9.4.10

ஜீவ அப்பமும் கொஞ்சம் கெட்டிச்சட்டினியும்

தமிழ்மணத்தில் எனக்காக வாக்களித்த              
அந்த 5 நண்பர்கள் யாரெனத்தெரியவில்லை. 
அவர்களுக்கு என் சிறப்பு நன்றிகள்.
 ---------------------------------------------------------------


"யாரெல்லாம் போறீக"                                        
"மணி,தங்கராசு,கென்னடி,மாரியப்பன்,செம்பட்ட,கூல்பான,அந்தோணி எல்லாருந்தா,நீ வல்லியா சட்டமாத்தல ?"
கிட்டத்தட்ட அவன் சேக்காலிகள் எல்லோருடைய பட்டியலும் முடிந்தது.இவன் மட்டும்தான் பாக்கி.அம்மயிட்ட கேட்டா கொடமானங் குடுப்பாளே என்று மனது கிடந்து மறுகியது. தமிழரசி தாவனியைச் சரிசெய்தபடி வள்ளி வீட்டைப்பார்த்து ஓடினாள்.
"எலே பொம்பளப்பிள்ளைகளுமா"
"அவுக தா நம்மளவிட அதிகொம்,ஒங்காளு அப்பவே ரெடி"
இனி எட்டுக்குதிர போட்டு மறிச்சாலும் மாரிக்கண்ணனை நிப்பாட்ட முடியாது.கெதிபுடுங்கா வீட்டுக்கு ஓடினான்.
தகரப்பெட்டிக்குள் இருந்த அந்த காப்பிக்கலர்ச் சட்டையை எடுத்தான்.சந்தனக்கலர் பேண்டைத்தேடினான்.கொடியில் தொங்கியது.அழுக்குத்தான் என்றாலும் அது ஒண்ணுதானே பேண்டுன்னு பேருக்கு இருக்கு.
வாசலில் சோத்துப்பானையை கழுவிக்கொண்டிருந்த அம்மா கத்தினாள்.
"ஒரு உப்புக்கல்லுக்குக் கூடப் பெறமாட்டேன்னு தெரியு ஒன்னியபொ போயி புதூருக்கு போகச்சொன்னேனே,எம் புத்தியச்செருப்பால அடிக்கணும்?"
எதிரே நின்ற கன்னிநாயை பக்கத்தில் கிடந்த விறகுக்கட்டையைக் கொண்டு எறிந்தாள்.
"எய்யா என்ன பசி புடுங்குதுன்னு சொன்ன,இப்ப எங்கயோ கலக்டர் வேலைக்கு போற மாதிரி சூட்ட மாட்டிக்கிட்டு நிக்கெ"
"மேலப்புதூருக்கு,ஜெபக்கூட்டத்துக்கு போரன்"
மேலப்புதூரில் சர்ச் கட்டி பிரதிஷ்டைக்கு,மதுரை மெற்றிராசயனப்பேராயர் ஜஸ்டின் திரவியம் வருகிறார்.ஊர்ச்சுவரெல்லாம் போஸ்டர் ஒட்டியிருந்தது.மேலப்புதூரும் சூரங்குடியும் ஒரே பங்கு என்பதால் இங்கிருந்து கூட்டம் கூட்ட சாமியாரின் ஆணைப்படி  முப்பது பிள்ளைகளும் முப்பது பெரியவர்களும் கிளம்பினார்கள்.இவனோட பிரண்டு அந்தோணியின் அய்யாதான் இந்த ஊர் கோயில் கணக்குப்பிள்ளை.
"ஙொப்பன் ஊருக்கெல்லா திண்ணீரு போட்றவரு, நீ போயி சிலுவ போடப்போறியா,
என்ன நடக்கும்னு தெரியும்ல"
ஒண்பதாம் வகுப்புப் படிக்கும்போது ப்ளூபேர்ட் சிகரெட் வாங்கிக்குடித்தது வீட்டுக்குத்தெரிந்து அய்யா ரோட்டில் போட்டு அடித்த அடி இன்னும் வின்வின்னுன்னு தெறித்தது.மய்க்கா நாளு சாத்தூலருந்து ஓலகொட்டான்ல சீனிமுட்டாய் வங்கியாந்து சாராய வாடை மிதக்க வாஞ்சையோடு அடிபட்ட இடத்தை வருடியபடி அழுததும் அய்யாதான். அவர் சாமிகொண்டாடி.காய்ச்சல் தலவலித்தீரலன்னா வந்து திருநீறு வாங்கிட்டு போவாங்க.அவங்களுக்கு ஒரு ஆறுதல் இவருக்குங் கொஞ்சம் நம்பிக்கை.அம்மாசொல்ற மாதிரியெல்லாம் ஒண்ணும் நடக்காதுன்னு தெரியும்.
"எம்மா ஊரே போகுது,அங்கரு எங்க கேங்கே கெளம்பிருச்சு,இதுக்குப்போயி திண்ணீரு சிலுவன்னு மதப்பிரச்சாரமெல்லாம் பண்ற"
ம்க்கும் ஒரு சாமி கொண்டாடி மகனே வேதக்கோயிலுக்கு போனான்னு ஊர்பேசவா,
பேசுனா என்னா,
எலே அவர்தான இப்ப மாரியம்மங்கோயிலு தலைவரு
ஆமா பெரிய்ய மீனாச்சியம்மங் கோயிலு தர்மகர்த்தா,செரி செரி ஒரு அஞ்ச வெட்டு
இந்தார்க்கிற மேலப்புதுருக்கு நடந்து போகத்துட்டு எதுக்கு
காசுப்பிரச்சினை மேலே வந்து மதப்பிரச்சினையை கீழே போனது.
பாதித்தூரம் வந்தவனிடம் சித்தி மகள் ஓடிவந்து, ஏய் எருமமாடு இந்தா பெரிம்மா துட்டுக்குடுத்துவுட்டாங்க

"ஏ அர நாழி,போட்டன்னா, ஆளப்பாரு வருசம் பத்தாச்சு வாய்மட்டுந்தா ரெண்டடிக்கு நீண்டுக்கிட்ருக்கு"

"ஏய் நீ  எதுக்குப் போறன்னு எனக்குத்தெரியும் பெரிய்யாட்டச் சொல்லவா" இவளுக்கெல்லாம் எப்படித்தெரியும் என்கிற சிந்தனையோடு நடந்தான்.

போகிறவழியில் கென்னடி வீட்டில் கொஞ்சம் பவுடர் வாங்கிப் போட்டுக்கொண்டான்.அவுங்காளு மூனுபேரோடு
கடந்து போனது.பின்னாலே போனான்.அப்போது அவளோட சித்தப்பன் எதிரே வரவும் கண்டும் காணாதது போலக்கடந்து போனான்.வேதக்கோயிலின் முன்னாள் ஆணும் பெண்ணுமாக ஒரே கூட்டமாக இருந்தார்கள்.கூட்டத்தோடு கூட்டமாக மூனு நாலு நாய்களும்,கிறுக்கு ரத்தினமும் கலந்து நின்றார்கள்.வேதக்கோயிலின் உச்சி விளக்கு ஒளியில் திருவிழாக்கோலமாக இருந்தது கூட்டம்.இந்தக்கூட்டத்தைப்பார்க்க வந்தவர்கள் இன்னொரு கூட்டமானாகள். பவுடர் வாசனையும் மல்லியப்பூ வாசனையும்  அந்தப் பிரதேசத்தையே ரம்மியமாக்கியது. மல்லிகா யாருக்கோ சடையைச் சரிசெய்து வயில் கேர்பின்னைப் பிளந்து சடைக்குமேல் செருகி பூவைத்துவிட்டாள்.அங்கிருந்து சர்க்கஸ்  ஒளிக்கற்றையைப்போல ஒரு வட்டமடித்து அவளது பார்வை அவனைத்தொட்டது.வேதக்கோயில் கணக்குப்பிள்ளை வந்தார்.பையங்களையும் பெண்களையும் தனித்தனியே பிரிக்கச் சொன்னார்.மொத்தக் கணக்கை எண்ணிச்சொல்லச் சொன்னார். ஒரு சைக்கிள் டயரை ரெண்டாக வெட்டி தீப்பந்தமாக்கினார்கள். இப்போது அந்தப் பிரதேசத்தை ரப்பர் புகையின் வாடை சூழ்ந்து கொண்டது.

ஊர் எல்லை தாண்டுகிற வரை பெரியவர்களின் நடைக்கு ஈடுகொடுத்து மெல்ல வரிசையாய் நடந்தார்கள்.கிழவனார் கோயில் தாண்டியதும் சின்னப்பிள்ளைகள் வேகமாக நடக்க வரிசை கலைந்தது.பெரிய கம்மா வய்க்கால் வழியே ரெண்டு ரெண்டு ஆளா நடக்கனும்.முதலில் போகிற கருப்பசமியிடம் ஒரு பந்தம்.நடுவில் வருகிற கூல்பானையிடம் ஒரு பந்தம் இருந்தது.ஒரு பத்துப்பொழி கடந்தால் வண்டிப்பாதை வந்துவிடும் அப்றம் மொத்தம் மொத்தமாக நடக்க ஆரம்பித்தார்கள்.முன்னாலே நடந்த மாரிக்கண்ணன் நடையை குறைத்து நடுப்பகுதிக்கு வந்துவிட்டான். "ஏய் என்ன மச்சான் கருவாட்டுக் கூடப்பக்கம் பூன வருது" கூல்பானை குசுகுசுத்தான்.கோல்டு பிளேக் பில்டர் சிகரெட் வேண்டாமா" மாரிக் கண்ணனிடம் சிகரெட்டை வாங்கிக்கொண்டு தீப்பந்தத்தைக் கொடுக்கிற சாக்கில் அணைத்துவிட்டு நகர்ந்து விட்டான்.

முதல் தீப்பந்தம் ஒரு அரைபர்லாங் தூரத்தில் கம்மாக்கரை மேலே ஏறுவது தெரிந்தது. மாரிக்கண்ணனின் பக்கம் இருளும் சிரிப்பொலியும் கலந்து கிடந்தது. மல்லிகாவோடு வந்த சின்னப்பொண்ணு முப்பதடி இடைவெளிவிட்டாள். பின்னாள் வெகுதூரத்தில் கணக்குப் பிள்ளையும் ரெண்டு பெரிய பெண்களும் பேசிச் சிரித்துக் கொண்டு வருவது கேட்டது.தேவன் கீதமும் கண்ணன் கீதையும் ஒரு வாய்க்கா வரப்பிலின்று சங்கமம் செம்பட்டை எல்லாருக்கும் கேக்கிற மாதிரி கத்திப்படித்தான்.ஒங்க கூடத் திரியறவங்க எல்லாருமே குசும்பு பிடிச்சவங்க,மல்லிகா பேசிய போது கருவாட்டுக் குழம்பு மணத்தது.பேச்சும் தொடமுயற்சிப்பதும் தொடுவதுமான கிறக்கத்தில் மேலப்புதூர் எல்லை சடுதியில் வந்துவிட்டது.

ஊரெல்லையில் கூட்டத்தை நிறுத்தி வைத்தார்கள் கோயில்பிள்ளை வரும் அவரையில் அவரவர் தங்களது ப்ரியமானவர்களோடு பேசிக்கொண்டிருந்தார்கள்.மாரிக்கண்ணன் மல்லிகாவை விட்டு விலகி நின்றிருந்தான்.ஆளரவமற்ற இருட்டில் தொட்டுக்கொண்ட கதகதப்பும் படபடப்பும் இன்னும் இரண்டு பேரையும் விட்டு நீங்கவில்லை.கோயில்பிள்ளை வந்து விழாவில் எப்படி  நடந்துகொள்ளவேண்டும் என்கிற உபாயங்களைச் சொல்லிக் கொடுத்தார்.
"ஞானஸ்தானம் வாங்குன ஆளுக மட்டும் வரிசையில நின்னு அப்பம் வங்கணும்,மத்தவங்க போகாதீங்க" ஒரு ஓரத்தில் இருந்த விடலைப்பையன்களிடம் இருந்து சிரிப்புச் சத்தம் வந்தது."கசகசன்னு பேசாதீங்க அங்கென்ன சத்தம்,அப்புறம் பூச முடிஞ்சு அன்னதானம் நடக்கும் நம்ம சபைக்காரங்க எல்லா ஒரே பந்தியில ஒக்காந்து சாப்பிடனு

 'இங்கரு பெரியா ஓஞ்சொல்லக்கேட்டு இத்துன தூரம் வந்தாச்சி என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது, இன்னைக்காச்சு அப்பம் வாங்கிக்குடு, இன்னக்கி எவ்வளவு செலவானாலுஞ்சரி,அந்தக் கூர வீட்டக் கிரயம் பண்ணித்தாரன் வக்காலி அதெ ருசி பாக்காம உடப்போறதில்ல' 

கூட்டம் ஓவென்று சிரித்தது,பொம்பளப்பிள்ளைகள் வயித்தைப்பிடித்துக்கொண்டு சத்தம் போட்டுச்சிரித்தார்கள்.அதைச் சொன்ன கன்னியப்பனுக்கு ஒண்ணுமே விளங்கவில்லை.

34 comments:

குலவுசனப்பிரியன் said...

படித்தால் கூடவே நடந்து வந்தாற்போல ஒரு ஒட்டுதல்.
//தேவன் கீதமும் கண்ணன் கீதையும் ஒரு வாய்க்கா வரப்பிலின்று சங்கமம்//
ரசித்தேன்.

துளசி கோபால் said...

தூள்:-))))))))))))

சந்தனமுல்லை said...

மிகவும் ரசித்தேன் அண்ணா..ஏதோ நானும் கூடவே இருந்து பார்த்த உணர்வு..:-)

அமைதிச்சாரல் said...

//தேவன் கீதமும் கண்ணன் கீதையும் ஒரு வாய்க்கா வரப்பிலின்று சங்கமம் //

கிராமத்துக்குறும்பு.. அழகு..கூடவே நடந்து வந்த உணர்வு,திருப்தி.

ராகவன் said...

அன்பு காமராஜ்,

அழகான சிறுகதை... ரங்கராட்டினம் மாதிரி சுத்தி விரியும் நடை காமராஜ்... வித்தை காட்டுறீங்க... எவ்வளவு சிரிச்சேன் தெரியுமா... இடையிடையே தொட்டு பரவும் சின்ன சின்ன விடலைகளின் உரசல்கள், பேச்சும் தொடமுயற்சிப்பதும் தொடுவதுமான கிறக்கத்தில் மேலப்புதூர் எல்லை சடுதியில் வந்துவிட்டது. மாரிக்கண்ணன் மல்லிகாவை விட்டு விலகி நின்றிருந்தான்.ஆளரவமற்ற இருட்டில் தொட்டுக்கொண்ட கதகதப்பும் படபடப்பும் இன்னும் இரண்டு பேரையும் விட்டு நீங்கவில்லை. இது போல திருவிழாவில் பட்டும் படாமல், தொட்டும் தொடாமலும் எதிர்சேவையும், மீனாக்ஷி திருக்கல்யாணமும் எனக்கும் என் பிரிய தோழிக்கும் நேரங்களை உறைந்து போக வைத்திருக்கிறது... ரெட்டை ஜடையும் ரோஸ் கலர் ரிப்பனுமாய் கிறங்க வைக்கும் அவளின் சிரிப்பில் இன்னும் என் பால்யம் தோய்ந்து கிடக்கிறது. கல்யாணம் ஆகும் வரை எனக்கும் கிறித்துவர்கள் எல்லாம் வேதக்காரர்கள், வேதக்கோவில் தான். மதுரை டவுன் ஹால் ரோட்டில் இருக்கும் ரோசரி சர்ச் மாத்திரமே எனக்கு அறிமுகம். அதுவும் தேவி ஒரு கிறித்துவரை கல்யாணம் செய்து கொண்ட போது தான். அலங்காநல்லூர் அருகில் இருக்கும் மரியம்மாள்குளம், முன்னால் அது ஜாதீய ஆதிக்கத்தில் இருந்தபோது, அந்த ஊரின் பேர் ரெட்டியபட்டி அதன் பிறகு மதம் வந்த போது, அரசு ஆணையில் ஊர்ர்காரர்களின் வேண்டுதலின் படி மரியம்மாள்குளம் என்று ஆனது. அழகான சின்ன கிராமம், இருபக்கங்களும் வயல்களும், புதிதாய் கட்டிய அழகான கத்தோலிக்க திருச்சபையும், அந்த கிராமத்திற்கே அழகை கொண்டு சேர்த்தது... கிறித்துவ ரெட்டியாரை திருமணம் செய்து கொண்ட தேவியும், தேவி மரியாள் ஆனாள்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் ஒரு தெருவின் பேர் மாதாங்கோவில் தெரு, எங்க சொந்தகாரர் ஒருத்தர் கிறித்துவ பெண்ணை கல்யாணம் செய்து கொண்டதால் எங்க ஆராய்ச்சிபட்டி தெருவே அவர்களை தள்ளிவைத்தது, சமூக நாட்டாண்மை சோலைமலை ஆசாரி தான் தீர்ப்பு சொன்னார், வக்கீல் குமாஸ்த்த வேலைபார்ப்பவர் இந்த இடத்தில் நீதிபதியை ஆகிவிடுவார். அவர் பையன் ஒரு நாயக்கர் வீட்டு பொண்ணை கல்யாணம் செய்துட்டு வந்த போது என்ன செய்றதுன்னு தெரியாம அழுது புலம்பி அப்புறமா சேத்துக்கிட்டார். இப்படியான அறிமுகங்கள் தான் எனக்கு, வேதகொவிளுக்கு திருவிருந்தில் அளிக்கப்படும் பிரியாணிக்கு போகிற பசங்க சொல்வாங்க அப்பத்தை பத்தியும், திராட்சை ரசத்தை பற்றியும், நாக்கில் தடவி விடும் மதுவும், பிட்டு கொடுக்கும் அப்பமும் அப்போது அவர்கள் வந்து சொல்லும்போது அது தரும் சுவாரஸ்யம், இப்போ அதை அனுபவிக்கும் போது பெரிதாய் தெரியவில்லை. கல்யாணத்திற்கு பிறகு என்னை முக்கி ஞானஸ்தானம் செய்த நாளில் இருந்து கிறித்துவம் என் வீட்டுக்குள் இருக்கிறது கிறித்துவின் படத்தை போல. நல்ல வேலை யாரும் நாட்டாண்மை இல்லை இப்போது, தள்ளி வைக்கபடாமல் இன்னும் இருக்கிறேன் உறவுகள் மத்தியில் சிலுவையும், பூணுலையும் சுமந்து கொண்டு...
காற்றில்லாத அறையில் நின்று சுழலும் புகை மாதிரி சுழன்று ஏதேதோ வடிவத்தில் மிதக்கிறது இந்த பின்னூட்டம்.

அன்புடன்
ராகவன்

சுந்தரா said...

பள்ளிக்காலமும் பழைய ஞாபகங்களும் சேர, நானும் சிரித்துக்கொண்டிருக்கிறேன் :)

அன்புடன் அருணா said...

இங்கே வந்தால் எப்பவும் ரெண்டு பதிவு படிக்கக் கிடைப்பது ஒரு வரம்....ஒன்று உங்களுடையதும், மற்றொன்று ராகவனுடையதுவும்!
சிரிப்பு அள்ளிக் கொண்டு போனது!

க.பாலாசி said...

நான் என்னத்தை சொல்ல... ராகவன் அவர்களின் பின்னூட்டத்தைவிட வேறெதுவும் சொல்வதற்குமில்லை....

//மய்க்கா நாளு//

இந்த வார்த்தையை கேட்டுத்தான் எத்தனை நாளாகிறது... இதன் எழுத்து வடிவத்தினை இப்போதுதான் பார்க்கிறேன்.

தங்கள் எழுத்துடன் பயணிப்பதில் அருமையான உணர்வு ஒட்டிக்கொண்டே வருகிறது.......

உயிரோடை said...

நல்ல பகிர்வு அண்ணா

ஆடுமாடு said...

வேதக்கோயில்.

பேரைக்கேட்கும் போதே நினைவுகளும் வந்துவிடுகிறது.

சர்ச்சில் திருட்டுத்தனமாக, அப்பம் வாங்கிய பாவத்திற்கு இன்னும் யேசுபிரான் ரட்சிக்கவில்லை. நண்பர்கள் காட்டிய பயம் இன்னும் அப்படியே இருக்கிறது.

மற்றொரு சம்பவம், ஒரு இளைஞனின் காதல், வேதக்கோயில் திருவிழாவில் முட்கிரிடம் சுமந்தது தனிக் தனிக்கதை.

இந்தக் கதையில் சில இடங்களில் சிரித்தேன்.

துள்ளியோடும் உங்கள் மொழி நடையில் சுவாரஸ்யமாக பயணிக்க முடிகிறது.

வாழ்த்துகள்.

Sethu said...

முதல் முதலாக அமெரிக்கா வந்த பொது சுற்றி இருப்பவர்கள் பேசும் பாஷையை புரியாமல் சிறிது விட்டு வந்த காலம் உண்டு. இப்பொழுது இந்த பதிவின் வட்டாரத்து தமிழ் மொழியின் தாக்கத்தைப் பார்க்கும் பொது நாம் அறிந்த தமிழ் மொழியே நமக்கு அன்னியமாக தெரியும் போது வெட்கமாக இருக்கிறது. உண்மையில் சில வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியவில்லை. மன்னிக்கவும். மய்க்கா என்றால் என்ன? -- சுவாமி

இராமசாமி கண்ணண் said...

அன்பு காமராஜ் சார்,

உங்கள் கதையும் படிக்கும் போது ஊரின் நினைப்பு மனதை தொட்டுப்போகிறது. அருமையான் கதை சார். நன்றி.

காமராஜ் said...

முதலில் சேதுவிடமிருந்தே ஆரம்பிக்கலாம்.
வாங்க அன்பான சேது.
'மய்க்கா நாளு' (ம'க்கா நாளு என்று உச்சரிப்பார்கள்) இது வட்டார வழக்கு.
தென் தமிழ்நாட்டு விவசாய,உழைப்பாளி மக்களின் மத்தியில் இன்னும் புழங்குகிற
ஆனால் மங்கிக்கொண்டு வருகிற ஒரு வார்த்தை. அடுத்த நாள் அல்லது மறுநாள்
என்று பொருள்படும். இவ்வளவு தான் எனக்குத்தெரியும் சேது.
ஆனால் அதைப்பெரியவர்கள்
பேசிக்கேட்கும்போது தேன்வந்து பாயும்.

காமராஜ் said...

அன்பிற்குறிய என் ராகவன்.

ஒரு சின்னப் பதிவெழுதியதற்கு பெரிய நாவலுக்கு மதிப்புரை எழுதியதுபோல ஒவ்வொரு முறையும் பின்னூட்டமிடும் உங்கள் அன்பின் முன்னாள் எல்லாம் இலகுவாகிவிடுகிறது.

அப்போதெல்லாம் இந்த தமிழ்மணத்தில் நான் தினம் தினம் தோற்றுக்கொண்டிருக்கும் நினைப்பே இல்லாமல் போய்விடுகிறது.
அருணாவும்,பாலாஜியும் சொன்னது போல இப்ப்படியான பதிவுகள் ரெட்டை நாயனத்தின் கிறக்க இசை போல பெருகி ஓடச்செய்கிறீர்கள். அது போதும் அதுவே போதும்.

Sethu said...

Thanks for the explanation Kamaraj. Really enjoyed it. Thanks.
Swami

காமராஜ் said...

வாருங்கள் குலவுசனப்பிரியன்
இந்தப் பெயரைக்கேட்டதும் பாரதியின் பாடலை உன்னிக்கிருஷ்ணன் பாடக்கேட்ட நினைவு வருகிறது.

அன்பிற்கும்
முதல் வருகைக்கும்
நன்றி

காமராஜ் said...

வாருங்கள் துளசி கோபால்.
அன்புக்கு நன்றி

காமராஜ் said...

அன்பான முல்லை
நன்றிம்மா.

காமராஜ் said...

சுந்தரா said...

// பள்ளிக்காலமும் பழைய ஞாபகங்களும் சேர, நானும் சிரித்துக்கொண்டிருக்கிறேன் :)//


நன்றி சுந்தரா..

காமராஜ் said...

வாருங்கள் அமைதிச்சாரல்.
உங்கள் வருகையும் பின்னூட்டமும்
ரெம்ப தெம்பாயிருக்கு.

காமராஜ் said...

அருணா,
ஒரு ஒண்ணரை வருடம் மெனக்கஎட்டதில் உங்களை,ராகவனை,பாராவை,கதிரை,பாலாஜியை,,வெயிலானை,முல்லையை அறிந்து கொள்ள சிநேகம் கொள்ள வரம் கிடைத்திருக்கிறது.

காமராஜ் said...

பாலாஜி
அன்பிற்கு நன்றி
பாலஜி

காமராஜ் said...

லாவண்யா வணக்கம்.
பாராட்டுக்கு நன்றி

காமராஜ் said...

தோழா..

இது அப்பம் வாங்கப்போய் அவமானம் வாங்கிய ஒரு
வாலிபனின் கதை.முடிவை மட்டும் மாற்றிக்கொண்டேன்.

காமராஜ் said...

வாங்க ராமசாமிக்கண்ணன்
வணக்கம் பாராட்டுக்கு நன்றி

seemangani said...

//தேவன் கீதமும் கண்ணன் கீதையும் ஒரு வாய்க்கா வரப்பிலின்று சங்கமம் //
நல்ல கவித்துவமா வந்துருக்கு அண்ணே...பாவம் கெட்டிச்சட்டினியாவது கொஞ்சோண்டு குடுத்து இருக்கலாம்...

காமராஜ் said...

seemangani said...

//பாவம் கெட்டிச்சட்டினியாவது கொஞ்சோண்டு குடுத்து இருக்கலாம்...//

ஆமாம் தம்பி சீமான், மறந்து போச்சு.அன்புக்கு நன்றி சீமான்கனி

மாதவராஜ் said...

தமிழ்மணத்தில் இந்தப் பதிவுக்கு வாக்களித்தவர்கள் 7 பேர்.

kamaraj, sandanamullai, deepaj, vijayaraj, mathavaraj, balasee pramalin

தமிழ்மணத்தில் மேலும் பரிந்துரைக்கப்பட்ட இடுகைப் பகுதியில் சென்று, தம்ஸ் அப் படத்தில் கிளிக் செய்து பார்க்கலாம் தோழனே.

ரசித்தேன் அப்பத்தை....

Deivasuganthi said...

Super!!!!!!!!!!!!!

காமராஜ் said...

வாங்க சுகந்தி.
உங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

தொடர்ந்து வாருங்கள்.

காமராஜ் said...

தோழனே வா தோழனே,
தகவலுக்கும் அன்புக்கும் நன்றி.

நன்றி.
sandanamullai, deepaj, vijayaraj, mathavaraj, balasee pramalin

அன்புடன் அருணா said...

/அப்போதெல்லாம் இந்த தமிழ்மணத்தில் நான் தினம் தினம் தோற்றுக்கொண்டிருக்கும் நினைப்பே இல்லாமல் போய்விடுகிறது/
அய்யே இதுக்கெல்லாமா வருத்தப் படுவது.....எனக்கு ஓட்டு பற்றிய நினைப்பே படிக்கும் போதும் பதியும் போதும் வருவதேயில்லை....உங்களுக்காகவும் எங்களுக்காகவும் எழுதுங்கள்!

பா.ராஜாராம் said...

//"ஙொப்பன் ஊருக்கெல்லா திண்ணீரு போட்றவரு, நீ போயி சிலுவ போடப்போறியா,
என்ன நடக்கும்னு தெரியும்ல"//

//.மய்க்கா நாளு சாத்தூலருந்து ஓலகொட்டான்ல சீனிமுட்டாய் வங்கியாந்து சாராய வாடை மிதக்க வாஞ்சையோடு அடிபட்ட இடத்தை வருடியபடி அழுததும் அய்யாதான்//

//ஆமா பெரிய்ய மீனாச்சியம்மங் கோயிலு தர்மகர்த்தா,செரி செரி ஒரு அஞ்ச வெட்டு//

//காசுப்பிரச்சினை மேலே வந்து மதப்பிரச்சினையை கீழே போனது.
பாதித்தூரம் வந்தவனிடம் சித்தி மகள் ஓடிவந்து, ஏய் எருமமாடு இந்தா பெரிம்மா துட்டுக்குடுத்துவுட்டாங்க

"ஏ அர நாழி,போட்டன்னா, ஆளப்பாரு வருசம் பத்தாச்சு வாய்மட்டுந்தா ரெண்டடிக்கு நீண்டுக்கிட்ருக்கு"//

//போகிறவழியில் கென்னடி வீட்டில் கொஞ்சம் பவுடர் வாங்கிப் போட்டுக்கொண்டான்.அவுங்காளு மூனுபேரோடு
கடந்து போனது.பின்னாலே போனான்.அப்போது அவளோட சித்தப்பன் எதிரே வரவும் கண்டும் காணாதது போலக்கடந்து போனான்.வேதக்கோயிலின் முன்னாள் ஆணும் பெண்ணுமாக ஒரே கூட்டமாக இருந்தார்கள்.கூட்டத்தோடு கூட்டமாக மூனு நாலு நாய்களும்,கிறுக்கு ரத்தினமும் கலந்து நின்றார்கள்.வேதக்கோயிலின் உச்சி விளக்கு ஒளியில் திருவிழாக்கோலமாக இருந்தது கூட்டம்.இந்தக்கூட்டத்தைப்பார்க்க வந்தவர்கள் இன்னொரு கூட்டமானாகள். பவுடர் வாசனையும் மல்லியப்பூ வாசனையும் அந்தப் பிரதேசத்தையே ரம்மியமாக்கியது. மல்லிகா யாருக்கோ சடையைச் சரிசெய்து வயில் கேர்பின்னைப் பிளந்து சடைக்குமேல் செருகி பூவைத்துவிட்டாள்.அங்கிருந்து சர்க்கஸ் ஒளிக்கற்றையைப்போல ஒரு வட்டமடித்து அவளது பார்வை அவனைத்தொட்டது.வேதக்கோயில் கணக்குப்பிள்ளை வந்தார்.பையங்களையும் பெண்களையும் தனித்தனியே பிரிக்கச் சொன்னார்.மொத்தக் கணக்கை எண்ணிச்சொல்லச் சொன்னார். ஒரு சைக்கிள் டயரை ரெண்டாக வெட்டி தீப்பந்தமாக்கினார்கள். இப்போது அந்தப் பிரதேசத்தை ரப்பர் புகையின் வாடை சூழ்ந்து கொண்டது.//

//"ஏய் என்ன மச்சான் கருவாட்டுக் கூடப்பக்கம் பூன வருது" கூல்பானை குசுகுசுத்தான்.கோல்டு பிளேக் பில்டர் சிகரெட் வேண்டாமா" மாரிக் கண்ணனிடம் சிகரெட்டை வாங்கிக்கொண்டு தீப்பந்தத்தைக் கொடுக்கிற சாக்கில் அணைத்துவிட்டு நகர்ந்து விட்டான்.//

// பின்னாள் வெகுதூரத்தில் கணக்குப் பிள்ளையும் ரெண்டு பெரிய பெண்களும் பேசிச் சிரித்துக் கொண்டு வருவது கேட்டது.//

//ஆளரவமற்ற இருட்டில் தொட்டுக்கொண்ட கதகதப்பும் படபடப்பும் இன்னும் இரண்டு பேரையும் விட்டு நீங்கவில்லை//

//இங்கரு பெரியா ஓஞ்சொல்லக்கேட்டு இத்துன தூரம் வந்தாச்சி என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது, இன்னைக்காச்சு அப்பம் வாங்கிக்குடு, இன்னக்கி எவ்வளவு செலவானாலுஞ்சரி,அந்தக் கூர வீட்டக் கிரயம் பண்ணித்தாரன் வக்காலி அதெ ருசி பாக்காம உடப்போறதில்ல'//

இதெல்லாம் எழுதிய கையா,

//தமிழ்மணத்தில் எனக்காக வாக்களித்த அந்த 5 நண்பர்கள் யாரெனத்தெரியவில்லை. அவர்களுக்கு என் சிறப்பு நன்றிகள்.//

//அப்போதெல்லாம் இந்த தமிழ்மணத்தில் நான் தினம் தினம் தோற்றுக்கொண்டிருக்கும் நினைப்பே இல்லாமல் போய்விடுகிறது.//

இதையும் எழுதியது?என்ன ஒரு கோட்டித்தனம் காமு?

அடைப்புக் குறிக்குள் குறித்ததெல்லாம் மீண்டும் வாசியும்.வாசித்து பாரும்.

அருணா டீச்சர்தான் பொட்டில் அடித்தது போல் சொன்னார்கள்.

//அய்யே இதுக்கெல்லாமா வருத்தப் படுவது.....எனக்கு ஓட்டு பற்றிய நினைப்பே படிக்கும் போதும் பதியும் போதும் வருவதேயில்லை....உங்களுக்காகவும் எங்களுக்காகவும் எழுதுங்கள்!//

// மாதவராஜ் said...தமிழ்மணத்தில் இந்தப் பதிவுக்கு வாக்களித்தவர்கள் 7 பேர்.

kamaraj, sandanamullai, deepaj, vijayaraj, mathavaraj, balasee pramalin

தமிழ்மணத்தில் மேலும் பரிந்துரைக்கப்பட்ட இடுகைப் பகுதியில் சென்று, தம்ஸ் அப் படத்தில் கிளிக் செய்து பார்க்கலாம் தோழனே.//

என்ன மாது? :-(

சரி, ஒரு ஜோக் சொல்லட்டுமா?

இன்றைய பதிவுக்கு ஏன் ஓட்டுப் போடலை ரெண்டு பேரும்? :-(

:-))

தத்திகளா..

vasan said...

அதெப்ப‌டி, என‌க்கு ம‌ட்டுமே எப்போதோ இளமையில்
ந‌ட‌ந்த‌து என‌ ம‌ருகி, உருகி ம‌றந்து/ம‌றைத்த‌தில் ப‌ல‌ நிக‌ழ்வுக‌ள்
ஏற‌த்தாழ அப்ப‌டியே ப‌லருக்கு வாய்த்திருக்கிறது!!
ஆச்ச‌ரிய‌ம் தான்....
இர‌வில் நிலா என்னோடு ம‌ட்டுமே உலா வருகிறது
என்ற‌ மாயை ம‌றையும் வ‌ரை.
ந‌ல்ல‌ ம‌ல‌ர்னந்த‌ ம‌ண‌க்கும் நினைவுக‌ள்.