதராக நினைத்தால் உங்கள் வாழ்க்கையின் எல்லா பிரச்சினைகளையும் மிகச்சுலபமக தீர்த்துவிடலாம்' என்று வேலைக்காரனாய் வந்த புனிதர் சொன்னார். 

அடையாளம்,ஒற்றுமை,விடுதலைக்கான போராட்டம். ( தலித் வரலாறு

வன்கொடுமைகளுக்கெதிரான கலகம்.

ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையானதும், இன்னும் புதுக்கருக்கு மாறாமல், இளமையோடிருப்பதுமானது என்று
கணக்கெடுத்தால் அது இந்திய தலித்துகளின் நிலைமை மட்டும்தான். ஆனால் அதற்கெதிரான காலகக்குரல்கள் எழுந்து தொடர்ந்துகொண்டிருக்கும் சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டுமுன் அவற்றை
மூன்றாகப்பிரிக்கலாம்.

1 ) வேதகாலம் - முகம்மதியர்காலம் ( கி மு 600 முதல் கி பி 1700 வரை )

2)  ஆங்கிலேய - மற்றும் கிறிஸ்துவ காலம் (  கி பி 1700 முதல் 1947 வரை )

3)  சுதந்திர காலம் ( 1947 முதல் இன்று வரை )

வேதங்களின் மேல் கேள்விகள் வைத்த முதல் புருஷர்கள்
----------------------------------------------
வேதகாலம் - முகம்மதியர்காலம்
பிராமணீய மேலாதிக்கத்தின் ஆணிவேரான வேதங்களின் மேல் கேள்விகளை வைத்து  ஆட்டத்தைத் துவக்கியவர்களில் முக்கியமானவர்கள் இரண்டுபேர். அந்த இருவரும் பிராமணர் அல்லாத சத்திரிய
குலத்து அரசர்கள். கி மு 540 முதல் 468 வரை ஆண்ட மஹாவீரர். அடைமொழி, பெயர், செயல் எல்லாவற்றுக்கும்மொரு பொருள் தந்த அந்த அரசன் தான் பிராம்ணர்களை எதிர்த்து ஜைன மதத்தை
நிறுவிய முதல் அரசன். முதன்முதலாக எழுந்த கலகக்குரலாக இருந்ததனால் அது ஆயிரமாண்டு வேதக்கருத்துக்களை எதிர்க்க போதிய வலுவும் கருத்தும் இல்லாது இருந்தது. அது மட்டுமல்லாமல் வேத
காலத்து ஜாதிய அடுக்குக்கு முறைக்கு மாற்றாக ஏதும் முன்வைக்க முடியமல் போனதால், அதற்குள்ளேயே அமுங்கிப்போனது.

அடுத்தவர் நிறுவனப்படுத்தப்பட்ட முதல் இந்திய மதத்தை தோற்றுவித்த கௌதம புத்தர்.
( கி மு 563 முதல் 483 வரை )

புத்த மதம் பெருவாரியான ஜனங்களால் ஆகர்ஷிக்கப்பட்டதால் ஒரு பெரும் மாற்றம் வர இருந்தது. கிராமங்களுக்குள்ளும், தொழிலாளர்களிடையிலும், பிற்படுத்தப்பட்ட, தலித் மக்களிடமும் தன் கருத்துக்களைச் சொல்ல நாடு முழுவதும் புத்தர் நடந்தார். அவர்போன இடமெல்லாம் பௌத்தம் பற்றிக்கொண்டது. ஆதலின் பல அரசர்களும் இதைப்பின்பற்ற நேர்ந்தது. ஆங்கிலப்பேரரசுக்கு முந்தைய பேரரசு ஒன்று உண்டு என்றால் அது அசோகப்பேரரசு மட்டுமே. மக்களை முதன்மைப்படுத்திய, சட்டங்களும், திட்டங்களும், ஆட்சி அமைப்பும் உறுவான  அந்தக்காலத்தைத்தான் வரலாறு களப்பிரர் காலம் என்று பதிவு செய்கிறது. பௌத்தர்களாக  சாமான்யர் பெருகியது கண்டு பொறுக்க முடியாத ஆரியர்கள் புத்த மததுக்குள் ஊடுறுவி கைப்பற்றி அதை மஹாயாணம், ஹீனயாணம் இரண்டாக்கினார்கள். வலுவிழந்த அதை சந்திரகுப்த மௌரியன் எனும் அரசன் சாணக்கியன் எனும் ராஜ தந்திரியின் யோசனைகள் அல்லது சூழ்ச்சியின் மூலம் அரசைக் கைப்பற்றி பௌத்த சகாபத்தத்தை மாற்றினார்கள். ஆட்சி அதிகாரம் கை மாறியதும் நாடு முழுவதிலுமுள்ள ஜைன, சமன புத்த துறவிகளை மொத்தம் மொத்தமாகக் கொன்றார்கள். கூட்டம் கூட்டமாக நாடு கடத்தப்பட்டார்கள்.  உயிர் பிழைக்கத் தப்பித்து நேபாளம் வழியே சீனாவுக்கும், தெற்கே கடல் வழியாக இலங்கைக்கும் போனவர்கள் அங்கே மதத்தை நிறுவினார்கள். மிச்சமூள்ள புத்த மதத்தவர்களை ஆரிய அரசர்கள் அடிமயாக்கினார்கள்.

அந்தப்படு கொலைகளின் அதிர்விலிருந்து இந்திய தலித்துகள் மீள ஓராயிரம் ஆண்டுகள் ஆனது. ஆம் அதன் பின்னர் வந்த முஸ்லீம் ஆட்சிக்காலத்தில் தான் முதன் முறையாக தலித்துக்கள் ராஜ சேவகம் பண்ணுகிற சில காரியங்களுக்கும், அவர்களில் வீரமானவர்களென்று கண்டெடுக்கப்பட்டவர்களை சிப்பாய்களாகவும் சேர்க்கப்பட்டார்கள்.

இந்தியாவின் முதல் தலித் தளபதி " அம்ரித்நாக் மஹர் ". மராட்டிய மாநிலத்து முஸ்லீம் மன்னன் பேதரின் படையில் சிறந்த வீரனாக அறியப்பட்டான். அதன் பிறகுதான் 1129 ல் அங்குள்ள மஹர் இனத்தவர்களுக்கு 52
வகையான உரிமைகள் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.இதே முஸ்லீம் ஆட்சிக் காலத்தில் கக்குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இன்னொரு நிகழ்வு '' சூவ்பி '' தத்துவம்.அது ஆண்டவன் படைப்பில் அணைவரும் சமம் எனும் கொள்கையைச் சொன்னது.

அதன் பின்னர் தோன்றிய " பக்தி மார்க்கம் "  தவம், வேள்வி, சமஸ்கிருத சுலோகம் ஆகியவற்றை நிராகரித்து,
பாடல், தியானம், சேவை ஆகியவற்றின் மூலம் கடவுளை அடையலாம் என்று ஒரு மாற்றுத் தத்துவத்தை முன்னிறுத்தியது. அதிருஸ்ட வசமாக அதை முன் மொழிந்தவர்களில் முக்கியமானவர்களாக தலித்துகள் இருந்தார்கள். அவர்களில் தென்னிந்தியாவின் புனித சொக்கமேலரும், துறவி கனகரும் மிக முக்கியமான தலித் துறவிகளாவார்கள்.

தமிழகத்தில் நந்தனாருக்கு இணையான அடயாளங்களோடு ஒப்பிடும் அவர்களிருவரும் பந்தர்ப்பூர் ஆலயத்துக்குள்ளும், உடுப்பி கிருஷ்ணர் ஆலயத்துக்குள்ளும் நுழையவிடாமல் தடுக்கப்பட்டார்கள்.
வட இந்தியாவில் துறவிகள் நம்தேவும், ரவிதாஸும், கபீர் தாஸரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

         கடவுள் முதலில் ஒளியைப்படைத்தார்,
         அந்த ஒளியிலிருந்து உலகம் பிறந்தது,
         எல்லா மணிதர்களும் கடவுளுக்கே சொந்தம்,
         இதில் யார் உயர்ந்தோர்? ஏன் தாழ்ந்தோர் ?

கபீர் தாஸரின் இந்தக்கேள்வியைத்தொடர்ந்து, சீக்கிய மத நிறுவனர் சுவாமி குருநானக் தலித்துகள் குறித்த முதல்
கேள்வியை வைக்கிறார்.

         கீழுக்கும் கீழான ஜாதி,
         இன்னும் அது கீழேயே இருக்கிறது,
         நானக் எப்போதும் அவர்களோடு இருப்பார்,
         அவருக்கு மேலும் இல்லை கீழும் இல்லை,
         உனது கருணை நிலத்தின் மீது விளைகிறது,
         அந்த மக்களின் உழைப்பால் அது பயிராகிறது.

கபீர் தாசரும், குருநானக்கும் அவர்களுக்காகப் பரிந்து பேசினாலும்கூட. உண்மையான கலகக் குரல் ஒடுக்கப்பட்டவர்களின் சொந்த வார்த்தைகளிலிருந்துதான் உண்மையான வலியின் வேதனை வெளிவந்தது.

         " உண்மையான வலியை அடிபட்டவனால் மட்டுமே உணரமுடியும் "

என்று பஞ்சாபியில் ஒரு பழமொழியிருக்கிறது. அந்த வலியோடு வந்த இரண்டு பேரின் வார்த்தகள்
பற்றிப்பேசலாம். நம்தேவ், ரவிதாசர். நம்தேவ், குருகிரந்த் சாஹிப் எனும் சீகிய பாடல்கள்  எழுதியவர். ஒரு இந்துக்கோவிலில் அவர் நுழைந்தபோது ஏற்பட்ட அவமானத்தைப் பாடிப் பதிவு செய்கிறார்.
        
         ஆனந்தமான மனநிலையில் ஆலயம் நுழைந்தேன்,
         ஐயா உன்னைத்தொழுவதற்கு,
         ஐயகோ ஆண்டவா என்னை எத்தித்தள்ளினார்கள்,
         வெளியில் விழுந்தேன்.
         நான் கீழானவனாம்.
         என்னைப் படைப்பதற்கு
         சலவைக்கரன் வீடுதானா கிடைத்தது உனக்கு ?

ரவிதாசரின் தர்க்கம் அலாதியானது எனவே தான் மத்திய காலத்தில் தலித் குழுக்களால் அவரது பாடல் தெருத்தெருவாகப் பாடப்பட்டது. சீக்கியப்படல்களுக்குள் தலித் விடுதலைக்கான விதைகளைப்போட்ட அவரது
பாடல்கள். அந்த மக்களின் மனதில் தீ வளர்ந்தது. ஸ்ரீ குருகிரந்த் சாஹிப்பில் இடம் பெறும் இந்தப்பாடல் மிகப்பிரபலமானது.
          
          மேல்குடியென்று கருதும் மக்களே கவனியுங்கள்,
          நான் சக்கிலியன் என்பது நன்றாகத்தெரியும்.
          என் மனதும் பாடலும் எப்போதும் இறைவனோடே இருக்கும்.
          கங்கை நீரில் காய்ச்சினாலும்
          சாராயம் ஒருபோதும் புனிதமாகாது.
          பக்தன் எவனும் பருகவும் மாட்டான்.
          அசுத்தமான தார் மரங்கள் ஆண்டவனுக்காகாது,
          அதில் செதுக்கும் காகிதமும் அசுத்தமா?
          காகித்தில் எழுதப்பட்ட சுலோகம் சொல்லும் போது மட்டும்
          கைகூப்புகிறது தலை தாழ்கிறது.
          எனவே கனவான்களே எனது சக்கிலிய மக்கள்
          அடிபட்டவர்கள், அடக்கப்பட்டவர்கள், கட்டுண்டவர்கள்
          அவர்கள் இறந்த மிருகங்களின் உடலோடு
          " பனாரசை " ச் சுற்றி அலைகிறார்கள்.
          உனது சேவகன் ரவிதாஸ்
          உனது பேரால் அவர்களிடம் சேருகிறான்.

காலங்காலமாக அடக்கப்பட்டவர்களின் குமுறல் பக்தியின் மூலம் வெடிக்கிற இந்த தருணத்துக்காகக் காத்துக்கிடந்ததுபோல மக்கள் அதன்பால் ஈர்க்கப்படுகிறார்கள். எனவே வேதகாலத்தில் தொடங்கிய இந்த  குமுறல்கள் முஸ்லீம் காலத்தில், பக்திமார்க்கத்தாலும், சூவ்ப்பி தத்துவத்தாலும் ஒடுக்கப்பட்டவர்களிருக்கும் மூலை  முடுக்கெல்லம் வெளிச்சம் பாய்ச்சியது. இறைவன் முன்னால் எல்லோரும் சமம் என்கிற நிஜத்தை வெளிப்படையாக்கியது. ஒரு சின்ன தீக்கங்காக ஒரு அக்கினிக்குஞ்சாக விதைக்கப்பட்ட அது
ஒரு பெரும் மாற்றத்துக்கான  கேள்வியாகக் காத்துக்கிடக்கிறது. ஆரிய தத்துவங்களுக்கு எதிராக முளைத்தவர்களை அழிப்பது, அழிக்கமுடியாதவர்களை கேலிப்பொருளாக்குவது அவர்களின் நடைமுறைத்தந்திரமானது. எனவேதான் தங்களுக்கெதிராகக் கலகக்குரல் எழுப்பிய பஞ்சாப்பிகள் இப்போதும் மூளையில்லாதவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்.

ஆங்கிலேயர் காலம்
----------------

பிளாசிப்போரும், பக்சர் யுத்தமும் நடைபெற்று ராணுவ அதிகாரம் கையில் கிடைக்கும்வரை ஆங்கில அரசாங்கத்தால் தலித்துகளின் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதன் பின்னர்
ஆங்கில ஆட்சிக்காலத்து ராணுவத்தில் தலித்துகளுக்கு அதிகமான முக்கியத்துவம் தரப்பட்டது. அவர்களுக்கெனத் தனியே இரண்டு பிரிவு ராணுவம் ஒதுக்கப்பட்டது. ஒரு கடற்படைப்பிரிவும் வழங்கப்பட்டது. அதே போல பெங்கால் ரெஜிமெண்டிலும், பஞ்சாப் ரெஜிமெண்டிலும் தலித்துகளுக்கென தனிப்பிரிவுகள் வழங்கப்பட்டன. இதுவே பின்னாட்களில் தலித்துகளின் விழிப்புணர்வுக்கு தூண்டுகோளாக இருந்தது. இந்தக்காலத்தில் தான் நாட்டின் எல்லாப்பகுதிகளிலும் தலித் தலித்தல்லாத தலைவர்கள் ஜாதிய மேலாதிக்கத்துக்கு எதிராக வலுவான சொற்களோடு
மக்களை எழுப்பி விட்டார்கள்.

ஆங்கில அரசாங்கம் இதே காலத்தில் மக்கள் தொடர்பு சாதனங்களான தபால் தந்தி, செய்தித்தாள், போக்குவரத்து புதிய நீதித்துறை, புதிய நிலச்சட்டம், புதிய கல்வித்திட்டம், மற்றும் தொழில் வளர்ச்சி ஆலைகள் நிறுவுதல் ஆகியவற்றை இந்தியப்பரப்பில் அறிமுகப்படுத்தினர். இதன் மூலம் கல்வியும்  புதிய புதிய கடவுள்களும் அறிமுகமாயின, ஆச்சரியத்தோடு தலித்துகள் வெளி உலகில் பயணப்பட்டனர். அப்போது தவிர்க்க முடியாத கேள்விகளும் எழுந்தன அவற்றுக்கான ஓவ்வொரு பதிலிலும் இயக்கங்கள் தோன்றின.
18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் அங்கங்கங்கே இயக்கங்கள் தோன்றின.

ராஜஸ்தானில், ராம்தாஸ் தோற்றுவித்த ராம்தேவ் பந்த் இயக்கம்  1726 - 1798
மத்திய இந்தியாவில், குரு காசிதாஸ் ஆரம்பித்த சத்நாமி இயக்கம் 1756 - 1850
ஆந்திரத்தில் நஸ்ரையா, தோற்றுவித்த நஸ்ரையா இயக்கம்       ... - 1825
வங்காளத்தில், நம்சூத்ர ஹரிச்சந்த் தோற்றுவித்த மத்னா இயக்கம்  811 - 1879
ஆகியவற்றைகுறிப்பிடலாம்.

ஆனால் இந்திய வரலாற்றைக் கடந்து செல்லுகிற வரலாற்றறிஞர்கள் எல்லோரும் அந்த 1857 ஆம் வருடத்தை நின்று நிதானித்துக் கடந்து செல்கிறார்கள். முதல் இந்திய சுதந்திரப்போர், கப்பற்படை எழுச்சி, சிப்பாய்கள் கலகம் இப்படியான பலபெயர்கள் கொண்டழைக்கப்படும் நிகழ்ச்சி நடந்த வருடம் அது. அடிமை இந்தியாவை ஒரு உலுக்கு உலுக்கிய நிகழ்ச்சி நடந்த ஆண்டு அது.  இந்தியாவில் சுதந்திரக்கனல் தீயாகப்பற்ற ஆரம்பித்தது. அதோடு கூடவே தலித்துகளின் விழிப்புணர்வும் போரட்ட எழுச்சியும் ஆரம்பமானதும் இதே கால கட்டத்தில்தான். 

அது ஒரு சிரிய பொறியால் உருவான காட்டுத்தீ. ராணுவ சிப்பாய் ஒருவன் தாகத்துக்கு தண்ணீர் கேட்டுப்போனான் போன இடம் ராணுவ கேண்டீன். கேட்டது ஒரு சிப்பாயிடம். அந்த சிப்பாய் தண்ணீர் தர மறுத்தான். மறுத்ததற்கான காரணம் இந்தியாவில் பிரசித்தமான காரணம். அவன் தொட்டுக் குடிக்கும் டம்ளரில் தீட்டுப் பட்டுவிடும் என்பது தான் அந்தக் காரணம். வழக்கம் போல தண்ணீர் கேட்டவன் திரும்பிப்போயிருந்தால் நிலைமை விபரீதமாகியிருக்காது. அவன் சொன்ன பதிலில் ஒரு கலகத்துக்கான ஆதி விதை இருந்தது. " உன் குலப்பெருமையை இன்னும் தக்கவைத்துக்கொள் கொஞ்ச நேரத்தில் ஆங்கிலப் பிரபு வருவான் வந்து துப்பாக்கியிலுள்ள பன்னிக் கொழுப்பைக்கடிக்கச் சொல்வான் அப்போது உன் குலப்பெருமை எங்கே போகிறது என்று பார்ப்போம் " என்று சொன்ன மறுகணம் அந்தச்செய்தி காட்டுத்தீபோல பரவிக் கலகம் வெடித்தது.

கலகம் ஓய்ந்த போது  இரண்டு பின்விளைவுகள் ஏற்பட்டது. ஒன்று உடனடியாக ஆட்சி அதிகாரம் பிரிட்டிஷ் மஹராணிக்குப்போனது. இரண்டு, பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு தலையீடாக் கொள்கையை உருவாக்கி அதை பாராளுமன்றத்தில் சட்டமாகக் கொண்டுவந்தது. அதன் படி " இந்தியாவின் மத ஜாதி விவகாரங்களுக்கு உரிய மரியாதை தருவது " என்று சொல்லுகிற அந்தச்சட்டம் ஜாதிய ஒடுக்குமுறைக்கு சாமரம் வீசுவதாக அமைந்தது. ஆங்கில அரசாங்காமும் கூட சம்பாதிக்க வந்த இடத்தில் நமக்கெதுக்கு வம்பு என்று ஒரு நிலை எடுத்தது. ஆனாலும் ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் கேட்கப்படாமல் இருந்த கேள்வியை ஒரு சாமன்ய சிப்பாய் கேட்டான். கேட்கமுடியும் என்று கதவுகளைத் திறந்து வைத்தான். எனவே தான் சுதந்திர வரலாற்றில் ஒரு பெரும் சலனத்தை
ஏற்படுத்திய அந்த சிப்பாய்க்கலகம் தலித் இயக்கங்களுக்கும் உந்து சக்தியாக இருந்தது.

ஆயிரம் உண்டிங்கு ஜாதி அன்னியன் புகுதல் என்ன நீதி என்ற கேள்வியின் மேல் பரப்பில் சுதந்திரத்தீ பரவலாம்.ஏற்கனவே அடிமைப்பட்டுக்கிடக்கும் அவர்கள் பதிலுக்கு ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை எனப்பாடுவார்கள். அப்படியான தலித் குரல்கள் இந்தியாவின் எல்லாத்திசைகளிலிருந்தும் கிளம்பியது.

தமிழகத்தில் 1890 ஆம் ஆண்டு M.C.ராஜாவால் துவங்கப்பட்ட ஆதி திராவிட மஹாஜன சபை அரசாங்க வேலைகளுக்கான தகுதியில் தலித்துகளுக்கு சலுகை வழங்கவேண்டுமென்று கோரியது, அது 1894 ஆம் ஆண்டு அப்போதைய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  பறையர் இனத்தை திராவிட நாட்டின் பூர்வகுடிகளாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆதி திராவிடர்கள் என்ற பெயர் மாற்றம் வேண்டுமென்று கோரியது.

1917 ஆம் ஆண்டு குரு ராமச்சந்திர ராவால் தொடங்கப்பட்ட ஆதி ஆந்திர மஹாஜன சபையும் இதே கோரிக்கையை முன்னிறுத்தி போராடியது. ஆந்திர தலித்துகளுக்கு கல்வி கற்கும் உரிமையை ஜில்லாபோர்டு, பஞ்சாயத்து, உறுப்பினர் பதவி, பொதுக்குளங்களில் தண்ணீர் எடுக்கு உரிமை ஆகியனவற்றைச்  சட்டமாக்கவேண்டும்மெனவும் கோரியது.
             
1912 ல் அனைத்து வங்க நம்சூத்ர சங்கம் 
1927 ல் K.கேளப்பன்., கிருஷ்ணன் ஆகியோரது தலைமையில் கேரளத்திலும்
1930 ல் கர்நாடகத்திலும்
1926 ல் மங்கோ ராம் தலைமையில் பஞ்சாபில் ஆதி தரம் எனும் இயக்கமும்.

குரு ரவிதாஸின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது.  சாமர், சூரா, சன்சிஸ், பாங்க்ரர்,
மற்றும் பில்ஸ் இனத்தவர்கள் மட்டுமே பூர்வகுடிகள் அவர்களுக்குள் எந்தவிதமான பேதமும் இல்லாதிருந்தது
என்று பிரகடனப்படுத்துகிறது.
1921 ல் உத்திரப்பிரதேசத்தில் சுவாமி அச்சுதானந்த்ஜி ( ஹீராலால் ) துவக்கிய ஆதி இந்து சபை அந்தக்காலத்தில் பிரபலமானது. அது பிராமண போதனைகள் எல்லாவற்றையும் முற்றிலும் நிராகரித்து அந்தந்த பகுதியில் உள்ள குலதெய்வங்களையும் காவல் தெய்வங்களையும் பிரதானப்படுத்துகிறது.
சாமர் தைவ சபா கேரளத்தில் உள்ள கிறிஸ்தவ மதத்தில் உயர் ஜாதி சிரியன் கிறிஸ்தவர்களால் ஒடுக்கப்படுவதை
எதிர்த்து ஒன்றாகத் திரட்டியது.

இந்தியப்பெருவெளியெங்கும் தலித் குமுரல்கள் கேள்விகளாக எழுந்து தமது சந்ததியினரையும், ஏனைய பரந்த சிந்தனையுள்ள மக்களையும் அதுகுறித்து விசனம் கொள்ள வைத்தது. ஆனால்  ஆங்கொன்றும் இங்கொன்றுமாக
சிதறிக்கிடந்த, இந்த குமுரல்களை இணைக்கிற மனிதராக  டாக்டர் அம்பேத்கர் புறப்பட்டார். கற்பி ஒன்றுசேர் போராடு என்ற மூன்று சொல்லால் இந்திய தலித் இயக்கங்களுக்கு உந்து சக்தியாக மாறினார்.
1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மோவ் என்னும் ஊரில் பிறந்த அவர் 1919 ஆம் ஆண்டு தலித் இயக்கங்களில்
தன்னை இனைத்துக்கொண்டார். அன்றிலிருந்து தனது அந்திமக்காலம் வரை தனது வாழ்நாளை ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே அர்ப்பணித்தார். 1931 ல் லனடன் மாநகரில் நடந்த வட்ட மேஜை மாநாடும், அங்கு அவர்
முன்னிறுத்திய இரட்டை வாக்குரிமை கோரிக்கையும் உலகம் உற்றுநோக்கிய வராலாற்று நிகழ்வுகளாகும். மஹாத்மாக் காந்தியின் உண்ணாவிரதத்தால் இரட்டை வாக்குரிமைக்கொரிக்கையைக் கைவிட்டு விட்டு அதற்குப்பதிலாக பாரளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் அதிகப் பிரதிநிதித்துவம் பெறுமளவுக்கு இட ஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்தார்.

ஒடுக்கப்பட்டவர்கள் அரசியல் சக்தியாக உருவெடுத்தால் மட்டுமே ஒட்டுமொத்த விடுதலை சாத்தியம் என்கிற கொள்கையில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த அம்பேத்கர்  1936 ஆம் ஆண்டு சுதந்திரத்தொழிலாளர் கட்சியை ஆரம்பித்தார். பின்னர் 1942 ஆம் ஆண்டு அகில இந்திய பட்டியல் இனத்தவர் சங்கம் ( All India Scheduled Cast Federation= SCF ) ஒன்றை ஆரம்பித்தார். இந்தியாவில் அப்போது நிலவி வந்த சமூக பின்புலங்களைக்கருத்தில் கொண்டு அரசியல் அதிகாரம் பெறுவது ஒன்றே தலையாய நோக்கம் என்பதில் அவர் திடமாக இருந்தார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்தியாவின் அரசியல் அதிகாரம் இந்துக்களுக்கும் முஸ்லீமகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களூக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஒடுக்கப்பட்டவர்களுக்கான பங்கினை சட்டபூர்வமக்கவேண்டும். இந்த மூன்று
சம பங்கான தூண்களின் மேலே தான்  எதிர்கால இந்தியாவின் அரசியல் சாசனம் உருவாக வேண்டும். அப்படியோர் நிலைமை உருவாக நீங்களெல்லோரும் ஒரே கொடியின் கீழ் ஒன்றுபடவேண்டும். இதுவரை உங்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டதற்கு,  ஒற்றுமையில்லாமல் இருந்தது ஒரு காரணமாகும். ஒன்றுபடுங்கள்
நமக்கான உரிமைகள் சர்வநிச்சயமாக வந்துசேரும்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
SCF ன் கிளைகள் பஞ்சாப், உத்திரப்பிரதேசம், வங்காளம், மற்றும் மதராஸ் ஆகிய மாகாணங்களில் நிறுவனமாகி 1956 வரை செயலாற்றியது.

சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் அம்பேத்கர் சட்ட அமைச்சசராகப் பதவி வகித்தார். அரசியல் சாசன வரைவு குழுவின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த சாசனம் தலித்துகளுக்கு வழங்கிய உரிமைகளின் பட்டியல் மிக நீளமானது. அதில் கணக்கிலடங்காத அரசியல், சமூக, பொருளாதார உரிமைகள் குவிந்துகிடக்கிறது.  நிஜமான அக்கரையோடு அவை பின்பற்றப்பட்டிருக்குமானால்
தொடரும் வன்முறைகளும் கொடூரங்களும் இன்னும்கூட துப்புறவுக்கு தோட்டி என்கிற இழிகொடுமை  இல்லாது போயிருக்கும். ஆனால் சலுகைகளும் உரிமைகளும் அமல்படுத்துகிற அதிகாரம் தானாகவே உயர் ஜாதியினரின் கைகளுக்குப்போனதால், அது ஒரு காகிதப்பரிசாக மட்டிலும் இன்றளவும் தொடர்கிறது.
 
SCF ஐத் துவங்கிய பிறகு அம்பேத்கர் மக்கள் கல்வி சங்கத்தைத்துவங்கினார். அதனால் மராட்டிய மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான பள்ளிகள் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. கற்பி ஒன்றுசேர் போராடு என்கிற கோசத்தை அவரது தொண்டர்களிடமும் ஏனைய தலித் இயக்கங்களிடமும் உரக்கச்சொனார். ஒடுக்கப்பட்டவர்களின் முழு விடுதலைதான் எல்லாவற்றிற்கும் மாற்று என்பதில் மிக உறுதியாக இருந்தார். அதனால்
தன்னால் சாத்தியப்பட்ட வரையிலும் கலகக்குரல் எழுப்பிக்கொண்டேயிருந்தார். 
ஒடுக்கப்பட்டவர்களின் மீது தொடர்கிற ஆதிக்கத்துக்கும், வன்கொடுமைகளுக்கும் காரணம் இந்து மத அடிப்படை
வாதம் என்பதில் எந்த கருத்து ஊசலாட்டமும் இல்லாதிருந்தார். அதனாலேயே 1956 ஆம் ஆண்டு தன் வாழ்நாழின் கடைசிக் கலகமாக  ஆயிரக்கணக்கான தொண்டர்களோடு புத்த மதத்தைத்தழுவினார்.
  
பின்னர் இந்தியத்தலித்துகளை ஒன்று திரட்டும் முயற்சியாக ''மக்கள் ஜனநாயகக் கட்சி'' என்ற ஒன்றை ஆரம்பித்தார்.பின்னர் அதன் பெயரை இந்தியக்குடியரசுக்கட்சி என்று மாற்றினார்.
கட்சியின் நிறுவனச் சாசனங்களை உருவாக்கி அதை ஏனைய தலித் தலைவர்களின் ஒப்புதலுக்காக சுற்றரிக்கையாக அனுப்பினார். அது ஒப்புதலாகி வருகிற வரை காலம் காத்திருக்கவில்லை. இந்திய நிலப்பரப்பில்
ஒடுக்கப்பட்டவர்களை செருப்போடு நடக்க, ஓரளவேனும் மனித அடையாளத்தோடு வாழவைக்கக் கனவுகண்ட கண்கள் அதே 1956 டிசம்பர் மாதம் நிலைகுத்தி நின்றது. சுதந்திர நாளின் பின்னிரவில் நிருபர்கள் நேருவிடம்
போனார்களாம் நேரு தூங்கிவிட்டாரென்று காவலாளி சொன்னாராம், ஜின்னாவின் வீட்டுக்காவலாளியும் அதே பதிலைச்சொன்னானாம், அம்பேத்கர் வீட்டு விளக்கு அணையாது எறிய அப்போதும் கண்விழித்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தாராம். நேருவும், ஜின்னாவும் தூங்கிப்போன இந்தப்பின்னிரவில் நீங்கள் மட்டும் ஏன் தூங்கவில்லை எநக்கேட்டதற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் விடுதலையாகிவிட்டது, ஆனால் தலித்துகளுக்கு  இன்னும் விடுதலை கிடைக்கவில்லை ஆதலால் நான் விழித்திருக்கிறேன். என்று சொன்னாராம். அப்படியான சிந்தனை கொண்டதானாலேயே அம்பேத்கர் தனக்கு முன்னும் பின்னும் போட்டியில்லாமல் சேரிகளெங்கும் சிலையாகியிருக்கிறார். 

அவரது மறைவிற்குப்பின்னர் 1957 ஆம் ஆண்டு இந்தியக்குடியரசுக்கட்சி ஸ்தாபகமானது. அதில் பெரும்பாலான
ஒடுக்கப்பட்டவர்களின் தலைவர்கள் இடம்பெற்றிருந்தார்கள். உ பி, ம.பி, பஞ்சாப், மற்றும் மராட்டியம் ஆகிய
மாநிலங்களில் வலுவாக வேரூன்றிக் கிளை பரப்பிய அதன் வளர்ச்சியால் ஆளும் காங்கிரசுக்கு உதறல் எடுத்தது.
காங்கிரசின் பிரதான எதிர்க்கட்சியான ஜனசங்கத்தோடு கூட்டு சேர்ந்து விடுமோ எனும் அச்சத்தால் அப்போதைய  காக்கிரஸ் முதல்வர் Y.B. ஜவான் அவர்கள் RB கெய்க்வாட் என்கிற குடியரசுக்கட்சியின் தலைவரோடு நட்பு பாராட்டினார். அந்த நட்பினால் குடியரசுக்கட்சிக்கு இரண்டு அனுகூலங்கள் கிடைத்தது. இட ஒதுக்கீட்டில் புத்த மதத்தைத்தழுவிய தலித்துகளும் இணைத்துக்கொள்ளப்பட்டனர். நாக்பூரிலுள்ள " தீக்ஷா பூமி " என்னும் இடத்தில் அம்பேத்கர் ஆயிரக்கணக்கானவர்களோடு புத்த மதத்தைத்தழுவினார் அங்கே ஒரு நினைவிடம் அரசின் செலவில் அமைக்கப்பட்டது. அதனாலேயே RPI யோடு கூட்டணி அமைக்கிற அனுகூலம் காங்கிரசுக்கு கிடைத்தது.
கூட்டணியால் கட்சிக்குள் சர்ச்சை அதைத்தொடர்ந்து பிளவு. கூடணியை ஆதரித்த தலைவர்கள் DT ரூப்வேத்தும்
RD பந்தேரும் முறையே மந்திரியாகவும், பீகார் கவர்னாராகவும் ஆனார்கள்.

தேர்தல் ஜனநாயகக் கேலிக்கூத்துக்குள் கரைந்துபோன தலைவர்களின்மேல் மக்கள் வெறுப்புக்கொண்டார்கள்.
இதே காலத்தில் அமரிக்க ஆப்பிரிக்க கருப்பின விடுதலை இலக்கியங்கள் இந்தியாவுக்குள் பரவலாக வாசிக்கப்பட்டது அதன் கருத்துக்களால் ஆகர்ஷிக்கப்பட்ட மராட்டிய மாணவர்கள். கருப்பின விடுதலைக்கு பெரும்
பங்காற்றிய கருஞ்சிறுத்தை இயக்கத்தின் சாயலில் ஒரு புரட்சி இயக்கத்தை உருவாக்கினார்கள். அதற்கு இந்தியத் தலித் சிறுத்தைகள் எனப்பயெரிட்டனர். அந்த இயக்கம் கிராமங்களினூடாகச் சென்று அங்கே புரையோடிக்கிடக்கிற வன்கொடுமைக் குற்றங்களை உலகறியச்செய்தது. தலித் இலக்கியங்கள் சிறுகதைகளாக, கவிதைகளாக, தன் வரலாறாக வெளியாகி புற உலகின் கவனத்தைத் திருப்பியது இந்தக்காலத்தில்தான். உச்சக்கட்டமாக தேர்தல் புறக்கணிப்பைப் பிரகடனப்படுத்தியபோது அரசியல் அரங்கில் அந்த இயக்கம் ஒரு தனித்துவமான இடத்தைத் தக்கவைத்துக்கொண்டது. அவர்களின் அரசியல் சாசனப்பிரகடனம் கிட்டத்தட்ட மார்க்சீயச்சாயலில் இருந்ததால் அது கட்சிக்குள் விவாதங்களை ஏற்படுத்தியது. மெல்லத் தலைதூக்கிய கருத்துவேறுபாடுகளும் பதவி மோகமும் அந்த இயக்கத்தின் தீவிரத்தன்மையை நீர்த்துப்போகச்செய்தது.

அதன் பின்னர் அம்பேத்கரால் துவக்கப்பட்ட அகில இந்திய சமதா சைனிக் தளம் என்கிற கட்சியை திரு பகவான்தாஸ் புனரமைத்தார். அவரே அம்பேத்கர் மிஷனரியையும் ஆரம்பித்தார். நாடெங்கிலும் உள்ள தலித்துகளை இனைக்க ஒருங்கினைந்த குடியரசுக்கட்சியை உருவாக்கினார்.

பிரகாஷ்ராவ் அம்பேத்கர் குடியரசுக்கட்சி ( பிரகாஷ் ) என்கிற கட்சியை ஆரம்பித்துப்பார்த்தார் அவர் பிற்படுத்தப்பட்ட்வர்களை அந்தக்கட்சியில் இணைக்கிற முயற்சியில் இறங்கினார்.

1980 ல் கன்ஷிராம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட பகுஜன் சமாஜ்வாதிக்கட்சி 1990 தேர்தலில் இரண்டு பாராளுமன்ற இடங்களையும், 1993 ல் நடந்த உபி சட்டசபையில் முலாயம் சிங் யாதவுடன் சேர்ந்து 67 இடங்களைப்பிடித்தது. பின்னர் பாரதிய ஜனதாவுடன் கூட்டணியமைத்து   இந்தியாவின் முதல் தலித் முதல்வராக மாயவதி அமர்ந்ததும் அதன் பிறகான அரசியல் நாடகங்களும் நாடறிந்தவை

16.4.10

மின்சாரமே நீ, போ.. போ.

மின்சாரம் தடைப்பட்டதும் நான் அரசாங்கத்தையோ,மின்வாரியத்தையோ திட்டவில்லை. குதியாட்டம் போட்டுக்கொண்டு எனக்கு முன்னே எனது மனது ஓடிப்போய் படியில் உட்கார்ந்து கொள்கிறது.குளுகுளுவென மழலையைப்போல அல்லது பெண்ணின் அடிவயிற்றைப்போல காற்று உடல் முழுக்கப்படர்கிறது.எங்கம்மா இதை தென்றல் காத்தென்று சொல்லுவாள். நிற்கப்போகிற சுதியில் சுழலுகிற மின்விசிறி வெளியே எட்டிப் பார்த்து முகம் சுழிக்கிறது. சுற்றுச்சுவர் மறைசலில் நீர்கழிக்க எத்தனித்த பெரியவர் முதல் அழைப்பை ஒத்திப் போடுகிறார். கடந்துபோகும் இளம்பெண்களின் முகங்களை இருள் பார்த்துக்கொள்ள  சிரிப்பொலியை செவிப்பறைகள்  திருடு கின்றன. அவர்கள் அணிந்திருக்கும் சுடிதார் ஒரு கனம் தாவணியாய் உருமாற நினைவு மினுக்கிட்டு மறைகிறது.

மூன்றாவது வாசலில் உட்கார்ந்திருக்கும்  பெரியவரும் மனைவியும் வீட்டை விட்டு ஓடிப்போன மகன்களின் வெற்றிடத்தை சண்டையிட்டுச் சரிசெய்கிறார்கள்.போதையில் வந்திறங்கும் வருவாய் அலுவலர் கூடுதல் கவனத்துடன் நடப்பதாகப் பாவனை செய்து தடுமாறுகிறார்.தடதடத்துக் கடக்கும் இருசக்கர வாகனத்து ஒளிக்க கற்றை கண்களையும் சூழலையும் கூசச் செய்கிறது. கூடடைந்த பறவைகளின் சீழ்கை ஒலியில்லாத  சலனம் அருகிருக்கும் கூந்தல் ஷாம்புக்கு கூடுதல் மணம்சேர்க்கிறது. இப்போதுதான் குப்பையில்லாத தொலைக்காட்சி ஒழுக்கமாக கூடத்தில் தூங்குகிறது.

அருகருகே அமைந்த வீடுகளின் வாசற் பெண்கள் கைப்பேசியில்லாத நிஜ உரையாடலுக்குத் திரும்புகிறார்கள் .வாகன  வெளிச்சத்துக்கு எதிர்த்தொளிரும் செம்மறியாட்டுக் கூட்டத்தின் கண்கள் பார்க்கிற பாக்கியம் கிராமமறியா மகனுக்கு காண்பிக்கிறேன்.உடன் நடந்து வரும் ஒற்றை மாட்டின் மணிச்சத்தமும் மேய்ப்பரின் விலங்கு மொழியும் திரும்பக் கிடைக்காத் திரவியங்கள். யார் வீட்டிலோ திமிறும் குக்கரின் வெப்பக் காற்றுக் கூட நடுச்சாமத்தில் அழைக்கும் சங்கேதக் குரலாக மாறும் யௌவன இருள்.இயல்பின் ரம்மிய இசைகளைக் குலைத்தபடி இதோ திடு திடு வென அலறுகிறது வீடுகள்,மஞ்சளும் வெள்ளையுமாய் இருளைக் களங்கப்படுத்தியபடி  அதோ அந்தக் கேடுகெட்ட மின்சாரம் வந்துவிட்டது.

15.4.10

செய்திகளுக்கு அப்பால்

அந்த புகைவண்டி நிலையத்துதுக்கு வரும் சாலையோரம் அவர்களின் வசிப்பிடம்.பாலித்தீன் சாக்குகளினால் கட்டப்பட்ட டெண்ட்.மூன்று குழந்தைகள் ஒரு பெரியவரோடு கணவனும் மனைவியும்.சேலம் பக்கத்திலிருந்து வந்த நாடோ டிகள்.பிழைப்புக்கு ஏதாவது செய்வார்கள் அதென்ன அம்பானி குடும்பமா இல்லை ஐம்பது ஏக்கர் நிலமிருக்கும் சம்சாரி குடும்பமா. இரவு வேட்டையாடிய எதோ ஒரு விலங்கு சட்டியில் வெந்து கொண்டிருந்தது.விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளின் முழுக்கவனமும் தீயின் ஜுவாலையோடு அந்த சட்டியைக் குறிவைத்திருந்தது.காலை ஏழேகால் பாஸஞ்சர் வண்டி வந்து மனிதர்களைத் தட்டிவிட்டுப் போனது.

அவள் தனது மாமனாரோடு ஏதோ விவகாரம் பேசிக்கொண்டே,சட்டியை திறந்து கிளறிவிட்டுக்கொண்டே,விளையாடும் பிள்ளைகளை வண்டி வருது என எச்சரித்துக்கொண்டே,கடைக்குப்போன கனவனை எதிர்பார்த்துக்கொண்டே கலம் நகர்த்தினாள்.பாஸஞ்சர் வண்டியில் இருந்து இறங்கி வந்த சூட்டுப் போட்ட கணவான் ஒருவன் அவளிடம் நேரடியகவே பேரம் பேசியிருக்கிறான்.முதலில் அலட்சியப்படுத்திவிட்டு தொடர்ந்தவளைத் திரும்பவும் துன்புறுத்தச் சினங்கொண்டு எழுந்து அவனது சட்டையைப் பிடித்துவிட்டாள்.கூட்டம் கூடியது சண்டை பார்த்தது,விவரம் கேட்டது,கருத்துச் சொன்னது.

கொடுவா மீசைவைத்த வாகனக்காப்பக சிப்பந்தி வந்து 'ஏத்தா விடு விடு இப்பென்ன கொலையா பண்ணிட்டார், ஒரு ஆம்பளய கைநீட்டி அடிக்கப்போற ?' என்று நாட்டாண்மைத் தீர்ப்புச் சொன்னார்.நான்கு சக்கர வாகனத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த யாருக்கும் இந்த சம்பவம் ஒரு பொருட்டே இல்லை.வேடிக்கை பார்த்தவர்களுக்கும் அவளுக்கும் எந்த வகையிலும் பிணைப்பு இல்லை. அவள் பெண்ணும் இல்லை,பாதிக்கப்பட்டவளும் இல்லை. கேட்பாரற்றவள். சாலையோரம் நடப்பட்ட மரங்களுக்குக் கூட வேலி இருக்கிறது. சாலையோர ஜனங்களுக்கு ?

14.4.10

ஒரு ஊர்சுற்றியின் புராணம் - ராகுலசங்கிருத்தியான்.


வாழ்க்கையில் முதன்முதலாய் திருச்செந்தூர் போயிருந்த ரெண்டு சம்சாரிகள் 'இங்கரும் மச்சா ஊர்ல கெளம்பம்போது ஒரு சொட்டு மழையில்ல இங்கப்பாத்தா தண்ணி கெத்து கெத்துன்னு கெடக்கு, ராத்திரி பூரா நல்ல குடுப்பு குடுத்திருக்கும்போல' என்று தங்கள் அறியாமையை மழைமேல் போட்ட பலியாக்கினார்களாம்.ஆனால் ஊருக்கு வந்து ஓயாமல் கடல்புராணம்தான் பேசினார்களாம்.

ஊரைத் தாண்டாத மனிதர்களை கிணற்றுத் தவளைகள் என்று சபிக்கிறது பயணங்களின் கர்வம்.பயணங்கள் புதிய மண்ணின் வாசத்தை,புதிய புதிய காற்றின் தாலாட்டை,மனிதர்களை  அறிமுகப் படுத்துகிறது. நிலம், மொழி,சமூகம்,ஜாதி என்றுஉயர்ந்து நிற்கும் தாண்ட முடியாத  சுவர்களை கடந்து பயணித்தவர்களே வரலாற்றில் அழுத்தமாகிப்பதிந்து போன ஆளுமைகளாக ஆகிறார்கள். அப்படி தன் வாழ்நள் முழுக்க இலக்கற்ற தேடலோடு பயணமான மாமனிதன் ராகுல சங்கிருத்தியான்.

ராகுல்ஜி என்றழைக்கப்படும் அந்தப்பெயர் இந்திய இலக்கியத்தில்,சமூக அரசியலில்,மத நம்பிக்கைகளில்,சுதந்திரப்போராட்டத்தில் ஒரு பெரும் அதிர்வை விட்டுச்சென்ற பெயர்.ஐந்து மொழிகளில் 125 படைப்புகளை இந்த உலகத்துக்கு அற்பணித்திருக்கிற ராகுல்ஜியை ஒரு எழுத்தாளர்,ஒரு சிந்தனையாளன்,அரசியல்வாதி,மதபோதகன் என்கிற எந்தக் குடுவைக்குள்ளும் அடைக்கமுடியாத படி திமிறித் திமிறி வெளியேறிய மகான் அவர்.

1893 ஆம் ஆண்டு பிறந்த அவர் ஒரு மதரசா பள்ளிக்கு உருது எண்களைப்படிக்க அனுப்பி வைக்கப்பட்டார்.சம்ஸ்கிருதம்,உருது,பார்சி ஆகிய மூன்று மொழிகளை மட்டும் முறைப்படிக் கற்றுக்கொண்டார்.ஆனால் தனது சொந்த முயற்சியால் உலகின் முப்பது மொழிகளைக் கற்றுக்கொண்டார். பத்தாவது வயதில் ,1903 ஆம் ஆண்டு ரகசியமாய் வீட்டை விட்டு வெளியேறி பனாரசுக்குப் போனவர் பிறகு, வீடு திரும்பவே இல்லை எனும் அளவுக்கு ஊர்சுற்றியவர்.ஆரிய சமாஜத்தில் சேர்ந்து சமஸ்கிருதம் படிக்கப்போன அவர் தனது பெயரை பாபா ராம் உதார் தாஸ் என மாற்றிக்கொண்டார்.ஆன்மாவைத் தேடி சாதுக்களோடு இமயமலையின் இண்டு இடுக்குகளுக்குளெல்லாம் அலைந்தார். அலைச்சலில் மிஞ்சியது கஞ்சாப் பழக்கமும் அடர்ந்த புகையும்தான் .அங்கிருந்து வெறுங்கையோடு திரும்பி வந்தார். பனாரசுக்கு வந்து சக்ரபாணி பிரம்மச்சாரிக்கு சீடாராகி புத்த மதத்தில் சேர்ந்தார்.அங்கிருந்து நேபாளம்,ஸ்ரீலங்கா,திபெத் நாடுகளுக்குப்போய் பாலி மொழிமூலமாக பௌத்தமதத்தில் திரிபதக் ஆச்சாரியா என்னும் பட்டமும் பட்டயமும் பெற்றார்.கிடைத்த பட்டயம் அவரை லமாசுக்கு அழைத்தது. லமாசில் இருந்து ஐரொப்பிய நாடுகள் ஒவ்வொன்றாக அலைய ஆரம்பித்தார்.அப்போதுதான் அவரை பொதுவுடமைத் தத்துவம் ஈர்த்தது அதில் ஈர்க்கப்பட்டு சோவியத் யூனியனுக்குப்போனார். அங்கிருந்து  இந்தியா திரும்பிவந்து  தீவிர சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.சுதந்திரக் கருத்துக்களை எழுதியதற்காக ஆறுமாதம் சிறையிலடைக்கப்பட்டார்.1939 ஆண்டு தன்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக்கிக் கொண்டார்.ஒன்பதே வருடங்களில் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

13 ஆம் நூற்றாண்டில் பக்தியார் கில்ஜியால் எறிக்கப்பட்ட  நலாந்தா பல்கலைக்கழகத்தில் இருந்து காப்பாற்றப்பட்டு ரகசியமாக நாடுகடத்தப்பட்ட இந்திய தத்துவங்கள் திபெத்தில் இருப்பதாகக்கேள்விப்பட்டு காஷ்மிர்,கார்கில் வழியாக திபெத்துக்கு கால்நடையாய் நடந்து சேர்ந்தார்.அங்கிருக்கும் புத்த மடாலயத்துக்கு உள்ளே நுழைய தன்னை பிக்குவாக்கிக்கொண்டார். இறுதியில் தேடிப்போன பொக்கிஷங்களைக் கண்டு பிடித்தார்.கையில் கிடைத்த சந்தோஷம் படிக்கக் கிடைக்கவில்லை. காரணம் அது போத் மொழியில் தான் இருந்தது. தளராத ராகுல்ஜி திபெத்திய போத் மொழியை இல்லகண சுத்தமாகக் கற்றுக்கொண்டார்.இப்படி ஓவ்வொரு தேடலின் போதும் ஓவ்வொரு புது மொழி அவருக்குப் பரிசாய்க் கிடைத்தது. ஏன் தமிழ் மொழி கூட.

அவரிடம் குவிந்து கிடந்த உலக மொழிகளின் புலமையால் பல்வேறு நாடுகள் அவரை கையேந்தி அழைத்தது.1948 ஆம் ஆண்டு ஹிந்தி சாஹித்ய சம்மேளனுக்காக பேராசிரியர்.வரலாற்றாளர் பிரபாகரனோடு இணைந்து 16000
ஆங்கில வர்த்தைகளை ஹிந்திக்கு மொழிபெயர்த்தார்.அப்போது அவசரக்காரன்,நேர்த்தியில்லாதவன்,அரைவேக்காடு என்று சமகாலத்தவரால் விமர்சனம் செய்யப்பட்டார். அதற்குப்பதிலாக 'எதுவும் நிலையற்றது,ஒவ்வொன்றும் மாறக்கூடியது' என்னும் புத்தரின் பொன்மொழியையும்.'எதுவும் இறுதியானதில்லை' என்கிற லெனினின் வார்த்தைகளையும் சிரிப்புமாறாமல் சொன்னாரம் ராகுல்ஜி.

முதலாளித்துவத்தின் முகவர் என்று மகாத்மா காந்தியை அவர் வாழும் காலத்திலேயே பரிகசித்தவர் ராகுல்ஜி.ஒரு நாள் நெடு நெடுவென சலம்பூர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்து சுதந்திரப்போராட்டத்தில் நான் என்னை இணைத்துக் கொள்கிறேன். பரசாவிலிருந்து நான் என் வேலைகளைத்தொடங்குகிறேன் என்று சொன்னாராம். நிராகரிக்கப் பட்டதை பலிகொடுக்கப்பட்ட விலங்கு மாமிசத்தையும், மதுவையும் மேண்மை தங்கிய சீடர்கள் கடவுளின் மனிதனுக்கு அனுமதிக்கவில்லை என்று கேலியாகக் குறிப்பிடுகிறார். பரசா மடத்துக்கு வந்த இந்திய அரசின் தொல்லியல்துறை புகைப்படக் கலைஞர்கள் கங்குலி மற்றும் பிந்திதாஸ் இருவரின் மேல் ஈர்ப்புக்கொண்டு பின்னாளில் ராகுல்ஜியும் ஒரு புகைப்படக்கலைஞனாக மாறினாராம்.ஒழுங்கு செய்யப்பட்ட வீடு உறவு,கல்வி,வேலை,மதம்,அரசியல்,எல்லாவற்றிலிருந்தும் வெளியேறிய ராஹுல்ஜி மூன்று திருமணங்கள் முடித்திருந்தார்.
போதையையும் கற்றுக்கொண்ட அவர் அதற்கும் கூட அடிமையாகாமல் விட்டு விடுதலையான சிட்டுக் குருவி.

பல்வேறு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட வால்காவிலிருந்து கங்கை வரை என்கிற புத்தகம் இந்த தேசத்தின் அரிய சொத்துக்களில் ஒன்று.கிமு 6000 தொடங்கி இந்தியாவில் சுதந்திரப்போராட்டம் ஊச்சத்திலிருந்த, வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்துகொண்டிருந்த, 1942 ஆம் ஆண்டு முடிவடையும் இந்த சரித்திரப்,புதினம். யுரேசியாவில் இருக்கும் வால்கா நதிக்கரையில்  வசித்த ஆரியர்கள் இடம்பெயர்ந்து சிந்து கங்கைச் சமவெளிகளை ஆக்ரமிக்கும் இந்த வரலாற்றுப் புதினம் தமிழில் தோழர் கே.என்.முத்தையாவால் மொழிபெயர்க்கப்பட்டது.
தமிழ்புத்தகாலயம் வெளியிட்ட அது சிறந்த விற்பனைப் பரிசைத் தட்டிச் சென்றது. எழுபது எண்பதுகளில் தென்னிந்திய மொழியில் உள்ள அணைத்து கல்வியாளர்களாலும் கொண்டாடப்பட்ட அறிவுச் சுரங்கமாகக் கருதப்பட்ட வால்காவிலிருந்து  கங்கை வரை  புத்தகம் படிக்கிற போது பல கேள்விகள் தானகவே விடைபெறும்.   

'குத்ரை கா நதி ஜா பி நவ்ஜிந்தா பஜிந்தா' என்கிற பதம் அவர் எழுதிய படைப்புக்களில் பெரும்பான்மையாக திரும்பத் திரும்ப வரும். ஆரம்பப் பள்ளியில் உருது மொழி படிக்கும் போது கதையில் கிடைத்த இந்த வாக்கியம்  அவரை  ஒரு இடத்தில்  நிற்கவிடாமல் விரட்டிக்கொண்டே இருந்தது என்று தனது சுய சரிதையில் எழுதுகிறார். ஒரிடத்திலே கிடப்பது அறியாமை, எழுந்து பரந்த உலகம் முழுவதும் பயணி.பயணம் செய்ய இன்னொரு பிறப்பு கட்டாயம்  கிடைக்காது. வாழும் காலம் நீடித்தால் கூட இப்போதிருக்கும் இளமை  திரும்பவராது.

இன்னும் நிறையத் தேடவும்  பயணிக்கவும் தூண்டு கோலாக இருக்கிற ராகுல்ஜியின் நினைவுநாள் இன்று. ராகுல்ஜியோடு  புத்தமதத்துக்கு இருந்த உறவு புத்தமதத்தோடு புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கருக்கும் இருந்தது. பெரியாரைத்தேடும் போது எப்படி அம்பேத்கர் தட்டுப்படுவாரோ அதேபோல அம்பேத்கரைத் தேடும்போது ராகுல்ஜி தட்டுப்படுவார். கடவுள் மறுப்பை மடாலயங்களின் மையப்பகுதியிலிருந்து உரக்கச் சொன்னவர் ராகுல்ஜி.அவர் அம்பேத்கரின் மானசீகக்குருக்களில் முதல்வர். இன்று அம்பேத்கரின் பிறந்தநாளும் கூட.


13.4.10

நம்பிக்கையை ஒளிரச்செய்யும் சமன்பாடுகள்.

போகிற போக்கில் கேள்விப்பட்டதானாலும் கூட சில விஷயங்கள் பேரதிர்வுகளை போட்டுவிட்டுப் போய் விடுகின்றன.வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடாவிட்டாலும் கூட அருகில் இருக்கிற மனிதர்களின் துக்கங்கள் சலனமற்ற தூளியை ஒரு முறை  இழுத்து  ஆட்டி விட்டுப் போகின்றன.

பள்ளம் ஆவணப்பட தயாரிப்புக் காலங்களில், கட்டிய கணவன் முன்னாளே மனைவியை கன்னத்தில் அடித்த மேஸ்த்திரி. கீழ்சாதிப் பிணத்தை தெருவழியே துக்கிப் போகவிடாமல் தடுத்ததால் இறந்த பின்னும் நாறிக்கிடந்த சன்னாசிக்கிழவன்.கிச்சன் கில்லாடி, சமயல் சமயல் போன்ற தொலைக்காட்சி நிகழ்சிகளில் தயாரிக்கப்படும் உனவுகள் அப்படியே குப்பைத்தொட்டியில் ஐக்கியமாகுமாம்.திரைப் படங்களில் காட்டப்படும் இனிப்புகளின் மேலும்,பழங்களின் மேலும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டிருக்குமாம் எதற்காக ? பசித்திருக்கும் லைட்பாய்கள் தின்றுவிடக்கூடாதென்பற்காக.  கோல்ப் மைதானங்களில் விரயம் செய்யப்படும் தண்ணீர் மும்பை சென்னை போன்ற பெரு நகரங்களின் தண்ணீர் தேவையை கனிசமாக பங்குபோட்டுக் கொள்ளுமாம்.இது போலத்தான் வறுமைக்காக கிட்னியை விற்கிறார்கள் என்னும் சேதியை முதன் முதலில் கேட்ட போது அதிர்ச்சியாக இருந்தது,அதைவிட அதிர்ச்சி அதை திருடுகிறார்கள் என்பது.

ராமேஸ்வரத்தில் மனநிலை சரியில்லாமல் அலையும் பிச்சைக்காரர்களை அவர்களது பெற்றோரே கொண்டுவந்து விட்டு விட்டுப் போய் விடுகிறார்கள் என்று ராமநாதபுரத்தில் ஒரு தொழிற்சங்க கூட்டத்தில் பேசிய மின்சாரவாரிய சிஐடியு தலைவர் ஒருவர் சொன்னார். ஒருமுறை ரோட்டோ ரத்தில் லாரி ஒன்று விபத்துக்குள்ளாகி கிடந்தது அதிலிருந்த மைதா மாவு மூடைகள் சிதறி விபத்தில் இறந்த ஓட்டுனர் நடத்துனர்  ரத்தத்தோடு கலந்திருந்தது. அங்கே இருந்த குடிசைப்பகுதி மக்கள் ரத்தம் பட்ட  மாவை  ஒதுக்கி விட்டு சிதறி க்கிடந்ததை வழித்தெடுத்துக் கொண்டுபோய் பசியாறிக் கொண்டார்கள். இதை தம்பி கார்த்தியிடம் சொன்னபோது அது  பரவாயில்லண்ணே பசிக் கொடூரத்துகாக நடக்கு,ஆனா  பத்து மைல் சுற்று வட்டாரத்தில் விபத்து நடப்பதை தகவல் கொடுக்கவும்,தகவல் வந்ததும் காவல்துறைக்கு முன்னாள் விரைந்து போய் நகை பணங்களைச் சுருட்டிக்கொண்டு வர டிஜிட்டல் தொழில் நுட்ப ஏற்பாடுகளோடு பலர் இருக்கிறார்கள். என்று சொன்னதை இன்று வரை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

ஒரு காக்கை இறந்து விட்டால் அந்தப்பிரதேசமே கருப்பு நிறக்கரைச்சல் நிறைந்திருக்கும். ஒரு வெள்ளை முக்காட்டைப் போட்டுக்கொண்டு வெளி நாட்டிலிருந்து ஒரு அன்னை தெரசாவும்,பொது இடங்களில் காலில்லாத கணவனை இழுத்துக்கொண்டு நம்பிக்கையோடு  நமது முகத்துக்கு நேரே கைநீட்டும் னிதர்களும்,சுனாமிப் பேரழிவில் மூட்டை மூட்டையாய் குவிந்த பொருளும்,அதைத் தூக்கிக்கொண்டு போருக்குபோவது போல இளைஞர்கள் வீட்டை விட்டுக்கிளம்பியதும் இந்த அதிர்வுகளை அடக்குகிற மிகப்பெரும் சமன்பாடாகிறது.

நல்லார் ஒருவர் உளரேல்

10.4.10

சிறிதினும் சிறிது கேள்

சிற்பியின் உளிக்கு
சிலை மோதும் இசைபோதும்.

கருவேலங் காட்டுப் பூக்களுக்கு
கடந்து போகும் காற்றுப்போதும்.

மடிமோதும் கன்றுக்கு அமுதமும்
இல்லது போனால் தலைகோதும்
தாயின் விரலும் குரலும் போதும்.

தவிச்ச வாய்க்கொரு குவளை
தண்ணீர் போலச் சின்ன சின்னதாய்.
சிரிப்பும் சிநேகமும் ஆறுதலுமாய்
சிறிதினும் சிறியது போதும்

9.4.10

ஜீவ அப்பமும் கொஞ்சம் கெட்டிச்சட்டினியும்

தமிழ்மணத்தில் எனக்காக வாக்களித்த              
அந்த 5 நண்பர்கள் யாரெனத்தெரியவில்லை. 
அவர்களுக்கு என் சிறப்பு நன்றிகள்.
 ---------------------------------------------------------------


"யாரெல்லாம் போறீக"                                        
"மணி,தங்கராசு,கென்னடி,மாரியப்பன்,செம்பட்ட,கூல்பான,அந்தோணி எல்லாருந்தா,நீ வல்லியா சட்டமாத்தல ?"
கிட்டத்தட்ட அவன் சேக்காலிகள் எல்லோருடைய பட்டியலும் முடிந்தது.இவன் மட்டும்தான் பாக்கி.அம்மயிட்ட கேட்டா கொடமானங் குடுப்பாளே என்று மனது கிடந்து மறுகியது. தமிழரசி தாவனியைச் சரிசெய்தபடி வள்ளி வீட்டைப்பார்த்து ஓடினாள்.
"எலே பொம்பளப்பிள்ளைகளுமா"
"அவுக தா நம்மளவிட அதிகொம்,ஒங்காளு அப்பவே ரெடி"
இனி எட்டுக்குதிர போட்டு மறிச்சாலும் மாரிக்கண்ணனை நிப்பாட்ட முடியாது.கெதிபுடுங்கா வீட்டுக்கு ஓடினான்.
தகரப்பெட்டிக்குள் இருந்த அந்த காப்பிக்கலர்ச் சட்டையை எடுத்தான்.சந்தனக்கலர் பேண்டைத்தேடினான்.கொடியில் தொங்கியது.அழுக்குத்தான் என்றாலும் அது ஒண்ணுதானே பேண்டுன்னு பேருக்கு இருக்கு.
வாசலில் சோத்துப்பானையை கழுவிக்கொண்டிருந்த அம்மா கத்தினாள்.
"ஒரு உப்புக்கல்லுக்குக் கூடப் பெறமாட்டேன்னு தெரியு ஒன்னியபொ போயி புதூருக்கு போகச்சொன்னேனே,எம் புத்தியச்செருப்பால அடிக்கணும்?"
எதிரே நின்ற கன்னிநாயை பக்கத்தில் கிடந்த விறகுக்கட்டையைக் கொண்டு எறிந்தாள்.
"எய்யா என்ன பசி புடுங்குதுன்னு சொன்ன,இப்ப எங்கயோ கலக்டர் வேலைக்கு போற மாதிரி சூட்ட மாட்டிக்கிட்டு நிக்கெ"
"மேலப்புதூருக்கு,ஜெபக்கூட்டத்துக்கு போரன்"
மேலப்புதூரில் சர்ச் கட்டி பிரதிஷ்டைக்கு,மதுரை மெற்றிராசயனப்பேராயர் ஜஸ்டின் திரவியம் வருகிறார்.ஊர்ச்சுவரெல்லாம் போஸ்டர் ஒட்டியிருந்தது.மேலப்புதூரும் சூரங்குடியும் ஒரே பங்கு என்பதால் இங்கிருந்து கூட்டம் கூட்ட சாமியாரின் ஆணைப்படி  முப்பது பிள்ளைகளும் முப்பது பெரியவர்களும் கிளம்பினார்கள்.இவனோட பிரண்டு அந்தோணியின் அய்யாதான் இந்த ஊர் கோயில் கணக்குப்பிள்ளை.
"ஙொப்பன் ஊருக்கெல்லா திண்ணீரு போட்றவரு, நீ போயி சிலுவ போடப்போறியா,
என்ன நடக்கும்னு தெரியும்ல"
ஒண்பதாம் வகுப்புப் படிக்கும்போது ப்ளூபேர்ட் சிகரெட் வாங்கிக்குடித்தது வீட்டுக்குத்தெரிந்து அய்யா ரோட்டில் போட்டு அடித்த அடி இன்னும் வின்வின்னுன்னு தெறித்தது.மய்க்கா நாளு சாத்தூலருந்து ஓலகொட்டான்ல சீனிமுட்டாய் வங்கியாந்து சாராய வாடை மிதக்க வாஞ்சையோடு அடிபட்ட இடத்தை வருடியபடி அழுததும் அய்யாதான். அவர் சாமிகொண்டாடி.காய்ச்சல் தலவலித்தீரலன்னா வந்து திருநீறு வாங்கிட்டு போவாங்க.அவங்களுக்கு ஒரு ஆறுதல் இவருக்குங் கொஞ்சம் நம்பிக்கை.அம்மாசொல்ற மாதிரியெல்லாம் ஒண்ணும் நடக்காதுன்னு தெரியும்.
"எம்மா ஊரே போகுது,அங்கரு எங்க கேங்கே கெளம்பிருச்சு,இதுக்குப்போயி திண்ணீரு சிலுவன்னு மதப்பிரச்சாரமெல்லாம் பண்ற"
ம்க்கும் ஒரு சாமி கொண்டாடி மகனே வேதக்கோயிலுக்கு போனான்னு ஊர்பேசவா,
பேசுனா என்னா,
எலே அவர்தான இப்ப மாரியம்மங்கோயிலு தலைவரு
ஆமா பெரிய்ய மீனாச்சியம்மங் கோயிலு தர்மகர்த்தா,செரி செரி ஒரு அஞ்ச வெட்டு
இந்தார்க்கிற மேலப்புதுருக்கு நடந்து போகத்துட்டு எதுக்கு
காசுப்பிரச்சினை மேலே வந்து மதப்பிரச்சினையை கீழே போனது.
பாதித்தூரம் வந்தவனிடம் சித்தி மகள் ஓடிவந்து, ஏய் எருமமாடு இந்தா பெரிம்மா துட்டுக்குடுத்துவுட்டாங்க

"ஏ அர நாழி,போட்டன்னா, ஆளப்பாரு வருசம் பத்தாச்சு வாய்மட்டுந்தா ரெண்டடிக்கு நீண்டுக்கிட்ருக்கு"

"ஏய் நீ  எதுக்குப் போறன்னு எனக்குத்தெரியும் பெரிய்யாட்டச் சொல்லவா" இவளுக்கெல்லாம் எப்படித்தெரியும் என்கிற சிந்தனையோடு நடந்தான்.

போகிறவழியில் கென்னடி வீட்டில் கொஞ்சம் பவுடர் வாங்கிப் போட்டுக்கொண்டான்.அவுங்காளு மூனுபேரோடு
கடந்து போனது.பின்னாலே போனான்.அப்போது அவளோட சித்தப்பன் எதிரே வரவும் கண்டும் காணாதது போலக்கடந்து போனான்.வேதக்கோயிலின் முன்னாள் ஆணும் பெண்ணுமாக ஒரே கூட்டமாக இருந்தார்கள்.கூட்டத்தோடு கூட்டமாக மூனு நாலு நாய்களும்,கிறுக்கு ரத்தினமும் கலந்து நின்றார்கள்.வேதக்கோயிலின் உச்சி விளக்கு ஒளியில் திருவிழாக்கோலமாக இருந்தது கூட்டம்.இந்தக்கூட்டத்தைப்பார்க்க வந்தவர்கள் இன்னொரு கூட்டமானாகள். பவுடர் வாசனையும் மல்லியப்பூ வாசனையும்  அந்தப் பிரதேசத்தையே ரம்மியமாக்கியது. மல்லிகா யாருக்கோ சடையைச் சரிசெய்து வயில் கேர்பின்னைப் பிளந்து சடைக்குமேல் செருகி பூவைத்துவிட்டாள்.அங்கிருந்து சர்க்கஸ்  ஒளிக்கற்றையைப்போல ஒரு வட்டமடித்து அவளது பார்வை அவனைத்தொட்டது.வேதக்கோயில் கணக்குப்பிள்ளை வந்தார்.பையங்களையும் பெண்களையும் தனித்தனியே பிரிக்கச் சொன்னார்.மொத்தக் கணக்கை எண்ணிச்சொல்லச் சொன்னார். ஒரு சைக்கிள் டயரை ரெண்டாக வெட்டி தீப்பந்தமாக்கினார்கள். இப்போது அந்தப் பிரதேசத்தை ரப்பர் புகையின் வாடை சூழ்ந்து கொண்டது.

ஊர் எல்லை தாண்டுகிற வரை பெரியவர்களின் நடைக்கு ஈடுகொடுத்து மெல்ல வரிசையாய் நடந்தார்கள்.கிழவனார் கோயில் தாண்டியதும் சின்னப்பிள்ளைகள் வேகமாக நடக்க வரிசை கலைந்தது.பெரிய கம்மா வய்க்கால் வழியே ரெண்டு ரெண்டு ஆளா நடக்கனும்.முதலில் போகிற கருப்பசமியிடம் ஒரு பந்தம்.நடுவில் வருகிற கூல்பானையிடம் ஒரு பந்தம் இருந்தது.ஒரு பத்துப்பொழி கடந்தால் வண்டிப்பாதை வந்துவிடும் அப்றம் மொத்தம் மொத்தமாக நடக்க ஆரம்பித்தார்கள்.முன்னாலே நடந்த மாரிக்கண்ணன் நடையை குறைத்து நடுப்பகுதிக்கு வந்துவிட்டான். "ஏய் என்ன மச்சான் கருவாட்டுக் கூடப்பக்கம் பூன வருது" கூல்பானை குசுகுசுத்தான்.கோல்டு பிளேக் பில்டர் சிகரெட் வேண்டாமா" மாரிக் கண்ணனிடம் சிகரெட்டை வாங்கிக்கொண்டு தீப்பந்தத்தைக் கொடுக்கிற சாக்கில் அணைத்துவிட்டு நகர்ந்து விட்டான்.

முதல் தீப்பந்தம் ஒரு அரைபர்லாங் தூரத்தில் கம்மாக்கரை மேலே ஏறுவது தெரிந்தது. மாரிக்கண்ணனின் பக்கம் இருளும் சிரிப்பொலியும் கலந்து கிடந்தது. மல்லிகாவோடு வந்த சின்னப்பொண்ணு முப்பதடி இடைவெளிவிட்டாள். பின்னாள் வெகுதூரத்தில் கணக்குப் பிள்ளையும் ரெண்டு பெரிய பெண்களும் பேசிச் சிரித்துக் கொண்டு வருவது கேட்டது.தேவன் கீதமும் கண்ணன் கீதையும் ஒரு வாய்க்கா வரப்பிலின்று சங்கமம் செம்பட்டை எல்லாருக்கும் கேக்கிற மாதிரி கத்திப்படித்தான்.ஒங்க கூடத் திரியறவங்க எல்லாருமே குசும்பு பிடிச்சவங்க,மல்லிகா பேசிய போது கருவாட்டுக் குழம்பு மணத்தது.பேச்சும் தொடமுயற்சிப்பதும் தொடுவதுமான கிறக்கத்தில் மேலப்புதூர் எல்லை சடுதியில் வந்துவிட்டது.

ஊரெல்லையில் கூட்டத்தை நிறுத்தி வைத்தார்கள் கோயில்பிள்ளை வரும் அவரையில் அவரவர் தங்களது ப்ரியமானவர்களோடு பேசிக்கொண்டிருந்தார்கள்.மாரிக்கண்ணன் மல்லிகாவை விட்டு விலகி நின்றிருந்தான்.ஆளரவமற்ற இருட்டில் தொட்டுக்கொண்ட கதகதப்பும் படபடப்பும் இன்னும் இரண்டு பேரையும் விட்டு நீங்கவில்லை.கோயில்பிள்ளை வந்து விழாவில் எப்படி  நடந்துகொள்ளவேண்டும் என்கிற உபாயங்களைச் சொல்லிக் கொடுத்தார்.
"ஞானஸ்தானம் வாங்குன ஆளுக மட்டும் வரிசையில நின்னு அப்பம் வங்கணும்,மத்தவங்க போகாதீங்க" ஒரு ஓரத்தில் இருந்த விடலைப்பையன்களிடம் இருந்து சிரிப்புச் சத்தம் வந்தது."கசகசன்னு பேசாதீங்க அங்கென்ன சத்தம்,அப்புறம் பூச முடிஞ்சு அன்னதானம் நடக்கும் நம்ம சபைக்காரங்க எல்லா ஒரே பந்தியில ஒக்காந்து சாப்பிடனு

 'இங்கரு பெரியா ஓஞ்சொல்லக்கேட்டு இத்துன தூரம் வந்தாச்சி என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது, இன்னைக்காச்சு அப்பம் வாங்கிக்குடு, இன்னக்கி எவ்வளவு செலவானாலுஞ்சரி,அந்தக் கூர வீட்டக் கிரயம் பண்ணித்தாரன் வக்காலி அதெ ருசி பாக்காம உடப்போறதில்ல' 

கூட்டம் ஓவென்று சிரித்தது,பொம்பளப்பிள்ளைகள் வயித்தைப்பிடித்துக்கொண்டு சத்தம் போட்டுச்சிரித்தார்கள்.அதைச் சொன்ன கன்னியப்பனுக்கு ஒண்ணுமே விளங்கவில்லை.

8.4.10

இடவல பேதமும் ஒரு அர்த்தமுள்ள திண்ணையும்.

திருவிழாக்கூட்டம் போல இருந்தது. சண்டைதான்.ஓசியில் பார்க்கக் கிடைக்கிற நிகழ்கலை இல்லையா.'தெருச்சண்டை கண்ணுக்கு குளிச்சி' எங்கம்மா இப்படிச் சொலவடை சொல்லும். அவன் தான் மாரிமுத்து கையில வேப்பங் கொலயில்லாம ஆடிட்டு இருந்தான். என்ன என்று கேட்டால் அவன் பீச்சாங் கையி என்று சொல்லிவிட்டானாம்.சொன்னால் என்னப்பா ஒனக்கு இடது கைப் பழக்கம்தானே என்று கேட்டால் சொன்ன திலகரை விட்டுவிட்டு என்னோட மல்லுக்கு நின்னான்.'என்ன ரெண்டடி ஆடிச்சிருந்தாக்கூட பொறுத்திடுப்பேன் எப்படிச்சொல்லப்போச்சு' என்று பிராதாகி  விட்டது. ஊர்ச்சனங்களும் கூட அப்படிச் சொன்னது தப்பென்றே அபிப்பிராயப் பட்டார்கள்.

நொட்டாங்கை பழக்கமானாலும் கூட அவனது செயல்களெல்லாம் மிகத்துள்ளியமாக இருக்கும். எழுத்து அச்செழுத்துப்போல இருக்கும்.கிட்டி அடிக்கும் போது எதிரே நின்றால் மூஞ்சப் பேத்துரும்.அப்படி அந்த இடது கை யாருக்கும் இல்லாத வல்லமையை கொடுத்தாலும் அவனே கூட அதை இகழ்வாக எண்ணியிருந்தான்.

அவனென்று இல்லை ஊர்,ஜில்லா,நாடு எல்லாம் அப்படித்தான் மதுரை போகும் பேருந்தில் விருதுநகருக்கு பயணச் சீட்டுக் கேட்டேன் நிற்கமுடியாத கூட்டம் வலதுகையில் கம்பியைப் பிடித்திருந்தேன்.அதனாலே இட்துகையால் கசைக் கொடுத்தேன் கண்டக்டர் அளவுகடந்த கோபமடைந்து விட்டார் என்னா சார் 'படிச்ச ஆள் மாதிரி இருக்கீங்க இடது கயில காசு தறீங்க'.வலது காலை எடுத்து முதல் அடிவைக்க வேண்டுமென்கிற தொன்று தொட்ட ஆச்சாரங்களும் இப்பொழுது கூட மிக நெருக்கமான நபர்களை சங்கர் தான் அவனுக்கு வலது கை மாதிரி என்று சொல்லுவதுண்டு.

இரண்டிரண்டாக இருக்கும் கண்,காது,நாசி போன்ற உறுப்புக்களுக்கு இடது வலது பேதமில்லை.அப்படியிருக்க கைக்கு மட்டும் இட வல பேதம் எப்படி வந்திருக்கும்.இடது கை இழிவான செயலுக்கும், வலது கை உயர்வான
வேலைகளுக்கும் பயண்பாடாவதால் இந்த பேதம் வந்திருக்கலாம். எது எப்படி இருந்தாலும் இழிவும் உயர்வும் நமது உடலுக்குள்ளே தான் இருக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் வழும் பதிவுலக நண்பர் திரு ராம் அவர்கள் ஊருக்கு வந்திருந்தார்கள்.பத்தமடையில் தோழர் தமிழ்செல்வன் வீட்டில் நானும் தோழன் மாதுவும் அவரைச்சந்திக்க நேர்ந்தது. ஒரு முழுப்பகல் தமிழ்ச்செலவனுடைய சமயலையும் பேச்சையும் சேர்த்து ருசிக்கக் கிடைத்த தருணம் அது. உலகமே பார்த்து வியக்கும் குடும்பம் கூட்டுக்குடும்பம் நமது தனிசிறப்பு என்பது தெரியும் ஆனால் ஒரே குடும்பத்துக்குள் இருந்துகொண்டு ஒருவருக்கொருவர் பேச்சு வழக்கில்லாமல் ஒதுங்கி வாழ்வது உலகத்துக்கு மிகப்பெரிய அதிர்ச்சித்தகவல் என்று சொல்லுகிறார்.ஆனால் நமோ 'நா அவங் கூடப்பேச மாட்டேன்' என்று இலகுவாகச் சொல்லிவிடுகிறோம்.மற்ற உறவுகளுக்கு எப்படியோ ?. கணவன் மனைவிக்குள் பேச்சில்லாமல் கழிந்த கொடூர வாழ்க்கை இங்கே கோடிக்கணக்கில் இருக்கும்.அதைக்கூடப் பெருமிதத்தோடு சொல்லும் நமது கௌரவம்.இன்னும் சிசுக்கொலை பற்றி,நீளப்படங்கள் பற்றி,தற்கொலைகள் பற்றி எல்லாம் அவரோடு ஒருநாள் முழுக்கப் பேசிக்கிடந்தோம் நாங்கள்.

உளவியலில் ஆராய்சிப்பட்டம் பெற்று  அங்கே பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் ராம் சொல்லும்போது' ஆதிகாலத்து தாய்மர்கள் குழந்தைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு தங்களுக்கான அன்றாட வேலைகளில் ஈடுபடும்போது குழந்தைக்கு தாயின் அருகாமையை உணர்த்துவதற்காக இதயம் இருக்கும் இடது பக்கம் குழந்தையை அணைத்துக்கொண்டிருக்க வேண்டும். வலது கையினலேயே எல்லாக்காரியங்களும் செய்து அது பழக்கமானது என்று  இடது கைப்பழக்கம் உருவானதன் பூர்வாசிரமம் பற்றிச்சொன்னார். அப்படியானால் ஆண்கள் ?

விலங்குகளோடும்,அதன் பின்னர் மனிதரோடும் சண்டையிட்டுக் கொண்டே காலம் தள்ளிய ஆண், உ யிரின் மையப் புள்ளியான இதயத்தைப் பாதுகாக்க கவசங்களை இடது கையிலும் கல்,வில், வாள் போன்ற கொலைக்கருவிகளை வலது கையிலும் ஏந்தியபடி அலைந்து அலைந்து வலது கைப்பழக்குத்துக்கு ஆளாகியிருக்கிறான் என்று கூறினார்.

ரோமானியர்களே இடது பழக்கத்தை இழிவு பழக்கமாக உலகுக்கு அறிமுகம் செய்தவர்கள்.அவர்களது கத்தோலிக்க மதம் போகிற திசையெல்லாம் இடது கைப்பழக்கத்துக்கு எதிரான மூடக்கருத்துக்களும் கொண்டுசெல்லப்பட்டன. ஜீசஸ் உட்கார்ந்திருப்பது வலது பக்கம் எனவும்,சாத்தான்கள் இட்து பக்கம் எனவும் கற்பிதப்படுத்தப்பட்ட  பைபிள் பரப்புறைகள் உலகம் எங்கும் வியாபித்தது.வலது கைகுலுக்கல்,வணக்கம் சொல்லுதல் போன்ற நடை முறைகளை அறிமுகப்படுத்தியவர்களும் ரோமானியர்களே.

ஆனால் விஞ்ஞானபூர்வமான ஆராய்ச்சிகள் இடது பக்கத்தின் சிறப்பை வெளிக் கொணர்ந்திருக்கிறது. மூளையின் செயல்பாட்டுப்பகுதி,இதயம்  மைந்திருக்கும் பகுதி,அதனோடு தொடர்புடைய உடலுறுப்புக்கள் எல்லாமே இடது பக்கமே அமைந்திருக்கின்றன.

இடது கையில் நான்காவது இருக்கும் மோதிர விரலின் நரம்புகள் நேரடியாக இதயத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறதாம்.வரலாற்றின் மிகச்சிறந்த ஆளுமைகள் எல்லாம் அதிஷ்டவசமாக இடது கைப்பழக்கம் உள்ளவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.இசைமேதை பீத்தோவன்,உலகப்புகழ் பெற்ற ஓவியர்கள் மைக்கேல் ஆஞ்செலோ,லியார்னோடாவின்சி, தத்துவமேதைகள் கொதே,நீட்ஷே. நெப்போலியனும் அவனது மனைவி ஜோசப்பினும் இடது கை ஜோடி, ஜூலியஸ் சீசர் கூட ஒரு இடது கை வீரன். தடகளம்,விளையாட்டுத் துறைகளில் இடது ஆட்டக்காரர்கள் தனித்த இடத்தைப் பிடித்தவர்களாக அறியப்படுகிறார்கள்.

மீறலும்,எதிர்ப்பும்,கட்டமைப்பை எதிர்த்து கலகம்  நடத்துவதும்,அந்நியமும், இருட்டும்,இடது பக்கத்திலிருந்தே வரும்  என்பதே உலகளாவிய நம்பிக்கைகள்.வழி வழியாய் வந்த மத,அரச,முதலாளி நம்பிக்கைகள் வலதென்றும்,அதை எதிர்ப்பது இடதென்றும் பின்னாளைய உலகம் பிரிந்து கொண்டது.பிரஞ்சுப்புரட்சிக்கு முந்தையப் பாராளுமன்றத்தில் கனவான்கள் இடதுபக்கத்திலும்,அறிஞர்கள் வலது பக்கத்திலும் அமர்ந்திருந்தார்களாம்.

   
சொந்த உறுப்புக்களுக்குள் பேதமாகிப் பின்னால்,சொந்த மனிதக் கூட்டத்தில் பேதமாகி,உலகமே இடவல பேதத்தில் இயங்க ஆரம்பித்தது ஒரு பெரும் தேடலுக்கான வரலாறு. மிகப்பெரும் ஆராய்ச்சிக்கும் அதைத் தொடர்ந்து கிடைக்கிற பல அறிய தகவல்களுக்கும் ஊற்றுக்கண்ணான இந்தப்பொருள் குறித்து நிறைய்யப்பேச விவாதிக்க களம் இருக்கிறது.காலம் இல்லை.

6.4.10

அங்காடிக்காரர்களின் நாடு.

நெடுநாளைக்குப் பிறகு குடும்பத்தோடு இரண்டாம் ஆட்டம் பார்த்த அனுபவம் அது. தியேட்டருக்குள் தண்ணீர் முதற்கொண்டு எந்த திண்பண்டங்களும் எடுத்துப்போக தடைசெய்கிற அட்லாப்ஸ் திரையரங்கம்.இடைவேளையில் பட்டர் பன்னும்,கடலைமிட்டாய்,முறுக்கு வாங்கிக்கொண்டு படம் பார்த்த நினைவுகள் வந்தது.மணலைக் குவித்து மேடாக்கி படம் பார்த்த டூரிங் டாக்கீசுகள் தான் திரைப்படத்தை ஒரு அரசியல் கேந்திரமாக மாற்றியது என்பதை நினைவுகூற வேண்டும். இப்போது கூட அந்த அஞ்சலிப்பெண் தியேட்டரில் போய் படம் பாருங்கள் என்று அறிவுறைப்பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறாள். அறுபது ரூபாய் நுழைவுச் சீட்டு வாங்கிக்கொண்டு தும்பா ராக்கெட் தளத்துக்குள் அனுமதிக்கிற மாதிரி உடல்முழுவதும் சோதனைபோட்டு  தியேட்டருக்குள் அனுமதிக்கிறார்கள்.

படம் குறித்த பதிவுகளும் பேச்சும் ஏற்கனவே மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது.அதை எந்த அளவிலும்
குறைக்காத ஒருபடைப்பு அங்காடித்தெரு.இன்னும் அந்த துயரங்களில் இருந்து விடுபடாத படிக்கு சோபியா,செல்வராணி,கனி மூன்றுபேரும் சேர்ந்து 'என்னடா பண்ணிட்ருக்கீங்க' என்று கேட்டு அலைக்கழிக்க வைத்த பாத்திரப்படைப்பு வெற்றியடைந்திருக்கிறது.ஆயிரக்கணக்கான விடலைகள் கால்மாடும் தலைமாடுமாக சிதறிக்கிடக்கிற காட்சி சுனாமியை நினைவுபடுத்துவதாக மாது சொன்னான்.ஆம் அழுகை முட்டிக்கொண்டு வருகிறது.இதுவரை ரங்கநாதன் தெருக்களும்,ஸ்பென்சரும்,மவுண்ட்சாலைகளும்  நாயக நாயகிகள் வந்துபோகும் பாத்திரமாகியிருந்தது.இந்தப்படத்தில் அதில் கால்கடுக்க கஷ்டப்படுகிற கொத்தடிமைகளை நாயக நாயகியாக்கியிருக்கிறது.

கண்ணிலிருந்து நீரைப்பிடுங்கி எடுக்கிற பலகாட்சிகள் அதன் துயரார்ந்த உண்மையால் சாத்தியமாக்கியிருக்கிறது.
காசைச்சுண்டி விடுகிற மாதிரி எதிரியைச் சுண்டிவிட்டு சுழல வைக்கிற சண்டைகள்,வழக்கமான மசாலாக்கள்,
காரம் கூடுதலாப்போட்டு உருவாக்கிய மதுரை அருவாப்பெருமை சொல்லும் மசாலாக் கதைகளில் இருந்து விலகி வந்து புதிய படைப்பை உருவாக்கியதற்காக அங்காடித் தெருவைத் தலையில் வைத்துக் கொண்டாடலாம். இது மாதிரியான சித்திரவதைக் கூடங்களில் மனிதாபிமானமே இல்லாதவர்கள் மட்டுமே இருப்பதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் மனித மனம் அப்படியிருக்க வாய்ப்பே இல்லை.


MONOPOLY RESTRICTED TRADE PRACTICE ACT என்ற ஒரு சட்டம் பழய்ய இந்தியாவில் புழக்கத்தில் இருந்தது.
அதன் மூலம் ஒரு துறையில்,ஒரு உற்பத்தியில்,ஒரு விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் நிறுவணங்கள் அதுதவிர்த்த வேறு உபரி தொழிலில் கால்வைக்க தடை செய்யும் பாதுகாப்பு இருந்தது.உதாரணமாக அப்பல்லோ மருத்துவமனை சிகிச்சை மட்டும் தான் அளிக்கவேண்டும் மருந்து விற்பனை செய்யக்கூட்டாது.சிகரெட் தயாரிக்கும் ஐடிசி,பல்பொடி தயாரிக்கும் ப்ராக்டர் அன் கேம்பிள்,இரும்புக்கம்பிகள் தயாரித்த டாடா,துணிக்கடை வைத்திருந்த அம்பானி,தொலைக்காட்சி நடத்தும் சன்குழுமம் அவரவர் தொழில் மட்டும்தான் பார்க்கவேண்டும்.எதுக்குன்னா அவிங்க வந்து கடைக்கோடி மனிதர்களின் ஜீவாதாரமான சிறுதொழில்களை அபகரித்துவிடுவார்கள். கோடிக்கணக்கான ஏழைகளின் வாழ்வு  பறிபோகும் என்கிற மனிதாபிமானச் சட்டம் அது.அந்தச் சட்டத்தை திரும்பப் பெறும்போது இடதுசாரிக் கட்சிகள் முக்கி முக்கி கத்தினார்கள்.மக்கள் கவனம் அப்போதும் கூட வேறு வேறு திசைகளுக்கு திருப்பிவிடப்பட்டிருந்தது.அந்தச்சட்டம் திரும்ப்பெற்றதிலிருந்து  கலப்பு பொருளாதாரம்,ஜனநாயகம் என்கிற அமைப்பு சன்னம்சன்னமாய் நீர்த்துப்போய் பெயரளவுக்கு மட்டும் நீடிக்க ஒரு கட்டற்ற முதலாளித்துவ நாடாக மாறிக்கொண்டிருக்கிறது இந்தியா.அதில் ஒரு சின்னத்துளி தான் ரங்கநாதன் தெரு.

பிழைப்புக்கு வழியற்ற சுய ஜாதி ஏழைகளின் நிற்கதியைச் சுரண்டுகிற பல்வகைசுரண்டு நிறுவணமாய் வாய் பிளந்து நிற்கும் அங்காடித்தெரு ஒன்று மட்டுமல்ல .டிவிஎஸ்,ஆரெம்கேவி,போத்தீஸ்,சங்கர் சிமெண்ட்,ராம்கோ நிறுவணங்கள் எங்க ஊர் ஜெயவிலாஸ் பேருந்து கம்பெனி எல்லாமே தங்களின் சுயஜாதி ஏழைகளைச் சுரண்டி கொழுத்த முதலைகள் என்பதும் மீனாச்சி மிசின் நம்ம ஆளுக ஆஸ்பத்திரி என்று ஜாதியப் பெருமையை விசிறிவிட்டு வர்க்க முரண்பாடுகளை காயடிப்பதற்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் ஜாதி ஒரு கவட்டையாய் மட்டும் நீடிக்கிறது. அதில் ஜாதிச் சங்கங்களுக்கு தலைமை வகிக்கிற புனிதமான கலைத்துறையும் விதிவிலக்கல்ல.

முதலாளிகள் லாபவெறி வயப்பட்டவர்கள் அதற்காக எதையும் உபயோகப்படுத்துவார்கள் எதையும் சந்தைப்படுத்துவார்கள்.இந்தப்படத்தில் அண்ணாச்சி என்கிற ஒரு முதலாளிமேல் கோபம் முழுக்க திருப்பிவிடப் பட்டிருக்கிறது.அந்தக்கோபம் ஏனைய முதலாளிகள் மேலும் திரும்புமா என்பதற்கு பதில் மௌனமாக இருக்கிறது அதனால் தான்,இந்தப்படம் பார்த்துவிட்டு சென்னை நகர தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ரங்கநாதன் தெருவுக்கு ரெய்டுக்கு போய் பதினைந்து கொத்தடிமைகளை விடுதலை செய்தார்கள் என்று ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.உலகம் முழுக்க பிரசித்திபெற்ற சரவணா ஸ்டோ ர் உள்ளூர் அதிகாரிகளுக்கு இதுவரை தெரியாமல் போனது பற்றி நினைத்தால் வேதனையும் சிரிப்பும் ஒரு சேரவருகிறது.

3.4.10

விடுதலையின் ஒத்திகை.

விளையாட்டைப் போலவே நடிப்பிலும் எந்த இடத்தைத்தேர்வு செய்யவேண்டும் என்பதில் எல்லாருக்கும் மிகுந்த குழப்பம் வரும். ஆனால் வாத்தியார்களுக்கு அதிலெல்லாம் குழப்பமிருக்காது. அது தான் நாடகவாத்தியார் சங்கரலிங்கம் அவரை சாக்சன் துரை வேசத்தில் போட்டார். சக்கரையண்ணனுக்கு கட்டைக்குரல், நாலு கட்டைக்குமேல் ஏறினால் தகரத்தைத் தரையில் போட்டு இழுத்தது போலொரு சத்தம் வரும். வசனமும்தெளிவாக உச்சரிக்கவராது. வாத்தியாருக்குநெருங்கின சொந்தக்காரராகிப் போனதால் அவரை  நடிக்கவைக்க வேண்டிய நிர்ப்பந்தம் வாத்தியாருக்கு ஏற்பட்டது. அதுவுமில்லாமல் ஊருக்கு வந்தநேரம் எல்லாம் சக்கரையண்ணன் வீட்டில் தான் சாப்பாடு. செஞ்சோற்றுக்கடன்  கட்டபொம்மன் வேசத்தை குரிவைத்து சப்புக் கொட்டிக் கொண்டிருந்தவருக்கு சாக்சன் துரையின் பாத்திரம் கொடுத்தார். மத்த வேசக்காரர்களுக்கு ரெண்டு நாள் ஆகிற ஒத்திகை சாக்சன் துரைக்கு மட்டும் ஒம்பது நாள் பிடிக்கும். பொங்கலும் நெரு நெருன்னு நெருங்கிக்கொண்டிருந்தது. 'அடுத்த பொங்கலுக்காவது ரெடியாகுமா சக்கரையண்ணே'  என்று விசனப்பட்டு கேலிசொல்வார் வாத்தியார்.  சாக்சன் ஆள் கருப்பு,  ஒரு கால் ஒச்சம் சவக்கு சவக்குன்னு நடந்து கொண்டு

அண்டமெல்லாம் கிடு கிடுக்கத்  தண்டோ ராக் குடுப்பனே
ஆண்மை பேசும் துஷ்டர்களைச் சப்ஜெயிலில் அடைப்பேனே

என்று அவர் மேடையில் கிந்திக் கிந்தி நடக்கும் போது சனம் கழுக் கழுக்கென்று சிரிக்கும், பக்கத்தில் சாக்சன் துரையின் சம்சாரம் இருக்குதான்னு பாத்துவிட்டு, 'துரையவுக கரிச்சட்டிக்குள்ள இருந்து வாறாரா' என்று கேலி பேசுவார்கள்.
சோத்துக்குத் தண்ணி ஊத்தி வைக்க, அழுத பிள்ளையைத்தொட்டிலில் போட பெண்கள் எழுந்து போய்விடுவார்கள். அதனாலேயே நாடக வாத்தியாருக்கு பெரும் மனக்கஷ்டம் வரும். சாக்சன் துரை வரும்போதெல்லாம் சனங்களிடம் கோபம் வருவதற்குப்பதிலாக சிரிப்பு வருவதை   பார்க்கச் சகிக்கமுடியாது. அந்தநேரத்தை ரெண்டுகிளாஸ் சாராயம் ஏத்திக்கொண்டு கத்திரிச் சீரெட்டுப் பத்தவைத்துக்கொண்டு  மாரியம்மா வீட்டுக்குப் போவதற்கு ஒதுக்கிவிடுவார். ஆனால் கட்டபொம்மானாக வரும் கருப்பசாமியின் மீசையும் உயரமும், அளவெடுத்து செய்ததுபோலிருக்கும்.

எட்டுத்திசையும் எழுகடல் சீமையும்
வெட்டிச் ஜெயம் கொண்டான் கட்டபொம்மு,
கட்டபொம்மன் என்று பேரு சொன்னால்
காடை பதுங்குமாம் கதுவாளி முட்டை கருக்கலங்குமாம்

என்று எட்டுக்கட்டையில் பாடும்போது மைக்கில்லாமல் பக்கத்தூருக்கும் கேக்கும். சங்கீத ஞானமில்லாத கருப்பசாமி, அதை சரளி யெடுத்து பாடக்கேட்கும்போது அருக்கே பொறாமையாயிருக்கும். ஆனால் அவருக்கும் ஒரு கண் மாறுகண். சாக்சன் துரையைப் பார்த்து வசனம் பேசினால்  வாத்தியக்கோஷ்டியைப் பார்த்துப் பேசுவது போலிருக்கும்.
அது போலவே ஆட்டுக்கார சின்னத்தம்பியின் குரல் கனீர்க் குரல் வெங்கலக் கும்பாவைத் தட்டி விட்டநீண்ட நேரத்துக்குபின்னும் ஓசை வருவது போலொரு குரல். முகம் மட்டும் கொஞ்சம் நீண்டிருக்கும், அது எத்துப்பல்லால் வந்துசேர்ந்த அழகு. சின்னப்பிராயத்தில் விரல் சூப்புகிற எல்லார்க்கும் எத்துப்பல் தான். தாய்ப்பாலும் சோறும் தட்டுப்பாடான குடும்பத்துப் பிள்ளைகளுக்கு பெருவிரல் தான் பசியடக்கும் கருவி. அந்த ஆடுமேய்க்கிற சின்னத்தம்பிக்கு நடிக்க வந்த பிறகு ஒரு சேகரம் வந்து சேர்ந்தது. பேச்சியப்ப பிள்ளையின் மனைவி கோமதியம்மாளுக்கு பாட்டுன்னா கிறுக்கு, பிள்ளைக்கோ யாரும் ராகம் போட்டுப்பேசினாலும் பொறுக்காது. பிள்ளையவுகளின் பம்புசெட்டுப்பக்கம் ஆடு பத்திவரும் நடு மத்தியான நேரம் சின்னத்தம்பிக்கும் கோமதியம்பாளுக்கும் சங்கீதமாகக்கழியும். தெக்குதெரு குருசாமிக்கு பொட்டிப்பகடை வேசம். கோத்திரம் அறிந்து பாத்திரம். அந்த வேசம் கதைப்படி ரெண்டு சீன் மட்டும் வருவதால். குருசாமியை கோமாளி வேசத்துக்கு ஒதுக்கி வைத்துக்கொண்டார் நாடக வாத்தியார். மேடை நாடக வழக்கப்படி கோமாளி வேசங்கட்டுகிற ஆள் நாடகத்தை  '' வந்தேனே '' என்று பாடி  துவக்கி வைக்கவேண்டும்.

     சீட்டி அடிக்காதீக துண்டுச் சீட்டெழுதிக் குடுக்கதீக
     சிலுவை இழுக்காதீக ஊருச்  சண்டையாக்கி பாக்காதீக
     பாட்டக்கெடுக்காதீக சினிமாப்பாட்டுப் பாடச்சொல்லாதீக
     கொட்டாயில ஓட்டபோட்டு குருகுருன்னு பக்கதீக

 இப்படி நாடகம் பார்ப்பவர்களுக்கான நடத்தை விதிகளை நையாண்டியோடு பாடவேண்டும். அவர் தான் வரவேற்புறை, நன்றியுரை எல்லாம் ,  சொல்லுவார்.  கடைசியாய்ச்சாப்பிட்ட கறிக் குழம்பிலிருந்து காலையில் வாங்கப்போகிற சம்பளம் வரை நன்றிக்குரியவர்களின் பட்டியலில் இடம்பெறும். ராஜபார்ட், ஸ்ரீபார்ட் நடிகர்கள் வரத்தாமதமானால் அந்த நேரத்தை ஈடு கட்ட, நாடகம் போரடிக்கிற இடத்தில் ரெண்டு சினிமாப்பாட்டுப் பாடி, ரெட்டை அர்த்த வசனம் பேசி உற்சாகப்படுத்தவேண்டிய பெரும் பொறுப்பு அவர் தலை மேலேற்றப்படும். அவரும் எல்லா வித்தையையும் படித்திருந்தும் ஏதுமறியாக் கோமாளிகிவிடுவார்.  அவரவர்க்கான வசனத்தையும், பாட்டையும் மனப்பாடமாக்கி  அதில் மெருகூட்ட பயிற்சி பண்ணிக்கொண்டிருப்பார்கள்.  குருசாமி மாத்திரம் எல்லா வேசத்துக்கான சங்கதிகளையும் தெரிந்து வைத்திருப்பார். களத்து வேலை முடிந்து பம்புசெட்டில் குளித்து திரும்புகிற தனிமையில் ஈரவேட்டியை தலைக்குமேல் பறக்கவிட்டபடி,

கொண்டையங்கோட்டையாம் மறவர்குலம் நான்
கோடையிடி போன்ற பாதர் வெள்ளை

இதை மூன்று தினுசான ராகத்தில் பாடுவார். அந்த பாட்டுப்பாடும்போது அவர்  முகம் இறுக்கமாகும். குருசாமிதான் முதலில் வெள்ளையத்தேவன் வேசத்துக்கு தேர்வானார். முதல் மூணு மாசம்  ராத்திரி நேரங்களில் மேலத் தெருமடத்தைப் பூட்டிக்கொண்டு பாடம் நடக்கும். மங்கலான குண்டு பல்பு வெளிச்சத்தில் பாட்டுக்களும் வசனங்களும் சொல்லிக்கொடுக்கிற சங்கரலிங்க வாத்தியார் வேர்த்து வடிய வடிய அங்கும் இங்கும் அலைவார். தனியொரு மனிதனாக சுதந்திர வெப்பத்தை ஊதி ஊதி தீயாக மாற்றுவார். அவர் கண்ணும் குரலும் சுற்றியிருப்போர் ரத்தத்தை சூடேற்றுகிற ஆம்ப்ளிபயராக மாறும். ஜன்னல் துவாரத்து வழியாக சிறுசும் பெருசும் வேடிக்கை பார்க்கும். உள்ளே விடாத கோபத்தில் கதவை டமாரென்று தட்டுவார்கள். காவக்கார வள்ளிமுத்து கம்பெடுத்துக்கொண்டு விரட்ட எல்லோரும் ஓடிப்போவார்கள். ஊரில் காட்டுவேலையின் போதும், பொதுக்கிணத்திலும், ஓடைப்பக்கமும் இந்தப்பேச்சாகவே இருந்தது.

'' குருசாமி எண்ணமாப்பாடுறாம் பாரு ''

ஆணும் பெண்ணும் ஆச்சரியப்பட்டார்கள். குருசாமி போகிற இடமெல்லாம் ஒரு மரியாதையும் சலுகையும் கூட வந்தது. மூணு மாசம் போனபின்னொரு நாள் ஊர்த்தலைவர், நாடக வாத்தியாரிடம் ஒரு விண்ணப்பம் வைத்தார்.
'' ஊர்ச்சணங்களுக்கு முன்னாள் ஒரு நாளைக்கு ஒத்திகை பாக்கலாமுல்ல வாத்தியாரையா''
பொங்கல் வந்தால் தான் கரகாட்டம் நாடகம் ஓசிச்சினிமா எல்லாம். பொங்கலுக்கின்னும் ஒம்பது மாசமிருக்கு.
சனம் பொழுது போகாமல் தெருச்சண்டை தேடி அலைந்து கொண்டிருந்தது. அதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான் ஊர்த்தலைவர் அப்படிச்சொன்னார்.

நாள் குறித்து அரிதாரச்சாமான்கள், மைக்செட், தாக சாந்தி இப்படிச்செலவுகளை ஊர்ப்பணத்திலேயே ஏற்றுக்கொள்ள ஏற்பாடாகியிருந்தது. ஸ்ரீபார்ட், டான்ஸ் காமிக்ஸ், வெள்ளையம்மாள் வேசத்துக்கு மதுரையிலிருந்து ஆள் கொண்டு வரவேண்டும். அது இப்போதைக்கு கட்டுபடியாது. பிரதானக்கதைக்கான வேசக்காரர்களோடு நாடகம் ஆரம்பமானது.
குருசாமியின் வேசப்பொருத்தமும், கிறக்குகிற குரலும் ராஜ பார்ட்டைக் கூடத்தூக்கி சாப்பிட்டது. குருசாமி வரும்போதெல்லாம் விசில் சத்தம் பறந்தது. கூட்டத்து மூளையில் ஓரமாக குருசாமியின் குடும்பமும், அவர் தெருக் கூட்டமும்  
பூரிச்சுப்போய் நின்றிருந்தார்கள். பாதர் வெள்ளைக்கும், கும்பெனித்துரைக்கும் தர்க்கம் நடக்கிறப்போது வார்த்தைகள் தடிக்கும், வசனங்களில் தீப்பறக்கும்
'' அடே வெள்ளைக்கார நாயே மன்னரின் மடியில் கைவைத்த உன் தலை துண்டு துண்டாகட்டும் '' சொல்லிக்கொண்டு குருசாமி  வாளை உறுவினார். கூட்டத்துக்குள் சல சலப்பு வந்தது. கூட்டம் குபீரென்று எழுந்தது.
'' இன்னைக்கும் சிலுவையிழுத்துட்டாங்களா, நாலு குடிகாரப்பயக இருந்துக்கிட்டு ஒரு நாளும் ஒழுங்கா கூத்துப்பாக்க உடமாட்டுக்கானுகளே''
ஊர்த்தலைவர் வேட்டியைத்திரைத்துக்கொண்டு கூட்டத்தை விலக்கிக்கொண்டு நடந்தார்.      
அவர் நினைத்துப்போன பழரசம் சின்னக்காளி, கள்ளுமுட்டி ராவணன் யாரும் அங்கே இல்லை.
சாக்சன் துரை வீட்டாளுகளும், சொந்தக்காரர்களும், சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்கள்.
'' யாரப்பாத்து யாரு நாயேன்னு கேக்குறது, யோவ் ரோசங்கெட்ட மனுசா நீரு நொட்டுனது போதும்,
கீழ இறங்கி வாரும் ''
சாக்சனின் மனைவி பேயாட்டம் ஆடினாள். குருசாமியைத் தூஷனமாகத் திட்டினாள்.
நடிப்புக்குத்தானம்மா நெசத்துக்கா சொல்லிட்டாரு அவரு
கூட்டத்துக்குள் யாரோ சொல்ல
''என்ன மசுத்துக்கும் சொல்லப்பிடாது, யாரு யாரப்பாத்து நாயேன்னு கேக்குறது ''
செத்த மாடு திங்கிற சின்னச்சாதிப்பய போடா வாடான்னு கேக்குறான்''
ஒத்திகை நாடகம் பாதியிலே நின்றுபோனது. ஊரின் சந்து பொந்து மூலை முடுக்கெல்லாம் குருசாமிக்கு எதிராகவும் ஆதரவாகவும் பேச்சு நடந்தது. நாடக வாத்தியாருக்கு கிறுக்குப் பிடித்தது போலாகியது. ரவ்வும் பகலும் குடித்துக்கொண்டே இருந்தார். ஒரு நாள் மதுரைக்கு வண்டியேறி அவரது வாத்தியார் வீட்டுக்குப் போனார். ரெண்டு பேரும் இரவு மொட்டை மாடியில் உட்கார்ந்து சாமம் வரை பேசினார்கள். திரும்ப வந்து , சாக்சனையும், குருசாமியையும் உட்காரவைத்து சமாதானம் பேசினார்கள். குருசாமி வெள்ளையத்தேவனுக்கான வசனம் பாட்டு எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு,பொட்டிப் பகடைக்கான வசனங்களை மனப்பாடம் செய்ய ஆரம்பித்துவிட்டார். அந்தா இந்தாவெனப் பொங்கலும் வந்தது. தெருவில் வேப்பங்குலை தொங்கியது. நையாண்டி மேளமும், தினையிடிப்பும், தூசிபடிந்த ஆட்டுரல் சுத்தம் செய்யப்பட்டு பொங்கல் களைகட்டியது. கரிநாளுக்கு நாடகம் அரங்கேரியது.

   பெத்தன்னா நுவ் ராரா பெருமாளன்ன நுவ்வு ராரா
   ஒரே, ரண்டரா ரண்டா மன மஹாராஜா பிளிசேதி ரண்டரா ரண்ட 
 
கோமாளியாகவும், எடுபிடியாகவும் சிங்கிடிசிங்கிடியென்று ஆடும்போது செட்டுக்குள்ளே வேசம்போட்டுக்கொண்டிருந்த எல்லாரும் ஓரப்படுதாவில் ஒளிந்து கொண்டு, பார்த்தார்கள். சாகசன்  மட்டும் வரவில்லை.

குருசாமி சிரிப்பு மாறாமல்.

அதாகப்பட்டது, ஏதோ அவசரா ஜோலியாக மஹாராஜா அழைத்தததானால், நாமெல்லாரும் களத்து வெலைகளைப்போட்டுவிட்டு அரண்மனை நோக்கி செல்லக்கடவது

எதுக்கு அங்கயும் போயி  கருது அடிக்கவா ?

ஒத்திகைநோட்டில் இல்லாத, இட்டுக்கட்டிய அந்த வசனம் தவிர்த்த கூட்டத்தைச் சிரிக்க வைத்தது. சங்கரலிங்க வாத்தியார் கூனிக்குறுகிப்போய் உட்கார்ந்திருந்தார்.

2.4.10

தேவை வரிவடிவங்களில் இருக்கும் சட்டங்களல்ல - கட்டாயக்கல்வி

நாடு முழுவதும், உள்ள 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட, பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே விட்டு விட்டு தெருவுக்கு வந்த, குழந்தைகளுக்கு கட்டாயக்கல்வி அளிக்க, உத்திரவாதப்படுத்தும் சட்டம் இன்று 01.04.2010 முதல் அமலுக்கு வருகிறதாம்.இந்த சட்டம் அமலாவதினால் நாடு முழுவதிலுமுள்ள சுமார் ஒரு கோடி இடைநின்ற சிறார்கள் பயனடைவார்களாம்.இந்த சட்டத்தின் பல்வேறு முக்கிய அம்சங்களை நாட்டுமக்களுக்கு விளக்கிச்சொல்லப்போவது யார்தெரியுமா சாட்சாத் நமது பிரதம மந்திரி டாக்டர் மன்மோகன் சிங் தான்.

இப்படித்தான் ஊடகங்கள் செய்திகளை பரப்பிவிடுகிறார்கள். கட்டாயக்கல்வி என்ற பெயரில் இப்பொழுதுதான் சட்டமாக்கப்பட்டாலும் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக புழக்கத்தில் இருந்து வரும் முயற்சி அல்லது பாவனை இது.1978 தொடங்கி 82 வரையில் முறைசாரக்கல்வி என்ற பெயரிலும் முதியோர் கல்வி என்ற பெயரிலும் இது நடைமுறையில் இருந்த போது இதில் கௌரவச்சன்மானம் வாங்கிக்கொண்டு நானே வத்தியாராக இருந்திருக்கிறேன். அப்போது ஐம்பது ரூபாய்.இதற்கான ஆதாரங்கள் தேடி நாம் வேறெங்கும் அலைய வேண்டாம் முந்தானை முடிச்சு திரைப்படத்தில் நடிகைதீபா முதியோர்களுக்கு கல்வி சொல்லிக் கொடுக்கிற வாத்தியாராக வருவார்.இப்போதும் குழந்தை தொழிலாளர் ஒழிப்புக் கல்வி மையங்களென நடு முழுவதும் தொண்டு நிறுவணங்களுக்கு விற்று விட்டது அரசு.அவர்களுக்கு இப்போது கொடுக்கப்படுகிற சன்மானம் ரூபாய் ஆயிரத்து ஐநூறு.கிட்டத்தட்ட ரெகுலர் கல்வித்திட்டத்துக்காகும் செலவுக்கு ஈடாக நிதி ஒதுக்குகிற இதில் ஆசிரியர்களுக்கு கிடைப்பது வெறும் எச்சக்காசு மட்டும் தான். மிச்சமிருக்கிற எல்லாம் வேறு வேறு பெயர்களில் அரசும் தொண்டு நிறுவணங்களும் இணைந்து சுருட்டிக்கொள்கிறது.

இந்த நிமிடம் வரை வளர்ந்துவரும் கல்வி இடைநிறுத்த சதவீதத்தை இடைநிறுத்த முடியாத கையாலாகாத திட்டங்களைப்பெயர் மாற்றி பெயர் மாற்றி கொள்ளையடிக்க கஜானாவைத் திறந்து வைக்கிறது அரசு.ஹோட்டல்களில்,பெட்டிக்கடைகளில்,சைக்கிள் கடைகளில்,மெக்கானிக் செட்டுகளில்,தீப்பெட்டி ஆலைகளில்,சின்னச்சின்ன தொழில் நிறுவணங்களில் அளவுக்கு மீறிய சட்டையை மாட்டிக்கொண்டு, வயதுக்கு மீறிய பொறுப்பைத் தலையில் சுமக்கும் சிறார்களெல்லாம் யார் ?.

இயற்கை சீற்றத்தால் உரவினரை இழந்த குழந்தைகள்,
ஜாதி,மத மோதல்களில் வாழ்விழந்த குடும்பத்து குழந்தைகள்,
இன்னும் பண்ணையடிமை முறையும்,ஜாதிய குரூரங்களும் தக்கவைத்திருக்கிற கிராமத்துக்குழந்தைகள்,
போரில் நாசமடைந்த பகுதியில் எஞ்சியிருக்கும் வஞ்சிக்கப்பட்டவர்கள்,
போதையில் வீட்டை அழித்த ஆண்களின் வாரிசுகள்,
வழிவழியாய் விபச்சாரத்துக்கு தள்ளப்பட்ட கீழ்ஜாதி பெண்களின் குழந்தைகள்,

இப்படியே பட்டியலை நீட்டிக்கொண்டு போகிறது குழந்தை தொழிலாளர் குறித்து விசனப்படுகிற சர்வதேச ஆணையம்.இந்தப் பட்டியலில் உள்ள போர்க் கைதிகளின் அல்லது அகதிமுகாம்களின் குழந்தைகள் என்ற ஒரு பிரிவை நீக்கி விட்டுப்பார்த்தால் மிச்சமுள்ள எல்லாம் இந்தியாவுக்குப் பொருந்தும் அம்சங்கள்.ஆம் உலக குழந்தைத்தொழிலாளர்களில் கிட்டத்தட்ட அறுபது சதவீதத்துக்கு மேலே ஆசியாவில் தான் இருக்கிறார்கள் அப்படியென்றால் இந்தியாவில் கிட்டத்தட்ட ஐம்பது சதம் இருக்கலாம். இன்னும் கணக்கெடுப்புகளின் எல்லைக்குள் வராத கிராம,மலை மக்களையும் சேர்த்தால் இந்தியா எங்கோ போய்விடும்.

சக்கைபோடு போட்டு டெல்லி மனிதவள மேம்பாட்டுத் துறையிலும்,மாநில அரசிடமும் பததக்கங்கள் பல வாங்கிக்குவித்த தொண்டு நிறுவணம்.ஒரு வருடத்தில் சுமார் 250 நாட்கள் trining, meetting, discussion என்று ஆசிரியர்களை அலைக்கழித்தது.எனக்கு அப்போது இதென்ன நடைமுறை வருசம் முழுவது பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தால் எப்போது அதைச் சொல்லிக்கொடுப்பது என்று.இப்போது தான் தெரிகிறது ஒதுக்கப்பட்ட நிதியில் முக்கால் பகுதி பயிற்சிகளுக்கே ஒதுக்கி விட்டார்கள்.மாதம் நூறு ரூபாய் ஸ்டைபண்டும் மதியசாப்பாடும் போடமுடியாமல் நின்று போனது.கல்வி கிடைத்து எஞ்சினியராகாவிட்டாலும்,குவிந்து கிடக்கும் கருப்பு வரிகளை எழுத்தாக அறியவேண்டும் என்கிற பசியிலும்,இழிவில்லாமல் ஒரு வேலைச்சோறுகிடக்கும் என்கிற எக்கத்துடனும் குழந்தைத்தொழிலாளர் பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர்கள்  தங்கள் குழந்தைகளோடு வீதிக்கு வருகிறார்கள்.ஏற்கெனவே தெருவில் அலைந்த அந்த குழந்தைகளின் மனோநிலை அல்லது அவர்களது காப்பாளர்களின் மனோ நிலை என்னவாக இருக்கும்.