26.4.10

எளவட்ட வெத்திலை ஒரு ஆதிப் பொதுச் சமூகத்தின் மிச்சச் சடங்கு

கல்யாணங்கட்டிக்கிட்டு மறுவீடு வரும் உள்ளூர் பெண்கள், ஊர்வாசலிலே மறிக்கப்படுவார்கள்.எளவட்டங்களெல்லாம் ஓட்டமும் நடையுமாக பெண்ணையும் மாப்பிளையையும் கிண்டலடிப்பார்கள்.' இவ்ளோ முடிவச்சிருக்காரு,எக்கா ஒனக்கு சடப்போடவே ரெண்டாளு வேணுமே மச்சானுக்கு யாரு போடுவா?'.அவள் தலை கவிழ்த்திக்கொள்வாள்.கூட வந்த பெண்ணின் தகப்பன் கெஞ்சுவார்

'எலே வுடுங்கடா வீட்டுக்குப்போயி வாங்கித்தந்திர்ரேன்'
'அந்தப் பேச்சே பேசாத கெழவா,இந்த நிமிஷமே வந்தாகனும் '
தயவுதாட்சண்யம் இல்லாமல் பயலுகள் சண்டைக்குப் போவார்கள்.

மாப்பிள்ளையும் இது ரொம்ப வில்லங்கமான ஊரோ என்று கொஞ்ச நேரம் ஆடிப்போவார்.

பரிசம் போட்டுக் கூப்பிட்டுக் கொண்டு போகும் போது பெரியவர்களுக்கு மரியதை செய்ய, வெத்திலை பாக்கு கொடுப்பது போல. கல்யாணமகி ஊர் திரும்பும் பெண்கள், உள்ளூர் எளந்தாரிகளைச் சரிக்கட்ட "எளவட்ட வெத்தலை"
தந்தே ஆக வேண்டும்.தராமல் வம்பு பண்ணிய கோசலையக்காவை ஊருக்குள் ஒரு மணிநேரம் விடவில்லை. அப்புறம் ஊர்ப் பொருசு வந்து ரெண்டு பக்கமும் சத்தம்போட்டு.

'எப்பா ஒரு கட்டு வெத்தலையும் நூறு கொட்டப்பாக்கும் என்ன லட்ச ரூவாயா,சரியான கிருசு கெட்ட பெயலா இருக்கியே'.
'கையில காசில்ல'
அதானா பாத்தன் இந்தா வாங்கிக்குடு, எப்பா பொண்ணுமாப்ளய ஊருக்குள்ள விடுங்க, அங்கரு மாப்ளக்காரங்,கண்ணுல தண்ணி வந்திரும் போல'.

அவர்பாட்டுக்குல சொல்லிட்டு வெடுக் வெடுக்கினு நடந்து போவார்.ஒரு கட்டு வெத்தலையும் மீனுக்குப் பொறி போட்டது போல கண்ணு மூடி முழிக்கறதுக்குள்ள அடிபட்டுப் போகும்.அந்த வெத்திலை பரிமாற்றத்தில் தொங்கலு தொடுக்கலு சரிபட்டுப் போகும்.வெத்திலை வாங்க வராத செல்லச்சாமிக்கு நெஞ்சுக்குழிக்குள் நினைப்புக்கிடந்து உருளும்.

அதே கோசலை தலப்பிரசவத்துக்கு ஊருக்கு வந்திருந்த போது நடு ராத்திரி இடுப்புவலி கண்டுக்கிடுச்சி,ஊர் மருத்துவச்சி மூக்கம்மாக்கெழவி மூணு மனிநேரம் மல்லுக் கட்டிப்பார்த்தாள். பிள்ள தல சுத்தலனுட்டு வெளியே வந்தாள்.கோசலையின் அப்பன் ரங்கசாமி தலையை கவுட்டுக்குள்ளே போட்டுக்கிட்டு மருகிப்போய்கிடந்தான்.

'என்ன செய்ய கெழவி,
ம்ம் டவுனாஸ்பத்திரிதான்,வெரசலா கொண்டுக்கிட்டு போப்பா'

சொல்லிவிட்டு நடையைக்கட்டினாள்.அந்த நடு இரவு ரங்கசாமிக்கு நடுக்கம் கொடுத்தது.

எளவட்டங்களெல்லாம் சேர்ந்து ஆளுக்கொரு வேலையாய் பகிர்ந்தார்கள். ரெண்டுபேர் சைக்கிளெடுத்துப் போய்பம்புசெட் குருசாமியை எழுப்பி  ட்ராக்ட்ரைக்கொண்டு வந்தார்கள்,ரங்கசாமியின் ஒண்ணுவிட்ட அண்ணனிடம் போய் கைச்செலவுக்கு காசு வாங்கிக்கொண்டார்கள்.நாலு பெண்களை அள்ளிப் போட்டுக்கொண்டு சாத்தூர் ரங்க நாயகி ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு காலை எட்டு மணிக்கு ட்ராக்டரோடும், பொண்ணு பொறந்திருக்கு என்கிற சேதியோடும் ஆரஞ்சுமிட்டாயோடும் திரும்பிவந்தார்கள்.

10 comments:

ஈரோடு கதிர் said...

ஊரில் ஒரு நல்லதுகெட்டதுன்னா எளவட்டம் செய்யுற வேலை நெகிழ்ச்சியான ஒன்று

வானம்பாடிகள் said...

கி.ரா. எழுதி படிச்சா மாதிரி இருக்கு சார்:). காலையில இப்படி படிக்கறப்ப மனசுல ஏதோ ஒரு கனம் குறையுது. நன்றி

kashyapan said...

காமராஜ் பதிவு அருமைதான்.ந்த வருசம்வே நடந்தது.எங்க ஊருல எப்படி தெரியுமா? மலர்மன்னன் வீட்டு வாசலிலே தி.மு.க இளைஞரணி நிக்கிது.மதிவண்ணண் வீட்டு வா சலிலே அ.தி.மு.க இளைஞரணி நிக்கிது.இவிங்கசண்டையை நிறுத்தவே உயிரை விடுதோம்வே.....காஸ்யபன்.

சந்தனமுல்லை said...

சுவாரசியமான இடுகை...இப்படி ஒரு சடங்கை இன்றுதான் தெரிந்துக்கொண்டேன்! :-)

அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு.. said...

வட்டார பேச்சு... களைகட்டுது

அன்புடன் அருணா said...

ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு மாதிரி...வாசப்படி பணம்னு கூடச் சொல்வாங்களே அதானே இது?

LK said...

parthirukken. oru sila idatthula mappillai mandapathul nulyarappave kaasu taranum

padma said...

படிக்க படிக்க ஆனந்தம்

அங்கரு

அங்க பாரு தானே ? படிக்கவே அழகா இருக்கு
நன்றி காமராஜ் சார்

seemangani said...

ஊரில் உள்ள குறும்பான பாசமான என்னை போல எளவட்ட பசங்களின் உணர்வுகளை அழகாய் பகிர்ந்து விடீர்கள் அண்ணே...வாழ்த்துகள்..

வி.பாலகுமார் said...

கிராமத்துக் காத்து சுகமா வீசுது.