14.4.10

ஒரு ஊர்சுற்றியின் புராணம் - ராகுலசங்கிருத்தியான்.


வாழ்க்கையில் முதன்முதலாய் திருச்செந்தூர் போயிருந்த ரெண்டு சம்சாரிகள் 'இங்கரும் மச்சா ஊர்ல கெளம்பம்போது ஒரு சொட்டு மழையில்ல இங்கப்பாத்தா தண்ணி கெத்து கெத்துன்னு கெடக்கு, ராத்திரி பூரா நல்ல குடுப்பு குடுத்திருக்கும்போல' என்று தங்கள் அறியாமையை மழைமேல் போட்ட பலியாக்கினார்களாம்.ஆனால் ஊருக்கு வந்து ஓயாமல் கடல்புராணம்தான் பேசினார்களாம்.

ஊரைத் தாண்டாத மனிதர்களை கிணற்றுத் தவளைகள் என்று சபிக்கிறது பயணங்களின் கர்வம்.பயணங்கள் புதிய மண்ணின் வாசத்தை,புதிய புதிய காற்றின் தாலாட்டை,மனிதர்களை  அறிமுகப் படுத்துகிறது. நிலம், மொழி,சமூகம்,ஜாதி என்றுஉயர்ந்து நிற்கும் தாண்ட முடியாத  சுவர்களை கடந்து பயணித்தவர்களே வரலாற்றில் அழுத்தமாகிப்பதிந்து போன ஆளுமைகளாக ஆகிறார்கள். அப்படி தன் வாழ்நள் முழுக்க இலக்கற்ற தேடலோடு பயணமான மாமனிதன் ராகுல சங்கிருத்தியான்.

ராகுல்ஜி என்றழைக்கப்படும் அந்தப்பெயர் இந்திய இலக்கியத்தில்,சமூக அரசியலில்,மத நம்பிக்கைகளில்,சுதந்திரப்போராட்டத்தில் ஒரு பெரும் அதிர்வை விட்டுச்சென்ற பெயர்.ஐந்து மொழிகளில் 125 படைப்புகளை இந்த உலகத்துக்கு அற்பணித்திருக்கிற ராகுல்ஜியை ஒரு எழுத்தாளர்,ஒரு சிந்தனையாளன்,அரசியல்வாதி,மதபோதகன் என்கிற எந்தக் குடுவைக்குள்ளும் அடைக்கமுடியாத படி திமிறித் திமிறி வெளியேறிய மகான் அவர்.

1893 ஆம் ஆண்டு பிறந்த அவர் ஒரு மதரசா பள்ளிக்கு உருது எண்களைப்படிக்க அனுப்பி வைக்கப்பட்டார்.சம்ஸ்கிருதம்,உருது,பார்சி ஆகிய மூன்று மொழிகளை மட்டும் முறைப்படிக் கற்றுக்கொண்டார்.ஆனால் தனது சொந்த முயற்சியால் உலகின் முப்பது மொழிகளைக் கற்றுக்கொண்டார். பத்தாவது வயதில் ,1903 ஆம் ஆண்டு ரகசியமாய் வீட்டை விட்டு வெளியேறி பனாரசுக்குப் போனவர் பிறகு, வீடு திரும்பவே இல்லை எனும் அளவுக்கு ஊர்சுற்றியவர்.ஆரிய சமாஜத்தில் சேர்ந்து சமஸ்கிருதம் படிக்கப்போன அவர் தனது பெயரை பாபா ராம் உதார் தாஸ் என மாற்றிக்கொண்டார்.ஆன்மாவைத் தேடி சாதுக்களோடு இமயமலையின் இண்டு இடுக்குகளுக்குளெல்லாம் அலைந்தார். அலைச்சலில் மிஞ்சியது கஞ்சாப் பழக்கமும் அடர்ந்த புகையும்தான் .அங்கிருந்து வெறுங்கையோடு திரும்பி வந்தார். பனாரசுக்கு வந்து சக்ரபாணி பிரம்மச்சாரிக்கு சீடாராகி புத்த மதத்தில் சேர்ந்தார்.அங்கிருந்து நேபாளம்,ஸ்ரீலங்கா,திபெத் நாடுகளுக்குப்போய் பாலி மொழிமூலமாக பௌத்தமதத்தில் திரிபதக் ஆச்சாரியா என்னும் பட்டமும் பட்டயமும் பெற்றார்.கிடைத்த பட்டயம் அவரை லமாசுக்கு அழைத்தது. லமாசில் இருந்து ஐரொப்பிய நாடுகள் ஒவ்வொன்றாக அலைய ஆரம்பித்தார்.அப்போதுதான் அவரை பொதுவுடமைத் தத்துவம் ஈர்த்தது அதில் ஈர்க்கப்பட்டு சோவியத் யூனியனுக்குப்போனார். அங்கிருந்து  இந்தியா திரும்பிவந்து  தீவிர சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.சுதந்திரக் கருத்துக்களை எழுதியதற்காக ஆறுமாதம் சிறையிலடைக்கப்பட்டார்.1939 ஆண்டு தன்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக்கிக் கொண்டார்.ஒன்பதே வருடங்களில் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

13 ஆம் நூற்றாண்டில் பக்தியார் கில்ஜியால் எறிக்கப்பட்ட  நலாந்தா பல்கலைக்கழகத்தில் இருந்து காப்பாற்றப்பட்டு ரகசியமாக நாடுகடத்தப்பட்ட இந்திய தத்துவங்கள் திபெத்தில் இருப்பதாகக்கேள்விப்பட்டு காஷ்மிர்,கார்கில் வழியாக திபெத்துக்கு கால்நடையாய் நடந்து சேர்ந்தார்.அங்கிருக்கும் புத்த மடாலயத்துக்கு உள்ளே நுழைய தன்னை பிக்குவாக்கிக்கொண்டார். இறுதியில் தேடிப்போன பொக்கிஷங்களைக் கண்டு பிடித்தார்.கையில் கிடைத்த சந்தோஷம் படிக்கக் கிடைக்கவில்லை. காரணம் அது போத் மொழியில் தான் இருந்தது. தளராத ராகுல்ஜி திபெத்திய போத் மொழியை இல்லகண சுத்தமாகக் கற்றுக்கொண்டார்.இப்படி ஓவ்வொரு தேடலின் போதும் ஓவ்வொரு புது மொழி அவருக்குப் பரிசாய்க் கிடைத்தது. ஏன் தமிழ் மொழி கூட.

அவரிடம் குவிந்து கிடந்த உலக மொழிகளின் புலமையால் பல்வேறு நாடுகள் அவரை கையேந்தி அழைத்தது.1948 ஆம் ஆண்டு ஹிந்தி சாஹித்ய சம்மேளனுக்காக பேராசிரியர்.வரலாற்றாளர் பிரபாகரனோடு இணைந்து 16000
ஆங்கில வர்த்தைகளை ஹிந்திக்கு மொழிபெயர்த்தார்.அப்போது அவசரக்காரன்,நேர்த்தியில்லாதவன்,அரைவேக்காடு என்று சமகாலத்தவரால் விமர்சனம் செய்யப்பட்டார். அதற்குப்பதிலாக 'எதுவும் நிலையற்றது,ஒவ்வொன்றும் மாறக்கூடியது' என்னும் புத்தரின் பொன்மொழியையும்.'எதுவும் இறுதியானதில்லை' என்கிற லெனினின் வார்த்தைகளையும் சிரிப்புமாறாமல் சொன்னாரம் ராகுல்ஜி.

முதலாளித்துவத்தின் முகவர் என்று மகாத்மா காந்தியை அவர் வாழும் காலத்திலேயே பரிகசித்தவர் ராகுல்ஜி.ஒரு நாள் நெடு நெடுவென சலம்பூர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்து சுதந்திரப்போராட்டத்தில் நான் என்னை இணைத்துக் கொள்கிறேன். பரசாவிலிருந்து நான் என் வேலைகளைத்தொடங்குகிறேன் என்று சொன்னாராம். நிராகரிக்கப் பட்டதை பலிகொடுக்கப்பட்ட விலங்கு மாமிசத்தையும், மதுவையும் மேண்மை தங்கிய சீடர்கள் கடவுளின் மனிதனுக்கு அனுமதிக்கவில்லை என்று கேலியாகக் குறிப்பிடுகிறார். பரசா மடத்துக்கு வந்த இந்திய அரசின் தொல்லியல்துறை புகைப்படக் கலைஞர்கள் கங்குலி மற்றும் பிந்திதாஸ் இருவரின் மேல் ஈர்ப்புக்கொண்டு பின்னாளில் ராகுல்ஜியும் ஒரு புகைப்படக்கலைஞனாக மாறினாராம்.ஒழுங்கு செய்யப்பட்ட வீடு உறவு,கல்வி,வேலை,மதம்,அரசியல்,எல்லாவற்றிலிருந்தும் வெளியேறிய ராஹுல்ஜி மூன்று திருமணங்கள் முடித்திருந்தார்.
போதையையும் கற்றுக்கொண்ட அவர் அதற்கும் கூட அடிமையாகாமல் விட்டு விடுதலையான சிட்டுக் குருவி.

பல்வேறு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட வால்காவிலிருந்து கங்கை வரை என்கிற புத்தகம் இந்த தேசத்தின் அரிய சொத்துக்களில் ஒன்று.கிமு 6000 தொடங்கி இந்தியாவில் சுதந்திரப்போராட்டம் ஊச்சத்திலிருந்த, வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்துகொண்டிருந்த, 1942 ஆம் ஆண்டு முடிவடையும் இந்த சரித்திரப்,புதினம். யுரேசியாவில் இருக்கும் வால்கா நதிக்கரையில்  வசித்த ஆரியர்கள் இடம்பெயர்ந்து சிந்து கங்கைச் சமவெளிகளை ஆக்ரமிக்கும் இந்த வரலாற்றுப் புதினம் தமிழில் தோழர் கே.என்.முத்தையாவால் மொழிபெயர்க்கப்பட்டது.
தமிழ்புத்தகாலயம் வெளியிட்ட அது சிறந்த விற்பனைப் பரிசைத் தட்டிச் சென்றது. எழுபது எண்பதுகளில் தென்னிந்திய மொழியில் உள்ள அணைத்து கல்வியாளர்களாலும் கொண்டாடப்பட்ட அறிவுச் சுரங்கமாகக் கருதப்பட்ட வால்காவிலிருந்து  கங்கை வரை  புத்தகம் படிக்கிற போது பல கேள்விகள் தானகவே விடைபெறும்.   

'குத்ரை கா நதி ஜா பி நவ்ஜிந்தா பஜிந்தா' என்கிற பதம் அவர் எழுதிய படைப்புக்களில் பெரும்பான்மையாக திரும்பத் திரும்ப வரும். ஆரம்பப் பள்ளியில் உருது மொழி படிக்கும் போது கதையில் கிடைத்த இந்த வாக்கியம்  அவரை  ஒரு இடத்தில்  நிற்கவிடாமல் விரட்டிக்கொண்டே இருந்தது என்று தனது சுய சரிதையில் எழுதுகிறார். ஒரிடத்திலே கிடப்பது அறியாமை, எழுந்து பரந்த உலகம் முழுவதும் பயணி.பயணம் செய்ய இன்னொரு பிறப்பு கட்டாயம்  கிடைக்காது. வாழும் காலம் நீடித்தால் கூட இப்போதிருக்கும் இளமை  திரும்பவராது.

இன்னும் நிறையத் தேடவும்  பயணிக்கவும் தூண்டு கோலாக இருக்கிற ராகுல்ஜியின் நினைவுநாள் இன்று. ராகுல்ஜியோடு  புத்தமதத்துக்கு இருந்த உறவு புத்தமதத்தோடு புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கருக்கும் இருந்தது. பெரியாரைத்தேடும் போது எப்படி அம்பேத்கர் தட்டுப்படுவாரோ அதேபோல அம்பேத்கரைத் தேடும்போது ராகுல்ஜி தட்டுப்படுவார். கடவுள் மறுப்பை மடாலயங்களின் மையப்பகுதியிலிருந்து உரக்கச் சொன்னவர் ராகுல்ஜி.அவர் அம்பேத்கரின் மானசீகக்குருக்களில் முதல்வர். இன்று அம்பேத்கரின் பிறந்தநாளும் கூட.


4 comments:

நேசமித்ரன் said...

மிக்க நன்றி காமு சார்

என் வாழ்வின் மிக முக்கிய திருப்பம் நான் 15 வருடங்களுக்கு முன் ராகுல்ஜி யை வாசித்தது .இப்பதிவு அவருக்கான நினைவு கூறலாகவும் நண்பர்கள் அறியவும் மிக உதவியாக இருக்கும்

Unknown said...

//ஒரிடத்திலே கிடப்பது அறியாமை, எழுந்து பரந்த உலகம் முழுவதும் பயணி.பயணம் செய்ய இன்னொரு பிறப்பு கட்டாயம் கிடைக்காது. வாழும் காலம் நீடித்தால் கூட இப்போதிருக்கும் இளமை திரும்பவராது\\

சத்தியமான வார்த்தைகள்
நல்லதொரு பதிவு

veligalukkuappaal said...

கும் அதையே பரிந்துரைக்கின்றேன். கூடவே சாங்கிருத்தியாயனின் ஊர்சுற்றி புராணம், ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள், கிறித்துவ தத்துவயியல், இந்து தத்துவயியல், புத்த தத்துவயியல்... என அனைத்து சமயங்களின் தத்துவங்களையும் பொருள்முதல்வாத, இயக்கவியல் தத்துவ அடிப்படையில் பார்க்கின்ற அற்புதமான ஆழ்ந்த படைப்புக்களையும்... ராகுல்ஜியின் புகழ் அவர் எழுத்துக்களின் வடிவத்தில் பல நூறாண்டுகள் நீடித்து நிலைக்கும்...
இக்பால்

veligalukkuappaal said...

வால்கா முதல் கங்கை வரை... அநேகமாக 1981இல் இந்த அரும்பெரும் பொக்கிசத்தை படித்தேன். 1979 , 1980 காலகட்டத்தில் இடதுசாரி இலக்கியங்கள், சோவியத் நூல்களை வாசிக்க ஆரம்பித்தேன். பொருள்முதல்வாதம், இயக்கவியல், சோசலிசம் ... போன்ற சொற்களை கற்க ஆரம்பித்த காலம். எப்படியிருந்தாலும் உலகம் குறித்த, இந்தியா குறித்த பார்வையை மாற்றியது வால்கா முதல்...தான் என்பதை அடித்து சொல்வேன். மிக எளிய நடையில் அதை மொழிபெயர்த்த முத்தையா அவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும். அநேகமாக (தமிழில்) முப்பது பதிப்புக்களுக்கும் மேலாக மறுபதிப்பு செய்யப்பட்ட மிகச்சில நூல்களில் வால்காவும்... ஒன்று. என்னை சந்திக்கும் வாசிப்பு ஆர்வமுள்ள நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும் நான் முதலில் வாசிக்க பரிந்துரைக்கும் நூல் அநேகமாக வால்கா...வாகத்தான் இதுவரை இருந்துள்ளது. நமது ப்ளாக் நண்பர்களுக்கும் அதையே பரிந்துரைக்கின்றேன். கூடவே சாங்கிருத்தியாயனின் ஊர்சுற்றி புராணம், ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள், கிறித்துவ தத்துவயியல், இந்து தத்துவயியல், புத்த தத்துவயியல்... என அனைத்து சமயங்களின் தத்துவங்களையும் பொருள்முதல்வாத, இயக்கவியல் தத்துவ அடிப்படையில் பார்க்கின்ற அற்புதமான ஆழ்ந்த படைப்புக்களையும்... ராகுல்ஜியின் புகழ் அவர் எழுத்துக்களின் வடிவத்தில் பல நூறாண்டுகள் நீடித்து நிலைக்கும்...
இக்பால்